All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-32

ஆதவன் தன் கதிர்களை பரப்பி சுள்ளென்ற காலை நேர ஒளியினால் ஊடுருவி அவன் வதனத்தை தீண்டியதில் தான் ரஞ்சனுக்கும் சுரணை வர...

“ம்ச்...!” என்று உச்சுக்கொட்டி சலித்தபடி சிரமத்துடன் இமைகளை பிரிக்க போராடிக் கொண்டிருந்தான்.

மெல்ல தன்னிலை உணர்ந்து இரவில் நடந்தவைகள் அசைபோட்டவனுக்கு தன் தவறு புரிய வர வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தவன் மனைவியையும், மகளையும் தான் தேடலானான். வீடு முழுக்க தேடியும் எங்கும் தென்படாமல் போகவே நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது.

“வாணி எங்க டி போன?” என்றவன் உடல் அச்சத்தில் வியர்க்க ஆரம்பித்தது... தன் உள்ளங்கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவனுக்கு நூறுமடங்கு வேகமாக சிந்தனைகள் சுழன்றது. நொடியும் தாமதிக்காது அதிவிரைவாக கிளம்பியவன் தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு அவளை தேடிப் பார்க்க செல்லலானான்.

தன் கணவனின் அச்சத்தையும், பதற்றத்தையும் அறியாத வாணியோ அன்பழகன் வீட்டில் விச்ராந்தியாக உறவாடிக் கொண்டிருந்தாள். அந்த அர்த்த ஜாம நேரத்தில் குழந்தையுடன் தனியாக வந்தவளிடம் ரமாவிற்கு கேட்க ஆயிரம் கேள்வி இருந்தும் அன்பழகன் இப்போது எதுவும் கேட்காதே என்ற வார்த்தையை ஏற்று அவளிடம் கேட்காமல் விட்டுவிட்டார். தன் சொல்லுக்கு மதித்து மிகவும் தயாள குணத்துடனே அவளை வரவேற்று அவரின் மகளை போல் பார்த்துப் பார்த்து உபசாரம் செய்யலானார்.

மகளுடன் நேரம் செலவழித்துக் கொண்டிருந்த வாணியின் முகத்தில் கணவனை அம்போவென்று விட்டு வந்த துயரம் சிறிதுமின்றி இருந்ததை கவனித்தவர் சிந்தனையுடன் நெருங்கினார்.

“ஏன்மா வாணி நேத்து நீ ஏன் திடிர்னு கிளம்பி வந்த உனக்கும், ரஞ்சனுக்கும் என்ன பிரச்சனை?” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக கேள்விக்கு தாவியவரின் பேச்சும், பார்வையும் அவளை ஊடுருவி துளைத்ததில் பேதலித்தவள் தன்னை சரிபடுத்திக் கொண்டு இரவு நடந்ததை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாள்.

“அவர் குடிச்சுட்டு வந்ததும் இல்லாம போதையில என்ன பேசுறோம் என்ன பண்றோம்னு தெரியாமலேயே தள்ளாடுறார் இது தான் திருந்தி வாழுற லட்சணமா?” கோபத்தில் மூக்கு விடைக்க சலித்துக் கொண்டவளை நமட்டு சிரிப்புடன் நோக்கினார்.

“சரி நான் கேட்கிறதுக்கு ஆமாம் இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு போதும்” என்றவர் தொடர்ந்து...

“ரஞ்சன் குடிக்கிறது இப்போ தான் தெரியுமா?”

“இல்லை ஆண்டி முன்னாடியே தெரியும்... லவ் பண்ணும் போதே அவர் சொல்லியிருக்காரு”

“அப்போ அவன்கிட்டே நீ எந்த எதிர்ப்பும் சொல்லலை சரி தானே?” என்றதும் திடுக்கிட்டு பார்த்தவளுக்கு அவளை கண்டு கொண்டதை எண்ணி முகம் சிறுத்துப் போனது.

“இல்லை” என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்தாள்.

“ஏன் நீ அப்போ மறுப்பு சொல்லலை?”

“அது... அது வந்து” என்று தட்டு தடுமாறிக் கொண்டிருந்தவளை நோக்கி...

“ஏன்னா அப்போ காதல் கண்ணை மறைச்சிருச்சு அப்படித்தானே?”

“இல்லை ஆண்டி அது அப்போ... இப்போ நான் எத்தனை பிரச்சனைகளை கடந்து வாழ வந்திருக்கேன், அவர் எனக்காக பார்க்கலைனாலும் அட்லீஸ்ட் பிள்ளைக்காக பார்க்க வேண்டாமா?”

“நியாயம் தான்! ஆனால் இதையும் யோசி காதலிக்கும் போது சகஜமாக ஏற்றுக்கிற விஷயத்தை கல்யாணம்ன்னு ஆனா ஏத்துக்க மாட்டாங்க இதில் ஆண், பெண் பேதைமை இல்லாம ரெண்டு பேருக்குமே சமம்”

“காதலிக்கும் போது எதிர்க்க தோணாத ஒரு விஷயம், இப்போ உனக்கு எதிர்ப்பா தெரியுது... இதுலையே உனக்கு புரிஞ்சிருக்கணும் காதல் வேற, கல்யாணம் வேறன்னு” என்றவரின் பேச்சை புரிந்து...

“ம்ம்ம்” என்று மேலும் கீழும் தலையசைக்க விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார்...

“உன் புருஷன் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பண்ணியிருந்தாலும் அது கடந்தகாலம் இப்போ அது எல்லாம் மாறப் போறதும் இல்லை, அதை மாத்துற சக்தியும் நம்மகிட்டே இல்லை... ஒருத்தன் தப்பை திருத்தி வாழ நினைக்கக்குள்ள பழசை கிளருறது குப்பையை கிளருறதுக்கு சமம், அது வாழ்க்கையை சீராக்குமா? யோசி வாணிமா, நீ படிச்ச பொண்ணு அவசரப்பட்டு எதையும் செய்யாம நிதானத்தை கடைபிடி... நான் உனக்கு அறிவுரை சொல்லுறேன்னு சொல்லிகிட்டே போகலாம் நீயும் நம்ம ஆண்டி அவங்ககிட்டே தானே அடைக்கலம் தேடி வந்திருக்கேன்னு கேட்டுக்கலாம்... ஆனால், இதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டி எரிச்சலை ஏற்படுத்திரும், உங்க விஷயத்தை நீங்களே சரி செய்ய முயற்சி பண்ணுங்க” என்றவர் தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து நகர்ந்திருக்க, வாணியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்திருந்தது.

ரஞ்சன் உணவு தண்ணீர் இன்றி அலுத்து, களைத்து சாலையில் திரியும் ஞாளியை போல் ஊரை சுற்றி திரிந்து தன் மனைவியை வலை வீசி தேடிக் கொண்டிருந்தான். அவன் முகமோ பீதியில் வெளுத்திருக்க நிமிடத்திற்கு நிமிடம் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டே சென்றது.

“வாணி எங்க டி போன?” என்று பித்துக்குளி போல் சிகையை விரல்களால் பிய்த்து கொள்ளாத குறையாக அழுந்தப் பிடித்துக் கொண்டவன் முகம் இருளடைந்து போனது. எங்கே தன் தவறால் மீண்டும் மனைவி மகளை தொலைத்துவிட்டோமோ? என்று சிந்தனை தறிகெட்டு பறக்க பேயறைந்ததை உடல் வெலவெலக்க ஜீவனற்று தவித்து நின்றான்.

“இனி எங்கன்னு போய் தேடுறது? வாணி ப்ளீஸ் வந்திரு என்கிட்டே” என்று மனதார வேண்டிக் கொண்டிருந்தவனுக்கு... அன்பழகனின் அழைப்பும் அவர் கூறிய தகவலும் அவன் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்க அவனின் ஜீவன் மீண்டு உலகமே வெளிச்சமாகியது போல் இருந்தது... வாணியும், குழந்தையும் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை அறிந்ததும் மெல்ல தன்னிலைக்கு வந்தவன் உடல் அத்தனை நேர படப்படப்பில் பலமின்றி துவள சற்று நேரம் காரின் ஸ்டீரிங்கில் முகம் பதித்து அமர்ந்துவிட்டான்.

சில கணங்கள் சென்றதும் பதற்றம் குறைந்து பலம் திரும்பியிருக்க, வெடுக்கென்று தலையை உயர்த்தியவன் ஆவேசத்துடன் அன்பழகன் வீட்டை அடைந்திருந்தான்... உன் மத்தம் பிடித்தவன் போல் வந்து நின்ற ரஞ்சனை ரமா, அன்பழகன் இருவரும் திகைத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை சட்டை செய்யாமல் நேரே வாணியை நெருங்கியவன் அவள் சுதாரிப்பதற்குள் கன்னத்தில் சப்பென்று அறைந்திருந்தான்.

அவனின் செயலைக் கண்டு ரமாமணி கண்டிக்க முனைய, அன்பழகன் பார்வையால் குறிப்பு காட்டி மனைவியின் கரத்தை பிடித்து நிர்தாட்சண்யமாக தடுத்துவிட்டிருந்தார். வாணிக்கு தன் கணவனின் எதிர்பாராத தாக்குதலில் சிக்கியவளுக்கு உள்ளம் அச்சத்தில் தூக்கிவாரிப் போட கலங்கிப் போனாள்.

“உனக்கும் எனக்கும் ஆயிரம் மனஸ்தாபம் இருக்கட்டும், என் மேல் தீராத கோபம் கூட இருக்கட்டும் அதுக்காக என்கிட்டே சொல்லாம வீட்டை விட்டு போனா போடின்னு விட்டிருவேன்னு நினைச்சியா?” ஆவேசம் சிறிதும் குறையாது சினத்தில் உடல் நடுங்க கூறியவனின் வார்த்தையில் மறைந்திருந்த ஆக்ரோஷம் பொங்கியெழ...

“என்னை அப்படி போடின்னு சொன்ன ஆளு தானே நீங்க? என்னை கேட்கவும், அடிக்கவும் உங்களுகென்ன அருகதை இருக்கு?” கண்களில் கோபம் கொப்பளிக்க சீறினாள்.

“ஆமாம் டி நான் சொன்னவன் தான்... நான் யோக்கியன் இல்லை, அயோக்கியன் தான்... என்கூட வாழத் தானே வந்த.....?” என்றவனின் பேச்சு முடிவுறாமல் தடைபட்டது வாணியின் இடையிட்டில்.

“உங்க கூட நான் வாழ வரலை, என் பொண்ணு சமுதாயத்தில் கௌரவமா வளரணும், அதுக்காக அவ அப்பாவா இருக்கிற உங்க கூட இருக்க வந்திருக்கேன்” என்றதும் ஆத்திரம் சீறிப்பாய...

“ஏய்இ...” என்றவன் கரம் திரும்பவும் அவளை தாக்க வேகத்துடன் ஓங்கி உயர்ந்திருக்க வாணி சுதாரித்து விலகி நிற்கவும், அந்தரத்தில் தொங்கி ஊஞ்சலாடி கொண்டிருந்தது.

“அறிவுகெட்டத்தனமா பேசினா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன் பார்த்துக்கோ” என்றவனை அசராமல் பார்த்திருந்தாள்.

“காலைல இருந்து பல்லுல பச்சைத்தண்ணி படாம நாய் மாதிரி தெரு தெருவா அலைஞ்சு திரிஞ்சேன்டி... ஆனால் நீ என்கிட்டே ஒரு அனுமதி கேட்காம, தகவல் சொல்லாம ஹாயா இங்க வந்து உட்கார்ந்திருக்கிற? இன்னைக்கு ஒரு நாளையில் நான் எத்தனை தடவை செத்து பிழைச்சேன் தெரியுமா? பாவி...!”

“...........” வேகமூச்சுகளை எடுத்து தன் கோபத்தை சமன் செய்துக் கொண்டவன்...

“இனி ஒரு நிமிஷமும் இங்கே இருக்கக்கூடாது ஒழுங்கா கிளம்பு எதுனாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்”

“வர முடியாது” அழுத்தமாக பதிலளித்தவளின் குரலில் காரம் ஏறியிருந்தது...

“ஏன்?”

“குடிகாரன் கூட எல்லாம் குடும்பம் நடத்த முடியாது?”

“என்ன? என் கூட குடும்பம் நடத்த முடியாதா? இதுக்கு முன்னாடி மட்டும் நல்லா ஜெகஜோதியா குடும்பம் நடத்திட்ட மாதிரி தான்... எப்படியும் என்னை சித்திரவதை தான் பண்ணுவா, அதை கூட இருந்தே செய்து தொலை” என்றவனின் இதழ்கள் ஏளனத்தில் வளைந்தது.

“சரி சித்திரவதை பண்ணுறவ உங்களுக்கு எதுக்கு? உங்க கூட வர முடியாது கிளம்புங்க” என்றதும் பொறுமையை காற்றில் பறக்க விட்டவன்...

“என் பொறுமையை சோதிக்காதே... நான் தான் உன் புருஷன், உங்க வீட்டில் என்னை நம்பி தான் உன்னை அனுப்பி வச்சிருக்காங்க ஒழுங்கா என்னுடன் வா” வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன் தன்மையாக விளம்ப எதற்கும் அசையாத வாணியோ...

“முடியாது! முடியாது! முடியாது!” என்று பிடிவாதத்துடன் மறுக்க... சினத்தில் நரம்புகள் புடைக்க கைமுஷ்டியை இறுக்கியவன் பற்களை நெரித்துக் கொண்டபடி...

“அப்போ! என் மகளை கொடு டி” என்று சிறிதும் தயவின்றி வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு சென்றிருந்தான்.

அவனின் செயலில் வாணி நிலைகுலைந்து நின்றாள். ரமா அவளை சற்று வருத்தத்துடன் பார்த்தவரின் பார்வையில் அவள் செயலுக்கான எதிர்ப்பு இருக்கவே, உடல் கூசி நின்றவளின் சித்தம்... “எல்லாம் அவனால் வந்தது” என்று கணவனை நிந்தித்து கொண்டிருந்தது.

**********************

மலரின் காரணமாக ஏற்பட்ட சச்சரவுக்கு பிறகு தரன் தன் மனைவியிடம் பேசுவதை தவிர்த்திருந்தான்... அவன் எப்போது வருகிறான், எப்போது செல்கிறான் என்றே அறியாது சம்யுக்தா புரியாது குழப்பத்தில் இருக்க, அன்று எப்படியேனும் கணவனிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் தன் அலுவலக பணியையும் சேர்ந்தே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கலாதரன் வெகு தமாதமாகவே வீட்டிற்கு வந்தவன் முகம் மிகவும் களைப்புற்று வாடிப் போய் தெரிந்தது... கணவனின் வருகையும், அவன் முகத்தில் தெரிந்த அபரீதமான களைப்பும், எதையோ தவறென சுட்டிக் காட்டியது. சம்யுக்தா நொடியும் தாமதியாமல் எழுந்து அவனுக்காக பாதம் கலந்த பாலும், பழமும் எடுத்து வந்தவள் அங்கிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு...

“இதை குடிச்சுட்டு பழம் சாப்பிடுங்க, ஆல்ரெடி லேட் ஆகிருச்சு, இதுக்கு மேல சாப்பிட்டா உடம்புக்கு பிரச்சனை” என்று அக்கறையாக கூறியவளின் வார்த்தையை சிறிதும் சட்டை செய்யாமல் தன் போக்கில் இரவு உடைக்கு மாறிக் கொண்டிருந்தவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன் எதுவும் பேசவே மாட்டேங்குறான்’ என்று பேசிக் கொண்டவள் அவனிடம் அதை பற்றி நேரடியாகவே விளம்பினாள்.

“என்னாச்சு உங்களுக்கு? எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க? சாப்பிட சொன்னா சாப்பிட மாட்டேங்குறீங்க, எங்கே போறீங்க, எப்போ வரீங்கன்னு ஒண்ணுமே தெரியறது இல்லை... பொண்டாட்டின்னு ஒருத்தி நான் இங்கே எதுக்காக இருக்கிறேன்” என்றவளை கூர்மையாக பார்த்தவனின் பார்வையில் குற்றச்சாட்டு இருந்தது.

“நீ வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசுவ நான் கேட்டுகிட்டே இருக்கணுமா? அதுதான் சொன்னியே என்னை விட நல்ல வசதியான பையனா பார்த்து கல்யாணம் பண்ணியிருப்பேன்னு, நான் தான் அதில் மண்ணை வாரிப் போட்டுட்டேன்... தப்பு தான்! என்னை மன்னிச்சிரு... நடந்ததை மாத்துற சக்தி என்கிட்டே கிடையாது, அதனால் எப்போ வேணும்னாலும் கேளு... இந்த எலி பொந்தில் என் கூட இருந்து நீ கஷ்டப்படாமல் இருக்க விடுதலை கொடுத்திடுறேன்” என்று விட்டு திரும்பியவனின் முழங்கையை இறுகப் பற்றிக் கொண்டவள் விழிகள் கனலை கக்கி கொண்டிருந்தது.

“நான் சொன்ன வார்த்தை மட்டும் தான் உங்களுக்கு பெரிய குற்றமா தெரியுதா, உங்க அம்மா பேசினது எல்லாம் தெரியலையா? என் அண்ணன் தப்பு செய்தவன் தான் அதுக்காக பாழுங்கிணறு அது இதுன்னு சொல்லலாமா?”

“அவங்க சொன்னது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை... ஏதோ பெத்த பொண்ணு வாழ்க்கை இப்படி போராட்டமா போயிருச்சேங்கிற ஆதங்கத்தில் வார்த்தையை விட்டுட்டாங்க... ஆனா அவங்க சொன்ன வார்த்தையும், நீ சொன்ன வார்த்தையும் ஒண்ணாகிருமா? என் முன்னாடியே இன்னொருத்தனை கல்யாணம் செய்திருப்பேன்னு சொல்லுற, இதே வார்த்தையை நான் சொல்லியிருந்தா நீ கேட்டுட்டு சும்மா இருந்திருப்பியா?” என்றதும் அவன் வார்த்தையில் இருந்த உண்மை அவள் மனதை சுட, தன் தவறை உணர்ந்தவளாக பார்வையை தாழ்த்தி உதட்டை கடித்துக் கொண்டாள்.

சில கணங்கள் அவளை வெறித்துவிட்டு அவளுக்கு முதுகை காட்டி படுத்துக் கொள்ள, தானும் அவனுக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டாள்... கணவன், மனைவி இருவரும் இரு வேறு துருவங்களாக சயினித்திருந்தவர்களின் விழிகள் நித்திரையை தொலைத்து வெற்று சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தது.

மலருக்கு பள்ளிக் கல்வியின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க, ஆடை வடிவமைப்பு துறையில் அவளுக்கு வெகுவாக நாட்டம் இருந்ததில் அதை தேர்ந்தெடுக்க திட்டமிட, அதற்கு குழலி பலமான எதிர்ப்பு தெரிவித்ததை சம்யுக்தா, தரன் இருவரும் முறியடித்திருந்தனர்... குருதரன் தான் மனைவியிடம், மகளின் ஆர்வத்தை பற்றி பக்குவமாக எடுத்துக் கூறினார்.

“ஒருத்தியை ஊருவிட்டு ஊரு அனுப்பி வச்சே வாழ்க்கை வீணாப் போச்சு, இதுல இன்னொருத்தியும் அப்படியே அனுப்புறதா, ஊர் உலகம் நம்மளைத் தான் தப்பு சொல்லும்”

“யார் என்ன சொன்னா நமக்கென்ன குழலி? நமக்கு ஒண்ணுன்னா பார்க்கப் போறது நம்ம பிள்ளைகள் தான், ஊருக்காக அவங்க மனசை நோகடிக்கிறது நல்ல அம்மா, அப்பாவுக்கு அழகில்லை”

கோவையில் உள்ள கல்லூரிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டி சம்யுக்தாவின் உதவியை நாடி அதை செய்து முடித்தவளிடம்... “அப்ளிகேஷன் பீஸ், எண்ட்ரன்ஸ் பீஸ் ஆன்லைன் பேமென்ட் மோடில் டிக் பண்ணிரு” என்று கூறி அவளை வழி நடத்திக் கொண்டிருக்க, காற்று வாக்கில் தரனும் அதை கேட்டுக் கொண்டவன் மலர் அங்கிருந்து நகர்ந்ததும் தன் மனைவியை நாடியவன்...

“இந்த பணம் மலருக்கான படிப்பு செலவுக்கானது, அவளுடைய தேவைகளை நான் பார்த்துக்கிறேன்” என்றவன் மேஜை மேல் வைத்துவிட்டு நகர்ந்திருக்க, கணவனின் அன்றைய பேச்சும் இன்றைய செயலும் அவளை ஒதுக்கிவிட்டதாக கருதியவளுக்கு மனம் வெறுத்துப் போனது.

**********************

ரமாமணியின் அறிவுரையில் வாணி ரஞ்சனிடம் மல்லுக்கட்டாமல் அமைதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள்... ஆனால் எக்காரணம் கொண்டும் அவனுடன் சேர்ந்து இருக்கும்படி அவள் சூழ்நிலையை தக்க வைத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள தனியறையில் தங்குவதை வாடிக்கையாக்கி கொண்டிருந்தாள்... முன்பிலும் இருமடங்கு அதிகமாக அவனுடனான ஒதுக்கத்தை கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமாக இருக்கவே அவனுக்கு மனம் வலித்தது.

அவர்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தால் பெரும்பாலும் அது அவர்களின் மகளை முன்னிட்டே இருந்தது... விரைவில் வரவிருந்த வியனியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எண்ணிய ரஞ்சன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

வாணிக்கும், மகள் வியனிக்கும் புதிய ஆடைகளை அவனே தேர்வு செய்து வந்திருக்க அதை தன் மனைவியிடம் சமர்பித்தான்.

“வாணிமா, இந்தா உனக்கும் நம்ம பொண்ணுக்கும் பர்த்டே ஃபங்சன்க்கு வேண்டிய டிரஸ், நம்ம கடையில ரெகுலர் சப்ளையர்கிட்டே உங்களுக்காக ஸ்பெசலா ஆர்டர் பண்ணி வாங்கியிருக்கேன்”

“எங்கே கொடுங்க பார்க்கலாம்” என்று பெற்றுக் கொண்டவள் முதலும் முக்கியமாக அவள் பார்த்தது விலைபட்டியல் அடங்கிய சீட்டை தான்.

“என்னங்க இது பதினஞ்சாயிரம் போட்டிருக்கு, என்கிட்டே இப்போ பத்தாயிரம் தான் இருக்கு அதுவுமில்லாம இவ்ளோ காஸ்ட்லி சேலை எல்லாம் எனக்கு வேண்டாம், இரண்டாயிர ரூபாயில் இருந்தா போதும்... உங்க பொண்ணுக்கு அப்படியே விட்டுட்டு எனக்கு மாத்திருங்க, இந்தாங்க ஐயாயிரம் ரூபாய்” ஏதோ அவள் மூன்றாம் மனுஷியை போலவும், ரஞ்சன் கடை முதலாளி போலவும் பாவித்து பேசி அவனிடம் பணத்தையும் நீட்டியவளை நோக்கி பார்வையை கூர்மையாக்கி கொண்டவன்...

“இங்கே பாரு இதுக்கு நான் ஏதாவது அசிங்கமா கேட்டு விட்டிருவேன்” என்றவன் சினத்தை கட்டுபடுத்திக் கொள்ள பற்களை நெரித்து கொண்டிருந்தான். அவனின் பேச்சை கேட்டு அவள் கண்கள் இடுங்க...

“என்னங்க ஆச்சு?” ஒன்றும் அறியாதவளை போன்று கேட்டு வைத்து அவன் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்.

“ம்ம்ம்... வெங்காயம் ஆச்சு... இந்த காஸை எல்லாம் சேர்த்து வச்சுக்கோ... நான் செத்தா எனக்கு கருமாரி செய்ய இந்த பணத்தை உபயோகப்படுதிக்கோ” அவளால் உண்டான வெப்பத்தில் சற்று காட்டமாக கூறியிருக்க, அவன் வார்த்தையில் நடுங்கிப் போனாள்... என்ன தான் அவன் ஆகாத கணவன் என்றாலும் அவளுக்குள் இருந்த நேசம் என்னும் வேர் அவனின் சொல்லில் அவளை ஆட்டுவித்திருந்தது.

“ஏன் ரஞ்சன் இப்படி பேசுறீங்க? தயவு செய்து இப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்றவளின் குரல் பீதியில் நடுங்கியது.

“வேற என்னத்தை சொல்ல சொல்லுற? நானும் திருந்திட்டேன்னு இன்னும் எப்படி நிரூபிக்கிறதுன்னு எனக்கு தெரியலை வாணி?”

“...........”

“நான் செத்தாதான் என்னை மன்னிப்பேன்னா அதுக்காகவாச்சும் என் உயிர் போகட்டும்” என்றவன் நிமிடமும் தாமதியாமல் அங்கிருந்து நகர்ந்திருக்க விக்கித்துப் போனாள்.

அவன் பேச்சில் அரண்டு போயிருந்த வாணி அதன் பிறகு அது போன்ற செயலையோ, பேச்சையோ அவனிடம் மறந்தும் பேச துணியவில்லை... மகளின் பிறந்தநாள் விழாவை மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் மனோரஞ்சன்.

ரஞ்சன் தேனி சென்று நேரிலேயே அர்ஜுன் மற்றும் தரன் குடும்பத்திற்கு அழைப்பு விடுவித்திருக்க, அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டனர்... பூங்குழலிக்கு மகள் எப்படி அங்கே இருக்கிறாளோ என்று வேதனையில் இருந்தவருக்கு, அவளின் படாடோபம் கண்டு மனக்கவலை நீங்கியவராக உற்சாகமாக வளைய வந்தார்.

குருதரன், கேசவதரன் இருவருக்கும் அதே மனநிலை தான் என்பதால் மேற்கொண்டு என்னவென்றாலும் தரனும், மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எண்ணம் துளிர்விட்டது.

அரசியும், அர்ஜுனும் இணைந்து பிறந்தநாள் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தனர்... “பரவாயில்லை பையன் அடிபட்டதும் தான் திருந்தியிருக்கான்... சும்மாவா சொன்னாங்க அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டங்கன்னு” என்று மனைவியிடம் கூற அரசியோ...

“என்னங்க ஏதேதோ சொல்றீங்க? ரஞ்சன் அடி வாங்குனாரா?” என்று கண்கள் சுருக்கி கேட்டவளின் கேள்வியில் தான் வாய் தவறி உளறியிருப்பதை உணர்ந்தவன் தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டான்.

“ஹிஹிஹி! அதெல்லாம் ஒண்ணுமில்லை அரசி... இந்த ரஞ்சனுக்கு இப்போ வந்த புத்தி இதுக்கு முன்னாடி எங்க போச்சுன்னு தெரியலை, ஒரு வேளை மூளையை குத்தகைக்கு விட்டிருந்திருப்பான் போல” என்று பகடி பேசிவிட்டு அவள் அடுத்த கேள்வியை கேட்க வழியின்றி...

“அங்க என்ன வைக்கறீங்க?” என்று கேட்டபடி வேலை ஆட்களை நெருங்கினான்... அங்கே சிறிய மேடை போல் அமைத்து இசை வாசிப்பு உபகரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தவர்களை கண்டு அரசிக்கும் என்னவென்று விசாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்க அவனை தொடர்ந்து சென்றிருந்தாள்.

தரன் தயாராகிக் கொண்டு திரும்பியவன், அப்போதும் சம்யுக்தா வாராமல் இருக்கவே, அவன் பார்வை இன்னும் தயாராகாமல் இருந்த மகள் மேல் படிந்தது... அவளோ கட்டிலில் இருந்த மாத நாளிதழை சுருட்டி அதை முழுவதுமாக வாயில் திணிக்க முயன்று கொண்டிருந்ததை கண்டு அவளிடமிருந்து பிடுங்க, அழுகையில் உதடு பிதுங்கியதை கண்டு வேறொரு பொம்மையை கொடுத்து சமாதானம் செய்ய முயன்று அதில் வெற்றியும் பெற்றான். அதே சமயம் அவன் மனைவி அங்கே பிரசன்னமாக...

“ஏய் இன்னும் குழந்தையை ரெடி பண்ணாமல் என்ன பண்ணுற?” என்று அதிகாரமாக கேட்க, அவளோ அசட்டையாக அவனை பார்த்தவள்..

“ஏன் உங்க பிள்ளையை நீங்க ரெடி பண்ணுங்க... நான் என் அண்ணன் பெண்ணை ரெடி பண்ணனும்” என்றவள் ரஞ்சன் மகளிடம் திரும்ப கோபமாக பேச முனைந்தவனின் செயல் தடைப்பட்டது வாணியின் வரவில்.

“அண்ணி இந்தாங்க நீங்க கேட்ட லோசன்” என்று கொடுத்தவள் வேகமாக அங்கிருந்தும் நகர்ந்திருந்ததும்...

“ஏய் உன் அண்ணன் மகளை உன் அண்ணன் ரெடி பண்ணமட்டானா... இல்லை; அவ பொண்டாட்டி பார்க்கமாட்டாளா, முதலில் நீ என் பொண்ணை பாருடி” என்று அதட்டல் போட அவளோ அவனின் பேச்சு எதையும் சட்டை செய்யாமல்...

“தங்கப் பொண்ணுக்கு ட்ரஸ் அழகாயிருக்கு” என்று கூறி அவள் பூ போன்ற கன்னத்தில் முத்தமிட்டு மகளை தூக்கிக் கொண்டு சென்றிருந்தாள். தரன் நேரமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் பல்லை கடித்தப்படி மனைவியை கரித்துக் கொட்டிக் கொண்டே மகளை தானே தயாராக்கினான்.

இரவு பல வகையான உணவு வகைகளுடன் கேக் வெட்டும் நிகழ்வும் அருமையாக அமோகமாக முடிந்திருக்க, அவரவருக்கு வேண்டியது போல் பஃப்பே முறையில் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் கதை பேசியபடி உணவை உட்கொண்டனர்.

இவர்களின் பொழுதுபோக்கிற்காக என்று பாட்டு கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தான் ரஞ்சன். அச்சமயம் கச்சேரியும் தொடங்க...

கொஞ்சிக் கொஞ்சி
பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி
வீசிவரும் அலைபோல
நெஞ்சில் என்றும் தங்கும்
சங்கக் கவிபோல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க
வாழ்த்துகிறோம்
பூ தூவுகிறோம்

என்ற படலை ஒலிக்கச் செய்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி சற்று சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தன.

இரண்டு வரிகளில்
திருக்குறள் இருந்திட
காரணமிருக்கிறதே
கணவன் ஒருவரி
மனைவி ஒருவரி
அர்த்தம் கிடைக்கிறதே


யார் பெரிதென்ற
எண்ணங்கள் வேண்டாம்
சிந்தித்துப்பாருங்களேன்
சரிசமமாய் உள்ள
தூண்களில்தானே
நிற்கும் கோபுரங்கள்


என்ற வரிகளில் மூன்று ஜோடிகளின் பார்வையும் அவரவர் இணைகளுடன் சந்தித்துக் கொண்டன. தர்சன் பாடலை மேம்போக்காக ரசித்துக் கொண்டு வியனி, நிலாயாழினி இருவரையும் தரையில் நிற்க வைத்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.

சந்தேகம்தான்
தீயை வைக்கும்
நம்பிக்கைதான்
தீபம் வைக்கும்
இந்த விண்னும் மண்னும்
உள்ள நாள் வாழ்க!

என்ற வரிகள் சரியாக அரசியை குறிபார்த்து தாக்கியிருக்க, அவள் விழிகள் குற்றவுணர்ச்சியுடன் கணவனை தொட்டுக் கொண்டிருந்தது... அர்ஜுனோ அவளின் பார்வையின் பொருள் புரிந்தாலும், ஒன்றும் அறியாதவன் போல் அவளை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர் அவர் எண்ணம்
அவரவர்க்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம்
இருவருக்கிடையில்
அவசியம் இருக்கட்டுமே


ஒருவருக்கொருவர்
பாசம் தந்து
நன்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொருநாளும்
ஒருமுறையேனும்
ஒன்றாய் உண்னுங்கள்


இந்த வரிகள் சம்யுக்தாவை தட்டி எழுப்ப தன் கணவன் அன்று கூறிய வார்த்தைகளை நினைவுக் கூர்ந்து அவனை அர்த்தத்துடன் பார்க்க தரன் நமட்டு சிரிப்புடன் இமைசிமிட்டினான்.

கொஞ்சம் நீங்கள்
விட்டுத்தந்தால்
சொர்க்கம் உங்கள்
வீட்டைத்தட்டும்
காலம் எல்லாம்
உங்கள் நெஞ்சில்
பூப் பூக்கும்


என்ற வரிகள் மூன்று தம்பதியர்களையுமே அசைய வைத்திருக்க வரிகளின் அர்த்தமும், உண்மையும் புரிந்தவர்களாக கட்டுண்டு நின்றனர்.

பாடலை பாடி முடித்ததும் அங்கிருந்த அனைவரின் கரங்களும் ஒன்றிணைந்து தட்டி பலத்த கரகோஷம் எழுப்பியது... ரஞ்சனை பற்றி ஆதியந்தம் முழுவதும் தெரிந்தவர்களுக்கு அவனா இது போன்ற நிகழ்வை நடத்தினான் என்ற பிரமிப்பில் வாயை பிளந்தனர்.

அதை அவர்கள் வாய் வார்த்தையிலும் தவறாமல் கூறிவிட்டு செல்ல ரஞ்சன் அதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... ஆனால், அவர்களின் பேச்சில் வாணியின் மனதில் அவன் மேல் கொண்ட அபிப்ராயம் மாறுவதற்கான ஆரம்பமாக சலனம் ஏற்பட்டது.

அன்று இரவே குழலி, மல்லிகா இணைந்து அனைவரையும் ஒன்றாக அமர வைத்து திருஷ்டி சுற்றினர். அன்று ஓர் இரவு அனைவரும் விழா முடிந்த திருப்தி மட்டுமின்றி, இனி தங்கள் வாழ்வில் அவரவர் பங்கிற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற உறுதியை கொண்டே நித்திரையில் ஆழ்ந்தனர்.

அனைவரும் அங்கிருந்து அவரவர்கள் இருப்பிடம் நோக்கி நகர்ந்திருக்க, சம்யுக்தா தன் கணவனுடன் அங்கே நின்றவள் ரஞ்சனிடம் தொழில் சம்மந்தமாக பேசிவிட்டே புறப்பட ஆயத்தமானாள்...

“இங்கே பாரு வாணி என் அண்ணன்கிட்டே இனியும் பழசை கிளறி சண்டை போட்டுக்கிட்டு இருக்காதே... சீக்கிரமே வியனிக்கு ஒரு தம்பி பாப்பாவை ரெடி பண்ணு” என்க... வாணிக்கு முகம் சிவந்து வெட்கத்தில் தலைதாழ்த்திக் கொண்டாள்... ரஞ்சனோ யாருக்கு வந்த விருந்தோ என்று பற்றில்லாமல் உணர்ச்சியற்று நின்றிருந்தான்.

வியனியின் பிறந்தநாளுக்கு பிறகு வாணியிடம் சில மாற்றங்கள் விளைந்தது... அவனுடன் உண்ணும் உணவிலிருந்து தொழில் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். ரஞ்சன் அவளுடன் இணைந்து இணக்கமாக பேசினாலும், உண்டாலும் அதற்கு மேல் எந்தவித ஈடுபாடும் காண்பிக்கவில்லை. இருவருமே ஒரு எல்லைக்கு மேல் கடந்து செல்ல ஏதோ ஒன்று தடுத்ததில் ஒரே சிந்தனை அலையில் இருந்தனர்.

காலசக்கரம் வேகமாக சுழன்று நாட்கள் நகர்ந்தோட மாற்றம் இல்லாது சில சண்டை சச்சரவுகளுடன் நகர்ந்துக் கொண்டிருந்தது... சம்யுக்தா, தரன் இருவரும் அவரவர்கள் போக்கில் இருந்தனர். சம்யுக்தாவுக்கு தான் கணவன் தன்னிடம் இருந்து விலகியே செல்ல எண்ணுகிறானோ என்ற சந்தேககீற்று மூளையை குடைந்தது... அவர்களின் ஆரம்ப பிரச்சனையும் அதற்கு முட்டு கொடுக்க அவளுள் அது விருட்சமாக வளர ஆரம்பித்தது.

சம்யுக்தா அன்று காணொளி கூட்டத்திற்காக வெகு விரைவாக புறப்பட்டவள், குழந்தையை மலரின் பொறுப்பில் விட்டுச் செல்ல எண்ணி அவளை அணுகியிருந்தாள்.

“மலர் பாப்பாவை பார்த்துக்கோ நான் ஈவ்னிங் தான் வருவேன்”

“அண்ணி நான் இன்னைக்கு என் பிரெண்ட் வீட்டுக்கு போகணுமே?”

“அப்படியா நாளைக்கு போயிக்க முடியாத மலர்... இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கே நான் போயாகணுமே?”

“இல்லை அண்ணி, தப்பா நினைக்காதீங்க காலேஜ் போறதுக்கு முன்னாடி என் பிரெண்டோட அக்காகிட்டே சில புக்ஸ் வாங்கியாகணும், அவ நாளைக்கு அவங்க பாட்டி ஊருக்கு கிளம்புறா, அப்புறம் நான் காலேஜ் போனப்புறம் தான் வருவா அதனால இப்போ போனா தான் உண்டு”

“அப்படியா சரி விடு நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்”

“அண்ணி நான் மதியத்துக்கு மேல் தான் கிளம்பப் போறேன், வேணா பாப்பாவை அம்மாகிட்டே சொல்லி விட்டுட்டு அப்புறம் போறேன், நீங்க கவலைபடாம கிளம்புங்க” என்று கூற இருக்கும் வேலை பளுவிற்கு மறுப்பு கூறாமல் அவள் பேச்சிற்கு ஆமோதிப்பு அளித்துவிட்டு சென்றிருந்தாள்.

பூங்குழலி மருமகளிடம் காட்டும் வீராப்பை குழந்தையிடம் கட்டியதில்லை... பேத்தி என்ற உரிமையுடன் மகிழ்ச்சியுடனே சீராட்டினார்... ஆனால் மலர் கிளம்பும் போது எங்கே அவர் குழந்தையிடம் கோபத்தை காட்டிவிடுவாரோ என்று தவறாக புரிந்துக் கொண்டு...

“அம்மா பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோ, அண்ணி மேல இருக்கிற கோபத்தை நிலா மேல காட்டதே” என்றவளை முறைத்தவர்...

“அடிப்போடி கூறு கெட்டவளே உன் அண்ணிக்கும், எனக்கும் அடிக்கடி முட்டிக்குது தான்... அதுக்காக அவ எனக்கு மருமகள் இல்லைன்னு ஆகிருமா? இல்லை; இந்த தங்கம் தான் பேத்தி இல்லைன்னு ஆகிருமா? நான் ஒன்னுக்கு ரெண்டு பிள்ளைகளா உங்க அக்காவையும், உன்னையும் பெற்றிருக்கிறேன் எனக்கு தெரியும் பார்த்துக்க நீ வேலையை பார்த்துட்டு கிளம்பு”

“கூறுகெட்டவ இந்த வீட்டுக்கு நீ தான்டி வாரிசு உன்னை போய் நான் பார்த்துக்கமாட்டேனாம் உங்க சித்தி சொல்றா” என்று குழந்தையிடம் கூற, அவளுக்கு என்ன புரிந்ததோ தன் இரண்டொரு பற்களை காட்டி கிளுக்கி சிரித்தாள்.

அனைத்தும் நன்றானது போல் மலர் உற்சாகமாக கிளம்பினாள் அனைத்தும் அன்று மாலை வரை மட்டுமே நீடித்தது.

குழலி குழந்தையை விட்டு நகராமல் அடைகாத்துக் கொண்டிருந்தவருக்கு இயற்கை உபாதை குடைச்சல் கொடுக்கவே, அவளை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு கொல்லை பக்கம் சென்று விட்டு வந்து பார்த்தவர் பதைபதைத்து போனார்.


சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 32 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-33

குழலி பாதுக்காப்பாக குழந்தையை வாக்கரில் அமர வைத்து, ஜன்னல் கம்பியில் கயிற்றால் கட்டி குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் வரை மட்டுமே விட்டுச் சென்றார்... நிலாவுக்கு அருகிலிருந்த சிறு டப்பாவை எடுத்தவள் அதிலிருந்த கற்பூரத்தை எடுத்து விளையாடிக் கொண்டு சிறு அளவில் வாயிலும் போட்டிருக்க, சரியாக அந்நேரம் அதை கவனித்துவிட்ட குழலி பதறிக் கொண்டு அவளிடமிருந்து பறித்து தூக்கி எறிந்திருக்க... அவளோ “கோஒ” வென்று அழுக அதை சட்டை செய்யாது அவள் வாயையும் கழுவிவிட்டிருந்தார்.

மனைவியின் வேலையை அறிந்த தரனும் அன்று மாலையே வீடு திரும்பி குழந்தையை அவன் பொறுப்பில் பார்த்துக் கொண்டிருந்தான்... அனைவரும் அவரவர்கள் வேலையில் ஆழ்ந்திருந்த சமயம் திடிரென்று குழந்தையின் கைகால் வெட்டி இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ளியது கண்டு இதயம் தொண்டைக்குழியில் அடைத்துக் கொண்டது போல் பகீரென்று ஆகிப்போக...

“அம்மா... அம்மா...” என்று தரன் பதறி அழைத்துக் கொண்டு சென்றதும், அனைவருமே பதட்டத்தில் தலைகால் புரியாமல் ஆடிப் போயிருந்தனர்.

“அண்ணா உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்” என்று மலர் உந்தியதும் தான் பதட்டத்தில் இருந்து வெளிவந்த தரன், உடனடியாக மகளை அழைத்து செல்ல அனைவருமே மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தரனுக்கு அச்சத்தில் உடல் வியர்த்து போக, இதயம் தண்டவாளத்தில் புகைவண்டி செல்லும் வேகத்தில் தடக்தடக்கென்று அடித்துக் கொண்டிருந்தது... அவர்கள் செல்லும் போதே மலர் சம்யுக்தாவிற்கும் தகவல் கொடுத்திருந்தாள்.

மருத்துவமனையில் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் சம்யுக்தாவும் அங்கே பிரசன்னமாக அவள் முகமோ பதட்டத்திலும், பீதியிலும் உறைந்திருந்தது.

“குழந்தைக்கு என்னாச்சு?” என்று கணவனிடம் கேட்க...

“பிட்ஸ் வந்திருச்சு திடிர்னு”

“எப்படி கவின்? அவ நல்லா ஆரோக்கியமா இருக்கா, பின்னே எப்படி?” என்று பதறியவளின் நெஞ்சமும் அடித்துக் கொள்ள, அவளுடன் வந்த அர்ஜூனுக்கும் என்னவோ! ஏதோ? என்ற ரீதியில் அச்சம் கூடியிருந்தது.

அவர்களை எல்லாம் கலங்கடித்து விட்டு மருத்துவர் வெளியே வர, அனைவரும் ஒன்று கூடி அவர் முன்பு நின்றவர்களிடம்...

“குழந்தை நார்மல் ஆகிட்டா இனி பிரச்சனை இல்லை” என்றதும் தான் அனைவருக்கும் மூச்சே வந்திருந்தது.

“நிலா குட்டி ஹெல்த்தியான பொண்ணு டாக்டர் அவளுக்கு எப்படி பிட்ஸ் வந்துச்சு?” என்று சம்யுக்தா மருத்துவரிடம் தாய்மையின் தவிப்புடன் வினவியதில், அவள் தான் குழந்தையின் அன்னை என்பதை புரிந்துக் கொண்டவர்..

“ஆமாம் ஹெல்த்தியா இருக்கிறதால தான் சீக்கிரம் ரெக்கவர் பண்ண முடிஞ்சது மிசஸ்.தரன்”

“குழந்தை விளையாடும் போது வாயில் ஏதும் போட்டுக்கிட்டாளா?” என்று விசாரிக்க, குழலி கற்பூரத்தை தொட்டு விளையாடி வாயிலும் வைத்துக் கொண்டு அவர் பிடுங்கி எரிந்தது வரை கதையாய் விளம்பிவிட்டிருந்தார்.

“கற்பூரம் குழந்தைகளுக்கு ஆகாது, அதனால் தான் பிட்ஸ் வந்திருக்கு... அதை கையில் தொட்டு விளையாண்டு வாசனையே ஒத்துக்காது உங்க குழந்தை வாயில் போட்டிருக்கா நல்ல வேளை நீங்க சரியான நேரத்தில் பார்த்து எடுத்து மௌத்வாஷ் பண்ணிட்டதால பிரச்சனை இல்லாம போயிருச்சு... இனி அப்படி தொடாமல் பார்த்துக்கோங்க, ரெண்டு வாரத்திற்கு தொடர்ந்து செக்கப் வாங்க இப்போ குழந்தையை பார்க்க போகலாம்... ஆனால் எல்லாரும் ஒரேடியா போய் தொந்தரவு செய்யாம பதட்டப்படாம கையாளுங்க இல்லன்னா, உங்க டென்ஷன் பார்த்து கூட குழந்தைக்கு பயம் வந்திரலாம்” என்றவர் அடுத்த அறைக்கு சென்றிருக்க, அனைவரும் திகுதிகுவென செல்லாமல் மெல்ல அடியெடுத்து வைத்து மருத்துவர் சொன்ன பதட்டத்தையும், பயத்தையும் மறைத்துக் கொண்டு குழந்தையை அடைந்தனர்... மருத்துவர் கொடுத்த மருந்துகளும், சலைன் ஏறிக் கொண்டிருந்ததாலும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் நிலாயாழினி.

சம்யுக்தா மகளை தொட்டுப் பார்த்தவளின் கண்கள் கலங்கி சிவக்க கரிசனத்தில் இதயம் விம்மியது... பூங்குழலிக்கு அவள் தாய்மையின் வேதனை புரியவே...

“கலங்காதம்மா கடவுள் புண்ணியத்தில் சரி ஆகிட்டாளே” என்று கூறி ஆறுதல் அளிக்க ஆவேசமும், கோபமும் மிளிர பார்த்தவள்...

“ஏன்! என் பொண்ணு சரியானது கூட பிடிக்கலையா உங்களுக்கு? நான் உங்கக்கூட ஒத்து போக மாட்டேங்குறேன்னு என்னை பழி வாங்க முடியாம என் பொண்ணு மேல அதை காட்டியிருக்கீங்க” உதடுகள் துடிக்க, நாசி விடைக்க கோபத்துடன் கூறியவளின் குற்றச்சாட்டில் குழலி மின்சாரத்தில் தாக்குண்டது அதிர்ந்து பார்த்திருந்தார்.

“யுகி...!” என்ற அடிக்குரலில் அவளை தரன் கண்டிக்கவும் குழலிக்கு நிதர்சனம் உரைத்திருக்க...

“ஐயோ! என்னம்மா நீ இப்படி எல்லாம் பேசுற நிஜமாவே எனக்கு எந்த கோபமும் இல்லை, உன் பொண்ணு எனக்கு பேத்தி நான் போய் அவளை எப்படி அஜாக்கிரதையா பார்த்துக்குவேன்?” என்று கலங்கிய முகத்துடன் வேதனை ததும்பும் குரலில் விளக்கமளித்திருந்தார்.

“சும்மா நிறுத்துங்க, இந்த பாச்சா பேச்செல்லாம் என்கிட்டே வேண்டாம்... என்ன இருந்தாலும் என் புருஷன் உங்களுக்கு மூத்தார் மகன் தானே, அந்த வேற்றுமையை மனசில் வச்சுக்கிட்டு தான் பேசுறீங்க” தயவுதாட்சண்யம் பாராது வார்த்தை அம்புகளை வீசியவளை கண்டு முந்தானையால் வாய்மூடிக் கொண்டவரின் விழிகள் கண்ணீரை சொறிய, தரன் பொறுமையிழந்து மனைவியின் விலாவை பற்றி வெடுக்கென்று திருப்பியவன் அது மருத்துவமனை என்பதையும் மறந்து அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டிருந்தான்.

“நானும் பார்க்கிறேன் ரொம்ப ஓவரா பேசுறா, இவ்ளோ வக்கனையா அவங்களை பேசுறியே? நீ இருந்து இந்நேரம் இப்படி நடந்திருந்தா என்ன செய்திருப்ப? அவங்க பொறுப்பில் விட்டுட்டு போன உனக்கு கேள்விக் கேட்க தகுதியே இல்லை” என்றதும் அவளுள் இருந்த கோபக்கணைகள் சீறிக்கொண்டு எழ...

“நான் தகுதி இல்லாதவளா? இருக்கட்டும். அப்படியே இருந்துட்டு போகட்டும்” என்றவளுக்கு இதயம் வெடிப்பது போல் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டது. அவளுக்கு இருந்த கோபாவேசத்தில் அப்போதே இடத்தை விட்டு நகர்ந்து செல்ல வேகம் உந்தினாலும் பெற்ற மகளுக்காக கால்களை பிடிவாதமாக நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தாள்.

“தரா இதென்னா அவளே மகளுக்கு ஒண்ணுன்னு கலங்கிப் போயிருக்கிறா, அவளைப் போய் நீ பேசி மனசை நோகடிக்கிற?” என்று குருதரன் தான் கண்டித்திருந்தார்.
**********************

மனோரஞ்சன் தன் மகளுடன் சேர்ந்து வீட்டின் வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தான்... வாணி தனியறையில் தங்குவதால் இரவு நேரத்தில் மகளுடன் நேரம் செலவிடுவது குறைவாக இருக்கவே, ரஞ்சனுக்கு மனம் வருத்தமாக இருந்தது... அதற்கு ஈடு செய்யும் வகையில் மனைவியுடன் மாலை சீக்கிரமே வீடு திரும்புபவன் அவள் சமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் ஆசை தீர விளையாண்டு நேரம் செலவழிக்க ஆரம்பித்தான்.

இரவு உணவை முடித்துவிட்டு நகர்ந்தவனிடம்... “ரஞ்சன் இவளை பார்த்துக்கோங்க, நான் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு வந்துடறேன்” என்றதும்...

“இல்லை எனக்கு செம டயர்டா இருக்கு நான் தூங்கப் போறேன்” என்று விட்டு அவள் பதிலுக்கும் காத்திராமல் சென்றிருக்க, அவன் பதிலில் முகத்திலறைந்தது போல் விக்கித்து நின்றாள்.

அவன் செய்த தவறுகளால் தினத்தோறும் அனுபவிக்கும் தனிமை என்னும் தண்டனையில் அவன் நொந்து நூலாகி கொண்டிருக்கும் அவலத்தை அவள் அறிவாளா? ஒரு நாட்கள், ஐந்து நிமிடம் என்றாலும் அந்த ஏக்கத்தை எல்லாம் தாங்கி பழகியிராதவனுக்கு... ஐந்து நிமிட சுகமும், இன்பமும் ஐந்து யுகம் கடப்பதை போல் வேதனையளிக்கும் என்று தான் இரவில் குழந்தையுடன் பின்னிரவுக்கு பிறகு நேரம் செலவிடுவதை தவிர்க்கிறான் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் வார்த்தையை மதித்து செல்ல அவள் சிறிதும் முயலாமல் வேலைகளை ஓரம்கட்டி விட்டு அவன் அறைக்கதவை தட்டினாள், கதவை திறந்த ரஞ்சன்...

“என்ன குழந்தைக்கு எதுவும் வாங்கணுமா?” என்று ஏதோ வேலையாளை போல் விசாரிக்க, வாணிக்கு அவனை சீண்டி பார்க்கும் ஆவல் தலைதூக்கியது.

“ம்ம்ம்... ஆமாம் என் பிள்ளைக்கு அப்பா வேணுமாம் அதான் கதவை தட்டினேன்” அப்போதும் அவள் வேடிக்கை கூறியதை சட்டை செய்யாமல்...

“ஏன் அந்த ரூம்ல ஏசி வொர்க் ஆகலையா?”

“அதெல்லாம் இல்லை, ஆமாம் நான் உங்க பொண்டாட்டி தானே? என்னவோ பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி மாதிரி ரூமுக்கு வெளியில் நிற்க வச்சு கேள்விக்கேட்குறீங்க?” என்றவளின் குதர்க்கமான பேச்சில் அவனுக்கு எரிச்சல் மூண்டது...

‘ஆமாம் நிமிஷத்துக்கு நிமிஷம் வார்த்தையால் சாகடிச்சுட்டு இப்போ மட்டும் கேள்வி கேளு... இதுக்கெல்லாம் ஒரு நாள் செமத்தியா கொடுக்கணும் டி’ என்று மானசீகமாக கருவிக் கொண்டவன், அவள் கேள்விக்கு ஒற்றை புருவம் உயர்த்தி மெத்தனமாக பார்த்தபடி மெளனமாக நின்றிருந்தான்.

“தள்ளுங்க நானும், என் பொண்ணும் தூங்கணும்” என்றதும் வழிவிட்டு நின்றவன் அவளையே சில கணங்கள் வெறித்துவிட்டு கட்டிலின் மறுமுனையில் படுத்து இமைமூடி உறங்க ஆரம்பித்துவிட்டான்... அவனை நமட்டுச் சிரிப்புடன் நோக்கியவளுக்கு மனம் எதையோ சாதித்தது போன்று குத்தாட்டம் போட்டது.

அடுத்த தினம் அவள் கடைக்கு கிளம்பும் போது ஆடை மாற்றிக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்க, குழந்தையுடன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த ரஞ்சனை கூப்பிட்டு செயினின் கொக்கியை மாட்டி விட சொல்லி அவன் மேல் அப்படியும், இப்படியும் உராய்ந்து கொண்டிருந்தாள்... ரஞ்சனுக்கு அவள் திட்டம் என்ன என்பது தெளிவாக புரிந்தாலும் இந்த மாற்றம் அவன் மேல் கொண்ட காதலா! அல்ல; இரக்கமா? என்று அறியாமல் அவளுடன் இணைந்து விடக்கூடாது என்று விடாக்கொண்டனாக இருந்தவன் தறிகெட்டு ஓடிய மனதை கடிவாளம் இட்டு அடக்கிவிட்டு, அவள் சொன்னதை மட்டும் செவ்வனே செய்யலானான்.

அது மட்டுமின்றி இது போல் பல விஷயங்களை அவள் செய்ய முனைந்தும் எதற்கும் பணிந்து செல்லாமல் இருந்தவனின் அழுத்தத்தில் கடுப்படைந்தவள்... அத்துடன் அவனுடன் இணக்கம் காட்டும் முயற்சிகளை கைவிடுத்திருந்தாள்... அதில் ரஞ்சன் அவள் மனம் இனி எப்போதும் தன் மேல் சாய்ந்து நிலைத்து நிற்கப் போவதில்லை என்று உறுதியாக கருதிக் கொண்டான்.
**********************

சம்யுக்தா, கணவனிடம் சுத்தமாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை... அவள் மௌனமாக இருந்ததை தரனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அவளாக சரியாகட்டும் என்று எண்ணியிருந்தான்... ஆனால் அவளின் அமைதிக்கு பின்னே ஒரு பூகம்பம் ஒளிந்திருந்ததை அவன் அறியவேயில்லை!

மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்த நிலாவை மூன்றாம் நாள் மாலை மருத்துவர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியிருக்க, தரன் மனைவியை அணுகியவன்...

“நீ இங்கேயே இரு, ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணும் போது நான் வந்துடறேன்” என்று விட்டு அவளின் பதிலையும் எதிர்பாராமல் சென்றிருந்தான்.

அந்தோ... பரிதாபம்! அவன் மனைவியின் முடிவை அறியாமல் அன்று மகளை அழைத்து வருவதால் வீட்டில் உள்ளவர்களையும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டிருந்தான்.

மாலை அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தவனுக்கு அங்கே பேரதர்ச்சி காத்திருந்தது.

கலாதரன் மகள் அனுமதிக்கபட்டிருந்த அறையை தேடிச் செல்ல அங்கே வேறொரு நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்க அங்கிருந்த செவிலியிடம் விசாரிக்க...

“நிலாயாழினி தானே, அவங்க அம்மாவும், கூட இன்னொருத்தரும் அப்போவே டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க சார்” என்றதும் அவன் மனைவியின் செயலில் கோபமும், அதிர்ச்சியும் ஒரு புறம் என்றாலும் மறு புறம் மருத்துவமனை நிர்வாகத்தின் மேல் பாய்ந்தான்.

“பொண்ணுக்கு அப்பா நான் கையெழுத்து போடாம எப்படி நீங்க டிஸ்சார்ஜ் பண்ணலாம்” என்று எகிறியவனிடம் மருத்துவர் நேரடியாக பேசி சம்யுக்தா தகுந்த விதிமுறைகளை பூர்த்தி செய்தே அழைத்து சென்றிருப்பதாக இருக்க சினம் கண்மண் தெரியாமல் தலைக்கேறியது.

“நீங்க அர்ஜெண்ட் வேலையா வெளியூர் போயிட்டதா சொன்னங்க சார்... சோ, பொண்ணுடைய அம்மாகிட்டே முழு பொறுப்பையும் ஏற்க சொல்லி சைன் வாங்கிட்டுத் தான் ப்ரோசீட் பண்ணியிருக்கோம் நீங்க கேள்வி கேட்கனும்னா இனி அவங்களைத் தான் கேட்கணும்” என்று சட்டமாக கூறி தாளை நீட்டியிருக்க, அதற்கு மேல் அங்கே நில்லாமல் மின்னல் வேகத்தில் வாகனத்தில் பறந்தவன் மனைவி இருக்கும் இடத்தை அறிந்தவனாக அர்ஜுன் வீட்டை அடைந்திருந்தான்.

“ஏய் சம்யுக்தா! வெளிய வா டி” என்று வேங்கையின் சீற்றத்துடன் நின்றவனை கண்டு அரசி, மல்லிகா இருவரும் ஒரு சேர அரண்டனர்.

“அண்ணா என்னாச்சு முதலில் உட்காருங்க நிதானமா பேசலாம்” என்ற அரசியின் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல்...

“நான் இங்கே உட்கார்ந்து விருந்தாட வரலை, முதல்ல உன் அண்ணியை கூப்பிடு நான் பேசணும்” என்று அவளிடம் சீறிப்பாய மல்லிகா அங்கே பிரசன்னமானவர்.

“அரசி நீ போய் அர்ஜுனுக்கு போன் பண்ணு” என்று அவள் காதுகளில் முணுமுணுத்துவிட்டு தரனை சமாளிக்க முற்பட்டார்.

“தரன், சம்யுக்தா வெளியே போயிருக்கா அவ வந்திரட்டும் பேசிக்கலாம் உட்காரு” என்றவரை முறைத்துக் கொள்ள முடியாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அருகிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான்.

அரசி கூறியதும் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அங்கே அர்ஜுன், நடராஜன் இருவரும் ஒரு சேர பிரசன்னமாக... அவர்கள் வரவை கூட கண்டு கொள்ளாமல் திக்கற்று வெறித்தபடி அடக்கப்பட்ட சினத்துடன் யோசனையாக பார்த்தபடி அமர்ந்திருந்தவனை கண்டு அனைவரும் பார்வையால் பேசிக் கொண்டனர்.

சம்யுக்தா, தர்சனுடன் வருவதை கண்ட தரன் சட்டென்று உடம்பை எம்பிக் கரங்களை ஊன்றிக் கொண்டு எய்வதற்கு தயாராக உள்ள அம்பை போன்று தயாரான நிலையில், சம்யுக்தா உள்ளே காலடி வைத்தும் அவள் முன்பு வழி மறித்து நின்றவன்...

“யாரை கேட்டுடி இங்கே வந்த? என் புள்ள எங்கடி?” அவன் பேச்சில் புயலை அடக்கிய சினம் வெளிப்பட்டது, அதை பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல்...

“யாரைக் கேட்கணும்?” என்று மெத்தனமாக கேள்வி எழுப்பியவளை கண்டு சினம் கரையுடைக்க...

“உனக்கு தாலி கட்டின புருஷன் குத்துகலாட்டம் நான் இருக்கேன், என்னை கேட்கணும்”

“ம்ஹ்ம்...! புருஷனா? சரி தான் நான் பொண்டாட்டியா இருக்க உங்களுக்கு தகுதி இல்லாதவள் ஆச்சே, எதுக்காக நான் உங்களுடைய அனுமதியை எதிர்பார்க்கணும்? அதான் உங்களை தூக்கி போட்டுட்டு என் பொண்ணை நான் கூப்பிட்டு கிட்டு வந்தேன், சும்மா இங்கிருந்து சவுண்ட் விடாம கிளம்புங்க” அவன் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டு நகர்ந்தவளின் கரங்கள் அவன் இரும்புக் கரங்களில் சிறைபட்டுக் கொள்ள, அவள் நடைக்கு நூற்றி நாற்பத்தி நான்கு தடா உத்தரவு விழுந்தது.

“என்னை கொலைவெறிக்கு ஆளாக்காதே சொல்லிட்டேன்... எப்போ பேசின பேச்சுக்கு எப்போ வந்து நியாயம் கேட்கிற?”

“ஆமாம் நான் அப்போவே தூக்கி போட்டுட்டு வந்திருக்கணும், ஆனால் என் பொண்ணுக்காக பொறுத்துக்கிட்டேன்... அவளுடைய உடல் நலம் எனக்கு முக்கியமா பட்டுச்சு, அதனால் நான் அமைதியா இருந்தேன்”

“அதென்ன உன் பொண்ணு, நானில்லாமல் தான் உன் பொண்ணு உனக்கு வந்தாளா, இல்லை மந்திரம் சொல்லி தனியா பெற்றெடுத்தியா?” சுள்ளென்று வினவியவனின் கேள்விக்கு...

“ஆமாம் நான் தனியா தான் பெற்றெடுத்தேன்... தனியா தான் போராடினேன்” என்றவளின் குரல் நடுங்க, அன்றைய நாளை எண்ணி கலங்கியவளின் கலக்கத்தை அவள் கண்கள் எட்டப்பணாய் காட்டிக் கொடுக்க தன் கண்ணீர் தழும்பிய முகத்தை மறைக்க வேண்டி பார்வையை திருப்பிக் கொண்டிருந்தவள், சடுதியில் தன்னை சாமாளித்துக் கொண்டு நிமிர்வாக அவனை நோக்கினாள்.

“நான் தனியா தான் பெற்றெடுத்தேன் என் பெண்ணை... ஏன்னா அப்போ தான் எனக்கு என் பிள்ளைக்கு அப்பா யாருன்னு தெரியாதே” என்றதும்...

“ஏய்ஈ” என்று கூவியபடி அவன் கரத்தை ஓங்கியிருக்க...

“தரன் பிஹேவ் யுவர் செல்ப்!” என்று கடுமையாக கண்டித்த அர்ஜுனின் வார்த்தைகளில் சட்டென்று கரத்தை இறக்கிக் கொண்டவன் மனைவியை தீயென உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்.

“உன் பிரச்சனை நான் பேசினது தான்னா, அதை வீட்டில் வச்சு பேசிக்கலாம் வா, கண்டதையும் பேச இது இடமில்லை நமக்குன்னு ஒரு வீடு இருக்கு, அங்கே வந்து என்னை பேசு செருப்பால் கூட அடி வாங்கிக்கிறேன்... வா போகலாம்” அவளுக்காக முற்றிலும் தன் கோபத்தை தனித்துக் கொண்டு விட்டு மிகவும் தன்மையாக தான் உரைத்திருந்தான்.

தன் காயப்பட்ட மனதிற்கு அவன் கூறிய வார்த்தைகள் வீரியம் குறைந்து ஒலித்ததோ சிறிதும் எடுபடாமல் போகவே... “முடியாது! முடியாது! உங்க கூட வர முடியாது... சும்மா நிமிஷத்துக்கு நிமிஷம் தூக்கி நீட்டினீங்களே டிவோர்ஸ் பேப்பரை, இப்போ நான் தரேன் உங்களுக்கு விவாகரத்து வாங்கிட்டு என்னை நிம்மதியா விடுங்க” என்று தலைமேல் கரம் கூப்பி கும்பிடு போட்டவளை தன் கூர்வாள் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்.

“நினைச்சா கல்யாணம் பண்ணுறதுக்கும், டிவோர்ஸ் பண்ணுறதுக்கும் கல்யாணம் என்ன கடையில் வாங்குற கறிவேப்பிலை, கொத்தமல்லியாடி?” இடக்கான குரலில் கேட்டிருந்தான்.

“ஏன் அதையே நானும் திருப்பிக் கேட்கலாம்... முதல் முதலா விவாகரத்து பேப்பரை நீட்டினது யாரு? நானா, நீங்களா? உங்க சட்டத்தில் அதெல்லாம் சரியானது, என் சட்டத்தில் ஓட்டையா, பேசாம போங்க, அப்புறம் வாயில் நல்லா வந்திரப் போகுது”

“அதான் வரக் கூடாததெல்லாம் வரக்கூடாத இடத்தில் வந்திருச்சே? புருஷன், பொண்டாட்டி அந்தரங்கத்தை பொருட்காட்சியை போல கடை பரப்பிட்டியே, இன்னும் எதுக்கு மூடி மறைச்சுட்டு? எல்லாத்தையும் அவுத்து விடு, முழுசா நனைஞ்சதுக்கு அப்புறம் எதுக்கு முக்காடு?” நறுக்கு தெறித்தார் போன்று வினவியவனை கண்டு பார்வையை பொசுக்கியவள்...

“நான் உங்க கூட வாழ வந்ததே என் பொண்ணுக்கு அப்பா நீங்கதான்னு நிரூபிக்கத்தான், அப்புறம் முக்கியமான காரணம் உங்க தங்கச்சியை என் அண்ணன் கூட சேர்த்து வைக்கிறது... அதுக்காக தானே என்னோட காதல் நாடகம், கல்யாணம் எல்லாமே... அதுக்கான அஸ்திரம் எல்லாமே சரி ஆகிருச்சு, இனி அம்பு என்னை பற்றிய கவலை என்ன? நீங்க கிளம்பலாம்” என்றவள் அவனிடம் அந்த தாளை நீட்ட...

“இனி அந்த தாலி மட்டும் எதுக்கு? அதையும் கழட்டி வீசிறு” என்று முள்ளாக உரைத்தவனின் வார்த்தையை கேட்டு தாலி மேல் கரம் வைத்தவளின் கரத்தை இரும்பென பற்றிக் கொண்டவன் இறுகிய புன்னகையை சிந்தினான்.

“சிரமம் வேண்டாம் விட்டுவிடு, சீக்கிரமே இதுக்கு உரிய சடங்கை செய்து அறுத்து போடுவாங்க” என்றவன் வார்த்தையை கேட்டு அனைவருமே திகிலடைந்து போயினர். சம்யுக்தாவின் உள்ளமோ கொலம்பஸ் ராட்டினத்தை போல் ஊஞ்சலாடி உலுக்கி கொண்டிருந்தது.

இவர்களின் சம்பாஷணைகள் முடிவு பெறட்டும், பிறகு குழந்தையுடன் செல்லலாம் என்று தர்சன் பின் தங்கி இருந்தவன் பேச்சு முடிவுக்கு வரும் நோக்கம் இல்லாதது போல் தெரியவே தரன் வெளியேறவும், அவன் உள்ளே நுழையவும் சரியாக இருக்க தந்தையை கண்ட ஆர்பரிப்பில்...

“பப்பா... பப்பா...” என்று மழலையில் மிழற்றியபடி தவ்விக் கொண்டு வர, ஒரு கணம் நின்று ஊன்றிப் பார்த்தவனுக்கு நெஞ்சில் பாசத்தின் ஈரம் சுரக்கவே தன்னுடன் சேர்த்தணைத்து முத்தமழையில் நனைத்தவன்...

“இனி உங்க அம்மா தான் உனக்கு எல்லாமுமா இருப்பா” என்று கூறிவிட்டு வழுக்கட்டயாமாக தர்சனிடமே திணித்து விட்டு சென்றவன் வாகனம் மின்னல் வேகத்தில் இயக்கியிருந்தான்.

குழந்தையோ தந்தையின் பிரிவில் ஏங்கி ஏங்கி அழத் தொடங்கி இருக்க, கணவன் முன்பு அவ்வளவு வீராப்பாய் பேசியவளுக்கு அவன் அங்கிருந்து நகர்ந்ததும் உயிரை வேரோடு பிடுங்கியது போல் வலிக்க செய்ததில் “கோஓ” என்று ஆரம்பித்து ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுகையில் கரைய ஆரம்பித்தாள்.

அவர்களை சுற்றி இருந்த அனைவருக்கும் இவர்களின் மோதலை கண்டு பதறினாலும், கணவன் மனைவிக்கிடையில் இடைபுகுந்து தலையிட நாகரீகம் இடம் கொடுக்காது கையை பிசைந்துக் கொண்டிருந்தனர்... சம்யுக்தாவும் அவர்களுக்கு முக்கியம் என்பதால் அவளிடம் ஏதேனும் கூறப்போக அவள் மனமுடைந்து வேறேதும் விபரீத முடிவை எடுத்து விடுவாளோ என்ற அச்சத்தில் அமைதியாக இருந்தனர்.

குழந்தையின் அழுகுரல் செவியை கிழிப்பதை கூட அறியாமல் வேண்டாம் என்று தூக்கி எறிந்த கணவனை நினைத்து மறுகிக் கொண்டிருந்தவளை கண்டு வியாகூலம் அடைந்தனர். சம்யுக்தாவின் அழுகையில் மல்லிகாவிற்கும் கண்கள் கசிய ஆரம்பித்திருந்தது. அதை கவனித்த அர்ஜுன்...

“அம்மா அவளை சமாதானம் பண்ணனும் தயவு செய்து நீங்களும் கண்ணை கசக்காதீங்க” என்று அதட்டல் போட...

“அர்ஜுன் நீ சம்முக்காவை பார்த்துக்கோ, நான் அம்மாகிட்டே பேசிக்கிறேன்” என்றவன் அன்னையுடன் இடத்தை விட்டு நகர... அர்ஜுன் மனைவியிடம் பாலை கலந்து எடுத்து வர சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் புகுந்திருந்தான்.

அரசி பாலுடன் ஒரு மாத்திரையையும் எடுத்துக் கொண்டு கொடுத்தவள் அர்ஜுன் ஒருவாறு அவளை வலியுறுத்தி பாலை அருந்த வைத்தான்... விசும்பிக் கொண்டே பாலை அருந்திக் முடித்தவள் அர்ஜுனை பச்சதாபத்துடன் நோக்கியவள்...

“அஜ்ஜூ நான் இங்கே இருந்துக்கலாமா?” என்று வேண்டுதலாக வினவியவளின் வார்த்தையை கேட்ட அர்ஜுனுக்கு உயிரை உலுக்கியது.

“ஏய் இதென்ன கேள்வி சம்மு, இதெல்லாம் நீ கேட்கணுமா? இது உன் வீடுடா, நீ இங்க எவ்ளோ நாள் வேணா இருக்கலாம்” என்று உறுதியளித்தவன் அவளை நித்திரையில் ஆழ வைத்திருந்தான். அவள் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவனுக்கு கலாதரன் மேல் மொத்த ஆத்திரமும் எழுந்தது.

தோட்டத்தில் அழுது கொண்டிருந்த மல்லிகாவை நடராஜனும், தர்சனும் சமாதான வார்த்தைகள் கூறி கொண்டிருக்க... “எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்குங்க, இனியும் தாமதிக்க வேண்டாம் வர வேண்டியவங்க வந்தாத் தான் இந்த பிரச்சனை சரி ஆகும்” என்று விசனத்துடன் மொழிய...

“இங்க பாருங்க அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் தயவு செய்து இப்போ நீங்க அழுகாம சம்முக்கா, குழந்தை ரெண்டு பேரையும் பார்த்துக்கோங்க” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அர்ஜுன் அங்கே பிரசன்னமானவன்...

“அவனை சும்மா விடக்கூடாதுடா அவளை எந்தளவுக்கு மனவுளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறான்” என்று எகிறியவனை புருவம் இடுக்கி பார்த்த தர்சன்...

“அர்ஜுன் கொஞ்சம் நிதானமா இருடா... எதையும் மேம்போக்கா நாம முடிவு பண்ணக்கூடாது, அவங்களுக்குள்ள என்ன நடந்திருந்தாலும் அது அவங்க பர்சனல், ரெண்டு பக்கமும் பார்த்துப் பார்த்து தான் நாம அடியெடுத்து வைக்கணும்” என்றதும் தான் சற்று நிதானமாக யோசித்தவன்...

“என்ன டா என்னை விட நீ தான் கொதிப்ப, நீயே இப்படி நிதானமா இருக்க சொல்லுற?” என்றான்.

“வாஸ்தவம் தான், ஆனால் எனக்கு சம்முக்கா வாழ்க்கை ரொம்ப முக்கியம்... புருஷனை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சது அவங்க தான்... பொண்டாட்டி தூக்கி எறிஞ்சிட்டாளேன்னு மனசு உடைஞ்சு போயிருக்கிறது தரன்... அதுக்கு இவங்க வெற்றியை கொண்டாடி இருக்கணும், ஆனால் அவங்களுக்கும் சேர்த்து இங்கே கண்ணை கசக்குறாங்க இதுலையே புரியலையா அவங்க மனசுல என்ன இருக்குன்னு?” என்று எடுத்துரைக்க அவனை வியப்பாக பார்த்திருந்தான்...

“எப்படிடா? நிஜத்துக்கு நான் தான் இதை சொல்லியிருக்கணும், ஆனால் நீ இவ்ளோ நுணுக்கமா சொல்லுற?”

“உனக்கு ஆத்திரம்... நான் வெளியே குழந்தையோட நின்னது குழந்தைக்காக மட்டும் இல்லை, அவங்களையும் எடைப் போட தான் வேடிக்கை பார்த்தேன்... வா முதல்ல தரன் அண்ணாவை மீட் பண்ணுவோம், அப்புறமா என்ன செய்றதுன்னு முடிவெடுத்துக்கலாம்”

“இப்போவே வேண்டாம் டா இன்னைக்கு ஒரு ராத்திரிக்கு ஆறப்போடு ரெண்டு பேரும் தனிமையில் யோசிக்கட்டும் நாளைக்கு பார்த்துக்கலாம்”

“ரெண்டு பேரும் தூங்கவே போறதில்லை, எதுக்கு ஒரு ராத்திரி காத்திருக்கணும்”

“சம்முக்கு ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்திருக்கேன் டா அவ தூங்கிட்டா, நிச்சயம் தரனும் அதை செய்வான், விடு தூங்கி எழட்டும் ரெண்டு பேரும் தெளியட்டும் அவங்களே அப்புறம் நல்ல முடிவா கூட எடுக்கலாம்” என்று அர்ஜுன் உரைத்ததில் உண்மை இருக்கவே தர்சன் அதை ஆமோதித்து தானும் சென்று உறங்கிவிட்டிருந்தான்.

கலாதரன் நிலையோ முற்றிலும் உச்சக்கட்ட விரக்தி அடைந்திருக்க, இரவு எப்பொழுதும் எடுக்கும் தூக்க மாத்திரைகளை எண்ணிக் கொண்டிருந்தவன் மனமோ கடிகாரம் பெண்டுலம் போல் ஊசலாடிக் கொண்டிருந்தது. கையில் எடுத்த தூக்க மாத்திரைகளை அள்ளுவதும் பின்பு ஒன்றிரண்டு என்று எடுப்பதுமாக சஞ்சலத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

“என்னை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டேல” என்றவனுக்கு உயிர் வலி தாக்கியதில் கொத்தாக மாத்திரையை அள்ளியவன்... மறுகணமே அவன் மனைவியும், குழந்தையும் சேர்ந்து புன்னகைக்கும் முகம் தோன்றி அத்தனை மாத்திரை வில்லைகளும் டப்பாவின் உள்ளே சென்றது... இரவு நேரம் யாருக்கும் காத்திராமல் நகர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து அதிகாலை மூன்று மணி அளவில் தான் இரண்டு மாத்திரைகளை விழுங்கி விட்டு தொப்பென்று கட்டிலில் சரிந்திருந்தான்.

காலையில் கண் விழித்த சம்யுக்தா இரவு போல் அல்லாமல் சற்றே மனதை தேற்றி கொண்டு எழுந்தவள் வழக்கம் போல் தன் பணியை பார்க்கச் செல்ல ஆயத்தமானவளின் விழிகளில் சூழ்ந்திருந்த கருவளையமும், முகத்தில் இருந்த சோர்வையும் விசனத்துடன் பார்த்திருந்தார் மல்லிகா.

“ஏன் சம்முமா ரெண்டு மூணு நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வேலைக்கு போயிருக்கலாமேடா?” என்று தன்மையாக வினவியவருக்கு இதழ்களை சோம்பலாக விரித்து உயிர்பற்ற புன்னகையை உதிர்த்தவள்...

“இல்லை அத்தை எனக்கு இனி மேல் தான் வேலை ஜாஸ்தி இருக்கு... நான் சீக்கிரமே கோயம்பத்தூருக்கே போகணும், அதுக்கான ஏற்பாட்டை செய்தாகணும்” என்று விட்டு தன் வேலை முடிந்தது என்பது போல் உணவை கொரித்தவளை அனைவரும் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்... மல்லிகா அதைப் பற்றி அவளிடம் பேச செல்ல அர்ஜுன் பார்வையால் கண்டித்து தடுத்துவிட்டிருந்தான். அவள் வீட்டிலிருந்து சென்றதும்...

“கொஞ்சம் பொறுமையா இருங்க ரெண்டு பேரும்... நானும், தர்சனும் லேட் பண்ணாம நேரமே போய் தரனை பார்த்துட்டு வரோம்... அவன் என்ன தான் நினைக்கிறான்னு தெரியணும், அதை உறுதியா தெரிஞ்சுட்டு அடுத்தகட்ட நடவடிக்கை அது தான்... இனி எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்த போறதில்லை” என்று விட்டு உடனடியாக தர்சன், அர்ஜுன் இருவரும் கிளம்பியிருந்தனர்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்த அரசிக்கு மனதை பக்பக்கென்று அடித்துக் கொண்டிருந்தது... ‘கடவுளே என் அண்ணணையும், அண்ணியும் மட்டும் பிரிச்சிராதே’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டிருந்தாள்.

அர்ஜுன், தர்சன் இருவரும் தரன் வீட்டிற்குள் நுழையும் போதே குழலி, கலைமலர் இருவரும் கலக்கத்துடன் நின்றிருந்ததை கன்று யோசனையுடன் சென்றிருந்தனர்... அர்ஜுனை கண்டதும் குழலிக்கு முகம் ஒளிர அவனை அணுகியவர்...

“அர்ஜுன் நல்ல நேரத்தில் வந்தப்பா, தரன் ரூம் கதவை ரொம்ப நேரமா திறக்க மாட்டேங்குறான் கொஞ்சம் என்னன்னு பாருங்கப்பா” என்று பதறியவரிடம்...

“என்னம்மா சொல்றீங்க அவங்க ரெண்டு பேரும் எங்கே?”

“காலையில் நேரமே சோலியை பார்க்க போயிட்டாங்கையா... ராத்திரி நேரம் வேலை பார்த்துட்டு தூங்குறான்னு நினைச்சேன், மலர் பிள்ளை காபி கொடுக்க கதவை தட்டுறா திறக்கவே மட்டேங்குறான்” என்று கூறியவரின் விழிகள் கலங்க, மலர் அழுகையில் விசும்பி கொண்டிருந்தாள்.

“அழாதீங்க! அதான் நாங்க வந்துட்டோம்ல நாங்க பார்த்துக்கிறோம்” என்று அர்ஜுனும்...

“மலர் நீயும் தான் அழாதே” என்று தர்சனும் கூறியவர்கள், தரன் இருந்த அறையின் கதவை பலமாக தட்ட அதற்கு சிறிதும் பலனிருக்கவில்லை.

“டேய் தர்சன்! அந்த பக்கம் போய் ஜன்னல் திறக்க முடியுதான்னு பார்க்கலாம் வா” என்று சென்றவர்களுக்கு தெய்வ புண்ணியமாக ஜன்னல் கதவுகள் திறந்து கொண்டிருந்தது.

“அவர் தூங்கிட்டு இருக்காரு” என்ற தர்சன்,

“மலர் அந்த ஒட்டடை குச்சியை எடுத்துட்டு வா” என்றதும் விரசாக கொண்டு சென்று வந்து கொடுக்க அதை ஜன்னல் வழியாக செலுத்தி அவன் மேல் படும்படி உரசி தட்டி எழுப்பலானார்கள்... ஒரு வழியாக வெகுநேரம் கழித்தே இமைகளை சிரமத்துடன் பிரித்தெடுத்து ஜன்னல் ஓரம் பார்த்தவனிடம்...

“டேய் கதவை திறடா” என்று அதட்டிய அர்ஜுனை பார்த்துவிட்டு இமை மூடியவனை கண்டு ஆயாசமாக போக, அவனை எழும்ப வைத்து கதவை திறக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது.

குழலி, மலர் இருவரின் பதறிக் கொண்டு தரனை அடைய... “அம்மா, மலர் ரெண்டு பெரும் இவனுக்கு சாப்பிட ரெடி பண்ணுங்க... நானும், தர்சனும் பார்த்துக்கிறோம்” என்றிருக்க சிட்டாக சென்று அன்னைக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

“டேய் முதல்ல எழுந்திரிடா” என்று தரனை அதட்டி எழுப்ப, அவனோ தூக்க மாத்திரையின் உபயத்தில் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தான். தர்சனுக்கு அருகிலிருந்த தூக்க மாத்திரை பாட்டில் கண்ணில் பட திக்கென்று ஆகிப்போனது.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 33 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-34

“அர்ஜுன் எனகென்னவோ டவுட்டா இருக்குடா” என்ற தர்சனின் வார்த்தையில் அவனுக்கும் திகில் பிடித்துக் கொள்ள, அர்ஜுன் தரனை தரதரவென்று தோள் சாய்த்து இழுத்துச் குளியறைக்குள் சென்றிருந்தான்.

அவனை எழும்பச் செய்து சாப்பிட மறுத்து மல்லுக்கட்டியவனை வழுக்கட்டாயமாக அதட்டி உருட்டி உண்ண வைத்தான். அவன் உண்ணும் ஒவ்வொரு கவளதிற்கும் அவன் யோசனை எங்கோ பறந்து விட்டு வருவதை உணர்ந்தவனுக்கு அது யாதென்று தெளிவாக புரிந்தது.

அவன் கருத்திருந்த முகத்தில் சிறிதும் உயிர்பற்று இருந்த கண்கள் தர்சனை உலுக்கியது... அர்ஜுனிடம் ‘நான் சொன்னேனே பார்த்தாயா’ என்பது போல் கேள்வியும் கேட்டு வைத்தது.

அர்ஜுன் சொன்னவற்றை மட்டும் இயந்திரம் போல் செய்து முடித்தவனுக்கு மனைவியும் குழந்தையும் இல்லாத தனிமை வெறுமை அவனை சிதைத்து கொண்டிருப்பதை கட்டுபடுத்த, தூக்க மாத்திரையை தொட்டவனை அர்ஜுன் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டிருந்தான்.

“பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு? தூக்கம் வந்தா தூங்கு... இல்லைன்னா, போய் வேலையை பாரு... அதை விட்டுட்டு தூக்க மாத்திரையையே போட்டுட்டு இருந்தா ஒரேடியா போய் சேருறதுக்கா” கோபத்தில் சிடுசிடுத்தவனை கண்டு விரக்தியாக பார்த்தவன்...

“போனால் என்ன? அவளுக்கு தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே, என்னை விட நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க சேமமா வாழட்டும்” வறண்ட குரலில் கூறியவனை அர்ஜுன் கடுமையாக முறைத்தான்.

“வாயை கழுவு டா... புருஷன் பொண்டாட்டின்னு இருந்தா பிரச்சனை இல்லாமலா இருக்கும், எனக்கே நீ தான் டா முன்னோடி, நீயே இப்படி பேசலாமா?” என்றவனின் வார்த்தையில் அவன் மனம் முற்றிலும் உடைந்துப் போனது...

“அதே தான் டா நானும் கேட்கிறேன், இத்தனை நாளா கூட இருந்து தானே சண்டை போட்டா நான் பொறுத்து போகலையா, இப்போ மட்டும் ஏன்டா தூக்கி எறிஞ்சுட்டு போனா?” என்றவனுக்கு துக்கம் தொண்டையை கவ்வ குரல் கரகரத்து ஒலித்தது.

சம்யுக்தாவின் பிடிவாதத்தை பற்றி அறிந்திருந்தவர்களால் அவனுக்கு என்ன கூறி தேற்றுவது என்றே புரியாமல் வருந்தினர்... ஒரு ஆணாக அவன் மனமும் புரிந்திருந்ததே அவர்களின் கவலைக்கு காரணமாகிப் போயின.

“தரன் கொஞ்ச நாள் பொறு எல்லாம் சரியாகும்... நீ இப்படியே மனசுல போட்டு உழன்றுகிட்டு இருக்காம, அடுத்த வேலையை பார்க்கப் போ” என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்பியும் வைத்திருந்தான்.

அர்ஜுன் கிளம்பும் முன் அவன் முன்பு நின்ற கலைமலர்... “அண்ணா நானும் உங்க கூட வரேன்... எனக்கு அண்ணியையும், குழந்தையும் பார்க்கணும் போல இருக்கு... அவங்களை எனக்காகவாச்சும் இங்கே வர சொல்லி கேட்கணும்” என்றவளின் அன்பில் நெகிழ்ந்தவன் தர்ஷனுடன் அனுப்பி வைத்து அவளை வீட்டில் விட்டு வர ஏவினான்.

கலைமலரின் வரவில் சம்யுக்தா அன்பில் நெகிழ்ந்து அவளிடம் இன்முகம் காட்டினாலும் அவளின் பிடியில் இருந்து விலகிவிடவில்லை...

“அண்ணி எனக்காக வீட்டுக்கு வாங்கண்ணி பாப்பா இல்லாமல் என்னால் இருக்கவே முடியலை, இவ நியபகமாவே இருக்கு... ப்ளீஸ் அண்ணி!” என்றவளின் கெஞ்சல் மொழிகள் அவள் சித்தத்தை சுருட்டிய போதும் சற்றும் இளகவில்லை.

“இல்லம்மா நீ இங்கே வா, வந்து பார்த்துட்டு போ” என்று விட்டு அத்துடன் அங்கே நின்று அவளை எதிர்கொள்ள முடியாமல் வேகமாக மாடியேறி, அவள் அறைக்கு சென்றுவிட்டிருந்தாள்.

கலைமலர் அர்ஜுன் இல்லம் வந்திருப்பதை அறிந்து அவளை அழைத்து செல்ல வந்த கலாதரன் தங்கையை கூட்டி செல்லும் சாக்கில் சில மணித்துளிகள் தன் மகளுடனும் நேரம் செலவளிக்க, அங்கிருந்து செல்லும் போது மகள் தந்தை வேண்டும் என்று ஏங்கி அழுவதை காணப் பொறுக்காது மனம் கொத்தி பறவையை போல் வலி மனதை கொத்தி கொத்தி தின்றது... கணவனின் தளர்ந்த நடையும், களையிழந்த முகத்தையும் பால்கனியில் இருந்து அவதானித்து கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு உயிரை தாக்கி வதைத்தது.

இவை அனைத்தையும் மற்றவர்கள் பார்வையாளர்களாக நின்று வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர, அதற்கு தீர்ப்பு சொல்லி சேர்த்து வைக்க முடியாமல் அவர்களுக்குள் கொண்ட காதலும், அதை மேடை ஏற்றாத அவர்களின் அந்தரங்கமும் கடிவாளம் இட்டு கட்டியிருந்தது.

இவர்களின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் திடீர் திருப்பம் நேர்ந்தது.
**********************

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே சம்யுக்தாவிற்கு உடல் உபாதைகள் படுத்தியெடுத்துக் கொண்டிருந்தது... மனம் சரியில்லாததால் உடல்நிலையும் சரியில்லை போல என்று நினைத்துக் கொண்டவள் சோர்வை நெட்டி தள்ளிவிட்டு ஒரு வழியாக தயாராகி உண்ண சென்றிருந்தாள்.

உணவை வாயில் வைக்கும் போதே குமட்டிக் கொண்டு வர நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு சிரமப்பட்டு விழுங்கி தண்ணீரை அருந்தியிருந்தாள்... அவளுக்கு பரிமாறிக் கொண்டிருந்த அரசிக்கு அவள் அவஸ்தைப்படுவதை கண்டு...

“அண்ணி என்னாச்சு ஏன் ஏதோ மாதிரி இருக்கீங்க?” என்று அக்கறையுடன் வினவியவளின் கேள்வி அவளுக்கு கிணற்றின் அடியில் ஒலிப்பது போல் இருக்கவே தன்னை சமாளித்துக் கொண்டு...

“ஒண்ணு... ஒண்ணுமில்லை” என்று உதட்டை விரித்து புன்னகைத்துவிட்டு அடுத்த கவளத்தை வாயில் வைக்கும் போதே முடியாமல் போக “ஓவ்வ்வக்க்” என்று ஓங்கரித்துக் கொண்டு சென்று வாந்தி எடுத்தவளை கண்டு திகைத்துப் போனவள்...

“அண்ணி... என்னாச்சு?” என்று பதறி அவள் நெற்றியை தாங்கிக் கொண்டிருக்கும் போதே உடல் பலமிழந்து மயங்கி சரிந்திருந்தாள். அதில் பதைத்துப் போன அரசி...

“அத்தை... சீக்கிரம் வாங்க” என்று உரத்த குரலில் அழைத்ததும், குழந்தையை வைத்துக் கொண்டிருந்த மல்லிகா முதற்கொண்டு அனைவரும் அங்கே பிரசன்னமடைந்து சம்யுக்தா நிலையை கண்டு அதிர்ந்து போனார்கள்... அன்னையின் உணர்ச்சியற்ற நிலையில் குழந்தை பயந்து வீறிட, அவளை சமாதானம் செய்வது ஒரு புறம், சம்யுக்தாவுக்கு மருத்துவரை அழைப்பது ஒரு புறம் என வீடே திமிலோகப் பட்டுப்போனது.

மருத்துவர் சம்யுக்தாவை பரிசோதித்து கொண்டிருக்கும் போதே சம்யுக்தா மயக்கத்தில் இருந்து தெளிந்திருக்க, அவளிடம் சில வினாக்களை கேட்டுத் தெறிந்து கொண்டவர் எளிமையான சில பரிசோதனைக்கு பிறகு அவள் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்திருந்தார்.

“கங்கிராட்ஸ் மிசஸ்.சம்யுக்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்க” என்றதும் மற்றவர்களுக்கு இனிமையாக அமைந்த செய்தி ,அவளுக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது! அது அவள் எதிர்பாராத திருப்பம் என்று அனைவருக்கும் ஸ்பஷ்டமாக விளங்கியது.

“ஹாஸ்பிடல் வந்து ஸ்கேன் எடுத்து மத்த செக்கப் எல்லாம் பண்ணிக்கோங்க” என்று கூறிவிட்டு மருத்துவர் நகர, அர்ஜுன் அவருக்கான மருத்துவ செலவு தொகையை கொடுத்தனுப்பி விட்டு வந்தவன் சம்யுக்தாவின் அலைப்புறுதலை மிக நுணுக்கமாக கண்டறிந்திருந்தான்.

அவள் கருத்தரித்த செய்தியை கேட்ட மல்லிகாவிற்கு உவகை ஊற்றெடுக்க அவர்களின் கணவன், மனைவி ஊடலுக்கு கடவுள் அமைத்த திருப்பம் என்று நிம்மயடைந்திருந்தார்.

“சம்யுக்தா கொஞ்ச நாள் உன் வேலை எல்லாம் தள்ளிப் போட்டுட்டு ரெஸ்ட் எடுமா”

“அத்தை சொல்றது சரி தான் சம்முமா, நீ நம்ம கொஞ்ச நாளைக்கு வீட்டிலயே ரெஸ்ட் எடு” என்று நடராஜனும் கூற... தான் இனியும் மௌனமாக இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு பேசலானாள்.

“நான் வேலைக்கு போய் தான் ஆகணும் மாமா, அதை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போட முடியாது”

“இல்லைடா சம்மு இந்த மாதிரி நேரத்தில் உடம்பு நீ சொல்லுறதை கேட்காது, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் வேற” என்றவரை உற்று நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டவள்...

“இல்லை த்தை நான் இந்த குழந்தையை அபார்ட் பண்ணப் போறேன்... எனக்கு என் மகள் ஒருத்தி போதும்” என்றவளின் பதிலைக் கேட்டு அனைவரும் திகிலடைந்தனர்.

“ஏன் சம்முமா இப்படி சொல்லுற? இந்த ஒரு குழந்தையை நீ பெற்றுக்கோ உன்னை போலவே உன் மகளும் ஒற்றையா நிற்கணுமா?”

“என் அம்மா மாதிரியே நானும் தனியா தான் வாழணும்னு விதியிருக்கே, அப்போ நானும் என் பெண்ணை மட்டும் தானே வளர்க்க முடியும்” என்று விரக்தியில் மொழிந்தவள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

“இல்லை சம்முமா நீ கொஞ்சம் யோசி.....” என்று நடராஜன் ஏதோ கூற வர...

“அப்பா ப்ளீஸ்! சம்மு ரொம்ப டயர்டா இருக்கா, அவ ரெஸ்ட் எடுக்கட்டும் யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்” என்று மறைமுக கட்டளை விடுத்தது பார்வையால் எதையோ அறிவித்தவனின் வார்த்தைக்கு அனைவரும் கட்டுபட...

“சம்மு உன் முடிவு தான் எங்க முடிவு, நீ எதையும் போட்டு குழப்பிக்காம முதல்ல ரெஸ்ட் எடு” என்றவன் அனைவரையும் வெளியே அழைத்திருந்தான்.

“இதுக்கு மேல எதையும் தள்ளி போடுறது சரியில்லைன்னு எனக்குப்படுதுங்க” என்று மல்லிகா பதற...

“நீ பதறாதே மல்லிகா இன்னும் ரெண்டு நாள் தான் பொறு எல்லாம் தகவல் சொல்லியாச்சு” என்று நடராஜன் கூற தர்சன் அதை ஆமோதித்தான்.

“ஆமாம் ம்மா அப்பா சொல்றது சரி தான் கொஞ்சம் பொறுங்க அதுவரைக்கும் சம்முக்காகிட்டே எதையும் காட்டிக்க வேண்டாம்”

“முதல்ல இந்த விஷயத்தை நான் தரன் காதுக்கு கொண்டு போறேன்” என்று அர்ஜுன் கூற...

“பொறு அர்ஜுன் அதில் ரெண்டு பேருக்கும் அதிகமா உரசல் ஆகிறப் போகுது” என்ற மல்லிகாவை தலையை இடம் வலம் அசைத்து எதிர்ப்பு தெரிவித்தவன்...

“இதை அவன்கிட்டே சொல்லலைன்னா தான் மனஸ்தாபம் அதிகமாகும்... அவங்களுக்குள்ள என்ன நடந்திருந்தாலும் அது அவங்க பிரச்சனை... சம்யுக்தாவை நாம அடை காக்கலாம் அதுக்கு நமக்கு உரிமை இருந்தாலும், குழந்தைன்னு வரும் போது அவனுக்கு தான் அதிக உரிமை இருக்கு... அதனால் இதை உடனடியா அவன்கிட்டே சொல்லுறது தான் சரி”

“நியாயமா பார்த்தா குழந்தையை பெற்றுகிறதா இல்லை, வேண்டாம்ன்னு முடிவு செய்றதான்னு அவளே புருஷனை கேட்கிறது தான் முறை, அவ அதை செய்யப் போறதில்லை... அதுக்கு நாமளும் உறுதுணையா இருக்கக்கூடாது”

“அர்ஜுன் சொல்லுறது தான் சரி மல்லிகா... நீ தடுக்காதே! சம்யுக்தா கர்ப்பமா இருக்கிற விஷயம் முதல்ல தரனுக்கு தான் சொல்லணும்”

“எல்லாம் சரி தாங்க, ஆனால் குழந்தை விஷயமா தரன் சம்யுக்தாகிட்டே கோபத்தை காமிச்சுட்டா என்ன பண்றது?”

“ஏன்மா இது என்ன கேள்வின்னு கேட்குறீங்க? நீங்க எதாவது செய்யப் போய் அது அப்பாவுக்கு பிடிக்கலைன்னா அப்பா உங்களை கேள்விக் கேட்கமாட்டரா? அப்படித் தானே அவருக்கும் இருக்கும்”

“தர்சன் சொல்றது சரி தான்... குழந்தைக்கு தரன் தான் அப்பா அவளை கேள்விக்கேட்க அவனுக்கு உரிமை இருக்கு, முக்கியமான விஷயம் இந்த குழந்தை அவளுக்கு நிலைக்கணும்னா தரன்கிட்டே விஷயத்தை எடுத்துட்டு போய் தான் ஆகணும்” என்றவன் அரசியிடம் திரும்பி...

“கார்கீயை எடுத்துட்டு வா, சம்முவை நீ பார்த்துக்கோ” என்று ஆக்கினையிட்டு விட்டு சென்றிருந்தான்.

கலாதரன் தன் தொழில்நுட்ப துறை பணி சம்மந்தமாக முக்கியமான காணொளி சந்திப்பு ஒன்றில் இருந்தவனால் அன்றைய தினம் அவனை பிடிக்க முடியாமலே போனது. சம்யுக்தாவை அடுத்த நாள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை தர்சன் ஏற்றுக் கொண்டிருக்க, அர்ஜுன் தரனை சந்திக்க சென்றுவிட்டான்.

சம்யுக்தாவை தர்சன் பொறுப்பேற்று மருத்துவரிடம் அழைத்துச் செல்ல... “டாக்டர் இந்த குழந்தையை நான் அபார்ட் பண்ணப் போறேன்” என்றதும் மருத்துவர் ஏனென்று விசாரிக்க வீட்டில் கூறிய காரணத்தையே கூற இரண்டாவது குழந்தை என்றதும்...

“அஸ் அ டாக்டரா முதல் குழந்தைன்னா கண்டிப்பா அபார்ட் பண்ணமாட்டோம்... இரண்டாவது குழந்தை சூழ்நிலை பொறுத்து, அதே மாதிரி உங்களுக்கான சூழ்நிலை நீங்க தான் முடிவு பண்ணணும்னாலும், குழந்தை ஆரோக்கியமா இருக்கு அதுக்காக கொஞ்சம் யோசிக்கலாம்... இல்லைன்னா, நீங்க உங்க கணவருடன் வந்து ஒரு முறை கவுன்சிலிங் எடுத்துட்டு முடிவு செய்துக்கலாம்” என்ற கூற சம்யுக்தா பிடிவாதமாக நின்றாள்.

“நோ டாக்டர்! எனக்கு குழந்தை வேண்டாம்... நான் அதில் தெளிவா இருக்கிறேன், நீங்க அபார்ட் பண்ணிருங்க” அவளின் உறுதியில் அதற்கு மேல் அவளை வற்புறுத்த முனையாமல்...

“சரி நான் பாரம் கொடுக்க சொல்றேன்... அதில் நீங்களும், உங்க ஹஸ்பண்டும் சைன் பண்ணி கொடுங்க ஸ்டொமக் வாஷ் பண்ணிரலாம்”

“என் ஹஸ்பண்ட் அர்ஜன்ட்டா அப்ராட் போயிட்டாரு... சோ, நான் மட்டும் சைன் பண்ணினா போதுமா?” என்றதும் அதுவரை எப்படியேனும் சமாளித்துவிடலாம் என்று தைரியமாக இருந்த தர்சனுக்கு சம்யுக்தாவின் தீவிரமான பேச்சில் பீதியடைந்தான்.

“டாக்டர் இவங்க என் அக்கா தான் ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன்” என்றவன் அவளை அவசரமாக அழைத்துக் கொண்டு சென்றான்.

“சம்முக்கா ப்ளீஸ் என்னை நீங்க உண்மையாவே கூடப் பிறக்காத உறவா மனதார நினைக்கறீங்கன்னா... எனக்காக கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுங்க, உங்க முடிவு உங்க கணவருக்கு கோபத்தை வரவழைக்கலாம்”

“இல்லை தர்சன் என் முடிவில் நான் உறுதியா இருக்கேன்... இதுக்கும் உன்னை நான் உறவா நினைக்கிறன்ன்னு நிரூபிக்கிறதுக்கும் சம்மதமில்லை... என்னை நெருங்கின யாரும் என்னை ஒரு கேள்வி கேட்க முடியாது... ஆனால் உனக்கு பதில் சொல்லிட்டு இருக்கிறேன், அதுவே உனக்காக நான் கொடுக்கிற முக்கியத்துவம் தான்” என்றவளின் அழுத்தமான பதிலில் அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் போகவே இதை தற்காலிகமாக தள்ளிப் போட சம்யுக்தா அறியாமல் மருத்துவரிடம் பேச விளைந்தான்.

“சரி சம்முக்கா அப்போ நீங்க அமௌன்ட் பே பண்ணிட்டு வாங்க நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு அவளை அப்புறப்படுத்தியவன் மருத்துவரிடம் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்து ஒன்றுமறியாதவன் போல் நின்றுக் கொண்டான்.

அவன் என்ன பேசினானோ குழந்தையை கலைக்க அடுத்தகட்ட பரிசோதனைக்கு தயாரானவளிடம்... “மிசஸ்.சம்யுக்தா எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான சிசேரியன் இருக்கு... அதனால் நான் அர்ஜன்ட்டா போயாகணும்... சோ, ரெண்டு நாளைக்கு இந்த டேப்லட் எடுத்துட்டு அப்புறம் வாங்க” என்று கூற சம்யுக்தாவும் அவரின் பேச்சை ஏற்றுக் கொண்டு தர்சனுடன் சென்றிருந்தாள்... என்ன தான் அவளுள் உதித்திருக்கும் இரண்டாவது மகவு வேண்டாம் என்று எண்ணி முடிவை எடுத்திருந்தாலும் உள்ளுக்குள் கணவனின் உயிர் என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்ததில் நீரோடையை போன்ற சலனத்தில் அலைப்புறுதலுடன் அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தாள்.

தர்சன், சம்யுக்தாவுடன் வீட்டில் இறங்கியவன்... “சம்முக்கா டாக்டர் சொன்ன மாதிரி நீங்க ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்க அலைச்சல் வேண்டாம்” என்றவனின் பேச்சை மதித்து அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள். மருத்துவமனையில் நடந்ததை தர்சன் மூவரிடமும் கூறிக் கொண்டிருக்கும் வேலை வெளியே புயல் வேகத்தில் கிறீச்சிட்ட சப்தத்துடன் வாகனம் நிற்க, வெளியே எட்டி பார்த்தவர்களின் விழிகளில் சீற்றத்துடன் இறங்கிய தரன் கண்களில் படவே, அவனை தொடர்ந்து வந்த அர்ஜுன் அவன் கரங்களை பற்றி ஆவேசத்தை குறைக்க முயன்று தோற்றுப் போனான்.

“டேய் விடுங்கடா... யாராச்சும் என்னை தடுத்தீங்க அப்புறம் நடக்கிறதே வேற ஜாக்கிரதை!” என்று கண்கள் சிவக்க ரௌத்திரத்துடன் விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றவனை கண்டு அனைவரும் திகிலுடன் பார்த்து அரண்டு நின்றனர்.

“அவன் இவ்ளோ கோபமா போறான் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?” என்று பதறி துடித்த மல்லிகாவை நடராஜன் சமாளித்தார்.

“மல்லி தரன் கோபக்காரன் தான் ஆனாலும் குணவான்... அடுத்தவங்களுக்கே துரோகம் நினைக்காத ஒரு ஜீவன்... அவன் தன் பொண்டாட்டி பிள்ளைகள் மேல உயிரை வச்சிருக்கிறவன் நிச்சயம் அவன் விட்டு பிடிக்க தான் முயற்சி செய்திருப்பான்... ஆனால் சம்முவுடைய முடிவு யாருக்கா இருந்தாலும் கோபத்தை தான் வரவழைக்கும்... சம்முவுக்கு எதுவும் ஆகாது அப்படி நடந்தா தரனும் இருக்கமாட்டான்” என்றவரின் முகம் தீவிரத்தில் இருக்க, அனைவரும் வாயடைத்து அவரவர்க்கு தகுந்த ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து ஏதோ முக்கிய பரீட்சையின் இறுதி முடிவு வெளியாவது போல் ஆளுக்கொரு திசையை பார்த்தபடி அமர்ந்துவிட்டனர்.

அர்ஜுன், தர்சன் இருவருக்குமே கூட தரனின் ஆவேசம் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்க, அழுவலக வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு வீட்டிலேயே தேங்கிவிட்டனர்.

அறையில் மெத்து மெத்தென்ற பஞ்சனையும் முள்ளாக குத்துவது போல் இருக்க, உறங்க முடியாமல் கண்களை மட்டும் மூடி அலைபாயும் மனதுடன் படுத்திருந்தாள்... தரன் கோபாவேசத்துடன் கதவை திறந்து அதே வேகத்துடன் மூடி தாழிட்டவனின் சத்தத்தில் பதறி கண் விழித்த சம்யுக்தா எதிரில் வேட்டைக்கு செல்லும் கருப்புசாமியை போன்று கண் சிவந்து நின்றவனை கண்டு அஞ்சி அரண்டுப் போனவளாக வாரிச்சுருட்டி கொண்டு எழுந்தாள்.

“கொஞ்ச நாள் உன்னை உன் போக்கில் விட்டு பிடிக்கலாம்னு நான் பொறுமையா இருந்தா... நான் உன்னை கண்டுக்கமாட்டேன் எது வேணாலும் செய்யலாம்னு நினைச்சுட்டியா?”

“...........” அவளின் பார்வை தரையை தொட்டுக் கொண்டிருக்க, அவன் கேள்விக்கு பதில் வராது போகவே தானே தொடர்ந்தான்.

“என்ன தைரியம் இருந்தா என்னை கேட்காம என் குழந்தையை அழிக்க துணிவ?!” என்று சிங்கத்தை போல் சீற்றத்துடன் உறுமியவனின் குரலில் அஞ்சி நடுங்கினாலும், பயத்தை ஓரம் கட்டி விட்டு வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் நிமிர்ந்தவள்...

“உங்களை ஏன் கேட்கணும்? நான் தான் டிவோர்ஸ் பேப்பரை கொடுத்துட்டேனே இனி உங்களுக்கும், எனக்கும் யாதொரு சம்மதமுமில்லை” என்று நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் தூக்கியெறிந்து பேசியவளை கண்டு கோபம் குமிழிட...

“இந்த நாலன்னாவுக்கு பெறாத பேப்பர் தான், உனக்கும் எனக்குமான பந்தத்தை நிர்ணயிக்குதா?” என்றவன் வார்த்தையில் புயலை அடக்கிய சினம் உள்ளார்ந்திருந்தது.

“அதே பேப்பரை தூக்கிட்டு தான் நீங்களும் கோர்ட்டுக்கு போனதா நியாபகம்”

“ஆமாம் டி நான் கோர்ட்டுக்கு போனேன் தான்... ஆனால் அது உன்னை பிரிஞ்சு போக இல்லை, உன்னை என் கூட வாழ வைக்கணும்னு நோக்கத்தில் போனேன்” என்றவனை கண்கள் இடுங்க பார்த்தவள்...

“இது என்ன புதுக்கதை?” என்று வினவினாள்.

“புது கதை எல்லாம் இல்லை... பழைய கதை தான், அதுவும் நமத்து போன கதை” என்றவன் வார்த்தையில் பழையவை அனைத்தும் தேவையற்றது என்ற குறிப்பை உணர்த்திய பிறகே அவள் கேள்விக்கான விளக்கத்தை அளித்தான்.

“நீயோ வீம்புக்காரி... நான் உன்கிட்டே கேட்கக் கூடாத கேள்வியை கேட்டதுக்கு அப்புறம் நீ என் கூட வாழ வரமாட்டேன்னு தெரிஞ்சு உன்னை திசை திருப்பி ஏத்தி விடத்தான் நான் கோர்ட்டுக்கு போனேன்... எனக்கும் குற்றவுணர்ச்சி என்னை சாகடிச்சுச்சு... அதனால் தான் கோர்டுக்கு போனேன். நீயும் என்னை எதிர்க்க விவாகரத்து தர முடியாதுன்னு என் கூட வாழ வந்த இல்லைன்னா, நீயும் நானும் அப்போவே பிரிஞ்சு இருந்திருப்போம்... இப்போ என்னுடைய அடுத்த ஜீவனும் உனக்குள்ள உதிச்சிருக்காது” அவன் கூறியதை கண்டு கலவையான உணர்ச்சியலையை முகம் காட்டிக் கொடுக்க அவளையே ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வார்த்தையில் அவளை எத்தனை ஆழமாக அறிந்து வைத்து செயல்பட்டிருக்கிறான் என்ற எண்ணம் தோன்றிய கணமே அவன் மேல் கோபமும் தோன்ற...

“நீங்க போட்ட திட்டம் பிரமாதம் தான்... ஒரு வேலை நான் விவாகரத்து வேணும்னு உறுதியான நின்றிருந்தா?” உதட்டை எள்ளலாக வளைத்தபடி இகழ்ந்தவளை நேர் பார்வையுடன் நோக்கியவன்...

“நான் மறுத்திருப்பேன்” என்றிருக்க...

“பொய்” அவனை எதிர்க்க வென்று வேகமாக கூறினாள்.

“எதை வச்சு பொயின்னு சொல்லுற, சொல்லு?”

“என் கூட இருந்து சுகம் கண்டுகிட்ட உங்களுக்கு அதை விட மனசில்லை, அதான் என்னை பிளான் போட்டு உங்க கூட தக்க வச்சுக்கிட்டீங்க?”

“சுகம்?! ஆமாம் டி உலகத்தில் உன்னை தவிர வேற பொண்ணுங்களே இல்லை பாரு, உன்னை அதுக்காகவே தேடி பிடிச்சு தாலி கட்டி கூட்டிட்டு வந்தேன்” என்றவன் அவளை ஆவேசமாக நெருங்கி அவள் தாடையை அழுத்தமாக பற்றிக் கொண்டு...

“உன்னை நான் அதுக்காக மட்டும் தான் தொட்டேன்னு உன் வயித்தில உதிச்சிருக்கிற குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்லு டி... இந்த நிமிஷமே நான் உயிரை விட்டுறேன்... அடுத்த நிமிஷம் என் குழந்தையை அழிச்சுட்டு நீ புது வாழ்க்கையை தேடிப் போக வசதியா இருக்கும்” என்று அழுத்தமாக உரைத்தவனின் வார்த்தையில் சர்வாங்கமும் ஒடுங்க ஆடிப் போனாள்.

கோபத்தில் அவனை காயப்படுத்தவென்று வார்த்தையை விட்டவளுக்கு தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று எப்போதும் போல் காலம் கடந்தே உணர்ந்திருந்தாள்.

அவளின் அமைதியில் அப்படியே விட்டுவிடாமல்... “சொல்லு டி” என்று அழுத்தமாக வினவி தாடைகளை அழுத்தமாக பற்றியிருக்க, அவன் பிடித்த பிடியில் தசைகள் வலி தாங்க முடியாததில் முகம் சுளித்தாள். அவளின் முகம் காட்டிய பாவனையில் என்ன எண்ணினானோ மெல்ல அவளை விடுவித்திருந்தான்...

“புருஷன், பொண்டாட்டினா அதுக்கு முதல் அஸ்திரம் தாம்பத்யம் தான், இங்கே பலருடைய வாழ்க்கையே அதில் தான் தொடங்குது... சிலர் தான் புரிதலை ஏற்படுத்திகிட்டு தாம்பத்யத்தை தொடங்கறாங்க, இதில் நீ தப்பு சொல்லவோ, குற்றம் சுட்டி காட்டவோ, கொச்சை படுத்தவோ என்ன டி இருக்கு?”

“...........” அவன் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தவளாக உதட்டை கடித்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா உன் கூட சேர்ந்து வாழ்ந்த இத்தனை நாட்கள்ள ஒரு நாள், ஒரு மணி நேரம் இல்லை; அட்லீஸ்ட் ஒரு நிமிஷம் உன்னை உன் உடம்புக்காக தான் தொட்டேன்னு சொல்லு டி பார்ப்போம்” என்று சவால் விட்டவனின் வார்த்தை அவள் மனதை ஏதோ செய்திருக்க அதற்கு பதிலளிக்க முடியாமல் தவித்துப் போனாள்.

“தாம்பத்யம்கிறது உடல் இச்சையை மட்டும் தீர்த்துக்குற விஷயம் இல்லை, அதையும் தாண்டின ஒரு நூதன உணர்வு... உன்னை எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு செயலால் தெரிஞ்சுக்க வேண்டி ஆழமான தேடலில் இறங்குறது தான் டி தாம்பத்யம்” என்றவன் முன்பை போல் அல்லாமல் மென்மையாக அவள் தாடையை பற்றி கண்களை ஊடுருவியவன்...

“என்னை காயப்படுத்துறேன், எனக்கு தண்டனை கொடுக்கிறேன்னு சொல்லி, உனக்கு நீயே வினை விதைச்சுக்காதே அதோட வலி நரகமா இருக்கும்... உன்னை ஒரு வார்த்தை சொல்லிட்டு நான் தினமும் நரக வேதனையை அனுபவிச்சுட்டு இருக்கிறேன், உனக்கும் அப்படி ஒரு நிலை வேண்டாம்” என்று கூறியிருக்க, அவன் கைகளை மெல்ல பிரித்தெடுத்தவளை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

“வேணும்னா நீங்க உங்க மகளை உங்களோடவே வச்சுக்கோங்க ஆனால், என் முடிவு மாறாது. என் வாழ்க்கை இனி உங்களோட கிடையாது... இதை ஏற்றுக்க முடியலைன்னா இதுக்கு நீங்க காரணம் இல்லை, நான் தான் காரணம்னே வச்சுக்கோங்க... ஆனால் என்னை வற்புறுத்தாதீங்க” என்று பிடிவாதமாக நின்றவளை கண்டு ஆத்திரம் மூண்டது.

“உனக்கு அப்படி என்ன டி என் மேல கோபம்? நான் அப்படி என்ன கொடுமை பண்ணினேன்? தினம் குடிச்சுட்டு வந்து அடிச்சேனா? இல்லை, வேறொரு பொம்பளை கூட தொடர்பு வச்சிருந்தேனா? இல்லை உடம்புக்கும், மூளைக்கும் கேடு விளைவிக்கிற கஞ்சா எடுத்துக்கிட்டு போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கேனா? இல்லை நான் ஆண்மையாற்றவனா? இதில் எது என்கிட்டே இருக்குன்னு சொல்லு டி நான் உனக்கு தகுதி இல்லைன்னு நானே விலகிப் போறேன் சொல்லு டி” என்று கூறி அவளை உலுக்க அவள் முற்றிலும் உடைந்து போனாள்.

“வேண்டாம்...! வேண்டாம்...! வேண்டாம்...! இதுக்கு மேல நீங்க பேசாதீங்க... நான் தாங்கமாட்டேன். தாங்கவேமாட்டேன்!” என்றவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வர உடல் அழுகையில் குழுங்கியது.

அவளின் அழுகை ஆணவனின் மனதை சுக்குநூறாய் நொறுக்க வேதனையில் முகம் கசங்கிப் போனது. அவள் விட்டால் அழுதுக் கொண்டே இருப்பாள் என்று எண்ணியவன் அவளை உலுக்கி தண்ணீர் அருந்த வைத்து சமநிலைக்கு கொண்டு வந்திருந்தான். அவளும் சற்று தெம்பாக அமர்ந்திருப்பதை கண்டு...

“இங்கே பாரு என்னை விலக்கி வைக்கணும்னு நினைச்சு கண்டதையும் பேசாதே... எள்ளை கொட்டினா கூட பொறுக்கிடலாம் ஆனால், சொல்லை கொட்டினா பொறுக்க முடியாது... இது குடும்பம் அதில் நாம வாழ்ந்துட்டு இருக்கிறோம்... இப்படி வார்த்தையை யோசிக்காம தடிச்சு வீசினா கடைசி வரைக்கும் நெருஞ்சி முள்ளா குத்திகிட்டே இருக்கும், கொஞ்சம் நிதானமா யோசி... உனக்கு என்ன பிரச்சனைன்னு புருஷன் என்கிட்டே சொல்லு, அதை தீர்க்க நான் வழி செய்றேன்” அவனும் கிளி பிள்ளைக்கு கூறுவது போல் நிதானமாக கூறியிருக்க அவளோ தான் பிடித்த பிடியில் அழுத்தமாக நின்றுக் கொண்டிருந்தாள்.

“இல்லை, எனக்கு பிரச்சனை என்ன இருந்தாலும் அது எனக்கானது... நான் உங்க கூட வரும் போதே ஒரு முடிவோட தான் வந்தேன்... அதாவது வாணியை எங்க அண்ணன் கூட சேர்த்த அடுத்த நிமிஷம் நான் உங்களை பிரியுறதா உறுதியான முடிவெடுத்துட்டு தான் வந்தேன்” என்றவளின் கூற்றை கேட்டு அலட்டிக் கொள்ளாமல் தன் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு பேசலானான்.

“நான் உன்னை கூட்டிட்டு வரும் போது முடிவோட தான் வந்தேன், எக்காரணம் கொண்டும் என் உயிர் இருக்கிற வரை உன்னை பிரியக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்... அதனால், நானும் என் முடிவை தளர்த்திக்கிறதா இல்லை... அப்படி பிரியணும்னா இந்த உடலில் இருந்து என் உயிர் பிரிஞ்சுட்டதா அர்த்தம்” என்றவனின் பதிலை கேட்டு எங்கிருந்து தான் அத்தனை ஆவேசம் வந்ததோ கட்டிலில் கடந்த தலையணையையும் கையில் கிடைத்த மேஜை மேல் இருந்த உபகரணங்களையும் அவன் மேல் வீசி யுத்தம் நடத்தியவளின் செயலுக்கு சிறிதும் அசைந்துக் கொடுக்காமல் கற்சிலையைப் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தவனை கண்டு, அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டவள்...

“உனக்கு என்னை விட உன் தங்கச்சி, உன் சித்தி, உன் குடும்பம் தானேடா பெருசு... இப்போ என்ன உரிமையில் என் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு நீ உரிமை கொண்டாடுற” என்று கூறி பலம் கொண்ட மட்டும் அவனை தாக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ அசையாமல் நிற்கவே சக்தியற்று கட்டிலில் வீழ்ந்தவள் கண்கள் நீரை சொறிந்து கொண்டிருந்தது.

“இதே மாதிரி இன்னும் எவ்ளோ அடி வேணாலும் அடிச்சுக்கோ... இல்லையா, இன்னும் என்ன செஞ்சா ஆத்திரம் தீருமோ அத்தனையும் செஞ்சுக்கோ... ஆனால், என்னை பிரிஞ்சு வதைக்காதே கூடவா வந்து எதுவானாலும் செய் நான் தாங்கிக்கிறேன்” என்று இறைஞ்சுதலாக கூறியவனின் வார்த்தையை அசட்டை செய்தவள்...

“முடியாது...! நான் வர முடியாது... என்னை உதாசீனப்படுத்தின உங்க கூட நான் வரமாட்டேன் அதுக்கு வேற ஆளைப் பாருங்க”

“நான் எப்போ டி உன்னை உதாசீனப்படுத்தினேன்?”

“ஏன் ஹாஸ்பிடலில் குழந்தையை வச்சு என்னை அவமானப்படுத்தினீங்களே மறந்துட்டீங்களா?” என்று உக்கிரமாக கேட்க... அவனுக்கோ கோபத்தில் கூறிய வார்த்தையை பெரிதாக எண்ணுகிறாள் என்று அயர்ச்சியாக இருந்தது.

“ஏய் நீதான் டி என் பொண்டாட்டி, என் பிள்ளைக்கு அம்மாவும் நீ தான், அந்த நேர டென்ஷனை நான் உன்கிட்ட தான் காட்ட முடியும்”

“ஆங்! அப்புறம் என்ன சொன்ன குடும்பம்னா என் சித்தி, சித்தப்பா, அப்பா, என் தங்கச்சிங்க தானா? ஏன் டி என் பொண்டாட்டி நீ யாருடி அப்போ...? நீதானடி எனக்கு ராணி... என்னை ஆளுறவ நீ தான்... இந்த கவின்காலதரன் உன் சொத்து, அவன் வாரிசுக்கு நீ அம்மா, இதெல்லாம் ஏன் டி உன் மரமண்டைக்கு தெரியமாட்டேங்குது?”

“புருஷன் நான் ஒரு வார்த்தை சொன்னதும் தூக்கி எறிஞ்சுட்டு வெளியே போற, அப்போ நீ பேசுற வார்த்தைக்கெல்லாம் நான் உன்னை என்ன டி பண்ணுறது” என்றதும் கலங்கி சிவந்த கண்களுடன் ஏறிட்டவளுக்கு மனதை பிசைந்தது... அவள் நியாய தராசு கணவனை தானும் தானே கடுஞ்சொற்களால் சாடி இருக்கிறோம் என்று நினைவுறுத்தியதில் சற்றே அவள் மனம் அசைந்ததில்...

“சாரி” என்று மன்னிப்பு கோரினாள்.

“உன் சாரியை தூக்கி குப்பையில் போடுட்டு என் கூட வாழ வா அதுவே போதும்”

“இல்லை! எனக்கு மனசு சரியில்லை நான் இப்போதைக்கு வர முடியாது” என்றவளை கண்டு எரிச்சல் மூண்டிருந்தது... அவள் இறங்கி வந்ததே அவள் மனதை அப்பட்டமாக உணர்த்தியிருக்க அதை மறைத்து போய் கூறியவளிடம்...

“தூங்குறவளை எழுப்பலாம் ஆனா தூங்கிற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது டி... இதுக்கு மேல நான் என் கூட வாடின்னு கெஞ்சமாட்டேன்... நீயா என்னை தேடி வந்தா வா, அதே சமயம் குழந்தையை மட்டும் அபார்ட் பண்ண துணிஞ்ச உன்னை பொலி போட்டிருவேன்” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பியவன் விருட்டென்று நகர்ந்துவிட்டிருந்தான்.
**********************

மாடியிலிருந்து விறுவிறுவென்று இறங்கியவன் அங்கிருப்பவர்களை சட்டை செய்யாமல் வேகமாக சென்றிருக்க, அனைவரும் செய்வதறியாது கையை பிசைந்தனர்.

“என்னாச்சோ தெரியலையே தரன் திரும்பவும் முறுக்கிட்டு போகிறானே” என்று புலம்பிய அன்னையை நோக்கிய அர்ஜுன்...

“வேறென்ன நடந்திருக்கும் சம்முவை அவன் கூட கூப்பிட்டிருப்பான் ஆனால், அதுக்கு அவ ஒத்துக்குவாளா பிடிவாதக்காரி ஆச்சே... கவலைப்படாதீங்க அவ பிடிவாதக்காரி, கோபக்காரி தான் ஆனாலும் அதை விட பாசக்காரி... நம்ம தரனை விட்டு அவளால் இருக்க முடியாது” என்று உறுதியாக கூறியவனை கூற்றில் அனைவருக்குமே நேர்மறை நம்பிக்கை எழுந்திருந்தது.

கணவனின் பேச்சால் நேர்ந்த மாற்றமோ, தாய்மைக்கே உண்டான பாசமோ, எதுவோ ஒன்று அவளை கட்டிப்போட குழந்தையை கலைப்பது பற்றின எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தாள். மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் குழந்தையை கலைப்பதற்காகவோ என்ற சந்தேகத்தில் இருந்தவளுக்கு அதை மருத்துத்துவரிடம் விசாரிக்க...

“இது வெறும் வைட்டமின் டேப்லெட்ஸ் தான், நீங்க கலைக்கணும்னு சொன்ன போதே எனக்கு நீங்க அவசரப்பட்டு முடிவெடுக்கிறீங்க தெரிஞ்சது... அதனால் தான் கொஞ்சம் நாள் டைம் கொடுத்தேன் இப்போ நீங்க நல்லா இருக்கீங்க நார்மலா இருக்கலாம், எந்த பிரச்சனையும் இல்லை” என்றதும் தான் நிம்மதியுடன் திரும்பினாள்... அவளின் செயலை கண்ட அர்ஜுன் குடும்பத்தினரிடம் ‘எப்படி நான் சொன்னது சரியா?’ என்பதாக பார்வையால் கேட்டுக் கொண்டான்.


சுவடுகள் தொடரும்....
**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 34 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-35

அன்று அர்ஜுன், தர்சன் இருவரும் பரபரப்பாக காணப்பட்டனர்... மல்லிகா நடராஜன் இருவரும் அடுத்து என்ன திருப்பம் நேர இருக்கிறதோ என்பது போல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அர்ஜுனின் அலைபேசி ஒலிக்க அதில் அன்பழகனின் பெயர் மின்னவே உயிர்ப்பித்து செவிக்கு கொடுத்தவனிடம் சில விஷயங்கள் கூறியிருக்க...

“ம்ம்ம்... சரி அங்கிள்”

“...........”

“இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம் நான் தரன்கிட்ட சொல்லி அவளை கூப்பிட்டு வந்துடுறேன்”

“...........”

“தரன் கண்டிப்பா வருவான் அங்கிள்”

“...........”

“நீங்க அடுத்து என்ன செய்யணுமோ அதை செய்திருங்க, நாங்க ரஞ்சனுடைய வடவள்ளி வீட்டில் ஸ்டே பண்ணிக்கிறோம்” என்று விட்டு வைத்து விட்டிருந்தவன், சம்யுக்தா அறியாமல் மற்ற அனைவருடன் ஒன்று கூடி வட்டமேஜை மாநாடு நடத்தி விட்டு தன் பணியை பார்க்க செல்லலானான்.

“தர்சன் நான் போய் தரன்கிட்டே பேசுறேன், நீ ஆபிஸ் வேலை பார்த்துக்கோ”

“இல்லை அர்ஜுன்… இரு நானும் வரேன் சேர்ந்தே போவோம், எனக்கும் சில விஷயங்கள் பேச வேண்டி இருக்கு” என்றவனை மறுக்காமல் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தான்.

தரன் தன் தோட்டத்தில் களையெடுக்கும் பணி செய்துக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க அர்ஜுன், தர்சனின் வரவை கண்டு...

“என்னடா திடிர்னு இந்த நேரத்தில் வந்திருக்கீங்க?” என்று விசாரித்தவனிடம்...

“வர வேண்டிய நேரம் வந்திருச்சில்ல அதான் டா” என்றவனை புருவம், இருவரின் பார்வையும் உணர்த்திய செய்தியை கற்பூரம் போல் பச்சக்கென்று பிடித்துக் கொண்டவன்...

“என்ன டா கோயம்புத்தூர் போகணுமா?”

“ம்ம்... ஆமாம்டா” என்றதும் சில கணங்கள் சிந்ததித்தவன்...

“சரி டா எப்போன்னு மட்டும் சொல்லுங்க, நான் மலர் காலேஜ் விஷயமா எதார்த்தமா உங்க கூட சேர்ந்துக்கிற மாதிரி பார்த்துக்குறேன்” என்றிருந்தான்.

“சரிடா ஆனால் சம்மு கோபமா இருக்கா போல....” என்று பேசிக் கொண்டிருந்தவனை முடிக்க விடாது பேச்சை இடை வெட்டுவது போல் கரம் உயர்த்தியவன்...

“உங்க ரெண்டு பேருக்குமே சேர்த்து தான் சொல்றேன்... அவ என் பொண்டாட்டி, அவ கோபம் ஒன்னும் எனக்கு புதுசில்லை, அவளை பற்றின பேச்சை நீங்க ஆவாய்ட் பண்ணுறது கொஞ்சம் நல்லது” அவன் குரல் தன்மையாக இருந்தாலும் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது.

“டேய் ப்ளீஸ் தப்பா நினைக்காதே... எங்க எல்லாருக்குமே நீயும், சம்யுக்தாவும் ஒண்ணு தான் அவளுக்காக மட்டும் நாங்க பேசலை, உங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்காகவும் தான் பார்க்கிறோம் டா, நீ நம்பலைனாலும் இது தான் நிஜம்” என்று அர்ஜுன் கூறியதை தொடர்ந்து...

“உங்களை விட வேற யாருமே சம்மு க்காவை நல்லா பார்த்துக்க முடியாது... அவங்க என்ன செய்தாலும் நீங்க அவங்க கூட இருக்கணும், உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரலாம் ஆனால் பிரிவு வந்திரக்கூடாது” என்று தர்சனும் கூற, தரன் ஒற்றை புருவம் உயர்த்தி மெச்சுதலாக பார்த்திருந்தான்.

“பார்ரா...! அவளை விட்டு பிரிஞ்சு போறதுக்குத் தான் நான் போராடி அவளை இங்கே கூட்டிட்டு வந்தேன்னா? அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது, நடக்கவும் நான் விடமாட்டேன்... அவளை இப்போதைக்கு அங்க விட்டு வைக்க காரணம் குழந்தை உருவாகிட்டு இருக்கிற நேரத்துல தொழிலையும் கையாள்கிறா, இன்னும் பல பிரச்சனைகளை பார்க்கப் போகிறா, இந்த நேரத்தில் அவ அவங்க வீட்டை நினைச்சு ஏங்கக் கூடாதுன்னு தான் உங்க பொறுப்பில் அவளை விட்டு வச்சிருக்கேன்... புருஷன், பிள்ளைங்கன்ற உறவை தாண்டி அவளுக்கும் சில உறவுகள் வேணும், அதை அவளும் எதிர்பார்ப்பா... என்னை கல்யாணம் செய்ததால் அதை எல்லாம் இழந்துட்டோமேன்னு ஒரு நினைப்பு வந்திரக் கூடாது, அப்படி வந்துட்டா அவளை அவளுக்காகவே காதலிச்சு கல்யாணம் செய்ததுக்கு அர்த்தம் இல்லாமல் போயிரும்”

“இல்லைன்னா, இந்நேரம் அவ பேசின பேச்சுக்கெல்லாம் கொடுத்துக்கட்டிட்டு அவ சிண்டை பிடிச்சு இழுத்துட்டு வந்து என் கூட தாண்டி இருந்தாகணும்னு சொல்லியிருந்திருப்பேன்... ஏற்கனவே பண்ணினதெல்லாம் போதும்ன்னு தான் அமைதியா இருக்கேன்”

“...........” அவன் பேசப் பேச வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

“கொஞ்ச நாளைக்கு அவளை சீராட்டுங்க, எப்படியும் இதுக்கும் சீமந்தம் பண்ண சொல்லி கேட்பா அதுக்கு நான் பணம் ரெடி பண்ணிக்கிறேன்... ஆனால் எல்லாம் ஒரு மாசம் தான் அதுக்கப்புறமும் கிணத்துல போட்ட கல்லு மாதிரி அப்படியே இருந்தானா அவளை தூக்கிட்டு வந்துருவேன்... இது போதுமா விளக்கம் இல்லை இன்னும் வேணுமா?” என்று கூறி நமட்டுச் சிரிப்புடன் நோக்கியவனை கண்டு அசட்டு சிரிப்பை உதிர்ந்தவர்கள், சகஜமாக சில நிமிடங்கள் உரையாடிவிட்டு சென்றிருந்தனர்.
**********************

யமுனா, யசோதா இருவரும் பரபரப்பாக அமர்ந்திருந்தனர். யசோதாவிற்கு பரபரப்பை மிஞ்சிய பதற்றமும், குழப்பமும் நிறைந்த கலவையான உணர்ச்சிகளே தென்பட அதை கவனித்த யமுனா...

“யசோதா என்னாச்சு ஏன் நீ ஏதோ மாதிரி இருக்க?” என்று விசாரிக்க,

“என்னமோ தெரியலை க்கா ஏதோ நடக்கக்கூடாத ஒன்னு நடக்கப் போகிற மாதிரி மனசு படப்படன்னு அடிச்சுக்குது” என்று கூறிக் கொண்டு நெஞ்சை பிடித்தவரை தொடர்ந்து...

“என்ன நடக்கப் போகுது உன் பொண்ணும், என் பையனும் ஏமாந்துட்டு அவங்களோடதை கொடுக்கணும்னு நம்மகிட்டே கையேந்தி நிற்கப் போறாங்க... அதான் நடக்கும்” என்றவரின் முகம் வஞ்சினத்தில் ஆக்ரோசமாக ஜொலித்தது.

“நிஜமா எனக்கு அப்படி நடக்காம வேறேதோ நடக்குற மாதிரி தோணுதுக்கா”

“அதெல்லாம் உன் மனப்பிரமை யசோதா, கொஞ்ச நேரம் பூஜை ரூமில் உட்கார்ந்துட்டு வா சரியாகிப் போயிரும்” என்று கூற அவரும் அவ்வாறே செய்திருந்தார்... ஆனால் என்ன செய்தும் அவரின் சலனம் மட்டும் நீங்காமல் குடைந்துக் கொண்டே இருந்தது.

பாஸ்கரன் வந்ததும் யமுனா ஆவலுடன் அவரை நெருங்கியவர்... “என்னங்க போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?”

“அது எப்படி முடிக்காமல் வருவேன்... எல்லாம் பக்காவா முடிச்சுட்டேன்... இந்த துணி வணிகத்தையும், கார்மெண்ட்ஸ் கம்பெனி ரெண்டுக்கும் நம்ம மூணு பேர் பெயரில் உள்ள மொத்த பங்கையும் என் நண்பனுக்கு தெரிஞ்சவரை வச்சு வாங்க சொல்லிட்டேன்... அவனும் அதுக்கான டாக்குமென்ட் எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டான், இதில் சைன் பண்ணுங்க நம்ம பிளான் கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்” என்க இருவரும் பாரத்தில் கையெழுதிட்டதும்...

“இதை வச்சு அடுத்து என்னங்க பண்ணப் போறீங்க”

“இனி தானே ஆட்டமே இருக்கு... இதை வாங்குறவன் நம்மளை விட ரெண்டு மடங்கு வசதி உள்ளவன்... வருஷம் பல கோடி ருபாய் வணிகம் செய்கிறவன், அவன் நினைச்சா என்ன வேணா செய்யலாம்... நமக்கு பதிலா இப்போ அவன் ஒருத்தனா இருந்து கம்பனியில் நஷ்டம்னு சொல்லி சம்யுக்தா, ரஞ்சன் ரெண்டு பேருக்கும் இடைஞ்சல் கொடுக்குற மாதிரி சூழ்நிலையை ஏற்படுத்தணும் இல்லைன்னா, அவங்களுடைய பங்கையும் அவனுக்கே சேர்த்து விற்கணும்”

“என் யூகப்படி அவங்க ரெண்டு பேரும் இதில் அவங்க பங்கை தான் கொடுக்கிற சூழலில் நிற்பாங்க, அப்போ எப்படியும் நம்மகிட்டே உதவி கேட்டு வந்து தானே ஆகணும்”

“இதெல்லாம் நடக்குமா மாமா?”

“நிச்சயம் நடக்கும் யசோதா... அதை நான் நடத்திக் காட்டுவேன்... அவங்க எல்லாத்தையும் இழந்துட்டு நம்மளை தேடித் தான் வருவாங்க, அப்போ நாம சொன்னதை செய்தா பார்ப்போம்... இல்லைன்னா, அவங்க இஷ்டம் போல வாழட்டும்... அதுவும் புதுசா வாழ்க்கையை தொடங்கட்டும்... அப்போ தான் பெத்தவங்க நம்ம அருமை புரியும்”

“இல்லைங்க நீங்க சொல்ற மாதிரி ரஞ்சன் கூட செய்வான்... ஆனால், சம்யுக்தா செய்யமாட்டா... அவ பிடிவாதத்திலும், வைராக்கியத்திலும் அப்படியே அவங்க அப்பா குணம்” என்றவரின் கண்கள் விகாரத்தில் மின்னியது.

“நீங்க சொல்லுறது சரி தான் க்கா அவ சரியான அடவாதம் பிடிச்சவா, அவளை நம்ம வழிக்கு கொண்டு வருவது அத்தனை சாதாரணமானது இல்லை ஆனால், எனக்கு ஒன்னே ஒன்னு தான் ரொம்ப பயமா இருக்கு”

“என்ன பயம் யசோதா?”

“அவ ஒரு வேளை இதெல்லாம் அவங்க அப்பா ஜீவனாம்சம் கொடுத்த காசில் வாங்கின சொத்துகள்ன்னு கோர்டில் கேஸ் போட்டிருவாளோ?”

“ம்ச்... இதெல்லாம் என்ன பேச்சு யசோதா, அவங்க நாம பார்த்து வளத்தவங்க அவங்களுக்கு போய் நாம பயப்படுறதா? நாம சொன்னதை கேட்டா அவங்களுக்கே நாம திருப்பி கொடுத்திருவோம்னு அவங்களுக்கே தெரியும், நிச்சயம் இந்த தடவை நம்ம பக்கம் தான் வெற்றி கிடைக்கும்... அவங்க நாம சொல்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அந்தஸ்தோட வாழப் போறாங்க” என்று கூறி அவர் மட்டுமில்லாது மற்ற இருவரையுமே மனக்கோட்டையை கட்ட வைத்தவர் உணரவில்லை அவரின் திட்டம் கனவிலும் பலிக்கப் போவதில்லை என்று!

மூவருமே திட்டத்தை செயல்படுத்த ஆக வேண்டிய காரியங்களை சிரத்தையாக மேற்கொள்ளலாகினர்.

சம்யுக்தாவுக்கு வந்த மின்னஞ்சலில் அந்த செய்தி இருக்க அதை பார்த்தவளுக்கு யோசனையும், குழப்பமும் ஒரு சேர எழுந்தது. சிறிதும் தாமதிக்காமல் தன் தமையன் ரஞ்சனை தொடர்புக் கொண்டு அவனிடம் அதை பற்றி கூறி விசாரிக்கலானாள்.

“நானும் இப்போ தான் மெயில் பார்த்தேன் சம்மு... பார்த்திபன் சார் பிசினஸ் மேக்னட், அவருக்கு எப்படி நம்ம கம்பெனியில் ஷேர் ஹோல்டிங் பண்ணிக்கணும்னு தோணிச்சுன்னு தெரியலை”

“எனக்கும் அதே தான் டவுட்டா இருக்கு ரஞ்சன் அண்ணா... நான் இதை பற்றி அர்ஜுன்கிட்டே பேசுறேன் அவருக்கு தெரியுமான்னு கேட்டுப் பார்க்கிறேன்”

“என்ன அர்ஜுன்கிட்டே கேட்டு பார்க்கிறியா? அவனுக்கு எப்படி சம்மு இங்கிருக்கிற பார்த்திபன் அங்கிள் பத்தி தெரியும்?” என்றவனின் கேள்விக்கு சிந்தனை வயப்பட்டவளாக மௌனம் காத்துக் கொண்டிருந்தாள். அவன் கேள்விக்கு பதில் வராது சத்தமின்றி இருக்கவே...

“ஹலோ! ஹலோ! சம்மு லைன்ல இருக்கியா?” என்று அவள் உடல் நிலைக்கு ஏதேனும் பங்கமோ என்ற ரீதியில் படபடவென்று விசாரித்தவனை அறிந்து தன்னை சமாளித்துக் கொண்டவள்...

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ரஞ்சன் அண்ணா... இப்போ நான் உன்கிட்டே ஒரு உண்மையை சொல்லியாகணும் அதை தான் யோசிச்சுட்டு இருந்தேன்”

“என்ன உண்மை சம்மும்மா எதுனாலும் தயக்கம் இல்லாமல் சொல்லுடா” என்றதும் தன்னை சமாளித்துக் கொண்டு அதை கூறலானாள்.

“அர்ஜுன், நம்ம மல்லிகா அத்தை பையன்” என்றதும் ரஞ்சன் இனிமையாக அதிர்ந்தான்.

“என்ன..! என்ன.. சொல்ற சம்மு?”

“அர்ஜுன் குடும்பம் நமக்கு நெருங்கின உறவு” என்றவளின் கூற்றில் தெள்ளத் தெளிவாக அனைத்தும் விளங்க வர...

“சம்மு அப்போ சித்தப்பாகிட்டே நீ பேசினியா?” என்று ஆவலுடன் வினவியவனின் முகத்தில் தேஜஸ் மிளிர்ந்தது.

“ம்ஹும்... இல்லை ரஞ்சன் அண்ணா, அவர் அந்த வட்டத்துக்குள்ளையே இன்னும் வரலை... அதுவுமில்லாம எல்லாருமா சேர்ந்து இன்னும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறாங்கன்னு என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு... அதனால் நான் அவங்க போக்கிலேயே விட்டிருக்கேன் எத்தனை நாளைக்கு தான் மீதி விஷயத்தையும் மறைப்பாங்கன்னு பார்ப்போம்”

“எதை வச்சுடா இப்படி சொல்ற?”

“ராயல் கிங் மோட்டார்ஸ் கம்பெனியை தானே கவின் தனக்கு சொந்தமானதுன்னு சொன்னாரு... அப்போ அவருக்கு உதவி செஞ்சவங்க நிச்சயம் அர்ஜுனா தான் இருக்கணும். ஆனால் அது அர்ஜுனுக்கும், தர்சனுக்கு சொந்தமானதா தெரியலை... ஒரு கம்பெனிக்கு குறுகிய காலத்திற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்து இருக்காங்கன்னா நிச்சயம் அது இவங்களுக்கு நெருங்கினவங்களா தான் இருக்கும் அது யாரா இருக்கும்ன்னு என்னால் கெஸ் பண்ணவே முடியலை எப்படி யோசிச்சு பார்த்தாலும் ஏதோ ஒன்னு இடர்பாடாவே இருக்கு, ரொம்ப குழப்பமா இருக்கு” என்றவளின் கூற்றில் அவனுக்கு உடன்பாடு இருக்கவே புருவம் மத்தியில் முடிச்சு விழுந்தது.

“நீ சொல்றது எனக்கும் குழப்பமா இருக்கு சம்மு... ஆனால் நீ டிடெக்ட்டிவ் கிட்டே சொல்லி தானே விசாரிச்ச இதை பத்தி எதுவும் சொல்லலையா?”

“இல்லை ரஞ்சன் அண்ணா எனக்கு சந்தேகமே அந்த இடத்தில் தான் ஆரம்பிக்குது... அவங்க சொன்ன இன்ஃபர்மேஷன் வச்சுத் தான் அர்ஜுன் நம்ம உறவுன்னே தெரிய வந்தது... அதுக்கப்புறம் நான் அர்ஜுங்கிட்டே விசாரிக்கவும் தான் அவர் சொன்னாரு”

“சம்மு எனக்கும் இப்போ தான் எல்லாம் புரியுது... சின்ன வயசுல அர்ஜுனை நான் ஒண்ணு ரெண்டு வாட்டி பார்த்ததோட சரி அதனால், எனக்கு அவனை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை... இதே மல்லிகா அத்தையும் நடராஜன் மாமாவையும் பார்த்திருந்தா நிச்சயம் நான் அடையாளம் கண்டுக்கிட்டு இருந்திருப்பேன்... அவங்க அதை தெரிஞ்சு தான் நான் இருக்கிற திசை பக்கமே வரலையோன்னு சந்தேகமா இருக்கு”

“இதில் சந்தேகப்பட ஒண்ணுமில்லை, நிச்சயம் நீ சொன்ன காரணம் தான்... எனக்கு கவின் தானே உறவு, கவினுடைய நண்பனா தானே அர்ஜுனை தெரியும், அதனால் பக்காவா சந்தேகமே வராத மாதிரி எல்லாத்துக்கும் பின்னாடி நின்னுருக்காங்க... நமக்கும் பிரெண்ட் குடும்பம் தானே அப்படின்னு அவங்க இல்லாதது பெரிசா தெரியலை”

“நீ அவங்களை பார்த்து கொஞ்சம் கூடவா நியாபகம் வரலை சம்மு?”

“இல்லை அர்ஜுன் அண்ணா... எனக்கும் அதே குழப்பமும், ஆதங்கமும் இருந்தது... அதை பற்றி அத்தைகிட்டே கேட்டப்போ தான் சொன்னாங்க நான் மூணு வயசு வரைக்கும் தான் அங்கே வந்தேனாம்... அதனால் உனக்கு அடையாளம் தெரிய வாய்ப்பில்லை சம்முன்னு தான் சொன்னாங்க. அந்த மூணு வருஷம் நான் வந்து பழகின போது இருந்த போட்டோஸ் எல்லாம் காட்டினாங்க... தர்சனுக்கும் எனக்கும் சம வயசு, அதனால் அவனையும் அடையாளம் கண்டு பிடிக்க முடியலை”

“சம்மு எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு... அவங்க ஏன் இவ்ளோ தூரத்துக்கு நம்மகிட்டே மறைக்கணும்? ஒரு வேலை சித்தப்பா எதுவும் சொல்லிட்டாரோ... ஏன்னா, எனக்கு தெரிஞ்சு மூணு வயசுல அவர் உன்னை பார்த்தத்தோட சரி... அதுக்கப்புறம் ஜென்மத்துக்கும் நம்ம வீட்டு பக்கமோ, நம்ம சம்மதப்பட்ட உறவுகள் கிட்டயோ தொடர்பு வச்சுக்கமாட்டேன் சொல்லிட்டு போனவரு தான், அதுக்கப்புறம் அவர் சொன்னதை வைராக்கியமா நின்னு செய்து காட்டினார்... அதனால் பயங்கர குழப்பமா இருக்கு”

“குழப்பிக்க வேண்டாம் ரஞ்சன் அண்ணா... இது ஒன்னும் சிதம்பர ரகசியம் இல்லை, சீக்கிரமே எல்லா குழப்பதுக்கும் விடை கிடைக்கும்”

“உன் வீட்டுக்காரருக்கு விஷயம் தெரியுமா சம்மு?”

“அவருக்கு இந்த விஷயம் மட்டுமில்லை நம்ம மொத்த குடும்பத்தோட பூர்வோத்திரமும் தெரியும், ஆனால் என்கிட்டே இப்போ வரைக்கும் அந்த மனுஷன் மூச்சு விடலை... இருக்கட்டும் எல்லாரும் எவ்ளோ தூரத்துக்கு போறாங்களோ போகட்டும் ரஞ்சன் அண்ணா, உண்மை மட்டும் வெளிப்படட்டும் எல்லாத்தையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிடுறேன்” என்றவள் சில நிமிடங்கள் பொதுவாக சில விஷயங்களை பேசி விட்டு வைத்தவள், அர்ஜுனிடம் கூறி கோவை செல்லும் ஏற்பாடுகளை செய்யலானாள்.

மல்லிகா, நடராஜன் இணைந்து குடும்பம் சகிதமாக செல்ல திட்டமிடவும் சம்யுக்தா இடைப்புகுந்து...

“எதுக்கு அத்தை எல்லாரும் போகணும்? ஜஸ்ட் ரெண்டு நாள் தானே நான் அர்ஜுன் கூட போயிட்டு வந்துடுறேன்”

“என்ன சம்யுக்தா பேசுற? நீ சாதாரண நிலையில் இருந்தா சரி தான்... ஆனால், இப்போ நீ ரெண்டு உயிரா இருக்கிற இந்த நேரத்தில் உன்னை தனியா அனுப்ப சொல்லுறியா?”

“இதுக்கென்ன அத்தை இருக்கு, எனக்கு இது ரெண்டாவது குழந்தை தானே... அதனால் இந்த தடவை அப்படி ஒண்ணும் பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை”

“என்ன சம்மும்மா பேசுற? சிரமம் இருக்கோ இல்லையோ ஒரு உயிரை சுமந்துட்டு இருக்கிற, சப்போஸ் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா உன் புருஷனுக்கு நாங்க தான் பதில் சொல்லியாகணும், அதனால் உன்னை நாங்க தனியா அனுப்ப முடியாது. அப்படி நாங்க வர வேண்டாம்ன்னா உன் புருஷன் கிட்டே சொல்லி அவனை கூட்டிட்டு போக சொல்றோம், அவன் கூட நீ போ” என்று நடராஜன் அழுத்தமாக உரைத்து விட...

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா... நீங்களே கூட வாங்க அது போதும்” என்றதும் ஏற்பாடுகளை தொடங்கலானார்கள்.

தரனுக்கு அர்ஜுன் அழைத்து அவர்களின் ஏற்பாட்டை பற்றி கூறியதை கவனமாக கேட்டுக் கொண்டவனுக்கு பல குழப்பங்களும், யோசனைகளும் மூளையை வட்டமிட்டது...

“என்னடா அமைதியா இருக்கிற?”

“அதில்லைடா இந்த மாசம் கூத்து கோட்டா வேற இருக்கு, அதை சுத்தமா நிறுத்தி வைக்க முடியாது, நான் அதுக்கான ஒத்திகையும் பார்க்கணும்... அப்புறம் கம்பனியில் பிராஜக்ட் லாஞ்ச் இருக்கு அதுக்கும் வேலை பார்க்கணும், எல்லாமே கழுத்தில் கத்தி வச்ச மாதிரி இருக்கு... இதில் மலருக்கும் காலேஜ் அட்மிசன் போடணும்... ஏகப்பட்ட வேலையில் ஒரே சமயத்தில் லாக் ஆகியிருக்கேன் அதான் யோசிக்கிறேன்”

“என்னடா இப்படி சொல்ற? எவ்ளோ வேலை இருந்தாலும் சுலபமாக செய்யுற நீயா இப்படி சொல்லுற?”

“வாஸ்தவம் தான் யார் இல்லைன்னா? இதெல்லாம் அங்கொருத்தி என் பொண்டாட்டின்னு உங்க வீட்டில் டேரா போட்டிருக்காளே அவ கூட இருந்திருந்தா, இந்நேரம் எனக்கு இதெல்லாம் கால்தூசிக்கு சமனில்லாத வேலை தான், ஆனால் இப்போ எனக்கு எல்லாமே பாரமா தான் இருக்கு” என்றவனின் குரல் விரகத்தில் தழுதழுத்தது... அவன் குரலில் இருந்த சோர்வே அவன் மனதையும், அவன் மனைவி மேல் கொண்ட காதலையும் பறைசாற்ற, அவன் நிலை சரியாகுமா என்றெண்ணி விசனம் அடைந்தான்.

“கவலைப்படாதே டா நீ கோவை வர மட்டும் பாரு மத்ததெல்லாம் தன்னால் சரியாகும்... சரியாகும்ன்னு நீயும் நம்பு! கிளம்பி வா, மனசு விடாதே... இங்கே சம்முவும் நிம்மதியா இல்லை, அவளும் எதையோ தொலைச்சவா மாதிரி வாடிப் போய் தான் இருக்கிறா”

“அது தெரிஞ்சதால் தானே என் மனசு கிடந்து அடிச்சுக்குது... வீம்புக்காரி!” என்று ஆற்றாமையில் விளைந்த கோபத்துடன் பற்களை நெரித்தவன், இணைப்பை துண்டித்து அலைபேசியை கட்டிலில் எறிந்து விட்டு தன் உள்ளங்கையால் நெற்றியை தாங்கியபடி கட்டிலில் தொப்பென்று அமர்ந்துவிட்டிருந்தான்.

மனைவியின் பாராமுகத்தையும், அவளின் பிரிவையும் எண்ணி எண்ணி வேதனையில் உழன்று குமுறிக் கொண்டிருந்தான். மலையை கூட பெயர்த்துவிடுமளவிற்கு மனோபலம் கொண்டவனுக்கு தன்னவள் அருகே இல்லாதது துரும்பும் இரும்பென கனத்தது. அப்படியே அவன் போக்கில் உழன்றுக் கொண்டிருக்க, நேரமும் அடுத்தடுத்த காத்திருந்த கடமைகளும் இடம் கொடுக்காது போகவே தன்னை தேற்றிக் கொண்டிருந்தான்.
**********************

“வாணி அத்தை வீடு வரும் போது நாம இங்கே தான் இருக்கணும்... அதனால் இன்னைக்கு நான் மட்டும் கடைக்கு போயிட்டு பார்த்துட்டு அப்படியே சம்முவோட கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கும் போயிட்டு வரேன்”

“சரி மனு, நான் பாப்பாவை பார்த்துகிட்டு தேவையானதெல்லாம் ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்... இதுக்கு முன்னாடி எப்படியோ, ஆனால் மல்லிகா அத்தை குடும்பம் நம்ம உறவுன்னு தெரிஞ்ச பிறகு நாம சாதாரணமா கவனிக்க முடியாது... அவங்க வந்து தங்குறதுக்கு தகுந்த மாதிரி எல்லாமே நான் செய்து வைக்கிறேன்” என்று கூறியவளின் பேச்சை விட அவளின் மனு என்ற அழைப்பில் அவளுடன் கொண்ட நேசத் தருணங்கள் அலையென திரண்டு பூம்புனலேன உணர்ச்சி பிரவாகம் பாய்ந்ததில் கட்டுண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை யோசனையுடன் நெருங்கி...

“என்னாச்சு ரஞ்சன்?” என்று உலுக்கியதும் தான் தன்னிலைக்கு வந்தவன்...

“ஒண்ணுமில்லை” என்றவனின் வார்த்தை அவன் பார்வைக்கு பெருத்த முரண்பாடாக இருந்ததை அறிந்தாள்.

“ஒண்ணுமில்லையா? இல்லை; சொல்ல பிரியமில்லையா?” என்று புருவம் உயர்த்தி கித்தாய்ப்பாக வினவியவளின் ஒயிலில் சித்தம் அவளிடம் வழுக்கி கொண்டு செல்ல முற்பட்டாலும், அவளின் மனதை தெளிவாக அறியாது தான் நெருங்கி விடக்கூடாது என்ற உறுதியை இறுக பிடித்துக் கொண்டவன் முகம் உணர்ச்சியற்று மாற...

“சொல்ல பிரியமில்லை தான்... ஆனால் இந்த பிரியமில்லாத பிரியமான விஷயத்தை பிரியத்தோட சொல்லணும்னு ஆசைப்படுவதால், அதற்கான தகுந்த நேரம் பார்த்து சொல்கிறேன் பொண்டாட்டி” என்று இமைகொட்டி எதுகை மோனையுடன் குழப்பியடித்து விட்டு நொடியும் தமாதிக்காமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான்... அன்றே அதை கேட்டு விட வாணி எண்ணினாலும் அர்ஜுன் குடும்பத்தின் வரவுக்கான ஏற்பாடுகளை செய்வதில் முனைப்பு காட்டி அதை மறந்தேவிட்டிருந்தாள்.
**********************

மேற்கு வானில் ஆதவன் தன் கதிர்களை சுருக்கிக் கொண்டு மறைந்துக் கொண்டிருந்த சமயம், இளமாலை பொழுது வேளையில் அர்ஜுன் குடும்பம் சம்யுக்தாவுடன் வந்திறங்க ஆர்வமும், பதட்டமும் ஒருசேர ரஞ்சன் அவர்களை வரவேற்றான்...

“வாங்க அத்தை, வாங்க மாமா... சம்மு எல்லாமே சொன்னா” என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்க, அவன் உதவிக்கு அர்ஜுன் வந்தான்.

“அதான் வந்தாச்சே ஒழுங்கா மச்சானை கவனிடா, இல்லைனா நாங்க கோவிச்சுட்டு போயிற போறோம்” என்று வேடிக்கையாக கூறியிருக்க...

“அதென்னா அப்புறம் கிளம்புறது? இவங்க பேசுறதை பார்த்தா கவனிப்பே இருக்காது போல அதனால், இப்போவே கிளம்பலாம் வாங்க” என்று வேண்டுமென்று முறுக்கிக் கொண்டு செல்வது போல் போலி பவிசு காட்டிய தர்சனின் விலாவை பற்றி இழுத்துக் அணைத்துக் கொண்டவன்...

“இந்த பாச்சா தானே வேண்டாங்குறது” என்று அர்ஜுன் அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...

“ரஞ்சன், வாணி விஷயத்தில் நீ பண்ணினதை நினைச்சு எங்க ரெண்டு பேருக்கும் கோபம் இருந்தது... ஆனால் இப்போ அது இல்லை, இனி எக்காரணம் கொண்டும் நீ தப்பு செய்யவே கூடாது” என்று மல்லிகாவை தொடர்ந்து...

“எங்களுக்கு தெரியும் ரஞ்சன் நாங்க மட்டும் உன் முன்னாடி நின்றிருந்தா, நீ எங்களை சீக்கிரம் அடையாளம் கண்டுக்குவன்னு அதனால் தான் நாங்க உன் முன்னாடி பிரசன்னமே ஆகலை” என்று நடராஜனும் கூறியதில் தான் செய்த தவறை எண்ணி வருந்தியவன்...

“நான் பண்ணினது தப்புன்னு ரொம்ப தாமதமாத் தான் புரிஞ்சுகிட்டேன்... என்னை மன்னிச்சிருங்க மாமா, அத்தை” என்றவன் மனைவியின் கரத்தை பற்றிக் கொண்டு காலில் விழுந்து பணிந்து எழுந்தான்.

சம்யுக்தாவுக்கென இருக்கும் பிறந்த வீட்டின் உறவான தமையன் மேல் மற்றவர்களுக்கு பொல்லாப்பு நேர்ந்து விடக்கூடாது என்று மனதை அடித்து கொண்டிருக்க... மனோரஞ்சனின் பேச்சும், செயலும் அவளின் துயர் துடைத்து நிறைந்த ஆறுதல் அளித்திருந்தது.

“கங்கிராட்ஸ் அண்ணி...! நீங்க கர்ப்பமா இருக்கிறீங்கன்னு அவர் சொன்னாரு உங்களை நேரில் வந்து பார்த்திருக்கணும்... ஆனால் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க” என்று அன்புடன் அவள் நலத்தை விசரித்த வாணி அனைவரும் மெச்சும் அளவிற்கு கவனித்து கொண்டாள்.

வியனிக்கு, நிலாவை பார்த்த சந்தோசத்தில் கெக்கலி கொட்டி சிரித்து விளையாடி தன் குதூகலத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க அந்த இடமே மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது... அதை கண்ட ரஞ்சனுக்கு பணத்தை காட்டிலும் இது தான் மெய்யான இன்பம் என்று அனுபவித்து புரிந்துக் கொண்டிருந்தான்.

மனைவிக்கு சிறிதும் இடையூறு தராத வகையில் குழந்தைகளை பாதுகாப்பாக விளையாட விட்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவனை அணுகிய மல்லிகா...

“ரஞ்சன் நான் குழந்தைகளை பார்த்துக்குறேன், உன்னை மாமா கூப்பிட்டாரு போய் என்னன்னு கேளு” என்க...

“என்னத்தை எதுவும் தேவையா?” என்று விசாரித்தவனிடம்...

“ஆமாம் ப்பா ஆனால் என்னன்னு தெரியலை... நான் கேட்டா சொல்ல மாட்டாராம் அதான் நீங்களாச்சும், தங்கச்சி மகனாச்சுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்... இனி நீயாச்சு உங்க மாமாவாச்சு” என்று போலியாக முறுக்கிக் கொண்டவரின் பேச்சை மெய் என்று நம்பி நடராஜனை அணுகினான். செல்லும் அவனையே பார்த்தவரின் கண்களில் விஷமம் வழிந்தது... அவரும் வந்ததில் இருந்து பார்த்த வரையில் ரஞ்சன் வரவேற்கும் போது பேசியதோடு சரி, அதற்கு பிறகு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து விட்டு தனிமையை நாடிவிடுபவனின் மனநிலையை புரிந்து செயல்பட்டார்... ‘இப்படி எல்லாம் பண்ணலைன்னா நீ எங்க கூட ஒட்ட மாட்ட ரஞ்சன், அதான் இந்த அத்தை பிளான் போட்டேன்’ என்று கூறி சிரித்துக் கொண்டார்.

நடராஜன், அர்ஜுன், தர்சன் மூவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க... “கூப்பிட்டீங்களா மாமா” என்று வினவிக் கொண்டு நின்ற ரஞ்சனை கண்டு மூவரும் ஒருவரை ஒருவர் பார்வை பரிமாறிக் கொண்டதிலேயே தன் அத்தை கூறியது லடாய் என்று புரிய வர சங்கடத்துடன் நெளிந்தான்.

“சாரி மாமா, அத்தை தான் சொன்னாங்க நீங்க கூப்பிட்டீங்கன்னு அதான் வந்தேன்” என்று கூறிவிட்டு நகர எத்தனித்தவனை...

“ஒரு நிமிஷம் நில்லு ரஞ்சன்” என்றவரின் அழுத்தமான குரலில் நடையை நிறுத்தி அவர் புறம் திரும்பியவனிடம்...

“உன் அத்தை சொன்னா தான் வந்து பார்த்து பேசுவியா? நாங்க வந்து எவ்ளோ நேரம் ஆகுது... எங்களுக்காக பார்த்துப் பார்த்து எல்லாத்தையும் ஏற்பாடு செஞ்சா போதுமா, நாங்க யாரு உனக்கு மூணாவது மனுஷங்களா? குடும்ப விஷயம் பேசுறோம்னு பிரைவசி கொடுத்து ஒதுங்கி நிற்க” என்றவரின் சொல்லில் முகம் அனிச்சையாய் சுருங்கியது... அவன் முகத்தில் தான் தவறு செய்தவன் அதற்கு தகுதியானவனா என்ற தயக்கம் தொக்கி நின்றதை புரிந்துக் கொண்டவர்...

“முதலில் உள்ளே வா... இது உன் வீடு, நாங்க உனக்கு உறவு, எங்ககிட்டே என்ன தயக்கம்”

“அது வேற ஒன்னும் இல்லைப்பா... பொண்டாட்டி தனியா கிட்சனில் வேலை செய்வா அவளுக்கு போய் உதவி செய்றேன்னு மச்சான் அப்படியே ரொமான்ஸ் பண்ணலாம்ல அதுக்காகவா இருக்கும்” அர்ஜுனின் இடக்கான பேச்சில் தான் ரஞ்சன் இயல்பு நிலைக்கு சகஜமாக பொருந்தியவன் அவன் பேச்சிற்கு இல்ளை என்பதாக தலையாட்டி “ஹஹஹா” என்று சிரித்தவன்...

“உண்மையை சொல்லணும்னா எனக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது, நான் போய் எங்க வாணிக்கு ஹெல்ப் பண்ண?”

“அதானே அதை பண்ணிருந்தா இந்நேரம்....” என்று ஏதோ கூற வந்த தர்சன், தனக்கு இது அதிகமோ என்று இடையில் நிறுத்தி சூழ்நிலையை சமாளிக்கக் வாய் பொத்திக் கொண்டவன்...

“நீங்கெல்லாம் நாளும் தெரிஞ்சு அனுபவிச்ச குடும்பஸ்தர்கள், இங்கே அப்பாவி சிங்கிள் பையன் எனக்கென்ன வேலை நான் ஜகா வாங்கிக்குறேன்ப்பா” என்று ஒன்றுமறியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு எழுந்து செல்ல இருந்தவனின் செவி அர்ஜுன் கையிலும், கரம் ரஞ்சன் கைகளிலும் சிக்கிக் கொண்டது.

“மகனே நீ வேறேதோ சொல்ல வந்த ஒழுங்கா அதை என்னன்னு சொல்லிட்டு போ இல்லைன்னா, மண்டையை உடைச்சு மாவிளக்கு போட்டிருவேன்” என்று அர்ஜுனும்...

“ஆமாம் எனக்கு இப்போ சமையல் தெரிஞ்சா அப்படி என்ன நடந்திருக்கும் முதல்ல அதை சொல்லு” என்று ரஞ்சனும் இயல்பு போல் அவனிடம் வம்பு வளர்க்க கேள்வியை முன் வைதத்தில்...

“ஹஹாங்... வசமா சிக்கிட்டியேடா சூனாபானா எதையாவது பேசி சமாளிடா” என்று வெளிப்படையாக புலம்பிக் கொண்டவன்...

“அது ஒண்ணுமில்லை அதெல்லாம் தெரிஞ்சிருந்தா இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்னு சொல்ல வந்தேன்” என்றவனின் பேச்சை நம்பாமல்...

“ம்ஹும்... நாங்க இதை நம்பமாட்டோம்” என்று இருவரும் ஒருசேர தலையசைத்து கூறி அவனை அமுக்கி...

“சமையல் தெரிஞ்சிருந்தா இந்நேரம் நான் என் பொண்டாட்டிகிட்டே ரொமான்ஸ் பண்ணியிருப்பேன்னு தானே சொன்ன”

“அடடே ரஞ்சன் ண்ணா, நீங்க இவ்ளோ அறிவாளியா? சரியா கண்டுபிடிச்சுட்டீங்க” என்று வாரியவனை, சிரித்துக் கொண்டே தாக்கினர்.

“உன்னையெல்லாம் பேசவிட்டா நீ வீட்டுக்குள்ள கலகம் பண்ணிட்டு போயிருவ போல?” என்று ரஞ்சன் போலியாக அலுத்துக் கொள்ள...

“அதெல்லாம் ஆகாது நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் நாராயணா! நாராயணா!” என்று நாரதரை போல் நடித்துக் காட்டியதில் நடராஜனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வர...

“அது நாரதர் பண்ணினா, நாதாரி நீ பண்ணினா இல்லை” என்று சிரித்துக் கொண்டே அர்ஜுன் கூற அங்கே கலகலப்பு சூழ்ந்தது.

ரஞ்சன் அதன் பிறகு அவர்களிடம் இயல்பாக உரையாட ஆரம்பிக்க பல வருட பால்ய நினைவுகளையும், ரஞ்சன் தற்பொழுது செய்துக் கொண்டிருக்கும் தொழில் பற்றியும் பேசிக் கொண்டே இயல்பாக பொருந்திப் போயினர்.

இரவு உணவும் அனைவரும் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டே உண்டதில் தான் ரஞ்சனுக்கு உறவுகளுடன் உறவாடும் இன்பம் என்னவென்றே நிகழ்வில் அறிந்து அனுபவித்து சுகித்துக் கொண்டிருந்தான். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் புகுந்துக் கொள்ளும் முன் ரஞ்சன் அர்ஜுனை அணுகியவன்...

“ஆமாம் தரன் மச்சான் வருவாருன்னு சொன்னீங்களே அவர் எப்போ வருவாரு?” என்று விசாரித்தான்.

“அவனுக்கு ராத்திரி கூத்து இருக்கு அதை முடிச்சுட்டு கிளம்பிருவேன் சொல்லிட்டு இருந்தான் எப்படியும் விடியற்காலையில் வந்திருவான் ரஞ்சன்” என்றதும் அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய பணிகளை திட்டமிடலானான்.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-35 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-36

தரன் தன் குடும்பத்துடன் அதிகாலையில் கோவையை அடைந்திருக்க அவர்களை வரவேற்ற ரஞ்சன் ஓய்வெடுக்க அறையை ஒதுக்கிவிட்டு சென்றிருந்தான். தரனுக்கு மனைவியையும், மகளையும் அச்சமயம் காண வேண்டும் என்ற ஆவல் உந்த, தயக்கத்தை ஓரங்கட்டியவன் அவர்கள் அறைக்கு சென்றிருந்தான்... சத்தமின்றி சென்று அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று நினைத்து தான் நுழைந்திருந்தான்... ஆனால் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருக்கும் இருவரின் முகத்தையும் கண்டு விரகத்தினால் உண்டான ஏக்கம் சுரந்தோட, இருவரையும் பிரிய மனமில்லாமல் கட்டிலின் மறுபக்கம் சென்று மகளை அணைத்தப்படி படுத்துக் கொண்டான்.

கதவு தட்டும் சப்தத்தில் கண் விழித்த சம்யுக்தாவிற்கு கதவை தாழிடாமல் தானே தூங்கினோம் என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து கதவை திறந்து காபியை பெற்றுக் கொண்டவள் பார்வை இயல்பாக படுக்கைக்கு செல்ல, அங்கே மகளை அணைத்தபடி படுத்திருந்த கணவனை கண்டு திகைத்தவளுக்கு மறுகணமே வன்மம் ஒட்டிக் கொண்டது.

‘திமிரைப் பாரு நான் அசந்து தூங்கிட்டு இருந்த நேரத்தில் வந்து சந்துல சிந்து பாடிட்டு இருக்கிறதை’ என்று கருவிக் கொண்டிருந்தாள். வந்த கோபத்தில் தூக்கத்திலேயே அவனை இரண்டு விளாசு விளாசி எழுப்பி விட்டால் என்னவென்று தன் நினைக்க தோன்றியது... ஆனால் அவன் முகத்தில் படிந்திருந்த கவலை ரேகைகளும் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் அனுதாபம் தோன்ற, அவள் சிந்தனையில் ஓடியதை செய்யாமல் தவிர்த்து விட்டு அவன் எழக் காத்திருந்தாள்.

சூரியன் சுள்ளென்ற கதிர்களை அறைக்குள் பரப்பி அவன் தேகத்தை ஊடுருவி சுரணை வர வைக்க அதில் மெல்ல இமை திறந்தான் கவின்... தந்தையின் ஸ்பரிசத்தில் உறங்கி கொண்டிருந்த மகளும் அப்போது தான் விழித்துக் கொண்டிருக்க, சோபாவில் அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டே காபியை அருந்திக் கொண்டிருந்த மனைவியை கண்டு மென்னகை இதழ்களில் அரும்ப எழுந்தான். எதிரில் அவன் அசைவை உணர்ந்து நாளிதழில் இருந்து பார்வையை பிரிதெடுத்தவள் கணவனை பலமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முறைப்பை எல்லாம் லட்சியம் செய்யாதவன் குழந்தையுடன் குளியலறைக்குள் புகுந்து காலை கடன்களை முடித்து விட்டு வெளியேறியதும், அதற்காகவே காத்திருந்த சம்யுக்தா உள்ளார்ந்து பதுக்கி வைத்திருந்த எரிச்சலுடன் நாளிதழை கசக்கி தூர எறிந்து விட்டு அவனை நெருங்கியவள்...

“எதுக்கு இந்த திருட்டுத்தனம்?” என்று எடுத்த எடுப்பில் சிடுசிடுத்தவளின் பேச்சில் விழிகள் சுருக்கி பார்த்தவன்...

“என்ன டி திருட்டுத்தனத்தை கண்டுகிட்ட?” சுள்ளென்று வினவினான்.

“அப்படியே ஒன்னும் தெரியாத துரை... உங்களுக்கா தெரியாது?”

“எல்லாமே தெரிஞ்சதால தான் ஒரு பிள்ளைக்கு அப்பா ஆகிருக்கேன், நீ விஷயத்தை சொல்லு” என்றவனின் லஜ்ஜை அடைந்தவள், என்ன திண்ணக்கம் என்று கருவி சுள்ளென்று ஏறிய சினத்தில்...

“நான் அசந்து தூங்குற நேரமா பார்த்து திருடன் மாதிரி பதுங்கி வந்து என் ரூமில் வந்து தூங்குறீங்களே இது திருட்டுத்தனம் இல்லாமல் என்னவாம்?” என்றவளின் வார்த்தையில் இருந்த அபத்தத்தில் முகம் கடினமுற்றது.

“ம்ம்ம்... அது வேற ஒண்ணுமில்லை, உன் புருஷனுக்கு தெரிஞ்சா மானம் கெட்டுப் போயிரும்ல, அதான் திருட்டுத்தனமா வந்து படுத்தேன்” சிறிதும் யோசிக்காமல் நக்கல் தொனியில் அவளை போலவே அபத்தமாகவே விடையளித்ததில் அவமானத்தில் முகம் சிறுத்துப் போனது.

“என்ன கொழுப்பா?”

“கொழுப்பு உனக்கா? இல்லை; எனக்கா? என்னவோ மூணாவது ஆள் உன் கூட வந்து படுத்த மாதிரி திருட்டுத்தனம் அது இதுன்னு பேசுற, கொஞ்சமாச்சும் அறிவிருந்தா இப்படி பேசுவியா?” என்று கடிந்த பற்களுகிடையே வார்த்தையை துப்பி சீறியவனின் பேச்சில் இருந்த உண்மையில் திணறியவளுக்கு மேலும் எதுவும் வாய் வார்த்தை விட்டால் லஜ்ஜை இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பான் என்று உணர்ந்தவள்...

“ச்சே...!” என்று சலித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தாள்.

கணவனிடம் ஏற்பட்ட உரசலின் காரணமாக கடுகடுத்த முகத்துடன் இருந்தவளை அணுகிய மலர்... “அண்ணி நீங்க எப்போ வந்தீங்க? அண்ணா சொல்லவேயில்லை... நான் காலேஜுக்கு சேர நீங்க கூட இருக்கணும்னு சொன்னேன், ஆனால்... அண்ணன் உங்களுக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டாரு. இப்போ தான் இங்க வந்துடீங்களே என் கூட நீங்களும் கண்டிப்பா வரணும்” என்று நயந்த குரலில் கூறியவளின் வார்த்தையை விட கணவன் மேல் கொண்ட இனம் புரியா கோபமே தலைதூக்க...

“நானெல்லாம் வர முடியாது, என்னை நீ தொந்தரவு பண்ணாம பேசாம போறியா?” என்று உரத்த குரலில் முகத்திலறைந்தது போல் கூறியவளின் வார்த்தையில் அணிச்சமலராய் முகம் வாடிப் போக கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

சம்யுக்தாவின் குரலில் ரஞ்சன் முதற்கொண்டு அனைவரும் அங்கே பிரசன்னமாகியிருக்க, அப்போதுதான் தன் தவறை உணர்ந்து மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டாள்.

“மலர் உன்கிட்டே என்ன சொன்னே, நீ என்ன பண்ணுற? நான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே சொன்னேனா இல்லையா?” என்று தங்கையை அதட்டி அடக்கினாலும் அவன் பார்வை மனைவியை வன்மையாக கண்டித்து கொண்டிருந்தது.

அதுவரை கணவன், மனைவி விவகாரம் என்று தள்ளியிருந்த கேசவனால் மருமகளின் கோபாவேச பேச்சும், அவள் கருவுற்ற நிலையும் முன்னிறுத்தி அவளிடம் பேசலானார்...

“ஏம்மா நான் உனக்கு மாமனார்ங்கிற முறையில் கேட்கிறேன் உனக்கும், அவனுக்கும் என்ன பிரச்சனையோ தெரியாது. அதை உன் புருஷனும் சொல்லலை, நீயும் சொல்லலை ஆனா... அது எதுவா இருந்தாலும் இப்படி ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கணுமா?”

“எங்களுக்கு வாணி, மலர், அரசி வேற இல்லை, நீ வேற இல்லை... நீ எங்க வீட்டு பொண்ணு... என் பொண்டாட்டி தான் உங்க பிரச்சனைக்கு காரணம்ன்னா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், உன் மனஸ்தாபத்தை மறந்துட்டு எங்க வீட்டு பையன் கூட வந்து வாழுமா... நீ சுமக்கிறது எங்க குடும்ப வாரிசு உனக்கொரு குறைன்னா நாளைக்கு அது எங்களைத் தான் பாதிக்கும் ஏன்னா நானும் பெண்ணை தானே பெற்றிருக்கிறேன்” என்று குருதரனும் சற்றே நெகிழ்ந்து பேச தரன் இடைப்புகுந்தவன்...

“சித்தப்பா யாரும் யாருகிட்டேயும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை”

“நீங்க என்னை மதிச்சு பேசினதுக்கு ரொம்ப நன்றி மாமா... நான் இங்கே யாரை நம்பியும் வரலை, நான் என்னை நம்பித் தான் வந்தேன், அதனால் என்னை என் போக்கில் விட்டிருங்க”

“என்னமா இப்படி சொல்ற? இது வாழ வேண்டிய வயசும்மா இப்படி வாழ்க்கையை தொலைச்சுட்டு நிற்கிறதை வேடிக்கை பார்க்கவா நாங்க இருக்கோம்” கேசவன் தன் தரப்பில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போதே, சம்யுக்தாவின் பிடிவாதம் முற்றிலும் தளர்த்தாமல் மேலோங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த நடராஜன் தரனிடம் உதவி நாடி கண்ணசைக்க அதை புரிந்தவன்...

“அப்பா நீங்க ஏன் அவகிட்டே போய் கெஞ்சிட்டு இருக்கீங்க? அவ என்ன சொல்றது, நான் சொல்லுறேன் இங்கிருந்து நாம கிளம்பும் போது என் பொண்டாட்டியா அவ என் கூட வருவா” என்று அழுத்தமாக, உறுதியாக உரைத்தவனின் வார்த்தையில் அனைவரும் நகர்ந்திருக்க, சம்யுக்தாவின் பார்வையில் சவால் இருந்தது.

“சப்போஸ் நான் உங்கக்கூட வரலன்னா? சாருக்கு நோஸ்கட் ஆகிப் போகும் பரவாயில்லையா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலாக கேட்டவளை “ஹா” என்று அசட்டு முறுவலை உதிர்த்தவன்...

“நோஸ்கட்டா அது எதுக்கு? அதுக்கு நான் இல்லாமல் போயிருவேன், நீயும் உன் இஷ்டம் போல யார் தொல்லையும் இல்லாமல் உன் போக்கில் இருக்கலாம்” என்று கூறிவிட்டு நிமிடமும் நில்லாமல் நகர்ந்திருக்க சம்யுக்தா விக்கித்து நின்றாள்.

அதன் பிறகு யாரிடமும் ஒன்றிணையாமல் பித்து பிடித்தவள் போல் இருந்தவளை கவனித்த மல்லிகா தான் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவரை அணுகினார்.

சம்யுக்தாவின் கோபத்தில் மனதில் காயமடைந்த மலருக்கு அரசியும், வாணியும் தேறுதல் கூறிக் கொண்டிருந்தனர்...

“இங்கே பாரு மலர் அண்ணி மாசமா இருக்காங்க... இந்த மாதிரி சமயத்தில் அவங்களுக்கு இது மாதிரி அடிக்கடி எரிச்சலும், கோபமும் வரும் அவங்க பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காதே”

“ஆமாம் மலர் அரசி க்கா சொல்லுறது உண்மை தான்... எனக்கும் ஆரம்பத்தில் இப்படி தான் இருந்தது நீயே பார்த்திருப்ப அடிக்கடி நான் இப்படி பல முறை கோபப்பட்டிருக்கேன்” என்று வாணியும் கூற, அவள் கூம்பிய முகம் மெல்ல சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

“நிஜமா தானே சொல்றீங்க, அண்ணி என்கிட்டே பேசுவாங்களா?” வெள்ளந்தியாக வினவியவளின் பாசத்தில் நெகிழ்ந்தவர்கள்...

“இதை நாங்க சொல்லித் தான் நீ தெரிஞ்சுக்கணுமா மலர், நீயே யோசிச்சு பாரு அண்ணி எங்களை விட உனக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க... அப்படி இருக்கக்குள்ள எப்படி உன்கிட்டே முகத்தை திருப்பிட்டு போவாங்க? நீ வேணாலும் பாரு அவங்க ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததும் உனக்கு பிடிச்ச ஏதாவது வாங்கிட்டு வந்து தான் பேசுவாங்க” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே...

“மலர்” என்று அழைத்துக் கொண்டு வந்த சம்யுக்தா குரலில் கண்கள் மின்னலிட திரும்பியவள், வாணி கூறியது போல் அவள் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீமும் இருக்கவே, அவள் பேசியதை அனைத்தும் மறந்து...

“அண்ணி!” என்று தாவி ஓடி கட்டிக் கொண்டாள்.

“சாரி! நான் ஏதோ கோபத்தில் அப்படி பேசிட்டேன், உனக்கு காலேஜ் அட்மிஷன் போட நான் கண்டிப்பா வருவேன், என்ன இப்போ ஹாப்பியா” என்று கேட்டு அவளிடம் அந்த ஐஸ்க்ரீமை நீட்ட அவள் முகம் மலர்ந்து விகசித்தது.

“நீங்க தானே திட்டுனீங்க பரவாயில்லை விடுங்க அண்ணி, ஆனால் காலேஜ் கண்டிப்பா வருவீங்க தானே?”

“நிச்சயம் வருவேன்” என்றதும் இளமானாய் துள்ளி குதித்து ஓடினாள்.

“அவ என்ன தான் வெகுளியா இருந்தாலும் ரைட் ராயலா இருக்கா”

“ஆமாம் அரசி க்கா, ஆனால் அது அவ குணம் அவளுக்கு அவ விஷயம் நடக்கணும் அவ்ளோ தான்... பாவம்! அவளை கட்டிக்க போகிறவன், அவ நினைச்ச மாதிரி செய்யலைன்னா வீட்டை ரெண்டாக்கிருவா” என்று வேடிக்கையாக கூறி வாணி, அரசி சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்கவே...

“என்னன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்” என்று கூறிய படி தர்சன் வர, இருவரும் ஒருவரை ஒருவர் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்ன என்கிட்டே சொல்லமாட்டீங்களா?”

“உங்ககிட்டே சொல்ல என்ன தர்சன் தயக்கம்” என்ற அரசி அவர்களின் பேச்சை அவனிடம் உரைக்க, மூவரும் அதை பற்றி வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தனர்.

ரஞ்சன், கலைமலரின் மேற்படிப்பை பற்றி விசாரித்து அவள் கல்லூரியையும் விசாரித்து அவளுக்கான உதவிகளை அவனும் செய்வதாக கூறி விடவே சந்தோசித்து போனவள் அவனுடன் ஒட்டிக் கொண்டே திரிந்தாள்... ரஞ்சன் தன் மனைவியின் தங்கை என்ற உறவில் அவளுக்கு செய்ய வேண்டியது தன் கடமை ரீதியில் தான் அவளுடன் சேர்ந்து உலாத்திக் கொண்டு இயல்பாக வளைய வந்துக் கொண்டிருந்தான்... ஆனால், அதை கண்ட வாணிக்கு தான் உரிமையுணர்வு தலைதூக்க அடிமனதில் புகைந்துக் கொண்டே இருந்தாள்.
**********************

சம்யுக்தா, ரஞ்சனுடன் புறப்பட்டு அவளின் நிறுவனத்திற்கு சென்றிருக்க, அவர்கள் அறியாமல் அவர்களை தொடர்ந்து செல்ல ஆயத்தமானர்கள் தர்சன், அர்ஜுன், தரன் மூவரும்.

“என்ன நடந்தாலும் பொறுமையா இருங்கப்பா யாரும் அவசரபட்டிறாதீங்க” என்று மல்லிகா அறிவுறுத்த...

“அவங்க அவசரப்படவோ, ஆத்திரப்படவோ மாட்டாங்க அதுக்கு வழியுமில்லை, அங்கொருத்தி இருக்காளே அவ தான் என்ன நிலைமையில் மாறப் போறாளோ தெரியலை?” என்ற நடராஜனின் கூற்றை தரனும் ஆமோதித்தான்.

“ஆமாம் ம்மா அப்பா சொல்றது தான் உண்மை, அன்னைக்கு உங்க விஷயம் கேள்விபட்டதுக்கே அப்படி ரியாக்ட் பண்ணினா, அவளை சமாதானப்படுத்துறதுகுள்ளயே போதும் போதும்னு ஆகிருச்சு, இதில இன்னைக்கு என்னெல்லாம் களேபரம் நடக்கப் போகுதோ தெரியலை”

“அதில முதல்ல டார்கெட் ஆகுறது நீ தான் டா” என்பதை தீவிரமாகவும், விளையாட்டாகவும் ஒரே சமயத்தில் அர்ஜுன் கூற...

“இது என்ன பிரமாதம்! தரன் அண்ணா சம்முக்காகிட்டே அடி வாங்குற சீனை லைவ் டெலிகாஸ்ட்டில் பார்க்கலாம்” என்று தர்சன் விளையாட்டாக கூற தரன் அவனை முறைத்தவன்.

“உனக்கு எந்தெந்த நேரத்தில் வாய் விடுறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுடா... நீ சொன்னது மட்டும் நடந்தா அடுத்த நிமிஷமே நீ என்கிட்டே அடி வாங்குறதும் லைவ் டெலிகாஸ்ட் ஆகும்” என்று கூறி புன்னகைக்க, இறுக்கமான சூழல் சற்று தளர்ந்து இளகிய சூழல் படார்ந்தது.

அரசியும், வாணியும் ஏதோ நடக்கப் போகிறதை உணர்ந்தவர்கள் பார்வையாளர்களாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“என்னக்கா நடக்குது இங்க? அப்பப்போ ஏதேதோ கூடி கூடி பேசிக்கிறாங்க ஆனா என்னன்னு சொல்ல மாட்டேங்குறாங்க” என்று அரசியிடம் வாணி புலம்ப அவளை ஒரு மாதிரியாக பார்த்த அரசி...

“ஏன் ராத்திரி உன் புருஷன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா?”

“ம்க்கும்... அவர் சொல்லிருந்தா நான் ஏன் உங்ககிட்ட கேட்கப் போறேன்... நம்மளுக்கு தான் தெரியலை, சரி அங்க உங்க புருஷன் எதுவும் சொல்லியிருப்பாறோன்னு கேட்டேன்”

“அதெல்லாம் இல்லை, அங்க என்ன நிலைமையோ அதே தான் இங்கேயும்... சொல்ல வேண்டிய விஷயமா இருந்தா நிச்சயம் சொல்லியிருப்பாங்க. இவங்க இந்தளவுக்கு தீவிரமா ஆலோசிக்கறாங்கன்னா நிச்சயம் ஏதோ இருக்கும் விடு வாணி எப்படியும் விஷயம் வெளியே வரும் அப்போ பார்த்துக்கலாம்” என்று கூறி விட்டு சகஜமாக எடுத்துக் கொண்டனர்.

சம்யுக்தா, ரஞ்சன் இருவரும் பார்த்திபனை சந்தித்து நலம் விசாரிப்பை முடித்து விட்டு தங்கள் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக ஒப்பேற்று கொண்டதை கொண்டாடும் விதமாக தொழிலாளர்கள் முன்னணியில் அமர்த்தி சந்திப்பு வளாகத்தில் கூட்டம் நிகழ்த்தினர்.

அவர்களின் உரையாடல் முடிவுறும் நிலையில் யமுனா, யசோதா சகிதம் பாஸ்கரன் அங்கே பிரசன்னமாக இருவருக்கும் பலத்த கேள்வியெழும்பியது.

“அடடே மிஸ்டர்.பார்த்திபன் உங்க விசிட் எங்க கம்பெனியிலேயா? ஆச்சர்யமா இருக்கே!” என்று அவரை அதுவரை காணாததை போல் பாசங்கு பேசியவர் கண்களால் சமிக்ஞை செய்திருந்தார். அதை அறிந்த பார்த்திபன் பூடகமாக சிரித்தவர்...

“நான் உங்க கம்பெனியில் தானே ஷேர் ஹோல்டரா ஆகியிருக்கேன், அதுக்கான செலிப்ரேசன் தான் இது” என்று அவரும் அவரை போலவே அறியாதவராக கூறியிருந்தார்.

“ரஞ்சன், யுக்தா ரெண்டு பேரும் இவரை நல்லா கவனியுங்க” என்று கூறியவர் ஏதோ அவர் தான் விழுந்து விழுந்து கவனிப்பதை போல் கூறியதில், சம்யுக்தா ரஞ்சன் இருவரும் கடுப்பாக இருந்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க வழுக்கட்டாயமாக புன்னகைத்து வைத்தனர்.

“என்ன மிஸ்டர்.பார்த்திபன் எல்லாம் சொன்ன மாதிரி நடந்திரும் தானே” என்று செவியில் முணுமுணுக்க அதற்கும் புன்னகையையே பதிலாக அளித்தவர்.

“சம்யுக்தா, ரஞ்சன் நான் உங்க எல்லார்கிட்டேயும் கொஞ்சம் பேசணும் ஸ்பெஷல் மீட்டிங்” என்று உரைக்க, அவர் கூறியதை போல் சம்யுக்தாவின் அறையில் அவரை அமர செய்தவள் மற்றவர்களும் அங்கே பிரசன்னமாகினர்.

“நான் உங்க கம்பெனியில் ஷேர் ஹோல்டிங் பண்ணினதுக்காக நீங்க கொடுத்த வெல்கம் பார்ட்டிக்கு என்னுடைய ரிட்டன் ட்ரீட்” என்றவர் இருவரிடமும் ஒரு பாரத்தை நீட்டினார்.

அவரிடமிருந்த பாரத்தை பெற்று படித்துப் பார்க்க குழப்பமுற்று இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

“என்ன சார் இது? நீங்க ஷேர் ஹோல்டிங் ஆகியிருக்கிறதை ப்ரௌட் மொமெண்ட்டா செலிபிரேட் பண்ண தானே நாங்க இந்த பிரோகிராமே அரேஞ் பண்ணோம்... ஆனால், நீங்க வாங்கின ஷேர்ஸ் மொத்தத்தையும் ஈக்குவல்லா எங்க ரெண்டு பேர் பேருக்கும் கொடுத்திருக்கீங்க?” என்று கூறியதும் பார்த்திபன் இயல்பாக புன்னகைக்க, பாஸ்கரன் உட்பட மற்ற இருவருமே மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்!

யமுனா, யசோதா இருவருக்கும் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதை கணித்து விட பாஸ்கரனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன பார்த்திபன் இதெல்லாம்? நான் என்ன சொன்னேன், நீங்க என்ன செய்திருக்கீங்க?” என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுக்க, அதை அறிந்தும் அறியாதவர் போல் சம்யுக்தா ரஞ்சனுக்கு பதிலளித்தார்.

“இது என்னுடைய அன்பளிப்பு மட்டும் இல்லை என்னுடைய நெருங்கிய நண்பரின் அன்பளிப்பும் கூட” என்றவர் பக்கவாட்டில் பார்வையை திருப்பிய வேளை அனைவரின் பார்வையும் ஒரே திசையில் திரும்ப...

“டேய் விஷ்வா வாடா” என்றழைத்ததும்... யசோதாவிற்கு திகில் பிடிக்க தன் கணவராக இருக்கக்கூடாது என்று மானசீகமாக கடவுளுக்கு வேண்டுதல் வைத்தார்.

விஸ்வநாதன், அர்ஜுன், தரன், தர்சன் சகிதம் உள்ளே நுழைய அவரின் வேண்டுதல் பொயித்து போக, பல வருடங்கள் கழித்து வந்த தன் கணவனை கண்டு மின்சாரத்தில் தாக்குண்டது போல் அதிர்ச்சியில் தாக்குண்டு போனார்.

சம்யுக்தா, மனோரஞ்சன் இருவரும் திகைப்பு, ஆச்சர்யம், மகிழ்ச்சி என கலவையான உணர்ச்சிகளை பிரதிபலித்தபடி நின்றிருந்தனர்.

“விச்சு ப்பா” என்றவனின் குரலில் யமுனா அவனை கனல் கக்க பார்த்திருந்தார். அதை சிறிதும் சட்டை செய்யாது துட்சமென தட்டி எறிந்தவன், அவரை நெருங்கி ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டிருந்தான்.

“சித்தப்பா நீங்க இங்க எப்படி?” என்றவனின் நாவு உணர்ச்சி பெருக்கில் தழுதழுத்தது.

“என்னை நீங்க யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்கன்னு தெரியும்” மரத்த குரலில் கூறியவரின் பார்வை அனைவரையும் ஆழ்ந்து தழுவியது.

“இதென்னா பார்த்திபன் நீங்களும் அவருடன் சேர்ந்து என்னை ஏமாற்றியிருக்கீங்க?”

“நான் யாரையும் ஏமாற்றலை மிஸ்டர்.பாஸ்கரன் நல்லது தான் செய்திருக்கேன்”

“அப்படி என்ன நல்லது செய்துட்டிங்க”

“என்னை இந்த கம்பெனியில் ஷேர் வாங்க சொன்னதே, கொஞ்சம் நாள் பொறுத்து கம்பெனியை லாஸ்ல கொண்டு விட்டு அதன் விளைவா உங்க பசங்க உங்ககிட்டே கை கட்டி நிற்கணும்னு தானே” என்று உண்மையை சபையில் போட்டு உடைக்க சம்யுக்தா, ரஞ்சன் இருவரும் பாஸ்கரனின் வக்கிர குணத்தை கண்டு பார்வையில் வெறுப்பை உமிழ்ந்தனர்.

பார்த்திபனின் பட்டவர்த்தனமான பளிச்சிட்ட பேச்சில் அடிபட்ட பாஸ்கரனுக்கு அவமானத்தில் முகம் கருத்துப் போனவர்...

“இதெல்லாம் நல்லா இல்லை மிஸ்டர்.பார்த்திபன், நீங்க ஒரு நல்ல மனிதர்னு நினைச்சு தான் உங்ககிட்டே உதவி கேட்டு வந்தேன்... ஆனால் நீங்க இப்படி கழுத்தறுப்பீங்கன்னு நினைச்சும் பார்க்கலை” என்று ஆத்திரத்தில் சிடுசிடுத்தவரை நிதானமாக நோக்கியவர்...

“நான் நல்ல மனுஷனாவே இருக்கணும்னு தான் நீங்க சொன்ன காரியத்தை செய்யலை மிஸ்டர்.பாஸ்கரன்... விஸ்வநாதன் என்னுடைய நெருங்கிய நண்பரில் ஒருவர், அவருடைய அந்தரங்க வாழ்க்கை எனக்கு அத்துப்படி... அவர் பெண்ணை பிரிஞ்சு எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு நான் கண்ணால் பார்த்தவன், அவருடைய துன்பத்தை உணர்ந்தவன்” என்று மூச்சிரைக்க ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் இமைமூடி ஆழ மூச்செடுத்து கட்டுப்படுத்துக் கொண்டு தொடர்ந்தார்.

“எனக்காக விஸ்வா எத்தனையோ உதவியை செய்திருக்கான்... ஆனால், அவனுக்காக நான் செய்ய சந்தர்ப்பமே அமையலை... அவன் என்கிட்டே மனதார உதவின்னு கேட்ட விஷயம் காலம் போன கடைசியிலாவது என் பொண்ணுக்கு அப்பான்னு உறவும், உரிமையும் கொண்டாடி அவகிட்டே தன்னுடைய பாசத்தை காட்டணும்னு தான் என்கிட்ட வேண்டி கேட்டுகிட்டான்”

“என்ன தான் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும், அவருடைய பொண்ணு அவருக்கு உரிமை இல்லைன்னு ஆகிருமா என்ன?” என்ற கேள்வி யசோதாவை தாக்கியதில் அவர் உடல் குலுங்க அசைந்து நின்றிருந்தார்.

“டிவோர்ஸ் வாங்கினப்போ பெண்ணை கண் தெரியலையா?”

“ஏன் தெரியலை அதெல்லாம் நல்லா தெரிஞ்சுது... நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுத்ததே என் மகள் எனக்கு வேணும்ங்கிற ஒரே காரணத்துக்காக தான்” என்று கூறிய விஸ்வநாதன் மனைவியை கூர்மையாக பார்த்திருந்தார்.

யசோதாவிற்கு அவரின் பேச்சு புரிய செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார். அவரின் மௌனத்தை கண்ட யமுனாவிற்கு அவர் பேசாமல் நிற்பது முரண்பாடாக பட்டிருக்க...

“யசோ என்ன அமைதியா இருக்கிற? இத்தனை வருஷமா இல்லாமல் இப்போ வந்து என்னன்னமோ பேசிட்டு என் மகள், என் உரிமைன்னு போர்க் கொடி தூக்கிட்டு நிற்கிற உன் புருஷனை கேள்வி கேட்காமல் அமைதியா நிற்கிற?” அவரை கூர்மையாக துளைத்தபடி வினவ தமக்கையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.

“...........” சில கணங்கள் அங்கே மௌனமே ஆட்சி புரிய யமுனா பொறுமை இழந்தவர்..

“யசோ, அமைதியாவே நின்னா எப்படி? இது நீ பேச வேண்டிய நேரம்” என்று தூண்டியதும் இனி உண்மையை கூறாமல் இருக்க முடியாதே என்ற நிர்பந்தத்தில் அதை விளம்பலானார்.

“அவர் டிவோர்ஸ் கொடுக்க முடியாதுன்னு தான் அக்கா சொன்னாரு... என் பொண்ணை கொன்னுட்டு நானும் செத்திருவேன் சொன்ன பிறகு தான் டிவோர்ஸ் கொடுக்கவே ஒத்துக்கிட்டாரு” என்று உண்மையை கூறியதும், விஸ்வநாதனின் பார்வை மகளை ஆதுரத்துடன் வருட, யமுனாவை நோக்கி பேசலானார்.

“உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணினது மனைவி குழந்தைகளோட நான் சந்தோசமா வாழணும்னு இருந்த ஆசையில் தான்... ஆனால், அதெல்லாம் எப்போ உங்க தங்கச்சி கழுத்தில் தாலி கட்டி வாழ ஆரம்பிச்சனோ அப்போவே அது எல்லாம் கனவில் கூட நடக்காத விஷயம்ன்னு புரிஞ்சுக்கிட்டேன்... பொண்ணுன்னு நினைச்சு ஒரு ராட்சசியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அதுக்கான தண்டனையா தான் என் உசுரை நானே அறுத்துகிட்டு சாகுறது போல, என் மகளை அவகிட்டே தாரை வார்த்து கொடுத்துட்டு விவாகரத்து கொடுத்து விலகினேன்” என்று முடிக்க அவரின் ராட்சசி என்ற வார்த்தையில் யமுனா, யசோதா இருவரும் கொந்தளித்தனர்.

“வார்த்தையை அளந்து பேசுங்க எங்கே வந்து நின்னு யாரை பார்த்து ராட்சசின்னு சொல்லுறீங்க?” என்று யமுனாவும்...

“நீங்க நேர்மை அது இதுன்னு சொல்லி பிழைக்க தெரியாத ஆளா இருந்தீங்க? உங்களை எல்லாம் கட்டிக்கிட்டதே பெரிய விஷயம் இதில் நான் உங்களுக்கு ராட்சசியா?”

“பிழைக்க தெரியாதவனா? நானா! அப்புறம் எப்படி இத்தனை வருஷம் வாழ்ந்த, இந்த பிழைக்க தெரியாதவன் கிட்ட ஜீவனாம்சம் வாங்கி தானே இங்கிருக்கிற முக்கால் வாசி சொத்தையும் சேர்த்திருக்கீங்க... இல்லைன்னா, என் அம்மாப்பா வாழ்ந்த வீட்டை நான் விற்றிருப்பேனா? மகளுக்கும் சீதனம் கொடுக்கணும்னு ஆசை ஆசையாய் என் தங்கச்சிக்காக வாங்கின இடத்தையும் உங்க பணத்தாசைக்கு இரை ஆக்கியிருப்பேனா?”

“இது எல்லாத்தையும் நான் பொறுத்துகிட்டேனா ஒரே ஒரு காரணம் தான் என் மகளும், மகணும் வாழணும், வாழ வைக்கணும்ன்னு ஒரே காரணம் தான்” என்றதும் ‘மகனா’ என்று சம்யுக்தா உட்பட மற்றவர்கள் குழம்பிப் பார்க்க, அனைவரையும் பார்வையால் மேய்ந்துவிட்டு...

“எஸ் மகனும் தான்... எட்டு வருஷமா குழந்தை இல்லாமல் அதுக்கப்புறம் உருவான இரட்டை குழந்தைகள் ஒண்ணு சம்யுக்தா, ஒண்ணு தர்சன்” என்று கூறி தர்சனை முன்னிறுத்த சம்யுக்தாவிற்கு குழப்பம் அனைத்தும் விலகி வியப்பும், மகிழ்வும் ஒரு சேர எழுந்தது.

“என்ன... தர்சன் சம்முவுக்கு தம்பியா, என்ன சித்தப்பா சொல்றீங்க?” என்று இன்ப அதிர்ச்சியில் தாங்காது வினவியவன் ரஞ்சன்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஆமாம் தர்சன் என் மகன் தான்” என்றவரை தொடர்ந்த யசோதா...

“எட்டு வருஷம் கழிச்சு கருவுற்று எனக்கு ரெட்டை குழந்தைங்கள்ன்னு தெரிஞ்சது... அப்போ என் ரெண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துட்டதா சொன்னது எல்லாம் பொய்யா பித்தலாட்டமா?” என்று அத்தனை நாட்கள் தனக்கு மகன் இருப்பதே தெரியாது போனதின் விளைவாக பொங்கினார்.

“பொய்யும் இல்லை, பித்தலாட்டமும் இல்லை... ஹாஸ்பிடலில் பையன் இறந்துட்டதா டாக்டர் கொடுத்ததும், பையன் இறந்துட்டான்னு நினைச்சு வேதனையோட நாங்க கடைசி காரியம் பண்ண போனது எல்லாமே உண்மை தான் அது உனக்கே தெரியும்”

“நாங்க இறுதி காரியம் செய்ய தான் கொண்டு போனோம், ஆனால் போகும் போதே வழியில் என் தங்கச்சி புருஷன் கையில் குழந்தை எட்டி உதைச்சதும் தான் அவனுக்கு உயிர் இருக்கிறது தெரிஞ்சுது... மல்லிகா உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்ன்னு சொன்னா, உன்கிட்டே சொல்லலாம்னு தான் சொன்னா, ஆனால் எனக்கு தான் மனமில்லை... குழந்தை இறந்த துக்கம் உன்னை விட உன் குடும்பத்தை விட எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் ரெண்டு மடங்கு அதிகமா இருந்தது... அதனால தானே இறந்த குழந்தையை என்கிட்ட கொடுத்தனுப்பிட்டு உன் குடும்பம் உன் கூட பின் தங்கிருச்சு... நானும் அதை மாற்ற வேண்டாம்னு வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன்... டாக்டர் குழந்தை உயிருடன் தான் இருக்கு, ஆனால் ரெஸ்பான்ஸ் கம்மியா இருக்கு ஒரு வாரம் அப்சர்வேசனில் வைக்கணும்ன்னு சொன்னாங்க, நாங்களும் வச்சிருந்தோம் மல்லிகா தான் பொறுப்பெடுத்து பார்த்துகிட்டா”

“அதுக்கப்புறம் கூட என் குடும்பம் உன்னை பார்த்து பேசி சமாதானம் செய்ய தான் பார்த்தாங்க... உன்னை பற்றி முழுசா தெரிஞ்ச என்னால சுலபமா அந்த உண்மையை சொல்ல முடியலை, அதனால் நான் தான் கொஞ்ச நாள் பொறுத்து பார்ப்போம் உன்னுடைய முக்கியத்துவம் என்னுடன் வாழுறது தான்னு உறுதியா தெரிஞ்சா சொல்லிக்கலாம்ன்னு சொல்லிட்டேன்”

“எங்க வீட்டில் உள்ளவங்க நினைச்சது என்னன்னா குழந்தை பிறந்ததுக்கு அப்புறமாச்சும் நீ மனசு மாறி நல்ல படியா குடும்பம் நடத்திருவா... அப்படி நடந்தா நீ உன் பொண்டாட்டி கூட சந்தோசமா இரு, நாங்க வேணா தூரமா தள்ளி இருந்துக்கிறோம்ன்னு திட்டத்தை கூட சொன்னாங்க”

“நான் நினைச்ச மாதிரியே நீ வீட்டுக்கு வந்ததும் என் வீட்டில் உள்ளவங்க மேல குறையை சொல்லி வாழ வரமாட்டேன்னு தர்க்கம் பண்ணின, உன்னை கொஞ்சம் நாள் விட்டு பிடிச்சு பார்த்தேன், அப்போவும் நீ வாழ வர முடியாதுன்னு பிடிவாதமா மறுத்த, அப்படி வரணும்னா என் குடும்பத்தை முழுசா ஒதுக்கிட்டு வரணும்னு சொல்லி என் மனசை உயிரோட கொன்ன”

“அது மட்டுமா! நீ சொன்னதை நான் செய்யலைன்னு என்கிட்டே டிவோர்ஸ் கேட்ட, அதுவும் கொடுக்க முடியாதுன்னு சொன்னதும் தான், மூணு மாசமே ஆன சம்முவை பச்சை குழந்தைன்னு பார்க்காமல் டிவோர்ஸ் தரலைன்னா குழந்தையை கொன்னுட்டு நீயும் செத்திருவேன்னு மிரட்டின, நான் அப்போ விவாகரத்துக்கு சம்மதிக்க காரணம் என் மகள் உயிரோட இருக்கணும்ன்னு தான்”

“அதுக்கப்புறம் எங்க வீட்டில் உள்ளவங்களும் நான் சொன்னதை புரிஞ்சுகிட்டாங்க, எக்காரணம் கொண்டும் பையன் உயிரோட இருக்கிறதை சொல்ல வேண்டாம், அப்படி சொன்னா எனக்குன்னு யாரும் இல்லாமல் தனிமரமா நின்னிருவேனோன்னு பயந்து அவங்களே கொஞ்ச நாளைக்கு மறைக்க சொல்லிட்டாங்க”

“அதுக்கப்புறம் நீதிமன்றத்தோட உத்தரவுக்காக மூணே மூணு வருஷம் சொற்ப மாசம் தான்... என் மகளை என் பாசத்துல சீரட்ட விட்ட, அதுவும் பொறுக்கமா கொஞ்சம் நாளையில் அவளுடைய போக்குவரத்தையும் நிறுத்தி என்னை வதைச்ச நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்னா என் பெண்ணுக்காக தான்”

“அப்போ தான் நான் உறுதியா ஒரு முடிவெடுத்தேன்... இனி நேரம் வர வரைக்கும் உனக்கும் எனக்கும் பிறந்த மகன் இருக்கிறதை எக்காரணம் கொண்டும் காட்டிக்கக் கூடாது, அப்படி காட்டிக்கிட்டா அவனையும் நீ என்கிட்டே இருந்து பிடுங்கிக்குவன்னு தான் அவன் இருக்கிறதையே மறைச்சேன்”

“என் முடிவு தப்போன்னு நான் சில சமயத்தில் யோசிச்சது உண்டு... ஆனால், அதை எல்லாம் சரின்னு நினைக்கிற மாதிரி என் மேல வெறுப்பா ஒரேடியா பிரிஞ்சு என் பிரிவுக்கு ஜீவனாம்சமா என் சொத்தை எல்லாம் எழுதி வாங்கிக்கிட்டே நானும் கொடுத்தேன்னா என் மகளுக்காகவும், மகனுக்காகவும் தான்”

“அப்போவே நான் முடிவு பண்ணினேன், என் வாழ்க்கை வேணா சின்னாபின்னமா ஆகியிருக்கலாம்... ஆனால் எக்காரணம் கொண்டும் என் மகள் வாழ்க்கையோ, மகன் வாழ்க்கையோ அப்படி ஆகிரக்கூடாதுன்னு என் பசங்களுக்கு அப்பாவுடைய கடமையை ஆற்ற ஒரு வழியை தேர்ந்தெடுத்துகிட்டேன்”

“என் மகளும், மகனும் பிறந்த நேரம் எனக்கு முன்னை விட இருமடங்கு சம்பளத்தில் துபாயில் ஹோட்டல் மேனேஜர் வேலை கிடைச்சது... உன்கிட்ட சொன்னது ஐம்பதாயிரம் தான், ஆனால் என் சம்பளம் ஒரு லட்சம்... என் பசங்களுக்காக நான் துபாயிலேயே இருக்க முடிவு எடுத்தேன்... மதுரையில் இருந்த சொத்துக்களை விற்று உனக்கு பணமா கொடுத்ததும் தர்சன் இருக்கிற இடம் தெரிந்திடக் கூடாதுன்னு எங்களுடைய இடத்தை மாற்றிகிட்டு தேனி போயிட்டோம்”

“என் தங்கை மல்லிகா வாழ்க்கைப்பட்ட இடமும் மதுரை தான்... ஆனால் தர்சனுக்காக அவங்களும் தேனியே வந்தாங்க... அங்கே எங்களுக்கு அறிமுகம் ஆனவங்க தான் காலதரன் குடும்பம்” என்றதும் சம்யுக்தாவின் பார்வை கணவன் மேல் கேள்வியுடன் படிந்து விலகியது. அர்ஜுன், தர்சன் இருவரும் உணர்ச்சியற்று நிற்க பாஸ்கரன், மற்றும் யமுனா, யசோதா மூவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

“கலாதரன் குடும்பம் வறுமையில் இருந்தாலும் அவங்க நல்ல மனசுக்காரங்களா இருந்தாங்க... எங்களுக்கு குடும்பம் பிரச்சனையால் கஷ்டம்ன்னா, தரன் குடும்பத்துக்கு பொருளாதார கஷ்டம்... அதனால் நாங்க ஒருத்தரை ஒருத்தர் ஆதரவா இருக்க ஆரம்பிச்சோம்” என்று கனத்த மனதுடன் கூறி முடிக்க சம்யுக்தா திக்பிரமை பிடித்தது போல் நின்றுவிட்டாள்.

யசோதாவிற்கு கணவன் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக எண்ணியவர்... “பெத்த பெண்ணையே கூட்டி கொடுத்தீத்தீங்களா?” தயவு தாட்சன்யம் இன்றி நாராசமாக கூறிய வார்த்தையில் கொதித்து போன விஸ்வநாதன்...

“வாயை மூடுடி... யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்கிற...? கூட்டி கொடுக்குறது வாழ்க்கையை அழிக்குறது எல்லாம் உனக்கும் உன் குடும்பத்துக்கும் இருக்கிற குணம் அது எனக்கில்லை” என்று தூற்ற பாஸ்கரனுக்கு சுருக்கென்று இருக்க, யமுனா விஸ்வநாதனிடம் சீறினார்.

“வார்த்தையை பார்த்துப் பேசுங்க தப்பு முழுக்க நீங்க செய்திட்டு எங்க குடும்பத்து மேல பழியை போடுறீங்க... என் தங்கை வயிற்றில் பிறந்த மகனை மறைச்சதுக்கே உங்களை சும்மா விடக்கூடாது... இப்போ என்னடான்னா மறைமுகமா இருந்து உங்க பெண்ணை எவனோ ஒரு ரோட்ல போற கூத்தாடிக்கு கட்டி கொடுத்திருக்கீங்க, எங்க தராதரத்துக்கு நீங்கெல்லாம் ஒத்தே வராத ஆளு, உங்களை நம்பி என் தங்கை வாழ்க்கையை கையில் கொடுத்தது தப்பா போச்சு” என்றதும் யசோதா சம்யுக்தா புறம் திரும்பியவர்...

“ஏய் சம்மு பார்த்தியா டி உங்க அப்பன் புத்தியை, நாங்க சொன்ன மாதிரியே உங்க அப்பா உன்னை குழியில் தள்ளிட்டாரு... போயும் போயும் அஞ்சுக்கும் பத்துக்கும் ரோட்டில் கூத்து கட்டுறவனுக்கு உன்னை கட்டிக் கொடுக்க சம்மதம் சொல்லியிருக்காரு, அவருக்கா உன் மேல பாசம்? நீயே கொஞ்சம் சிந்திச்சு பாரு” குரூரமாக வார்த்தைகளை வீசியவரின் பேச்சில் கலாதாரனின் முகம் பாறையென இறுக உடல் விரைத்துக் கொண்டது... மற்றவர்களுக்கோ அவரின் பேச்சு அதிகமாக பட முகம் சுளித்தனர்.

“இங்கே பாரு உன்னை அம்மான்னு நான் கூப்பிடுறதே இத்தனை வருஷம் நீ வளத்திட்டியேன்னு ஒரு நன்றிக்காக தான், தயவு செய்து என்னை ஒரேடியா வெறுக்க வச்சுராத... என் புருஷன் என்ன தொழில் பண்ணாலும் யாரையும் ஏமாற்றாம செய்யுறாரு, உங்களை போல குறுக்கு புத்தி அவருக்கு இல்லை... இதுக்கு மேல என் புருஷனையும், புருஷன் வீட்டையும் கூத்தாடி அது இதுன்னு சொன்னீங்க என்கிட்டே பார்க்காத இன்னொரு முகத்தை தான் பார்ப்பீங்க” கோபத்தில் மூக்கு விடைக்க கண்கள் சிவந்து ரௌத்திரமாக பேசியவளின் அழுத்தம் கண்டு அனைவருமே அணங்கிப் போயினர்.

“என்ன உன் பொண்ணு சொன்ன வார்த்தை செருப்பால அடிச்ச மாதிரி நல்லா நச்சுன்னு இருந்துச்சா?” என்று விஸ்வநாதன் மனைவியை எள்ளாட அவமானத்தில் மேலும் கொந்தளித்தார்.

“உன் பொண்ணு சொல்றது தான் நிஜம்... அவன் என்ன தொழில் செய்தால் நேர்மையா நல்ல வழியில் செய்யுறான் அது தான் அங்கே ரொம்ப முக்கியம்... தோல்பாவை கூத்து அவங்க கலை, அவங்க குல தெய்வத்திற்கு சமம், அவங்களுடைய அடிப்படை ஆதாரம். அதில் நீ சொல்லுற மாதிரி கௌரவ குறைச்சல் ஒன்னும் இல்லை... அதே சமயம் என் மகளை அப்படியே ஒன்னும் இல்லாத இடத்திலேயும் கொடுக்க சம்மதிக்கலை... தரனுடைய அடிப்படை தொழில் கூத்து தொழிலா இருக்கலாம், ஆனால் அவன் இன்ஜினியரிங் படிச்சவன், அஞ்சு வருஷம் வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்தவன்... அவனுக்குன்னு சில திறமைகள் இருக்கு, அதை அவன் உபயோக பயன்படுத்திக்கிறான்... இது எல்லாத்தையும் விட ஒழுக்கத்தில் அக்மார்க் சான்று கொடுக்கிற மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், முக்கியமா குடும்பம்னா ஆயிரம் ராசபாசங்கள் இருக்கும்ன்னு தெரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்கிறவன், விவேகமா செயல்படுறவன்” என்று கூறியதில் அவருக்கான குத்தல் இருக்கவே முகம் தொட்டாச் சிணுங்கியாய் சுருங்கியது.

“இருந்தாலும் உங்க மகளை இப்படி தன் போக்கில் முடிவெடுக்க வைக்கிறது பெத்த அப்பனுக்கு அழகா?” என்று யமுனா விடாது அவரை தாக்க காத்திருக்க, அதற்காகவே காத்திருந்தது போல் அந்த கதையையும் கூறலானார்.

“முதல்ல ஒரு விஷயத்தை மறந்துடீங்களே என் மகள் காதலிச்சு தான் கல்யாணம் செய்துக்கிட்டா, திருட்டுத்தனமா நான் அனுப்பின மாப்பிள்ளையை அவ காதலிக்கலை” என்று கூறி நிறுத்தியவர் பார்வை ரஞ்சன் மேல் உக்கிரமாக படிந்தது, அவர் பார்வையின் பொருளுணர்ந்த ரஞ்சனுக்கு குற்றவுணர்வில் தள்ளாடினான்.

மற்றவர்கள் அதீத குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் குழப்பத்தை தீர்க்க முயன்றார் விஸ்வநாதன்... “சம்யுக்தாவை பார்த்து தரன் காதலிக்கிறதுக்கு முன்னாடியே எனக்கொரு எண்ணம் இருந்தது உண்மை தான்... ஆனால் அதை நான் முழுசா கருத்தில் வச்சுக்கலை... ஏன்னா நீ சொன்ன மாதிரி சம்முவுடைய விருப்பத்தை தெரியாமல் நாமளா முடிவெடுத்து எதுவும் செய்யக் கூடாதுன்னு தான்... ஆனால் விதியும் நான் நினைச்சதுக்கு சாதகமா தான் அமைஞ்சிருக்கு போல அதனாலேயே என்னவோ இருந்திருந்து ரஞ்சன் யாரோ ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாற்றாமல் சரியா தரனுடைய தங்கச்சியான கலைவாணியே தேர்ந்தெடுத்தது தன் விதியோ என்னவோ” என்றவருக்கு கண்கள் சிவந்தது.

“இதோ நிற்கிறானே ரஞ்சன் அவன் செய்த காரியத்தை கேட்டு பூரிச்சு போனேன்... அப்போவும் தரன் தங்கச்சி வாழ்க்கைக்காக மட்டும் தான் நியாயம் கேட்க முயற்சி செய்தான், அவன் அப்படி ஒன்னும் பரவாதித்தனம் பிடிச்சவன் இல்லை”

“உங்க மகன் மட்டும் வாணியை ஏமாற்றாம இருந்திருந்தா, என் பொண்ணை பார்த்து தரன் நியாயம் கேட்க முயற்சி செய்யாம இருந்திருந்தா, இந்நேரம் தரன் சம்யுக்தாவுக்கு புருஷனா ஆகியிருக்க வாய்ப்பு ரொம்ப குறைவு தான்”

“இவங்கெல்லாம் சொல்ற மாதிரி உன் புருஷன் நான் சொல்லியும் வரலை, பணக்கார பொண்ணு தான் வேணும்னு மடக்கவும் வரலை சம்யுக்தா” என்ற விஸ்வநாதனை இடைமறித்த தரன்...

“இதுக்கு மேல நான் சொல்றேன் மாமா ப்ளீஸ்... சில விஷயங்கள் அந்தந்த விஷயத்துக்கு உரியவங்க தான் தெளிவுப்படுத்தணும், அதனால் இந்த விஷயத்தை நானே உங்க மகளுக்கு தெளிவுப்படுத்துறேன்” என்றவன் மனைவியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தான்.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 36 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-37

“நான் சொல்லுறதை உன்னால் நம்ப முடியுமான்னு தெரியலை... ஆனால் உண்மை என்னவோ அதை தானே நான் சொல்ல முடியும்” என்றவன் ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து தன்னை திடப்படுத்தி கொண்டு விட்டு பேசலானான்.

“உங்க அண்ணன் ரஞ்சன் பண்ணின தப்பை தட்டிக் கேட்க தான் உன்னை அணுக முயற்சி செய்தேன் சம்யுக்தா... அதுக்காக உன்னை நான் நீ அறியாமல் தொடர்ந்தேன்... உன்னை பார்த்ததும் பேச முடியாம ஒரு தயக்கம் இருந்துச்சு... உடனே உங்க அப்பாகிட்டே கேட்டேன் உங்க பொண்டாட்டியோட அக்கா பையன் பண்ணின தப்புக்கு நியாயம் கிடைக்க உங்க பெண்ணை தான் நான் அணுகப் போறேன் சொன்னேன்” என்றவன் ஓர் முறை விஸ்வநாதனை அர்த்ததுடன் பார்த்து விட்டு தன் பேச்சினை தொடரலானான்.

“உங்க அப்பாவும் என் மேல் இருக்கிற நன்மதிப்பின் பேரில் உன்னை அணுக அனுமதிச்சாரு.....” என்று தொடர்ந்தவனை முடிக்க விடாமல் ஆவேசத்துடன் இடைமறித்த யசோதா...

“ஒரு அப்பன் பண்ணுற காரியத்தையா நீங்க பண்ணியிருக்கிறீங்க... ஊரில் உள்ளவன் எப்படி போனா உங்களுக்கென்ன? யாரோ ஒருத்தனை நம்பி என் பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணி வச்சிட்டு ஜம்பமா நிற்கறீங்க உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா” மூச்சிரைக்க கோபாவேசத்துடன் பேசியவரின் பேச்சில் தரனின் உடல் இறுக, விஸ்வநாதன் அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக பார்த்தவர்...

“ஏன் சம்யுக்தாவுடைய தொழில் வட்டாரத்தில் ஆண்களோட பேச்சு வழக்கில் ஈடுபடதில்லையா? இல்லை; அவங்கெல்லாம் ஆம்பளைங்க நான் பெண் கூடத்தான் பிசினெஸ் பேசுவேன்னு ஒதுங்கிருவாளா?” என்று மனைவியிடம் வினவியவர் மகள் புறம் பார்வையை திருப்பி...

“என்னம்மா சம்யுக்தா, நீ தொழில் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து பல பேரை பல விதமா பார்த்திருப்ப, பழகியிருப்ப... அதில் நல்லது கேட்டது ரெண்டும் பார்த்திருந்திருப்ப, அப்படி இருக்கையில் உனக்கு கவின்கலாதரன்னு ஒரு ஆண் கூட பேசுறது தான் வித்தியாசமா இருந்திருக்குமா?” என்றவரின் கேள்விக்கு கணவனை கூர்மையாக பார்த்தவளின் பார்வை தன்னவனின் பார்வையுடன் மோதிக் கொள்ள இல்லை, என்பதாக இடமும் வலமும் தலையசைத்தாள்.

“நான் உன்னை பார்த்ததும் என்னையும் அறியாம என் மனசுல சலனம் ஏற்பட ஆரம்பிச்சது... ஏனோ என் தங்கை வாழ்க்கைக்காக உன்கிட்டே நியாயம் கேட்க வந்த எனக்கு உன்னை பார்த்ததும் அது சுத்தமா மறந்து நீ மட்டுமே என் கண்ணுக்கு தெரிஞ்ச” என்று கூறிய தரனை இப்போது இடைமறித்தது ரஞ்சனின் ஆவேசக் குரல்...

“அப்புறம் எதுக்காக என் தங்கைகிட்டே அந்த மாதிரி ஒரு வார்த்தையை கேட்டீங்க?” மரியாதை தொனியுடன் என்றாலும், அவன் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் மறைந்திருக்க, தரனும் சளைக்காது அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே...

“ஸ்டாப் இட் ரஞ்சன் அண்ணா...! அவர் தான் பேசிட்டு இருக்காருள்ள, நீ ஏன் இப்போ கொந்தளிக்கிற? எல்லாரும் அவங்க அவங்க தரப்பில் என்னென்ன பேசுறாங்களோ பேசி முடிக்கட்டும் அதுவரை இங்கிருக்கிற யாரும் வாய் திறக்கக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறியிருக்க, அவள் கூற்றை ஏற்றுக் கொண்டு அனைவரும் மெளனமாக நின்றிருந்தனர்.

“நீங்க கண்டினியு பண்ணுங்க மிஸ்டர்.கவின்கலாதரன்” என்றவளின் பேச்சில் ஓர் வித ஒதுக்கம் தென்படவே, தரனின் இதயம் வேகமாக துடித்தது. அர்ஜுன் அவன் கரங்களை அழுத்திக் கொண்டிருக்கவும் தான் தன் பேச்சை தொடரலானான்.

“எனக்கு நீ நடந்துகிட்ட விதத்தை கண்காணிச்சதில் உன்னுடைய நேர்மையான குணம் என்னை வசீகரிச்சிருச்சு... அதுக்கப்புறமும் என் தங்கை வாழ்க்கையை சீர் செஞ்சுட்டு மற்றதை பார்த்துக்கலாம்ன்னு நினைச்சு முடிவெடுத்தாலும், என் மனசோரத்தில் ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது”

“சப்போஸ் அவ வாழ்க்கைக்கு சரியான வழி கிடைக்கலைன்னா, நிச்சயம் உன்கிட்டே என் விருப்பத்தை தெரிவிக்க முடியாதுன்னு நினைவு வந்ததும் உடனடியா நான் உங்க அப்பாகிட்டே தான் பேசினேன்”

“உங்க அப்பா அப்படி ஒன்னும் எடுத்ததும் என் முடிவை ஆதரிக்கலை...” என்றவன் அன்றைய அவரின் பேச்சை முன்னோட்டம் போல் நினைவு கூர்ந்தான்.

**********************

அன்று...

தரன் சம்யுக்தாவின் மேல் விருப்பம் இருப்பதாக கேள்விப்பட்ட விஸ்வநாதன்...

“என்ன என் பெண்ணை நீ விரும்புறியா?” என்று ஆச்சர்யமாக வினவியரிடம்...

“ஆமாம்” என்று ஒற்றை சொல்லில் அழுத்தமாக பதிலளித்தவனின் வார்த்தையில் விஸ்வநாதன் புருவம் முடிச்சிட யோசித்தவர்...

“உன் மேல் இருக்கிற நம்பிக்கையும், உன் தங்கச்சியும் எனக்கொரு பொண்ணு தான்னு நினைக்கிற எண்ணத்தால் தான் உன்னை என் பெண்ணை நாடி உதவி கேட்க சம்மதித்தேன் தரன்... ஆனால், நீ அவள் மேல் விருப்பம் இருக்குன்னு சொல்லுற? அதுவும் குடும்பத்திற்கு மூத்த மகன், தங்கைகள் மெச்சுற பொறுப்பான அண்ணன் நீ, திடிர்னு என் பெண் மேல காதல் வந்திருக்கு சொன்னா அதை தான் என்னால் நம்ப முடியலை”

“வாஸ்தவம் தான் விசு மாமா... நீங்க சொல்லுற மாதிரி நான் பொறுப்பை தட்டிக் கழிக்க விரும்பலை. அதே சமயம் எனக்குன்னும் மனசு இருக்கு அதில் தனிப்பட்ட ஆசைகளும், விருப்பங்களும் இருக்கு அதை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க?” என்றவன் தொடர்ந்து...

“நீங்க ஒரு உண்மையை தெரிஞ்சுக்கணும், உங்க பொண்ணு மேல ஏற்பட்ட விருப்பத்தை நான் அவகிட்டே கூட இன்னும் மனசு திறந்து சொல்லலை... நான் நேரடியா உங்ககிட்டே சொல்லக் காரணம் இப்போ கேட்ட கேள்வியை பின்னாடி நீங்க கேட்டுடா கூடாதுன்னு தான்... அதுவுமில்லாமல் எனக்கு என் தங்கைங்க எப்படியோ அதை விட ரெண்டு மடங்கு உரிமை உங்க பொண்ணு மேல உங்களுக்கு இருக்கு... உங்க பெண்ணை நான் மனதார நேசிக்கிறேன், என்னை நம்புங்க எனக்கு உங்க பொண்ணு யுகி வேணும்... ஒரு வேளை என் தங்கச்சி பிரச்சனையில் முரண்பாடா எதுவும் நடந்திருச்சுன்னா.....” என்றவனால் அதை பற்றி சிந்திக்க கூட முடியாது உள்ளத்தை உலுக்கிப் போட்டது.

“ம்ஹும்... என்னால் உங்க பொண்ணு இல்லாத வாழ்க்கையை யோசிச்சுக் கூட பார்க்கக் முடியலை மாமா... அப்படி ஒரு நிலை நேர்ந்தா கடைசி வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் தனியாவே இருந்துடுறேன்” என்றவனின் உணர்ச்சி ததும்பிய பேச்சில் விஸ்வநாதனை சிந்தனை ஆழியில் ஆழ்த்தியது.

“சோ, என் மகள் இல்லாமல் வாழ முடியாதுன்னு சொல்ல வர? அப்போ உன் தங்கச்சி வாழ்க்கையை எப்படி சரி செய்யுறதா உத்தேசம்?”

“இதில் கேள்விக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை... இப்போ நான் உங்க பெண்ணை நாட என் தங்கச்சி வாழ்க்கையில் நடந்த அநீதி தான் காரணமா இருக்கும்... இதே உங்க மகள்கிட்டே நான் விருப்பத்தை சொல்லிட்டு அவள் என் மனைவின்னு ஆனதுக்கு பிறகு சொன்னா எங்க வாழ்க்கைக்கும் பிரச்சனை ஆகாது, என் தங்கை வாழ்க்கைக்கும் ஒரு நியாயம் கிடைக்கும்”

“சப்போஸ் என் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு அப்புறமும் அந்த ரஞ்சன் உன் தங்கையை நிராகரிச்சானா, என் பெண்ணை நீ என்ன செய்கிறதா உத்தேசம்?” ஒரு தந்தையாக அவன் மனதை முழுமையாக அறிய முடியாமல் அவரால் உடனடியாக சம்மதிக்க மனமில்லாமல் போனதே அவனிடம் இப்படிப்பட்ட கேள்விகளை தொடுக்க காரணமாகிப் போயின.

“உங்க பெண்ணை அறியாமல் நான் கல்யாணம் பண்ணுறேன், பண்ணாமல் போறேன்... அது உங்களுக்கும் பிரச்சனை இல்லை, எனக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் என் மனைவின்னு ஆகிட்டா என் வாழ்க்கையோட ஆணிவேர் உங்க மகளான என் மனைவி தான்... அவளுக்கு நான் என்ன செய்தாலும் என் ஒட்டு மொத்த குடும்பமும் இல்லாமல் என் சந்ததியையும் பாதிக்கும்... இது மட்டும் இல்லாமல் என்னை என் வீட்டில் அப்படி வளர்க்கலைன்னு உங்களுக்கே நல்லா தெரியும்.... ஏன்னா, என்னுடைய இப்போதைய இந்த வளர்ச்சிக்கு நீங்க தான் காரணம், இதை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லைன்னு நம்புறேன்”

அவரின் பேச்சை நிதானமாக கேட்டவருக்கு சிந்தனை குதிரை அலைபாய்ந்து கொண்டிருந்தது... நீண்ட நேரம் நெடிய யோசனைக்கு பிறகு அர்ஜுன் குடும்பத்திடம் தரனின் விருப்பத்தை பகிர அவர்களும் அதற்கு மனபூர்வமான சம்மதத்தை வெளிப்படுத்தி கலாதரனுக்கு நற்சான்றிதலும் அளித்தனர். தன் குடும்பத்தினர் அல்லாத தனிமையில் தர்சன், அர்ஜுன் இருவரும் ஆலோசித்து விஸ்வநாதனிடம் பேச முடிவு செய்திருந்தனர்.

“மாமா தரன் ரொம்ப நல்லவன் சம்யுக்தாவுக்கு அவன் கணவனா இருந்தா, நிச்சயம் கடைசி வரைக்கும் அவளுடைய வாழ்க்கை பிரகாசமா இருக்கும்... தரனுக்கும் அப்படி தான்! ஆனால் இதெல்லாம் சாத்தியமா?” என்ற கேள்வியை அப்போதே மூன்றாம் அழைப்பில் தரனை அணுகி முன் வைக்க...

“சாத்தியம் தான் அர்ஜுன்... சம்யுக்தா விருப்பத்தை தெரிஞ்சுக்கிறதோ சம்மதிக்க வைக்கிறதோ அது முற்றிலும் என் கவலை”

“நீ நினைக்கிற மாதிரி என் பொண்ணு அவ்ளோ சுலபமா சரின்னு சொல்லமாட்டா... அவ இப்போ இருக்கிற ஸ்டேட்டஸ் அவளை சிந்திக்க வைக்கும்”

“உங்க எல்லாருக்கும் பொதுவா ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கிறேன்... நானோ என் அந்தஸ்தோ ரொம்ப குறையா தெரிஞ்சா நான் மட்டும் இல்லை, என் தங்கச்சியும் சேர்த்தே மொத்தமா உங்க கூட இருக்கிற உறவை முறிச்சுக்கிட்டு ஒதுங்கிடுறோம்... என் தங்கை வாணியை எப்படி வாழ வைக்கணுமோ அப்படி நான் வாழ வச்சுக்குறேன்” என்றவனின் குரலில் மிதமிஞ்சிய இறுக்கம் வெளிப்பட அவன் பேச்சில் மற்றவர்கள் ஸ்தம்பித்தனர்.

“தரன் நான் போய் அப்படி சொல்லுவேணா? அந்தஸ்தென்னப்பா பெரிய அந்தஸ்து? நாங்க தேனி வரும் போது உங்களை போல மிடில் கிளாஸ் தானே... ஏதோ நான் வெளிநாட்டில் சம்பாரிச்சு சேர்த்ததும், அர்ஜுன் முன்னேற்றமும் தானே எங்களுடைய அந்தஸ்தை உயர்த்தி காட்டுது, நாளைக்கு நீயும் எங்க அந்தஸ்தில் தரம் உயர்ந்தது தான் வாழுவ, அந்த திறமையும் உனக்கிருக்கு, எனக்கு நம்பிக்கையும் இருக்கு”

“உங்க பொண்ணும் தகுதி பார்த்து காதல் பண்ணுறவ இல்லை, இதை நான் உறுதியா சொல்லுவேன்... அதே சமயம் இப்போ அவ முன்னாடி நான் நிற்கும் போதும் என் நிலையை உயர்த்திகிட்டு தான் நிற்பேன் அதுக்கான பலமும், திறமையும், படிப்பும் என்கிட்டே இருக்கு” என்று சம்யுக்தாவிற்கு வக்காளத்து வாங்கியவனை கண்டு மூவருக்குமே கித்தாய்ப்பில் புருவம் உயர்ந்தது.

“பேசி பழகாமலே என் மகள் மேல இத்தனை நம்பிக்கையா?” மெல்லிய புன்னகையுடன் வினவியவருக்கு...

“ஒரு சிலரைத் தான் பேசிப் பழகி ஆராயணும், ஒரு சிலர் பார்வையே அவங்க குணத்தை பிரதிபலிச்சு காட்டி கொடுத்திரும்... உங்க மகளுக்கு பளிங்கு முகம் அவ மனசை அப்படியே அது காட்டி கொடுத்திடும்” என்று ஆணித்தரமாக கூறியவன் பதிலில் மூவருமே வாயடைத்து போயினர்.

இரண்டொரு நாட்கள் சிந்தித்து கொண்டிருந்த நிலையில் அர்ஜுன் ஒரு முடிவை மேற்கொண்டு விட்டு தன் மாமாவிற்கு அழைதிருந்தவன்...

“மாமா தரன் பேசினதை வச்சு எதுவும் முடிவெடுத்திருக்கீங்களா?”

“யோசிச்சிருக்கேன் அர்ஜுன் ஆனா அது சரி வருமான்னு தான் தெரியலை?” என்றவர் அவரின் யோசனையை கூற, அவனும் அதையே சிந்தித்து வைத்திருக்க இருவரின் சிந்தனையும் ஒரே அலையில் இருப்பதை அறிந்து...

“மாமா நானும் தர்சன்கிட்டே இதை தான் சொல்லிட்டு இருந்தேன், நாம ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் சிந்திச்சிருக்கோம்”

“தரன் மேல எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கு அர்ஜுன்... அதுவுமில்லாமல் அவன் ஒன்னும் மூணாவது ஆள் இல்லை, அவன் குடும்பத்துடைய பூர்வோத்திரமும் நமக்கு அத்துப்படி... அப்படியே நாளைக்கு எதுவும் பிரச்சனைன்னாலும் அவன் சட்டையை பிடிச்சு கேட்கலாம், எதுவும் நாம செய்யலாம்”

“ஆமாம் மாமா அதே தான் என் எண்ணமும்... நிச்சயமா அத்தை வீட்டில் முதல்ல ஸ்டேட்டஸ் தான் பார்ப்பாங்க அங்கே சம்முவை அவங்க எப்படி நடத்துவாங்களோ? கண்காணாத இடத்தில சம்மு வாக்கப்பட்டு போய் நின்னு எதுவும் சிக்கல் ஆகினா நமக்கு ரெண்டு மடங்கு வருத்தம்... அதுக்கு பதிலா நம்ம தரன் குடும்பம்ன்னா நம்ம கண் பார்வையில் கண்காணிச்சுக்கலாம்” இருவரின் பேச்சையும் கூர்ந்து கவனித்து கொண்ட தர்சன் தன் தரப்பு அபிப்ராயத்தையும் கூறலானான்.

“அப்பா தரன் மாமா சொன்ன மாதிரி சம்மு க்கா ரொம்ப ஸ்டேட்டஸ் பார்க்கிற ரகம் கிடையாது... அதே சமயம் தரன் மாமா குடும்பமும் அப்படி ஒன்னும் ஸ்டேட்டசில் குறைஞ்சு இல்லை... ஆனால் இதெல்லாம் நிச்சயம் அம்மா ஒப்புக்கமாட்டாங்க அவங்களோட குறிக்கோள் வெளிதோற்றதுக்கு பவிசா இருக்கணும்ன்னு பார்ப்பாங்க... சோ, இப்போ தரன் மாமா சம்முக்கா கிட்ட விருப்பத்தை சொல்லணும்னு சொன்னாலும் இப்போ இருக்கிற நிலைமையை காட்டிக்கக்கூடாது”

“நீ சொல்றதெல்லாம் சரி தான் தர்சன், அதுக்கு தான் நான் யோசிச்சு வச்சேன் நம்ம ராயல் கிங் மோட்டார் கம்பெனி இப்போ பவர் ஆப் அட்டார்னி கொடுத்து தானே ரன் பண்ணிட்டு இருக்கோம், இப்போ அந்த பொசிஷனை ஏன் தரனை எடுத்துக்க சொல்லக்கூடாது?”

“சரி தான் மாமா நாம நினைக்கிறோம்... ஆனால் இதுக்கு அவன் ஒத்துக்கணுமே”

“எனக்கும் அது தான் ரொம்ப கவலையா இருக்கு அர்ஜுன்... என்ன தான் தரன் நாம சொன்னா கேட்பானாலும் அவனுக்குன்னு தன்மானம் இருக்கு, தனிப்பட்ட கௌரவம் இருக்கு... அவன் நாம சொல்றதுக்கு சம்மதிப்பானா?”

“நிச்சயம் சம்மதிக்க மாட்டாரு அப்பா... ஆனால் அதுக்காக சம்முக்காவுக்கு நல்ல வாழ்க்கைத் துணை தேடி வரும் போது அதை கோட்டை விட்டிட்டு பின்னாடி வருந்த முடியுமா?”

“நிச்சயமா முடியாது”

“அப்போ நாம பேசி தான் சரி பண்ணனும் மாமா, இப்போவே அவனுக்கு கான்பாரன்ஸ் கால் போடுறேன் நாம அவன்கிட்டே பேசிரலாம்” என்று கூறிய அர்ஜுன் அவனை அழைத்து இன்ன திட்டம் என்று பட்டவர்த்தனமாக கூற, தரனோ அதை கேட்டு ஆவேசமானான்.

“என்ன நான் நடிக்கணுமா? தேவையே இல்லை... என் தங்கச்சி வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன், உங்க வீட்டு பெண்ணை நீங்களே வச்சுக்கோங்க... என்னை விட வேற நல்ல வசதியான இடம் அமையும் பார்த்து கட்டி கொடுத்துக்கோங்க... எங்களை மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி அவமானம் எல்லாம் புதுசா என்ன? அதை நாங்க பார்த்துக்கிறோம், வாணியோட மகளை நான் வளர்த்திகிட்டு அவளை வேற இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்துக்குறேன்... என் பேர் பக்கத்துல வேற யார் பேராச்சும் இருக்குன்னு விதி எழுதியிருந்தா, அதுக்காக எனக்கு எதுவும் வாழ்க்கை அமையலாம் அப்போ நான் பார்த்துக்கிறேன்” என்று மூச்சுவிடாமல் சூடாக உரைத்து முடித்தவன் வேகமாக இணைப்பை துண்டித்திருக்க, காணொளி அழைப்பில் இருந்த மூவரின் முகமும் திகைப்புக்குள் ஆகிப்போனது.

“என்னப்பா இப்படி பேசிட்டாரு” என்று அதிர்ச்சியில் வினவிய தர்சனிடம்...

“இது எதிர்பார்த்தது தான்... அர்ஜுன், இதை இப்படியே விட வேண்டாம் அவனை எப்படியாவது லைனில் பிடி அவன்கிட்டே பேசிடலாம்” என்றதும் உடனடியாக அவனை நேரில் சந்தித்து மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் கூறி விஸ்வநாதனுக்கு காணொளி அழைப்பை இணைத்தவன்...

“உங்க பொண்ணு நாளைக்கு என்கிட்டே ஏன் டா பொய் சொன்னேன்னு நாக்கை பிடுங்குற மாதிரி கேட்டா, என் முகத்தை நான் எங்க கொண்டு போய் வச்சுக்குவேன்? அதுவுமில்லாம அவ கொஞ்சம் அடமண்ட்டா தெரியுறா, என்னையே தூக்கி எறிஞ்சுட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை?” என்று அங்கலாய்த்தான்.

“அவகிட்டே நீ உண்மையை சொல்லு! நீ காதலிச்சது உண்மையா இருந்தா, ரெண்டு பேரும் வேற வேற இல்லைன்னு ஆகிட்டீங்கன்னா என் பொண்ணு நீ பிளாட்பாரமில் இருக்கிறேன்னு சொன்னாலும் அவ உன்னை விட்டு கொடுக்க மாட்டா... நான் அடிச்சு சொல்லுறேன் என் பொண்ணு ஒன்னு நினைச்சுட்டா அதை எந்த நிமிஷத்துலையும் விட்டு கொடுக்காத ரகம்... நாங்க உன்னை வேஷம் போட சொல்லுறது என் பொண்ணுக்காகங்கிறதை விட அவளுடைய அம்மாவும், அம்மா வீட்டுகாரங்களுக்காகவும் தான்... உன்னை அந்தஸ்துன்னு ஒரு முகமூடியை மட்டும் தன் மாட்டிக்க சொல்லுறோம் மற்றபடி என் பெண் மேல இருக்கிற நேசமும், பாசமும் உண்மை தானே”

“உனக்கு சம்யுக்தாவை பிடிச்சு போச்சுன்னு சொன்ன, இப்போ ஒரேடியா வேண்டாம்ன்னு தூக்கி எரியுற? அப்போ அவ இல்லைன்னா உனக்கு வருந்தம் ஏற்படாதா?”

“எப்படி வருத்தம் இல்லாமல் போகும்? ஆனால் அதே சமயம் நீங்க சொல்லுற மாதிரி ஒரு கம்பனிக்கு சொந்தகாரன்னு சொல்லிட்டு நிற்கிறதை கண்டுபிடிச்சா என் காதல் என்ன கதி ஆகும்? அதுக்காக அவ என்னை ஏதாவது செஞ்சாலும் நான் தாங்கிக்குவேன்... ஆனால் அவளே எதுவும் செய்துகிட்டா என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலை” என்று கூறி வியாகூலத்தில் இமைமூடித் திறந்தான்.

“நீயே இவ்ளோ யோசிக்கறியே என் உதிரத்தில் உருவான என் பெண்ணை ஏமாற்றுகிறோமேன்னு நான் யோசிக்க மாட்டேனா தரன்?”

“அது தான் ஏன் கேட்கிறேன்? உங்க வீட்டு பெண்ணை ஏமாற்ற நீங்களும் உடந்தைன்னு பெயர் வருமே?”

“குழந்தைக்கு உடம்பு சரி ஆக டாக்டர் கொடுக்கிற கசப்பான மருந்தை குழந்தை தன்னால் விருப்பப்பட்டு குடிச்சிருமா? அம்மா அந்த குழந்தைக்கு போலியா எதையாவது காட்டி தானே கசப்பான மருந்தை கொடுத்து நோயை குணப்படுத்துறாங்க... என் மகளுக்கும் ஏமாற்றம்ன்னு கசப்பான மருந்தை கொடுக்கிறேன்... அதனால் அவளுக்கு விளைவு துரோகமா எதிர்மறையா இல்லாமல் ஒரு நல்ல எதிர்காலமா இருக்கும்... சம்யுக்தா தொழிலில் காலடி வச்சப்போவே அவ நடைமுறை வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களையும் புரிஞ்சிருப்பா... அதனால் நீ அவளுடன் நல்லா வாழ்ந்தா அவ இதை எல்லாம் ஏமாற்றமா நினைச்சு வருந்தமாட்டா, அந்தஸ்தை தூக்கி மூலையில் போட்டுட்டு புருஷன் உன்னை மட்டும் தான் அவ யோசிப்பா”

“என் மகளை நான் ஒரு நல்ல ஆண்மகன் கிட்டே ஒப்படைக்கணும்ன்னு நினைக்கிறேன்... எட்ட இருக்கிற பலாபழத்தை விட கிட்ட இருக்கிற களாக்காய் மேல்” என்று விஸ்வநாதனை தொடர்ந்து அர்ஜுன், தர்சன் பேசி பேசி கரைத்து ஒரு வழியாக அவனை அவர்களின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டிருந்தனர்.

“நீ முதலில் அவ மனசில் இடம் பிடி, அதுக்கப்புறமும் நீ அவளை ஏமாத்துறோமேன்னு உறுத்தலா இருந்தா அவகிட்டே உண்மையை சொல்லவும் வழி தேடிக்கலாம்” என்றதும் தரனுக்கு சம்யுக்தாவின் மேல் கொண்ட விருப்பம் சரி என கூற வைக்க, அவர்கள் கூற்றுபடியே ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தான்.

நடந்து முடிந்த கதையை விலாவாரியாக கூறிக் கொண்டிருந்தவனுக்கு உணர்ச்சி வசத்தில் தொண்டை அடைக்க தண்ணீரை அருந்தியபடியே, மனைவியின் உணர்ச்சிகளை அவதானித்தவனுக்கு அவளின் உணர்ச்சி துடைத்த முகம் அவனுள் கலவரத்தை உருவாக்கியது.

“உங்க வீட்டில் உள்ளவங்க சொன்னதுக்கப்புறம் தயக்கத்தோட தான் உன்னை அணுகி பேச ஆரம்பிச்சேன்... ஆனால் அதுக்கப்புறம் நிச்சயம் நீ இல்லாமல் எனக்கொரு வாழ்க்கையே இல்லைன்னு ஆகிருச்சு... உடனே இதையும் நான் அவங்ககிட்டே பகிர்ந்துகிட்டேன்”

தரன் முழுமையாக சம்யுக்தாவின் மனதில் இடம் பிடித்துவிட்டதாகவும், இனி அவளை கணமும் பிரிய முடியாது என்ற எண்ணத்திலும் நிலையாக உறுதியாக இருப்பதாக கூறியவன்...

“இனி என்ன ஆனாலும் நான் சமாளிச்சுக்கறேன்... ஆனால் ஒரு நிமிஷமும் அவளை பிரிஞ்சு என்னால் இருக்க முடியாது... அவ என் யுகி... என் உயிர்!”

“நிஜமாவா! இதை நாங்க நம்பலாம் தானே?” என்ற சந்தேகத்தை முன் வைத்து தான் பெண்ணை பெற்ற தந்தை என்பதை நிரூபித்தார் விஸ்வநாதன்.

“என் அம்மா இப்போ உயிரோட இல்லை... தாய்க்கு பின் தாரம், அவ இல்லைன்னா நானும் இல்லை”

“இந்த வார்த்தையும் மாறக்கூடாது, மனசும் மாறக்கூடாது, அப்படி எதுவும் ஆகி என் பொண்ணு மட்டும் கண்ணை கசக்கிகிட்டு நின்னான்னு தெரிஞ்சா, அப்புறம் உன்னை கொல்லவும் தயங்கமாட்டேன்” என்று கண்டிப்புடன் கூறியவரின் வார்த்தைக்கு எதிர்ப்பு கூறாமல் சரி என்று ஏற்றுக் கொண்டான்.
**********************

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாத சம்யுக்தா தந்தை, தர்சன், கணவன் மூவரையும் உறுத்து பார்த்து விட்டு...

“ரஞ்சன் அண்ணா முதல்ல நாம போகலாம் வா” என்று ரஞ்சன் கரம் பற்றிக் கொண்டவளை தடுத்த நிறுத்த எண்ணி தரன் தானும் பற்றிக் கொள்ள அவனை கடுமையாக முறைத்தவள்...

“அதான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சாச்சில்ல இதுக்கு மேல நீங்க சொல்ல என்ன இருக்கு?”

“இருக்கு யுகி... இவ்ளோ நேரம் பொறுமையா இருந்த தானே இன்னும் கொஞ்சம் நேரம் பொறுமையா இரு” அவன் குரலில் இருந்த மன்றாடுதலில் என்ன நினைத்தாளோ முன் எடுத்து வைத்திருந்த காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டு தேங்கி நின்றாள்.

“நான் உன்னை அப்படி ஒரு வார்த்தை கேட்டு நோகாடிப்பேன்னு நினைச்சும் பார்க்கலை... அப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்தி உன்னை கேட்கக்கூடாத வார்த்தையை கேட்டு நோகாடிக்கணும்னு நோக்கமும் இல்லை... எல்லாமே உங்க அண்ணன் செய்து வைத்த வேலை... தங்கச்சி தற்கொலை பண்ணிக்கிட்டு உசுருக்கு போராடுறப்போ எனக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்திருச்சு, அதான் உன்னை பார்க்க வராமல் இருந்து கஷ்டப்படுத்தி கடைசியா அப்படி ஒரு பேச்சும் வந்திருச்சு” என்று கூறி முடித்தவன் பரிதாபமாக அவளை பார்த்திருக்க...

“முடிஞ்சுதா இப்போ நாங்க கிளம்பலாம் தானே” என்ற அப்போதும் பெரியதாக எந்த எதிரொலியும் இல்லாமல் சம்யுக்தா குரல் உணர்ச்சியற்று மரத்து போயிருந்தது.

“சம்மு எல்லாமே உனக்கே உனக்காக உன் வாழ்க்கைக்காக பண்ணினது டா எங்களை மன்னிச்சிரு” என்று அர்ஜுன் மன்னிப்பு யாசித்தவனை பற்றில்லாமல் பார்த்தவள்...

“ரஞ்சன் அண்ணா போதும் வா போகலாம், இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க முடியாது”

“சம்மு இருடா விச்சுப்பா....” என்று ஆரம்பித்தவனை கரம் உயர்த்தி தடுத்தவள்...

“இப்போ நீ என் கூட வர முடியுமா, முடியாதா?” என்று அழுத்தத்துடன் அதிகாரமாக கேட்க, அவளின் பிடிவாதம் தெரிந்து பார்வையால் மன்னிப்பு யாசித்து விட்டு அவளுடன் நகர்ந்திருந்தான்.

தன் கூட பிறந்த சகோதரி என்று அவள் அறியாமல் அறிந்திருந்த போதே, எப்போதடா உண்மையான சகோதர பாசத்துடன் தமக்கையுடன் உறவாடுவது என்று ஏங்கி கொண்டிருந்த தர்சனுக்கு அவளின் கோபம் பாதித்தது. அவள் அறையை விட்டு செல்லும் முன் வேகமாக அவள் கரத்தை பற்றியவன்...

“சம்மு க்கா ப்ளீஸ்... கொஞ்சம் நிதானமா யோசி” என்று நிறுத்தியவனை கடுமையாக முறைத்தவள்...

“நீ கூட என்கிட்டே உண்மையை சொல்லாமல் மறைச்சிட்டியே” என்றவள் வெடுக்கென்று கரத்தை உருவிக் கொண்டு சென்றுவிட்டிருந்தாள்.

அவளின் செயலில் பரிதவித்து நின்ற தர்சனை, அர்ஜுனும், தரனும் விலாவை அழுத்தி கொடுத்து சமாதானம் செய்தனர்.

“விடு அவ பிடிவாதத்தை பற்றி தெரியாதா? முதல்ல இவங்களை சமாளிப்போம்” என்று காதோரமாக கூறிய அர்ஜுனின் வார்த்தைகளில் தன்னை தேற்றிக் கொண்டான்.

“பெத்த மகளையே இப்படி ஏமாற்ற உங்களுக்கெல்லாம் எப்படி மனசு வந்துச்சு?” என்று யமுனா வினவ அவரை ஏற இறங்க பார்த்தவர்...

“சாத்தான் வேதம் ஓதுதுன்னா இது தான் போல?” என்று இகழ்ச்சியாக உதட்டை வளைத்து சிரித்தவரை கண்டு பொங்கிய யசோதா...

“வார்த்தையை அளந்து பேசுங்க” என்று கொந்தளித்தார்.

“நான் பார்த்துப் பார்த்து பேசவும் தான் நீங்கெல்லாம் என் எதிரில் நின்னு என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க இல்லைன்னா, உங்களை எல்லாம் துவாசம் பண்ணியிருப்பேன்... என்ன சொன்னீங்க பெற்ற மகளை நான் ஏமாற்றுனேனா? அப்போ நீங்க செய்த காரியத்திற்கு பெயர் என்ன மிசஸ்.பாஸ்கரன்?”

“நான் செய்தது எல்லாம் என் பொண்ணும், பையணும் நல்லா இருக்கணும்னும், நல்லா வாழணும்னு தான்... உங்களை மாதிரி ஸ்டேட்டஸ்க்காக பெண்ணையும், பையனையும் கையேந்த வைக்க இல்லை”

“ரொம்ப பீற்றிக்க வேண்டாம் இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒரு நாள் நாங்க சொன்னது தான் சரின்னு புரிஞ்சுப்பாங்க... அப்போ நீங்க தலையில் தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுற பொண்ணும், பையனும் அம்மான்னு என்னை தேடி தான் வரப் போறாங்க” என்று விரலை சொடுக்கிட்டு சொல்லுரைத்தவரை கண்டு சிரிப்பு தான் வந்தது.

“அப்படி ஒரு காலம் வந்தா பார்த்துக்கலாம், இப்போ கிளம்புறீங்களா” என்றதும் மூவரும் ரோஷத்துடன் அங்கிருந்து நகர தன் மனைவியை போலவே தானும் சொடக்கிட்டவர்...

“இனி எக்காரணம் கொண்டும் என் பொண்ணு, பையன் வாழ்க்கையில் குழறுபடி செய்யக்கூடாது... அப்படி செய்தால் நான் லீகலா போக வேண்டியதா இருக்கும், நீங்களும் ஜெயில்ல களி திங்க வேண்டியதா இருக்கும் ஜாக்கிரதை” என்று எச்சரித்தவரின் குரலில் நான் சொன்னதை செய்வேன் என்ற அழுத்தம் மிகுந்திருந்தது.

பார்த்திபன் நண்பனை நெருங்கியவர்... “ஏன்டா இவங்களுக்கு மத்தியில் தான் நீ கல்யாண வாழ்க்கையை வாழ்ந்தியா?” என்று வியப்புடன் வருந்தி கேட்டார்... அவரின் கேள்விக்கு கசப்பாக புன்னகைத்த விஸ்வநாதன்...

“இவங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்திருப்பேன்னா இன்னும் நம்புற? வாழ்க்கையே வெறுத்து போய் தான் நான் டிவோர்ஸ் கொடுத்தேன்”

“விடுடா இனி போனதை பேசி எதுவும் ஆகப் போறதில்லை, இனியாச்சும் நீ உன் பசங்களோட வாழு... நிச்சயமா உன் பிற்பாதி வாழ்க்கை உனக்கு பிரகாசமா இருக்கும்” என்றவரை உணர்ச்சிவசத்துடன் அணைத்துக் கொண்டவர்...

“ரொம்ப தேங்க்ஸ்டா” என்று நன்றி நவிழ, அவரை பிரித்து நிறுத்தியவர்...

“ஆமாம் பெரிய உதவி போடா” என்று கூறி போலியாக சினந்தவர், பொதுவான சில விஷயங்களையும் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

“வாங்க மாமா வீட்டுக்கு போகலாம்” என்றழைத்த அர்ஜுனிடம்...

“நீ போய் காரில் வெயிட் பண்ணு அர்ஜுன், இங்கே ஒருத்தன்கிட்டே நான் முக்கியமானதை பேச வேண்டியது இருக்கு பேசிட்டு நான் வரேன்” என்றவரின் பார்வை கலாதரனை கூறு போட்டுக் கொண்டிருந்தது.

அர்ஜுன் தரனையும், அவரையும் ஓர் முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியேறிவிட்டிருந்தான்.

அவருக்கும் அவனுக்குமான தனிமை கிட்டியதும் சிறிதும் யோசிக்காமல் அவன் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவருக்கு உள்ளம் உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது...

“என் பெண்ணை பார்த்து பிள்ளைக்கு அப்பன்கிட்டே போய் சொல்லுன்னு சொல்லியிருக்க? என்ன தைரியமும், துணிச்சலும் உனக்கு இருந்திருக்கணும்” என்றவரின் கேள்வி அவமானத்தில் முகம் கருக்க வைத்திருக்க, தன் மேல் உள்ள தவறால் பல்லை கடித்துக் கொண்டு உடல் இறுகி நின்றான்.

“என்ன சொல்லி என் பெண்ணை உன்னை நம்பி ஒப்படைச்சேன்... ஆனால் நீ என்ன செய்து வைத்திருக்க? அவளை கண் கலங்காம பார்த்துக்கணும்னு வாக்குறுதி வாங்கினேன், எல்லாத்துக்குமே சத்தியவான் மாதிரி நம்பிக்கை வாக்குறுதி கொடுத்தவன், அப்படி ஒரு கேள்வியை கேட்டு என் பெண்ணை அவமானப்படுத்தி, அவ மனசையும் நோகடிச்ச உன்னை அப்போ கொல்ல துடிச்சேண்டா... ஆனால் பாரு நான் வந்தா என் பசங்களை வாழ வைக்க அதுவரைக்கும் போராடின போராட்டம் அத்தனையும் கெட்டுடும்னு என் மனசை கல்லாக்கிக்கிட்டு கடல் கடந்து தவிச்சுட்டு இருந்தேன்”

“மன்னிச்சிருங்க! நான் இதை திட்டமிட்டு செய்யலை மாமா... என் தங்கச்சி பச்சை உடம்போட ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, உங்க பொண்டாட்டியோட அக்கா மகன் சொன்ன அந்த வார்த்தையை ஜீரணிக்க முடியாம என் தங்கச்சி தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டா... என்னால் அதை தாங்க முடியலை... அவனை எதுவுமே செய்ய முடியாத ஆத்திரம் கண்ணை மறைச்சிருச்சு, அந்த கோபத்தை உங்க பொண்ணுகிட்டே காட்டி ஒரு பொண்ணோட வலி எப்படி இருக்கணும்னு உணர வைக்க தான் அப்படி பண்ணிட்டேன்”

“ஆனால் நான் செய்த செயல் என் தங்கச்சிகாக நியாயப்படுத்தமாட்டேன், அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கிறேன்” விழிகளில் வேதனையின் வலி தென்பட கூறியவனை ஆத்திரம் குறையாமல் உறுத்து விழித்துக் கொண்டிருந்தார்.

“அப்புறம் என்ன அலுவலுக்கு அவளை விவாகரத்து பண்ண கோர்ட் வரைக்கும் போன? வாழ்க்கை என்ன உனக்கு விளையாட்டா போச்சா?”

“நான் மட்டும் அப்படி செய்யலைன்னா, நிச்சயம் உங்க போராட்டமும் முடிவுக்கு வந்திருக்கும், என்னை வெட்டி போட்டுட்டு நீங்க ஜெயிலுக்கும் போயிருந்திருப்பீங்க” என்றவனை கடுமையாக முறைத்தப்படி...

“என்ன சொல்ற?” கடினமாக வினவினார்.

“எனக்கு வேற வழி தெரியலை... நான் உங்களுக்கு கொடுத்த வாக்கையும் காப்பாத்த முடியலை, உங்க பெண்ணோட காதலையும் சிதைச்சுட்டேன்... எந்த முகத்தை வச்சுக்கிட்டு என் கூட வாழவான்னு கேட்க முடியும்?”

“இதை நீ முன்னாடியே யோசிச்சிருக்கணும்... தப்பு பண்ணினது ரஞ்சன், நீ முறையா அவன்கிட்டே தானே நியாயம் கேட்டிருக்கணும்... அதை விட்டுட்டு அவனை பழி வாங்க அவனை மாதிரியே நீயும் ஒரு தப்பை பண்ணிட்டு, அதுக்கும் மேல என் மகள் வாழ்க்கையையும் அழிக்க பார்த்திருக்க, உன்னை என்ன செய்தால் தகும்? நீயும் பெண்ணை தானே பெத்து வச்சிருக்க நாளைக்கு அந்த பிள்ளைக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தா இப்படி கைகட்டி வாய் பொத்தி பார்த்துகிட்டு இருப்பியா” கண்கள் சிவந்து ரௌதிரத்துடன் ஆவேசத்துடன் குரலை உயர்த்தி கூறியவரின் வார்த்தையை தொடர்ந்து...

“வெட்டி பொலி போட்டிருப்பேன்” என்றவனின் கரங்கள் ஆத்திரத்தில் இறுகியது.

“அப்போ நானும் உன்னை பொலி போட்டிறவா?” அழுத்தமாக அவன் கண்களை பார்த்து வினவியவரின் கேள்விக்கு கூர்ந்து பார்த்தவன்...

“அந்த சிரமம் உங்களுக்கு கொடுக்கமாட்டேன்... உங்க பொண்ணு மறு வாழ்க்கை அமைச்சுக்க சம்மதிச்சா, அடுத்த நிமிஷமே என் உயிரை நானே விட்டுடறேன்” என்றவனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தில் அத்தனை நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த கோபம் மறைய திகைத்து பார்த்திருந்தார்.

அவனின் அந்த ஒற்றை பதிலில் அவரின் கோபம் அனைத்தும் சூரியனை கண்ட பனித்துளி போல் வடிந்திருக்க, அவனை அணைத்துக் கொண்டவரின் விழிகளில் ஈரம் சுரந்தது.

“என் மகளை அப்படி ஒரு வார்த்தை கேட்டுட்டியேன்னு கோபத்தில் ஏதோ பேசிட்டேன், அடிச்சுட்டேன் மனசில் வச்சுக்காதே... என் மகளுக்கு புருஷனா இருக்கிற தகுதி உனக்கு ஒருத்தனுக்கு தான் இருக்கு, அவளை கடைசி வரைக்கும் கை விட்டுவிடாதே” என்று குரல் நடுங்க வேண்டிக் கொண்டவரை பிரித்து நிறுத்தி ஹாஸ்யத்துடன் பார்த்தவன்...

“அவளே என்னை விட்டுட்டு போடான்னு சொன்னாலும் சரி, நீங்களே என் பெண்ணை விட்டுட்டு போடான்னு சொன்னாலும் சரி, நான் அத்தனை சுலபத்தில் விட்டுட்டு போகமாட்டேன்... நீங்க பெண்ணை பெற்ற அப்பா எதிர்காலத்தில் நானும் உங்க பதவிக்கு தான் வரணும் உங்க கோபத்தில் நியாயம் இருக்கு” அவனின் பேச்சுக்கு மறுமொழி பேச எத்தனித்தவரை இடைமறித்து...

“போதும் அடுத்து வீட்டில் உங்க மகளை சமாதானம் செய்தாகணும், அதுக்கும் உங்களுக்கு தெம்பு வேணும் மாமா நமக்குள்ள இனி நமக்குள்ள எந்த மனக்கசப்பும் வேண்டாம்” என்றவனை ஆமோதித்தவர் அவன் கைகோர்த்து இணைந்தே நடந்தார்.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-37 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 
Status
Not open for further replies.
Top