Ramyasridhar
Bronze Winner
நித்து அறியாமல் ரித்வி அவளை இரசிப்பது, அறிவிப்பு வந்தவுடன் தன்னை எதிர்பார்ப்பாளா என்று ஏங்குவது , இவனே சென்று அவளை எதிர்கொள்ளும் போது அவள் சாதாரணமாக முறுவழிப்பது அதில் ஏற்படும் ஏமாற்றம் பின் சுதாரித்து கொள்வது, முதன்முறையாக வானில் பறப்பது போன்றதோர் எண்ணம் அவனுள் என அனைத்தும் அருமை. அவன் நினைவலைகளில் அவள் அவனை வெறுத்து சென்ற தருணம், அவன் காதலை முற்றிலும் உணர்ந்த அந்நொடி, அவன் காதல் அவன் தெரியாமல், புரியாமல் உதிர்த்த வார்த்தைகளால் அவனை விட்டு விலகி சென்றது தான் கொடுமை. விலகும் போதும் அவனை உயர்த்திய அவள், காதலில் அவனை தாழ்த்திவிட்டே சென்றாள். திரும்பியும் பாராமல் அவள் சென்றே விட்டாள். அவளை திரும்ப அழைக்க இவன் தகுதியை இழந்த நிலை என பல எண்ண அலைகள். முதன்முறையாக அவளை நினைத்து அவன் வடிக்கும் கண்ணீர். ஆனால் அதை உணர அவள் அவன் அருகில் இல்லை. நித்து!! என்று அவன் கதறிய கதறல் அவளை சென்றடையாதது அந்தோ பரிதாபம். காதல் சொல்லாத அவனின் வலி அவனுக்கு நெஞ்சடைக்க, நித்துவின் காதலை இவன் ஒவ்வொரு முறையும் நிராகரித்ததை எண்ணி அவள் கொண்ட வலியை இப்போது உணர்கிறான். அப்போது உணராதது எல்லாம் இப்போது உணருகிறான். அவனுடைய வலிகளுடன் முன்பு அவள் அனுபவித்த வலிகளையும் சேர்த்து இன்று அனுபவிக்கிறான். தன்னையே வெறுக்கிறான். அவளிடம் காதல் சொல்லாததையே தனக்கு தண்டனை என ஏற்கிறான். அவளின் நினைவுகளுடனே வாழ்கிறான். அவளை சந்தித்த ஒவ்வொரு தருணங்களையும் நினைவில் கொணர்கிறான், அப்போது அவன் தவறவிட்ட பொன்னான தருணங்களையெல்லாம் நினைவடுக்கில் சேகரிக்கிறான்.அன்று அவனால் உணர முடியாத அவளுடைய காதல் இன்று பொக்கிஷமாய் அவனுள். அன்று அவள் அவனுக்காக சுவர் ஏறி குதித்த போது அவனுக்கு ஏற்பட்ட மயக்கம் வெறும் மாயையே இன்று அதை ஆத்மார்த்தமாக உணருகிறான். பனிசறுக்கின் போது இருவரும் முத்தமிட்டு கொண்டதை நினைத்தும் , அதன்பின் நடந்ததை எண்ணியும் அவன் விழிகளில் நீர், அவள் அப்போது அழுததை இப்போது அவனால் புரிந்து கொள்ளமுடிகிறது. அவன் திருமணதிற்கு அவளை அழைத்து வந்து அவளை மீண்டும் வருத்தியதை எண்ணி குமுறுகிறான். அவள் முன்பு அனுபவித்த மரணவலிகளை எல்லாம் இப்போது இவன் மனமார அவ்வலிகளை ஏற்கிறான். அவளுடைய விருப்பத்தை இப்போது நிறைவேற்றுகிறான். பெற்றோர்களுடனும் நண்பர்களுடனும் அவள் விருப்பத்திற்கிணங்க இணக்கமாகி விட்டான். தொழிலையும் திறம்பட நடத்தி தொடர்ந்து ஸ்பான்ஸர்சிப் செய்கிறான். அவள் சிறுவர்களுக்கு அளித்த வாக்கை இவன் நிறைவேற்றுகிறான். அவன் சொல்லில், செயலில், எண்ணத்தில் என அனைத்திலும் அவளே நிறைந்திருக்கிறாள். சர்வேஷுடன் நித்துவின் திருமணத்தை கேள்விப்பட்டு அவன் கொதிநிலை அடைகிறான். சர்வேஷ் குறித்து நாம், இறுதியில் அவன் தான் ஒருவகையில் பாவம் என்று நினைத்திருக்கையில் அவனை பற்றிய தகவல்கள் அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதுவும் நல்லதிற்கு தான், அவனால் தானே ரித்வி நித்துவை தேடி வருகிறான். இனி நித்துவிடம் இருந்து அவன் விலகி இருக்க போவதில்லை. இனிமையான மனநிலையுடனே அவளுடன் லண்டன் வந்தடைகிறான். இரயிலை பிடிப்பதற்க்காக இருவரும் ஓட தயாராக இருக்கும் நிலையில் அவன் அருகில் வந்து " என் கூட ஓடி வர தயாரா " என்று கண்ணில் பளபளப்புடனும் உதட்டில் முறுவலுடனும் கேட்கிறான். அவன் அப்படி கேட்டவுடன் எனக்கு "வெல்கம் பேக் ரித்வி " என்று அவனை சியர் அப் செய்யவே முதலில் தோன்றியது.அவனின் பழைய துறுதுறுப்பை மீண்டும் கண்டது போல் ஒரு மகிழ்வு எனக்கு. 16ஆண்டுகள் என்னை பின்னோக்கி அழைத்து சென்று விட்டது என்றே கூறலாம். அவ்வார்த்தையை கேட்டு அவள் உறைந்தே விட்டாள். முதல் சந்திப்பின் போது அவன் உதிர்த்த இவ்வார்த்தையை அவளால் தான் மறக்க முடியுமா. ஒரே வார்த்தை தான் அன்றும் இன்றும், அன்றோ விளையாட்டாய் இன்றோ காதலாய். அவளுக்கும் அதை விரைவில் உணர்த்துவான். 4வருடங்களாய் 400டன் காதலை ஏற்றி வைத்திருக்கிறான் (அவளுடைய 16 வருட காதலுக்கு ஈடாக வேண்டுமல்லவா ) என்னே அருமையான வரிகள். அவர்கள் காதலை ஆதியிலிருந்து மீட்டெடுக்க விழைகிறான். அவர்களின் முதல் பயணத்தில் அவளை சுட்டெரித்ததற்கு இப்பயணத்தில் அவன் காதலால் அவளை குளிர்விக்க நினைக்கிறான். காதலை கொன்றவனும், காதல் கொள்பவனும் அவன் ஒருவனே. காதலை கொன்றவனிடமே காதல் கொள்பவளும் அவளே. இந்த காதல் இருவரையும் கொல்லாமல் கொள்ளும். அற்புதமான பதிவு. அடுத்த பதிவை படிக்க மிகுந்த ஆவலாக இருக்கிறது.