All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

New teaser

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதை மயக்கும் மாய தாகம்..!


"உன்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சா.. பள்ளிக்கூடம் படிக்கும்போதே காதலா கேட்குது.. காதலு..!" என்று துடைப்பத்தை கொண்டு மாதவியை அவள் அன்னை கலாராணி சாத்தி எடுக்க..


"அம்மா அடிக்காதேம்மா.. விடும்மா.." அவளது அண்ணனும், தங்கையும் தங்கள் தாயை தடுக்க முனைய.. மாதவியின் மேல் விழுந்த நான்கு அடியில் இரண்டு அடி சுள்சுள்ளென்று இவர்கள் மீதும் விழுந்தது.


அவர் அடியிலிருந்து தப்பிப்பதற்காக அங்குமிங்கும் ஓடி கொண்டே.. "அப்பத்தா நான் சாமி புள்ளை என்னை விலக்கமாத்தால் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கு.. அதையும் மீறி விலக்கமாத்தால்ல அடிக்கிறல்ல.. இப்படி நீ அடிக்கும்போது அவனை தான் கட்டிக்கிட்டு வாழணும்னு என் மனசு வெறி கொள்ளுது" ஆங்காரமாக அவள் கூற..


"உன்னை பள்ளி கூடத்துக்கு அனுப்புறதாலதானடி இந்த பேச்சு பேசுறே.. நாளையிலிருந்து உன்னை மூலையில் உட்கார வைக்கிறேனா இல்லையான்னு பாரு.. இந்த வயசுலையே உனக்கு வெறி கொள்ளுதா வெறி.. உன் அப்பங்காரர் வந்ததும் சொல்லுறேன்.. அப்போ எப்படி உனக்கு வெறி கொள்ளுதா..? இல்லை உங்கப்பன் உன்னை கொல்றாரான்னு பார்க்குறேன். ஒழுங்கா படிக்கிறது இல்லை.. வீட்டு வேலை செய்றது இல்லை.. சுத்தமா பொறுப்பே இல்லை. பாரு டி உன் அண்ணனையும், தங்கச்சியையும் அதுங்க போறதும் தெரியாது வரதும் தெரியாது" காட்டு சீவு சுளீரென்று பட்ட எரிச்சலில் முகத்தை சுருக்கிக் கொண்டு நின்றவர்களை பார்த்து கூறினார்.


'அடேய் நல்லவனே.. உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்டா.. உன் விஷயத்தை சொல்லட்டுமா' என்ற மிரட்டல் பார்வையை தன் தமையன் மீது வீச..


"ப்ளீஸ்.. சொல்லிடாதே" என்று கண்களால் அவன் கெஞ்ச, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.



"மூத்தது மோழை இளையது காளைன்னு சொல்லுவாங்க.. ஆனா, நான் பெத்த மூத்ததும் இளையதும் மோழையா இருக்கு.. வேலை இல்லாமல் மெனக்கெட்டு நடுவுல பெத்ததுதான் அடங்காமல் காளை கணக்கா திரியுது" முந்தானையால் மூக்கை சிந்தி கொண்டு அவர் கூற..


"வேலை இல்லாமல் எப்படி மெனக்கெட்டு நடுவுல பெத்தே.. நீ பேசுறதே முரண்பாடா இருக்கு" அடி வாங்கியும் அடங்காமல் துடுக்காகப் பேசினாள்.


"இன்னைக்கு வரிவரியா உன்னை இழுக்கலைன்னா பாரு" என்று மறுபடியும் துடப்பத்தை தூக்கி, காட்டு சீவுகள் இறுக சுத்தினார்,


இதற்கு மேல் பாடி தாங்காது என்று உணர்ந்தவள் எடுத்தேன் பாரு ஓட்டம் என்பது போல் வீட்டில் இருந்து எடுத்த ஓட்டத்தை தன் தோழி தோட்டத்து கிணற்றினருகில் தான் வந்து நிறுத்தினாள்.




***************************


"நேத்து அப்படிதான் மரம் வெட்டுறதை தடுத்தே.. இன்னைக்கு எங்க அண்ணன் வீட்டு மண்டாபடி அதுவுமா பிரச்சனை பண்றே.. பழசை எல்லாம் மனசில் வச்சுக்கிட்டு தானே இதெல்லாம் பண்றே" கூட்டத்திலிருந்து ஒரு குரல் சலசலத்தது.



"இங்க பாருங்க ஊருக்குள்ள சந்தேகப்படும்படியா மரணம் நிகழ்ந்தால் புகார் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு" என பொறுமையாகவே மாதவி கூறினாள்.



"அந்த புள்ள புருஷன்காரன் தான் சொல்றானே.. ரொம்ப நாளா சூலை நோவுல அவதிப்பட்டு, வைத்தியம் பார்த்தும் எதுவும் சரியாகலே, அந்த விரக்தியில் வலி தாங்க முடியாமல் தூக்கு போட்டு தொங்கிட்டான்னு, அப்புறம் என்ன சந்தேக மரணம்னு நீயா.. குட்டைய கிளப்புறே..? ஆத்தாவுக்கு காப்பு கட்டிருக்கு உடனே சவத்தை எடுத்தாதான் சாமி ஊர்வலம் போக முடியும். போலீஸ் கேஸ் அது இதுன்னு போனா.. நாளைக்கு ராவுக்கு தான் காரியம் எல்லாம் முடியும், முதல் நாள் சாமி ஊர்வலமும், எங்க அண்ணன் வீட்டு மண்டாபடியும் தடைபடும் " ஆளாலுக்கு அவளை சுற்றி நின்று எகிறிக் கொண்டிருக்க,


"எல்லாரும் கூச்சலை கொஞ்சம் நிறுத்துங்க" அண்ணன் என்று அழைக்கப்பட்ட வணங்காமுடி அதட்டியதும் அனைவரும் அமைதியாயினர்.



"பொம்பளை புள்ளையை சுத்தி இப்படி தான் நிற்கிறதா..? கொஞ்சம் கூட அறிவுங்கிறதே இல்லை. எல்லாரும் தள்ளி போங்க" அவளை சுற்றியிருந்த கூட்டத்தை திட்டி கலைத்தவர்,


"இங்க பாரும்மா உன்னோட கடமை எதுவோ அதை செய், யாரும் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க" அவர் தன்மையாகக் கூற..



"ம்ம்" என்று மட்டும் பதிலளித்த கிராம நிர்வாக அலுவலரான மாதவி, காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு, அவர்களது வருகைக்காகக் காத்து கொண்டிருந்தாள்.



"என்ன அண்ணே இப்படி சொல்றீங்க.. பத்து வருஷம் கழிச்சு கோயிலை சிரமப்பட்டு எடுத்து கட்டி, கும்பாபிசேகம் பண்ணி காப்பு கட்டி திருவிழா பண்ற சமயத்தில் அபசகுணமா இந்த பொண்ணு உங்க மேல் உள்ள வன்மத்தில் இது எல்லாம் பண்ணுது, நீங்க என்னடான்னா இப்படி பேசுறீங்க.. நீங்க தம்பிய வர சொல்லுங்க.. தம்பிதான் இதுக்கு எல்லாம் சரிபட்டு வரும்" மற்றொருவன் மூச்சு விடாமல் சீறினான்.



"எம்மேல் மதிப்பும் மரியாதையும் இருந்தா, என் பேச்சுக்கு கட்டுப்பட்டு அமைதியா இருக்கணும். இல்லை, தம்பிதான் வரணும்னா இனிமேல் என்னை எந்த விசயத்துக்கும் தொந்தரவு பண்ண கூடாது" கணீர் குரலில் அவர் கூறியதும், அதன் பிறகு அனைவரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாயை திறக்காமல் மௌனமாக நின்றனர்.


இவளிடம் போய் ஏன் அமைதியை கடைபிடிக்கிறார் இவர் என்று வாய்க்குள் சில பேர் முணுமுணுத்து கொண்டனர்.




"உனக்கு ஏன்மா இந்த வேலை? ஏதோ பண்றாங்கன்னு விட வேண்டியதுதானே.. கிராமத்தில் இந்த மாதிரி சாவை மூடி மறைக்கிறது சகஜம்னு, இந்த ஊர் பொண்ணு உனக்கே இது நல்லா தெரியும். நீ எது பண்ணினாலும் உன்னை தப்பா நினைச்சு கோபப்படறாங்க, செத்த பொண்ணோட புருஷன் அவர் குவாரி கணக்கப்பிள்ளை. அதான் நீ அவருக்கு எதிரா செயல்படுறேன்னு நினைக்கிறானுங்க.. பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கும்மா..?" இன்னும் ஆறு மாதத்தில் பணி ஓய்வு பெற போகும் அனுபவம் மிகுந்த தலையாரி எடுத்து சொல்ல,


"இது என் கடமை அண்ணே! கிராமத்தில் நடக்கும் பாதி பெண்களோட கொலையை வயிறு வலி தாங்காமல் தூக்கு போட்டுக்கிட்டா, குழந்தை இல்லைன்னு மருந்து குடிச்சு செத்துட்டா.. இன்னும் அது இதுன்னு பல பொய் சொல்லி இன்னமும் மூடி மறைக்கிறாங்க.."


"காலையில் தானே இந்த பொண்ணு என்னை பார்த்து சிரிச்சுட்டு போனுச்சு, இன்னும் அந்த சிரிப்பு என் கண்ணுக்குள்ளையே இருக்கு, இது தற்கொலையாவே இருக்கட்டும்.. அதை உறுதிபடுத்திக்கிறதில் என்ன வந்துடப் போகுது. ஒரு பர்சன்ட் அளவாவது அந்த பொண்ணுக்கு ஞாயம் வாங்கிக் கொடுக்க வாய்ப்பிருக்கும்போது.. அதை செய்யிறதில் என்ன தப்பு? வேற எந்த பிரச்சனையா இருந்தாலும் போனா போகுதுன்னு விட்ருவேன், இதை எப்படி விட சொல்றீங்க..? இந்த பொண்ணு சாவு ஒருவேளை கொலையாயிருந்து எனக்கென்னன்னு நான் பாட்டுக்கு போனால், ஒரு பொண்ணா எனக்கே நான் ஞாயம் செய்துக்கலைன்னு அர்த்தமாயிடும்" என்று அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்த இறந்த பெண்ணின் கணவனை பார்த்தவாறு கூறினாள்.


அவள் அவ்வாறு பேசி கொண்டிருக்கும்போது அவள் அருகில் வந்த வணங்காமுடி, தலையாரியை கண்களால் அகல சொல்ல.. தலையாரியும் அதை புரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.


"நான் கேட்டதுக்கு என்னம்மா முடிவு பண்ணிருக்கே" என்று கேட்டார்.





"மற்றவங்களோட குற்ற உணர்வை போக்க நான் என்ன பண்ண முடியும்? ஆரம்பித்து வைத்த நீங்கதான்.. அவஸ்தையும் படணும்"


"முட்டா பசங்க அறிவுகெட்ட தனமா ஏதோ பண்ணிட்டாங்கம்மா.. கடைசி வாய்ப்பா உன்னை தவிர எனக்கு வேற வழி தெரியல"


"அவங்கவங்க வாழ்க்கையை வாழ்றதும் வீணாக்குறதும் அவங்கவங்க கையில் இருக்கு, இதில் நான் எதுவும் செய்ய முடியாது. போனவங்களை நினைச்சு குற்ற உணர்வோடு இருந்து.. இருக்குறவங்களை உயிரோடு கொல்லக் கூடாதுன்னு, நான் சொன்னதா சொல்லுங்க" என்றாள்.



"அந்த பொண்ணுக்கு ஞாயம் செய்யாமல் போனால்.. உனக்கு நீயே ஞாயம் செய்துக்கலைன்னு அர்த்தமாயிடும்னு சொன்னியே.. அது வெறும் வாய் வார்த்தையா..?"


"உங்க பக்கம் உள்ளவங்க பண்ணின பாவத்துக்கு என்னை வச்சு பரிகாரம் பண்ண பார்க்குறீங்களே அது ஞாயம் தானா..? என் அண்..." என்று ஏதோ சொல்ல வந்தவள் அதை முடிக்காமல் இடை வெட்டிவிட்டு, கண்களை மூடி திறந்தவள்,



"உங்களை விட அதிகம் பாதிக்கப்பட்டது என் குடும்பம் தான்.. இன்னொரு முறை இதை பத்தி பேசி என்னை தொந்தரவு பண்ணாதீங்க" என்று சிடுசிடுத்துவிட்டு அகன்றாள்.




*****************************


ஏழு நாள் திருவிழாவில் கடைசி நாளான அன்று.. முறை பெண், முறை பையன் உறவு முறை உள்ளவர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் தண்ணீரையும், வண்ண பொடிகளையும் விரட்டி விரட்டி ஊற்றியும், தூவியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.



மாதவியின் தங்கை யமுனா உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்க, கடந்து சில வருடங்களாக எதிலும் நாட்டம் இல்லாமல் ஊர் பக்கமே வராமல் இது போன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கும் மாதவி அன்றும் வேடிக்கை பார்த்து கொண்டு ஒதுங்கி நின்றாள்.


எவரேனும் அருகில் வந்து வண்ண பொடிகளை பூச முனைந்தால் கடிந்து கொள்ளும் முக பாவத்தில் நின்றவளருகில், அனைவரும் செல்ல தயங்கி யமுனாமீது மட்டும் பொடிகளை தூவி விளையாடினர்.


" பேரன் பேத்தி எடுத்தவளுக எல்லாம் கும்மாளம் போட்டுகிட்டு இருக்காளுக நீ மட்டும் ஏன் சாமி ஒதுங்கி நிற்கிறே.." அவளுடைய அப்பத்தா கேட்டார்.



"எனக்கு இதில் எல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்ல அப்பத்தா"


"என்னவோ போ சாமி" என்று பெரு மூச்சு விட்டு, அம்மன் ஊர்வலம் வீட்டின் முன் வந்து நின்றதும், தண்ணீர் ஊற்றி, தேங்காய் உடைத்து தரிசுத்து கொண்டிருக்க,


முன் பக்கத் தடித்த கம்பியை பிடித்து சாமியை தூக்கி கொண்டு வந்தவன், அருகில் இருந்த ஒருவனிடம் கொடுத்து விட்டு.. கை நிறைய பச்சை வண்ண பொடியை அள்ளி எடுத்து, மாதவியின் பின் புறம் வந்து அவள் கன்னத்தில் தடவ முயன்ற வேளையில் அவன் கையை பிடித்து தடுத்த ஒரு வலிய கரம், அவன் கையிலிருந்த பொடியை பிடிங்கி அவள் கன்னத்தில் மெதுவாக பூசி விட.. அம்மனை மட்டுமே கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தவள், திடீரென்று உணர்ந்த ஸ்பரிசத்தில் "ஏய்" என்ற கூச்சலோடு திரும்பியவள், தன் முன் நின்ற ஜனார்த்தனை கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.



அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத அந்த கூட்டத்தில் இருந்த பாதி பேர் அவனை அதிர்ச்சியோடு நோக்கினர். சில கண்கள் கோபமாகவும், சில கண்கள் இது என்னடா புது கதை என்று ஆர்வமாகவும் பார்த்தது. யாரிடமிருந்து வண்ண பொடியை பிடிங்கினானோ அவனோ கொலை வெறியோடு ஜனாவை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்.


அன்புடன்❤
வியனி


 
Top