நித்து சிறுவர்களோடு அமர்ந்து சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கையில் தன்னை நித்து கவனிக்கவே இல்லை என்று ரித்வி எழுந்து வருவதும், வந்த பின்னும் அவள் கவனிக்காமல் போக அவள் கவனத்தை தன் மேல் ஈர்க்கும் பொருட்டு அவன் செய்யும் செயல்கள் அட நம்ம ரித்விக்கும் பொஸ்ஸசிவ்னஸ் வந்துவிட்டதே என்று வியக்க வைக்கிறது. சிறுவன் வந்து அவனை வலையை தாண்ட முடியுமா என்று கேட்டதும், சிறுவன் முன் தோற்க மனமில்லாமல் முடியும் என்று கூறி அவ்வலையை தாண்டுவதற்கான யுக்தியை ஆராய்ந்து அதை செயல்படுத்தி வெற்றி கண்ட விதம் அருமை. அனைவரின் கைத்தட்டலில் திரும்பியவனை நோக்கி வந்து நித்து கைகுலுக்கி வாழ்த்தவும் அவனுக்கு வானில் பறக்கும் உணர்வு ஏற்படுவதை என்னெவென்று சொல்ல, ஒரு காலத்தில் வெற்றியையே தோல்வியாக மாற்றி அதை இலட்சியம் செய்யாமல் வந்தவன் இன்று நித்துவின் பாராட்டுக்கு ஏங்குவதை, எல்லாம் காதல் செய்யும் மாயம் என்று தான் சொல்ல வேண்டும். காரில் பயணிக்கும் போது தன்னிடம் யாரும் நித்துவை தவிர நெருங்கி பேசியதில்லை என்று கூறும்போது பதிலுக்கு நித்துவும் நீ யாரையும் நெருங்க விட்டதில்லை என்பதும், அப்போது நீ மட்டும் எப்படி நெருங்கினாய் என்று ரித்வி கேட்கும்போதே அவன் மனமோடு சேர்ந்து காரும் தடுமாறுவது அருமை. நீ மட்டும் எனக்கு எப்படி ஸ்பெஷல் ஆனாய் என்பதற்கு அவள் ஏனென்றால் நீ ஸ்பெஷல் ஆனவன் என கூறும் பதில் அழகு. மிருதுளாவை பற்றிய பேச்சு வந்தவுடன் உடனே அவளுக்கு அழைத்து அந்த உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டான். இதுவே சொல்கிறதே கொஞ்சம் கொஞ்சமாக நித்துவின் பால் அவன் மனம் சாய்கிறதென்று. இருவரும் ஒருவரையொருவர் நீ முதலில் இப்படி இல்லையே என்று சொல்கிறார்கள். இருந்திருந்தால் இந்த கதையே இல்லையே. இந்த பயணம் முழுதும் ரித்வி தன்னையே ஆராய்கிறான். முதல் முறையாக அவள் கூந்தல் அழகை இரசித்து அதை அவளிடம் சொல்லவும் செய்கிறான். இப்பதிவு தொடக்கத்தில் இருந்தே நித்துவை இரசித்து கொண்டே தான் இருக்கிறான். நித்து அவன் பார்வை உணர்ந்து கேட்கும்போது கூட குழப்பமாக இருக்கிறது என்கிறான், அவளும் அதை பெரிதாக ஆராயவில்லை. சீட்பெல்ட் போட நித்து உதவும்போது அவளை தடுத்து தானே போட்டுக்கொள்கிறேன் என்றதோடு நீ வுமன் நான் மேன் அதுதான் ப்ராப்ளம் என்றும் உனக்கு புரியாமலே இருக்கட்டும் எனும்போது இந்த ரித்வி எப்போதுதான் தன் மனதை உணர்ந்து கொள்வானோ என்று ஆதங்கமாக இருக்கிறது. நித்துக்கு பார்த்திருந்த வரன் அவளிடம் பேச விளைவதாக அவள் தாய் கூறியதை ரித்வியிடம் தெரிவிக்கும் போது, ரித்விக்கு ஏற்படும் படபடப்பும் அதன் பின்னான அவன் அறிவுரைகளும், இடைவிடாது அவன் பேசிக்கொண்டே செல்வது, பின் நான் தொட்டால் நீ எப்படி மெல்ட் ஆவாய் என்று எனக்கு தெரியும் என்று அவன் அறியாது வந்து விழும் வார்த்தையே அவன் மனதை அவனுக்கு உணர்த்திவிட்டது. அதை சொன்னபின் அவனுக்கு ஏற்படும் சில்லென்ற உணர்வு அவளிடம் மிஸ்ஸிங் மாறாக அவள் முகம் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அன்று உணரத்தவறியதை இன்று உணர்கிறான், நினைவலைகளிலோ அவன் உணரத்தவறிய தருணங்கள், அருமை. காலம் கடந்து அவன் உணர்ந்ததை அவள் இருக்கும் தற்போதைய மனநிலையில் ஏற்பாளா என்பது ஐயமே !!! ஒருவேளை அவள் மறுத்தால் ரித்வியின் நிலையை நினைத்து இப்போதே பரிதவிப்பாக இருக்கிறது.