All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் - கதைத் திரி

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
-: "பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -1 :-


cover-1.jpg


"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -1

கோயம்புத்தூர் ரயில் நிலையம் , அந்த மதிய வேளையிலும் , படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது . சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ரயில்வே கடிகாரத்தில், மணி 3.20 -ஐ தொட்டிருக்கும் . மதியம் 3.30 மணிக்கு வர வேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டியை எதிர்பார்த்து , மிகப்பெரிய கூட்டம் நடைமேடையில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது .

திடீரென்று அங்கிருந்த ஒலிபெருக்கியிலிருந்து , பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் , அழுத்தமான தமிழில் ஒலித்தது .

டின் ! டின் ! டின் ! ........ பயணிகளின் கனிவான கவனத்திற்கு, மங்களூரிலிருந்து , சென்னை வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் , தடம் 2-ல் , இன்னும் சற்று நேரத்தில் , வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

பயணிகள் தங்கள் உடமைகளை சரிபார்த்துக் கொண்டு தயாராயிருந்தார்கள் .
அடுத்த சில நிமிடங்களில் , மங்களூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் -2 இல், மெல்ல, தலை காட்டியிருந்தது .

பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்களின் பட்டியலை , ரயில் பெட்டிகளில் , வேக வேகமாக ஒட்டிக்கொண்டிருந்தார்கள் ரயில்வே ஊழியர்கள் .

S-7 பெட்டியில் ,பயணம் செய்பவர்களின் பட்டியலில் ,

சீட் நம்பர் 27 , பெயர் : ரவி , வயது : 35 என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் ,
தன் தோளில் மாட்டியிருந்த பையுடன், ரயில் பெட்டியின் உள்ளே பிரவேசித்தார் இன்ஸ்பெக்டர் ரவி .


நல்ல உயரம் . காவல்துறைக்கே உரிய கட்டுக்கோப்பான உடம்பு . அசட்டு தைரியம் , இவை அனைத்துமே அவரை போலீஸ் என்று அப்பட்டமாக காட்டிக்கொடுத்திருந்தது.

ஜன்னல் ஓரத்தில் , படுக்கை வசதியுடன் கூடிய சீட் அவருக்கு தயாராயிருந்தது .

சமீபத்தில் , அவர் விசாரணை நடத்திய வழக்கில், ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால் , அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் .

அதன் தாக்கத்தை அவர் முகத்தில் தெளிவாக உணர முடிந்திருந்தது . ரயில் மெல்ல புறப்பட தொடங்கியிருந்தது . சற்றே படுக்க முற்பட்ட அவரின் செல்போன் அலறியது . உடனே எடுத்து பார்த்தார் .

அவருடைய நண்பர் கணேஷ் . (தினச்செய்தி பத்திரிகையின் ஆசிரியர் ) லைனில் இருந்தார் .

கணேஷ் : ஹலோ ! ரவி ! என்ன ரயில் கெளம்பிடுச்சா ?


இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் ! இப்பதாண்டா கெளம்பிருக்கு . ஆமாம் நான் கேட்ட DETAILS என்னாச்சு ?

கணேஷ் : ஹ்ம்ம் ! எல்லா DETAILSயும் COLLECT பண்ணிட்டேன் ! நாளைக்கு நீ டூட்டில JOIN பண்ற தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , சரியா 1௦ கிலோமீட்டர் தூரத்துல தான் , அந்த மாத்தூர் கிராமம் இருக்கு . போன மாசம் 6 ஆம் தேதி தான் ,வேளாண் ஆசிரியர் குமாரசாமிங்கற பெருசு அங்க செத்துப் போயிருக்காரு . அவர் சாதாரணமா சாகல . பேயடிச்சு செத்துப்போயிட்டதா அந்த கிராம மக்கள் சொல்றாங்க . அந்த ஊர்ல பேய் நடமாட்டம் இருக்குன்னும் நம்புறாங்க . இந்த கேஸ விசாரிச்ச போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் , ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊருக்குப் போயிருக்காரு . காரணம் கேட்டதற்கு மன அழுத்தம்னு சொல்லிருக்காரு . BUT அந்த ஊர்ல எதோ ஒரு மர்மம் ஒளிஞ்சிருக்கு .

இன்ஸ்பெக்டர் ரவி : (.......... சிறிது நேரம் மௌனம் .......... ) .

கணேஷ் : என்ன ரவி ! ரொம்ப பயமுறுத்திட்டனா ? பேச்சையே காணோம்? என்றார் சிரித்துக்கொண்டே .

மறுமுனையில் மீண்டும் மௌனம் தொடரவே ,

ரவி ! ரவி ! என்றவர் பதற்றத்துடன் , இணைப்பைத் துண்டித்து விட்டு , மீண்டும் அவருக்கு போன் பண்ணினார்.

மறுமுனையில் , ரவி மீண்டும் பேசினார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹலோ ! என்றார் (தூக்க கலக்கத்தோடே)

கணேஷ் : என்னடா ! பேச்சையே காணோம் . தூங்கிட்டயா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஆமாண்டா ! போன்ல CALL RECORDING OPTION CHOOSE பண்ணிருந்தேன் . அதான் தூங்கிட்டேன். நான் அப்புறம் கேட்டுக்கறேன் என்றார் சிரித்துக்கொண்டே .

கணேஷ் : இன்னும் உன்னோட போலிஸ் புத்தி , உன்ன விட்டுப் போகல இல்ல . ஓகே ! ANYWAY கொஞ்சம் ஜாக்கரதையா இரு . மீடியா LEVELல என்ன உதவி வேணாலும் எங்கிட்ட கேளு .நான் இருக்கேன் .

ஓகே GOOD NIGHT . என்று இணைப்பைத் துண்டித்தார் ரவி .

அடுத்த சில நிமிடங்களில் கணேஷின் RECORD செய்யப்பட்ட குரல், இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது . வெளியே ஜெட் வேகத்தில் ரயில் பறந்து கொண்டிருந்தது .

(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -2

சாயுங்கால நேரம் 5 மணி ....
மரங்கள் அடர்ந்த அந்த மாத்தூர் கிராமத்தை , தென்றல் காற்று வருடிக்கொண்டிருந்தது ....
அந்த மாலை வேளையில், கொட்டாப் பாக்கும் , சுண்ணாம்புடன் ,வாயில் வெற்றிலையை மென்றவாறே , தென்னந்தோப்பில் , உட்கார்ந்திருந்தார் மாத்தூர் கிராமத்தின் ஊர்த்தலைவர் தவபுண்ணியம் . உடன் அவர் வேலைக்காரன் பொன்னையா ,வெற்றிலையை மடித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தான் .


தவபுண்ணியம் - வயது 53ன் விளிம்புகளில் இருக்கும் . நல்ல வாட்ட சாட்டமான உடல் . தொடர்ந்து 5 ஆவது முறையாக மாத்தூர் கிராமத்தின் ஊர்த்தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : டேய் ! பொன்னையா ! என்னடா அவனுங்கள இன்னும் காணோம் ? வந்து இவ்ளோ நேரமாச்சு ?

பொன்னையா : ஐயா ! வந்துருவாங்கய்யா என்று சொல்லி முடிப்பதற்குள், சிவநேசனும் , ரமாலிங்கமும் தென்னந்தோப்புக்குள் நுழைந்திருந்தார்கள். இருவரும் வயதில் ஐம்பதைக் கடந்திருந்தார்கள் . ஊர்த் தலைவர் தவ புண்ணியத்தைக் கண்டவுடன் , வணக்கம் வைத்தவாறே எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : (....... சற்றே கோபமான தொனியுடன் ....... ) , குமாரசாமி கேஸ விசாரணை பண்றதுக்கு , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புது இன்ஸ்பெக்டர் வர்றானாம் . அநேகமா இன்னிக்கு ராத்திரியே இங்க வந்துருவான்னு நெனைக்கிறேன் .

சிவநேசன் : தலைவரே ! இதுக்குத்தான் இவ்ளோ அவசரமா வரசொன்னீங்களா ? நான் வேற , என்னமோ ஏதோன்னு நெனச்சு பயந்துட்டேன் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : யோவ் ! அதெல்லாம் ஒன்னும் இல்ல . ஆனா அவன் கொஞ்சம் கெடுபிடியான ஆள்னு எல்லாரும் சொல்றாங்க . யாரையும் அவ்ளோ சீக்கிரமா நம்ப மாட்டானாம் . அதனால , குமாரசாமி விவகாரத்துல , அவங்கிட்ட நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் .

ராமலிங்கம் : அவன் வந்து என்ன பண்ணீரப் போறான் ? ........ தலைவரே ! குமாரசாமியக் கொன்னது , செத்துப்போன அந்த வெண்ணிலா பொண்ணோட , ஆவிதான்னு ஊரே சொல்லுது . அத மீறி அவனால என்னத்த பண்ணீர முடியும் ? நீங்க தைரியமா இருங்க . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்த ஊரை விட்டு ஓட வெச்ச மாதிரி , இவனையும் ஓட வெச்சுடலாம் . ஹ்ம்ம் .... அத விடுங்க . நம்ம கலையரசன் கல்யாண விஷயம் என்னாச்சு ? பொண்ணு பாத்துட்டு இருக்கறதா சொன்னீங்க ? .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : நாங்களும் பொண்ணு பாத்துட்டுதான்யா இருக்கோம் . ஆனா அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான் . செத்துப் போன அந்த வெண்ணிலா பொண்ண , அவன் இன்னும் மறக்கவே இல்ல . அவளையே நெனச்சு நெனச்சு , தினம் தினம் செத்துகிட்டு இருக்கிறான் . இதுல , அவளோட தற்கொலைக்கு நான் தான் காரணம்னு சொல்லி , என்கிட்டயே சரியா பேச மாட்டீங்கறான் என்றார் விரக்தியுடன் .

சிவநேசன் : தலைவரே ! இந்தக் காலத்து பசங்க மனசு , குரங்கு மாதிரி , அப்பப்ப மாறிகிட்டே இருக்கும் . அதெல்லாம் போகப் போக சரியாயிரும் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : அப்புறம் இன்னும் ரெண்டு நாள்ல , அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க கூட ( NEXTGEN FRETILIZERS LTD (உரம் தயாரிப்பு நிறுவனம்) ) ஒரு மீட்டிங் இருக்கு . அத முடிச்சுட்டு , அவங்க அக்ரிமெண்ட்ல SIGN பண்ணியாச்சுன்னா , நாம காச வாங்கிட்டு வந்தர்லாம் . அவ்ளோதான் .

சிவநேசன் : தலைவரே ! இதுல ஏதாவது பிரச்சனை வருமோன்னு நான் நெனைக்கிறேன் ...

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : சிவநேசா ! ... நம்ம ஊர்ல , நம்ம வைக்கிறதுதான் சட்டம் . யாரும் நம்மள எதிர்த்து பேச மாட்டாங்க . பழைய உரத்த தூக்கி எறிஞ்சுட்டு , இத பயன்படுத்துங்கன்னு சொன்னாப் போதும் . நம்ம பேச்சுக்கு , மறுபேச்சு பேசாம கேட்டுக்குவானுங்க நம்ம ஊர்க்காரங்க . இதுல யார் பிரச்சனை பண்ணாலும் , குமாரசாமிக்கு நடந்த கதிதான் அவங்களுக்கும் !!!! (என்றார் கறாராக) .

சற்று நேரத்தில் , வேலைக்காரன் பொன்னையா , இளநீரை வெட்டி , அதில் நாட்டுச்சாராயத்தைக் கலந்து தயாராக வைத்திருந்தான் .

ராமலிங்கம் : தலைவரே ! இன்னொரு விஷயம் . நம்ம ஊர்ல உண்மையாலுமே பேய் நடமாட்டம் இருக்குன்னு , ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க . குறிப்பா அந்த சாமியார் கூட அத உண்மைன்னு சொல்லிருக்காரு . அதான் கொஞ்சம் பயமா இருக்கு .

இதைக் கேட்டவுடன் சத்தம் போட்டு சிரித்தார் தவபுண்ணியம் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : யோவ் ! யாரு அந்த அன்பாலயம் வேதாந்த சாமியாரா ? .. அவனே ஒரு ஏமாத்துக்காரன் . அவன் சொல்றதப்போய் நம்பிட்டு ....... குமாரசாமியக் கொன்னதே நாமதான் . அவன பேய் தான் கொன்னுச்சுன்னு , ஒரு வதந்திய கெளப்பிவிடலையா ? அந்த மாறிதான் இதுவும் .......... இவ்ளோ பெரிய மனுசனாயிட்ட , இதுக்குப் போய் ஏன்யா பயந்துட்டிருக்கற . அடேய் ரமாலிங்கம்...... , அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க .. அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது . நீதைரியமா இரு என்று சொல்லி , அந்த இளநீர் பானத்தை எடுத்து கையில் கொடுத்தார் . இத ஒரு ரவுண்டு உள்ள உடு .. எல்லா பயமும் வெளில வந்துரும் என்றார் சிரித்துக்கொண்டே ..

மூவரும் , கிட்டத்தட்ட நான்காவது ரவுண்டைத் தாண்டியிருந்தார்கள் .


(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

#3
"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -3

நேரம் சரியாக இரவு 1௦:5௦ மணி .


மங்களூர் எக்ஸ்பிரஸ் , மிகுந்த சப்தத்துடன் , அரியலூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கியது .

அரியலூர் ரயில் நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ..... என்கின்ற வாசகங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன.

கடைசி ஆளாக படிக்கட்டில் இருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர் ரவி .

கைகளை மேலே தூக்கி சோம்பலை முறித்து விட்டு , சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவர் , தன் கையில் இருந்த மொபைல் போனை எடுத்து , கந்தசாமி என்கிற நம்பரைத் தேடிக் கொண்டிருக்கிருந்தார்.

சார் !!! என்ற குரல் கேட்டு , பின்னால் திரும்பிப் பார்த்த அவருக்கு , சல்யூட்டுடன் எதிர்ப்பட்டார் ஏட்டு கந்தசாமி .

வயதில் 40–ஐ நெருங்கியிருந்தார் .
கட்டையான உயரம்
. காவல்துறைக்கே சற்றும் சம்பந்தப்படாத ஒரு உடல் வாகு .

சார் ! நான்தான் சார் ! ஏட்டு கந்தசாமி ............. என்று அவர் ஆரம்பிப்பதற்குள் அவரைக் கையமர்த்தினார் இன்ஸ்பெக்டர் ரவி .


என்னவென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார் கந்தசாமி .

இன்ஸ்பெக்டர் ரவி : உன்னப் பத்தி நானே சொல்றேன் என்று பேச ஆரம்பித்தார் ....... உன்பேரு கந்தசாமி . வயசு 40 . ரெண்டு புள்ள . ஒரு பொண்டாட்டி . 1௦ வருஷமா இதே ஸ்டேஷன்ல, கான்ஸ்டபிளா இருந்து , இப்பதான் ஏட்டா ப்ரொமோஷன் வாங்கிருக்கே . எதப்பத்தியும் கவலைப்பட்றதே இல்ல ..... சொந்த ஊர் மாத்தூர்லயே , போஸ்டிங் வாங்கினது , ரொம்ப சவ்ரியமாப் போச்சு ......... பெரிய பெரிய ஆபீசர்ஸ்களுக்கு , ஜால்ரா போட்டே காலத்தைக் கடத்தியாச்சு .... உன் பர்சனல் ரெகார்ட்ஸ எடுத்துப் பார்த்தேன் . ரொம்பக் கேவலமா இருந்துச்சு . இது போதுமா ! இன்னும் ஏதாவது சொல்லனுமா ? என்றார் ரவி .

ஏட்டு கந்தசாமி : முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல், இல்ல சார்! நேரமாயிடுச்சு ! இன்னைக்கு இது போதும் !போலாம் . என்று இருவரும் போலீஸ் ஜீப்பை நோக்கி நடந்தார்கள் . இருவரும் ஏறியவுடன் , ஜீப்பை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் ஏட்டு கந்தசாமி .

நேரம் இரவு 11-ஐக் கடந்திருந்தது . ஆள் நடமாட்டமே இல்லாமல் , எங்கு பார்த்தாலும் , காரிருள் சூழ்ந்திருந்தது . எண்ணிப் பார்த்து விடக் கூடிய அளவிலே , தெரு விளக்குகளின் எண்ணிக்கை இருந்தது . இவரிடம் ஏதாவது கேட்கலாமா வேண்டாமா என்கின்ற குழப்பத்துடனே ஜீப்பை ஒட்டிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி . ஜீப்பின் வேகம் சீராக அதிகரித்திருந்தது . அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

இன்ஸ்பெக்டர் ரவி : என்ன கந்தசாமி ? எதோ கேக்கணும்னு நெனைக்கிற. ஆனா சொல்ல மாட்டீங்கிற . எதாருந்தாலும் தைரியமா கேளு .

ஏட்டு கந்தசாமி : அது ஒன்னும் இல்ல சார் ! என்னப்பத்தி எப்படி இவ்ளோ DETAILS கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : நான் யார்கிட்ட பேசுனாலும் , மொதல்ல அவங்களோட முழு விபரமும் தெரிஞ்சு வெச்சு கிட்டு தான் பேசுவேன். அதான் என்னோட வழக்கம் ......... ஹ்ம்ம் !!! சரி அதெல்லாம் இருக்கட்டும் . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆள் எப்படி ?

ஏட்டு கந்தசாமி : கிட்டத்தட்ட ஒரு அஞ்சேமுக்கால் அடி இருப்பார் சார் . WEIGHT ஒரு 65 இருப்பார்னு நெனைக்கிறேன் . நல்ல மாநிறம்! தாடி மீசையெல்லாம் வெச்சு பயங்கரமா இருப்பார் சார் . அப்புறம் அவர் வலது கைல மொத்தம் ஆறு விரல் இருக்கும் .

இன்ஸ்பெக்டர் ரவி : யோவ் ! நான் என்ன MILITARYக்கா ஆள் எடுக்கிறேன் . HEIGHT WEIGHTல்லாம் சொல்லிட்டிருக்கிற .... அவர் மத்த விசயத்திலல்லாம் எப்படி ?

ஏட்டு கந்தசாமி : அவரா சார் ! அவர் ரொம்ப நல்ல மனுஷன் சார் . கை சுத்தம் . மாமுல் வாங்கினா திட்டுவார் சார் ! ஸ்டேஷன்ல மட்டும் இல்ல பொதுமக்கள்கிட்ட கூட அவருக்கு நல்ல மரியாதை இருந்துச்சு . ஆனா கொஞ்ச நாளா எதையோ பறிகொடுத்தமாறியே இருந்தார் . நானும் கேட்டு பாத்துட்டேன் . ஆனா அவர் எதையுமே சொல்லல . கடைசில ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஊர விட்டே போய்ட்டார் சார் ! எனக்கு தெரிஞ்சு அவரும் பேயப் பாத்து பயந்துருப்பார்னு நெனைக்கிறேன் சார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ( ...... சிரித்துக்கொண்டே......) யோவ் ! இந்தக் காலத்துலயும் இன்னும் இந்த மாதிரி கன்றாவிகள , நாம நம்பிட்டுதான் இருக்கிறோம் இல்லையா . இந்தக்காலத்துல அவனவன் FACEBOOK , TWITTER னு போய்கிட்டு இருக்கானுங்க , இன்னும் நீங்க பேய் , பிசாசுன்னு பயந்துட்டு இருக்கீங்க .

ஏட்டு கந்தசாமி : சார் ! நீங்க வேற , நானே ரெண்டு மூணு தடவ பேயப் பாத்து பயந்துருக்கென் .

இன்ஸ்பெக்டர் ரவி : IS IT ? அப்படியா ? பேய் எப்படிய்யா ? இருக்கும் என்றார் சிரித்துக்கொண்டே .

ஏட்டு கந்தசாமி : தனியா இருக்கும்போது , திடீர்னு நம்ம கண்ணு முன்னாடி , எதோ ஒரு உருவம் வந்துட்டு போன மாதிரி இருக்கும் சார் ! .அவ்ளோதான் ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது . எந்த வேலையும் பண்ண முடியாது . அதனால தான் சார் நாம் எப்பவுமே தனியா இருக்கிறதில்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : மெல்ல சிரித்தவாறே , அப்ப கும்பல்லயே கோவிந்தா போட்டுட்டு இருக்கன்னு சொல்லு ..... சரி அத விடு . குமாரசாமி பேயடிச்சு.... செத்துப்போய்ட்டதா சொல்றாங்களே , பேய்க்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? எந்த பேய் அவர சாகடிச்சது ?

ஏட்டு கந்தசாமி : சார் ! கொஞ்ச நாளைக்கு முன்னால , தூக்குப்போட்டு செத்துப் போன வெண்ணிலாப் பொண்ணு தான் பேயா வந்து இதையெல்லாம் பண்ணீட்டு இருக்கிறதா சொல்றாங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : சரி ! அந்த வெண்ணிலாங்கற பொண்ணுக்கும் , குமாரசாமிக்கும் ஏதாவது முன்விரோதம் , பிரச்சனைன்னு இருந்துச்சா ?

ஏட்டு கந்தசாமி : இல்ல சார் ! அதெல்லாம் ஒன்னும் இல்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : அப்புறம் எப்படிய்யா ! ஒரு LOGICக்கே இல்லாம இதையெல்லாம் நம்புறீங்க .

ஏட்டு கந்தசாமி : சார் ! இதுல கூடவா LOGIC பாக்குறீங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : நிரூபணம் ஆகாத எந்த விசயத்தையும் நான் நம்பறதே இல்ல . குறிப்பா இந்த சாமி , பேய் , ஆவி , இந்த மாதிரி விசயங்கள நான் என்னிக்குமே நம்ப மாட்டேன்என்றார் .

நேரம் இரவு 11.3௦-ஐத் தாண்டியிருந்தது . நெடுஞ்சாலையில் கொஞ்ச தூரப்பயணம் .சற்று தொலைவில் கொள்ளிடம் டீ - ஸ்டால் என்ற பெயர் பலகையைப் பார்த்தவுடன் , வண்டியை ஓரங்கட்டினார் ஏட்டு கந்தசாமி . இருவரும் இறங்கி டீக்கடையை நோக்கி நடந்தனர் . கந்தசாமியைப் பார்த்தவுடன் , வாங்க சார் ! என்று சிரித்தவாறே வணக்கம் வைத்தார் டீக்கடைக்காரர் .

டீக்கடைக்காரர் : சார் ! இவரு யாரு ?

ஏட்டு கந்தசாமி : இவர்தான்யா நம்ம ஊருக்கு , புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் .

டீக்கடைக்காரர் : சார் ! வணக்கம் ! என்று சொல்லி கையில் டீ கிளாஸ்களோடு வந்து நின்றிருந்தார் .

இருவரும் டீயை வாங்கிக்கொண்டு , வெளியே போலீஸ் ஜீப்புக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : இன்னும் ஸ்டேஷன் போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் ?

ஏட்டு கந்தசாமி : சார் ! இன்னும் ஒரு கால்மணி நேரமமாவது ஆகும் சார்.

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! . ஆமா !! அந்த வெண்ணிலாங்கற பொண்ணு யாரு ?

ஏட்டு கந்தசாமி : சார் ! அது வந்து ........ நம்ம ஊர்த்தலைவர் (மாத்தூர்) தவபுண்ணியம் ஐயாவோட , பையன் கலையரசனும் , அந்த வெண்ணிலாங்கற பொண்ணும் ரெண்டு வருசமா உயிருக்குயிரா காதலிச்சுருக்காங்க . இது பையன் வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சிருச்சு.... பொண்ணு வேற ஜாதிங்கிரதால , பையன் வீட்டுல கடுமையான எதிர்ப்பு ...... இருந்தாலும்..... கல்யாணம் பண்ணா , அந்தப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு , கலையரசன் தம்பி தீர்க்கமா சொல்லியிருக்காரு.... வேற வழியே இல்லாம , தவபுண்ணியம் ஐயா , அவரோட நண்பர்கள் சிவநேசன் , ராமலிங்கம் , அப்புறம் ஊர்க்காரங்களையும் கூட்டிட்டுப் போய் , அந்தப் பொண்ணோட ,அப்பா அம்மாவ அடிச்சு மெரட்டிருக்காங்க . ஒரு ஊரே அவங்களுக்கு எதிரா வந்து , நின்னதப் பாத்து , இடிஞ்சு போய்ட்டாங்க அவங்க ரெண்டு பேரும் . அதத் தாங்கிக்க முடியாம , அந்த பொண்ணு , லெட்டர் எழுதி வெச்சுட்டு ,தற்கொலை பண்ணிருச்சு . லெட்டர்ல , கடைசில மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் , மீண்டு வருவேன்னு அந்தப் பொண்ணு எழுதீர்ந்தது . இத வெறும் சாதாரணமாத் தான் நாங்க எடுத்திருந்தோம் ......... ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் தான் ,..... லெட்டர்ல அந்த பொண்ணு எழுதீர்ந்த , சில வார்த்தைகளோட அர்த்தமே , எங்களுக்கு புரிய ஆரம்பிச்சுச்சு ... ஊர்ல பல பேர் , பல விதமான அமானுஷ்யமான விசயங்களைப் பார்த்திருகிறாங்க . தீடீர்னு ஒரு உருவம் , நம்மளத் தாண்டிப் போன மாதிரி இருக்கும் . இரவு நேரங்கள்ல , வீட்டுக் கதவ யாரோ தட்டுற மாதிரி , சத்தம் கேக்கும் . கதவத் திறந்து பார்த்தா , யாரும் இருக்க மாட்டாங்க . குமாரசாமி ஐயா இறந்து போனதும்கூட , ராத்திரி 8 மணிக்கு மேலதான் . இதுனாலதான் எங்க ஊர்ல , ராத்திரி 7 மணில இருந்து , காலைல 6 மணி வரைக்கும் , யாரும் வீட்ட விட்டு வெளியே வர்றதில்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! சரி வண்டிய எடு ,ஸ்டேஷன் போலாம் . இருவரும் ஏறி அமர்ந்தவுடன் , போலீஸ் ஜீப் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது . கொஞ்ச தூரம் சென்றவுடன் , அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கட்டிடம் , சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வண்ணமயமாகக் காட்சியளித்தது . அகல்விளக்குகளின் வெளிச்சம் , அந்த கட்டிடத்தின் அழகை மெருகூட்டியிருந்தது . அதைப் பார்த்தவுடன் , இன்ஸ்பெக்டர் ரவி ,

யோவ் ! கந்தசாமி . என்ன பங்களாய்யா இது ! .பார்க்கவே ரொம்ப அருமையா இருக்குது ......“

வண்டியின் வேகத்தை சற்று குறைத்த ஏட்டு கந்தசாமி ,

சார் ! அது ஒரு ஆசிரமம் , அதுக்கு பேரு அன்பாலயம் . வேதாந்த சாமிகள்ங்கறவர் தான் , அந்த ஆஸ்ரமத்த நடத்துறாரு . ரொம்ப சக்திவாய்ந்த சாமியார் சார் அவரு . எங்க ஊர்ல சில அமானுஷ்ய நடமாட்டங்கள் இருக்குன்னு , அவர் தான் மொதல்ல கண்டுபிடிச்சாரு . கொஞ்ச நாளைக்கு யாரும் , இரவு நேரங்கள்ல , வெளியே வரவேண்டாம்னு அவர் தான் சொல்லியிருந்தார் சார் ! ..”

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! ஓகே !......... அப்ப அவர கண்டிப்பா நாம MEET பண்ணியே ஆகணும் ......

கிட்டத்தட்ட பத்து நிமிடப் பயணம் . தூத்தூர் காவல் நிலையம் ... என்ற பெயர் பலகை போலீஸ் ஜீப்பின் வெளிச்சத்தால் , மின்னிட்டுத் தெரிந்தது . இருவரும் இறங்கி , போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள் . தூங்கிக் கொண்டிருந்த , இரவு நேர பாதுகாப்பு போலீஸ்காரர்கள் , திடீரென்று எழுந்து சல்யூட்டுடன் எதிர்பட்டார்கள் . தூக்கக் கலக்கம் அவர்கள் கண்களில் , தெரிந்திருந்தது . அவர்களைக் கையமர்த்திய இன்ஸ்பெக்டர் ரவி , கந்தசாமியைப் பார்த்து ,

மாத்தூர் கிராமத்துல நான் STAY பண்றதுக்கு ஒரு வீடு கேட்ருந்தேனே ... என்னாச்சு ? .... ” என்றார் .

ஏட்டு கந்தசாமி : சார் ! வீடெல்லாம் ரெடி பண்ணியாச்சு . இன்னிக்கு மட்டும் இங்க ரெஸ்ட் எடுங்க .. காலைல அங்க போய்ப் பாத்துக்கலாம்..

சார் ! அப்படியே நான் கெளம்புறேன் சார் ... என்றார் தலையை சொரிந்து கொண்டே .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் ! சரி ! ... நாளைக்கு காலைல ஆறு மணிக்கு வந்து என்ன PICK UP பண்ணிக்கோங்க ..... GOOD NIGHT என்றவர் , அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே ,அப்படியே மேசையில் கால் வைத்து மல்லார்ந்தார் ..

காலைல ஆறு மணிக்கே வரணுமா ! என அதிர்ச்சியடைந்தவராய் , தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார் ஏட்டு கந்தசாமி . மணி12.00 –ஐக் காட்டியிருந்தது . வேக வேகமாகப் புறப்பட்டிருந்தார் ...

(தொடரும்... )
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பிற்பகல் விளையும்" மர்மத் தொடர் : அத்தியாயம் -4


அடுத்த நாள் காலை 6.3௦ மணி . பொழுது புலர்ந்திருந்தது . ஏட்டு கந்தசாமி அவசர அவசரமாக வந்து , வண்டியை நிறுத்தி விட்டு , காவல் நிலையத்துக்குள் நுழைந்திருந்த அவருக்கு , ஒரே ஆச்சர்யம் . நேற்றைய ஒரே இரவில் , காவல் நிலையம் தூசி தட்டப்பட்டு , மிடுக்காக காட்சியளித்திருந்தது . காலையில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த , இரவு நேரக் காவல்துறையினர் ,

DUTYல JOIN பண்ண மொதல் நாளே , எங்கள இப்படி நல்லா வேலை வாங்கிட்டாருய்யா ! என்று கந்தசாமியின் காதுகளில் , முனுமுனுத்துக் கொண்டு சென்றனர் . காக்கிச் சட்டையில் கம்பீரமாகத் தெரிந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . குமாரசாமி கேஸ் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் . உள்ளே சென்ற கந்தசாமி , GOOD MORNING-உடன் SALUTE அடித்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : வாங்க கந்தசாமி ! GOOD MORNING .... உக்காருங்க .

குமாரசாமி கேஸப் பத்தி , பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் தயார் பண்ண ரிப்போர்ட்டத்தான் இப்பப் பாத்துட்டு இருக்கேன் ...... எனக்கு அந்த வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்ல , சில சந்தேகங்கள் இருக்கு . இது பற்றி , இந்த கேஸ்ல சில முக்கியமான விவரங்கள் சுந்தரத்திற்கு தெரிய வாய்ப்பிருக்கு ..... அதனால , இன்னிக்கு சாயந்தரம் சுந்தரத்தோட , நாம போன்ல இது பத்தி பேசியாகணும். ..... சரி ஓகே ... அதெல்லாம் இருக்கட்டும் ... எனக்கு அந்த செத்துப்போன , வெண்ணிலாவோட போட்டோ வேணும் ..

ஏட்டு கந்தசாமி : இதோ எடுத்துத் தர்றேன் சார் ! என்று , பழைய ரெகார்ட்ஸ்களைப் புரட்டிப் பார்த்த அவர் , வெண்ணிலாவின் புகைப்படத்தைக் கண்டதும் , சார் இதான் சார் அந்தப் பொண்ணோட போட்டோ , அப்புறம் இது அந்தப் பொண்ணு எழுதின கடிதம் ! என்று எடுத்து நீட்டினார் . வயல் வரப்புகளில் அமர்ந்து , தண்ணீரைத் தடவிக் கொண்டிருப்பதைப் போன்று வெண்ணிலாவின் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது . வயது கிட்டத்தட்ட 25 இருக்கும் . கிராமத்து தேவதை போல் அழகாகக் காட்சியளித்திருந்தாள் . அதைப் பார்த்துவிட்டு , அடுத்ததாக கடிதத்திற்குள் நுழைந்தார் . வெள்ளைத் தாளில் சிவப்பு மையால் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் , அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை பிரதிபலித்திருந்தது .

அன்புள்ள அப்பா ! அம்மாவுக்கு !

இது உங்கள் அன்பு மகளின் கடைசிக் கடிதம் . சிறு வயதில் இருந்தே , நான் கேட்டதை எல்லாம் , எனக்கு மறுக்காமல் தந்த உங்களிடம் , நான் என் காதலை மட்டும் , முற்றிலுமாக மறைத்து விட்டேன் . நேரம் வரும்போது ,எடுத்து சொல்லலாம் என்று நினைத்திருந்த எனக்கு , இந்தக் கடிதம் எழுதும் நேரமே , என் வாழ்க்கையின் கடைசி நேரம் என்பதை , என்னால் கணிக்க முடியவில்லை . ஊரார் மெச்சும் பிள்ளையாக , நான் வாழ வேண்டும் என்று நினைத்த உங்களை , இன்று என் காதலால் , அவர்களே காரி உமிழும்படி செய்து விட்டேன் . என்னால் இன்று நீங்கள் தலை குனிந்து நின்றீர்கள் . இப்படி நிகழும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை . உங்களைப் பார்க்கக் கூடிய அருகதை கூட எனக்கு இல்லை . என்னை மன்னித்து விடுங்கள் .

என் காதலன் கலையரசனுக்கு ,

ஜாதியும் , வசதியும் தான் , நம் காதலைத் தீர்மானிக்கின்றது என்றால் , அப்படிப்பட்ட காதல் நமக்குத் தேவையேயில்லை . நம்முடைய காதலுக்கு எதிராக , ஊரே அணி திரண்டு நிற்கிறது . நம் காதல் கரை சேரும் என்கின்ற நம்பிக்கை , உனக்கே இல்லாத போது , அது எப்படி சாத்தியமாகும் . உன்னுடைய நினைவுகளை , … மறப்பதை விட , இறப்பதே சிறந்தது என்று நான் முடிவெடுத்து விட்டேன் .

.......... மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் மீண்டு வருவேன் ........

இப்படிக்கு

உன் வெண்ணிலா ...

என்று படித்து முடித்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அடுத்த நிமிடம் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் .

ஏட்டு கந்தசாமி : சார் ! இப்ப நாம எங்க போகப் போறோம் சார் ????...

இன்ஸ்பெக்டர் ரவி : மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியம் வீட்டுக்கு ...

போலீஸ் ஜீப் ..... வேகம் எடுத்திருந்தது . சாலையோரத்தில் இருந்த மரங்களெல்லாம் , இவர்களுக்கு பின்னே வேகமாக சென்று கொண்டிருந்தன ................ 2௦ நிமிடப் பயணம் . காலை 7.3௦ மணி . மாத்தூர் கிராமத்தின் எல்லையை அடைந்திருந்தார்கள் . அறிவியல் தொழில்நுட்பங்களை , அதிக அளவில் கண்டிராத ஒரு கிராமம் . எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல்வெளிகள் ............... எந்த விதக் கவலையும் இல்லாமல் , ஒலி எழுப்பிக்கொண்டு , சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருக்கின்ற பறவைகள் கூட்டம் ...... ஏசுநாதரைப் போன்று , இடுப்பில் வெறும் வேட்டியுடன் , தோளில் கலப்பைகளை சுமந்தபடி , உழவர்கள் ஒரு பக்கம் வயலில் இறங்கியிருந்தார்கள் . கிராமத்துப் பாட்டின் ஒரு வரியை ஒருவர் பாட , அதே வரியைப் , பின்னணியில் இருப்பவர்கள் ஒரு சேரப் பாடிக்கொண்டே , ஒருபுறம் நாற்று நடவும் பணி தொடர்ந்திருந்தது .

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் , ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் , ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில் .. உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில்என்ற அந்தக் காலத்துப் பாடல் வரிகளுக்கு , இந்த மாத்தூர் கிராமமே சாட்சியளித்திருந்தது .

சற்று நேரத்தில் , ஊர்த்தலைவர் தவபுண்ணியத்தின் தென்னந்தோப்பை நோக்கி போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது .

ஏட்டு கந்தசாமி : என்ன சார் ! ஒரே மௌனமா இருக்கீங்க ....

இன்ஸ்பெக்டர் ரவி : உங்க ஊரோட அழகு என்ன மெய்சிலிர்க்க வைக்கின்றது . உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் , உன்னால் சோற்றில் கை வைக்க முடியும்ன்னு சும்மாவா சொன்னாங்க ! உங்க கிராமம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குய்யா .... என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தவபுண்ணியத்தின் வீடு வந்திருந்தது . தென்னந்தோப்பை ஒட்டி , ஒரு பெரிய மாடி வீடு தெரிந்தது . போலீஸ் ஜீப் சத்தம் கேட்டதும் , உள்ளே இருந்து , தவபுண்ணியத்தின் மகன் , கலையரசன் , இருண்ட முகத்தோடு எதிர்பட்டான் . அவனுடைய காதலின் வலியை , அவன் முகத்தில் நன்றாக உணர முடிந்திருந்தது .

ஏட்டு கந்தசாமி : தம்பி ! ஐயா வீட்ல இருக்காருங்களா என்றார் பவ்யமாக.

கலையரசன் : அப்பா ! வாக்கிங் போயிருக்காரு .. உள்ள வாங்க என்று அவர்களை வீட்டுக்குள் அழைத்து சென்று , உட்கார வைத்து விட்டு , அவனுடைய அறைக்குச் சென்று விட்டான் .

தவபுண்ணியத்தின் மனைவி மரகதம் , இவர்களைப் பார்த்தவுடன் , வாங்க !........... என்றார் முகமலர்ச்சியுடன் . அவரு இப்பதான் வாக்கிங் போயிருக்காரு . இப்ப வந்துருவார் . என்ன சாப்ட்றீங்க ? காபியா ? டீயா ?

அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்கம்மா ! என்று இன்ஸ்பெக்டர் ரவி சொல்ல ஆரம்பிப்பதற்குள் , காபியே குடுத்துருங்கம்மா ! என்றார் ஏட்டு கந்தசாமி. சற்று நேரத்தில் , காபி டம்ளர்களில் இருந்து ஆவி பறந்திருந்தது .

ஏட்டு கந்தசாமி : அம்மா ! தம்பி இப்ப எப்படி இருக்கிறாரு .. கொஞ்சம் பரவாயில்லையா ?

மரகதம் : எங்கப்பா ! நானும் என்னென்னவோ சொல்லிப் பாத்துட்டேன் . கேக்கவே மாட்டீங்கறான் . ராத்திரியெல்லாம் தனியா , அவனாவே பேசிட்டு இருக்கிறான் . கேட்டா வெண்ணிலாகூடதாம்மா பேசிட்டு இருக்கேன்கிறான் . நானும் எத்தனையோ டாக்டர்ஸ் கிட்ட காட்டிப் பாத்துட்டேன் . இது அந்தப் பொண்ணு இறந்த அதிர்ச்சிதான் , போற போக்குல சரியாயிருன்னுதான் எல்லாரும் சொல்றாங்க . ஆனா எனக்கு என்னமோ பயமாயிருக்குது . நீங்களே வந்து பாருங்க என்று கலையரசனின் அறையைக் காண்பித்தாள் . மெத்தை மீது அமர்ந்துகொண்டு , வெண்ணிலாவின் புகைப்படத்தையே , பார்த்துக் கொண்டிருந்தான் கலையரசன் . சின்னச்சின்னதாக சிகரெட் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்திருந்தன .அறையின் சுவர் முழுவதும் , வெண்ணிலாவின் பெயரால் நிரம்பியிருந்தது . ஏட்டு கந்தசாமி , மெல்ல கலையரசன் பக்கம் சென்று , அவன் தோள்களைத் தொட்டு , “தம்பி !!!! “ என்றார் .

கலையரசன் : (திடீரென்று திரும்பி ) அவரையே உற்றுப் பார்த்தான் .

ஏட்டு கந்தசாமி : வெண்ணிலா ............என்று ஆரம்பித்தவுடன் , கலையரசனின் முகத்தில் மெல்ல மகிழ்ச்சி தெரிந்தது .

சொல்லுங்க சார் !! வெண்ணிலாவுக்கு ... என்னாச்சு என்றான் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ தம்பி ! வெண்ணிலா ................. இப்ப உயிரோட இல்லைங்கற விஷயம் உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன் . என்றார் தயக்கத்துடன் .

(அதைக் கேட்டவுடன் உரத்த குரலில் சிரித்தவாறே கலையரசன் ...)

சார் ! யார் சொன்னது வெண்ணிலா செத்துப்போய்ட்டான்னு .. நீங்க உட்கார்ந்துட்டு இருக்கிற இதே இடத்துல தான் , நேத்து ராத்திரி , அவளும் உக்காந்து பேசிட்டுப் போனா .. யார ஏமாத்தப் பாக்குறீங்க ..?????? என் அப்பா அம்மாதான் என்ன ஏமாத்த நெனைக்கிறாங்க ..... இப்ப புதுசா வந்துருக்கிற நீங்களுமா .............. என்றான் .

அதற்கும்மேல் எதுவும் பேச மனதில்லாமல், இருவரும் நடந்து , வெளியே வராந்தாவில் வந்து உட்கார்ந்திருந்தார்கள் .

அந்த நேரம் பார்த்து , உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு , வியர்த்து வழிந்த முகங்களுடன் , தவபுண்ணியமும் , அவர் சகாக்களான சிவநேசனும் , ராமலிங்கமும் வந்து கொண்டிருந்தார்கள் . அவர்களை நெருங்கியதும் ,

ஐயா ! வணக்கம் என்றார் ஏட்டு கந்தசாமி . இவர்தான்யா நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் ! என்றார் பௌவ்யமாக . இன்ஸ்பெக்டர் ரவி , தவபுண்ணியத்திடம் , கை குலுக்கி விட்டு , சார் ! நான் ரவி என்றார் .

தவபுண்ணியம் : ஹ்ம்ம் .. வணக்கம் .... உங்களப்பத்தி நெறையா கேள்வி பட்ருக்கேன் ...... அப்புறம் எங்க ஊர் எல்லாம் எப்படி இருக்குது ....

இன்ஸ்பெக்டர் ரவி : உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . இங்க வந்ததுக்கப்புறம் , இயற்கையோடவே வாழ்ற மாதிரி ஒரு FEELING இருக்குது சார் . ஆனா ............ என்று இழுத்தார் .

சிவநேசன் : அப்புறம் என்ன சார் ! அந்த ஆனா .............????

இன்ஸ்பெக்டர் ரவி : .................... அது ஒன்னும் இல்ல . இந்த ஊர்ல சொல்றமாதிரி இந்த ஆவி , பேய்ங்கற கட்டுக் கதைகளைத்தான் என்னால நம்ப முடியல .




சிவநேசன் : ( ..... சிரித்துக்கொண்டே .....) சார் ! நீங்க என்ன நாத்திகரா ????....

இன்ஸ்பெக்டர் ரவி : நான் நாத்திகன்ல்லாம் கெடையாது சார் ....... நிருபீக்க முடியாத எதையுமே நான் நம்பறதேயில்ல . அவ்ளோதான் ..... வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் மரணம் , ஒரு திட்டமிட்ட கொலைன்னு தான் நான் நெனைக்கிறேன் ..................... என்னால முடிஞ்சவரைக்கும் அதை நிருபீக்க முயற்சி பண்ணுவேன் . இதுல எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் நான் சந்திக்கத் தயாரா இருக்கேன் சார் .

( ..... தவபுண்ணியம் முகத்தில் பிரளயம் தெரிந்திருந்தது ....)

சற்று சுதாரித்துக் கொண்ட ராமலிங்கம் பேசத் தொடங்கினார் .

ராமலிங்கம் : இன்ஸ்பெக்டர் சார் ! நான் உங்க மன தைரியத்தப் பாராட்றேன் ... போலீஸ்காரன்னா ! இப்படித்தான் இருக்கணும் . ஆனா அதுக்காக எல்லா விசயத்துலயும் , இந்த மாதிரி குருட்டு நம்பிகையை வைக்கக் கூடாது . மொதல்ல நாங்களும் இந்த விசயத்தை நம்பல . நேர்ல பாத்ததுக்கப்புறம் தான் , எங்களுக்கே நம்பிக்கை வந்துச்சு .

இன்ஸ்பெக்டர் ரவி : அப்படி என்ன பாத்தீங்க .. எங்கிட்ட சொல்லுங்க . இந்த கேஸ்ல எனக்கு உபயோகமாயிருந்தாலும் இருக்கலாம் .

இதுவரை பேசாமல் இருந்த தவபுண்ணியம் பேச ஆரம்பித்தார் .

தவபுண்ணியம் : தம்பி ! நீங்க இப்பதான இங்க வந்துருக்கீங்க . போகப் போகப் பாருங்க . உங்களுக்கே தெரியும் . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் இதே மாதிரி தான் பேசிட்டுத் திரிஞ்சார் .. இப்பப் பாருங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாரு ... ஏன் போனார்ங்கிற காரணம் யாருக்குமே தெரியல . எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்றார்..

இன்ஸ்பெக்டர் ரவி : (சற்று புன்னகைத்தவாறே) .......... நான் பாத்துக்கறேன் .. கூடிய சீக்கிரம் , இந்த புதிருக்கான விடையை நான் கண்டுபுடிச்சுக் காட்றேன் சார் ! என்றார் பெருமிதத்தோடு .

தவபுண்ணியம் : ஹ்ம்ம் .... வாழ்த்துக்கள் என்றார் வெற்றுப்புன்முறுவலுடன் ...

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் போலீஸ் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டிருந்தார்கள் . அவர்கள் கிளம்பியவுடன் ,

ராமலிங்கம் : தலைவரே ! இவன இப்படியே விட்ரக்கூடாது . இன்னிக்கு ராத்திரி , நாம பண்ற வேலையில , அவன் நாளைக்கு காலைலயே , தானா ஊர விட்டே ஓடிருவான் .

தவபுண்ணியம் : இவன் சாதாரணமான ஆள் மாதிரி தெரியல . இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கங்க . எதா இருந்தாலும் , யோசிச்சுப் பண்ணுங்க . அப்புறம் , இன்னும் ரெண்டு நாள்ல , அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க.. (NEXTGEN FERTILIZERS LTD) கூட ஒரு மீட்டிங் இருக்குது . மறந்திராதீங்க
.

(தொடரும்... )
 
Top