ஈஸ்வர் விஷ்ணுவின் முன் அவனது வர்ணா மா மீதான உரிமையை காட்டுவது சிறுபிள்ளைகள் செயல் போல் இருந்தாலும் அதில் அவனது அன்பும், அக்கறையும், உரிமையுணர்வும் நிறைந்து தெரிகிறது
அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்ட ராணி அம்மாவுக்கு வருத்தம் தானென்றாலும் பேத்தியின் எதிர்காலத்தை முன்னிட்டு அவளிடம் அவள் மனநிலையை அறிந்து கொள்ள பேசுகிறார். அதில் விஷ்ணு மேல் அவள் கொண்ட காதலையும் அதை தனக்காக அவள் விட்டுக்கொடுக்க நினைப்பதையும் எண்ணி வருந்துகிறார். என்னதான் அவள் கண்களை மூடி கொண்டு உணர்வுகளை மறைத்தாலும் அவர் செல்லப் பேத்தியின் மனதை படித்து விட்டார்.
கஜா வை போல் இவள் வாழ்க்கையும் ஆகிவிடுமோ என அச்சம் கொள்கிறார். சின்னவர்கள் மூலம் தங்கள் தோழியை பெரியர்வர்கள் கண்டார்கள் என்றால் வர்ணா தன் பாட்டியின் குணத்தை தன் அய்த்தானிடமும், தன் அத்தையின் குணத்தை வர்ணாவின் மீது விஷ்ணுவும் கண்டு காதல் கொண்டுள்ளனர். இங்கே ஈஸ்வருக்கும் ராணி அம்மாவுக்கும் விஷ்ணுவை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களின் வர்ணாமாவிற்காக யோசிக்க தொடங்கி விட்டார்கள்
அந்த எண்ணம் தான் அவரை ராணி மெஸ்ஸுக்கும் அழைத்து செல்கிறது.கடையை ஆராய்ந்தவர் விஷ்ணுக்கு மனதினில் ஒரு சபாஷ் சொல்லிவிட்டார்
இருவருக்குமே பேசுவதில் தயக்கம் தான். பொதுவான விஷயத்தை விஷ்ணு ஆரம்பித்தாலும், ராணி அம்மாள் அதற்கும் அவனுக்கு வேண்டிய அறிவுரை வழங்கிவிட்டு நேரிடையாக பேச தயாராகி விட்டார்.
விஷ்ணு அவரை ஒருமையில் அழைக்க சொன்ன போதும் ராணி அம்மாள் மரியாதையுடனே தான் அழைக்கிறார். இந்த இடத்தை சரியாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்
விஷ்ணு வர்ணாவை குறித்து அவரிடம் புகார் வாசிப்பது போல் அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டுவதும், அதற்கு அவர் வாழ்க்கை பாடத்தை கற்று தருவது போல் பதிலளிப்பது எல்லாம்
'
அவளுக்கே புரியல உங்களுக்கு மட்டும் எப்படி புரியும் ' என அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டிவிட்டான். அந்த இரு பத்திகளிலும் அவன் மனகாயங்களையும், அதற்கு ஆறுதல் தேட கூட ஆளில்லாமல் அவன் தவிப்பதையும் மிக அழகாக உணர்த்திவிட்டடீர்கள்
அப்போது கூட ஈஸ்வருக்கு அவன் வர்ணா மா செய்த காரியத்தை விட இவன் அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிப்பது தான் பிடிக்கவில்லை
என்னவொரு அன்பு அவள் மீது
ராணி அம்மாளோ தனக்கு அவன் சொல்வது புரிந்தாலும் உங்கள் பிரச்சனையை நீங்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென தெளிவாக உறைத்துவிட்டு, வேந்தனை தன்னை வந்து பார்க்க சொல்லுமாறு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்.
விஷ்ணுவின் புலம்பல் அப்போதும் நின்ற பாடில்லை அதற்கும் அவர் சரியான விடையை சொல்லிவிட்டு தான் செல்கிறார்
கடையை விட்டு அவர் கிளம்பும் சமயம் தன் அத்தையின் கடைசி ஆசையை அவன் கூறும்போது, அவர் அதை மறுத்து, அதற்கு தக்க காரணம் கூறுவது
கஜாவை பார்க்க வரமால் போனதற்கான அவரது விளக்கம், பின்
"என்னைக்காவது மனசார உங்களோட ஒட்ட முடியும்னு எனக்கு தோணுச்சுனா கண்டிப்பா இந்த ஆசையை நிறைவேத்துவேன், கஜாக்காக இல்லை உங்களுக்காக " - ராணி அம்மாள் தன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தான் ராணி என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறார்
வேந்தன் இவர்களை சந்திக்க வந்த பின் கல்யாண வேலையெல்லாம் விரைவாக நடக்கிறது. தேவகிக்கு மகள் வாழ்வு மலர போவதை நினைத்து மகிழ்ச்சி. அவர்கள் சென்றவுடன் ராணி அம்மாவின் மடியில் வர்ணா புதைந்து கொள்வதும், அவர் அவளை அணைத்து முத்தமிடுவதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது
பேச்சற்ற மௌனம், வார்த்தையில் அடங்கா நன்றிக்கடன், மனம் உரைக்கும் கண்ணீர், ஆறுதல் சொல்லும் தழுவல், இந்த நொடி பேரின்பம் என்று நிமிடங்கள் வார்த்தைகள் தேவையில்லா புரிதலின் உச்சமாக கழிய
தவித்திடும் நொடிகளிடம் சொல்லிவிடு
நான் இனி உனதென !
தகித்திடும் இளமையிடம் சொல்லிவிடு
நீ இனி எனதென !
ஏக்கங்கள் ஏகாந்தமாக
முழுதாய் நான் உன்னில் சேர, காதல்
பித்தத்தின் மோட்சத்தில் வாழ்ந்திடுவோம் ஒரு பெருவாழ்வு !
தன் ஆயாவின் சம்மதம் கிடைத்தவுடன் தான் தன் அய்த்தானை காண வந்திருக்கிறாள். அவள் வரவு அவன் கோவத்தை போக்குமா என பார்க்கலாம்.
மிக அருமையான பதிவு சிஸ். எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும். அவ்வளவு அற்புதமாக கொடுத்திருக்கீங்க, எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத போதும் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். மொத்தத்தில் வாவ் சொல்ல வைக்கும் பதிவு