All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அன்பின் அதீதங்களில்..!" - கதைத் திரி.

Status
Not open for further replies.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-14
1000018900.png
இரண்டு நாட்கள் மெதுவாய் நகர்ந்திருந்தன. ஆருத்ராவோ, இமயனுக்காய் காத்திருந்தாள். அவன் சில நாட்களாய் வீடு வந்து சேரவே இல்லை. சட்டென மனதிற்குள் வந்த ஞாபகங்களில், அவன் தன்னை மாயன் என அறிமுகப் படுத்திக் கொண்டிருந்து மட்டும் தான் ஞாபகம் இருந்தது.

வேறு எதுவுமே அவளுக்கு ஞாபகமே வரவில்லை. எத்தனை முறை யோசித்தாலும், வேறு எதுவும் அவளுக்குத் தெரியவும் இல்லை. யாரிடம் அவனைப் பற்றி விசாரிப்பது? அவன் எப்போது வருவான்? எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.


அவளுக்கு அவளின் பதிமூன்று வயதில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவளுக்காக சிரமப்பட்டு பட்டாம் பூச்சியைப் பிடித்துத் தந்தவன், அவள் பார்வைக்கு நாயகனாகத்தான் தெரிந்தான். பதின் பருவத்தில் வரும் ஈர்ப்பு அவன் மீது இருந்ததென்னவோ நிஜம் தான். ஆனால், நாட்கள் போகப் போக, அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து காணாமல் போனதும் நிஜம் தான்.


ஆனால், அவனைப் போல், மாநிறமாய், அவனின் சாயலில் இருந்த ஆண்கள் மீது, அவள் விழிகள், நொடி நேரம், அதிகமாக நிலைத்ததும் நிஜம். இவ்வளவு ஏன், அவள் காதலித்த விவேக் கூட, கொஞ்சம் சாயலில் இமயனைப் போலத்தான் இருந்தான்.

அனைத்துமே அவள் பொறுமையாய் நிதானமாய் யோசிக்கும் போது தான் புரிந்தது. ஆனாலும், சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பிற்காக மட்டும், அவனைத் திருமணம் செய்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் அவளிடம் இருந்தது.



'இப்போது என்ன செய்வது? இவனை எப்படி சந்திப்பது?' என்ற யோசனை அவளுக்குள் ஓட, ராகவைத் தேடிப் போனாள் அவள்.


"ராகவ்.. ராகவ்..!" என அவள் சத்தமாக அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய,


"எதுக்கு இப்படி கத்தறே?!" எனக் கோபமாய் கேட்டான் ராகவ்.


"எனக்கு உன் அண்ணனைப் பார்க்கணும். அவன் எங்கே இருப்பான்?"


"எனக்குத் தெரியாது ஆரு!"


"நீயெல்லாம் ஒரு தம்பியா டா? உங்க அண்ணன் ரெண்டு நாளாய் வீட்டுக்கு வரலை. என்ன செய்றான்? ஏது செய்றான்? எதையும் கண்டுக்க மாட்டே அப்படித்தானே?" என அவள் கேட்க,


"அதெல்லாம் அண்ணன் சொல்ல மாட்டாரு. அவரு செய்ற வேலைக்கு நேரம், காலமெல்லாம் சொல்ல முடியாது.!" எனச் சொன்னான் ராகவ்.


"ஆமா, உங்க அண்ணன் போலீஸ் வேலை பார்க்கிறாரா? இல்லை டாக்டர் வேலை பார்க்கிறாரா? நேரம் காலம் தெரியாமல் வேலை செய்ய?" என மென்மையாய் சலித்துக்கொண்டாள்.


"ஆமா.. என் அண்ணனைப் பார்த்தாலே, எரிஞ்சு எரிஞ்சு விழுவ.. இப்போ என்ன புதுசா அவரைத் தேடுற?" என. ராகவ் கேட்க, தடுமாறிப் போனாள் ஆருத்ரா.


"அது.. வந்து.. சும்மா தான்..!" எனத் தடுமாறினாள் ஆருத்ரா.


"பார்க்கிற நேரமெல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழற நீ.. தேடுறதெல்லாம் அதிசயமாகத்தான் இருக்கு." எனச் சலித்துக் கொண்ட ராகவ்,


"இமயன் நம்பர் உனக்கு வாட்ஸ்-அப் பண்ணயிருக்கேன்.. கால் பண்ணி பாரு. அவன் கிட்டே உன் நம்பர் இருக்கான்னு தெரியலை.

ஒருவேளை அவன் கிட்டே உன் நம்பர் இருந்தாலும், அவன் அட்டன் பண்ணுறது சந்தேகம் தான்.!" என ராகவ் சொல்ல, அவள் முகம் சட்டெனச் சுருங்கியது.


"இன்னும் நாலு நாள் தான் இருக்கு கல்யாணத்திற்கு. இன்னைக்கு சாயங்காலம் ஊருக்குக் கிளம்பணும். அதனால் எப்படியும் ஈவ்னிங்குள்ளே வந்துடுவான். நாளைக்கு காலையிலே பந்தக்கால் ஊன்றணும் இல்லையா?!" என அவன் சொல்ல,


"எந்த ஊருக்குப் போகணும்?" எனக் கேட்டாள் அவள்.


"கீழவளவு தான். அது தான் எங்க சொந்த ஊரு. சொந்த மண்ணில் தான் கல்யாணம் பண்ணணும்ங்கிறது, இமயனோட ஆசை. முதல் கல்யாணத்தின் போதே யோசிச்சோம். ஆனால், செய்ய முடியலை. ஆனால் இந்த முறை அண்ணன் மட்டும் இல்லை. வீட்டில் எல்லோருமே அங்கே தான் நடத்தணும்ன்னு ரொம்ப பிடிவாதமாய் இருக்காங்க!" .எனச் சொல்லி நிறுத்தினான் ராகவ்.


அதே நேரம், "ஹாய் ராகவ்!" என்றபடி வந்து நின்றாள் கவிநயா.
கவிநயாவைப் பார்த்ததும் ஆருத்ராவின் முகம் கோபத்தைப் பிரதிபலித்தது. கவிநயா வந்து நின்றதும்,


"அப்பறம் பார்க்கலாம் ராகவ்!" என ஆருத்ரா நகரப் போக,


"ஆருத்ரா ஒரு நிமிஷம்!" எனத் தடுத்து நிறுத்தினாள் கவிநயா.


"என்னைப் பார்த்தால், உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். உங்களோட கோபம் எனக்குப் புரியுது. ஆனால், இமயனோட வாழ்க்கை இப்படி மாறினதற்கு நான் தான் காரணம்ங்கிற கில்ட் எனக்கு இருக்கு. அதுக்காகவாவது, உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியணும்ன்னு நான் நினைக்கிறேன்.!" என கவிநயா சொல்ல, என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள் ஆருத்ரா.
யோசனையில் மனம் உழன்றது.

'இமயன் அவன் தரப்பை சொல்லும் வரை காத்திருப்பதா? இல்லை இவளிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வதா? உண்மை தானே தெரிய வேண்டும், இவளும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாள் தானே, சம்மந்தப்பட்ட இருவரில், யார் சொன்னால் என்ன?' என அவள் மனம் குழப்பமாய் யோசித்தது. ஆனால், இதுவரை அவசரப்பட்டு செய்ததெல்லாம் போதும், இமயனே எதுவாக இருந்தாலும், நேரடியாய் சொல்லட்டும். என ஒரு தெளிவான முடிவை எடுத்திருந்தாள் ஆருத்ரா. அவன் மீதிருந்த சின்ன நம்பிக்கை அவளை இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது. அவளுக்கு உண்மை தெரிய வேண்டும் தான்.

ஆனால், அவளின் தனிப்பட்ட வாழ்க்கையின் இடையே கவிநயா வருவதை அவள் விரும்பவில்லை. இது அவள் வாழ்க்கை எனும் போது, முடிவும் அவளுடையாதாக தானே இருக்க வேண்டும். கவிநயா ஒரு முடிந்து போன அத்தியாயம். அதை காற்புள்ளி இட்டு தொடர்வதில், ஆருத்ராவிற்கு சுத்தமாய் விருப்பமில்லை.


"இட்ஸ் ஓகே கவிநயா! நான் இமயன் கிட்டேயே கேட்டுக்கிறேன். உங்களுக்கு எந்த சிரமமும் வேணாம்.!"


"அது இல்லை ஆருத்ரா! நான் என்ன சொல்ல வர்ரேன்னா..!" என கவிநயா எதோ சொல்ல வர, கை நீட்டி இடை நிறுத்தியவள்,


"நீங்க பொய் சொல்லலை.. எனக்குத் தெரியுது. பட், என் விருப்பத்தோடோ, விருப்பம் இல்லாமலோ, இமயன் என் வாழ்க்கைக்குள்ளே வந்துட்டார். உண்மை எதுவாக வேணும்ன்னாலும் இருந்துட்டு போகட்டும். அதை இமயனே வந்து சொல்லட்டும். நான் அதுவரை வெய்ட் செய்றேன். ஒண்ணும் பிராப்ளம் இல்லை. நீங்க இதைப் பற்றி கவலைப் படாதீங்க! நீங்க இமயனோட, இறந்த காலமா இருந்திருக்கலாம். ஆனால், அவனோட நிகழ்காலமாகவோ, எதிர்காலமாகவோ நீங்க இருக்க முடியாது. உங்களோட, நிகழ்காலமும், எதிர்காலமும் உங்க குடும்பம் தான். அவங்களோட சந்தோஷமா இருங்க! இமயன் வாழ்க்கையைப் பற்றின குற்றவுணர்வு உங்களுக்கு தேவையில்லை.!" கவிநயாவைப் பேசவே விடாமல், வெளிப்படையாய் பேசினாள் ஆருத்ரா.


"நிஜமாகவே என் மேல் உங்களுக்கு கோபம் இல்லை தானே?!" கவிநயா கேட்க, இடவலமாய் தலையசைத்தாள் ஆருத்ரா.


"தேங்க்ஸ் ஆரு! நீங்க என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கலை. இமயனோட வாழ்க்கை இப்படி மாறினதுக்கு முக்கியமான காரணம் நான் தான். அந்த கில்ட் இப்போவும் எனக்குள்ள இருக்கு. நான் வேணாம்ன்னு உறுதியாய் மறுத்திருந்தால், இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. ஆனால், அப்போ இருந்த சூழ்நிலையில், என்னால் என் அப்பாக்கிட்டே பேச முடியலை. அவர் எனக்கு நல்லது தான் செய்வாருன்னு நம்பினேன். பட், எல்லாரும் நமக்கு நல்லது செய்ய மாட்டாங்களே?" என்ற கவிநயாவின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.


"பாஸ்ட் இஸ் பாஸ்ட் கவிநயா.! இதுவரை நடந்ததை எல்லாம் விட்டுடுங்க! இப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க வாழ்க்கை இருக்கு தானே?!" என ஆருத்ரா கேட்க, கவிநயாவின் தலை சம்மதமாய் ஆடியது.


"உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு உங்க மேலே மட்டுமில்லை. இமயன் மேலேயும் கோபம் இருந்தது தான்.இப்போவும் இருக்கு தான். ஆனாலும் ஏதோ ஒண்ணு, என்னைக் அந்தக் கோபத்தை இழுத்து பிடிக்க விடாமல் தடுக்குது. இப்போவும் இந்தக் கல்யாணத்தை என் மனசு முழுசா ஏத்துக்கலை தான். ஆனால், என் பக்கமிருந்து மட்டும் நான் யோசிக்கிறேன்னு அன்றைக்கு இமயன் பேசின போது தான் புரிந்தது. அவர் பக்கம் என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன்.!" என ஆருத்ரா தொடர்ந்து சொல்ல,


"ஆரு.. இமயன் மாதிரி ஒருத்தர் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். வெளியிலிருந்து பார்க்க இது வெறும் ஒன் சைட் லவ் தானேன்னு தோணலாம். பட், இமயனோட காத்திருப்பு, காதல் எல்லாம் வரம்.!" என கவிநயா சொல்ல, வெறுமையாய் சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.



"காதலோ, அன்போ, எதுவாக வேணும்ன்னாலும் இருக்கட்டும், வெளிப்படுத்தாமல், தனக்குள் வச்சிட்டு இருந்தால், தெரிய வேண்டியவங்களுக்கு எப்படி தெரியும்? என் மேல் இருக்கிற அன்பை என்கிட்டே சொல்லாமலே, நானே புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறதும், என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண முயற்சிக்கிறதும் சரியா? எல்லாரும் இமயன் பக்கமிருந்து மட்டுமே யோசிக்கிறீங்க! என் நிலையில் இருந்தும் யோசிங்க!" எனப் பட்டெனச் சொல்லிவிட்டாள் ஆருத்ரா.


இமயனைச் சந்தித்ததில் இருந்தே, தன்னை மட்டுமே எல்லாரும் குறை சொல்வதாய் தோன்றியது அவளுக்கு. இமயன் நல்லவனாகவே இருந்துவிட்டு போகட்டும். அவன் அவள் மீது வைத்திருக்கும் நேசம் உயர்ந்ததாகவே இருக்கட்டும். ஆனால், தனக்கு அவனைப் பற்றி புரிய வைப்பது இமயனின் கடமை தானே.? எதையுமே செய்யாமல், அவளாகவே புரிந்துக் கொள்ளட்டும், என நினைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? என்ற எண்ணத்தில் தான் பட்டெனப் பேசிவிட்டாள்.


"ஸாரி.. நான் உங்களை ஹர்ட் பண்ணணும்ன்னு சொல்லலை. நான் சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சுடுங்க ஆரு!" எனச் சொன்ன கவிநயாவிடம்,


"நானும் நீங்க என்னை ஹர்ட் பண்ணீங்கன்னு சொல்லலை. என் பக்கமிருந்தும் யோசிச்சு பாருங்கன்னு சொல்றேன். நானும் உங்களைக் கஷ்டப்படுத்தணும்ன்னு சொல்லலை.!" என ஆருத்ரா சொல்லவும், புரிந்தது என்பது போல், தலையசைத்தபடியே விடைபெற்றுக் கிளம்பினாள் கவிநயா.


"ஏன் ஆரு.. இப்படி பேசினே? பாவம் கவி.. நீ இப்போவெல்லாம் யோசிக்காமல் பேசிடுற!" என ராகவ் சொல்ல,


"நான் உனக்கு பாவம் இல்லையா டா? உங்க இஷ்டத்திற்கு எல்லாரும் பண்ணுறீங்க? நல்லா யோசிச்சு பாரு.. அந்த விவேக்குடன் பிரேக் அப் ஆன உடனே, உன் அண்ணன் கூட, கல்யாணம் முடிவாகிடுச்சு. அவனை எனக்கு யாருன்னே தெரியாது. அவன் என்னை கல்யாணத்திற்காக ஃபோர்ஸ் பண்ணும் போது எனக்கு எப்படி இருக்கும்? அடுத்த அதிர்ச்சியாய் இத்தனை நாள் என் நண்பனா இருந்த நீ இமயனோட தம்பின்னு தெரியும் போது, எனக்கு எப்படி இருந்திருக்கும்.? நானும் மனுஷி தான் டா! இத்தனைக்கு அப்பறமும் என்னைக் குறை சொன்னால் கோபம் வருமா வராதா? எல்லாரும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுறதைப் பார்க்கும் போது, காசு கொடுத்து பேச வைக்கிறானோன்னு கூட எனக்குத் தோணுது. என்னால் முடியலை டா ராகவ்.!" என அவள் சலிப்பாய் சொன்னாள்.


"இன்னுமா நீ அந்த விவேக்கை நினைச்சுட்டு இருக்கே?!" எனக் கேட்டான் ராகவ்.


"அதெல்லாம் இல்லை டா. என்னை ஏமாத்தி பச்சை துரோகம் பண்ணினவனை நான் என் மனசில் இருந்து எப்போவோ தூக்கிப் போட்டேன். இப்போ எனக்குள்ளே இருக்கிறதெல்லாம் குழப்பம் தான். என் வாழ்க்கை என்ன ஆகப் போகுதுன்னு எனக்கே தெரியலை. ஒருபக்கம் எல்லாமே நல்லதுக்குன்னு தோணுது. இன்னொரு பக்கம், எதுவுமே நல்லதுக்கு இல்லையோன்னு தோணுது.!" என அவள் சொல்ல,


"ஏய்.. ஆரு! கொஞ்சம் அமைதியாய் இரு. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு! எல்லாமே சரியா போய்டும்!" எனச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு போய், அறையில் விட்டுவிட்டு வெளியே வந்திருந்தான்.


******

அறைக்குள் யோசனையோடு நின்றிருந்த ஆருத்ராவின் மனமோ, இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தது. ஒருமனமோ, இமயனுக்காய் வாதாட,


இன்னொரு மனமோ, அவனுக்கு எதிராக நின்று கொடி பிடித்தது. தனக்குள்ளேயே இருக்கும் ரெண்டும் கெட்டான் மனநிலையில், என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்தாள்.


'கவிநயாவிடம், வேண்டாமெனச் சொல்லிவிட்டேன்.. இப்போது எப்படித் தெரிந்துக்கொள்வது?! இப்போது நான் என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, காத்திருக்கும் பொறுமை எல்லாம் சுத்தமாக இல்லை. சில நிமிடங்கள் யோசனையில் கடத்தியவள், பின் உறுதியான முடிவு எடுத்தவளாய், அலைபேசியை எடுத்து, ராகவ் சிறிது நேரத்திற்கு முன்னால் அனுப்பிய எண்ணிற்கு அழைப்புவிடுத்தாள்.



முதன் முறையாய் இமயனுக்கு அவளாக அழைக்கிறாள். மனம் ஒருவித படபடப்பை உணர்ந்தது. மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற ஓருணர்வு. ஒரு சாதாரண அலைப்பேசி அழைப்பு அதற்கு ஏன் இத்தனை படபடப்பு அவளுக்குப் புரியவில்லை. விவேக்கை விரும்பிய காலங்களில், எத்தனையோ முறை அழைத்துப் பேசியிருக்கிறாள். ஆனால் இப்படியொரு படபடப்பையோ, பதற்றத்தையோ அவள் உணர்ந்ததில்லை. இமயனின் விஷயத்தில், அவளுக்கு ஒவ்வொன்றும் புதிதாகவும், புதிராகவும் இருந்தது.


'அவன் என் அழைப்பை ஏற்பானா?'

'அழைப்பை ஏற்று என்ன பேசுவான்?'

'என் அலைபேசி எண் அவனுக்குத் தெரியுமாமா?'

'அவன் அலைபேசியில் என் பெயரை என்னவெனப் பதிந்திருப்பான்?' என ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் ஓடியது. அவளுக்குள் எழுந்த அத்தனை கேள்விகளும், அவன் அழைப்பை ஏற்று,

"சொல்லு ஆரா!" என உரிமையாய்ச் சொன்ன ஒற்றை வார்த்தையில், கரைந்து காணாமல் போனது.


அவள் 'ஹலோ!' என்ற ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை.. அழைப்பை ஏற்றவுடன், அவளை அவன் உரிமையாய் விளித்ததில், அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.


"இ.. இமயன்.!" தட்டுத் தடுமாறி, தயங்கி இவள் அழைக்க,


"நீ எனக்கு ஃபோன் பண்ணியிருக்கன்னா நான் மாயன்னு உனக்கு ஞாபகம் வந்துடுச்சா?!" என அவன் கேட்டதும், ஒட்டுமொத்தாமாகவே அதிர்ந்துவிட்டாள் ஆருத்ரா. தான் வாய் திறந்து பேசாமலே, தன்னைப் பற்றி அத்தனையும் அறிந்து வைத்திருக்கிறானே.. என்ற உணர்வு மேலிட, தன்னையறியாமல் உடல் சிலிர்த்தது அவளுக்கு.


"வெறும் மாயன்ங்கிற பேரு மட்டும் தான் ஞாபகத்திற்கு வந்துச்சு! வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரலை. எதையுமே சொல்லாமல் நீ பாட்டுக்கு போய்ட்ட.. நான் யார்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிறது? ஏன் இத்தனை நாளாய் வீட்டுக்கு வரலை? வேணும்ன்னே இதெல்லாம் செய்ற தானே?" என அவள் கேட்க, அந்தப் பக்கமிருந்து இமயனின் சிரிப்புச் சத்தம் தான் அவள் செவிகளில் விழுந்தது.


"என்னை மிஸ் பண்ணுறியா ஆரா?" என்ற அவனின் கேள்வி அவளிடம் சில நிமிடங்களுக்கு மௌனத்தை நிலைநாட்டியது.


"அ.. அதெல்லாம் இல்லை. அப்படி என்னதான் உன் கல்யாண வாழ்க்கையில் நடந்துச்சுன்னு எனக்குத் தெரியணும்! அவ்வளவு தான்.. நான் என்ன உன்னை உருகி உருகி லவ் பண்ணுறேனா என்ன? உன்னை மிஸ் பண்ணுறதுக்கு?!" எனச் சொன்னவளின் குரலில் ஆயிரமாயிரம் தடுமாற்றங்கள்.


"அவ்வளவு தானா? நிஜமாகவே அது மட்டும் தானா?" என்ற அவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.


"ஆமா.. அது மட்டும் தான்..!" என அவள் அவசரமாய்ச் சொன்னதைக் கேட்டு இமயனின் இதழ்களில் சத்தமில்லாத புன்னகை.


"என்னோட கடந்த காலத்தில் என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும் ஆரா.. என்னோட நிகழ்காலமும் எதிர்காலமும் நீ மட்டும் தானே?" என அவள் கவிநயாவிடம் சொன்ன வார்த்தைகளை அப்படியே மாற்றி இவளிடம் சொன்னான் இமயவரம்பன்.


"நிஜமாகவே.. உனக்கு என்னைப் பிடிக்குமா..? இல்லை உன் அரசியல் ஆதாயத்திற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?" எனத் திக்கித் திணறி அவள் கேட்ட அதே நேரம்,


"தங்கச்சி! இந்தப் பையன் உன் மேல் பைத்தியம் பிடிச்சு அலையறான். சீக்கிரம் இவனைக் கல்யாணம் பண்ணி, அந்தப் பைத்தியத்தைத் தெளிய வச்சிடு மா.!" என்ற குரல் திடீரெனச் செவியோரம் மோத, நிஜமாகவே பயந்து போனாள் ஆருத்ரா.


"யார்.. யார் பேசறீங்க?!" என அவள் யோசனையோடு வினவ,


"ஹேய் ஆரு! என் ஃப்ரெண்ட் அர்ஜுன் தான். உனக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா கவிநயாவின் அண்ணன்.!" என அவசரமாய் இடையிட்டு இமயன் சொன்ன அதே நேரம், திடீரெனக் கேட்ட ஏதோ சத்தத்துடன், எதிர்பாராத விதமாய் அழைப்பு இடையிலேயே துண்டிக்கப்பட்டது.

பேசிக் கொண்டிருக்கும் போது, இணைப்பு தடைபட்டுவிட, மீண்டும், மீண்டும் இமயனுக்கு அழைத்துப் பார்த்தாள் ஆருத்ரா. அழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய, யாரும் அழைப்பை ஏற்கவே இல்லை.



'என்ன காரணமாக இருக்கும்? அர்ஜுன் எதாவது உண்மையைச் சொல்லிவிடுவான் எனப் பயந்து, இணைப்பைத் துண்டித்து விட்டானோ? என்னவாக இருக்கும்? நெட் ஒர்க் பிரச்சனையாக இருக்குமோ? அப்படி இருந்தால், அழைப்பு செல்லாதே? ஆனால், அழைப்பு ஏற்கபடாமல் தானே இருக்கிறது? வேண்டுமென்றே அழைப்பை ஏற்க மறுக்கிறானா? இல்லை வேறு ஏதாவது காரணமா? வேறு எதாவது நிகழ்ந்திருக்குமா?'


என அவள் குழம்பி தவித்து நேரம் போவதே தெரியாமல், நின்றிருந்த அதே தருணத்தில், மீண்டும் இமயனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இமயனின் அழைப்பைப் பார்த்ததும் தான் அவளால் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.


"ஹலோ.. இமயன்!" என அவசரமாய் ஏற்றுக் காதில் வைக்க,


"ஹலோ! ஆருத்ரா! நான் அர்ஜுன் பேசறேன். நான் சொல்றதைக் கேட்டு பதற்றப் படாதீங்க! பயப்படாதீங்க! கொஞ்சம் பொறுமையாய் கேளுங்க!" என அர்ஜுன் பூடகமாய்ப் பேச, இங்கே பயப்பந்து உருண்டது அவளுக்குள்.


"இமயனுக்கு ஒண்ணும் இல்லை தானே?!" அவளை அறியாமலே, பதற்றமாய் அவள் குரல் வெளி வந்தது.


"நான் தான் சொல்றேன்ல்ல.. பதறாதீங்க! நான் இமயன் கூடத்தான் இருக்கேன். ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். உங்களைப் பார்க்கத்தான் சர்ப்ரைஸா வந்துட்டு இருந்தான். எதிர் பாராத விதமாய் இப்படி ஆகிடுச்சு. இமயன் ஸேஃப் தான்., நீங்க பயப்படாமல் இருங்க. ஹாஸ்பிட்டல் லொக்கேஷன் அனுப்பறேன் வந்துடுங்க!"


என அர்ஜுன் சொல்லிவிட்டு வைத்துவிட, அவள் காலின் கீழே பூமி நழுவிய உணர்வு. முதலில் அதிர்வில் அவளால் யோசிக்கவே முடியவில்லை. அதிர்வின் தாக்கத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனம் ஒருமாதிரி கனமாய் இருந்தது. அழுவதா? அமைதியாய் நிற்பதா? என்ன உணர்வுகளை வெளிப்படுத்த என்று கூடத் தெரியாத நிலையில், சட்டெனச் சுதாரித்து நிமிர்ந்து, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துக் கொண்டவள், முதலில் தன் அன்னையைத் தான் அழைத்தாள்.


"ம்மா! ம்மா!" அவசரமாய் அழைத்தபடி ஓடிவரும் மகளைப் பதற்றத்துடன் பார்த்தார் அபிராமி.


"என்ன ஆரு..? என்ன ஆச்சு? என்னத்துக்குடி இப்படி ஓடி வர்ர.?" பதற்றமாய் மகளைப் பார்த்து வினவினார் அவர்.


"இ.. இமயனுக்கு ஆக்ஸிடென்ட்..!" எனச் சொன்னவளுக்கு, அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.



"ஏய்.. விளையாடாதே டி! கல்யாணம் நெருங்கிட்டு இருக்கிற நேரத்தில், ஆக்ஸிடென்ட்ன்னா ஆளுக்கு ஒண்ணா பேசுவாய்ங்க டி! உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை தான்.. அதுக்காக ஏதாவது பூகம்பத்தைக் கிளப்பி விட்டுடுடாதே ராசாத்தி!" பயமும் பதற்றமுமாய்ப் பேசினார் அபிராமி.


"நான் பொய் சொல்லி என்னம்மா செய்யப் போறேன்? நான் ஃபோனில் தான் பேசிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டு ஃபோன் கால் கட் ஆகிடுச்சு. அப்பறம் தான் அர்ஜுன் கால் பண்ணி சொன்னார். கே.எம் ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொன்னாங்கம்மா!" என தொண்டை அடைக்க, அவள் சொல்ல, உயிர் நடுங்கிப் போனது அபிராமிக்கு.

மகளின் முகத்தில் வந்து போன உணர்வுகளில், அவளின் மனம் அவருக்கு ஓரளவிற்கு புரிந்தது. அவ திருமணம் கூடி வந்த நேரத்தில், இப்படி நடப்பது, இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? பயம் சூழ்ந்தது அவர் மனதிற்குள்.


அடுத்தச் சில நிமிடங்களில், அர்ஜுனே அனைவருக்கும் தகவல் தெரிவித்திருக்க, அனைவரும் பதற்றமாய் வீட்டின் கூடத்தில், கூடியிருந்தனர்.வீட்டிலிருந்த அனைவரின் முகங்களிலும் கவலையின் சாயல். ஆருத்ராவின் மனதைப் புண்படுத்திவிடக் கூடாதென்பதற்காக, அமைதியாய் அனைவரும் நின்றிருக்க,



"ஏன் அபி! நம்ம கல்யாணம் நிச்சயம் பண்ணின நேரம் எதுவும் சரியில்லையோ? பெரியவர் சொல்லிட்டாருன்னு ஜாதகம் கூடப் பார்க்காமல் தானே, கல்யாணம் முடிவு செஞ்சீங்க? ஜாதகம் பார்த்திருக்கணுமோ?!" என நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டார், ஆருத்ராவின் பெரியம்மாவான பொன்னி.


"அக்கா! சும்மா இருங்க!" என அபிராமி தடுக்க முயல, பொன்னியைப் பிடித்துக் கொண்டு தானும் பேசினார், இமயனின் அப்பத்தாவான செல்லம்மா.


"முதல் பொண்டாட்டியா வந்தவ, எம் பேரன் வாழ்க்கையைக் கொண்டு போனாள். இவ இன்னும் வீட்டுக்குள்ளே வரவே இல்லை. எம் பேரன் உசிரை எடுத்துடுவா போல..!" என வெளிப்படையாய்ப் புலம்பியிருந்தார் செல்லம்மா.


"அத்தை! வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்க! விபத்துங்கிறது எதிர்பாராமல் நடக்கிறது. அதுக்குப் போய் அந்தப் பிள்ளையைக் குறை சொல்றீங்க? அதெல்லாம் எம் மயனுக்கு ஒண்ணும் ஆகாது. அவன் நல்லாத்தேன் இருப்பான். அர்ஜுன் தான் சொன்னானே இமயன் நல்லாத்தேன் இருக்கான்னு சொன்னானே.. இமயனைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பறதை விட்டுட்டு, அந்தப் பிள்ளையைக் குத்தம் சொல்றதெல்லாம் தப்பு அத்தை. நம்ம சூழ்நிலையும் உங்களுக்குத் தெரியும் தானே? எப்போ சிக்குவியான் போட்டுத் தள்ளலாம்ன்னு தானே காத்து கிடக்காய்ங்க! எதையும் யோசிக்காமல் பேசாதீங்கா அத்தை!" எனப் பேசிய இமயனின் அன்னை தனலெட்சுமி,


"ஆரு.. அவங்க இப்படித்தேன் விவரம் புரியாமல் பேசுவாங்க! நீ எதுவும் மனசில் வச்சுக்காதே! நீ எங்கேயும் வர வேணாம். நீ பத்திரமா வீட்டில் இரு. நான் போய்ட்டு என்ன ஏதுன்னு ஃபோன் பண்ணுறேன்.!" எனச் சொன்னார்.


ஆருத்ராவிற்குச் செல்லம்மா பேசியது வருத்தமாய் இருந்த அதே நேரம், தனலெட்சுமி பேசியது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.


"அது.. வந்து.. அத்தை! நான் இமயனைப் பார்க்கணும்!" என ஆருத்ரா சொல்ல, தனலெட்சுமி மட்டுமல்ல, ஆருத்ராவின் வீட்டினர் முகங்களிலும், ஒரு சின்ன நந்பிக்கையும் புன்னகையும் எட்டிப் பார்த்தது.


"நான் மருமகளைக் கூட்டிட்டு முன்னால் போறேன். நீங்க பின்னால் வாங்க! புள்ளை அவனைப் பார்க்கணும்ன்னு ஆசைப்படுது.!" என்ற தனலெட்சுமி மருமகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பிய அதே நேரம்,


"என்னடா எதாவது தெரிஞ்சுச்சா?!"


"இந்த மீடியாகாரணுங்க என்ன செய்றானுங்க?"


"இந்த இமயன் இருக்கானா? செத்துட்டானா?"


"அர்ஜுன் ஃபோன் பண்ணினானா? அர்ஜுனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது! புரியுது தானே?"


"அப்படி ஒருவேளை, இமயன் உயிரோடு இருந்தால், ஹாஸ்பிட்டலில் வச்சே போட்டு தள்ளிடு!" எனக் கேள்விகளையும், கட்டளைகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.


"எவ்வளவு தைரியம் இருந்தால், எம் மகனையே எனக்கு எதிரா திருப்பி நிப்பாட்டுவான். நான் என்ன திட்டம் போட்டாலும், எப்படித் தப்பிக்கிறான்னு தெரியலை. ஆனால், இந்த முறை அவனை நான் சும்மா விட மாட்டேன்!" என அவர் கர்ஜித்துக் கொண்டிருந்த அதே நேரம், மருத்துவமனைக் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான் இமயவரம்பன்.


"அரசியலை நாம்


தவிர்ப்போமானால்..

நம்மால்..

தவிர்க்கப்பட,

வேண்டியவர்கள்,

நம்மை ஆள நேரிடும்..!"

-ப்ளாட்டோ

அன்பாகும்..?!
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்.. அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

ஒரு திடீர் பயணம் ஊருக்கு போய்ட்டேன். அதனால் தான் எபி போட முடியலை. மன்னிச்சுடுங்க.

தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் ❤

கருத்துத் திரி;

Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீதம்-15
1000019487.jpg
அந்த வாகனத்தின் பின்னிருக்கையில், தன் வருங்கால மாமியாரோடு அமர்ந்திருந்த ஆருத்ராவின் மனம் முழுவதும், அதீத படபடப்பைச் சுமந்திருந்தது. எளிதாக விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் அர்ஜுன் சொல்லிவிட்டான் தான். ஆனால், அவன் சொன்ன அவளவிற்கு எளிதாகக் கூட இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் ஒருமாதிரியாய் இருந்தது.


'நிஜமாகவே எனக்கு இமயனை பிடிக்காது தானே? அப்படி இருக்கையில், ஏன் இந்தப் படபடப்பு?' நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.


பக்கத்தில் அமர்ந்திருக்கும், தனலெட்சுமியை ஓரக்கண்ணால் பார்த்தாள். நிச்சலனமான முகத்துடன் அமைதியாய் அமர்ந்திருந்தார் அவர்.


'இமயன் அவர் மகன் தானே? எப்படி இவரால், இத்தனை அமைதியாய் இருக்க முடிகிறது? நான் தான் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறேனோ? பெற்ற தாய்க்கே இல்லாத பரிதவிப்பு எனக்கு மட்டும் ஏன்?' யோசனை அவள் மூளைக்குள் ஓடியது.


விபத்து மருத்துவமனை இதையெல்லாம் யோசிக்கும் போதே, அவளுக்குக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.


எல்லாவற்றிற்கும் மேலாக, 'இவன் என் வாழ்க்கைக்குள் வராமல் இருந்திருக்கலாம்!' என அவள் நினைத்ததெல்லாம் இன்று வேறுவிதமாய் உருமாறி நின்று உள்ளுக்குள் பயம் காட்டியது.


'என் வாழ்க்கைக்குள் அவன் வராமல் இருந்திருக்கலாம். என நான் நினைத்ததற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ?' என யோசித்த மாத்திரத்தில் மனம் நடுங்கியது அவளுக்கு.


"அ.. அத்தை..! அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே?!" தயக்கமும் நடுக்கமும் ஒருசேர அவள் கேட்க, தனலெட்சுமியிடமிருந்து ஒற்றைப் புன்னகை மட்டுமே வெளிப்பட்டது.


"உனக்கு என் பையனை பிடிக்காதுன்னு தெரியும் ஆரு.. அவன் உன்னைக் காட்டாயப் படுத்தாறான் தான்.. நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். பிடிக்காத வாழ்க்கை, ஒரு பொண்ணை எவ்வளவு வேதனைப்படுத்தும்ன்னு ஒரு பொண்ணா என்னால் உணர முடியும் தான். ஆனால், என் பையன் நீ இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு சொல்லும் போது, நான் என்ன செஞ்சுட முடியும்? வேணும்ன்னா ஒண்ணே ஒண்ணு செய்றேன்.. நீ எங்கே போன? எப்படிப் போன? யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன். இப்படியே இறங்கி போய்டு ஆரு. என் பையன் உசுரோட இருக்கிறானோ? சாகறானோ? அது அவனோட விதி. உனக்குப் பிடிச்ச மாதிரி நீ வாழ்க்கையை அமைச்சுக்கோ!" எனத் தனலெட்சுமி சொன்ன அதே நேரம், அந்த மகிழுந்து ஓரமாய் நின்றது.


வாகனத்திலிருந்து கீழே இறங்கி, ஆருத்ரா அமர்ந்திருந்த பக்கமாய் வந்து, கதவைத் திறந்துவிட்டுவிட்டு, அமைதியாய் ஓரமாய்க் கைக்கட்டி நின்றுவிட்டார் தனலெட்சுமி.


ஆருத்ராவின் கண்களோ, திறந்த கதவையும், அதன் பின் தெரிந்த வெளிச்சத்தையும் நோக்கியது.


'இதோ இந்த வாகனத்திலிருந்து இறங்கினால் போய்விடலாம் தான். நான் எதிர்பார்த்த விடுதலை, சுதந்திரம் எல்லாம் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது. இப்போது நான் என்ன செய்வது? வாகனத்திலிருந்து இறங்குவதா? இல்லை பயணத்தைத் தொடர்வதா?' குழப்பம் சூழ்ந்தது அவள் மனதில்.


'இது மட்டும் தான் உனக்கான வாய்ப்பு. இறங்கி விடு!'


'இமயனின் இக்கட்டான சூழலில் அவனை விட்டுப் போகப் போகிறாயா? உன் மாயன் உனக்கு வேண்டாமா?'


'இப்போது இந்தப் பயணத்தை நீ தொடர்ந்தால், நிரந்தரமாய்ச் சிறைக்குள் சிக்கிக் கொள்வாய்.!'


'உன் மாயன் உனக்கு வேண்டாமென்றால், இறங்கி சென்று விடு. இமயனின் வாழ்வில் என்ன நடந்தது எனத் தெரியும் முன்னமே, உன் முடிவு இதுவாகத் தான் இருக்கப் போகிறதா?' அவள் மனமும் மூளையும், மாற்றி மாற்றிக் கேள்வி கேட்க, என்ன சொல்வதெனத் தெரியாமல் திணறினாள் ஆருத்ரா.


அவள் எதிர்பார்த்த முடிவு இது தான். அவள் இமயனிடமிருந்து எதிர்பார்த்ததும் விடுதலை மட்டும் தான். ஆனால், அவளால் இப்போது இறங்கி செல்ல முடியவில்லை. அவள் என்ன நினைக்கிறாள்? என்பது அவளுக்கே புரியவில்லை. ஆனால், இமயனின் பக்கம் என்ன இருக்கிறது என்பதைத் தெரியாமல் போகக் கூடாதென்பதில் கொஞ்சம் உறுதி கூடியிருந்தது அவளுக்கு.


"நா.. நானும் வர்ரேன்!" திக்கித் திணறி கடைசியாய் சொன்னாள் அவள்.
அவள் சொன்னதும், மிக மிக மெல்லிய சிரிப்புடன், அவள் பக்கக் கதவை சாத்திவிட்டு, சுற்றி வந்து தன் இருக்கையில் அமர்ந்தார் தனலெட்சுமி. அவர் எந்த வார்த்தையும் ஆருத்ராவிடம் பேசவில்லை தான். ஆனால் அவர் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்திருந்தது.


தன் மகன் மீது அவளுக்குப் பிடித்தம் இல்லை என்பது, அவருக்கு ஏற்கனவே தெரியும் தான். ஆருத்ராவின் முகமும், அவள் நடந்து கொண்ட விதமும் அவருக்கு அவள் மனதைத் தெளிவாய்க் காட்டிக் கொடுத்திருந்தது. மகனிடம் இலை மறைக் காயாய் சொல்லித் தான் பார்த்தார். ஆனால், இமயன் தன் உயிராகவே அவளை நினைக்கையில், மகனின் ஆசையைக் கெடுக்கவும் பாழும் மனது இடம் கொடுக்கவில்லை.


ஆனால், இமயனுக்கு விபத்து எனக் கேள்விப்படவும், ஆருத்ரா தன்னோடு வருவதாய்ச் சொல்வாள் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. அந்த இடத்திலேயே அவருக்கு லேசான நம்பிக்கை வந்திருந்தது. இமயனைப் பெற்ற தாயாய், இரண்டாம் வாழ்க்கையையும், அவனை ஏமாற்றிவிடுமோ? என்ற பயமும் அவருக்கு இருந்தது.
ஆனால், அவர் பயத்திற்கு எதிர்மாறாய், வாகனத்தில் ஏறிய நொடியிலிருந்து, ஆருத்ராவின், பயம் பதற்றம் எல்லாமே அவருக்குத் தெளிவாய் அவள் மனதைப் படம் போட்டு அவருக்குக் காட்டிவிட்டது.
ஆனாலும், ஒருவேளை இங்கிருந்து வெளியேற வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான், அவள் இந்தப் பயணத்தைத் தொடார விரும்புகிறாளோ? என்றெண்ணி தான், அவள் இறங்கிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தார். ஆனால், அவள் எங்கும் செல்லாதது அவருக்கு நிரம்பவே ஆச்சர்யம் தான். அந்த ஆச்சர்யம் இப்போது நிம்மதியாய் மாறியிருக்க, நேசத்தோடு ஆருத்ராவின் கரத்தைப் பற்றிக் கொண்டார் தனலெட்சுமி.


அவள் கேள்வியாய் அவரைப் பார்க்க,


"என் பிள்ளைக்கு ஒண்ணும் ஆகாது ஆரு! அவன் அம்புட்டு லேசில் கீழே சாஞ்சுட மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு." என அவர் சொன்னதை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.

என்னதான் மனதிற்குள் பயம் இருந்தாலும் கூட, எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளாது, தைரியமாய் நிற்பவரைப் பார்த்து வியப்பாய் இருந்தது அவளுக்கு.


இமயன் என்னதான் அவள் மனதிற்குள் மாயனாகப் பதிந்து போயிருந்தாலும் கூட, மாயன் என்ற பெயரைத் தவிர அவளுக்கு எதுவுமே தெரியாது. நன்கு யோசித்துப் பார்த்தால், அவன் அவளுக்கு மூன்றாவது மனிதனைப் போலத்தான். அப்படி இருக்கையில், அவளாலேயே உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது அவள் மனம் படபடவென அடித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இமயனைப் பெற்ற தாயாய் இவரால், எப்படி இவ்வளவு தைரியமும், நம்பிக்கையுமாக இருக்க முடிகிறது? வியக்காமல் இருக்க முடியவில்லை.


அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மருத்துவமனை வந்துவிட, வாகனத் தரிப்பிடத்தில், காரோட்டி வாகனத்தை நிறுத்தவும், தனலெட்சுமியுடன் இறங்கி நடந்தாள் ஆருத்ரா. உள்ளே செல்ல, செல்ல அவள் பதற்றமும், படபடப்பும் அதிகரித்தது.


'அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது! நான் அவன் என் வாழ்க்கைக்குள்ளே வந்துருக்கக் கூடாதுன்னு நினைச்சேன் தான். ஆனால், இப்படி எதுவும் நினைக்கலை!' எனத் தன் மனதிற்குள் வேண்டுதல் வைத்தபடியே நடந்தாள் அவள்.


இந்த மாதிரியான உணர்வுகள் அவளுக்குப் புதிது. இந்தப் படபடப்பும், பதற்றமும் அவளுக்குப் புதிது. இமயன் மீதான இந்தப் புதுவித உணர்வின் காரணம் புரியாமல், வரவேற்பில் எந்த அறை என்று கூட விசாரிக்காது, தன்போக்கில் உள்ளே சென்றவளை, கைப்பிடித்து இழுத்து நிறுத்தினார் தனலெட்சுமி.


"ஆரு! எந்த அறைன்னு தெரியாமல் எங்குட்டு போவ?!" என அவர் கேட்க, தயக்கமாய் அவரைப் பார்த்தபடியே நின்றாள் அவள். அதன் பின் வரவேற்பில், எந்த அறை என விசாரித்துவிட்டு, அந்த அறையை நோக்கி செல்ல, அறையின் வாசலிலேயே அர்ஜுன் காத்திருந்தான்.


"அர்ஜுன்! உனக்கு ஒண்ணும் இல்லையே?!" அவசரமாய்க் கண்களால் ஆராய்ந்தபடியே கேட்டார் தனலெட்சுமி.


"அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா! இமயனுக்கும் ஒண்ணும் பெருசா எதுவும் இல்லை. நாங்க கொஞ்சம் சுதாரிச்சு ஓரம் கட்டிட்டோம்.!" என்றவனின் பார்வை ஆருத்ராவின் மீது தான் இருந்தது. முதன்முறையாய் ஆருத்ராவைப் பார்த்தவனின் மனம், இமயனோடு சேர்த்து வைத்துப் பொருத்திப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டது. அவனுடைய ஆசை, கனவு எல்லாமே அர்ஜுனுக்குத் தெரியுமே.! தன் நண்பனுக்காகச் சந்தோஷப்பட்டுக் கொண்டவன், கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போனான்.


அங்கே அறையில், கால் மேல் கால் போட்டு மெத்திருக்கையில் சாய்ந்து அமர்ந்து, கரத்திலிருந்த, கிண்ணத்திலிருந்த பழக்கலவையை உண்டபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன். நெற்றியில் மட்டும் சிறிய கட்டுப் போடப்பட்டிருந்தது. ஆருத்ரா அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவனுக்கு ஒன்றும் இல்லை எனத் தெரிந்ததும்,கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.


அதே நேரம், இமயனும் அவளைப் பார்த்துவிட, தன் அன்னையுடன் வந்திருந்த அவளைப் பார்த்ததும் அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டான் இமயன்.


"ஆரா..!" மென்மையாய், இதழ் விரிந்த புன்னகையுடன் அவன் உதடுகள் உச்சரித்தது.


"பார்த்துப் பதுவிசா போகலாம்ல்ல டா! கல்யாணத்திற்கு இன்னும் மூணு நாளுதேன் கிடக்கு. இந்நேரத்தில், ஆக்ஸிடென்ட் அது இதுன்னு..! உன் அப்பத்தா புலம்பித் தள்ளுறாக! மருமகளை வேற பேசிப்புட்டாக!" மகனின் நெற்றிக் காயத்தை வருடியபடியே சொன்னார் தனலெட்சுமி.


"எம்புட்டுச் சூதானமா போனாலும், இடிக்கணும்ன்னு குறிக்கோளோடு வர்ரவனை என்ன செய்ய முடியும்?" எனப் பதில் கேள்வி கேட்டான் இமயன்.


"இதுக்குத்தான் இந்தக் கட்சி கண்ணராவியெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். யாரு கேட்குறீங்க? அர்ஜுன் நீயாவது சொல்லக் கூடாதா? உங்க அப்பாவை எதிர்த்து நாம என்ன பண்ண முடியும்? பொழுதுக்கும் மாற்றி மாற்றி அடிச்சுட்டே இருந்தால், இதுக்கெல்லாம் எப்போ தான் முடிவு வரும்? சம்பாதிச்ச வரை போதும் டா இமயன். இப்போவே எம்புட்டுப் பாவத்தைச் சேர்த்திருக்கோமோ தெரியலை.. பட்ட வரைக்கும் போதும். விட்டுடலாம் இமயன்.!" எனத் தன் மகனிடமும், அர்ஜுனிடமும் சேர்த்தே சொன்னார் தனலெட்சுமி.


"ம்மா! என் அப்பா தான் எல்லாத்தையும் வீம்புக்குன்னு பண்ணிட்டு இருக்கார்! அப்போ இமயனுக்கு அவர் பண்ணதெல்லாம் சரின்னு சொல்றீங்களா? எல்லா நேரமும் அமைதியாவே இருக்க முடியாதும்மா! இந்த விஷயத்தில், என் சப்போர்ட் இமயனுக்குத்தான்.!" என அர்ஜுன் சொல்ல,


"ம்மா! நான் பணத்துக்காகத் தான் இதுக்குள்ளே வந்தேன். ஆனால், இப்போ எனக்கே அரசியல் பிடிச்சிருக்கு. நான் இதை விடனும்ன்னு நினைச்சாலும், விட முடியாதும்மா! விடறதும் அவ்வளவு ஈஸி இல்லை. எது தேவையோ அதுவே தர்மம்ன்னு நீங்க கேட்டதில்லை.? எனக்குத் தேவை பதவி..! அது என் கைக்குக் கிடைக்கும் வரை நான் நிற்கப் போறதும் இல்லை. மாண்புமிகு முதலமைச்சரை சும்மா விடப் போறதும் இல்லை.!" என அவன் சொல்ல, அவர்கள் பேசுவதை ஒன்றுமே புரியாமல் பார்த்திருந்தாள் ஆருத்ரா.


******

அடுத்தப் பத்து நிமிடமாய், இமயனின் முன் நின்றிருந்தாள் ஆருத்ரா. அர்ஜுனும் தனலெட்சுமியும் வெளியே சென்று பத்து நிமிடங்கள் கடந்த பின்னும் அமைதியாய் அசையாமல் நின்றிருந்தாள் அவள்.

மருத்துவமனையின் மருந்து வாசனை அவள் நாசியை நிரடிவிட்டுச் செல்ல, என்ன பேசுவதெனத் தெரியாமால் நின்றிருந்தவளை, எதிரில் அமர்ந்தபடி ஆராய்ந்து கொண்டிருந்தான் இமயவரம்பன். கடிகாரத்தின் ஓசை மட்டும் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்க, ரோஜா வண்ண கையில்லா சுடிதாரில், தன்னைப் பார்க்காமல் சுவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றவளை பார்வையால் வருடினான் அவன்.


"இப்படியே எவ்வளவு நேரம் நிற்கிறதாக உத்தேசம் ஆரா? எதாவது வேண்டுதலா என்ன?" என்ற கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.


"போன முறை, நான் ஏதேதோ பேசி தான், நீ ஒண்ணுமே சொல்லலை.. அதனால் தான் வெய்ட் பண்ணுறேன்!"


"இப்படியே அமைதியாய் நின்றிருந்தால், வெளியே போனவங்க மறுபடியும் உள்ளே வந்துடுவாங்க! தனியாகப் பேசட்டும்ன்னு தானே போனாங்க? நீயும் என்கிட்டே பேசுறதுக்குத் தானே கால் பண்ணின? இப்போ அமைதியாய் நின்றிருந்தால் என்ன அர்த்தம்?!" என அவன் கேட்டதற்கும் அவளிடம் பதில் இல்லை. ஆனால் அவள் விழிகள் உயர்ந்து கதவை நோக்கியது.


"நான் சொல்லாமல், யாரும் உள்ளே வர மாட்டாங்க ஆரா!" எனச் சொன்னபடியே,
பக்கத்திலிருந்த நாற்காலியை அவள் முன் இழுத்துப் போட்டவன்,

"உட்கார் ஆரா!" எனச் சொல்ல, அமைதியாய் அமர்ந்தாள் அவள்.


"உனக்கு என்ன கேட்கணுமோ, என்னைப் பார்த்து கேளு! நான் பதில் சொல்றேன்.!" என அவன் சொல்ல, சில நொடிகள் தயங்கியபடியே, அமைதியாய் அமர்ந்திருந்தவள், பின் யோசித்து நிமிர்ந்து அவனைப் பார்த்து,


"இப்போவும் நீங்க கவிநயாவை விரும்புறீங்களா?"எனக் கேட்டாள் அவள்.


அவளுக்கு அதற்கான பதில் நிச்சயமாய்த் தெரிய வேண்டியிருந்தது. என்னதான் அவள் மனதிற்கு நிதர்சனம் உரைத்தாலும், கவிநயா அவள் கணவனோடு வாழ்கிறாள் எனப் புரிந்தாலும், இந்தப் பதில் அவளுக்குத் தேவையாய் இருந்தது. அவனின் கடந்தகாலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கடந்தகாலத்திற்கு முன் தெரிய வேண்டிய முதல் விஷயமாகத்தான் அவள் நினைத்தாள்.


"கவியை நான் விரும்பறேனான்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறியே அப்போ, என்னை உனக்குப் பிடிச்சிருக்கா ஆரா?" ஒளிவு மறைவில்லாமல் நேராய் கேட்டான் இமயன்.
ஆருத்ரா அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால் இமயன் தொடர்ந்து பேசினான்.


"நான் ஏன் உன்னை 'ஆரா'ன்னு கூப்பிடுறேன்னு உனக்குத் தெரியுமா?" எனக் கேட்க, அவள் தலை மட்டும் 'இல்லை' என இடவலமாய் ஆடியது.


"லத்தின் மொழியில் ஆரா என்ற சொல்லுக்கு மென்மையான காற்று அல்லது சுவாசம்ன்னு அர்த்தம். நம்ம ஆன்மீக நம்பிக்கைகளின் படி, நம்ம உடலைச் சுற்றியிருக்கிற கண்ணுக்குத் தெரியாத எலெக்ட்ரோ மேக்னெட்டிக் ஃபீல்ட்டுக்கு கூட, ஆரான்னு தான் பேரு. என் உள்ளே சுவாசமாகவும், வெளியே மின்காந்த அலைகளாகவும் நீ மட்டும் தான் இருக்கிற அதனால் தான் உன்னை ஆரான்னு கூப்பிடுறேன். சந்தேகம் தீர்ந்ததா?!" என அவன் கேட்க, விலுக்கென நிமிர்ந்து விழி விரிய அவனைப் பார்த்தாள் அவள்.
சர்வசாதாரணமாய் அழைக்கும் பெயருக்குள் இத்தனை அர்த்தங்களை வைத்திருப்பான் என அவள் யோசித்துக் கூடப் பார்த்ததில்லை.


சாதாரணப் பெயருக்குள் சர்வத்தையும் அவன் அடக்கி விட்டதாகத்தான் அவளுக்குத் தோன்றியது. அவன் தந்த ஒற்றை விளக்கத்திலேயே அவன் மனம் அவளுக்குப் புரிந்தது. உணர்வுகளின் மிகுதியில் தொண்டை அடைக்க, வார்த்தைகள் வராமல் தடுமாறி எழுந்து நின்றிருந்தாள் பெண்.


"உட்காரு ஆரா..!" எனக் கைப்பிடித்து அமர வைத்தவன்,


"கவி இப்போ மட்டும் இல்லை. எப்போவுமே என் மனசில் இருந்ததில்லை. அந்தக் கல்யாணம் என்னைப் பொருத்தவரையில் ஒரு விபத்து. அப்போ இருந்து, இப்போ வரை நீ மட்டும் தான் என் மனசில் இருக்க ஆரா.. என் உயிர் மூச்சாக!" எனச் சொன்னவனின் கண்களில் தெரிந்த காதலும் நேசமும் கண்கூடாகத் தெரிந்தது அவளுக்கு.


வெறும் பெயரை விளிப்பதிலேயே உள்ளும் புறமுமாய் நீ இருக்கிறாய் என அவன் உணர்த்திவிட்ட பிறகு, இவள் என்ன பேச முடியும். கண்கள் தன்னை அறியாமல் கலங்க, அவன் கரத்தை இறுகப் பற்றினாள் ஆருத்ரா.


முதன்முறையாய் அவன் கரம் பற்றியவளின் உடல் சிலிர்த்து அடங்க, கண்கள் கலங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். கண்கள் கலங்கி நீர் தேங்கி நின்றது.


"இப்போவும் எனக்கு நோ சொல்லுவியா ஆரா..?!" கண்ணோடு கண் நோக்கி அவன் கேட்க, இவள் தலை அவசரமாய் இல்லையென அசைந்தது.


"என்னோட கடந்தகாலம் தெரிய வேணாமா உனக்கு?" என அவன் கேட்க,


"நோ..!" எனச் சொன்னவளின் கன்னம் தழுவி நழுவியது கண்ணீர் துளி.


"ஹேய்.. அழாதேடி லூசு! தொட்டாசிணுங்கி! இப்படி அழுது வடியத்தான் என்னைப் பார்க்க வந்தியா?!" என அவன் கேட்க,


"உன் அன்பு அதீதமானது மாயன்.. எனக்கு உன் அளவிற்கு அன்பு செய்யத் தெரியாதே!" தொண்டை அடைத்து, வார்த்தைகள் தடுமாறச் சொன்னாள் அவள்.


"நீ என் கூட இருந்தால் போதும் ஆரா.. நான் அன்பு செய்றேனே உனக்கும் சேர்த்து.. அது போதாதா?!" அவன் கேட்ட கேள்வியிலும் கூட, முழுக்க முழுக்கக் காதல் மட்டுமே தெரிந்தது.


'உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் பெண்ணே!' எனச் சொல்லும் காதல் கிடைப்பதெல்லம் எவ்வளவு பெரிய வரம், இத்தனை நேசம் வைத்திருப்பவனைப் புரிந்து கொள்ளாமல், அவனை வேதனைப்படுத்தியதை நினைத்து, அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.


"ஐ அம் ஸாரி மாயன்..! நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணிட்டேன் தானே?" என நிஜமான வருத்தத்துடன் கேட்டாள் அவள்.


"அப்படிச் சண்டைப் போட்ட ஆராவைத் தான் எனக்குப் பிடிச்சுருக்கு. இந்தத் தொட்டாச்சிணுங்கி அழுமூஞ்சியை எனக்குப் பிடிக்கலை!" அவளை இயல்பாக்குவதற்காக வேண்டுமென்றே சீண்டினான் அவன்.


"நான் ஒண்ணும் அழு மூஞ்சி இல்லை. நீ என்னை எமோஷ்னலா ஆக்கிட்ட!" அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள் அவள்.


"ஏன் உனக்கு என் மேல் இவ்வளவு லவ்? அப்படி உனக்கு என்ன பண்ணிட்டேன் நான்? முன்னவே நீ என்கிட்டே வந்து பேசியிருந்தால், நான் விவேக்கை லவ் பண்ணியிருக்க மாட்டேனே?!" எனக் கேட்டாள் அவள்.


"தெரியலையே..! அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவேன். உன்னைப் பார்த்திருக்கேன். நிறைய முறை உன்னோடு விளையாடியிருக்கேன். பட்டாம்பூச்சி பிடிச்சுக் கொடுத்திருக்கேன். அழகா குட்டியா இருப்ப! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆரா. அப்பறம் கொஞ்சம் வருஷம் நான் இங்கே வர்ரதுக்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை! திடீர்ன்னு ஒருநாள் வந்தேன் உனக்கு ஞாபகம் இருக்கா?!" எனக் கேட்டான் அவன்.


"இல்லையே?" யோசனையாய் சொன்னாள் அவள்.


"காலேஜ் படிப்பெல்லாம் முடிச்சுட்டு, வேலை கிடைக்காமல், குடும்பக் கடனை அடைக்க வழி தெரியாமல் உன் தாத்தாவை தேடி வந்து, மயில்ராவணன் கிட்டே வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆகியிருந்தது. அதுக்கு முன்னாலும், உன் தாத்தா பார்க்க வந்திருக்கேன். ஆனால் உன்னைப் பார்த்ததில்லை. நான் உன் வீட்டுக்கு வந்த அந்த நாள் தான் நீ காலேஜ் சேருவதற்கு அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிட்டு இருந்த. நாம பார்த்த குட்டிப் பொண்ணா இவள்ன்னு ஆச்சர்யமாய் இருந்தது. அவ்வளவு அழகா இருந்த தெரியுமா? வெறும் பதினேழு வயசு சின்னப் பொண்ணுக்கிட்டே விழுவேன்னு நினைச்சு கூடப் பார்த்ததில்லை. முதலில் ஏதோ வயசுக் கோளாறுன்னு தான் நினைச்சேன். ஆனால் உன் முகம் என்னால் மறக்கவே முடியலை. சின்னப் பொண்ணாக வேற இருந்த.. உன்கிட்டே பேசி, உன் மனசைக் கலைக்கவும் நான் விரும்பலை. எல்லாத்துக்கும் மேலாக, நீ என் வீட்டுக்கு வரும்போது, நீ உன் வீட்டில் இருக்கிறதை விடச் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைச்சேன். அதுக்குப் பணம் வேணும்ன்னு எனக்குப் புரிஞ்சது. நான் பணத்துக்குப் பின்னால் ஓடினது என் குடும்பத்திற்காக மட்டும் இல்லை. எதிர்காலத்தில் என் குடும்பத்தில் ஓர் அங்கமாய் வரப் போற உனக்காகவும் தான்.!"


"எங்கே இருந்து இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்டே? உன்னை உருகி உருகி காதலிக்கிற வாய்ப்பெல்லாம் எனக்கு இல்லையா.? கல்யாணத்திற்கு மூணு நாள் முன்னாடி வந்து சொல்ற? எனக்கு உன்னோட காதலைப் பார்த்து பொறாமையாய் இருக்கு மாயன்.!"


"இப்போ என்ன கல்யாணம் பண்ணிட்டு ஆசை தீர காதலிச்சுக்கோ.. உன்னை யார் வேணாம்ன்னு சொன்னது? கல்யாணத்திற்கு முன்னே மூணு நாள் இருக்கே.. அந்த மூணு நாளும் உனக்கே உனக்குத் தான். ஆசை தீரா காதலிக்கலாமே ஆரா!" என அவள் நாசியைத் தன் நுனி விரல் கொண்டு தீண்டினான் அவன்.


"நான் விவேக்கை விரும்பினது பத்தி உனக்குத் தெரியும் தானே? உனக்கு எதுவும் கோபம் இல்லையே?" எனக் கேட்டாள் அவள்.


"அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம். அது லவ்வே இல்லைன்னு எனக்குத் தெரியும். முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் விட்டுடு ஆரா!"


"நான் அவனை விரும்பறது தெரிஞ்சும், நீ ஏன் தடுக்க முயற்சிக்கல?"


"சில விஷயங்களில் கிடைக்கிற அனுபவங்கள் நமக்கு ரொம்ப அவசியம் ஆரா. நான் குறுக்கே வந்து தடுத்திருந்தால், நீ என்னை வில்லனாகத் தான் நினைச்சிருப்ப. இப்போவே அப்படித் தானே நினைக்கிற? இந்த விவேக் விஷயத்தில் நீயே பட்டுத் திருந்தி வெளியே வந்துடுவன்னு எனக்குத் தெரியும். இன்னொருத்தர் சொல்லி நாம கத்துக்கிறதை விட, நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு அனுபவமும் ஒரு புது விஷயத்தைக் கத்துத் தரும். விவேக் விஷயமும் அப்படித்தான். அப்படியே எதாவது தவறா நடக்கிற மாதிரி தெரிஞ்சால் நான் உன் முன்னால் வந்து நின்னிருப்பேன்.!" என அவன் சொல்வதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.


"ஒருவேளை விவேக்கும் என்னை உண்மையாய் லவ் பண்ணியிருந்தால், என்ன செஞ்சிருப்ப?" என அவள் கேட்க அவன் முகம் சட்டென மாறியது. வேகமாய்க் கட்டிலிலிருந்து எழுந்து நின்று, அவளுக்கு முதுகு காட்டி நின்றவன்,


"ஒருவேளை உண்மையாய் இருந்திருந்தால், நீ விவேக்கோட வாழறதை தடுத்திருக்க மாட்டேன். நீ சந்தோஷமாய் வாழறதைப் பார்த்துட்டே நானும் வாழ்ந்து முடிச்சுருப்பேன்.!" என அவன் சொன்னதைக் கேட்டு பிரம்மித்து நின்றுவிட்டாள் ஆருத்ரா.


"நீ கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா?!" எனக் கேட்டாள் அவள்.


"நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை ஆரா.! நீ கேட்கலாம், அப்பறம் ஏன் கவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு.. நான் ஏற்கனவே சொல்லிட்டேன், அது கல்யாணம் இல்லை. எதிர்பாராமல் நடந்த விபத்து!" என அவன் சொல்ல, அவனை விழியசைக்காமல் பார்த்தபடியே பிரம்மித்து நின்றுவிட்டாள் ஆருத்ரா.


"இப்போவும் எட்ட நின்னு வேடிக்கை தான் பார்த்துட்டு இருப்பியா? கட்டிக்க மாட்டியா?" என அவன் கேட்க, தயக்கமும் நாணமும் போட்டி போட, முகம் சிவந்து நின்றவள், அவன் கரம் விரித்து, தலையசைத்து 'வாவென' அழைத்த மறுநொடியே, ஓடிப் போய் அவன் கரங்களுக்குள் அடைக்கலமாகியிருந்தாள்.
அவனை இறுக அணைத்து அவன் மார்புக்குள் முகம் புதைத்தவளின் கண்களில், வழிந்த கண்ணீர், அவன் மார்புச் சட்டையை வெதுவெதுப்பாய் நனைத்தது. ஆனந்தமும், நெகிழ்வும், அதிர்ச்சியும் ஒருசேர அவளைத் தாக்க, சந்தோஷக் கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.


"லவ் யூ மாயன்!" என அவள் சொல்ல, நெகிழ்ந்து உருகி, அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் அவன். அடர்ந்த மீசை ரோமங்கள் பதிய அவன் கொடுத்த ஒற்றை முத்தத்தில், கிறங்கி மயங்கி நின்றாள் மாது.


"ஆரா..!" நெஞ்சில் சாய்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளை விளித்தான் அவன்.


"ம்ம்ம்!" ஒற்றை எழுத்தில் என்னவெனக் கேட்டாள் அவள்.


"இந்த விஷயத்தில், கவிநயா எங்கே வந்தாள்? என்ன நடந்தததுன்னு நீ தெரிஞ்க்கணும் ஆரா!" என அவன் சொல்ல,


"முடிஞ்சது, முடிஞ்சதாகவே இருக்கட்டும் விட்டுடு மாயன்!" அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிப் படித்தாள் அவள்.


"ஏய்.. நான் சொன்னதையே என்கிட்டே திருப்பிச் சொல்ற.? என்னோட முதல் திருமணத்தைப் பற்றி எதுவும் தெரியாமலே, என்னைப் புரிஞ்சுக்கிட்டது எனக்குச் சந்தோஷம் தான் ஆரா.. ஆனால், என் மன நிம்மதிக்காக உன்கிட்டே சொல்லிடுறேன்.!" எனத் தன் கடந்த காலத்தைச் சொல்லத் துவங்கியிருந்தான் இமயன்.


"பூமிக்குப் பாரமாக இருக்கிறாய்..



காதல் செய்து


காற்றில் இறகாகு..!"


(படித்ததில் பிடித்தது)


அன்பாகும்..?




 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டியர்ஸ்..!

அன்பின் அதீதங்களில்..! அடுத்த அத்தியாயம் பதிஞ்சாச்சு.

உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤

கருத்துத் திரி:

Post in thread 'சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.' சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.
 
Status
Not open for further replies.
Top