sivanayani
விஜயமலர்
(18)
தீவில்
ஆனந்தன் தன் ரோபாட் மூலம் செயற்கைக்கோளுக்கு தகவல் அனுப்பிய உடன் எல்லோரின் மனதிலும் சொல்லொணாத நிம்மதியும் மகிழ்ச்சியும் எழுந்தன. வார்த்தைகளால் அடக்கிவிட இயலாத உணர்வு அது. வெளி உலகை தொடர்புகொள்ள முடியாமல் தவித்து, திண்டாடி, சோர்ந்து, நம்பிக்கை தேய்ந்து போன வேளையில், சொந்த பந்தங்களுக்கு தாங்கள் இருக்கும் இடம் தெரியாமலேயே அழிந்து போய்விடுவோமோ என்ற அஞ்சிய தருவாயில், கடவுள் அனுப்பிய தூதுவன் போல தக்க சமயத்தில் உதவி செய்தது அந்த ரோபாட்.
அச்செய்தி கிடைத்திருக்கும்.. இன்னும் ஒரு நாளிலோ அல்லது இரண்டு நாட்களிலோ மீட்பு படையினர் தங்களை தேடி வருவார்கள்… என்ற நம்பிக்கை முளைவிட முன்தினம் நடந்த சோதனைகளில் விளைந்திருந்த மன துயர், சோர்வு ஓரளவு குறைந்து போனது. ஆனாலும், மழை விட்டும் தூவானம் விடாத குறையாய் பயம் மட்டும் மனத்தை அரித்துக்கொண்டிருந்தது.
இப்போது இங்கே அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது தெரிந்துபோயிற்று. ஒரு வேளை காலநிலை மாற்றம் வெள்ளம் வரும் என்று அறிந்துதான் இவ்விடத்தை விட்டு பழங்குடியினர்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்றால், எப்போதும் அவர்களைத் தாக்க முன்னேறலாம் என்கிற கிலி வேறு அனைவரையும் சற்று பீதி கொள்ள வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இந்தப் பயணத்தில் அத்தனை ஜாம்பவான்களும் ஒரு உண்மையைக் கற்றுக்கொண்டனர். காலமும் விதியும் அவர்களின் கைகளில் இல்லை. அவற்றின் கைகளில் இவர்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்… ஏதேதோ எண்ணங்களில் ஆழ்ந்து போய், ஒவ்வொருவரும் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சிலர் மட்டும் சுரத்தேயில்லாமல் ஏதோ செய்து கொண்டிருக்க, ஆர்யன் அனைவரையும் ஒரு முறை பார்த்தான்.
“லிசின் டு மி கைய்ஸ்… நாம இப்போது அனுப்பியிருக்கிற செய்தி, எந்தளவு பிறரின் கவனத்தைத் திசைதிருப்பும்னு நம்மால சொல்ல முடியாது… சோ… நம்ம காப்பாத்த வருவாங்க என்கிற நம்பிக்கைல இங்கேயே காத்திருக்க முடியாது… எவ்வளவு விரைவா நாம இங்கிருந்து கௌம்பறமோ… அந்தளவுக்கு நாம சேஃப்…” என்றவன், நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை அழுத்தமாகப் பார்த்தான்.
"இங்கே… நாமதான் நமக்குப் பாதுகாப்பு… நாமதான் நம்மைக் காப்பாத்திக்கனும்… சோ… எது செய்றதா இருந்தாலும். பலவாட்டி யோசிச்சு செய்ங்க.. யாரும் காட்டுக்குள்ளேயோ, தனியாவோ, அதிக தெலைவோ போகவேண்டாம்…” என்றவன் பின் தியாவை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்துவிட்டு,
“இதை மீறி யாராவது உங்கள் விருப்பப் படி போனீங்கன்னா… உங்களைக் காப்பாத்த நாங்க யாராவது வருவோம்னு நெனச்சுக்கிட்டு போகாதீங்க… ஏன்னா உங்க ஒருத்தருக்காக மத்தவங்க தங்களோட உயிரை பணயம் வைக்க முடியாது… ஐ ஹோப் யு ஆல் அன்டர்ஸ்டான்ட் தட்…” என்றதும் அனைவரும் பதில் கூறாது அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவன் கூறியதில் இருந்த நியாயமும் அவர்களுக்குப் புரிந்தது.
“ஆனா நாம இங்கேயே இந்தக் கடற்கரை , வெறும் மணல் வெளில இருக்க முடியாதே கப்டன்… நம்ம அவஸ்தை நம்ம வயித்துக்குத் தெரியாதே…” என்று தியா சோர்வுடன் கூற அவளை இரக்கத்துடன் பார்த்தான் ஆர்யன்.
“நாம இங்கேயே அடைஞ்சு கிடக்கனும்னு சொல்லல… என்ன செய்றதா இருந்தாலும் கவனத்தோட பாதுகாப்பு பற்றி யோசிச்சு செய்ங்கன்னுதான் கேட்டுக்கிறேன்…” என்றவன் பின்,
“இப்போ தோணி கட்றதுக்கு நமக்கு மூங்கில் வேணும்… ப்ருத்வி… நீங்க அடிபட்டவங்க கூட இருங்க…” என்றவன் சூரஜைப் பார்த்து
“சூரஜ்…” இவங்களைப் பாதுகாக்கிற பொறுப்பு உங்களுடையது…” என்கிற உத்தரவுடன், நகர எத்தனிக்க,
“கேப்டன் எங்கே போறீங்க?” என்றாள் தியா.
“ போகும் போதே…." என்று எரிச்சலுடன் பார்த்தவன்.. அவளின் விழிகளின் பயம், அக்கறை கவனித்து குரலைத் தணித்து, " அதிக தூரமில்லை தியா… தோணி கட்ட மூங்கில் அறுக்கணும்… கூடவே உணவும் தேடனும்… சோ… மத்தவங்களைக் கூட்டிகிட்டு மூங்கில் காட்டுக்குப் போகிறேன்…” என்றதும் துள்ளி எழுந்தாள் தியா.
“நானும் வர்ரேன் கேப்டன்… "என்று அவன் அருகே வர எட்டெடுத்து வைக்க, அக்காலில் சுளீரென வலி எழுந்தது, முகம் கசங்க தன்னை மறந்து, “ஆ…” என்றவாறுஅக்காலை குனிந்து பற்ற, புரிந்துகொண்டவனாக, அவளைப் பார்த்தான் ஆர்யன்.
“உன்னால் முடியாது தியா… நீ ரெஸ்ட் எடு…” என்றவன், அங்கிருந்த வேலையாளைப் பார்த்து, டானியல், கம் வித் அஸ்…” என்றவாறு அங்கிருந்த பெண்களிடம்,
“நாங்க மூங்கில் அறுக்கிறப்போ…பழங்கள் ஏதும் கிடைக்குதான்னு பார்த்து சேகரிக்க நீங்க கூட வாங்க….” என்று வேண்ட அது வரை சோர்ந்து தரையில் அமர்ந்திருந்த பெண்கள், ‘அப்பாடா மனத்தை திசை திருப்ப இது நல்ல சந்தர்ப்பம்’ என்று எண்ணியவர்களாக ஆண்களுடன் செல்லத் தொடங்கினர்.
கிருஷ்ணாவுடன் தர்ஷன், அக்கண்யன், முன்னால் செல்ல நடுவில் கலை, அமிர்தவர்ஷினி, அம்ருதசாகரி, ஷாலினி, நாச்சி, ஜனனி, திகம்பரி சென்றுகொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் அகிலன், ஆதீரநந்தன்,காசி விஸ்வநாத ராயர், ப்ரவீன் சென்றார்கள்.
அவர்களது ஒவ்வொரு செல்லிலும் எச்சரிக்கை உணர்வு மிகுந்து போய் இருந்தது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைத்தார்கள். அவர்களின் புலன்கள் சுற்றுபுறத்தை ஆராய்ந்தபடியே இருந்தன.
மூங்கில் காட்டை நெருங்கியதும், அவரவர் வேலையில் கவனமாக, மூங்கில் ஒன்றை வெட்டி பின்னோக்கி இழுத்த ஆர்யனின் பின் தோளை ஏதோ ஒன்று ஆழமாகக் கீறத் துடித்துப்போனான் ஆர்யன். வலி தாங்க முடியாது திரும்பிப் பார்க்க கிட்டத்தட்ட மூன்று அங்குல நீளத்தில் இருந்த முட்களுடன் அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தது ஒரு முள் மரம். அதைக் கண்டு எரிச்சலுடன் ஒதுங்கிப் போக நினைத்தவன், பின் என்ன நினைத்தானோ… நின்று அதை உற்றுப் பார்த்தான்.
பின் திரும்பி
“கிருஷ்ணா, அக்கண்யன்… உங்க ஷேர்ட்டைக் கழற்றித் தாங்க…” என்றவாறு தன் ஷேர்ட்டையும் கழற்றி மற்றைய ஷேர்ட்டோடு சேர்த்து முறுக்கி, அந்த முள் நிறைந்த மரத்தின் கிளைகளை ஒடிக்கத் தொடங்கினான்.
அதைக் கண்டு திகைத்த தர்ஷன்,
“என்ன செய்ரீங்க ஆர்யா?” .
“நம்மகிட்ட ஆயுதங்கள் எதுவும் கிடையாது… தற்போது இருக்கிற ஆயுதம்…” என்றவன் இன்னொரு கிளையை இழுத்து எடுத்தவாறு, “இதுதான்…” என்றதும், உடனே அவர்களுக்கு அந்த முட்கள் நிறைந்த மரத்தை ஒடிப்பது எதற்காக என்று புரிந்துபோயிற்று. பின்பு சற்றும் தாமதிக்காமல், தங்கள் ஆடைகளையும் கழற்றி, ஆர்யன் செய்வது போலவே கிளைகளை உடைக்கத் தொடங்கினர்.
உடைத்த கிளைகளை ஷேர்ட் கொண்டு சேர்த்து கட்டியவன், அதை ராயரிடம் தந்து, "இதை இழுத்துட்டு வாங்க…” என்று கூறியவாறு மூங்கில் மரம் பக்கம் திரும்பினான். பின் திரும்பி தன் பின்னால் நின்றவர்களைப் பார்த்து,
“எவ்வளவு வேகமா மூங்கிலை உடைக்கிறீங்களோ… அத்தனை வேகமாக உடையுங்க…” என்றவன், ஒரு மூங்கிலை உடைத்து இழுக்க, அது கூரான முனைகளுடன் அவன் கரங்களில் வந்து சேர்ந்தது. அந்தக் கூறான முனைகளைத் தூக்கிக் காட்டியவன்,
“இந்தக் கூர் முனைகளும் எதிரிகளைக் காயப்படுத்தும்…” என்றான். அதன் பின் கடகடவென்று மூங்கில்கள் வேண்டிய அளவு எடுக்கப்பட்டன. அதை சுமந்துகொண்டு, உணவைத் தேடிப் புறப்பட, பெண்களும் கிடைத்த பழங்களைத் திரட்டி எடுத்தவாற நடக்கத் தொடங்கினர்.
ராயரும் பிரவீனும், நாச்சியும் சுற்றிவர மரத்தில் படர்ந்திருந்த வலிமையான கொடிகளை இழுத்து எடுத்து பெரிய வளையமாக்கி தமது தோளில் போட்டவாறு நடக்கத் தொடங்கினர்
ஒரு கொடியைப் பற்றி இழுத்த நாச்சி ஏதோ அரவம் கேட்டு உற்றுப் பார்க்க, அங்கு தொட்டில் போல அமைப்பை கொண்ட கொடிபின்னலில் சுகமாக படுத்துக் கொண்டும் ஆடிக்கொண்டு பழங்களை உண்டவாறு இருந்த குரங்குக் கூட்டத்தைக் கண்டு.. நின்றாள். எதைக் கண்டு அசையாமல் நிற்கிறாள் இவள் என்று எட்டிப் பார்த்த பிரவீனுக்கு மெல்லிய நகைப்புத் தோன்றியது. மூங்கில்களை தோளில் வைத்தவாறு வந்து அவளின் தோளில் தட்டியவன்?
"ஓய்…. உன் சொந்தக்காரங்கள பார்த்து மயங்கி நின்னுட்டியா.. அப்புறமா நலம் விசாரிக்கலாம்.. இப்ப நட.." என.. உதட்டை இட்புறமாக இழுத்து சுழித்து அழகு காட்டியவள்,
"ச்சூ… எங்க ஆயா காலத்துல சொன்னதையெல்லாம் இன்னமும் சொல்லிக்கிட்டு திரியுற.. நானூ... இதுங்களுக்கு வந்த வாழ்வைப் பாக்குறேன்... அவனவன் என்ன மாதிரி கஷ்டத்துல இருக்கான்… இதுங்க எவ்வளவு ஜாலியா ஊஞ்சல் ஆடிகிட்டு இருக்குங்க.." என்று புலம்ப, அதைக் கேட்டு நகைத்தான் பிரவீன்.
முன்னால் ஒரு முள் கிளைகளை இழுத்துச் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணா, நாச்சியைத் திரும்பிப் பார்த்து,
"உன்மைதான் சிஸ்டர்… அதுங்களுக்கு கடந்த காலம் பத்தின கவலையுமில்ல.. எதிர்காலம் பத்தின பயமுமில்ல… பில் கட்டணும்கிற தேவையுமில்லை… நாம அப்படியா? ஓடனும்… உழைக்கனும்… உழைச்ச பணத்தை பில் கட்டியே தீர்க்கணும்… ஏதோ இந்த உலகமே நம்ம தலை மேல இருக்கிற மாதிரி கவலைப் படணும்…" என்றான் நடக்கும்போது எதிர்ப்பட்ட செடி கொடிகளை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தவாறு.
அவனின் பின்னால் சில பழங்களை மடியில் சேகரித்தவாறு சென்ற கலை, அவனுடைய முதுகில் மெல்லிய தட்டுத் தட்டியவாறு, "சுவாமி க்ருஷ்ணானந்தா… கீதோபதேசம்… தொடங்கியாச்சா… வீட்டில்தான் முடியல… இங்கேயுமா" என்று தன் கணவனைப் பார்த்துக் கிண்டலடிக்க, சென்றுகொண்டிருந்தவன், நின்று திரும்பித் தன் மனைவியைப் பார்த்து முறைத்தான்.
“ஏய்… உலகுக்கு முக்கியமான தத்துவத்தைச் சொல்லிட்டிருக்கேன்… உனக்கு கிண்டலா இருக்கா…” என்று கூற அவன் ஒரு கையை அபயம் போல் காட்டி, தலை உயர்த்தி கூறிய விதத்தில் அனைவரின் இறுக்கமும் ஒரு வகையில் தளர்ந்து தான் போனது.
குரங்குகள் நின்ற மரங்களிலிருந்து கிடைத்த, பெயர் தெரியாத பழத்தைப் பறித்து தின்றபோது, புளிப்பும் இனிப்புமாகச் சுவையாக இருந்தது. ஏதோ அரை வயிற்றை நிரப்பினாலே போதுமே என்கிற எண்ணத்தில் கிடைத்த பழங்களை பெண்கள் சேகரிக்கத் தொடங்கினர்.
ஒரு மரத்திலிருந்த பழங்கள் சற்று உயரத்தில் இருக்க, சற்றும் தாமதிக்காமல் கடகடவென்று மரத்தின் உச்சியை நோக்கி ஏறிய விதார்த் பழங்களைப் பறித்துக் கீழே போட்டுவிட்டு இறங்கும்போது, ஏற்கனவே உடைந்திருந்த கிளையொன்றின் கூரான பகுதி, அவனுடைய வலக்கையின் பின்புறத்தை நன்கு பதம்பார்த்தது.
சுளீர் என்று ஏற்பட்ட வலியில், “ஷ்… ஆ…” என்கிற முனங்கலுடன் கரத்தைத் தூக்கிப் பார்க்க சற்று ஆழமாக கிழித்ததில் ரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. அதைக் கண்ட அவனின் மனைவி மீரா “விதார்த் என்னாச்சு” என்று பதறியவாறு அவனுடைய கரத்தைப் பற்றி பார்த்தவளுக்கு இரத்தம் கண்டு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அத்தனை நேரமாக இருந்த இலகுத்தன்மை மறைந்து போக, முகம் வெளிறத் துடித்த மனைவியைக் கண்ட விதார்த்திற்குத் தன் வலி மறந்து போனது.
“ஷ்… எதுக்குடி ஊரைக் கூட்டுறே… எனக்கொன்றுமில்லை…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மீராவின் பதற்றத்தைக் கண்டு எல்லோரும் அங்கே கூடிவிட்டனர்.
வலியில் முகம் சுண்டி இருந்த விதார்த்தை கண்ட ராயர் கொஞ்சமும் யோசிக்காமல் கீழே குனிந்து தரையிலிருந்த மண்ணை அள்ளி அந்த காயத்தின் மீது வைத்து அழுத்த, ஓரளவு ரத்த போக்கு குறைந்தது.
“கையை கீழ தொங்க போடாதீங்க விதார்த். நாங்க வயகாட்டுல வேலை பார்க்கும் போது நிறைய இது மாதிரி அடி பட்டு இருக்கு. அப்போல்லாம் மண்ணை எடுத்துத்தான் பூசுவோம். ரத்தம் வழியறது மட்டுப்படும். ஆனா அது விவசாய மண்… ரத்தத்தை அப்படியே உறிஞ்சிக்கும்… தவிர அதில இருக்கிற கனிமங்கள் காயத்தை இலகுவா சுகப்படுத்திடும். இது மணல் என்கிறதால, சுலபத்தில ரத்தத்தைத் தேக்கி வச்சுக்காது… ஆனா இதில இருக்கிற உப்பு பக்டீரியாக்களை கொன்னுடும்னு நெனைக்கிறேன்… ” சுற்றிலும் எதையோ தேடினான்.
“என்ன வேணும்” என்று மீரா தவிப்புடன் கேட்க,
“ஏதாவது துண்டிருந்தா காயத்தைச் சுத்திக் கட்டிக்கலாம்… ஆனா…” என்று முடிக்கும் முன், அருகே நின்றிருந்த திகம்பரி, தான் அணிந்திருந்த மேல் துணியை நுனிப் பல்லினால் பற்றிக் கிழித்து நீட்ட.. அதைக் கொண்டு காயத்தைக் கட்டிவிட்டு நிமிர்ந்தான் ராயர்.
அதே நேரம் அந்தக் காயத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஜனனிக்கு ஏனோ நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. இன்னும் எத்தனை சிக்கல்களை அவர்கள் அனைவரும் சந்திக்கப்போகிறார்களோ…’ என்று தவிப்புடன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, அவளருகே வந்த அக்கண்யன்,
“ பேபி, என்ன யோசிக்கிறே…” என்றான். விழிகளில் சற்றுக் கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்தவள்,
“ரொம்ப பயமா இருக்கு அத்தான்… நாம ஊருக்கு போய்டுவோம்ல… நம்ம குழந்தைகளைப் பாத்திடுவோம்ல… என்னவோ தெரியல… மனசு படபடக்குது… திரும்பிப் போகமாட்டோமோன்று தவிக்குது…” என்று குரல் கம்மக் கூறியவளை மறு கணம் இழுத்து அணைத்திருந்தான் அக்கண்யன். அவளுடைய கன்னங்களில் வழியத் துடித்த கண்ணீரை விரல்களால் தடுத்து துடைத்து விட்டவன்,
“ஏய் அசடு… எதுக்கு இப்போ கண் கலங்குறே… நிச்சயமா நாம சீக்கிரமாகவே ஊருக்கு போய்டுவோம்… நம்பு… அழாதே…” என்று கூறியபோதும், அவன் உள்ளத்திலும் மெல்லிய பதட்டம் ஏற்படவே செய்தது. அவர்களின் குழந்தைகள் அனாதைகளாகப் போய்விடுவார்களோ என்று யோசிக்கும் போதே அடிவயிற்றில் ஒரு வலி எழுந்தது. ஆனாலும் அதை ஜனனிக்குக் காட்டினானில்லை.
அதே நேரம், அவர்களருகே வந்த ஆதீரநந்தன்,
“ப்ரதர்… ரொமான்ஸ் பண்ணினது போதும்… மூங்கில் கட்டைத் தூக்கிட்டு வாங்க…” என்று கிண்டலாகக் கூறிவிட்டு முன்னே செல்ல, தன் மனைவியின் தோளை அழுத்திக் கொடுத்துவிட்டுக் கீழே போட்ட மூங்கில் கட்டை அநாயசமாய் தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்க, அவனைப் பின் தொடர்ந்தாள் ஜனனி.
கிருஷ்ணன் சற்று எட்டி இருந்த மரத்தில் பழங்களை பறிப்பதற்காகக் கீழே இருந்த பள்ளத்தை கவனிக்காமல் முன் செல்ல, கலை சட்டென்று அவன் கரத்தைப் பற்றித் தடுத்து,
“கிருஷ்… பாத்து” என்று பள்ளத்தைச் சுட்டிக் காட்டிக் கூற, நன்றியுடன் நிமிர்ந்து பார்த்தவனுக்கு வெயிலில் வாடித் துவண்டிருந்த தன் மனைவியின் முகம் சற்றுச் சலனப் படுத்தியது. அவளை நெருங்கி,
“என்ன… கலை, ஜனனி கூறியதை நெனச்சுட்டு இருக்கியா?” என்றான் கனிவாக. அவள் ஆம் என்பதுபோலத் தலையை ஆட்ட, அவளுடைய தோளில் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தவன்,
“நீ வருந்துவதால் ஏதாவது மாறப்போகுதா… வாழ்க்கை என்கிறதே நிறைய ஆச்சர்யம் நிறைஞ்சதுதானே… இதையும் ஒரு அட்வெஞ்சரா நெனச்சுக்கோ… நமக்கு இப்போது தேவை தைரியம் மட்டும்தான் கலை…” என்றவன் திரும்பி தொலைவிலிருந்த கடலைக் காட்டி,
“எத்தனை அழகான காட்சி… இத்தனை அழகான இடத்தில் நாமளும் இருக்கோம்னு நெனச்சுக்கோ… மனசு லேசாயிடும்…” என்று கூறிவிட்டு அவளுடைய கன்னத்தை வருடியவாறு கவனமாகப் பள்ளத்தைத் தாண்டிச் செல்ல,
“ரொம்ப சரியாக சொன்னீங்க கிருஷ்ணா… கலை சிஸ்டர்… உங்க கணவர் சொல்றது போல, எதுவும் நம்ம கைல இல்ல.. நடக்க வேண்டியது நடந்துதான் தீரும்… என்ன… வரும் ஆபத்திலிருந்து எப்படி தப்பலாம் என்கிறத மட்டும்தான் நம்மால இப்போதைக்கு யோசிக்க முடியும்… கீதையில் சொன்னது போல… எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறதோ… அது… ” என்று அகிலன் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவனருகே நின்றிருந்த அமிர்தவர்ஷினி எதையோ தேடினாள்.
“ஏய்… என்னடி தேடுறே…” என்ற அகிலனுக்கு தெரிந்து இருந்தது.. வெகுவாக கலாய்க்க போகிறாள் என்று..
“இல்ல… புத்தர் போதி மரத்துக்குக் கீழே இருந்து ஞானம் பெற்றாராம்… என் புருஷன்… நீங்க எங்கேயிருந்து ஞானம் பெற்றீங்கன்னு பாக்கிறேன்…” என்றவள் நாடியில் கையை வைத்தவாறு தனக்கு அருகாமையிலிருந்த அந்த உயரமான மரத்தை மேலும் கீழும் பார்த்து,
“ஒரு வேளை இதுதான் போதிமரமோ?” என்றாள் கிண்டலாக. தன் இடையில் கரத்தைப் பதித்த அகிலன்,
“என்னடி நக்கலா…?” என்றான் எரிச்சலுடன்.
“பின்ன என்னங்க… அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குங்குது… நீங்க என்னன்னா… கீதா உபதேசம் பண்ணிட்டிருக்கீங்க… இன்னும் மரத்தடில உக்கார்ந்து அபயக் கரம் காட்டி நல்லா உபதேசம் பண்ணுங்க… பழங்குடிகள் வந்து நீங்க சொல்றதை நிதானமா கேட்டுக்கட்டும்… எங்கள விடுங்க…” என்றவள், கலையைப் பார்த்து, “நீங்க வாங்க கலை…” என்றவாறு அவளுடைய கரத்தைப் பற்றியவாறு முன்னால் சென்றாள்.
“அடிப்பாவி… நல்லதுக்கு சொன்னா என்னைய தீவுல கழட்டி விட ப்ளான் பண்றியா..… ஊருக்குப் போய் இருக்குடி உனக்கு…” என்றவாறு அவன் அவர்கள் பின்னால் நடக்கத் தொடங்கினான்,
“என்ன அகிலன்… ஊருக்குப் போனால் மட்டும்… உங்க மனைவியை நிக்க வச்சு எதிர்த்துக் கேள்வி கேட்ருவீங்க போல இருக்கே…” என்று மூங்கில் கழியில் இருந்து நீர் சேகரித்துக் கொண்டு இருந்த ஆதீரநந்தன் சிரித்தவாறு கேட்க,
“நீங்க வேற … ஊருக்குப்போனா வேலைக்கிற பேர்ல எஸ் ஆயிரலாம்ல… இங்க எங்க தப்பிக்கிறது… அதுக்குத்தான் சொன்னேன்…” என்றவனிடம்,
“என்ன சொன்னீங்க…” என்று சற்றுத் தள்ளிக் கேட்ட அமிர்தவர்ஷினியின் குரலில் அதிர்ந்தவன்,
“ஒன்றுமில்லைமா… ஆதீரநந்தனுக்கு உதவி வேணுமாம்.. கூப்பிட்டாரு.. இதோ வர்றேன்.…” என்றவாறு தன் மனைவிக்குப் பின்னால் விழுந்தடித்துக்கொண்டு ஓட, அதைக் கண்ட ஆதீரநந்தன், " என்ன ப்ரோ இவவளவு தானா …" என்று கேட்டவாறு மெல்லியதாக நகைத்தான். அவனருகில் நின்று நீரை சேகரிக்க உதவிக் கொண்டிருந்த சாகரி,
“என்னங்க நீங்க சிரிக்கிறீங்க… ஜனனி பயந்தப்போ நா எதுவும் சொல்லல… ஆனா இப்போ பயமா இருக்கு…. நாம எல்லாரும் இந்த தீவு விட்டு தப்பி உயிரோட போக முடியுமா..” என்று பயத்துடன் கேட்ட தன் இனியவளை ஆதூரத்துடன் குனிந்து பார்த்தவன்
“நிச்சயமாடா.. இந்த சூழல் நமக்கு புதிது தான். ஆனா குலையாத நம்பிக்கை இருந்தாலே போதும். கூடவே நல்லதையே நினைப்போம்… அதுதான் பாஸிடிவ் எனர்ஜி…அது இருந்தாலே போதும் எப்பேர்பட்ட சிக்கல் இருந்தாலும் இலகுவா தப்பிச்சிரலாம்… நம்பிக்கையை மட்டும் விடாதே.” என்றவன், கலங்கிப்போயிருந்தவளை இழுத்துத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான், அவளின் தலை கோதியபடி
“நான் இருக்கேன்ல… எதுவும் தவறா ஆக விடமாட்டேன்.ட்ரஸ்ட் மீ…” என்று அவளுடைய உச்சந்தலையில் முத்தமிட, அவளுடைய முதுகை வருடிய அவனுடைய விரல்களும் அதை உறுதிப் படுத்துவது போல அழுத்தமாக மேலும் கீழும் வருடத் தொடங்கின.
அதே நேரம் ஷாலினி பொறுக்கிய பழங்களை கமீஸ் டாப்பின் முன்புறத்தில் பக்குவமாக சேர்த்து வைத்தவாறு நடந்துகொண்டிருக்க, அவள் வைத்திருந்த பழத்தின் நறுமணம் அங்கிருந்த குரங்கின் கவனத்தைத் திருப்பியது போலும.; எங்கிருந்தோ ஒரு குரங்கு, படு வேகமாக அவளை நோக்கி வந்து அவள் மீது பாய்ந்தது.
சத்தியமாக ஷாலினி இப்படி திடீர் என்று குரங்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தவள், பின் வைத்திருந்த பழங்களை சட்டென்று கைவிட்டவளாய் ,
“தர்ஷன்…” என்கிற அலறலுடன் ஓடத் தொடங்கினாள்.
தன் மனைவியின் அலறல் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்ப, ஒரு குரங்கு, ஷாலினி போட்ட சத்தத்தில் பயந்துபோய் மரத்தைக் கட்டிக்கொண்டு இவனுக்குப் பல்லைக் காட்டியது. உடனே என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தவன், மனைவியின் பின்னால் ஓடத் தொடங்கினான்.
ஷாலினியின் வேகத்திற்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமே பெற்றிருக்கலாம். அவ்வளவு வேகம். எந்தப் பக்கம் போக வேண்டும் உணர்வு இல்லாமல் ஓட, அழளை விஞ்சிய வேகத்தில் ஓடிய தர்ஷன் ஷாலினியைப் பின்னிருந்து இருகைகளைப் பற்ற
முதலில் பயந்து அலறி விட்டாள். திரும்பியவள் தர்ஷனைக் கண்டு, விழிகள் கலங்க, உதடுகள் துடிக்க அவன் மார்பில் விழுந்து,
“கு… கு… குரங்கு… அது… என்னை… என்னை…”
“ரேப் பண்ண வந்துச்சா…» என்றான் தர்ஷன் கிண்டலாய்.
ஆத்திரத்துடன் நிமிர்ந்தவள், “நான் உயிரைக் கையில் பிடிச்சுக் கொண்டு ஓடிவந்திருக்கேன்… உங்களுக்கு கிண்டலா இருக்கா…” என்று அவனின் மார்பில் ஓங்கியடித்து.. மூக்கை உறிஞ்ச, " அம்மாஆஆ.." என்று நெஞ்சைத் தடவிக் கொண்டவன்..
“ஏய்… நீ கத்தின சத்தத்தில அது பாவம்.. பயந்து தலதெறிக்க ஓடி.. மரத்தில உச்சிக்கு ஏறிருச்சு ஷாலூ… கொஞ்சம் திரும்பிப் பார்த்திருந்தாலும் உனக்கு தெரிந்திருக்கும்…” என்றதும்தான், ஓரளவு நிம்மதியாக மூச்சு விட்டாள் ஷாலினி.
ஓடிய தர்ஷனும், ஷாலினியும் வந்துவிடுவார்கள் என்று எண்ணியவர்களாக, மற்றயவர்கள் தங்கள் நடையைக் கட்டத் தொடங்கினர்.
அப்போதுதான், அபிராம் அங்கே சற்று மாறுபட்ட வெண்மை நிறத்தில் நீண்ட பாறை ஒன்றைக் கண்டு வியந்தான்.
“அட… இந்த பாறையைப் பாரு… கிரிஸ்டல் போல ஷைனிங்கா இருக்கே…” என்று வியக்க, வேதியல் துறையில் அனுபவமுள்ள அவனின் துணைவி சுவர்ப்பனா அதனருகே வந்து வருடிப் பார்த்தாள். யோசனையில் புருவம் சுருங்க குனிந்து அந்தப் பாறையை முகர்ந்து பார்த்தாள். அப்படியும் நம்பிக்கை வராதவளாக, கீழே குனிந்து … ஒரு கருங்கல் எடுத்து ஓங்கி அந்தப் பாறையைக் குத்த, அது சிறு துண்டொன்று உடைந்து விழுந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்க்க, அவளுடைய முகம் மலர்ந்து போனது.
அதைத் தூக்கித் தன் பின்னால் நின்றிருந்தவர்களிடம் காட்டி," இது என்ன தெரியுமா? பொட்டாசியம் நைட்ரேட் உப்பு. இது பாறைகளாத்தான் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் சீனர்கள் இந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்திய போது தற்செயலாக நெருப்பில் விழ.. கண்டுபிடிக்கப் பட்டவை தான் பட்டாசுகள்.." என்று குதூகலத்துடன் கூற, அபிராமும் அதை வாங்கி முகர்ந்து பார்த்தான்.
“அட ஆமா… வித்யாசமா வாசம் வருது. ” என்று கூற, அவன் பின்னாலிருந்த ஆர்யன், ஆர்வத்துடன், அந்தக் கட்டியை வாங்கிப் பரிசோதித்து முகர்ந்து பார்த்தான்.
“அமேசிங்…அப்போ அதே யுக்தியைப் யூஸ் பண்ணி நாமும் மூங்கிலில் வெடிகள் செய்தால், பழங்குடியினரை பயமுறுத்தலாம்ல.!" என்று அகிலன் சொல்ல,
"யெஸ்.. பண்ணலாம்." என்று சொன்ன சுவர்ப்பனா, "என் கல்லூரியில் ஒரு ஸ்டூடன்ட் இதனை ப்ராஜெக்டாக செய்யலாமா என்று கேட்டான். அது ஆபத்தானது என்று நான் மறுத்துவிட்டேன். பட் வெடி செய்யனும்னா… காய்ந்த கடினமான மூங்கில்கள், கரித்தூள், திரி போல ஏதாவது வேணும்." என்று கூற,
“எல்லாமே நம்மகிட்ட இருக்கு… திரிக்குத்தான்…” என்று அவன் யோசிக்க,
“நோ வொரிஸ்… என்னுடைய பாவாடை பருத்தியாலானது… அதையே மெல்லியதா வெட்டி திரியாக்கிக்கலாம்… நாம பிடிச்ச மீன்களை சுடும் போது உருகி விழற கொழுப்பை சேகரிச்சு அதில பூசிக்கிட்டோம்னா… அது இலகுவா பத்திக்கும்… கரி ஏற்கெனவே நாம கேம்ப் ஃபயர் எரிச்ச இடத்தில இருக்கு” என்று கூற, அனைவரும் முடிந்தளவு அந்தப் பாறையை உடைத்து எடுத்து பான்ட் பாக்கட்டுகளிலும், பாவாடைகளில் சேகரித்தவாறும் நடையை தொடர்ந்தனர். ஆரியனும் தன் கரத்திலிருந்ததைப் பான்ட் பாக்கெட்டிற்குள் போட்டுவிட்டு நிமிர்ந்தபோதுதான் தர்ஷன், ஷாலினி மற்றும் டேனியல் அங்கில்லாதது உறைத்தது.
எங்கே போயிருப்பார்கள்? அதிர்ந்து போனவனாய்,
“தர்ஷன், ஷாலினி எங்கே… டேனியலையும் காணோம்…” என்று கூற, அப்போதுதான் மற்றவர்களுக்கும் அது உறைத்தது. வெளிச்சம் வேறு குறைவது போலத் தோன்ற.. உடனே அவர்களைத் தேடிக் கண்டு பிடிக்கவேண்டும் என்பது புரிய, ஆர்யன் திரும்பி தன்னோடு வந்தவர்களைப் பார்த்து,
“நீங்க கடற்கரைக்குப் போங்க… நான் வந்திடுறேன்…” என்று கூறியவாறு ஆர்யன் திரும்பினான்,
“எங்கே போறீங்க ஆர்யன்?” என்றான் கிருஷ்ணன்.
“அவங்கள நான் தேடிப் பார்த்துட்டு வர்ரேன்… நீங்க போங்க… என்று கூறியவாறு அவன் முன்னேறத் தொடங்க அதுவரையிருந்த சிறு நிம்மதியைத் தொலைத்தவர்களாய் அனைவரின் முகத்திலும் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது.
“நாங்களும் வர்றோம் ஆர்யா…" என்று அக்கண்யன் மற்றும் ராயர் அவனோடு இணைய முயல உடனே தடுத்தவன்,
“நோ… அது ரிஸ்க்…” என்றவன், ஆதீரநந்தனின் தோளில் கிடந்த மூங்கில் கட்டில் ஒன்றை இழுத்தெடுத்தான். பின் ராயனின் அருகே சென்று அவன் இழுத்து வந்த முற் கிளைகள் ஒன்றை கவனமாக சட்டைத் துணியில் பற்றி எடுக்க, கூரிய முட்கள் அவனுடைய கரத்தை பதம்பார்க்கவே செய்தன. கூடவே சுருக் என்ற வலியையும் கொடுக்கப் பல்லைக் கடித்து அடக்கியவன், அங்கே மரத்தில் படர்ந்திருந்த கொடியை இழுத்தெடுத்து, மூங்கிலில் அந்த முள் செடியை வைத்துச் சுற்றிக் கொடியால் கட்டத் தொடங்கினான். இப்போது திடமான முள் நிறைந்த மூங்கிலாயுதம் தயாரானது.
திருப்தி கொண்டதும் நிமிர்ந்து அங்கே நின்றவர்களைப் பார்த்து, "நீங்க போய், இதோ இப்படி நான் செஞ்சது போல ஆயுதங்களை செஞ்சு வைங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒன்னு இருந்தா நல்லது… அப்புறம் சுவர்ப்பனா சொன்னதுபோல வெடியையும் செய்து வைங்க… நான் போய் தர்ஷன், ஷாலினி, டேனியலை கூட்டிட்டு வர்ரேன்…” என்றவாறு கிளம்ப, வேறு வழியில்லாமல் அனைவரும் அடுத்து நிகழ இருக்கும் பேராபத்துப் பற்றித் தெரியாமல், கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-67#post-249118
வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட 18 ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.