கௌரிசங்கர் - 7
அன்று சனிக்கிழமை சும்மா சுற்றி பார்க்கலாம் என்று புகழ் பெற்ற மாலிற்கு வந்திருந்தாள் பிரியா. இவள் மட்டும் உள்ளே செல்ல அவளிடம் மனக்கசப்பு உண்டானதால் ரோஹி வெளியே நின்றுக் கொண்டாள். கண்கள் மின்ன ஒவ்வொரு கடையாய் பார்த்துக் கொண்டு வந்தவளின் காதருகில் மிக நெருக்கமாக ,
“ஹாய்...” என்ற குரல் கேட்கவும், திரும்பாமலேயே யார் என்று அறிந்தவளின் உள்ளம் பனி சாரல் அடித்ததை போல ஜில் ஜில் என்று இருக்க, முகம் புன்னகையில் விரிய, ஆர்வத்துடன் திரும்பியவளின் முன் மயக்கும் சிரிப்புடன் நின்றிருந்தான் சங்கர். பதிலுக்கு,
“ஹாய்...” என்று முயன்று சாதாரணமாய் கூறியவள் பின்
“ஷாப்பிங்??? ...” என்று கேள்வியாய் கேட்டவளுக்கு அவனிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே என்ற நினைப்பே பயத்தை கிளப்பியது. அதே நிலைதான் சங்கருக்கும்,
“யா யா ...” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறியவன், தங்கள் எதிரே இருந்த உயர்தரமான ஆடைகள் அடங்கிய கடையை கண்டவன் இங்கேதான் செல்ல போகிறாள் என்று முடிவு பண்ணியவனாக, அந்த கடையை நோக்கி கையை நீட்டி,
“திஸ் ...” என்று முடிப்பதற்குள், அவன் கேட்கவருவதை புரிந்துக் கொண்டவள் பதில் சொல்ல தெரியாமல் சிறு சிரிப்புடன் அவசரமாக அந்த கடைக்குள் நுழைந்தாள். அவளை தொடர்ந்து சங்கரும் நுழைய, ‘பணக்காரனை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டா மட்டும் போதாது டி அவன் கூட கொஞ்சி பேச இங்கிலீஷும் தெரிஞ்சிருக்கனும் ... அய்யோ அய்யோ இப்படி பயந்து பயந்து ஓடுவேன் முன்னமே தெரிஞ்சுருந்தா அக்காகிட்ட சண்ட போட்டாவது ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்சுக்கு சேர்ந்துருப்பேனே’ என மனதில் நொந்த படி அந்த நவநாகரிக ஆடைகள் அடங்கிய கடையை வலம் வந்தாள் பிரியா.
சங்கரோ, ‘அப்பா இங்க இருக்கிற ட்ரெஸ்ஸே செம்ம ரிச்சா இருக்கு ... நம்ம ஆளுக்கு செம்ம டேஸ்ட் போல...’ என்று பெருமையாய் நினைத்தவன் அவளை போலவே வியப்புடன் அங்கிருந்த உடைகளை பார்த்தவாறே அவளை பின் தொடர்ந்தான்.
அந்த முழு கடையும் ஒரு சுற்று சுற்றிய பிரியாவிற்கு அந்த உடைகளின் பிரமிப்பு அவளை மிரள செய்ய அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள். வந்ததிலிருந்து இவர்களின் நடவடிக்கைகளை பார்த்திருந்த பெண் விற்பனையாளர் ஒருவர் பிரியாவை புன்முறுவலுடன் நெருங்கி,
“உங்களுக்கு நான் உதவி செய்யவா ... எந்த டைப் உடை வேண்டும்...” என்று ஆங்கிலத்தில் கேட்க, அந்த ஏ.சி அறையிலும் வேர்த்துவிட்டது பிரியாவிற்கு. எதற்கும் பதில் சொல்லாமல் சிறு புன்னகையுடன் நின்றிருந்தவளிடம் மீண்டும் மீண்டும் அந்த பெண் ஆங்கிலத்தில் உரையாட, எங்கே அடுத்து தன்னிடம் பேச தொடங்கிடுவாளோ என்ற பயத்தில் பொங்கி எழுந்தான் சங்கர்.
வேகமா தன் கையை அந்த பெண்ணை நோக்கி நீட்டியவன்,
“ஸ்டாப்...” என்று அதட்ட, பிரியாவிற்கு உண்மை தெரிந்து விட்டதோ என்ற பயத்தில் எச்சில் முழங்கிய படி பயத்துடன் அவனை பார்க்க, அவனோ,
“உங்களுக்கு தமிழ் தெரியுமா...” என்று அந்த பெண்ணிடம் கேட்க, அப்பெண்ணும் தெரியும் என்று தலையாட்டவும்,
“தென் வொய் இங்கிலீஷிலே பேசுறீங்க ... நம்ம தமிழ் எவ்வளவு அழகான பொழி ... அதுல பேசுறத விட்டுட்டு , என்னமோ வெள்ளைக்காரன் வீட்டுல பொறந்த மாதிரி ... எதுக்குங்க இந்த வெட்டி பந்தா...” என்று குற்றம்சாட்டியவனை கண்டு , ‘ம்க்கும் ... நீ என் கிட்ட காட்டுற பந்தாவோட இது கம்மிதான் ...’ என்று மனதில் நொடித்த பிரியா இதான் வாய்ப்பு என்று,
“நான் லண்டன்ல படிக்கும் போது... தேவைன்னா மட்டும்தான் இங்கிலிஷ்ல பேசுவேன் மத்தபடி எப்பவும் தமிழ் தான் ... ஐ லவ் தமிழ்... அதான் இவங்க பேச பேச பதில் சொல்லாம அமைதியா இருந்தேன்...” என்று பிளேட்டை திருப்பி போட, இந்தமுறை நொடிப்பது சங்கரின் முறையானது.
அந்த விற்பனை பெண்ணோ இருவரையும் சந்தேகமாக பார்க்க, சுதாரித்த சங்கர், பிரியாவின் கை பற்றி,
“ப்ரி... நம்ம தாய் மொழிக்கு மதிப்பில்லாத இடத்துல நமக்கு என்ன வேலை ... நீ வா நாம வேற கடை பார்ப்போம்...” என்றவன், திரும்பி அந்த பெண்ணை பார்த்து,
“ஹலோ ...கடைக்கு வரவங்களை இங்கிலீஷுல பேசி ஓட வச்சுடாதீங்க ...” என்று உண்மையான மனக்குமுறலை கொட்ட, பதிலுக்கு அந்த பெண் சங்கரை முறைக்கவும், சீறி எழுந்த பிரியா,
“ஹலோ அட்வைஸ் சொன்னா ... முறைக்கிற ...” என்று அவளுடன் எகிறிக் கொண்டு போக,
“விடு ப்ரி ... பொழைச்சு போகட்டும் ... சில்லி கேர்ள்...” என்று நக்கலடித்து சிரித்தவன் பிரியாவின் கரம் பற்றி வெளியே அழைத்து வந்தான்.
அப்பொழுது தான் தன் கரம் அவன் கரத்தோடு கோர்த்திருப்பதை கண்டு , உலகையே வென்ற களிப்பில் இருந்தாள் பிரியா. தன்னை பிடித்ததால் தானே தன் கையை உரிமையாய் பற்றியுள்ளான் என்று எண்ணியவளுக்கு கோபத்திற்கு பதில் சந்தோசமே வந்தது. இதுவே கௌரிக்கு பதில் வேறு ஒருவன் இருந்திருந்தால் நிச்சயம் அவன் கன்னம் பழுத்திருக்கும் ... இங்கே பணம் முதன்மையாய் தெரிய நெறி தவறி நடக்க தொடங்கினாள் பிரியா.
சங்கருக்கும் அவள் கையை உருவி கொள்ளாதது தைரியத்தை கொடுத்தாலும், தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்காக அப்பொழுதுதான் தங்கள் கோர்த்திருந்த கைகளை பார்ப்பது போல பார்த்தவன், அவசரமாக கையை உருவிக் கொண்டு,
“சாரி ... டென்ஷன்ல கவனிக்கல...” என்று நல்ல பிள்ளையாய் கூற, அவன் கையை உருவிக் கொண்டதில் உள்ளுக்குள் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டவள் அந்த கடுப்பை வெளியில் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி,
“இட்ஸ் ஓகே...” என்று சிரிக்க, அவள் சிரித்த தோரணையை கண்டு , ‘நாம கையை விட்டது பிடிக்கலையா ... வெளிநாட்டுல படிச்சவ வேற..’ என்ற குழப்பமாக அவளை பார்க்க, அப்பொழுதுதான் தன் தவறு புரிந்தவள், அவன் சிந்தனையை மாற்றும் பொருட்டு ,
“பசிக்குது லைட்டா எதாவது சாப்பிட்டு போலாமா ...” என்றவளை பார்த்து இம்முறை பற்கள் அனைத்தையும் காட்டி சிரிப்பது சங்கருடையது ஆனது.’ஒண்ணா சாப்பிட கூப்பிடுறனா... நம்மளை பிடிச்சுருக்குனு அர்த்தம் தானே... கௌரி உனக்கு கிடைச்ச சான்சை மிஸ் பண்ணிடாத... நீ போடுற பிட்டுல மயங்கி அவ ஐ லவ் யு சொல்லணும்...’ என்று தனக்குள் தீர்மானித்தவன், முன்பு போல கவனிக்காமல் தங்கள் முன்னிருந்த இத்தாலியன் சைனீஸ் ஹோட்டலுக்குள் பிரியாவை வழி நடத்தி கூட்டி சென்று இருக்கையில் அமர்ந்த பின்தான் ஹோட்டலின் பெயரை பார்த்ததும் அதிர்ந்து போனான்.
‘அய்யோ ... நம்ம ஊரு சாப்பாடே முக்காவாசி தெரியாது இதுல ... இத்தாலியன் சைனீஸ் சாப்பாடா கிழிஞ்சுது ... நமக்கு ஏதாவது நூடுல்ஸா ஆர்டர் பண்ணிட வேண்டியதுதான்... அவளுக்கு அவளே சொல்லிக்கிட்டும் ...’ என்று நினைத்தவன் ஆர்டர் எடுக்க வந்தவரிடம், கெத்தாய்
“நூடுல்ஸ் ஒன் பிளேட்...” என்று கெத்தாய் கூறியவன் பின் மெனு கார்டை பிரியாவிடம் நகர்த்திய படி
“ப்ரி... உனக்கு என்ன வேணுமோ ...நீயே பார்த்து சொல்லு...” என்று கைவிட்டவனை கண்டு அதிர்ந்து போனவள், மெனு கார்டை குனிந்து பார்க்க, அதிலிருந்த உணவு வகைகளை கண்டு தலை சுற்றிப்போனது.
ஒன்றுமே தெரிந்த உணவாக இல்லாததால் எதற்கு வம்பு என்று சங்கரை போல, நூடுல்ஸ் என்றவளை கௌரி ஆராய்ச்சியாய் பார்க்க, சர்வரோ இரெண்டு பேரையும் என்ன என்ற பார்வை பார்த்து ,
“என்ன நூடுல்ஸ்...” என்று கேட்கவும், அய்யோ என்றானது இருவருக்கும். கடுப்பான சங்கர் மெனு கார்டை பிரித்து , அதில் தன் பார்வையை ஓட விட்டவனுக்கு சிக்கன் நூடுல்ஸ் மட்டுமே தெரிந்த உணவாக இருக்க , அதையே தனக்கு சொல்ல , பிரியாவும் அவனை பின் பற்றி அதையே சொன்னாள்.
மீண்டும் யோசனையாய் பிரியாவை பார்த்தவனின் காதுகளில், “சார் ... எனி ஸ்டார்ட்டர்...” என்று சர்வரின் குரல் கேட்கவும், ஸ்டார்ட்டரா அப்படினா என்ற பார்வையை அவரை நோக்கி வீசியவனை கண்டு , எதுவும் தெரியாதா கேஸ் என்று அவருக்கு புரிந்து போக , மெனு கார்டில் சுட்டிக் காட்டியவரை கண்டு மீண்டும் கடுப்பானவன் ,கண்முன் தெரிந்த சிக்கன் டிக்காவை ஆர்டர் பண்ணி, கேள்வியாய் பிரியாவை பார்க்க, படபடப்புடன் அமர்ந்திருந்தவள் தனக்கு வேண்டாம் என்று தலையசைக்க, சர்வரை அனுப்பியவன் மீண்டும் பிரியாவை ஆராய தொடங்கினான்.
எதுவோ சரியில்ல... சரியில்ல என்று மூளை மணியடிக்க நெற்றியை நீவிவிட்டவன்,
“லண்டன்ல எந்த காலேஜ்ல படிசீங்க...” என்று சந்தேகமாய் கேட்கவும், ஏற்கனவே அவன் ஆராய்ச்சி பார்வையை கண்டுக் கொண்டவளுக்கு அவன் கேள்வி திகிலை உள்ளுக்குள் கிளப்ப, ‘பிரியா அசராம பதில் சொல்லுடி ... சந்தேகம் வந்துட போகுது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் , நிமிர்வாய்
“லண்டன் யூனிவர்சிட்டி...” என்று அடித்துவிட , அதை பற்றி விவரம் அறியாதவன் , “ஓஹ்... லண்டன் யூனிவர்சிட்டி ...” என்று தனக்குள் சொல்லிக் கொள்ளவும்,
“நீங்க...” என்று பதில் கேள்வி கேட்டவளை கண்டு திகைத்து போனவன் சடுதியில் சமாளித்து,
“அமெரிக்கன் யூனிவர்சிட்டி...” என்று வாயில் வந்ததை கூற , அவனை போலவே , “அமெரிக்கன் யூனிவர்சிட்டியா ...” என்று சந்தேகத்துடன் கேட்டவளை கண்டு பேந்த பேந்த முழித்தவன், “ஆமா...” என்று வேகமாக பதில் கூற அதற்கு எதுவோ கேட்க தொடங்கிய பிரியாவை சர்வரின் வருகை தடுத்தது.
உணவு வகைகளை டேபிளில் பரப்பிய சர்வர் சென்று விட , அவசரமாக பிரியாவின் புறம் நகர்த்தியவன்
“சாப்புடு ப்ரி...” என்று அன்பொழுக கூறவும் சிரித்த முகத்துடன் தலையசைத்தவள் , சிக்கன் டிக்கா பிளேட்டை பார்க்க குச்சியில் சொருகியிருந்த சிக்கன் துண்டுகளை கண்டு நாக்கில் எச்சில் ஊர ஆசையாய் ஒரு குச்சியை எடுத்து கடிக்க போனவளின் கண்களுக்கு முள் கரண்டியும் பட , ‘ஓஹ் ... அப்படியே கடிச்சு சாப்பிட கூடாதோ ... இந்த கரண்டில குத்திதான் சாப்பிடணுமோ’ என்று சந்தேகம் எழும்ப எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் திகைத்து போய் உட்கார்ந்திருந்தாள். சங்கரின் நிலைமையும் அதேதான் ... சிக்கனை பார்க்க பார்க்க எடுத்து சாப்பிட வேண்டும் என்று ஆசை தூண்ட அவஸ்தையில் உட்கார்ந்திருந்தவன் அதை தொடாமல் நூடுல்ஸ் பக்கம் சென்றான்.
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம் அந்த பழமொழிக்கு போல இருந்தது சங்கரின் நிலை. முள்கரண்டியால் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவனுக்கு நூடுல்ஸ்சை எப்படி திண்பது என்று தெரியாமல் விழித்தவன், பிரியாவை ஓரக் கண்ணால் பார்க்க அசால்டாய் முள்கரண்டியால் சாப்பிடுவதை கண்டவன், ‘நாமதான் தேவையில்லாம சந்தேக பட்டுட்டோம் ... பாரு எவ்வளவு அழகா சாப்பிடுறா...’ என்று நினைத்தவன் சாப்பிடாமல் கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தான்.
பிரியாவிற்கு இதேபோல உணவை பார்ப்பது இதுவே முதல் தடவை ... அவளுக்கும் அந்த கரண்டியால் எப்படி சாப்பிடுவது என்று தெரியாது ஆனால் சற்று முன்தான் சங்கர் அவளை சந்தேக கண்ணோடு பார்த்ததால், நூடுல்ஸில் கிடந்த சிக்கன் துண்டுகளை மட்டும் குத்தி குத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டபடி நிமிர்ந்து சங்கரை பார்க்க அவனோ உணவை கிளறிக் கொண்டிருப்பதை கண்டு,
“என்னாச்சு ... ஏன் சாப்பிடாம வச்சிருக்கீங்க ... பிடிக்கலையா ...” என்று கேட்டவளுக்கு , ...சாப்பிட தெரியவில்லை என்று சொல்லவா முடியும் என்று நொந்தவன் ,
“அது ஸ்டொமக் அப்செட் ...அதான் ...” வாயில் வந்த பொய்யை தயங்கி கூறவும், ‘ஸ்டொமக் அப்செட்டா...அப்படினா ...’ என்று யோசிக்க தொடங்கியவளை தவறாக புரிந்து கொண்டவன்,
“உண்மையா ... இப்போ கூட பாருங்க வயிறு கடமுடான்னு சத்தம் போடுது ...” அவசரமாக விளக்கம் கொடுக்கவே மெல்ல சிரித்தவள், அவன்புறம் சரிந்து,
“ஒன்னு சொல்லவா ... எனக்கு சப்ப மூக்குக்காரன் சாப்பாடு சுத்தமா பிடிக்காது ... உங்களுக்காகத்தான் சாப்பிட ஒத்துக்கிட்டேன்... கிளம்புவமா ரொம்ப நேரம் ஆச்சு...” என்றவளுக்கு அவசரமாக சம்மதம் சொன்னவன் பில் எடுத்து வர சொல்ல , வந்த பில்லிற்கு சங்கரின் எதிர்ப்பை மீறி பணம் கட்டினாள் பிரியா. இந்த செயல் அவள் மீதியிருந்த சந்தேகத்தை விரட்டி அடிக்க போதுமாய் இருக்க மனநிறைவோடு கிளம்பினான் சங்கர்.
ஹோட்டலை விட்டு வெளியே வந்தவர்கள் சிறிது தூரம் மௌனமாய் நடந்து வர,
“கௌரி ...ஒரு ஹெல்ப் எனக்கு இங்க அவ்வளவா ப்ரெண்ட்ஸ் இல்ல ... ஸ்கூல் படிச்சுதும் ஊட்டி கான்வெண்ட்ல ... காலேஜ் பாரின்ல ... இப்போ ஆபீஸ் வீடுன்னு ரொம்ப போர் அடிக்குது ... எனக்கு கொஞ்சம் சென்னையை சுத்தி காட்டுறீங்களா ...” என்று பாவமாய் கேட்கவும் இதற்காகவே காத்திருந்தார் போல ,
“சரி நாளைக்கு எங்க போலாம் நீயே சொல்லு...” என்றவனை மகிழ்ச்சியுடன் பார்த்தவள் ,
“பீச்...நிறைய வீடியோல பார்த்திருக்கேன் அங்க சுட சுட வடையும் பஜ்ஜியும் போடுறத ... எனக்கும் வாங்கி தறீங்களா...சின்ன வயசுல சாப்டது ” என்று கண்கள் மின்ன இதுவரை வடை பஜ்ஜி சாப்பிடாததை போல பில்ட்டப் கொடுத்தவளின் நடிப்பில் ஏமாந்தவன், சரி என்று தலையாட்டி அவள் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு தன் நம்பரையும் கொடுத்திருந்தான்.
அவள் கார் நிறுத்தியிருந்த இடம் வரைக்கும் வந்தவன் , அவள் காரில் ஏறி கிளம்பிய பின் நீண்ட மூச்சை இழுத்துவிட்டவன் தன் இடத்திற்கு செல்ல பேருந்து நிறுத்ததை நோக்கி சென்றான். பின்னே இன்று அவள் இந்த மாலுக்கு வருகிறாள் என்று பிரசன்னா சொன்னவுடன் அரக்கப்பரக்க ஓடி வந்தவனாயிற்றே.
வீட்டிற்குள் நுழைந்த பிரியாவை சண்முகபிரியா அழைக்க, ‘இன்னைக்கு மால்ல மீட் பண்ணத பத்தி கேட்க போறாங்களோ ...’ என்ற குழப்பத்துடன் அவள் அருகில் சென்றவளை பக்கத்து இருக்கையில் உட்கார சொன்ன ஷம்மு,
“பிரியா... ரொம்ப தேங்க்ஸ் பிரியா ... என் இடத்துல நீ இருந்ததால நிறைய தில்லுமுல்ல கண்டு பிடிக்க முடிஞ்சுது...” என்று அவள் கை பிடித்து கூறவும், ‘அய்யோ நடிச்சது போதும் சொல்லி கிளம்ப சொல்றாங்களா ... ஒரு மாசம் சொன்னாங்களே ... அப்போ கௌரி...’ என்று உள்ளுக்குள் பதறியவளுக்கு கண்கள் இரண்டும் கலங்க தொடங்கின. அடிபட்ட குழந்தை போல சம்முவை ஏறிட்டு பார்க்க,
“இன்னும் ஒரு மாசம் முடிய டூ வீக்ஸ் தான் இருக்கு ... உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு ... பேசின பணத்தை முழுசா கொடுத்திடுறேன் இப்ப கூட நீ கிளம்பி போலாம்...” என்ற குண்டை தலையில் போட , செய்வதறியாது திகைத்து போனவள் பின் நிதானித்து சமாளித்து,
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ... இன்னும் டூ வீக்ஸ் தானே முடிச்சுட்டு போறேன் ... இல்லனா என் மனசு உறுத்திக்கிட்டே இருக்கும்...” என்று அவசரமாக பதில் கூறியவளை கண்டு புன்னகை புரிந்த சம்மு, சரியென்பதாய் தலையாட்ட, தன் அறைக்குள் வந்த பிரியாவால் அதற்குமேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
பிரியாவிற்கு கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்காத உணர்வு. அவள் நூறு சதவீதம் நம்பினாள் தன்னிடம் கௌரி மயங்கி இருப்பதாக. இன்னும் இரண்டு வாரத்தில் எப்படி ... என்று குழம்பி போனவளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டிருந்த கைப்பேசியை கண்டு கடுப்புடன் எடுத்தவள் அதில் மிளிர்ந்த எண்ணை கண்டு கோபம் கொண்டவளாக, அதை உயிர்ப்பித்து காதில் வைக்க,
“பிரியா ...” என்று ஆசையுடன் தொடங்கிய செல்வாவை,
“எதுக்கு விடாம அடிச்சுகிட்டு இருக்கீங்க ... உங்களுக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன் ... சும்மா சும்மா கால் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்கன்னு ... நீங்க விடாம பேசுறது பார்த்து எனக்கு எரிச்சலா இருக்கு ... நீங்க சாம்பார் போல லவ் டயலாக் சொல்லிக்கிட்டு திரியறத பார்க்க பார்க்க ஒமட்டிக்கிட்டு வருது ... ச்சை ஒரு தடவ சொன்ன புரிஞ்சுகிற தன்மை கிடையாது ...” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் போனை கட் செய்ய , திகைத்து போய் நின்றிருந்த செல்வாவிற்கு முதல் தடவையாக தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தோன்றியது.
கட் செய்த போனை கட்டிலில் வேகமாக தூக்கி போட்டவளின் கண்களில் இருந்து இயலாமையால் விடாமல் கண்ணீர் வழிய எப்படி கௌரியை அடைவது என்ற நினைப்பே அவள் சிந்தனை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.
அங்கே தன் அறையில் மல்லாக்க படுத்திருந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த சங்கரை யோசனையாக பார்த்த பிரசன்னா ,
“என்னடா ஈவினிங் அவள பார்க்கிறதுக்கு துள்ளி குதிச்சுக்கிட்டு ஓடின ... இப்போ விட்டத்தை வெறிச்சுக்கிட்டு படுத்திருக்க ... என்ன செருப்பை கழட்டி அடிச்சுட்டாளா ...” என்று நக்கல் அடித்தவனை முறைத்த சங்கர் ,
“அப்படி அடிச்சுருந்தா கூட சந்தோச பட்டிருப்பேன் ... அந்த பொண்ணு நடவடிக்கையே சரியில்லடா ... எப்போ அவ கையை நான் பிடிப்பேன் காத்துக்கிட்டு இருக்கிற போலாவே பீல் ஆகுது ... எல்லா விஷயத்தையும் என்ன பார்த்தே செய்யுதுடா... ஒரு வேள சந்தபாண்டியனோட சின்ன வீட்டோட பொண்ணா இருக்குமோ... நான் கற்பனை பண்ண அளவுக்கு இல்ல ... பார்க்கிறதுக்கு அப்படியே என்ன ஜெராக்ஸ் பண்ணது போலவே இருக்குடா...” என்று மனதில் குடைந்த சந்தேகத்தை அவனிடம் கொட்ட , புருவம் சுருக்கி அவனை பார்த்த பிரசன்னா ,
“சரிதான் ... அப்போ நீ வேளைக்கு ஆகமாட்ட... இத்தோடு நிறுத்திப்போம் ... நான் கூட உனக்காக செலவு பண்ற காசை எப்படியாவது உன்கிட்ட இருந்து கறந்துடலாம் நினைச்சேன் ... ஆனா நீ ...” என்று நிறுத்தியவன் பின் தலையை இருபுறமும் அசைத்து,
“வேஸ்ட் ஆப் மணி வேஸ்ட் ஆப் டைம் ... பணக்காரி அப்பாவி கிடைச்சா அவளை எப்படி ஆட்டய போட்டு கரெக்ட் பண்ணலாம் நினைக்கிறது விட்டுட்டு ...ம்ம்ம் ... சரி சரி விடு எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு வாரத்துக்குத்தான் இந்த ஆட்டமெல்லாம் ... பிசினஸ் அவார்ட் பங்ஷன் வருது , எங்க குரூப்ஸ்க்கும் ஏதோ அவார்ட் தராங்க போல அத பிரியா தான் வாங்க போற ... அந்த நிகழ்ச்சிக்கு உண்மையான கௌரி கிருஷ்ணாவும் வருவார் ... எப்படியும் உண்மை தெரிஞ்சுதானே ஆகணும் ...” என்று கொளுத்தி போட்டவன் தூங்க செல்ல , அந்த செய்தியை கேட்டு உலகமே தலைகீழாக சுற்றிய உணர்வு சங்கருக்கு.
‘இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கா ... இரண்டு வாரத்துக்கு அப்புறம் நம்ம வேஷம் கலைஞ்சுடுமே ... அதுக்குள்ள எப்படி அவள கரெக்ட் பண்றது ...” என்று யோசனையில் முழுகியவனுக்கு பிரியாவை பற்றிய சந்தேகம் பின்னுக்கு தள்ளப்பட , என்ன செய்து அவளை தக்க வைத்துக் கொள்வது என்று யோசிக்க தொடங்கினான்.
மறுநொடி எதை பற்றியும் யோசிக்காமல் பிரியாவிற்கு நாளை நான்கு மணியளவில சந்திப்போம் என்று குறுஞ்செய்தி அனுப்பினான் சங்கர். அவன் மெசேஜை கண்டதும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனவள் “சரி ...” என்று அடுத்த நொடி பதில் அளித்திருந்தாள்.
அன்றைய இரவு இருவருக்கும் தூங்கா இரவா போனது. காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பிரியாவை அழைத்திருந்தான் சங்கர்.
“ப்ரி ... காலைல நீ ப்ரீயா ...” என்று கேட்டவனுக்கு பட்டென்று இல்லையென்று பதில் அளித்தவளின் மூளையில் அவன் தன்னை ப்ரி என்று செல்லமாய் அழைத்து ஞாபகம் வந்தது . குப்பென்று முகம் சிவந்து போக ஆனந்தத்தில் பேச முடியாமல் திகைத்து நின்றவளிடம் ,
“அப்போ ரெடி ஆகிட்டு சொல்றியா ... நாமா வெளிய சுத்த போலாம் ...” என்று கூற , தான் கேட்டது நிஜமா என்ற சந்தேகத்தில் தன் கையை கிள்ளிக் கொண்டவள் ,
“ம்ம்ம் சரி ... ஆனா கார் வேணாம் எனக்கு பஸ்லயும் ட்ரைன்லயும் சுத்தணும் ஆசை ...” என்றவளுக்கு சண்முகபிரியாவிடம் வெளியே செல்வதற்காக கார் கேட்க பயம்.
சங்கருக்கும் பணம் செலவாவதில் விருப்பம் இல்லாததால் பஸ்சில் செல்வதற்கு சம்மதம் தெரிவித்தான்.
காலை பத்து மணியளவில் அவன் குறிப்பிட்ட இடத்திற்கு காரில் வந்து இறங்கிய பிரியாவை கண்டு அங்கிருந்தவர்கள் கண் சிமிட்டாமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க , பார்க்க வேண்டியவனின் கண்களை பணம் மறைத்திருந்ததால் ஊன்றி கவனிக்க தவறினான். அதனால் அவளின் பேரழகு புத்தியில் பதியாமல் போக அலட்டிக் கொள்ளாமல் அவளை வரவேற்றான்.
பேருந்தில் தோள் உரச அருகருகில் நெருக்கி உட்கார்ந்திருந்தாலும் ...இருவருக்கும் ஆசைகொண்ட ஆணின் உடலோ பெண்ணின் உடலோ உரசினால் உண்டாகும் சிலிர்ப்பு ஏற்படவில்லை. ஆனால் மொத்த பேருந்தில் இருந்தவர்களின் கண்கள் மொத்தமும் இவர்கள் மேல்தான் . தங்கள் குடும்பத்தை பற்றி பேசுவதை தவிர்த்த இருவரும் பொதுவான விஷயங்களை மட்டுமே பேசினர்.
கடற்கரை மணலில் யார் முதலில் மற்றவர் கையை பற்றினர் என்று அறிந்துக் கொள்ளமுடியா வண்ணம் இருவர் கைகளும் கோர்த்து பின்னி பிணைந்திருந்தன. கடல் நீரில் ஆசையாய் கால் நனைத்தனர்... பின் அங்கே போட பட்டிருந்த கடையில் வடை பஜ்ஜி மீன் வறுவல் எறா வறுவல் இது அனைத்தையும் ஒரே தட்டில் வாங்கி சிரித்தபடி பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அடுத்தவரின் பார்வைக்கு இருவரும் உருகி உருகி காதலிக்கும் காதலர்களை போல தோன்றினாலும் இருவருக்கும் கொஞ்சம் கூட மனதில் காதல் இல்லை.
ஏழு மணியளவில் கடற்கரையிலிருந்து கிளம்பும் வேளை மழை பிடித்துக் கொள்ள , அதில் நனைந்தவர்கள் அருகில் இருந்த கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கினார்கள். ஏற்கனவே அங்கிருந்த சில காதலர்கள் தங்கள் இணையை அணைத்துக் கொண்டு தங்கள் லோகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க, அங்கே நிற்க பிடிக்காமல் பிரியாவை கட்டிடத்தின் உள்ளே அழைத்து சென்றான் கௌரி.
யாருமற்ற தனிமை இருட்டிய கட்டிடம் வெளியே பெரு மழை அது கிளப்பிய சிலு சிலு காத்து, பக்கத்தில் தான் விரும்பும் பெண் ... ஒரு சாதாரண ஆண் மகனின் ஆசையை தூண்ட போதுமான விஷயங்கள். ஆனால் கௌரிக்கு இதில் எந்த வித உணர்ச்சியும் எழாமல் போக , அவனை சந்தேக கண்ணோடு பார்க்க தொடங்கினாள் பிரியா. அவள் மனதில் ...இயற்கை அமைத்துக் கொடுத்த வாய்ப்பை கண்டுக் கொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்ப்பவனை கண்டு ,’ஏன்...’ என்ற கேள்வியே அவள் மனதை குடைந்தது.
சற்று நேரம் வெளியே வெறித்தவனுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற திரும்பி பார்த்தவன் கண்களுக்கு யோசனை முகத்துடன் பிரியா நிற்பதை கண்டதும் , சடுதியில் மூளை வேலை செய்ய தொடங்க ... சற்று முன் தான் வெளியில் கண்ட காட்சியும் பிரியாவின் முகபாவத்தையும் கூட்டி கழித்து பார்த்தவனுக்கு காரணம் புரிய தொடங்கியது.
‘இப்போ நாம ரியாக்ட் பண்ணாம விட்டா ... நம்ம மேல சந்தேகம் வந்துடும்...’ என்று மனதில் நினைத்தவன் மெல்ல அவளை நெருங்கி , அவள் நாடியை பற்றி தனக்கு ஏற்றார் போல தூக்கி பிடித்து , தன்னை சந்தேக கண்ணோடு பார்த்திருந்தவளின் பார்வையை தன் காந்த பார்வையால் கவ்வியபடி அவள் முகம் நோக்கி குனிந்தான்.