All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் - கதைத் திரி

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
-: "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -12 : -

தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன் , அந்த சாயுங்கால நேரத்திலும் , உச்சகட்ட பரபரப்பில் இருந்தது.
இன்ஸ்பெக்டர் ரவி , நாற்காலியில் சாய்ந்தபடியே , வாயில் சிகரெட் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார் ....


சிறை அறையில் இருந்து , “ அய்யோ !! அம்மா !! ” என்று கத்துகின்ற சத்தம் , தொடர்ந்து வந்து கொண்டிருந்தது .....

எரிந்து கொண்டிருந்த சிகரெட்டின் கடைசித் துண்டை , வீசி எறிந்து விட்டு கோபமாக எழுந்த அவர் , நேராக சிறை அறையை நோக்கி , வேகமாக வேகமாக நடந்தார் .......

உள்ளே , வீங்கிய முகத்துடனும் , உடல் முழுக்க இரத்த காயங்களோடும் , கீழே படுக்க வைக்கப் பட்டிருந்தான் பொன்னையா .....

உடம்பின் பல பகுதிகளில் இருந்து , இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது .

இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்ததும் , ஏட்டு கந்தசாமியும் , மற்ற காவலர்களும் பொன்னையாவை , மேலே எழுப்பி , ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர் ...

ஒரு குண்டூசி விழுந்தாலும் , சப்தம் கேட்கும் அளவுக்கு , அங்கு அமைதி நிலவியிருந்தது .....

பொன்னையாவின் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது ... அங்கிருந்த நிசப்தத்தைக் கலைத்தார் இன்ஸ்பெக்டர் ரவி ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ பொன்னையா ! இப்ப நான் கேக்கிற கேள்விகளுக்கு , உண்மையான பதில , டக்கு டக்குன்னு சொல்லனும் ... இல்ல ,,, விசாரணை முன்பை விட , பயங்கரமா இருக்கும்..... என்ன ?? “ என்றார் .

( சரி என்பதைப் போல தலையை ஆட்டினான் பொன்னையா .....)

பொன்னையாவின் பதில்களை , பதிவு செய்ய , அவன் எதிரே கேமரா ஒன்று வைக்கப்பட்டிருந்தது ..... (... இன்ஸ்பெக்டர் ரவி பேச ஆரம்பித்தார் ...)

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் !!! பொன்னையா ..... அன்னிக்கு ராத்திரி , என்னோட வீட்டுக் கதவத் தொடர்ந்து , தட்டிகிட்டே இருந்தது ... , அப்புறம் என்ன பாத்த உடனே ஓடினது .... எல்லாமே நீதானே ... சொல்லு என்றார் ....

முகத்தில் வடிந்திருந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு , பொன்னையா பேச ஆரம்பித்தான் ...

ஐயா !!! ஆமாங்கய்யா !!! “ நான் தான் ....

இன்ஸ்பெக்டர் ரவி : “ யார் அத பண்ண சொன்னது ????? “

பொன்னைய்யா : “ யாரும் என்ன பண்ண சொல்லல ... நான் தான்யா வேணும்னே பண்ணுனேன் என்றான் ...

கேமராவை சற்று நேரம் , ஆப் செய்து விட்டு , அவன் கன்னத்தில் பளார் , பளார் என்று பலமாக அறைந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .... அவர் அடித்த அடியில் , நிலை குலைந்து போயிருந்த பொன்னையா ,

ஐயா !! அடிக்காதீங்க !!! எல்லா உண்மையும் நானே என் வாயால சொல்லீறேன்ங்கய்யா !!! தயவு செய்து அடிக்காதீங்க !!! “ என்று கதறினான் .

மீண்டும் கேமராவில் , அவனுடைய பேச்சு , பதிவாகிக் கொண்டிருந்தது .

பொன்னையா : “ குமாரசாமி ஐயாவ , கொலை பண்ணது நான் தான் .. ஆனா அதை பண்ண சொன்னது , தவபுண்ணியம் ஐயாவும் , அவரோட நண்பர்களான சிவநேசனும் , ராமலிங்கமும் தான் .... ஆனா அந்தப் பழிய இறந்து போன , அந்த வெண்ணிலாப் பொண்ணு மேல , போட்டுட்டு , ஊர் மக்கள நம்ப வச்சிட்டோம் ....... நான் அன்னிக்கு , உங்க வீட்டுக் , கதவத் தட்டின மாதிரி , எல்லார் வீட்டுக் கதவையும் , இரவு நேரங்கள்ல தட்டுவேன் ... அதை , பேய் அமானுஷ்யம்னு எல்லாரும் நம்பிட்டாங்க ...

( அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் , தெளிவாக அந்த கேமராவில் , பதிவாகிக் கொண்டிருந்தது ... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , அவனுடைய வாயிலிருந்து வரும் , ஒவ்வொரு வார்த்தையையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர் ... அவனை இடைமறித்த கந்தசாமி , )

ஏட்டு கந்தசாமி : “ வேதாந்த சுவாமிகளுக்கும் , உங்களுக்கும் என்ன தொடர்பு ???? ... “

பொன்னையா : “ சார் !!! மொதல்ல இருந்து , வேதாந்த சுவாமிகளுக்கும் , தவபுண்ணியம் ஐயாவுக்கும் , எந்த விஷயத்திலுமே ஒத்து வராது .... ஆனா இந்த விசயத்தில் மட்டும் , அவர் எப்படி ஒத்துப் போனார்ன்னுதான் இன்னும் எனக்கு தெரியலைங்கய்யா !!! ..... ஆனா , இந்த ஆவி , பேய் விசயத்துல , நாங்க சொன்னதைக்காட்டிலும் , வேதாந்த சுவாமிகள் சொன்னதத்தான் மக்கள் அதிகமாக நம்பினாங்க ..... அதை நாங்களும் , எங்களுக்கு , சாதகமாப் பயன்படுத்திகிட்டோம் ... இந்த கேஸ விசாரிக்க வந்த , பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்த , பல வகைல துன்புறுத்தி , இந்த கிராமத்த விட்டே ஓட வச்சிட்டோம் ... அதுக்கப்புறம் தான் நீங்க வந்தீங்க ..... உங்களையும் , இந்த கிராமத்த விட்டே ஓட வைக்கத்தான் , நான் அன்னிக்கு , உங்க வீட்டுக்கு வந்தேன்.. ஆனா நீங்க சுதாரிச்சுட்டீங்க ... ” என்று பேசி முடித்தான் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சரி ! அதெல்லாம் இருக்கட்டும் ..... ஆனா நீ ...... எதுக்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் கொலை பண்ணின ?? அவங்க கூடவே இருந்த நீ , எதுக்கு அவங்கள கொலை செஞ்ச ????? அவங்களுக்கும் உனக்கும் அப்படியென்ன , தனிப்பட்ட பிரச்சனை ??

(.... மௌனமாக இருந்தான் பொன்னையா .....)

ஏட்டு கந்தசாமி : “ எதுக்காக அவங்கள நீ கொலை பண்ணின ? .... நீ கொலை பண்ணதுக்கான ஆதாரங்கள் எங்க கிட்ட இருக்குது .... மரியாதையா உண்மைய சொல்லிடு .... உனக்கு பின்னாடி , யார் யாரெல்லாம் இருக்கா ???? உன்னோட அடுத்த குறி யாரு ???? தவபுண்ணியம் தானே .... சொல்லு !!!...... “ .

பொன்னையா : “ அவங்க , ரெண்டு பேர்த்தையும் , கொலை பண்ண சொன்னதே , தவபுண்ணியம் ஐயா தான் ...... “ என்றான் கோபமாக .

(... அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ...)

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன ??? தவபுண்ணியமா ??????? அவர் எதுக்காக அவருடைய நண்பர்களையே ????? .......... “ என்றார் .

பொன்னையா : “ இதுவரைக்கும் நாங்க பண்ண எல்லாமே சரியாத்தான் நடந்துட்டு வந்துச்சு ... ஆனா நாங்க எதிர்பாராத ஒன்னு , என்னன்னா ??? அது உங்களோட விசாரணை தான் .... நீங்க விசாரிக்கிறதப் பார்த்த , இன்னும் கொஞ்ச நாள்லயே , தவபுண்ணியத்த நெருங்கிருவீங்களோன்னு , பயந்து தான் ... அவர் ஒரு திட்டம் போட்டார் ... அதன்படி தான் , இந்த கேஸ திசை திருப்புவதற்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையுமே , அவர் கொலை பண்ண முடிவெடுத்தார்... அவங்கள கொலை பண்ணிட்டா , இந்த கேஸ் மறுபடியும் , ஆவி , அமானுஷ்யங்கற கோணத்திலேயே , இன்னும் கொஞ்ச நாளைக்கு , இழுத்தடிக்கும் ... அதனால தான் , அவர் இதை பண்ண சொன்னார் ...”

(... இன்ஸ்பெக்டர் ரவி , தன் கன்னத்தில் கை வைத்து , பொன்னையாவையே பார்த்துக் கொண்டிருந்தார் .... அவனிடம் , ஆர்வமாக , அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுகொண்டிருந்தார் கந்தசாமி ...)

ஏட்டு கந்தசாமி : “ SO , ஒரு கொலைய மறைக்கறதுக்காக , நீங்க ரெண்டுபேரும் , அடுத்தடுத்து ரெண்டு கொலை பண்ணீருக்கீங்க ..... நாளைக்கு , உங்க ரெண்டு பேரையும் , உங்க ஊர்க்காரங்க முன்னாடி , அடிக்கிற அடியில ,தவபுண்ணியத்தோடு வாயிலயிருந்தே , எல்லா உண்மையையும் , வெளில கொண்டு வர்றோம் .... “

(... அதை நினைத்து , அதிர்ந்து போன பொன்னையா ... உடனே ...)

பொன்னையா : “ சார் ! சார் ........ ! நான் அவங்கள கொலை பண்ணத்தான் , அங்க போனேன் ... ஆனா அவங்க ரெண்டு பேருமே , என்னைப் பார்த்த உடனே , எதோ ஒரு அதிர்ச்சியிலயே செத்துட்டாங்க ... நான் அவங்கள கொலை பண்ணல சார் !!! நான் நிரபராதி ..... என்ன விட்டுடுங்க சார் !!! .. நான் புள்ளகுட்டிக்காரன் .... எனக்கு குடும்பம் இருக்குங்க சார் !!! ... “ என்று திரும்பத்திரும்ப இதையே சொல்லி , அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான் ....

இன்ஸ்பெக்டர் ரவி : (.... உக்கிரமான முகத்துடன்....) “ அப்ப ..... செத்துப் போனவங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ???? ... “ என்று மீண்டும் , ஆத்திரம் தீரும் அளவுக்கு அவனை அடித்துவிட்டு , வெளியே வந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் “ ....

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் , அவனை விசாரணை செய்திருப்பார்கள் .... மணி 9 –ஐத் தொட்டிருந்தது ... இருவரும் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து , சிகரெட்டைப் பற்ற வைத்து , புகையை ஊதித் தள்ளியிருந்தனர் ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ! எப்ப சார் ??? நாம , தவபுண்ணியத்த கைது பண்ணப் போறோம் ??? “

இன்ஸ்பெக்டர் ரவி : “ நாளைக்கு காலைல , சரியா 9 மணிக்கு , பொதுமக்கள் முன்னாடியே , தவபுண்ணியத்தோட கையில , விலங்க மாட்டி , ஸ்டேஷனுக்கு , இழுத்துட்டு வரப் போறோம் .... அதுக்கு அடுத்தபடியா , அன்பாலய வேதாந்த சுவாமிகளையும் கைது பண்ணி , ஸ்டேஷன்ல வெச்சு வெளுத்தா எல்லா உண்மையும் வெளில வந்துரும் .... இன்னிக்கு ஒரு நாள் ராத்திரி மட்டும் , நீங்க ஸ்டேஷன்லயே இருங்க ... ஏன்னா .... பொன்னையாவ கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும் “ ... என்னால முடியல . ரொம்ப நாளைக்கு அப்புறம் , இன்னிக்குதான் நான் நல்லா தூங்கப் போறேன்னு நெனைக்கிறேன் ... “ என்றார் சிரித்துக்கொண்டே ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ......! அதெல்லாம் நான் பாத்துக்கறேன் சார் .... நீங்க வந்ததுக்கப்புறம் தான் இந்த ஊருக்கும் , இந்த கேஸ்க்கும் , ஒரு விடிவு காலமே பொறந்திருக்குது ... உங்களுக்காக இதைக் கூட , நான் பண்ண மாட்டெனா ??? “என்றார் ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ இல்ல கந்தசாமி ..... நீங்க இல்லைன்னா .... இதப் பண்ணீருக்க முடியாது ..... நீங்க உங்க குடும்பத்தக் கூட , பாக்காம , இந்த மூணு நாளா , என்கூடவே இருந்தீங்க ... அதனால தான் , இதப் பண்ண முடிஞ்சது ... “ என்றார் பெருமிதத்தோடு ....

ஏட்டு கந்தசாமி : “ சார் ! இன்னைல இருந்து , நானும் உங்களமாதிரி ஒரு நாத்திகன் சார் ..... “ என்றார் கர்வத்தோடு .....

இன்ஸ்பெக்டர் ரவி : (... சிரித்துக்கொண்டே ...) “ அடப்போய்யா..... “ என்று சொல்லிக்கொண்டே , தன் வீட்டுக்கு கிளம்பியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .


(தொடரும்...) இன்னும் முடிந்துவிடவில்லை.
பொறுமையோடு காத்திருங்கள். இன்னும் விறுவிறுப்புடன். கடைசி அத்தியாயம் இன்று இரவு 09.45க்கு சரியாக ...
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
-: "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : இறுதி அத்தியாயம் : -

இருபது நிமிடப் பயணத்தில் வீட்டை அடைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ...


எதையோ சாதிருந்த மகிழ்ச்சி , அவர் முகத்தில் தெரிந்திருந்தது .

அடுத்தநாள் காலையில் செய்ய , வேண்டிய பணிகளைப் பற்றியே , அவரது சிந்தனை இருந்தது ....

அதே யோசனையிலேயே இரவு உணவை , முடித்திருந்தார் ....
வழக்கம் போல , கிரைம் நாவல்களை , அவர் வீட்டுப் புத்தகக் கிடங்கில் , தேடிக்கொண்டிருந்தார் ....


பிரபல எழுத்தாளர் நடேசனின் , “ மரணத்துக்கு அப்பால் என்ற நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்திருந்தார் ...

மனிதனின் மரணத்துக்குப் பிறகு , நடக்கக் கூடிய சம்பவங்களை ஒட்டி , மிக விறுவிறுப்பாகவும் , பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்தது அந்த நாவலின் கதைக்களம் ...

நிறைவேறாத ஆசையுடன் கூடிய ஆன்மாக்கள் , மீண்டும் கடந்து வந்த பாதைகளைகளியே , சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் , என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருந்தார் அந்த நாவலாசிரியர் நடேசன் ...

பாதிப் பக்கங்களைப் புரட்டியிருப்பார் ....

திடீரென அவர் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது ....

இந்த நேரத்தில் யாராக இருக்க முடியும் ??? என்று யோசித்துக் கொண்டே , கையில் டார்ச்சையும் , ரிவால்வரையும் எடுத்துக் கொண்டு , கதவுப் பக்கத்தில் சென்றார் ...

கதவு வேகமாக தட்டப்பட்டுக் கொண்டிருந்தது ....

மின்னல் வேகத்தில் , கதவைத் திறந்தார் ரவி ...

வெளியே ஆள் அரவமற்று இருந்தது ...

சற்றே திடுக்கிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் ரவி ...

வெளியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ,

கதவுப் பக்கம் திரும்பிய அவரின் அடுத்த வினாடி ,

திடீரென்று , ஏதோ ஒரு உருவம் ,

வேகமாக அவரைக் கடந்து செல்வதைப் போல் இருந்தது ...

பயத்தில் உறைந்திருந்த அவர் , உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார் ....

அந்த நேரம் பார்த்து , மீண்டும் மின்சாரம் வந்து , வந்து போய்க்கொண்டிருந்தது ....

டார்ச் விளக்கை , தயாராகவே வைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ...

உள்ளே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ...

ஒரு கட்டத்தில் , மின்சாரம் முற்றிலுமாக நின்றிருந்தது ...

டார்ச் விளக்கை அடித்துக் கொண்டே , முன்னேறியிருந்தார் ...

யாரோ , தன்னைப் பின் தொடர்வதைப் போல அவர் உணர்ந்தார் .....

பயத்தின் உச்சத்தில் இருந்த அவருக்கு , உடல் முழுக்க வியர்த்து வழிந்திருந்தது ....

அவரின் வலதுபுறமாக கண்ணாடிக்குப் பக்கத்தில் , யாரோ நிற்பது போல் இருந்தது ....

டார்ச்சை வலதுபுறமாகத் திருப்பிய அவர் , அரண்டு போயிருந்தார் ...
...
...
...
...


தலைவிரிக் கோலத்தில் , ஒரு பெண் குனிந்து , அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததை , அந்தக் கண்ணாடி அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ...

யார் .... யார்ரர்ர்ரு ????? என்று உளற ஆரம்பித்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ....

குனிந்திருந்த அந்த முகம் , திடீரென நிமிர்ந்து , அவரைப் பார்த்து சிரித்தது ...

சப்த நாடிகளுமே அடங்கிப் போயிருந்தது அவருக்கு ...

கோர முகத்துடன் , இறந்து போயிருந்த வெண்ணிலாதான் அங்கு நின்று கொண்டிருந்தாள் ...

மீண்டும் மின்சாரம் வந்திருந்தது ....

திடீரென்று அந்த உருவம் மறைந்திருந்தது ....

அவருடைய மனம் படபடத்திருந்தது ...

அந்தக் கண்ணாடியில் , எதோ குறிப்பு , எழுதியிருப்பதைப் போல அவருக்குத் தெரிந்தது ....

அதைப் பக்கத்தில் சென்று , படிக்க ஆரம்பித்த அவர் அதிர்ந்து போனார் ....

“ ... தவபுண்ணியத்தின் கடைசி அரைமணி நேரம் ...“ என்று அதில் எழுதப்பட்டிருந்தது ....


அப்பொழுது தான் பொன்னையா சொன்ன , பதில்கள் அவருக்கு நியாபகம் வந்திருந்தது ...

சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் , வெண்ணிலாவின் ஆவிதான் பழி வாங்கியிருகிறது என்பதை , அவர் உணர்ந்தார் ...

பதற்றத்துடன் தவபுண்ணியத்தின் , தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டார் ....

ரொம்ப நேரமாகவே , அழைப்பு மணி அடித்துக் கொண்டிருந்தது ...

யாரும் எடுத்த பாடில்லை ...

போலிஸ் ஜீப்பில் ஏறியிருந்த , அவர் மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார் ....

“ THE NUMBER YOU ARE TRYING TO REACH IS NOT ATTENDING THE CALL .. PLEASE TRY AGAIN LATER “ என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் பேசியிருந்தது ....

போலீஸ் ஜீப்பை வேகமாக செலுத்தியிருந்தார் ....

ஏட்டு கந்தசாமியின் எண்களைத் தொடர்பு கொண்டார் ....

வெகுநேரமாகியும் அவரிடமிருந்தும் ஒரு பதிலுமில்லை ...

அவருக்குCALL MEURGENTஎன்று MESSAGE அனுப்பிருந்தார் ...

குழப்பத்தின் உச்சத்தில் , போலிஸ் ஜீப் புயலாகக் கிளம்பியிருந்தது ....

அந்த நேரம் பார்த்து அவருக்கு , அன்பாலாய வேதாந்த சுவாமிகளின் நியாபகம் வந்திருந்தது ...

தேடித்பிடித்து அவருடைய எண்களைத் தட்டினார் ..

மறுமுனையில் , தொடர்ந்து ரிங் போய்க் கொண்டிருந்தது ..

கடைசி நேரத்தில் , போனை எடுத்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ....

இன்ஸ்பெக்டர் ரவி : ( ... பதற்றத்தில் ...) சுவாமிஜி !!! சுவாமிஜி !!! என்று பதறினார் .... அவரின் பதற்றத்தைப் புரிந்து கொண்ட சுவாமிகள் ,

வேதாந்த சுவாமிகள் : “ என்னாச்சு ரவி ??? ஏதாவது அமானுஷ்யத்தைப் பார்த்தீங்களா???? என்றார் படபடப்பாக ...

( .. இன்ஸ்பெக்டர் ரவி , நடந்த அனைத்தையும் சொல்ல , வேதாந்த சுவாமிகள் அன்பாலயத்தில் இருந்து புறப்பட்டிருந்தார் ...) . இந்தமுறை , தவபுண்ணியத்தின் வீட்டுத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டார் ரவி ...

மீண்டும் ரிங் போய்க் கொண்டிருந்தது ... “ COMEON , PICK-UP , PICK-UP .... என்று இன்ஸ்பெக்டர் ரவியின் உள்ளுணர்வு அடித்துக் கொண்டிருந்தது .. ஒரு வழியாக போன் எடுக்கப் பட்டிருந்தது ....

ஹலோ !!! என்றார் இன்ஸ்பெக்டர் ரவி .... மறுமுனையில் இருந்த குரலும் ஹலோ என்றது ..... தவபுண்ணியத்தின் மகன் கலையரசன் பேசினான் ..... ( ... இன்ஸ்பெக்டர் ரவி சற்றும் எதிர்பாராமல் கலையரசனிடம் .... )

இன்ஸ்பெக்டர் ரவி : “ .... கலையரசன் .... நான் இன்ஸ்பெக்டர் ரவி பேசுறேன் ... உங்க அப்பாவ ஜாக்கிரதையா பார்த்துக்கோ .... வெண்ணிலாப் பொண்ணோட ஆவி , இன்னிக்கு உங்க , அப்பாவ பழி வாங்க காத்துட்டு இருக்குது .... நான் இப்ப அங்க தான் வந்துட்டே இருக்கேன் ... என்றார் ...“

கலையரசன் : “ சார் !!! என்ன சார் சொல்றீங்க .... என் வெண்ணிலா , என் அப்பாவ கொலை பண்ணப் போறாளா ???? “ என்று சிரித்தான் ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ தம்பி இது ரொம்ப சீரியஸான விஷயம் ... விளையாடாத ... உங்க அப்பாவப் போய்ப் பாரு என்றார் வண்டியின் வேகத்தோடே .......“

கலையரசன் : “ சார் !!! நீங்க தான் சார் ...விளையாடறீங்க .... வெண்ணிலா என் கூட தான் , இப்ப உட்கார்ந்து பேசிகிட்டிருக்கிறாள் .. “ என்றான் ...

(.... அதிர்ந்து போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ,

WHAT??????


இணைப்பைத் துண்டித்து விட்டு , வண்டியின் வேகத்தைக் கூட்டீனார் ...)

அடுத்த 5 நிமிடத்தில் , ஏட்டு கந்தசாமியிடம் இருந்து போன் வந்தது ...

நடந்த விவரங்களை அவரிடமும் சொல்ல ,கந்தசாமியும் கான்ஸ்டபிள்களோடு அங்கு புறப்பட்டிருந்தார் ...

தவபுண்ணியத்தின் வீட்டை அடைந்த இன்ஸ்பெக்டர் ரவி , ஜீப்பை , வெளியே அவசர அவசரமாக பார்க் செய்து விட்டு , வீட்டு GATE- ஐத் திறக்க முயற்சித்தார் ....

கடினமான பூட்டால் , பூட்டப் பட்டிருந்த அந்த GATE-ஐ எளிதில் , திறக்க முடியவில்லை ...

மீண்டும் மீண்டும் முயற்சித்து , ஒரு வழியாக GATEஐ உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அவர் , அந்த வீட்டுக் கதவை வேக வேகமாகத் தட்டினார் .....

உள்ளேயிருந்து பதில் இல்லை ...

வீட்டுத் தொலைபேசிக்கும் , விடாமல் தொடர்பு கொண்டிருந்தார் ...

அந்த நேரம் பார்த்து , வேதாந்த சுவாமிகள் தன்னுடைய சீடர்களுடன் வந்திறங்கினார் ...

சீடர்கள் வேகவேகமாக உள்ளே வந்து , கதவைத் திறக்க முயற்சித்தார்கள் ... நிலைமையை உணர்ந்த வேதாந்த சுவாமிகள் , தன் பிரார்த்தனையால் , கதவைத் திறக்க முற்பட்டிருந்தார் .

பதறிப் போயிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , அந்த வீட்டு ஜன்னல்களை கற்களைக் கொண்டு உடைக்க முற்பட்டார் ....

அவர் எவ்வளவோ , முயற்சிகள் செய்தும் , அவரால் அதை உடைக்க முடியவில்லை ..

அந்த இடம் முழுவதுமே , வெண்ணிலாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது ...

அதே நேரம் ஏட்டுக் கந்தசாமியும் , தன் போலிஸ் படையுடன் வந்து , இவர்களுக்கு உதவ முற்பட்டிருந்தார் ...

அந்த இடம் முழுவதுமே , ஒரே பதற்றம் நிலவியிருந்தது ....

கொஞ்ச நேரத்தில் , சப்தம் கேட்கக் கேட்க , ஊர்மக்களும் தவபுண்ணியத்தின் வீட்டில் கூடியிருந்தனர் ...

ஒரு கட்டத்தில் ,வேதாந்த சுவாமிகளின் இடைவிடாத பிரார்த்தனையால் , கதவு படாரென்று திறந்தது ....

உள்ளே தவபுண்ணியத்தின் வீடே இருண்டிருந்தது ...

தயாராக வைத்திருந்த அகல் விளக்குகளோடு , வேதாந்த சுவாமிகளின் சீடர்கள் , உள்ளே நுழைந்து , வீடு முழுவதும் தீபங்களை ஏற்றியிருந்தனர் ...

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் முதலில் உள்ளே செல்ல , வேதாந்த சுவாமிகளும் , ஊர் பெரியவர்களும் பின்னே சென்றிருந்தனர் ..

வீட்டின் நடு ஹாலில் , வேதாந்த சுவாமிகள் , இரவு 12 மணிக்குப் பண்ண வேண்டிய , அர்த்த சாம யாகத்தை இப்பொழுதே தொடங்கியிருந்தார் ...

தீப ஒளியின் வெளிச்சத்தால் , வீடு முழுவதையும் சல்லடை போல சலித்துக் கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் ,அவரைச் சுற்றியிருந்தவர்களும் ...

உள்ளே ஒரு ஓரத்தில் , தவபுண்ணியத்தின் மனைவி மரகதமும் , மகன் கலையரசனும் , எதுவும் பேச முடியாமல் , பிரம்மை பிடித்தவர்கள் போல அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்...

ஏட்டு கந்தசாமி, அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார் ...

அவர்கள் மேலேயே அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர் ...

சட்டென்று மேலே பார்த்த ரவி , பதறினார் ....

எல்லாருடய கண்களும் , மேலே பார்க்க ,அந்தரத்தில் தவபுண்ணியத்தின் உடல் ஊசலாடிக் கொண்டிருந்தது ...

வேதாந்த சுவாமிகள் , மந்திர உச்சாடனங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தார் ...

உள்ளே இருக்கின்ற பொருட்களெல்லாம் , நாலாப்புறமும் ஓடி , சிதறிக் கொண்டிருந்தன....

ஆனால் அன்பாலய அகல் விளக்குகள் மட்டும் , எந்த சலனமுமின்றி அதே ஒளியை விடாது தந்து கொண்டிருந்தது ...

அடுத்த பத்தாவது நிமிடத்தில் , தவபுண்ணியத்தின் வீட்டை , தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ...

மேலே சுற்றிக் கொண்டிருந்த தவபுண்ணியத்தின் உடல், திடீரென பொத்தென்று கீழே விழுந்தது.

எல்லாரும் சென்று அவரைப் புரட்டிப் பார்க்க , அவர் சடலமாகத் திரும்பி வந்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது ..

வீட்டுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் , ஒரு வழியாக நின்றிருந்தது ...

சுயநினைவுக்குத் திரும்பிய , மரகதமும் , கலையரசனும் , தன் தந்தையின் உடலைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தனர் ...

கண் விழித்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ....

தவபுண்ணியத்தின் உயிரைக் காப்பாற்ற முடியாத சோகத்தை , அவரிடம் பார்க்க முடிந்தது..

துக்கமான முகத்துடன் , வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ...

வேதாந்த சுவாமிகள் , வீட்டிலிருந்து வெளியே வர , ஜனக்கூட்டம் , தவபுண்ணியத்தின் வீட்டை மொய்த்திருந்தது ...

மரண ஓலம் அங்கு விண்ணைப் பிளந்திருந்தது ....

இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கத்தில் வந்த, வேதாந்த சுவாமிகள் ,

ரவி !!! நானும் எவ்வளவோ ! முயற்சி பண்ணிப் பார்த்தேன் ... தவபுண்ணியத்தக் காப்பாத்த முடியல ... இந்தப் பிறவியில் , அவன் பண்ணின , பாவங்களிலிருந்து அவனை மீட்டெடுக்கவே முடியல .... இதைத் தான் பெரியவங்க , முற்பகல் செய்யின் , பிற்பகல் விளையும்ன்னு சொன்னாங்க என்றார் வருத்தத்துடன் ....

இன்ஸ்பெக்டர் ரவி : “ மன்னிச்சுக்கங்க சுவாமிஜி !!! உங்கள நான் தப்பான கோணத்திலயே வச்சுப் பாத்துட்டேன் ... உங்க பேச்சையெல்லாம் உதாசீனப்படுத்திட்டேன் ... இப்பதான் நான் உண்மையப் புரிஞ்சுகிட்டேன் ... என்ன மன்னிச்சிருங்க !!! “ என்றார் ...

வேதாந்த சுவாமிகள் : “ நான் தான் அப்பவே சொன்னேனே ரவி ,

ஆன்மீகமும் , அமானுஷ்யமும் .... அறிவியலுக்கு அப்பாற்பட்டதுன்னு . “.. என்றார் ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ! நாம அடுத்து எங்க சார் போறோம் ...” என்றார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : “ அன்பாலயத்துக்கு ....... “ என்றார் பூரண நம்பிகையையோடு ....

.............................................. 15 – நாட்களுக்குப் பிறகு .............................................

இன்ஸ்பெக்டர் ரவிக்கு , மீண்டும் ட்ரான்ஸ்பர் வந்திருந்தது .... ஏட்டுக் கந்தசாமி வருத்தத்துடன் விடை கொடுத்திருந்தார் ... NEXTGEN உரம் தயாரிப்பு நிறுவனம் , தன்னுடைய உரங்களை மறுசீரமைப்பு செய்து கொண்டு , இயற்கையான வழியிலேயே , உரங்களைத் தயாரித்திருந்தார்கள் ...


வேளாண் பேராசிரியர் சதாசிவம் , குமாரசாமி ஐயாவின் , கருத்துக்களைத் தொகுத்து , “ விவசாயமும் , அதன் அவசியமும்என்கின்ற நூலை வெளியிட்டிருந்தார் ....

-- முற்றும் –

இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .

இப்படிக்கு
பூபதி கோவை,
boopathycovai@gmail.com,

+91-7299543057
 
Top