kavitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரி - 13
சென்னையில் இருந்து வந்த இரு தினங்கள் பிரியாவின் நினைப்பில் சுற்றியவன் பின் , ‘ச்ச அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு … அவளையே நினைச்சு உன் லைப்ப விட்டுடாத கௌரி்…’என்று நினைத்து மனதை வேறு விஷயத்தில் திருப்பினான்.
இந்நிலையில் தான் ரகுவின் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு வந்திருக்க , அதை பெண் வீட்டாரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை கௌரியிடம் கொடுத்திருந்தனர். ஏற்கனவே தன் அண்ணனின் நிச்சயத்தில் கலந்துக் கொள்ளாமல் சென்னை சென்றுவிட்டதால் , மறுப்பு சொல்லாமல் பத்திரிகையை தூக்கிக் கொண்டு அதுதான் பிரியாவின் வீடு என்று தெரியாமல் அங்கே சென்றான் கௌரி.
முதல் தடவையாக பார்க்கின்ற மாப்பிளையின் தம்பியை சிறப்பாக வரவேற்று உபசரித்தனர் பிரியாவின் பெற்றோர். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பியவனை
"தம்பி பின்பக்கம் தான் கொள்ளை இருக்கு பாத்ரூம் போகணும்னா போய்க்கோங்க ..." என்று சேகர் கூறவும் அவரை நன்றியுடன் பார்த்தவன் பின்புறம் செல்ல , அங்கே கிணற்று தண்டில் ஏதோ சிந்தனையில் உட்கார்ந்திருந்த பிரியாவை கண்டு ஷாக்கடித்தது போல நின்றுவிட்டான்.
இனி என்றுமே பார்க்க போவதில்லை என்று நினைத்திருந்தவள் தன் கண்முன்னே இருக்கவும் , ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவனின் நெஞ்சில் அவளின் கசங்கிய தோற்றம் பசக் என்று ஒட்டிக்கொள்ள, அசையாமல் அவளையே பார்த்திருக்க, உள்ளுணர்வு உந்துதலால் மெல்ல அவனை நோக்கி திரும்பியவளை கண்டு சற்றென்று உள்ளே மறைந்தும் கொண்டான்.
தன் வீட்டிற்கு செல்லும் வழி நெடுகிலும் சுய அலசலில் மூழ்கி போனான் கௌரி. யாரோ ஒரு பிரியாவாக இருந்திருந்தால் என்றுமே தங்கள் இருவர் பாதைகளும் இணையப் போவதில்லை ,ஆனால் பிரியாவோ அண்ணன் மச்சினிச்சி, வருங்காலத்தில் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க நேரிடும் அப்பொழுது ஒருவரை ஒருவர் சந்திக்காமல் தவிர்ப்பது இயலாத காரியம் என்று நினைத்தவனுக்கு தாங்கள் முத்தமிட்டு கொண்டது நினைவுக்கு வர தலையில் ஓங்கி அடித்துக் கொண்டான்.
‘ச்ச இப்படி ஆகும்னு நினைக்கலையே … எப்படி ஒன்னுமே நடக்காத போல அவ முகத்தில முழிக்க முடியும்’ என்று புலம்பியவன், ‘பிரியாவா … இல்ல வசதியான வாழ்க்கையா… எது உனக்கு வேணும் கௌரி’ என்று தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டவனுக்கு எது தனக்கு முக்கியம் என்று தெரியாத மனநிலையில் சுற்றிக் கொண்டிருந்தான்.
இன்று தங்களை அழைக்க வந்த செல்வாவை காணும்வரை குழப்பமான மனநிலையில் இருந்தவனுக்கு, செல்வா கூறிய சில விஷயங்களை கேட்டதும் புரிந்து போனது பிரியாவிற்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று . ஏனோ மீண்டும் இன்று அவளை கண்ட நொடி மனம் பந்தயக் குதிரை போல வேகமெடுத்து துடிக்க அப்பொழுதே முடிவுகட்டிவிட்டான் பிரியா தனக்குதான் என்று.
தன் நண்பர்களைக் கொண்டு பிரியாவை இங்கு வரவைத்தவன் , தண்டபாணி சேகர் ஜெயா ரகு காயத்ரியையும் இங்கு வரவைத்திருந்தான். அவர்கள் உள்ளே நுழையும் சத்தம் கேட்டபின்தான் பிரியாவை இழுத்தும் இதழனைத்தான்.
கட்டுக்கோப்பான சேகருக்கு அங்கே கண்ட காட்சியில் உலகமே ஆடி போக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார். தண்டபாணிக்கோ மகனின் செய்கையில் வெட்கி தலைகுனிந்துக் கொள்ள , சுதாரித்த ரகு “கௌரிஈஈ …” என்று அதிர்ந்து கத்தவும் , அந்த நொடிதான் அவர்கள் வந்தது தெரிந்ததை போல பதறியெழுந்த கௌரியை பதற்றத்துடன் நெருங்கினார் தண்டபாணி. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை கை நீட்டி அடிக்க முடியாமல் தடுமாறியவர்
“டேய் பாவி … என்னடா இதெல்லாம் …” என்று அவன் கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டபடி குரல் நடுங்க கேட்கவும் , இந்த தடுமாற்றம் எதுவுமில்லாமல் எனக்கு அப்பவே தெரியும் இதான் நடக்கும் என்ற ரீதியில் நடந்த சம்பவத்தால் அசிங்கப்பட்டு தலை நிமிராமல் தடுமாறிக் கொண்டிருந்த பிரியாவை வெளுத்து வாங்கினார் ஜெயந்தி.
“தெரியும்டி … என்னைக்கு இருந்தாலும் குடும்ப மானத்த வாங்குவேன்னு தெரியும் … உன்ன பொறந்த அன்னைக்கே கழுத்த திருகி போட்டிருந்தா இந்த அசிங்கம் வந்திருக்காது … நீயெல்லாம் பொண்ணாடி …மானங்கெட்ட நாயே … ” என்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்து படி கதறியவரிடம் இருந்து பிரியாவை இழுத்த காயத்ரியை கண்டது அவர் கோபம் முழுவதும் அவளிடம் திரும்பியது.
“எல்லாம் உன்னாலதான் … சொல்ல சொல்ல மீறி அவளுக்கு சப்போர்ட் பண்ணியே பார்த்தியா எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கானு … குடும்ப மானமே போய்டுச்சு, இப்போ நான் என்ன பண்ண போறன் …மாப்பிள்ள வீட்டுல என்ன பொண்ணு வளர்த்திருக்கனு என் மூஞ்சுலதான் துப்பிட்டு போவாங்க…” என்று ஆத்திரத்தில் மேலும் பேச கூடாததை எல்லாம் பேச கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்த பிரியாவிற்கு தன்னிடம் நடந்ததை கேட்டறியாமல் தானாகவே முடிவு கட்டிய தன் அன்னையை கண்டு கோபம் வர, இங்கே நடந்த செயலுக்கு மறுப்பு சொல்லாமல் தன் வாயை மூடி அமைதி காத்தாள்.
அவள் நினைத்திருந்தாள் கௌரியை கையை காட்டிவிட்டு ஈஸியாக இதிலிருந்து விலகியிருக்கலாம் , ஆனால் ஜெயாவின் குற்றசாட்டு அவளின் கோபத்தை கிளறிவிட தன் சம்மதத்தோடு தான் நடந்தது என்று தன் அமைதியின் மூலம் அவர்களுக்கு பதில் கொடுத்தாள் . அதே சமையம் தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்திலிருந்து வெளியேறும் வாய்ப்பாக இதை எண்ணியவள் இந்த நிகழ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தவளுக்கு நன்கு புரிந்தது இது எல்லாம் கௌரியின் திட்டமே என்று.
அன்று தான் செருப்பால் அடித்ததற்கு இன்று பழி வாங்குகிறான் என்று புரிய , எதுவரை அவன் செல்கிறான் என்று பார்க்க எண்ணியவளுக்கு கௌரியை சமாளிப்பது ஒரு பொருட்டாகவே படவில்லை. அவள் அமைதியைக் கண்டு மேலும் கடுப்பான ஜெயா
“வாய திறந்து சொல்லுடி … செல்வா தம்பிக்கு நாங்க என்ன பதில் சொல்றது … இப்படி குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டியே … வாய திறடி …”என்று கோபத்துடன் கத்த, பிரியாவோ ‘ம்ம்ம் … என்ன கேட்டா அந்த கருவாயன மாப்பிளையா பார்த்த … இப்போ மட்டும் எதுக்கு என்கிட்ட கேட்கிற நீயே எதையாவது சொல்லிக்கோ …’ என்று மனதில் ஜெயந்தியின் புலம்பலுக்கு சந்தோஷத்துடன் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இதற்கு மேலும் வாயை மூடிக் கொண்டு நின்றால் நன்றாக இருக்காது என்று நினைத்த தண்டபாணி ,
“கௌரி … உன்கிட்ட இருந்து இத எதிர்பார்கல … நீ மட்டும் அசிங்க பட்டிருந்தா கண்டுக்காம போயிருப்பேன் … ஆனா ஒரு பொண்ணு லைப்பும் அடங்கியிருக்கு … இங்க நடந்ததுக்கு என்ன சொல்ல போற …” என்று பொறுமையாக விசாரித்தவரை கண்டு முகம் சிடுசிடுக்க ஜெயந்தி நின்றிருக்க ,’என்ன இவரு இவ்வளவு ஸ்லோவா இருக்காரு … இந்தாளோட பிளட் தான் அந்த பிராடு பயலுக்கும் ஓடுது போல … அதான் அவனும் மந்தமா இருக்கான் …’ என்று மனதில் தண்டபாணியை அர்ஜித்து கொண்டிருந்தாள் பிரியா.
ஒருமுறை அங்கே கூடியிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன் பின் தன் தந்தையிடம் ,
“அது … நானும் ப்ரிக்குட்டியும் லவ் பண்றோம்ப்பா … சென்னைல தான் ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம் … எனக்கு பிடிச்சு போய் லவ் சொன்னேன் , அவங்க வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்ததால கொஞ்சம் தயங்கினா … இப்போ அண்ணன் கல்யாணத்துக்கு அவங்க வீட்டுக்கு போய்வரவும் ப்ரிக்குட்டிக்கும் என்மேல லவ் வந்திடுச்சு …” என்றவன் பின் ,
“எங்களை எப்படியாவது சேர்த்து வச்சுடுங்க பா … பிரிச்சுடாதீங்க … அவங்க வீட்டுல பேசி எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க சொல்லுங்க பா …” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்ச , உள்ளுக்குள் அதிர்ந்து போனார் தண்டபாணி . தங்களிடம் சென்னையில் நடந்ததாக அவன் கூறிய கதை என்ன இன்று கூறுவது என்ன என்று குழம்பி போனவருக்கு மகனின் வார்த்தையில் சுத்தமாக நம்பிக்கையில்லை.
“விளையாடாத கௌரி … இது உங்க வாழ்க்க சம்பந்தம் பட்ட விஷயம் … உன் விளையாட்டு தனத்தால வாழ்க்கைய கெடுத்துக்காத…” நீ கூறுவதை நம்பவில்லை என்னும் விதமாக பேச , அதுவரை பேரதிர்ச்சியில் நின்றிருந்த சேகருக்கு ஒருவேளை இது கௌரியின் செயலாக இருந்திருந்தால் என்ற சந்தேகம் தோன்ற
“நீ சொல்லுடா இந்த தம்பிதானே உன்ன வலுக்கட்டாயமா பிடிச்சு இழுத்துச்சு … நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு சொல்றது பொய்தானே … உண்மையை மறைக்காமா அப்பாகிட்ட தைரியமா சொல்லுடா , நான் பார்த்துகிறேன் …” என்று தன் மகளிடம் கனிவாக பேசியவரைக் கண்டு உள்ளுக்கு துடித்து போனாள் பிரியா.
தன் மகளை சந்தேகிக்காமல் கனிவாய் பேசியவரை கண்டு அடிவாங்கியதை போல துடித்து போனவள், ஆம் என்று கூறி அவரிடம் தஞ்சம் அடைந்து விடலாமா என்று ஒருநொடி தடுமாறியவள், சட்ரென்று சுதாரித்து பதில் பேசாமல் தலை குனிந்து நிற்கவும்,
“அப்பா கேட்கிறீங்களா , வாயை திறந்து பதில் சொல்லுடி … அமைதியா இருந்து ஏன் எங்கள உயிரோட கொள்ளுற…” என்று ஜெயந்தி தன் பங்குக்கு ஒப்பாரி வைக்க , பொறுமையிழந்த சேகர்
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் பிரியா…” சற்று அழுத்தத்துடன் கேட்கவும், தலை நிமிர்ந்து ஒருநொடி அவரை பார்த்தவள் தலைகுனிந்தபடி இறங்கிப் போன குரலில்
“கௌரி சொன்னது எதுவும் பொய் இல்லப்பா…” என்று கூற , தன் உயிர் தன்னை விட்டு இந்த நொடியே போகாதா என்றளவுக்கு மனதில் அடிவாங்கியவர், இறுகி போன முகத்துடன்
“அப்போ செல்வா …”என்று குரல் கமற கேட்டவர் பின்,
“கொஞ்சம் கூட எங்கள நினைச்சு பார்க்கல … உனக்கு நடந்த நிச்சயத்திற்கும் மதிப்பு தரல அப்படித்தான…” என்றவருக்கு வார்த்தை கோர்வையாக வராமல் தொண்டையடைக்க , பதில் கூறாமல் தலை குனிந்து நின்றவளின் அருகில் சென்ற சேகர் ,
“அப்போ செல்வாக்கு என்ன பதில் சொல்ல போற … நிச்சயம் ஆகி இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்னு முடிவு பண்ண பிறகு …வேற ஒருத்தன் கூட காதல் சொல்றது எவ்வளவு கேவலம் … அசிங்கமா இருக்குமா … மாப்பிள வீட்டுல என்ன பதில் சொல்ல போற … சொல்லு பிரியா …” என்று ஆத்திரத்துடன் பேசியவருக்கு பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றவளின் கன்னத்தை பிடித்து முகத்தை நிமிர்த்தியவர் ,
“ வாய திறக்காம இருந்தா என்ன அர்த்தம் … பதில் சொல்லு … செல்வாக்கிட்ட என்ன குறை கண்ட … நல்ல குணமான பையன் உன்ன கடைசி வரைக்கும் கண் கலங்காம காப்பாத்துற திறன் அவர்கிட்ட இருக்கு , அவரை போய் … ச்ச என் பொண்ணுன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு …” என்று அருவருப்புடன் பேசியவரை கண்டவளுக்கு கோபம் வர
“என்ன குறையா …” என்று பதிலுக்கு அழுத்தமாய் கேட்டவள் ,
“எனக்கு என்ன குறைப்பா … ஊமையா , செவிடா … இல்ல கைகால் விளங்காத பொண்ணா … அப்புறம் எப்படிப்பா உங்களுக்கு அந்த செல்வாவ மாப்பிள்ளையா பார்க்க தோணிச்சு…” என்றவளை “வாய மூடுடி …” என்று அதட்டினார் ஜெயா.
“தொட்டா ஒட்டிக்கிற கருப்பு …அவருக்கு வேணா வெள்ளையா இருக்கிற பொண்ண பார்த்து கல்யாணம் பண்றது வாழ்நாள் லட்சியமா இருக்கலாம் … அதுக்கு நான் பலியாக முடியுமா … நாளைக்கே கல்யாணம் முடிஞ்சு ரோட்டுல ஜோடியா நடந்து போனா பாக்கிறவன் என்னதான் பா கேவலமா பேசுவான் …”
“சரி விடுங்க அப்படியே சகிச்சுட்டு வாழ்ந்தாலும் , நாளைக்கு பொறக்க போற குழந்தை அவர போல கருங்கருங் கருப்பா பொறந்தா … அந்த குழந்தையோட மனசு என்ன பாடுபடும் நினைசீங்களா … உங்களுக்கு பொண்ண பொறந்த பாவத்துக்கு நான் வேணா கஷ்டப்படலாம் … என் குழந்தை எதுக்கு கஷ்டப்படணும் … உங்களை போல கையாலாகாதா அம்மா நானில்ல …” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் காயத்ரி.
பிரியா பேசிய பேச்சை கேட்டு கௌரியே திகைத்து போய் நின்றிருக்க , மற்றவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா. அதுவும் மாப்பிள்ளை வீட்டினரின் முன் தன்னை மகள் அசிங்கபடுத்தவும் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்ற தந்தையை கண்டுதான் கோபம் கொண்டு பிரியாவின் கன்னத்தில் காயத்ரி அறைந்தது .
கௌரியோ ‘ஆப்ப வாலண்டையரா நாமளே சொருகிகிட்டோமோ …’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க , அங்கே கூடியிருந்தவர்களை விலக்கி கொண்டு முன்னே வந்தான் செல்வா.
தூங்காமல் முழித்திருந்தவனின் பார்வையில் பதட்டத்துடன் சேகர் செல்வது பட , ஏதோ பிரச்சனை என்று நினைத்தவன் தன் தந்தையை அழைத்துக் கொண்டு அங்கே வர நாராசமாய் கௌரியின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழ , கொதித்து போன வேலு திமிறிக் கொண்டு அவர்களை நெருங்க நினைக்க அவரை தடுத்திருந்தான் செல்வா.
ஆனால் பிரியாவின் பேச்சு தன்மானத்தை சீண்ட , பொறுக்க முடியாமல் அவள் முன் சென்று நின்றவன், இறுகிய முகத்துடன் இரண்டு கைகளையும் கூப்பி,
“உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் அந்த கஷ்டமே வேணாம்ங்க … ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கணும்னு நினைக்கிறது முட்டாள் தனம் … உஙகள கஷ்டப்படுத்தியத்துக்கு மன்னிச்சுடுங்க …” என்று மன்னிப்பு வேண்டியவனின் இருகைகளையும் அவசரமாக பற்றிக் கொண்டார் சேகர்.
“தம்பி என்ன மன்னிச்சுடுங்க … உங்களுக்கு பெரிய தலைகுனிவ கொடுத்துட்டேன் … என் பொண்ணு உங்களுக்கு வேணாம் … உங்க மனசுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா அமையும் தம்பி…” என்று கையை பிடித்து கொண்டு மன்னிப்பை வேண்ட , அவர் கையை விலகிவிட்டபடி
“உங்க மேல எனக்கு வருத்தம் இல்லைங்க …” என்றவன் அடுத்த நொடி அங்கே நிற்க பிடிக்காதவனாக தன் தந்தையை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
அவர்கள் சென்றபின் நேராக தண்டபாணி முன்பும் ரகு முன்பும் நின்ற சேகர் , அவர்களை பார்த்தும் கைகூப்பியவர் ,
“இங்க நடந்த சம்பவத்துக்கு உங்க எல்லார் கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் … ஒரு பான சோற்றுக்கு ஒரு சோறு பதம் சொல்லுவாங்க … அப்படி நினைச்சு என் பொண்ணு காயத்ரிய தப்பா நினைச்சிடாதிங்க … என் பொண்ணு கண்ட கழிசடை போல இல்ல பொறுப்பான பொண்ணு … நீங்க இங்க நடந்த பிரச்சனையை மனசுல வச்சு என் பொண்ணு கல்யாணத்த தயவு செஞ்சு நிறுத்திடாதீங்க …” என்று தொண்டையடைக்க பேசியவரின் கையை இறுக பற்றிய தண்டபாணி ,
“ச்ச ச்ச என்ன இப்படி பேசுறீங்க … அப்படி பார்த்தா உங்க பக்கம் மட்டும் தப்பு இல்ல எங்க பக்கமும் இருக்கு … மொதல்ல ரகு கல்யாணம் நடக்கட்டும் … மத்தத அப்புறமா பேசலாம் …” என்று ஆறுதல் கூற ,
“மாமா கவலபடாதிங்க இந்த ஜென்மத்துல காயத்ரிதான் எனக்கு … யாரோ பண்ண தப்புக்கு ஏன் காயத்ரிய வேணாம் சொல்லுவேன் நினைக்கிறீங்க…” என்று ரகுவும் தன்மையாக பேச, கசந்த முறுவலை சிந்திய சேகர் ,
“என் பொண்ணு கயாத்ரி கல்யாணத்த மட்டும் பேசதான் எனக்கு உரிமை இருக்கு … மத்தவங்கள பத்தி என்கிட்ட பேச ஒன்னும்மில்ல விருப்பமும் இல்ல …அப்புறம் சம்பந்தி உங்ககிட்ட நாலு பொண்ணுனு சொல்லிருப்பேன் … மன்னிச்சுடுங்க அதுல என் கடைசி பொண்ணு மூனு மாசத்துக்கு முன்னாடியே இறந்து போய்டுச்சு …” என்று துக்கத்துடன் பேசியவரை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் பார்த்திருக்க
“என்ன பேசுறீங்க … தப்பு பண்ணாலும் அவங்க நம்ம புள்ளைங்க இல்லையா … சட்டுனு வார்த்தையை விடாதிங்க … நாமதான் கூட இருந்து அவங்கள நல்வழி படுத்தனும்…” என்று தண்டபாணி கூறிக் கொண்டிருக்கும் போதே, கோபத்துடன் யாரையும் மதிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் பிரியா.
தப்பு செய்துவிட்டு தங்களை மதிக்காமல் வெளியேறியவளின் செய்கையை கண்டு ,
‘சுத்தம் கொஞ்சம் கூட மரியாதை தெரியாது போல … இதையா புடிச்சுருக்குனு சொல்றான் …” என்ற தண்டபாணி தன் மகனை சந்தேகத்தோடு பார்க்க, ரகுவோ ‘இது உனக்கு தேவையா …’ என்ற ரீதியில் தம்பியை பார்த்திருக்க ,ஆப்பசைத்த குரங்கின் நிலையில் இருந்தான் கௌரி.
தன் தங்கையின் செய்கையில் மிகவும் அடிபட்ட காயத்ரி மெல்ல கௌரியை நெருங்கி ,
“உண்மையிலயே நீங்க பிரியாவ லவ் பண்றீங்களா … இல்ல சென்னை வந்திருந்தபோ உங்கள ஏதோ ஒரு வகைல அசிங்கப்படுத்தி அதுக்கு பழி வாங்கிறீங்களா … ஏன்னா பிரியாவ பத்தி எனக்கு நல்லா தெரியும் … என்ன உங்க அம்மா ஸ்தானத்துல வச்சு பதில் சொல்லுங்க ப்ளீஸ் …” என்று கண்களில் கண்ணீர் திரண்டிருக்க கெஞ்சியவளின் புத்திசாலித்தனத்தை உள்ளுக்குள் மெச்சியப்படி
“ஐயோ அண்ணி இதுல போய் விளையாடுவனா …அதுவும் உங்க தங்கச்சி போல ஒரு கேரக்டர யாராவது விளையாட்டுக்கு கூட ஏமாத்த முடியுமா … நான் பொய் சொல்லல அண்ணி” என்றவன் தன் மொபைலில் பிரியாவும் இவனும் சேர்ந்திருந்த சில படங்களை காட்டி ,
“பாருங்க … இத பார்த்த பின்னையும் பொய் சொல்றேன் நம்புறீங்களா …” என்றவன் அங்கிருந்தவர்களிடமும்
படத்தை காட்டி ,
“ஒரு விஷயம் சொல்லணும் … அத கேட்டா நீங்கலாம் எப்படி எடுத்துப்பீங்கனு தெரில …” என்று தயங்கியவன்,
“ ஆக்சுவலா நானும் ப்ரிக்குட்டியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண ரெஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டோம் … சில இஸ்ஸுஸ் கடைசி நிமிசத்துல கேன்சல் பண்ண வேண்டியதா போச்சு …” என்றதும் வாழ்க்கையே வெறுத்தவராக அங்கிருந்து நொந்து போய் வெளியேறினார் சேகர்.
மீண்டும் தன் புலம்பலை ஜெயா ஆரம்பிக்க , தண்டபாணிக்கு எதுவோ புரிவது போல இருந்தாலும் தன் மகன் பேச்சில் நம்பிக்கை இல்லாதவராக குழம்பி போய் நின்றிருக்க , அவரை நெருங்கிய காயத்ரி கையெடுத்து கும்பிட்டப்படி,
“மாமா … என்ன தப்பா எடுத்துக்காதீங்க … எங்க கல்யாணத்தோட சேர்த்து இவங்க கல்யாணத்தையும் நடத்திடுங்க ப்ளீஸ் … அவ மாறி போனதுக்கு நானும் ஒரு காரணமோனு மனசு துடிக்குது … ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்சியவளைபாவமாக ஆறுதல் படுத்தியபடி ,
“அது பண்ணலாமா … ஆனா திடீர்னு நடந்தா சொந்தகாரங்க தப்பா பேசுவாங்க … முதல்ல உங்க கல்யாணத்த முடிச்சுடுவோம் … அப்புறமா ஒரு நல்ல நாள் பார்த்து இவங்க கல்யாணத்த நடத்திக்கலாம் …” என்றவரை கண்ணீருடன் பார்த்தவள் ,
“அப்போ எங்க கல்யாணத்தையும் தள்ளிவைங்க மாமா … அவ கல்யாணம் நடக்காம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் …” என்று திடமாய் பேசியவளை கண்டு ரகு அதிர்ந்து போய் பார்க்க , அதற்குள் பதறி ஓடிவந்த ஜெயா காயுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தபடி ,
“ஏண்டி ஏன் … அக்காவும் தங்கச்சியும் எங்கள உயிரோட குழிதோண்டி புதைக்க முடிவு பண்ணிடீங்களா …” என்று கதறியவரிடமிருந்து காயத்ரியை பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொண்ட ரகு,
“என்ன பழக்கம் அத்த இது … ஆவூன்னா கையை நீட்டிட்டு போறீங்க … காயு சொன்னதுல என்ன தப்பிருக்கு … கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கதானே இதுக்கு எல்லாம் காரணம் இவதானு குத்தம் சொன்னீங்க … அதுக்காகத்தான் எங்க அப்பாகிட்ட கெஞ்சிகிட்டு இருக்கா …” என்று கடிந்துக் கொண்டவனை கண்ணீருடன் கைகூப்பிய காயு ,
“என்ன மன்னிச்சுடுங்க உங்ககிட்ட கேட்காம நானே முடிவு எடுத்துட்டேன் … என்ன தப்பா எடுத்துக்காதீங்க …” என்று கண்ணீர் விட்டு அழுதவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல நினைத்த மனதை அங்கிருப்பவர்களை நினைத்து அடக்கிக் கொண்டவன் ,
“என்ன நீ எதுக்கு எடுத்தாலும் கும்பிடு போடுற … நீ எது பண்ணாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்னு இத்தனை நாளுல தெரிஞ்சுகிட்டேன் காயு … அப்புறம் நமக்குள்ள என்ன மன்னிப்பெல்லாம் கேட்கிட்டு …” என்று புன்சிரிப்புடன் அவளை தேத்தியவன் , பின் தன் தந்தையிடம்
“ப்பா … நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது … அம்மா என்ன சொல்வாங்கன்னுதானே … அத அவங்க செல்ல புள்ளகிட்ட விட்டுடுவோம் …” என்றவன் கௌரியிடம் திரும்பி ,
“நாளைக்கு குறித்த முகூர்த்தத்துல எங்க கல்யாணம் நடக்கணும்னா , அது உன்கைல தான் இருக்கு …” என்றவன் ,
“காயு எது நடந்தாலும் நான் உன்கூட இருப்பேன் …” காயுவிடம் உறுதியளித்தபின் அங்கிருந்து செல்ல, வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்டுக்கிட்டோமோ என்ற ரீதியில் நின்றிருந்த கௌரியை , அவன் நண்பர்கள் பார்த்த பார்வையும் அதையே சொல்லிற்று.
அதன்பின் திருமண மண்டபமே அல்லல் படுமளவிற்கு ஆடி தீர்த்துவிட்டார் வளர்மதி. அவரை ஓரளவிற்கு சமாளிக்க முடிந்த கௌரியால் பிரியாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியாமல் திணற , கடைசியில் காயத்ரியின் கண்ணீர் ஜெயிக்க , சுற்றத்தாரின் முணுமுப்புகளுடன் , வளரின் கோப பார்வையில் பொசுங்கியும் , சேகர் ஜெயாவின் மனதை சாகடித்து பிரியாவின் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொண்டான் கௌரி.
Last edited: