அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
நேர்மையின் திருவுரு அவள்
மனத்தின் உறுதியில்
காதலின் வாய்மையை
காப்பாற்ற கரம் பிடித்தாள்!
கைகொண்ட மன்னவனின்
நைத்துருகும் மனம் கண்டு
கசிந்துருகும் காதலால்
கரை சேர்க்க கரம் பிடித்தாள்!
துரோகத்தால் துவண்டவனை
துரத்தும் துயரம் கண்டு
தூய்மையான தாய்மையால்
துயர் தீர்க்க கரம் பிடித்தாள்!
கரம் பிடித்த பெண்மையின்
நேர் கொண்ட பார்வையில்
நெகிழ்ந்து நிற்கும் மன்னவனே!
களங்கப்பட்டது உடலென்றால்
களங்கமில்லா மன வீட்டை
மங்கைக்குத் தரலாமே!
காலம் செய்த கோலத்தில்
வழி மாறிய நெஞ்சங்கள்
தடம் தேடிய தஞ்சங்கள்
உலகத்தின் பார்வையில்
ஒவ்வாத ஒன்றென்றாால்...
நவீன கண்ணகியாய்
நடமாடும் சதியவளும்
பதியவன் தடம் மாற
விதியாகிப் போனாளோ...!
உலகம் செல்லும் பாதையில்
காசும் பணமும்
பகட்டும் மிடுக்கும்
தலை நிமிரும் நேரம்
அன்பும் பண்பும்
கருணையும் கனிவும்
கடனாய்த்தான் சேரும்!
வாழ்க்கையை சிலை வடிக்க
சிற்பியவன் உளி எடுத்தான்!
மனிதத்தை சிலை வடிக்க
எழுத்துச் சிற்பி எழுந்து வந்தால்,
வார்த்தைகள் உளியாகி
வடிக்குமோ உயிர்ச்சிலையே!
நொந்து, நைந்து, வெந்து போன நெஞ்சத்தில்
காதல் ஒன்றே மருந்தென்றால்...
கடைத்தேறக் காதலையே
கைகொண்டால் பிழையாமோ...?
நெஞ்சில் பொங்கும் அலையில்
கண்கள் பொழியும் நிலையில்
அமரஞ்சலியின் அதிர்வலைகள்
அமரக்கவி பாடிடுதே!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி