அதீதம்-4
அதீத வழுவழுப்புடன் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அந்த உயர் ரக, உயர் தர உணவு மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
நடுத்தர உயரம், சிவந்த நிறம், முன் வழுக்கை விழுந்த தலை, கொஞ்சம் கனமான உடல்வாகோடு இருந்தார் மயில்ராவணன். தன் வயதைக் குறைத்துக் காட்ட, மீசையை மழித்துவிட்டு, தலைமுடிக்குச் செயற்கை சாயம் பூசியிருந்தார். ஃப்ரேம்லெஸ் கண்ணாடியுடன் தோரணையும் மிடுக்குமாகத்தான் இருந்தார் அவர்.
பிரண்டைத் துவையலோடு திணையரிசி தோசையும், கொஞ்சம் பழக்கலவையும் மட்டும் தான் அவரின் காலை உணவு. சர்க்கரை நோயும், உயர் இரத்த அழுத்தமும் பாடாய்ப் படுத்துவதால் மட்டுமே இந்த ஏற்பாடு. மற்றபடி மயில்ராவணன் ஒரு உணவுப் பிரியர். ஆனாலும், அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்திற்கு நிகராக உடலில் சர்க்கரையையும் சேர்த்து வைத்திருப்பதால், மாநில முதலமைச்சராய் இருந்தாலும் கூட, அவருக்கும் உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தது.
"என்னதான் மாப்பிள்ளையாய் இருந்தாலும், அந்தப் பையன் சொல்றதுக்கெல்லாம் நீங்க ஆடறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை.!" என அவர் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்து பின் பேச்சைத் துவக்கினார் மயில்ராவணனின் மனைவி ராதிகா.
"ம்ப்ச்! இதெல்லாம் அரசியல் விஷயம். உனக்கு இதெல்லாம் புரியாது!" என முறைப்புடன் பதில் சொன்னார் அவர்.
"அப்படி என்ன அவசியம்ன்னு கேட்கிறேன். எல்லாத்தையும் அரசியலில் சேர்க்காதீங்க! இது குடும்பம். நம்ம பொண்ணு கல்யாணத்தையும் கூட அரசியல் ஆதாயத்திற்காகத்தான் செஞ்சீங்க! இப்போ என்ன ஆச்சு? நம்ம பொண்ணு நல்லா வாழ்ந்துட்டாளா? இப்போ என்னடான்னா அந்தப் பையனுக்கு, நீங்களே முன்னே நின்னு கல்யாணம் நடத்தி வைக்கிறீங்க.. இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை.!" கணவரின் கோபத்தையும் மீறி பேசினார் ராதிகா.
"முடிஞ்சு போனதை விடு! நான் என்ன செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும். அதை மட்டும் மனசில் வச்சிக்கோ!"
"நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க! ஆனால் என்னால் இதை ஏத்துக்கவே முடியலை. நம்ம பொண்ணு கல்யாணத்திற்குச் செஞ்சதைவிட, இவனுக்கு நீங்க நிறையச் செய்றதைப் பார்த்து என்னால் ஜீரணிக்கவே முடியலை!" கணவர் என்ன சொன்னாலும், சமாதானம் ஆகாமல், ஆற்றாமையோடு பேசினார் ராதிகா.
"இங்கே பாரு ராதிகா! இமயவரம்பன் மத்தவங்க மாதிரி இல்லை. அவனுக்குச் செய்யற ஒவ்வொரு பைசாவும், ஆயிரம் ஆயிரமாய் நம்மக்கிட்டேயே திரும்பி வரும். என்னதான் அவன் கட்சிக்கு சம்மந்தமில்லாதவனாய் இருந்தாலும், இந்தக் கட்சிக்கு அவன் ரொம்ப அவசியம். இதுவரை எத்தனை லேண்ட் விஷயத்தில் நான் மாட்டியிருக்க வேண்டியது தெரியுமா? அதைவிடு, உன் பேரில் ஆரம்பிச்சோமே, ரதி மினரல்ஸ்... அதற்காக ஏற்கனவே மினரல் கம்பெனி வச்சிருக்கனுங்க கிட்டே இருந்து, பிடுங்கிக் கொடுத்தது அவன் தான். இப்போ தமிழ்நாட்டில் எல்லா இடத்திலேயும் ரதி மினரல்ஸ் இருக்குன்னா அதுக்குக் காரணம் இமயன் தான். வெளியிலிருந்து பார்க்கிறதுக்கு அவன் கட்டப்பஞ்சாயத்து பண்ணுற மாதிரி தான் இருக்கும். ஆனால் அவன் பண்ணுற முக்கால்வாசி வேலை நம்ம கட்சிக்காக மட்டும்தான். எல்லாத்துக்கும் மேலே, சொந்த ஊருக்காரன், தள்ளி நில்லுன்னு சொல்ல முடியாதும்மா.. புரிஞ்சுக்கோ!"
"உங்க சொந்த ஊர்ப் பாசத்தால் தான் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்!" எனச் சொல்லிவிட்டு, அவர் கோபமாய்ச் சென்றுவிட, நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்று, தன் பணிகளைப் பார்க்கத் துவங்கினார் மயில்ராவணன்.
அவர் கிளம்பி தயாராகிக் கீழே இறங்கி வர, மயில்ராவணனுக்காகத் தயாராய்க் காத்திருந்தார் அவரின் அந்தரங்க செயலாளர் மணிகண்டன்.
"மணி எல்லாம் ரெடியா.? இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்ன்னு பார்த்தாச்சு தானே? ஈவ்னிங் ஆறுமணிக்கு மேலே எந்த அப்பாய்ன்மெண்ட்ஸ்ஸும் கொடுக்காதே!" எனச் சொல்விட்டு தன் செருப்புக்கால் பதிய, பளபளப்பான பளிங்குத்தரையில் நடந்து வந்து, தன் வாகனத்தில் ஏறினார். அவருக்கான பாதுகாவலர்கள் புடை சூழ, பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்கத் தன் பயணத்தைத் துவக்கினார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாய் தமிழ்நாட்டின் முதல்வராய் இருக்கும் மயில்ராவணனுக்கு, இந்தப் பதவி மிக மிக அத்தியாவசியம். இந்த முறை மயில்ராவணனின் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை, எனச் சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி, தொடர்ந்து மூன்றாம் முறையாய் ஆட்சி அமைத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே கட்சி பணியிலிருந்த இவருக்கு, அரசியல் அனுபவம் கொஞ்சம் அதிகம் தான்.
தன் சொகுசு வாகனத்தில் பயணித்தபடியே,
"இமயனோட கல்யாண வேலையெல்லாம் சரியா நடக்குதா? எந்த அப்டேட்ஸும் எனக்கு வர்ரதில்லையே? என்ன விஷயம்?" கூரான பார்வையோடு மணிகண்டனிடம் கேட்டார் அவர்.
"அதெல்லாம் இமயன் சாரே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார் சார்!"
"அவன் பார்த்துக்கிறதெல்லாம் இருக்கட்டும். அப்டேட்ஸ் ஏன் எனக்கு வரலை?!"
"சார்.. இமயன் சார் தான், உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நானே எல்லாம் டீல் பண்ணிக்கிறேன்னு சொன்னார் சார்..!"
"நீ எனக்கு அஸிஸ்டென்டா.? இல்லை அவனுக்கா? உன் மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கே? இனிமே இப்படி நடந்துச்சு.. எனக்கு அஸிஸ்டென்டா நீ இருக்க மாட்டே!" எனக் கோபமாய்க் கத்தினார் மயில்ராவணன்.
"சார்.. மன்னிச்சுடுங்க சார்! இனிமே இப்படி நடக்காது!"
"இமயன் சம்மந்தமான சின்னச் சின்ன அப்டேட்ஸ் கூட எனக்கு வந்தாகனும்!" என உறுதியாய் சொன்னார் அவர். அவர் முகம் கோபத்தில் தகதகத்தது. தன் அலுவலகத்திற்கு வந்து சேரவும், மணிகண்டனை வெளியே அனுப்பிவிட்டு, இமயவரம்பனுக்குத்தான் அழைத்தார்.
"உன் மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கே?!" எனக் கோபமாய் அவர் அலைபேசியில் கத்த,
"என்னத்துக்கு மாமா கோபப்படுறீங்க? ஏற்கனவே ப்ரஷர் இருக்குதுங்க! கொஞ்சம் பொறுமையாய் பேசுங்க! ஒரேடியாய் போய்ச் சேர்ந்துடப் போறீங்க!" என நக்கலாய் அதே நேரம், நிதானமாய்ப் பேசினான் இமயவரம்பன்.
"ஏய்.. மாமான்னு சொன்னே உன்னைத் தொலைச்சுடுவேன் பர்த்துக்கோ!"
"பொண்டாட்டியோட அப்பாவை மாமான்னு தானே மாமா கூப்பிடனும்?"
"உன்னோட நக்கல் பேச்சையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே! நான் நினைச்சால், சொடக்குப் போடுற நேரத்தில் உன்னை இல்லாமல் ஆக்கிட முடியும். என்னைப் பற்றித் தெரியாமல் என்கிட்டே விளையாடிக்கிட்டு இருக்க..!" என அவர் சொல்ல,
"உங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சு தான் மாமா விளையாடுறேன். நீங்க ஆடும் வரை ஆடிட்டீங்க! நான் பதில் ஆட்டம் ஆட வேண்டாம்?! திஸ் இஸ் மை டேர்ன் மாமா!"
"இமயன்..!"
"நான் இமயன் தான்.. இமயவரம்பன்.!" அதற்கும் பதில் சொன்னான் இமயவரம்பன்.
"நீ இப்போ இமயவரம்பனாக இருக்கலாம். வெறும் கூழாங்கல்லாகக் கிடந்த உன்னை இமயமாக உயர்த்தினது நான் தான். பழசெல்லாம் மறந்துட்டியா இமயன்? நன்றி மறப்பது நன்றன்று ஞாபகம் வச்சிக்கோ இமயன்.!"
"நன்றி எனக்கு மட்டும் தான் இருக்கணுமா மாமா? இத்தனை வருஷமா நன்றியோடத்தான் இருந்தேன். நான் நன்றியோட இருந்ததுக்குத்தான் நீங்க வகையா செஞ்சுவிட்டீங்களே? அப்பறம் நன்றியாவது மண்ணாங்கட்டியாவது.. நீங்க உங்க தேவைக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்க! இப்போ நானும் அதையே தானே செய்றேன். நாம என்ன செய்றோமோ, அது தானே நமக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்பக் கிடைக்குது.. என்ஜாய் பண்ணுங்க மாமா!"
"வார்த்தைக்கு வார்த்தை மாமான்னு கூப்பிடாதே இமையன். இப்போ நான் என்ன செய்யணும்? எத்தனை நாளைக்கு என்னை நீ டார்ச்சர் பண்ணப் போற? நான் ஒண்ணும் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை. நான் இந்த மாநிலத்தோட முதலமைச்சர், அதை முதலில் ஞாபகம் வச்சிக்கோ.!"
"மாநிலத்தோட முதலமைச்சர்..? அந்தத் தகுதி இருக்கா உங்களுக்கு? பத்து வருஷம் தாண்டியும் நீங்க ஆட்சியில் இருக்கிறதால், பழசை எல்லாம் மறந்துட்டீங்க போல.. உங்களுக்கு விழுந்த ஓட்டு எல்லாம் நேர்மையாய் விழுந்த ஓட்டா? மக்களை ஏமாத்தி வாங்கினது. உங்க முடி முதல், அடி வரை எனக்கு எல்லாம் தெரியும் மாமா. எனக்கு நீங்க மாமா மட்டும் தான். அப்படித்தானே மாமா?" என அவன் வேண்டுமென்றே வெறுப்பேற்ற,
"இமயன் எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீ எல்லை தாண்டி போற.. அதனால் ஏற்படப் போற பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்..!"
என உறுமினார் மயில்ராவணன்.
"எந்த விளைவு வந்தாலும் அதைப் பத்தி நான் கவலைப்படப் போறதில்லை. இனிமே உங்களுக்கு ஆப்ஷனே இல்லை மாமா! நான் சொவ்றதைத் தான் நீங்க செய்யணும்.!"
"நீ கேட்கிறதெல்லாம் செஞ்சுட்டு தானே இருக்கேன்? இன்னும் உனக்கு என்ன செய்யணும்? நீ நினைச்சே பார்க்க முடியாத அளவிற்கான ஒரு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணியிருக்கேன். என் பொண்ணு கல்யாணத்திற்குக் கூட, கூப்பிடாத அத்தனை பிரபலங்களையும், நானே பர்ஸ்னலா அழைச்சுட்டேன். இன்னும் என்ன செய்யணும்?!"
"இன்னும் ஒண்ணே ஒண்ணு நீங்க எனக்காகச் செய்யணும்! உங்க தமிழ்நாடு அரசோட அமைச்சரவையில் எனக்கு ஒரு பதவி வேணும்.!" என அவன் கேட்க அதிர்ந்து போனார் மயில்ராவணன்.
"இ.. இமயன்.. இது ஒண்ணும் விளையாட்டு இல்லை. அரசியல் ஒண்ணும் நீ பண்ற கட்டப்பஞ்சாயத்து மாதிரி ஈஸி இல்லை இமயன். அதோடு, இப்போதான் தேர்தல் நடந்து முடிஞ்சிருக்கு. எல்லாத் துறை அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொஞ்சநாள் தான் ஆகுது. இதில் உன்னை எப்படி..? அரசியலுக்கு உள்ளே வரணும்னா முதலில் தேர்தலில் நின்னு ஜெய்க்கணும் இமயன்.. உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்.!" என அவர் சொல்ல,
"கட்டப்பஞ்சாயத்தே ஈஸியா பண்ணிட்டேன். அதைவிட, அரசியல் பண்ணுறது ஒண்ணும் கஷ்டமில்லை மாமா! எத்தனையோ முறை நீயும் கட்சிக்கு உள்ளே வந்துருன்னு சொல்லி இருக்கீங்க! அப்போவெல்லாம் பதவி வேணும்ன்னு எனக்குத் தோணலை. இப்போ வேணும்ன்னு தோணுது. என்னோட பத்து வருஷ உழைப்பிற்குப் பலன் வேணுமே..!" எனக் கேட்டான் இமயவரம்பன்.
அவன் திடீரென இப்படிக் கேட்பான் என அவர் நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்கு வெளியில் இருக்கும் போதே, இவனைச் சமாளிக்க முடியவில்லை. கட்சிக்குள் வந்துவிட்டால்..? யோசனை அவருக்குள் ஓடியது.
"யோசிச்சுட்டு சொல்றேன்." எனப் பொதுவாய் சொல்லிவிட்டு, அழைப்பை துண்டித்திருந்தார் மயில்ராவணன்.
'இனி இவனை விடக் கூடாது! இவனை இப்படியே விட்டால், கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்த மாதிரி ஆகிடும். இவனை இல்லாமல் பண்ணினால் மட்டும் தான் நான் அரசியல் பண்ண முடியும்.' என யோசித்தவர், தனது இரகசிய அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.
"டேய் மாரி! நம்ம கிருபா எங்கே இருக்கான்?"
"தொழில் விஷயமா போயிருக்கான் சார்! எதாவது முக்கியமான விஷயமா சார்? என்கிட்டேயே சொல்லு, நான் கிருபாகிட்டே சொல்றேன்!" என அந்தப்பக்கமிருந்து பதில் வர,
"தடையமே இல்லாமல், ஒரு சம்பவம் பண்ணணும்! அவன் வந்ததும், என்னை வந்து பார்க்கச் சொல்லு!" எனச் சொன்னவரின் உதடுகளில், குரூர புன்னகை நெளிந்தது.
**-*****
அந்த இரவுநேரப் பொழுதில், தன் படுக்கையில் படுத்தபடி, நடந்தவற்றையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. இப்பொழுது என்ன செய்வதென்று அவளுக்குச் சுத்தமாய்த் தெரியவில்லை. நாளை காலையிலேயே முகூர்த்தப்புடவை எடுப்பதற்குச் செல்ல வேண்டுமென அவள் வீட்டில் பேசியது அவள் செவிகளில் விழத்தான் செய்தது. திருமணம் இமயவரம்பனின் கிராமத்தில் நடைபெற இருப்பதால், சில வாரங்கள் முன்னதாகவே அங்கே செல்ல வேண்டும். ஆனால், அதற்கு முன் அவள் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இமயனை சந்தித்த பிறகு, அவள் எடுத்த முடிவில் இன்னும் கொஞ்சம் உறுதி கூடியிருந்தது. அதனால், நள்ளிரவு பேருந்திற்கு, பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு, அப்படியே ராகவிற்கும், தகவல் தெரிவித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.
படுக்கையிலிருந்து தலையை நிமிர்த்தி, கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் பத்தை தொட்டு நின்றது. இப்போது அவள் செய்ய வேண்டியதெல்லாம், அனைவரும் உறங்கும் வரை காத்திருப்பது மட்டும் தான். அவள் அறையின் படுக்கை மீது அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவள் தங்கை மஞ்சரியின் மீது அவள் பார்வை சென்றது.
"இவள் எப்போ படிச்சுட்டு எப்போ தூங்கறது? நாம எப்போ போறது?" என முணுமுணுத்தபடியே, கட்டிலின் கீழே பயணப் பொதிகள் தயாராய் இருக்கிறதா? என்பதையும் சரிபார்த்துக் கொண்டாள்.
"மஞ்சு! எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருப்ப? லைட் ஆஃ பண்ணுடி தலையை வலிக்குது.!"
"அக்கா! நாளைக்கு இன்டர்னல்ஸ் இருக்குக்கா! ப்ளீஸ் இன்னைக்கு ஒருநாள் மட்டும்!"
"பேசாமல் காலையில் எழுந்து படி டி!"
"நான் படிச்சுட்டே துங்கறேன்! காலையில் எழுறதெல்லாம் கஷ்டம்!" என அவள் சொல்லிவிட,
"நான் எழுப்பி விடறேன். நீ தூங்கு..!" எனத் தங்கையைச் சமாதானப்படுத்தி உறங்கா வைத்தவள் கொட்ட கொட்ட விழித்துக் கிடந்தாள். அனைவரும் உறக்கத்திற்குள் சென்று வீடு நிசப்தமாகிப் போகவும், சத்தமே இல்லாமல் எழுந்து, தன் பயணபபொதியைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினாள். அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, விடி விளக்குகள் மட்டும் மங்கலான் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டிருக்க, அவளின் கண்கள் இருளுக்குப் பழக, கொஞ்சம் நேரம் பிடித்தது.
படிகளில் மெதுவாய் பாதம் பதித்து, துளி அரவமில்லாமல், இறங்கி வந்தவள், முன் வாசலை அடைந்திருந்தாள். கதவைத் திறக்கக் கொஞ்சம் பயமாக இருந்தது. படபடக்கும் மனதை திடப்படுத்திக்கொண்டு, முடிந்தவரை ஒலியெழுப்பாமல், கதவைத் திறந்து, சத்தமே கேட்காமல் கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தவளுக்கு, முன்புற தோட்டத்தையும், வாகனத் தரிப்பிடத்தையும் கடந்து சென்று இரும்புகேட்டைத் திறந்து, காவலாளியின் உறக்கத்தைக் கலைக்காமல் செல்ல வேண்டுமே என்ற படபடப்புக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
சத்தமெழுப்பாமல், நடப்பது வேறு, மிகச் சிரமமாக இருந்தது. அதோடு கரத்தில் பிடித்திருந்த பயணப்பொதி வேறு பாரமாய்க் கனத்தது.
'நிறையப் பேக் பண்ணி எடுத்துட்டு வந்துட்டோமோ? காலையில் பார்க்கும் போது, நாலு எட்டில் போற மாதிரி இருந்துச்சு. இப்போ என்னடான்னா இம்புட்டு தூரமா இருக்கு!' எனத் தனக்குள் புலம்ப மட்டுமே அவளால் முடிந்தது. ஒருவழியாய் கேட்டின் பக்கத்தில் வந்து நின்று, மிக மிகக் கவனமாக, பெரிய கேட்டின் அருகில் இருந்த சிறிய நுழைவாயிலின் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறியவள், திரும்பிப் பார்க்காமல், விறுவிறுவென நடக்கத் துவங்கியிருந்தாள்.
எங்கே பின்னால் திரும்பினால், யாராவது வந்துவிடுவார்களோ, என்ற பயம் அவள் மனம் முழுதையும் ஆட்கொண்டிருந்தது. அவள் வீடு இருக்கும் தெருமுனையைத் தாண்டி வந்ததும், எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வு மட்டுமே அவளை ஆட்கொண்டிருந்தது.
விருப்பமில்லாத இந்தத் திருமணம், அவள் பிறந்து வளர்ந்த அவளின் சொந்த வீட்டையே கதவில்லா சிறையாய் மாற்றியிருந்ததென்னவோ நிஜம்.
நாம் பார்த்த நமக்குத் தெரிந்த, இன்னும் பல பெண்களுக்கு, இன்றும் இதே நிலை நீடிக்கத்தான் செய்கிறது. தாங்கள் வசிக்கும் சொந்த வீடே, கதவில்லா சிறையாய் மாறிப் போயிருக்க, திறந்திருக்கும் கதவு இருந்தாலும், ஒருவேளை கதவு பூட்டியிருந்து அதற்கான சாவி அவர்கள் கரத்தில் இருந்தாலும் கூட, நேசம், பாசம், காதல் எனும் காரணங்கள் தங்கள் எல்லையைத் தாண்டி அன்பின் அதீதங்களாய் மாறி, கண்ணுக்குத் தெரியாத சிறைக்குள் அவர்களைப் பூட்டி வைக்கத்தான் முயற்சிக்கிறது. சிறகு விரித்துப் பறக்க ஆகாயம் கண்ணெதிரே தெரிந்தாலும் கூட, சின்ன வீட்டிற்குள் தங்கள் உலகத்தைச் சுருக்கிக்கொண்டு, வானம் தலையைத் தட்டுகிறது எண்றெண்ணி அண்ணாந்து பார்க்காமலே வாழ்த்து முடித்துவிடுகிறார்கள்.
வேகவேகமாய் அவசரமாய் நடந்து வந்து, மூச்சுவாங்க நின்று திரும்பிப் பார்த்தாள் ஆருத்ரா. இரண்டு நாட்களுக்குப் பின் நிம்மதியாய் சுவாசிப்பதைப் போல் உணர்ந்தாள் அவள். மணிக்கட்டைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நள்ளிரவு பனிரெண்டு.
'இந்த நேரத்திற்குக் கேப் வந்திருக்கணுமே?' என அவள் மூளைக்குள் சிந்தனை ஓடிய அதே நொடி, அவள் முன் வந்து நின்றது அந்த வாகனம். அதே நேரம், தூரத்தில் யாரோ வருவது போல் தெரிய, தன் வீட்டைச் சேர்ந்த ஆட்களாய் இருப்பார்களோ என்றெண்ணி, அவசரமாய் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் ஆருத்ரா.
"சீக்கிரம்! சீக்கிரம்! கிளம்புங்க! " என அவள் அவசரமாய்ச் சொல்ல, அந்த வாகனமும் கிளம்பியது. அந்த இடத்திலிருந்து அந்த மகிழுந்து கிளம்பிய பிறகு தான் அவளுக்கு நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.
'நீ நினைச்சபடி இந்தக் கல்யாணம் நடக்காது இமயன்.! நான் எப்படியும் உன் கண்ணில் அகப்படாத இடத்திற்குப் போய்டுவேன்.!' என மனதிற்குள் பேசியபடி பின்னால் சாய்ந்து அமர்ந்தாள். கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள்.
அந்தச் சூழ்நிலையின் அமைதியை ஆழ்ந்து அனுபவித்தாள். கண்களுக்குள் இமயவரம்பனின் முகம் வந்து போனது. திருமணம் நின்ற பின் அவன் முகம் எப்படி இருக்கும்? கோபமாக இருக்குமா? ஏமாற்றம் சூழ்ந்து இருக்குமா? என யோசித்துப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
"எங்கே போகணும் மேடம்? ஒண்ணுமே சொல்லலியே?" எனத் தன் செவிக்குள் கேட்ட குரலுக்கு,
"பஸ் ஸ்டாண்ட் போங்க! சென்னை போறதுக்காக ஆம்னி பஸ் நிற்குமே, அங்கே இறக்கிவிடுங்க!" அவசரமாய்ச் சொல்லிவிட்டு, திரும்பப் பின்னுக்குச் சாய்ந்தவளுக்கு, இந்தக் குரல், எங்கோ கேட்டது போல் இருந்தது.
'ச்சே! இருக்காது! அவனையே நினைச்சுட்டு இருக்கிறதால், அவன் குரல் மாதிரி இருக்குதோ? நான் ரொம்ப ஓவர் திங்க் பண்ணுறேனோ?' என அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவள் அலைபேசி சிணுங்கி அவள் கவனத்தைத் திசை திருப்பியது.
கைப்பைக்குள்ளிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தவள், ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனாள்.
அவள் முன்பதிவு செய்திருந்த வாகன நிறுவனத்தின் பெயர் திரையில் மிளிர்ந்தது. முன் இருக்கையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருப்பவனின் முதுகை வெறித்தபடியே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
"என்ன மேடம்! அர்த்த ராத்திரியில் கே புக் பண்ணிட்டு ஆளையே காணோம்?! இப்படி நடுராத்திரியில் வர்ரதே பெருசு. எங்க மேடம் இருக்கீங்க?" என அந்தப்பக்கம் குரல் கேட்க, ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனவள்,
"ஸாரி.. ஸாரிங்க!" எனச் சொல்ல,
"இப்போ கேன்சல் பண்ணுறீங்களா?!" என அந்த நபர் கேட்க,
"ம்ம்!" என வேறு வழியில்லாமல் பதிலளித்தவளின் பார்வை, மகிழுந்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் புறமுதுகைத் துளைப்பதை நிறுத்தவே இல்லை.
என்னதான் தன்னைத் தானே தைரியப்படுத்திக்கொள்ள முயன்றாலும், கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது அவளுக்கு. சற்று முன் இருந்த மனநிம்மதி, துளி மிச்சமில்லாமல், சுத்தமாய் வடிந்து போக,
"இமயன்!" என அழைத்தாள் அவள். அவள் அழைப்பதற்காகவே காத்திருந்ததைப் போல் புன்னகையோடு திரும்பினான் இமயவரம்பன்.
"நான் தான் சொன்னேனே ஆரா.. நீ என்னைத் தாண்டிப் போக முடியாது!" அவன் குரலில் தெரிந்த அழுத்தமும் உறுதியும், அவளைக் கொஞ்சம் ஆட்டிப்பார்த்தது.
"இப்படி என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி, நீ எதைச் சாதிக்கப் போற! இதெல்லாம் டோட்டல் வேஸ்ட்! காலம் நேரத்தோட, உன் வாழ்க்கையும் வீணாப் போய்டும்.! எனக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கிறதை விட்டுட்டு போய் உன் பிழைப்பைப் பாரு." கொஞ்சம் நக்கலாகவே சொன்னாள் ஆருத்ரா.
"எப்படியும் வீணாய்ப் போகப் போற வாழ்க்கை தானே? உனக்காக வீணாகப் போய்ட்டுப் போகுது.!" என அவன் சொல்ல, அவன் சொன்னதன் சாராம்சம் புரியாமல் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.
"உன் வாழ்க்கை எப்படியோ வீணாப் போகட்டும். எனக்கு என் வாழ்க்கை ரொம்ப முக்கியம். கல்யாணம்ங்கிறது பிடிச்சவங்களோட வாழறதுக்குத்தான். இப்படிக் கட்டாயப்படுத்தி வாழறதுக்கு இல்லை. நீ அப்படியே கட்டாயப்படுத்தி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நீ கட்டுற தாலியை மதிச்சு உன்னோட வாழுறதெல்லாம் நடக்காத விஷயம்.!" தெள்ளத்தெளிவாய் சொன்னாள் அவள்.
"கல்யாணம் பிடிச்சவங்களோட, பிடிச்ச மாதிரி வாழறதுக்குத்தான். போகப் போக என்னை உனக்குப் பிடிக்கும் ஆரா.!"
"போகப் போகப் பிடிக்கும், பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்ன்னு சினிமா டையலாக் மாதிரி பேசுறே? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு உன்னைப் பிடிக்கவே பிடிக்காது!" என அவள் சொல்ல, சத்தமாய்ச் சிரித்தான் இமயவரம்பன்.
"இப்போ எதுக்குப் பேய் மாதிரி சிரிக்கிறே? என்னைப் போக விடாமல் பண்ணிட்டதால் சிரிக்கிறியா? உன்னைப் பார்த்தால் எனக்குத்தான் சிரிப்பா வருது. உன்னோட ஒட்டுமொத்த வேலையையும் விட்டுட்டு, என்னைக் கண்காணிக்கிறதையே வேலையாய் வச்சிருக்கியே.. அதை நினைச்சால் எனக்குச் சிரிப்புத்தான் வருது.!" என வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள் அவள்.
"நான் சொல்றது நடக்குதா? இல்லை, நீ சொல்றது நடக்குதான்னு பார்க்கலாம் ஆரா. என்னைப் பிடிச்சுருக்குன்னு நீ சொல்ற காலமும் வரத்தான் போகுது. நீ அதைப் பார்க்கத்தான் போற!"
"பகல் கனவு காணாதே இமயன்! ரெண்டாவது கல்யாணத்திற்கு இம்புட்டு ஃபீலிங் எல்லாம் தேவையே இல்லை. உன்னோட பேச்சுக்கெல்லாம் மயங்குற ஆள் நான் கிடையாது ஞாபகம் வச்சிக்கோ.!" என அவள் சொல்ல, அவன் எந்தப் பதிலும் பேசவே இல்லை. அவனின் இறுகியிருந்த பக்கவாட்டுத் தோற்றத்தைக் கண்டும் காணாமலும் அமர்ந்துக்கொண்டாள் ஆருத்ரா.
அதேநேரம், ஆருத்ராவின் வீடு வந்துவிட, மகிழுந்தின் ஒலிப்பானை ஒலிக்கவிடௌடான் அவன். அந்தப் பெரிய இரும்புகேட் திறக்கப்படவும், வாகனத்தை உள்ளே நிறுத்திவிட்டு, அவளைக் கரம் பிடித்து அழைத்துப் போனான் அவன்.
"என் கையை விடு! கையை விடுன்னு சொல்றேன்ல்ல? எனக்குப் போகத் தெரியும்! நீ ஒண்ணும் என் வீட்டுக்கு வழிகாட்ட வேணாம்!" அவளின் குரல், தன் செவிதனில் விழாதது போலவே அவளுடன் நடந்தான். அதற்குள் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டு அனைவரும் விழித்திருக்க, என்ன சொல்வதெனத் தெரியாமல், சிறு பயத்துடனே உள்ளே நுழைந்தாள். குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் கூடி நின்றிருந்தனர்.
இமயன் வேறு, பிடித்த கரத்தை விடாது பற்றியிருக்க, ஒருவித அவஸ்தையான மனநிலையுடன், அவர்கள் முன் நின்றாள்.
"இந்நேரத்தில் என்ன மாப்பிள்ளை இங்கண வந்திருக்கீக? நடுச்சாமம் தாண்டியாச்சே?" எனப் பழனிவேல் கேட்க,
"ஒண்ணுமில்லை தாத்தா! ஆருத்ராவைப் பார்க்கணும்ன்னு தோணிச்சு, அதான் நேரிலேயே வந்துட்டேன். இவளை ஃபோட்டோவில் பார்த்த நாளில் இருந்து, இவளை மட்டுமே தான் நினைச்சுட்டு இருக்கேன். கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். நேரம் தாண்டிடுச்சே அதனால் வீட்டிலேயே விட்டுடுட்டுப் போகலாம்ன்னு வந்தேன்!" துளி பிசகாமல் அவன் பொய் சொல்ல, தன் பயணப் பொதியை அவன் வாகனத்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததைத் தனக்குள் நொந்தபடி, அண்ணாந்து அவனையே பார்த்திருந்தாள் ஆருத்ரா.
"என்ன ஆரா.. நான் சொல்றது சரி தானே?" என அவளையும் அவன் துணைக்கழைக்க, அவள் மறுத்துப் பேச வாய் திறக்கும் முன்,
"நீ ரொம்ப டயர்டா இருக்க. போய்த் தூங்கு ஆரா..! காலையில் புடவை எடுக்கப் போகணும் ஞாபகம் இருக்குல்ல?" என அவளைப் பேசவிடாமல் செய்தவன், அதே வேகத்தில் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான். என்ன சொல்வதெனப் புரியாமல் விழித்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆருத்ரா.
"ஏம்மா எங்கே போறதாக இருந்தாலும் சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்றீக! பிறகு சாமத்தில் போய் ஊர் சுத்திக்கிட்டு திரியிறீக! என்ன பிள்ளைகளோ?"
என்ற வள்ளியம்மையின் குரல், வாயிலைக் கடந்து சென்ற இமயனின் செவிகளில் விழ, இதழ்விரித்துச் சிரித்தபடி வாகனத்தைக் கிளப்பினான் இமயவரம்பன்.
அன்பாகும்..?