என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 13
"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு.."
இருள் விலகி.. சூரிய மங்கை தரிசனம் தர வருகின்ற நேரம்... குளிரின் ஆட்டம் முடியும் அந்த விடியாதா காலை பொழுதில்.. கொட்டாவி ஒன்றை விட்டப்படி கதவை திறந்து கொண்டு வந்தாள் கீது..
தூக்க கலக்கம் இன்னும் முகத்தில் மிச்சம் இருந்தது. முகத்தினை அழுந்த துடைத்து தலையினை கைகளால் வாரி கொண்டை ஒன்றை போட்டுக்கொண்டாள். கையில் வாரியலை எடுத்து கொண்டு, வாளியில் நீர் நிரப்பியவள் ரெண்டையும் தூக்கி கொண்டு வாசல் முற்றத்திற்கு சென்றாள்.
அப்போது தான் பக்கத்து வீட்டு அக்காவும் வெளிக்கதவை திறந்தபடி வந்தார் கையில் கோல மாவுடன்.
அப்போது முகத்தினில் ஏதோ மின்னல் ஒளி வெட்டியது போன்ற பிரம்மை மாதுவிற்குள்.
கண்களை சிமிட்டியவள் மிச்ச தூக்க கலக்கத்தை ஒதுக்கியபடி, கண்களை தேய்த்துக் கொண்டு விழிகள் விரிய பார்த்தாள்.
வெள்ளை உருவத்தில் பேய் ஒன்று வானத்தில் மிதந்தபடி வந்தது இவளை நோக்கி.. தன் அகோர பற்களால் பயங்காட்டியது...
பயத்தில்"வீல்" என்று அலறினாள் பெண். ஆனால் பல குரல் ஒரு சேர அந்நேரம் இதே போல அலறியது. ஆம்.அந்நேரம் அத்தெருவே அலறியது...
திக் பிரம்மை பிடித்தது போல பெண்கள் திகைத்து நிற்க... அத்தெருவில் கோலம் போட வென்றும், மற்ற வேலையாக வந்தவர்களும் விக்கித்து போய் இருந்தனர்.
விட்டு விட்டு அடிக்கும் அலாரம் போல... ஒவ்வொரு அலறல் சத்தமுமாய் அந்த எரியாவே அல்லோல பட்டது நிமிடத்திற்குள்.
சில ஆண்களும் கூட்டமுமாய் பேயறைந்தார் போன்று திகைத்து நின்றிருந்தனர்.
"அது என்ன..?!"
"ஹேய் உனக்கும் தெரிகிறதா...!"
"நீ பார்த்தாயா...?!"
"யாராவது போலீசுக்கு இன்போர்ம் பண்ணுங்க.. அது என்னன்னு வேறு தெரியல...??"
கலவையான குரல்கள் கேட்டன.
கண்களில் காட்சி விழுந்தும் சிந்தைக்கு எட்டாமல் பெண்ணவள் அதிர்ந்து போயிருந்தாள்.
பலர் அலறி அடித்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர். ஒரு சிலரே அதுவும் மறைந்து நின்ற படி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
'வுயங்... உயங்... உயங்.....' ஆம்புலன்ஸ் சத்தம் காதை அழுத்தியதில் 'ஹாங்...' கண்களை சிமிட்டி நடப்பிற்கு திரும்பிய பெண் கண்ட காட்சி அவளது நெஞ்சில் இருந்த மிச்ச மீதி துணிவையும் துடைத்து சென்றது.
அந்த ஏரியா குர்காவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி கொண்டு சென்றனர் வந்தவர்கள். மிரண்டு போயினர் அங்கு இருந்தவர்கள்.
"கண்டிப்பாக இது அதோட வேலையா தான் இருக்கும். அதுக்கு இன்னும் தாகம் அடங்கல.. அதான் இன்னும் சுத்திக்கிட்டு இருக்கு..." தன்னை கடந்தபடி சென்று கொண்டிருந்தவர்களது பேச்சு காதில் விழுந்தது.
"அப்படி இருக்குமா... அதுவும் இந்த கா..ல..த்..து..ல..??! எதுவோ விஷயம் இதுல இருக்கு..!!"என்றபடி தெருவில் இறங்கி ஆகாயத்தை கண் கொட்டாமல் தரிசித்தபடி மெல்ல எட்டுக்கள் வைத்து முன்னேறினாள் பெண்.
கண்களில் எக்ஸ்ரே மிஷினை மாட்டிக்கொண்டு..அதாங்க செல்போன்... கூர்ந்து பரர்த்தாள் அவள். மூளையில் மின்னல் பளிச்சிட்டது. முகம் பிரகாசித்தது...
அங்கே அந்த கருநீல நிறமும் கடல் நிற நீலமும் கலந்தாற்போல் படுத்திருந்த வானத்தில் காற்றினிலே அலை பாய்ந்து கொண்டிருந்த அந்த மின்மினி பூச்சியின் வாலின் முனையை கண்டுகொண்டாள் அம்மங்கை.
அது செல்லும் திசையில் நடையை கூட்டினால் இப்போது. அது நேராக ஆருவின் வீட்டருகே இழுத்து சென்றது.
"இது என்ன... இவள் வீட்டுக்கு
மே..லே..யா... அப்படி..யா..னால்...?!?! "
"ச்..ச... ச்..ச... ஆருவா இருக்காது.."
"இருந்தாலும் இவள் செய்தாலும் செய்வாள்... எக்குத்தப்பாக காரியம் செய்வதில் இவளை மிஞ்ச முடியுமா என்ன..??" என்றெண்ணிய படி கதவை தட்ட முனைகையில்... காற்றிலே கானமாய் ஆண்மகன் குரல் மிதந்து வந்தது... திரும்பி பார்த்தாள். அங்கே அவன் ராஜேஷ் இவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
காலை தரிசனம். மனதிற்க்கினியவனின் வருகை. கேசுயல் டீ ஷர்ட்டில் வரி வடிவமாய் தெரிந்த ஆண்மை ததும்பும் மார்பும்.. முறுக்கேறிய கைகளும் மங்கையவள் மனதை மயக்கியது. விழிகளில் காதலை அடக்கி அழகாய் புன்னகைத்தப்படி சொன்னான்,
"குட் மார்னிங் கீது... என்ன இந்த பக்கம்...?"
குரலில் அத்தனை காதல்..
பெண்ணவள் கிறங்கி போக இது ஒன்று போதாதா...?! மங்கை கங்கை ஆற்று நீரில் கால் பதித்து பாவம் போக்கியது போல உணர்ந்தாள்.
அவன் இப்போது கொஞ்சம் அருகில் வந்தான். பெண்ணவள் இன்னும் அதே நிலையில் தான் இருந்தாள்.
"அட.. என்ன இது..?!" கண்கள் கூச மேலே பார்த்தான். பார்த்ததும் தான் தாமதம் ..
"அய்யோ.. அம்மா... பேய்..." என்று அலறிய படி கீதுவின் பின் சென்று ஒளிந்து கொண்டான்.
ஆண்மகன் இப்போது வெகு அருகில். அவன் மூச்சு காற்று முதுகு தண்டில் மயிலறகாய் வருடி சென்றது. அவன் மணம் பெண்ணவள் நாசியில் இஷ்டமாய் நுழைந்தது.
ஒரு நாளிலியே இத்தனை காதல் போதையா... இது தாங்குமா...?!?
அந்த புத்தம் புது காதல் பறவைகள் காதலென்னும் நிழலில் அமர வேண்டாமா...அதற்குள் அங்கே அந்த உருவம் இப்படி காதலனை கோமாளி ஆக்க வேண்டுமா.. அதுவும் அப்பைங்கிளி முன்...?!
அவன் வானத்தில் தெரிந்த அந்த வெள்ளை நிற ஆவி போன்றும்.. அதனை சுற்றி மின்னி மின்னி மறையும் ஒளியையும்... பறந்து பறந்து செல்லும் அந்த உருவத்தையும்... கண்டு வெலவெலத்து போனான். அவன் உடலின் நடுக்கம் பெண்ணவளால் உணர முடிந்தது.
"ஏய் கீது.. என்னை என்னோட வீடு வரைக்கும் கொண்டு போய் விட்ருமா..! உனக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும்..! அட மகமாயி.. என்னை காப்பாத்துமா..." நடுங்கிய படி பதறினான் அந்த காதல் பக்தன்.
"அட லூசு பயலே.. உன்னை எந்த ரேஞ்சுக்கு நான் நினைச்சிருந்தேன். இப்படி கவுத்துட்டியே மடையா..." நொந்து கொண்டாள் பெண்.
ஆற்றாமையால் புசு புசு வென்று கோபம் வந்தது அவளுக்கு. "கொஞ்சமாது தைரியம் வேண்டாமா..?! பெண் நானே நிற்கிறேன். இவன் என்னடாவென்றால் இப்படி தொடை நடுங்கியாக இருக்கிறான். இவனை நம்பி எப்படி நான் என் வாழ்க்கையை ஒப்படைக்க நினைத்தேன்..?!" தன்னையே கடிந்து கொண்டாள்.
"அட ச்ச்சி.. வெளியே வாடா.." சாடினாள் பெண்.
"நோ.. நோ.. நான் வரல.. அங்கே மேலே பாரு.. கோஸ்ட் இருக்கு.. நம்ம மேல தான் சுற்றி சுற்றி வருது.. நீயும் ஒளிஞ்சிக்கோ.." என்றபடி அவளது துப்பட்டாவை எடுத்து இருவரது தலைக்கு மேலேயும் மூடி கொண்டான்.
தீடிரென இத்தனை நெருக்கத்தை பெண்ணவள் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது தான் காதல் மயக்கம் தெளிந்து வந்தால்.. அதற்குள் இவன் ஹனிமூனுக்கு டிக்கெட் போட்டுவிடுவான் போல..
சிந்தனையை அவன் உஷ்ணம் சுக்கு நூறாய் தகர்த்து.. இதயத்தில் காதல் கொடியை நிலைநாட்டியது.
"ஹைய்யோ.. என்ன பண்ணுகிறான் இவன்.? தெரிந்து தான் செய்கிறானா..?! நாலு பேர் பார்க்க இப்படி நடு தெருவில் நின்று கொண்டு செய்யும் செயலா இது..?!"
விழி உயர்த்தி பார்த்தாள். ஆண்மகன் காதல் பார்வை இவள் நெஞ்சை துளைத்தது. 'கண் பார்த்து முகம் நோக்கி பேசும் ஆண்மகன்கள் அத்தனை பேரும் அழகு தான்'. ஆனால் இத்தலைவன் பார்க்கும் பார்வை, சொல்லும் செய்தி, உடல் மொழி, உரிமை கொண்டாடல் எல்லாம் தலைவியை நாணத்தில் குளிக்க செய்தது.. அதுவும் இக்காலை நேர குளிரில்... ஷ்..ஷ்... தாங்குவாளா மங்கை..?!
மனம் பூரித்து போய் கிடக்க.. மான்விழி கண்கள் பம்பரம் ஆடியது... அவனோ பச்ச குழந்தையாட்டம் நடித்தான். விரல்கள் பட்டும் படாமலும் மேனியில் உரச.. பார்வை இவளை மேய... எதுவும் தெரியாதது போல அழகாய் இம்சித்தான்.
"ஏதோ பேயிடமிருந்து காப்பாற்றுவது போல சொல்லிவிட்டு இப்போது இவன் பண்ணும் வேலை தான் என்ன...?!"
"என்ன முழிக்கிற..? ஒழுங்கா மூடிக்கோ இல்லைன்னா பூதம் உள்ளே வந்திற போகுது..!" சொல்லியபடி நெருங்கி வர இடமில்லா இடத்தில் நெருங்கி வந்தான்.
மயிரிலை அளவு இடைவெளி அவன் வி..ட்..ட..து பெரிய சாகசம் தான். பெண்ணவள் இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க ஆசைப்பட்டு ஓடியது.
"தக்...தக்..தக்..." மங்கையின் இதய தாளம் தப்பாமல் சத்தம் எழுப்பியது.
அவள் இதயத்தின் இசை ஆண்மகனுக்கு கொண்டாட்டமோ...?! அவன் காதலை சுவாசத்தின் மூலம் இதய சிரைகள் எடுத்துக் கொண்டு.. அவள் மனக்கிடங்கில் மறைத்து வைத்திருந்த அவன் மீதான காதலை.. தமனிகள் தப்பாமல் உடலெங்கும் தவழவிட்டது..
இந்த உணர்வை பெண்ணவளால் தாக்குப்பிடிக்க முடியாமல்... காதலை கண்களில் ஒளிர ஆரம்பித்த அந்நொடி..
ஆண்மகன் சட்டென துப்பட்டாவை விலக்கினான்.
அங்கே ஆருவின் அம்மா கதவை திறப்பது தெரிந்தது.
"அட.. கீது.. என்ன இந்நேரத்துல... ஹே.. ராஜேஷ் கண்ணா என்னடா இந்த பக்கம்..." என்று இருவரையும் பார்த்து வியந்தபடி கேட்டார்.
"ஒன்றும் இல்லை ஆன்ட்டி சும்மா... மார்னிங் வாக் வந்தேன்.. அப்படியே ஆருவை பார்த்துட்டு போகலாம்னு நினைச்சேன்.
வர்ரப்போ இவன் எதிரில் வரவும் நீங்க டோர் ஓபன் பண்ணவும் சரியா இருந்து..." சரசமாய் அவிழ்த்து விட்டாள்.
"ஓ.. சரிம்மா.. அவளோட ரூம்ல தான் இருக்கா. போய் பாரு. இன்னும் எழுந்த மாதிரி தெரியல..."
"அப்படியா.."
"ஹ்ம்ம்.. நீ போய் பாரு." என்றவர் ராஜேஸின் புறம் திரும்பி
"புதுசா ஒரு வேலையில ஜாயின் பண்ணியிருக்கியாமே.. வேலை எப்படி..? புடிச்சிருக்கா..?!"
உள்ளே செல்ல முனைந்த கீதுவின் கால்கள் இவர்கள் சம்பாஷனையில் தடைப்பட்டு காதவருகிலே மறைந்து நின்று கொண்டாள். அவன் வாய் வழி தகவல் கேட்க விரும்பியது மனம்.
"ஆமா ஆன்ட்டி.. ஜாயின் பண்ணி ஒரு மாசம் ஆகுது. ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கு. லைஃப்ல செட்டில் ஆகுற மாதிரி தான் சம்பளம்."
"அப்படின்னா ரொம்ப சந்தோஷம்."
பெண்ணவளுக்கும் ஆனந்தம் தான்.
"கீ..ர்..த்..த..னா அ..க்..கா.. நீங்க பார்த்தீங்களா அந்த பூதத்தை.. அதோ அங்கே நிக்குது பாருங்க...!" என்று பயந்தபடி வந்தார் பக்கத்து வீட்டு மாலதி அக்கா.
"ஆமா ஆன்ட்டி நான் கூட பார்த்தேன்" என்றபடி அவனும் சேர்ந்து கொண்டான்.
"எ..ன்..ன...?! எதை சொல்லுறீங்க...? பூதமா..?! எங்கே..?! ".
"இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள்.
"ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா.
"பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர்.
"நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த பாடில்லை... அவர் பொண்டாட்டி ஒரே புலம்பல்க்கா..." தகவல் சொன்னார் மாலதி.
"அது மட்டுமில்லை மாலதி அக்கா.. நம்ம குர்காவை இப்போ தான் ஆம்புலன்ஸ்ல ஏற்றிட்டு போறாங்க.. அவரையும் இந்த பூதம் தான் ஏதோ பண்ணியிருக்கணும்.." அவனும் தனக்கு தெரிந்த தகவலை சொன்னான்.
இவர்கள் பேச்சு தொடரவும் சரி நாம் வந்த வேலையை பார்ப்போம் என்றெண்ணியபடி.. கீது கடகடவென ஆருவின் அறைக்கு சென்று பார்த்தாள்.. அம்மணி படுக்கையில் காணவில்லை.
"இது என்னடா..?? இவள் எங்க போனா..?!"
முகத்தில் வெளிக்காற்று தீண்டவும் ஜன்னல் புறம் பார்த்தாள்.. அங்கே கும்பகர்ணி சேரில் அமர்ந்த வாக்கில் தலையை ஜன்னல் புறம் வைத்து தூங்கி கொண்டிருந்தாள்.
"இவள் எதற்கு ஜன்னலருகே சென்று உக்காந்துகிட்டே தூங்குறா..?!!" புருவம் தூக்கி யோசித்தாள் பெண்.
"ஹ்ம்ம்.. சரி தான்.. இவள் வேலையா தான் இருக்கும்" எண்ணியபடி ஆருவின் அருகில் வந்தாள். குனிந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தெளிவாக அந்த வெள்ளை பூதம் காட்சி தந்தது..
"ஹ்ம்ம்... இதை பார்க்க தான் அம்மணி இப்படி கிடந்து தூங்குறாளா...??!"
"ஏய்.. ஏய்.. ஆரு.. எழுந்துருடி...! இது என்ன வேலை... !" ஆருவை எழுப்பியபடி கேட்டாள்.
"ச் ச் ச்... மம்மி சும்மா இரு... இல்லை நீ ஆகிடுவ டம்மி...!" சொல்லியபடி தலையை வசதியாக சாய்த்து கொண்டாள்.
"ஹே...பூசி போன கத்தரிக்காய்.. எழுந்திருடி நாயே..."
அலரலில் இப்போது ஆரு முழித்து கொண்டாள்.
"ஷ்..ஷ்..
கத்தாதடி எருமை.. கடிச்சிடுவேன் உன்னை..." பதிலுக்கு அவளும் கத்தினாள். தூக்கம் கெடுகிறதே என்ற கவலை..
"என்னடி பண்ணி வச்சிருக்க... வெளியே என்ன நடக்குதுன்னு தெரியுமா..?!"
கொட்டாவி ஒன்றை விட்டப்படி.. "எனக்கு எப்ப..டி..டி தெரியும்.??! நான் என்ன வெளியே போய் பார்த்துகிட்டா இருக்கேன்.?!"
"வர்ற கோபத்து...க்கு அடிச்சிடுவேன் உன்னை.. நீ என்னடி பண்ண.. முதல அதை சொல்லு"
"இது என்ன..?? நீ ஏன் பெட்ல படுக்கமா இங்க ஜன்னல் பக்கம் உக்காந்து தூங்குன்னா..."
சர சரவென.. ஆருவிற்கு நேற்றிரவு நடந்தது நியாபகத்திற்கு வந்தது. "அச்சோ.. மறந்துட்டே..ன்..டீ" பதறியப்படி ஜன்னல்புறம் பார்த்தாள். அவளையும் பார்த்து சிரித்தது அந்த ஆவி. கூடவே அந்த ஏரியா ஆட்களையும் தான்.
"ஹைய்யோ.. இப்போ என்னடி செய்ய..."
"இப்போ பீல் பண்ணி ஒன்னும் ஆக போறது இல்லை. முதல நீ என்ன பண்ணுனன்னு சொல்லு..."
"அ...து...வா..." என்று தயங்கிய படி விஷயத்தை சொன்னாள் பெண்..
நேற்றிரவு தூக்கம் வராமல் தவித்ததையும்.. பின் செய்த செயலையும்...
"சோ நான் மட்டும் தூக்கம் வராமல் கஷ்டப்படுற மாதிரி எல்லோரும் ப..ட..ட..ட்..டு..மே அப்டிங்கிற எண்ண..த்..து..ல..." கைகளை பிசைந்தபடி இழுத்தாள் பெண்.
"ஹ்ம்மம்ம்... மேலே சொல்லு.."
"என்..னோ..ட.. ஜிகினா பதித்த வெள்ளை துப்பட்டாவை பட்டத்துல கட்டிட்டு.."
"ம்ம்ம்... அப்புறம்..."
"அதோ..ட.. பட்டம் பார்க்க கோஸ்ட் மாதிரி தெரிய... முடியை விரிச்சபடி கோரமா ஒரு பெண்ணோட முகத்தை வரைஞ்சு... அந்த பட்டத்தோட ஒட்டினேன்.. கொஞ்சம் பார்க்க பேய் மாதிரி... இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சா.. அதான்... அப்படியே மின்மினி பூச்சி மாதிரி பளிச்சுன்னு தெரியட்டுமேன்னு...
கூடவே கொஞ்சம் டெக்கரேஷனுக்கு... ரேடியம் ஸ்டிக்கர்ஸ் ஒட்டுனேன்..."
"அடி பாவி.. நல்லா தான் யோசிச்சிருக்க போ...! அப்புறம்..?"
"அதை மேலே கொண்டு போய் பறக்க விட்டுட்டு நூலை அங்கே இருந்த பைப்பில கட்டிட்டேன்"
"அச்சு அசல் பேய் மாதிரியே இருந்துச்சிடி! அந்த ராத்திரி நேரத்துல பார்க்க சும்மா ஜம்ம்ன்னு இருந்து...!! சோ என்னோட பிளான் படி ராத்திரி கச்சேரிக்கு ஹீரோயின் ரெடி..." சிரித்தபடி சொன்னாள்.
"இருந்தாலும் இதை பார்த்து யாரோட தூக்கமாது போகண்ணுமே... அப்படின்னு நினைச்சி.. செக் பண்ணி பார்த்தேன்..."
"என்னடி சொல்லுற...??! எப்படி செக் பண்ணுன ?!?யாருடி அந்த சோதனை எலி.???"
"அ..து..வா...?? நம்ம ஏரியா குர்க்கா தான்...!" சிரித்தபடி சொன்னாள்.
"அப்புறம் என்ன.. அவர் என் வீட்டு பக்கம் வர்றப்போ.. பேய் மாதிரி சிரிச்சிகிட்டே... கத்துனேன்னா.. அவன் பயந்து போய் ஓடிட்டான்.." புன்னகைத்து கொண்டாள் ஆரு.
"ஹைய்யோ..."
கையை தலையில் வைத்தபடி நொந்து போனாள் கீது.
"ஏன் டி நீ பீல் பண்ணுற...??!"
"கொன்னுருவேன் உன்னை... நீ பண்ணி வச்சிருக்கிற காரியத்துக்கு... உன்னை..." கைகளால் அவள் கழுத்தை நெருக்குவது போல் செய்தாள்.
"ஏய்... என்னடி ஆச்சு..." ஆருவிற்கு இப்போது லேசான பயம் ஒற்றிக் கொண்டது.
"முதலில் மாடிக்கு போவோம் வா..." இருவரும் தட தட வென மாடிக்கு ஓடினர்.
"ஹேய் முதல அந்த பட்டத்தை அவுத்து விடுடி.."
ஆருவும் கட கடவென சென்று பட்டத்தை அவிழ்க்க பார்த்தாள். முடியவில்லை.
"என்னடி முழிக்கிற..?"
"கீது முடிச்சை எடுக்க முடியலடி..." பாவமாய் சொன்னாள் ஆரு.
"எந்த லட்சணத்துலடி கட்டுன...??!" சொல்லியபடி அருகே வந்து முயன்றாள் கீது. அவளாலும் முடியவில்லை.
"இப்போது என்ன செய்வது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமே... இல்லாவிட்டால் ஆரு மாட்டிக்கொள்வாளே..." பதறிய மனதை அடக்கியபடி... பட்டத்தின் நூலை பற்களால் கடித்து அறுபட செய்தாள்.
நூல் துண்டிக்கப் பட்டதும் அங்கும் இங்கும் குட்டிகரணம் போட்டபடி... அந்த பூதம் வானில் பறந்து சென்றது...
"ஹேய்.. ஹேய்... என்னோட துப்பட்டாடி..." பதறினாள் ஆரு.
"வாயை மூடுடி கழுதை.." முதுகிலே ஒன்று போட்டாள் கீது.
"ஷ் ஷ்... ஏன்டி அடிக்கிற...??"
"போற சனியனை ஏன்டி கூப்பிடுற...?!"
"அது என்னோட பேவரைட் துப்பட்டாடி... !"
"ஆமா ஆமா.. இப்போ ரொம்ப முக்கியம்.. தலையே போக போகுது இப்போ உனக்கு மூடிக்க துண்டு வேணுமா...?!"
"சும்மா கம்முன்னு இரு.."
"நீ பண்ணி வச்ச காரியத்தால அங்கே குர்க்கா ஆஸ்ப்பிட்டல கிடக்கிறான்.. டீ கடைக்காரன் மயக்கத்துல கிடக்கான்... ஏரியா ஆட்கள் எல்லாம் பயந்து போய் கிடக்கிறாங்க... அது மட்டுமா...??
ஹ்ம்ம்...?!" இடுப்பில் கை வைத்து புருவம் உயர்த்திய படி சொன்னாள் கீது.
"அது மட்டு..மா..டி...?! உன் துப்பட்டாவை பேயின்னு நம்பி போலீஸுக்கு வேற தகவல் சொல்லியாச்சி... இப்போ வந்து உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்ப போறாங்க.. அங்கே போய் உன் துப்பட்டா காணும்ன்னு கம்ப்பெலேய்ன் பண்ணு... சரியா...?!" நக்கலாய் முடித்தாள் தோழி.
"ஹேய்.. என்னடி சொல்லுற.. எல்லாம் நிஜமா..?!"
"பி..ன்..ன...?!! நான் என்ன பல்லாங்குழியா விளையாடுறேன்.. அடி போடி... இவளே...!!"
ஆரு அமைதி ஆகி விட்டாள். அவள் செய்த முட்டாள் தனம் , அவளை எங்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. ஆருவின் மௌனம் கீதுவிற்கு புரிந்தது. அதை கலைக்க விரும்பவில்லை அவள்.
வானமகள் இப்பொழுது நிலா குளியல் முடிந்ததன் அடையாளமாக மஞ்சள் பூசி... முகம் சிவக்க.. சூரியனை நெற்றியில் பொட்டு வைத்து... அன்றைய வேலைக்கு தயாராகி காட்சி தந்தாள்.
காலை நேர இளம் வெயில் ஆருவின் முகத்தில் பட்டு தங்கத்தில் ஜொலித்தது... அவளை தேவதையாட்டம் காண்பித்தது.. கூடவே அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த நீல பச்சை டாலரும் ஒளிர்ந்தது மயில் நீல நிறத்தில்...
ஆச்சர்யப்பட்டு போனாள் கீது. இது என்ன... வித்தியாசமாய்...
ஆரு தங்க நிறத்தில் ஜொலிக்க... அக்கற்கள் பசுமை கலந்த நீல நிறத்தில் ஒளிர... சாட்சாத் அந்த கடவுள் லட்சுமி தேவியாட்டம் தெரிந்தாள்.
கீதுவிற்குள் பரவசம் பொங்கியது. ஏதோ ஒருவித புது அனுபவத்தை அவளுள் பாய்ச்சியது.. அவ்வொளி மெதுவாக பட்டு தெறித்து... ஒளி பிரகாசமகி... பின் சட்டென மறைந்து விட்டது.. இது என்ன விதமான கற்கள்...?!
ஒரு நொடி மேனியே சிலிர்த்து விட்டதே.. அ..ப்..ப..ப்..பா... இப்பொழுது கூட ஸ்பரிசம் கூசுகிறதே...
"ஹேய் ஆரு.. ஆரு.." தோள் தொட்டு அழைத்தாள் கீது..
"ஹ்ம்ம்.. நான் இந்த அளவுக்கு சீரியஸ் ஆகும்னு நினைக்கலை கீது.. அந்த குர்க்காகக்கு ஏதும் ஆகிடுமா ...?!
டீ கடைகாரன் முழிச்சிப்பானா..??!"
"அதெல்லாம் ஒன்றும் ஆகாது... நீ பயப்படாதா... நீ தான் பன்ணுனன்னு எந்தவித ஆதாரமும் இல்லை. அதோட.. இதை யாரு பெருசு படுத்த போறா... நீ தைரியமா இரு.. இனி இப்படி லூசுதனமா எதுவும் பண்ணி தொலைக்கதா... சரியா..."
"ஹ்ம்ம்..." பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிப் கொண்டாள்.
"அப்புறம் இந்த செயின்..." என்றபடி அவள் கழுத்தில் அணிந்திருந்தை தூக்கி காண்பித்தவள்... "இந்த டாலர் இப்போ மின்னுச்சிடி... அது பார்க்க ஏதோ தெய்வீகமா இருந்து... நானே ஒரு நொடி ஸ்தம்பித்து போய்ட்டேன் டி..."
"இது அன்றைக்கு இருட்டுல வந்த ஆ..ள்.." ஆரு முறைக்கவும்...
"சரி சரி தேவேந்திரன் தானே உனக்கு தந்ததா சொன்ன... ??ஹ்ம்ம்..??"
"ம்ம்ம்.ஆமா".
"இது ஒரு வேளை வைரமா இருக்குமோ.. அழகா ஜொலி ஜொலிச்சுடி... பேசாம விற்றுவிடுவோமா..."
"பேசாம ஓடிரு.. மவளே... நானே இதை அவனோட நியபகர்த்தமா வச்சிருக்கேன். இதை போய் விற்க சொல்லுற..அதுவும் இல்லாம இது எனக்கு சொந்தமானது இல்ல. கண்டிப்பா அவன் வருவான்.. அப்போ இதை அவன்கிட்ட கொடுப்பேன். அதுவரை என்னோட பதுகாப்புல இது இருக்கும்."
"இனி இது போல பேசாத.." சொல்லியபடி அவள் கீழிறங்கி செல்லும் ஆருவையே கீது பார்த்துக்கொண்டு இருந்தாள்..