ஆத்மா : 7
என்ன முயன்றும் மனதில் எழும் விரக்தி உணர்வினை, கோபத்தினை ராம் ராகவேந்தரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனது ஒரே ஆதாரம், பற்றுகோள், நம்பிக்கை எல்லாமே ஆத்மிகா தான்... இப்போது அவள் அவனது கை நழுவி போனதை நினைத்து அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதேநேரம் அவனால் தோல்வியை ஒத்து கொள்ளவும் முடியவில்லை.
'இப்போ என்ன நடந்து விட்டது? என்று பரிதவிக்கிறாய் மனமே! நிச்சயம் கூட இல்லை, வெறுமனே உறுதி தானே செய்து இருக்கிறார்கள். திருமணம் நடந்து விடவில்லையே... இன்னமும் உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு ராம்... உன் நம்பிக்கையைக் கைவிட்டு விடாதே. இந்த உலகத்தில் பணம் இல்லாது தோல்வி அடைந்தவனை விட மனதில் தைரியம், நம்பிக்கை இல்லாது தோல்வியுற்றவன் தான் அதிகம். நீ நம்பிக்கை வை, உன்னில் நம்பிக்கை வை...' என்று தனக்குத் தானே நம்பிக்கையூட்டி கொண்டவன் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.
அப்போது இன்னுமொரு கடலலை வந்து அவன் மீது ஆசிர்வாதம் செய்வது போல் விழுந்து தெறித்தது. இயற்கையே அவனை ஆசிர்வாதம் செய்தது போல் அவன் மகிழ்ச்சி அடைந்தான்.
என்ன தான் அவன் நம்பிக்கை இழக்காது நிமிர்ந்து இருந்த போதும் அவனுள் ஆத்மிகா மீதான கோபம், வெறுப்பு மட்டும் அப்படியே இருந்தது.
'நான் அவ்வளவு சொல்லியும் நீ என் பேச்சை கேட்கலையில்ல... காட்டுறேன்டி, இந்த ராம் யாருன்னு உனக்குக் காட்டுறேன்... இந்த ராம் உனக்கு எந்தளவுக்கு முக்கியம்ன்னு காட்டுறேன். நீயே கதறிட்டு வருவேடி... வர வைப்பேன்... அப்போ இருக்குடி உனக்கு என் கிட்ட... இந்த ராமை அவ்வளவு சாதாரணமா நினைச்சிட்டல்ல... நீ கூட என்னை வேலைக்காரனா தானே நினைச்சியிருக்க... அப்புறம் எதுக்குடி நட்புன்னு ஒண்ணைத் தூக்கி சுமந்துட்டு அலையற... இனி இந்த வேலைக்காரன் யார்ங்கிறதை நீ புரிஞ்சிப்ப...' அவன் தனக்குள் பெரும் கோபம் கொண்டு கத்தினான். அந்த நொடி அவனது மனதினை பெருங்கோபம் சூழ்ந்திருந்தது.
அடுத்து என்ன செய்வது? இதிலிருந்து எப்படி மீள்வது? என்று அவன் பெருத்த யோசனையுடன் நின்றிருந்தான். அப்போது அவனது அலைப்பேசி அழைத்தது. யாருடைய அழைப்பையும் எடுத்து பேசும் மனநிலையில் அவன் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் விடாது ஒலித்த அலைப்பேசியைக் கண்டு அவனுக்கு எரிச்சல் வந்தது. கோபமாக அலைப்பேசியை எடுத்தவன் அதன் திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் சற்றுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். பின்னே அழைத்தது அமரேந்தர் அல்லவா! அவன் விழிகளை மூடி திறந்து தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அதன் பிறகே அழைப்பை உயிர்ப்பித்தான்.
"ராம், இன்னும் நீ வரலையே? ஏன்?" என்று அமரேந்தர் கேட்க...
"சாரி சார்... எதிர்பாராத விதமா ஒருத்தரை சந்திக்க வேண்டியதாய் போச்சு... ரொம்ப நாளா அவரோட சந்திப்புக்காகக் காத்திருந்தேன் சார்." என்று அவன் சரளமாகப் பொய்யுரைக்க...
"எந்த மீட்டிங்காக இருந்தாலும் எல்லாத்தையும் கேன்சஸ் பண்ணிட்டு இப்பவே நீ இங்கே வந்தாகணும் ராம். உடனே, இப்பவே..." என்று அழுத்தி உச்சரித்த அமரேந்தர் ராம் ராகவேந்தரின் பதிலை கேட்காது அழைப்பை துண்டித்து விட்டான்.
ராம் ராகவேந்தர் யோசனையுடன் அலைப்பேசியைப் பார்த்தவன் பின்பு வேறுவழியின்றி அமேரந்தர் வீட்டிற்குக் கிளம்பினான். போகும் வழியில் ஞாபகமாய்ப் புது உடை வாங்கியவன் தனது ஈர உடையை மாற்றிய பிறகே கிளம்பி சென்றான்.
அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் அவன் அமரேந்தரின் வீட்டில் இருந்தான். இத்தனை நாள் உரிமையுடன் உள்ளே வந்தவன் இன்று ஏனோ பெரும் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் இருக்கையில் இருந்து எழுந்து அவனை நோக்கி வந்த அமரேந்தர்,
"வா ராம்... உன்னைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்." என்று மகிழ்ச்சியோடு சொன்னவன் ராம் ராகவேந்தர் தோள் மீது கை போட்டு அணைத்தபடி ரன்வீர் வீட்டாரிடம் திரும்பி,
"இது ராம் ராகவேந்தர்... எங்க வீட்டு செல்ல பிள்ளை... என்னோட வளர்ப்பு..." என்று பெருமிதத்துடன் சொன்னான். அதைக் கேட்டு ராம் ராகவேந்தரின் தயக்கம் முற்றிலும் இல்லாது போனது.
"வணக்கம்..." என்று ராம் ராகவேந்தர் கை கூப்பியபடி எல்லோரையும் கண்டு புன்னகைத்தான்.
அப்போது ராம் ராகவேந்தரின் விழிகளில் ரன்வீரின் கைகளுக்குள் சிறைப்பட்டு இருந்த ஆத்மிகாவின் கரங்கள் தென்பட்டது. அவனது பார்வை சில நொடிகள் ஆத்மிகாவின் கரங்கள் மீது தேங்கி நின்று பின்பு அவளது விழிகளை உறுத்து விழித்தது. அவனது தீப்பார்வையில் உள்ளூர நடுங்கிய ஆத்மிகா மெல்ல தனது கரங்களை ரன்வீர் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டாள். ரன்வீரும் புன்னகையுடன் அவளது கரங்களை விட்டு விட்டான். ஆத்மிகா ராம் ராகவேந்தரை காண இயலாது தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள். அவளது மனமோ பயத்தில் டொம்மென்று சத்தமாய் மத்தளம் வாசித்தது.
வைஷ்ணவி, ஷப்னம் இருவரும் ராம் ராகவேந்தரை புன்னகையுடன் பார்த்தனர். அரவிந்தன் வெறுப்புடன் அவனைப் பார்த்தார். நிர்மலாவோ அவனை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டு இருந்தார். ராம் ராகவேந்தரின் புன்னகை முகத்தில் இருந்து அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு ராம் ராகவேந்தரை நினைத்துப் பெருத்தக் குழப்பமாக இருந்தது. ஆனாலும் அவர் நினைத்ததைச் சாதித்து விட்டார். அதுவே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
"ரன்வீரை உனக்குத் தெரியும் தானே ராம்... இவங்க ரன்வீர் குடும்பத்தார். நம்ம அம்முவை பெண் கேட்டு வந்திருக்காங்க. எங்க எல்லோருக்கும் இதில் சம்மதம். உனக்குச் சர்ப்ரைசாக இருக்கட்டுமேன்னு தான் நான் உன்னிடம் விசயத்தைச் சொல்லாது உடனே கிளம்பி வர சொன்னேன்." அமரேந்தர் அவனிடம் விளக்கம் கொடுக்க...
"ஓ... உண்மையில் சந்தோசமான விசயம் தான் சார்..." என்றவனது பார்வை நொடி பொழுதில் ஆத்மிகாவை தொட்டு மீண்டது. அவள் மறந்தும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
"ஒரு நிமிசம் சார்..." என்று அமரேந்தரிடம் அனுமதி வாங்கியவன் நேரே ரன்வீரிடம் வந்து,
"வாழ்த்துகள் ரன்வீர் சார்... எங்க அம்முவை திருமணம் செய்ய நீங்க கொடுத்து வச்சிருக்கணும். உலகத்தில் அம்மு மாதிரி ஒரு நல்ல பெண்ணை நீங்க பார்க்க முடியாது." ராம் ராகவேந்தர் ரன்வீர் கைப்பிடித்துக் குலுக்கினான். ஆத்மிகா அவன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"தேங்க்யூ ராம்..." என்று புன்னகையுடன் எழுந்த ரன்வீர் ராம் ராகவேந்தரின் கரங்கள் பிடித்துப் பதிலுக்குக் குலுக்கினான். அந்தக் கணம் ராம் ராகவேந்தர் மீதிருந்த அவனது சந்தேகம் முற்றிலும் தீர்ந்தது. தங்களுக்குள் இருப்பது வெறுமனே தொழில் போட்டி தான் என்று ரன்வீர் ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
அடுத்து ராம் ராகவேந்தர் ஆத்மிகா அருகில் வந்தவன் அவள் புறம் கை நீட்டி, "வாழ்த்துகள் அம்மு... உனக்குக் கல்யாணம் எல்லாமாகப் போகுது... பெரிய மனுசியாகிட்ட..." என்று வாழ்த்தில் ஆரம்பித்துக் கேலியில் முடித்தான்.
ஆத்மிகா அவனை அரண்டு போய்ப் பார்க்க... அவனது உதடுகளோ 'தத்தி' என்று முணுமுணுத்தது. அவனது உதட்டசைவை அவளால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடிந்தது. சற்று முன் ரன்வீரிடம் சொன்னது அனைத்தும் பொய் என்பதை அவன் சொல்லாமல் சொன்னான். அவள் அருகிலிருந்த ரன்வீருக்கு வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை. அவனும், மற்றவர்களும் இருவரையும் சாதாரணமாகப் பார்த்தனர்.
"வாழ்த்துச் சொன்னால் பதிலுக்கு நன்றி சொல்லணும் அம்மு..." என்று ராம் ராகவேந்தர் அவளைக் கேலி செய்ய...
ஆத்மிகாவால் அவனது புன்னகையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் கோபம் கொண்டு அவளைத் திட்டியிருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இப்படி அவன் அவளைக் கண்டு புன்னகைப்பது அவளுக்குப் பெருத்த யோசனையைக் கொடுத்தது. அவள் யோசனையுடன் அவனைக் கண்டு,
"தேங்க்ஸ் ராம்..." என்று நன்றியுரைக்க...
"சில் அம்மு... உன்னோட ஃபங்கசனுக்கு வைத்திப்பா கூடச் சேர்ந்து ஸ்பெசல் விருந்து தயாரிக்கப் போறேன். இன்னைக்குச் சாப்பிட்டு விட்டு சொல்லு..." என்றவன் அமரேந்தரிடம் விடைபெற்று உள்ளே சென்று விட்டான். அதற்கு மேல் அவன் அங்கே இருந்தால் அவனது கோபம் வெளிப்பட்டு விடும் என்று அவனுக்கு நன்கு தெரியும்.
ராம் ராகவேந்தர் சென்றதும் அமரேந்தர் ரன்வீர் வீட்டாரிடம் அவனைப் பற்றிப் புகழ்ந்து சொல்லி கொண்டு இருந்தான். நிர்மலாவிற்கு அதைக் கேட்டு எரிச்சல் வந்த போதும் எதையும் வெளிக்காட்டி கொள்ளாது அமர்ந்திருந்தார். அரவிந்தனும் அப்படியே... மற்றவர் மூவரும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
சமையலறைக்கு வந்த ராம் ராகவேந்தரை கண்ட வைத்தி, "வாப்பா ராம்..." என்று புன்னகையுடன் வரேவற்க...
"வந்தேன் வைத்திப்பா... இன்னைக்கு நம்ம வீட்டு இளவரசிக்கு திருமண நிச்சயமாகி இருக்கு. ரொம்பச் சந்தோசமா இருக்கு." என்று அவன் சொல்ல...
"ஆமா ராம்... ரொம்பச் சந்தோசமா இருக்கு... அம்மு நம்ம கண் முன்னாடி வளர்ந்த பெண் இல்லையா?"
"சந்தோசத்தை ஸ்வீட் செஞ்சு கொண்டாடிடலாமா?" என்று அவன் கண்சிமிட்டி சிரித்தான்.
"கட்டாயம்..." வைத்தியும் புன்னகைக்க...
அடுத்த நொடி ராம் ராகவேந்தர் களத்தில் இறங்கி விட்டான். அவனுக்கு நன்றாகச் சமைக்க வரும். தனது நளபாகத்தின் கைவரிசையை இன்று காட்டிட எண்ணி சமையலில் ஈடுபட்டான். அதுவும் ஆத்மிகாவிற்குப் பிடித்த அன்னாசி கேசரி... அவன் மனதிற்குள் என்ன தான் குமைந்த போதும் எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை. அந்தளவிற்கு அவன் கச்சிதமாக நடித்தான். இது இன்றோடு முடிந்து போகும் விசயமல்லவே...
எல்லோரும் உணவு உண்ண அமர... ராம் ராகவேந்தரே இன்முகமாக அனைவருக்கும் பரிமாறினான். அதிலும் ஆத்மிகாவின் தட்டில் கேசரியை கூடுதலாக வைத்தவன்,
"உனக்குப் பிடித்த பைனாப்பிள் கேசரி அம்மு... உனக்காகவே நான் பண்ணியது." என்று கூற... அதைக் கேட்டு அவளது முகம் இருண்டு போனது. அதை யாருக்கும் காட்ட பிடிக்காது தலைகுனிந்து கொண்டாள்.
"கம்பெனியில் தான் வேலை பார்க்கிறன்னு நினைச்சேன். பரவாயில்லை, வீட்டிலும் எல்லா வேலையும் பார்க்கிறியே..." என்று நிர்மலா அவனைக் கண்டு கேலியாய் சொன்னவர் அண்ணன் புறம் திரும்பி,
"நமக்கு இப்படி ஒரு வேலைக்காரன் கிடைக்க மாட்டேங்கிறானே..." என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
அதைக் கேட்டு அமரேந்தர் கோபமாய் ஏதோ சொல்ல முனைந்த போது அவனை முந்தி கொண்டு ராம் ராகவேந்தர்,
"நம்ம வீட்டு வேலையை நாம் பார்ப்பதில் தப்பில்லையே..." என்று சொல்ல... அவனது பதிலில் அமரேந்தர் திருப்தியுடன் புன்னகைத்தான்.
ராம் ராகவேந்தர் சொன்னதைக் கேட்டு நிர்மலாவின் முகம் கறுத்துப் போனது. ஆனாலும் கெத்து குறையாது, "இது உன்னுடைய வீடுன்னு சொல்லறியாப்பா?" என்று சிறு நக்கலுடன் கேட்க...
"நிச்சயமாய், சார் எங்களை வேலைக்காரனா பார்க்கிறது இல்லை. எங்களைச் சக மனிதனாகத் தான் பார்க்கிறார். அப்படி இருக்கும் போது நாங்களும் எங்க வீடா நினைச்சு வேலை பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லையே." ராம் ராகவேந்தர் பதிலுக்குத் திருப்பிக் கொடுக்கத் தயங்கவில்லை.
"இப்போ அவரைப் பத்தின ஆராய்ச்சி நமக்கு எதுக்கும்மா? பேசாம சாப்பிடுங்க." ஷப்னம் அன்னையின் காதினை கடித்தாள். அதனால் நிர்மலா அமைதியாகி விட்டார்.
ஆனால் ராம் ராகவேந்தர் அமைதியாகவில்லை. மாறாக அவனது பார்வை ஆராய்ச்சியுடன் அவரைப் பார்த்தது. என்ன தான் அவர் அப்பாவி போல், ஒன்றும் அறியாதவர் போல் முகத்தை வைத்து கொண்டாலும் அவரது விழிகளில் வழிந்த குரோதத்தை அவன் இனம் கண்டு கொண்டான். அதைக் கண்டு அவனது உதடுகளில் எள்ளல் புன்னகை ஒன்று தோன்றியது.
ரன்வீர் குடும்பத்தினர் விடைபெற்றுச் செல்லும் முன் அமரேந்தர் மகளிடம், "ரன்வீரிடம் தனியே பேச ஆசைப்படுகிறாயா?" என்று கேட்க... அவளோ ராம் ராகவேந்தரை பார்த்தபடி, "இல்லை... வேண்டாம்..." என்று வேகமாக மறுத்து தலையசைத்தாள்.
ரன்வீர் புன்னகையுடன், "இருக்கட்டும் அங்கிள்... இனி எப்போ வேணும்ன்னாலும் பேசலாம் தானே... அடிக்கடி ஃபோனில் பேசிக்கிறோம்." என்று விட்டு விடைபெற்றுச் சென்றான்.
அவர்கள் சென்றதும் அமரேந்தர் அஞ்சலியுடன் அலுவலகத்திற்குக் கிளம்பி சென்று விட்டான். போகும் முன் அவன் ராம் ராகவேந்தரிடம் காலை உணவு உண்டு விட்டுச் செல்லுமாறு பணித்து விட்டே சென்றான். அவர்கள் அனைவருடன் உண்ண ராம் ராகவேந்தர் மறுத்து விட்டானே. இப்போது வீட்டில் இருப்பது இரண்டே பேர் தான்... ராம் ராகவேந்தரும், ஆத்மிகாவும் தான்...
"ராம்..." ஆத்மிகா தயக்கத்துடனும், பயத்துடனும் அவனை அழைக்க...
"சொல்லுங்க மேடம்..." என்று அவன் பணிவுடன் கேட்க...
"ஏன் மேடம்ன்னு சொல்ற ராம்? அம்மு இல்லைன்னா ஆத்மின்னு சொல்லு?" என்று அவள் தவிப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் 'மேடம்' என்று சொன்னது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
"அது எப்படிங்க முடியும் மேடம்? தி கிரேட் பிசினஸ்மேன் ரன்வீரோட ஃபியான்சி நீங்க மேடம்... உங்களைப் போய் மரியாதை இல்லாம கூப்பிட முடியுங்களா மேடம்?" அவன் சற்றும் இரங்காது பதில் சொல்ல...
"நான் அதே அம்மு தான்... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை..." என்றவளை உறுத்து விழித்தவன் அவளது வலக்கையைச் சுட்டிக்காட்டி,
"அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?" என்று ரன்வீர் அணிவித்த மோதிரத்தை கண்டு கேட்க... அவள் பதில் கூற முடியாது விக்கித்துப் போய் அவனைப் பார்த்தாள்.
"எல்லாத்தையும் மறந்துட்டு நீங்க வேற வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்க மேடம்... நல்லது, ரொம்ப நல்லது... வாழ்த்துகள்..." என்று நக்கலாய் சொன்னவன் அவளின் பதிலை எதிர்பாராது சென்று விட்டான்.
ஆத்மிகா ஏதோ தான் குற்றம் செய்துவிட்டதாய் எண்ணி குற்றவுணர்வில் குமைந்தாள். தவறு செய்தவன் அவன்... ஆனால் அவன் அவளைத் தான் குற்றவுணர்வில் தவிக்கச் செய்தான்.
ரன்வீர் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் அவர்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டு செல்ல... அரவிந்தன் மற்றும் நிர்மலா மட்டும் தனித்து இருந்தனர். அரவிந்தன் பெருத்த யோசனையில் அமர்ந்திருந்தார்.
"என்ன யோசனை அண்ணா?"
"இந்தத் திருமணம் சரி வருமான்னு யோசிக்கிறேன்..."
"ஏன்?" நிர்மலா புருவங்கள் சுருங்க அண்ணனை பார்த்தார்.
"இந்தத் திருமணத்தால் மட்டும் ராம் அடங்கி விடுவானா?"
"வேலைக்காரனுக்கு அதுக்கு மேல் என்ன பவர் இருக்கு அண்ணா? இனி ராம் ரன்வீரை எதிர்த்து எது செஞ்சாலும் அமரேந்தர் கவனத்துக்குப் போகும். தனது வருங்கால மருமகன் பாதிக்கப்படுவதை அமரேந்தர விரும்ப மாட்டார். நிச்சயம் அவர் ராமை கண்டிப்பார். ரன்வீருக்காக அவனைத் தூக்கி எறிய கூடச் சான்ஸ் இருக்கு." நிர்மலா அவராக ஒரு கணக்கு போட்டு சொன்னார்.
"ம், அதுவும் சரி தான்... இதை எல்லாம் விட அமரேந்தர் சொத்துகள் நமக்குத் தான் வந்து சேரும். பணம் பணத்தோடு சேர்வது நல்லது தான்... அந்த விதத்தில் ரன்வீர் கொடுத்து வைத்தவன் தான்..." என்றவர் பின்பு,
"ஷப்னத்துக்கு மாப்பிள்ளை பார்க்கவா? ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா நடத்தி விடலாம்." என்று தங்கையிடம் அபிப்ராயம் கேட்க...
"மாப்பிள்ளை பாருங்கண்ணா... சேர்த்து முடித்து விடலாம்." நிர்மலாவும் மகள் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னார்.
அரவிந்தன் அலுவகத்திற்குக் கிளம்பி செல்ல... நிர்மலா தனது அன்னை கமலாதேவியைக் காண சென்றார். மகளைக் கண்டதும் அன்னையின் முகம் மலர்ந்தது.
"திருமண உறுதி பண்ணியாச்சா? ரன்வீரோட வருங்கால மனைவி எப்படி இருக்கிறாள்?" என்று அவர் ஆவலோடு கேட்டார்.
"எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஃபோட்டோஸ் பாருங்க..." என்ற நிர்மலா தனது அலைப்பேசியை எடுத்து அதிலிருந்த புகைப்படங்களை அவரிடம் காட்டினார்.
"பொண்ணு ரொம்ப அழகா இருக்கா... நம்ம ரன்வீருக்கு ஏத்த பொண்ணு தான். இருந்தாலும் ஷப்னம் அளவுக்கு இல்லை." அவர் தனது பேத்தியை விட்டு கொடுக்காது சொன்னார்.
"ம்மா, இனி ரன்வீர், ஷப்னமை இணைத்து பேச கூடாது. இது ஆத்மிகா கேட்டால் என்ன நினைப்பாள்?" நிர்மலா அன்னையைக் கடிந்தார்.
"என்னவோ போ... நாம ஒண்ணு நினைக்க, தெய்வம் ஒண்ணு நினைக்குது..." என்றவரின் பார்வை அடுத்து வந்த புகைப்படத்தில் நிலைத்து நின்றது.
"இது... இது..." அவர் பெரும் அதிர்ச்சியுடன் கேட்க...
"இவன் பெயர் ராம் ராகவேந்தர்." நிர்மலா நிர்மலமான முகத்துடன் சொல்ல...
"இது எப்படிச் சாத்தியம்?" கமலாதேவி திகைப்புடன் மகளைப் பார்த்தார்.
"சாத்தியமாகி இருக்கிறதே... என்னாலும் தான் நம்ப முடியவில்லை."
"இந்த விசயம் அரவிந்தனுக்குத் தெரியுமா?"
"இல்லை... அண்ணாவால் அடையாளம் காண முடியவில்லை. ஒருவேளை மறந்திருப்பான்."
"இவனால் நமக்கு எதுவும்..." என்ற அன்னையை ஆறுதலாய் பார்த்த நிர்மலா,
"ஒரு ஆபத்தும் வராது... அப்படி வராமல் இருப்பதற்காகத் தான் இந்த ஆத்மிகாவை நம்ம ரன்வீருக்கு பேசி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். இல்லை என்றால் ரன்வீரை விட்டு தர எனக்கு என்ன பைத்தியமா? நாம ஆஸ்தி, அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்றால் இந்த நச்சுப் பாம்பை நாம நசுக்கி தூக்கி தூர எறிய வேண்டும். அது இந்தத் திருமணம் மூலம் தான் நடக்கும்." என்று ஆத்திரத்துடன் சொன்ன மகளைப் பார்த்தவர் துயரத்துடன் விழிகளை மூடி கொண்டார். கடந்த காலம் கண்முன் வந்து போனதோ என்னமோ... அவரது விழிகளினோரம் கண்ணீர் துளிகள் துளிர்த்தது.
மாலையில் ராம் ராகவேந்தர் அலுவலகத்தில் இருக்கும் போது அமரேந்தர் அவனைக் காண வந்தான். அவனை வரவேற்று அமர வைத்த ராம் ராகவேந்தர்,
"சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே சார்..." என்று பணிவுடன் சொல்ல...
"அது சரி வராது ராம்... நானே உன்னை வந்து பார்ப்பது தான் முறை..." என்ற அமரேந்தரை கண்டு அவனுக்கு யோசனையாக இருந்தது.
"என்ன விசயம்... சொல்லுங்க சார்?"
"நீ நடத்தி வரும் தொழில்களை எல்லாம் நீ திறம்பட நடத்தி வருகிறாய் ராம்... அதில் எந்தச் சந்தேகமும் இல்லை." என்ற அமரேந்தரை அவன் யோசனையாய் பார்த்தான்.
"இந்தத் தொழில்களுக்காக நான் போட்ட பணத்தை விடப் பல மடங்கு அதிகமான பணத்தை லாபம் என்கிற பெயரில் நீ எனக்குத் திருப்பிக் கொடுத்துட்ட..." அமரேந்தரே பேசட்டும் என்றெண்ணி ராம் ராகவேந்தர் அமைதி காத்தான்.
"இனிமேலும் உன் உழைப்பை சுரண்ட எனக்கு உரிமை இல்லை." என்ற அமரேந்தரை கண்டு அவனது விழிகள் கூர்மையடைந்தது.
"இப்போது அம்முவுக்கு வேறு திருமணம் நடக்கவிருக்கிறது. நாளைக்கு ரன்வீர் வந்து உன்னைப் பார்த்து ஏதேனும் கேள்வி கேட்டால்...? நிச்சயம் அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். உன்னை நான் என் வீட்டில் ஒருவன்னு சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லலை ராம்... என்னோட மனசில் இருந்து தான் சொல்றேன்." என்று நிறுத்தியவன் ராம் ராகவேந்தரை கண்டு,
"இந்தத் தொழில்கள் எல்லாம் உன் உழைப்பினால் வந்தது. அதனால் இதை எல்லாம் உன்னுடைய பெயருக்கே எழுதி வைத்து விட்டேன்." என்று சொல்ல...
ராம் ராகவேந்தர் அமரேந்தரின் வார்த்தைகளை மறுத்து கூறவில்லை. மாறாக அமரேந்தர் சொன்னதைக் கேட்டு அவனது விழிகள் பளபளத்தது. அதை அமரேந்தரும் கண்டு கொண்டான். ஆனால் அது அவனின் மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாய் அவன் தவறாக நினைத்துக் கொண்டான்.
"என்னோட ராமை யாரும் கேள்வி கேட்க கூடாது. நாளைக்கு லாயர் எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிச்சு உன் கிட்ட சைன் வாங்க வருவார். நீயும் எல்லாம் படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணிரு. ரெஜிஸ்டர் பண்ணிரலாம்." என்று அமரேந்தர் சொல்ல...
ராம் ராகவேந்தர் உடனே அமரேந்தரின் கால்களில் விழுந்து, "எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் சார்..." என்றான் பணிவுடன்... அந்தக் கணம் ராம் ராகவேந்தரின் உவகையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. உலகத்தை வசப்படுத்திய உணர்வு அவனுள்...!
அங்கே நிர்மலா ஒன்று நினைக்க, இங்கே அமரேந்தர் வேறு ஒன்றை செய்து முடித்திருந்தான். அமரேந்தர் வர போவதை முன்பே ஊகித்து விட்டானோ!
"ராம், எனக்கு இன்னொரு கடமை இருக்கிறது..." என்று அமரேந்தர் சொல்ல...
"என்னன்னு சொல்லுங்க சார்... நான் செய்றேன்."
"நீ கல்யாணம் பண்ணிக்கணும்..." அமரேந்தர் சொன்னதும் ராம் ராகவேந்தர் இறுகி போய் அமைதியாக இருந்தான்.
"அம்மு கல்யாணத்தோட உன்னுடைய கல்யாணமும் சேர்த்து நடத்தி பார்க்கணும்ன்னு எனக்கு ஆசை..."
"நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கிறேன் சார்... முதலில் அம்முவோட கல்யாணம் முடியட்டும்." என்று அவன் முடித்துக் கொண்டான்.
"ஓகே ராம்... நான் கிளம்பறேன்..." என்ற அமரேந்தர் அவனிடம் விடைபெற்றுச் சென்றான்.
ராம் ராகவேந்தர் மிகுந்த யோசனையுடன் அமர்ந்திருந்தான். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறதே!
***********************
மறுநாள் காலையில் அமரேந்தர் மனைவியை அழைத்துக் கொண்டு மகளின் திருமணம் விசயம் பற்றிப் பேச தனது தங்கை ஷர்மிளாவின் வீட்டிற்கு வந்திருந்தான். தங்கையின் மக்கள் உதய்பிரகாஷ் மற்றும் ஷாலினி இருவரும் அவர்களை உற்சாகமாய் வரவேற்றனர். உதய்பிரகாஷ் தந்தையைப் போன்று சற்று அமைதியானவன். ஆனால் ஷாலினி கலகலவென்று பேசுபவள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசி கொண்டிருக்க... அமரேந்தர் மட்டும் சூர்யபிரகாஷை தனியே அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தான்.
"என்ன அமர்? தனியா அழைச்சிட்டு வந்திருக்கீங்க? ஏதேனும் முக்கியமான விசயமா?" சூர்யபிரகாஷ் விசயம் பெரிது என்றெண்ணி கேட்டான்.
"ஆம், ராம் பத்தி பேசணும்." என்று அமரேந்தர் சொன்னதும் சூர்யபிரகாஷ் அமைதியாகி விட்டான்.
"திடீர்ன்னு நேத்து ரன்வீர் வீட்டில் இருந்து அம்முவை பெண் கேட்டு வந்து திருமண உறுதி பண்ணிட்டு போயிட்டாங்க."
"அதான் சொன்னீங்களே..."
"நாளைக்கு ரன்வீர் நம்ம வீட்டு மருமகனா வந்து ராமை அதிகாரம் பண்ணுவது எனக்குப் பிடிக்கலை. என்ன தான் ரன்வீர் எனக்கு மருமகனாகப் போகிறவன் என்றாலும் ராம் எனக்கு எப்பவுமே ஸ்பெசல் தான்."
"உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா அமர்...?"
"ம், அதனால் தான் ராம்க்கு அவன் பார்த்து வந்த தொழில்களை எல்லாம் அவன் பெயருக்கு மாற்றி எழுதி வச்சிட்டேன்." என்ற அமரேந்தரை கண்டு சூர்யபிரகாஷ் வியப்பு ஏதும் அடையவில்லை. மாறாக அமரேந்தரின் ஈகை குணம் அவனுக்கு ஏற்கெனவே தெரியுமாதலால் சந்தோசம் தான் அடைந்தான்.
"ரொம்ப நல்லது அமர்... ராம் உண்மையில் பாவம் தான்..." என்றான் சூர்யபிரகாஷ் வருத்தமாய்...
"என்னால் தானே ராம்க்கு இந்த நிலை... நான் பாவி சூர்யா..." என்ற அமரேந்தரின் குரல் தழுதழுத்தது.
"ப்ச், எல்லாம் விதி அமர்..." சூர்யபிரகாஷ் அவனைத் தேற்றினான்.
"விதி மேல் பாரத்தைப் போட்டுட்டு நான் தப்பிக்க நினைக்கலை சூர்யா... நான் செய்த அநியாயத்துக்குச் சிறிதளவாவது நியாயம் செய்து விட்டேன் என்றே நினைக்கிறேன். இப்போது தான் என்னுடைய மனப்பாரம் சிறிது குறைந்து இருக்கிறது." என்ற அமரேந்தரை கண்டு,
"இனி ராம் வாழ்க்கை நல்லாயிருக்கும். கவலைப்படாதீங்க அமர்..." சூர்யபிரகாஷ் ஆறுதலாய் புன்னகைத்தான்.
அதேநேரம் ஆத்மிகா இன்னும் விழி திறக்காது 'டிவி ஹால்'இல் படுத்து இருந்தாள். வைத்தி கையில் காபி கோப்பையுடன் அவள் அருகே நின்று கொண்டு இருந்தார்.
"அம்மு, எழும்பி காபி குடிம்மா..." என்று அவர் அவளிடம் கெஞ்சி கொண்டிருக்க...
"ம்ஹூம், ராம் வந்தால் தான் காபி குடிப்பேன்." என்று அவள் பிடிவாதம் பிடிக்க...
"ராம்க்கு ஏதோ வேலை இருக்குன்னு நினைக்கிறேன். நான் ஃபோன் பண்ணினால் எடுக்க மாட்டேங்கிறான்." அவர் சொன்னதைக் கேட்டு அவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
"சரி, நானே அவன் கிட்ட பேசிக்கிறேன்." என்றவள் தனது அறையை நோக்கி செல்ல...
"அம்மு, காபி...?" என்று வைத்தி கேட்க...
"இருக்கட்டும்... வந்து குடிக்கிறேன்." என்றவள் விறுவிறுவென நேரே தனது அறைக்குச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததும் ஆத்மிகா தனது அலைப்பேசியை எடுத்து ராம் ராகவேந்தருக்கு அழைத்தாள். நேற்று அவன் பேசிவிட்டுச் சென்றது, இன்று அவன் இங்கு வராதது எல்லாம் சேர்த்து அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன் என்ன தான் அவளுக்குக் கஷ்டம் கொடுத்த போதும் அவன் இல்லாது, அவனைப் பார்க்காது அவளால் இருக்க முடியவில்லை.
மறுபுறம் ராம் ராகவேந்தர் அழைப்பை எடுக்கவில்லை. அவள் மீண்டும் மீண்டும் விடாது அவனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் தொல்லை தாங்காது மறுபக்கம் அவன் அழைப்பை எடுத்து இருந்தான். ஆனால் அவன் எதுவும் பேசாது அமைதியாக இருந்தான்.
"ராம், ராம், ராம்..." என்று அவள் தான் அவனது குரல் கேட்காது படபடத்து விட்டாள்.
"சொல்லு, காது நன்றாகக் கேட்கிறது..."
"நீ ஏன் இன்னமும் வீட்டுக்கு வரலை?"
"நான் எதுக்கு வரணும்?" அவன் ஒட்டாது பேசியதை கேட்டு அவள் திகைத்து போனாள்.
"நீ காபி கொண்டு வந்து கொடுத்தால் தானே நான் எழுந்திருப்பேன்." அவள் இறங்கி போன குரலில் சொல்ல...
"இனி இப்படி முட்டாள் மாதிரி பேசி கொண்டு இருக்காதே... உனக்குக் கல்யாணமாகப் போகிறது. இன்னமும் என் முகத்தில் தான் விழிக்கணும், நான் தான் காபி கொண்டு வந்து கொடுக்கணும்ன்னு என்று எல்லாம் நினைக்காதே... இனி உனக்கு என்று ரன்வீர் இருக்கிறான். வேணும்ன்னா அவனைக் கூப்பிட்டு காபி கொடுக்கச் சொல்... இனி என்னைத் தொந்தரவு பண்ணாதே... தத்தி, தத்தி..." என்று அவன் அவளைக் கோபமாய்க் கடிந்தபடி அழைப்பை துண்டித்தான்.
ராம் ராகவேந்தர் சொன்னதைக் கேட்டு அவள் தான் அதிர்ச்சியில் சிலையாய் சமைந்தாள். இனி ராம் ராகவேந்தர் வேறு? அவள் வேறா???
“போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்
போ போ என் நிழலும் பிரிந்து என்னைத் தனிமை ஆக்கட்டும்
கோவம் உன் கோவம் என் நெஞ்சை கொன்று போக
கண்கள் என் கண்கள் கண்ணீரில் நனையுதே
போதும் இப்போதும் எப்போதும் உன் நினைவுகள்
பாவம் என் உள்ளம், சொல்லாமல் கரையுதே”
(போ போ - பாடலில் இருந்து சில வரிகள்)
ராகமிசைக்கும்...!!!!