ரஞ்சனி ஊசியின் தாக்கத்தால் நான்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் தூக்கம் கலைந்த போது, வெயில் படர ஆரம்பித்திருந்தது. இடது கையை தூக்க முடியவில்லை. கண்களை லேசாக திறக்க, பவித்ரன் அருகில் தூக்கிக்கொண்டிருந்தான். கோபத்தில் வேகமாக எழுந்தவள், அதைவிட வேகமாக திரும்பவும் மொத்தையில் பொத்தென விழுந்தாள்.
கையில் யாரோ சுத்தியலால் அடித்தது போல் துடித்தாள். ரஞ்சனி மீண்டும் மெத்தையில் விழுந்த அதிர்வில் தூக்கம் கலைந்த பவித்ரன், கண்எதிரே வலியில் முகத்தை சுழித்த வண்ணம் படுத்திருந்தாள் ரஞ்சனி .
பவித்ரனுக்கு பட்டென தூக்கம் கலைய, வலிக்குதா ரஞ்சனி?? என்றான்.
அவனைப் பார்த்து முறைத்தவள், யாரைக்கேட்டு உள்ள வந்தீங்க, கெட் அவுட் ஆப் திஸ் ரூம் என்றாள்.
பவித்ரன் அவள் சொன்னதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எழ முடியலையா?? என அவளது நிலையை சரியாக கணித்தவன், அவளை தோள் தாங்கி உட்கார வைத்தான்.
பவித்ரன், உங்க உதவிக்கு நன்றி. ஆனா பிளீஸ் எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நானே என்ன பாத்துக்கிறேன் என்றாள் அவனது உதவியை ஏற்க மனமில்லாதவளாக.
பவித்ரன் அவளது முகத்தின் எதிரே தனது கையைக்காட்டினான். இது நேத்து நீ போட்ட கட்டுதான?? அதே போல இந்த உதவியும் எடுத்துக்கோ என்றான்.
ம்சூஊ... எனக்கு எந்த உதவியும் வேண்டாம். அதுவும் உங்கள் கைகளால் வேண்டவே வேண்டாம் என்றுமுகத்தை சுழித்தாள்.
காபி என வேலைகாரர்களுக்கு ஒரு குரல் கொடுத்தவன், மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தான்.
ரஞ்சனி கையைநீட்டி தனது செல்லை எடுத்தவள், அருகிலிருந்த மருந்துச்சீட்டைப் பார்த்து, அதன் மருத்துவமனைக்கு போன் செய்தாள்.
என்ன வேண்டும்?? ரஞ்சனி என்றான் பவித்ரன்.
அவள் பவித்ரனை கண்டுகொள்ளவில்லை. லைன் கிடைத்ததும், நான் இங்கிருந்து பேசுகிறேன் என வீட்டுவிலாசத்தை கூறியவள், எனக்கு உதவிக்கு யாரேனும் ஒரு பெண் செவிலியரை அனுப்ப முடியுமா?? எனக்கேட்டாள்.
அங்கிருந்து பதில் சொல்லும் முன், பவித்ரன் அவளது பேசியை கைப்பற்றானான். அவள் என்னவென பார்க்க, அவளது சிம்மை உறுவியவன், வெற்றுபோனை திருப்பிக்கொடுத்தான்.
அவனது செயலில் கோபம் கொண்டவளின் வார்த்தை நெருப்பாக வந்தது.
இப்போ என்னை என்ன செய்யலாம்னு காத்திருக்கீங்க, எழமுடியாத கையுடைந்த நிலையில் உங்கள் எதிரி, உங்கள் வீட்டில் இருக்கிறாள். கொன்று புதைத்தாலும், சத்தம் இந்த காம்பௌண்டை தாண்டுவது கடினம். கொலையா?? இல்லை கற்பழிப்பு மட்டும் தானா??? என பவித்ரனை வார்த்தையால் கூறுபோட்டாள்.
ரஞ்சனியின் கொலைகார நாக்கை சகிக்கமுடியாதவன் வெளியே சென்றான், பட்டென ஒரு அரிவாளுடன் உள்ளே நுழைந்தான்.
இந்தா என அவள்புறம் தூக்கிப்போட்டவன், அவனது கையிரண்டையும் அவள்புறம் நீட்டி, வெட்டு!! என்றான்.
ரஞ்சனி சற்றே அதிர்ந்து விழிக்க, பழிவாங்கத்தான வந்த, உனக்கு ஒரு கை தூக்கமுடியாத பட்சத்தில் எதிரியோட ரெண்டுகையையும் வெட்டனும் இல்லையா அதுதான உன் வழி, வெட்டு என்றான்.
ரஞ்சனிக்கு வார்த்தை வரவில்லை. அவனது நிமிர்ந்த தோள் சற்றே இறங்கியது. உடலின் சக்தி முழுவதும் வழிய ரஞ்சனி, பவித்ரனைப் பார்த்து, எனது எண்ணம் அதுவல்ல, அதை புரிந்துகொல்லவும் யாராலும் முடியாது என்றாள் அமைதியாக...
ஓ...அப்படீனா என் தலை வேண்டுமா?? உன் இஷ்டம், அரிவாள் உன் கையில் இருக்கும் போது, தலையானாலும், கையானாலும் உன் விருப்பம் தானே!!
பிளீஸ் பவித்ரன் ஸ்டாப். பழி வாங்குவதில் இரண்டு வகை உண்டு தவறுக்கு தண்டனை. மற்றொன்று தவறு செய்தவர்களை தண்டனை கிடைக்கும் என பயம்பட வைத்து, அவர்களது தவறுகளை அவர்களே சரிசெய்ய வைப்பது என்றாள்.
பவித்ரன் முகம் மலர்ந்தது, பட்டென அவள் அருகில் அமர்ந்தான். அவளை அணைக்கத்துடித்த கைகளை விரித்து நீட்டியவன், எனக்கான மற்றொரு சந்தர்பத்தை இப்போதே தா!! என்றான்.
நான் சூடுபட்ட பூனை... நம்பமுடியாதே என்றாள். ஆனால் அவள் முகத்தில் கடுமையில்லை.
கதவு தட்டப்பட, காபி என நினைத்த ரஞ்சனி, வாங்க எனவும், லதாவும் பிரணவும் நின்றிருந்தனர்.
லதாவிற்கு ரஞ்சனிகையிலுள்ள பெரிய கட்டும், பவித்ரன் கைகட்டும் கண்ணில் விழ, படபடத்து என்னாச்சுமா என அருகில் வந்தார்.
திடீரென மகனைப் பார்த்த சந்தோசத்தில், ரஞ்சனி அவனைப்பார்த்து சிரிக்க, அவனோ டாடி என பவித்ரனை தாவி வந்து கட்டிக்கொண்டான்.
ரஞ்சனிக்கு சற்றே அதிர்ச்சி. பவித்ரன் மகனை முதல்மறை கண்ட சந்தோசத்தில் அவனை இறுக அணைத்துக்கொண்டான்.
பவித்ரனுக்கு வார்த்தைகள் வரவில்லை. டாடி எங்க போனீங்க?? என்ன ஏன் பாக்க வரல?? என தனது மழலையில் அவனும் தந்தையைக் காணாத தவிப்பை வார்த்தைகளில் தெரிவித்துவிட்டான்.
பவித்ரன், நான் இந்த நிமிடத்திற்காக காத்திருந்தேன் என்றான். அவனது வார்த்தை பிரணவுக்கு புரியவில்லை. நான் அம்மாகிட்டதான இருந்தேன். யூ ஆர் வெய்ட்டிங் சோ லாங் டாடி, வந்து என்ன பாக்கவேண்டியது தான என்றான்.
பிரணவின் வார்த்தைகளில் தனது மனது பிரதிபலிப்பதை நினைத்த ரஞ்சனி முகத்திலும் லேசான சிரிப்பு தோன்ற, இதை பார்த்துக்கொண்டிருந்த லதாவின் மனது நிறைந்தது.
எப்படி காயமானது எனக்கேட்டார், நீங்க பேசுங்க ஆண்ட்டி, நாங்க வற்றோம் என பிரணவுடன் பவித்ரன் வெளியேறினான்.
என்ன ரஞ்சனி, என்னாச்சுமா?? என லதா கேட்க, ரஞ்சனியின் கவனம், பவித்ரனிடம் தொற்றிக்கொண்டு சென்ற தன் மகன்மீதே இருந்தது.
ஒரு யானை வழி தெரியாம காம்பௌண்டுக்குள் வந்துடுச்சு, அது பண்ண அட்டகாசத்துல, எல்லோருக்கும் ஒவ்வொரு காயம் என சுருக்கமாக கூறினாள்.
வீட்டில் தோட்டத்தில் உடைக்கப்பட்டிருந்த மரமும், வாயிற்கதவு புதிதாக கட்டிக்கொண்டிருப்பதும், பார்த்துவிட்டுத்தான் லதா வந்தார். ஆனாலும்..இவளிடம் எப்படியானது என மறுமுறை கேட்டாள் சாமியாடிவிடுவாள் என நினையத்தவர், எதையும் தோண்டிக்கேட்கவில்லை.
சரி ரஞ்சூ உடம்ப பாத்துக்கோ, பிரணவையும் பார்த்துக்கோ! நான் ஊருக்குப் போய்டு வற்றேன் என உடனடியாக கிளம்பிவிட்டார்.
ரஞ்சனி புருவம் சுருக்கினாள். காயத்தை பார்த்தவுடன், வாம்மா!! நம்ம ஊருக்கு போகலாம் என கூப்பிடுவார் என நினைத்தாள் ரஞ்சனி.
நீ என்ன நினைச்சு பிரணவ இங்க கொண்டு வந்து விட்டுட்டு போறனு எனக்கு புரியுது. ஆனா பிரணவ உடனே ஊருக்கு கூட்டீட்டு போமா. நான் இன்னும் ரெண்டே நாள்ல சென்னை வந்திடுவேன் என ஒரு பெரிய குண்டாக தூக்கிப்போட்டாள் ரஞ்சனி.
ரஞ்சனி!! நீ பேசுறது சரியில்லை. நீ பவித்ரனோட ராசி ஆயிட்டனு தான் நினைச்சேன். நீங்க ரெண்டு பேரும் நான் வரும்போது நல்லாத்தான பேசீட்டு இருந்தீங்க, பிறகென்ன என்றார் லதா.
நான் வந்தது அவரை தண்டிக்க, அவர் என்னோட பேசீட்டு இருப்பது, அவர் பேக்டரிக்காக, இதில் பிரணவ் பவித்ரன் கையில் இருப்பது எனக்கு சரியா படலை. அவனை உன்னோடயே கூட்டீட்டு போமா என்றாள் ரஞ்சனி.
அந்த சமயம் பவித்ரன் சரியாக பிரணவுடன் அறை வாயிலில் நுழைத்தான். பிரணவ் சாக்லேட்டை சுவைத்தவண்ணம் தந்தையின் தோள்களை கட்டிக்கொண்டான். ரஞ்சனியின் வார்த்தைகளில் பவித்ரன் கொதித்து நின்றான்.