All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-21

சம்யுக்தாவிற்கு ஏழு மாதம் முடிவடைந்த நிலையிலும் கணவனிடமிருந்து விலகியே நின்று பாராமுகம் காட்டிக் கொண்டிருந்தாள்... அவள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பொறுத்து இருந்த தரனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் காத்திருக்க திராணியில்லாமல், அவளிடம் இரண்டில் ஒன்று பார்த்து விட எண்ணி அன்று அவளை அணுகினான்.

தன் நிறுவனத்தின் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்ய தீவிரமாக சிந்தனை செய்து, அதை பற்றி கணினியில் விவரம் தேடிக் கொண்டிருந்தவளை அடைந்தவன்.

“ஏய்...” என்று அதட்டலாக விழித்தான்... அவனை சிறிதும் கண்டு கொள்ளாது கணினியின் திரைக்குள் சிரத்தை விட்டுக் கொண்டிருந்தவளை கண்டு கடுப்படைந்தவன்...

“ஏய் இங்கொருத்தன் கத்தி கூப்பிடுறது காதுல ஏறலையா?” என்றவனை அலட்சியமாக ஓர் பார்வை பார்த்தவள்...

“என் பேர் ஏய் இல்லை” என்று விட்டேறியாக கூறிவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள்.

‘ஏத்ததை பாரு கட்டின புருஷன் கூப்பிடுறான் ஏன்னு கேட்கிறதில்லை, அத்தனையும் கொழுப்பு ஓங்கி அறையணும்’ என்று பற்களை நெறித்துக் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தவனை சிறிதும் கண்டு கொள்ளாது எழுந்து அறையை விட்டு நகர எத்தணித்தவளை முந்திக் கொண்டு சென்று கதவை அடைத்தான்.

“என்ன பண்றீங்க? இது மதிய நேரம் குழந்தைக்கு நான் சாப்பாடு ஊட்டணும் நகருங்க, உங்க அம்மாகிட்டே இருந்து என் பிள்ளையை வாங்கிட்டு வரணும்”

“முதல்ல எங்க அம்மாவே வீட்டில் இல்லை”

“என்ன வீட்டில் இல்லையா? அவங்க தானே நிலாவை பார்த்துகிட்டு இருந்தாங்க”

“ஆமாம்! அவங்க தான் பார்த்துகிட்டு இருந்தாங்க, நானும் இல்லைன்னு சொல்லலை... தோட்டத்தில் களை எடுக்கிறாங்க அதை மேற்பார்வை பார்க்க போயிட்டாங்க... அப்பாவும், சித்தப்பாவும் கூத்து கட்ட போயிட்டாங்க... இப்போ நீயும், நானும் மட்டும் தன் வீட்டில் இருக்கோம்”

“அப்போ என் பொண்ணு எங்க?” என்றவளை உறுத்துக் பார்த்துக் கொண்டிருந்தவன், மனைவிக்கு பதில் கூற என்னமற்று உதடுகளை இறுக மூடியிருந்தான்.

“கேட்கிறேன்ல பதில் சொல்லுங்க, எங்கே என் பொண்ணு?”

“உன் பொண்ணா?” என்று கண்கள் இடுங்கள அழுத்தமாக உச்சரித்தவன் இதழ்கள் வளைந்தது.

“ஒன்னை நினைப்பில் வச்சுக்கோ, அவ உனக்கு மட்டும் மக இல்லை எனக்கும் மகள் தான்”

“இப்போ அதுக்கென்ன?”

“உனக்கிருக்கிற அதே உரிமை எனக்கும் இருக்கு... எனக்கு உங்கிட்ட இன்னைக்கு பேசியே ஆகணும்... அதனால் நிலாவை நான் தான் உங்க அத்தை வீட்டில் ஒப்படைச்சுட்டு வந்தேன்... உங்க அப்பா பொறுப்பில் அவ இருக்கிறா” இதற்கு என்ன பதிலை கூறுவது என்று அறியாது வாயடைத்து நின்றுவிட்டாள்.

“என்ன டி உதடு ஒட்டிக்கிச்சா, பேசவே மாட்டிக்குற?”

“இங்க எல்லாமே உங்க இஷ்டப்படித் தான் நடக்கணுமா? அப்புறம் நான் எதுக்கு இருக்கிறேன்?”

“என் இஷ்டப்படி நடந்திருந்தா இந்நேரம் நீ இப்படி என்னை எதிர்த்து கேள்வியே கேட்க முடியாது டி” என்றவன் வார்த்தையில் இருந்த உண்மையில் உதட்டை கடித்துக் கொண்டாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த முகத்திருப்பலை நீடிக்க போற?” என்றவன் பார்வை அவள் மேடிட்ட வயிற்றில் அழுந்த பதிந்தது. அவன் கேள்வியும், பார்வையும் உணர்த்திய உரிமையும், செய்தியும் அவளுள் ஏதோ செய்தது.

“என்ன பேசு... இனி நீ தப்பிக்க பார்க்காதே... வாழ்க்கைன்னா ஆயிரம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதா தான் இருக்கும், அதை எப்படி நீ எதிர்கொள்ளணும்னு தான் பார்க்கணும் தப்பிச்சு ஓட முடியாது”

“நான் ஒன்னும் தப்பிக்க பார்க்கலை... என்னை பிடிக்காதவங்ககிட்டே இருந்து விலகி இருக்கிறேன்” அப்போதைக்கு அவள் ஏதேனும் கூற வேண்டுமே என்ற நோக்கத்தில் வார்த்தையை விட்டவளை பார்வையால் எரித்தவன்...

“அப்புறம் அசிங்கமா ஏதாவது சொல்லிருவேன்... அது எப்படி டி வாய் கூசாம பொய் சொல்லுற?” அவன் கேள்வியில் அவள் தடுமாறினாள்.

அவள் உணர்ச்சிகளை அவதானித்தப்படியே அவள் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை சரக்கென்று வெளியே எடுத்துவிட்டவன் அவள் மேடிட்ட வயிற்றை ஆட்காட்டி விரலால் சுட்டி...

“இதுக்கெல்லாம் அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கையை தான் நீ வாழ்ந்துட்டு இருக்கிற இல்லையா?”

“அப்படி... அப்படியில்லை...”

“வேறெப்படி நீயே சொல்லு... அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா?” என்றவனின் கூற்றில் தான் பேச நூல்முனை கிடைத்துவிட்டதில் சிறிதும் யோசியாமல்...

“ஆமாம்!” என்று பதிலுறுத்திவிட்டாள்.

“போடி புளுகுமூட்டை... இந்த கதையை எல்லாம் வெளியில எவனாவது இளிச்சவாயன் இருப்பான் அவன்கிட்ட சொல்லு” என்றவனை அகண்ட விழிகளால் சீறினாள்.

“பார்த்து முட்டைக்கண்ணு வெளியில எகிறி குதிச்சிற போகுது” என்று இடக்காக கூறியவனை உதட்டை குவித்து முறை முறையென்று முறைத்து வைத்தாள்.

“நான் பீலா விடுறேனா?”

“பின்னே இல்லையா? போடி போ... உன்னை எனக்கு தெரியாதா? நான் பக்கத்தில் இருந்தா முகத்தை திருப்பிக்கிறதும், நான் இங்கிருந்து தள்ளிப் போனா உன் முகம் நூத்து கிழவி மாதிரியும் சுருங்கிப் போகுது... உனக்கு உண்மையாவே என் மேல கோபம் இருந்தா என் கூட இருக்கவேமாட்ட சரிதான் போடான்னு போயிருப்ப”

“என் கூட இருக்கும் போதெல்லாம் என்னமோ கடன் கொடுத்தவ மாதிரி முகத்தை வச்சுக்கிறது, நான் வேலையா வெளியே போனதும் என் சட்டை, பேண்ட் கூட பேசிகிட்டு குடும்பம் நடத்துறது, அப்புறம் என்னை பார்த்து பிடிக்கலைன்னு சரடு விடுறதை கேட்டு நான் வேற என்ன சொல்றது” அவன் பேச்சில் தன்னை பற்றின உண்மை தன்மை வெளிப்பட்டுவிட்டதில் லஜ்ஜை உண்டாக வெட்கத்தில் முகம் சிவக்க பார்வையை திருப்பிக் கொண்டவள்...

“உங்... உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” என்க...

“ம்ம்ம்... கூடையில் இருந்த பல துவைக்காத அழுக்கு சட்டை கதை சொல்லுச்சு” என்று கூறி விஷமமாக புன்னகைத்திருந்தான்.

“எதுக்கு டி, என்னையும் கஷ்டப்படுத்தி நீயும் கஷ்டப்படுற? இதனால நமக்கு என்ன பலன்? அதை யோசிச்சியா நீ... சும்மா வீம்புக்கு வறட்டு பிடிவாதம் பிடிச்சா வாழ்க்கையை ஓட்ட முடியுமா?” அவன் பேச பேச சிரத்தை தழைத்துக் கொண்டு நிலத்தில் விழிகள் பதித்திருந்தாள்.

“இதுக்கு என்ன தான் டி முடிவு?” தாங்க முடியாமல் வினவியவனை சரேலென்று விழி உயர்த்தியவள்....

“சொன்னா செஞ்சிருவீங்களா?”

“என்ன உனக்கு என்னுடனான வாழ்க்கையில் இருந்து விடுதலை கொடுக்கறது தான?” என்றவனை இறுக மூடிய இதழ்களுடன் இமைக்காமல் பார்க்க, அவளை கண்டு கொண்டவன்...

“உன்னைத் தெரியும டி எனக்கு... அடுத்தவங்களுக்குன்னா ஆயிரம் வித்தாரம் பேசுவா, ஆனா உன் வாழ்க்கைன்னு வரும் போது முறுக்கிகிட்டே நில்லு”

“ஆமாம் சும்மா சும்மா வேண்டாம் வெட்டிவிடுன்னு சொல்றியே, ஒரு வேளை உன் தொழில் வட்டாரத்துல இருக்கிற வேறு யாரு மேலயும் விருப்பம் வந்திருச்சா?” என்றவனை அனல் தெறிக்க பார்த்தவளை சிறிதும் சட்டை செய்யாது...

“அப்படி இருந்தா கூட சொல்லு, நானே வாழ்க்கை அமைக்க வழி செய்து கொடுக்குறேன், அப்படியாச்சு என் மேல கோபம் போய், நீ சந்தோசமா இருக்கியான்னு பார்க்கலாம்” என்று முடித்தவன் மேல் கட்டிலில் இருந்த தலையணைகளும், போர்வைகளும் பறந்து வந்து மேலே வீழ்ந்து அவனை காயப்படுத்த முயற்சித்து தோல்வியில் முடிந்தன.

“கொழுப்பா...! கட்டின பொண்டாட்டிக்கிட்டேயே கண்டவன் கூட வாழ்க்கை அமைச்சு தரதா சொல்ற உன்னை எல்லாம் சும்மா விடலாமா டா?”

“வேறென்ன செய்ய சொல்ற? ஒண்ணு என் கூட சண்டை போட்டுட்டாவது குடும்பம் நடத்தணும்... இல்லையா, அட்ஜஸ்ட் பண்ணியாச்சும் குடும்பம் நடத்தணும்... அதை விட்டுட்டு வீம்புக்கு முறுக்கிட்டு இருந்தா நான் என்ன தான் பண்ணுறது? எந்நேரமும் வீட்டில் மூஞ்சிய முறிச்சுகிட்டே இருந்தா என்னால் வெளியில் போய் நிம்மதியா வேலை பார்த்திர முடியுமா?”

“பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தாத குறை இப்போ தான் உங்களுக்கு கண்ணு தெரியுதா? அன்னைக்கு உங்க அம்மாவுக்கும், எனக்கும் சண்டை நடந்து வீட்டை விட்டு போனேனே அப்போ தெரியலையா?”

“அது எப்படி தெரியாம போகும்? நல்லா நியாபகப்படுத்தி பாரு வீட்டை விட்டு போனது நீ, நானா போக சொன்னேன்...? மாமியார், மருமகள் சண்டை இல்லாத வீடுன்னு எதுவும் இல்லை... ஆனால், நான் உனக்கு மட்டும் அநியாயம் பண்ணிட்ட மாதிரி நடந்துகிட்ட... அப்போவும் கூட நான் எப்படியோ போய் தொலைன்னா விட்டேன் மனசாட்சியை வித்து தின்னுட்டு பேசாதே”

“நான் தான் வீட்டை விட்டுட்டு போனேன், நீங்க என்ன செய்திருக்கணும், நான் வர வரைக்கும் என்னை எப்படியாச்சும் பேசி சமாதானம் பண்ணியிருக்கணுமா, இல்லையா? எனக்கென்னன்னு விட்டுட்டு வந்துடீங்க தானே?”

“அதானே பார்த்தேன்” என்றவன் ஒற்றை புருவத்தை வில்லாக வளைத்து முகம் சுளித்தவன்...

“ஆக நான் பிழைப்பை பார்க்க போகாம தினம் உன் காலடியில் உட்கார்ந்து கெஞ்சிட்டே இருந்திருந்தா, அம்மையார் உங்களுக்கு எப்பவாச்சும் மனசு இறங்கியிருக்கும் அப்படிதானே?” என்றதும் அதில் இருந்த உண்மை தொனியில் அசடு வழிந்தவளாக கீழுதட்டை பற்களால் வளைத்துக் கொண்டிருந்தாள்.

“அப்படி உட்கார்ந்திருந்தா பொழப்பு சிரிப்பா சிரிச்சிருக்கும்”

“ஆமாம் இந்த ஆம்பளைங்களே இப்படித் தான் லவ் பண்ணக்குள்ள நினைச்ச நேரம் கால் பண்ணவும், பேசவும், பார்க்கவும் நேரமிருக்கும்... இதே கல்யாணம் ஆகிட்டா கண்டுக்கக்கூட மாட்டாங்க” என்று அவனுக்கு கேட்காத குரலில் கூறுவதாக எண்ணி முணங்கியவளின் உதட்டசைவில் கப்பென்று பிடித்துக் கொண்டான்.

“ஒரு தொழிலையே நிர்வாகம் பண்ணுற நீயா இப்படி பேசுற? முதலில் ஒன்னை புரிஞ்சுக்கோ லவ் வேற, லைஃப் வேற” என்றவன் வார்த்தை சாந்ததுடன் வெளிப்பட்டது. அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் கண்களை உற்று நோக்கியபடி பேசலானான்.

“லவ்வுக்கும், லைஃப்க்கும் வித்தியாசம் தெரியாத சராசரி பெண்ணில்லை யுகி நீ... ஆனால் புருஷன்னு வரும் போது உனக்கும் சில எதிர்பார்ப்புகள் சராசரியா தான் இருக்கு”

“ஏன் நான் தொழிலை நிர்வாகம் பண்ணினா, கட்டின புருஷனை சொந்தம் கொண்டாடக் கூடாதுன்னு எதுவும் இருக்கா?” என்று சிடுசிடுத்தவளை கண்டு புன்னகை அருப்பியது.

“நான் அப்படியா சொன்னேன்... லவ் பண்ணும் போது நீ முழுசா எனக்கு சொந்தமில்லை” என்றவனை தீயாக முறைக்க...

“முறைக்காத தாயே! நான் சொல்ல வந்த அர்த்தத்தை நிதானமா புரிஞ்சுக்க முயற்சி பண்ணு... நீ உங்க வீட்டு பொறுப்பில் இருந்த, எனக்கு இந்தளவுக்கு கமிட்மெண்ட்ஸ் இல்லை... ஆனால் நீ என்னுடன் வந்த பிறகு என் பொறுப்பில் இருக்கிற, எனக்கு பொறுப்பு கூடிருச்சு, லவ் பண்ணினா போதுமா வாழ்ந்து காட்ட வேணாமா?”

“நீ சொன்ன மாதிரி நான் ரோமியோ மாதிரி தினம் கெஞ்சிட்டு உட்கார்ந்துந்திருந்தா உன்னையும், பிள்ளைகளையும் எப்படி காப்பாத்துறது? கொஞ்ச நாளைக்கு விட்டு பிடிக்கலாம்ன்னு தான் தள்ளி இருந்தேனே தவிர உன்னை ஒரேடியா தலை முழுகிட இல்லை”

“...........”

“இதே நீ கர்ப்பமா இல்லாம இருந்திருந்தா சிண்டை பிடிச்சு இழுத்துட்டு வந்திருப்பேன்... ரெண்டு உயிரா இருக்கிற உன் மனசை நோகாடிக்க வேண்டாம்ன்னு தான் தள்ளி இருந்தேன்”

“அப்போ இப்போ மட்டும் எதுக்காக உங்க கூட கூப்பிட்டிங்க?”

“ம்ம்ம்... எதுக்கா குடும்பம் நடத்தத்தான்”

“நடத்திட்டாலும்”

“ஏன் நடத்தாமல் தான் என்னோட இன்னொரு பிள்ளைக்கு அம்மாவாகி நிற்கறியா? விதண்டாவாதமா பேசணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு தத்து பித்துன்னு உளறாதே”

“இப்போ என்ன பண்ணனும் சொல்றீங்க?” என்று முனகியவாறே கணவனின் மார்பில் ஒன்றி கொண்டவளை ஆழ்ந்த திருப்தியுடன் அணைத்து கொண்டான்.

“என் அழுக்கு சட்டைக்கெல்லாம் முத்தம் கொடுத்த உனக்கு பிரெஷா இருக்க புருஷனுக்கு ஏன் டி தரமாட்டேங்குற? கொடுத்து வச்சது என் அழுக்கு சட்டை தான் போல” அவள் பேச்சில் எழுந்த நாணத்தில் மேலும் அவன் மார்பில் புதைந்து கொண்டவள்.

“எனக்கு உங்களை விட்டு இருக்க முடியலை, அதான் உங்க சட்டையை கட்டிப் பிடிச்சுக்கிட்டா, நீங்க கூட இருக்கிறது போலவே இருக்கும்”

“அடிப்பாவி! அதை என்கிட்ட சொல்லியிருந்தா நானே இருந்திருப்பேன்... இனி மேல் இப்படி ஏதும் செய் வாய் பேச்செல்லாம் பேசமாட்டேன் ஆக்சன் தான் எடுப்பேன்”

“போதும் இந்த பாச்சா பேச்செல்லாம் வேண்டாம்... ஒரு நேரம் பார்த்தா கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சுவீங்க, ஒரு நேரம் பச்சை மிளகையை கடிச்ச மாதிரி காரமா பேசுவீங்க”

“ஏன் டி நான் என்ன படத்துல வர ஹீரோவா, எந்நேரமும் பொண்டாட்டியை தங்கமே செல்லமே வெல்லமேன்னு நாடக பாணியில் கொஞ்ச? நிஜ வாழ்க்கை வேற நிழல் வாழ்க்கை வேற... இயல்பான குடும்பத்தில் சண்டை, கோபம், சந்தோசம் இதெல்லாம் மாறி மாறி தானே வரும்”

“நான் மட்டும் இல்லைன்னா சொன்னேன்”

“ஆனாலும் புரிஞ்சுகிட்டு சரின்னு சொல்லமாட்டீங்க அதானே... உலகத்தில் இருக்கிற பொண்டாட்டிங்க சைக்கோலஜி இது தான்... நாங்க கொஞ்சினா நீங்க மிஞ்சுவீங்க, நீங்க மிஞ்சினாலும் நாங்க கொஞ்சணும்?”

“ம்ம்ம்... ஆமா இது தான் கரெக்ட்”

“மண்டையிலேயே போடுவேன்” என்றவனின் போலி கோபம், அவள் மனதின் ரணத்தை முற்றிலும் அகற்றி இருந்தது.

“சரி போதும் இனி மேல் பழசை பேச வேண்டாம், கசப்பான சம்பவங்களை மறக்க தான் முயற்சி பண்ணனும், அதையே கிண்டி கிளறினா நம்ம வாழ்க்கைக்கு சரி வராது”

“அப்போ இனி மேல் என்கூட சண்டை போடமாட்டீங்க தானே?”

“யாரு நானா, நீயா? அடியேய் பொண்டாட்டி நமக்குள்ள சண்டை வரலைன்னா லைஃப் போர் அடிச்சிடும்... சோ, சண்டை போடலாம் ஆனா விலகித் தான் போகக்கூடாது... அது நீயா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி” என்றவன் மனைவியின் நெற்றியில் அச்சாரம் பதித்திருந்தான்.

“ஐ லவ் யூ கவின்!” என்ற சம்யுக்தாவிற்கு கணவனுடனான பிணக்கங்கள் மறைந்திருக்க, அவளுள் புது தயக்கம் ஒன்று ஒட்டிக் கொண்டது. அவள் முகம் பளிங்காய் அதை பிரதிபலித்தை கண்டு...

“என்ன டி இன்னும் உன் மனசுல ஏதோ ஓடிட்டு இருக்கு போல?”

“ம்ம்ம்... ஆமாம் எனக்கொரு யோசனை தோணுது, ஆனால் அதை நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது” என்று அவன் சட்டை பொத்தானை திருகியப்படியே பீடிகை போட்டாள்.

“சட்டை பட்டனை பிச்சு எறியாம, விஷயம் என்னன்னு சொல்லு”

“இல்லை நீங்க இப்போ ஐடியில் வேலை பார்த்துட்டு, கூத்து தொழிலையும் அப்போ அப்போ கவனிச்சுக்கிறது சிரமமா இல்லையா?”

“நான் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் பார்க்க ஆரம்பிச்சவன் யுகிமா... சோ சிரமம் எனக்கு பழகினது... இப்போ விஷயம் அதில்லை, நீ சொல்ல வந்ததை சொல்லு”

“நீங்க ஏன் நம்ம கம்பெனி பொறுப்பை எடுத்துக்கக்கூடாது?” ஒருவாரு கூறி முடித்தவளுக்கு கணவன் இதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வானோ என்று நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“இதை கேட்கவா இந்த பீடிகை போட்ட? நான் என்னவோ ஏதோ நினைச்சேன்” என்று சாதாரணமாக கூறியதில் அவன் மார்பிலிருந்து வெடுக்கென்று எழும்பியவள் விழிகள் சாசர் போல் விரிந்தது.

“என்ன டி இந்த விழி விழிக்கிற?”

“இல்லை கவின், எனக்கு இதை கேட்கவே பயமா இருந்தது”

“பைத்தியம் நான் உன் புருஷன்... அதுவும் நாம காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கோம் என்கிட்ட உனக்கெதுக்கு பயம்”

“அது தான் எனக்கு மிகப்பெரிய கவலையே... நீங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், இல்லைன்னு சொல்லலை... ஆனால் நாம ரெண்டு பேருமே நேர்மையும், தன்மானமும் ஜாஸ்தி பார்க்கிற ஆளுங்க, அதனாலோ என்னவோ நமக்குள்ள அடிக்கடி ஏதாவது உரசல் வருது... நீங்க என்ன தான் பெரிய கம்பெனிக்கு சொந்தக்காரருன்னு சொன்னாலும் அதை பெரிசா காட்டி அலட்டிக்காதவரு ஒருவகையில் உங்ககிட்ட அந்த தன்மை ரொம்ப பிடிச்சுது... உங்களை உங்களுக்காகவே நேசிச்சதால் தான் நீங்க பண்ணினதை எல்லாம் தாண்டி நான் உங்ககூட வாழ வந்தேன்”

“என் கம்பெனி, உங்க வேலைன்னு நான் பிரிச்சு பேசுறசுது உங்களுக்கு உடன்பாடில்லாம போகலாம் இல்லையா... அதுவுமில்லாம நான் பார்க்கிற பிசினசில் நீங்க அனாவிஷயமா தலையிட்டு என் தனிப்பட்ட விருப்பத்தை தடை செய்ததில்லை... அப்போ நான் சொல்லுறதில் உங்க தன்மானம் பாதிக்கப் படக்கூடாதே, உங்களால் அதை ஏற்றுக்க முடியுமோ முடியாதோ” என்று முடித்தவளை கண்டு மந்தகாச முறுவலை உதிர்ந்தவன்...

“நீ சொன்னது சரி தான் யுகிமா... நீ என் மனைவி தான்! ஆனால், நானும் நீயும் ஒண்ணுப் போல நம்மளை ஒருத்தரை ஒருத்தர் தனிப்பட்ட விருப்பத்தில் தான் நேசிச்சோம், அதனால் தான் தனிப்பட்ட உரிமையிலும் தலையிடலை... ஆனால் நீ சொன்னது என்னை குறைச்சு சொல்லலையே என்கிட்ட ஆலோசனை தானே சொல்லுற? இதில் என்ன இருக்கு, நீ வேற நான் வேற இல்லை நிச்சயமாக இதை பற்றி யோசிப்போம்” என்ற கணவனின் கூற்றை ஏற்றுக் கொண்டு அவன் சிந்தித்து முடிவெடுக்க கால அவகாசம் அளித்தாள்.
**********************
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யுக்தா விருப்பத்தின் பெயரில் கலாதரன் தன் செலவிலேயே தன் மனைவிக்கு சிறப்பாக இரண்டாவது வளைகாப்பு விழாவை நடத்தி முடித்திருந்தான்... அவளின் வளைகாப்பு முடிந்ததும் அன்று தான் அர்ஜுன், அரசிக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்திருக்க, சம்யுக்தா அன்றிரவே கணவனிடம் அதை பற்றி வினவியிருந்தாள்.

“நான் சொன்னதை பற்றி என்ன முடிவெடுத்திருக்கீங்க கவின்?”

“உனக்கு பிரசவம் நடக்க இன்னும் பத்து நாள் தானே இருக்கு குழந்தை நல்ல படியா பிறக்கட்டும் யுகிமா அதுக்கப்புறம் என்னன்னு பார்க்கலாம்”

“ம்ஹும்... இல்லை கவின், எனக்கு உடனே ஒரு முடிவு தெரியணும்... குழந்தை பிறந்தா எப்படியும் என்னால் கொஞ்ச நாளைக்கு பிசினஸில் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. நான் நிர்வாகத்துக்கு தனி ஆளை போட்டாகனும், அதுக்கு எனக்கு டைமும் குறைவா இருக்கு பிசினஸ் சிக்கலாகக்கூடாது... சோ, நான் ஒரு டெசிஷன் எடுத்தே ஆகணும்”

“ஏன் ரஞ்சன் இருக்கான்ல, கொஞ்ச நாளைக்கு அவனை மேனேஜ் பண்ண சொல்லு”

“ம்ஹும்... அது சரி வராது... நான் ஆல்ரெடி பேசிட்டேன். இப்போ அவரும் அவர் பொண்டாட்டியும் சேர்ந்தே பிசினசை பார்க்கிறதால பொள்ளாச்சியில் ஒரு பிரான்ச் ஆரம்பிக்க போகிறதா சொன்னாரு... சோ, என்னால் முடியாதுன்னு சொல்லிட்டாரு... அதுவும் இல்லாம என்ன தான் அண்ணனா இருந்தாலும் அவருக்குன்னு ஒரு குடும்பம் உருவாகிருச்சு, இனி ஒரு அளவுக்கு மேல உதவி கேட்டா உறவுக்குள் விரிசல் வந்திரும் கவின், அது ஏன்னு உங்களுக்கே புரியும்” என்றவளின் கூற்றை ஏற்று தீவிரமாக சிந்தித்தான்.

“சரி தான் யுகிமா... நீ சொல்றது ஏன்னு புரிஞ்சுக்க முடியுது... கல்யாணம் ஆகிட்டா அவங்க அவங்களுக்குன்னு கமிட்மெண்ட்ஸ் அதிகமாகிரும்... இதில் கொசுரா நாம நுழைஞ்சா முதலில் சரின்னு போனாலும் பின்னாடி மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பிருக்கு”

“உண்மையை சொல்லணும்னா என் ஜாபுக்கு நான் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டேன் யுகிமா... ஆனால் உனக்கு குழந்தை பிறந்த பிறகு இதை பற்றி பேசிக்கலாம்ன்னு தான் தள்ளி வச்சிருந்தேன்.

“நிஜமாவா கவின்... தேங்க்ஸ் கவின்... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று குதூகளித்தவளுக்கு கணவனின் பாரத்தை குறைக்க வழி கிடைத்ததற்கும் சேர்த்து நிம்மதி எழுந்தது.

“ஆனால் ஒரு கண்டிஷன்” என்றதும் என்ன என்பது பார்த்திருந்தவளை...

“நான் மொத்தமா நிர்வாகத்தை எடுத்துக்கமாட்டேன்... அதாவது அந்த நிர்வாகத்தோட உரிமையை எடுத்துக்கமாட்டேன்” என்றதும் அவளுக்கு சொத்தென்று ஆகிப்போனது.

“ஏன்! பின்னே எப்படி?”

“நீ தான் எம்டி அதில் மாற்றமில்லை, நான் உனக்கு கீழே இருக்கிற போஸ்டிங்கில் வேலை பார்த்துக்கிறேன் எனக்கான சேலரியை நீ அலாட் பண்ணிரு”

“ஏன் கவின் நான் வேற, நீங்க வேறையா?” என்றவளின் வதனம் அனிச்சமலராய் வாடி சுருங்கிப் போனது.

“ம்ஹும்... நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட யுகிமா, இது அப்படி இல்லை... நீ இதுக்கு முன்னாடியே நம்மளை பற்றி சொன்னியே அந்த காரணம் தான்... நாம ரெண்டு பேருமே கிட்டதட்ட ஒரே நேர்கோட்டில் யோசிக்கிறவங்கன்னாலும் சில விஷயங்களில் ஒத்து வராமல் கூட போகலாம், இது கண்டிப்பா நடக்கும், அப்போ தொழில் சம்மந்தமான விஷயம் நம்ம வாழ்க்கையை பாதிக்கக்கூடாது” என்று கூறியும் முகத்தை உர்ரென்று தூக்கி வைத்திருந்தவளை சிறிதும் பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தான்....

“இதில் இந்தளவுக்கு நீ வருத்தப்பட ஒண்ணுமில்லை யுகி... கம்பெனிக்கு சொந்தக்காரி நீ... நான் அதில் ஒரு பொறுப்பை எடுத்துக்கிறேன் சொல்லியிருக்கேன்... அதுக்காக உன்னை விலக்கி வைக்கலை புரிஞ்சுதா, கம்பெனியை நீ நிர்வாகம் பண்ணினா என்ன, நான் பண்ணினா என்ன எல்லாம் ஒண்ணு தான் இதில் பிரிச்சு பார்க்க ஒண்ணுமில்லை” என்று விளக்கமளித்தவனின் கூற்று மூளையில் உரைத்ததில் கணவனை பெருமிதத்துடன் பார்த்திருந்தாள்.

தனக்கு சொந்தமற்ற சொத்துக்களை சொந்தம் கொண்டாடும் சில ஆண்களை போல் அல்லாமல், மனைவியே என்றாலும் அவளுடையது என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்கும் தன் கணவனின் உயர்ந்த குணத்திற்கு முன்னால் எதுவும் செய்யலாம் என்ற எண்ணமே அவளுள் இன்பச் சுகத்தை பீறிட்டு பொங்க செய்தது.

சம்யுக்தாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்க, மித்ரன் என்று பெயரிட்டனர். சம்யுக்தாவின் விருப்பம் போல் கணவன் அவளின் நிர்வாகத்திலேயே பொது மேலாளராக பதிவியேற்றுக் கொண்டவன், மனைவியின் வேலைகளையும் தானே ஏற்று செய்யலானான்.

அரசிக்கும், அர்ஜுனுக்கும் ஆண்மகன் பிறந்திருக்க, ஆதித்யன் என்று பெயர் சூட்டி இருந்தனர்... அவர்களின் ஊர் திருவிழா பிரசித்தியாக நடைபெற இருப்பதை முன்னிட்டு அனைவரும் தேனியில் அர்ஜுனின் வீட்டில் ஒன்று கூடினர்.

திருவிழா கடைகளில் குழந்தைகளுடன் அலைமோதிக் கொண்டிருந்த அர்ஜுன், ரஞ்சன் இருவருக்கும் எப்போதடா வீட்டிற்கு செல்வோம் என்ற சலிப்பு தட்டியிருந்தது... ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வாணி, அரசி, மலர் மூவரும் கடைகளை அலசிக் கொண்டிருந்தனர்.

“இவங்க மூணு பேரும் இதுக்கு முன்னாடி திருவிழா கடையையே பார்த்ததில்லையா என்ன?” என்று ரஞ்சனும், அர்ஜுனும் அலுத்துக் கொள்ள தர்சன் இடைபுகுந்தவன்...

“நான் வேணா போய் கேட்டுட்டு வந்து சொல்லவா?” என்று சிரியாமல் கேட்ட தர்சனை வெட்டவா குத்தவா என்பது போல் முறைத்து பார்த்தனர்.

“என்னடா லந்து பண்ணி பார்க்கலாம் நினைக்கிறயா, உன்னை வெட்டி உப்பு கண்டம் போட்டிருவேன் ஜாக்கிரதை!” அர்ஜுனும்...

“அது வேற ஒண்ணுமில்லைடா தம்பி பயலுக்கு கல்யாண வயசு வந்தும் கால் கட்டு போடாம இருக்கிறோம்ல, அதான் ஓவரா ஆடுறான், அவனுக்கும் கால்கட்டை போட்டு வச்சா சரியா போயிரும்” என்று ரஞ்சனும் கூற...

“என்னடா இது... அண்ணனும் சரி, மச்சானும் சரி, பொண்டாட்டிக்கு இப்படி பயப்படுறாங்க ஷேம்! ஷேம்! பப்பி ஷேம்” என்று கேலி செய்ய, இருவரும் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர்.

“இருடா மகனே வீட்டில் தூண்டிவிட்டு கால் கட்டு போட வைக்கிறோம், அப்புறம் தெரியும் பொண்டாட்டியை எதிர்த்து பேசுறியா? இல்லை, பெட்டி பாம்பா அடங்குறியான்னு”

“இங்க எல்லாம் என் அதிகாரம் தான்... அடங்கறதெல்லாம் நம்ம அதிகாரத்திலேயே இல்லை” என்று சட்டை காலரை தூக்கி விட்டு கொண்டவனை கண்டு...

“கொடுத்து வைத்தவன்” என்று கூறி பெருமூச்சு விடுத்தனர். அந்நேரம் சரியாக அரசி, வாணி இருவரும் மலருடன் பிரசன்னமாக அவர்களின் சாம்பாஷைனையை புரியாது...

“என்னாச்சு ரெண்டு பேரும் எதுக்காக தர்சனை கொடுத்து வச்சவன் சொல்லிட்டு இருக்கீங்க?” என்க...

“அது வேற ஒண்ணுமில்லை” என்றவனிடம் இருவரும் பேசதே என்று கண்ஜாடை காட்டியும் அதை கிஞ்சிதும் சட்டை செய்யாமல்....

“இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி சந்தோசத்தை தொலைச்சுட்டாங்களாம், அதனால சன்னியாசியா போயிருடா தர்ஷான்னு சொல்லிட்டு இருந்தாங்க” என்று நமட்டு சிரிப்புடன் கூறியவன்...

“நீங்க பேசிட்டு வாங்க... நான் பசங்களையும், மலரையும் கூப்பிட்டுக்கிட்டு போய் கார்ல வெயிட் பண்றேன்” என்றவன் ரஞ்சன், அர்ஜுன் இருவருக்கும் இடையில் நின்று அவர்கள் செவிக்கு மட்டும் கேட்குமாறு...

“நாராயணா! நாராயணா!” என்று விட்டு ஒன்றுமே அறியாத அப்பாவி போல் சென்றிருக்க...

“நாதாரி மாதிரி ஒரு வேலையை பார்த்துட்டு நாராதர் மாதிரி நாராயணா சொல்லிட்டு போறியா? இரு டி உனக்கு ஆப்பு வைக்கிறோம்” என்று மனதுக்குள் கருவிக் கொண்டனர்.

வாணியும், அரசியும் தங்கள் கணவனை முறைத்துக் கொண்டு நின்றனர்... “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணினது அவ்வளவு கொடுமையா இருக்கா?”

“ஹையையோ! அப்படி எல்லாம் இல்லை வாணிமா, அவன் தான் எங்களை வம்பிழுத்தான்” என்று கூறியவன் கோபமாக செல்லும் வாணியை தொடர்ந்து ரஞ்சன் ஓடி விட, அரசியும் தன் கணவனிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“ஏய் அரசி இப்போ மட்டும் நீ பேசலை, அப்புறம் நானும் என் மகனும் கூட்டணி போட்டுக்குவோம், அப்புறம் ஃபீல் பண்ணி புரியோஜனம் இல்லை”

“நல்லா போட்டுக்கோங்க, ஆனால் எத்தனை நாளைக்கு”

“ஏன் காலம் முழுக்க தான்”

“நெனப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்”

“ஏன் டி இப்படி சொல்ற?”

“உங்க மகன் ஒரு வயசு வரைக்கும் தான் உங்க கூட இருக்க முடியும், அப்புறம் அவன் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா அவ முத்தனையை பிடிச்சுட்டு போயிருவான், அப்புறம் நீங்க தனியா தான் குடும்பத்தை நடத்திக்கணும்” என்று அலுங்காமல் குழுங்காமல் குண்டை தூக்கி வீச...

“அட இப்படி ஒண்ணு இருக்குல்ல அய்யயோ பிளாட்ட மாத்துடா அர்ஜுன்” என்று கூறி கொண்டவன் மனைவியிடம் சராசமாக பேசி அவளை சமாதானம் செய்திருந்தான்.
**********************

திருவிழாவின் முக்கிய விஷேச நிகழ்ச்சியாக தோல்பாவை கூத்து மிகவும் பிரம்மாண்டமாக அரங்கேற்றம் செய்ய விஸ்வநாதன் மற்றும் நடராஜன் இருவரும் திருவிழா ஒருங்கிணைப்பாளர் முக்கிய பிரமுகஸ்தரிடம் கூறி ஏற்பாடு செய்திருந்தார்கள்... தரன் குடும்பம் தான் கூத்தில் முக்கியம் பங்கு வகிக்க திருவிழாவே விழாகோலம் பூண்டது... ஆறு கலை குடும்பங்களுக்கு மத்தியில் நுழைவு தேர்வை போல் தேர்ந்தெடுத்த திருவிழாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தரன் குடும்பத்தினருக்கு அந்த வாய்ப்பை அளித்து சிறப்பாக நடத்தும் படியும் உத்தரவிட்டு ஊக்குவித்தனர்.

இரவு நடத்தும் கூத்திற்காக வேலைகள் நடந்து கொண்டிருக்க அதை மேற்பர்வை பார்த்துக் கொண்டிருந்தான் தரன், அவனுடன் இணைந்து கலை நிகழ்த்துவதை பற்றிய மனைவியின் சந்தேக கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்துக் கொண்டிருந்தான்.

குரு, கேசவன் இருவரும் வேலையின் நடுவே ஆலோசனைக்காக தரனை அணுகினர்... “ஏன்பா தரா நம்ம கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் கூத்து நிகழ்ச்சியை பார்க்க வர்றவங்ககிட்டே நன்கொடை வசூல் பண்ண சொன்னதுக்கு வேண்டம்ன்னு சொல்லிட்டேன்னு சொன்னங்க... நாங்களும் நீ சொன்னா எங்களுக்கு சரின்னு தான் சொன்னோம்”

“ஆனா அவங்க எதுக்கும் நல்லா யோசிச்சு ஒரு முடிவை எடுங்க, இது உங்களுக்கு தேவைப்படாட்டியும் உங்களை போல இருக்கிற மத்த அஞ்சு குடும்பத்துக்கு தேவைப்படலாம்ன்னு சொல்றாங்க”

“இல்லைப்பா நாம அதெல்லாம் பண்ண வேண்டாம் நாம வேற விதத்தில் அவங்களுக்கு உதவி செய்துக்கலாம்” என்று மறுக்க, இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சம்யுக்தா இடைபுகுந்து...

“மாமா நீங்க தப்பா நினைக்கலைன்னா இதுக்கு நானும் ஆலோசனை சொல்லலாமா?” என்று தயக்கத்துடன் கூறியவளை...

“என்னம்மா நீ இப்படி கேட்டுட்ட? நீயும் நம்ம குடும்பத்து பொண்ணுமா தாராளமா சொல்லலாம்” என்று கேசவன் அனுமதித்ததும் தன் அபிப்ராயத்தை கூறலானாள்.

“கவின் நீங்க ஏன் மாமா சொல்லுற மாதிரி இதுக்கு பைசா வசூல் பண்ணக்கூடாது?”

“இல்லை யுகி வேண்டாம், எனக்கு இதில் சுத்தமா விருப்பமில்லை... கலையை விற்கிற மாதிரி இருக்கு... நம்மளுடைய கலாச்சாரத்துக்கு விலை பேசுற மாதிரி இருக்கு. அதுவுமில்லாம கோவில் நிர்வாகம் இதை வாங்கி தெய்வ சந்நிதானதுக்கோ இல்லை; அன்னதானத்துக்கோ செலவு செய்தா பரவாயில்லை... அவங்க அவங்க சொந்த செலவுக்கு பட்டை தீட்டிக்குவாங்க அப்போ நம்மளுக்கு என்ன மதிப்பு”

“ம்ஹும்...! இது அப்படி இல்லைங்க இந்த உலகத்தில காசில்லாத எதுவும் மதிக்கப்படுறதில்லை... மதிப்பை நிர்ணயிக்காத ஒரு விஷயத்துக்கு பின்னாடி பல மதிப்பு இருக்குன்னு அவங்களுக்குப் தெரியறதில்லை... சில விஷயங்களுக்கு நாம விலை வைக்கணும் கவின், அப்போ தான் அவங்களுக்கு அதனுடைய மதிப்பு தெரிய வரும்... சினிமா படத்தை தியேட்டரில் பார்க்கப் போறவங்க சும்மாவா போறாங்க அதுக்கு ஐந்நூறு ருபாய் செலவு பண்றாங்க அதே போலத் தான் இதுவும்”

“ஆனால் இது எப்படி நம்ம கலை சேர்ந்த குடும்பத்துக்கு சேரும் அது சந்தேகம் தான்”

“நீங்க ஏன் இப்படி செய்யக்கூடாது... அதவாது இதுக்கான வசூலை நமக்கு தெரிஞ்ச குடும்பத்தோட ரெண்டு பேரோட தலைமையில் போட்டு அதை பொதுவா நிறுத்தி பிரிச்சுக்கக்கூடாது” என்றவளின் யோசனை உசிதமாகப்பட்டது.

“ஆமாம் தரா மருமகள் சொல்லுறது சரி தான்... நம்ம வீட்டுக்கு மேற்கே இருக்கிறாங்களே ராவ் குடும்பம் அவங்க தலைமையில் செய்வோம் அவங்க நியாயஸ்தர் நிச்சயமா இதுக்கு உதவியா இருப்பாங்க”

“அப்போ சரி! நீங்க மேடை அமைப்பை பார்த்துகிட்டு இருங்க, நானும் குரு அப்பாவும் போய் கமிட்டி தலைவர்கிட்டே பேசிட்டு மோகனை வர சொல்றேன்” என்று கூறிவிட்டு நகர்ந்திருந்தான்.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 41 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

******இன்னும் மூன்று அத்தியாயங்களில் கதை முடிவடைந்துவிடும் மக்களே முழுதாக படிக்க ஆரம்பிப்பவர்கள் படிக்கவும் மக்களே.******

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 
Status
Not open for further replies.
Top