All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.​

நிலா ஶ்ரீதரின் "உன்...
 
Notifications
Clear all

நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி

 

(@nila-sridhar)
Active Member Author
Joined: 1 month ago
Posts: 9
Topic starter  

ஹாய் ப்ரண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? முதலில் அனைவருக்கும் என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதோ அடுத்த கதையோடு வந்துவிட்டேன். யதார்த்தமான இன்னொரு கதை. கதையோட நாயகன் நாயகி ரொம்ப ஜாலியான ஜோடி. டாம் ஜெர்ரி லவ். மை ஃபேவேரேட். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.

கதையை படித்து  உங்கள் பிடித்தங்களையும் கமென்ட்களையும் பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் ப்ரண்ட்ஸ்.

நன்றி,

நிலா ஶ்ரீதர்✒️

This topic was modified 1 week ago 4 times by Nila Sridhar

   
megala reacted
Quote
(@nila-sridhar)
Active Member Author
Joined: 1 month ago
Posts: 9
Topic starter  
அத்தியாயம் - 1

அந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். உடனிருந்த பெண்ணிற்கு சிறு புன்னகையை கொடுத்தவன், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்தவொரு சேதமும் இல்லாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

அழைப்பு ஏற்க பட்டதும் “எங்கடா இருக்க?” என்று கேட்க, எதிர்முனையில் இருந்தவன் என்ன பதில் தந்தானோ, முகத்தில் தோன்றிய எரிச்சலை அடக்கி கைபேசியை அணைத்தவன் “நாம அங்க வெயிட் பண்ணலாம்” என்று அப்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றான்.
 
இருவரும் அங்கிருந்த உணவு கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கே வந்தவன் “சாரிடா மச்சான். கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்று குழைய, பதிலுக்கு இவன் அவனை முறைக்க, அருகில் இருந்தவளும் முறைத்தாள்.
 
நண்பன் கோபமாகி விட்டானோ என்று மீண்டும் மன்னிப்பு கேட்டு அவன் தோளில் கைப் போட “உதை விழ போகுதுடா உனக்கு. எங்க அக்கா நிச்சய வேலை தலைக்கு மேல இருக்கு. நீ என்னனா புரிஞ்சிக்காம வெளில வர சொல்ற” என்று சிடுசிடுத்தான்.
 
“எதுவா இருந்தாலும் அங்க கேளு..” என்று அவன் நண்பனோ எதிரில் இருந்தவளை கை காட்ட..
 
“சாரி அண்ணா. எங்க வீட்டுல உன் கூட வெளில வர்றதுனா விட்டுடுவாங்க. இவன் வேற ஊருக்கு போறான். அப்புறம் இவனை எப்ப பார்ப்பேனோ.. அதான் ண்ணா..” என்றாள் தயக்கம் கொண்ட குரலில்.
 
“அம்மா தாயே.. எனக்கு இருக்க அக்காவே போதும்.. நீ அண்ணானு கூப்பிடறதும் போதும். என்னை இப்படி உங்க வீட்டுக்கு துரோகம் பண்ண வைக்கறதும் போதும். உங்க லவ்வ வீட்டுல தான் சொல்லி தொலைங்களேன் டா” என்று எரிச்சலின் மிகுதியில் சொன்னான்.
 
“டேய், இப்ப தான் எனக்கு ஐதராபாத்ல வேலை கிடைச்சிருக்கு. லைஃப்ல கொஞ்சமாவது செட்டிலான பிறகு தான்டா விஷயத்தை வீட்டுல ஓபன் பண்ண முடியும்” என்றான் நண்பன்.
 
“அப்போ அதுவரைக்கும் ஃபோன்ல மட்டும் லவ் பண்ணிக்கோங்க. அப்புறம் தயவு செஞ்சு உங்க திருட்டுத்தனத்துல என்னை கூட்டு சேர்க்காதீங்க” என்று கோபமாக சொல்ல, இருவரும் ஐயோ பாவம் என்று முகத்தை வைத்துக் கொண்டு அவனை பார்த்திருந்தனர்.
அதில் தன்னை நிதானித்தவன், தன் தலையை அழுந்த ஒருமுறை கோதி கொண்டு “சரி, முகத்தை இப்படி வச்சி தொலைக்காதீங்க.. நான் அங்க வெயிட் பண்றேன். சீக்கிரம் பேசிட்டு வாங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் சரண்..
 
மூவரும் ஒரே கல்லூரியில் தான் எம்சிஏ படித்தனர். அதில் சரணது நண்பர்கள் வினோத்தும் கமலியும் ஒருவரை ஒருவர் நேசிக்க தொடங்கினர். கமலியின் வீட்டில் சரணின் மீது நல்ல அபிப்ராயமும், பெரும் நம்பிக்கையும் உண்டு. அதனால் எப்போது வெளியில் சந்திக்க வேண்டுமென்றாலும் சரணை காக்கா பிடித்து கமலியை வெளியே அழைத்து வர வைத்துவிடுவான் வினோத்.
இது தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கமலியின் பெற்றோருக்கு செய்யும் துரோகமாகவே சரண் கருதுவதால் அவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் நண்பர்களையும் விட்டு தரமுடியாத இக்கட்டான நிலை.
 
சரண் அங்கிருந்த கிளாஸ் ரயிலில்(Glass Rail) கைபிடித்து நின்று அந்த வணிக வளாகம் முழுவதையும் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான். ஆங்காங்கே தத்தம் துணையோடு வந்து காதல் செய்துக் கொண்டிருக்கும் காதலர்களாலும், பை பையாக வாங்கி குவிக்கும் ஆடவர்களாலும் பெண்களாலும், வீட்டில் அடைந்திருக்க பிடிக்காமல் இங்கே குடும்பத்தையே அழைத்து வந்து விண்டோ ஷாப்பிங் என்ற பெயரில் பொழுதை கழித்து கொண்டிருப்பவர்களாலும் வணிக வளாகம் நிரம்பி வழிந்தது.
 
அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பார்வையிட்டு கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது அவனுக்கு நேர் எதிரில் இருந்த லெஹங்கா, சோளி போன்ற ஆடைகளை விற்பனை செய்யும் பெண்கள் ஆடையகம். அதிலும் அவன் கண்கள் நிலைகுத்தி நின்றது அவளிடத்தில்.
 
ஐந்தரை அடிக்கும் மேல் உயரம் இருப்பாள். நீல நிற ஜூன்ஸும், மின்ட் க்ரீன் நிற க்ராப் டாப்ஸும் அணிந்திருந்தாள். காலில் வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ். அது தவிர கழுத்து, கை, காது என எங்கும் பொட்டு நகையும் இல்லை. நெற்றியிலும் பொட்டு இல்லையா, இல்லை தூரத்தில் இருந்து இவனுக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை. நவ நாகரீக யுவதியாகவே இருந்தாள் அவள்.
 
நடுத்தர வயது பெண்மணி, அவளது அன்னையாக இருக்குமென்று இவன் எண்ணி கொண்டான். அவர் ஒரு வைன் நிற லெஹங்காவை ஏந்தி வந்து இவளிடத்தில் காண்பித்தார். இவளுக்கோ அது பிடித்தமில்லை போல், முகத்தை சுளித்தாள்.
 
பின் அங்கு பணி செய்யும் பெண் வான் நீல நிறத்தில், மங்கலான ஆப்ரிகாட் நிறத்தில், பீச் நிறத்தில், மோவ் நிறத்தில் (Mauve), பழுப்பு வெள்ளை நிறத்தில் என பல்வேறு நிறங்களிலும் வேலைப்பாடுகளிலும் லெஹங்காக்களை காட்ட, இவளோ மோவ் நிறத்தில் கற்கள் மட்டும் கட்டானா வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்காவையே தேர்வு செய்ய, அதை அவளுக்கு அணிவித்து பார்க்க ஆள் உயர கண்ணாடிக்கு அருகில் அழைத்து வந்தார் அப்பணிப்பெண்.
 
லெஹங்காவை அவள் இடுப்பை சுற்றி பின்(Pin) செய்தவர், நெட் துப்பட்டாவை எடுத்து அவள் இடையில் சொருகி மார்பின் மீது போட்டு கண்ணாடியில் காண்பிக்க இவளோ தேவதை போல் மிளிர்ந்தாள்.
அவளை இவன் இமைக்க மறந்து ரசித்திருக்க, அவள் தன்னை ஒரு சுற்று சுற்றிய போது அவளோடு சேர்ந்து இவன் மனமும் அவள் பின்னால் சுற்றியது.
 
அதிலும் நடிகைகள் பெரும்பாலும் விரும்பும் சைஸ் ஜீரோ என்னும் சைஸிலேயே அவளிருக்க, அவளிடையில் இருந்த லெஹங்கா எங்கே கீழே நழுவி விடுமோ என்னும் அளவிற்கு அவள் இடை மிகவும் மெல்லியதாக இருந்தது. அவள் தன்னை தானே சுற்றிய போது அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது இயற்கையாக அவளுக்கு இருக்கும் சுருட்டை முடி. அது சுருள் சுருளாக அவள் தோள்களில் விளையாடி கொண்டிருந்தது.
 
சிறு வயதிலிருந்தே சரண் மிகவும் பொறுப்பானவன். பெண்பிள்ளையோடு பிறந்தவன் என்பதால் பெண்கள் விசயத்தில் கண்ணியம் காப்பவன். அவன் குடும்ப சூழ்நிலையும் அவனை காதல் போன்ற விசயங்களில் ஈடுபட விட்டதில்லை. தாய், தந்தை, அக்காவென மூவரும் வேலைக்கு சென்று வருவதாலே இவன் குடும்பம் பிரச்சனை இல்லாமல் ஓடுகிறது.
 
எம்சிஏ முடித்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தும் இன்னும் வேலை கிடைக்காததால் ஒவ்வொரு பைசாவும் பார்த்து பார்த்தே செலவு செய்வான். எம்சிஏ சேருவதற்கு முன் தந்தை வாங்கி கொடுத்த கைபேசியை இன்னமும் பத்திரமாகவே வைத்திருக்கிறான். அவன் வைத்திருக்கும் இருசக்கர வாகனமும் செகண்ட் ஹேண்ட் வண்டியே.
 
இன்றோ யாரென்று தெரியாத ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் தான் பார்த்திருந்தான். அதோடு அவளுடன் சேர்ந்து டூயட் எல்லாம் பாடும் அளவிற்கு தான் காதலில் முன்னேறி இருந்தான்.
 
ஆம், காதலென்றே தெரியாத காதல் வயப்பட்டுவிட்டான் அந்த ஆறேகால் அடி உயிரம் கொண்ட இருப்பத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கும் ஆண்மகன்.
 
“காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை.. உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்..” என்று பாடி எதிரிலிருப்பவளை எண்ணி மனதில் மழை காலம் கொண்டாடி கொண்டிருக்க, கனவு கலைந்து கண்களை திறந்து பார்த்தால் எதிர் கடையில் இருந்தவளை காணவில்லை.
 
இவன் முழு பாடலையும் கனவு கண்டு முடிப்பதற்குள் அவர்களோ எடுத்த துணிமணிகளுக்கு பில்லை போட்டு பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
 
அவளை காணவில்லை என்பதில் பதறிவிட்டவன் அத்தளம் முழுவதும் ஒரு இடம் விடாமல் தேடினான். அவள் கிடைத்தாற்பாடில்லை. பின் மற்ற தளங்களிலும் தேடினான். அங்கும் அவளில்லை.
 
அதற்குள் எங்கு போய்விட்டாள் என்று விடாமல் அவனும் தேட அவனது அலைபேசி தொல்லைபேசியாக அலறியது. எடுத்து பார்த்தால் வினோத் தான் அழைத்திருந்தான். அழைப்பை துண்டித்து விட்டு தன் தேடுதலை தொடர, அவன் நண்பனும் விடாமல் அழைத்து தொல்லை செய்தான்.
 
இதற்கிடையில் அக்காவின் நிச்சய வேலைகள் வேறு நினைவிற்கு வர, மீண்டும் ஒரு முறை கண்களை மூடி அவளை எண்ணிக் கொண்டவன் அவள் உருவத்தை மனதில் நிறைத்துக் கொண்டு நண்பனின் அழைப்பை ஏற்று “வரேன்டா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.
 
நேராக நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவன், யார் இருக்கிறார்கள் என்றும் பாராமல் நண்பனை இறுக அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் டா. தேங்க் யு சோ மச்” என்று அப்படியே அவனை மேலே தூக்கி இறக்கிவிட்டு “எல்லாம் உன்னால தான்டா” என்று அவனை கொஞ்ச வேறு செய்தான்.
 
“என்னடா பண்ற?” என்று வினோத் ஒருபுறம் பதற, அருகில் இருந்த கமலியோ “அவனுங்களாடா நீங்க..” என்று வாய்விட்டு சிரித்தாள்.
 
“உன்னால இவ என்னை தப்பா நினைக்கிறா பாரு.. அப்புறம் இவங்க அப்பா பொண்ணு தரலைனா..” என்று வினோத் பயப்படுவது போல் படபடக்க
 
“கேளு டா” என்ற சரண் அவளை எதிர்கடையில் பார்த்ததை பற்றி ஆர்வமாக நண்பர்களிடம் பகிர்ந்தான்.
அதை கேட்ட வினோத் “என்ன மச்சான்… லவ்ஸா..?” என்று கேட்க, இவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் இவனது பளிச்சிட்ட முகம் நண்பனுக்கான பதிலை அப்பட்டமாக எடுத்துரைக்க
 
“கமலி… நான் கும்பிட்ட கடவுள் கை விடல.. சரணுக்கும் காதல் பூ பூத்திடுச்சு.. இனி நான் எப்போ ஐதராபாத்ல இருந்து வந்தாலும், நாம மீட் பண்ண இவனே உங்க வீட்டுல பொய் சொல்லி கூட்டிட்டு வந்திடுவான்” என்று தன் காரியத்தில் குறியாக, வாயெல்லாம் பல்லாக சொன்னான் வினோத்.
 
சரண் அவனை முறைக்க.. “சரி வாடா.. உன் ஆளு எப்படி இருக்காங்கனு பார்ப்போம்.. அப்படியே பேச்சு கொடுத்து நம்பர் உஷார் பண்ணிடலாம்” என்று வினோத் பேச்சை மாற்ற இவனது முகம் விழுந்துப் போனது.
 
“அது நான்.. நான் அவளை மிஸ் பண்ணிட்டேன் டா” என்றான் உள்ளே போன குரலில்.
அதை கேட்ட இருவரும் அவனை அதிர்ந்துப் பார்க்க.. “அது.. ஃபுல் பாட்டும் கனவு கண்டு முடிச்சிட்டு பார்க்கறேன், அவ அங்க இல்லடா” என்று அசடு வழிய சொன்னான்.
 
உடனே வினோத் “ஏன்டா ஃபோன் நம்பர் வாங்கிட்டு கனவுக்குள்ள போக வேண்டியது தானே. இப்ப பாரு பாட்டு முடியவும் கிளைமாக்ஸும் முடிச்சி போச்சு” என்று சத்தமாக சிரித்து வைக்க, கமலியோ தன் சரண் அண்ணன் வருந்தி நிற்பதை பார்த்து தன்னவனின் தோளில் ஒரு அடி வைத்தாள்.
 
போனவளை இதற்கு மேல் தேடவா முடியும், அவ்வளவு தான் என்றே வினோத்திற்கு தோன்ற “சரி விடுடா. நம்ம கிளாஸ்ல இருந்த நாலஞ்சு அழகான பசங்கள்ல நீயும் ஒருத்தன். நீயா யாரையும் பார்த்ததும் இல்ல. உன்னை பார்த்த பொண்ணுங்களையும் கண்டுகிட்டது இல்ல. இப்ப எதுக்கு இந்த ஃபீலிங். விடு, நெக்ஸ்ட் டைம் நானும் கமலியும் மாலுக்கு வரப்போ வேற பொண்ண பார்த்துக்கலாம்” என்று நண்பனை தேற்றுவதாய் எண்ணி அவனை கடுப்பேற்ற
 
“நான் என்ன சைட்டா அடிச்சேன், அடுத்த தடவை வேற பொண்ண பார்த்துக்கலாம்னு சொல்றதுக்கு” என்று கோபத்தில் பற்களை நறநறத்தான் சரண்.
 
“அந்த பொண்ணு என்ன அவ்ளோ அழகா..? இவ்ளோ ஃபீல் பண்ற?” என்று பொங்கிவிட்ட வினோத்தின் கேள்விக்கு மனதில் பொத்தி வைத்திருந்தவளை கண் முன் கொண்டு வந்தான்.
சரண் அவன் அம்மாவை போல் நல்ல நிறம். தனியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடம்பை ஏற்றவில்லை என்றாலும் அருகிலிருக்கும் மைதானத்தை தினமும் பத்து சுற்று சுற்றுவதாலும், தண்டால் எடுப்பதாலும், அங்கே இருக்கும் கம்பிகளை பிடித்து புல் அப்ஸ் போடுவதாலும் கட்டுக்கோப்பாவே இருந்தான். அதுவும் கல்லூரி வாலி பால் அணியிலும் தொடர்ந்து விளையாடி வந்ததால் ஆணழகன் போட்டிக்கு சென்றால் பரிசு வெல்லும் அனைத்து தகுதியும் அவனுக்குண்டு.
அவளோ அவனுக்கு ஏற்ற உயரம் தான். ஆனால், எங்கும் துளி சதை வெளியில் தெரியாத அளவிற்கு மெலிதாக இருந்தாள். அதிலும் அவள் மாநிறத்திற்கும் சற்று குறைவே. இருந்தும் என்ன, சரணுக்கு அவளை தானே பிடித்திருக்கிறது. அவள் தானே அவன் அனுமதியின்றி அவன் மனதில் நிறைந்து விட்டவள்.
 
இக்கணம் அவனுக்கு அவளை விட அழகி இவ்வுலகில் இல்லை என்றே தோன்றியது. அவள் நினைப்பில் தன்னை தொலைத்து நின்றிருத்தவனை உலுக்கிய கமலி  “அண்ணா, இவன் எதாவது லூசு மாதிரி பேசிட்டே இருப்பான். வா நாம போய் அந்த பொண்ண தேடலாம்” என்று அவன் கைப்பிடித்து இழுத்தாள்.
 
“நான் ஏற்கனவே ஃபுல்லா தேடிட்டேன் கமலி.. அவ எங்க போனானே தெரியல” என்று இவன் உதட்டை பிதுக்க..
 
“மச்சான்.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. நீ ஒரு பாட்டுக்கு டூயட் பாடி முடிக்கிறதுக்குள்ள டிரஸ் செலக்ட் பண்ணிட்டு கிளம்பிட்டாங்கனு சொல்ற.. இப்படி ஒரு விஷயம் பொண்ணுங்க லைஃப்ல நடக்க வாய்ப்பே இல்ல” என்று சிரித்து வைத்து கமலியின் முறைப்பை வாங்கிய வினோத், சரணும் முறைப்பதை பொருட்படுத்தாது,
 
“செகண்ட், ஒருவேளை அவ உனக்கு அக்காவா இருந்தா..?” என்றும் கேட்டு வைத்தான்.
அதில் கடுப்பான சரண் “டேய் கடுப்பு காண்டமிருகம்.. நல்ல வார்த்தையே பேச மாட்டீயாடா?” என்றவனுக்கு எரிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் கண்களாலேயே நண்பனை பொசுக்கி இருப்பான்.
 
“சரி.. சுபச் செய்தியே சொல்றேன்.. அவ லெஹங்கா எடுத்தானு சொல்ற.. அவ ஏன் லெஹங்கா எடுக்க போறா.. ஏன்னா அவளுக்கு கல்யாணம். பொண்ணுங்க அதுக்கு தானே அந்த டிரஸ் எடுப்பாங்க.. அதனால மனசை போட்டு குழப்பாம கிளம்புடா” என்று துளிர்விட்ட சரணது காதலை வேரிலேயே பிய்த்தெறிந்து போட்டான் அவனது நண்பன் வினோத்.
 
அவன் என்னமோ நண்பனின் மீதுள்ள அக்கறையில், அவன் ஏமாந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு சொன்னான். ஆனால் உண்மையில் அவள் தன் திருமணத்திற்கு தான் துணியெடுக்க வந்தாளோ என்ற கேள்வி சரணின் மனதில் வீறுக்கொண்டு சென்றமர்ந்தது.
 
வினோத் சொன்னதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வாழ்க்கையில் நிதர்சனங்களோடே பயணப்பட்டவனுக்கு, ஆம் அவள் யாருக்கோ நிச்சயிக்கப்பட்டவளாகவும் இருக்க கூடும் என்ற உண்மை உறைக்க தான் செய்தது.
 
இருப்பினும் அவன் மனம் அவளை விட மனமில்லாமல் தவிக்க, தன் நெஞ்சை நீவி கொடுத்தவன், தன்னை சமாதானம் செய்ய கைப்பிடித்த கமலியின் தலையை வருடி கொடுத்து “அவ எனக்கானவளா இருந்தா, கண்டிப்பா நான் அவளை திரும்ப பார்ப்பேன்” என்று சிறுமுறுவலோடு அழுத்தமான குரலில் இருவரையும் பார்த்துச் சொன்னான் சரண்.
 
பின் “வா கமலி.. வீட்டுல விட்டிடுறேன்.. நிச்சயத்தார்த்த வேலை தலைக்கு மேல இருக்கு” என்று நண்பனிடமிருந்து விடைபெற்று கமலியுடன் கிளம்பினான்.
 
உண்மையில் அவள் யாரென்று அறியும் நாளில் அவன் மனதில் அவளுக்கான அதே காதல் இருக்குமா? சரண் சரணடைவானா? இல்லை அவள் தான் சரணை அடைவாளா?


தொடரும்..

   
ReplyQuote
(@nila-sridhar)
Active Member Author
Joined: 1 month ago
Posts: 9
Topic starter  

முதல் அத்தியாயம் எப்படி இருந்தது நண்பர்களே..?

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
megala reacted
ReplyQuote
(@nila-sridhar)
Active Member Author
Joined: 1 month ago
Posts: 9
Topic starter  
அத்தியாயம் - 2

விமானத்தில், வணிக வகுப்பில் அமர்ந்திருந்த ரகுவரனை எண்ணற்ற சிந்தனைகள் ஆட்கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகளாக அணிந்திருந்த கோபம் என்ற முக மூடியை தூக்கி தூர வீசிவிட்டு இந்தியா கிளம்பியிருக்கிறார்.


அவர் லண்டனில் குடியமர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னும் மும்பையில் தான் வாசம். சென்னைக்கு வந்தே இருபத்தேழு ஆண்டுகள் இருக்கும்.

சோலையப்பனுக்கும் முனியம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் ரகுவரன். அவருக்கு பின் கனிமொழி. ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் சோலையப்பனுக்கு மகனும் மகளும் தான் உயிர்.


சோலைக்கு பின் பிறந்த அனைத்தும் பெண் பிள்ளைகள். ஆம், அவருக்கு ஐந்து தங்கைகள். ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்பார்கள். சோலையின் தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன. அவரால் முடிந்ததெல்லாம் அவர்கள் வயிற்றுக்கு உணவு மட்டுமே. அதனால் தங்கள் வசதிக்கு சோலைக்கும், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் அவரது தந்தை.


மற்ற தங்கைகளின் திருமண பொறுப்பிற்கும், தங்கை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சீருக்கே சோலையின் வருமானம் பெரும்பாலும் சென்றுவிடும். முனியாம்மாளும் நான்கைந்து தெருக்களுக்கு முறைவாசல் செய்ய அவர்கள் குடும்பம் மற்றவரிடம் கையேந்தாமல் ஓடி கொண்டிருந்தது.

இரண்டு பிள்ளைகளையும் ஆங்கில வழி பள்ளியில் சேர்க்க போதுமான பண வசதி இல்லாததால், ரகுவரனை தனியார் பள்ளியிலும், கனிமொழியை அரசு பள்ளியிலும் சேர்த்திருந்தனர்.

ரகுவரன் நன்றாக படிப்பார். பள்ளி படிப்பில் நன்மதிப்பெண்கள் பெற்று அக்காலத்திலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இருந்தும் அவர் வீட்டுக்கும் கல்லூரிக்கும் வெகுதூரம். வந்து போக என்று தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் ஆகும். அதனால் கல்லூரி விடுதியில் தங்கி படித்தார்.

கனிமொழியும் நன்றாக படித்தாலும் ஒருகட்டத்தில் ரகுவரனின் விடுதி கட்டணத்திற்கும் இதர செலவிற்கும் பணம் தேவைப்பட்டதால் எட்டாவதோடு படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவும் மற்றும் துணி துவைக்கும் வேலைக்கு சென்றுவிட்டார்.

ஒருவழியாக படிப்பை முடித்த ரகுவரன் ஒரு நல்ல வேலையில் சென்றமர்ந்தார். அதன் மூலம் குடும்ப நிதிநிலை உயர்ந்ததை எண்ணி சோலை நிம்மதியடைந்திருந்த நேரத்தில் தான் கனிக்கு ஒரு வரன் தானாக வந்தது.

அன்றிரவு நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க.. “நம்ப கனியை கேட்டு வந்த இடத்துல பிடிச்சிருக்குனு சொல்லிருக்காங்க ரகு” என்றார் சோலை.

“நல்லது ப்பா. மாப்பிள்ளை வீடு நம்மள விட ரொம்ப வசதி. அவங்க கேக்கறதுக்கு முன்ன நம்ம கனிக்கு எல்லாமே சிறப்பா பண்ணிடனும் ப்பா” தங்கையின் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்து சொன்ன மகனை பெருமிதமாக பார்த்தார்கள் சோலையும் முனியம்மாளும்.

மேலும் தங்கையின் திருமண ஏற்பாடுகளை பற்றி ரகு ஆர்வமாக விவரித்து கொண்டிருக்க.. “மாப்ள வீட்டுல பெருசா எதுவும் எதிர்பார்க்கல ரகு. மாப்பிள்ளைக்கு அக்கா ஒருத்தங்க கல்யாணமாகாம இருக்காங்க. அவங்கள உனக்கு முடிச்சி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு மட்டும் பார்க்கறாங்க” என்ற சோலை,

“நம்ப கனிய பொண்ணு பார்த்தன்னைக்கே உன்னையும் பார்த்துட்டாங்களாம். அவங்களுக்கு திருப்தியாம். உனக்கும் சரின்னா அவங்க வீட்டுக்கு வந்து பொண்ணு பார்க்க சொன்னாங்க” என்றும் சொன்னதும் அதுவரை தங்கையின் திருமணத்தை பற்றி ஆரவாரமாக பேசிக் கொண்டிருந்த ரகுவின் முகம் வாடி போனது.

அமைதியாக உண்டு முடித்து வந்தமர்ந்த மகனிடம், “ரொம்ப வருஷமா எந்த வரனும் பொருந்தலையாம். என்னமோ உன்னை பார்த்ததும் மனசுக்கு புடிச்சி சோசியரை கேட்க, உங்க பேர் பொருத்தமும் நல்லா இருக்காம். நீ என்ன ரகு சொல்ற?” என்று தந்தை கேட்க..

“அப்பா, இத நான் முன்னாடியே சொல்லிருக்கனும்” என்று நெற்றியை தேய்த்தவர், “நான் என் கூட படிச்ச பொண்ண விரும்பறேன் ப்பா. அவங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். நம்ம வீட்டுல வந்து பேச தயாரா இருக்காங்க. நானும் அவளும் நம்ப கனி கல்யாணத்துக்காக தான் காத்திருக்கோம்” என்றதும் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அதிர்ச்சி.

“என்ன ரகு சொல்ற? இதெல்லாம் நம்மள மாதிரி ஏழை பாலைக்கு தேவையா? நம்ம வீட்டை பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” என்று சோலை கொதித்தெழ

“யோசிச்சதுனால தான்ப்பா கல்யாண வயசாகியும் அவ எனக்காக பொறுமையா காத்திட்டிருக்கா” என்று ரகுவும் சொன்னதும் சட்டென்று எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் சோலை.

இரண்டு மூன்று நாட்கள் தந்தைக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தரகர் மூலமாக தகவல் கேட்டு அனுப்பியிருக்க, இதற்கு மேல் தள்ள முடியாதென்று தந்தை, மகன் இருவரும் ஒரே போல் முடிவு செய்தனர்.

அதன் விளைவு சோலை அடுத்து மகனிடம் பேச வருவதற்கு முன்னே தந்தையின் பிடிவாத குணத்தை நன்கு அறிந்த ரகு, தான் நேசித்த மைதிலியை திருமணம் செய்தே அழைத்து வந்துவிட்டிருந்தார்.

மாலையும் கழுத்துமாக வீட்டினுள்ளே வரவிருந்த ரகுவையும் மைதிலியையும் “அங்கேயே நில்லுங்க” என்றவர், “நான் அவ்ளோ சொல்லியும் உன் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறீயேடா” என்று சோலை ஆவேசப்பட

“உங்க பிடிவாதத்தை பத்தி தெரியும் ப்பா” என்றார் ரகு.

“ஓ.. இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நான் என்னடா பதில் சொல்லுவேன். உனக்காக தன் படிப்பை விட்டுட்டு வேலைக்கு போன அவளுக்கு நீ செஞ்சது இதுதானா? இனி யாருடா என் பொண்ண கட்டுவாங்க?” என்று மகனின் சட்டையை பிடித்து உலுக்க

“அங்கிள் ப்ளீஸ்.. ரகு மேல எந்த தப்பும் இல்ல” என்று குறுக்கே வந்த மைதிலியை கண்கள் தெறிக்க பார்த்தவர்..

“நான் என் புள்ளைய தான் கேட்க முடியும்” என்றார்.

அதோடு மைதிலியின் வாய் பூட்டு போட, ரகுவோ “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது தப்பு தான். அதுக்காக கனி வாழ்க்கையை அழிய விட்டுட மாட்டேன். மாப்பிள்ளை வீட்டுல பேசிப் பார்க்கலாம். அப்பவும் அவங்களுக்கு சம்மதம் இல்லைனா, நானே நம்ப கனிக்கு வேற நல்ல மாப்பிள்ளைய பார்க்கிறேன்” என்றார்.

“எப்படிடா பார்ப்ப.. எப்படி பார்ப்ப? நமக்கு வசதியும் இல்ல. உன்னால என் பொண்ணு படிக்கவும் இல்ல. இந்த சம்மந்தமே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற நோக்கத்துல தான், வசதி, படிப்புனு எதையும் பார்க்காம வந்தது. அதையும் கெடுத்துட்டியே டா” ஓர் தந்தையாக மகளின் வாழ்க்கையை எண்ணி தொண்டையை அடைந்த துக்கத்தை அடக்கி கொண்டு..

“இதுக்கு மேல என் பொண்ணு வாழ்க்கைய எனக்கு பார்க்க தெரியும். இனி எனக்கு பொண்ணு மட்டும் தான், பையன் செத்து போயிட்டான். வெளிய போ” என்று வாசலை காண்பித்தார். முனியம்மாளும் கனியும் அவரின் பேச்சை மீறி பேச முடியாமல் நடப்பதை கலங்கி பார்த்திருந்தனர்.

ரகுவும் மைதிலியும் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், ஒருவாரம் மைதிலியின் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கிருந்து தான் மைதிலி கல்லூரி படிப்பை படித்தார். மற்றபடி அவர் குடும்பமெல்லாம் மும்பையில் வசிக்கின்றனர். அதற்குள் கனிக்கு வந்த வரனும் முறிந்து விட, தந்தையின் மனம் கரைய வாய்ப்பில்லை என்பதை புரிந்த ரகு, மனைவியுடன் மும்பை சென்றுவிட்டார்.

இரண்டு வருடம் ஓடிவிட்டிருக்க, ரகுவரனுக்கும் மைதிலிக்கும் ஒரு வயதில் மகன் இருக்கிறான். ரகுவும் இப்போது மாமனாரின் குடும்ப தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் மகனை காட்டிலும் மருமகனை அதிகம் நம்பினார் அவரது மாமனார்.

அப்போது கனிக்கு ஒரு நல்ல வரன் வர, அதை குறித்து பேச அவர் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்திருந்தார்.

வழக்கம் போல் மகனை வீட்டிற்குள் விடாமல் சோலை முறைத்திருக்க, “உங்க கோவம் என்னோட போகட்டும் ப்பா. நம்ம கனிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. உங்க எல்லாருக்கும் விருப்பம்ன்னா பேசி முடிச்சிடலாம்” என்றார் ரகு.

“பேசி முடிக்க தான் போறேன். ஆனா, நான் பார்த்த வரனை. பையன் பேரு பாலமுருகன். நான் வாட்ச்மேனா இருக்க ஃபேக்டரில டெம்பரரி ஸ்டாஃப்பா இருக்காரு. சீக்கிரம் பெர்மனெண்ட் பண்ணிடுவாங்க. பிக்கல், பிடுங்கல் இல்லாத எங்களுக்கு ஏத்த இடம்” என்று அழுத்தமாக கூறினார்.

“என்னது ஃபேக்டரில வேலை செய்யறவனா? அதுவும் பெர்மனெண்ட் கூட இல்ல”

“எங்க வசதிக்கு என்னமோ அத தானப்பா நாங்க பார்த்துக்க முடியும். ஒரு தடவை புள்ளைனு நம்பி அகலக்கால் வச்சி அவமானப்பட்டது போதாதா?”

“ஐயோ.. அப்போ என்னால எதுவும் பண்ணமுடியாத நிலை. இப்போ நான் என் மாமனார் கம்பெனிக்கு எம்.டி. என்னால என் தங்கச்சிக்கு பெரிய சம்மந்தத்தை கூட முடிக்க முடியும்”

“அது உன் காசு இல்லயே பா, உன் மாமனார் காசு. அடுத்தவங்க காசுல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற அளவுக்கு சோலை தாழ்ந்து போய்டல. நாங்க பார்த்துகிறோம், நீ கிளம்பு”

“இது எப்படிப்பா நம்ம கனிக்கு நல்ல இடமா இருக்கும்?” ரகு மீண்டும் அதிலே நிற்க..

“என்ன பண்றது, பிள்ளை படிச்சி தலை தூக்கினா, அவன் இந்த குடும்ப பாரத்தை சுமப்பான்னு பார்த்தோம். அது இல்லங்கிற போது எங்க வசதிக்கு என்னமோ அத தான பார்த்துக்கணும். அதுக்குன்னு என் பொண்ணுக்கு ஏதோ ஒரு வரனை பார்த்திடல. பையன் தங்கம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என் பொண்ணுக்கு மட்டுமில்ல, இந்த வீட்டுக்கும் மகனுக்கு மகனா இருப்பாரு. இவ்ளோ ஏன், நாளைக்கு நாங்க செத்தா கூட நீ வர கூடாது. எங்களுக்கு எங்க மாப்பிள்ளை தான் கொள்ளி போடுவாரு” தந்தை பேசியதை கேட்டு ரகுவரன் அதிர்ந்து தாயையும் தங்கையையும் திரும்பி பார்த்தார்.

இருவரும் கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்களே தவிர மறுத்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.

“கனி.. அண்ணன் உனக்கு நல்ல வாழ்க்கைய தான் அமைச்சு தர பார்க்கறேன். அப்பா சொல்ற வரன் உனக்கு வேண்டாம் டா” தங்கையிடம் பரிவாக சொல்ல, அவர் பதிலேதும் சொல்லாது தலைகுனிந்து நின்றிருந்தார்.

“என் பொண்ணு யார் பேச்சையும் கேட்க மாட்டா. திரும்பி இந்த வீட்டு பக்கம் வந்துடாத” என்று கதவை அறைந்து சாற்றிவிட்டார்.

பெருத்த மனவேதனையுடனும் அவமானத்துடனும் ரகுவரன் அங்கிருந்து கிளம்ப, பின்வாசல் வழியாக ஓடி வந்த கனி அண்ணனின் காரின் குறுக்கே கையை போட்டார்.

தங்கையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த ரகு “கனி.. அண்ணன் உன் மேல வச்சிருக்க பாசம் பொய் இல்லடா. அப்பா பார்த்திருக்க மாப்ள உனக்கு வேண்டாம்” தன் கோட்டின் உட்புறமிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தவர், “இங்க பாரு. நான் உனக்காக பார்த்த மாப்பிள்ளை. உன்னை நல்லா பார்த்துப்பார் கனி. சரின்னு சொல்லு, அப்பாவை எதிர்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்” என்றார்.

“எனக்கு நீ வேணும் ண்ணா. ஆனா இந்த கல்யாண விஷயத்தை அப்பா போக்குல விட்டுடேன்” என்று கலங்கி கேட்க, ஏனோ ரகுவிற்கு கோபம் தான் வந்தது.

“அப்போ நீ, அம்மா எல்லாரும் அவரோட சேர்ந்து என்னை ஒதுக்கிட்டீங்கல?”

“அப்படி இல்லண்ணா.. என் கல்யாணம் நம்ம அப்பா இஷ்ட..”

“இஷ்டபடியே நடக்கட்டும், நீ தலையிடாதடானு சொல்ற. அப்படி தான? சரி, இனி உனக்கு அண்ணன் இல்லைனு நினைச்சிக்கோ” கோபமாக பொரிந்துவிட்டு, கனி கண்ணீரோடு நிற்பதையும் பொறுப்படுத்தாது வேகமாக காரில் ஏறி கிளம்பிவிட்டார்.

அதன்பின் தொழில் சம்மந்தமாக கூட சென்னை வரவில்லை. இருபத்தியேழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தான் சென்னையில் காலெடுத்து வைக்கிறார்.

ஏனோ சிலவருடங்களாக தங்கை மற்றும் குடும்பத்தின் நினைவு அதிகமாக வர, அவர்கள் இருந்த பழைய வீட்டிற்கு ஆள் அனுப்பி பார்க்க சொல்ல, அங்கே யாருமில்லை, மாறி சென்றுவிட்டார்கள் என்று தகவல் வந்தது. தந்தையும் தங்கை கணவரும் வேலை செய்யும் தொழிற்சாலையை பற்றி விசாரித்த போது, அது இருபது ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக தெரியவர, தன் குடும்பத்தையும் தங்கை குடும்பத்தையும் வலை வீசி தேடிய பலன், இரண்டு நாட்களுக்கு முன் தாய், தந்தை இறந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தங்கையின் குடும்பம் மட்டும் சென்னையில் தான் வசிப்பதாகவும் செய்தி வர, உடனே சென்னை கிளம்பிவிட்டார்.

தங்கையின் வீட்டு வாசலில் வந்து நின்றவரை பிரமித்து பார்த்த கனி, அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவந்து “அண்ணா.. இப்போ தான் இந்த தங்கச்சிய ஞாபகம் வந்துசா ண்ணா?” என்று அவர் தோளில் சாய்ந்து அழ, ரகுவும் உணர்ச்சி பெருக்கில் ஒன்றும் பேசாமல் தங்கையின் தலையை வருடி கொடுத்து கொண்டிருந்தார்.

சில நிமிட பாச பிணைப்பிற்கு பிறகே அண்ணனை இன்னும் வாசலிலேயே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் “நான் பாரு. உள்ள வா ண்ணா” என்று அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர சொன்னவர், “என்னங்க.. யார் வந்திருக்காங்கனு பாருங்களேன்” என்று அறையிலிருந்த கணவரை அழைத்தார்.

பாலமுருகனும் எழுந்து வெளியே வர, அதற்குள் அண்ணனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர் “என் வீட்டுக்காரர் ண்ணா. நீ தான் கல்யாணத்துல இல்லாம போய்ட்டியே. இந்த நேரத்துல கடையில தான் இருப்பார். இன்னைக்கு உடம்பு முடியலன்னு வீட்டுல இருக்கார்” என்று கணவரை பற்றி கனி சொல்ல..

‘கடையா?’ என்று ரகு புருவம் சுருக்க.. “அது ஃபேக்டரிய மூடிட்டாங்க ண்ணா. அதுல அப்பாவுக்கும் இவருக்கும் வேலை போய்டுச்சு. வேற இடத்துலயெல்லாம் அப்பாவுக்கு வயசாகிடுச்சுனு வேலை தரல. இவரும் டெம்பரரி தான. குடும்ப பொருளாதாரம் ரொம்ப இறங்கி போச்சு. அந்த கவலையிலேயே அப்பா முன்னயும், அவருக்கு பின்ன அம்மாவும் போய்ட்டாங்க” என்றவர் நெஞ்சை அடைத்த துக்கத்தை இழுத்து பிடித்து,

“உனக்கு சொல்லலாம்னா, நீ எங்க இருக்கனு எதுவும் விவரம் தெரியல. இவர் தான் எல்லாம் பண்ணார். நாங்க பசியோட இருக்கலாம், பசங்களால இருக்க முடியாதுல. அதான் இவரே ரோட்டுல கடை போட்டுட்டார். நானும் ஒரு வீட்டுல சமையல் பண்ணி, பாத்திரம் கழுவி, கூட்டி பெருக்குறதுனு மொத்த வேலையும் பார்த்துக்கிறேன். அது தவிர இன்னும் மூணு வீடுங்கள்ல பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தொடைச்சி சுத்தம் செஞ்சி தருவேன். பொண்ணும் வேலைக்கு போறா. பையன் காலேஜ் முடிஞ்சதும் சாயந்திரத்துல அவன் அப்பாவுக்கு உதவி பண்ணுவான்” தன் குடும்பத்தை பற்றிய அனைத்தையும் எந்தவொரு சஞ்சலமும் இன்றி சொல்லியிருந்த தங்கையை தான் இமைக்காது பார்த்திருந்தார் ரகு.

“கடைன்னா?” அமைதியை உடைத்து அவர் கேட்க..

“அது சீசனுக்கு ஏத்த மாதிரி. வெயில் காலத்துல லெமன் ஜூஸ், ரோஸ் மில்க், சர்பத்.. குளிர் காலத்துல சூப் அப்படினு போடுவோம் ண்ணா. நான் தான் எல்லாம் போட்டு கேன்ல ஊத்தி கொடுத்து விடுவேன். அவர் கொண்டு போய் வித்துட்டு வந்திடுவார்” என்றார்.

அந்நேரம் மாடியிலிருந்து காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மகளை காட்டி “இதோ. என் பொண்ணு சுசி.. சுசித்ரா” என்று மகளை அண்ணனுக்கு அறிமுகப்படுத்தியவர் “சுசி, மாமா. சின்ன வயசுல கோச்சிக்கிட்டு போய்டுச்சுன்னு சொன்னேன்ல என் அண்ணன். இப்ப தான் திரும்ப வந்திருக்கு” என்று மகளிடம் பெருமிதமாக சொன்னார்.

அவரும் மருமகளை பார்த்து புன்னகைக்க, சுசிக்கு தான் என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் திகைத்து விழித்திருந்தாள்.

“ஏங்க, அண்ணனுக்கு கசகசன்னு இருக்கும். நீங்க மெத்தை வீட்டு அக்காகிட்ட கூலர் வாங்கிட்டு வர்றீங்களா. கொஞ்ச நேரத்துல தந்திடுறோம்னு சொல்லுங்க” என்று சொல்ல, மனைவி பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் பாலமுருகனும் சென்றார்.

“சுசி, மாமாக்கு குளிர்ச்சியா ஏதாவது கலந்து கொண்டு வா” என்று மகளையும் விரட்ட, தங்கையின் தோற்றத்தையும், அவரின் குடும்பத்தின் நிலையையும் தான் ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்திருந்தார் ரகு.

தன் வசதியென்ன.. கடல் போல் அங்கிருக்கும் வீடு என்ன.. இங்கு தங்கை இருக்கும் நிலை தான் என்ன.. இந்த வயதிலும் ஆரோக்கியமான உணவாலும், செல்வ செழிப்பாலும் அவருக்கு ஐம்பத்திநான்கு வயது என்று சொல்ல முடியாத இளம் தோற்றத்தில் இருந்தார். ஆனால், தன்னை விட ஐந்து வயதிற்கும் சிறியவரான தன் தங்கையின் தோற்றமோ பின் ஐம்பதுகளில் இருப்பவர் போல் முகமெல்லாம் களையிழந்து பொலிவில்லாமல் இருந்தார்.

சுசியையும் பார்த்தார். அந்த வயதிற்குரிய அழகியே அவள். இருந்தும் மிகவும் ஒடிசலாக சோர்ந்த முகத்துடன் தெரிந்தாள். அங்கே தன் பிள்ளைகள் செல்வந்தர் வீட்டு வாரிசாக செழுமையோடு மிளிர்ந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான தனக்கும் தன் தங்கை வீட்டுக்கும் இடையே எத்தனை பெரிய எட்டமுடியாத இடைவெளி. எங்கோ தான் சரியென்று நினைத்தது, இங்கு தவறாக முடிந்துவிட்டதோ என்று யோசித்திருந்தவரால் எதுவும் பேச முடியாமல் போக, அந்த வீட்டையும் அங்கிருந்தவர்களையும் அமைதியாக பார்த்திருந்தார்.


தொடரும்..

This post was modified 3 days ago 4 times by Nila Sridhar

   
ReplyQuote
(@nila-sridhar)
Active Member Author
Joined: 1 month ago
Posts: 9
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
Scroll to Top