All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் - கதைத் திரி

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#8
"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -5

நேரம் காலை 11 மணி . வேதாந்த சுவாமிகளின் அன்பாலயத்துக்குள் , போலீஸ் ஜீப் நுழைந்திருந்தது .

நாலாப்புறமும் மரங்களடர்ந்து , பறவைகள் சூழ , ஒரு எழில்மிகு பூங்காவாகக் காட்சியளித்தது அன்பாலயம் . அன்பாலய பாதுகாவலர்கள் , போலீஸ் வாகனத்தைக் கண்டதும் , வணக்கத்துடன் , வலது புறமாக கையசைத்து , போர்டிகோவுக்கு வழி காட்டினர் . போர்டிகோவில் வண்டியை நிறுத்தி விட்டு ,இருவரும் வெளியே நடந்தார்கள் .

ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு , அன்பாலயத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டிருந்தது . ஓய்வறைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமிருந்தது . நன்றாக வழித்து எடுக்கப்பட்ட தலையுடன் கூடிய அன்பாலய நிர்வாகிகள் , அங்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தனர் .


இன்ஸ்பெக்டர் ரவி அன்பாலாயத்தின் ஒவ்வொரு அசைவையும் , கண்காணித்துக் கொண்டே வந்தார் .

அன்பாலய நிர்வாகி ஒருவர் , இவர்கள் இருவரையும் பார்த்து , சார் ! நீங்க யாரப் பார்க்கணும் என்றார் ..

ஏட்டு கந்தசாமி : நாங்க வேதாந்த சுவாமிகளப் பாக்கணும் ...

அன்பாலய நிர்வாகி : அதோ அந்த கலையரங்கத்தில் தான் , சுவாமிகள் பிரசங்கத்தில் இருக்கிறார் .. இன்னும் 1௦ நிமிஷத்துல பிரசங்கத்த முடிச்சுடுவார் . நீங்க உள்ள போய் உட்காருங்க .. நான் சுவாமிகள் கிட்ட விசயத்த சொல்றேன் .. என்றார்

இருவரும் நடந்து உள்ளே சென்றார்கள் . துளசிதாசர் கலையரங்கம் என்று பெயரிடப்பட்டிருந்த , அந்த மண்டபத்துக்குள் நுழைந்திருந்தார்கள் .

மனித வாழ்க்கையின் , உன்னதமான கருத்துக்கள், அந்த மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தன . அதன் உட்பக்க சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் , அவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது .

அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை . நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு , அழகாய் இருக்கிறது ... “ .

அதைப் படித்துப் பார்த்துவிட்டு , இருவரும் நடந்தார்கள் .

கொஞ்ச தூரம் உள்ளே நடந்ததும் , ஆழ்ந்த நிசப்தத்துக்கு நடுவே , வேதாந்த சுவாமிகள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் . நம்பிக்கை தரக்கூடிய ஒரு குரலால் , அந்த கலையரங்கத்தில் இருந்தவர்களைத் தன் வசப்படுத்தியிருந்தார் சுவாமிகள் .

மிகுந்த உற்சாகத்துடன் , பேசிக் கொண்டிருந்த அவர் ,

ஜனனம் , மரணம் இந்த இரண்டுமே மனித வாழ்க்கையில் , மறுக்க முடியாத இரு தருணங்களாகும் . இந்த பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் , மரணம் ஒரு நாள் சம்பவிக்கத்தான் போகின்றது . அந்த மரணத்திற்கான யாத்திரைதான் , மனிதனின் இறுதியாத்திரை . மரணத்தினால் , சில பாவங்கள் தீரும் . மரணத்தினால் , சில சாபங்கள் தீரும் . ஒரு உயிர் , இந்த பூமியில் ஜெனித்த உடனேயே , அதனுடைய இறுதியாத்திரைக்காண கடிகார முள் ஓட ஆரம்பித்துவிடுகின்றது . எந்த நேரத்திலும் , அந்த கடிகார முள்ளின் ஓட்டம் நின்று விடலாம் . எனவே நாம் , நம்முடையஇறுதியாத்திரைக்காகத் எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும் . “ எதற்கும் தயாராயிருங்கள் . உங்களிடம் மலை போன்ற உறுதியிருந்தால் , பாம்பின் விஷம் கூட , உங்கள் முன் சக்தியற்றுப் போய்விடும் . இந்த அளவிலே , இன்றைய பிரசங்கத்தை முடிக்கிறேன் நன்றி வணக்கம் “. என்று பேசி முடித்திருந்தார் . பிரசங்கத்தைக் கேட்ட பக்தர்கள் , புத்துணர்ச்சி பெற்றவர்களாய் , கலைந்து சென்று கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , வேதாந்த சுவாமிகளின் பக்கம் சென்று , வணக்கம் வைத்தனர் . புன்னகையான முகத்துடன் அவர்களை வரவேற்ற சுவாமிகள் , அவர்கள் இருவருக்கும் , எதிரே இருந்த நாற்காலியை , அடையாளம் காட்டினார் . இருவரும் அமர்ந்தவுடன் , ஏட்டு கந்தசாமி பேச ஆரம்பித்தார் .

ஏட்டு கந்தசாமி : சுவாமிஜி ! இவர்தான் நம்ம ஊருக்குப் புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் . அவர் கேஸ் விசயமா , சில சந்தேகங்கள உங்ககிட்ட கேக்கணும்னு நெனைக்கிறார் .

புன்முறுவலுடன் , இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்த, வேதாந்த சுவாமிகள்தயக்கமில்லாம , உங்க கேள்விகளக் கேளுங்க ...” என்றார் .

உடனே இன்ஸ்பெக்டர் ரவி , ஏட்டு கந்தசாமியை திரும்பி ஒரு பார்வை பார்த்தார் . உடனே கந்தசாமி, முகத்தைத் திருப்பிக்கொண்டு , அந்த மண்டபத்தின் கதவுகளுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டார் .

இன்ஸ்பெக்டர் ரவி : மாத்தூரில் நடக்கின்ற சில விசயங்கள் ரொம்ப விசித்திரமா இருக்கு . ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருக்குன்னு , நீங்களே கூட சொல்லிருக்கீங்க .

ஆமாம் ! நான் தான் சொன்னேன் ........”

இன்ஸ்பெக்டர் ரவி : அப்படி அந்த ஊர்ல , என்னதான் நடக்குது ?

சுவாமிகள் : “ ஹ்ம்ம் !!! ............... அந்த ஊர்ல , நிச்சயமா , ஏதோ ஒரு அமானுஷ்யம் இருக்கு .போன மாசம் ..... அந்த ஊருக்கு பிரசங்கத்துக்கு போன அன்னிக்கே , என்னால அத உணர முடிஞ்சது . நானும் , எனக்குத் தெரிந்த பரிகாரங்கள பண்ணிப் பாத்துட்டேன் . இதுவரைக்கும் எந்த பலனும் இல்ல . கடைசியா நம்ம முன்னோர்கள் , எழுதி வச்சிருந்த , சில புத்தகங்கள புரட்டிப் பார்த்தபோது தான் , எனக்கு ஒரு தீர்வு கெடச்சுச்சு ..... அதான் வர்ற பௌர்ணமியன்று , ஒரு அர்த்த சாம யாகம் பண்ணலாம்னு இருக்கிறேன் . அதற்கான முயற்சிகளத்தான் இப்ப பண்ணிட்டு இருக்கிறேன். அதப் பண்ணிட்டன்னா ! என்னால அந்த அமானுஷ்யத்தக் கட்டுப்படுத்த முடியும் . பௌர்ணமி வர்றதுக்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு . அதுவரைக்கும் எல்லாரையும் , கொஞ்ச நாளைக்கு , எச்சரிகையா இருக்க சொல்லிருக்கிறேன் “ .

இன்ஸ்பெக்டர் ரவி : அது அப்படி ! உங்களுக்கு மட்டும் அந்த அமானுஷ்யம் தெரியுது ? ....

வேதாந்த சுவாமிகள் : (.........கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு...........) அது ஒரு உள்ளுணர்வுதான் ...... எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஏற்படுகின்ற ஒரு , சாதாரண உணர்வு தான் அது .

(..........மெல்ல சிரித்தார் இன்ஸ்பெக்டர் ரவி..........)

இன்ஸ்பெக்டர் ரவி : “ அப்ப குமார சாமியக் கொன்னது அந்த அமானுஷ்ய ஆவி தான்னு சொல்றீங்க . ”

வேதாந்த சுவாமிகள் : இருக்கலாம் ........ இல்லாமலும் இருக்கலாம் . இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம் ..... இன்னும் என்னோட வார்த்தைகள்ல , உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னு நெனைக்கிறேன் .

இன்ஸ்பெக்டர் ரவி : இல்ல சுவாமிஜி ! எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல ... இந்த உலகத்துல இருக்கிற எல்லாவற்றுக்கும் , ஒரு அறிவியல் பூர்வமான சிந்தனை இருக்கும்னு நெனைக்கிறவன் நான் . கடவுள் இல்லைன்னு சொன்ன , ஈ.வெ.ரா.பெரியார நாம நாத்திகன்னு சொன்னோம் . ஆனா .......... இந்த உலகத்துல , கடவுளே இல்லைன்னு ஒரு அறிவியல் விஞ்ஞானி ஆதாரத்தோடு சொல்லிருக்காரு ................. அவர் பேரு , ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் !!! . அது மட்டுமில்லாம , நம்முடைய மரணத்துக்கப்பால் , எதுவுமே இல்லை .... சொர்க்கம் , நரகம்ன்னுசொல்றதெல்லாம் சும்மா ஒரு கட்டுக்கதைன்னு ,அவருடைய ஆய்வுல சொல்றாரு ................ கடவுள் இந்த உலகத்த படைக்கல . BIG BANG THEORY ((பெரு வெடிப்புக் கொள்கை)) மூலமாத் தான் , இந்த உலகம் உருவானதுன்னு இப்ப , அறிவியல் கண்டுபிடிச்சிருக்கு . இதயெல்லாம் பாக்கும்போது, எனக்கு மாத்தூர்ல நடக்கின்ற சம்பவங்கள் வெறும் வேடிக்கையாய்த்தான் தெரியுது .. இப்படி உலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கிறது . ஆனா இன்னும் நாம , ஆவி , அமானுஷ்யம்ன்னு சொல்லிட்டு இருக்கோம் .

(....சிறிது நேர மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தார் வேதாந்த சுவாமிகள்....)

வேதாந்த சுவாமிகள் : நீங்க சொன்னதெல்லாம் சரி தாங்க சார் ..... இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிக்கின்ற , ஒவ்வொன்றுமே நமக்கு ஆச்சரியமாத்தான் தெரியும் ..... BIG BANG THEORYப் படி தான் இந்த உலகம் உருவானதுங்கற கூற்று , பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று .... அதை நான் மறுக்கவில்லை . ஆனா , நம்ம பண்டைய கால , வேதங்களில் , இந்த உலகம் எப்படி உருவானதுங்கறதப் பத்தின குறிப்புகள் இருக்கின்றது . BIG BANG THEORYயின் பல கோட்பாடுகள் , வேதங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களோடு ஒத்துப் போகின்றது . நீங்க சொல்றது வெறும் , ஒரு உலகத்தைப் பற்றி தான் , ஆனா வேதங்கள்ல , இதே போல பல பிரபஞ்சங்கள் இருந்திருக்கின்னு சொல்லப்பட்டிருகின்றது .....

இவை எல்லாவற்றையும் விட , இன்று , அதி நவீன கருவிகளுடன் , விண்வெளிக்குச் சென்று , அங்கு இருக்கின்ற கிரகங்களைப் பற்றி , அறிவியலாளர்கள் ஆராயச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் ....... ஆனால் அன்று,,,,,,,,,,, எந்த வகையான அறிவியல் சாதனங்களுமே இல்லாத அந்தக் காலத்திலயே , கோள்களைப் பற்றித் துல்லியமாகக் கணித்த , ஆர்யப்பட்டாவின் வானவியல் சாஸ்திரம் ஒரு மிகப்பெரும் ஆச்சர்யம். இதுமாதிரி இன்னும் எத்தனையோ இருக்கின்றது. என்றைக்குமே ஆன்மீகமும் , அமானுஷ்யமும் அறிவியலுக்கு அப்பாற்பட்டதுங்கறத விசயத்த மொதல்ல நீங்க புரிஞ்சுக்கணும் .

பதில் பேச மனமில்லாமல் நின்ற இன்ஸ்பெக்டர் ரவி ,

சுவாமிஜி ! உங்ககிட்ட பேசினதுல ரொம்ப மகிழ்ச்சி. நான் கெளம்புறேன் . வேறு ஏதாவதுன்னா நான் உங்கள CONTACT பண்றேன் . THANK YOU சுவாமிஜி .

மெல்ல சிரித்த சுவாமிகள் ,

தம்பி ! எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ! ஏன்னா ! இது வெறும் சாதாரண விஷயமல்ல “ .

இன்ஸ்பெக்டர் ரவி : அது என்னவோ சுவாமிஜி ! நீங்க சொன்ன இதே பதிலத்தான் மாத்தூர் கிராமத் தலைவர் தவபுண்ணியமும் சொன்னார் . ஒரு கிராமத்தலைவரே இப்படி பயந்திட்டு இருந்தா , அப்புறம் ஊர் மக்கள் எப்படி பயப்படாம இருப்பாங்க .

சற்றே முகம் மாறிய வேதாந்த சுவாமிகள் , சற்று இறுக்கமான தொனியுடன் ,

யாரு ! அந்த தவபுண்ணியம் பயப்பட்றான்னா……..சொல்றீங்க . கண்டிப்பா இருக்காது ..... ஏன்னா ! காசு மேல அதிகமா ஆசை வச்சுருக்கிற எவனுக்கும் , பயம்ங்கற ஒன்னு அறவே இருக்காது.

வேதாந்த சுவாமிகளின் முகமாற்றத்தை ,அடையாளம் கண்ட இன்ஸ்பெக்டர் ரவி , மேற்கொண்டு விசாரிக்கலானார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஏன் சுவாமிஜி ? அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா ?

சுவாமிகள் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ..... அன்னதானம் , மருத்துவ உதவிகள்ன்னு ,இன்னும் எத்தனையோ உதவிகள , நம்ம அன்பாலயத்தின் மூலமா , அந்த மாத்தூர் கிராம மக்களுக்கு , பண்ணலாம்னு நெனச்சோம் . ஆனா அந்த தவபுண்ணியம்தான் அதுக்குத் தடையாய் இருக்கிறார் . இன்னும் ரெண்டு மாசத்துல , உள்ளாட்சித் தேர்தல் வேற வர்றதால , புது ஆளுங்கள யாரையும் , எதையும் பண்ண விடறதில்லை . பாவம் , ஒரு வேடிக்கையான மனுஷன் !!! .

இன்ஸ்பெக்டர் ரவி : சரிங்க ! சுவாமிஜி ! நான் ஏதாவதுன்னா ! உங்கள தொடர்பு கொள்றேன் . நான் வர்றேன் என்று நடையைக் கட்டியிருந்தார் .

போலீஸ் ஜீப் அன்பாலயத்திலிருந்து வெளியே கிளம்பியிருந்தது .


தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -6:-

சாயுங்கால நேரம் 6.30 மணி .
இருட்டு மெல்ல மெல்ல , பரவ ஆரம்பித்திருந்தது .


காற்றின் வேகம் சற்று அதிகரித்திருந்தது .

வயலில் இறங்கியிருந்தவர்கள் , அவசர அவசரமாக வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் .

பஞ்சாயத்து அரச மரத்தின் கீழே , மிகப் பெரிய கூட்டம் நின்றிருந்தது . கிராமத் தலைவர் தவபுண்ணியம் எதோ ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார் .

சிவநேசனும் , ராமலிங்கமும் உடன் அமர்ந்திருந்தார்கள் .

வேலைக்காரன் பொன்னையா வெத்தலைப் பொட்டியுடன் , ஒரு ஓரமாக நின்றிருந்தான் .

முகம் முழுவதும் பயத்தால் உறைந்திருந்த ஒரு பெண் , பஞ்சாயத்தில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள் .

அந்த வழியாக வந்துகொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , கூட்டத்தைப் பார்த்ததும் , வண்டியை நிறுத்தி விட்டு , உள்ளே சென்று , நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் .

இவர்கள் இருவரையும் பார்த்த தவபுண்ணியம் , கையால் சைகை காட்டினார் .

அந்த பெண் பேச ஆரம்பித்தாள் .

ஐயா ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் , என்னோட ரெண்டு மாடுகளையும் தொழுவத்துல கட்டிட்டு , வெளிய வரும்போது , எனக்கு முன்னாடி , திடீர்ன்னு எதோ ஒரு உருவம் வந்துட்டு போன மாதிரி இருந்துச்சு . அது ரொம்ப பயங்கரமா இருந்துச்சு . அத நெனச்சா இன்னும் பயமாயிருக்குதுங்கய்யா . ஊருக்கு ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகளப் பண்ணுங்கய்யாஎன்று பயந்த படியே சொல்லிக்கொண்டிருந்தாள் அந்தப்பெண் .


இன்ஸ்பெக்டர் ரவி அந்த பெண்ணையே சற்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் .

தவபுண்ணியம் பக்கத்தில் அமர்ந்திருந்த , சிவநேசன் எழுந்து பேச ஆரம்பித்தார் .

சிவநேசன் : “ அதுக்குத்தாம்மா ! இப்ப நம்ம ஊருக்கு புது போலீஸ் அதிகாரிங்க வந்துருக்காங்க . அவங்ககிட்ட நம்ம பிரச்சனையை சொல்லுவோம் . அவுங்க பாத்துக்குவாங்க ! “ என்று இன்ஸ்பெக்டர் ரவியை அடையாளம் காட்டினார் சிவநேசன் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் கூட்டத்தின் நடுவே வந்து நின்று வணக்கம் வைத்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ தூத்தூர் காவல் துறை சார்பில் , உங்கள் எல்லாருக்கும் வணக்கம் ! . “ எந்த நேரத்திலும் , உங்கள் கிராமத்துக்கு முழு பாதுகாப்பு கொடுக்க நாங்க தயாரா இருக்கிறோம். எங்கள் இரவு நேர பாதுகாப்புப் படை வீரர்கள் ,எப்போதும் ரோந்து பணியில் இருப்பார்கள் . எதுவாக இருந்தாலும் எங்களுக்கு INFORM பண்ணுங்க . அவசர உதவிக்கு உடனே தொடர்புகொள்ள , காவல் துறை உதவி எண் 04329 - 2669082 . நம்பிக்கையோட இருங்க . நாங்க இருக்கோம்என்றார் .

கூட்டம் மெல்ல மெல்ல கலைய ஆரம்பித்திருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கம் வந்த தவபுண்ணியம் ,

தம்பி ! இது தான் இங்க நடக்கிற பிரச்சனை .நாங்க உங்கள முழுமையா நம்புறோம் . நீங்க தான் ஏதாவது பண்ணனும் .” என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! இன்னும் எனக்கு இதுல நம்பிக்கை வர்ல . இருந்தாலும் , இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது . இது சம்பந்தமா எங்க மேலதிகாரிகிட்ட பேசிட்டோம் . எங்களோட நடவடிக்கைகள மேலும் துரிதப்படுத்தப் போறோம் . ஊர் முழுவதையும் எங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரப்போறோம் . இரவு முழுவதும் எங்க படை வீரர்கள் ரோந்து பணியில் சுத்திட்டு இருப்பாங்க . என்ன அசம்பாவிதம் நடந்தாலும் , உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிரும் . நான் இந்த ஊருக்கு வந்த மொதல் நாளே , வேளாண் ஆசிரியர் குமாரசாமி பத்தின சில தகவல்கள சேகரிச்சுட்டேன் . அவரோட பிரேத பரிசோதனை ரிப்போர்ல எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு சார்...... ஏன்னா ! குமாரசாமி பேயடிச்சு செத்துப் போயிட்டதா நாம நெனச்சுகிட்டு இருக்கோம் . ஆனா ! அவரோட பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ல, அவரோட இதயத்துல ஏற்பட்ட ஏதோ ஒரு அழுத்தத்தினால , இதய வால்வுகள் சிதைந்துபோயிருக்குன்னு குறிப்பிடப்பட்டுள்ளது . எனக்கு சந்தேகமே அதுல தான் .

திடுக்கிட்டுப் போயிருந்தனர் தவபுண்ணியமும் , அவரோட சகாக்களும் .

ராமலிங்கம் : அதுல என்ன சந்தேகம் ? . குமாரசாமி வயசான ஆள் . அவருக்கு வயசு 65 இருக்கும் . வயசானாவே ! நம்ம உடம்புல ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் . சாதாரண விஷயம் தானே இது .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! நானும் அப்படிதான் நெனச்சேன் . ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மத்திய அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பு எடுத்திருக்கிறாங்க . அதாவது கிராமத்துல வாழ்றவங்களோட உடல் நிலையையும் , நகரத்துல வாழ்றவங்களோட உடல் நிலை பற்றியும் ஒரு சர்வே எடுத்திருக்கிறாங்க . அதுல நம்ம குமாரசாமியும் ஒருத்தர் . நம்ம குமாரசாமியோட உடல் நிலைய சோதிச்சு பார்த்த , அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் . காரணம் அந்த 6௦ வயசிலும் , அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இருந்திருந்தது . கிட்டத்தட்ட ஒரு 25 வயது இளைஞனின் ரத்த ஓட்டம் அவருக்கு இருந்திருக்கிறது . இதயம் சீராக இயங்கியிருந்தது. இதய வால்வுகள் சீராக இருந்திருக்கின்றது .இதுக்கான ரிப்போர்ட் என்கிட்ட இருக்கு . குமாரசாமியிடம் அவர்கள் இது பற்றி கேட்ட பொழுது , அவர் சொல்லியிருக்கிறார் .

நான் வெறும் விவசாயப் பொருட்களையே உணவாக உட்கொள்கிறேன் . தினமும் வயல் வேளைகளில் ஈடுபடுகிறேன் . ஓய்வு என்பது எனக்கு அறவேயில்லைன்னு அவர் சொல்லிருக்கிறார் . “ SO , கண்டிப்பா , இவ்வளவு சீக்கிரம் , அவருடைய இதய வால்வுகள் பழுதடைய வாய்ப்பே இல்ல . இது தான் என்னை இந்த கேஸ்ல மேலும் , மேலும் , விசாரணை பண்ண , எனக்கு உத்வேகம் கொடுக்கிறதுஎன்று முடித்தார் .

தவபுண்ணியத்தின் முகத்தில் , அதிர்ச்சி தாண்டவமாடியிருந்தது . தூக்கி வாரிப் போட்டிருந்தது சிவனேசனுக்கும் , ராமலிங்கத்துக்கும் .

சிவநேசன் : ஓகே ! ரவி உங்க இன்வெஸ்டிகேஷன ஆரம்பீங்க . எப்படியோ இந்த பிரச்சனை தீர்ந்தா போதும் என்று மழுப்பினார் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவர்களிடமிருந்து விடைபெற்று போலீஸ் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டிருந்தனர் .

தவபுண்ணியத்தின் முகம் இருண்டிருந்தது . அவரது முகத்தைப் பார்த்த சிவநேசன் சற்று ஆறுதலான வார்த்தைகளை பேசினார் .

சிவநேசன் : நீங்க கவலைப் படாதீங்க தலைவரே ! இன்னிக்கு ராத்திரி அவன எப்படி அலற விடப்போறோம்னு பாருங்க தலைவரே !.

தவபுண்ணியம் : அவன் கண்டிப்பா பயபட்ற ஆளே இல்ல . எனக்கு என்னவோ பயமாயிருக்குது. நம்ம மேல அவனுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வரக்கூடாது . ஆனா அவன ஏதாவது பண்ணியாகனும் . கொஞ்சம் பொறுமையா இருங்க . நாளைக்கு, அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க கூட ( NEXTGEN FRETILIZERS LTD (உரம் தயாரிப்பு நிறுவனம்) ) மீட்டிங்க முடிச்சிட்டு காச வாங்குறவரைக்கும் கொஞ்சம் அவசரப் படாதீங்க .

ராமலிங்கம் : தலைவரே ! நீங்க தைரியமா போங்க . நாங்க பாத்துக்கறோம் .

இருண்ட மனதோடு நடையைக் கட்டியிருந்தார் தவபுண்ணியம் . சிவநேசனும் , ராமலிங்கமும் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள்.


(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -7:-

நேரம் இரவு 7:30 மணி . போலீஸ் ஜீப் சரியாக ,தூத்தூர் காவல் நிலையத்தை அடைந்திருந்தது . இருவரும் இறங்கி உள்ளே நடந்திருந்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ கந்தசாமி ! பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்திற்கு CALL பண்ணுங்க . அவர்கிட்ட இந்த கேஸ் விசயமா சில சந்தேகங்கள கேக்க வேண்டியிருக்கு “ ... என்றார் .

எஸ் சார் ! என்றவர் மேசையில் இருந்த தொலைபேசியில் எண்களைத் தட்டினார் . “ இந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதுஎன்று மறுமுனையில் பதிவு செய்யப் பட்ட பெண்ணின் குரல் பேசியது .

ஏட்டு கந்தசாமி : சார் ! போன் சுவிட்ச் ஆப் சார் !

இன்ஸ்பெக்டர் ரவி : (.....சிறிது நேரம் யோசித்துவிட்டு......) ........... ஹ்ம்ம் ! ஓகே ! விடுங்க நாளைக்கு பாத்துக்கலாம் .... அப்புறம் நம்ம குமாரசாமியோட போன் நம்பர் குறித்த தகவல்கள் கேட்ருந்தேனே ? என்னாச்சு ???

ஏட்டு கந்தசாமி : சார் ! அவர் இதுவரைக்கும் பேசின , எல்லா நம்பர்சையும் TRACE பண்ணியாச்சு. இந்தாங்க சார் அதோட DETAILS .

அதைப் புரட்டிப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , சில நம்பர்களை மட்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தார் .

சரியாக எட்டு மணியளவில் , இரவு நேர சிறப்பு ரோந்து படையினர் 30 பேர், தூத்தூர் காவல் நிலையத்துக்கு வெளியே சல்யூட்டுடன் நின்றிருந்தனர் . அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவி , அவர்கள் முன்னிலையில் சத்தமான தொனியில் பேசலானார் .

HELLO GUYS ! GOOD EVENING ஒரு கேஸ் விசயமா ,மாத்தூர் கிராமத்துக்கு , இரவு நேரங்கள்ல நம்முடைய பாதுகாப்பு தேவைப்படுது . அதனாலதான் மேலிடத்துல , உத்தரவு வாங்கி , உங்க 30 பேர SELECT பண்ணிருக்கேன் . SO ,மாத்தூர்ல , எந்த அசம்பாவிதமும் நடக்காம பாத்துக்க வேண்டிய பொறுப்பு நம்மளோடது . அங்க பேய் நடமாட்டம் இருக்கிறதா எல்லாரும் பயபட்றாங்க. அப்படி எதுவும் அங்க இல்லன்னு நிரூபிக்கத் தான் நான் உங்கள அங்க அனுப்புறேன் . வரப்போகிற ரெண்டு வாரம் , நாம அங்க பாதுகாப்பு குடுக்கப் போறோம் . நாம குடுக்கப் போற பாதுகாப்புல தான் , அவங்களோட பயத்தை போக்க முடியும் . ஒருவேளை , சந்தேகத்திற்கிடமான எதாயவது நீங்க பாத்தீங்கன்னா ! உடனே கன்ட்ரோல் ரூம்க்கு தகவல் குடுத்துருங்க . “ YOU CAN CALL ME ANYTIME . I AM REACHABLE AT ANYTIME . BE ALERT AND GO AHEAD ! “ என்று பேசி முடித்திருந்தார் .



ரோந்து படையினரின் வாகனம் , மாத்தூர் கிராமத்தை நோக்கி முன்னேறியிருந்தது .


இன்ஸ்பெக்டர் ரவியும் , கந்தசாமியும் இரு சக்கர வாகனத்தில் , பின் தொடர்ந்திருந்தனர் .

வழி நெடுகிலும் ஒரே இருட்டு .

சாலையோர மின் கம்பங்களில் வெளிச்சம் , வந்து வந்து போய்க் கொண்டிருந்தது .

சற்று நிதானமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி .

கொஞ்ச நேரத்தில் , மாத்தூர் கிராமத்தில் , இன்ஸ்பெக்டர் ரவிக்காகப் பார்த்து வைக்கப்பட்டிருந்த வீடு வந்திருந்தது .

இன்ஸ்பெக்டர் ரவியின் கையில் , வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு , கிளம்ப தயாராயிருந்தார் ஏட்டு கந்தசாமி .

வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு ,

வீடு அருமையாக இருக்குதுய்யா ! . “ ஹ்ம்ம் !!! ஓகே ! கந்தசாமி .... நீங்க கெளம்பலாம் . BUT நாளைக்கு சீக்கிரம் வந்துருங்க .. நாம இன்வெஸ்டிகேஷனுக்கு போகனும் . “ .. என்றார் ரவி .



மெல்ல தலையை ஆட்டிக்கொண்டே புறப்பட்டிருந்தார் கந்தசாமி ............

ரவி சாப்பிட்டு முடிப்பதற்குள் , கிட்டத்தட்ட மணி இரவு பத்தைக் கடந்திருந்தது .


மெத்தையில் படுத்துக்கொண்டே , பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின்நிதர்சனத்தின் பக்கம் நில் ! ” என்ற நாவலைப் புரட்டிக்கொண்டிருந்தார் .

பாதிப் பக்கங்களைப் படித்திருப்பார் .

திடீரென்று ,

அந்த அறையில் இருந்த விளக்கின் வெளிச்சம் , மங்கி மங்கி எரிந்து கொண்டிருந்தது ...........

அதைப் பார்த்த அவர் , உடனே , தன் தலைக்குப் பக்கத்தில் வைத்திருந்த , ANDROID மொபைல் போனை எடுத்து அதை ON செய்ய முற்பட்டார் .

அது CHARGE செய்யப்படாமல் , SWITCH - OFF ஆகியிருந்தது அப்போதுதான் அவருக்குத் தெரிந்திருந்தது .......

ஒரு கட்டத்தில் விளக்கின் வெளிச்சம் முற்றிலுமாக நின்றிருந்தது ....

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ஊர் முழுவதும் , இருள் சூழ்ந்து ஒரே மயான அமைதி அங்கு நிலவியிருந்தது .

எங்கும் ஒரு துளி கூட வெளிச்சம் இல்லை ........

திடீரென்று கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது .......

திடுக்கிட்டுப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவியின் மனதில் லேசான பதற்றம் தொற்றியிருந்தது ....

மாத்தூர் கிராமவாசிகள் சொன்ன சம்பவங்கள் , அவர் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது .

நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ரவி , சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ,

தீப்பெட்டியையும் , மெழுகுவர்த்தியையும் தேடிக் கொண்டிருந்தார் ....

மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது ....

ஒரு வழியாக தீப்பெட்டியையும் , மெழுகுவர்த்தியையும் கண்டுபிடித்த அவர் ,

தீக்குச்சியைப் பற்ற வைக்கும் போது ,

பதற்றத்தில் மெழுகுவர்த்தியைத் தவற விட்டார் .....

எரிகின்ற தீக்குச்சியின் வெளிச்சத்தில் ,

மெழுகுவர்த்தியைத் தேடிய அவர் , கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார் .....

தூரத்தில் மெழுகுவர்த்தி இருப்பதைப் பார்த்த அவர் ,
அதை எடுக்கும்போது , திடீரென்று தீக்குச்சி அணைந்திருந்தது .


மீண்டும் தீக்குச்சியை உரசிய அடுத்த வினாடி ,
தன் பின்னே யாரோ நிற்பதைப் போன்று உணர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .....


திரும்பலாமா ? வேண்டாமா ? என்ற சிந்தனையில், மெழுகுவர்த்தியில் , ஒளியை ஏற்றியிருந்த அவர் ,

சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , பின்னே திரும்பினார் ....

அங்கு யாரும் இல்லை .

கதவு தட்டப்படும் சப்தம் மேலும் நீடித்துக்கொண்டிருந்தது .

இந்த முறை இன்ஸ்பெக்டர் ரவி பதற்றமில்லாமல் , அலமாரியில் இருந்த , போலீஸ் ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டு,

மெழுகுவர்த்தியை , அணையாமல் பிடித்துக்கொண்டே , கதவுப் பக்கத்தில் வந்த அவர் ,

மெல்ல கதவைத் திறந்து பார்த்தார் .

வெளிச்சம் தெரியும் இடமெங்கும் , வெளியே ஆள் அரவமற்று வெறிச்சோடி இருந்தது .

ஒரே நிசப்தம் .

பயத்தில் உறைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ஒரு கையில் மெழுகுவர்த்தியோடும் , மற்றொரு கையில் ரிவால்வருடனும் வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தார் .

இரவு நேரப் பறவைகளின் சப்தம் , மேலும் பீதியை கிளப்பியிருந்தது .

ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்திருந்தார் .

திடீரென்று ஏதோ ஒரு உருவம் , தூரத்திலிருந்து நகர்ந்து வருவதைப் போல் இருந்தது .

பயத்தில் நெஞ்சைப் பிடித்த படியே , அப்படியே வீட்டுச் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்தார் .

மெழுகுவர்த்தி கீழே உருண்டு எரிந்து கொண்டிருந்தது .

இருண்டு போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

அவரின் இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதை அவரால் உணர முடிந்திருந்தது .

அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே அவருக்குப் புரியவில்லை .

அவரின் சிந்தனையில் பல எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன .

இதுதான் என் வாழ்வின் கடைசி நாளா ?? என்றெல்லாம் எண்ணத் தோன்றியிருந்தது .

கடைசியாக அவர் படித்தநிதர்சனத்தின் பக்கம் நில் ! ‘ என்ற நாவலில் இருந்த ஒரு வாசகம் , அப்போது அவருக்கு நியாபகம் வந்தது .

இளமை உன் தோள்களில் இருக்கும்போதே , எது நிஜம் என்பதைத் தொட்டு விடு ! “ என்கின்ற வாசகம் , திடீரென்று அவருக்கு நியாபகம் வந்தது .


அது ஒரு நேர்மறையான உத்வேகத்தை அவருக்கு அளித்தது .

எதுவாக இருந்தாலும் சரி , என்ன நடந்தாலும் சரி . அது என்ன என்பதை ஒரு கை பார்த்து விடவேண்டும் என்கிற எண்ணத்தோடு ,

சுவற்றைப் பிடித்துக் கொண்டே , கடினப்பட்டு எழுந்தார் ....

ரிவால்வரை முன்னே நீட்டிக் கொண்டே அந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .

மீண்டும் மீண்டும் அந்த வாசகம் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது .

சற்று நேரத்தில் அந்த உருவம் அவர் கண்ணில் இருந்து மறைந்திருந்தது .

நல்ல நேரமாக மின்சாரம் மீண்டும் வந்து வெளிச்சம் பரவியிருந்தது .

காற்று வேகமாக வீச ஆரம்பித்திருந்தது ....

வலதுபுறமாக ஏதோ சலசலப்பு சப்தம் கேட்டது ....

அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவி , அங்கு ஒரு ஒருவம் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டார் .

அதை வேகமாகப் பின் தொடர்ந்திருந்தார் ரவி .

அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த அந்த உருவம் , கண் இமைக்கும் நேரத்தில் , சோளக்காட்டுக்குள் ஓடி மறைந்திருந்தது .

கடைசிவரை பின்தொடர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் ரவி ,

களைப்பு மிகுதியால் , மூச்சு வாங்கினார் .

சற்று நிதானித்த அவர் , தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .

(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -8:-

அடுத்த நாள் காலை 11 மணி . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் படு வேகத்துடன் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் . மாத்தூர் பிரதான சாலையை அடைந்திருந்தார்கள் .

ஏட்டு கந்தசாமி : ” சார் ! இப்ப நாம எங்க போறோம் சார் “ ???

இன்ஸ்பெக்டர் ரவி : “ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் . அங்க போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் கந்தசாமி ? “

ஏட்டு கந்தசாமி : “ சார் ! கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரம் ஆகும் சார்என்று வண்டியை வேகமாக செலுத்தியிருந்தார் ............

ஆனா இப்ப அங்க எதுக்கு சார் நாம போறோம் ? “

இன்ஸ்பெக்டர் ரவி : வேளாண் ஆசிரியர் குமாரசாமியோட CONTACTSல , யார் யார்கிட்டல்லாம் , அவர் அதிகமா பேசிருக்கார்ன்னு பாத்ததுல , பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துல , அவரோடுகூட வேலை பார்த்த , சதாசிவமும் ஒருத்தர் . குமாரசாமி , கடைசியாப் பேசின நம்பரும் , சதாசிவத்தோடதுதான் . SO JUST ஒரு FORMAL ENQUIRY . அவ்ளோதான் .

ஏட்டு கந்தசாமி : என்ன சார் ! ஏதோ ஒரு மாதிரியா இருக்கீங்க .. நேத்து இராத்திரி ஏதாவது நடந்துச்சா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஆமாய்யா ! ராத்திரி கதவு தட்ற சத்தம் கேட்டுச்சு . அதுக்கப்புறம் வெளிய போய் பார்த்தேன் .............................

ஏட்டு கந்தசாமி : (.....அதிர்ந்தவராய்......) என்ன சார் ? என்ன பாத்தீங்க ? எதாவது அமானுஷ்யத்தப் பாத்தீங்களா ?

இன்ஸ்பெக்டர் ரவி : (......சிரித்துக்கொண்டே......) நான் பாத்த உருவம் அமானுஷ்யமா ? இல்ல , அது ஒரு ஆசாமியா ??ன்னு , இன்னும் எனக்குத் தெளிவா தெரியல . ஆனா அதோட அசைவுகள் ஒவ்வொன்னும் இன்னும் , என் கண்ணுக்குள்ளேயே இருக்குது .

ஏட்டு கந்தசாமி : சார் ..........................???????????????? உங்களுக்கு பயமாவேயில்லையா !!!

இன்ஸ்பெக்டர் ரவி : “ பயம் இல்லைன்னு யாருய்யா சொன்னா ?? பயமாத்தான் இருந்துச்சு . போலீஸ் வேலைக்கு வந்ததுக்கப்புறம் , இதயெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்க கூடாதுன்னு , நெனச்சு , அந்த உருவத்தை பின் தொடர்ந்தேன் .ஆனா அது கண் இமைக்கிற நேரத்தில் , ஓடி மறஞ்சிடுச்சு . ஆனா இன்னொரு தடவ , அது என் கண்ணுல பட்டுச்சு..... அவ்ளோதான் “ .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! உண்மையாலுமே நீங்க பெரிய ஆள் தான் சார் . நான் மட்டும் அங்க இருந்திருந்தேனா , பயத்துலயே செத்துருப்பேன் . இந்நேரம் நீங்க எனக்கு மலர்வளையம் வச்சிருக்க வேண்டியிருக்கும்என்றார் சிரித்துக்கொண்டே ..

இன்ஸ்பெக்டர் ரவி : (.....சிரித்தவாறே......) சரி ! கொஞ்சம் வேகமாப் போங்க . நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு .

ஒரு மணிநேரம் , இருபது நிமிடத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை அடைந்திருந்தார்கள் . தஞ்சாவூரில் , வல்லம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்த , பெரியார் நகரில் , கிட்டத்தட்ட 216 ஏக்கர்களில் , பிரம்மாண்டமாக காட்சியளித்தது அந்த பல்கலைக்கழகம் . எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு ,

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் . வல்லம் , தஞ்சாவூர் 613403 என்று செதுக்கப்பட்ட எழுதுக்கள் , அந்த பிரம்மாண்ட பல்கலைக்கழகத்தின் , தலைப் பகுதியை அலங்கரித்திருந்தது . சற்று விலாசமாக இருந்த போர்டிகோவில் ,வண்டியை நிறுத்தி விட்டு , வெளியே நடந்து வந்தார்கள் . உள்ளே , ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே , வரவேற்பறையை அடைந்திருந்தார்கள் . DEPARTMENT OF AGRICULTURE என்று வலதுபுறமாக அம்புக்குறிடப்பட்டிருந்த பதாகையைப் பார்த்தவுடன் , வலதுபுறம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் .

இந்தியாவின் தேசியத் தொழில் விவசாயம் . உழவனின் வியர்வையில் தான் , இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது “ .

இயற்கை உரங்களை நிராகரித்து விடாதீர்கள்

மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தவிருங்கள் . ”

விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு , எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம்முடையது

என்கின்ற வாசங்ககள் வழியெங்கும் நிரம்பியிருந்தது . ஆங்காங்கே அரியவகை மரங்கள் , தங்கள் பெயர்களுடன் கூடிய விளக்கத்தைத் தாங்கிக் கொண்டு , நின்று கொண்டிருந்தன . ஒருவழியாக AGRICULTURE DEPARTMENTக்குள் நுழைந்திருந்தார்கள் . பழங்காலத்தில் இருந்து , இன்று வரை , மனிதன் பயன்படுத்திய விவசாயக் கருவிகள் அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது ........... சதாசிவம் , வேளாண் பேராசிரியர் . என்ற பெயர்பலகை தொங்கப்பட்டிருந்த அறையில் நுழைந்திருந்தார்கள் . உள்ளே பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சதாசிவம் , காக்கிச்சட்டைகளைப் பார்த்ததும் , எழுந்து நின்று வரவேற்றார் . அவர் முகத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியும் , நரைமுடிகளால் மூடப்பட்டிருந்த கபாலமும் , அவரின் 6௦ வயதைத் தெளிவாகக் காட்டியிருந்தது .

பேராசிரியர் சதாசிவம் : “ வணக்கம் சார் ! உக்காருங்க . சொல்லிருந்தீங்கன்னா ! நானே நேர்ல வந்திருப்பேனேஎன்றார் .

ஏட்டு கந்தசாமி : பரவாயில்லைங்க சார் ! . நாங்க குமாரசாமி ஐயாவோட மரணம் பற்றிய விசாரணைக்காக வந்துருக்கறோம் .

இன்ஸ்பெக்டர் ரவி : அது ஒரு திட்டமிட்ட கொலையாகக்கூட இருக்கலாம்ன்னு நாங்க சந்தேகப்பட்றோம் ................. குமாரசாமி ஐயா ,,, அடிக்கடி உங்களோட தான் தொலைபேசியில் பேசியிருக்கிறார் . இறப்பதற்கு முன் , அவர்கூடகடைசியாப் பேசின ஆளும் நீங்கதான் . SO , நீங்க சொல்லப் போற பதில்களில் இருந்துகூட , எங்களுக்கு ஏதாவது துப்பு கெடைக்க வாய்ப்பிருக்கிறது . அவரபத்தி , உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள , நீங்க தைரியமா சொல்லுங்க . அது கூட இந்த கேஸ்ல உபயோகமா இருக்கலாம் .

பேராசிரியர் சதாசிவம் : இன்ஸ்பெக்டர் சார் ! உங்களோட கேள்விகளக் கேளுங்க . எனக்குத் தெரிந்த உண்மைகள , மறைக்காமல் சொல்றேன் .

ஏட்டு கந்தசாமி : அவர் பேயடிச்சு இறந்திட்டதா எல்லாரும் சொல்றாங்களே . அது உண்மையாக இருக்கும்னு நம்புறீங்களா ?

(.....சற்று நேரம் யோசித்த சதாசிவம் , மெல்ல பேச ஆரம்பித்தார் .....)

பேராசிரியர் சதாசிவம் : எனக்கும் அந்த மாதிரி விஷயங்களில் , நம்பிக்கை இல்லை . ஆனா !............ அது , எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு . அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக , ஊர்மக்களே சொல்லும்போது , அதுக்கு நாம எப்படி மறுப்பு சொல்ல முடியும் ? . குமாரசாமி ஐயா ..................................................., விவசாயத்துறைல எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி .......... இந்த பல்கலைக்கழகத்துல , எனக்கு முன்னாடி , வேளாண் பேராசிரியரா இருந்தவர் .விவசாயம் குறித்து பல ஆராய்ச்சிகள் பண்ணியிருக்கிறாரு . பல நூல்கள் எழுதியிருக்கிறார் . கடைசியா அவர் எழுதின நம் பாரத மண்ணின் மகத்துவம் பாரீரோ ! “ என்ற கட்டுரைக்காக , மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்திருக்கின்றது . அவருடைய இழப்பு என்பது , விவசாயத்துறைக்கே ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு .

சதாசிவத்தின் ஒவ்வொரு அசைவையும் , இன்ஸ்பெக்டர் ரவி கூர்ந்து கவனித்தார் . குமாரசாமி ஐயாவின் பிரிவை அவர் முகத்தில் காண முடிந்தது.

இன்ஸ்பெக்டர் ரவி : குமாரசாமி ஐயாவுக்கு , எதிரிகள் யாராச்சும் .............

பேராசிரியர் சதாசிவம் : ஹ்ம்ம் !!! எனக்குத் தெரிந்தவரை அவருக்கு எதிரிகளே கிடையாது . அவர் எதுக்காகவும் , யார்கிட்டயும் கோபப்பட்டு நான் பார்த்ததில்ல ....... ஏன்னா ! அவர் அதிகமா பழக்கம் வச்சிக்கிட்டதெல்லாம் ,ஏழைபாழைங்க கூடத்தான் . அந்தக் காலத்து விவசாய உத்திகள , மீண்டும் , இந்த நவீன காலத்துல பயன்படுத்துவதைத் தான் , அவர் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .

ஏட்டு கந்தசாமி : சார் !.................... அப்படி என்னதான் நீங்களும் , அவரும் போன்ல பேசிக்குவீங்க ????.

பேராசிரியர் சதாசிவம் : (....சிரித்துக்கொண்டே.....) “ வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பத்தி ......... வாழப் போறதே , இன்னும் கொஞ்ச நாள் தானே ! அதுக்குள்ள விவசாயத்தப் பத்தின ஒரு விழிப்புணர்வ , வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் . அதப்பத்தி தான் அவர் சதாகாலமும் சிந்தித்தார் . குறிப்பா ! எங்க வேளாண் பிரிவு இளைஞர்கள் மத்தியில் , எப்படி அதைக் கொண்டுபோய் சேர்க்கணுங்கரதப் பத்தி தான் என்கிட்ட அவர் பேசுவார் .இதுவரைக்கும் அவர் சொன்ன கருத்துக்களையெல்லாம் , தொகுத்து , ஒரு புத்தகமா எழுதியிருந்தேன் . அதை அவர் கையாலயே வெளியிடலாம்ன்னு நெனச்சிருந்தேன் . ஆனா அதுக்குத்தான் வாய்ப்பில்லாமல் போச்சு “. என்றார் வருத்தத்துடன் .......

இன்ஸ்பெக்டர் ரவி : அவர் என்னைக்காவது மன வருத்தப்பட்டு எதாச்சும் பேசிருக்காரா ??? நல்லா யோசிச்சுப் பாருங்க ..

பேராசிரியர் சதாசிவம் : (.....நன்றாக யோசித்துவிட்டு.....) என்கிட்ட இதுவரைக்கும் அப்படி பேசினதில்ல சார் !

கொஞ்ச நேர மௌனம் ........... இன்ஸ்பெக்டர் ரவி ஏமாற்றத்துடன் , ஏட்டு கந்தசாமியைப் பார்க்க , அவரும் போகலாம் என்பதைப் போல தலையை ஆட்டியிருந்தார் . சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்த சதாசிவம் , திடீரென்று அவர்களைப் பார்த்து ,

சார் ஒரு நிமிஷம் . கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் பேசும்போது , ஒரு விஷயத்த என்கிட்ட சொன்னார் ... அது எந்த அளவுக்கு உங்களுக்கு , உபயோகமா இருக்கும்ன்னு தெரியல . இருந்தாலும் சொல்றேன் . “ என்றார் . இன்ஸ்பெக்டர் ரவியும் , கந்தசாமியும் ஆர்வமாய் அவரைப் பார்க்க , சதாசிவம் தொடர்ந்தார் ,

“ NEXTGEN FRETILIZERS LTD என்கிற உரம் தயாரிப்பு நிறுவனம் , கொஞ்ச நாளைக்கு முன்னாடி , அவங்களோட புதியவகை உரங்கள அறிமுகப்படுத்தியிருந்தாங்க . அந்த உரங்களத்தான் இந்த முறை , விவசாயத்துக்கு பயன்படுத்தப் போறதா, நம்ம மாத்தூர் கிராமத்தலைவர்களான தவபுண்ணியம் ஐயாவும் , அவரது சகாக்களும் முடிவு பண்ணியிருந்தாங்க . அப்ப அந்த உரங்கள சோதனை பண்றதுக்காக , நம்ம குமாரசாமி ஐயாவும் உடன் போயிருந்தார் . அதைச் சோதித்துப் பார்த்த குமாரசாமி ஐயா , இந்த ரசாயன உரங்கள் விவசாயத்திற்கு ஏற்றதல்ல . இதைப் பயன்படுத்தினால் நம்முடைய மண் மலடாகிப் போய்விடும் . இந்த செயற்கை உரங்களால் நமக்கு மிகப்பெரிய அபாயம் இருக்கிறது . இதைத் தவிர்த்து விடுங்கள்ன்னு , நம்ம மாத்தூர் கிராமத்தலைவர்கள் கிட்ட சொல்லியிருந்தார் . அவங்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்ன்னு அவர் என்கிட்ட சொல்லியிருந்தார்என்று முடித்தார் சதாசிவம் . இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , சற்றே தெளிவு பிறந்ததை அடுத்து சார் ! நீங்க குடுத்த தகவல்களுக்கு , ரொம்ப நன்றி . குமாரசாமி ஐயாவப் பத்தி நாங்க நெறைய தெரிஞ்சுக்கிட்டோம் . நாங்க வர்றோம் என்று கிளம்பியிருந்தார்கள் .


ஒவ்வொரு பதிவையும் படிப்பதற்கு முன்னால் உங்களின் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். நேர்மறையான / எதிர்மறையான எப்படிப்பட்ட விமர்சனமாக இருந்தாலும் சரி . அதை மறக்காமல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
பூபதி கோவை.


(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -9:-

“ NEXTGEN FERTILIZERS LTD “ - உரம் தயாரிப்பு நிறுவனம் , மாத்தூரின் பிரதான சாலையில் , வடக்கு நோக்கி அமைந்திருந்தது .


நன்றாக திணிக்கப்பட்ட உரமூட்டைகள் , அங்கு மலை போல் குவிக்கப்பட்டிருந்தது .

கட்டுக்கோப்பான உடம்புகளுடன் கூடிய வேலையாட்கள் , அந்த மூட்டைகளை , கனரக வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர் . நன்றாக செதுக்கப்பட்ட உடற்கட்டுகளில் , அவர்களின் கடின உழைப்பின் பயன் தெரிந்தது .

வரவேற்பறையின் உள்ளே அந்த நிறுவனத்தின் பங்குதார்களான பிரனேஷும் , திலீபனும் வெள்ளை நிற ஆடைகளில் ஜொலித்திருந்தார்கள் .

சற்று நேரத்தில் , மிகுந்த இரைச்சலுடன் வந்த , போலீஸ் ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , வந்து இறங்கியிருந்தார்கள் .

இதை சற்றும் எதிர்பாராத ப்ரனேஷும் , திலீபனும் திகைத்து நின்றிருந்தார்கள் .
இனம்புரியாத ஒரு பதற்றம் அவர்களைத் தொற்றியிருந்தது .


சற்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டு , அவர்களை வரவேற்று உட்கார வைத்திருந்தார்கள் .

திலீபன் : “ WELCOME சார் ! IM திலீபன் . and HE IS பிரனேஷ் .“ என்று இருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ WELL MR. திலீபன் ......... WE ARE FROM தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன் . IM இன்ஸ்பெக்டர் ரவி . and HE IS கந்தசாமி . ஒரு சின்ன ENQUIRYக்காக வந்துருக்கோம் “ .

பிரனேஷ் : “ எஸ் சார் ..............! நாங்க முழு ஒத்துழைப்பு கொடுக்க கடமைப் பட்டுருக்கோம் . “ என்றான் புரியாத புதிராக .

ஏட்டு கந்தசாமி : குமாரசாமி ஐயா , மரணம் தொடர்பான விசாரணை தான் இது . அவர் கடைசியா கலந்து கிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சிகள் , மற்றும் அவர் போன இடங்களிலெல்லாம் விசாரணை நடந்துகிட்டு இருக்குது . அது சம்பந்தமான ஒரு FORMAL என்குயரி தான் இது . SO , ஒன்னும் பயப்பட தேவையில்ல “ .

( அதிர்ந்து போயிருந்தார்கள் ப்ரனேஷும் திலீபனும் .... அவர்கள் முகத்தில் கலவரம் வெடித்திருந்தது . ) .

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன MR . பிரனேஷ் ? பேச்சையே காணோம் “.. என்றார் மெல்ல சிரித்தவாறே .

பிரனேஷ் : “ NO ! NO ! , அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க சார் . அவரோட மரணத்த எங்களாலையே நம்ப முடியல . வயசானாவே அப்படிதான் சார் .... குமாரசாமி ஐயாவ , நாங்க கடைசியா எப்ப பாத்தோம்ன்னா....... என்று இழுத்தார் .உடனே பக்கத்தில் இருந்த திலீபன் , நிலைமையைப் புரிந்துகொண்டு , “ சார்ர்ர்ர்ர்ர்ர்…………… ! போன மாசம் , எங்களோட கம்பெனி உரங்கள , கிராமத்து விவசாயத்துக்கு , பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருந்தோம் . அதை சோதனை பண்றதுக்காக , மாத்தூர் கிராமத்துல இருந்து , தவபுண்ணியம் , ராமலிங்கம் , அப்புறம் ...... சிவநேசன் இவங்கெல்லாம் வந்துருந்தாங்க . கூடவே நம்ம குமாரசாமி ஐயாவும் வந்துருந்தாரு . அப்பதான் நாங்க , அவரக் கடைசியாப்பார்த்தோம் . ஆனா .......... நல்லாருந்த மனுஷன் , இவ்வளவு சீக்கிரம் போய்ட்டாரேன்னுதான் வருத்தமா இருக்குது சார் ... , போகிற காலம் வந்துச்சுன்னா போக வேண்டியது தானேஎன்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் ! .... ஓகே ..... அப்புறம் என்னாச்சு ? உர சோதனையெல்லாம் முடிஞ்சுடுச்சா ? “

பிரனேஷ் : “ ஆமா சார் ! சோதனையெல்லாம் முடிஞ்சுடுச்சு . அவங்க எல்லாத்தையும் , தரவா சோதனை பண்ணிட்டு , எங்களோட உரங்கள பயன்படுத்த ஒப்புதல் குடுத்துட்டாங்க . இன்னும் ஒரு வாரத்துல , எங்க கம்பெனியோட உரங்கள் ,பயன்பாட்டுக்கு வந்துரும் “ .

( பிரனேஷின் இந்த பதிலைக் கேட்டதும் , அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . பேராசிரியர் சதாசிவத்தின் கருத்துக்களுக்கு , முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது பிரனேஷின் அந்த பதில் . சற்று சுதாரித்துக்கொண்ட கந்தசாமி , அடுத்த கேள்வியைத் தொடங்கினார் ............. )

ஏட்டு கந்தசாமி : “ நம்ம குமாரசாமி ஐயா..., அதப் பத்தி என்ன சொன்னாரு ?

திலீபன் : (.....பதற்றத்துடன்......) “ எங்க கம்பெனி உரங்கள பயன்படுத்த , அவர்தான் சார் , மொதல்ல ஒப்புதல் குடுத்தாரு ...... ” என்றார் .

குமாரசாமியின் மரணத்தில் இருக்கின்ற மர்மத்தை , இந்த தகவல் மேலும் உறுதிப்படுத்தியிருந்தது .


இவர்களிடத்தில் , ஏதோ ஒரு உண்மை மறைந்திருப்பதை , ஏட்டு கந்தசாமியின் கண்கள் , இன்ஸ்பெக்டர் ரவிக்கு அடையாளம் காட்டியிருந்தது .

அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் , வழக்கமான விசாரணை போல , அவர்களிடம் விசாரித்துவிட்டு வெளியே வந்தனர் .....

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஓகே ! THANK YOU FOR YOUR KIND CO-OPERATION . நாங்க கெளம்புறோம் . என்று வண்டியில் ஏறியிருந்தார்கள் . அவர்கள் போகும் வரை பார்த்திருந்து , நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரனேஷ்ஒரு வழியா அவங்கள சமாளிச்சு அனுப்பிட்டோம் . கொஞ்ச நேரத்துல , கதி கலங்கிடுச்சே !..

திலீபன் : “ எனக்கும் அப்படிதான் இருந்துச்சு . எதுக்கும் , இந்த விசயத்துல நாம கொஞ்ச ஜாக்கிரதையா இருக்கணும் ..... “ என்று சொல்லி முடித்த அடுத்த வினாடி , திலீபனின் செல்போன் திடீரென்று அலறியது . எடுத்துப் பார்த்த அவர் ,ஹலோ ! என்றார் .. மறுமுனையில் , சிவநேசன் பேசினார் .

சிவநேசன் : “ தம்பி ! நான் சிவநேசன் பேசுறேன் ... நாங்க இப்ப அங்கதான் வந்துட்டு இருக்கோம் ..... ரெடியா இருங்க .. இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவோம் . “ என்றவுடன் இணைப்பைத் துண்டித்திருந்தார்....

எரிச்சலுடன் செல்போனை பாக்கெட்டில் வைத்தான் தீலீபன் .

பிரனேஷ் : “ போன்ல யாரு ? “

தீலீபன் : “ மாத்தூர் கிராமத்துக்காரனுங்க .... காசு வாங்கறதுக்குன்னே ! வரிஞ்சுகட்டிட்டு வந்திட்டுருக்கானுங்கஎன்றான் உச்சகட்ட எரிச்சலோடு .

பிரனேஷ் : வரட்டும் ! வரட்டும் ! ................ சரி ! அதெல்லாம் இருக்கட்டும் . எனக்கு ஒரு யோசனை தோணுது .....

திலீபன் : என்ன யோசனை ????

பிரனேஷ் : “ நாம எதுக்குடா காசு குடுக்கணும் ?? . இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , இன்ஸ்பெக்டர் வந்துட்டு போனதைச் சொல்லி , அவங்கள மெரட்டுவோம் . வேறு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா , அவனுங்கள போட்டு குடுத்துருவோம்ன்னு சொல்லி பயமுறுத்துவோம் . நாமளா பாத்து , என்ன குடுக்கறோமோ , அதை வாங்கிட்டு போகட்டும் “ ... நீ என்ன சொல்ற ???

திலீபன் : “ எனக்கென்னமோ ? இது சரியாப்படல .... இருந்தாலும் , நீ சொல்றியேன்னுதான் பாக்குறேன் ” ..

பிரனேஷ் : “ விடுடா ! நான் பாத்துக்கறேன் .....” என்றவன் ,,,,, வேலையாட்கள் பதிவேட்டைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான் .

என்னடா யாரோ ஒருத்தன் , இன்னிக்கு வேலைக்கு வர்ல போல இருக்கு . “

திலீபன் : “ ஆமாண்டா ! அவன் எதோ பேயப் பார்த்து பயந்துருக்கானாம் ... அதுனாலதான் அவன் இன்னிக்கு லீவாம் .....” என்றான் சிரித்துக்கொண்டே .

பிரனேஷ் : “ இந்த மாத்தூர் கிராமத்துக்காரனுங்களுக்கு , வேற வேலையே இல்ல போல . லீவ் எடுத்துக்கறதுக்காக , என்னல்லாம் , சாக்குபோக்கு சொல்றானுங்க பாத்தியா ...“ என்றான் .

சரியாக அரைமணி நேரம் ...


மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியத்தின் , ஸ்கார்பியோ கார் , உள்ளே வந்திருந்தது .

காரிலிருந்து வேலைக்காரன் பொன்னையா , முதல் ஆளாக வெளியே இறங்கினான் . சிவநேசனும் ராமலிங்கமும் பின்னே இறங்க , கடைசியாக இறங்கினார் தவபுண்ணியம் .

வேலைக்காரன் பொன்னையாவைப் பார்த்த அவர் ,

நீ இங்கயே இரு . நாங்க போயிட்டு வந்தர்றோம்என்று அவனை காருக்குப் பக்கத்தில் , நிக்க வைத்துவிட்டு , முன்னேறினார் .


பிரனேஷும் , திலீபனும் , வேண்டா வெறுப்பாக , அவர்களை வரவேற்றிருந்தனர் .

அனைவரும் உள்ளே சென்றவுடன் , அலுவலகக் கதவுகளையும் , ஜன்னலையும் சாத்தியிருந்தார்கள் .

ராமலிங்கம் : “ என்ன பிரனேஷ் ? வெளியே , வேலையெல்லாம் படு பயங்கரமா நடந்துகிட்டு இருக்குது போல “ , என்றார் சிரித்தவாறே .

பிரனேஷ் : “ ஆமாங்கய்யா ! இந்த வாரத்துக்குள்ள , எல்லா வாடிக்கையாளர்களுக்கும் , உரங்கள கொண்டுபோய் சேர்க்கணும் . அதுக்கான ஆயத்த பணிகள் தான் , இப்போ வேகமா போயிட்டு இருக்கு . “

சிவநேசன் : “ அப்ப ! அடுத்த வாரத்துக்குள்ள நம்ம மாத்தூர் கிராமம் முழுவதற்கும் , உங்க உரங்கள தான் உபயோகப்படுத்த போறாங்க . அப்படித்தானே ! இல்லையா ! “

திலீபன் : “ ஆமாம்யா ! “ என்றவன் , உள்ளே சென்று , ஒரு பையை எடுத்து வந்து கொடுத்தான் .

அதை வாங்கிப் பார்த்த ராமலிங்கமும் , சிவநேசனும் , உள்ளே இருந்த பணக்கட்டுகளைப் பார்த்தவுடன் , எண்ண ஆரம்பித்தனர் .


தவபுண்ணியம் எதுவும் பேசாமல் , அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் .

பணத்தை எண்ணிக் கொண்டிருந்த அவர்களின் முகம் , ஒரு கட்டத்தில் , மாறியிருந்தது .

திடீரென்று முகம் சிவந்த ராமலிங்கம் அவர்களைப் பார்த்து ,

தம்பி ! நாங்க காட்டு மிராண்டிங்க தான் . ஆனா ! கணக்கு வழக்கு தெரியாதவங்க இல்ல . பேசுனபடி , 2 லட்சம் இதுல இல்லியே . வெறும் அம்பதாயிரம் தான் இருக்குது “ .. என்றார் கோபத்தோடு .

(.....மெல்ல புன்னகைத்திருந்தார் தவபுண்ணியம்.....)

பிரனேஷ் : எதுவுமே குடுக்க வேண்டாம்னு நெனச்சோம் . ஏதோ பழகுன தோஷத்துக்காக , வேற வழியில்லாம இதை குடுக்கறோம் . மரியாதையா எடுத்துட்டு போயிருங்க .

சிவநேசன் : “ என்ன தம்பி ! பேசறது யார்கிட்டன்னு தெரிஞ்சுதான் பேசுறியா ? . “ எங்ககிட்டயே உங்க வேலையக் காட்டுறீங்களா ! “ .

ராமலிங்கம் : “ அந்த குமாரசாமி போன இடத்துக்கே , நீங்களும் போறீங்களா ................... “

திலீபன் : “ ஐயா !!!!! ஒரு நிமிஷம் WAIT பண்ணுங்க .......... இப்பதான் , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , வந்து , குமாரசாமி கேஸ் சம்பந்தமா , விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க .... நாங்க ஒரு வார்த்த உங்களப் பத்தி சொல்லிருந்தோம்னா , இன்னிக்கு நீங்க மூணு பேரும் , ஜெயில்ல களி தின்னுட்டு , கம்பி எண்ண வேண்டியது தான் “ .

பிரனேஷ் : “ அதனால மரியாதையா , குடுக்கறத வாங்கிட்டு போயிருங்க .. இல்ல , இன்னும் முரண்டு புடிச்சீங்கன்னா , இப்பவே இன்ஸ்பெக்டர் ரவிக்கு கால் பண்ணி , எல்லா விவரத்தையும் , விலாவாரியா சொல்லிருவோம் . அதுக்கப்புறம் உங்க இஷ்டம்என்றான் கேலியாக .

இதயெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தவபுண்ணியம் , திடீரென்று எழுந்து , சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் பார்க்க , அவர்களும் எழுந்து நின்றனர் .


தவபுண்ணியம் தன் தலையை , லேசாக வருடிக்கொண்டே , பிரனேஷையும் ,திலீபனையும் பார்த்து ,,,,,, லேசாக சிரித்து விட்டு ,

தம்பி ! உரம் தயாரிக்கற வேலைய மட்டும் பாருங்க ! ..... இல்ல ,,,,,,, நீங்களே இந்த மண்ணுக்கு உரமாயிரப் போறீங்க !!! . “ என்று எச்சரித்துவிட்டு வெகு வேகமாக வெளியேறினார் . “ .

வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு , காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் பொன்னையா .


வேகமாக சென்ற தவபுண்ணியம் , பொன்னையாவின் காதுகளில் ஏதோ முணுமுணுத்துவிட்டு , அனைவரும் காரில் ஏறிப் புறப்பட்டிருந்தார்கள் .

இதயெல்லாம் ஜன்னலுக்கு வெளியே , நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் ,

அடுத்த பத்தாவது நிமிடத்தில் , இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளுக்கு செல்போன் மூலமாக நடந்த விசயங்களையெல்லாம் , தெரியப்படுத்தியிருந்தார் .

ஒவ்வொரு பதிவையும் படிப்பதற்கு முன்னால் உங்களின் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். நேர்மறையான / எதிர்மறையான எப்படிப்பட்ட விமர்சனமாக இருந்தாலும் சரி . அதை மறக்காமல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
இப்படிக்கு
பூபதி கோவை.


(தொடரும்... )
 
Top