ஐம்பத்தி மூன்றாம் பகுதி...
யானை வாயிற் கதவை தும்சம் செய்துவிட்டு, தோட்டத்தை பிய்த்து எரிந்து தறிகொட்டு வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தது.
பவித்ரன் வாயிலை நோக்கி ஓட, நாய்கள் அவனை நோக்கி சீறிப் பாய்ந்தன.
யானையும், பவித்ரனும் எதிரெதிரே வர, அவர்களுக்கிடையேயான தூரம் சட்டென குறைய, பவித்ரனை துரத்தி வந்த நாய்கள், அவனை பிடிக்க ஒரே பாய்ச்சலில் தாவியது.
பவித்ரன், சட்டென பக்கவாட்டில் பாய்ந்துவிட்டான். பலம் கொண்ட யானை, பாய்ந்த ஒரு நாயை, தும்பிக்கையால் தூக்கி வீசியது. மற்றொரு நாயை ஓங்கி மிதித்து கொன்றது.
ரத்தம் உறைய இதை அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். யானை முன்னேறவும் சுதாரித்த அனைவரும் வீட்டுக்குள் ஓடினர்.
யானை சில நிமிடங்களில் வீட்டை நெருங்க, முன் வராண்டாவில் ராஜா இதை அறியாமல் விளையாடிக்கொண்டிருந்தான். வள்ளி, ராஜா உள்ளே வந்திடு டா என கத்தவும்தான் அனைவரும் அவனைப் பார்த்தனர்.
ராஜா தலையை நிமிர்ந்து பார்க்க யானை வேகமாக ஓடிவருவதைக் கண்டவன், பயத்தில் அம்மா!! என அழ ஆரம்பித்தான்.
ரஞ்சனி யானை வரும் முன் அவனை காப்பாற்ற நினைத்து அவனை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவள் எதிரே, யானை தும்பிக்கையை தூக்கியபடி நின்றது. ராஜாவின் வாயை மூடி அவனது அழுகையை பட்டென நிறுத்தியவள், தானும் அசையாது நின்றாள்.
ரஞ்சனி மூச்சைப் பிடித்துக்கொண்டு நிற்க, யானை மூச்சையாகி பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. யானையின் தும்பிக்கை அவளது இடதுதோளில் பட்டு சரிய, ரஞ்சனியின் மனது பட்பட்டென அடித்துக்கொண்டது.
யானை கீழே விழவும்தான் அனைவருக்கும் மூச்சு சீரானது. அனைவரும் ரஞ்சனியை நோக்கி ஓடி வந்தனர்.
பவித்ரன் வேகமாக வந்து ரஞ்சனியை உலுக்கினான். அவள் கையிலிருந்த ராஜாவை வாங்கி, ஓடிவந்த வள்ளியிடம் நீட்டியவன், டாலி ஆர் யூ ஓகே!! என்றான்.
ரஞ்சனியின் மனதை சற்றுமுன் நடந்த சம்பவம் உலுக்கியதில், அவள் பேச்சற்று ம்..என்றுமட்டும் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த சுவற்றை ஆசுவாசத்திற்கு பிடித்தாள்.
யானை எப்படி வீழ்ந்தது என அவள் அதை ஆராய, கால்களில் முடுச்சுகளும், சுருக்குகளிலுமான கயிறு, அது கயிறு என்று சொல்வதை விட வடம் என்றுதான் சொல்ல வேண்டும் .அதில் யானையின் கால்கள் சிக்குண்டு கிடந்தது. கழுத்தில் மயக்க மருந்து கொண்ட ஊசி சொருகப்பட்டிருந்தது.
பவித்ரன் உள்ளங்கையில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்தது. ரஞ்சனி அவனது கையைக்கண்டதும் பதறினாள்.
இப்படி ஏதேனும் பெரிய மிருகம் உள்ளே வரும்போது, அதன் ஓட்டத்தை தடுக்கவும், அதை வீழ்த்தவும் இந்த கயிறு வாயிலில் இருப்பது வழக்கம். அதை எடுக்கத்தான் ஓடினேன் என்றான் பவித்ரன்.
கயிற்றை வேகமாக வீசியதில், கையில் கயிற்றிலிருந்த செத்தை கிழித்திருக்கும். கால்களில் கயிறு சரியான சமயத்தில் சிக்குண்டதால் தான் யானை நகர முடியாமல் தும்பிக்கை தூக்கி நின்றது. நல்லவேலை மருது அதற்குள், மயக்க மருந்து செலுத்தியதில், எல்லோரும் பிழைக்க முடிந்தது என்றான் பவித்ரன்.
ரஞ்சனி, பவித்ரனை உள்ளே அழைத்துச் சென்று, உள்ளங்கையின் குறுக்காக வெட்டுபட்ட இடத்தில், மருந்திட்டாள்.
பேண்டேஜின் முடிச்சை அவள் இறுக்கியதில், பவித்ரன் ஸ்... எனவும் பதறி அவனைப் பார்த்தவள், சாரி... சாரி பவி. ரொம்ப வலிக்குதா பவி?? டாக்டரை கூப்பிடவா?? என்றவளின் கண்களை உற்றுப் பார்த்தவனுக்கு அவளது கனிவு இனித்தது.
இதுவும் பொய்யாக இருந்துவிடக்கூடாதே என தவித்தான். வேண்டாம்!! சரியாயிடும் என்றவன் தனது கையை உறுவிக்கொண்டான்.
முதலுதவிப் பெட்டியை மூடி இடது கையில் அதை தூக்கியவளின் தோள்பட்டை சுருக்கென வலிக்க, கையிலிருந்த பெட்டி நழுவி விழுந்தது.
பெட்டி விழுந்த சத்தத்தில் திரும்பி ரஞ்சனியை பார்த்தான் பவித்ரன். அவள் எதுவும் சொல்லாமல் மடமடவென படியேறிச் சென்றுவிட்டாள்.
சிதறிய பொருட்களை கூட எடுத்துவைக்கவில்லை. என்னானது இவளுக்கு??? என நினைத்தவன், பின்பு, வனத்துரையினர் வரவே அதை மறந்து போனான்.
யானை லாரியில் ஏற்றி அனுப்பப் பட்டது.
டிரைனர்கள் இருவரும் என்ன செய்வதென தெரியாமல் முழித்தனர்.
யானைகாலில் மிதிபட்ட நாய் இறந்துவிட்டது. தூக்கி வீசப்பட்ட நாயோ, படுகாயமுற்று துடித்துக்கொண்டிருந்தது.
பவித்ரன் கால்நடைகளுக்கான மருத்துவமனைக்கு படுகாயமுற்ற நாயுடன், அதன் டிரைனரை அனுப்பி வைத்தான்.
காலையில் எடுந்ததும் ஆரம்பித்த கலவரம், அனைத்தையும் முடிக்க மதியம் தாண்டிவிட்டது.
காபி கொட்டிய சட்டையை மட்டும் கழற்றி வீசியிருந்தான். வெள்ள பனியனில் சற்றே காபிகரைபடிந்த கோடுகள் தெரிந்தன.
வள்ளி மதிய உணவிற்கு அழைத்ததும், குளித்துவிட்டு வருகிறேன் என்றவன், தனது அறைக்குச் சென்றான்.
காணாமல் போன துணிகள் திரும்பியிருந்தன. மேசையிலிருந்த செல்போன் மீது அதன் சிம்கார்டு வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த டிராமாவாக்கும், இருக்கட்டும் என நினைத்தவன், குளித்துவிட்டு உணவருந்தச் சென்றான்.
ரஞ்சனி காலையில் தனது அறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டவள், இன்னும் வெளியில் வரவில்லை.
நான் கதவதட்டி கூப்பிட்டு பாத்தேன், ஆனா, அவங்க, எனக்கு சாப்பாடு வேணாம்னு உள்ளயிருந்தே சொல்லீட்டாங்க என பவித்ரன் கேட்காத கேள்விக்கு வள்ளி விடையளித்தாள்.
ம்... என்றவன் வேறேதும் சொல்லாமல் சாப்பிட்டுக் தொழிற்சாலைக்குக் கிளம்பினான்.
அப்போது அவனிடம் வந்த வள்ளி, ஐயா நான் நம்ம கோயம்புத்தூர் வீட்டுக்கு போறேன். ராஜா யானைய பக்கத்துல பாத்ததுல வேற பயந்துட்டான். சின்ன பையன் பாம்பு வந்தாலும் அவனுக்குத் தெரியாது , அதனாலதான் என்றாள்.
மருது, வள்ளியிடம் கோபம் கொண்டான். வள்ளி!! அம்மாவும், சாரும் இங்க இருக்கும் போது, நீ அங்க என்ன செய்யப்போற என்றான்.
மருதுவின் போச்சை கைநீட்டி நிறுத்திய பவித்ரன், வள்ளியிடம், உன்னோட பயம் எனக்கு புரியுது. சரி வா, நானும் கோயம்புத்தூர் தான் போறேன் என்றான்.
மருதுவிடம் திரும்பி, தோட்டத்தை சரிபண்ண ஏற்பாடு செய்துரு, அடுத்து அந்த வாசல பழைய படி கட்ட ஆளுங்கள வரச்சொல்லு என்றுவிட்டு வாடகைக் காரை எடுத்துக்கொண்டு ஊட்டி வீட்டைவிட்டு கிளம்பினான் பவித்ரன்.