நாற்பதாம் பகுதி..
டீரீம்ஸ் கடையில் முக்கியமான மின்தூக்கி பழுதுபட்டது. ராஜா உடனே நம்ம வாடிக்கையான நிறுவனத்தில் சொல்லி சரிபாருங்கள் என்றான்.
ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க, ஒருவன் வந்தான். வலுக்கை தலையும் திருட்டு முழியுமாக
ராஜா, அவரை சந்தேகித்து, ஒரு புகைப்படம் எடுத்து, அவர்கள் நிறுவனத்திற்கு அனுப்பினான். இவன்தான் நீங்கள் அனுப்பிய டெக்னீசியனா?? என்ற கேள்வியுடன்.
உடனே பதில் இல்லை என வந்தது.
ராஜா அவனைப் பிடித்து, அறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டான். வந்தவனிடம், யார் அனுப்புனா?? சொல்லு, போலீச கூப்பிடவா?? என கேள்விகேட்டான்.
நடுத்தர வயதுக்காரனோ உடனே சட்டையில் மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியை கையிலெடுத்தான். அவனது குறி நேராக ராஜாவை குறிவைத்தது.
அறையில் அவனை கூட்டிவந்த ஆட்களும் பயந்து விலகினர். அங்க துப்பாக்கியை கண்டதும் சில நொடி நிசப்தமானது.
ராஜாவின் அறைக்கு ஏதோ வேலை விசயமாக ஒரு பெண்வந்து கதவைத்திறந்தாள்.
எல்லோரும் உறைந்து நிற்க, அவளைப் பிடித்துக்கொண்டு குறியை அவளுக்கு மாற்றினான் அந்த வலுக்கை தலை.
என்னை ஒழுங்காக போக விடு, என அவன் ரிகரை பின்புறம் இழுக்க, என்னானதோ, துப்பாக்கி மேல் நோக்கி வெடித்தது. வந்தவன் சுருண்டு கிடந்தான். அவனது துப்பாக்கியை பிடித்திருந்த கரம், இரத்தம் வலிந்து கொண்டிருந்தது.
துப்பாக்கி அவன் கையிலிருந்து எம்பி முன்னால் விழுந்தது.
அதை அவன் எடுக்கப் போகும் முன், அந்த பெண் அவன் மீது ஏறி அமர்ந்து, அவனது இரு கரத்தையும் பார்சல் செலோ டேப்பால் சுற்றிவிட்டு, வெற்றிகரமாக எழுந்தாள்.
அறையிலுள்ள ஆண்கள் அந்தப் பெண்ணை வியந்து பார்த்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் அவனை தாக்கிவிட்டு, எதுவும் நடவாதது போல், அவன் இழுத்ததில் சிதறிய காகிதங்களை அடுக்கி ராஜாமேஜையில் வைத்துவிட்டு நகரப்போனால்.
ஹே!! உனக்கு ஒன்னும் ஆகலயே என ராஜா அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்ல சார் உங்களுக்கு?? என்றாள் அவள்.
எனக்கு என்ன?? அதல்லாம் ஒன்னுமில்லை. எப்படி?? இவ்வளவு வேகமா அவன் கைய கிழிச்ச?? என்று வியந்து கேட்டான் ராஜா. அறையில் இருப்பவர்களுக்கும் அதே கேள்விதான்.
இங்கே இவன் துப்பாக்கி நீட்டியது, கேமரா அறையில் பார்த்துவிட்டு எனக்கு தகவல் கொடுத்தார்கள்.
சரியாக நானும் உங்கள் அறைக்குதான் வரப் போனேன். இவனை தாக்குவதற்கு தயாராக சிறு கத்தியுடன் தான் வந்தேன். இவன் நேரம், இவனே என்னைப் பற்றி தெரியாமல் என் பக்கத்தில் வந்தான். நான் கராத்தே பெஸ்ட் ஸ்டூடெண்ட் என்றாள்.
அதற்குள் அவன் கைகால்களை நாற்காலியுடன் கட்டியிருந்தார்கள் .
துப்பாக்கி காரனிடம் வந்தவள், அவசரமாக உன்னை தாக்க கத்தியுடன் வந்தேனா, அது துருபிடித்த கத்தி, சாரி!! போலீஸ் வந்ததும் முதல்ல டாக்டர்ட போய் ஊசி போட்டுடு, இல்லனா செப்டிக் ஆயிடும் பாத்துக்க! என்றவள். ரஞ்சனி மேடத்துக்கு பலம் சேர்க்க இங்க நிறையா தூண் இருக்கு, நொடில உன்ன முடிச்சுடுவோம், அவங்க வேண்டாம் சொன்னதால நீ பிழச்ச, என்றவள் ராஜாவைப் பார்த்து, துப்பாக்கிய போலீஸ்ல குடுத்துடாதீங்க, எதுக்கும் உங்க, பாதுகாப்புக்கு எடுத்து வச்சுக்கோங்க என்றாள் கேலியாக, அறையில் அனைவரும் லேசாக சிரித்தனர்.
நான் என் சீட்டுக்கு போறேன் சார். அது இந்த மாச, பில் ரிப்போட் என அவனது டேபிளில் அவள் வைத்த காகிதத்தை சுட்டி காட்டிவிட்டு, வெளியேறினாள்.
ராஜாவிற்கு புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை என அடுத்தடுத்த காரியங்கள் காட்டின.
அதே மின்தூக்கியை பழுது பார்க்க அடுத்த பத்தாவது நிமிடத்தில் மற்றொருவன் வந்தான். வந்ததும் தனது அடையாள அட்டையை ராஜாவிடம் நீட்டினான் அந்த இளைஞன்.
பின்பு ஒரு மணிநேரம் பழுது பார்த்துவிட்டு, கிளம்பினான்.
அவன் வாயிலை அடையும் முன் செக்யூரிட்டி அவனை அழைத்து , உள்ளே அழைப்பதாக கூறினார்.
அவனோ அவரை கண்டும் காணமல் பேசியை காதில் வைத்த வண்ணம் நகரப் பார்த்தான்.
அடுத்ததாக அவனை பிடித்து, ராஜாவின் அறைக்கு அழைத்து வந்தனர்.
என்ன சார் இது?? உங்க வேலைதான் முடுஞ்சதே, என்ன எதுக்காக கூட்டீட்டு வந்தீங்க என சீறினான் அவன்.
சரியாயிடுச்சுனு நீங்க ஒருமுறை ஓட்டிக் காட்டுங்க, என்றான் ராஜா.
ஓ.. அவ்வளவு தானா! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, சரி சீக்கிரம் வாங்க ஓட்டிக்காட்டீட்டு நான் கிளம்பனும் என அவசரப்பட்டான்.
அவன் மின் தூக்கியில் ஏற வர, ஏற்கனவே பல முட்டைகள் அதில் ஏறியிருந்தது.
அதை பார்த்து அவன் தயங்கி நின்றான்.
என்ன நின்னுட்ட, ஓட்டிக்காட்டீட்டு போ, இது எட்டாவது மாடிக்கு போக வேண்டிய பார்சல், இதையும் சேர்த்து எடுத்துட்டு போய் சேர்த்துவிடு என்றான் ராஜா கூலாக,
வந்தவனோ, மின்தூக்கியில் ஏறவே இல்லை. இவ்வளவு எடையை மின்தூக்கி தாங்காது என்றான்.
இது இருவது போர் உபயோகிக்கும் மின்தூக்கி, அப்படி கணக்கிட்டால், ஆயிரம் கிலோவிற்குமேல் தாங்கும். இது வெறும் ஆயிரம் கிலோ தான் என்றான் ராஜா.
அந்த இளைஞன் முகம் வெளுத்தது. பின்னோக்கி நகர்ந்தான்.
என்னப்பா, உனக்கு நேரமாகுமே, சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு கிளம்பு என அவனை முன்னோக்கி தள்ளினான் ராஜா.
இல்ல சார் எட்டாவது மாடிக்கு போய் பார்சலை இறக்கி வருவதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் , நான் கிளம்புறேன் படபடத்தவாறு நகர்ந்தான்.
ராஜா பட்டென அவனது சட்டைப் பையிலிருந்து செல்லை எடுத்தான்.
என்ன சார் இது?? என்னோட செல்லை எதுக்கு எடுக்குறீங்க ?? என எகிறினான் அவன்.
அந்த நேரம் பார்த்து , செல் போன் ஒலித்தது. ராஜா அதை ஸ்பீக்கரில் போட, மறுமுனையில் இருந்தவனும் படபடத்தான்.
என்னடா, வேலை ஆச்சா?? இல்லியா?? சீக்கிரம் இடத்தை காலிபண்ணு, நீ இருக்கும் போதே யாராவது லிப்ட்ல ஏறி, அது அறுந்தா, உன்ன விடமாட்டங்க மாப்பிள்ள, அங்க இருக்குற ராஜா ரொம்ப மோசமானவன் டா என்றான்.
அதுக் கேட்ட ராஜாவும் ஊழியர்களும் அவனை சூழ்ந்தனர். வந்த இளைஞன் வெடவெடத்து நின்றான்.
எனக்கு இது உடனே சரியாகணும், இதே பார்சலோட எனக்கு ஓட்டிக் காட்டீட்டு போ, இல்ல , போன்ல சொன்னானே மோசமானவன்னு, அந்த ராஜா நான்தான், அத நீ பாக்கணுமா என்றான் ராஜா.
இல்ல சார். நானே சரி பண்றேன் என மண்டியிட்டான் அந்த இளைஞன். அந்த நேரத்தில் அவனுக்கு வேறுவழியும் இருக்கவில்லை.
ராஜா நடந்ததை ரஞ்சனிக்கு போனில் தெரிவித்தான்.
ரஞ்சனிக்கு அதிர்ச்சி இல்லை. அவள் கதை கேட்பதைப் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
என்ன மேடம் ஸ்சாக்கா இல்லையா என்றான் ராஜா.
இல்லை. ஏன்னா இந்த செய்தியை தேவி இப்பத்தான் சொன்னா. தேவி சொல்லும் போதும் எனக்கு அதிர்ச்சி இல்லை. ஏன்னா இது ரொம்பவே சாதாரணம்.
இதைவிட பெரிதாகவும் நடக்கலாம், பாத்து இருங்க, என்றாள் ரஞ்சனி.
சரி மேடம், தேவி யாரு?? என்றான் ராஜா மெதுவாக.
தெரியாதா?? கராத்தே பொண்ணு. அவதான் என்ற ரஞ்சனி, கடையின் சில நிலவரங்களை கேட்டறிந்து கொண்டாள்.
வந்த இருவரையும் போலீசில் ஒப்படைத்து விட்டதாக ராஜா சொன்னான்.
ராஜாவை பாராட்டிவிட்டு , இன்னும் விழிப்புடன் இருங்கள் என்று கூறிவிட்டு, பேச்சை முடித்தாள் ரஞ்சனி.