All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனால் அங்கு சென்றபின் தான் அவளுக்கு டி பி எனும் டியூபர் குளோசிஸ் நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.

இந்த டி பி நோய், உலகின் மிக கொடிய நோய் ஆகும். இந்த நோய்க் கிருமி, காற்று வழியில் பரவும். இந்த கிருமியைக் கொண்டோர் யாரேனும் தும்மியோ, இருமியோ செய்தால் மற்றவர்க்கு எளிதாக பரவும். அதுவும் மது பழக்கம் உடையோருக்கு அவர்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் இருக்கும், அப்போது நோய் தாக்கும் அபாயம் அதிகம்.


இந்த நோயைள் குணப்படுத்த 6 மாதம் காலமோ, இல்லை அதன் மேல் கூட ஆகும்.


"சோ அவளை நான் கூட்டிகிட்டு போகலாமா ?" என்று மருத்துவர் அந்த நோயைப் பற்றி விவரித்து முடித்ததும் நீலகண்டன்,


"உங்க இஷ்டம் ! பட் அவளுக்கு அல்ஹகால் ஹாபிட்ஸ் வேற இருக்கு . அண்ட் அவ கரெக்ட் டைமில் மருந்து எடுக்கணும் ! சோ வீட்டுக்கு கூட்டிட்டு போனா, ஒழுங்கா பார்த்துக்க முடியும்ன்னா தாராளமா கூட்டிட்டு போங்க ! இல்ல பெங்களூரில் ஒரு டி பி ட்ரீட்மென்ட் பிளேஸ் இருக்கு! முக்கியமா ஆல்கஹால் அதிகமா யூஸ் பண்ணற ஸ்டேஜில் , டி பி வரும் போது, அவங்க ட்ரீட்மெண்ட் மேதட்ஸ் நல்ல இருக்குனு கேள்விப்பட்டேன்! இட்ஸ் குட் ! அங்க போய் ட்ரீட்மெண்ட் கண்டின்யு செய்யணும்னா செய்யுங்க ! உங்க இஷ்டம் " என்று மருத்துவர் எடுத்துக் கூற, நீலகண்டன் சற்று யோசித்தார்.


அவள் இருக்கும் நிலையில் தாமோதரை விவாகரத்து செய்ய கேட்பது சரியாக வராது . ஆனால் ஒருநாள் அல்ல ஒருநாள் அவனை அவள் விவாகரத்து செய்து தான் ஆக வேண்டும். அதற்கு முன், இந்த நோயின் பிடியில் இருந்து அவள் மீள வேண்டும். கண்டிப்பாக சற்று காலம் எடுக்கும். அதற்குள் தான் நினைத்த மற்றொன்றை தான் நிறைவேற்றி விடலாம் என்று தீர்மானித்தவர்,


"அவளை பெங்களூர் கூட்டிட்டு போறேன்" என்று தனது முடிவைத் தெரிவித்தார்.



மும்பையில் இருந்தால், அவளைக் கட்டுப்படுத்தி வீட்டிலே இருத்தி வைத்தல் என்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தார். மேலும் தான் செய்யப்போகும் வேலைக்கு அவள் மும்பையில் இல்லாது போனால் நல்லதே. சந்தியா பெங்களூருக்குச் செல்லப் போவதைப் பற்றி கேள்விப்பட்ட துருவ்,


"நானும் பெங்களூர் போறேன் ! இங்க வேண்டாம் எனக்கு" என்று தீர்மானமாகச் சொல்ல, நீலகண்டன் அவனது மனம் புரிந்து, அவனைப் பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். அவனது பள்ளியில் இருந்து டி சி வாங்கிக் கொண்டு அவன் பெங்களூரில் வேறு பள்ளியில் படிக்க ஆரம்பித்தான். சந்தியாவின் சிகிச்சை ஒருபுறம் தொடர, துருவ் வேறு மாறி சூழ்நிலையில் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.


**********





ஒரு விபத்து ஏற்பட்டு 5 மாதங்கள் கழித்து,



சக்லேஷ்பூரில் துருவ் தனக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் வரவுக்கு தயாராகிக்கொண்டு இருந்தான். இந்த முகத்தழும்புகள் அவனை பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல விடவில்லை. அவனுக்குப் பெங்களூர் பள்ளியில் எண்ணற்ற நண்பர்கள் இல்லாவிட்டாலும், ஒருசில நண்பர்கள் உண்டு. மும்பை விட்டபின் அவன் பெரிதாக யாரிடமும் நெருங்கி பழகவில்லை. அப்படி நெருங்கி பழகினால், தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துக் கொள்ள நேரிடும்.


அதில் அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆகையால் ஓர் சிலரிடம் மட்டுமே அவன் பேசுவான், அதுவும் அளவாக. பள்ளி விட்டபின், மும்பையில் செய்தது போல், பியானோ வகுப்புகள், நீச்சல் வகுப்புகள் மற்றும் தற்காப்பு வகுப்புகளை பெங்களூரில் தொடர்ந்தான். தன்னைத்தானே ஏதேனும் பொழுது போக்கில் ஆழ்த்தி தனது வேதனையை மறைக்க முயன்றான். தன்னைப் பற்றி பிறருக்கு அதிகம் தெரியாததால் அவன் பெரிதும் நிம்மதியாக உணர்ந்தான்.


ஆனால் அந்த விபத்திற்குப் பின் எல்லாம் மீண்டும் மாறிவிட்டது. அவனை ஏதோ தீண்டத்தகாதவன் போல், அவனைச் சுற்றி இருப்போரின் பார்வை அவன் மீது பட்டு விலக, அவன் வீட்டில் இருந்து படிப்பை மேற்கொள்ள தீர்மானித்தான். பெங்களூரை விட சக்லேஷ்பூர் சென்றால் தனக்கு மனதளவில் லகுவாக இருக்கும் என்று சக்லேஷ்பூர் சென்று விட்டான். அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு ஆசிரியர் அங்கே வாரத்தில் 3 நாட்கள் வருவார். அவன் 'பிரைவேட் காண்டிடேட் ' ஆகத்தான் பத்தாம் வகுப்பு தேர்வைச் சந்திக்கப் போவதாக நீலகண்டனிடம் சொல்லிவிட்டான்.


அதாவது அவன் தனிவழிக் கல்வி பயின்று, பள்ளி மூலம் தேர்வை எழுத போவதில்லை. அவன் ஆசிரியரும் வந்து விட, அன்றைய பாடங்களைக் கவனத்துடன் படித்துக் கொண்டான். படிப்பில் அவனை குறை சொல்லும் அளவு அவன் இருக்கவில்லை. இன்று பாடம் நடத்தியப் பின், அவர் வருவதற்கு அடுத்த வாரம் ஆகிவிடும். இப்போதெல்லாம் அவனுடைய தாத்தா அவர் எங்கிருந்தாலும், அவனுக்கு தினம் தொலைபேசி அழைப்பு விடுப்பார்.


அது போல் அன்றைய தொலைபேசி அழைப்பில்,


"தாமோதர் அந்த ஆக்சிடெண்ட்டை செட் அப் பண்ணலேனு சாதிக்கறான்..என்னை என்னோட ஆபீசில் வச்சு அட்டாக் பண்ணினான், நம்மள கொலை பண்ண பார்த்திருக்கான் ஜெயிலுக்கு போனாலும் ,அவனுக்கு கொழுப்பு விடல" என்று அவர் மறுமுனையில் பொரிந்து தள்ள, துருவ் அதை மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தான்.


அவனுக்கு இதில் எவ்வித ஈடுபாடும் இல்லை. யார் அந்த விபத்து நடக்க காரணமாக இருந்தாலும் அவனது முகம் அடைந்த தழும்புகளை ஒன்றும் செய்ய முடியாது. தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டவன், ஒருவித திருப்தி அடைந்தான். தாமோதர் கொடுத்த முகம் நன்றாகவே மாறியிருந்தது. அதில் அவனுக்கு ஒருவித திருப்தி.


அவனது இந்த விசித்திரப் புன்னகை பாக்கியத்திற்கு ஒருவித கிலியைக் கொடுத்தது. அவர் இந்த வாரம் முதலில் இங்கே வந்தார், தனியாக இருக்கிறான், கூட வேலையாட்கள் மட்டுமே. சிறுகுழந்தையாகப் பார்த்து, தன் கண் முன் வளர்ந்தவன், என்ன செய்கிறானோ என்ற மனக்கிலேசம் அவருக்கு. அவனுக்கோ யாரும் வேண்டாம். முக்கியமாக தன்னை இரக்கமாகப் பார்க்கும் பார்வை வேண்டாம், தன்னை இழிவாகப் பார்க்கும் பார்வையும் வேண்டாம்.


அதுவும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அப்படிப் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அடிக்கடி தன்னை யாரும் வினோத ஜந்துவைப் போல் பார்ப்பதையும் அவன் இஷ்டப்படவில்லை.



அதனால் தான் அவன் பெங்களூர் விட்டான். அங்கே நெருங்கி பழகியவர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் தினம் பள்ளியில் தன்னை ஓர் கேலிப்பொருளாக யாரேனும் பார்ப்பர், தனது காதுபட தன்னைப் பற்றி இழிவாக கூறுவர். இதெல்லாம் அவனுக்கு நடந்த ஒன்று. என்னத்தான் பொறுத்துப்போனாலும், அவனால் ஓர் அளவு மேல் அதனைத் தாங்க முடியவில்லை. ஆசியர்கள் எத்தனை முறைதான் மாணவர்களைக் கண்டிப்பார்கள்?


ஆகையால் அவன் இந்தத் தனிவழிக் கல்வியைத் தேர்ந்து எடுத்து தனக்கு பிடித்த மலைப்பிரதேசமான, தாத்தாவின் எஸ்டேட் பங்களாவிற்கு வந்து விட்டான். இந்த எஸ்டேட்டின் பெயரில் அவன் பெயர் உண்டு.


"சாம்ராட் எஸ்டேட்ஸ்" அதன் பெயர். அது பங்களா வாயிலில் இருக்கும் போர்ட்டில் பொறிக்கப்பட்டு இருக்கும்.



அதைத்தான் ஒருவள் கஷ்டப்பட்டு வாசித்துக் கொண்டு இருந்தாள்.


"சாம் ஆட் எஸ்டஸ்…" என்று அவள் தவறாக வாசிக்க, அவளது அன்னை சரஸ்வதி அவள் தலையில் மென்மையாகக் கொட்டி,


"சாம்ராட் எஸ்டேட்ஸ் " என்று திருத்தினாள். அந்த ஒருவள், 6 வயது சிறுமி நக்ஷத்திரா. அவளுக்கு 'ர' ற' போன்ற எழுத்துக்களை இன்னும் ஒழுங்காகச் சொல்ல வரவில்லை. மற்ற விஷயங்களுக்கு வாயைக் கிழிக்கும் அம்மையாருக்கு 'ர, ற' எல்லாம் ததிங்கினத்தோம்.


இந்த 'ர,ற' போன்ற ஓசைகள் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கடைசியாகத் தான் வரும், அதுவும் ஓர் சில குழந்தைகளுக்கு அது வர மிகவும் தாமதமாகும். இவளும் அந்த குழுவில் தான் இருக்கிறாள்.


இன்று அவளது அன்னைக்கு இங்கே ஓர் நேர்காணல். எஸ்டேட் பங்களாவைப் பராமரிக்க தகுந்த ஆள் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்து இருந்தார்கள், அதற்காக அவர்கள் இருவரும் வந்திருந்தார்கள். நக்ஷத்திரா வெளியே இருக்க, சரஸ்வதியிடம் பாக்யம் பேசிக் கொண்டு இருந்தார். பாக்யம் இங்கே துருவ்வை பார்த்துக் கொள்ள வந்தால், அவனோ அவரிடம்



"ப்ளீஸ் என்னை இந்த மாறி பார்க்காதீங்க ! இந்த இரக்க பார்வை, நான் பாவம்னு இந்த பார்வை எனக்கு பிடிக்கலே. அது தான் என்னை வீக்கா ஆக்குது" என்று சொல்லியே விட்டான். அவனைப் பார்த்துக்கொண்டும், இந்த பங்களாவைச் சரியாக பராமரிக்கவும் ஆள் கிடைத்தால் தான் இவ்விடம் விட்டு மும்பை செல்வதாக அவர் சொல்லி இருக்கிறார்.



இதுவரை பங்களாவைப் பார்த்துக் கொண்டு இருந்தவர், வேலையை விட்டுச் சென்று விட்டார். ஆகையால் ஒரு புதுஆள் உடனே வேண்டும் என்ற நிலை.


சரஸ்வதியிடம் பேசிய பாக்யத்திற்கு ஒருவித திருப்தி.


"உன்னோட வீட்டுக்காரர் எங்க வேலை பார்க்கறாரு? " என்று அவளிடம் விசாரிக்க, சரஸ்வதி


"அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய ஆளா ஆகணும்னு ஆசை. அதுக்கு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கார்." என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டு விட்டாள்.



"ஓ..நீங்க இங்க வேலை பார்க்கறதுல உங்க வீட்டுல…" என்று இழுக்க, சரஸ்வதி


"ஒரு பிரச்சனை இல்லை. எனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கு. என்னோட பாப்பாக்கும் பிடிச்சு இருக்கு" என்று பட்டென்று கூறிவிட்டாள். பாக்யம் சற்று வெளியே பார்க்க, நக்ஷத்திரா தனது பொம்மையை வைத்துக்கொண்டு, அதன் கரங்களைப் பிடித்து,



"லிங்கா லிங்கா லோசஸ்" என்று பாடிக் கொண்டு தானே தனியாக விளையாடிக் கொண்டு இருந்தாள். அந்த பொம்மை தான் அவளது உற்ற தோழி. அதற்கு பெயர் கூட வைத்து இருக்கிறாள், 'டெடி' என்று.


ஓர் சிகப்பு நிற பிராக் அணிந்துக் கொண்டு, அது சந்தன நிறத்தில் வெகு அழகாக இருக்கும் . தானாக, அழகாக விளையாடிக் கொண்டிருந்தச் சிறுமியை பாக்யம் மட்டும் பார்க்கவில்லை. துருவ்வும் தான். என்னடா இது புதிய குரல் ஒன்று என்று அவன் அந்த குரல் வந்த திசைக்குச் சென்று பார்க்க, நக்ஷத்திரா பொம்மையைத் தோழியாக பாவித்து


"ஹஷ்ஸா புஷ்ஷா.. ஆல் ஃபால் டவுன்" என்று தரையில் உட்கார்ந்து விட்டு, மறுபடியும்


"லிங்கா லிங்கா" என்று ஆரம்பிக்க, துருவ்விற்கு ஏனோ சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 'களுக்' என்று சிரித்தும் விட்டான். ஒன்று அவள் உயரம். மற்றோன்று அவள் பாடும் பாடல்



அது "ரிங்கா ரிங்கா ரோசஸ்" . அவளுக்கு 'ர' வராத காரணம் அது 'லிங்கா லிங்கா' ஆயிற்று. சிகப்பு நிற சுவட்டர், வெள்ளை நிற ஃபிராக் அணிந்துக் கொண்டு, கழுத்தில் ஒரு பாசி மாலை, இரட்டை குடுமி இடப்பட்டு தன் தலையை ஆட்டிக்கொண்டு அவள் பாடும் விதம் வேறு.


அவள் முன் சென்று, அவள் சொல்வதைச் சரி செய்ய அவனுக்கு ஆசை தான். ஆனால் எங்கே தனது முகத்தழும்புகளைப் பார்த்து, அவள் மிரண்டு விடக்கூடாதே என்று தயங்கினான். அவளுக்கு 4 வயது இருக்கலாம் என்று வேறு எண்ணிக்கொண்டான். மறைந்து இருந்து கதவின் இடுக்கு வழியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனை, நக்ஷத்திரா அந்த 'களுக்' சத்தத்தில் சற்று திரும்பிப் பார்க்க, துருவ் சுவரின் பின்னால் மறைந்தான். சற்று முன்னே சென்று பார்க்கலாமா என்று யோசித்தவளை,


"தாரா" என்று சரஸ்வதி அவளைக் கூப்பிட, அன்னை கூப்பிட்ட உடன் செல்லும் பழக்கம் இல்லாத நக்ஷத்திரா அங்கேயே சற்று நேரம் நின்று அந்தக் கதவையே பார்த்துக்கொண்டு இருந்தாள், கழுத்தை சற்று நீட்டியபடி.


சரஸ்வதி வெளியே வந்து


"தாரா! எத்தனை முறை கூப்பிட? வா" என்று இழுத்துக் கொண்டு போனார். அதன் பின் அவளை, அவன் 2-3 நாட்கள் பார்க்கவில்லை. அதன் பின்னர் அவளைக் கண்டான்.


ஓர் ஏகாந்த இரவில், நட்சத்திரங்களை அவள் எண்ணிக் கொண்டு இருந்தாள். ஆம், நக்ஷத்திரா, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு அவை எல்லாம் தனக்கு தான் என்று உரிமைப் பறைசாற்றிக் கொண்டு இருந்தாள், அதில் துருவ நட்சத்திரமும் அடக்கம்!


அந்த இரவில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அடுத்து வந்த 60 நாட்கள், இருவரின் வாழ்வின் மறக்க முடியாக் காலம். குறுகிய காலம் ஆயினும், அது தான் அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த காலம். அது குறுகிப் போனது விதியா அல்ல சில மனிதர்களின் மன விசித்திரத்தால் வந்த வினையா?



அதையும் பார்ப்போம்.


 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 26


"நம்ம பங்களாக்கு ஹவுஸ் கீப்பரா இருக்க ஒருத்தங்க வந்திருக்காங்க. அவங்க கூட அவங்க பொண்ணும்" என்று பாக்யம், அவனுக்கு இரவு உணவு பரிமாறியபடி தகவல் தெரிவிக்க, அவன்


"ம்ம்.." "ஓ" என்று மட்டும் பதில் அளித்தான்.


"நான் அவங்களுக்கு என்ன செய்யணும், எப்படி செய்யணும்னு சொல்லிட்டு, ஐயா வீட்டுக்கு போயிடுவேன்" என்று அவர் பேசிக்கொண்டே போனார்.


"எனக்கு யாரும் வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டீங்க. சோ நோ கமெண்ட்ஸ். பட் என்னை பாவமா பார்த்தா இல்லன்னா, என்னை பத்தி தேவை இல்லாம பேசினா, இந்த வேலை அவங்களுக்கு கிடையாது. " என்று தீர்மானமாகத் தெரிவித்து அவன் உணவு உண்டு விட்டு பங்களா வெளியே சென்று விட்டான்.


முழு நிலவு அன்று. ஓர் கல் பெஞ்சில் உட்கார்ந்து மென்மையானத் தென்றல் காற்றை அவன் ஆசையாக அனுபவித்துக் கொண்டிருந்தான். இன்று சுவட்டர் அணிந்து கொள்ளும் அளவு குளிர் இருக்க வில்லை.



சற்று காலாற நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று அவன் தனது இருக்கையில் இருந்து எழுந்து, அவனது பங்களாவில் வேலை செய்வோர் இருக்கும் வீடுகளின் புறம் நடக்க ஆரம்பித்தான்


சற்று தூரம் நடந்து இருப்பான். ஒரு கல் திண்ணையில் ஒரு குட்டி உருவமும் ஒரு பொம்மை உருவமும் அமர்ந்து இருப்பதைக் கண்டான்.


"டெடி! என்கூட சண்டை போடாம இந்த மினுமினு ஜிகினா எல்லாம் பங்கு போடணும்..ஓகே வா?


அந்த பக்கம் இ(ரு)க்க(ற) அந்த மினுமினு ஜிகினா எல்லாம் உனக்கு.. இல்ல இல்ல..அந்த பளிச் மினுமினு ஜிகினா எனக்கே எனக்கு...அது உனக்கு இல்ல..அதுக்கு பதிலா இந்த பக்கம் இ(ரு)க்க(ற) மினுமினு ஜிகினாவில் 2 அதிகம் தரேன்" என்று 'பளிச் மினுமினு ஜிகினா' ஆன துருவ நட்சத்திரத்தை, தனது பொம்மை 'டெடி' கொடுக்காது பேரம் பேசிக் கொண்டு இருந்தாள்.


அவளது மொழியே முதலில் அவனுக்குப் புரியவில்லை. மினுமினு ஜிகினா என்றால் என்ன என்று யோசித்தவனுக்கு, அது விண்மீன் என்று புரிய 2 நிமிடம் ஆயிற்று. அதன் பின் பளிச் மினுமினு ஜிகினா என்ன என்று அவன் வானத்தைப் பார்க்க, அங்கே பிரகாசமாக துருவ நக்ஷத்திரம் ஜொலித்துக் கொண்டு இருந்தது. அவனுக்கு ஓரளவு அந்த வயதில் நட்சத்திரங்களைக் கண்டு அறிய தெரியும்.


அதை உணர்ந்தவன் முகத்தில் ஓர் மென்னகை. அவனால் இந்த சம்பாஷனையில் பங்கெடுத்துக் கொள்ளாது இருக்க முடியவில்லை.


"எனக்கு எந்த சைட் இருக்கற மினுமினு ஜிகினா கிடைக்கும்" என்று கேட்டே விட்டான். திடீரென ஒலித்த ஓர் ஆண் குரலால் அவள் திடுக்கிட்டுப் போனாள்.


தனது பொம்மையைப் பத்திரமாக தனது கையில் எடுத்துக்கொண்டவள், மிரண்ட மற்றும் அதிர்ந்தப் பார்வை கொண்டு மெல்ல பின்னால் திரும்பினாள்.


அங்கே நல்ல உயரத்துடன் ஓர் உருவத்தைக் கண்டாள். முகம் தெளிவாக அவளுக்கு காணவில்லை. ஆகையால் அவள், தனது அன்னை அவளை மிரட்ட பயன்படுத்தும் வார்த்தையான


'மலை பூதம்' தான் வந்து விட்டானோ என்று பயந்து போனாள்.


"மலை பூதம்..கிட்ட வஆ(ரா)தே..போ போ" என்று கத்திவிட்டு,


சட்டென்று தனது பொம்மையைத் தூக்கிக் கொண்டு, அவள் ஓட்டம் பிடிக்க, அவனுக்கு என்னவோ போல் ஆயிற்று. இந்த சிறு குழந்தைக்குக் கூட தன்னைப் பிடிக்கவில்லை போலும், அதான் ஓடிப்போய் விட்டாள் என்று வருந்தினான்.


அவள் ஓடிச்சென்ற திசையையே பார்த்துக்கொண்டு இருந்தவன், அவள் கல் தடுக்கி கீழே விழவும், ஒரு நிமிடம் என்ன செய்ய என்று யோசித்தவன், கீழே விழுந்ததால் அவள் அழ ஆரம்பிக்க, அதைக் காணச் சகிக்காது, அவள் அருகே சென்று, அவளிடம்



"கொஞ்சம் இரு..வலிய பொறுத்துக்கே, உன் வீட்டுல கொண்டு போய் விடறேன்" என்று சொல்லவும் அவள் மேலும் மிரண்டு போய் அழ ஆரம்பிக்க, அவனுக்கு அது பெருத்த சங்கடமாகப் போய் விட்டது. நிலவொளியில் , அவனால் அவளது காயத்தில் இருந்து ரத்தம் பெருகுவதைப் பார்க்க முடிந்தது.



அப்போது கூட, தனது பொம்மையை அவள் விடவேயில்லை. அதைக்கண்டு அவனுக்கு சிரிப்பு வேற வந்தது. சிரித்தால் இன்னும் ஏதேனும் நினைத்துக் கொண்டு பயந்துவிடுவாள் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டான்.


"உன் வீடு எங்க சொல்லு! கொண்டு விடறேன்" என்று மீண்டும் கேட்டான். அவளோ


"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.." என்று அழுது கத்தித் தீர்க்க, அவனுக்கு என்ன செய்வது என்று புரியாது, கீழே அவள் அருகே சற்று மண்டியிட்டு, தனது விரல்களைக் காண்பித்து,


"பூதத்துக்கு ஒரு கையில் 10 விரல் இருக்கும்னு என் அம்மா சொல்வாங்க. பாரு, எனக்கு 5 விரல் தான். பூதத்துக்கு கால் கிடையாது. பாரு! காலும் இருக்கு எனக்கு. நான் பூதம் இல்ல" என்று அமைதியாக எடுத்துக் கூற, நக்ஷத்திராவிற்கு என்ன தோன்றியதோ, அவன் முகத்தைத் தனது பிஞ்சு ஆள்காட்டி விரலால் தொட்டாள். அவள் தொட்ட இடம், அந்த தழும்பு உள்ள இடம்.



அவன் யார் என்று அறியாள், பெயரும் அறியாள். அவன் தான் பின்னாளில் தங்கள் இருவர் வாழ்வைச் சுழற்றி அடிக்கப் போகிறான் என்று அறியாள். அந்நேரம் அவளுக்கு அவன் நிஜமா, பொய்யா என்பது தான் தெரியவேண்டி இருந்தது.



ஏனென்றால் அவன் பூதமானால், இந்நேரம் அவன் அவளைக் கடித்திருப்பான் என்று அவள் நம்பினாள். அதுவும் அவள் தொட்டவுடன் அவன் முகம் பயங்கரமாக மாறிருக்கும் என்று கதைகள் மூலம் அவளது மூளையில் பதியப்பட்டு இருந்தது.



"அப்போ நீ பூதம் இல்லியா?" என்று தைரியமாகக் கேட்டாலும் அவள் கண்ணில் ஒருவித மிரட்சி இருக்கத்தான் செய்தது. அது அவனுக்கு தெளிவாகத் தெரியாவிட்டாலும் ஓரளவு கணிக்க முடிந்தது.



"இல்ல! உன்னை மாறி ! மனுஷ ஜாதி!" என்று சொல்ல, தனது பொம்மையை இன்னும் இறுக்கப்பற்றி கொண்டாள். எங்கேயாவது அவன் எடுக்க கூடாதே என்ற ஒரு பயம் தான்.


அதை கண்டு கொண்டவன்,


"நான் பொம்மை வச்சி விளையாடறது இல்ல தாரா!" என்று அவளிடம் சொல்ல, அவள் அதிர்ச்சி அடைந்தாள். அது அவளது உடல் மொழியில் தெரிந்தது.


பொம்மையைப் பிடித்துக் கொண்டிருந்தக் கையினால் வாயைப் பொற்றி கொண்டாள். அந்த குட்டிப் பெண்ணின் முக பாவங்கள் தெளிவாக தெரியாவிட்டாலும், தெரிந்த அளவில் அவனுக்கு சிரிப்பு வந்தது.


"நான் பூதம் இல்ல, ஆனா மேஜிக் தெரியும்! மேஜிக் மூலம் உன் பேர் தெரியும்" என்று சீண்டினான்.



"நிஜமாவா? அப்போ மேஜிக் குச்சி எங்க?" என்று சரியாகக் கொடுக்குப்பிடி போட்டாள்.


புத்திசாலி தான் என்று நினைத்துக் கொண்டவன்,


"ம்ம்ம்..வீட்டுல வச்சிட்டு வந்திட்டேன்" என்று அவளிடம் வளவளத்தபடி அவளை நிற்க வைத்து,


"உன் வீட்டுக்கு போலாம் வா! " என்று அவளை நடக்க வைக்க முயன்றான்.


"கால் வலிக்கி..என்னோட டெடிக்கும் ஊ பட்டு(டிரு)க்கு" என்று குழந்தை மொழியில் பேச, அது பொம்மைக்கும் அடி பட்டு இருக்கிறது என்பதை சொல்கிறாள் என்று புரிய, அவனுக்குப் புரிய சற்று சமயம் பிடித்தது.


"ஓகே! வீட்டுக்கு போய் மருந்து போடலாம்" என்று அவன் முன்னேற, அவளோ காயத்தால் பின்தங்கினாள். அவள் தன்னுடன் வராது போக, என்ன என்று பார்க்க, அவளோ காயத்தால் சற்று நொண்டிக் கொண்டு இருந்தாள்.


அவளைத் தூக்கிக் கொண்டான். அதில் அவளுக்கு இன்னும் அதிர்ச்சி.


"ம்ஹூம்..கீழே விடு" என்று சிணுங்க, அவன்,


"உன்னை வீட்டில் விடறேன்..கத்தாதே" என்று நயமாகப் பேசிப் புரிய வைத்து அவளைத் தூக்கிக் கொண்டு நடக்க, அவள் அழகாக அவன் கையில் வீற்றிருந்து கொண்டு,


"இன்னும் கொஞ்சம் தூக்கு..நான் இன்னும் பெரிய கே(ர்)ளா ஆகணும்" என்று இது தான் சாக்கு என்று அவனை ஏணியாக்க முயற்சிக்க, அவனும் சிரித்தபடி அவளை இன்னும் உயர்த்தினான்.


"ஹய்யா...நான் உன்னைவிட உசவ(ர)ம்" என்று குதூகலித்தாள். அவனது பங்காளவில் வேலை செய்வோர் இருக்கும் வீடுகளை நோக்கி அவன் நடக்க ஆரம்பித்தான். அவளிடம் இப்போது வீடு எங்கே என்று கேட்டால், அவள்


'நீயே கண்டுபிடி. நீதான் மேஜிக் செய்வியே!' என்று சொல்ல வாய்ப்புக்கள் அதிகம். ஆகையால் ஒரு யூகத்தில் அவள் வீட்டைக் கண்டெடுக்க அவன் செல்ல, அவனது நல்ல நேரம் அவளது அன்னை சரஸ்வதி அவளைத் தேடி வந்துவிட்டாள்.


"தாரா! கீழ இறங்கு ! என்ன இது! " என்று அவளைச் சத்தம் போட , துருவ்



"அவளுக்கு அடி பட்டிருக்கு! அதான் தூக்கிட்டு வந்தேன்" என்று ஓர் கலைநயமிக்க பொக்கிஷத்தை எவ்வாறு கவனமாக கீழே வைப்பானோ, அவ்வாறு அவளைத் தரை இறக்கினான்.



"உங்களுக்கு எதுக்கு தம்பி..இதெல்லாம்" என்று சரஸ்வதி சங்கடப்பட, அவன்


"ஒரு பிரச்சனை இல்லை. அவளுக்கும், அவளோட டெடிக்கும் மருந்து போட்டு விடுங்க" என்று அவன் விடைபெற எத்தனிக்க, நக்ஷத்திரா அவனைச் சட்டையைப் பிடித்து இழுத்து,


"உன் பே(ர்) என்ன?தம்பியா" என்று கேட்க, அவனுக்கு அவள் கேள்வியில் புன்னகை, அவள் அன்னைக்கோ மெலிதான எரிச்சல்.


"அதிகப்பிரசங்கி! வாய .." என்று திட்டுவதற்குள், அவன் அவள் உயரத்திற்கு கீழே குனிந்து,


"என் பேர் துருவ் சாம்ராட் சிங்கானியா!" என்று முழு பெயரையும் தெரிவித்தான்.


அவளுக்கு அந்த முழு பெயர் முழுமையாக வரவில்லை. அவள் 'முனுசாமி', 'ரமேஷ்' போன்ற தமிழ் பெயர்களைத் தான் இதுவரை கேள்வி பட்டு இருக்கிறாள். இவன் பெயரோ ஒரு மைல் நீளம், அவளுக்கு.


அழகான தன் வில் போன்ற புருவங்களை, குழப்ப புருவங்களாக ஆக்கி, உதடுகளைப் பிதுக்கி


"துவ் சாம் சிங்கமா உன் பேரு?" என்று அதை கெடுத்துக் குட்டி சுவராக்கினாள். தனது பெயரை, இப்படி ஒருவள் அவளை அறியாது கேலிப் பொருளாகக் ஆக்குவாள் என்று அவன் ஒரு நாள் கூட நினைத்தது இல்லை.



சரஸ்வதி அவளை மேலும் கடியும் முன்,


"சாம்னு கூப்பிடு! அது போதும்" என்று அவளுக்கு அவன் சாம் ஆகிப்போனான், அந்த இரவில் இருந்து.



சற்று நேரம் கழித்து, சரஸ்வதி இருக்கும் வீட்டின் அறைக்கதவு தட்டப்பட, வெளியே துருவ் தான் நின்று கொண்டிருந்தான்.


"இல்ல , நீங்க இன்னிக்கி தான் வந்தீங்கன்னு கேள்விப்பட்டேன். சோ மருந்து இல்லாம இருந்தா என்ன செய்யன்னு எடுத்துக்கிட்டு வந்தேன்" என்று வாயிலேயே நின்று அதனைக் கொடுக்க, சரஸ்வதி அவன் மீது பெரிதும் மதிப்பு கொண்டாள்.


அவன் இவ்வளவு தூரம் இதெல்லாம் செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை, அதுவும் பணக்கார வீட்டுப் பையன், அலட்டல் எதுவும் இல்லாது எளிமையாக, அதை விட இனிமையாக பழகுகிறான் என்று அவன் மீது ஒருவித அன்பும் அவருக்குப் பெருகியது.


யார் வந்து இருக்கிறார்கள் என்று கண்டறிய நக்ஷத்திரா வெளிய வர, துருவ்வை பார்த்து,


"சாம் ! நீ வீட்டுக்குள்ள வா " என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். இரவு உணவை அவர்கள் அப்போது தான் சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று அவன் புரிந்து கொண்டான் .


அவனுக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்து, அவள் கொஞ்சம் உப்புமாவைத் தட்டில் போட, சரஸ்வதிக்கு நக்ஷத்திரா அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொண்டு இருப்பதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாது விழிக்க, துருவ்வோ அவளது கள்ளமில்லா அன்பில் நெகிழ்ந்தான். பெரிய வீடு அல்ல அது, இருவர் எளிதாக வாழலாம், மூவர் என்கில் சற்று சிரமம்.


சிறிய வரவேற்பறை, அதன் அருகே சமையலறை, சிறிய படுக்கையறை, ஒரு கழிப்பறை என்று கட்டப்பட்டு இருந்தது. பெரிதாக நாற்காலிகளோ, மேஜைகளோ இருக்கவில்லை. ஆனால் அவை எல்லாம் அவளது நல்ல உள்ளம் முன் ஒரு குறையாகவே அவனுக்கு தெரியவில்லை. அவளிடம் தான் அன்பு இருக்கிறதே, கொட்டிக் கொட்டி அவனுக்கு கொடுக்க ! அவனை பாக்யம் மரியாதை கலந்த அன்புடன் சாப்பிட அழைப்பார், ஆனால் இவளோ உரிமை கலந்த அன்புடன் அழைத்து விட்டாள், அதைத்தான் அவன் எதிர்பார்த்தான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தரையில் உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை. அவன் அவளுக்காகத் தரையில் உட்கார்ந்துக் கொண்டு எவ்வித மறுப்பும் இல்லாது அவள் இட்ட உணவை அமைதியாகச் சாப்பிட்டான். சரஸ்வதிக்கு என்ன சொல்வது என்று தெரியாது, கையைப் பிசைந்துக் கொண்டு இருக்க, அவன்


"எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம், ப்ளீஸ் " என்ற வேண்டுகோளை வைக்க, எல்லோரும் உணவு அருந்தினர்.


"இந்த அம்மா இன்னிக்கி தச்சி மம்மு செய்யல, உப்புமா தான் செய்ஞ்சாங்க , தொட்டுக்க சட்னி வைக்கலே, ஜீனி தான்" என்று நமது குட்டி அம்மிணி குறை கூறிக் கொண்டே சாப்பிட்டாள். துருவ்விற்கு அவள் என்ன பேசினாலும், சிரிப்பு தான் வந்தது. அவன் அதிகம் அவனை விட சிறிய குழந்தைகளுடன் பழகியதில்லை, அவனுக்கு உடன் பிறப்புகளும் இருக்கவில்லை. ஆகையால் அவனுக்கு அவளது பேச்சுக்கள் எல்லாம் இன்பத்தேன் தான். ஆனால் சரஸ்வதிக்கு அவள் வாயாடி மங்கம்மா.


"தாரா! சாப்பிடும் போது பேசாம சாப்பிடு" என்று அன்னை கண்டித்தாலும் அவள் நிறுத்தினால் தானே! அவளுக்கு தான் சாம் இருக்கிறானே, தனது எல்லாப் பேச்சுக்களையும் ரசித்துக் கேட்க!


"இனி எங்க வீட்டுக்கு போக நான் பஸ் பிடிச்சு நைட் முழுக்க பயணம் செய்யணும்னு அம்மா சொல்லா(ற)ங்க! எங்க ஊவு(ரு) வாணியம்பாடி இவ்ளோ பெ(ரி)யிய ஊவு(ரு)ன்னு எனக்கு இப்போதான் தெயி(ரி)யும். நீ எவ்ளோ வருஷமா இங்க இ(ரு)க்கே?" என்று அவனைப் புலன் விசாரணை செய்து கொண்டு இருந்தாள் அவள்.


'இந்த ஊர் வாணியம்பாடியா' என்ற அதிர்ச்சியில் அவன் சரஸ்வதியைப் பார்க்க, அவளோ 'ஒன்றும் சொல்லாதே' என்ற பாவமான ஒரு கெஞ்சல் பாவனையில் அவனை எதிர்நோக்க, துருவ்விற்கு என்னவோ புரிய ஆரம்பித்தது.


"நான் இங்க கொஞ்ச நாளா இருக்கேன் ! உன் வீடு எங்க சொல்லு ?" என்று அவளுக்கு ஏற்றவாறு அவனும் பேச, அவள், வெளியே தெரியும் மலையைக் காண்பித்து,


"அதோ அந்த மலைக்கு பின்னாடி இ(ரு)க்கு. அங்க தான் என்னோட ப்(ரெ)ன்ட்ஸ் எல்லாம் இ(ரு)க்காங்க . நான் மட்டும் இங்க தனியா என் டெடி கூட ! இனி யார் கூட விளையாட" என்று அவள் மெலிதாக விசும்ப ஆரம்பிக்க, அவனுக்கு அவளது கஷ்டம் புரிந்தது.


அவனும் அதே மாதிரியான கஷ்டத்தில் தானே இருக்கிறான் !




"என் கூட விளையாடலாமே !" என்று அவன் கூற, அவள் அதனை நம்ப முடியாது பார்த்தாள். அவனோ நல்ல உயரமான , பெரிய பையன், அவளோ சிறுமி, தனது வயதில் இருக்கும் குழந்தைகளை விட உயரத்தில் அவள் கம்மி தான். இவனைப் போன்றவர்களை தனது வீட்டின் அக்கம் பக்கத்தில் பார்த்து இருக்கிறாள், ஆனால் அவர்கள் இவளையோ அல்லது இவளது நண்பிகள் பட்டாளத்தையோ ஒரு பொருட்டாக மதிக்கவே மாட்டார்கள், அல்லது கேலி செய்வர். ஆகையால் அவளுக்கு உடனே சம்மதம் தெரிவிக்க மனம் வரவில்லை. தயங்கி, தனது டெடியை தன் மார்பில் வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க, அவன் தான் முதலில் நட்புக்கரம் நீட்டினான்.


"ப்ரெண்ட்ஸ் ?" என்று அவன் கையைக்குலுக்க தனது கரம் நீட்ட, அவள் அவனது செய்கையைப் பிரதிபலிக்கவில்லை.



அதில் அவன் மனம், முகம் இரண்டும் சற்று சுணங்கியது. சரஸ்வதி அவளிடம் எடுத்துக் கூறும் முன், அவன்,


"நான் வரேன் ! சாப்பாடு நல்ல இருந்திச்சு ! தேங்க யு, குட் நைட் !" என்று சொல்லிவிட்டு ஏமாற்றத்துடன் அவன் அவர்கள் வீடு விட, அவள் அவன் சற்று தூரம் சென்றதும் அவனைத் தேடி ஓடோடி வந்தாள்.


"சாம் !" என்று அவள் கூக்குரல் இட, அவன் தனது நடையை நிறுத்தி அவளைப் பார்க்க, அவள் அவனது கையைப் பிடுங்கி,


"ப்(ரெ)ண்ட்ஸ் " என்று அவனது நட்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவளுக்கே உரித்தான அந்த அழகுப்புன்னகையைக் கொடுக்க அவன் அதில் வீழ்ந்தான். காதல் என்றால் என்ன என்று அவனுக்கு அரைகுறையாக தெரியும், யார் மீதும் அந்த பருவக்கோளாறு உணர்வு அவனுக்கு வந்ததில்லை. காதல் திருமணம் புரிந்து கொண்ட பெற்றோரைப் பார்த்ததா அல்லது அவ்வயத்தில் அவன் இவ்விஷயத்தில் சற்று மன முதிர்ச்சி கொண்டு இருந்தானா?




அவனுக்கு அப்போது வேண்டியிருந்தது அன்பு மட்டுமே ! எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு ! அதை அவள் அவனுக்கு அவளையும் அறியாது கொடுக்க, பாலைவனத்தில் தண்ணீர் தேடிச் , சோர்வடைந்து, மயக்கத்தை எந்நேரம் வேண்டும் என்றாலும் தழுவலாம் என்ற நிலையில் இருக்கும் பிராயணியான அவன், அவளது அன்பெனும் அமிர்த மழையில் நனையத் தயாரானான்.


அடுத்த நாள் சரஸ்வதியைப் பார்த்தவன்,


"இது வாணியம்பாடி இல்லன்னு சொல்லலியா?" என்று கேட்க, அவர்



"அது ஏன் சின்னையா கேக்கறீங்க! ஒரே ரகளை அவ, ஊரை விட்டு போக போறோம்னு சொன்ன உடனே! அப்பறம் அங்க இருக்கற ஏலகிரி மலையை காமிச்சு, அந்த மலைக்கு பின்னாடி இருக்கறதும் வாணியம்பாடி தான், அங்க தான் போறோம். வேற ஊர் இல்ல, வாணியம்பாடி பெருசுன்னு என்னலாமோ சொல்லி அவளை கூட்டிகிட்டு வந்தேன். நல்லவேளை நைட் பிராயணம் செய்ஞ்சோம், தூங்கிட்டா, இல்லேன்னா நம்பியிருக்க மாட்டா. அப்பறம் இங்க வேலை செய்யறவங்க நிறைய பேர் தமிழ் ஆளுங்க! அதனால் மொழி பிரச்சனை தெரியல.




பொதுவா கேள்வி கேட்டே கொல்லுவா! புத்திசாலி அவ அப்பா மாறி! குள்ளம் அவர் அக்கா மாறி!" என்று கூற, துருவ் நக்ஷத்திராவின் தந்தை என்ன செய்கிறார் என்று விசாரித்துக் கொண்டான். ஆனால் ஒருநாள் அல்லது ஒருநாள் இது வேற ஊர் என்று அவளுக்கு தெரியாதா போய்விடும் என்றும் நினைத்துக் கொண்டான்.



அன்னையைத் தேடி, நக்ஷத்திரா அவ்விடம் வர, துருவ் அவளைக் குதூகலமாகப் பார்த்தான்.


ஆனால் அவளோ அவனைக் கண்டு கொள்ளாது, சரஸ்வதியை ஓர் மரம் என பாவித்து, அவள் மீது ஏற, அவனுக்கு அதிலும் சிரிப்பு தான்.


"பாப்பா ! இன்னும் அம்மா மேலே ஏறி உட்காரறே ? ஸ்கூல் எப்படி போவே ?" என்று பாக்யம் அவளை விசாரிக்க, அவள் பாக்யத்தைப் பார்த்து கோப முகம் கொண்டாள்.


"நான் பாப்பா இல்ல! பெஇ(ரி)ய பொண்ணு ! ப(ர்)ஸ்ட் ஸ்டாண்ட(ர்)ட் படிக்கஏ(றே)ன் ." என்று நாட்டின் அதிபர் தான் என்ற ரீதியில் அவள் பதில் இருக்க, சரஸ்வதி,


"ஆனா ர,ற மட்டும் வராது . வாய் மட்டும் …" என்று கூறிமுடிப்பதற்குள் அவள் அன்னையைப் பார்த்து முறைத்தது மட்டுமின்றி, அன்னையை விட்டு கீழே இறங்கி, கோபித்துக் கொண்டு, பங்களா விட்டு வெளியே போய் விட்டாள். சிறுபிள்ளைகள், சிறுபிள்ளைகளாகத் தானே இருப்பார்கள் !


"ஏன் அப்படி சொன்னீங்க ? பாவம் அவ !" என்று துருவ் அவளுக்குக் கொடிப்பிடிக்க சரஸ்வதி,


"அவ கூட ஓர் நாள் இருந்தா தெரியும், அவளோட பிடிவாதம் . அந்த ஓசை வரலைன்னா, அதுக்கு கொஞ்சம் முயற்சி செய்ஞ்சு பார்க்கணும், ஆனா செய்ய மாட்டா ! அவ கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான், சரியாகிடுவா " என்று சரஸ்வதி சொன்னாலும், அவனுக்குத் தான் மனம் ஒப்பவில்லை.


அவளைத் தேடிச் சென்றான். அம்மையாரை நிலத்தில் தேடினால், அவள் காணவில்லை. அவளோ அங்கிருந்த சப்போட்டா மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு சப்போட்டா பழம் மிகவும் பிடிக்கும் . அதைக் கண்டால் விடமாட்டாள்.


சற்று சறுக்கி விழப்போக, அவள் விழாது அவன் தாங்கிக் கொண்டான்.


"நேத்து தானே அடிபட்டு அழுதே ! இன்னிக்கியும் அடி படணுமா ?" என்று அவன் கடிய, அவள் ஒன்றும் பேசாது இன்னும் அந்த கோப முகத்தை விடாது இருக்க, அவன் அவளிடம்


"நான் பறிச்சு தரட்டா ?" என்று வினயமாகக் கேட்டான். அப்போது தான் அவள் சற்று தனது முகபாவத்தை மாற்றிக் கொண்டு, ஏதோ போனால் போகட்டும் என்பது போல்,


"ம்ம்" என்று சம்மதம் தெரிவித்தாள். அவளது பிடிவாதம் அவனுக்குப் புரிந்தது.


அவளுக்குச் சப்போட்டா பழங்களைப் பறித்துக் கொடுக்க, அதை அவள் ரசித்து ருசித்துச் சாப்பிட்டாள். அதையே அவன் பார்த்துக் கொண்டு இருக்க, தன்னிடம் வேறு கடிக்கப்படாத பழம் இருக்கிறதா என்று பார்த்தவள், அது இல்லாது போனதால் , தான் கடித்துக் கொண்டிருக்கும் பழத்தை அவனிடம் கொடுத்து,


"எனக்கு வயத்தை வலிக்கும் " என்று மனதே வராது அவனிடம் கொடுக்க, அவனும் அவள் எச்சில் செய்த பழத்தை உண்டான். அது அவனுக்கு தவறாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளுடைய செய்கையில் ஒளிந்து இருந்த தன்னலமில்லா அன்பு தான் அவனுக்கு தெரிந்தது. அனால் சரஸ்வதி இதைப் பார்த்து பொங்கிவிட்டார்.


"தாரா ! அறிவு இருக்கா? தம்பி யாருன்னு தெரியுமா ! அவர் தான் நம்ம முதலாளி ! இப்படியா செய்வே ?" என்று அவளை அடிக்கப்போக, துருவ் அவர்கள் இடையே புகுந்து,


"ஆன்டி ! நான் அவளோட பிரென்ட் ! ப்ளீஸ் " என்று கூறி அவரை சமாதானம் செய்ய முயன்றாலும், இருவரும் அதில் சமாதானம் ஆகவில்லை.


அவள் கண்ணில் ஒருவித மிரட்சியும், பயமும் குடிகொள்ள, சரஸ்வதிக்கோ இன்னும் அவளது நடவடிக்கையில் கோபம் குறையவில்லை .அதன் பலன் அவளை அடுத்த ஒரு வாரம் அவன் காணவேயில்லை. சரஸ்வதியிடம் கேட்கலாம், ஆனால் பிடிக்கவில்லை.. பாக்யம் அந்த வாரமும் அங்கே இருந்தார்.


ஒரு கட்டத்தில் அவன் பாக்கியத்திடம் ,


"எங்க அந்த குட்டி பொண்ணு ?" என்று கேட்டே விட்டான். பாக்யம்,


"2 நாள் கொஞ்சம் அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க ! அப்பறம் ஸ்கூல் போக ஆரமிச்சிட்டா ! இப்போ ஸ்கூல் விட்டு வர நேரம் தான், சரஸ்வதி அவளைக் கூட்டிட்டு வர போயிருக்காங்க " என்று உபரித் தகவல் வேறு அளித்தார்.


வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல், அவன் அவளது வீட்டை நோக்கிச் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சியில் அதிர்ந்துப் போனான். சரஸ்வதி அவளது தொடையில் சூடு வைத்துக் கொண்டு இருந்தார். அவளோ


"அம்மா, வேணாம் மா …" என்று அலறிக்கொண்டு இருக்க, துருவ் பாய்ந்துச் சென்று சரஸ்வதி கையில் இருந்த சூட்டுக்கோலைப் பிடுங்கி எறிந்தான். அவன் கண்கள் கோபத்தில் சிவந்து, ஓர் தீப்பார்வை பார்க்க, சரஸ்வதியின் கண்ணில் கண்ணீர். அவருக்கு தன்னையே சுத்தமாக அந்நேரம் பிடிக்கவேயில்லை. அருமையான மகளை இம்மாதிரி வலிக்கவைத்து அழவைத்துப் பார்ப்பதில் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. துக்கம் மட்டுமே ! ஒரு பெண்ணுடன் கணவன் சேர்ந்து வாழாது இருந்தால் வரும் விளைவுகளைத் தான் அவர் அனுபவித்துக் கொண்டு இருந்தார். சந்தியாவும், சரஸ்வதியும் இதில் ஒன்று, என்ன சந்தியாவிடம் பணம் இருக்கிறது.


ஏழையாகிப் போனால், கேட்கும் பேச்சுக்கள் இன்னும் மோசம். அழும் நக்ஷத்திராவை அவன் கூட்டிக் கொண்டு, பங்களாவுக்குள் நுழைந்து, பாக்யத்திடம்


"நம்ம டாக்டரை வர சொல்லுங்க பாக்யம் மா !" என்று கூற, மருத்துவரும் வந்தார். நக்ஷத்திரா அவரைக் கண்டு இன்னும் அழுது ரகளைச் செய்தாள். எங்கே தனக்கு ஊசி போட்டு விடுவாரோ என்று பயம் அவளுக்கு, அவளது பயத்தைப் போக்கி, அவரால் அந்த காயத்திற்கு மருந்தே இடமுடியவில்லை. கடைசியில் துருவ் அவளைப் பிடித்துக் கொள்ள , பாக்யம் அவளது கால்களைப் பிடித்துக் கொள்ள , மருத்துவர் காயத்திற்கு மருந்திட்டார். அவள் அதற்கு கத்திய கத்து ! அம்மம்மா, அந்த பங்களா நல்ல உறுதியுடன் கட்டப்பட்டு இருந்ததால் அதற்கு ஒன்றும் ஆகவில்லை .



அழுகை முடிந்து விசும்பல் மட்டும் அங்கே நிரம்பி வழிய, துருவ் அந்த மருந்தை எப்போதெல்லாம் போட வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு இருக்க, அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு விட்டு, மருத்துவரிடம்


"சின்னையாவுக்கு மவு(ரு)ந்து இல்லியா ?" என்று அவனது தழும்பினைக் குறிப்பிட்டு வினவ, அவர் திகைத்தார் என்றால் துருவ் அதில் அதிர்ந்தான். மிகவும் சிறிய விஷயம் தான் அது, அவனது தழும்பைப் பார்த்து, அவனுக்கும் தன்னைப் போல் ஓர் காயம் ஏற்பட்டு இருக்கிறது, தன்னை அவன் பார்த்துக்கொண்டான், அதற்கு பதிலாக என்று எடுத்துக் கொண்டாலும் சரி அவன் மீதான சகமனித அக்கறை என்று எடுத்துக்கொண்டாலும் சரி, அவள் அங்கே உயர்ந்து காணப்பட்டாள்.


அவர் மென்மையாக புன்னகைத்து,

"அவனுக்கு மருந்து ஏற்கனவே கொடுத்தாச்சு !" என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டார் . பாக்கியத்தின் கண்கள் நிரம்பி விட்டன. நக்ஷத்திரா அருகே வர தயங்கியபடி சரஸ்வதி ஓர் ஓரமாக நின்று கொண்டிருக்க, துருவ் அவரது செய்கையால் விழைந்த அதிருப்தியில் அவரைக் கண்டும் காணாது இருக்க, பாக்யம் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு,


"ஏன் இப்படி பாப்பாக்கு சூடு போட்டே ! உனக்கு எப்படி மனசு வந்திச்சு ?" என்று ஒரு பிடிப் பிடித்து விட்டார். சரஸ்வதி தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு விஷயத்தைச் சொன்னார்.



விஷயம் என்னவென்றால், அவளுடன் பள்ளியில் பயிலும் சக மாணவன் அவளது பெயரின் முன் இருக்கும் இனிஷியல் எனும் தந்தை பெயரின் முதல் எழுத்தைப் பார்த்து அவளிடம் அவள் அப்பா பெயர் என்ன, அவர் ஏன் அவர்களுடன் இல்லை என்றெல்லாம் கேட்டு, அவளது பதிலில் திருப்தி அடையாது, அவளைத் தந்தை இல்லாதவள் என்று கூற, அவள் கோபம் அடைந்து, அவனைக் கடித்து விட்டாள்.


அது அன்று மாலை சரஸ்வதி பள்ளிச் சென்று நக்ஷத்திராவை அழைத்துக் கொண்டு வரப் போக, கடிபட்ட பையனின் அன்னை-தந்தை இருவரும் அங்கே வந்திருக்க, பெருத்த சண்டை ஆகிவிட்டது. அவள் கடித்த சம்பவம், மாலை பள்ளி விட சற்று நேரம் முன் நடந்து இருந்தது. இல்லையென்றால் சரஸ்வதி உடனே அழைக்கப்பட்டு இருந்திருப்பார்.


மொத்தத்தில் சரஸ்வதியைப் பற்றி தவறாக அவர்கள் எல்லோரும் பேசி, அவரை அவமானப்படுத்தி விட்டனர்.



சரஸ்வதிக்கு அவமானம், அழுகை, கோபம் என்று பல்வேறு உணர்வுகள், காரணம் இவள் தான் என்ற ஆத்திரம். எல்லாம் சேர்ந்து அவர் தனது வசம் இழக்க, அவளுக்கு சூடு ! அந்த அடையாளத்தைத் தான் துருவ் ஷிம்லாவில் அரைகுறையாக கண்டு, நக்ஷத்திராத்தான் தனது சிக்குவா என்று கண்டறியச் சென்று, அது வேறு விதமாக முடிந்தது.


அவரது பேச்சுக்களை துருவ்வும் கேட்டுக்கொண்டு இருந்தான் ! ஆனால் அவனுக்கு கோபம் குறையவில்லை.


தனியாக அவரிடம்,


"யார் எப்படி போனாலும், நாங்க குழந்தைங்க ! அதை ஏன் மறக்கறீங்க !" என்று விரக்தியுடன் கேட்டே விட்டான் .



அவனது கதை ஓரளவு அவர் அறிந்திருந்தார். அவனது வலியும், அவரது வலியும் சேர்ந்து வலித்தது அவருக்கு !



துருவ்விற்கு அவளது தந்தையின் திரையுலக ஆசை மீது அன்று வெறுப்பு வந்தது. சிறுகுழந்தை அவள், அவளுடன் நேரத்தை செலவழிக்காது என்ன மாறி மனிதன் அவன் என்று நினைத்துக்கொண்டான். அப்போது அவனுக்கு தனது தந்தை ஞாபகம் வராது இல்லை. அந்த வயதில் தாமோதர் அவனுக்கு நல்ல தந்தையாக தானே இருந்தார். அப்பறம் என்ன ஆயிற்று என்று யோசித்தவனின் கவனத்தை ஒரு பிஞ்சு கரம் அவன் முகத்தில் பதித்து கலைய வைத்தது.


"உனக்கு வலிக்கிலியா சின்னையா ?" என்று பாவமாக அவனது தழும்பைப் பார்த்துக் கேட்டாள் .


அவளது அக்கறை அவனை உறுக்கிவிட்டது, ஆனால் 'சின்னையா' பிடிக்கவில்லை .



"நான் யாரு உனக்கு ?" என்று அவன் கேட்டான்.


"என்னோட முதலாளி ! உன்கிட்ட தான் பணம் இ(ரு)க்கு, என்னோட அம்மா உன்கிட்ட வேலை பா(ர்)க்கிஆ(றா)ங்க ! நீ அவங்களுக்கு சம்பளம் கொடுக்கஏ(றே)! அப்போ நீ தானே எங்க முதலாளி !" என்று அழகாகச் சொல்ல, துருவ்விற்கு முதன்முறையாக அவள் மீது கோபம் வந்தது.


"நான் உன்னை மாறி படிக்கறேன் ! எனக்கு 15 வயசு ஆகுது ! என்னோட தாத்தா தான் இங்க முதலாளி, ஏன்னா இது அவர் இடம் ! நான் உன்னோட பிரென்ட் அவ்வளவு தான் ! புரியுதா ?" என்று அவளுக்காகச் சற்று பொறுமையை வரவழைத்து எடுத்துக் கூற, அவளுக்கோ வேற பல சந்தேகங்கள்.


"நீ எந்த ஸ்கூல் ? எத்தனையாவது ஸ்டான்ட(ர்)ட் ? உனக்கு ஸ்கூல் எத்தனை மணிக்கு " என்று கேள்வி கேட்டுக் கொன்றாள். அவளுக்கு ஹோம் ஸ்கூலிங் எனப்படும் வீட்டிலேயே படிக்கும் முறையைச் சொல்லி புரியவைக்கும் முன் அவனுக்கு உயிர் போய் விட்டது.


"அப்போ நானும் உன்னை மாறி வீட்டில படிக்க போஏ(றே)ன் " என்று புதிதாக ஆரம்பிக்க, அவன் அதெல்லாம் இந்த வயதில் முடியாது என்று கூற,


"உனக்கு இந்த தழும்பு வலிச்சு நீ ஸ்கூல் போலியா ?" என்று அடுத்த கேள்வி. உண்மைதானே !


"ஆமாம் ! அதான் போகலே ! உடனே எனக்கும் தழும்பு இருக்குனு ஆரம்பிக்காதே ! உன்னோடது சரியாகிடும் " என்று முதலிலேயே சொல்லி விட்டான்.


"அப்போ, உன்னோடது? மவு(ரு)ந்து போட்டா, சயி(ரி)யாகாதா ?" என்று அடுத்து கேள்விக் கேட்டு குதற,


"இல்ல ! ஆமாம் உனக்கு என்னை பார்த்தா பயமாயில்லையா " என்ற அவனது கேள்விக்கு, அவளோ


"இல்ல ! நீ தான் என்னோட பி(ரெ)ன்ட் ஆச்சே ! பயமில்லை " என்று அசால்டாக சொல்லிவிட்டாள். மனதில் எவ்வித விகற்பம் இல்லாது அவள் பேசிய விதத்தில், அவளை இந்த ஜென்மத்தில் விட கூடாது என்று அவனுள் ஓர் எண்ணம் விதைக்கப்பட்டது .


மனிதனின் எண்ணங்கள் ஆயிரம்

ஈடேறுமா அவ்வாயிரம்

அதுவும் சிறுவயதில் தோன்றும் ஆசைகள் நிறைவேறாது போகும் போது வரும் வலி ! சிலசமயம் ஜீவனே போய்விட்டால் நல்லது என்று தோன்றுமே ! அப்படித்தான் அவனுக்கு அவளை பிரிந்த அவனுடைய அந்த 15 ஆம் வயதில் தோன்றியது .

அவள் இல்லாத காலத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் அவன் மனதில் நீக்கமற நிலைத்துப் போனாள் .

அன்றும்

இன்றும்

என்றும் .


அவனது துருவ நட்சத்திரம் அவள் . துருவ நட்சத்திரம் இடம் மாறாது ஆனால் மேகக்கூட்டத்தில் அந்த துருவ நட்சத்திரமும் மறைந்தது .. அது….

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 27


"இந்த வீடு வேண்டாம் ! எனக்கு பிடிக்கலே. அடிக்கடி இந்த டாக்டவை (ரை ) பாக்க பிடிக்கலே " என்று அழுதபடி மருத்துவரின் சிறிய க்ளினிக் - இல் உட்கார்ந்து இருந்தாள் நக்ஷ்த்திரா . அவளுக்கு மறுபடியும் ஜுரம். ஆகையால் மருத்துவரைப் பார்க்க வந்திருக்க, சரஸ்வதி அவளிடம் பொறுமையாக,


"ஊசி போட மாட்டார் , மருந்து மட்டும் தான்" என்று எடுத்துக்கூறினாலும், அவள் ஓத்துக்கொண்டால் தானே !


"பொய்யி ! போன தடவ ஊசி குத்தி நான் அழுதேன்" என்று சரியாகப் பழையதை ஞாபகம் வைத்துக் கொண்டுப் படுத்தி எடுத்தாள். அதற்குள் செவிலிப் பெண் அவர்களைக் கூப்பிட, அவர்கள் உள்ளே சென்றனர்.


இது மூன்றாம் முறை, அவர்கள் இவளுக்கு ஜுரம் வந்து, இங்கே வந்திருப்பது. மருத்துவரைப் பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை, ஒழுங்காக அவளைச் சோதிக்கக் காண்பிக்காது படுத்தியதில், செவிலிப் பெண் அவளைச் சத்தம் போட,



அவர் முகத்தில் கடிக்கலாமா அல்லது கையில் தனது அரிசிப்பல்லைப் பதிக்கலாமா என்று தன்னுள் நட்சத்திரா தீவிர மந்திராலோசனை நடத்திக் கொண்டிருக்க, மருத்துவர் அவளுக்கு ஊசி போடத் தயாரானார். கையில் ஊசியைப் பார்த்தவுடன் அவளுக்கு பக் பக் நொடிகள் வர ஆரம்பிக்க, உதட்டைப் பிதுக்கி அழ ஆரம்பிக்கத் தயாரானாள்.


அப்போது தான் துருவ், அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்தான். அவனைப் பார்த்தவுடன்,


"சாம்! ஊசி போட கூட்டிட்டு வந்திருக்காங்க ! எல்லாம் பேட் " என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். அவனுக்கு தெரியும் இவள் மருத்துவர் முன் செய்யும் ரகளை. அவள் இங்கே வந்து இருக்கிறாள் என்று அறிந்து கொண்டு தான் அவன் வந்தான்.


"ஒண்ணுமில்ல, சரியாகிடும் ! வா நான் இருக்கேன் உன் கூட" என்று அவளுக்குத் தைரியம் சொன்னாலும், அவள் எளிதில் கேட்பவளா என்ன?


ரகளைக்குச் செல்லப்பிள்ளை அவள். மாட்டேன், முடியாது என்பதை எப்படி எல்லாம் தெரிவித்து, மற்றவர்களை இம்சை செய்து, அவர்கள் நேரத்தை வீணடிக்க முடியுமோ அதெல்லாம் அவள் செய்தாள். எல்லோரின் பொறுமை காற்றில் பறக்க, துருவ் அன்று போல் அவளது கைகளைப் பிடித்துக் கொள்ள, சரஸ்வதி அவளது காலைப் பிடித்துக் கொள்ள, வெற்றிகரமாக, மருத்துவர் ஊசியைப் போட்டார். அவளோ


"சாம்! இந்த டாக்டவ்(ர்) மாமா பேட்.. ஊசி வேண்டாம்னு சொல்லு..ஆஆ …" என்று கத்திக் கூப்பாடு போட்டாள். முடிவில் அழுது கொண்டே


"நீயும் பேட்.. உன் கூட டூ கா" என்று அவரிடமும் சண்டையிட்டாள். சரஸ்வதி அதற்கு


"அதிக பிரசங்கி! வாய மூடு!" என்று கத்த, துருவ்


"ப்ளீஸ் ஆன்டி! விடுங்க. அவளுக்கு ஜுரம்! முடியல" என்று மிகவும் பொறுமையாக அவளைக் கையாண்டான். வீட்டில் கொண்டு விட்டவன், அவளிடம் சமாதானம் பேச முயன்றாலும், அம்மையார் சப்போட்டா மரம்..ம்ஹூம்..முருங்கை மரத்தில் இருந்து இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.



அவனுக்கும் பாடங்கள் படிப்பதற்கு இருக்க, சற்று அவனும் தன் படிப்பில் மூழ்கிப் போனான். அவளுக்கு அது ஏனோ மனதோடு குத்த, தானாகவே அவனைத் தேடிப் போனாள்.



ஒரு பெரிய சால்வையைத் தன் மீது போற்றிக் கொண்டு, அதனால் தடுக்கி விழாது இருக்க பாடுபட்டபடி பங்களாக்குள் நுழைந்தாள். அவன் எங்கு இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு, அங்கே செல்ல, அவன் தனது பெரிய பியானோவில் இசை மீட்டிக் கொண்டு இருந்தான். அந்த காலகட்டத்தில் அது புகழ் பெற்ற தமிழ் பாடல், அதில் வரும் பியானோ இசை அதன் சிறப்பு.


மிகவும் ரசித்து அதை அந்த இசைப்பகுதியை வாசிக்க, நக்ஷ்த்திராவும் அதில் லயித்துப்போனாள். இன்று தான் இவ்வளவு பெரிய பியானோவை அவள் நேரில் காண்கிறாள். அதனால் வந்த மலைப்பு ஒரு புறம் என்றால் அவன் இவ்வளவு நன்றாக பியானோ வாசிப்பான் என்று இந்நாள் வரை அவள் அறிந்திருக்கவில்லை.



இசையில் லயித்து, அறைக்கதவின் மீது சாய்ந்தபடி, அவள் கேட்டாள். உடல் களைப்பு அப்போது தெரியவில்லை. அவன் மீதான கோபமா? அது எங்கே? என்று ஆயிற்று ! உண்மையில் அவள் அவனிடம் தன்னை ஏன் வந்து பார்க்கவில்லை என்று அவன் சட்டையைப் பிடித்துச், சண்டை போடத்தான் வந்திருந்தாள். ஆனால் அந்த வேகமும் கோபமும் அந்த இசையில் மறைந்து போய் விட்டது.


அவன் வாசித்து முடித்தபின், அவள் கைகளைத் தட்ட, அப்போது தான் அவன் அவளைக் கவனித்தான்.


அவளைப் பார்த்து அவன் புன்னகைப் பூக்க, அவள் மெல்ல அவன் புறம் நடந்து வந்தாள்.


"நீ நல்ல வாசிக்கஏ(றே), எனக்கும் சொல்லி த(ரு)வியா ?" என்று வினவ, அவன்


"கண்டிப்பா, அதுக்கு நீ கொஞ்சம் பெரிய பொண்ணா ஆகணுமே" என்று பதில் அளிக்க,


"நான் இப்போவே பிக் தான் " என்று அவள் அந்த பியானோவை இப்போது வாசிக்க முடியாதோ என்ற ஏக்கத்தில் சொல்லி விட்டாள்.



அந்த ஏக்கம் அவள் கண்ணில் பளிச்சிட, துருவ்வால் அதனைத் தாங்க முடியவில்லை.

அவள் கரங்களைப் பிடித்து, பியானோ கட்டைகளில் பதித்து, இசையை மீட்ட, அவளோ


"இல்ல இல்ல, நீ பண்ணின மாஇ(றி) நான் வாசிக்கணும்" என்று பிடிவாதத்தை ஆரம்பித்தாள். இது சிறுகுழந்தை இயல்பு, அவர்களுக்கு எல்லாம் உடனே நடக்க வேண்டும். துருவ்விற்கு அது சற்று புரிந்தது.


"நீ முதலில் ஏ, பி, சி, டி படிச்சிட்டு தானே ஆப்பிள், பால் எல்லாம் படிக்கறே, அது மாறி தான் இதுவும். இந்த பேஸிக்ஸ் படிச்சா தான், என்னை மாறி வாசிக்க முடியும்" என்று எடுத்துக் கூறினான். அதனை சுமாராகத் தான் அவள் ஒத்துக்கொண்டாள். இன்றே எல்லாம் படித்து முடித்து கரைத்திட வேண்டும் என்ற வேகம் அவளிடத்தில் இல்லாது இல்லை.


சிறிது நேர பியானோ வாசிப்பு முடிந்து, இருவரும் சாப்பாட்டு மேஜைக்குச் சென்றனர். அவளுக்கு தயிர் சாதமென்றால் உயிர், ஆனால் ஜுரம் இன்னும் சரி ஆகாததால், அவளால் அதனை உண்ண முடியாத நிலை. அவளுக்கானக் கஞ்சியை சரஸ்வதியிடம் எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். ஆனால் அவளோ ஏக்கமாக தயிரைப் பார்க்க, துருவ் அந்த கஞ்சியை இரண்டு டம்ளரில் ஊற்றிவிட்டு,


"நானும் தயிர் சாப்பிடலே ஓகே ! குடி பார்ப்போம், மருந்து இருக்கு உனக்கு" என்று அவளுக்காகத் தனது உணவை அன்று மாற்றிக் கொண்டான். சரஸ்வதிக்கு இது அதிகப்படி என்று தோன்றாது இல்லை. ஆனால் நக்ஷ்த்திரா அவனிடம்


"சீக்கி(ர)ம் எனக்கு உடம்பு சஇ(ரி)யாகனுன்னு நான் சாமி கிட்ட வேண்டிஇ(ரு)க்கேன்! அப்ப(ற)ம் நாம தெ(ரெ)ண்டு பேயு(ரு)ம் சே(ர்)ந்து தச்சி மம்மு சாப்பிடலாம் " என்று அவள் தனது வயதிற்கேற்ப சமாதானம் சொல்ல, அவனோ கடவுள் என்ற சொல்லில் விரக்தி அடைந்தான்.


அதை வெளிக்காட்டாது,


"ம்ம்..ரெடிக்கு இல்லியா ?" என்று அவளது பொம்மையைக் குறிப்பிட்டுக் கேட்க, அவள்


"ஸ்ஸ்ஸ்" என்று தான் தனது பிரிய பொம்மையை மறந்து போனதுக்கு தலையில் அடித்துக் கொண்டு,


"டெடிக்கும் உண்டு , மூணு பங்கா பி(ரி)ச்சு சாப்பிடலாம்" என்று முடிவு செய்தாள். சிகப்பு நிற ப்ராக் போட்ட பொம்மையின் பெயர், 'ரெடி', அதை அவளது தந்தை அவளுக்கு வாங்கிக் கொடுத்தது. அவளுக்கு 'ர,ற ' வராத காரணம், அவளது தந்தையும் அவளுமாகச் சேர்ந்து பொம்மைக்குச் சூட்டிய பெயர் 'டெடி' ஆயிற்று. அந்தக் கதையை அறிந்து கொண்டவன், அதை சரியாக 'ரெடி' என்று தான் சொல்வான், ஆனால் நம்மவளுக்குத் தான் இன்னும் 'ர' வராத பாடு.


மருந்தைப் புகட்டியப் பின், அவளை அவள் வீட்டிற்குக் கூட்டிகொண்டுச் சென்றான் . அவன் விடைபெறுகையில்,


"சாம் ! நாளைக்கு நீ என் கூட விளையாடுவியா ?" என்று பெரும் ஏக்கத்துடன் வினவினாள், தனது பிரிய பொம்மையைப் பிடித்துக் கொண்டு,


"கண்டிப்பா ! ஆனால் என்னோட படிச்சு முடிச்ச பிறகு ! நீ நல்ல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு சரியானாத்தான், ரெண்டு பேரும் மினுமினு ஜிகினா பங்கு போட முடியும்! ஓகே " என்று அவளிடம் சற்று பேரம் பேசினான்.


அவளும் தனது உருண்டையானத் தலையை நன்றாக ஆட்டி,

"ம்ம்" என்று சம்மதித்தாள். அவன் ஒருவனுக்குத்தான் அவள் சற்று அடங்குவாள், சரஸ்வதியை ஏய்த்து விடுவாள். அவருக்கு தனது மணவாழ்வு பற்றிய கவலை வேறு !


வாணியம்பாடியில் அவளது கணவனின் உறவினர்கள் அவளை நடத்தியவிதம், ஒரு கட்டத்தில் அவரால் தாங்க முடியவில்லை. தான் சுயமாக சம்பாதித்தால் தான் இவர்களின் ஏச்சு - பேச்சுக்களில் இருந்து விடுதலை என்று கஷ்டப்பட்டு ஒரு விதமாக இப்பொது ஓர் வேலையில் இருக்கிறார், இங்கே சக்லேஷ்பூரில். ஆனால் அவரது கணவனுக்கு இது முற்றிலும் பிடிக்கவில்லை.


அவளிடம் பேசவுமில்லை, கடிதப் போக்குவரத்தும் இல்லை. என்னத்தான் தைரியமானப் பெண்ணாக இருந்தாலும், கணவனின் இந்த அமைதி அவளுக்குச் சற்று கிலியைக் கொடுக்கத்தான் செய்தது.


அதை எல்லாம் வெளிக்காட்டாது தான் உலாவிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு துருவ் மீது சற்று அனுதாபம் மற்றும் பாசம் உண்டு. முதலாளியின் பேரன் என்பதால் அதனை வெளிக்காட்டாது, அளவானப் பேச்சு மட்டுமே அவனிடத்தில் அவனும் அது போல் தான். அவன் அதிகமாக பேசும் ஆள், நக்ஷ்த்திரா மட்டுமே .





இருவரின் சம்பாஷணையை அவர் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். அவருக்கு நட்சத்திரா துருவ்விடம் பழகுவதில் 100% உடன்பாடு இல்லை. அவனோ பணக்காரன், இவர்கள் சகவாசம் எல்லாம் ஓர் அளவோடு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார், ஆனால் அதே நேரம் அவனது ஏக்கமும் புரிந்தது. ஆகையால் அவர் அதைப்பற்றி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


அவன் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற, அவள் ஓடிச் சென்று,


"சாம் !" என்று கூப்பிட்டாள். அவனோ நடந்து ஒரு மேட்டை கடந்து சற்று பள்ளத்தில் இருக்க, அவள் மேலும் ஓடி அவன் முன் மூச்சிரைக்க நின்று,


" நான் சாயி(ரி), உனக்கு என் மேலே கோபம் தானே ! அதானே என்னை பாக்கலே" என்று முடிவில் என்ன தோன்றியதோ மன்னிப்பு கேட்க, அவன் நெகிழ்ந்து, உருகி போய் விட்டான்.


தன்னை ஒரு மனிதனாக மதித்து, தனக்காவும் ஒரு ஜீவன் இருக்கிறாள் என்று அவன் உணர்ந்து அவன் கண்கள் சற்றுப் பனித்து விட்டது.


குரல் கரகரக்க ,


"நோ சாரி, நோ தேங்க யு பெட்வீன் அஸ்" என்று அவன் சொன்னது அவளுக்கு முழுவதும் புரியவில்லை.


ஆனால் தலையை மட்டும் நன்கு ஆட்டினாள்.


சரஸ்வதிக்கு அவனுக்கு ஏன் இவள் மீது இவ்வளவு அக்கறை என்று எண்ணம் கேள்வியாகக் குடைய ஆரம்பித்தது. அவன் ஓய்வாக வீட்டில் இருக்கும் நேரங்கள் அவளுடன் தான். இரண்டு பேரும் ஒன்று பியானோ இசைப்பார்கள், இல்லையென்றால், அவன் ஆட, அவள் கண்கொட்டாது அவனைப் பார்த்து ரசிப்பாள்.


அவனிடம்,


"எனக்கு டான்ஸ் ஆட சொல்லி தா !" என்று கேட்டால், அதற்கு மட்டும் அவன்


"இந்த சுண்டைக்காய் இன்னும் வளரனும் , அப்போ தான் டான்ஸ்" என்று சொல்லிவிடுவான். அவளா விடுவாள் அவனை ! ஒரு முக்காலியை எடுத்துப் போட்டு, அதன் மீது அவனது தோள் உயரத்திற்கு நின்று,


"நீயும் நானும் ஒரே உசவ(ர)ம் " என்று சாதிப்பாள். அவனோ அவளது தலையில் வலிக்காது குட்டி,


"ஸ்டூலை தட்டி விட்டா தெரியும் ! சுண்டைக்கா" என்று அவளைச் சீண்ட, அவளோ ரோஷம் பொங்க அவனை அடிக்க வருவாள். அவளுக்குக் கொஞ்ச நேரம் போக்கு காண்பித்து அவள் கையில் அகப்படுவான். அவனை உண்டு இல்லை என்று செய்தால் தான் அவளுக்கு நிம்மதி .


அது என்னவோ அவளுக்கு அவளது உயரத்தைப் பேசினால் கோபம் கடுமையாக வரும்.


"ஓகே ! சுண்டைக்காய் இல்ல நீ ! தம்புலீனா போதுமா !" என்று சமாதானம் செய்வது போல் அவளை மீண்டும் கிண்டல் செய்வான். அந்த தம்புலீனா என்பவள் கட்டை விரல் அளவில் இருக்கும் ஓர் சிறு பெண், அவளைப் பற்றிய சிறுவர்கள் கதை ஒன்று ஆங்கிலத்தில் உண்டு. அதனை அறிந்தவள் அவள், ஆகையால் துருவ் தன்னைக் கிண்டல் தான் செய்கிறான் என்று உணர்ந்து அவனைச் சாடுவாள்.


"நான் குட்டை இல்லே ! " என்று சாதித்தால் தான் அவளுக்கு நிம்மதி. துருவ்விடம் பரவாயில்லை, அவளது வகுப்பில் மற்ற மாணவர்களை விட அவள் உயரம் மிகவும் கம்மி, அதைச் சொல்லி அவளை ஒருநாள் வகுப்பினர் பலர் கேலி செய்ய, அதில் மிகவும் வருத்தம் அடைந்தாள். அவளுடைய பேச்செல்லாம் அங்கே எடுபடாது போக, வீடு திரும்பிய பின் அழுதுத் தீர்த்தாள்.


"கொஞ்ச நாள் கழிச்சு நீ அவங்க அளவு உயரம் ஆகிடுவே பாப்பா !" என்று சரஸ்வதி சமாதானம் செய்ய முயல, நக்ஷத்திரா,


"என்னை பாப்பானு கூப்பிடாதே ! மத்தியானம் சாப்பாடு போது, ஸ்கூலில் நீ அப்படி கூப்பிட போய் தான், இப்படி ஆச்சு " என்று அன்னையைப் பிடித்துச் சாடினாள் அவள்.


இது ஏதடா வம்பு என்று அவர் அவளைப் பார்க்க, அவளோ இன்னும் பிடிவாதம் கொண்டு 'ஓ' வென்று அழுதாள்.


பள்ளி முடித்து விட்டு பங்களாவிற்கு எப்போதும் வரும் நட்சத்திரா இன்று வராது போக, துருவ் அவளைக் காணச் சென்றான்.



சரஸ்வதி கொஞ்சிக், கெஞ்சிப் பார்த்தும் அழுகையை விடாது அவள் இருக்க, துருவ் எதனால் அவள் இப்படி இருக்கிறாள் என்று தெரிந்துக் கொண்டு, அவளிடம் பேச முயல, தனக்கு மிகவும் பிடித்தவனைக் கண்டவள், இன்னும் அழ, அவனால் பேசகூட முடியவில்லை.


"தாரா ! அழுகையை நிறுத்த போறியா இல்லையா !" என்று ஒரு கட்டத்தில் அவன் குரல் ஒங்க, அவள் பயந்து அழுகையை நிறுத்தினாள். இருந்தாலும் அவளது விசும்பல் அடங்கவில்லை.


அவனுக்கு அவளைப் பார்க்க பாவம் ஆகிவிட்டது . துடிக்கும் இதழ்கள், அழுது அழுது சிவந்த முகம், கண்கள், மூக்கில் இருந்து வழியும் சளி என்று சரியான 'அழு மூஞ்சி' ஆக இருந்தாள் . அவனுக்கு அவளை அப்படி காணவும் சகிக்கவில்லை.


"சாரி ! கத்திட்டேன் ! என்ன பண்ணலாம் சொல்லு " என்று அவன் தான் சற்று போனான்.


விசும்பிக் கொண்டே, அவள்


"உன்னோட மேஜிக் குச்சி வச்சு என்னை உசவ(ர)மாக்கு" என்று அவனைச் சரியாக லாக் செய்துவிட்டாள்.



துருவ், அவள் இம்மாதிரி அந்த மந்திரக்கோலைப் பற்றி இன்னொரு முறை விசாரிப்பாள் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஏனென்றால் ஏற்கனவே, அதை வைத்து அவன் ஏன் இன்னும் தனது முகத்தழும்பைச் சீர் செய்யவில்லையே என்று ஒருமுறை கேள்வி கேட்டே குடைந்து எடுத்தாள். அதில் இருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்று ஆயிற்று.


அவன் சொன்னக் காரணத்தை , அவள் முழுமையாக ஏற்றுக்கொண்டாளா என்று அவன் அறியான், ஆனால் அதன் பின் அவள் அந்த மந்திரக்கோலைப் பற்றி விசாரிக்கவில்லை, ஆனால் இன்று மீண்டும் ஆரம்பித்துவிட, துருவ் சற்று திணறிப் போனான்.


"அதை வச்சு சரி செய்யறதை விட, நான் ஒரு வேலை பண்ணறேன்! உன்னை இனிமே யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க ! அந்த மாறி ஒரு வேலை பண்ணறேன் " என்று அவன் சமாதானம் செய்யதாலும், அவள் ஏற்றுக்கொள்ளவில்லை இம்முறை.


"இல்ல ! எனக்கு இப்போவே உன்னை மாஇ(றி) ஆகணும் ! ஜிம் பூம் பா பண்ணு" என்று பிடிவாதம் அதிகமாயிற்று . ஒருகட்டத்தில் அவன் தான் மந்திரம் தந்திரம் எல்லாம் தெரிந்தவன் அல்ல என்ற உண்மையை ஒத்துக்கொள்ள, அவளுக்கு கோபம் அழுகையாகப் பீறிட்டு, அவனைப் பிடித்து,


"நீ பேட் ! பொய் சொல்ல கூடாதுனு அம்மா சொல்வாங்க ! நீ பொய்யி சொன்னே" என்று அவனிடம் சண்டை வேறு போட்டாள்.



சில விளையாட்டுத்தமானப் பேச்சுக்களை, விளையாட்டுத்தனம் மட்டுமே என்று எடுக்கும் மனநிலையிலோ, வயதிலோ அவள் இல்லை. ஆனால் அவனுக்கு அது வருத்தமாகத் தான் இருந்தது. அடுத்த நாள் அவளது பள்ளி முதல்வரைச் சந்தித்து, வகுப்பு ஆசிரியரிடம் பேசி, அவளை கிண்டல் செய்தோரை அவளிடம் மன்னிப்பு கேட்க வைத்தான். அந்தப் பகுதியின் பெரிய எஸ்டேட்டின் வாரிசு என்ற முறையில் அவன் வாக்கிற்கு நல்ல மதிப்பு இருந்தது.


அவனிடம் கோபித்துக் கொண்டு இவள் இன்னும் முறுக்கிக் கொண்டு இருக்க, சரஸ்வதி தான், துருவ்வின் தலையீட்டால் தான் அவளிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது என்று தெரிவித்து,


"உனக்கு இருந்தாலும், இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாது, முதலாளி வீட்டு பையனை இப்படியா நடத்துவே ? உன் உசரத்துக்கு கொழுப்பு அதிகம் " என்று திட்டவும் செய்தார். அவருக்கு என்னப் பிரச்சனை என்றால், எங்கேனும் துருவ் இவளது நடவடிக்கையால் தனது வேலைக்கு ஆப்பு வைக்கக் கூடாதே என்பது தான்.கணவனிடம் இருந்து எவ்வித தொடர்பும் இல்லை, ஆனால் வேலை போய் விட்டால் மீண்டும் ஆளைக்கொள்ளும் வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கும் . அதற்கு அவர் தயாரில்லை.


நட்சத்திரா, துருவ்வின் காரணம் தான் தன்னிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது என்று தெரிந்துக் கொண்டு அவனை நாடினாள். அவன் அவளை இன்முகமாக வரவேற்றான். ஒருதுளி வருத்தத்தைக் கூட முகத்தில் பிரதிபலிக்கவில்லை.


"சாம் ! நான் சாயி(ரி), திருப்பி சாயி(ரி) . என் கூட பேசாம இ(ரு)க்காதே " என்று அவளது வயதிற்கு ஏற்ப ஓர் குழந்தைத்தனத்துடன் அவள் இறைஞ்ச, அவனா கோபமோ, வருத்தமோ கொள்வான்? அவள் இன்றி இத்தனை நாள் எப்படி போயிற்று என்று அறியான். ஆனால் அவள் இல்லாது , அவள் பேச்சுக்கள் கேட்காது அவனால் இருக்க முடியாது இனி.


"அன்னிக்கே சொன்னேனே, நோ தேங்க்ஸ் அண்ட் நோ சாரி பெட்வீன் அஸ்ன்னு" என்று அவன் கூற அவளது புரிதல் இல்லாததன்மை அழகாக அவளது முகத்தில் பிரதிபலிக்க, அவளது உயரத்திற்கு முட்டியில் ஒரு கைகளை ஊன்றி குனிந்தவன்,


"நமக்குள்ள சாரி, தேங்க்ஸ் ரெண்டுமே வேணாம்னு சொன்னேன்" என்று தெளிவாக எடுத்துரைத்தான். அவளது பிரச்சனை, அவன் விடாது ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் பேசினால் அவளுக்கு முழுவதும் புரியாது. அவன் அளவு ஆங்கிலப்புலமை அவளுக்கு வர, இன்னும் நாளாகுமே !


புரிந்தது போல் தலையாட்டியவள்,

"ஏன்?" என்று பதில் கேள்வி கேட்க, அவன் என்ன சொன்னால் இவள் இந்தப் பேச்சை நிறுத்துவாள் என்று யோசித்தவன்


"ஏன்னா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.!" என்று சொல்ல, அவள் இன்னும் விடாது,


"ரொம்பன்னா?" என்று மீண்டும் பதில் கேள்வி கேட்டாள்.


"ரொம்பன்னா என்ன சொல்ல, எனக்கு டான்ஸ் ஆட எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவு பிடிக்கும் " என்று அவளுக்கு புரியும் விதத்தில் அந்த 'ரொம்ப'விற்கு அர்த்தம் சொல்ல, அவள் தனது தாடையில் கைப்பதித்து கன்னத்தில் தனது விரலால் யோசிப்பது போல் தட்டி,


"எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். எவ்வளவு தெரியுமா? சப்போட்டா பழம் அளவு" என்று வேறு சொன்னாள். கன்னடத்தில் அதை சிக்கு என்று கூறுவார்கள், ஆகையால் அவன் அவளை அன்றிலிருந்து சிக்கு என்றே கூப்பிட ஆரம்பித்தான்.


இரவு உணவு அவனுடன், தயிர் சாதம் . கன்னத்தில் தயிர் எல்லாம் அப்பியபடி, விரலை நக்கிக் கொண்டு அவள் சாப்பிடும் அழகே தனிதான். அதன் பின் வானத்தில் நட்சத்திரங்களைப் பங்கு போட்டுக்கொள்ளும் விளையாட்டு.



"அதுக்கு பேர் போல் ஸ்டார் ! எப்போதும் வடக்கில் இருக்கும் ! அதிகம் நகராது " என்று தனது பெயரில் இருக்கும் விண்மீனைப் பற்றி அவளுக்குச் சொல்லிக்கொடுத்தான் .


"ம்ம்..இல்ல அது பளிச் மினுமினு ஜிகினா" என்று தான் நினைத்தது தான் சரி என்று சாதித்தாள். அவனும் அவளுக்கு ஏற்ப,



"ஓகே..இப்போ அது பளிச் மினுமினு ஜிகினா..பின்னாடி போல் ஸ்டார்..எங்க ஆர் னு சொல்லு பார்ப்போம்" என்று அவன் அவள் வழியில் சென்று தன் வழிக்கு கொண்டு வர முயன்றான்.


என்னத்தான் முயன்றாலும் அவளால் "ஆஆ" என்று தான் சொல்ல முடிந்தது. 'ர்' வருவேனா என்று அவளைப் போல் அழிச்சாட்டியம் செய்தது. முயன்று சோர்ந்துப் போனாள். அவளை,அவள் வீடு வரை கொண்டு விட்டவனிடம் சரஸ்வதி,



"ஏன் இதெல்லாம்? இந்த அக்கறை அன்பு..அவ மேலே?" என்று கேட்டே விட்டார்.



"வெல்! நீங்க, பாக்யம் மா, இங்க இருக்கறங்க எல்லாரும் என்னை சின்னய்யாவா பார்க்கறீங்க. என் தாத்தா அவரோட சாம்ராஜ்யத்துக்கு, வாரிசா பார்க்கிறார். துருவ்விற்கு பின்னாடி ஒரு சாம்ராட் வேற அதில்! அவர் வச்சது !


என் அம்மா….ஒரு காலத்தில நான் தான் அவங்க உலகம்...இப்ப சொல்ல விரும்பலே ..சீக்கிரம் மாறும்னு நம்பறேன். என் அம்மாவோட கணவர், அவருக்கு நான் ஒருத்தன் இருக்கேனா இல்ல..இல்லையான்னு தெரியாத அளவு இருக்கார்..


என்னோட சிக்கு.. ஆமாம் அவ என்னோட சிக்கு..அவ தான் என்னை தன்னை போல ஒருத்தனா நினைக்கிறா! அவளுக்கு நான் சாம் மட்டுமே..அப்படியே இருந்திட்டு போறேன்.. ப்ளீஸ்..லீவ் அஸ்" என்று விரக்தி, வெறுப்பு, ஏக்கம், கோபம், கெஞ்சல் என்று பலவித உணர்வுகள் அவனது பேச்சில் தெறித்தது.


அவன் வேதனைப் புரிந்தாலும், நடைமுறையில் இந்த பெயரிப்படாத நட்பையும் தாண்டிய அன்பின் வழி தொடருமா என்று சரஸ்வதிக்குப் புரியவில்லை. ஏனென்றால் அவன் மறுபடியும் மும்பை செல்ல மாட்டான் என்று ஓர் உத்திரவாதமோ, அல்லது இவர்கள் பின்னாளில் வேறெங்கும் செல்ல மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதமோ இல்லையே.


நடக்கும் வரை நடக்கட்டும் என்று அவர் விட்டு விட்டார், கவலையுடன் . அவர் மனதில் இருக்கும் ஆயிரம் கவலைகளுள் இதுவும் ஒன்றாகியது. ஏனென்றால் நட்சத்திரா அவன் பொருட்டு நடக்கும் விதம் தான் காரணம். அவளுக்கு உடன் விளையாட சிறுவர்-சிறுமியர் கிடைத்தும் அவர்களுடன் விளையாடாது இருந்தால் கூட அவர் அது பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு இருந்திருப்பார். ஆனால் நம்மவள், சண்டைக்குருவியாகச் சண்டை அல்லவா போட்டாள்.


அந்த சிறுவர்-சிறுமியரிடம் துருவ்வை அறிமுகப்படுத்த, அவர்கள் அவனது முகத்தழும்பைப் பார்த்து கிண்டல் செய்ய, பெருத்த ரசாபாசம் ஆகிவிட்டது. அவன் மீதான அவளது உணர்வுகள் சரஸ்வதி எதிர்பாராத திசையில் சென்று கொண்டு இருக்கிறதோ என்று அவருக்குத் தோன்ற ஆரம்பிக்க, இவர்கள் இருவரோ யாரைப்பற்றியும் கவலைக்கொள்ளாது தங்களது உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் !



நிற்க, சந்தியாவிற்கு சற்று உடல் நிலை தேறிக் கொண்டு வர ஆரம்பித்தது. நேரிடையாகப் பார்க்க அனுமதி இருக்கவில்லை. ஆனால் ஒரு தூரத்தில் இருந்து பார்க்க அனுமதி இருக்க, அவன் அடிக்கடி பெங்களூர் செல்ல ஆரம்பித்தான். அவனுக்கு சந்தியா மீது வருத்தம் இருந்தது. ஆனால் நட்சத்திராவின் வரவின் பிறகு அது பெரிதும் மறைய ஆரம்பித்தது. அன்று அவளுக்கு சரஸ்வதி சூடு வைத்த போதும், நட்சத்திரா தனது அன்னையைச் சற்றும் விட்டுக்கொடுக்காது அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டது மட்டுமல்ல,


"அழாதே அம்மா ! நீ அழுதா கஷ்டமா இ(ரு)க்கு" என்று அவரது மனதைத் தனது பேச்சால் உருக்கிவிட்டாள். நட்சத்திராவிற்கு அந்த வயதில், அன்னை மீதான அன்பு மற்றுமின்றி அவருக்கு நான், எனக்கு அவர் என்ற உணர்வைக் கொண்டு இருப்பதை அது பறைசாற்றியது. நக்ஷ்த்திராவின் எண்ணம் என்னவென்றால்,


"அப்பா இப்போ இங்க இல்ல, நானும் போட்டு அம்மாவை படுத்தினா? அம்மா பாவம் ! என்னோட அம்மா குட் ! அவங்க அழ கூடாது " . இதை அவள் துருவ்விடம் கூறவும் செய்தாள். அவன் அளவு வயதோ, உலகத்தை புரிந்து கொள்ளும் தன்மையையோ அவளுக்கு இல்லை. இருந்தாலும் அவளது பெரிய பலம், அவளது கள்ளமில்லா மனது. அதே மனது தான் அவனை அவனாக ஏற்றுக்கொண்டது. அது துருவ்விற்குப் புரிய, தன்னைப் பற்றிய சுய அலசலை அவன் மேற்கொண்டான். யாரும் இவ்வுலகில் நல்லவர்கள் அல்ல என்ற கூற்று அவனுக்கு நன்றாக விளங்கியது.


அவன் தவறு ஏதும் இதுவரை இழைக்கவில்லை, ஆனால் தனது அன்னையின் நிலையை சற்று கூட நன்கு புரிந்துக் கொண்டு இருக்க வேண்டுமோ என்று எண்ணினான். ஆகையால் அவரைத் தள்ளி இருந்து பார்த்தாலும் பரவாயில்லை, ஆனால் பார்க்க வேண்டும். அதுவும் நோயில் இருந்து தேறி வரும் இந்த காலத்தில் தனது ஆதரவு அவருக்கு முக்கியம், அவன் அவருக்காக காத்துக் கொண்டு இருக்கிறான் என்றும் அவருக்கு உணர வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டான் . இந்த அடிக்கடி பெங்களூரு பிரயாணங்கள் , நட்சத்திரா வந்தபின் ஒருசில நாட்களிலேயே துவங்கியது.


அவ்வாறு ஒருமுறை அவன் செல்லும் போது, அவனது முகமலர்ச்சியை சந்தியா கண்டுக் கொண்டு, அவனிடம்


"யு லுக் குட் சாம் !" என்று சந்தியா அவனைப் பற்றி சிலாகிக்க, அவன் புதிராக அவரைப் பார்க்க, அவர்


"இல்ல , முகத்துல ஒரு சந்தோசம் இருக்கு ! அதை சொன்னேன்" என்று தெளிவுபடுத்தினார்.



"தேங்க்ஸ் ! உங்களுக்கு உடம்பு சரி ஆகிக்கிட்டு வருது ! அது ப்ளஸ் தாரா !" என்று நட்சத்திராவைப் பற்றி எல்லா விபரங்களைச் சொன்னான். அவளைப் பற்றி கேட்டு அறிந்தவருக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்ற அவா தோன்றியது .



"கூட்டிட்டு வாயேன் ! அவளை பார்க்கணும் போல இருக்கு" என்று அவரும் விரும்ப, ஒருமுறை நட்சத்திராவை அவன் பெங்களூருவிற்கு கூட்டிக்கொண்டு சென்றான். சரஸ்வதியும் அவர்கள் உடன். அந்த சமயத்தில் சந்தியாவிற்கு டி பி முழுவதும் குணமாகிவிட்டது. ஆனால் மனநல சிகிச்சை மேற்கொண்டு இருந்தார் . அங்கேயே அவள் சில காலம் இருக்கட்டும் என்று நீலகண்டன் விரும்பினார் . பெங்களூரு ஓர் விதத்தில் அவர்கள் வாழ்வின் மனக்கசப்புகளைச் சீர் செய்கிறது என்று நீலகண்டன் எண்ணினார்.


அப்போது அந்த சமயத்தில் தான் அவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படத்தைத் தான் துருவ், அந்த பியானோ மீது வைத்திருந்தான்.நட்சத்திராவை சந்தியாவிற்கு மிகவும் பிடித்துப் போனது. அவளிடம்,


"அடிக்கடி வா !" என்று சொன்னவர், சரஸ்வதியிடம்


"தேங்க்ஸ் ! அவனை நல்ல பாத்துகிட்டு இருக்கீங்க ! இன்னிக்கி நான் என்னோட பையனை பழையபடி சந்தோஷமா பார்க்கிறேன் ! உங்களுக்கு நிறைய நன்றி கடன் பட்டு இருக்கேன்" என்று மிகவும் நெகிழ்ந்தார். சரஸ்வதிக்கு என்னச் சொல்ல என்று புரியவில்லை. அதுவும் சந்தியா அவரது கையைப் பிடித்துக்கொண்டு பேசிய விதம் அவரை உருக்கி விட்டது.


"தேங்க்ஸ் எல்லாம் வேணாம் ! சின்னையா ரொம்ப நல்ல பையன் ! நல்ல வளர்ப்பு அவருக்கு !" என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டார். அதன் பின் வந்த நாட்களில் நட்சத்திராவும் அவனுடன் பெங்களூரு செல்வாள்.


அப்போது அவள் சாலையோரத்தில் ஒரு பொம்மைக்கடையைப் பார்த்தாள். அங்கே ஒரு காவலாளி பொம்மை இருக்க, அவளுக்கு அதன் மீது ஓர் பிடித்தம். அது வேண்டும் என்று துருவ்விடம் கேட்டாள். ஆனால் துருவ்விற்கு அது சாலையோரத்தில் அழுக்கு, தூசி, வாகனப் புகை படிந்து காணப்பட, அவன் மறுத்தான். முதலில் அவளுக்குக் கோபம் வந்தாலும், தன்னுடைய சாம் நல்லதிற்குத் தான் சொல்வான் என்று அவள் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டாள். ஆனால் துருவ்விற்குத் தான் மனம் அதில் சற்று சஞ்சலப்பட்டது.



அவனிடம் எப்போதும் சிறிதளவு பணம் இருக்கும். மும்பையில் பெரிய வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனும் இருந்தான். 'பாக்கெட் மனி' என்ற பேரில் நீலகண்டன் அவனுக்கு எப்போதும் பணம் கொடுப்பார். தனது பேரன், நண்பர்கள் மத்தியில் இருக்கும் போது, ஏதேனும் வாங்க ஆசைப்பட்டால் பணம் இல்லை என்ற குறை வரக்கூடாது என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் துருவ் பெரிதாக செல்வு செய்ய மாட்டான். அதை எல்லாம் சேமித்து வைத்திருப்பான். இப்போது சக்லேஷ்பூரில் வேறு தனியாக இருக்கிறான், ஆகையால் அவனுக்கு இன்னும் பணம் தாத்தா கொடுத்து இருந்தாலும், இது வரை அவன் பெரிதாக எடுத்துச் செலவு செய்ததில்லை.


அவள் கேட்கும் பொம்மையை வாங்க அவனிடம் பணம் இருக்கிறது, ஆனால் அதைவிட சிறந்த பொம்மையை அவளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும், அதுவும் அவளுடைய பிறந்த நாள் இன்னும் ஒரு மாதம் கழித்து வர இருக்க, அப்போது அவளுக்கு அதைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று அது போல, ஆனால் அதை விடச் சிறந்த ஓர் பொம்மையை அவன் வாங்கி வைத்தான், அவள் இல்லாது பெங்களூர் சென்ற போது.


*****************

நட்சத்திராவிற்கு எப்போதும் அவனது ஆங்கிலப் புலமை மீது தாங்க முடியா ஈர்ப்பு, அதை அவனிடம்


"நீ எனக்கு இங்கிலீஷ் சொல்லி தவ்(ரு)வியா ?" என்று ஒருநாள் கேட்டே விட்டாள். அதை புன்முறுவலுடன் கேட்டவன்,


"வை நாட் ! சொல்லி தரேனே " என்று ஓய்வு நேரங்களில் அவன் அவளுக்கு ஆங்கிலம் படிப்பிக்க ஆரம்பித்தான். இருவரும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுவர் கதைகளைப் படிப்பர் . முதலில் அவள் ஆங்கில வரிகளை வாசிக்க திக்கித் திணறினாலும் பின்னர் அவள் ஓரளவு எளிதாக வாசிக்க ஆரம்பித்தாள்.


அவ்வாறான பொழுதில் அவர்கள் இருவரும் 'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' என்ற கதையைப் படிக்க ஆரம்பித்தனர் , அதில் வரும் கடைசிப் பக்கத்தில் வந்த சொற்றோடரான 'தே ஹேப்பிலி லிவ்ட் எவர் ஆப்டர்' என்பதை நட்சத்திரா வாசித்துமுடிக்க, துருவ் ,


"ஓகே கதை முடிஞ்சாச்சு !, நாளைக்கு வேற கதை ப்ளஸ், இன்னும் கொஞ்சம் ஸ்போக்கன் இங்கிலிஷ்" என்று அவளிடம் கூற , அவள் திடீரென


"அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்களா சாம் ? கல்யாணம் பண்ணிக்கிட்டு சே(ர்)ந்து இருப்பாங்களா?" என்று கேட்டாள் .

துருவ்,



"எஸ் சிக்கு ! ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பாங்க !" என்று பதில் அளிக்க, அவள் ,


"அப்போ ஏன் என் அம்மாவும் அப்பாவும் சே(ர்)ந்து இல்லே ? " என்று கேட்டே விட்டாள். அந்தக்குட்டிப் பெண்ணின் ஏக்கம் அதில் வழிந்து தெறித்தது. அவன் மனதை அது வெகுவாகக் காயப்படுத்தி விட்டது. அவனுக்கு தன் நிலை தெரியும், அவளுக்கு கிட்டத்தட்ட அவனது நிலை தான். ஆனால் அது அவளுக்கு இந்த அளவு புரிந்து இருக்கிறது என்று அவன் இன்று தான் அறிவான். அவன் முகமறியா அவளது தந்தை மீது கோபம் வெகுவாக வந்தது.


அவனுக்கு யார் காரணம் கொண்டும் அவள் மனம் வருந்தக்கூடாது. அவளை எவ்வாறு சமாதானம் செய்ய என்று யோசித்தவன்,


"உன்னோட அப்பா சீக்கிரம் வருவார் ! ட்ரஸ்ட் மி" என்று கூறிப்பார்த்தான். ஆனால் அவளோ


"அப்பா வந்து என்னை அவங்க கூட கூட்டிகிட்டு போனா, நான் உன்னை விட்டு எப்படி இ(ரு)ப்பேன் ?" என்று அந்தப் பிரிவை நினைத்துக் கூட பார்க்க கழியாது கண்கள் பனிக்க அவள் கேட்டே விட்டாள். அவனை உருக்கும் சக்தி கொண்டவள் அவள், அன்றும், இன்றும் என்றும் ! அவளது கண்ணீரைத் துடைத்தவன்


"உன்கூட தான் எப்பவும் நான் இருப்பேன் ! கவலைபடாதே " என்று சமாதானம் செய்தாலும் அவளோ சிறுபெண் , அந்த வயதிற்கு ஏற்ப அவளுக்கு எண்ணங்கள்!


"பிமா(ரா)மிஸ் ! " என்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள். அவளது சிறுகைகள் மீது தனது கரங்களைப் பதித்தவன்,


"உன் கூட தான் எப்போதும் !உன்னை பார்த்துப்பேன் ! உனக்கு இந்த மாறி பாடம் சொல்லி தருவேன் ! ரெண்டு பேரும் சேர்ந்து பியானோ வாசிப்போம்! விளையாடுவோம் ! டான்ஸ் ஆடுவோம் " என்று அவளுக்கு ஏற்ற வாறு அவன் சமாதானம் செய்தாலும் , அவன் மனதில் அவளைப் பிரியக்கூடாது, என்றும அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அப்போது அவன் பின்னாளில் அவர்கள் சேர்ந்து இருந்தால் காதல் வரும் என்றெல்லாம் நினைக்கவில்லை, ஆனால் அவர்கள் சேர்ந்தும் இருக்கவில்லை!


பிரிந்தார்கள் ! அது விதி மட்டுமே ! சந்தித்தார்கள் அதுவும் விதி மட்டுமே ! வாழ்வு திசைமாறியது !

அதற்கு அவன் கொண்ட அகம்

அவள் கொண்ட அகம் காரணம் என்றால் அவர்களை அகம் கொண்டோராக ஆக்கியதும் விதியே !


விதியின் வழியில் நட்சத்திரா அங்கு வந்து 2 மாத காலம் ஆன தருவாயில்,

நல்ல மழை பெய்துக்கொண்டிருக்க, அவள் கையில் அவன் வாங்கிக் கொடுத்த அந்த காவலாளி பொம்மை ! அவள் கண்களில் இருந்து விழி நீர் பெருக ,


"சாம் ! சீக்க(கிர)ம் வா ! சீக்க(கிர)ம் வவு(ரு ) தானே !" என்று அவனிடம் இறைஞ்சிக் கொண்டு இருக்க, அவன் அவள் உயரத்திற்குக் குனிந்து ,


"அழாதே சிக்கு ! வருவேன் ! உன்னை விட்டு போக மாட்டேன் ! ஜஸ்ட் கொஞ்ச நாள் ! ப்ளீஸ் கொஞ்ச நாள் மட்டுமே, அதுவரை இந்த பொம்மை தான் உன்னோட சாம் " என்று அவளுக்கு வாக்கு கொடுத்து அந்தப் பொம்மையையும் கொடுத்து விட்டான் .


ஆனால் அது தான் அவர்கள் சாம்-சிக்கு -வாக கடைசியாக இருந்த நாள் என்று இருவரும் அறியாது போயினர் ! தனது காரில் மனதே இல்லாது ஏறிக்கொண்டவன் அவளைக் காரின் ரியர் வ்யூ கண்ணாடி வழி பார்க்க அவள் இன்னும் அழுது கொண்டு இருப்பது தெரிந்தது . அவள் தோள் குலுங்குவதில் அவள் விசும்பல் ஆரம்பித்து விட்டது என்று புரிந்துக் கொண்டான், அவனது காரை அவள் பின்தொடர முடியாத படி அவளது அன்னை அவளை இறுக்கப்பற்றிக் கொண்டார் ! ஆனால் அவள் மனமோ அவனிடம் தான் என்றோ பறந்து ஐக்கியம் ஆகி விட்டதே !


இருவரின் தூரம் அதிகமாக, அவள் மெல்ல மெல்ல மறைந்தாள் !


கடைசியாக அவன் அவளை வெள்ளை நிற ப்ராக் அணிந்துகொண்ட குட்டி தேவதையாகப் பார்த்தான். அவள் என்றும் அவனது தேவதை தான் ! அவன் வானின் துருவ நட்சத்திரம் அவள்!


என்ன பின்னாளில் இருண்ட காலங்களில் அவளைப் பார்த்தான். அந்தக் காலத்தில் இருவரும் மற்றவரை அறியாது போயினர் !


மேகங்களுக்குத் துருவ நட்சத்திரம் விதிவிலக்கல்ல !


துருவ நட்சத்திரம் வானில் மறைந்தது !




 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 28


"ஐ லவ் யுன்னா என்ன சாம் ?" என்று நக்ஷத்திரா அன்று பள்ளி முடிந்து விட்டு வந்து அவனைக் கேட்க, அவன் முதலில் திடுக்கிட்டுப்போனான்.


அவன் முழித்த முழியில் , அவள் களுக்கென்று சிரித்து,


"இஞ்சி தின்னியா ?" என்று வேறு கேட்டாள் . அதில் அவனை முறைக்கு, அவள் பெரிதாகச் சிரித்து


"அப்போ ஐ லவ் யுன்னா என்னனு சொல்லு பார்ப்போம் ?" என்று விடாது கேட்க, அவன் நிதானமாக


"யார் சொன்னா அதை ? ஏதாச்சும் படத்தில் பார்த்தியா ?" என்று விசாரிக்க, அவள்


"ம்ம் இன்னிக்கி ஸ்கூலில் இருந்து வரும் போது ஒரு பாட்டை கேட்டேன் ! அதுல ஐ லவ் யுன்னு அடிக்கடி வந்தது ! ஆனா அது தமிழ் பாட்டு மாறி தெரியல " என்று வேற சொல்ல, அவனுக்கு அது கன்னட பாடலோ என்ற ஐயம் உருவாகியது ! அவளது பள்ளியில் அதிகம் தமிழ் மக்களே, ஆகையால் பெரிதாக அவளுக்கு இது தமிழ் நாடல்ல என்ற சந்தேகம் வரவில்லை ! அங்கே இருக்கும் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தமிழர்கள் அதிகம். தமிழ் மொழி படிப்பிக்கப்பட்டு இருக்க, சரஸ்வதி சொன்னப் பொய் இதுவரை உண்மை !


ஒவ்வொரு முறையும் பெங்களூரில் இருந்து திரும்பும் போதோ, அல்லது செல்லும் போதோ அவள் தூங்கிவிடுவாள், ஆகையால் அப்போதும் வழி எங்கும் ஒரே கன்னட மொழி தாங்கிய பலகைகளை அவள் பார்க்காது போனதால், நல்லதாயிற்று ! பின்னாளில் ஏற்படக்கூடிய தூங்கா இரவுகளைச் சமன் செய்ய இந்த வயதில் கடவுள் அவளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுத்தார் போலும் !



காரில் ஏறினாலே, அவள் 10 நிமிடங்களில் உறங்கி விடுவாள், கொடுத்து வைத்தவள். பெங்களூர் பொறுத்தவரை அது கர்நாடகாவில் இருக்கிறது, வேறு மாநிலம், தமிழ்நாடல்ல என்று அறிந்திருந்தாள் .


ஆகையால் பெங்களூர் விஜயங்கள் பிரச்சனை இல்லாது இருந்தது. ஆனால் இன்று கன்னட பாடல் ஒன்றை கேட்டுவிட்டு வந்ததில் அவனுக்குச் சரஸ்வதி போலே பயம் ஆரம்பித்தது. எங்கேயாவது அவள் தகராறு செய்ய ஆரம்பிக்கக்கூடாதே என்று அவனும் பதைபதைத்தான்.


ஆகையால் மொழிப் பற்றிய பேச்சை எடுக்காது, அவன்


"ஐ லவ் யு ன்னா, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், உன்னை விட்டு இருக்க மாட்டேன்னு அர்த்தம் !" என்று கூறி அவளையே உற்றுப்பார்த்தான்.


அவள் உடனே இன்முகமாக,


"அப்போ நானும் ஐ லவ் யு ! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் " என்று அவனை அதிரச் செய்தாள். அவளுடைய வயதை மனதில் கொண்டு அவன் அவ்வாறான அர்த்தத்தைக் சொல்ல, அவளோ ஒரு படி மேலே சென்று, அவளது குழந்தைத்தனத்துடன் இப்படி சொல்வாள் என்று எதிர்பார்க்கவேயில்லை ! அவன் இன்னும் அதிர்ந்து இருக்க , அவள்


"ஆமாம் அது என்ன மொழின்னு சொல்லவேயில்லே நீ ! அது தமிழ் இல்ல தானே " என்று வாகாய் அவனைப் பிடித்துக் கொண்டாள். அவன் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது, அவனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது !


அது அவர்கள் உறவு அன்றுடன் முடியப் போகிறது என்பதற்கு உண்டான மணி என்று இருவரும் அறிந்திருக்கவில்லை .


"என்ன? "

"எப்போ?"

" வரேன் " என்ற சொற்களை மட்டுமே அவன் சொன்னான் ! நீலகண்டனுக்கு மாரடைப்பு வந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் அவனுக்குப் பரிமாறப்பட்டது. அழைப்பை ஏற்றுக் கொண்டு முடித்தவன் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று அறியாது அருகில் இருந்த நாற்காலியில் அப்படியே சாய்ந்து விட்டான்.


அவனது தாத்தா! அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது மட்டுமே அவனுக்கு மாறி மாறித் தோன்ற, அடுத்து என்ன செய்வதில் என்று தெரியாது விழித்தான். சரஸ்வதி

"என்னாச்சு தம்பி? பாக்யம் அக்கா என்ன சொன்னாங்க ? " என்று கேட்டார், அவர் தான் முதலில் அழைப்பை ஏற்றவர் !

சரஸ்வதியைக் கண்ணீருடன் நோக்கியவன் ,


"தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக்னு இன்னிக்கி …" என்று அதற்கு மேல் பேச முடியாது தவித்தான். அவருக்கு அவன் உணர்வுகள் நன்றாகப் புரிந்தது ! அவனுக்கு தாத்தா மீது பாசத்தை விட மரியாதை தான் அதிகமோ என்று அவர் நினைப்பார், ஆனால் இன்று தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று அவர் நேரில் கண்டார் .


"நான் உங்க ட்ரஸ் எல்லாம் பேக் செய்யறேன் ! இங்கிருந்து எப்படி அங்க போகணும் ?" என்று விசாரிக்க அதற்குள் அடுத்த அழைப்பு. இம்முறை சந்தியாவிடம் இருந்து. பெங்களூரில் இருந்து மும்பை செல்வதற்கு விமான பயணச்சீட்டுகள் வாங்கி விட்டதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவன் பெங்களூர் வர வேண்டும் என்று தெரிவிக்க, அவன் தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டு தயாரானான் !


அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு தனது அறையில் இருந்து வெளியே வர, நக்ஷத்திரா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.


"எங்க போஏ(றே) சாம் என்னை விட்டுட்டு?" என்று ஏங்கி விசாரிக்க, அவன் அவளை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டுமே என்று தனது துக்க உணர்வுகளை உள்ளடக்கிக் கொண்டு


"ஒரு சின்ன வேலை, தாத்தா வீடு வரை போகணும். வந்துருவேன் " என்று சாதாரணமாகக் குரலை வைத்துக்கொள்ள பாடுபட்டுச் சொன்னான்.


"அது எங்க இ(ரு)க்கு?"


"பஸ்ஸில் போகணுமா ?"


"எத்தனை நாள் ஆகும் ?"


"சீக்கி(ர)ம் வா " என்றெல்லாம் அவள் பேசிக்கொண்டே போக, அவனுக்கு உண்மையைச் சொல்லப் பிடிக்காது, அவளது பனிக்கும் கண்களைப் பார்க்க சகிக்காது,


"அழாதே சிக்கு ! வருவேன் ! உன்னை விட்டு போக மாட்டேன் ! ஜஸ்ட் கொஞ்ச நாள் ! ப்ளீஸ் கொஞ்ச நாள் மட்டுமே, அதுவரை இந்த பொம்மை தான் உன்னோட சாம் " என்று அவளுக்கு வாக்கு கொடுத்து, அந்தப் பொம்மையையும் கொடுத்து விட்டான் . அன்று அவன் சொன்னது, அது பின்னாளில் பலிக்கவும் செய்தது. அவளுக்கு என்னவோ புரிவது போல் இருந்தது.


"நீ சீக்கி(ர)ம் வர மாட்டியா? அதான் இப்படி …." என்று அழ ஆரம்பித்தவள்,


"இந்த மாயி(றி) பொம்மையை கொடுக்க(றி)இயா ? என்னோட அப்பா எனக்கு அந்த டெடி பொம்மையை கொடுத்திட்டு அப்ப(ற)ம் வய(ர)லே ! நீயும் அப்படி பண்ண போயி(றி)யா ?" என்று விசும்பிக் கொண்டே கேட்டாள் . 6 வயதுக் குழந்தை அவள், அவளுக்கு மனதில் தோன்றியதைக் கேட்டே விட்டாள் ! ஆனால் அது அவன் நெஞ்சை பிளந்து விட்டது ! அந்நேரம் அவனுக்கு அது பலித்து விடக்கூடாதே என்ற எண்ணம் தோன்றாது இல்லை . சரஸ்வதி என்னடா இந்தப் பெண் இப்படி பேசி அவனை நோகடிக்கிறாளே என்று அவளை


"தாரா! " என்று அதட்ட, துருவ் அவரிடம்


"அவள தயவுசெஞ்சு ஒன்னும் சொல்லாதீங்க ! அவளுக்கு ஒன்னும் தெரியாது ! பாவம் அவ " என்று அவரிடம் இறைஞ்சினான் .



"சிக்கு ! நான் வருவேன் ! உனக்காக நான் வருவேன் ! உன்கூட மினுமினு ஜிகினா பங்கு போட நான் வருவேன் ! ரெண்டு பெரும் சேர்ந்து பியானோ வாசிப்போம் ! உன்னை விட்டு போக மாட்டேன் ! அதுவரை தினம் உனக்கு கூப்பிடுவேன் !" என்று வாக்கு கொடுத்தான். அதெல்லாம் கானல் நீராக ஆகப்போவது தெரியாது .


"பி(ரா)மிஸ் ?" என்று அவனிடம் சத்தியம் பெற்றுக்கொண்டாள் . அவனுக்கு எனோ மனதில் எக்கச்சக்கச் சஞ்சலங்கள் . ஆயினும் வாக்கு கொடுத்து விட்டுத்தான் புறப்பட்டான் .



அவன் காரில் ஏறும் முன், அவ அதிகமாவே அழும் நிலையில் தான் இருந்தாள் .


"சாம் !" என்று அவனை அழைத்து , அவனிடம்


"இந்த டெடி தான் உன்னோட சிக்கு ! நீ தி(ரு)ப்பி இங்க வய(ர) வயை(ரை), இது தான் உன்னோட சிக்கு " என்று தனது பொம்மையை அவனுக்குகே கொடுத்தாள். அவளுக்கு அந்தப் பொம்மை எவ்வளவு இஷ்டம் என்று அவன் அறிவான் ! விளையாட்டிற்கு அதைக் கேட்டால் கூட, கொடுக்க மாட்டாள், ஆனால் இன்றோ ?


இருவர் இனி இருவர் ஆகப் போவதில்லை என்று உணர்ந்தாளா? அல்லது எப்போதும் அவர்கள் இருவராக ஆகப்போவதில்லை என்று ஊகித்தாளா? குழந்தை மனம் விசித்திரம் ஆனது ! என்னத்தான் சமாதானம் சொன்னாலும், செய்தாலும் , அந்த மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்ட உணர்வுகளை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியாது.


"பளிச் மினுமினு ஜிகினா வை உனக்கே கொ(டு)க்கவெ(ரே)ன் , நீ நாளைக்கே வா" என்று சொல்லும் போது அவள் அழுது கரைந்தாள் ! அவளுடன் வானமும் அழுதது ! அவன் கண்ணில் தாரா என்ற நக்ஷத்திரா கலங்களாகத் தான் தெரிந்தாள் ! அவன் கண்ணில் நீர் வழிந்தது ! அவளது அன்பில் கரைந்தவன் , அதிலே மூழ்கிவிட ஆசைப்பட்டான் ! ஆனால் அவனை விதி வேறு திசையில் எடுத்துக் கொண்டு சென்றது. கண்களைத் துடைத்துக்கொண்டவன்,


"தாரா ! நல்ல படி, சீக்கிரம் வரேன்!ஆன்டியை படுத்தாதே ! யார்கிட்டவும் சண்டை போடாதே " என்று அவளுக்கு அறிவுரை செய்தபடி அவன் செல்ல, அவள் அவன் சொன்னவை எல்லாவற்றிக்கும் தலையை நன்கு ஆட்டினாள், அழுதபடி, கையில் அந்த காவலாளி பொம்மையை வைத்துக் கொண்டு . சரஸ்வதி அவளை தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்ல, துருவ் நக்ஷத்திராவைப் பிரிந்தான்.


அன்று மாலைக்கு மேல் துருவ் மும்பைக்குச் சென்றான். இங்கே நக்ஷத்திரா தனது காவலாளி பொம்மையை வைத்துக் கொண்டு வானை நோக்க, துருவ நட்சத்திரம் மேகங்களுக்குள் மறைந்து போய்விட்டது. அதில் அவளுக்கு தாங்க முடியா வேதனைப் பொங்க, அங்கே வந்த சரஸ்வதியிடம்,


"சாம் வாவு(ரு)தான் தானே ?" என்று விசும்பியப்படி கேட்டாள். சரஸ்வதிக்கு அவளைச் சமாதானம் செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !


"கண்டிப்பா வருவார் சின்னையா !" என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டார்.


மும்பையில் துருவ் மருத்துவமனையில் தனது தாய்க்குத் துணையாக இருந்தான்.


"மைல்ட்னு சொல்ல முடியாது இந்த ஹார்ட் அட்டாக் ! ஹார்ட்டில் பிளாக்ஸ் இருக்கு ! உடனே சர்ஜரி செய்யணும் !" என்று இதய அறுவை சிகிச்சை நிபுணர் அறிவிக்க,


சந்தியா முற்றிலும் துவண்டு அதிர்ந்துப் போனார் ! துருவ் அவர் தோளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.


சற்று துணிவை வரவழைத்துக் கொண்டு சந்தியா,


"எப்போ செய்ய போறீங்க, சர்ஜரி ?" என்று வினவ, மருத்துவர்


"நாளைக்கே ! அதுக்கு பிறகு அவருக்கு நல்ல ஓய்வு வேணும் , பிசினஸ் டென்சன் கூடாது " என்று அறிவுறுத்த, சந்தியா அதனை ஏற்றுக்கொண்டு, தந்தையை அவரது அறையில் வைத்துப் பார்த்தார். மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டு இருந்தாலும், அவளுக்கு அவர் முகத்தில் எவ்வித நிம்மதியும் இல்லாதது போல் தோன்றியது ! இனி தான் நல்ல மகளாக, அவரது வியாபார வாரிசாக இருக்க வேண்டும் என்று உறுதிப் பூண்டார் !


"சாம் ! நீ என்ன செய்ய போறே ? நான் இனி பெங்களூர் போக போறதில்ல. அம் டன் வித் தெரபி ! இனி அப்பா கூடத்தான்" என்று அறிவிக்க, சந்தியாவின் மன உறுதி அவரது பேச்சில் தெறிக்க, துருவ் அதில் சற்று மன நிம்மதி அடைந்தான் .


"நான் தாத்தாக்கு சர்ஜரி ஆகிட்டு அப்பறம் சக்லேஷ்பூர் போவேன்னு நினைக்கிறேன் ! " என்று சொல்லிவைத்தான் .


சந்தியாவின் துளைக்கும் பார்வையில் அவன்,


"நான் தாரா கிட்ட வருவேன்னு சொல்லிருக்கேன் ! சோ போவேன் " என்று உறுதியாகத் தெரிவித்து விட்டான். இப்போது தந்தையின் அறுவை சிகிச்சை கழிந்த பின், தாரா விஷயத்திற்கு வந்தால் போதும் என்று அவர் அப்போதைக்கு அதைப் பற்றி வேறுதுவும் கேட்கவில்லை.


அடுத்த நாள் துருவ் அவளைக் கூப்பிட, அவள் கேட்ட முதல் கேள்வி

"எப்போ வயே(ரே)?" என்பது தான். உண்மையில் அவன் திரும்ப 2 வாரம் மேல் ஆகும் , ஆகையால் அவன் அதைக் கூறாது,


"இங்க ஒரு வேலை இருக்கு, அது முடிச்சிட்டு, நெஸ்ட் 2 டேய்ஸ் முடிஞ்சு வரேன் " என்று சொல்லி வைத்தான். அதில் அவளுக்குத் திருப்தியில்லை என்று அவன் நன்கு உணர்ந்தான். ஆனால் என்ன செய்ய? இப்பொது அவள் உண்மையை ஏற்றுக்கொள்ளும் வயதிலோ, மனதிலோ இல்லையே !


அவன் சொன்ன 2 நாள் கெடுவும் முடிந்து, அவளது வீட்டுக் கதவு ஓர் மாலைப் பொழுதில் தட்டப்பட, நக்ஷத்திரா நேரே ஓடிச் சென்று,


"சாம் !" என்று கூக்குரல் இட்டுக்கொண்டே, கதவைத் திறக்க, அங்கே அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றாள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அங்கே அவள் தந்தை தான் நின்றுக் கொண்டு இருந்தார் ! காவலாளி பொம்மை கையில் இருக்க, முகத்தில் அதிர்ச்சி, அதைத் தொடர்ந்து ஒரு சந்தோசம், அதே நேரம் தான் கண்ட நபர் தன்னுடைய சாம் இல்லையே என்ற வருத்தம் என்று கலவையான உணர்வுகள் அவள் கொடுக்க,



"தாரா!" என்று அவள் தந்தை அவளை இறுக்க அணைத்துக் கொண்டார் !


"அப்பா !" என்று அவள் மகிழ்ந்தாலும் , அந்த மகிழ்ச்சியில் ஓர் குறை இருப்பது போல் அவருக்கு தோன்ற, அவர் அவளிடம்,


"என்ன அப்பா மேலே கோபமா ? இவ்வளவு நாளா வரலேன்னு என் மேலே உனக்கு வருத்தமா ?" என்று வினவ, அவள் என்ன சொல்வது என்று அறியாது ஒன்றும் கூறாது விழி பிதுங்கி நிற்க, சரஸ்வதி அப்போது தான் வீடு நுழைந்தார் !


சின்ன வேலையாக பங்களா வரை அவர் சென்றிருந்தார், 5 நிமிடங்களில் வீடு திரும்பி விடலாம் என்று அவளைத் தனியாக விட்டுச் சென்றிருக்க, அவரது கணவர் வருவார் என்று முற்றிலும் அவரும் எதிர்பார்க்கவில்லை.


அதிர்ச்சியில் அவரும் பேசாது இருக்க, பிரசாத் என்ற பெயரையும் கொண்ட, அவர்


"என்ன? வாங்க ! எப்போ வந்தீங்கன்னு கேக்க மாட்டியா ?" என்று சற்று எரிச்சல் கலந்து வினவ, சரஸ்வதி


"மன்னிச்சிருங்க ! உங்களை நான் இங்க ...இப்போ...திடீர்ன்னு எதிர்பார்க்கலே ! அதான் ! எப்படி இருக்கீங்க ?" என்று விசாரிக்க, பிரசாத்


"பாக்கறேலே எப்படி இருக்கேனு ! இளைச்சு , ஒழுங்கா சாப்பாடு இல்லாம ..உங்களை விட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன் ! முடியல " என்று சொல்ல, சரஸ்வதி உருகியே விட்டார் .


அவருக்கு அன்னமிட்ட, நெடுநாள் கழித்து மனைவியின் கைவண்ணத்தில் பிரசாத் நன்றாக சுகமாகச் சாப்பிட்டார் .


"தாரா என்னை பார்த்து சந்தோஷப்படலே ! ஏன் அவளுக்கு நான் உங்க கூட இல்லன்னு கோபமா ?" என்று வினவ, சரஸ்வதி அதற்கு நேரிடையாக பதில் அளிக்காது,


"சின்ன பொண்ணு, சரியாகிடுவா " என்று மட்டும் சொல்ல, பிரசாத்


"முடிவு பண்ணிட்டேன் ! இனி நீங்க இங்க, நான் அங்கேன்னு இருக்க வேண்டாம் ! நாளைக்கே போறோம் ! இனி நாம ஒரே இடத்தில தான் ! என்ன சொல்லறே ?" என்று தனது காவலாளி பொம்மையை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டு இருக்கும் மகளைப் பார்த்துச் சொல்ல, சரஸ்வதி மகிழ்ந்தாலும்,



"அதுக்கு உங்க வீட்டு ஆளுங்க ஒத்துக்கிட்டாங்களா ?" என்று முக்கியமான கேள்வியைக் கேட்டார் .


"நான் உன்னைய கல்யாணம் பண்ணிருக்கன் ! என் வீட்டு ஆளுங்களை இல்லை " என்று சுருக்கமாக ஆனால் கூர்மையாக பதில் வந்தது . அதில் அவர் இன்பமாக அதிர்ந்தார். அவருக்கு இதை நம்பப்பிடித்தது. கணவன் எவ்வழியோ, மனைவி அவ்வழியே என்ற கலாச்சாரம் அவருக்கு . தானாகத் தன்னைத் தேடி வந்தக் கணவனை அவர் வேறெந்த கேள்வியும் கேட்காது, சண்டை போடாது ஏற்றுக் கொண்டார்.


அவரது பதிலில் அவர் முகமும் மலர, பிரசாத்


"மெட்ராஸில் வீடு பார்த்திருக்கேன் ! ஒரு படம் கிடைச்சு இருக்கு ! சின்ன பட்ஜட் தான் ! ஆனா நல்ல வரும்னு நம்பிக்கை இருக்கு ! கொஞ்சம் மாசம் , அப்பறம் உன்னோட புருஷன் இந்த தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பான்" என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாத குறை தான் .


"நல்ல வரும் ! எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு !" என்று ஆதுரமாக பிரசாத் கையைப் பிடிக்க, அவர் அவளை அதன் பின் விடவேயில்லை.


அடுத்த நாள் நக்ஷத்திராவின் பெற்றோருக்கு நன்றாக விடிந்தது, ஆனால் அவளுக்கு இல்லை. பிரசாத்தின் சொல்படி, சரஸ்வதி அன்று காலையே பாக்யத்தைக் கூப்பிட்டு தான் சென்னைக்குத் தவிர்க்க முடியாத காரணத்தால் உடனே செல்லப் போவதாகவும் , தன்னை இந்த அவசர பயணத்திற்காக மன்னித்து விடும்படி சொல்லி விட்டார். பாக்யமோ மும்பையில் இருக்க, அவரால் உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை. இங்கே, நீலகண்டனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து, நினைவு திரும்புவதும், போவதுமாக இருக்க, அவரால் சந்தியாவிடம் இதைக் கூறி, அடுத்து என்ன செய்ய என்று கேட்கக்கூடிய நிலையிலும் இல்லை.


வேறு வழி இல்லாது பாக்யம், சரஸ்வதியை அங்கிருந்து செல்ல அனுமதித்தார். அனுமதி என்பதை விட, ஒத்துக்கொண்டார், அதான் சரி.



மாலைக்குள் நக்ஷத்திராவுக்கு பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட , அவர்கள் வீட்டில் இருக்கும் சாமான்களை எல்லாம் சேகரித்து, அட்டைப் பெட்டியில் போட்டு வைத்து இருந்தனர். வீடு திரும்பிய நக்ஷத்திரா இதைப் பார்த்து அதிர்ந்தாள்.

"எங்க போவோ(றோ)ம்?"என்று கலங்கியபடி தான் கேட்டாள். பிரசாத் அவள் உயரத்திற்குக் குனிந்து,


"நாம எல்லாரும் இனி ஒரே வீட்டுல இருக்க போறோம் ! மெட்ராஸ்க்கு போறோம் ! புது வீடு, புது ப்ரெண்ட்ஸ், புது ஸ்கூல், அப்பாவோட பைக்கில் நீ ஸ்கூல் போவியாம் ! அப்பறம் காரில் !" என்று அவளுக்கு ஆசைக்காட்ட ஆரம்பித்தார் .


ஆனால் அவள் அதற்கெல்லாம் மடியவே இல்லை.


"நான் வவ(ர) மாட்டேன்! இங்க தான் என்னோட சாம் இ(ரு)க்கான் ! இங்க தான் நான் இ(ரு)ப்பேன் !" என்று அழிச்சாட்டியம் செய்தாள். சாம் யார் என்று பிரசாத் அறிந்திருந்தார் ! இப்பொது இவளிடம் எரிந்து விழுந்தால் அது சரியாக வராது என்று உணர்ந்து,


"சாம் கிட்ட நம்ம அட்ரஸ் கொடுத்திட்டு போகலாம் ! அவன் அங்க வருவான் ! சரஸ்வதி ! அவங்க கிட்ட அட்ரஸ் கொடுத்தியா ?" என்று கூற, சரஸ்வதி


"கொடுத்து இருக்கேன் ! பாப்பா, சின்னையா அங்க வந்து உன்னை பார்ப்பார் !" என்று சமாதானம் செய்தாலும் அவள் ஒத்துக்கொள்ளவில்லை.


"இல்ல, நான் சாம் கூட இங்க தான் இவு(ரு)ப்பேன் . உங்க கூட வவ(ர)லே " என்று கூறி அழுது சாகசம் செய்தாள். அவர்கள் சொல்லி விட்டிருந்த காரும் வந்து விட, அவளது பிடிவாதமா அளவில்லாது போக, பிரசாத் அவளை அடித்து இழுத்துக்கொண்டு சென்றார். வழி நெடுங்கும் அவள்,


"சாம்! சாம் " என்று கூக்குரல் இட்டபடிச் சென்றாள். அழுது அழுது தூங்கியும் விட்டாள், ஒரு கவளம் சாப்பாடு கூட சாப்பிடாது !


அடுத்த நாள் ஜூரமும் வந்தது, ஜுரத்தின் வீரியத்தில் உளறல் வேறு !


"சாம் ! என்னை ..வேவ(ற) ஊ(ரூ)க்கு கூட்டிட்டு வந்துட்டாங்க ! எனக்கு உன்னை பாக்கணும் ! சாம்! நீ வவு(ரூ)வியா " என்று உளறிக் கொட்டி உடலெல்லாம் தூக்கித் தூக்கிப் போட, சரஸ்வதி பயந்தே விட்டார் ! முதலில் பிரசாத் பார்த்திருந்த வீட்டில் குடியேறும் முன், அவர்களின் தூரத்து உறவினர்களின் வீட்டில் இருந்தனர் .


அன்றைய பொழுது அவர்களுக்கு மருத்துவமனையில் தான் பெரும்பாலும் கழிந்தது ! அவளது தேக நிலை அவ்வாறு ஆகிவிட்டது. 2 நாட்கள் கழித்து தான் அவள் வீடு திரும்பினாள். கண்களில் ஜீவன் இல்லாது, அந்த காவலாளி பொம்மையை யாரிடமும் கொடுக்காது !


சரஸ்வதி சாப்பாடு ஊட்டவந்தால் அதை சாப்பிடாது எங்கோ வெறித்து பார்த்தபடி அவள் இருக்க, சரஸ்வதி பயந்தே போனார்.



"தம்பி வருவாரு பாப்பா ! நம்ம அட்ரஸ் கொடுத்து இருக்கேன் ! வருவாரு " என்று எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் அவள் கேட்டால் தானே. இங்கே மும்பையில் நக்ஷத்திரா சக்லேஷ்பூர் விட்டு சென்ற அதே நாள் மாலை, துருவ் அவர்கள் அங்கிருந்து சென்றது தெரியாது, சக்லேஷ்பூர் பங்களாவில் இருக்கும் தொலைப்பேசி எண்ணை அழைத்தான் !


ஆனால் அவர்கள் சென்று விட்டார்கள் என்றும், சரஸ்வதி கொடுத்த முகவரியும் அவனுக்குக் கிடைத்தது. உள்ளம் நக்ஷத்திராவை உடனே சென்று பற்றக்கும்படி கட்டளை இட்டாலும் அவனால் அங்கிருந்து செல்ல முடியாச் சூழ்நிலை. தாத்தா இன்று தான் நிறைய நேரம் முழிப்புடன் இருந்தார், ஆயினும் மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து இருந்தனர்.


இந்த நிலையில் அன்னையை விட்டு நகர முடியா நிலை அவனுக்கு. அவருக்கு உடல் நலம் சரியானதும் அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.


அவர் உடல் நலம் தேறி வந்தார். ஆனால் அவளைத்தான் சென்று பார்க்க முடியவில்லை. ஏனென்றால் சரஸ்வதி கொடுத்து இருந்த முகவரிக்குத் துருவ் சென்றான், ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லை .


நக்ஷத்திராவின் குடும்பம் அங்கே குடியேறவேயில்லை. ஏனென்றால் பிரசாத் கொடுப்பதாய்ச் சொன்ன வாடகையை விட அதிக வாடகை தருவதாகச் சொல்லி வேறோர் குடும்பம் குடியேறிவிட்டது. அவர்கள் நல்ல நாள் பார்த்து குடியேறலாம் என்று நினைதத் தருவாயில் இது நடந்து, அவர் கொடுத்த முன்பணம் திரும்பி அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் வேறு ஓர் முகவரியில் தங்கள் ஜாகையைத் துவங்கினர்.


சென்னைப்பட்டணத்தின் தண்ணீர் தட்டுப்பாடு தவிர சரஸ்வதிக்கு பெரிய பிரச்சனை நக்ஷத்திராவின் அமைதி. தினம் வானத்தைப் பார்த்துக்கொண்டு, அதிகம் யாரிடமும் பழகாது, பேசாது அவள் இருக்க, அவள் உடல் நிலையும் பாதிப்படைந்தது. ஒல்லியாக கிட்டத்தட்ட நோஞ்சானாக அவள் மாறிக் கொண்டு வர, இங்கே பிரசாத் தனது படப்பிடிப்பில் மூழ்கிப் போனார் .


அவருக்கு அவரது கவலை மட்டுமே கவலை ஆகிற்று ! ஏனென்றால் அதில் வந்த சிக்கல்கள் பெரிய அளவில் செல்ல ஆரம்பிக்க, அந்தப் படமே ரத்தானது !


முதல் படம் வரும் முன்னே இவ்வளவு இடையூறுகள் . கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பு கரையத் துவங்க, வருமானத்திற்காக சரஸ்வதி வேலைக்குச் செல்ல துவங்கினார். பிரசாத் அடுத்த படத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினார், அதே நேரம் நக்ஷத்திரா தனது சாமிற்காக காக்கத் துவங்கினாள்.


இவர்கள் இருவர் வாழ்வு பல்வேறு திசைகளில் இருந்து மீண்டும் தடம் மாறத் துவங்கியது .



மும்பை


"நீ அவனை முதலில் டிவோர்ஸ் பண்ணு சந்தியா " என்று தீர்க்கமாக நீலகண்டனின் குரல் ஒலிக்க, சந்தியா இதை எதிர்பார்த்து இருந்தாலும் அவருக்கு அது பிடிக்கவில்லை. தாமோதரன் மீதான அந்த கண்மூடித்தனமானக் காதல் அவர் கண்களை இன்னும் மறைத்து தான் இருந்தது. அவர் தனது மனநிலை சிகிச்சையை இங்கே வந்த பின் தொடரவில்லை.


அதற்கு சமயமும் இருக்கவில்லை. நீலகண்டன் மருத்துவமனை வாசம் முடிந்து வந்தபின், சந்தியா அவர்கள் தொழிலின் முழுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். அதில் தான் முழு கவனம் செலுத்த முயன்றார். ஆனால் மனித மனம், மரம் தாவும் குரங்கு ! அவ்வப்போது தாமோதரனை நினைக்காது இருக்காது. மகளின் மாற்றம் நீலகண்டனுக்கு தெரிந்தாலும் அது முழு மாற்றமில்லை என்று உணர்ந்து இருந்தார்.


ஆகையால் தான் இன்று ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தீவிரம் காட்ட, சந்தியா அதற்கு பதில் பேசாது இருந்தார்.


"சொல்லு சந்தியா ! இனி உனக்கும் அவனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்போ எதுக்கு இன்னும் இந்த கல்யாண பந்தம் ? தேவையா ?" என்று அவளைக் கேள்வி கேட்க , சந்தியா ஒரு நீண்ட பெருமூச்செறிந்து


"ஓகே ! பேபேர்ஸ் ரெடி பண்ணுங்க, சைன் பண்ணறேன் " என்று தனது முடிவைத் தெரிவிக்க, நீலகண்டன் அகமகிழ்ந்தார். ஆனால் அவருக்கு தெரியவில்லை, அதை சந்தியா எவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்தார் என்று.


கிட்டத்தட்ட ஆலகால விஷம் அருந்துவது போல் தான் செய்தார் . தாமோதர் உணர்வில்லாது அந்த விவாகரத்து பத்திரத்தில் தனது கையொப்பத்தை இட்டு, அவளது காதலுக்கு மட்டும் சமாதி எழுப்பவில்லை, அவளுக்கும் தான்.



விவாகரத்து முடிந்த பின் நீலகண்டனுக்கு எல்லாம் சரியாக இருப்பது போல் தான் இருந்தது. பெண் மனம் ஆழமானது, அதை அவர் அறியாது போனார் . சந்தியா எப்போதும் போல் இருந்தாலும் அதில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதை பாக்யம் உணர்ந்தார்.


"ஐயா ! அம்மாக்கு இன்னும் அந்த விவாகரத்தில் இஷ்டம் இருக்கலேனு தோணுது !" என்று நீலகண்டனிடம் சொல்லியே விட, நீலகண்டன் அதை ஒத்துக்கொள்ளவில்லை. அதை சந்தியாவிடம் கேட்க, சந்தியா


"எனக்கு இனி நீங்க, அப்பறம் என்னோட பையன் முக்கியம். நம்ம பிசினஸ் முக்கியம்" என்று விரக்தியாக ஓர் புன்னகையைச் சிந்தியபடி சொல்ல, அப்போது தான் நீலகண்டன் தான் தவறு செய்து விட்டோமோ என்று நினைத்தாலும், இனி தாமோதர் என்பவனுக்கு அவள் வாழ்வில் என்ன இடம் என்ற கேள்வி வராது இல்லை . ஆகையால் தான் நினைத்தது சரி என்று முடிவு கட்டிக் கொண்டார் மீண்டும் .


துருவ் பாக்யம் சொன்னதை சற்று உணர ஆரம்பித்தான். சந்தியாவின் மாறுதல்கள் அவனுக்கு கொஞ்சம் புரிந்தது, ஆனால் முழுமையாக இல்லை.


"அம்மா ! ஆர் யு ஹேப்பி ?' என்று கேட்பான். அவனை சந்தியா கூர்மையாகப் பார்த்து,


"அம் ஹேப்பி ! நீ இப்போ டென்த் க்ளாஸ். நல்ல படி " என்று ஒரு ஷொட்டும் வைத்தார். அதில் துருவ் சற்று வருத்தமடைய,


"கண்ணா ! என்னோட சந்தோஷத்துக்கு ஒரு குறையும் இல்ல. இது தான் என்னோட வாழ்க்கை , அதை நான் ஏத்துக்கிட்டாச்சு ." என்று சொன்னாலும் அதில் சற்று வருத்தம் இழை ஓடியது.


துருவ்வால் அப்போது அந்தக் காதலைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு தாமோதரன் மீது கோபமாக வந்தது.


அன்னையின் பேச்சிற்குத் தலை ஆட்டினாலும், அவன் முகம் தெளிவில்லாது இருப்பதைக் கண்டு அவர் பேச்சை மாற்ற ,


"உன்னோட பப்லிக் எக்ஸாம்ஸ் முடிஞ்சு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய போறியா ?" என்று கேட்க அவன் ஒற்றைச் சொல் பதிலாக,



"யா " என்று சொல்லிவ்ட்டு அவ்விடம் நீங்கப்பார்க்க, சந்தியாவிற்கு என்ன தோன்றியதோ அவனிடம்


"ஆர் யு ஹேப்பி ?" என்று கேட்க, அவன் தோளைக் குலுக்கியபடி


"ஐ திங்க் சோ " என்று சொல்லிவிட்டுச் சென்றும் விட்டான். ஆனால் அவன் மகிழ்ச்சியாக இல்லை என்று அவர் உணர்ந்தார். ஏனென்றால் நக்ஷத்திரா எங்கே சென்றாள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு தெரிந்தோர் மூலம் பிரசாத் என்ற பெயரில் யாரேனும் தமிழ் திரைப்படத்துறையில் வேலை செய்கிறார்களா என்று விசாரித்துப் பார்த்தார், ஆனால் பலன் பூஜ்யம் .



15 வயது பையன் ஒரு சிறு பொம்மையை தன்னனிடத்தில் வைத்துக்கொண்டு பத்திரமாகப் பாதுகாத்து வருகிறான் என்றால், அந்த சிறுமி எவ்வளவு தூரம் அவனுக்கு முக்கியம் என்று உணர்ந்திருந்தார். அதைக் கேலி செய்ய அவர் விரும்பவில்லை. அவள், அவனுக்கு அவனது குடும்பத்தாருக்கு அடுத்து முக்கியமானவள் என்று அவர் உணர்ந்திருந்தார். நடைமுறையில் இவர்கள் உறவு எத்தனை நாள் நீடிக்கும் என்று அவருக்கும் சந்தேகங்கள் உண்டு, ஆனால் அதைச் சொல்லி அவனைப் புண்படுத்த விரும்பவில்லை.


அனைவரும் துருவ் விரும்பிய படி சேர்ந்து உணவு அருந்துவர், ஆனால் எல்லோரின் பின்தலையில் வேறொரு எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். நீலகண்டனுக்கு அவரது வியாபாரம் மற்றும் அந்த விபத்து பற்றிய சிந்தனைகள். ஏனென்றால் அதைச் செய்தது தாமோதர் இல்லை என்று காவல்துறை கண்டு அறிந்துள்ளனர். இந்த உண்மையை சந்தியா அறிவார், துருவ் அறியான்.



சந்தியாவின் எண்ணங்கள், தமோதரைச் சுற்றி இருக்கும். துருவ்வின் எண்ணங்களோ நக்ஷத்திரா மற்றும் சந்தியாவை பற்றி இருக்கும். முக்கியமாக நக்ஷத்திரா எங்கு சென்றாள் என்பதில் இருக்கும். ஆனால் யாரும் அவர்களது பின்தலை உணர்வுகளை வெளியே சொல்ல மாட்டார்கள். ஒருவேளை சொல்லி இருந்தால்?



ஒரு இரவு, துருவ் தனது தாய் தூக்கத்தில் அலறுவதைக் கேட்டான். ஓடிச்சென்று அவர் அறைக்குச் செல்ல, அவரோ தூக்கத்தில் உளறிக் கொண்டு இருந்தார்.



"தாமு! சாரி தாமு..நீங்க சொன்னபடி உங்க கூட வந்து இருக்கணும்...என்னை மன்னிச்சிருங்க.." என்றெல்லலாம் பிதற்ற, அவன் என்ன செய்வது என்று அறியாது அவர் மீது தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி உட்கார வைத்தான்.



"என்ன ஆச்சு மா?" என்று அவன் நிதானமாக கேட்டான். தான் ஏதோ உளறிக் கொட்டி இருக்கிறோம் என்று உணர்ந்து



"நத்திங்" என்று ஒரேடியாக மறுத்து விட்டார். அன்று நீலகண்டன் வேறு வெளியூர் சென்று இருந்தார். இல்லை என்றால் அவரிடம் அவன் அப்போதே கேட்டு இருந்திருப்பான். அடுத்த நாள் காலையும் அவன் கேட்டுப்பார்த்தான். சந்தியா ஒரேடியாக,



"நீ உன் வேலைய பாரு, உன் வயசு 15! பெரிய மனுஷன் மாறி பிஹேவ் பண்ணாதே" என்று முகத்தில் அடித்தார் போல் பேசிவிட, துருவ்வின் முகம் கூம்பிப் போனது!


அவனது வருந்திய முகத்தைக் காணச் சகிக்காது,


"கண்ணா! இது வேற.. உனக்கு புரியாது..ப்ளீஸ் விடு அண்ட் அம் சாரி" என்று வருந்த, அவன் அவரது அலுவலக தாள் ஒன்றை எடுத்துக் காண்பித்து



"நேத்து உங்க ரூமில் இருந்தது இது!" என்று கொடுத்தான். அது ஒரு நேர்காணல் சம்பந்தப்பட்ட தாள். அதில் தாமோதரன் என்ற பெயரை அவர் பேனாவால் சுற்றி ஓர் வட்டம் வரைந்திருந்தார்.



"ப்ளீஸ்! ஐ நீட் யு" என்று கண்கள் பனிக்க இறைஞ்சினான். அவனுக்கு சந்தியா முழுமையாக தோல்வி அடைந்த தனது மண வாழ்வில் இருந்து வெளி வரவில்லை என்று புரிந்தது. ஆனால் அவனுக்கு அவர் வேண்டுமே, ஒரு பற்றுக்கோல் என்பதை விட தாய் என்பவள் உயிர் வாழ இன்றியமையாத உறவு. கர்ப்பத்தில் இருந்து துவங்கும் இந்த பந்தம் ஒவ்வொருவருக்கும் கடைசி வரை வேண்டும் என்ற ஆசை வெகுவாக இருக்கும் . இங்கு இவனுக்கு தாய் மட்டுமே இப்போது. அவர் அவனுக்காக வேண்டும் என்று அவன் கூற, அவனை இழுத்து அணைத்துக் கொண்டார்.



அவனுக்காக தான் இதில் இருந்து மீள வேண்டும் என்று உறுதி பூண்டார். உறுதி மட்டுமே எடுக்க முடிந்தது அவரால், செயல்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அடுத்த நாள், தன்னுடைய தோழிக்குப் பரிசுப்பொருள் ஒன்று வாங்க, நகைக்கடைக்குச் செல்ல, அங்கே தாமோதரைப் பார்த்தாள். தாமோதருடன், அவரது இரண்டாம் மனைவியும். அவர்கள் குழந்தையும். முற்றிலும் அதிர்ச்சி அடைந்தார்.



நெற்றி வகிட்டில் கும்குமமும், கருகமணித் தாலியும் தாமோதரின் இரண்டாம் மனைவியை அலங்கரிக்க, அவர்கள் குழந்தை, துருவ்வை விட 4 அல்லது 5 வயது சிறிய குழந்தை போல் தோன்றியது. தாமோதரின் மனைவி பெயர் அவளுக்கு தெரியாது, இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று நன்றாகத் தெரிந்தது.



மகிழ்ச்சியான குடும்பம், அன்பும் அக்கறையுமாக தாமோதர் அவளைப் பார்த்துக் கொள்வது அவளது முகத்தில் இருந்த பெருமிதத்தில் தெளிவாகத் தெளிந்தது. அதில் சந்தியாவின் கண்கள் கரிக்க ஆரம்பித்தன. தான் இருக்க வேண்டிய இடத்தில் வேறு பெண், அதுவும் தங்கள் திருமணம் ரத்தாகும் முன்னே அவளுடன் வாழ்ந்து இருக்கிறான். இதெல்லாம் அவள் மறுத்த ஒன்றில் ஆரம்பித்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்.



தாமோதர் செய்தது தவறு! அதில் சந்தேகமே இல்லை. ஆனால் சந்தியாவிற்கு அவர்கள் மகிழ்ச்சியைப் பார்க்க, என்னவோ செய்தது. இயலாமை, துருவ்விற்கு அவன் தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்காது போனதற்கு தான் காரணம் என்று எண்ணி வருந்தினார். தானும் தன் மண வாழ்வு முறிந்துப் போனதற்கு காரணம் என்று சாடிக் கொண்டு தந்தை மீதும் கோபம் கொண்டார். அவரது கண்மூடித்தனமான மகள் பாசம் தான் இதற்கு காரணம் என்று கற்பித்துக் கொண்டார்.


ஆனால் முடிவில் பலியானது அவர் வாழ்வும், துருவ்வின் குழந்தைப்பருவமும் தான். அதில் குமைந்து அவர் கண்ணில் நீர் வழிய, அதை கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட்டார். கடைச் சிப்பந்தி வேறு,


"மேடம்! இதை பில் செய்யலாமா?" என்ற கேள்வி எழுப்ப, உடனே சுற்றுப்புறத்தை உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டார். ஆயினும் குரல் கம்மித் தான் இருந்தது.


"பண்ணுங்க" என்று சொல்லும் போது, அது தெளிவாகத் தெரிந்தது.


அன்று மாலை தனது தோழியின் 15 வது திருமண விழாவில் கலந்துக்கொண்டு வீடு திரும்பும் போது, அந்த விழாவில் நடந்த ஒவ்வொவொன்றும் அவர் மனதில் ஒரு திரைப்படம் போல் ஓடியது.



பரிசை கொடுக்கச் சென்ற போது, நெடுநாள் தொடர்பில்லாத நட்பு ஒன்று


'உன் ஹஸ்பண்ட், பையன் சௌக்கியமா' என்று கேட்டது,


'அவ டிவோர்ஸ் பண்ணிட்டா..இன்னும் என்ன? பணக்காரி, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பா!' என்று வம்பு வளர்ப்போர் அவள் காது படவே பேசியது,



'இவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா, சேர்ந்தாவது இருக்கலாம்..இப்படி தனி மரமா இல்லாம' என்று குசுகுசுவென்று அவள் பின்னால் பேசியது என்று இம்மாதிரியான பலதரப்பட்டப் பேச்சுக்களே அவரது கவனத்தில் இருக்க, எதிரில் ஒரு லாரி வந்ததைக் கவனிக்கத் தவறினார்.


காரின் ஓட்டத்தை சீர் செய்யும் முன், லாரி, காரின் மீது மோதி, சந்தியா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



ரத்த வெள்ளத்தில் சந்தியாவைப் பார்த்தான் துருவ். அவனுக்கு சந்தியா அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனை முகவரி தெரிவிக்கப்பட்ட, அங்கே விரைந்தான். அந்த விழா, மும்பை நகரின் வெளிப்புறத்தில் நடந்தது. எவ்வளவு சொல்லியும் தானே கார் எடுத்துக் கொண்டு போவேன் என்று அவர் தீர்மானமாக இருந்தார். அதன் விளைவு இது என்று துருவ் நினைத்துக் கொண்டான்.


உயிர் காக்கும் சாதனங்கள் பல, அவரை உயிருடன் வைத்துக்கொண்டு இருக்க, சந்தியா சற்று நினைவில் இருக்கும் போது, அறுவை சிகிச்சைக்குச் செல்லும் முன் துருவ்வை அழைத்து, திக்கித்திணறி


"சா ம்..கண் ணா..! நான்.." என்று சொல்வதறக்குள் அவருக்கு மூச்சு வாங்க, செவிலிப் பெண் அவருக்குச் சுவாச முகமூடியை மீண்டும் அணிவிக்க முயல,அதை மறுத்து



"சா..ரி..! தாத்தா.. நீ..பார்த்து…" என்று செல்வதற்குள் மீண்டும் மயங்கினார். இம்மாதிரியான ரத்த வெள்ளத்தை அவன் திரைப்படங்களில் கூட பார்த்ததில்லை. அவன் முகத்தை ஒரு முறை அவர் கடைசியாகத் தீண்ட முயன்றார். அது கூட அவரால் முடியவில்லை. தாயின் கடைசி ஸ்பரிசம், அன்று காலையில் அவன் ஈரத்தலையை துவட்டி விட்டார். அது தான் அவன் நினைவில் இருக்கும் அவரது கடைசி தொடுகை.


அன்று காலை புன்னகை முகமாக அவர் அலுவலகம் கிளம்பினார். அந்த மலர்ச்சியான முகத்தை துருவ் நினைவிற்குக் கொண்டு வர முயன்றான், முடியவில்லை. தற்போது பார்த்த ரத்த காயங்களுடன் இருக்கும் முகம் தான் அவன் நினைவில் நிற்கிறது.


தாத்தா வேறு ஊரில் இல்லை. அவனும் பாக்யமும் மட்டுமே. எப்படியாவது அவர் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான், கடவுளை அவன் வேண்டவில்லை.கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று அவனை விட்டு என்றோ சென்று விட்டது. பாக்யம் தான்



"அம்மா வருவாங்க தம்பி!" என்று விடாது அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார். அறுவைசிகிச்சை நிபுணர் அவனிடம் வந்து பேசும் வரை, அவன் அவனாக இருக்கவில்லை.


"சர்ஜரி வென்ட் வெல். பட் அவங்க இப்போ மயக்கத்தில் இருக்காங்க. லெட்ஸ் ஹோப் பார் தி பெஸ்ட்!" என்று சொன்னார். அது நம்பிக்கையைத் தந்ததா என்று கேட்டால், அதை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.


2 நாட்கள் கழிந்தது, சந்தியா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். எப்போது வேண்டும் என்றாலும் நினைவு வரலாம் என்று மருத்துவர்கள் சொன்னதை அவன் மனம் நம்ப இப்போது மறுத்தது. அவர் கடைசியில் அவனிடம் ஏன் மன்னிப்பு கேட்டார் என்று அவனுக்குப் புரிந்து போனது . தனது மனதைத் திடப்படுத்திக் கொள்ள அவன் ஆரம்பித்தான். தாத்தாவைப் பார்த்துக்கொள் என்று அன்னை கடைசியில் இட்டக் கட்டளை தான் அவன் மனதில்.



15 வயதில் அவனுக்கு 25 வயதில் உள்ளவனுடைய பொறுப்பு கொடுக்கப்பட்டது. தாத்தாவை நினைத்தால் அவனுக்கு பயமாக இருந்தது. இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து இருக்கிறது. அதிர்ச்சி தங்குவாரா என்று அரியான். எதுவாக இருந்தாலும் தன்னிடம் முதலில் சொல்லுமாறு மருத்துவர்களை வேண்டிக் கொண்டான்.



சந்தியாவின் நிலை அறிந்து, அவரைப் பார்க்க அவரது தோழி ஒருவர் வந்திருந்தார். அவருடன் தான் சந்தியா அந்த விழாவில் பேசிக் கொண்டு இருந்தாராம். சந்தியா அன்று மாலை தாமோதரை நகைக்கடையில் வைத்து பார்த்ததில் இருந்து மன உளைச்சலில் இருந்தார் என்று கூற, துருவ் எல்லாவற்றையும் கேட்டு அறிந்து தாமோதர் மீது கோபத்தின் உச்சிக்கேச் சென்றான்.


அவனது கோப நேரமா அல்லது தாமோதரின் கெட்ட நேரமா என்று அறியான், அன்று தாமோதர் தனது மனைவியை மாதாந்திர பரிசோதனைக்காகக் கூட்டிக் கொண்டு அதே மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவரைப் பார்த்த துருவ், அவர் மீது பாய்ந்தான். சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு , சந்தியா இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கூட்டிக் கொண்டு சென்றான். துருவ்வின் வெறியை அந்நேரம் யாரும் தணிக்க முடியவில்லை.



வாயில் குழாய் சொருக்கப்பட்டு, சந்தியா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அந்த இயந்திரங்கள் மட்டுமே இருக்க, உயிர் அவர் உடம்பில் ஓர் சிறிய இடத்தில் ஒட்டிக் கொண்டு இருக்க, அதைக் கண்ணாடி வழியாகக் காணச் சகிக்காது தாமோதர்


"என்னை விடு சாம்! என்ன இது?" என்று இரைந்தார்.


"என் அம்மா! உங்க முன்னாள் மனைவி, முதல் காதலி! ஞாபகம் இருக்கா..நான் யாருன்னு தெரியுதா? உங்க காதல் பரிசு! மை ஃபூட்!" என்று கத்த ஆரம்பித்தான். அடிக்கவும் ஆரம்பித்தான். அதற்குள் மருத்துவர்கள் அங்கே வந்து அவர்களை அப்புறப்படுத்த, அவன் அங்கிருந்து சென்றான். மருத்துவமனை நிர்வாகம், துருவ் மீது புகார் கொடுப்போம் என்று வேறு மிரட்ட, அது நீலகண்டனின் தலையீட்டால் விஷயம் பெரிதாகவில்லை. ஆனால் துருவ், தாமோதரை விடவில்லை.


அவரிடம்,


"யு நோ, எனக்கு நீ இல்ல, வேணாம்..எனக்கு என்னோட அம்மா மட்டுமே! எனக்கு அவங்க வேணும்! அவங்க இப்படி இருக்க காரணம் நீ! ஒன்லி யு! அட்லீஸ்ட் அவங்க 2 நாள் முன்ன வர உயிரோட இருந்தாங்க! சாம்ன்னு கூப்பிட்டாங்க. கடைசியா என் கிட்ட சாரி சொல்லிட்டு.." என்று சொல்லும் போது அவன் கண்ணில் ஜலப் பிரவாகம். அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து,


"இன்னிக்கி அவங்க இப்படி ஆனது உன்னால தான்.. யு கில்ட் ஹர்..யு கில்ட் மை மாம். நீ கொலைகாரன்! எல்லாத்தையும் நான் இழந்திட்டேன்! எனக்கு வர ஆத்திரத்துக்கு அப்படியே உன்னை" என்று கழுத்தை நெரிக்கப் போய் விட்டான். அவனைத் தாமோதரிடம் இருந்து பிரித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஜல்லிக்கட்டில் திமிரும் காளையாக, கூண்டுக்குள் புதியதாக அடைக்கப்பட்ட சிங்கம் போன்று அவன் வெறியும் கோபமும் இருக்க,


"பிதா ஜி" என்ற ஓர் குரல் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. கையில் ஒரு புத்தகத்துடன் தாமோதரின் மகள், அவனுடன் பிறவா, ஆனால் ரத்த சம்பந்தம் கொண்ட அவன் சகோதரி இவற்றை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்க, துருவ் தன்னைப் பிடித்துக் கொண்டு இருந்தோரின் பிடியைத் தகர்த்தி, தாமோதரை இழுத்துக் கொண்டு அந்தச் சிறுமியிடம் சென்று,


"ஹி இஸ் அ சீட்டர்! ஒருநாள் உன்னை விட்டு ஓடி போயிருவான், என்னையும் என் அம்மாவையும் விட்ட மாறி" என்று சொல்லி கர்ஜித்தான்.


அவன் நடந்து கொண்ட விதம் அவனது கோபத்தின் வெளிப்பாடு, ஆத்திரம், துக்கம், பருவ வயதின் கோளாறு. ஆனால் அதில் தாமோதற்கு பெருத்த அடி!


அடுத்து வந்த 2 நாட்களில் சந்தியா இவ்வுலகை நீத்தார். துருவ் அழவேயில்லை. அவருக்கு இந்த பிறவியில் இருந்து விடுதலை, அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்தால், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரது அஸ்தியை அவன் அரபிக் கடலோரத்தில் கரைத்தான்.



தாய் இறந்த துக்கம் என்பதை விட அதை தான் கடக்க வேண்டும் என்ற வெறி அவனை ஆட்கொண்டது. பொதுத் தேர்வுகள் அதற்கு வடிகால் ஆயின. அவை கழிந்த பின், அவன் அழகியல் சிகிச்சை மேற்கொள்ள அயல்நாட்டிற்குச் சென்றான்.


"சோ துருவ், உனக்கு உன்னோட முகத்தை மாத்தி வைக்கணும் ரைட்? " என்று மருத்துவர் மீண்டும் மீண்டும் கேட்க, அவன்


"யெஸ் டாக்டர்! எனக்கு இந்த முகம் வேண்டாம்" என்று வெறுப்பாகச் சொன்னான். ஆம், அவன் தன் முக அமைப்பை முற்றிலும் மாற்ற சொல்லி விட்டான். அவனது தழும்பை மட்டும் அவர்கள் போக்கவில்லை, அவனது முக அமைப்பையும் மாற்றி விட்டனர்.



அவன் நக்ஷத்திரா கண்ட துருவ்வாக மாறினான்.


சில ஆண்டுகள் கழித்து,


சென்னைப் பட்டணத்தில் ஓர் சந்து முடுக்கு வீட்டில் பார்வதியுடன் தாரா அமர்ந்து இருக்க, அவர்கள் முன்னே அமர்ந்திருந்தவர்



"இந்த தாரா பேரில் தோஷம் இருக்கு. அதான் அவ பெத்த அம்மா இல்லாது கஷ்டம் ..அவ பேரை நக்ஷத்திரானு மாத்திடுங்க! அமோகமாக அந்த நட்சத்திரம் மாறி ஜொலிப்பா" என்று கூற, பார்வதி அவருக்குக் கொடுக்க வேண்டிய தட்சணையைக் கொடுத்து விட்டு,


"சரிங்க சாமி!" என்று விடைபெற்றுக் கொண்டார்.


"பெரிம்மா, எனக்கு தாரா பேரு தான் புடிச்சு இருக்கு. இந்த நக்ஷத்திரா வேணாம்" என்று 'ர' வை அட்சரம் பிசிராது சொல்லி தன் எண்ணங்களை வெளிப்படுத்த, பார்வதி


"என்னை பெரிம்மானு கூப்பிடரத நிறுத்து! அம்மான்னு கூப்பிடுன்னு சொல்லி இருக்கேன்லே. நான் முடிவு பண்ணிட்டேன். உன் பெயர் இனி நக்ஷத்திரா தான்" என்று தாராவை நக்ஷத்திராக ஆக்கினார்.


சிக்கு என்பவள் தாராவுடன் சேர்ந்து மாயமாக மறைந்தாள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 29


பிரசாத்திற்கு முதல் படம் நழுவிப் போன நிலையில், அவர்கள் சிக்கனத்தைக் கடைபிடிக்க, வாடகை மிகவும் கம்மியாக இருக்கும் இடத்தில் குடியேறினர். அருகே இருக்கும் பள்ளிக்கு நக்ஷத்திரா செல்ல ஆரம்பித்தாள்.


அங்கே சக்லேஷ்பூரில் அவள் பங்களாவிற்கு அருகே இருந்த ஓர் ஆரம்ப பாடசாலையில் தான் பயில ஆரம்பித்தாள். அது ஒரு வருடம் முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டப் பள்ளி. 2 ஆம் வகுப்பு வரை தான் இருந்தது. வீட்டிற்கு அருகே இருக்கிறது, தமிழ் மக்கள் பயில்கின்றனர், பள்ளியிலும் தமிழைப் பயில்விக்கின்றனர் என்ற காரணங்களால் சரஸ்வதி அவளை அங்கே சேர்த்தார். அந்த பள்ளிக்கு முறையாக அரசு அனுமதி கிடைத்து இருக்கவில்லை, ஆகையால் அங்கிருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையால், தமிழ் தான் பயில்விக்கப்பட்டது. அதனால் சரஸ்வதி தப்பித்தார்.


இப்போது தமிழ் நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறாள், ஆங்கிலத்துடன். துருவ்வின் வழி காட்டுதலால், அவளது ஆங்கிலம் நன்றாகவே இருந்தது. அவன் கடைசியாக அவளை நன்றாகப் படி என்று கூறி இருந்தான், ஆகையால் அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நன்கு படித்தாள்.



யாரிடமும் பழகாது, தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் மகளைக் கண்டு பரிதாபமும் கோபமும் பிரசாத்திற்கு வந்தது. ஆண்களுக்குப் பெண்களை விட பொறுமை கம்மி, அதற்கு இது உதாரணம்.


அவள் மனதை மாற்றும் முயற்சியாக, பிரசாத்,


"கிளாஸ் டெஸ்ட் பேபேர்ஸ் வந்தாச்சா ?" என்று ஆரம்பித்தார்.


"ம்ம்" என்பது தான் அவள் பதில்.


"எங்க காட்டு பார்ப்போம் ?" என்று மீண்டும் அவளைப் பதில் சொல்லத் தூண்ட, அவளோ


"பேக்கில் இருக்கு" என்பதுடன் நிறுத்திக் கொண்டாள். அவளது பையில் இருக்கும் அந்த வினாத் தாள்களை அவர் எடுத்துப் பார்த்த நேரத்தில், அங்கே அருகில் இருக்கும் கடையில் அவளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்று ஒலித்தது. அதை தான் துருவ் அவளுக்கு முதன் முதலாக வாசித்துக் காட்டியது.


அந்தக் கடை அருகே ஓடிச் சென்று அங்கே அவள் நின்று கொண்டு பாடலை ரசித்துக் கேட்டாள். அவள் ஓடிச் சென்ற பொழுதில் பிரசாத் மும்மூரமாக அவளது வினாத் தாள்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அதை பார்த்து முடித்த பின் தான், அவள் தன்னருகே இல்லை என்பதை உணர்ந்தார். அவரும் அவளைப் பின்தொடர்ந்து, அவள் இம்மாதிரி ஓடிச் சென்ற கோபத்தில் அவளை,


"தாரா ! அறிவு இல்லே? இப்படியா ஓடி வருவே ! உன்னை …" என்று அவள் மீது கையை உயர்த்த, அவளோ அதைக் கண்டு கொண்டாலும் அதற்கு பயம் கொள்ளாது அப்படியே அவரைப் பார்த்து நின்றாள். அதில் அவருக்கு என்ன தோன்றியதோ, உயர்த்திய கையை கீழே இறக்கினார். இருவரும் அமைதியாக வீட்டை அடைந்தனர். அவள் தன்னுடைய காவலாளி பொம்மையுடன் ஐக்கியம் ஆக, பிரசாத் அவள் பேசுவதைக் கவனித்தார்.


"சாம் ! இன்னிக்கி நீ வாசிக்கற பாட்டை கேட்டேன். ரொம்ப நல்ல இருக்கு, ஆனா நீ வாசிச்சு கேக்கணும் ! எப்போ வருவே?"


என்று ஏக்கமாக அதைக் கட்டிக்கொண்டு சிறிது அளவு கண்ணீர் உகுக்க, பிரசாத்திற்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. இங்கே வந்த புதிதில் அவர் அவளிடம் பொறுமையாக அவன் வருவான் என்று எடுத்துக் கூறிப் பார்த்தார். ஆனால் அவளுக்கு அவளது உயரத்தை மீறிய பிடிவாதம் உண்டு. இப்போதே தனக்கு அந்த வாணியம்பாடி பங்களா செல்ல வேண்டும் என்று எண்ணற்ற நாட்கள் அவள் பிடிவாதம் செய்து, அழுது புரண்டு என்று எல்லா சாகசங்களையும் செய்திருக்கிறாள். அப்போதும் அவளுக்கு அது வாணியம்பாடி பங்களா தான். சரஸ்வதி கூறிய பொய்யயை இன்னும் கட்டிக் காப்பாற்றிக் கொண்டு இருந்தனர். அவர் இருக்கும் நிலையில் அந்தப் பொய்யைப் பற்றி பேச விரும்பவில்லை.



அவள் பிடிவாதத்தில், அவர் கையை ஓங்க, சரஸ்வதி இவர்கள் இடையே புக என்று பெருத்த ரசாபாசம் ஆகியும் இருக்கிறது. அப்பறம் நாட்கள் கழிய, அவன் இனி வர மாட்டான் என்ற உண்மை அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. அதை அவளால் தாங்க முடியவில்லை. அது அவளை மன அளவில் பெருத்த முறையில் பாதித்தது.



வீட்டருகே அவள் வயதில் குழந்தைகள் இருந்தும் அவள் அவர்களுடன் பழகவேயில்லை . அமைதியாக அவர்களைக் கடந்து சென்று விடுவாள். மருத்துவர்களை வேறு கலந்து ஆலோசித்தனர், அவர்களோ காலப் போக்கில் சரியாகிவிடும் என்று கூற, பிரசாத்திற்கு அந்த காலப் போக்கில் நம்பிக்கை குறைவாயிற்று, ஆனால் சரஸ்வதிக்கு அவள் சரியாகிவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. அவள் இம்மாதிரி இருப்பதைப் பார்த்து அருகில் உள்ளோர், சரஸ்வதியை இன்னொரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினர். தனக்கென்று ஒரு உடன் பிறப்பு வரும் போது அது அவளுக்குப் பெருத்த மாறுதலைக் கொடுக்கும் என்று நம்பிக்கை ஊட்ட, பிரசாத்திற்கு அப்போது தான் அந்த முதல் படம் ரத்தான சமயம், அந்த நேரத்தில் இதைப் பற்றி அவரால் பேச முடியவில்லை.


அதுவும் சேமிப்பு கரையத் துவங்க, சரஸ்வதி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். மனைவி சம்பாத்தியத்தில் கணவன் என்ற உண்மையை அவரால் தாங்க முடியவில்லை, அதில் வரும் விரக்தி, கோபம், எரிச்சல் என்று எல்லாவற்றையும் தவறாது மனைவி-மகள் மீது காட்டினார்.


இப்போதும் அவள் அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு அதனுடன் மட்டும் பேசுவதைக் கண்ட பிரசாத் ஆத்திரம் கொண்டார். அந்த பொம்மையை அவளிடம் இருந்து பிடுங்க, நக்ஷத்திரா அதனை மீட்கப் போராடினாள்.


"குடுங்க அப்பா, அது தான் என்னோட சாம் ! குடுங்க" என்று அழுதபடியே அவர் கையில் இருந்து அதனை மீட்க தன்னால் ஆனவற்றைச் செய்தாள்.


"லூசு மாறி தனியா பேசிகிட்டு ! அதுக்கு வேற நான் வைத்தியம் பார்க்கணுமா ? விடுடி , இன்னிக்கி இந்த பொம்மையை எரிச்சா தான் என் ஆத்திரம் தீரும் " என்று அதனை எரிக்க முயற்சி எடுக்க, நக்ஷத்திரா தன்னை விட அதிக பலம் பொருந்தியத் தந்தையை எதிர்க்க முடியாது ,


"ப்ளீஸ் குடுங்க அப்பா ! ப்ளீஸ் " என்று அவர் காலைக் கட்டிக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்தாள். அது அவளது சாம் என்ற எண்ணம். அவளது முக்கியமான சொத்து! அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற தவிப்பு என்று இவள் இருக்க, பிரசாத் தனது முழு ஆத்திரத்தைத் தீர்க்க, வத்திக் குச்சியைப் பற்ற வைக்க, அந்த தீப்பொறியை சரஸ்வதி ஊதி அணைத்தார். பிரசாத் சற்று அதிர்ந்து நின்ற நேரம், சரஸ்வதி அந்தப் பொம்மையைக் கைப்பற்றினார்.




தனது மகள் இவ்வாறு அழுதுக் கரைந்து கொண்டிருக்க, அதுவும் அவர் காலைப் பிடித்து கெஞ்சியபடி இருக்க, பிரசாத்திற்கு அப்படி என்ன அகம் மற்றும் கோபம் என்ற கேள்வி வேறு மனதில். அது வாய்வார்த்தைகளாக வெளிப்பட, பிரசாத்,


"ஆமாம்டி ! நான் அப்படித்தான் ! இப்படி தான் இருப்பேன் ! என்ன நான் சம்பாதிக்கலே ? நீ சம்பாதிக்கறேன்னு திமிரா ?" என்று அவர் மீது கையை ஓங்க, தன்னால் தான் இவ்வளவு பிரச்சனை என்று அந்த குட்டி நக்ஷத்திரா புரிந்துக் கொண்டாள். அடுத்த முறை அவர் கை ஓங்கும் முன், நக்ஷத்திரா அவர்கள் இருவர் இடையே ஒரு குச்சியுடன் வந்து,


"என் அம்மா மேலே கைய வச்சா இனி என்ன நடக்கும் நான் சொல்ல மாட்டேன், செஞ்சு காட்டுவேன் " என்று ஒரு குட்டிப் பெண் புலியாகச் சீற, அந்தோ பரிதாபம் பிரசாத்தின் பலம் முன் அவள் பலம் ஒன்றும் இல்லை என்று ஆனது.



அவளுக்கும் அடி கிடைத்தது. இருவரை அடித்து விட்ட பிரசாத்திற்கு எங்கே நிம்மதி? இரவு குடித்து விட்டு வேறு வர, நக்ஷத்திரா முதன் முறையாக தனது தந்தையை வெறுக்க ஆரம்பித்தாள்.


"எனக்கு இந்த அப்பா வேண்டாம், முன்ன இருந்த நல்ல அப்பா வேணும் " என்று வெளிப்படையாக அன்னையிடம் கூறவே செய்தாள்.


"அதிகப்ரசங்கி ! சும்மா கிட" என்று சரஸ்வதி வைதாலும் , இன்று அவள் சற்று அதிகமாகப் பேசி இருக்கிறாள் என்று கவனித்தாள். இங்கே சென்னை வந்த பிறகு அவளுக்கு 'ர,ற' வர ஆரம்பித்து இப்போதெல்லாம் நன்றாகவே வருகிறது.



'சாம்' தவிர இன்று அவள் கவனம் வீட்டார் மீதும் திரும்பி இருப்பதைக் கவனித்தார். அதை நினைத்து அவரால் மகிழ முடியாத சூழ்நிலை. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற பழமொழி அவர்கள் வீட்டில் தாண்டவமாடியது. தன் காரணம் அன்னைக்கு அடி விழுந்தது என்று புரிந்துக் கொண்ட நக்ஷத்திரா அன்றில் இருந்து, பிரசாத் வீட்டில் இருக்கும் நேரங்களில், காவலாளிப் பொம்மையை வைத்து விளையாட மாட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அந்த வயதில் அளவிற்கு மீறிய முதிர்ச்சி வர ஆரம்பித்தது.


பொருளாதார நிலையும் மனதில் பதிய ஆரம்பித்தது. அதை வாங்கித் தா, இதை வாங்கித் தா என்று கேட்பதை நிறுத்திவிட்டாள். தாய் மட்டும் தான் வேலைக்குச் செல்கிறாள் என்றும் புரிந்தது. பார்வதி ஒருமுறை தனது சகோதரி சரஸ்வதியைப் பார்க்க வந்த நேரத்தில், அவர் நக்ஷத்திராவிற்கு சற்று விலை உயர்ந்த உடுப்பை வாங்கிக் கொண்டு வந்திருக்க, நக்ஷத்திரா அவரிடம்


"வேணாம் பெரிம்மா ! அதுக்கு பதிலா நீங்க காசா கொடுத்து இருந்தா, இன்னும் உபயோகமா இருந்திருக்கும் " என்று சொல்லியே விட்டாள். சரஸ்வதி அவளை கடிய, பார்வதியோ அந்த சிறு குழந்தையை வினோதமாகப் பார்த்தாலும், தங்கை அவளை அடிக்கும் முன் தடுத்து நிறுத்தி,


"சரியா தான் சொல்லிருக்கா தாரா !" என்று பணத்தைக் கொடுக்க, சரஸ்வதி அதனை வாங்க மறுத்தார். ஆனால் அந்தப் பணத்தை அவர்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பணப்பெட்டியில் திணித்துவிட்டு தான் மறுவேலை பார்த்தார்.


பிரசாத் வரும் வரை காத்திருந்தனர், அவர் வந்த பிறகு


"ஒரு ப்ரட்யூசர் , கொஞ்சம் புதுசு நம்ம தமிழ்நாட்டுக்கு. ஆனா கேரளாலே நிறைய படம் பண்ணிருக்காரு. அவர் கிட்ட உங்களை பத்தி சொன்னேன். பார்க்கறீங்களா ?" என்று வாய்ப்பைப் பற்றி பேச, பிரசாத்தின் கண்கள் பளிச்சிட்டன. பார்வதி, திரையுலகில் அக்கா, அம்மா கதாபாத்திரங்கள் செய்துக் கொண்டிருந்த நேரமது. ஆகையால் அவருக்குச் சற்று செல்வாக்கு இருந்தது.


எத்தனை தயாரிப்பு அலுவலகங்களின் வாயில் தேடிச் சென்று வாய்ப்பு இல்லை என்றும், இளக்காரமாக நடத்தப்பட்டும் பிரசாத் அவமானப்பட்டு இருக்கிறார். இன்று தன்னைப் பார்க்கவும் ஒருவர் தயாராக இருக்கிறார் என்று அறிந்து, மகிழ்ந்தார்.



"கண்டிப்பா ! எங்க, எப்போ பார்க்கணும்?" என்று பரபரப்பாக வினவ, பார்வதி


"திருவனந்தபுரம் போகணும் இப்போ ! இன்னிக்கே கிளம்பினா நல்லது " என்று அந்தத் தயாரிப்பாளரின் முகவரி அட்டையைக் கொடுக்க, பிரசாத் அதை வாங்கிக்கொண்டு உடனே கிளம்பினார்.


அது தான் அவரது திரையுலக வாழ்வின் முக்கிய திருப்புமுனை. ரத்தான படத்தின் கதைக்களம் வித்தியாசமான ஒன்று, ஒருவேளை அந்த முதல் படம் ரத்தாகாது இருந்திருந்தால், இந்நேரம் தமிழ் திரையுலகில் பெரும் பெயர் அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் விதி என்று சொல்வதை விட பலரின் சதி அவரை உயர விடாது, பள்ளத்தில் தள்ளி விட, வேறெந்த வாய்ப்பும் கிடைக்காது மிகவும் கஷ்டப்பட்டார். அதில் வந்த விரக்தி, மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்கிறோம் என்ற உண்மை நிலவரமும் அவரை முற்றிலும் மாற்றி விட்டிருந்தது.


கிளம்பும் முன், நக்ஷத்திராவிடம்


"உனக்கு என்ன வேணும் கேரளாவில் இருந்து ?" என்று பாசத்துடன் கேட்க, அவள் அன்னையின் பின்னால் மறைந்து கொண்டு ,


"அம்மாவை அடிக்காதீங்க ! ஹேப்பிலி லிவ்ட் எவர் ஆஃப்டர் தான் வேணும் "' என்று சொல்லி விட்டாள். அந்த சிறுவர் கதைகளில் வரும் வாசகத்தை அவள் இன்றும் ஞாபகம் வைத்திருக்கிறாள். அதை சொன்னவுடன் பிரசாத்திற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கணவன் எங்கேனும் கோபம் கொள்ளாது இருக்க வேண்டுமே என்று சரஸ்வதி மனம் பதைப்பதைக்க நக்ஷத்திரா மீது கோபம் கொண்டு அவளை அடிக்க கையை ஒங்க, பிரசாத் அவர் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி ,



"அவ சரியா தான் சொல்லிருக்கா, அவளை அடிக்காதே !" என்று பேசிவிட்டு, நக்ஷத்திராவிடம்


"ஹேப்பிலி லிவ்ட் எவர் ஆஃப்டர் வருமான்னு தெரில ஆனா உங்கம்மாவை சந்தோஷமா வச்சுப்பேன்" என்று வாக்கு கொடுத்தார். அதை அவர் சத்தியமாக நிறைவேற்றப் போவதில்லை என்று அறியாது.



பிரசாத்தின் நல்ல நேரம் , படம் ஒப்பந்தம் ஆகியது ! அதில் நடிக்க வந்தவர் தான் வீணா ! பிரசாத்தின் தொழில் அர்ப்பணிப்பில் கவரப்பட்டு, ஒருகட்டத்தில் படப்பிடிப்பின் போதே, காதல் வயப்பட்டு, அதைச் சொல்ல, பிரசாத் மறுக்க, தற்கொலை முயற்சியில் இறங்கினார்.


பிரசாத் அவளைக் காப்பாற்றி விட்டு, அவரது இந்த கோழைத்தனமானச் செயலுக்காக அவரை கடிய , அவரோ


"ரெண்டாந்தாரமானாலும் பரவாயில்லை, நான் உங்க கூட தான் வாழ்வேன் " என்று பிடிவாதம் பிடித்தார். அவர் அந்த தயாரிப்பாளரின் அக்கா மகள் வேறு.


"முடியாது ! கிறுக்கச்சியாடி நீ ?" என்று வைய, வீணா புன்னகைப் பூத்தார்.


"வாவ் ! உரிமையா உங்க வாயில் இருந்து டி ! கேக்க எவ்வளவு நல்ல இருக்குனு தெரியுமா ! அந்த உரிமையை தாலி கட்டி உங்க மனைவியா ஏத்துக்கிட்டு காட்டுங்க " என்று கிறுக்குத்தனமாகப் பேச்சினைத் தொடர, பிரசாத் காண்டானார்.


"முடியாது " என்று ஒற்றை வார்த்தையில் மறுத்து விட்டு அவ்விடம் நீங்கினார். ஆனால் விதி வேறு விதமாக அவரைச் சீண்டியது. தயாரிப்பாளர் தாணு பிரசாத்தைக் கூப்பிட்டு,


"வீணாக்கு என்ன குறை ? படிச்சிருக்கா ! இந்த படம் பிறகு வேறெந்த படத்திலும் நடிக்க மாட்டா ! என்னோட சொத்துக்கு ஒரே வாரிசு ! நான் கல்யாணமே செய்யலே, அவ தான் என்னோட வாரிசு ! இதுக்கு மேலே என்ன வேணும் உனக்கு ! அவளை கல்யாணம் கட்டினா, என்னோட ப்ரொடக்ஷன் ஹவுஸ் உன்னோடது! என்ன சொல்லறே ?" என்று வியாபாரம் பேச, பிரசாத்


"நான் கல்யாணம் ஆனவன் ! ஒரு பொண்ணு இருக்கா எனக்கு ! இது தப்பு" என்று தனது மறுப்பை மீண்டும் உணர்த்த, தாணு அதைப் பெரும் பொருட்டாக நினைக்கவில்லை.


"எனக்கு வீணா முக்கியம் ! உன் வைஃபை டிவோர்ஸ் பண்ணிடு ! ஜீவனாம்சமா எவ்வளவு வேணுமானாலும் கொடுக்கலாம் , நான் தரேன் " என்று அவர் தனது பிடியில் நிற்க, பிரசாத் முடிவாக


"சாரி " என்று சொல்லி விட்டார். செல்லும் அவரை, இறுக்கமாகப் பார்த்த தாணு தன்னை மீறி ஒருவனா என்று அகம் கொண்டார். அதன் பலன், அந்தப் படத்தை தன்னால் எடுக்க முடியாது என்று கையைவிரிக்க, பிரசாத் படம் 60% முடிந்த தருவாயில் என்ன செய்வது என்று விழிப் பிதுங்க, தாணு


"ஒரு வழி இருக்கு ! வீணா " என்று செக் அண்ட் மேட் வைக்க, பிரசாத் இம்முறை வீழ்ந்தார். தாணுவிற்கு கேரளாவில் மட்டுமல்ல தமிழ்திரையிலும் ஆதிக்கம் இருந்தது. இதை விட்டால், தனது திரையுலக வாழ்வு முடிந்து விடும் என்று தன்னை மட்டும் முன்னிறுத்தி யோசித்து, சரஸ்வதி மற்றும் நக்ஷத்திராவை மறந்தார்.



ஆனால் திருமணம், படம் முடித்து விட்டுத்தான் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். ஒருவழியாக படம் முடியும் தருவாயில் ஒருநாள் சரஸ்வதி தனது அக்கா பார்வதியைப் பார்த்துவிட்டு, தி நகரில் பேருந்து நிலையத்தில் பேருந்தைப் பிடிக்க, நடந்து கொண்டிருக்கும் தருவாயில் பிரபல நகைக்கடை வாயிலில் ஒரு காரில் இருந்து பிரசாத் மற்றும் வீணாவைக் கண்டார். அதுவும் வீணாவின் இடையில் கரம் போட்டுக்கொண்டு பிரசாத் அவளை நகைக்கடைக்குள் அழைத்துக்கொண்டுச் சென்றார்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அம்மா ! அது அப்பா தானே ! வீட்டுக்கு வந்து நாளாச்சு , நான் போய் கூட்டிகிட்டு வரேன் " என்று சூழ்நிலை புரியாது நக்ஷத்திரா கிளம்ப, சரஸ்வதி தனது அதிர்ச்சியில் இருந்து மீண்டு , அவளைத் தடுத்து நிறுத்தி,


"வா வீட்டுக்கு போகலாம் " என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாலும், அவளோ திரும்பி அந்த நகைக்கடையையே பார்த்துக் கொண்டே சென்றாள். பிரசாத் , வீணா கூறிய ஒன்றிற்கு பெருத்த ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்துக் கொண்டு இருந்தார். அந்நேரம் தன்னையோ, தனது அன்னையையோ இவ்வாறு மதித்து எங்கேனும் கூட்டிக்கொண்டு சென்று இருக்கிறாரா என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றாது இல்லை. அதுவும் இம்மாதிரி தங்களிடம் சிரித்துப் பேசி இருக்கிறாரா என்றும் அவளுக்குத் தோன்றாது இல்லை.


"யாருமா அந்த ஆன்டி ?" என்று கேள்விக் கேட்டுத் துளைத்து எடுத்திருப்பாள். அதற்கு பதில் வராது போக, நக்ஷத்திரா,



"அப்பா ஷூட்டிங்கில் இருக்காருன்னு தானே சொன்னீங்க ? ஆனா அவர் இப்போ அங்க …" என்று ஆரம்பிக்க, சரஸ்வதி அவரது விரக்தியை முழுவதும் நக்ஷத்திரா மீது காட்ட, பாவம் குழந்தையவள், தனது காவலாளிப் பொம்மையுடன் தனித்துப் போனாள். அதை அருகே வைத்துக் கொண்டு கண்ணீர் உகுக்க, சரஸ்வதி இங்கே அழுது கரைந்தார்.


தனது தவறு என்ன என்று அவருக்கு புரியவேயில்லை. அதைவிட அடுத்த கட்ட அதிர்ச்சி அடுத்த நாள் அவருக்கு தபால் மூலம் வந்தது. ஆம், விவாகரத்துப் பாத்திரங்கள் அவை. ஒருமுறை கூட அவளைச் சந்திக்க கூட பிரசாத்திற்கு விருப்பம் இருக்கவில்லையோ ? அல்லது மனைவி-மகளைப் பார்த்தால் தனது முடிவு மாறி, வளமான எதிர்காலத்தைத் தொலைத்து விடுவோம் என்ற பயமா ?


அவரது சுயநலம், நக்ஷத்திராவின் இனிமையானக் குழந்தைப் பருவத்தைக் கொன்றுப் புதைத்தது. விவாகரத்துக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, நக்ஷத்திராவுடன் நேரே பிரசாத்தைப் பார்க்க, அவர் இருக்கும் இடத்தை பார்வதி மூலம் கண்டு அறிந்துக் கொண்டு சென்றார். பார்வதி தானும் வருகிறேன் என்று கூறியும் மறுத்து விட்டார்,சரஸ்வதி.


பிரசாத் அடுத்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தனது அலுவலகத்தில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு ஒரு அலுவலகம் இருக்கிறது என்பதே சரஸ்வதிக்கு இப்போது தான் தெரியும். எல்லாம் வீணாவின் மூலம் வந்தது. முதலில் சரஸ்வதியை உள்ளே விடவேயில்லை. அலுவலக வாயிலில் சத்தம் கேட்டு, பிரசாத் வெளியே வர, அங்கே சரஸ்வதி மற்றும் நக்ஷத்திரா !


"வாங்க !" என்று உள்ளே சற்று அதிர்ந்தபடியே தான் அழைத்தார். அதில் வாயளவு மட்டும் தான் அந்த 'வாங்க!' இருந்தது. அதை சரஸ்வதி உணர்ந்தார். நேரே அவரது அறைக்கு இவர்கள் மூவரும் செல்ல, முதலில் அந்த விவாகரத்துக் காகிதங்களை அவர் மீது விட்டெறிந்து,


"அவ்வளவு தான் இல்லே ?" என்று நக்ஷத்திராவை முன்னிறுத்திக் கேட்டார், ஆணித்தரமாக. அவரது பார்வை பிரசாத்தை கூறு போட்டது. மூன்றே மூன்று சொற்கள், ஆனால் அதில் அவ்வளவு காரம், கோபம், வெறுப்பு, கேள்வி என்று பல்வேறு உணர்வுகள் . பதில் சொல்லாது தலைக் குனிந்து அவர் நிற்க, நக்ஷத்திரா ஒன்றும் புரியாது விழி பிதுங்கி இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


"சரஸ்வதி..." என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் ஆரம்பிக்க, சரஸ்வதி கை உயர்த்தி அவரைத் தடுத்து நிறுத்தி,


"யார் அவ ? அவளால தான் இந்த ஆபீஸா ?" என்று தீர்க்கமாகக் கேட்க, அதற்கு பிரசாத் பதில் சொல்லாது போகவே, தனது யூகம் சரிதான் என்று சரஸ்வதி புரிந்துக் கொண்டாள். அந்தக் காலத்தில் புதிதாக வரும் நடிக-நடிகைகள் பற்றி பத்திரிக்கைகளில் தான் வரும். இன்றோ இணையத்தில் விரைவாக எல்லா செய்திகளும் வந்து விடுகிறது. சரஸ்வதிக்கு வீணா யாரென்று பத்திரிகைகளைப் படிக்காதக் காரணத்தால் தெரியவில்லை.


சரஸ்வதியிடம் விஷயத்தைச் சொல்லித்தான் ஆகவேண்டும் அல்லவா, ஆகையால் எல்லா விவரங்களையும் அவரிடம் தெரிவிக்க, சரஸ்வதி பிரசாத் முகத்தில் காறி உமிழ்ந்து ,


"தூ ! நீ எல்லாம் ஒரு மனுசனா ! என் கூட இருக்கும் போது, அவ கூட....சீ ! தெரு நாய் கூட உன்னை விட …சே ! நாய் கூட உன்னை ஒப்பிட்டா, நாய்க்கு கேவலம் ! உனக்கு நான் விவாகரத்து கொடுக்க முடியாது ! முடிஞ்சதை பண்ணு ! துரோகி ! உனக்கு நல்ல சாவே வராது ! நீ நாசமா போவே !" என்று சாபம் இட்டுவிட்டு தான் அவ்விடம் நீங்கினார். உணர்ச்சி வேகத்தில் அவர்கள் இருவரும் நக்ஷத்திரா இருப்பதை உணராது போயினர் . பிரசாத் தான் பெற்ற அவமானத்தை எண்ணிக் குமைந்து, தான் சரஸ்வதி மீது கொண்ட உணர்வுகளை முழுவதும் துறந்து, நேர்மை இல்லா வழிகளில் இதைக் கையாள முடிவு செய்தார்.


சிறுமி நக்ஷத்திராவுக்கோ, பிரசாத் மீதான மரியாதையும் அன்பும் அன்றில் இருந்து முற்றிலும் மறைய ஆரம்பித்தது. தந்தை, தாயை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.



பார்வதி, சரஸ்வதியிடம் கத்தித் தீர்த்தார்!


"அறிவு இருக்காடி ! போய் போலீஸில் புகார் குடு ! அந்தாளை கம்பி எண்ண வை !" என்று அவர் சத்தம் போட, சரஸ்வதி கொஞ்ச நேரம் அதைச் செய்யலாமா என்று யோசித்து பின்னர் ,


"செஞ்சா ? அவ….ன் ஜெயிலுக்கு போனா..என்னோட வாழ்க்கை சரி ஆகிடுமா ?" என்று விரக்திப் பொங்கக் கேட்டார் . பார்வதி அதற்கு


"அவனுக்கு தண்டனை கிடைக்கணும் , அது தான் முக்கியம் " என்று தன் பிடியில் நிற்க, சரஸ்வதி தனது தமக்கையின் பேச்சிற்குக் கட்டுப்பட்டு காவல் துறையிடம் முறையிட்டு, புகார் அளிக்க, பிரசாத் கைது செய்யப்பட்டு, உடனே விடுதலையும் செய்யப்பட்டார். அவர் கம்பிகளை வெளியில் இருந்துப் பார்த்தார், அது தான் சரி ! வேறெந்த விஷயமும் நடக்கவில்லை. பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள், இங்கே பணம் பத்தென்ன. சரஸ்வதிக்கு 13 ஆம் நாள் காரியம் செய்யும் அளவு செயல்பட்டது.


சரஸ்வதி மீது ஒரு புகாரை பிரசாத் அளித்தார். அதாவது, சரஸ்வதி தனக்கு யாரென்றே தெரியாது என்றும், தேவையில்லாது தனக்கு இழுக்கு விளையுமாறு நடக்கிறார் என்று புகாரில் கொடுக்கப்பட, சரஸ்வதியின் உலகம் முற்றிலும் சிதிலமடைந்து போனது.


அவளைக் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்த, சிறுமி நக்ஷத்திராவின் மனம் சுக்கு நூறாக நொறுங்கியது . பார்வதி தன்னால் ஆனவற்றை செய்து, சரஸ்வதியை பெயிலில் எடுத்தார். ஆனால் சரஸ்வதி மிகவும் நொறுங்கிப் போனார். இம்மாதிரியான எதிர் விளைவை அவர் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஒரு அறையில் தன்னை அடைத்துக் கொண்டு இதெல்லாம் தனக்கு தேவையா என்று பல்வேறு கோணத்தில் சிந்தனை செய்ய, இங்கே வெளியே நக்ஷத்திரா விடாது அவரது அறைக்கதவைத் தட்டி


"அம்மா ! வெளியே வாங்க மா ! கரெண்ட் இல்ல, ஒரே இருட்டு ! பயமா இருக்கு" என்று கூக்குரல் இட. சரஸ்வதி தான் பழி வாங்கியோ, பிரசாத்தைச் சிறைக்கு அனுப்பியோ ஒன்றும் ஆகப்போவதில்லை என்றும், நக்ஷத்திராவிற்காக தான் இதில் இருந்து வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். வெளியே வந்தவர், நக்ஷத்திராவை இழுத்து அணைத்துக் கொண்டார்.


மெழுகுவர்த்தியைத் தேடி அதை ஏற்றிய பிறகு தான், நக்ஷத்திராவின் நெற்றியில் ஒரு சிறிய வீக்கம். அவள் இருளில் தன்னைத் தேடி எங்கோ இடித்துக் கொண்டு இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டார். தனக்காக அவள் மட்டுமே என்று அவரது முடிவு , பிரசாத்தை விவாகரத்து செய்ய வைத்தது. பிரசாத் அந்த வழக்கை திரும்பிப் பெற்றுக் கொண்டார். அந்த காலத்தில் சட்ட ரீதியான திருமணம் பரவலாக இருந்ததில்லை, சரஸ்வதி-பிரசாத் சட்ட ரீதியாக மணம் புரியவில்லை. சரஸ்வதி இடம் தகுந்த ஆதாரமும் இருக்கவில்லை. மரபணு பரிசோதனை செய்தாலும், நக்ஷத்திரா அவர்கள் மகள் என்று நிரூபிக்கப்படுமே ஒழிய, அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பதற்கு சான்று?


பிரசாத் வீட்டினருக்கு சரஸ்வதியை ஏற்கனவே பிடிக்காது. அவளுக்குச் சாதகமாக சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும் பிரசாத் பணம் படைத்தவன், எப்படி வேண்டும்மென்றாலும் இப்போது அவனால் சாட்சிகளை மாற்ற முடியும். பார்வதியைத் தவிர சரஸ்வதிக்கு வேறெந்த சாட்சியும் இல்லை. ஒற்றை சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா என்றெல்லாம் யோசித்து, விவகாரத்தை ஏற்றுக்கொணடார். அவர்கள் இதில் இனி வேறெந்த பிரச்சினையும் நாளை வரக்கக்கூடாது என்று தான் இந்த விவாகரத்தைச் செய்கின்றனர் என்று புரிந்து கொண்டார்,சரஸ்வதி.


தாணு கொடுத்த ஜீவனாம்சத் தொகையை அவர் மீது விட்டெறிந்து,


"என் பொண்ணுக்கு அப்பா இனி இல்ல. அது உங்களால ! இது எந்த மாறி பாவம் தெரியுமா ?" என்று உக்கிரமாகப் பார்த்து,


"பாவ மன்னிப்புக்கு உங்களுக்கு காசு பத்தாம போனாலும் போகும் ! வச்சுக்குங்க" என்று நிமிர்ந்து எல்லோரையும் பார்த்து விட்டு பேசிவிட்டு வீடு வந்தவர், கணவனை உயிர் நீத்தது போல் 'ஓ' வென்று கத்தி அழுது துக்கத்தைப் போக்க முயற்சி செய்தார். அதில் ஒருவாறு வெற்றியும் கண்டார். ஆனால் மனதில் பிரசாத் தனக்கு செய்த துரோகம், அதனால் தான் சிறை சென்றது, தாய்-தந்தை இருந்தும் தனது மகள் இருவரையும் பிரிந்து சில காலம் இருந்தது என்பதெல்லாம் ஒரு வடுவாக மாறிப் போனது. அந்த வடுவை மீண்டும் காயமாக்கி, சரஸ்வதி மனம் வெறுத்துப் போய் தனது உயிரையும் ஒருநாள் மாய்த்துக் கொண்டார்.



சரஸ்வதி சென்னை விட்டு, கோயம்புத்தூர் வந்தார், ஒரு மில்லில் வேலை தேடிக் கொண்டு. இடம் மாற்றம், மன மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பி வந்தார். நக்ஷத்திரா வேறு பள்ளியில் படிக்க ஆரம்பித்தாள். இருவர் மட்டுமே. கோயம்புத்தூர் வரும் முன் அவள்,


"நான் வாணியம்பாடி பங்களாவுக்கு திரும்ப போகலாம் மா " என்று கூறினாள், ஆனால் சரஸ்வதிக்கு தன்னை யார் என்று அதிகம் தெரியாத இடம் தான் வேண்டி இருந்தது. நடுநடுவே, அவள் மும்பையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசினாயா என்று அரித்துப் பிடுங்க, ஒருமுறை அவள் படுத்தல் தாள முடியாது, சரஸ்வதி


"யாரும் நம்மள தேடி வர மாட்டாங்க புரியுதா ! இது ஒரு ஏமாத்துக்கார உலகம், ஆம்பளைங்க எல்லாம் நல்ல ஏமாத்துவாங்க ! இனி சாம்மை பார்க்கணும்னு அழுது ஆர்ப்பாட்டம் செய்ஞ்சே, பாரு" என்று மிரட்ட, நக்ஷத்திரா திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்து, தன்னால் சரஸ்வதி வருத்தமோ, கோபமோ அடைய கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.


இனி தந்தை என்பவர் தனக்கு இல்லை என்று அவள் ஒருமாதிரி புரிந்துக் கொண்டாள். பார்வதி அவளிடம் , சரஸ்வதியைப் படுத்தக் கூடாது, அப்பா எங்கே என்று கேட்க கூடாது என்று வேறு 100 முறை அறிவுறுத்தி இருந்தார். அந்த வயதில் அவள் நன்றாகப் புரிந்துக் கொண்டு, கூடியவரை சரஸ்வதிக்கு தன்னால் மன உளைச்சல் வராதுப் பார்த்துக்கொண்டாள். மகளைத் திட்டிய பின் சரஸ்வதிக்கு நிம்மதியே இருக்கவில்லை. அமைதியாக அவளிடம் பின்னர்,


"நாளைக்கு பேசலாம் சரியா " என்று வாக்கு கொடுத்தார்.



அவர் நிறைவேற்ற முயற்சி செய்தார், ஆனால் அது மறுமுனையில் தொலைபேசி இணைப்பு கோளாறாகி போனதில் அவர் அழைத்ததை உணர முடியவில்லை. பல முறை முயற்சித்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அவர் உணர்ந்து,


"அடுத்த வாரம் திருப்பி கூப்பிடலாம் !" என்று நக்ஷத்திராவிடம் கூற, அவளும் ஒத்துக்கொண்டாள். ஆனால் ஏமாற்றம் இருக்காது இல்லை.


ஆனால் அடுத்த வாரம் இருவரும் ஜுரத்தினால் அவதிப்பட்டு கஷ்டப்பட, அது நடக்காது போயிற்று. சரஸ்வதி வேறு 1 வாரம், தான் வேலை செய்யும் மில்லில் இருந்து விடுமுறை எடுத்து இருந்ததால், அவரது வேலைகள் எக்கச்சக்கமாக குமிந்து இருக்க, நக்ஷத்திரா தாயின் நிலை உணர்ந்து, 'மும்பைக்கு அழை' என்று கேட்கவும் இல்லை .


மில்லில் சரஸ்வதி வந்த புதிதில், அவர் அழகின் மீது கண். பெண்களுக்குச் சற்று பொறாமை என்றால் ஆண்கள் பலர் அவள் மீது வழிசல் . அதுவும் அவளுக்குக் குழந்தை இருக்கிறது என்றும், ஆனால் கணவன் உடன் இல்லை என்று அறிந்துக் கொண்டு, சிலர் 'வேறு விதமாக' அவளிடம் பழக முற்பட்டனர். நெருப்பாக அவள் நின்றாலும், எல்லா கிரகங்களிலும் சில ஆண்கள் ஆண்களே ! அவளுடைய மேலதிகாரி முதல், ஒருசில கடைநிலை ஊழியர் வரை அவளுக்குத் தொந்தரவுகள் இருக்கத் தான் செய்தன.


"உன் புருஷன் உன் கூட இல்லைன்னா, நானும் நீயும் …" என்று பேசும் 50 வயது மேலதிகாரி,


"நீ எந்த மாதிரின்னு எனக்கு தெரியும்...பெருசா எதுக்கு இந்த நடிப்பு …" என்று அவளுடன் வேலைப் பார்க்கும் வேறொருவன்,


"அவ நடத்தை சரியில்லை, அவ பொண்ணுக்கு அவ ஜாடையே இல்லே, இப்படி பட்டவ கூட நமக்கு வேலை வேற " என்று உடன் வேலைபார்க்கும் மகளீர்,


"உனக்கு ஒரு பொண்ணு தானா …" என்று அதன் பிறகு அசிங்கமாக பேசும் பக்கத்து வீட்டில் இருப்பவன் என்று பலர் அவளைக் குத்திக் குத்திக் கிழித்தனர். சரஸ்வதி மீதான தவறான அபிப்ராயத்தில் , யாரும் நக்ஷத்திராவுடன் விளையாட வர மாட்டர்கள்.


தனிமை தனிமை தனிமை மட்டுமே அவளுக்கு ! காவலாளிப் பொம்மை, அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தகங்கள் துணை தவிர வேறுதுவும் அவளுக்கு இல்லை. தரக்குறைவான பேச்சுக்களைக் கேட்டு சரஸ்வதியின் மனம் கனத்துப் போக ஆரம்பித்தது. தன்னைத் தவறாகப் பேசுவது ஒருபுறம் என்றால், தனது மகளையும் இப்படி தரைகுறைவாக நடத்துவதை அவரால் தாங்க முடியவில்லை. தமிழ்த் திரை உலகில் இப்போதைய நம்பிக்கை நட்சத்திரம் பிரசாத் தான் தன்னுடைய முன்னாள் கணவர் என்றும் அவருக்கு கூறவும் பிடிக்கவில்லை. ரோஷம், மானம் என்ற இரண்டும் அவரை விட்டு நீங்காது நின்றன.


அவர் போல், நக்ஷத்திராவால் எல்லாவற்றையும் தாங்க முடியவில்லை. அன்று ஒருநாள், அவள் அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தகம் படித்து விட்டு வீடு திரும்பும் நேரத்தில் , அவர்கள் தெருவில் சில சிறுவ-சிறுமியர்கள் அவளிடம் வேண்டுமென்றே காயப்படுத்திப் பார்த்தனர்.



"டேய், உன்னோட அப்பா பேர் தானே உனக்கு இனிஷியல்..அப்பா பேர் என்னடா உனக்கு ? உன் அப்பா பேர் என்னடி " என்றேல்லாம் பேசிக்கொண்டே, முடிவில் சாலையில் சென்று கொண்டிருக்கும் நக்ஷத்திராவைச் சுட்டிக் காட்டி,


"இவளுக்கு இனிஷியல் இருக்கு, ஆனா அப்பா பேர் கேட்டா சொல்ல மாட்டா..அப்போ இவ அப்பா…? எல்லாரும் சொல்லற மாறி இவ அம்மா …" என்று வயதிற்கு மீறியப் பேச்சுக்களைப் பேச, நக்ஷத்திரா கோபத்தில் அவ்வாறு இழிவாகப் பேசிய சிறுவனின் சட்டையைப் பிடித்துச் சண்டை போட்டாள். தெருவில் கட்டிப் புரண்டு இருவரும் சண்டை இட்டு, அது பெரிய பிரச்னையாகி சரஸ்வதி வரை வந்தது. அவரை, அந்த சிறுவனின் அம்மா இழிவாகப் பேச, நக்ஷத்திரா கடுப்பில் தனது அன்னை வைத்திருந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு வந்து அதில் இருக்கும் பிரசாத்தை காண்பித்து,


"இவர் தான் என்னோட அப்பா ! சினிமாவில் இருக்காரு " என்று முழங்க, அது வேறு விதமாகப் போய் முடிந்தது. ஏனென்றால் பிரசாத், வீணாவைத் திருமணம் செய்துக் கொண்டு இப்போது அவர்கள் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகச் செய்தி ஒன்று வார பத்திரிக்கையில் வெளி ஆகி இருந்தது. அதைப் படித்திருந்த அந்தச் சிறுவனின் தாய்,


"என்ன? பொய் சொன்னா, போட்டோ காட்டினா உன் அம்மா உத்தமியா ? அவ ஒரு ******! அப்பன் யாருனு தெரியாதவே நீ ! இதுல என் பையனை அடிக்கிறியா ? தொடப்ப கட்டை பிஞ்சிரும் ! ராஸ்கல் " என்று சரமாரியாக, சிறுமி என்று கூற கருதாது அவளைச் சொற்களால் வாட்டி, வதக்கி எடுக்க, நக்ஷத்திரா கண்கள் கலங்கி


"நீங்க பொய் சொல்லறீங்க ! இவர் தான் என்னோட அப்பா " என்று தந்தையைப் பிடிக்காவிட்டாலும் தனது தாயை யாரும் குறைக் கூடாதென்று உண்மையைச் சாதித்தாள். ஆனால் உலகம் நம்பவில்லை. ஏனெனில் உலகத்தைப் பொறுத்தவரை பிரசாத்தின் ஒரே மனைவி வீணா!


இந்த புகைப்பட விஷயம் தெருவுடன் நிற்கவில்லை, அவள் வேலைப் பார்க்கும் மில்லிலும் பரவியது. அவளது மேலதிகாரி அவளிடம் ,


"நாம கூட அந்த மாறி போட்டோ எடுக்கலாம், இன்னொரு பிள்ளையோட, என்ன சொல்லறே ?" என்று அவள் கையைப் பிடித்து அசிங்கமாகப் பேச, சரஸ்வதி அவரை ஓங்கி அறைந்தார். ஆனால் அது வேறு மாதிரி கொண்டு போய் முடிந்தது. தன்னிடம் தகாத முறையில் சரஸ்வதி நடக்க முயன்றார் என்று அவர் வேலையை விட்டு அன்றே நீக்கப்பட்டார். வேலை விட்டு நீக்கப்பட்டு, பெருத்த அவமானப்பட்டு வீடு வருகையில் நக்ஷத்திரா வேறு அழுதுக் கொண்டு இருந்தாள்.

பள்ளியில் இன்று கடுமையான முறையில் அவள் வார்த்தைகளால் தாக்கப்பட்டு இருந்தாள். அன்னையைக் கண்டதும் அவரைக் கட்டிக்கொண்டு,


"எனக்கு இந்த ஊர் வேணாம் மா ! நாம வாணியம்பாடி பங்களாவுக்கு திரும்ப போகலாம் ! சாம் என்னை ஒன்னும் சொல்ல மாட்டான்" என்று அழுது தீர்த்தாள். காரணத்தை அவர் அறிந்துக் கொண்டு இன்னும் மனம் வருந்தினார் .


"நான் பொறந்து இருக்க கூடாதாமா ? என்னால தான் இவ்வளவு அவமானமா ? நான் என்ன தப்பு செஞ்சேன்மா ?" என்று அவள் விசும்பி விசும்பி அழ, சரஸ்வதி அவளை இறுக்க அணைத்துக் கொண்டு ஆறுதல் கொடுக்க முயற்சித்தார் . ஆனால் அவராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


"எனக்கு இந்த இடம் வேணாம், ஒரேடியா போகணும் இங்கிருந்து " என்று அவள் பிதற்ற ஆரம்பிக்க, சரஸ்வதி அந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டார்.



"நான் உங்களுக்கு பாரமா மா ?" என்றெல்லாம் அவள் கேள்வி கேட்க, சரஸ்வதி


"இல்லடா ! நான் ….காதலிச்சது தப்பு" என்று கூற, அது அவளுக்குப் புரியவில்லை . சரஸ்வதி-பிரசாத் இருவரும் காதலித்து மணம் புரிந்துக் கொண்டனர். பிரசாத் வீட்டில் அது பிடிக்காதுப் போக, கோவிலில் பார்வதி தலைமையில் மணம் செய்து கொண்டனர். பிரசாத் திரையுலகில் வாய்ப்பு தேடும் நாட்களில், சரஸ்வதியை சில சமயம், பார்வதி உடன் படப்பிடிப்பு நாடாகும் தளங்களில் பார்த்த போது இந்தக் காதல் உருவானது. இப்போது அது மடிந்தும் போனது. நக்ஷத்திரா பிறந்த பின், பிரசாத் வீட்டினர் அவர்களை ஏற்றுக் கொண்டனர், ஆனால் முழுமையாக இல்லை. சரஸ்வதி அவர்களுக்கு வேண்டாத மருமகள் தான்.


தான் பிரசாத்தை முதன் முதலில் பார்த்தது, காதல் வயப்பட்டது, மணம் புரிந்தது , நக்ஷத்திரா பிறந்த போது அவர்கள் மகிழ்வு, அதன் பின் வந்த பிரிவு, முடிவாக அவர்கள் விவாகரத்து என்று எல்லாம் ஒரு குறும்படமாக அவர் கண் முன் ஓட, வீட்டின் கதவு தட்டப்பட்டது.


வீட்டின் சொந்தக்காரர் தான் வெளியே ! அவளது நடத்தையைக் குறை கூறி, உடனே வீட்டை காலி செய்யுமாறு சொல்லிவிட, அதுவும் தெருவில் உள்ள எல்லோர் முன்னும் இம்மாதிரியான பேச்சில் சரஸ்வதி மனதளவில் மரித்துப் போனார். சரஸ்வதியை இவ்வாறு அவமானப்படுத்துவதைத் தாங்க முடியாது நக்ஷத்திரா இடையே பேச வர, அவளை சரஸ்வதி தடுத்து விட்டார்.



"நாளைக்கு நாங்க இருக்க மாட்டோம் " என்று சரஸ்வதி அவரிடம் சொல்லிவிட்டுக் கதவை அடைத்தார். கண்கள் கலங்கி தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த நக்ஷத்திராவிடம்,


"உன்னை மகளா அடைய நான் கொடுத்து வச்சு இருக்கணும்...ஆனால் ..நான் ரொம்ப கொடுத்து வைக்கலே பாப்பா !" என்று அவரும் கலங்க, நக்ஷத்திரா


"ஏன்மா ஒரு மாதிரி பேசறீங்க ! எனக்கு பயமா இருக்கு !" என்று அவள் இன்னும் அழ ஆரம்பித்தாள். சரஸ்வதி ஒரு முடிவு எடுத்தவராக,


"ஒன்னு இல்ல , நாளைக்கு உன் பிரச்சனை எல்லாம் சரியா ஆகிடும் , வா சாப்பிடலாம்" என்று அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். பொதுவாக அவளே தான் சாப்பிடுவாள். ஊட்டி விடு என்று இப்போதெல்லாம் அவள் அதிகம் படுத்துவதில்லை. அன்னை மில்லில் வேலைச் செய்துவிட்டு வருகிறார், சோர்வாக இருக்கும் என்று உணர்ந்து, அதை செய்து தா, இதை செய்து தா என்று அவள் கேட்பதில்லை.


"போதும் மா !" என்று கடைசியில் தயிர் சாதம் ஊட்டும் போது , அவள் ஒரு கவளம் சாதத்தை எடுத்து சரஸ்வதிக்கு ஊட்டி விட, அவர் கண்ணீர் மல்க அதை உண்டார். தாயாக அவள் அன்று, அந்த நொடி மாறினாள். அவர் கண்களைத் துடைத்து விட்டு,


"அழாதீங்க மா ! நாளைக்கு எல்லாம் சரி ஆகிடும் , இங்க இருக்க மாட்டோம் " என்று அவள் அளவில் நம்பிக்கை ஊட்டினார். அவரும் அதற்கு ஒன்றும் சொல்லாது தனது மடியில் அவளை தலைச் சாய்க்கும் படி கூறி, அவளை உறங்க வைத்தார்.



உறங்கும் தனது செல்வ மகளை கண் குளிரப் பார்த்தவர், அவளை கடைசி முறையாக முத்தமிட்டு,


"உனக்கு அம்மாவா இருக்க எனக்கு எந்த தகுதியும் இல்ல பாப்பா ! நல்ல இரு ! நல்ல படி ! இந்த அம்மா உனக்கு வேண்டாம் " என்று அவள் முகத்தில் படர்ந்த முடி கற்றை விலக்கி , அவளுக்குப் போர்த்தி விட்டு தனது முடிவை அவர் நிர்ணயித்துக் கொண்டார். யாரும் தனது மரணத்திற்கு காரணம் இல்லையென்றும், பார்வதியிடம் தனது மகள் வளர வேண்டும் என்றும் , நக்ஷத்திரா தன்னை மன்னித்து விடு என்றும் ஓர் தாளில் எழுதி வைத்து விட்டு அவர் இந்த பூவுலக வாழ்வை நீத்தார்.


தற்கொலை கோழைத்தனமானது, தெரிந்தும் அதை செய்து கொண்டார். அவர் மனதளவில் தன்னால் தான் நக்ஷத்திராவிற்கு கெட்ட பெயர், தனது அக்கா-மாமா உடன் அவள் வளர்ந்தால், அவளுக்கு இந்த அவமானம் வராது என்று நினைத்துக் கொண்டு, தான் இந்த பூவுலகில் இருக்கும் வரை நக்ஷத்திராவிக்ரு ஓர் அவமானச் சின்னம் என்று கருதி அவர் உயிர் நீத்தார். ஆனால் அது சரி அல்லவே ! நக்ஷத்திராவை அது எந்த அளவில் பாதித்தது என்று அவர் காணவில்லை.





இரவு தண்ணீர் தாகத்தால் எழுந்த நக்ஷத்திரா உயிரற்று வரவேற்பு அறையில் இருக்கும் சரஸ்வதியிடம் சென்று அவரை தொட்டுப் பார்த்தாள். ஆனால் அவர் அசங்கவேயில்லை.


"அம்மா ! அம்மா !" என்று பல முறை கூப்பிட்டு பார்த்தாள் .


"தாரா என்ன வேணுமா ?" என்ற குரலை அவள் கேட்கவில்லை. அவர் அருகே எலி மருந்து டப்பா ஒன்று இருக்க, அது விஷம், அதை எடுக்கக்கூடாது என்று அன்னை சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் அது ஏன் அவரிடம் என்று யோசித்தவள், அன்னையின் முகத்தைப் பார்த்தாள். ஜீவனற்று, வாயில் இருந்து வெள்ளை நிற திரவம் போல் ஒன்று வந்து காய்ந்து பொய் இருந்தது. அதில் அவளுக்குப் பயம் பிடிக்க, யாரை அழைத்து அன்னைக்கு என்ன ஆயிற்று என்று அறிய என்று அவள் புரியாது தவித்தாள். கண்களில் நீர் பெருக, தனது காவலாளி பொம்மையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அந்தத் தெருவில் இருந்து யாரை அழைப்பது என்று ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். அப்போது இரவு மணி 11 அளவு இருக்கும். முடிவில் ஓரளவு அவர்களிடம் வம்பு செய்யாத ஒருவரின் வீட்டை அடைந்து , அவர்கள் உதவியை நாட, அவரும் வந்து சரஸ்வதிக்கு இதயத் துடிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்தார்.


"என்ன ஆச்சு அங்கிள் அம்மாக்கு ?" என்று தவிப்புடன்,அழுகையுடன் கேட்ட நக்ஷத்திராவிடம்,


"அம்மா இறந்துட்டாங்க மா !" என்று சொல்லிவிட்டு அவர் எழுதி வைத்து இருந்த கடிதத்தைப் படித்துவிட்டு, அருகே அவர் வைத்திருந்த டயரியில் இருக்கும் பார்வதியைத் தொடர்பு கொள்ள வெளியே சென்றார். தனது தாய் உயிருடன் இல்லை என்றால், அவர் இறைவன் அடியை அடைந்து விட்டார் என்று புரிந்துக் கொண்டாள் நக்ஷத்திரா.


உயிரற்ற தாயின் உடல் உடன் தான் அன்று இரவு வாசம் அவளுக்கு ! சீக்கிரம் சாப்பிட்டதில் அவளுக்கு பசிக்க வேறு ஆரம்பித்தது. பசித்தால் எல்லோர்க்கும் தாயின் ஞாபகம் தானே உடனே வரும், அவளும் அது போல் ,


"அம்மா ! பசிக்குது !" என்று எப்போதும் போல் கேட்க, சரஸ்வதியிடம் இருந்து பதில் வராது போக, அவர் உயிருடன் இல்லை என்று மீண்டும் உணர்ந்து கொண்டு பயத்தில், பசியில், அந்தக் காவலாளிப் பொம்மையை இறுக்கக் கட்டிக் கொண்டு,



"சாம் ! எனக்கு பயமா இருக்கு சாம் ! நீயாச்சும் வா " என்று அழுதபடி உறங்கியே விட்டாள். அவளுக்குத் துணையாக அந்நேரத்தில் இருக்கவோ, அல்லது அவளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லவோ யாரும் முன் வரவும் இல்லை.


அன்று தனித்து விடப்பட்டாள், அதுவே அவள் பின்னாளில் தைரியசாலியாக விதை விதைத்தது.



பார்வதியின் வளர்ப்பும் அதற்கு கைகொடுத்தது. மக்கட் செல்வம் அல்லாத பார்வதி தம்பதியினருக்கு அவள் மகளாகிப் போனாள். இருந்தாலும் அவள் பார்வதியை அம்மா என்று அவர்களுடன் தங்க ஆரம்பித்தப் புதிதில் கூப்பிட மாட்டாள். பார்வதியின் கணவரின் பெயரின் முதல் எழுத்தும், அவளது இனிஷியல் எழுத்தும் ஒன்றாகிப் போனதில் அவளுடைய தந்தையின் பெயர் யாரேனும் கேட்டால், தனது பெரியப்பாவின் பெயரைச் சொல்ல சொல்லி பார்வதி அவளுக்கு உத்தரவு இட்டு இருந்தார்.


அதை அவளும் கடைபிடித்தாள். நாளடைவில் அவள் பெயர் நக்ஷத்திரா என்று நியூமெராலாஜி எனும் எண் கணித முறைப்படி மாற்றப்பட்டது. அவளும் மெல்ல மெல்ல, அவர்களை அம்மா-அப்பா என்று அழைக்க ஆரம்பித்தாள். பார்வதியின் கணவர் குடிக்கு அடிமை ஆனவர், அதுவே அவரது முடிவிற்கு வழி வகுக்கவும் செய்தது. ஆண்கள் மீதான அவளது எண்ணங்கள், அபிப்ராயங்கள் பெரிதாக நல்லதாக இல்லமால் போனதிற்கு அவளது குழந்தைப்பருவம் தான் பெரிய காரணம்.




அன்னையை ஏமாற்றிய தந்தை, குடியின் பிடியில் அதிகம் இருந்த அவளது பெரியப்பா என்று அவளுக்கு மிகவும் நெருங்கிய ஆண்கள் பொய்த்துப் போயினர். தந்தையின் காரணம், அவளுக்கு திரை உலகம் என்பது வேப்பங்க்காய். அங்கே உள்ளோர் பெரும்பாலானோர் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டு, அவர்கள் மீதும் அவளுக்குப் பெரிதாக மரியாதை இல்லாது போயிற்று.

நன்றாகப் படித்தாள். ஆங்கில ஆர்வத்தில் அவளது ஆங்கிலப் புலமை நன்றாகவே இருந்தது. அன்னைக்கு நடந்த அநியாயத்தை பெரியம்மா மூலம் பின்னாளில் நன்கு புரிந்துக் கொண்டவள், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற விருப்பம் கொண்டாள். அதை, பார்வதியிடம் சொல்லவும் செய்தாள். ஆனால் அவர்கள் நிதி நிலை வேறு மாதிரி அவளைக் கூட்டிக் கொண்டு செல்லப் பார்க்க, அவள் மறுத்தும், பார்வதியின் கெஞ்சல், நிலை எல்லாம் நக்ஷத்திராவைக் கட்டிப்போட்டு, திரையுலகிற்கு இழுத்துக் கொண்டுச் சென்றது.


ஒரு சில நல்லவர்களையும் அவள் அங்கே கண்டாள். ஆனால் எல்லாரும் நல்லவர்கள் அல்ல என்பது அவளது தீர்மானம். யாரேனும் நல்லது செய்தால் கூட அதைச் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் பழக்கம் அவளது வாழ்வின் ஓர் அங்கம். எளிதில் யாரிடமும் உதவி கோர மாட்டாள். தன்னைப் பற்றிய தகவல்களை அளவோடு தான் பகிர்ந்துக் கொள்வாள். ரஞ்சனுக்கு கூட பார்வதி அவளது பெரியம்மா என்ற விஷயம் தெரியாது. ரத்னா மட்டுமே அவர்கள் பக்கத்தில் நெடுநாள் இருந்ததால் அறிவார்.


இவ்வாறு யாரிடமும் எளிதில் பழகாது, பெரும்பாலான ஆண்கள் மீது நம்பிக்கையோ, மரியாதையோ இல்லாத இவள் , தன்னை விட்டு நீங்கிய சாம்மை அவளது 18 ஆம் வயதில் மீண்டும் சந்தித்தாள்.


அவளது முக ஜாடை அதிகமாக மாறி விட்ட நிலையில் , அவனது முகம் அதிகமாக மாறிப் போன நிலையில் அவள் அவனை நேருக்கு நேர் சந்தித்த போது முதலில் உதிர்த்த வார்த்தை

"பொறுக்கி !"


வானில் மீண்டும் துருவ நக்ஷத்திரம் மீண்டும் உதயம் ! ஆனால் இம்முறை கிரகணத்தை நோக்கி!
 
Status
Not open for further replies.
Top