All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அன்பின் அதீதங்களில்..!" - கதைத் திரி.

Status
Not open for further replies.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்.. அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤

கருத்துத் திரி
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-10

அந்த நாள் வெகு பரபரப்பாகவே விடிந்திருந்தது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும். அனைத்து சமூக ஊடகங்களுக்கும், வெறும் வாயை மெல்லும் அவசியமில்லாமல், அவல் கிடைத்திருந்தது.


தலைப்புச் செய்திகளில் அதிகமாய் அடிபட்டுக் கொண்டிருந்தது இமயனின் பெயர். இமயனின் பெயர் பேசு பொருளாகியிருந்தது. பேசு பொருளாய் மாறியிருந்தது என்பதை விட அவன் மாற்றியிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.


"மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியின், சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார்.! அவரின் பூத உடல், இறுதி அஞ்சலிக்காக அவரின் மேலூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது! இவர் தமிழக முதலமைச்சரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது."


"இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மதுரை வருகை..!"


"முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!"


"மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் எப்போது?!"


"மேலூர் தொகுதியின் அடுத்தச் சட்டமன்ற உறுப்பினர் யார்?!"


"மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுந்தரம் அவர்கள் இயற்கை எய்தினார். இந்தச் சூழ்நிலையில், மேலூர் தொகுதியின் அடுத்த உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர், திரு.இமயவரம்பன் அவர்களை மேலூர் தொகுதியில் நிறுத்த, முடிவு செய்யப்பட்டிருப்பதாக, நம்பத் தகுந்த செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!" என்ற செய்திகள் மாறி மாறி தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க, அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தான் இமயன்.


"ராசா.. நாஞ்சொன்னதைக் கொஞ்சம் ரோசனை பண்ணி பார்க்கக் கூடாதா?!" எனப் பேரனின் முன் வந்து நின்றார் செல்லம்மா.


"நான்தேன் நீ கேட்டப்போவே முடியாதுன்னு சொல்லிட்டேனே அப்பத்தா.. பிறகு என்ன?!"


"அதுக்கு இல்லை ராசா.. கலியாணம் நிச்சயம் செஞ்சாச்சுல்ல.. இப்படிச் சாவு வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது சாமி! அப்பத்தாவுக்காகப் போகாமல் இருக்கலாம்ல? நல்லது நடக்கப் போற நேரத்தில், ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு நடந்து போச்சுன்னா என்ன செய்றது?!" எனச் செல்லம்மா கேட்க,


"நல்லதும் கெட்டதும் நம்ம மனசில்தேன் இருக்கு அப்பத்தா! எல்லாத்துக்கும் மனசுதேன் காரணம். நீ எதையாவது நினைச்சு சங்கடப்பட்டுட்டு கிடக்காதே! இனி உன் பேரனுக்கு நல்ல காலம்தேன்.!" எனச் சொன்னான் இமயவரம்பன்.


"நான் எதுக்குச் சொல்றேன்னா..!" என அவர் மீண்டும் துவங்க,


"அப்பத்தா! போதும், இப்போ நான் போகலைன்னா அது தான் பெரிய பிரச்சனை ஆகும். நான் இன்னைக்குக் கட்டாயம் அங்கே இருந்தே ஆகனும்!" எனச் சொன்னவன் விடைபெற்றுக் கிளம்பிவிட்டான். இந்தத் திருமணம் நல்லபடியாய் நடந்துவிட வேண்டுமென்ற வேண்டுதலுடன், இமயனின் புறமுதுகை வெறித்திருந்தார் செல்லம்மா.



அவருக்குப் பேரனின் மனது நன்றாகவே தெரியும். ஆருத்ராவின் முகத்திலிருந்தே அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதையும் தெரிந்து வைத்திருந்தார் செல்லம்மா. முதல் வாழ்க்கைதான் இப்படியாகிவிட்டது.. இரண்டாம் வாழ்க்கையாவது, நல்லபடியாக அமைய வேண்டுமென்ற பயம் அவருக்குள் இருந்தது.


"என்னத்தே! இங்கனையே நின்னு வாசலைப் பார்த்துட்டு நிற்கிறீக? அவனைப் பத்திதேன் தெரியும்ல்ல.. விடுங்க!" என்றபடி வந்தார் தனலெட்சுமி.


"உன் மயன்.. என்னைக்கு நம்ம சொல்றதைக் கேட்டுருக்கான்? கல்யாணம் முடிவாகி பத்திரிக்கை ஊரெல்லாம் கொடுத்தாச்சு. துக்க வீட்டுக்குப் போகக் கூடாதுன்னு சொன்னால், ஒருபேச்சு கேட்க மாட்டேங்குறான். நீயும் உன் மயன்கிட்டே எதுவும் பேசாதே..!" எனச் சடைத்துக் கொண்டார் செல்லம்மா.


"நீங்க சொல்லியே கேட்காதவனா.. நான் சொல்லி கேட்கப் போறான்.? தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு திரியறவனை என்ன சொல்ல முடியும்? எல்லாம் நல்லதே நடக்கும் அத்தே! நீங்க விசனப் படாதீக..!" எனச் சொன்னார் தனலெட்சுமி.


"இப்படித்தேன்.. அந்தச் சீமை சித்தராங்கியைக் கட்டும் போதும் சொன்னோம். பெரிய இடம் நம்மக் குடும்பத்திற்கு ஒத்து வராதுன்னு சொன்னதை உன் மயன் காதிலேயே வாங்கலையே? விசுவாசம் மண்ணாங்கட்டின்னு கட்டிக்கிட்டான். இப்போ என்ன ஆச்சு? அந்தப் புள்ளைக் கூட வாழ்ந்துட்டு இருக்கானா? தனி மரமா நிற்கிறனைப் பார்க்க மூச்சு அடைக்குது டி! இவன் கல்யாணம் பண்ணாமல், நானும் பண்ண மாட்டேன்னு ராகவ் ஒருபக்கம் நிற்கிறான். என்னத்தைச் சொல்ல? நம்ம வீட்டில் காசு பணத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லைதேன்.. ஆனால் நிம்மதி.. மருந்துக்கும் இல்லை.!" எனக் கலங்கிய குரலில் சொன்னார் செல்லம்மா.


"அத்தே! பேசாமல் இருங்க! பொண்ணு வீட்டு ஆளுங்க இங்கணதேன் தங்கி இருக்காங்க. என்னத்தையாவது உளறி வைக்காதீங்க! அவன் தலையில் ரெண்டு வாழ்க்கைன்னு எழுதியிருக்கு.. விதி அப்படித்தான்னா நாம என்ன செய்ய முடியும்? முதல் கல்யாணம் அவன் விருப்பமில்லாமல்தேன் செஞ்சுக்கிட்டான்னு நமக்குதேன் தெரியுமே? எல்லாம் தெரிஞ்சும், அவனை எப்படிக் குறை சொல்றது?!" தன் மகன் பக்கமே பேசினார் தனலெட்சுமி.


"நீ உன் மயனை விட்டுக் கொடுப்பியாக்கும்? என்னமோ.. நல்லது நடந்தால் சரித்தேன்.!" என அவர் சொன்னதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.


அவள் மனம் முழுதும், கலங்கிய குட்டையாய் குழம்பிப் போயிருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்ற தெளிவில்லாத நிலைக்கு நடுவே, ராகவ் தன்னிடம் உண்மையை மறைத்ததும் சேர்ந்து, அவளை இன்னும் கொஞ்சம் பலவீனமாக்கியிருந்தது. தனக்கு யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்தாள் அவள்.


ஆனாலும், ராகவைப் பற்றியும் அவளுக்குத் தெரியும், அவன் அவளை ஏமாற்ற நினைக்க மாட்டான். அவனோடு பழகிய இந்தச் சில வருடங்களில், அவனைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள் ஆருத்ரா.



ஆனாலும், அவன் தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டான் என்ற கோபம் அவள் கண்ணை மறைத்திருந்தது. ராகவோடு பழகிய தருணங்களை நினைத்துப் பார்த்தாள். சென்னைக்கு அவள் சென்ற புதிதில், அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவன் அவன் தான். அவள் தற்போது உயர் பதவியில் இருப்பதற்குக் காரணமும் அவன் தான்.


"இங்கே பாரும்மா! எதற்கும் பயப்படாதே.. நானும் மதுரை தான். எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளு.!"


என அவளுக்குத் தைரியம் தந்து இலகுவாய் உணர வைத்தவன் அவன் தான். கோப மிகுதியில் அவனை வாய்க்கு வந்தபடி பேசியதை நினைத்து வருத்தப்பட்டாள் ஆருத்ரா. அவனை இப்படிப் பேசிவிட்டோமே..? என நினைத்து அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.


'என்ன பேசுறேன்னு தெரியாமல் பேசிட்டேன்.! ராகவ் என்ன நினைச்சானோ? அவன் உண்மையைச் சொல்லியிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே?!' என யோசித்தவள், அவனிடம் நேரடியாகவே பேசிவிடலாம் என்றெண்ணி, அவன் அறையை நோக்கி நடந்தாள். அவள் அறையின் எதிர் திசையில், படிகள் இறங்கும் இடத்தில் ராகவின் அறை அமைந்திருந்தது.


அறையின் முன் சென்று நின்றவளுக்கு, ஒரு சிறு தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனாலும், மெதுவாய் கதவைத் தட்டினாள்.


"ம்மா! நான் தான் சாப்பாடு வேணாம்ன்னு சொன்னேன்ல்ல? சும்மா சும்மா இம்சை படுத்தாதீக!" என்ற அவன் குரல் கேட்டதும், கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றிருந்தாள்.


"ராகவ்!" பின்னாலிருந்து இவள் அழைக்க, அவன் திரும்பவே இல்லை. அவன் கோபத்தில் இருக்கிறான், என்பது இவளுக்குப் புரிந்தது.


"என் கிட்டே பேச மாட்டியா டா?!" இப்போதும் அவனிடம் பதில் இல்லை. தன் பையில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.


"எங்கே போற ராகவ்.? சென்னை கிளம்புறியா?!" என அவள் கேட்க,


"ஐயோ.. அண்ணி! நீங்க ஏன் இங்கே வந்தீங்க? கூப்பிட்டுந்தால் நானே வந்திருப்பேனே அண்ணி?! என்ன வேணும் அண்ணி? எதுக்காக வந்தீங்க?!" என அவன் வேண்டுமென்றே விளிக்க,


"ராகவ் போதும்.. நான் கோபத்தில் அண்ணின்னு கூப்பிட சொன்னேன் அதுக்காக இப்படியா? சும்மா அண்ணி பன்னின்னு கூப்பிடாதே.. எனக்கு எரிச்சலா இருக்கு!" எனச் சொன்னாள் ஆருத்ரா.


"ஐயோ.. அது எப்படிங்க? நீங்க என் அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க! உங்களைப் பேர் சொல்லி கூப்பிட முடியுமா? உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடற அளவிற்கு நாம பழகலையே? நான் யாரோ, நீங்க யாரோ தானே? வேணும்ன்னா மேடம்ன்னு கூப்பிடவா?!" என அவன் வீம்புக்கென்றே நக்கலாய் கேட்க,


"பைத்தியமா டா நீ..? நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற? நான் உனக்கு அண்ணியும் இல்லை.. ஒண்ணும் இல்லை. நான் ஜஸ்ட் ஆருத்ரா. உன் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்.!" எனத் தெளிவாய் சொன்னாள் அவள்.


"நீங்க எனக்கு ஃப்ரெண்டா? விளையாடாதீங்க! நான் உங்களை இதற்கு முன் பார்த்திருக்கேனா? எனக்கு உங்களை யாருன்னே தெரியாதே..?!" எனத் தன் நிலையிலிருந்து அவன் இறங்கி வர மறுக்க,


"உன்னைக் கொன்னுடுவேன் ராகவ்! என்னை நீ ரொம்ப வெறுப்பேத்துற.. இப்போ என்ன உன் காலில் விழணுமா? நான் மன்னிப்பு கேட்கலைன்னா என்னை மன்னிக்க மாட்டியா? அவ்வளவு கோபமாடா உனக்கு?!" என அவள் கேட்க, பட்டெனச் சிரித்திருந்தான் ராகவ்.



"நீ மன்னிப்பு கேட்காமலே நான் உன்னை மன்னிக்கணுமா? மாட்டேன்.. நானும் உன்மேல் கோபமாக இருக்கேன்!" என அவன் சொல்ல,



"அம் ஸாரி.. கோபத்தில் பேசிட்டேன்.!" என மன்னிப்பு வேண்டினாள் ஆருத்ரா.


"நான் வேணும்ன்னு பண்ணுனேன்னு நினைக்கிறியா ஆரு? எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தால், உன்னைச் சென்னையிலேயே தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேனா? உன் கிட்டே இருந்து, எந்தத் தகவலும் வரலையேன்னு பயந்து தான் நான் இங்கே வந்ததே.. ஆனால் என் அண்ணனை மீறி என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியலை. அவன் ஒரு முடிவை எடுத்துட்டான்னா அதை யாராலும் மாற்ற முடியாது. அவ்வளவு உறுதியாய் இருப்பான். அப்படி இருக்கும் போது, அவன்கிட்டே பேசுறதெல்லாம் வேஸ்ட் தான். ஆனால் இமயன் நிஜமாகவே நல்லவன் ஆரு. இப்போ நாங்க சொகுசா இருக்கிற இந்த வீடு, தோப்பு, தொரவு, வசதி எல்லாமே அவன் கொடுத்தது தான். இதெல்லாம் மீட்டெடுக்க அவன் அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கான்.!" என ராகவ் சொல்ல,


"நீ கூட உண்மையைச் சொல்லலைங்கிற கோபம் தான் ராகவ். உண்மை தெரிஞ்சும் மறைச்சுட்டியேங்கிற ஆதங்கம்.. எல்லாம் சேர்ந்து என்னை அறியாமல் கோபத்தில் கத்திட்டேன்.! நீ வேணும்ன்னே எதுவும் செய்யலை தான்.. நான் உன்னை நம்பறேன்.. இந்தச் சொத்துக்களை மீட்டெடுக்க உங்க அண்ணன் கஷ்டப்பட்டான்னு சொல்ற, இந்தச் சொத்துக்களைக் காப்பாத்த பண்ணின முயற்சியில் கொஞ்சமாவது, அவன் முதல் வாழ்க்கையைக் காப்பாற்ற செய்திருக்கலாம் தானே?!" எனப் பதில் கேள்வி கேட்டாள் ஆருத்ரா.


"உனக்குப் புரியாது ஆரு.. இதை நான் சொல்றதை விட, இமயன் உன்கிட்டே சொல்றது தான் சரி. அவனோட தனிப்பட்ட விஷயங்களை அவன் அனுமதி இல்லாமல், என்னால் உன்கிட்டே சொல்ல முடியாது. அப்படி நான் சொல்றது சரியாகவும் இருக்காது. எல்லாத்தையும் விட, எனக்கு மேலோட்டமாகத்தான் அதைப் பற்றித் தெரியும்.!" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,


"உன் அண்ணன் என்ன பெரிய தியாகியா? என்னமோ வாழ்க்கையிலேயே அவன் மட்டும் தான் கஷ்டப்பட்ட மாதிரி, பேசுற.?!" என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வாகனம் வந்து வாசலில் நிற்கும் சத்தம் கேட்டது.


"உன் அண்ணனே வந்துட்டான்னு நினைக்கிறேன். நான் அவன் கிட்டேயே கேட்டுக்கிறேன்.!" என அவள் அறையிலிருந்து வெளியே செல்ல,


"ஆரு.. நில்லு.. சொல்றதைக் கேளு ப்ளீஸ்..!" என ஆருத்ராவின் பின்னாலேயே இறங்கிச் சென்ற ராகவ் அதிர்ந்து நின்றிருந்தான்.
வாசலில் அந்தப் பெரிய கருப்பு நிற மகிழுந்து நின்றிருக்க, அதிலிருந்து இறங்கிய இளம் யுவதியைப் பார்த்ததும், அனைவரின் முகமும் பேயறைந்தார் போல் மாறியது.


"இவ என்னத்துக்கு இங்கண வந்திருக்கா? கல்யாணத்தனைக்குக் கூட, இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்னு சொன்னவள், இப்போ என்னத்துக்கு வந்தாள்? எம் பேரனுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுன்னா இவளுக்கு மூக்கு வேர்த்துரும்..!" எனச் செல்லம்மா புலம்பிக் கொண்டிருக்க, இந்த வீட்டிற்குப் புதிதாக வந்திருந்துக்கும், இவள் யாரெனெத் தெரியாமல் குழப்பமாய்ப் பார்த்திருந்தாள் ஆருத்ரா.

*******

அந்த இடம் முழுதும், காவல்துறையினர் கணக்கில்லாமல் குவிக்கப்பட்டிருந்தனர். காக்கிச் சட்டைகளும், வெள்ளை வேட்டி சட்டையும் அதிகமாகத் தென்பட, சிலர் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாகக் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். இமயவரம்பனும் அங்குத் தான் வந்திருந்தான்.


சரியாய் முதலமைச்சர் மயில்ராவணன் வரும் நேரத்தைக் கணித்து அதே நேரத்திற்கு வந்திருந்தான். அவன் முகமோ சோகத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. நிஜமாகவே அவனுக்குச் சுந்தரத்தின் இறப்பில் வருத்தம் இருந்தது. அவனைப் பொருத்தவரை அவர் ஒரு நல்ல மனிதர். வயதில் முத்தவர்.

இமயனோடு அன்பாகப் பழகுபவர். ஆனாலும் நாட்பட்ட நோயால், அவதிப்பட்டவரின் வலிகளையும் வேதனைகளையும் பார்க்கையில், இந்த மரணம் ஒருவகையில் விடுதலை என்று தான் அவனுக்குத் தோன்றியது. ஒருவரின் இறப்பை இப்படித் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறோம் என அவனுக்கு உறுத்தல் இருந்தாலும், தான் வாழும் கழுதைப் புலிகள் சூழ் உலகில், தன்னை நிலைநாட்டிக்கொள்ளச் சில சாணக்கியத்தனங்கள் அவசியமாகத்தான் இருக்கிறது.
தான் வாங்கி வந்திருந்த பெரிய மாலையை அவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தான். சுந்தரத்தின் மகனை தன்னோடு அணைத்து விடுவித்தான்.


"அவர் இருந்து வேதனைப்படுறதுக்கு, இது ஒருவகையில் விடுதலைதான் அண்ணே! நிறைய உழைச்சுட்டார் மனுஷன்.. பாவம் ஓய்வெடுக்கட்டும்!" என அவர் மகன் பேசியதும்,


"அவர் இங்கே உங்க கூடவே தான் இருக்கார். கவலைப்படாதீங்க!" என ஆறுதலாய்ச் சொன்னான். சுற்றி நின்றிருந்த அத்தனை கேமிரா கண்களும், படபடவென அவர்களைப் புகைப்படமாய்ப் பதிவாக்கிக் கொண்டது. இங்கே நடப்பவை அனைத்தையும், தன் பாதுகாவலர்கள் புடை சூழ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.



இந்தச் சமூக ஊடகங்கள், தன்னையும் இமயனையும் உற்றுக் கவனிப்பதாய் அவருக்குத் தோன்றியது.


"யோவ்.. எதுக்குய்யா இவ்வளவு மீடியாக்கானுங்களை உள்ளே விட்டு வச்சிருக்கீங்க? எங்கே பொணம் விழும்.. பொறுக்கி தின்னலாம்ன்னு அலையற கும்பல்கள். இந்தச் சுந்தரம் வேற போய்ச் சேர்ந்துட்டான். இந்த இமயன் வேற அந்தத் தொகுதியில் என்னை நிப்பாட்டுன்னு சொல்லுவான். இருக்கிற தலைவலியில் இந்த இம்சை வேற..!" எனத் தன் உதவியாளரிடம் முணுமுணுத்தபடியே சுந்தரத்திற்கான இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு மயில்ராவணன் வெளியே வந்த அதே நேரம், இமயவரம்பனும் வெளியே வந்தான்.


"நல்லா கேம் விளையாடுற போல இமயன்? எவ்வளவு பணம் கொடுத்த?!"எனச் சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார் மயில்ராவணன்.


"நீங்க கொடுக்கிறதை விட, பத்துப் பர்சென்ட்.. பத்தே பெர்சென்ட் தான் அதிகமா கொடுத்தேன். நான் சொல்றதுக்கெல்லாம் ஆடுறானுங்கன்னா பார்த்துக்கோங்க!" என இலகுவாக மென் சிரிப்புடன் பதில் சொன்னான் இமயவரம்பன்.



"நீயே மீடியாவுக்குக் காசு கொடுத்து நியூஸ் போட சொல்லிட்டா.. நீ எம்.எல்.ஏ ஆகிட முடியுமா? ஓட்டு வேணும் தம்பி..!" என அவர் நக்கலாய்ச் சொல்ல,


"எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தான் மாமா.. மக்களுக்கு நல்லது செய்றோமோ, இல்லையோ, செய்ற மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்தணும்ன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்ததே நீங்க தானே மாமா! ஓட்டு விழும்.. அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப் படுறீங்க? முதலில் என்னை மேலூர் தொகுதியில் நிறுத்துங்க.. ஓட்டு மட்டும் விழலைன்னா.. நான் அரசியலை விட்டே போய்டுறேன்.." என அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மர்மாய்ச் சிரித்துக் கொண்டார் மயில்ராவணன்.


"இந்த விஷயத்தில் நான் மட்டும், முடிவெடுக்க முடியாது இமயன். கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கணும். மற்ற உறுப்பினர்கள் சரின்னு சொன்னால் மட்டும் தான்.. உன்னை நிறுத்த முடியும். எதுவும் உறுதியாய் தெரியும் முன்னால், இப்படிப் பொய் செய்திகளை மீடியாவிற்குக் கொடுக்காதே!" உள்ளிருந்த கோபத்தை அடக்கியபடி சொன்னார் அவர்.


"கட்சி மேலிடமே நீங்கதானே மாமா? உங்களைத் தாண்டி யார் என்ன செஞ்சிட முடியும்? அரசியலைப் பொருத்தவரை சிபாரிசுங்கிற ஒண்ணு தவிர்க்கவே முடியாதது. எனக்காக நீங்க சிபாரிசு பண்ண மாட்டீங்களா மாமா? நான் உங்க மருமகன் தானே? நீங்க செய்வீங்க மாமா.. அதைத் தவிர உங்களுக்கு வேற வழியில்லை மாமா!"


"வார்த்தைக்கு, வார்த்தை மாமான்னு கூப்பிடாதே இமயன்..! எரிச்சலா இருக்கு! அந்த உறவு எப்போவோ முடிஞ்சு போச்சு.!"
முன்னாள் மாமனார்ன்னு கூப்பிடலாமா? நீங்க தானே என்னை ஆசைப்பட்டு மருமகனாய்க் கொண்டு வந்தீங்க? இப்போ அந்த உறவு வேணாம்ன்னு சொன்னால்.. முடிஞ்சுடுமா?!" எனக் கேட்டான் அவன்.


"என் பொண்ணுக்கும், உனக்கும் இருந்த உறவு எப்போவோ முடிஞ்சு போச்சு. அப்படியிருக்கும் போது, அந்த உறவை நீ தொடரனும்ன்னு நினைக்கிறது சரியில்லை இமயன்.!" என எரிச்சலுடன் சொன்னவர், முகத்தைச் சிரித்தபடியே வைத்துக்கொண்டார். இவரின் ஒவ்வொரு அசைவையும் சமூக ஊடகங்கள் உன்னிப்பாய் கவனிக்குமென்பது அவருக்குத் தெரியுமே..


"நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான் மாமனாரே..! ஆனால் நீங்க உங்க பொண்ணுக்கு பண்ணி வச்சது, ஊருக்கு கணக்குக் காட்டுற கல்யாணம்ன்னு யாருக்கும் தெரியாதே..! பேசாமல் அதை எல்லாருக்கும் சொல்லிடுவோமா? இதை மட்டும் வெளியில் சொன்னால், என்ன நடக்கும்ன்னு உங்களுக்குத் தெரியும் தானே? ஜாதி சங்கம்ன்னு ஒண்ணு இருக்கு.. அதற்குத் தலைவர் நீங்க தான்னு உங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும். இதுக்கு மேலே நான் எதுவும் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.!" எனப் புன்னகையுடன் அவன் சொல்ல, இமயனின் புன்னகையின் பின்னாலிருந்த அர்த்தம் புரிந்ததில், சட்டென முகம் ஒருமாதிரியாய் மாற, வியர்த்து வழிந்தது மயில்ராவணனுக்கு.


"சரி.. சரி.. இதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.! எப்படியும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கும். அப்போ பார்த்துக்கலாம்.!" எனச் சமாளிக்க முயன்றார் அவர்.


"பார்த்துக்கலாம்ங்கிற பதில், எனக்குத் தேவையில்லை மாமா! எனக்குத் தேவையான பதில் என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஜாதின்னு ஒண்ணு உயிரோட இருக்கிறதால் மட்டும் தான், நீங்க பதவியில் இருக்கீங்கன்னு உங்களுக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும், ஒருமுறைக்குப் பத்து முறை யோசிச்சு செய்ங்க! புரியும்ன்னு நினைக்கிறேன்.!"
என மிரட்டல் தொனியில் அவன் சொல்ல, அவன் குரலில் தெரிந்த ஏதோவொன்றில், அவனை நிமிர்ந்து பார்த்தார் அவர். அவன் கண்களில் தெரிந்த தீவிரமும் கோபமும் அவருக்குத் தெளிவாகவே புரிந்தது.


அவன் இதழ்கள் சிரித்தவண்ணம் இருந்தாலும், அவன் கண்கள் அவன் மனதுக்குள் எரிந்து கொண்டிருந்த கோபத்தின் அளவைக் கண்ணாடியாய்க் காட்டிக் கொண்டிருந்தது.
இமயன் சட்டெனக் கோபப்படுபவனாய் இருந்திருந்தால், அவன் கோபத்தைத் தூண்டிவிட்டு, எப்போதோ காரியம் சாதித்திருப்பார் மயில்ராவணன். ஆனால், இவன் கோபத்தில் மட்டுமல்ல, அவனின் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் தெளிவும் இருந்தது. அந்த நிதானமும் தெளிவும் தான் அவரை ஆட்டிப் பார்த்தது. அவரும் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டார். ஆருத்ராவைப் பணயமாய் வைத்து அவனிடம் காரியம் சாதிக்க முயன்றார். ஆனால் அவர் திட்டமிடும் அத்தனையும் கணித்து, ஒருபடி முன்னாலிருந்தான் இமயன். இமயன் வெறும் சிறு துரும்பு என அவர் நினைத்திருக்க, அவனோ அவன் பெயரைப் போலவே இமயமலையாய் அவர் முன் நின்றான். பேசாமல் அவன் கேட்பதைச் செய்துவிடலாமா? என யோசிக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருந்தான் இமயவரம்பன்.


"புரியுது இமயன்..! இப்போ நீ கிளம்பு! நான் பார்த்து செய்றேன்!" அவனை அனுப்ப வேறு வழியில்லாமல் சொல்ல, புன்னகையோடு அவன் அவரிடம் கைகுலுக்கி விடைபெற்றது அடுத்த நாள் தலைப்பு செய்தியாய் முதல் பக்கத்தை நிறைத்திருந்தது.


"இவருக்குப் பதில் இவரா?!"

"மறைந்த திரு.சுந்தரத்திற்குப் பிறகு, முதலமைச்சருக்கு நெருக்கமானவராக மாறியிருக்கிறார் இமயவரம்பன். மேலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக இமயவரம்பன் தேர்வு செய்யப்படுவாரா? ஆளும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?!" என வழக்கம் போல் ஊடகங்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தன.


இதைப் பார்த்தே மயில்ராவணன் கோபமாய்த் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்க, மயில்ராவணன் கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது இவர் கண்ணில் விழுந்தது.


"இவன் யாரைக் கேட்டு பேட்டி கொடுக்கப் போனான்?!" எனப் புலம்பியபடியே அவர் பார்த்துக் கொண்டிருக்க,


"மேலூர் தொகுதியின் அடுத்த வேட்பாளர் யாருன்னு நீங்க நினைக்கிறீங்க?!" என்ற கேள்விக்கு,


"கண்டிப்பா இமயவரம்பன் தான்.! மறைந்த சுந்தரம் ஐயாவே இமயன் தான் அடுத்து வரணும்ன்னு நினைச்சார். இவ்வளவு ஏன், மாண்புமிகு முதல்வர் ஐயாவே, இமயனைத் தான் யோசிச்சு வச்சிருக்கிறதா என்னிடம் நேரடியாய் சொன்னார்.!" எனப் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்து இரத்த அழுத்தம் எகிறியது மயில்ராவணனுக்கு.


"யோவ்.. மணி! இப்போ பேட்டி கொடுத்துட்டு இருக்கானே.. அவனுக்கு ஃபோன் போடு! இவனுங்க இஷ்டத்துக்கு என்னத்தையோ பேசி வச்சு கழுத்தை அறுக்குறானுங்க! இவன் யாரைக் கேட்டுப் பேசினான். இந்தப் பதவியில் இருந்து தொலைலையறதால் அமைதியாய் இருக்கேன். மதுரைக்குள்ளே போய்க் கேட்டுப் பாரு.. என்னோட முழு வரலாறும் தெரியும்!" என அவர் கோபமாய்க் கத்திக் கொண்டிருக்க,


"பேசாமல் ப்ரஸ் மீட் வச்சு, நாமளே இவர் சொன்னதுக்கு மறுப்பு செய்தி வெளியிட்டு விடலாம் சார்!" என அவரின் உதவியாளர் மணிகண்டன் சொல்ல,


"மறுப்பு செய்தி வெளியிட்டால், அதுவே நமக்கு எதிரா திரும்ப நிறைய வாய்ப்பு இருக்கு. நாளைக்கு அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்.. எல்லாருக்கும் தகவல் அனுப்பிடு. பேருக்கு ஆலோசனைக் கூட்டம் வச்சுட்டு, அந்த இமயனை நிறுத்துறதா சொல்லிடுவோம். நானாக என் வாயால் அவன் பேரைச் சொல்ற வரை இந்த இமயன் சும்மா இருக்க மாட்டான்.!"



என அவர் சொன்ன அதே நேரம், அவர் எடுக்கப் போகும் முடிவை முன்பே கணித்தவனாய் தனக்குள் சிரித்தபடியே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.


"வாழ்வில் படிக்கவேண்டுமென்றால்...


குருவிற்கு மாணவனாய் இரு..!

அரசியல் படிக்க வேண்டுமென்றால்..

தலைவனுக்குத் தொண்டனாய்..
எப்போதுமே இருந்துவிடாதே..!

ஏனென்றால் தலைவன் உன்னை வைத்து..

அரசியல் செய்து விடுவனே தவிர, அதை

உனக்குக் கற்றுத் தர மாட்டான்..!"


_சாணக்கிய நீதி

அன்பாகும்..?
 
Last edited:

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

#அன்பின் அதீதங்களில்.. அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

தாமதமா யூடி போட்டாலும் காத்திருந்து படிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.❤

கருத்துத் திரி:

Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ் டியர்ஸ்..

இந்தக் கதை துவங்கினதில் இருந்தே ஏதாவது தடை வந்துட்டே இருக்கு.. என்னன்னு தெரியலை..

இன்னைக்கு யூடி போட முடியலை. மன்னிச்சுடுங்க.
நாளைக்கு போட முயற்சிக்கிறேன்.

அன்புடன்,

சுசி கிருஷ்ணன்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-11

"யோவ்.. உனக்கு அறிவு இருக்கா? மைக் கிடைச்சுட்டால் போதும்ன்னு உன் இஷ்டத்துக்கு உளறி வைப்பியா? யாரைக் கேட்டு, இமயன் பேரை நான் சொன்னேன்னு சொன்ன?!" தன் முன்னால் நின்றவரை, ஒர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல், வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.

"என்ன தலைவரே.. இப்படிப் பேசுறீங்க? இமயனைக் கட்சிக்குள்ளே கொண்டு வரணும்ன்னு நாம முன்னால் பேசினோம் தானே? இப்போ என்னடான்னா நீங்களே இப்படிக் கேட்குறீங்க?!"

"நான் சொன்னது, அவன் என் பொண்ணோட புருஷனா இருந்தப்போ.. இப்போ, அவனுக்கும், என் பொண்ணுக்கும் சம்மந்தமே இல்லைன்னு ஆகிடுச்சு. என் பொண்ணு வாழ்க்கையே இல்லாமல் ஒத்தையா நிற்கிறா. இப்போ அவனைக் கட்சிக்குள்ளே கொண்டு வந்து, என் தலையில் நானே மண்ணள்ளி போட்டுக்கவா?!" என அவர் கேட்க, எதிரில் நின்றவர் பதிலே பேசாமல் அமைதியாய் நின்றார்.

"பேசாமல், நான் சொன்னதெல்லாம் பொய்ன்னு நானே சொல்லிடவா தலைவரே?!"

"யோவ்! லூசாய்யா நீ? இதென்ன தேர்தல் வாக்குறுதியா மாத்தி மாத்தி பேசுறதுக்கு? நீ இப்படி மாத்தி மாத்தி பேசினால், கட்சியை யார் மதிப்பா? உள்கட்சி பூசல்ன்னு நியூஸ் போடுவானுங்க!" என அதற்கும் எகிறினார் மயில்ராவணன்.

"ஐயோ! தலைவரே.. தெரியாமல் பேசிட்டேன். இந்த இமயன் தான் உங்களோட தேர்வு அவன்னு சொன்னான். அவனை நம்பி பேசினதுக்கு.. எனது இதுவும் வேணும். இன்னுமும் வேணும்! வர்ரேன் தலைவரே..!" என அவர் விடைபெற்றுக் கிளம்ப, யோசனையோடு அமர்ந்திருந்தார் மயில்ராவணன்.

அவருக்கு இமயனின் திட்டம் புரிந்தது. அவன் தான் நினைத்ததைச் சாதிக்காமல் விடப் போவதில்லை என்பதும் புரிந்தது. தங்கள் கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி, காரியத்தைச் சாதிக்கிறவன், எதிர்கட்சிக்குள் மட்டும் சென்றுவிட்டால், ஆளும் கட்சி என்ற ஒன்றையே இல்லாமல் செய்துவிடுவான் என்பது புரிந்தது. ஆனாலும், அவனைக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு யோசனையாகவும் இருந்தது.


"யோவ்! இமயன் யாரையாவது மீட் பண்ணினானா? அவனைக் கண்காணிக்கச் சொல்லி சொன்னேனா இல்லையா?!" எனத் தன் உதவியாளரிடம் கேட்டார் மயில்ராவணன்.


"சார்! அவர் அஃபீஷியலாய் மீட் செஞ்ச மாதிரி தெரியலை சார். அவர் இன்விடேஷன் கொடுக்கறதுக்காக எதிர்க்கட்சி தலைவரை மீட் பண்ணிருக்கார். எதிர் கட்சியிலிருக்கும், எல்லாரையும் மேரேஜ்க்கு இன்வைட் செய்திருக்கார்.!" என மணிகண்டன் சொல்ல, உள்ளுக்குள் பயமெடுத்தது மயில்ராவணனனுக்கு.


"சார்! இந்த எதிர்கட்சி, ஆளும் கட்சியெல்லாம் வெளியில் தானே சார்! மத்தபடி, அவங்க விஷயங்களை நாம கண்டுக்கக் கூடாது. நாம செய்ற எதையும், அவங்க கண்டுக்கக் கூடாதுன்னு அக்ரீமெண்ட் இருக்கே சார்.. அப்பறம் ஏன் பயப்படுறீங்க?!" என மீண்டும் மணிகண்டனே கேட்க,


"யோவ்! அதெல்லாம் மத்த விஷயங்களுக்குத் தான்ய்யா! அல்வா மாதிரி விஷயம் கிடைச்சிருக்கு. எதிர்க்கட்சிகாரன் எப்படிச் சும்மா விடுவான்? இமயன் மட்டும் அங்கே போனான்னா நம்ம ரகசியங்கள் அத்தனையும் மேடையேறிடும்!" என்றவரின் குரல் கரகரத்தது.


"எதிர்க்கட்சிகாரன் செய்யாததையா நாம செஞ்சுட்டோம்? அவனும் பதுக்கினான். நாமளும் பதுக்கினோம். அவ்வளவு தானே? நாம செஞ்சதை அவன் சொன்னால், அவன் சொன்னதை நாம வெளிப்படுத்துவோம். நம்ம சாவி அவன் கையில் இருக்கிற மாதிரி, எதிர்க்கட்சியோட இரகசியங்களின் சாவி நம்ம கையில் இருக்கும் தானே? நம்மளைப் பத்தி நியூஸ் வெளிய வந்தால், அது எதிர்க்கட்சிக்குத்தான் ஆபத்து..!" என மணிகண்டன் சொன்ன போதும் கூட மயில்ராவணனின் முகம் இயல்புக்குத் திரும்பவில்லை.


தன் தனிப்பட்ட உதவியாளராய் இருந்தாலும் கூட, மணிகண்டன் அறியாத விஷயங்களை இமயன் அறிந்து வைத்திருக்கிறான் என்பது அவருக்கு மட்டும் தானே தெரியும். அதை வெளிப்படையாய் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், அமைதியாய் நின்றிருந்தார் மயில்ராவணன். அவர் மனமோ படபடப்பை உணர்ந்தது. ஒருவேளை எதிர்க்கட்சிக்கு, தன்னைப் பற்றிய இரகசியங்கள் தெரிந்திருக்குமோ.? என்ற சந்தேகம் அவர் மனதைக் கரையானாய் அரித்துக் கொண்டிருந்தது.


ஒருவேளை உண்மை தெரிந்தால், தன் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற பயம் அவர் மனதை ஆட்டிப் பார்த்தது. இதற்கு மேல் தனக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டார் அவர். நான்கு பக்கமும் கட்டம் கட்டி, தன்னை நகர விடாமல், நடுவில் நிறுத்தி வைத்த இமயன் மீது, கட்டுக்கடங்காத கோபம் வந்தது அவருக்கு.


ஆனால், கோபத்தை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல.. புத்திசாலித்தனமாய்ச் செயல்பட்டு, பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் தருணம் இதுவென்பதை சமயோசிதமாய் யோசித்து முடிவு செய்தவர்,


"மணி.. உடனே அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணு!"

எனத் தன் உதவியாளரைப் பணித்தவரின் மனதில், அடுத்தத் திட்டம், அழகாய் உருவாகியிருந்தது.

*******

"இங்கே பாருங்க! நம்ம கட்சிக்கு எது நல்லதோ, அதைத்தான் நான் எப்போதுமே செய்வேன். நம்ம கட்சி, மக்கள் நலனை மட்டுமல்ல, கட்சியிலிருக்கும் உங்கள் நலனையும் சேர்த்து தான் யோசிக்கும். கட்சியோடு சேர்த்து எனக்கு நீங்களும் முக்கியம்!" என நீள் செவ்வக வடிவில் போடப்பட்டிருந்த அந்த இருக்கைகளில் நடு நாயகமாய் அமர்ந்தபடியே பேசினார் மயில்ராவணன்.

ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர். இமயனும் அங்கே தான் இருந்தான். அவசர அழைப்பின் பேரில், சுந்தரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய கையோடு, மதுரையிலிருந்து சென்னைக்கு, வான் வழியாய் பயணம் செய்து வந்திருந்தான். இவையெல்லாம் அவன் முன்பே எதிர்பார்த்தவை தான்.



"நீ எது சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம் தான் ஐயா..!"


"யோவ்.. அது எப்படி என்ன சொல்ல வர்ராருன்னு தெரியாமலே சம்மதம்ன்னு சொல்ல முடியும்? என்ன விஷயம்ன்னு சொல்லட்டும்!"


"வேற என்ன விஷயமா இருக்கப் போகுது? நம்ம மேலூரில் யாரை நிறுத்தணும்ன்னு முடிவு பண்ணத்தானே வரச் சொன்னாங்க!"


"நமக்குள்ளே யாராவது ஒருத்தரைத் தான் நிறுத்தனும்!"


"கட்சிக்கு சாதகமான ஆளாக இருக்கணும்!"


"தலைவரே.. பேசாமல் உங்க பொண்ணையே நிறுத்தலாமே..? ஏன் வேறு யாரையாவது தேர்ந்தெடுக்கணும்?!"


"அட நீ வேறய்யா.. ஓட்டு விழணுமே?!"


"புருஷன் இல்லாத பொண்ணுன்னு ஓட்டு விழாதா என்ன?!"


"தலைவர் இமயனை நிறுத்தறதாகத் தானே முடிவு பண்ணியிருக்கார்!"


"மகளை விட, முந்நாள் மருமகன் பெருசா போய்ட்டாராக்கும்?"


"இமயனை ஐயா கண்டிப்பா முடிவு பண்ணியிருக்க மாட்டார்!" கலவையான பேச்சுக்கள் மயில்ராவணன் செவிகளில் விழுந்தது.


ஆனால், இங்கே எழுந்த பேச்சுக்களில், அவர் தன் மகளை நிறுத்துவது பற்றித் துளி கூட யோசிக்கவே இல்லை. அவர் இமயனை நிறுத்தக் கூடாது என்பதில் மட்டும் தான் உறுதியாய் இருந்தார். யாரை மேலூர் தொகுதியில் நிறுத்த வேண்டும் என்பதிலும் கூட உறுதியாய் இருந்தார். தன் மனதிற்குள் தான் எடுத்த முடிவை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவர், தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் துவங்கினார்.


"இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நமது மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் அவர்களின் மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியாதது. எனது இருபது ஆண்டுக் கால நண்பர். என்னைக் கட்சிக்குள் கொண்டு வந்தவர். நான் தற்போதிருக்கும் நிலைக்கு முழுமுதற் காரணமும் அவர் தான்."

"சிலர் இருக்காங்க, கூலிக்கு வேலை செஞ்சுட்டு, தன்னால் மட்டும் தான் எல்லாம் நடந்ததுன்னு தற்பெருமை பேசிக்கிறவங்க.. ஆனால், சுந்தரம் அவர்கள் அப்படிப்பட்டவர் கிடையாது. என் வளர்ச்சியில் உளம் நிறைந்தவர் அவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரின் இறப்பை எண்ணி நான் மனம் வருந்துகிறேன்..!"

என்றவரின் பார்வை இமயனின் மீது நேரடியாய் விழுந்தது. அவர் குத்தலாய்ச் சொன்னது தன்னைத்தான் என்பது அவனுக்கும் தெரிந்தே இருந்தது இமயனுக்கு. இதழ் விரிக்காமல் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.


"இப்போ நாம இங்கே கூடியிருக்கும் விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கணும். ஒரு சட்டமன்ற வேட்பாளர் மறைவிற்குப் பின் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி, அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆணைய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நமது கடமை. அதனால், மேலூர் சட்ட மன்ற தொகுதிக்கான புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம இருக்கோம். நான் என் மனசாட்சிப்படி ஒருத்தரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். உங்க விருப்பம் என்னன்னு சொல்லுங்க!" என மயில்ராவணன் கேட்க, அந்த ஒட்டுமொத்த இடம் முழுவதையுமே நிசப்தம் சில நொடிகள் ஆட்கொண்டிருந்தது.


"நீங்க யாரைக் கை நீட்டுறீங்களோ, அவங்களையே நியமிச்சுடலாம் ஐயா!"


"இப்போ நம்ம கட்சிக்குள்ளே இருக்கிற ஒருத்தரை நிறுத்தினால், நான் தான் சீனியர், எனக்குத் தான் அனுபவம் அதிகம்ங்கிற மாதிரியான பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கு. இது உட்கட்சி பூசலுக்கு வழி வகுக்கும்.!"


"எல்லாருக்கும் பொதுவான ஒருத்தரைத் தான் நிறுத்தணும்!"


"யாரையோ ஒருத்தரை நிறுத்துறதுக்கு உங்க சொந்த மகனை நிறுத்தினால் என்ன?!"


"ஆமா.. ஆமா.. அதுவும் சரிதான்.!"


"பொதுவான நபர் உங்க மகனாகத்தான் இருக்க முடியும்!"
எனக் குரல்கள் கேட்கத் துவங்க, தன் திட்டம் வெற்றிகரமாய் வேலை செய்வதை எண்ணி சிரித்துக் கொண்டார் மயில்ராவணன்.

அவரின் பார்வை மீண்டும் அழுத்தமாய் இமயவரம்பனைத் துளைத்தது. நிஜமாகவே மயில்ராவணனின் திட்டம் இதுவாகத்தான் இருந்தது. தன் சொந்த மகனை அரசியலுக்குள் கொண்டு வர, இதைவிட, சிறந்த தருணம் வாய்க்காது என்பதை உணர்ந்து, அவனை மேலூர் தொகுதியில் நிறுத்தவே திட்டம் தீட்டியிருந்தார்.

ஆனால் இடையில் இமயவரம்பன் வந்து நிற்கவே, வேறு வழியில்லாமல், அவனிடம் சம்மதம் தெரிவித்துவிட்டு, கட்சியிலுள்ள மற்றவர்களின் விருப்பம், அவரின் சொந்த மகனாக இருக்கையில், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்க முயன்று கொண்டிருந்தார். ஆனால் இத்தனைக்குப் பிறகும் கூட, இமயனிடம் துளி மாற்றம் இல்லை. அவன் ஒற்றை வார்த்தைப் பேசவில்லை. அங்கே நடக்கும் எதையும் மாற்ற முயலவில்லை. ஆனால், அவன் கண்களில் ஒருவித உறுதி தெரிந்தது. அந்த உறுதி மாண்புமிகு முதல்வர் அவர்களையே கொஞ்சம் ஆட்டிப்பார்க்கவும் செய்தது.


"உங்களோட விருப்பமும், ஆதங்கமும் எனக்குப் புரியுது. நான் நம்ம இமயனைத் தான் மேலூர் தொகுதியில் நிறுத்தணும்ன்னு நினைச்சேன். காரணம், இமயன் மதுரையைச் சேர்ந்தவன்.. அதைவிட, முக்கியமான காரணம், என் பிள்ளைகளை இதற்குள் கொண்டு வந்து நான் வாரிசு அரசியலாக மாற்ற விரும்பலை. ஆனால், நான் என் விருப்பத்தை மட்டுமல்ல.. உங்க விருப்பத்தையும் முன் நிறுத்தணும் இல்லையா? உங்களோட விருப்பம் தான் என்னோட விருப்பமும்.. என் மகனை மேலூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்துறதுக்கு நீங்க விரும்புறீங்கன்னா அதைச் செய்ய நான் கடமை பட்டிருக்கிறேன். இப்போவும் என் மகனை இதற்குள் இழுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் சம்மதம் தெரிவிக்கிறது உங்களுக்காகவும் நம்ம கட்சிக்காகவும் மட்டும் தான்.!" என வாய்க் கூசாமல் பொய் சொல்லி நிறுத்தியவர், வெற்றிப் புன்னகையுடன் இமயனைப் பார்த்தார். இப்போதும் கூட, இமயனிடம் துளி மாற்றமில்லை.


"இமயன்.. நான் உன்னைத் தான் நிறுத்தணும்ன்னு நினைச்சேன். ஆனால் கட்சியிலிருக்கும் மத்தவங்களோட கருத்தையும் நான் மதிக்கணும் தானே?! இவங்களோட தேர்வு என் மகனாக இருக்கையில், நான் என்ன செய்ய முடியும்? உனக்கு என் நிலமை புரியும்ன்னு நினைக்கிறேன்..!" என அவர் வெளிப்படையாய் கேட்க,


"உங்களோட இந்த முடிவில் உங்க மகனுக்குச் சம்மதம் தானா?!" என அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த அரங்கின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அந்தப் புதியவன்.


*********


மகிழுந்தின் முன் இருக்கையிலிருந்து இறங்கிய அந்த யுவதியைப் பார்த்து, வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர். இமயன் தான் வந்துவிட்டான் என எண்ணி, தன் அறையிலிருந்து கீழிறங்கி வந்த ஆருத்ராவோ, தன் எதிரே நிற்கும், புதியவள் யாரெனத் தெரியாமல் குழம்பி நின்றாள்.


"ஏய்! நில்லுடி! எனத்துக்கு இங்கண வந்த? என் பேரனுக்கும், உனக்கும் எல்லாம் முடிஞ்சு போன பிறகு, என்னத்துக்கு டி சீவி சிங்காரிச்சு இங்கண வந்திருக்கிற?!" எனச் செல்லம்மா அவளை நிறுத்த முயல,


"ஏம்மா! என் பையன் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா?!" என இடையிட்டார் இமயனின் தாய் தனலெட்சுமி.


"டோன்ட் ஒர்ரி ஆன்ட்டி! நான் எந்தப் பிரச்சனையும் பண்ண வரலை!" என்றபடி தன் பயணப் பொதிகளை இழுத்தபடி முன்னேறினாள், இமயவரம்பனின் முன்னாள் மனைவி கவிநயா.


"நீ ஒரு விளக்கமும் சொல்ல வேணாம். வந்த வழியே போயிரு!" என அழுத்தமாய்ச் சொன்னார் செல்லம்மா.


"நான் தான் பிரச்சனை பண்ண வரலைன்னு சொல்றேன்ல்ல? எதுக்காக வந்தேன்னு நானே சொல்றேன்.!" எனக் கவிநயா ஏதோ சொல்ல வர, கேட்பதற்கு யாருமே தயாராய் இல்லை.


"எம்மா ராசாத்தி! ஒருமுறை என் மயன் வாழ்க்கைக்குள்ளே வந்து அவன் வாழ்க்கையை நாசமாக்கினது பத்தாதா? உங்க அப்பனை நம்பி உன்னைக் கட்டினதுக்கு, அவனை ஆம்பிள்ளையே இல்லைன்னு நீ முத்திரை குத்தி, அவன் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் அழிச்சுட்டியே? உன்னைக் கையெடுத்து கும்பிடுறேன்.. இங்கிருந்து போயிரு..!" எனத் தன்னை மீறி, கையெடுத்துக் கும்பிட்டிருந்தார் தனலெட்சுமி.


இதே நேரம், ராகவ் செய்வதறியாது ஆருத்ராவை சங்கடமாய்ப் பார்த்தபடி நிற்க, அவளால், ஓரளவிற்கு விஷயத்தை யூகிக்க முடிந்தது. வாசலில் வந்து நிற்கும் கவிநயாவைப் பார்த்து, ஆருத்ராவிற்குப் பயமோ, குழப்பமோ தோன்றவில்லை. மாறாக இந்தத் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்ற நிம்மதி தான் அவளிடம் தோன்றியது.


"ஏன் ராகவ்.. இவங்க இமயனோட வொய்ஃபா?!" என அவள் கேட்ட கேள்விக்கு ஆம் எனத் தலையாட்டினான் ராகவ்.


"அவங்க பேரு..!"

"கவிநயா!"

"உங்க அண்ணன் கூடச் சேர வந்திருக்காங்களா?!"

"தெரியாது!"

"உன் அண்ணி தானே? நீ போய்ப் பேசேன் ராகவ்!"

"ஆரு.. ப்ளீஸ்.. கொஞ்சம் அமைதியாய் இரு! அடுத்த என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோன்னு பயமா இருக்கு.!" நிஜமாகவே அவன் குரலில் இமயனின் வாழ்க்கையைப் பற்றிய பயம் தெரிந்தது.


"ஒருவேளை இவங்க உன் அண்ணன் கூடச் சேர்ந்துட்டால், உன் அண்ணன் என்னை விட்டுடுவான் தானே?!" என அவள் கேட்க, தூக்கிவாரிப்போட நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ராகவ்.


"அப்படியொரு வாய்ப்பு இருந்தால், நானே அவங்களைச் சேர்த்து வச்சுடுவேன்.!" எனச் சந்தோஷமாகச் சொன்னாள் ஆருத்ரா. அவளைப் பொருத்தவரை, இமயனிடமிருந்து தப்பிக்கும் வாய்ப்பாக மட்டுமே அவள் இதைப் பார்த்தாள்.

நிஜமாகவே கவிநயாவுடன், இமயன் மீண்டும் இணைவதாய் இருந்தால், அவளுக்குச் சந்தோஷம் தான்.


"உனக்கு இமயனைப் பற்றித் தெரியாது ஆரு.. அவன் நீ எதிர்பார்க்காததைத் தான் செய்வான்.!" என ராகவ் சொன்னதை ஆருத்ரா கண்டுக்கொள்ளவே இல்லை. அவள் பார்வை முழுதும் கவிநயாவின் மீதே இருந்தது. இவளிடம் எப்படியாவது பேசி, திருமணத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதே ஆருத்ராவின் எண்ணமாக இருந்தது.


அதே நேரம், தாங்கள் தங்கியிருந்த அறைகளில் இருந்து, கீழே இறங்கி வந்திருந்தனர் ஆருத்ராவின் குடும்பத்தினர்.


"இந்தப் புள்ள யாரு புதுசா இருக்கு?!" என வள்ளியம்மை வினவ,


"அது வந்துங்க..!" எனத் திணறியபடி நின்றார் இமயனின் தந்தை அண்ணாமலை.


"உங்க சொந்தாக்கார பொண்ணா? கல்யாணத்திற்கு வந்திருக்காங்களா என்ன?!" என அபிராமி கேட்க, உண்மையைச் சொல்லவா? இல்லை பொய் சொல்லவா? எனத் தெரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டு நிற்க,


"ஏம்மா.. நீ மயில்ராவணன் மவ தானே?!" எனச் சரியாய்க் கேட்டிருந்தார் பழனிவேல். அவருக்குக் கவிநயாவை நன்றாகவே தெரிந்திருந்தது.

மயில்ராவணனின் மகள் எனத் தெரிந்த மாத்திரத்திலே அவள் யாரென மற்றவர்களுக்கும் தெரிந்து போனது. அவள் இமயனின் முதல் மனைவி எனத் தெரிந்ததும், ஆருத்ராவின் குடும்பத்தினர் முகத்தில் அதிர்வின் ரேகைகள். இருந்தாலும் அவள் இல்லையெனச் சொல்லிவிட மாட்டாளா? என்ற நப்பாசையும் இருந்தது.


"ஆம்!" என அவள் தலையசைக்க, ஆருத்ராவின் வீட்டினருக்கோ இடி விழுந்ததைப் போலானது.


"என்ன அபி.. நம்ம பிள்ளையோட கல்யாணத்தைப் பேசிட்டு, இப்படி முதல் பொண்டாட்டியையும் வரச் சொல்லியிருக்காங்க?!" எனப் பொன்னி வினவ,


"என்ன நடக்குது இங்கே? என் பேத்தியை என்னத்துக்கு வந்து பொண்ணு கேட்டீக? இப்படி மூத்த தாரத்தையும் வீட்டுக்குள்ளே கொண்டு வந்து நிறுத்தி எங்களை அசிங்கப்படுத்தவா? இரண்டாந்தாரமாய் இருந்தாலும், நாங்க சம்மதிச்சதுக்குக் காரணம், முதல் மனைவியோட விவாகரத்து ஆகிடுச்சுன்னு நீங்க சொன்னதாலேயும், உங்க குடும்பத்து மேல் இருந்த நம்பிக்கையாலும் மட்டும் தான். ஆனால் இங்கே என்னென்னமோ நடக்குதே? எங்களை ஏமாத்தணும்ன்னு நினைக்குறீங்களா?!" எனப் பொருமித் தள்ளினார் வள்ளியம்மை.


"அப்படியெல்லாம் இல்லை. நாங்க சொல்றதைக் கேளுங்க! இவள் எதுக்கு இங்கே வந்தாள்ன்னு எங்களுக்கே தெரியாது.!" எனத் தனலெட்சுமி சொல்ல, அதை நம்புவதற்கு வள்ளியம்மை தயாராக இல்லை.


"அது எப்படிங்க, உங்க வீட்டுக்குள்ளே வந்து இந்தப் புள்ளை தைரியமாய் நிற்குது.. உங்களுக்குத் தெரியாமல் வந்திருக்குமா? ஊரெல்லாம் பத்திரிக்கைக் கொடுத்த பிறகு, இந்தப் புள்ளையை வர வச்சிருக்கீங்கன்னா ஊங்களை அவமானப்படுத்த தானே திட்டம் போட்டுருக்கீங்க?!" எனக் கேட்டார் அபிராமி.


"என்னத்துக்கு இப்படி மாறி மாறி சண்டைப் போட்டுக்குறீங்க? இந்தப் பொண்ணை யார் வரச் சொன்னாங்க.? எதற்காக வரச் சொன்னாங்கன்னு கேட்டால் தெரிஞ்சுடப் போகுது. என்னன்னு விசாரிக்காமலே பஞ்சாயத்தைக் கூட்டுறீங்க? கொஞ்ச நேரம் அமைதியாய் இருங்க!" என்ற பழனிவேலின் குரலில் அனைவரும் அமைதியாகிவிட,


"ஏம்மா கவிநயா.. உன்னை யாரு இங்கண வரச் சொன்னது? கல்யாணம்ன்னு தெரிஞ்சு நிறுத்தணும்ன்னு வந்தியாக்கும்?!" என அவர் கேட்ட கேள்விக்கு

'இல்லை' எனத் தலையசைத்தாள் கவிநயா.


"உனக்கு இமயனோடு சேர்ந்து வாழணும்ன்னு ஆசை எதுவும் இருக்கா? ஒருவேளை அப்படியொரு எண்ணம் உனக்குள் இருந்தால் சொல்லு. நாங்க இப்போவே வெளியேறிடுறோம்..!" என மீண்டும் பழனிவேல் வினவ, இப்போதும் அவள் தலை 'இல்லை' என இடவலமாய் ஆடியது.


"ஏம்மா இப்படித் தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு இருந்தால், நாங்க என்னதேன் நினைக்கிறது? அப்பறம் எதுக்காக இங்கே வந்த?!" எனக் கோபத்தோடு வள்ளியம்மை கேட்க,


"நான் இமயனோட மேரேஜை பார்க்க வந்தேன்.! என்னை வரச் சொன்னதே இமயன் தான். நான் ஒண்ணும் கல்யாணத்தை நிறுத்த வரலை. இமயனோட கல்யாணத்திற்குக் கெஸ்ட்டா.. ஒரு ஃப்ரெண்டா வந்திருக்கேன்.!" என அவள் சொல்ல, ஆருத்ராவிற்கே ஆச்சர்யமாய் இருந்தது. அதுவும் இமயனே வரச் சொல்லியிருப்பது அவளுக்குப் பேரதிர்ச்சியாகத் தான் இருந்தது.


அங்கே நின்றிருந்த யாருமே இமயன் வரச் சொல்லியிருப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை.


"இந்தப் பய என்னத்துக்கு இப்படி வேண்டாத வேலை செஞ்சுக்கிட்டுத் திரியறான். வேணாம்ன்னு போனவளை வலிய கொண்டார்ந்து இங்கே நிப்பாட்டியிருக்கான். உன் மயனுக்குக் கிறுக்குப் பிடிச்சுக்கிச்சா தனம்? என்னத்துக்கு இப்படிச் செஞ்சுக்கிட்டுத் திரியறான்? இவளையெல்லாம் கூப்பிடலைன்னு யார் அழுதது?!" என வெளிப்படையாகவே புலம்பினார் செல்லம்மா.


"ம்க்கும்.. ஏடாகூடமாய் ஏதாவது செஞ்சால் அவன் எம் மயன். மத்த நேரமெல்லாம் உங்க பேரனா? நல்லா இருக்கே கதை. உங்க பேரன் வந்ததும் என்ன ஏதுன்னு அவனைக் கேளுங்க! எனக்கெல்லாம் எதுவும் தெரியாது. இந்தக் கல்யாணத்தை முடிக்கிறதுக்குள்ளே என்ன என்னத்தையெல்லாம் இழுத்துட்டு வரப் போறானோ?!" எனப் புலம்பினார் தனலெட்சுமி.


"உன் அண்ணன் பெரிய ஆளுதான்டா ராகவ்.. தன் கல்யாணத்திற்கு முன்னாள் மனைவியையே இன்வைட் பண்ணியிருக்கான். ஒருவேளை அவன் மனசுக்குள்ளேயும், இவங்க கூடச் சேரும் எண்ணம் இருக்குமோ?!" என ராகவைப் பார்த்து உற்சாகமாய்க் கேட்டாள் ஆருத்ரா.


"எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும், என் அண்ணன் வந்ததும் கேளு!" என வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னான் ராகவ்.


அதே நேரம்,

"இமயன் தான் இந்தப் பொண்ணை வரச் சொல்லியிருக்கான். அவன் சொன்னால், எதாவது காரணம் இருக்கும். அவன் வந்த பிறகு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். இந்தப் பொண்ணு தங்குறதுக்கு அறை ஏற்பாடு பண்ணுங்க!" எனப் பழனிவேல் சொல்ல,


"என்னதான் நினைச்சுட்டு இருக்கீக? நம்ம புள்ளை இருக்கிற இடத்திலேயே இந்தப் பொண்ணையும் தங்க வைக்கணுமா? மதுரையில் வேற ஹோட்டலே இல்லையா? இந்த இமயன் தான் கூறுகெட்ட தனமா வரச் சொன்னான்னா.. நீங்களும் இங்கணையே தங்கட்டும்ன்னு சொல்றீக? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை!" என வெளிப்படையாகவே கணவனிடம் சொன்னார் வள்ளியம்மை.


"அவனைக் கேட்காமல், இமயன் அழைச்சிருக்கிற விருந்தாளியை வெளியே அனுப்பினால், அது மரியாதையாய் இருக்காது. இதெல்லாம் உனக்குப் புரியாது. முதலில் அந்தப் பொண்ணை உள்ளே கூட்டிட்டு வாங்க! அவங்களுக்கு ஒரு அறையை ஏற்பாடு செஞ்சு கொடுங்க!" எனச் சொல்லாவிட்டு பழனிவேல் சென்றுவிட,


"பொண்ணு வீட்டுக்காரங்களுக்கே பிரச்சனை இல்லாத போது, நாம வெளியே போகச் சொன்னால், அது நல்லா இருக்காது. ராகவ்.. அந்தப் பொண்ணை உள்ளே கூட்டிட்டு வா!" என அண்ணாமலை அவனிடம் சொல்ல, அவளை அழைப்பதற்காய் மகிழுந்தின் பக்கத்தில் சென்று, அவளை உள்ளே அழைக்க,


"ஒன் மினிட் ராகவ்!" என்றபடியே பயணப் பொதிகளை இறக்க,


"நீங்க இமயனோட சேர்வதற்காக வந்தீங்களா? உங்களுக்கு இமயனைப் பிடிக்குமா?!" எனக் கேட்டபடி இடையே வந்தாள் ஆருத்ரா. கவிநயாவோ பதில் சொல்லாமலே பயணப் பொதிகளை இறக்கிவிட்டு, வாகனத்தின் பின் கதவைத் திறந்து,


"தீபக்! வெளியே வாங்க!" என அழைக்க, மகிழுந்தின் பின்னிருக்கையிலிருந்து, கையில் குழந்தையுடன் இறங்கிய தீபக்கைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றிருந்தனர்.


"ஹீ இஸ் தீபக்! மை ஹஸ்பண்ட்!" என அவளே அறிமுகப்படுத்த அதிர்ச்சி இன்னும் பலமடங்கானதென்னவோ நிஜம்.


"ஏன் அத்தை, இந்தப் பொண்ணு, நம்ம இமயனை வேணாம்ன்னு சொல்லிட்டு, வெளிநாடு போயிருச்சுன்னு தானே சொன்னாக? கல்யாணம் ஆகலை தனியாகத்தேன் இருக்குன்னு கேள்வி பட்டேன். இப்போ என்னடான்னா புருஷன் புள்ளையோட வந்து இறங்குது.?!" எனத் தனலெட்சுமி செல்லம்மாவிடம் கேட்ட கேள்வி மட்டுமே அங்கிருந்தவர்களின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேல், ஆருத்ராவிற்குத் தான் பேரதிர்ச்சி. இமயனைத் தேடித்தான் கவிநயா வந்திருப்பாள் என அவள் கனவு கண்டிருக்க, அவளோ கணவன் குழந்தையுடன் வந்திருப்பாள் என யோசிக்கக் கூட இல்லை.அவள் கனவு கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போனதில் ஏமாற்றமாய் நின்றிருந்தாள் ஆருத்ரா.


"ஒருவர் மீதான


ஆற்றாமையை,

கோபத்தை,

பழிதீர்ப்பை,

இன்னொருவர் மீது அன்பாகச் செலுத்தினால்,

அதற்கு ஆயுள் இல்லை.!"

(படித்ததில் பிடித்தது)

அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! அடுத்த யூடி போட்டாச்சு.

நான் மிக மிக நலம். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள் ❤

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். உங்களின் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் 😍

கருத்துத் திரி:

Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-12


கதவைத் திறந்து கொண்டு, அந்த அரங்கத்திற்குள் நுழைந்த அவனைப் பார்த்து, அனைவரும் ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க, மயில்ராவணனோ அதிர்ச்சியாய்ப் பார்த்திருந்தார். அவர் சத்தியமாய் இதை எதிர்பார்த்திருக்கவே இல்லை.


"அர்ஜுன்!" அதிர்வுடன் அவர் இதழ்கள் உச்சரித்தது.


மெதுவாய் நடந்து தன் தந்தையின் பக்கத்தில் வந்த அர்ஜுன், அவரை அணைத்துக் கொள்ள,


"இங்கே ஏன் வந்த? நான் உன்னை வரச் சொல்லவே இல்லையே? எதுக்காக வந்த?!" அவன் செவிக்குள் உறுமினார் அவர்.


"என்னைப் பற்றித் தானே பேசுறீங்க? அப்போ நான் இருக்கிறது தானே சரி..?!" எனப் பதிலுக்கு அவன் கேட்க மயில்ராவணனின் முகம் நொடியில் இருண்டு போனது.



இனி என்ன நடக்கப் போகிறதென்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. இது யாருடைய திட்டம் என்பதும் புரிந்தது. தன் உதவியாளருக்குக் கூடத் தெரியாமல், இரகசியமாய் வைத்திருந்தது எப்படி இமயனுக்குத் தெரிந்திருக்கும்? குழப்பம் அவர் மனதைச் சூழ்ந்திருந்தது. கூட்டத்தின் மத்தியில் வைத்து, அத்தனை எளிதாய் அவரால், யாரிடமும் பேச முடியவில்லை.
தான் யோசிப்பதை தனக்கு முன்னால், அவனுக்குச் சாதகமாய்ச் செயல்படுத்துவதில், இமயன் வெகு சாமர்த்தியமானவன் என்பதை முதன்முறையாய் நேரடியாய் உணர்ந்தார் அவர். இத்தனை நாட்களாய் அவன் மயில்ராவணனுக்குச் சாதகமாய் எத்தனையோ விஷயங்களைச் செய்து முடித்திருக்கிறான். அப்போதெல்லாம் உளமாறப் பாரட்டியவரால், இப்போது முடியவில்லை. அவன் மீதானக் கோபமும் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றதே ஒழிய, குறையும் வழியைக் காணோம்.



அங்கே அமர்ந்திருந்த மற்றவர்கள், அல்ஜுனைத் தான் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராய் நிறுத்த போகிறார்கள் என ஆவலோடு எதிர்பர்த்துக் காத்திருக்க, நடு நாயகமாய் வந்து நின்ற அர்ஜுன் பேசத் துவங்கினான்.



"எல்லாருக்கும் வணக்கம்.. நான் இங்கே பேசறது சரியா இல்லையா எனக்குத் தெரியாது. ஆனால், இப்போ பேசாமல் இருந்தேன்னா, அது சரியாக இருக்காது.!" என அவன் பேசத் துவங்க,



"தம்பி! நீங்க எங்களுக்காக இங்க வந்ததே போதும் தம்பி! உங்களை மேலூர் தொகுதியில் நிறுத்துறது எங்களுக்குச் சந்தோஷம் தான் தம்பி!"


"அதானே.. ஐயா ஒருவார்த்தை சொன்னால் போதும், உங்களை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள நாங்க தயார்.!"



"சட்டுன்னு சம்மதத்தைச் சொல்லுங்க தம்பி! அறிக்கையை வெளியிட்டுடுவோம்!"


"உங்க அப்பாவிற்குப் பிறகு நீங்க வரணும்ங்கிறது தான் எங்க ஆசை..!"


என அவனைப் பேசவிடாமல், இடையிட்டு ஆளுக்கொன்று பேச, தான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் திணறினான் அர்ஜுன். அதோடு இவர்கள் பேசுவதெல்லாம் உண்மை அல்ல, தன் தகப்பனின் பணமும், பதவியும் தான் இவர்களைப் பேச வைத்திருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது.



"உங்களோட விருப்பம் எனக்குப் புரியுது. ஆனால் எனக்கு விருப்பம் இருக்கணுமே? அரசியலின் அரிச்சுவடி கூட அறியாத நான், எப்படி இதற்குள் வர முடியும்?" என அவன் கேட்க அந்தச் சூழல் முழுவதிலும் அசாத்தியமான நிசப்தம். நிசப்தம் மறு நொடியே கலைந்து போக,



"என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க? அப்போ ஐயா எடுத்த முடிவு உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்களா?"



"உங்க கிட்டே சொல்லாமல், எப்படி இந்த முடிவை இங்கே வரை கொண்டு வந்திருப்பார்?"



"அவசர ஆலோசனைக் கூட்டம் கூடும் வரை உங்களுக்குத் தெரியாதா?!" என மீண்டும், ஆளுக்கொன்றாய் கேட்க,



"கொஞ்சம் அமைதியாய் இருங்க! என் பையன் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கான். என்ன நடந்தாலும், மேலூர் தொகுதியில் அர்ஜுன் நிற்கப் போறது உறுதி!" என எழுந்து நின்று மயில்ராவணன் உறுதியளித்த அதே நேரம்,


"இல்லை!" எனப் பகிரங்கமாய் மறுத்திருந்தான் அர்ஜுன்.


"நான் இந்த அரசியலுக்குள்ளே வர்ரதை விரும்பலை. என்னோட பாதை வேறு.. என்னோட பயணமும் வேறு. இது எனக்கான பாதை இல்லை. அதற்காக அரசியலுக்கும் எனக்கும், சம்மந்தமே இல்லைன்னு நான் சொல்லலை. ஏன்னா, என் அப்பா தமிழ்நாட்டோட முதலமைச்சர். முதலமைச்சரின் மகன்ங்கிற முறையில், நான் நிறையச் சலுகைகளை அனுபவிச்சுட்டேன்.அதுவே போதும்ன்னு நினைக்கிறேன். நான் நினைச்சிருந்தால், நான் என் சொந்த உழைப்பில் தான் முன்னேறி வந்தேன்னு உங்க கிட்டே பொய் சொல்லலாம். ஆனால் பிறந்த நாளிலிருந்து, இப்போ வரை என் அப்பாவோட உழைப்பை ஏதோவொரு விதத்தில் அனுபவிச்சுட்டு தான் இருக்கேன்.!" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,


"அர்ஜுன்! போதும்..! உனக்கு விருப்பமில்லைன்னு நீ சொல்லிட்ட தானே? முதலில் இங்கிருந்து வெளியே போ!" என இடையிட்டார் மயில்ராவணன்.



"இருங்கப்பா! அவங்களுக்கும் உண்மை தெரியணும் தானே?" என அவன் சொல்ல, பதற்றம் தாங்கிய முகத்துடன், மகனைப் பார்த்தார் மயில்ராவணன்.


அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. தன் உதிரத்தில் உதித்த மகனையே தனக்கு எதிராய் திருப்பிய இமயனைக் கொன்று போட்டுவிடும் அளவிற்கு ஆத்திரமும் வந்தது. ஆனால், அவர் நின்றிருந்த சூழ்நிலையில் அவரால் எதுவும் பேச முடியாதே! அவர் அவசரப்பட்டு எதையாவது பேசி வைத்தால், நீல சாயம் வெளுத்துப் போன நரியின் கதையாய் மாறிவிடுமே.. என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாய் நின்றார் அவர்.



"என் அப்பாவின் விருப்பம், நான் அரசியலுக்கு வர்ரது தான்னு எனக்குத் தெரியும். அதற்காக என்னைத் தேர்தலில் நிறுத்தும் முடிவை அவர் எடுத்திருப்பார்ன்னு எனக்குத் தெரியாது. மகன் எனும் முறையில், அவர் நான் அரசியலுக்கு வரணும்ன்னு ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை.!"


எனத் தெள்ளத் தெளிவாய் அனைவரின் முன்னிலையிலும் சொல்லிவிட்டான் அவன். சற்று முன் தான், என் மகனை அரசியலுக்குள் இழுத்து வாரிசு அரசியலாய் மாற்றுவதில், எனக்கு விருப்பமில்லை என மயில்ராவணன் சொல்லியிருக்க, அவர் மகனே அவருக்கு எதிராய்ப் பேசியது, அங்கே இருந்தவர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.



"என்னதான்ய்யா இங்கே நடக்குது? இவர் ஒண்ணு சொல்றாரு.. இவர் பையன் இன்னொன்னு சொல்றான். அப்போ மகனை அரசியலுக்குக் கொண்டு வர்ரது தான் அவர் திட்டமா?"


"அதானே.. நம்மக்கிட்டே சொன்னதெல்லாம் பொய்யா?!"


"அப்பன் ஒண்ணு சொன்னால், மகன் வேற ஒண்ணு சொல்றான். இப்படி ஆளுக்கொன்னு மாத்தி மாத்தி பேசினாய்ங்கன்னா எவனை நம்புறது?"


"எனக்கென்னவோ, இதில் ஏதோ இருக்குன்னு தோணுது!"


"பத்து வருஷமா பதவியில் உட்கார்ந்து சம்பாதிச்சது போதாதுன்னு, மயனையும் உள்ளே இழுக்கப் பார்க்கிறாராக்கும்? அரசியலில் 'ஆ' னா கூடத் தெரியாத பொடிப்பயலை எல்லாம் இதுக்குள்ளே இழுத்து நிறுத்த இது என்ன விளையாட்டா?"


"அவனவன், அவன் குடும்பத்திற்குக் காசு சேர்க்கத்தானே பார்ப்பான். நமக்கு நல்லது செய்வாய்ங்கன்னு நாம நினைக்கிறது முட்டாள்தனந்தேன்.!"


"யோவ்! நீங்க இப்படியெல்லாம் பேசுறது, மட்டும் அந்தாளுக்குத் தெரிஞ்சுது, சோலியை முடிச்சு விட்டுருவாரு. அந்தாளு ஆட்சியில் இருக்கப் போய்த்தான் நாமளும் நாலு காசு சம்பாதிச்சுக்கிறோம். அவர் சொல்றதுக்குத் தலையை ஆட்டினோமா.. இருக்கிறவரை சம்பாதிச்சோமான்னு போய்ட்டே இருக்கணும்!" என அவர்களுக்குள்ளேயே பேசி, பின் அமைதியாய் அனைவரும் அமர்ந்திருக்க,


"எனக்கு இந்த அரசியலுக்குள்ளே வர்ரதுக்கு விருப்பம் இல்லைன்னாலும், என்னோட உற்ற நண்பன் இமயனை அந்தத் தொகுதியில் நிறுத்துறது தான் சரியாக இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன். பத்து வருஷமாய் அப்பா கூடவே உறுதுணையாய் இருந்ததில், இமயனும் ஒருத்தன். அரசியலுக்குள் வர ஆசைப்படுற, அதில் விருப்பம் இருக்கிற இமயன் தான் அந்தத் தொகுதிக்கு சரியான தேர்வுன்னு நான் நினைக்கிறேன்.!"

எனச் சொன்னவன் நேராக இமயனைச் சென்று அணைத்திருந்தான். அதன் பின் அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பியிருக்க, முகத்தில் கடுகடுப்பைச் சுமந்தபடி மகனைப் பார்த்திருந்தார் மயில்ராவணன்.



அவர் தீட்டிய திட்டம் மொத்தமும் கண் முன்னே தவிடுபொடியாவதைப் பார்த்து, கையாலாகத் தனத்துடன் அமர்ந்திருந்தார். அவர் நினைத்ததற்கு எதிராய் அனைத்தும் நடந்துவிட்டதே? என்ற கோபமும் அவருக்குள் இருந்தது. தன் மகன் அர்ஜுனுக்கு அரசியலில் விருப்பமில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதில் விருப்பமில்லாத காரணத்தால் தான், அவன் தனக்கென ஒரு தொழிலை வடிவமைத்துக் கொண்டான் என்பதும் அவருக்குத் தெரியும்.


ஆனால் மயில்ராவணனின் எண்ணம் வேறு விதமாய் இருந்தது. அவர் தன் கட்சியைத் தாங்கி நிறுத்த, தனக்குப் பின் ஒரு வாரிசு வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அந்த வாரிசு, யாரோவாக இருப்பதை விட, தன் சொந்த வாரிசாக இருப்பதைத் தான் அவர் விரும்பினார். ஆனால், அவரின் திட்டத்தில் திருப்பம் எற்படும் என அவரே எதிர்பார்க்கவில்லை.
முதலில், தன் மகனைத் தான் மேலூர் தொகுதியில் நிறுத்துவதாய் அறிவித்துவிட்டு, பின் அவனிடம் பேசிக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தார். அர்ஜுனை நிறுத்துவதாய்க் கூட்டத்தில் முடிவு செய்த பின், அர்ஜுனால் மறுப்பு சொல்ல முடியாது, தன் ஆசைப்படியே அவன் அரசியலுக்கு வந்துவிடுவான், என அவர் கனவு கண்டிருக்க, அதைக் கலைக்கும்படி, தன் மகனிடம், தனக்கு முன்னே பேசி, காரியம் சாதித்துக் கொண்ட இமயனை நினைத்துக் கோபம் கொந்தளித்தது அவருக்குள். பற்றாக்குறைக்கு, இமயனைத் தான் மேலூரில் நிறுத்துவதற்கு யோசித்திருந்தேன் என அவர் அனைவரின் முன்னிலையில் சொல்லித் தொலைத்துவிட்டதால், இனி அவனைத் தேர்தலில் நிறுத்துவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.



"மக்கும்..!" எனத் தொண்டையைச் செருமிக் கொண்டவர்,



"நான் ஏற்கனவே சொன்னது தான். என் பையனை இதுக்குள்ளே இழுக்க விருப்பமில்லைங்கிறது தான் உண்மை. அவன் என்னைப் புரிஞ்சுக்காமல், தன் நண்பனுக்காக ஆயிரம் பேசலாம். உண்மை என்னன்னு எனக்குத் தெரியும். இப்போ நீங்க தான் சொல்லணும். மேலூர் தொகுதியில் யாரை நிறுத்தணும்ன்னு நீங்க தான் சொல்லணும்!" தன் மகன் பேசியதை அப்படியே இல்லையெனச் சாதித்து, மாற்றிப் பேசினார் மயில்ராவணன்.



"நீங்க சொன்னது தான் இமயன் தான் உங்க விருப்பம் என்றால், அது தான் எங்க விருப்பமும்.!"



"ஆமா.. ஆமா.. நீங்க யாரைச் சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம் தான்.!" என்ற குரல்களின் நடுவே,



"இதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லையே?!" பேருக்காகக் கேட்டார் அவர்.



அனைவரும் ஏகமனதாய் இமயனையே தேர்ந்தெடுக்க, அனைவருக்கும், எழுந்து நின்று தன் நன்றியைத் தெரிவித்தான் இமயன். இறுதியாய் இமயனை மேலூர் தொகுதியில் நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. தனக்குப் பிடிக்காமலே, இமயனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அவனைக் கைக்குலுக்கி வாழ்த்தினார் அவர்.


"வாழ்த்துக்கள் இமயன்! உன்னோட புதிய துவக்கத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்!" என அவனுக்குத் தன் வாழ்த்தை வேண்டா வெறுப்பாய் தெரிவித்தவர்,



"கட்சி உறுப்பினர்கள் உன் பேரைச் சொல்லிட்டா மட்டும் போதுமா? தேர்தலில் ஜெய்க்கணும் தம்பி! ஆட்சியே என் கையில் இருக்கு. ஒரு தொகுதி போனால் போகட்டும்ன்னு நினைச்சேன்னா.. உன் நிலமையை யோசிச்சு பாரு. டெப்பாஸிட் இழந்துட்டு நிக்கப் போற பாரு..!" என அவன் செவிக்குள் இரகசியமாய் மிரட்டினார் மயில்ராவணன்.


"அதையும் பார்த்துடுவோம் மாமா! முதலமைச்சர் நீங்களே என் பக்கம் இருக்கும் போது, நான் எதுக்காகப் பயப்படணும் மாமா? உங்க மருமகனைத் தோற்க விட்டுடுவீங்களா என்ன?" என அவன் துளியும் பயமில்லாமல் சொல்ல, மயில்ராவணனின் புருவம் யோசனையாய்ச் சுருங்கியது.


'இவன் என்ன தைரியத்தில் இப்படிப் பேசுகிறான்?" என்ற யோசனை அவருக்குள் ஓடியது.



"நீ என் மகனை ஏமாத்தி காரியத்தைச் சாதிச்சுருக்கலாம் இமயன்! ஆனால் தேர்தலில் ஜெய்க்க உன்னால் முடியாது. பார்த்துடுவோம் நீயா.. நானானன்னு..!" என அவர் சொல்ல,


"பார்த்துடுவோம் மாமா! எப்படியும் நான் தான் ஜெய்ப்பேன்.! அதை நீங்க பார்ப்பீங்க!"


எனச் சொன்னவன், அழுத்தமான நடையுடன் வெளியேறியிருக்க, அவன் சொன்னதன் சாராம்சம் புரியாமல், அவன் புறமுதுகை வெறித்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.


*******


இங்கே இமயனின் வரவிற்காய் காத்திருந்தாள் ஆருத்ரா. அவள் மனதிற்குள் நிறையக் குழப்பங்கள், கேள்விகள் இருந்தன. அவளுக்குள் இருந்த கேள்விகளுக்கான விடை, அவனிடம் மட்டுமே கிடைக்குமென்பதால், அவளுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அவனைப் பற்றி முழுதாய்த் தெரியாமல், இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் அவள் மனம் ஒப்பவில்லை. பற்றாக்குறைக்கு இமயவரம்பனின் முன்னாள் மனைவி கணவனோடு வந்து நின்றது வேறு அவளுக்குள் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவளுக்கு எல்லாம் தெரிய வேண்டும். அவன் ஆதி அந்தம் முழுக்க அவளுக்குத் தெரிய வேண்டும். என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள் ஆருத்ரா.


"ஆரு! இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இங்கேயே உட்கார்ந்திருக்கப் போற? அண்ணன் வர லேட் ஆகும். நீ போய்த் தூங்கு.!" என ராகவ் சொல்ல,


"அப்போ உன் அண்ணன் லைஃபில் என்ன நடந்ததுன்னு நீ சொல்லு. நான் போய்த் தூங்கறேன்.!" என அவள் சொல்ல,


"ஆரு.. நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. என்னால் சொல்ல முடியாது. நான் சொன்னால் அது நன்றாகவும் இருக்காது. இது அவனோட பர்ஸ்னல்..!" என அவன் சொல்வதன் நியாயம் அவளுக்குப் புரிந்தது. ஒருவரின் அனுமதி இல்லாமல், அவரின் இரகசியங்களை மற்றவரின் கடைபரப்பக் கூடாதென்ற அவனின் நாகரிகமும் இவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனாலும், அவளால் அவன் சொன்னதைக் கேட்க முடியவில்லை.


"பேசாமல் நான் போய்க் கவிநயா கிட்டே கேட்கவா ராகவ்? நீயும் சொல்ல மாட்டே! உன் அண்ணனும் எப்போ வருவான்னு தெரியலை. இப்போ நான் என்னடா செய்யணும்? உன் அண்ணன் நல்லவனாவே இருக்கட்டும். ஆனால், என்னோட சந்தேகங்களை க்ளியர் பண்ணுற பொறுப்பு யாரோடது? இப்படியொரு குழப்பமான மனநிலையில், நான் இந்தக் கல்யாணத்தை எப்படி ஏத்துக்கிறது? என் நிலையில் நீ இருந்திருந்தால், என்ன செஞ்சுருப்ப ராகவ்?!" என அவனைப் பதில் கேள்வி கேட்டாள் ஆருத்ரா.


தோழியின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாய் நின்றான் ராகவ். ஆருத்ராவின் நிலையிலிருந்து பார்த்தால், அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சரியானது தான். இமயனின் முந்திய வாழ்க்கையைப் பற்றிய தெளிவை அவளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தான் இருக்கிறது என்பதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால், இது குறித்த தெளிவை அவனால் கொடுக்க முடியுமா? தான் சொல்வது சரியாக இருக்குமா என்பது தான் அவனுக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கவிநயாவிற்கும், இமயனுக்கும் ஏதோ ஒத்துப் போகவில்லை பிரிந்துவிட்டார்கள் என்பது வரை மட்டுமே அவனுக்குத் தெரியும். அரைகுறையாய் தெரிந்த ஒன்றைக் குறித்து ஏதாவது பேசப் போய், ஏடாகூடமாய் ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.


"பதில் சொல்லு ராகவ்! இப்போ நான் என்ன செய்றது?!" என அவள் மீண்டும் கேட்க,



"நீ கேட்கிற கேள்வி நியாமானது தான் ஆரு. ஆனால் எனக்குத் தான் பதில் தெரியலை. அதுக்காக இப்படி இமயன் வரும் வரை உட்கார்ந்துட்டே இருக்கப் போறியா?" என அவன் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம், தோட்டத்தில் தன் இரவு நேர, நடை பயிற்சியை முடித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தாள் கவிநயா.



"ஹாய்.. இன்னும் தூங்கப் போகலையா நீங்க?" என இயல்யாகப் பேசினாள்.


"இல்லை! நீங்க.. இன்னும் தூங்கலையா? குழந்தையைத் தனியாகவா விட்டுப் போனீங்க?!" எனக் கேட்டாள் ஆருத்ரா.


"தீபக் இருக்கானே அவன் பார்த்துப்பான்.!" எனச் சொன்னவள், லேசாய் தயங்கியபடியே,


"ஆருத்ரா, இந்தக் கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?" என நேரடியாகவே கேட்டிருந்தாள் கவிநயா.



"உண்மையைச் சொல்லணும்ன்னா யெஸ்.. ரெண்டாந்தாரமாய் ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க, எப்படி ஒரு பொண்ணுக்கு பிடிக்கும்.? எனக்குச் சுத்தமாய் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. !" என நேரடியாய் ஆருத்ரா சொல்ல,


"ஆருத்ரா! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! இமயன் ரொம்ப நல்லவர். என் அப்பா செஞ்ச சதியால் மட்டும் தான் எங்கக் கல்யாணம் நடந்துச்சு. பட், கல்யாணத்தில், எனக்கும் இமயனுக்கும் விருப்பமே இல்லை. கல்யாணம் நடந்த சில மாதங்களிலேயே நாங்க பிரிஞ்சுட்டோம். அந்த முடிவு எங்களுக்குக் கஷ்டமா இருக்கலை. எங்களால் சேர்ந்து வாழ முடியாதுங்கிறதை உணர்ந்து நாங்க பிரிஞ்ச பிறகு தான் எங்களால் மூச்சு விடவே முடிஞ்சது." எனக் கவிநயா சொல்ல,


"உங்களுக்கு மூச்சு முட்டின மாதிரி, நானும் மூச்சு முட்டி சாகணும்ன்னு நினைக்கிறீங்களா?!" பட்டென ஆருத்ரா கேட்டுவிட, சட்டெனக் கவிநயாவின் முகம் சுருங்கியது.


"ஆரு!" என ராகவ் அதட்டியதையும் பொருட்படுத்தாது,


"நான் உங்க கிட்டே நற்சான்றிதழ் ஒண்ணும் கேட்கலை. இமயன் நல்லவனாக இருந்திருந்தால், நீங்களே அப்படிப்பட்ட நல்லவர் கூடச் சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே..? ஆளாளுக்கு, அவனக்கே சப்போர்ட் பண்ணுறீங்க? உங்களைப் பொருத்தவரை அவன் தியாகியாய் இருக்கலாம். வேணும்ன்னா போய்ச் சிலை வைங்க! அதுக்காக என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க! எனக்குக் விருப்பு வெறுப்புகள் இருக்கு. நான் ஒண்ணும் ப்ரோக்ராம் பண்ணின பொம்மை இல்லை!" சற்றும் யோசிக்காமல், கோபமாய்ப் பேசியிருந்தாள் ஆருத்ரா.


அவள் பேசியதன் வீரியம் தாங்க முடியாமல், கவிநயா முகம் வாடி கண்களில் நீர் ததும்பி நிற்க, ராகவிற்கே அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.


"ஆரு! ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாய் இரேன்.. என்ன பேசுறோம்ன்னு தெரியாமலே பேசுற!" எனத் தன் தோழியை உரிமையாய் கண்டித்த ராகவ்,


"ஸாரி.. மன்னிச்சுடுங்க! அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்!" எனக் கவிநயாவிடம் சொன்னான்.


"இருக்கட்டும் ராகவ்! நான் இதையெல்லாம் எதிர்பார்த்து தானே வந்தேன்.ஆருத்ராவுடைய மனநிலை எனக்குப் புரியுது. முதலில் இமயன் கேட்டப்போ கல்யாணத்திற்கு வரலைன்னு தான் சொன்னேன். ஆனால், இமயனோட வாழ்க்கையை நான் தான் கெடுத்துட்டேனோங்கிற கில்ட் எனக்குள்ளே இருக்கு. அதுக்காகத் தான் நான் இங்கே வந்தேன். இமயனுக்கு நல்ல வாழ்க்கை அமையறதைப் பார்த்துட்டால், என் மனசு சமாதானமாகிடுமேங்கிற காரணத்திற்காகத்தான் வந்தேன். ஆனால் நான் செஞ்ச தப்புக்கு எனக்கு இது தேவை தான்!" எனச் சொல்லிவிட்டுக் கவிநயா தன் அறையை நோக்கிச் சென்றுவிட,


"ஏன் ஆரு இப்படிப் பண்ணுற.? அவங்களை ரொம்பவே ஹர்ட் பண்ணிட்ட!" எனப் பொறுமையாய்ச் சொன்னான் ராகவ்.


"நான் செஞ்சது தான் உனக்குத் தப்பா தெரியுதா டா? உன் அண்ணன் செய்றதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாது. கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன பிறகும், உன் அண்ணன் கட்டாயப்படுத்துறானே.. அது பேர் ஹர்ட் பண்ணுறது இல்லையா? நான் என் மனசு ஆற்றாமையில் ரெண்டு வார்த்தை பேசிட்டால், அது ஹர்ட் பண்ணுறதா டா?!"

என அவள் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம், தன் கருப்பு நிற வாகனத்தில் வந்து இறங்கினான் இமயவரம்பன். அந்த நவீன ரக மகிழுந்து அமைதியாய் அதற்குரிய இடத்தில் நிற்க, கதவைத் திறந்து அவன் இறங்கி நடந்து வர, ஆருத்ராவின் கவனமும், ராகவின் கவனமும் இமயன் மீது திரும்பியது.


"நீ என்கிட்டே எதுவுமே சொல்ல வேண்டாம் ராகவ்.. நான் உன் அண்ணன்கிட்டேயே கேட்டுக்கிறேன்.!" என அவள் இமயனை நோக்கி நடக்க,


"ஏய் நில்லு!" என்ற குரல் கேட்டுப் பின்னால் திரும்பினாள் அவள்.


"புள்ளையே துக்க வீட்டுக்குப் போய்ட்டு இப்பத்தேன் வாரான். நீ என்னத்துக்கு அவன் குறுக்கே போற? போ.. அறைக்குள்ளே போய்த் தூங்கற வழியைப் பாரு!" எனச் சொன்னபடி செல்லம்மா தான் நின்றிருந்தார்.


"அப்பத்தா! அவங்க அண்ணன்கிட்டே பேசணுமாம்!" என ராகவ் இடையிட,


"பேசட்டும் டா! தாராளமாய் விடிய விடிய பேசட்டும். கல்யாணத்துக்குப் பிறகு என்னத்தை வேணும்ன்னாலும் பேசிக்கச் சொல்லு.!" எனச் சொன்னவர்,


"ராசா.. நீ பின்னாலே இருக்கிற அறையில் குளிச்சுட்டு வா ராசா!" என ஆருத்ராவிடம் துவங்கி இமயனிடம் முடித்தார். அவளோ கோபத்தில் முகத்தைத் தூக்கியபடி நின்றிருக்க,


"மொட்டை மாடியில் வெய்ட் பண்ணு! குளிச்சுட்டு வர்ரேன்!" எனச் சொல்லிவிட்டு அவன் நகர்ந்துவிட, யாரிடம் சொன்னான் எனப் புரியாமல், அவள் குழம்பி நிற்க,


"உன்கிட்டே தான் ஆரா சொன்னேன். மாடியில் வெய்ட் பண்ணு வர்ரேன்!" எனத் திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டுச் சென்றான். அவன் தன்னைப் பார்த்தப் பார்வையில் என்ன இருந்தது எனப் புரியாமல் நின்றிருந்தாள் ஆருத்ரா.


"போதுமா? அண்ணனே உன்கிட்டே பேச வரச் சொல்லிட்டார். உனக்கு இருக்கிற எல்லாச் சந்தேகங்களையும் கேட்டுக்கோ! உன்னை மட்டுமே யோசிச்சு சுத்தி இருக்கிறவங்களை ஹர்ட் பண்ணாதே!" எனக் கொஞ்சம் கோபமாகச் சொல்லிவிட்டு, ராகவ் உள்ளே சென்றுவிட,

யோசனையுடனே மாடியை நோக்கிப் போனாள் அவள்.
மொட்டை மாடியின் சுற்றுத் திண்டு முழுவதும் செடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, கலவையான பூக்களின் நறுமணம் அவள் நாசியை நிரடியது. மொட்டை மாடி கூட,சுத்தமாய் அழகாய் பராமரிக்கப் பட்டிருந்தது. மென்மையான தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்க, உச்சியில் தகித்துக் கொண்டிருந்த நிலவொளி, இதமான மனநிலையைத் தந்தது.


'இத்தனை நாளாய் எப்படி மாடியைக் கவனிக்காமல் விட்டோம்?' யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
மொட்டை மாடியில் இங்கும், அங்குமாய் நடந்தபடி அவள் அவனுக்காகக் காத்திருக்க, மனதிற்குள்ளோ ஒருவித பதற்றமும் படபடப்பும் அவளை முதன்முறையாய் ஆட்கொண்டிருந்தது.

'அவனிடம் என்ன கேட்பது?'

'எப்படிக் கேட்பது?'

'நேரடியாய் கேட்டால் பதில் சொல்வானா?'

எனத் தனக்குள் யோசித்தபடியே அவள் நடந்து கொண்டிருக்க, அவன் படிகளில் ஏறி வந்ததையோ, அவள் பின்னால் வந்து நின்றதையோ கவனிக்க மறந்து போனாள் பெண். அவள் கவனிக்காமல் முன்னோக்கி நடக்க,


"ம்க்கும்" அவள் கவனத்தைத் தன் மீது திருப்புவதற்காக, தொண்டையை அவன் லேசாய் செரும, திடுக்கிட்டு பயந்து, பின் சுதாரித்து,


"லூசு.. பேர் சொல்லி கூப்பிட வேண்டியது தானே? பயந்துட்டேன்.!" எனத் தன்னை மீறி, அவனிடம் கத்தியிருந்தாள். தன்னை அறியாமல், அவனைத் திட்டியதை நினைத்து அவள் திருதிருவென விழித்தபடி, அவள் நின்றிருக்க, அவளைப் பார்த்து இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன். ஆராவின் இமயவரம்பன். அவன் முதன்முறையாய் தன் முன் இதழ் விரித்துச் சிரிப்பதை அதிசயமாய் பார்த்திருந்தாள் ஆருத்ரா.

"விட்டுச் செல்வதற்கு



உன்னிடம் காரணங்கள் அநேகம் உண்டு.

அவை எவற்றையும் கேட்கப் போவதில்லை நான்..


உடனிருப்பதற்கு..


ஒருகாரணம் கூட இல்லாத போது..


இல்லாமல் போவதற்கு எத்தனை காரணம் இருந்தென்ன..?!"


(படித்ததில் பிடித்தது.)

அன்பாகும்..?
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்.. அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

உங்களின் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.😍

கருத்துத் திரி:
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-13
1000013244.jpg
தன் பின் வந்து நின்று, அவன் தொண்டையைச் செருமியதில், பயந்து போய் அவனைத் திட்டியிருந்தாள் ஆருத்ரா.

தன்னையறியாமல் திட்டிவிட்டு, பின் யோசித்து, தயக்கத்துடன் நின்றிருந்தாள் அவள். அவளுக்கு எதிரே நின்றிருந்த அவனோ, அவளையே பார்த்திருந்தான். அவனின் வன்மையான உதடுகளில், புன்னைகை நிறைந்திருந்தது. கண்களோ அவளில் மட்டும் மையம் கொண்டிருந்தது. அவன் பார்வையின் வீரியம் தாங்காது, பார்வையை வேறு பக்கமாய்த் திருப்பியவள்,

"ஸா.. ஸாரி..! வேணும்ன்னு நான் பண்ணலை. நீங்க பின்னாடி வந்து நிற்பீங்கன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை. நிஜமாவே பயந்துட்டேன்.!" மெல்லிய குரலில் அவனைப் பார்க்காமலே சொன்னாள் ஆருத்ரா.


"எனக்குத் தெரியும் ஆரா.. நீ வேணும்ன்னு செய்யலைன்னு எனக்குத் தெரியும்!" என அவன் சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றாள் அவள்.
நிமிடங்கள் நொடிகளாகிக் கடந்து கொண்டிருந்தது. அவனிடம் நிறையக் கேட்க வேண்டுமென நினைத்திருந்தவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. என்ன கேட்க? என்ன சொல்ல? எதுவும் புரியாமல் அமைதியாய் நின்றாள். அவனிடம் பேசுவதற்குக் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. அவள் இதுவரை இப்படி உணர்ந்ததில்லை. யாராக இருந்தாலும், நேரடியாய் பேசிவிடும் ரகம் அவள். முதன் முறையாய் ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றம் அவளிடம். காரணம் என்னவென்று தெரியவில்லை.


"என்ன கேட்கணும் ஆரா..? பேசணும்ன்னு சொல்லிட்டு, இப்போ வரை அமைதியாய் நின்றால் என்ன அர்த்தம்?!" அவள் மௌனத்தை உடைக்க முயற்சி செய்தான் இமயவரம்பன். குளிர்தனப் பெட்டிக்குள் பலநாள் சேர்ந்திருக்கும் பனிக்கட்டியாய் அவள் மௌனம் கரைய மறுத்தது.


"ஆரா..!" மீண்டும் அவன் குரல் கதகதப்பான வெப்பமாய் மாறி அவள் மௌனம் உடைக்க முயற்சி செய்தது.


"அப்போ நான் போகட்டுமா? கேட்க எதுவும் இல்லை தானே?" என்ற கேள்வி இறுதியாய் அவளை அவனை நோக்கித் திருப்பியது.


"நான் என்ன கேட்பேன்னு தெரியாதா? நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது உன் இஷ்டம் தான். நான் அதில் எதுவும் சொல்ல முடியாது. உன் பணத்திற்கும், அந்தஸ்திற்கும் எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க! ஆனால், என்னை எதற்காக உன் வாழ்க்கைக்குள்ளே இழுக்கிறே? அதுவும் விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும்.?" கோபத்தை வெளிக்காட்டாமல், கொஞ்சம் நிதானமாகவே பேசினாள் ஆருத்ரா. கண்டிப்பாகப் பதில் சொல்லியே தீர வேண்டுமென்கிற அழுத்தம் அவள் குரலில் இருந்தது.


"ஏன்னா.. இந்த ஆருத்ரா தான் என் மனசுக்குப் பிடிச்சவ. அது மட்டும் தான் காரணம்.!" என அவன் இலகுவாய் சொல்லவும், ஆருத்ராவின் முகம் ஏமாற்றமாய்ச் சுருங்கியது.


"நான் உண்மையைச் சொல்லணும்ன்னு நீ நினைக்கிறியா? இல்லை.. நீ எதிர்பார்க்கிற பதிலை சொல்லணும்ன்னு நினைக்கிறியா ஆரா?" அவள் முகத்தை வைத்தே மனதைக் கணித்துக் கேட்டான் இமயன்.


"உனக்குப் பிடிச்சிருக்கு அப்படிங்கிற ஒரே காரணத்திற்காக எனக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்க மாட்டியா? எனக்குப் பிடிக்கலைன்னாலும், நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படித்தானே?!" இப்போது அவள் குரலில் லேசாய் கோபத்தின் சாயம்.


"என்னை உனக்குப் பிடிக்கும் ஆரா.. இப்போ என்னதான் என்னைப் பிடிக்கலைன்னு சொன்னாலும், உன் மனசுக்கு என்னைப் பிடிக்கும்!" வெகு நிதானமாய் மெல்லிய குரலில் சொன்னான் அவன்.


"டையலாக் ரொம்ப நல்லா இருக்கு. அவ்வளவு தானா? இன்னும் பேசுறதுக்கு வேற ஏதாவது இருக்கா? சினிமா டையலாக்கெல்லாம், அந்த நேரத்திற்குக் கைத்தட்டி சிரிக்க மட்டும் தான். வாழ்க்கைக்கு உதவாது.!" எனச் சொன்னபடி கோபமாய் அவனைப் பார்த்தவள்,


"இந்தக் கல்யாணமெல்லாம் வேணாம். தயவு செய்து இதை நிறுத்திடு. நீயும் நிம்மதியாய் இருக்கலாம். நானும் நிம்மதியாய் இருப்பேன்.!" என நிறுத்தி அவனைப் பார்த்தாள்.


"நீ இல்லாமல், நான் எப்படிச் சந்தோஷமாய் இருக்க முடியும் ஆரா?!" என நிச்சலனமில்லா முகத்துடன் அவன் கேட்க, அவளுக்கோ, அவனைப் பார்க்க கோபம், கோபமாய் வந்தது.


"போதும் இமயன்! என்னைக் கல்யாணம் பண்ணினால் தான் நீ சந்தோஷமா இருப்பியா? அப்போ முதல் கல்யாணம் ஏன் பண்ணின? நீ மட்டும் என் வாழ்க்கையில் இல்லாமல் போனால் போதும், நான் ரொம்பச் சந்தோஷமாய் இருப்பேன். நீ வந்த பிறகு தான் என் வாழ்க்கை நிம்மதியே இல்லாமல் போச்சு. கட்சி மாறுவது போல, உனக்கு ஆளை மாத்தறது வழக்கமா இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படி இல்லை. முதல் மனைவி பிடிக்கலைன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்குவ.. நாளைக்கே நான் பிடிக்காமல் போய்ட்டா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவியா?" கோப மிகுதியில், அவளிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவன் கோபத்திற்குத் தூபம் போட்டது.


"ஆரா.. போதும் நிறுத்து!" கோபத்தில் இருந்த அவள் செவிகளில், அவன் சொன்ன எதுவுமே விழவில்லை. அவளை அவன் சொன்னது எதையுமே கேட்காமல், தன்போக்கில் பேசிக் கொண்டே இருக்க,


"ஆருத்ரா!" என்ற அவனின் விளிப்பில் அதிர்ந்து, தன் பேச்சை நிறுத்திவிட்டு அசையாமல் நின்றாள்.


"என்னன்னு யோசிச்சு பேச மாட்டியா? என்னைப் பார்த்தால், உனக்கு எப்படித் தெரியுது? தினமும் ஒருத்தி கூடக் குடும்பம் நடத்தறவன் மாதிரி தெரியுதா? இன்னொரு முறை இப்படியொரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்துச்சு.. நானே உன்னைக் கொன்னுடுவேன்.!"


"நான் அப்படித்தான் பேசுவேன். நீ செய்யாததையா நான் பேசிட்டேன்.? நீ அப்படித்தானே இருக்க?" குரல் தடுமாறக் கேட்டாள் அவள்.


"நான் அப்படித்தான்னு நீ வந்து பார்த்தியா? இல்லை ஏதாவது ஆதாரம் வச்சிருக்கியா?!" என அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றாள் அவள்.


"உன்னால் பதில் பேச முடியலை இல்லையா? உனக்கே தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி, நீயா உனக்குத் தோணுறதை எல்லாம் பேசுவியா? உன்னை என்னால் புரிஞ்சுக்க முடியுது ஆரா. உன் கோபம் எனக்குப் புரியுது. ஆனால், முதலில் உனக்கு என் மேல் இருக்கிற கோபம், இது ரெண்டாம் கல்யாணம்ங்கிற எல்லா விஷயத்தையும் தள்ளி வச்சிட்டு, நான் சொல்றதை உண்மைன்னு நம்புறதாக இருந்தால் சொல்லு. என்ன நடந்ததுன்னு எல்லாத்தையும் நான் சொல்லத் தயார். உனக்குச் சாதகமான பதிலை மட்டும் தான் சொல்லணும்ன்னு நீ நினைத்தால் அதுக்கு நான் தயாராய் இல்லை.!" கொஞ்சம் அழுத்தமான தொனியில் அவன் சொல்ல, யோசனையாய் புருவம் சுருக்கியபடி நின்றாள் அவள்.

சற்றுமுன் அவளுடன் பேச வேண்டுமென்பதற்காய், ஆசையுடன் வந்தவனைக் கோபப்படுத்திவிட்டாளே.. அவன் இழுத்துப் பிடித்திருந்த இலகு மனநிலையை மாற்றி, அழுத்தமாய் அவனை நிற்க வைத்துவிட்டாள். அவனுமே அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்தான். ஆனால் அவனால் முடியவில்லை. தான் சொல்வதை உண்மையென நம்பாத இவளிடம் என்ன பேசுவது? என அவன் மனநிலை மாறிப் போனது.


"உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ.. அப்போ கூப்பிடு..! பேசுவோம். போயும் போயும் உன்னை எனக்கு ஏன்டி பிடிச்சுது.? என்னைப் புரிஞ்சுக்கக் கூட முயற்சி செய்யாத உன்னை மட்டும் தான் இப்போவும் பிடிச்சுத் தொலையுது. உன்மேல் இருக்கிற இந்தக் காதலை கடைசி வரை சுமந்துட்டுத் திரியறது தான் நான் வாங்கி வந்த சாபம் போல.? எனக்காகவாவது நீ சில வருடங்கள் முன்னவே பிறந்திருக்கலாம்..!"

என ஆற்றாமையோடு சொன்னவன் விறுவிறுவெனக் கீழிறங்கி சென்றிருக்க, புரியாமல் மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் ஆருத்ரா.


அவன் சொன்னதன் பொருள் இப்போதும் அவளுக்கு விளங்கவில்லை. என்ன சொன்னான் எனப் புரியாமல், அவன் தன்னைவிட்டு விலகிச் செல்வதை அவள் பார்த்திருக்க, அவள் மனதிற்குள்ளோ, ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.


"நான் சீக்கிரம் பிறந்திருக்கணும்ன்னு சொல்லிட்டுப் போறான். நான் பிறக்கிறது என் கையிலா இருக்கு? என்ன சொல்றான் இவன்? ஒண்ணுமே புரியலையே!"


"என் மேல் வச்ச காதலை இவனை யாரு சுமக்க சொன்னது? இவன் என்ன சொல்றான்னு புரிஞ்சுக்கிறதுக்கே எனக்கு இன்னொரு மூளை வேணும் போல..!" எனப் புலம்பியபடி அவள் நின்றிருக்க, இரவு நேரத்தில், படுக்கையில் மகளைக் காணாமல், அவளைத் தேடி வந்திருந்தார் அபிராமி.


"இந்நேரத்தில், இங்கண என்னடி செய்ற? பேய் உலாத்தற நேரத்தில் ஒத்தையில் நின்னுட்டு இருக்க?!" என அவர் கேட்க அசையாமல் எங்கோ பார்த்தபடி நின்றாள் மகள்.


"நிஜமாவே பேய் எதுவும் பிடிச்சுருச்சா எங்குட்டோ பராக்கு பார்த்துட்டு நிற்கிறாளே..?" எனப் புலம்பியவர், மகளைப் பிடித்து உலுக்கினார்.


"ம்ப்ச்! என்னம்மா? இங்கே ஏம்மா வந்த? என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடும்மா!" சலிப்பாய் அவள் சொல்ல,


"லூசாடி நீ? நடுராத்திரி மெத்தையில் (மொட்டை மாடி) நின்னுக்கிட்டு விளையாடிட்டு இருக்கியா? அர்த்த ராத்திரியில் உன்னைக் காணோம்ன்னு தெரிஞ்சதும், தேடி ஓடி வந்தவளைப் பார்த்து, நீ இதுவும் பேசுவ, இன்னுமும் பேசுவ டி!" எனச் சொன்னார் அபிராமி.


"ஏன் ஓடிப் போய்ட்டேன்னு சந்தேகப்பட்டு ஓடிவந்தியா? கவலைப் படாதேம்மா. நான் எங்கே போனாலும், ஏன் இந்த உலகத்தோட இன்னொரு மூலைக்குப் போனாலும் கூட, உன் மருமகன், என்னைப் பத்திரமா கொண்டு வந்துருவான்.!" அவன் இதுவரை செய்ததையெல்லாம் மனதில் வைத்து விளையாட்டு போல் தன் அன்னையிடம் சொன்னாள் அவள்.


"சும்மா என்னத்தையாவது உளறாமல், வந்து தூங்கு டி!"

என அவளை அழைத்துப் போனார் அபிராமி. யோசனையுடனே, அன்னையுடன் சென்று, கட்டிலில் படுத்தவளுக்குத் தூக்கம் வர மறுத்தது. இமயவரம்பன் இறுதியாய் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள், மீண்டும், மீண்டும் அவள் மனதிற்குள் வந்து பாடாய்ப் படுத்தியது.


"என்னைப் புரிஞ்சுக்க முயற்சி கூடப் பண்ணாத உன்னை மட்டும் தான் பிடிச்சு தொலையுது.. எனக்காகவாவது நீ சில வருடங்கள் முன்னவே பிறந்திருக்கலாம்!" என்ற அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.


"அவனை நான் புரிஞ்சுக்கணும்ன்னா எந்த விஷயத்தில்? எதுவுமே தெரியாமல் நான் எதைப் புரிஞ்சுக்கணும்? நான் சில வருஷம் முன்னாலேயே பிறந்திருக்கணும்ன்னு அவன் சொல்றான்னா, இந்தக் கல்யாணத்திற்கு வயசு தடையாய் இருந்ததா என்ன?" தாமதமாக யோசித்தாலும், சரியாக யோசித்தாள் ஆருத்ரா.

பின் ஏதோ யோசனை வந்தவளாய்,


"ம்மா..!" எனத் தன் அன்னையை எழுப்பினாள்.


"என்னடி.. சும்மா நொய் நொய்ன்னுட்டு இருக்கே?"


"ஒண்ணே ஒண்ணு உன்கிட்டே கேட்கணும்மா!"


"அர்த்த ராத்திரியில் தான் இதைக் கேட்கணும்.. அதைக் கேட்கணும்ன்னு சொல்லுவ? என்னதான்டி உன் பிரச்சனை?!"


"இமயனை நம்ம தாத்தாவுக்கு எப்படித் தெரியும்? நீ அவனை ஏற்கனவே பார்த்திருக்கியா?"


"ம்ம்ம்.. உன் தாத்தாவும், இமயனோட தாத்தாவும் சினேகிதர்கள் ஆரு. இமயனோட தாத்தா இறந்த பிறகு, அவங்க தொழில் நொடிச்சுப் போச்சு. இமயனோட அம்மா அப்பாவிற்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் இல்லை. விவசாயம் ஒண்ணும் லாபம் சம்பாதிக்கிற தொழில் இல்லையே? அப்போ உன் தாத்தா தான் அவனைக் கட்சியில் சேர்த்து விட்டதே. அதுக்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமா அவங்க முன்னேறி வந்தாங்க. இமயன் சின்ன வயசில் நம்ம வீட்டுக்கு அவன் தாத்தாவோடு வருவான். உன்னைத் தூக்கி வச்சு விளையாடுவான். உனக்குப் பட்டாம்பூச்சியெல்லாம் பிடிச்சு கொடுத்திருக்கானே.. ஞாபகம் இல்லையா?!" என அபிராமி கேட்க அவள் மூளைக்குள் மின்னல் வெட்டியது.


தன் நினைவடுக்குகளில், தொலைந்து மறைந்து போனதை மீண்டும் கண்டெடுக்க முற்பட்டாள். பதிமூன்று வயது சிறுமியான அவளுக்குப் பட்டாம்பூச்சி பிடித்துத் தரும் மீசை வைத்த ஆண்மகனின் தோற்றம் அவள் விழிகளுக்குள் வந்து போக, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்திருந்தாள். தன் மூளைக்குள் மின்னலாய் அடிக்கடி வந்து போகும் இந்தக் காட்சி, தன் கற்பனை என அவள் நினைத்திருக்க, நடந்ததெல்லாம் உண்மை என அவள் உணர்ந்த அதே நேரம், இருபத்து மூன்று வயதான இமயனின் முகம் அவளுக்குத் தெளிவாக நினைவிற்கு வர,


"மாயன்..!" என அவள் இதழ்கள் மென்மையாய் உச்சரித்தது.


"நேசிப்பவர்களின் மீதான
கோபத்தை..

மௌனத்தால் நிரப்பிடுங்கள்..!

கோபத்தில்

வரும் வார்த்தைகளுக்கு..

சாபத்தின் சாயல்..!"

(படித்ததில் பிடித்தது)

******

"தேங்க்ஸ் அர்ஜுன்..!" எதிரே அமர்ந்திருந்த அர்ஜுனைப் பார்த்துச் சொன்னான் இமயவரம்பன்.

"நமக்குள்ளே எதுக்குடா தேங்க்ஸ்? எனக்கு உன்னைத் தெரியாதா மச்சான்?" எனப் பதில் கேள்வி வந்தது அர்ஜுனிடமிருந்து.


"தெரியும் மச்சி.. இருந்தாலும், உங்க அப்பாவுக்கே எதிரா வந்து பேசியிருக்க.. உன் அப்பாவே உனக்கு எதிரா திரும்புவார்ன்னு தெரிஞ்சும் எப்படி டா? நானே உங்க ரெண்டு பேரையும் எதிரே நிப்பாட்டிட்டேனே?!" வருத்தம் தேங்கிய குரலில் சொன்னான் இமயன்.


"டேய் மச்சான்! ஐ அம் நாட் அக் கிட்! நான் ஒண்ணும் குழந்தை இல்லை டா. நான் என்னோட பிஸ்னஸை சக்ஸஸ்ஃபுல்லா ரன் பண்ணிட்டு இருக்கிற பிஸ்னஸ் மேன் டா. நீ சொல்றதைக் கேட்டுத்தான் இதைச் செய்யணும்ன்னு எனக்கு அவசியம் இல்லை டா.! நம்மளைப் பெத்தவங்க அப்படிங்கிற ஒரே காரணத்திற்காக அவங்க தப்பு பண்ணுறதை ஆதரிக்க முடியுமா என்ன? அதைத் தானே நானும் செஞ்சேன்?" நிதானமாகப் பேசினான் அர்ஜுன்.


"இருந்தாலும்.. நான் சொன்னவுடனே, எனக்காக வந்ததுக்குத் தேங்க்ஸ் டா! என்னதான் நீ என் நண்பனாக இருந்தாலும், நான் உனக்கு நன்றி சொல்லக் கடமை பட்டிருக்கேன் டா. நிறையச் சூழ்நிலைகளில், நீ என்னை நம்பியிருக்க.. எனக்காக என் கூட நின்னுருக்க.. இதுக்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலை.!" யாரிடமும் வெளிப்படுத்தாத தன் உணர்வுகளைத் தன் நண்பனிடம் வெளிப்படுத்தினான் இமயவரம்பன்.


"டேய்.. நீ எனக்கு வெறும் நண்பன் மட்டும் இல்லை டா! என் மச்சான். என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணும் முன்னவே நீ எனக்கு நண்பன் டா. என் தங்கச்சி வாழ்க்கையோட சேர்த்து உன் வாழ்க்கையையும் அந்த ஆளு அழிச்சுட்டாருன்னு நினைக்கும் போது, கோபம் தான் வருது. ஒருவேளை கவிநயாவுக்கு உன்னைப் பிடிச்சிருந்து, நீயும் அவளும் சேர்ந்திருந்தால், சந்தோஷப்படுற முதல் ஆள் நானாகத் தான் இருந்திருப்பேன். ஆனால் அவளோட சாய்ஸ் நீ இல்லையே?" கடைசி வரிகளைக் கொஞ்சம் வருத்தமாய்ச் சொன்னான் அர்ஜுன்.


தன் நண்பனைப் போன்ற ஒருவன், தன் தங்கைக்குக் கணவனாக அமைவதில் முதலில் சந்தோஷப்பட்டவன் அர்ஜுன் தான். ஆனால் இருவருக்கும் நடுவே, மயில்ராவணன் தன் சதுரங்க விளையாட்டை ஆடியிருக்கிறார் என்பது தெரிந்ததும், முதலில் கோபப்பட்டவனும் அவன். இது ஒன்றும் அரசியல் விளையாட்டில்லையே..? இருவரின் வாழ்க்கை. ஒரு பக்கம், அவனின் உடன் பிறந்த தங்கை கவிநயா. இன்னொருபுறம் தன் ஆருயிர் நண்பன். யாருக்காக நிற்பது? யாரிடம் சமாதானம் சொல்வது? ரொம்பவே தவித்துத் தான் போனான் அர்ஜுன். ஆனால், அந்த நேரத்தில் இமயன் எடுத்த தெளிவான முடிவினால் மட்டுமே இன்று கவிநயா நிம்மதியாய் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையைச் சீர்படுத்தியதில், இமயனுக்கு நிரம்பவே கடமைப்பட்டிருக்கிறான் அர்ஜுன்.


"என்னோட சாய்ஸும் கவிநயா இல்லை அர்ஜுன்.!" கொஞ்சம் நிமிர்வாய் அழுத்தமாகவே சொன்னான் இமயன்.


"எனக்குத் தெரியும் டா. ஆனால், இப்படி ஒண்ணு நிகழாமல் தடுத்திருக்கலாம் இல்லையா? இப்போ உன் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்குதே?!" நிஜமான வருத்தத்துடன் சொன்னான் அர்ஜுன்.


"சில விதிகளை நாம மீற முடியாது அர்ஜுன். அப்படித்தான் கவிநயாவுடனான இந்தக் கல்யாணமும். அது நடக்கணும்ன்னு விதி இருந்திருக்கு.. நடந்துடுச்சு அவ்வளவு தான்.! இனிமே அதைப் பேசுறதில் அர்த்தம் இல்லை அர்ஜுன்.!" என அந்தப் பேச்சு அதற்குமேல் தொடரவிடாமல், நிறுத்தினான் இமயன்.

அவனைப் பொருத்தவரை, கவிநயா அவனின் கடந்த காலம். அவனின் நிகழ்காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கப் போகிறவள், அவனின் ஆரா மட்டுமே.. அப்படியிருக்கையில், இந்தப் பேச்சுக்ள் அநாவசியமானது தானே?


"அப்பறம் தங்கச்சி என்ன சொல்றாங்க? பேசணும்ன்னு சொன்னியே மச்சான்.. என்ன ஆச்சு? எல்லாத்தையும் சொல்லிட்டியா?" எனப் பேச்சை இலகுவாக்க முயன்றான் அர்ஜுன்.


"உன் தங்கச்சி தானே? நான் சொல்ல வர்ரதை பொறுமையாய் அவள் கேட்டால் தானே.? எனக்குத் தெரிஞ்சு, இவள் குறை மாதத்தில் பிறந்திருப்பா போல.. எல்லாத்திலும் அவசரம். நான் சொல்றதைக் கேட்கிற பொறுமை கூட அவளிடம் இல்லை.! ஆனாலும் அவள் கோபம் நியாயமானது தான் மச்சி!" என ஆராவைப் பற்றிப் பேசியதுமே அவன் முகம் மென்மையாவதை இரசனையுடன் பார்த்திருந்தான் அர்ஜுன்.


"ஏய்.. இதில் நீ கில்ட் ஆகறதுக்கு ஒண்ணுமே இல்லை டா! இதெல்லாம் நடக்கணும்ன்னு விதி இருந்திருக்குன்னு நீ தானே சொன்ன? விடு மச்சான் பார்த்துக்கலாம்!"


"அவள் கேட்கிறதும் நியாயம் தானே டா? பொதுவாவே பொண்ணுங்களுக்கு, அவங்க செக்கெண்ட் சாய்ஸா இருக்கிறது பிடிக்காது டா. அதிலேயும் எனக்கும் அவளுக்கும் பத்து வயசு வித்தியாசம். எப்படி அவளுக்குப் பிடிக்கும் சொல்லு? நான் இன்னொரு பொண்ணோட வாழ்ந்தவன்ங்கிற அவளோட நெனைப்பையும் தப்பு சொல்ல முடியாது தானே?"


"நீ தான் கவி கூட வாழவே இல்லையே டா?"அதிர்ச்சியாய்ச் சொன்னான் அர்ஜுன்.


"அது அவளுக்குத் தெரியாதே டா. நான் சொன்னாலும், பொய் சொல்றதாகத் தானே அவள் நினைப்பா. என்னை அவளுக்குப் புரிய வைக்கக் கொஞ்ச காலம் தேவைப்படும்ன்னு நினைக்கிறேன் டா!" என இமயன் சொல்ல,


"எல்லாத்துக்கும் என் அப்பா தானே டா காரணம்.? அந்தாள் செஞ்ச தப்பை நான் தானே சரி செய்யணும்? நான் வேணும்ன்னா ஆருத்ரா கிட்டே பேசவா?!" எனத் தன் நண்பனுக்காய் யோசித்தான் அர்ஜுன்.


"சில விஷயங்களில் மீடியேட்டர்ஸ் தேவைப்பட மாட்டாங்க அர்ஜுன். காதலும் அப்படித்தான்.!"


"நல்லா டையலாக்கெல்லாம் பேசுற மச்சான். காதல் உன்னைக் கவிதை எழுத வச்சுடும் போல..!" சிரித்துக் கொண்டே கேட்டான் அர்ஜுன்.


"காதல் எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும். நான் அவள் மேல் வச்சிருக்கிற அன்பு அதீதமானது. என்னை விட நான் அவளை அதிகமாக நேசிக்கிறேன் டா. ஆனால், அவளுக்கு என் காதலை தெரியப்படுத்தாமல் விட்டது தான் நான் செஞ்ச தப்பு. சின்னப் பொண்ணுன்னு நினைச்சேன் டா. ஆனால், அதுவே என் வாழ்க்கையை மாத்திடும்ன்னு நினைக்கல! ஆனால், பழசையே நினைச்சுட்டு நான் அப்படியே நின்னுட மாட்டேன் டா. இத்தனை நாள் வாழாத வாழ்க்கையையும் சேர்த்து அவளோட வாழணும்!" கண்களில் கனவுடன் சொன்ன இமயவரம்பனைப் பார்த்து, அர்ஜுனின் கண்களில் நீர் துளிர்த்தது. நண்பன் அறியாமல் அதை மறைத்துக் கொண்டவன், இமயனை இறுக அணைத்திருந்தான்.


"நீ இதுவரை வாழாததற்கும் சேர்த்து வாழணும் டா! இதைத் தடுக்க யார் வர்ராங்கன்னு பார்க்கலாம்!" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் கதவு தட்டப்பட்டது.


"எஸ் கம் இன்..!" என இமயனிடமிருந்து விலகியபடியே அர்ஜுன் சொல்ல, அவனுக்கு மரியாதை செய்யும் விதமாய்ச் சல்யூட் அடித்தபடி வந்து நின்றார் அந்தக் காவலர்.


"ஸார்! ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. அதை விசாரிக்கக் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்கணும்.!" எனத் தயங்கி தயங்கி சொன்னார் அவர்.


"என்ன கம்ப்ளைண்ட்? யார் கொடுத்தா?!" என அதிர்வுடன் அர்ஜுன் கேட்க,


"ஸா..ர்! அது வந்து..!" என அவர் இழுக்க,


"என்ன ஸார்.. இழுக்குறீங்க? யார் கம்ப்ளைண்ட் கொடுத்தா? என் மேலேயா? இல்லை அர்ஜுன் மேலேயா?" என இமயன் இடையிட்டு கேட்க, அந்தக் காவலரோ பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்தார்.


"நானும், அர்ஜுனும் ஆள் வச்சு உங்க முதலமைச்சரைக் கொல்லப் பார்த்தோம்! நாங்க அனுப்பின ஆள் உங்க கிட்டே மாட்டிக்கிட்டான். அதனால், நீங்க எங்களை விசாரிக்க வந்திருக்கீங்க சரியா?!" என இமயன் கேட்க, தலையை மேலும் கீழுமாய் ஆட்டினார் அந்தக் காவலர்.


"கம்ப்ளைண்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி உங்க தலைவருக்கு மூளை இருக்கான்னு கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க! பழைய சினிமாவெல்லாம் பார்த்து கெட்டுப் போய்ட்டார் போல.. இப்போவும் நீங்க எங்களை அரெஸ்ட் பண்ணணும்ன்னு நினைச்சால், இதோ இருக்கு முன் ஜாமீன். அதனால் நீங்க எங்களை அரெஸ்ட் பண்ண முடியாது. அதோட அந்தச் சம்பவம் நடந்தப்போ நாங்க எங்கே இருந்தோம்ங்கிறதுக்காண சான்று.. அதாவது அலிபி (Alibi). அலிபி அப்படின்னா என்னன்னு தெரியுமா?! அடுத்தது உங்க கிட்டே மாட்டினவனுக்கும், எங்களுக்கும், எந்தச் சம்மந்தமும் இல்லைங்கிறதுக்கான ப்ரூஃப். இது மட்டும் போதுமா? இல்லை வேறு எதாவது வேணுமா?" என நக்கலாய் இமயன் கேட்க,


"ஸார்.. ஸாரி சார்! என்னை விசாரிக்க உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க! அதைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது ஸார்!" எனப் பணிவாய் அந்தக் காவலர் சொல்ல,


"உங்களுக்குத் தேவையான பேப்பர்ஸ் இங்கே இருக்கு. உங்களை அனுப்பினவங்கக் கிட்டே கொண்டு போய்க் கொடுங்க!" எனச் சொல்லிவிட்டு அந்தக் காவலரை அனுப்பிய இமயன்,


"மச்சி! உங்க அப்பா அடுத்தக் காயை நகர்த்திட்டாரு! டிவியைப் போடு பார்ப்போம்.!" தலைக்குப் பின்னால் கரத்தை மடக்கியபடி மெத்திருக்கையில் சாய்ந்தான் இமயவரம்பன்.


"என்னைக் கொல்வதற்குச் சதி நடந்திருக்கிறது. இது எதிர்க்கட்சியின் சதியா? இல்லை கூட இருந்து கொண்டே குழிப்பறிக்கும் குள்ளநரிகளின் சதியா? என்னை அழிக்கத் துணிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களால் தப்பவே முடியாது என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.!" என மயில்ராவணன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்க,


"உங்க அப்பாவுக்கு டையலாக் எழுதிக் கொடுக்கிறது யாரு டா? கொலை முயற்சி நடந்துருக்குன்னு சொல்றார். சின்னக் காயம் கூட, இல்லாமல் நிற்கிறாரே? மக்களுக்குச் சந்தேகம் வராது? உன் அப்பாவோட இமேஜை டேமேஜ் பண்ண வேற யாருமே வெளியிலிருந்து வர வேணாம். அவர் மட்டுமே போதும்!" என இமயன் சொல்ல,


"டையலாக் எழுதவே அரசவைக் கவிஞர் மாதிரி ஒருத்தரை கூட வச்சிருக்காரு டா! அதை விடு, என் அப்பா இப்படித்தான் செய்வாருன்னு உனக்கு எப்படித் தெரியும்?!" என ஆர்வமாய்க் கேட்டான் அர்ஜுன்.


"ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுங்கிற மாதிரி, சின்னக் கால்குலேஷன் தான். என்னை வேறு வழியில்லாமல் வேட்பாளராய் அறிவிச்சுட்டாரு. இனி நான் தேர்தலில் நிற்பதைத் தடுக்கணும்ன்னா என் மேல் கேஸ் வர்ர மாதிரி சூழ்நிலையை உருவாக்கணும். அதைத் தான் இப்போ பண்ணிட்டு இருக்காரு உங்க அப்பா!" எனச் சிரித்தபடியே அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவனை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.


"மிதமிஞ்சிய நேர்மை ஆபத்தானது..

நேரான மரங்களே முதலில் வெட்டப்படும்:

நேர்மையான மனிதர்களே..

முதலில் குறிவைக்கப்படுவார்கள்!"

(சாணக்கிய நீதி)

அன்பாகும்..?!



 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்.. அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

தொடர் ஆதவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤

கருத்துத் திரி:
Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 
Status
Not open for further replies.
Top