All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நெஞ்சில் என்றும் நீயடா... கதைத்திரி

Status
Not open for further replies.

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்... முதல் அத்தியாயத்துடன் வந்துட்டேன்... படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க...

உங்கள் வார்த்தைக்காக காத்திருக்கும்

உங்கள்

மேகலா அருள்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வண்ண வண்ண மாக்கோலம்
வீதியெங்கும் தோரணங்கள்
வாழைமரப் பந்தல்கள்
வளையல், கொலுசொலி கீதங்கள்
பட்டுப்புடவை கட்டிய பாவை ஊா்வலம்
சிட்டாய் பறக்கும் சிறுவா் பட்டாளம்
தித்திக்கும் தேன்மிட்டாய்
பாகாய் கரையும் பஞ்சுமிட்டாய்
நா ஊறும் குச்சி மிட்டாய்
மயக்கம் கொடுக்கும் சுழல் ராட்டிணம்
தேடியவை வாங்க அங்காடிகள்
வேண்டியதை வரமளிக்க தெய்வங்கள்
இன்ன பிற சிறப்புகளுடன் மண்மணக்கும் மதுரைதான் நம் கதைக்களம்...

இடம் - கிடாரிப்பட்டி, மதுரை
நேரம் - மாலை 5 மணி
கபடி விளையாட்டுப் போட்டி விழா

ஹலோ... ஹலோ... ஒன்... ட்டூ... த்ரீ..., த்ரீ... ட்டூ... ஒன்... (பயப்படாதீங்க பயப்படாதீங்க... மைக் டெஸ்ட்டிங்தான்... வேற ஒண்ணும் இல்லை...)

"விண்ணை முட்டும் பதாகைகளுடன்... ஆா்ப்பரிக்கும் ஆட்டக்காரா்களுடன்... மதுரை மண்ணின் அடங்கா காளைகளுடன்... வெற்றிகரமான 6வது வருட கபடிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் கோலாகலமாக ஆரம்பமாக இருக்கிறது...

போட்டியைக் காண ஆவலுடன் இங்கு கூடியிருக்கும் பாரதிராஜா படத்துல வா்ற கதாநாயகிங்க மாதிரி பாவாடை தாவணி கட்டிக்கிட்டு ஆண்களை ஜொல்லுவிட வைக்கும் அழகுக் கிளிகளே... வாய்க்குள்ள ஈ போனா எனக்கென்ன? கொசு போனா எனக்கென்ன? என் வேலையை நான் கரெக்ட்டாப் பார்ப்பேன்னு "சைட்" அடிச்சிக்கிட்டு இத்திருவிழாக் கூட்டத்து பைங்கிளிகளை ஜொல்லு நீரில் நனைத்துக் கொண்டிருக்கும் நம்ம ஊரு இளசுகளே... பல்லு போன பொக்கை தாத்தாக்களே... அவங்களுக்கு வெத்தலைப் பாக்கு மடிச்சுக் குடுக்கும் பாட்டிகளே... பஞ்சுமிட்டாய் தின்னும் சின்ன மொட்டுக்களே.. கூலா ஐஸ்கிரீம் தின்னும் பொடி வாண்டுகளே... உங்கள் அனைவரையும் வருக வருக என கரம்கூப்பி சிரம் தாழ்த்தி "வெற்றி வேங்கைகள்" கபடிக்குழுவின் சார்பாக வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் வடிவேலு... வடிவேலு... வடிவேலு..."

"ஷப்ப்ப்ப்பா எவ்ளோ லென்த்தியா போகுது டயலாக்கு? தொண்டைத் தண்ணி வத்திப் போச்சி... டேய் அந்த சோடாவக் குடுடா..." என வடிவேலு மைக்கைப் பிடித்து பேசி முடிக்கவும் அங்கங்கே விசில் சத்தமும் கைத்தட்டலும் சிரிப்பு சத்தமும் பறக்க ஆரம்பித்துவிட்டது...

சோடா குடிச்சி முடிக்கறதுக்குள்ள நம்ம வடிவேலுக்கு ஒரு சின்ன இன்ட்ரோ பார்த்துடலாமா?

வடிவேலு, கொஞ்சம் ஒல்லியா, கருப்பா அதே சமயம் களையா இருப்பார்... சுத்தி இருக்க எல்லாரையும் கலகலப்பா பேசி சிரிக்க வெச்சிடுவார்... வடிவேலுவோட ப்ளஸ் பாய்ண்ட்டே டைமிங் காமெடிதான்... சில நேரம் அது அவருக்கு மைனஸ் பாய்ண்ட்டாவும் ஆகிடும்... எப்படின்னு கேக்கறீங்களா? அது ஒண்ணுமில்லீங்க... சில நேரத்துல ரைமிங்கா பேசறேன்னு சொல்லி டைமிங்க மிஸ் பண்ணிடுவாரு... அதுக்கு சுத்தி இருக்கவங்ககிட்ட வாங்கியும் கட்டிப்பாரு... அதுக்கெல்லாம் அசருற ஆள் கிடையாது நம்ம வடிவேலு... திட்டோ... பாராட்டோ... அவருக்கு எல்லாம் ஒண்ணுதான்... திட்டிட்டாங்கன்னு வருத்தப்படவும் மாட்டாரு... அதே நேரத்துல பாராட்டிட்டா சந்தோஷத்துல குதிக்கவும் மாட்டாரு...

ஹலோ... ஹலோ... டீடெய்ல்ஸ் குடுத்த உடனே இவர்தான் நம்ம ஹீரோன்னு நெனச்சிடாதீங்க... இவர்தான் நம்ம ஹீரோக்கு பள்ளிக்கூட நாட்கள்ல ஆரம்பிச்சி, கல்லுாரி நாட்கள் வரை மிக அன்யோன்ய நண்பன்... எப்பவும் நம்ம ஹீரோ கூடதான் சுத்திக்கிட்டு திரிவாரு.... இவரு நம்ம ஹீரோவ யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்குடுக்கமாட்டாரு... அதே மாதிரிதான் நம்ம ஹீரோவும்... இவருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதல் ஆளா வந்து நிப்பாரு... சரி... சரி... நம்ம கதைக்கு போகலாமா? அங்க சோடா குடிச்சி முடிச்சிட்டாரு நம்ம வடிவேலு...

"ஏம்ப்பா யாருப்பா அங்கிட்டு? அந்த ஹீரோ இன்ட்ரடக்க்ஷன் பாட்டப் போடுங்கப்பா... நம்ம மதுரை சிங்கமும் தன்மானத் தங்கமும், கொம்பில்லா காளையுமான நம்ம கபடி அணித் தலைவர் மேடைக்கு வரப் போறாரு... வரப் போறாரு... வரப் போறாரு..." என்றார் வடிவேலு...

"தெக்குச் சீமையில என்னப் பத்திக் கேளு
துாளு கெளப்புறவன் துாத்துக்குடி ஆளு" என்ற பாடல் ஒலிக்க, வடிவேலுவோ தலையில் கையை வைத்துக்கொண்டு "அடப்பக்கிங்களா.... இப்படி கவுத்துட்டீங்களேடா, நான் மதுரை ஹீரோக்கு இன்ட்ரடக்ஷன் குடுக் சொன்னா துாத்துக்குடி ஆளுன்னு போட்றீங்களேடா" என கத்திக்கொண்டிருக்க அவனை இரு விழிகள் கொலை வெறியோடு நோக்கிக் கொண்டிருந்தது... அந்த கண்ணுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை.. நம்ம ஹீரோதான்...


"அய்யய்யோ அவன் வேற பார்வையிலேயே எரிக்கிறானே... டேய் சீக்கிரம் பாட்டை மாத்திப்போட்டு என் உசுர காப்பாத்துங்கடா... புண்ணியமாப் போகும்... இல்லன்னா இந்த கொலை கேசுல உள்ளார போய்டுவீங்கடா..." என அடுத்த புலம்பலை முடிக்கும் முன்...

"மதுரை வீரன்தானே...
அவனை உசுப்பிவிட்ட வீணே...
இனி விசுலு பறக்கும் தானே...
என் பேராண்டி மதுரை வீரன்தானே..." என ஒரு பாட்டு வடிவேலு வயித்துல பாலை வார்த்தது...

பாடல் ஒலிக்க ஆரம்பித்தவுடன் வடிவேலுவை முறைத்துக் கொண்டிருந்த நம்ம ஹீரோ தற்காலிகமாக அதை நிறுத்திவிட்டு, தன் மதுரைக்கார முறுக்கு மீசையை முறுக்கிக்கிட்டு, தன் அடர்கேசம் முன் நெற்றியில் அழகாய் முத்தம் பதிக்க, வெள்ளை வேட்டியின் ஒரு நுனியை வலது கையால் பிடித்துக்கொண்டு இடது கையால் கருப்பு நிற கூலிங் கிளாஸை கண்ணில் அணிந்து கொண்டே கம்பீரமாக ஒரு துள்ளல் நடையுடன் மேடை ஏறிக்கொண்டிருந்தான்... ஆறடி உயரத்தில் எடுப்பான நிறத்தில் களையான அழகுடன், எம்.ஜீ.ஆர் மாதிரி வெள்ளை வேட்டியும், பச்சை நிற சில்க் சட்டையுடன், கழுத்தில் பொன் சங்கிலியும், கன்னத்தில் விழுந்த குழிச்சிரிப்புடன்... ஆளை மயக்கும் தோற்றத்தில் ஆஜானுபாகுவாய் மேடை ஏறியவனை அனைவரும் கரவொலியில் ஆரவாரமாய் வரவேற்க... இரு விழிகள் மட்டும் அவனை பார்வையால் அளவிட்டது...

ஹீரோ மேடை ஏறுறதுக்குள்ள ஒரு அவருக்கு இன்ட்ரோ பார்த்துடலாமா?

நம்ம ஹீரோ அவரோட தாத்தா ஆசைப்படி வேளாண்மைத் துறையில் இளங்கலை பட்டம் முடித்த இயற்கை விவசாயி... தாத்தா வேதநாயகம் ஊரின் முக்கியப்புள்ளி... இயற்கை விவசாயம்தான் அவரோட உயிர்... செயலில் நேர்மை, மற்றவருக்கு உதவும் கருணை உள்ளம், கம்பீரமான தோற்றம், தீர்க்கமான பார்வை, நடுநிலையான தீர்ப்பு, பார்க்கும் ஓர் பார்வையிலையே எதிரே இருப்பவரை எடை போடும் திறம், இவை யாவும் சேர்ந்து வலம் வந்த அவரை, அவரின் ஊர் மக்கள் மரியாதையோடு நடத்தவைத்தது.... அவர் மனைவி வள்ளியம்மை... கணவர் பேச்சை மீறாத இல்லத்தரசி...

இத்தம்பதியருக்கு இவருக்கு இரு மகன்கள்...

முதலாவது மகன் கதிரவன் அவரின் மனைவி சரஸ்வதி... இவரும் தன் தந்தையைப் போல் ஓர் இயற்கை விவசாயி... இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.. இரட்டைப் பிறவிகளான புவன் ஸ்ரீ மற்றும் புவன ஸ்ரீ... திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழிந்து பிறந்த குழந்தைகள் இவர்கள்... இருவரும் இளங்கலை அறிவியல் முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கின்றனர்...

இரண்டாவது மகனான வேல்முருகன் தான் நம்ம ஹீரோவோட அப்பா... அவர் தன் தந்தையின் ஜாடையான ஐயனார் உருவத்தில் இருப்பார்... இவரும் இயற்கை விவசாயி... அம்மா லட்சுமி.. பெயருக்கேற்றார்போல் மங்களகரமாக அழகாக இருப்பார்... நல்ல சிவப்பில் அழகான உருவம்...

இப்ப நம்ம ஹீரோவைப் பத்திப் பார்க்கலாம்... நம்ம ஹீரோ பேரு செந்துாரப்பாண்டியன்... நாம 'பாண்டியன்'னு கூப்பிடலாம்... நம்ம ஹீரோ அம்மா மாதிரி நல்ல சிவப்பு நிறம்... தாத்தா மற்றும் தன் தந்தையைப்போன்று எடுப்பான தோற்றம்... வீட்டுக்கு ஒரே செல்லப்பிள்ளை... எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்ல பையன்... நம்ம ஹீரோவுக்கு பிடிக்காத விஷயம் இரண்டு இருக்கு... முதல் விஷயம் என்னன்னா.. அவன் நண்பர்களோ.. இல்ல வேற யாராவதோ தண்ணி, தம் அடிக்க காசு கேட்கறது... இன்னொன்னு என்னன்னா... அவனை யாரும் "மாமா"ன்னு கூப்பிடறது...

இந்த ரெண்டுல எது நடந்தாலும் நம்ம ஹீரோ செம்ம்ம்மமமமம டெர்ரர் ஆயிடுவாரு... அப்புறம் அவரை மலையிறக்குறது ரொம்ம்ம்ம்பபபபப கஷ்டம்... அதைவிட அவருக்கு எதிரே இருக்கவங்களோட நிலைமை இ்ன்னும் ரொம்ப கஷ்டம்...

அப்படிதான் ஒரு தடவை, ஏதோ ஞாபகத்துல , இன்னொரு ஃபிரெண்டுக்கு ஃபோன் போட்டு சரக்கடிக்க கூப்பிடறதுக்கு பதிலா, தெரியாத்தனமா நம்ம ஹீராவுக்கு ஃபோன் போட்டுட்டாரு நம்ம வடிவேலு... அப்புறம் என்ன? அவ்ளோதான்... வடிவேலு சோளி முடிஞ்சிது... காதுல இரத்தம் வர்ற அளவுக்கு பேசிப்பேசியே நார் நாரா கிழிச்சிட்டாரு நம்மாளு... அந்த நிக்ழ்ச்சிக்கப்புறம் நம்ம வடிவேலு சரக்கடிக்கறதையே விட்டுட்டாருன்னா பாத்துக்கோங்க...

இப்போதைக்கு இந்த இன்ட்ரோ போதும்... நம்ம ஹீரோ இப்ப என்ன பண்றாருன்னு பார்க்கலாம்...


துள்ளலான நடையுடன் மேடை ஏறிய நம்ம ஹீரோ, மக்கள் எல்லாரையும் பார்த்து, அழகா இரண்டு கையையும் சேர்த்து வணக்கம் வைத்துவிட்டு, கன்னக்குழிச் சிரிப்புடன் மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார்...

"கூடியிருக்கும் என் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... கடந்த ஐந்து வருடங்களாக நம் மதுரை மண்ணில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் 'வெற்றி வேங்கைகள்' கபடிக்குழுவின் சார்பாக நடத்தப்படும் கபடிப்போட்டியை ஆண்டுதோறும் தவறாமல் கண்டுகளித்து, எங்களின் தொடர்ந்த ஐந்து வருட வெற்றிக்கு ஊக்குவித்த என் அன்பு மக்களின் ஆசியுடன் இந்த ஆறாம் ஆண்டு கபடிப்போட்டியைத் தொடங்கவிருக்கிறோம்...

இந்த வருடமும் உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் வெற்றிக்கனியைப் பறிப்போம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்... இன்னும் சற்று நேரத்தில் போட்டி ஆரம்பிக்க உள்ளதால் தங்களின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் எங்களுக்கு அள்ளிக்கொடுக்குமாறு எல்லாரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..." என நம்ம ஹீரோ தன் பேச்சை முடித்த அடுத்த நொடி, வானைப் பிளக்குமளவிற்கு விசில் சத்தமும், 'இந்த வருஷமும் வெற்றிக்கோப்பை நமக்குதான்....' என்ற ஆரவாரமும் கைதட்டலும் வெகுநேரம் ஒலித்து பின் மெது மெதுவே குறைய ஆரம்பித்தது...

அந்நேரத்தில் "மாமா.... சூப்பர் மாமா.... இந்த பச்சைக் கலர் சட்டையில அப்படியே ராமராஜன் மாதிரியே செம அழகா இருக்கீங்க... அதோட 'மாங்குயிலே பூங்குயிலே'ன்னு ஒரு பாட்டு ஒண்ணு எடுத்து விடுங்க மாமா... இன்னும் சூப்பரா இருக்கும்." என கூட்டத்தின் இடையிலிருந்து ஒரு பெண் குரல் கடகடவென்று ஒலித்து அடங்க, அதில் 'நம்மள மாமான்னு கூப்பட்ற அளவுக்கு யாருடா அந்த பொண்ணு? ராமராஜன்னு கிண்டல் வேற பண்றா' என்று பல்லைக் கடித்துக்கொண்டே மனதில் நினைத்தவன், அதை வெளியில் சொல்லாமல், அனல் கக்கும் பார்வையுடன் கூட்டத்தை நோக்கினான்...

கூட்டம் நிரம்பி வழிந்ததால் அந்தப் பெண் யாரென்று அவனால் காண முடியவில்லை... 'என் கண்ணு முன்னாடி மட்டும் சொல்லி இருக்கணும்... நடக்கற கதையே வேற... என் கண்ணுல சிக்காத வரைக்கும் அவ தப்பிச்சா..." என்று மனதில் மட்டுமே மறுவிக்கொள்ள முடிந்தது அவனால்...

இதை சற்றும் எதிர்பார்க்காத வடிவேலு, 'யாருடா அது? நம்ம அடங்கா காளையை 'மாமா'ன்னு கூப்பிட்டு கொம்பு சீவி விட்றது? ஏற்கனவே கபடி களத்துல வெறியா எறங்குவான்... யாரோ ஒரு புள்ளை வேற இவனை 'மாமா'ன்னு கூப்பிட்டதுமில்லாம, 'ராமராஜன்'னு வேற கிண்டல் பண்ணி இன்னும் சிலுப்ப வெச்சிட்டாளே... இனி முரட்டுக் காளையால்ல களத்துல எறங்குவான்.... எதிரணியில இருக்கவங்க எல்லாம் யாரு பெத்த புள்ளையோ? ஆண்டவா இவன்கிட்ட இருந்து அவங்களை காப்பாத்துப்பா, அப்படியே அந்தப் புள்ளையையும் அவன் கண்ணுல காட்டிடாதப்பா.... அந்த புள்ளை மட்டும் இவன் கையில கெடச்சா, கொன்னு புதைச்சிடுவான்..." என மனதில் நினைத்தவாறே தன் தோழனைப் பார்க்க, அவனோ, அந்தப் பெண்ணை இன்னும் தன் பார்வையால் கூட்டத்திற்குள் தேடிக்கொண்டிருந்தான்... ஆனால் அவள் சிக்கவில்லை... அதனால் இன்னும் அவன் கோபம் உச்சிக்கேறியது அவனுக்கு... அதில் தன் கண்கள் இரத்தமென சிவக்க நின்றிருந்தான் அவன்...

'போச்சி... போச்சி... எல்லாம் போச்சி, மதுரைவீரன் இப்பவே இப்படி மொறைக்கிறானே.. அந்தப் புள்ளையை நேர்ல பார்த்தாக்கா.. நெற்றிக் கண்ணைத் தொறந்து பொசுக்குனாலும் பொசுக்கிடுவான்...' என மறுபடியும் வடிவேலு புலம்ப, இப்பொழுது கூட்டத்திலிருந்த தன் நண்பனின் கண்கள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், 'இப்ப எதுக்கு நம்மள இப்படி பாக்குறான்? இந்த சம்பவத்துக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே.. ஒரு வேளை அந்தப் புள்ளை மேல உள்ள கோவத்துல நம்மள தூக்கிப்போட்டு மிதிப்பானோ?' என மனதில் நினைத்தவாறே தன் வயிற்றுக்குள் பயப்பந்து உருள நின்று கொண்டிருந்தான் வடிவேலு...

நண்பனோ பார்வையால் தன்னை அழைக்க, 'எதுவா இருந்தாலும் சமாளிடா வடிவேலு... தைரியத்தை மட்டும் விட்டுடாதே...' என தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டே தன் நண்பனை நோக்கி அடிமேல் அடி எடுத்து வைத்தான்... அவன் தன்னிடம் நெருங்கியதும், 'யாருடாஅந்தப் புள்ளை? என்ன தைரியம் இருந்தா என்னைய மாமான்னு கூப்பிட்டு என்னையவே சீண்டிப்பாக்குறா... நான் போட்டி முடிஞ்சி வாரதுக்குள்ளே, அந்தப் புள்ள யாரு என்னன்னு எல்லா வெவரமும் வேணும்... புரியுதாலே?' என வடிவேலுவைப் பார்த்துக் கேட்டான்...

'அந்தப் புள்ளை யாருன்னே தெரியல... இதுல எங்க இருந்து அந்தப் புள்ளையைப் பத்தி முழு வெவரமும் வாங்கறது? வௌங்கிடும்...' என தன் மனதிற்குள் நினைத்த வடிவேலு, தன் நண்பனிடமோ, 'அதுக்கென்ன மாப்ள? நீ விளையாட்டை முடிச்சிட்டு வாரதுக்குள்ள அந்தப் புள்ளயோட முழு சாதகத்தையும் கொண்டு வாரேன்.... ஆனால் என் மனசுக்குப்பட்ட வரைக்கும், இது ஏதோ வெளியூர் புள்ளையாத்தான் இருக்கணும்... ஏன்னா? உள்ளூர்ல உன் முறைப்பொண்ணுங்களே உன்னை 'மாமா'ன்னு கூப்புட பயந்துக்கிட்டு, 'அண்ணா'ன்னுதானே கூப்புடுதுங்க.... சரி... விடு... இதை நான் பாத்துக்கிடுதேன்... நீ போ... போய் விளையாட்டைக் கவனி..." என உரைத்தான்...

தன் நண்பனிடம் கெத்தாக உரைத்துவிட்டாலும், எப்படி அந்தப் பெண்ணைப் பற்றிய விவரத்தை தெரிந்துகொள்வது என்று எண்ணியவாறே வடிவேலு மேடையைவிட்டு இறங்க, கூட்டத்தினரைப் பார்த்தது ஒரு புன்னகை சிந்திவிட்டு, 'ஒரு வேளை இது அவளா இருக்குமோ' என்று சிறிது யோசித்தவன், தன் தலையை குலுக்கிக்கொண்டு, கோபம் உச்சிக்கேறிய நிலையில் ஹீரோவும் மேடையை விட்டு இறங்கினான்...

யாரவள்? தெரிந்துகொள்ள காத்திருங்கள்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... எல்லாரும் எப்டி இருக்கீங்க? முதல் எபி போட்டுட்டு ஆளைக் காணும்னு கோவமா இருக்கீங்கன்னு தெரியும்... மொபைல் ப்ராப்ளம் ஆயிடு்ச்சி... அதான் வரல... இப்ப சரி ஆயிடுச்சி...இனி திங்கட்கிழமைதோறும் கரெக்ட்டா எபி கொண்டு வந்துடுவேன்...

இப்ப இரண்டாவது எபி உங்களுக்காக...

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க... உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்கள்

மேகலா அருள்
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் இரண்டு...


நாம கதைக்குள்ள போறதுக்குள்ள, கபடியைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்....

பொதுவாக 45 நிமிடங்கள் கபடி நடக்கும்... அதில் 'சைடு' மற்றும் 'ரைடு' என்று உண்டு... 'சைடு' தேர்ந்தெடுப்பவர்கள் 'கபடி கபடி' என்று மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே 'ஏறு கோட்டை' தொட்டுவிட்டு தங்கள் அணியின் இருப்பிடத்திற்குத் திரும்ப வேண்டும்...

பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே. மீதி ஐவரும் ரிசர்வ் .(மாற்று விளையாட்டு வீரர்கள்)


டாஸ்'வென்ற அணி 'சைடு 'அல்லது 'ரைடு ' தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இரண்டாம்பகுதியில் மாற்றி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் பொது கோட்டுக்கு வெளியே செல்லும் ஆட்டக்காரர் 'அவுட் 'ஆக நேரிடும். எல்லைக்கோட்டுக்கு வெளியே உடம்பின் எந்தப்பகுதி தரையைத்தொட்டாலும் 'அவுட் 'தான்.

பாடி வருபவரின் கை,கால், இடுப்புப்பகுதிகளை மட்டும்தான் பிடிக்கவேண்டும். அவர் வாயை பொத்தக்கூடாது. மீறிச் செய்தால் அது ஃபவுல் 'ஆக எடுத்துக்கொள்ளப்படும்.


ஒருவர் ,பல முறை ரைடு போகலாம். ரைடு போகிறவர் ஏறு கோட்டை தொடாமல் வந்தாலும் அவுட். எதிரணியில் உள்ள அனைவரையும் 'அவுட்' செய்தால், இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு 'லோனா' என்று கூறுவார்கள்....


இப்ப கதைக்குள்ள போகலாம்...

மேடையை விட்டு இறங்கிய பாண்டியன், தன் கோபத்துடனே தன் அணியின் சீருடையான பிங்க் நிற பனியனும் கருநீலநிற கால்சட்டையும் அணிந்துகொண்டு வெறிகொண்ட வேங்கையாய் களமிறங்கினான்...

எதிரணியான 'சீறும் சிங்கம்..' அணியுடன் கைகுலுக்கிவிட்டு 'டாஸ்' போட்டனர்...

டாஸை வென்ற பாண்டியன், 'ரைடு' தேர்ந்தெடுத்தான்... அவன் அதை தேர்ந்தெடுத்ததும் வடிவேலு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்... தன் நண்பன் தற்பொழுது இருக்கும் கோபத்தில், எதிரணிக்கு 'ரைடு' சென்றால் என்னவாகும் என்று யோசித்தவனுக்கு 'அய்யோ' என்றிருந்தது...

டாஸை வென்றதும் இரு அணிகளும் தத்தம் இடங்களில் வந்து ஆயத்தமானதும், நடுவர் விசில் கொடுக்க, முதல் ஆளாக களமிறங்க சென்ற தன் சக குழுவினருள் ஒருவனை தடுத்துவிட்டு, தானே செல்வதாக சொல்லிவிட்டான்...

அப்பபொழுதே அவனின் கோவம் புரிந்துவிட்டது வடிவேலுவுக்கு...

"பாண்டி" என்றவாறு தன் நண்பனின் கைகளை பற்றி ஆழமாக ஒரு பார்வையை வீசிய வடிவேலு, "உன் கோவத்தை எல்லாம் இங்கிட்டு காட்டக்கூடாது... பார்த்து சூதனமா நடந்துக்க... எதுனாலும் விளையாண்டு முடிச்ச பொறவு பாத்துக்கிடலாம்..." என்று கூறி தன் நண்பனின் கைகளை விடுவித்தான்...

தன் நண்பனின் கூற்றில் உள்ள உண்மை புரிந்தாலும், தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாவிட்டாலும், சற்றே சிரமப்பட்டு மட்டுப்படுத்திக்கொண்டான்...

தன் நண்பனைப் பார்த்து வலிய வரவழைக்கப்பட்ட சிறு புன்னகையுடன், ஒரு பெருமூச்சை வெளியேவிட்டு, "ம்ம்ம்" என்று மட்டும் சொன்னான் பாண்டியன்...

பின்பு களத்தின் நடுக்கோட்டை நோக்கி சென்று அதை குனிந்து தொட்டு, தன் விரலால் சிறிதளவு மண்ணை எடுத்து அதை தன் நெற்றியில் சிறு கீற்றாக இட்டுக் கொண்டு, இரு கைகளையும் ஒரு சேர தட்டி நெஞ்சின் மீது கைவைத்து ஒரு நொடி தன் இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தியவன்,
ஆழ மூச்சை எடுத்து உள் நிறுத்திக்கொண்டான்...

"கபடி.... கபடி... கபடி...." என பாடிக்கொண்டே தன் கண்களால் எதிரணியின் வீரர்களை கூர்மையுடன் பார்த்தவாறே, யாரை எப்படி 'அவுட்' செய்யலாம் என்ற தீவிர யோசனையுடன் களமிறங்கினான் நம் கட்டிளங்காளை...

தன்னை அரை வட்டமாக சூழ்ந்துள்ள தன் எதிரணியினரை கூர்மையாக கவனித்தவன், முதலில் தன் வலது பக்கம் இருப்பவனை தொடுவதுபோல் சென்று, சட்டென்று தன் இடதுபக்கம் இருப்பவனை தொட்டுவிட்டு, அவன் சுதாரிக்கும்முன்பே நடுவில் இருப்பவனை தன் கால்களால் தொட்டுவிட்டு, அவர்கள் அவனை சூழ வரும் நேரம் வலது பக்கம் இருப்பவனையும் சட்டென்று தொட்டுவிட்டு திரும்பியவன், ஓர் அடி எடுத்து வைத்துவிட்டு, சட்டென்று அவர்கள் புறம் திரும்ப, அவனை பிடிக்க அனைவரும் அவனை நெருங்கியிருந்த நேரம், ஒரே பாய்ச்சலில் தன் வலது கையை வலது பக்கத்தில் நின்றவன் மீதிருந்து வரிசையாக இடதுபக்கம் நின்றவன் வரை தொட்டுக்கொண்டே வீசினான்... இதில் எதிரணியினர் அனைவரின் மீதும் அவன் கைப்பட்டுவிட்டது...

அவனின் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலில் தன் அணியினர் அனைவரும் ஆட்டமிழக்கப் போவதை உணர்ந்த அந்த அணியின் தலைவன், சட்டென பாண்டியனின் இடுப்பை வளைத்துப் பிடித்துவிட்டான்... உடனே சுதாரித்த மற்றவர்களும் பாண்டியனை வளைக்க ஆரம்பிக்க, ஓர் கட்டத்தில் எல்லோரும் கீழே விழுந்துவிட்டனர்... கீழே பாண்டியனும், அவன் மேலே மற்ற அனைவரும் விழுந்துவிட, ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்தவன், வெறிகொண்டு நடுக்கோட்தை்தொட மூச்சை விடாமல், "கபடி கபடி" என்று பாடிக்கொண்டே அங்குலம் அங்குலமாக நடுக்கோட்டை நோக்கி அனைவரையும் சுமந்த வண்ணம் நகரலானான்...

எதிரணியினர் மொத்தமாக அவன்மேல் படுத்திருந்தும், அவன் இவ்வாறு முன்னேறுவதை அங்கிருந்த மக்கள் அனைவரும் கண்ணிமைக்காது அடுத்து என்ன நடக்கும் என்று எண்ணிக்கொண்டு எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்க, "மாமா... உங்களால முடியும்... நீங்கதான் ஜெயிப்பீங்க... 'கம் ஆன்' மாமா... 'கம் ஆன்'..." என்று அவளின் குரல் மறுபடியும் பாண்டியனின் காதில் பட்டு அவனது வெறியை மேலும் சூடேற்றிவிட, கொம்பில்லாக் காளையாக மாறி தன் உடலை முழுபலம் கொண்டு சிலுப்பி, தன் மீது படர்ந்திருந்தவர்களை ஓரே மூச்சில் தள்ளிவிட்டு, நடுக்கோட்டை தொட்டு ஆட்ட நாயகனாகிவிட்டான்.


அவனின் வெற்றியில் அந்த இடத்தில் ஏகமாய் விசில் பறக்க... "கலக்கிட்டீங்க... சூப்பர்.... செம்ம... வாழ்த்துக்கள்..." என வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியது...

அவனது அணியினர் அவனை தங்களின் தோள்மேல் ஏற்றி அமர வைத்து கொண்டாட ஆரம்பிக்க...

"தென்மதுரை சிங்கம்...
கிடாரிப்பட்டி தங்கம்...
மோதிப்பாரு உனக்கு பங்கம்..
எங்கண்ணன் பேரை கேட்டாக்கா கடலும் கூட அடங்கும்..." என பாடியும் ஆட்டம் போட்டும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்....

இதில் எந்த ஆர்ப்பாட்டமும் அவன் மனதை குளிர வைக்கவில்லை... அவன் அவளின் 'மாமா' என்ற அழைப்பில் கோபம் கொண்டு கண்கள் சிவக்க, இன்னும் தன் கோபம் அடங்காமல் இருந்தான்... இதை உணர்ந்த வடிவேலு அவனை கீழே இறக்கிவிட சொல்லிவிட்டு, அடுத்த கட்ட ஆட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யச்சொல்லி தன் அணியினரை அனுப்பிவிட்டு, தன் நண்பனின் தோள்களில் கையைப் போட்டு அவனை அணைத்தவாறு நின்றுகொண்டு, "மாப்ள... நீ எம்புட்டு கோவமா இருக்கன்னு எனக்கு வெளங்குது... நீ அங்கிட்டுப் போய், மொத்தத்துல ஒரு நிமிஷம் கூட ஆகலை... ஆனா.. அதுக்குள்ளார அம்புட்டுப் பயலுகளயும் 'அவுட்' ஆக்கிட்ட... அவிங்க அம்புட்டு பேரையும் ஒத்த நிமிசத்துல தூசைத் தட்டுறாப்புல உன் மேல இருந்து ஒதறித் தள்ளிப்புட்டு வந்ததுலயே உன் ஆத்திரம் என்னன்னு வெளங்குது... ஆனால் உனக்கு ஏன் இம்புட்டு கோவம் வருதுன்னு எனக்கு வெளங்கல... நானும் பலவட்டம் (பலமுறை) கேட்டுப் பார்த்துட்டேன்... ஆனால் நீ வாயத் தொறக்கறதாயில்லை... சரி என்னவோ விடு... கொஞ்சம் ரிலாக்ஸா இரு மாப்ள... ஃபிரியா விடு... வா போலாம்..." என்று அவனை தன்னுடன் அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து சிறிது சாந்தப்படுத்தினான்..


"இல்லடா மாப்ள... அந்தப் புள்ளைக்கு எம்புட்டு நெஞ்சு உரம் இருந்தா, என்னிய 'மாமா'ன்னு கூப்புடும்... இதுல என்னிய ராமராஜன்னு வேற நையாண்டி பண்ணுறா அவ... அவ மட்டும் என் கண்ணுல சிக்குனா.. சின்னாபின்னம்தான் மாப்ள" என தன் பற்களைக் கடித்துக் கொண்டே பேசியவனைக் கண்ட வடிவேலுவுக்கு, "ஆஹா.... இவனை எப்புடி அமைதிப்படுத்தறதுன்னே வெளங்கலியே... பாவம் அந்த புள்ள... சொக்கநாதா.... இவன்கிட்டயிருந்து அந்த புள்ளைய காப்பாத்துப்பா...." என்று அவசரமாக ஓர் வேண்டுதலை வைத்துவிட்டு, "சரி எதுவா இருந்தாலும் பொறவு பாத்துக்கிடலாம்.... நமக்காக தான் எல்லாரும் காத்துக்கெடப்பாய்ங்க.... வா போலாம்...." என்று ஒரு வழியாக தன் நண்பனை சமாதானம் செய்து, தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான் வடிவேலு...

எல்லா அணிகளும் தங்களின் ஆட்டத்தை முடித்த பின் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன...

மேடையில் 'மைக்'கைப் பிடித்துப் பேசிக்கொண்டிருந்த விழாத் தலைவர் போட்டி முடிவுகளை அறிவிக்கலானார்...

"எல்லாருக்கும் வணக்கம்... நம்ம ஊர்ல நடந்த கபடிப் போட்டியில மூணாவது பரிசை பூலாம்பட்டியைச் சேர்ந்த "மதுரை மைந்தர்கள்" அணியும், தும்பைப்பட்டியைச் சேர்ந்த "மதுரைவீரன்" அணியினர் இரண்டாவது பரிசையும் ஜெயிச்சிருக்காங்க.... நீங்க எல்லாரும் நெனைக்கற மாதிரி இந்த வருஷமும் முதல் பரிசை கிடாரிப்பட்டியைச் சேர்ந்த நம்ம "வெற்றி வேங்கைகள்" கபடிக் குழுதான் ஜெயிச்சிருக்கு..." என அறிவித்த தலைவர் அந்தந்த அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்....

கடைசியாக முதல் பரிசை பாண்டியனின் அணியினர் மேடை ஏறி வாங்கினர்.. அப்பொழுது வேட்டு சத்தம் விண்ணைப் பிளக்க, வானவேடிக்கை வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தது... முதல் பரிசு தங்களுக்குதான் என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அதை மேடை ஏறி வாங்குவதில் ஏற்பட்ட மகிழ்ச்சியிலும், மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் கோப்பையை கைப்பற்றிய திளைப்பிலும் தன் கோபத்தை மறந்தே போயிருந்தான் பாண்டியன்...

அது சில நொடிகள் கூட நீடிக்கவில்லை...

தங்களின் ஆடுகளத்திற்கு எதிரே சற்று தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இன்னைிசைக் கச்சேரி நடத்தவிருக்கும் மேடையில் திடீரென்று ஓர் பெண்ணின் குரல் நிதானமாக அதே சமயம் அழுத்தமாக பாட ஆரம்பித்தது, பின்னணி இசை ஏதமில்லாமல்...

அந்தக் குரலில் மீண்டும் தன் கோபம் தலைக்கேற அந்த மேடையைப் பார்த்தவன் கண்களிலோ அவளினா உருவம் தெளிவாய்த் தெரிய, 'அவளேதான்...' என்று மனதினில் மூண்ட கோப அக்னியுடன் அவளை பார்த்தான்...

இத்தனை ஆண்டுகளாக எவளை பார்க்க கூடாது... எவள் பெயரைக் கேட்கக்கூடக் கூடாது என்று எண்ணியிருந்தானோ.. அதே அவள்தான், அவனின் கண்ணின் முன்னால் நிற்கிறாள்... தன்னை இவ்வளவு நேரம் சீண்டியது அவள்தானோ? என்ற சந்தேகத்தை தவிடுபொடியாக்கி, 'நானேதான்' என்று கூறுவதுபோல் அவள், அவன் கண்ணின் முன்னால் நிற்கிறாள்...

நிற்பது மட்டுமல்லாது அவனின் கோபம் இன்னும் உச்சம் பெறப்போவது தெரியாமல் தன்னை மறந்து, தன்னையே மறந்து அவனுக்காக... அவனுக்காக மட்டும் பாடிக் கொண்டிருந்தாள்...

"நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும் மான்பாலன்
பூவாய் எனையேந்தும் பூபாலன்...
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும் தோள் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா

பாடல் கேட்போமா
ஆடி பார்ப்போமா

மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாதா
இன்பம் எல்லாமே
கையில் வந்தேவிழுமா

நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா??

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா?

பொய்யாய் சில நேரம் வைவாயா
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா ஆ…! ஆ…!

கண்கள் சொக்க செய்தாயா ஆ…! ஆ…!
கையில் சாய சொல்வாயா ஆ…! ஆ…!
எதோ ஆச்சு வெப்பம் மூச்சில் ..!
வெட்கங்கள் போயே போச்சு ..!

செந்தூரா....ஆஆஆஆஆ..... "

அவள் பாடி முடிக்கவும்... அவளை நோக்கி அவன் அழுத்தமான அடிகளை எடுத்து வைக்கவும், அதே நேரம் பலத்த கைதட்டலும் ஆரவாரமும் பொங்கி அடங்கியது...

அந்தக் கூட்டத்தில் பாண்டியன் நீந்தி அந்த மேடைக்கு சென்று சேர்வதற்குள் அவள் அங்கே இருக்கவில்லை... இசைக் குழுவினரிடம் கேட்டதற்கு அவர்களின் பதில் "எங்களுக்குத் தெரியாதுங்க... 'நான் நல்லா பாடுவேன்.. ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடிக்கறேன்... ப்ளீஸ்'னு சொல்லி கெஞ்சி பாடிட்டுப் போயிட்டாங்க" என்ற பதிலே கிடைத்தது...

அவள் அவன் கரங்களில் சிக்குவாளா? சிக்கினால் அவளின் நிலை என்ன?

பொறுத்திருந்து காண்போம்
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

நெஞ்சில் என்றும் நீயடா...

மூன்றாவது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

அவளைப் பார்க்க முடியவில்லை என்ற கோபத்தில் தன் பற்களைக் கடித்துக்கொண்டு நின்றிருந்த பாண்டியனின் பக்கத்தில் வந்த வடிவேலு, அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச்சென்றான...

பாண்டியனின் வீட்டில்...

"ஏ புள்ள பேச்சி... அந்த ஆலாத்தியக் கொண்டா இங்கிட்டு... என் பேராண்டி மேலதான் ஊர்க்காரய்ங்க கண்ணு எல்லாம் கெடக்கு... மொதல்ல சுத்திப் போடோணும்... வெரசா வா புள்ள..." என்று அவ்வீட்டின் மூத்த பெண்மணியாகிய வள்ளியம்மை தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணியான பேச்சியம்மாவை கூவி அழைத்துக் கொண்டிருந்தார்...

"இந்தா... வந்துட்டேங்கம்மா" என்று தன் கைகளில் ஆரத்தித் தட்டுடன் வெளியே ஓடி வந்தார் அந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி... இவரின் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த வீட்டில்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்... மிகவும் விசுவாசமான பெண்மணி..

கையில் ஆரத்தித் தட்டை வாங்கிய வள்ளியம்மை, தன் பேரனை நோக்கி "ஏலே ராசா... இங்கிட்டு வாய்யா... கெழக்கப் பார்த்த மாதிரி நில்லுயா" என்று கூறிவிட்டு "ஊா் கண்ணு, ஒறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு, எல்லார்க் கண்ணும் போக" என ஆரத்தியை சுற்றிவிட்டு "ஏலே பேச்சி... இந்தாலே... இதக் கொண்டுபோய் அங்ஙன முச்சந்தியில ஊத்திட்டு வா..." என கூறி தட்டை அவரிடம் நீட்டிவிட்டு, பாண்டியனைப் பார்த்து, "ஏலே ராசா... என்னய்யா ஆச்சி? மொகம் கூம்பிக்கெடக்கு? மேலுக்கு எதுவும் முடியலியா? எப்பவும் இப்படி இருக்க மாட்டியே ராசா... என்னய்யா பண்ணுது?" என்று கூறியவாறே தன் பேரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்...

"அதெல்லாம் ஒண்ணுமில்ல அப்பத்தா... நான் நல்லாத்தேன் இருக்கேன்..." என்று வலிய வரவழைக்கப்பட்ட புன்னகை ஒன்றை தன் இதழ்களில் நிறுத்திக்கொண்டான்...

தன் பேரன் தன்னிடம் ஏதோ மறைக்கின்றான் என்பதை உணர்ந்த அவனின் அப்பத்தாவும் அதற்கு மேல் அவனிடம் ஒன்றும் கேட்காமல், "சரி ராசா... போ.. போய் குளிச்சி முடிச்சிட்டு வா.. சாப்பாடு எடுத்து வெக்கிறேன்.. சாப்பிட்டு முடிச்சிட்டு போய் துாங்கு..." என்று அவனை அனுப்பிவிட்டார்...

அவன் சென்றதும், வடிவேலுவை நோக்கி, "ஏலே சில்வண்டு இங்கிட்டு வாலே..." என்று அழைத்தார்...

"ஆச்சி... இதெல்லாம் சரியே இல்ல... சொல்லிப்புட்டேன்.. அவன் மட்டும் ராசா.. நான் மட்டும் சில்வண்டா?" என எகிறினான்...

சிறு வயதிலேயே தன் தாயை இழந்துவிட்ட வடிவேலு, அதிக நேரம் செலவழிப்பது பாண்டியனின் வீட்டில்தான்... அப்பத்தாவின் செல்லம் அவன்... அவனுக்கு தாயில்லாக் குறையே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள் பாண்டியனின் வீட்டார்கள்...அந்த உரிமையில்தான் அவன் அப்பத்தாவிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றான்...

"சரி ராசா.. கோவப்படாத... நம்ம பாண்டி மொகம் ஏன் சரியேயில்ல? ஏதும் பிரச்சினையா?" எனக் கேட்டார்...

'ஆஹா... ஆச்சி கண்டுபுடிச்சிடிச்சே... என்ன சொல்லி சமாளிக்கறது?' என்று யோசித்தவன், "அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆச்சி... இன்னிக்கி விளையாண்டுட்டு வந்ததுல கொஞ்சம் அசதியா இருக்கும்னு நெனக்கிறேன்... அதான் அப்புடி கெடக்கான்... நீ எதையும் மனசுல போட்டுக் கொழப்பிக்காத..." என்று ஆறுதல் கூறியவன், "இங்கிட்டு ஒருத்தன் பசியோட கெடக்கேன்... என்னை சாப்பிடக் கூப்பிட்டியா நீயி? என்னதான் இருந்தாலும் அவன்தான் உனக்கு மொதல்ல... போ ஆச்சி... நான் கோவமா போறேன்..." என்று சட்டென எட்டி நடக்க ஆரம்பித்தான்..

"ஏலே நில்லுல... ஆச்சி இப்ப என்ன பண்ணிப்புட்டேன்னு இவ்வளவு கோவமாப் போற? உனக்கில்லாததா ராச? வாய்யா.. வந்து வயிறாற சாப்பிட்டுட்டுப்போய்யா... மொதல்ல போய் கை காலெல்லாம் சுத்தம் செஞ்சிக்கிட்டு வாலே" என்று நடந்தவனின் கையைப் பிடித்து நிறுத்தி கூறினார்...

"என் ஆச்சின்னா ஆச்சிதான்... உன் மேல எனக்கு கோவம் வருமா ஆச்சி? சும்மா விளையாண்டேன்... இரு வர்றேன்..." என்று கூறிவிட்டு முகம் கை கால் கழுவிவிட்டு உணவறைக்கு வந்தான்...

"ஆஹா ஆச்சி... மீன் கொழம்பா? வாசனையே ஆளத் துாக்குதே... ஆச்சி சமையல்னா ஆச்சி சமையல்தான்..." என கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தவன், ஆச்சி பார்த்த பார்வையில் அப்படியே நின்றுவிட்டான்...

அவரின் பார்வையில் இருந்த கேள்வியை உணர்ந்தவன், "ஆச்சி" என குரல் தாழ கூப்பிட்டவன், "இல்ல ஆச்சி... உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்ல ஆச்சி... சொல்ல வேணாமுன்னுதேன் நெனச்சேன்.. அது ஒண்ணும் அவ்வளவு முக்கியமா எனக்கு தோணல.. அதான்..." என்று இழுத்தவன், தன் மனம் தாங்காமல், ஒரு பெண் பாண்டியனை சீண்டிக்கொண்டிருந்ததை சொல்லி முடித்தான்...

"இம்புட்டுதான் ஆச்சி.. வேற ஒண்ணும் அங்கிட்டு நடக்கல... ஆனா உன்ற பேராண்டி ஏன் இம்புட்டு கோவத்தோட சுத்திக்கிட்டுத் திரியரான்னுதான் எனக்கு வெளங்கல... மனசுல இருக்கறத வெளியிலயும் சொல்ல மாட்டேங்கான்... முன்னாடி எப்புடி இருந்தவன் ஆச்சி இவன்? இப்ப இப்படிக் கெடக்கான்... ஆனா நல்ல வேளை ஆச்சி.. அந்த புள்ள இவன் கண்ணுல சிக்கல... சிக்கியிருந்துச்சின்னு வை... இவன் கழுத்தப்புடிச்சி கொன்னுப்போட்டாலும் போட்டிருப்பான் போல.. அம்புட்டு கோவத்தோட இருந்தான்... கபடி விளையாண்டப்ப நீ கிட்டயிருந்திருக்கணும்... அப்பப்பா... எம்புட்டு கோவத்தோட விளையாண்டான் தெரியுமா? இப்பவும் அவன் கோவ முகம் கண்ணுக்குள்ளாரயே நிக்கிது... அதை இப்ப நெனச்சாலும் ஈரக்குலை நடுங்குது ஆச்சி" என்று கூறி முடித்தவன், "இவன எப்புடி ஆச்சி மாத்தறது? எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு ஆச்சி" என்றான்...

"என்னலே பண்ண சொல்லுதே? அவனும் மாறமாட்டேங்கான்... ஒரு கண்ணாலத்தை கட்டி வெச்சிடலாமுன்னு பார்த்தாக்கா... அதுக்கும் ஒத்துக்கிடமாட்டேங்கான்... அவன் இன்னும் பழச மறக்கலலே... எப்புடி அவன மாத்துறதுன்னு தெரியாமத்தான் நானும் கொழம்பித் தவிக்கிறேன்... என் பேராண்டிக்கு எப்பதான் நல்ல காலம் பொறக்குமோ? ஏலே சொக்கநாதா.. என் ராசாவுக்கு சீக்கிரமே நல்ல வழியக் காட்டப்பா..." என்று வேண்டுதல் வைக்கவும், பாண்டியன் வரவும் சரியாக இருக்கவும், தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு , இருவரும் தங்களின் பேச்சை நிறுத்திக் கொண்டனா்...

உணவறைக்கு வந்தவன், இருவரின் முகபாவங்களைப் பாரத்ததும், அவர்கள் எதைப் பற்றிப் பேசியிருப்பார்கள் என உணர்ந்தும், அதைப் பற்றி எதுவும் கேட்காமல், "அப்பத்தா.. மீன் கொழம்பா? சூப்பர்... எடுத்து வை... ஒரு புடி புடிக்கலாம்..." என்று கூறிவிட்டு ஒரு தட்டை எடுத்துத் தன் பக்கம் வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்...

உணவு உண்ணும்போது எதுவும் பேசிவிட வேண்டாம் என்பதற்காக, பாண்டியனிடம் எதுவும் பேசாமல், உணவைப் பரிமாறினார் அப்பத்தா... பாண்டியன் உணவு உண்டுமுடித்த பின் அமைதியாக சென்றுவிட, வடிவேலுவோ அப்பத்தாவின் தோளில் ஆதரவாக கைவைத்து, "ஆச்சி ஒண்ணும் கவலப்படாத... சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கும்... நீ கவலப்பட்டு உன் ஒடம்ப கெடுத்துக்கிடாதே... புரிஞ்சிதா? போ.. போய் சாப்புட்டுட்டுப் படு.. நான் வாரேன்..." என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்...

மறுநாள் காலை... திருவிழாக் கூட்டத்தில்...

"அண்ணே... நாலு குச்சி ஐஸ் குடுங்கண்ணே..." என்று கூறிய பாண்டியனின் அருகே வந்து நின்ற ஒரு பெண்ணொருத்தி... "அண்ணா... எனக்கு ஒரு குச்சி ஐஸ் குடுங்கண்ணா" என்றாள்... பாண்டியன் எப்பொழுதும் பெண்கள் பக்கம் தன் பார்வையைப் பதிக்க மாட்டான் என்பதால் அவன் அவள்புறம் திரும்பவேயில்லை... இருந்தாலும் அவளின் குரல் அவனை கலவரமடையச் செய்தது... 'இது அவள் குரல் மாதிரி இருக்கே' என்று மனதினில் யோசித்தவன், மறந்தும் அவள்புறம் திரும்பிப் பார்க்கவில்லை...


தன் கைகளில் ஐஸை வாங்கிய அந்தப் பெண் அங்கிருந்து நகரப் பார்க்க, "ஏத்தா... காசு குடுத்துட்டுப் போத்தா..." என்று கடைக்காரர் கூறவும் நின்றவள், "காசுதானே என் 'மாமா'கிட்ட வாங்கிக்கோங்க" என்று கூறி சிரித்தாள்...

"உன்ற மாமன்கிட்டயா? யாருத்தா உன்ற மாமன்?" என்ற கடைக்காரரிடம், "என்ற மாமானா?" என்று வெட்கப்பட்டவள், "இந்தா இங்கிட்டு நிக்கிறாரே... இவுகதான்.." என்று கூறி பாண்டியனைக் கண்ணால் காண்பித்துவிட்டு, "பாண்டி மாமா... காசைக் குடுத்துடுங்க மாமா" என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து சிரித்துக் கண்ணடித்தாள்...

அவளின் வார்த்தையில் அவள்புறம் திரும்பியவன், 'அவளேதான்...' என மனதில் நினைத்துக்கொண்டவன், அவளைப் பார்த்து கோவப் பார்வை வீசுவதற்குள் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள்...

இதைப் பார்த்த வடிவேலுவோ, 'ஆஹா... மறுபடியும் மொதல்ல இருந்தா?' என மனதினில் நினைத்தவன், "மாப்ள" என பாண்டியனை அழைத்தான்...

கோப முகத்துடனே திரும்பியவன், "என்ன?" என வார்த்தைகளை கடித்துத் துப்பினான்....

'ஆஹா.. இவன்கிட்ட இப்ப வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிடக்கூடாது... வடிவேலு... சூதனமா நடந்துக்க' என மனதில் நினைத்தவன்... "ஒண்ணுமில்லடா... நீ டென்ஷன் ஆகாத... யாருன்னே தெரியல அந்த புள்ள... எதை மனசுல வெச்சிக்கிட்டு இப்டி நடந்துக்குதுன்னு தெரியல... எதுவா இருந்தாலும் நிதானமா பேசிக்கிடலாம்... அந்தப் புள்ளய எதுவும் வஞ்சிப்புடாதடா" என்று பொறுமையாக சொல்லவும், அவனை முறைத்தவன், "எனக்கு எல்லாம் தெரியும்... நீ உன் சோலியப் பாரு... நான் கெளம்புறேன்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக நகர்ந்தான் பாண்டியன்... "ஏலே எங்குட்டு போற?" என பின்னாலேயே சென்ற வடிவேலுவை, நின்று முறைத்தவன், "நான் துாக்குலத் தொங்கப் போறான்... வாரியா எங்கூட?" என்றான் சற்றே காட்டமாக...

'அடியாத்தி... இவன் ஏன் இப்புடி பேசுறான்?' என்று நினைத்தவன், "ஏலே.. என்ன பேச்சுலே பேசுத? ஏன் இம்புட்டுக் கோவம் வாரது உனக்கு? நீ சும்மாக்கெடலே... நான் எல்லாத்தையும் பாத்துக்கிடுதேன்... நான் அந்த புள்ள யாருன்னு பார்த்து, உன் பக்கமே வாராதமாதிரி அந்தப்புள்ளகிட்ட பேசிக்கிடுதேன்... நீ வா... நாம வேறு எங்குட்டாவது போவோம்... இங்ஙன இருந்தா நீ இன்னும் கொதிச்சிக்கிட்டுத்தேன் கெடப்ப" என்று கூறிய வடிவேலு, தன் மற்ற நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு நகர்ந்தான்..

"பத்து ரூவா... பத்து ரூவா.. எதை எடுத்தாலும் பத்து ரூவாதான்... அக்காக்களே.. தங்கைகளே... எதை எடுத்தாலும் பத்து ரூவாதான்.. வாங்க... வந்து எதை வேணுமோ மனசுக்குப் புடிச்சத வாங்கிட்டுப் போங்க..." என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு கடைக்குள் தன் நண்பனை இழுத்துக்கொண்டு சென்றான்..

"ஏலே மருது... எப்புடிலே இருக்க? கடை வியாவாரல்லாம் எப்புடிப் போகுது?" என்று தன் நண்பனான கடை முதலாளியிடம் கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் வடிவேலு...

"வாலே வடிவேலு... நான் சுகமா இருக்கேன்... நீ எப்புடிலே இருக்க? ஏலே பாண்டி... எப்புடிலே இருக்க? வீட்டுல எல்லாரும் சொகந்தானே? ஒரே ஊர்ல இருக்கோம்னுதான் பேரு... பார்த்தே எம்புட்டு நாளாச்சில்ல?" என்று முகம் முழுக்க சந்தோஷத்துடன் பேசினான் மருது..

அவன் பேச்சில் தன் கோவம் சிறிது தணிந்த பாண்டியன், "நல்லா இருக்கேன் மாப்ள... வீட்டுல எல்லாரும் சொகந்தானே? உம் பொஞ்சாதி மாசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்... எப்புடி இருக்காய்ங்க அவுக?" என்றதும், "நல்லா இருக்காலே" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அவரிடம் ஒரு பெண் தான் வாங்கிய பொருள்களை நீட்ட, "ஒரு நிமிஷம்லே.. இந்தா வந்துர்றேன்..." என்று தன் நண்பர்களிடம் கூறிவிட்டு, அந்தப் பெண் நீட்டிய பொருள்களைப் பாரத்தவன் அப்பெண்ணிடம், "அக்கா, 150 ருவா ஆச்சிக்கா" என்றான்...

'ச்சே.. இந்த ஊருல வயசுல எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், என்னை சின்னப் பொண்ணுன்னுகூட பாக்காம, 'அக்கா'ன்னு கூப்பட்றாங்க' என நினைத்தவள்...

"சரிங்கண்ணேன்... காசை என்ற மாமங்கிட்ட வாங்கிக்கிடுங்க" என்று கூறினாள்...

"யாருங்க உங்க மாமன்?" என்று மருது கேட்க, பாண்டியனோ, 'மறுபடியும் அவளா' என நினைத்து அந்தப் பெண்ணைப் பார்க்கவும், "மாமா... காசைக் குடுத்துடுங்க.. நான் வாரேன்" என்று பாண்டியனைப் பாரத்துக் கூறிவிட்டதுமில்லாமல், அவனைப் பாரத்து கண்ணடித்துவிட்டு, அவன் தோள்களை தன் தோள்கொண்டு இடித்துவிட்டு ஓடிவிட்டாள்... வடிவேலுவோ வாயைப் பிளந்துகொண்டு நின்றுவிட்டான்... 'அடியாத்தி... இந்தப் புள்ளைக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்புடிப் பண்ணிட்டுப்போவும்? இப்பதான் இவனை மலையெறக்கி இங்கிட்டுக் கூட்டியாந்தேன்... இங்கிட்டும் வந்து இவ இப்புடிப் பண்ணிட்டுப் போனாக்கா? நான் என்னத்த பண்ணுவேன்?' மனதில் புலம்பிக்கொண்டே பாண்டியனைப் பார்க்க, மருதுவுக்கும் பாண்டியனின் குணம் தெரியுமாதலால், 'அட ஆண்டவா? இந்த புள்ள ஏன் இப்புடிப் பேசிட்டுப் போவுது? இனி என்ன நடக்குமோ?' என்று மனதில் நினைத்தவனுக்கு முன்னொரு நாள் நிகழ்ந்த நிகழ்வு கண்முன் தோன்றி மறைந்தது...

என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன்...

படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க...

http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4 ...

3 வருடங்களுக்கு முன்...

பாண்டியன், தன்னை யாரும் 'மாமா' என்று அழைப்பதை முற்றிலுமாக வெறுத்துக்கொண்டிருந்த நேரம் அது...

இந்த விஷயம் தெரியாத அவன் உறவின் முறையில் மாமன் மகளாகிய ஒரு பெண் அவனிடம், "கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்.. பிரசாதம் எடுத்துக்கிடுங்க மாமா.." என்று கூறிய அடுத்த நொடி அவன் முகம் கோவத்தில் சிவந்து, அவள் கையிலிருந்த பிரசாதத்தை வாங்கி கீழே வீசி எறிந்தவன் வேகமாக அவள் கழுத்தைப் பிடிக்கப் போக, அதில் பயந்தவள், பின்னால் இரண்டடி எடுத்து வைக்க, அதில் இன்னும் கோபமுற்றவன், தன் அருகில் நின்றிருந்த வண்டியின் 'சைட் மிர்ரரில்' (Side Mirror) கையை ஓங்கிக் குத்தினான்... அதில் அதிலிருந்த கண்ணாடி உடைந்து அவன் கைகளைப் பதம் பார்த்தது...

கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்தவனைப் பார்த்த அப்பெண் பயத்தில் உறைந்துபோய் நின்றிருந்தாள்...

அனல் பறக்க ஒரு பார்வையை அவள் மீது வீசியவன் அவளிடம் "இன்னொரு வட்டம் 'மாமா'ன்னு கூப்புட்டன்னு வை.. அங்கனயே கொன்னு பொதச்சிருவேன் பாத்துக்க..." என்று உறுமிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்...

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனின் தாய்தான் அவனை சமாதானப்படுத்தி, அவனை வடிவேலுவுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்...

பயத்தில் முகம் வெளிறி கண்களில் நீர் வழிய நின்றிருந்த அப்பெண்ணிடம் சென்று, "பாப்பா... பயப்படாதம்மா... அவன் இப்பவெல்லாம் இப்புடித்தேன் நடந்துக்கிடறான்... நீ ஒண்ணும் மனசுல வெச்சிக்கிடாத பாப்பா... போ... போய்... மூஞ்சியக் கழுவிக்கிட்டு வீட்டுக்குப் போம்மா..." என்று கூறிய லஷ்மி, தன் மனதினுள், 'இவன் எப்பதேன் பழையமாதிரி ஆவானோ தெரியலியே? ஆத்தா மீனாட்சி.. நீதேன் அவனை மாத்தணும்...' என்று கோரிக்கையை வைத்துவிட்டு நகர்ந்தார்....

அந்நாளைய நினைவில் நின்றுகொண்டிருந்த மருதுவின் தோள்களைக் குலுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தான் வடிவேலு...

"ஏலே... என்னாச்சிலே... பழச நெனச்சியோ?" என்று அவன் காதருகில் கேட்டான் வடிவேலு...

"ஆமாண்டா மாப்ள..." என்று கம்மிய குரலில் கூறினான் மருது...

இவர்களிருவரையும் கவனிக்காமல், அந்தப் பெண் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டியன்...

"ஏலே மருது... அன்னைக்கு அப்புடி நடந்துக்கிட்டவேன், இப்ப இந்த புள்ள இம்புட்டுப் பேச்சு பேசிட்டு, இடிச்சிட்டு வேற போறாளே... சும்மா நிக்கானே... எப்புடிடா?" என்று மருது ரகசிய குரலில் கேட்க, "அதான் மாப்ள நானும் யோசிக்கிறேன்... இந்நேரம் அந்தப் புள்ளய இழுத்து நிறுத்தி நாளு அறை விட்ருப்பானே... ஏன் செய்யல?" என வடிவேலுவும் பதிலுக்கு ரகசிய குரலில் பேசினான்...

"ஏண்டா... பாவம்டா அந்த புள்ள..." என்ற மருதுவிற்கு, "அடேய்.. அந்த புள்ள நேத்துலயிருந்து அவன்கிட்ட ஒரண்டை இழுத்துக்கிட்டுக் கெடக்கா... எப்ப என்ன செய்வான்னே தெரில இவன்... அவன் ஏதாவது அந்தப் புள்ளய செய்யறதுக்குள்ளார நாம ஏதாவது செஞ்சி அந்தப் புள்ளய இவன்கிட்டக்கயிருந்து காப்பாத்தியாகணும்..." என்றான் வடிவேலு...

அதை ஆமோதித்தான் மருது....

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஏதோ யோசனை செய்த வடிவேலு, பாண்டியனை தன் பக்கம் திருப்பி, "மாப்ள" என்றான்...

அதில் தன் சுய உணர்வு பெற்ற பாண்டியன், "அவளை கொல்லாம விடமாட்டேண்டா... அவள கொன்னாத்தேன் எங்கோவம் அடங்கும்..." என அடிக்குரலில் கர்ஜித்தான்... அவன் கோவத்தில் கத்திக் கொண்டிருந்தாலும் தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து மருதுவிடம் கொடுக்க மறக்கவில்லை... அவனின் செய்கை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த இருவரும், 'இவன் கோவத்துல கத்துறான்... ஆனா, அந்தப் பொண்ணு சொன்னதுக்காக காசை குடுக்கறான்... என்ன ஆச்சி இவனுக்கு?' என மனதினில் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மீண்டும் கத்த ஆரம்பித்தான்.

"எம்புட்டு நெஞ்சழுத்தம் இருந்தா இம்புட்டு திமிரான காரியத்தை செய்வா அவ?" என்று எகிறிக் கொண்டிருந்தான் பாண்டியன்...


"பாண்டி" என்று சற்றே அதட்டிய குரலில் அழைத்த வடிவேலு, "இங்கிட்டு நின்னு எதுவும் பேச வேணாம்... கடையில வியாவாரம் கெட்டுப் போயிடும்... வா வெளில போயி பேசிக்கலாம்..." என்று அவனை இழுத்துக்கொண்டு செல்ல முயன்றவன், மறுபடி ஏதோ யோசனை செய்துவிட்டு, "ஏலே மருது... அந்த புள்ளய எங்கிட்டோ பார்த்த நியாபகமா இருக்குலே... உனக்கு அப்புடி ஏதாவது தோணுதா?" என்றான்...

மருதுவும் சிறிது யோசனை செய்துவிட்டு, "ஆமாலே.... எனக்கும் அந்தப் புள்ளய எங்கிட்டோ பார்த்த மாதிரியில்ல இருக்கு.... ஆனா... எங்கிட்டுப் பார்த்தேன்னுதான் புடிபடல.." என்று தன் தாடையை தடவி யோசித்துக் கொண்டிருந்தான்...

இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அவர்களை முறைத்தவாறே, தன் மார்புக்குக் குறுக்கே இரு கைகளையும் கட்டியவாறு தோரணையாக நின்றவன், அவர்களை இன்னும் அதிகமாக முறைக்க ஆரம்பித்தான்...

அதைக் கண்ட மருது, வடிவேலுவின் தோளைத் தன் தோள்களால் இடித்துவிட்டு பாண்டியனை கண்களால் காட்டி, "மாப்ள... முறைச்சே நம்மள பொசுக்கிடுவான் போல... எங்கிட்டாவது அவன கூட்டிக்கிட்டுப் போய் மலையெறக்கு..." என அடக்கிய குரலில் கூறினான்...

அவன் வார்த்தைகளில் பாண்டியனைப் பார்த்த வடிவேலு, 'அடியாத்தி.... இவன் என்ன இப்புடி மொறைக்கிறான்' என மனதில் நினைத்துக்கொண்டவன் சிறிது மனதிடத்தை வரவழைத்துக் கொண்டு, "இல்ல மாப்ள... நெசமாவே அந்தப் புள்ளய எங்கிட்டோ பார்த்த நியாபகமாவே இருக்கு... அதேன் கேட்டேன்... சாரி மாப்ள.. வா போலாம்..." என்று அவனை இழுத்தான்...

தன்னை இழுக்கும் தன் நண்பனின் கைகளை தடுத்து நிறுத்தியவன், அழுத்தமான வார்த்தைகளை உதிர்த்தான்....

"அவளை நீங்க வேணும்னா மறந்திருக்கலாம்.... ஆனால் என் கட்டை வேகற வரைக்கும் நான் மறக்க மாட்டேன்... நேத்து கபடி நடக்கும்போது பேசினது அவதான்னு நான் அப்பவே கண்டுபுடிச்சிட்டேன்... அவ பாடினாலே ஒரு பாட்டு.... அப்பவே அவதான்னு மறுபடியும் ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டேன்... என் வாழ்க்கையவே பொறட்டிப் போட்டவளாச்சே அவ... அவளை நீங்க மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்லே... மறக்கக்கூடிய காரியமா அவ எனக்குப் பண்ணினது? நான் இப்ப இப்புடி நிம்மதி இல்லாம சுத்தரதுக்கு காரணமே அவதானே... அவளைக் கண்டாலே ஒடம்பு முழுக்க பத்திக்கிட்டு எரியுது..." என்று கண்ணில் கோபத்துடனும் வார்த்தையில் வெறுப்புடனும் பேசிவனின் பேச்சில் இருவருக்கும் ஏதோ ஒன்று புரிய ஆரம்பிக்க, இருவரும் ஒரு சேர, "மாப்ள... அப்ப அந்தப் புள்ள... அ...வ...ளா...?" என்று திக்கித் திணறிக் கேட்டு முடித்தனர்..

அதில் கசந்த புன்னகை ஒன்றை இருவருக்கும் வீசியவன், "அவளேதான்..." என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, கண்களை அழுந்த மூடிக்கொண்டு, ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டு, "ஸ்ரீ யாழினி... " என்று முடித்தான்...


அவனின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்ற இருவரின் மனதிலும், 'சொக்கநாதா... இனி என்ன நடக்கப் போவுதோ...' என எண்ணிக் கொண்டிருந்தனர்....

ஸ்ரீ யாழினி...

இருபது வயது நிரம்பிய பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி...

இடைவரை நீண்ட அடர் கூந்தல், மனம் நினைப்பதை படம்பிடித்து வெளிப்படுத்தும் அழகிய விழிகள், கோபம் வந்தால் சிவக்கும் கூர்மூக்கு, அளவான அழகான உதடுகள், நல்ல சிகப்பு நிறம், பெண்களுக்கான சராசரியான உயரம், பார்த்த அடுத்த ஐந்து நிமிடங்களில், தன்னைச் சுற்றியுள்ளவர்களை தன் தோழமைகளாக்கிக் கொள்ளும் பேச்சு, சுறுசுறு பட்டாசாய் வார்த்தைகள், மொத்தத்தில் ஆளை அசத்தும் அழகிதான் நம் ஸ்ரீயாழினி...

பிறந்தது, படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை... அம்மா, அப்பா, ஒரு மூத்த சகோதரி என்ற அளவான குடும்பம் அவளுடையது...

அக்கா, தங்கைகள் இருவரும் அவர்களின் பெற்றோருக்கு இளவரசிகள்... தாய், தந்தையாகப் பழகாமல், தோழன் தோழியாகப் பழகுபவர்கள் தங்களின் பெற்றோர்களாகக் கிடைக்கப்பெற்றதில், மகள்கள் இருவரும் அதிர்ஷ்டசாலிகளே... மகள்கள் இருவருக்கும் தங்களின் பெற்றோர்தான் முதல் நண்பர்கள்... எதையும் அவர்களிடம் மறைத்ததில்லை... அந்த அளவிற்கு பாசத்துடன் கூடிய நட்போட்டம் நால்வருக்குள்ளும் உண்டு...

வயிற்றுப் பிழைப்பிற்காக தன் சொந்த ஊரான மதுரையை விட்டு தன் மனைவியுடன் சென்னைக்கு சென்றவர், அங்கேயே சிறு பழக்கடை ஆரம்பித்து நடத்தி வந்தார்... தன் அயராத உழைப்பினாலும், தன் மனையாளின் ஊக்குவிப்புடனும் மேலும் மேலும் உயர்ந்து, இன்று "மதுரக் கனிகள்" என்ற பெரிய அளவிலான பல கிளைகளைக் கொண்ட பழங்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார் யாழினியின் தந்தை... சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் நான்கு பிற மாவட்டங்களிலும் கிளைகள் சிறப்பாக இயங்கி வருகிறது... தாய் இல்லத்தரசி... யாழினியின் தமக்கையைப் பற்றி பிறகு தெரிந்துகொள்வீர்கள்...

பாண்டியனை இடித்துவிட்டு அங்கிருந்து ஓடியவள், சற்று தூரம் ஓடிச் சென்றுவிட்டு, அவன் பார்வையில் இருந்து மறையும்படியாக நின்றுகொண்டு, 'ஐயோ, யாழினி... இருந்தாலும் உனக்கு இ்வ்ளோ தைரியம் ஆகாதுடி... இழுத்து நாலு அறை விட்டிருந்தா என்ன பண்ணியிருப்ப?' என்று தன் மனதினில் நினைத்தவள், 'இனி கொஞ்சம் தூர நின்னுதான் விளையாட்டை ஆடணும்... இ்ல்லன்னா சேதாரம் ஜாஸ்தியாயிடும்' என எண்ணினாள்...

அவன் தோளை உரசிய தன் தோளில் ஏற்பட்ட குறுகுறுப்பும், மேனியில் ஏற்பட்ட சிலிர்ப்பும் அவளுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியது...

'இருந்தாலும் செமயாதான் இருக்கு இந்த ஃபீலிங்' என அவள் எண்ண, அவளின் மனசாட்சியோ, 'ஏன் இருக்காது? அறை வாங்காம தப்பிச்சு வந்திருக்கல்ல... அதான் மெதப்புல இருக்க... அடக்கி வாசி... இல்லன்னா... உன் ஆளு உன்னை அடக்கிடுவான்...' என எச்சரித்தது...

மனசாட்சியின் பேச்சில் எரிச்சலுற்றவள், 'இப்ப உன்கிட்ட கேட்டேனா? வாயை மூடிக்கிட்டு இரு... எதுவா இருந்தாலும் நான் சமாளிச்சிக்கிறேன்... இது எனக்கும் என் மாமனுக்கும் நடக்கற விஷயம்... இதுல நீ தலையிடாத... நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ' என்று அதட்டி அமைதிப்படுத்த முயற்சித்தாள்...

'அடியேய்... அறிவு கெட்டவளே... இதுதாண்டி என் வேலையே...' என அவளின் மனசாட்சி அவளை இடித்துரைக்க, 'அட ஆமாம்ல... எனக்கு மறந்தே போச்சி... சரி சரி... நீ உன் வேலைய பாரு... நான் என் வேலையப் பாக்குறேன்... ஆனா ஓவராப் பேசக்கூடாது ஓகே...' என்ற கூறியவளைப் பார்த்த அவளின் மனசாட்சி, 'இதெல்லாம் நாம சொன்னா அடங்காது... வாங்க வேண்டிய எடத்துல... வாங்க வேண்டியதை வாங்கினாத்தான் சரிப்படும்' எனக் கூறிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தேவிட்டது...


அங்கே பாண்டியனோ இன்னும் உடல் இறுக நின்றிருந்தான்...

அவன் அருகே தயங்கி தயங்கி வந்து, அவன் தோள்களில் கைவைத்த வடிவேலு, "ஏலே மாப்ள..." என்றான் தண்மையாக...

"என்னலே" என்று அடிக்குரலில் சீறினான் பாண்டியன்...

"இல்லலே... நீ எதுவும் டென்ஷன் ஆகாதலே... அந்தப் புள்ளயப் பார்த்து நான் பேசிக்கிடுதேன்... அந்தப்புள்ள இனி உன் பக்கமே வராத மாதிரி நான் பாத்துக்கிடுதேன்... சரியா" என்றான் ஆதரவாக...

நண்பனின் பேச்சில், அவனை ஏற இறங்க பார்த்தவன், "யாருலே? நீ போய் பேசப்போறியோ? கேட்டுக்கிடுவாளா அவ? அவ என்னியப் புடிச்ச ஜென்மசனிலே... விடமாட்டா... இதுக்கு நானேதேன் பரிகாரம் பண்ணனும்... உங்களால ஒண்ணும் முடியாது...." என்று இறுகிய குரலில் கூறியவன், "அடுத்தவட்டம் அவளை நான் எங்கிட்டு பாக்குறனோ, அங்கனயே குழிதோண்டிப் பொதச்சிப்புடுறேன்..." என்று கூறிவிட்டு தன் முறுக்கு மீசையை முறுக்கியவாறு கடையை விட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்....

இங்கே யாழினி செய்த அனைத்தையும் பார்த்தவாறே அவளருகில் வந்த ஒருத்தி அவள் தோளில் கை வைத்தாள்...


அதில் அதிர்ந்து அரண்டு திரும்பியவள், அங்கிருந்தவளைப் பார்த்ததும், "அடியே.. வடிவு... இப்பிடியா வந்து பயமுறுத்துவ? இந்நேரம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்" என்றவளை முறைத்துக் கொண்டிருந்தாள் வடிவு எனும் வடிவழகி... யாழினியின் தோழி...

"அடியேய் நேத்து நீ பண்ணுன காரியத்துக்கே அவுக உன்னை தேடிப்புடிச்சு அறையாம விட்டதே பெருசு... இதுல இன்னைக்கு என்னாடான்னா... இந்த வேலை பாத்துட்டு வார நீ... ஏண்டி இப்புடி செஞ்சித் தொலையுற? உன்னால என் கதி என்ன ஆகப் போகுதுன்னு தெரியல... உங்கிட்ட அந்த விஷயத்தை சொன்னது தப்பாப் போச்சு... எல்லாம் என்னை சொல்லணும்... உங்கிட்டப் போய் சொல்லி வெச்சேன் பாரு... நீ மட்டும் என் வீட்டு விருந்தாளின்னு பாண்டி அண்ணனுக்குத் தெரிஞ்சிதுன்னு வெய்யி... நான் செத்தேண்டி..." என்று புலம்பிக் கொண்டிருந்தாள் வடிவழகி...

வடிவழகி... பெயருக்கேற்றார்போல் அழகி... மதுரைக்கே உரித்தான கிராமத்துக் கருப்பழகி... தாய் தந்தையரை ஒரு வாகன விபத்தில் இழந்தவள், சென்னையில் இருந்த தன் அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தாள்... யாழினியும் வடிவழகியும் வகுப்புத் தோழிகள்... மதுரைக்காரி என்பதாலேயே யாழினி இவளிடம் முதலில் நெருக்கம் காட்டினாள்... ஆனால், போகப்போக அவளின் வெள்ளந்திப் பேச்சும், அக்கறையான வார்த்தைகளும், பாசமான பார்வைகளும் அவளை முழுமனதுடன் தன் தோழியாக ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டது...

யாழினியின் குடும்பத்தில் இவளும் ஒருத்தி என்கி்ன்ற அளவுக்கு அவர்களின் தோழமை வளர்ந்து நின்றது...

தங்களின் கல்லூரிப் படிப்பை தற்பொழுதுதான் முடித்திருந்தார்கள்... இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்துவிட்டு, திடீர் பிரிவை ஏற்க முடியாத வடிவு, "அம்மு... என்னால உன்னைவிட்டுப் போக முடியலடா... என் படிப்பு முடிஞ்சதும், அண்ணேன் வேற எனக்கு கல்யாணத்தை முடிச்சிடணும்னு ஒத்தக் காலுல நிக்கறாரு... கல்யாணங்காட்சின்னு ஆகி, புள்ளக்குட்டிக பொறந்துடுச்சின்னா.. அப்புறம் நாம பாத்துக்கிட நேரம் அமையாமப் போனாலும் போவும்... அதனால நான் அடுத்த வாரம் மதுரைக்குப் போவும்போது நீயும் எங்கூட வாயேன்.... ஒரு பத்து நாள் ஒண்ணா இருந்துட்டு வரலாம்டா... ப்ளீஸ்டா..." என்று தன் தோழியிடம் கெஞ்சியவள், "அப்பா... அம்மா... ப்ளீஸ்... எங்கூட அனுப்பி வெக்கறீங்களா" என்று யாழினியின் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்...

பாவம் அவளுக்கு என்ன தெரியும்? முதலில் இருந்தவர்கள் போல் இருந்திருந்தால், யாழினியை பிரிந்திருக்க முடியாமல் அனுப்பியிருக்க மாட்டார்கள்... ஆனால் இப்பொழுதோ அவளை சுமையாக நினைக்கும் பெற்றவர்களாக ஆகிவிட்டனரே... வடிவுக்கு இது எதுவும் தெரியாதவண்ணம் பாரத்துக் கொண்டிருந்தாள் யாழினி... அதுமட்டுமல்லாமல், வடிவழகியின் பெற்றோர் உயிருடன் இல்லை என்பது தெரிந்ததால், யாழினியின் பெற்றோர் அவளைத் தன் மகள்போல் நடத்தினார்கள்... அந்த உரிமையில்தான் இப்பொழுது கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்தாள் வடிவு...

"உன் இஷ்டம் வடிவு" என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்கள் பெற்றவர்கள் இருவரும்...

சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் வடிவு யாழினியை அணைத்துக்கொண்டு, "அம்மு... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா... அடுத்த வாரம் நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊருக்குப் போறோம்... எல்லாம் தயாரா வெச்சிக்க... நாம ட்ரெயின்ல போயிடலாம்... எப்படியும் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு முடிவு பண்ணித்தேன் நான் மொதல்லயே டிக்கட் புக் பண்ணிட்டேன்... அடுத்த வாரம் பார்ப்போம்... நான் கௌம்புறேன் இப்ப..." என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டாள்...

தோழி சென்ற திசையைப் பார்த்திருந்தவள், அவள் தலை மறையவும், இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வெளியே வந்தது...


தன் அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டு ஒரே மூச்சாக அழுது தீர்த்தவள், அருகிலிருந்த தன் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு, "ஏம்மா... உங்களுக்கு என்னைப் புடிக்காமப் போச்சு? ஏம்ப்பா... உங்களுக்குக் கூட என்னைப் புடிக்கலியாப்பா? முழுசா மூணு வருஷமாயிடுச்சிப்பா நீங்க எங்கிட்ட பேசி... ஏம்ப்பா என்னை ஒதுக்கி வெச்சிட்டீங்க? என் மேல என்ன கோவம் இருந்தாலும் என்னை அடிச்சிடுங்கப்பா... பேசாம இருக்காதீங்கப்பா... என்னால தாங்க முடியலப்பா... நான் மதுரைக்குப் போகப் போறேன்பா... என் எதிர்காலத்தைத் தேடிப் போகப் போறேன் பா... அங்க நான் நெனைக்கறது நடந்தா உயிரோட இங்க வருவேன்... இல்லன்னா பொணமாத்தான் வருவேன் இங்க... அப்பவாச்சும் 'குட்டிம்மா'ன்னு கூப்புடுவீங்களாப்பா?" என அழுது கரைந்து கொண்டிருந்தாள்...


இது இவளுக்கு மூன்று வருடமாக பழகிப்போன ஒரு விஷயம்தான் என்றாலும், அது ஏற்படுத்தும் வலியின் அளவு மட்டும் கூடிக்கொண்டே போனதே தவிர குறைந்தபாடில்லை...


அந்நேரம் அவளின் அலைபேசி சிணுங்கவும், யாரென்று பார்த்தவளின் முகம் பிரகாசமாது... "அக்காஆஆஆஆ" என மெதுவாக வாய்விட்டு கூறியவள் அவசரமாக ஓடிச்சென்று முகத்தைக் கழுவிவிட்டு, அழுந்தத் துடைத்துக்கொண்டு வந்தாள்... அதற்குள் அழைப்பு நின்றுவிடவே, 'அக்கா... உன் மடியில படுத்துக்கிட்டு அழணும்போல இருக்குக்கா...' என்று மனதினில் நினைத்தவள், அது நடக்க வாய்ப்பில்லை என்ற நிதர்சனம் புரியவும், ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டுவிட்டு, அலைபேசியை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு சென்று சிறிது நேரம் தன் தமக்கையிடம் பேசிவிட்டு வந்தாள்... அக்காவிடம் பேசிய பிறகுதான் ஓரளவிற்கு மனம் நிம்மதியுற்றது... இங்கே நடப்பது எதுவும் தனது தமக்கைக்கு தெரியப்படுத்தமாட்டாள்... இருப்பினும் அவளிடம் சில நிமிடங்கள் பேசினால், தன் மனதிற்கு நிம்மதி கிடைப்பதை உணர்வாள்...

ஒரு வாரம் கடந்த நிலையில், வடிவு தன் அண்ணனுடன் எழும்பூர் இரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும்... யாழினியை நேரே எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வருமாறும் கூறிவிட்டாள்...


தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு, வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் பெற்றோரிடம் "நான் போய்ட்டு வர்றேன்மா.. நான் கௌம்பறேன்பா..." என்று கூறிவிட்டு, அங்கேயே நின்றிருந்தாள்...

எப்படியும் அவர்கள் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தும், ஏதோ ஒரு நப்பாசையில் நின்று கொண்டிருந்தாள்...

அவள் இ்ன்னும் அங்கேயே நிற்பதை உணர்ந்த அவளின் தந்தை, "ஏய்... மொதல்ல அவளை எங்கண்ணு முன்னாடியிருந்து கௌம்பச் சொல்லு... மூஞ்சியப் பார்க்கவேப் புடிக்கல..." என தன் மனைவியிடம் கத்தினார்...

"நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க? நீங்க கோவப்பட்டு உங்க ஒடம்பைக் கெடுத்துக்காதீங்க... எல்லாம் நம்ம தலையெழுத்து..." என்று தன் தலையில் அடித்துக்கொண்ட தன் தாயைப் பார்த்தவளுக்கு அழுகை வெளிவரப் பார்க்க, அதை கடினப்பட்டு அடக்கியவள், 'நான் பண்ணது தப்புதான்... ஆனா... இந்த அளவுக்கு என்னை வெறுத்துடுவீங்கன்னு நான் சத்தியமா கனவுலகூட நெனச்சிப் பார்க்கல... எனக்கு என்னோட பழைய குடும்பம் மீண்டும் கிடைக்காதா ஆண்டவா? அவங்களோட பாசம் எனக்கு இந்த ஜென்மத்துல கெடைக்கவே கெடைக்காதா?' என்று மனதினில் மருகியவள், 'இது எல்லாத்துக்கும் கூடிய சீக்கிரம் எனக்கு விடை கிடைச்சிடும்' என்ற ஓர் உறுதியை தன் மனதில் உருவாக்கிக் கொண்டவள், அவர்கள் இருவரையும் பார்த்து, "நான் போறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்...

ஏற்கனவே புக் செய்திருந்த 'கால் டாக்ஸி'யில் எழும்பூரை அடைந்தவள், வடிவுடன் சேர்ந்து மதுரைக்குக் கிளம்பிவிட்டாள் தன் எதிர்காலத்தைத் தேடி...


காலம் அவளுக்கு என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்...

கரெக்ட்டா அப்டேட் கொண்டு வந்துட்டேன்...

படிச்சிப் பார்த்துட்டு எப்டி இருக்குன்னு ஒரு வார்த்தை சாெல்லிட்டுப் போங்க... ப்ளீஸ்....

http://srikalatamilnovel.com/community/threads/நெஞ்சில்-என்றும்-நீயடா-கருத்துத்திரி.332/
 
Status
Not open for further replies.
Top