கௌரிசங்கர் - 3
இரவு சாப்பாட்டை முடித்தபின் தூங்க செல்வதற்கு முன் கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா. அவள் அருகே உட்கார்ந்த தனசேகர்,
“அம்மாடி ... கொஞ்சம் டிவி சத்தத்தை குறை முக்கியமான விஷயம் பேசணும் ...” என்றவரை புருவம் சுருக்கி பார்த்த பிரியா சத்தத்தை குறைக்கவும்,
“ஜெயா... இங்க வா ... பாப்பா நீயும் இங்க வா...” என்று தன் மனைவியையும் மூன்றாவது மகளையும் அழைக்க, எதற்காக அழைக்கிறார் என்ற கேள்வியோடு சமையலறையிலிருந்து கையை துடைத்தபடி கூடத்திற்கு வந்தனர் இருவரும்.
“ஜெயா... இன்னைக்கு துரை மாமா என்ன வந்து பார்த்தார் ... அவருக்கு தெரிஞ்ச குடும்பமாம் ... நல்ல பையனாம் ... நம்ம பாப்பா போல டீச்சரா இருக்காரு ... பண்ருட்டி ஸ்கூல்ல பத்தாவது பசங்களுக்கு கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்காராம்... அவரும் கவர்மெண்ட் வேலைக்கு எக்ஸாம் எழுதிருக்காரு போல ... கண்டிப்பா கிடைச்சுடும் துரை மாமா சொன்னாங்க ...நம்ம பாப்பாக்கு பார்க்கலாமா கேட்டார்... உன்கிட்ட கேட்டுட்டு பதில் சொல்றேன் சொல்லிருக்கேன்...என்ன சொல்ற ...” மாப்பிள்ளையின் புகைப்படத்தை தன் மனைவியிடம் நீட்டியபடி அவரின் பதிலுக்காக காத்திருந்தார் சேகர்.
ஜெயா வாங்குவதற்குள் சேகரிடம் இருந்து புகைப்படத்தை பிடுங்கிய பிரியா , ஆர்வத்துடன் அதை பார்த்தவளின் முகம் அஷ்டகோணலாக மாற,
“வியாக் ... இவன் தான் மாப்பிள்ளையா கருங்குரங்கு போல இருக்கான் ... எனக்கு புடிக்கலை ... அக்காக்கு வேற பாருங்க ... இவன் வேணாம் ...” என்றவள் அலட்சியமாக அந்த படத்தை தூக்கி எறிய, அதில் கோபம் கொண்டு கண்கள் சிவக்க
“பிரியாஆஆஆ ...” என்று கர்ஜித்தார் தனசேகர். அதற்குள் அவள் பின்னந்தலையில் தட்டிய ஜெயா,
“நல்ல விஷயம் பேசும்போது ... அபசகுனமா பேசாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் ...” என்றவர் கீழே கிடந்த புகைப்படத்தை எடுப்பதற்குள் அதை எடுத்த காயத்ரி, படத்தில் உள்ள நபரை நன்றாக பார்த்தபின்,
“உங்களுக்கு ஓகேனா ... எனக்கு சம்மதம்பா...” என்று தன் சம்மதத்தை தெரிவிக்க, பெருமையுடன் தன் மகளை பார்த்தார் சேகர்.
“அக்காஅஆ ... உனக்கு என்ன பைத்தியமா ... அந்த மாப்பிள்ளை போட்டோல கூட கலரா காட்ட முடியாத அளவுக்கு கருப்பா இருக்கார் ... இவரை கட்டிக்கிறேன் சொல்ற லூசா நீ...” என்றவளுக்கு கோபத்தில் கண்கள் கலங்க தொடங்கின.
“கொஞ்ச நேரம் நீ வாய மூடுறீயா ... எங்களுக்கு தெரியும் எது நல்லதுன்னு ... இனி வாய திறந்த ...” என்று விரல் நீட்டி தனசேகர் எச்சரிக்கை செய்யவும்,,
“வாய மூடிக்கிட்டு போனா இதோ இந்த கருங்குரங்கை எங்க அக்கா தலைல கட்டி வச்சுடுவீங்க ... நீங்களே மனசாட்சி தொட்டு சொல்லுங்க நம்ம அக்கா பக்கத்துல நிக்க கூட இந்தாளுக்கு தகுதி இருக்கா ... ஏன் இவன விட்டா ஊர் உலகத்தில வேற மாப்பிள்ளையே கிடைக்க மாட்டாங்களா...” என்று அடங்காமல் எகிறியவளை கண்டு ஆத்திரம் கொண்ட சேகர் , தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை தள்ளிக் கொண்டு எழவும் பதறிப்போன ஜெயா அவரை மறித்தபடி,
“இருங்க இருங்க கோபப்படாதீங்க ... அவகிட்ட நான் பேசிக்கிறேன்...” என்று தன் கணவனின் கோபம் அறிந்தவராக அவரை சாந்த படுத்த முயல,
“என்ன பேச போற ... யார் தலையிலாவது கட்டிவிட்டா உங்க கடமை முடிஞ்சு கை கழுவிட்டு போய்டலாம் நினைக்கிறியா ...” என்று சீரியவளை , “பாப்பா...” என்று காயத்ரி அடக்க முயல,
“நீ சும்மா இருக்கா ... மாப்பிளைத்தான் சுமார் மூஞ்சா இருக்கார்ன்னு பார்த்தா , பார்க்கிற வேலையும் அதைவிட மோசம் ... பிரைவேட் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கார் ... மிஞ்சி மிஞ்சி போனா மாச மாசம் பத்துல இருந்து பதினைந்து ஆயிரம் வாங்குவாரா ... இவருக்கு என் அக்கா கேட்குதா ... பெரிய அக்காங்களை தள்ளி விட்டதை போல இவளையும் யார் தலையிலயாவது கட்டி விடலாம் பார்க்கிறிங்களா ... முடியாது இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்...” என்று மீண்டும் பெண் சிங்கமாய் சிலிர்த்தவளை கண்டு காயத்ரியும் ஜெயாவும் திகைத்து போய் பார்க்க , புருவம் சுருக்கி அவளையே ஆழுந்து பார்த்துக் கொண்டிருந்தார் தனசேகர்.
“என்னடி பேசுற ... மூத்தது இரெண்டுத்துக்கும் கவர்மெண்ட் மாப்பிள்ளையா பார்த்துதான் கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கோம் ... ஏனோ தானோன்னு தள்ளி விட்டத போல பேசிகிட்டு இருக்க ... காயத்ரிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கும் கவர்மெண்ட் வேலை கிடைச்சுடும் தானே அப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க ... எதுக்கு இப்போ தலை அறுபட்ட கோழி போல துள்ளிக்கிட்டு இருக்க ...” பிரியா பேசுவதை பொறுக்க முடியாமல் ஜெயா சத்தம் போட, நக்கலாக சிரித்த பிரியா ,
“அடேயப்பா பெரியஆஆஆ கவர்மெண்ட் மாப்பிள்ளை ... எது பேங்க் மேனேஜருக்கா கட்டி கொடுத்திருக்க ... சாதாரண போஸ்ட் மேனுக்கும் கார்பொரேஷன்ல பியூனா இருக்கிறவங்களுக்கு தானே கட்டி கொடுத்த... இதுல பெருமை வேறயா உனக்கு...” என்று நக்கல் அடிக்கவும், முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிப்பதற்குள் தாங்கள் பட்ட கஷ்டத்தை சிறிதும் யோசிக்காமல் கேலி பேசியதை கண்டு பொறுக்க முடியாமல் கண் கலங்கிவிட்டார் ஜெயா. தன் மனைவி கண் கலங்குவதை கண்டு கோபம் கொண்ட சேகர்
“எங்க வசதிக்கு தகுந்த படிதான் மாப்பிள்ளை பார்க்க முடியும் ... அதுக்காக எப்படியோ போய் தொலைங்கன்னு எவன் தலையிலையும் நாங்க கட்டல ... இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல ... இவர் தான் மாப்பிள்ளை நாளைக்கு ஜாதகம் பார்க்க போறோம் ... ஜாதகம் செட் ஆச்சுன்னா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சுடலாம்...” இவ்வளவுதான் பேச்சு முடிந்து விட்டது என்ற ரீதியில் படுக்க செல்வதற்காக அறைக்குள் நுழைய போனவரை,
“ஓஹ்... உங்க வசதி படிதான் மாப்பிள்ளை பார்ப்பீங்களா ... அப்போ அத புள்ள பெக்குறதிலையும் காட்டிருக்கணும் ... அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டியாவான் சொல்லுவாங்க ... நீங்க என்ன தையிரியத்துல பண்ணி குட்டி போடுறத போல வத வதனு பொட்ட புள்ளையா பெத்து போட்டிங்க ... உங்களால தான் முடியாதுனு தெரியும்ல அப்புறம் எதுக்கு என்ன பெத்துக்கிட்டீங்க...” என்று ஆவேசம் வந்ததை போல கத்தியவளின் குரல் படுக்க சென்றவரைலதடுக்க, திக்பிரமை பிடித்ததை போல நின்றுவிட்டார் தனசேகர். தன் கணவரின் தோற்றத்தை கண்டு துடித்து போன ஜெயா பிரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, கன்னத்தை பொத்தியபடி அடிபட்டப்பார்வையை தன் தாயை நோக்கி வீசிய பிரியா,
“ஏன்மா அடிச்ச ... உண்மை சுடுதா ... சொல்லுமா உங்க ஆசைக்கு எங்களை பெத்து போட்டுட்டு எங்க ஆசையை கொன்னுட்டிங்களே ... சின்ன வயசுல இருந்து ஆசை பட்டதை வாங்கி தின்ன முடிஞ்சுதா ... இது வரைக்கும் எனக்கு எத்தனை புது டிரஸ் வாங்கி கொடுத்துருக்க ... எல்லாமே அக்காங்க போட்ட பழைய டிரஸ் தானே ... ஏன் அவங்க யூஸ் பண்ண பாக் வளையல் கம்மல் ஸ்கூல் ஷூ ... ஏன் புக் கூட அவங்க யூஸ் பண்ணதை தானே நான் யூஸ் பண்ணிருக்கேன் ... இதோ இப்போ போட்டிருக்க நைட்டி கூட சின்ன அக்காவோடது ... எனக்குன்னு என்னமா வாங்கி கொடுத்திருக்க ... எனக்கும் புதுசா போடணும் ஆசையா இருக்காதா ... ஆனா ஒரு தடையாவது உன்கிட்ட அத பத்தி பேசியிருக்கேனா ...” என்று கன்னத்தை நனைத்த கண்ணீரை துடைத்து கொண்டு பேசியவள், பின்
“அக்காக்கு விருப்பம்னா அவரையே கட்டி வைங்க ... ஆனா எனக்கு பண்ணுறப்போ என் விருப்ப படிதான் கல்யாண பண்ணிப்பேன் உங்களுக்காக எல்லாம் கண்டவனையும் கல்யாணம் பண்ணி கஷ்ட பட மாட்டேன் ...” என்று தீர்க்கமாய் பேசியவள் கீழே விரித்திருந்த பாயில் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள் .
தன்னை நிற்க வைத்து குற்றம் சாட்டியதை தாங்க முடியாதவராக வெளி திண்ணையில் சோர்ந்து போய் அமர்ந்துக் கொண்டார் சேகர். இதுவரை கம்பீரமாய் வளைய வந்த தன் கணவரின் ஓய்ந்த தோற்றம் ஜெயாவின் மனதை பிசைய, அவரை தேடி சென்று அவர் அருகில் உட்கார்ந்தவர்,
“ஏங்க ... அவ சின்ன பொண்ணு ...” என்று ஆரம்பித்தவரை கலங்கிய கண்களுடன் பார்த்த சேகர்,
“கொஞ்சம் என்ன தனியா விடு ஜெயா ...” என்றவருக்கு மறுப்பு சொல்லாமல் உள்ளே சென்றார் ஜெயந்தி.
தனசேகர் ஜெயந்தி தம்பதிகளுக்கு நான்கு பெண்கள், தாலுகா ஆபீசில் குமாஸ்தாவாக வேலை பார்ப்பவருக்கு இரெண்டு பெண்களை கரை சேர்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.காயத்ரியை புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளை ரகுராமிற்கு பிடித்து விட, அவரின் நல்ல குணத்தை துரை மூலம் அறிந்த சேகருக்கும் தன் பெண்ணை அங்கே கட்டிக் கொடுக்க ஆசைக் கொண்டார்.
வீட்டிற்குள் நுழைந்த ஜெயா, அங்கே கண்ணை மூடி படுத்திருந்த தன் இளையமகளை முறைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைய, அவர் பின்னோடு சென்ற காயத்ரி தன் அன்னையை சமாதானம் படுத்த தொடங்கினாள்.
ஊரை சுற்றிவிட்டு பதினொரு மணி வாக்கில் வீட்டிற்கு வந்த சங்கருக்கு, வளர் சாப்பாடு எடுத்து வைக்கவும்,
“யெம்மா... எனக்கு சாப்பாடு போட்டு சாப்பிட தெரியாத ... நீ ஏன்மா கண்ணு முழிச்சுகிட்டு இருக்க ...” என்று அக்கறையாய் கேட்டபடி சாப்பிடவும்,
“நீயா போட்டு சாப்பிட்டா கொஞ்சமா சாப்பிடுற ... எனக்கும் தூக்கம் வரலை ... நீ சீக்கிரம் சாப்பிட்டு பாத்திரத்தை கொடு ...” என்ற அன்னையை பாசத்துடன் பார்த்த சங்கர் , ஒரு வாய் சோற்றை அள்ளி அதை அழகாக உருட்டி தன் அன்னையின் வாயருகில் கொண்டு சென்றவன்,
“ஆஅ திறமா...” என்க , வளரும் பிகு பண்ணாமல் சிறு சிரிப்புடன் அவன் ஊட்டுவதை வாங்கி கொண்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரசமா, சற்று தள்ளி படுத்திருந்த தன் மகனிடம், கண்களால் இந்த கூத்தை எல்லாம் பார்த்தியா என்னும் விதமாக பார்க்க,
“எம்மா... சோழியன் குடுமி சும்மா ஆடாது ... இந்த பய சரியான காரியகாரன் ... சும்மாலாம் சோத்தை ஊட்ட மாட்டான் ... இரு இரு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,
“யெம்மா... நான் இரண்டு மாசம் சென்னைல இருந்துட்டு வரேன் மா ... அங்க தங்கிறதுக்கு கூட எடத்த பார்த்துட்டேன் ... போய்ட்டு வர செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரெடி பண்ணி கொடுமா ...” என்று மெல்ல வளரின் தலையில் இடியை இறக்க, அவனை அதிர்ந்து போய் பார்த்தவர்
“என்னது பத்தாயிரமா ... அதுக்குதான் சோத்தை ஊட்டி விட்டியா ... வேணும்னா சொல்லு வாயில கையை விட்டு அத வெளில எடுத்துடுறேன் ... இந்த பத்தாயிரம் நாலாயிரம் கேட்கிற வேலை வச்சுக்காத... நூறு அம்பது கேட்கிறது போய் இப்போ பத்தாயிரமா ...”என்று முணுமுணுக்க தொடங்கியவரை கடுப்புடன் பார்த்த சங்கர்,
“யெம்மாஆ ... நீ ஒன்னும் சும்மா கொடுக்க வேணாம் , கடனா கொடு மூனு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்...” என்றவனை முறைத்து பார்த்தவரை கண்டு,
“ரெட்டவட செயின்னு ... ஏசி காரு ... வாஷிங் மிசினு ... நீச்சல் குளம் வச்ச வீடு... இதெல்லாம் வேணுமா வேணாமா ... வேணும்னா பணத்தை ஏற்பாடு பண்ணி கொடு...” என்று ஆசை வார்த்தை காட்டி பேசியவனை கண்டு கடுப்பான வளர்
“அடி செருப்பால ... காலைல ஏதோ உளறிக்கிட்டு இருக்கேனு பார்த்தா ... மாமி வேலை பார்க்க என்கிட்டயே பணம் கேட்பியா ... வெளக்கமார்த்த எடுத்தேன் வச்சுக்கோ தோளை ஊறிச்சி உப்புக்கண்டம் போட்டுடுவேன் ...ஒழுங்கா அப்பா சொன்ன வேலைல சேர்ந்து வேலைக்கு போற வழியை பாரு ... தேவையில்லாதது பண்ணிக்கிட்டு இருக்காதா ...” கோபத்துடன் கூறியவர் அவன் சாப்பிட்ட தட்டை தூக்கிக் கண்டு சமையலறைக்குள் செல்ல,
“தோ பாரு பணம் குடுக்க முடியாதுன்னா அதோட நிறுத்திக்கோ ... நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லிக்கிட்டு இருக்காதா புரியுதா ...” என்று கோபத்துடன் கத்தியவன் சட்டையை மாட்டிக் கொண்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளின் காலை யாரோ வருடுவது போல இருக்க கண் முழித்து பார்த்த பிரியா, அங்கே தன் கால்களை தன் மடியில் கிடத்தி வருடிக் கொண்டிருந்த தன் தந்தையை கண்டு திடுக்கிட்டு
“ப்பா...” என்று அதிர்ந்து கத்த, அவள் சத்தத்தில் ஜெயாவும் காயத்ரியும் கூட கண் முழித்துக் கொண்டனர்.
“விடுங்கப்பா ...” என்று தன் காலை உருவ முயன்றவளுக்கு இசைந்து கொடுக்காமல், அவள் கால்களை மெல்ல அழுத்திய படி
“அப்பாவா மன்னிச்சுடுடா ...”என்றவருக்கு , “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா ... நீங்க போய் தூங்குங்க ...” என்று பிரியாவும் , “இப்போ என்ன தப்பு பண்ணிடீங்கனு இவகிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்கீங்க ” என்று ஜெயாவும் கூற, அவர் அருகில் சென்ற காயத்ரி பிரியாவின் காலை பிடித்திருந்த அவர் கையை எடுத்து விடவும் ,காயுவையும் திரும்பி பார்த்து “நீயும் என்ன மன்னிச்சுடுடா” என்றவருக்கு எதுவோ சொல்ல வர கை நீட்டி தடுத்தவர்
“நான் உங்க அம்மாவை புடிச்சு போய்தான் கட்டிகிட்டேன் ... எங்களுடைய அன்பின் வெளிப்பாடுதான் நீங்க எல்லாம் ... ஏனோ என்னால ஒத்த புள்ளயோட நிறுத்திக்க முடில ... உங்கம்மாவை அவ்வளவு புடிக்கும் ... ஒவ்வொருத்தரா பொறக்கும் போதும் எங்க அன்போட பரிசாத்தான் நான் நினைச்சேன் ... நீ சொன்ன மாதிரி எல்லாரும் சொன்னாங்க தான் ரெண்டு பொண்ணோட போதும் , அதுங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கவே முட்டி மோதணும்னு ... எனக்கும் சரி உங்க அம்மாக்கும் சரி எங்க எதிர்பார்ப்பும் ஆசைகளும் ரொம்ப ரொம்ப சின்னது ... இருக்கிறத வச்சு சந்தோச பட்டுகிற ஆட்கள்... அதனாலயே என்னவோ எங்க ரத்தம் எங்கள போலத்தான் இருப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன் ... இப்போ நீ பேசின பின்னதான் தெரியுது உன்னோட ஆசைகள் ஒண்ணுகூட நாங்க நிறைவேத்தலைன்னு ...” அவர் பேசுவதை கேட்டு ஜெயா கண் கலங்க , காயத்ரியோ ,
“அப்ப்பா... இப்போ எதுக்குப்பா எங்களுக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க ... எனக்கு இதுவரைக்கும் எந்த குறையும் நீங்க வைக்கலபா ... நீங்க பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்க எனக்கு முழு சம்மதம்பா ...” என்க , பிரியாவோ ,
“சாரிபா உங்களை கஷ்ட படுத்த சொல்லலை ... அக்காங்க கல்யாணத்துல ரொம்பநாளா உறுத்திகிட்டு இருந்துச்சு அதான்பா என்ன மீறி கேட்டுட்டேன்...” அவர் தன்னிலை விளக்கம் கொடுப்பதை கண்டு சங்கட பட்டவளாக கூற , மெல்ல சிரித்துக் கொண்ட சேகர்,
“உங்க அக்காவுக்காக என்ன கேள்வி கேட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு டா ... ஆனா நீ கவலை படுற அளவுக்கு அவங்க வாழ்க்கை கஷ்டத்துல இல்ல ... பெரிய பொண்ணும் நடுப்பொண்ணும் சந்தோஷமாத்தான் இருக்காங்க ... இரண்டு மாப்பிள்ளைக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ... சரிடா அவங்களை எல்லாம் விடு ... உன்னோட எதிர்பார்ப்பு என்னன்னு இப்போ எனக்கு தெரிஞ்சுடுச்சு ... அதுக்கு தகுந்ததை போல மாப்பிள்ளை பார்த்துட்டா போச்சு ...” என்றவர் , எதையோ யோசித்தவராக,
“ஹாங் ... சொல்ல மறந்துட்டேன் போன மாசம் அரிசி மண்டி வேலு அவர் பையன் செல்வராஜுக்கு நம்ம சின்ன பொண்ண கேட்டார் ... அந்த பையன் நம்ம பொண்ண கடைவீதில பார்த்துருக்கான் போல, புடிச்சு போய் அவங்க வீட்டுல பேச சொல்லிருக்கான் ... பையன் ஆசைப்பட்டு கேட்கிறான் உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க மேற்கொண்டு பேசலாம் சொன்னார் ...நான் தான் என் பொண்ணுங்களுக்கு கவர்மெண்ட் மாப்பிள்ளையை தவிர வேற யாருக்கும் தறதா இல்லைனு முடிவுல இருந்தேன்ல ... அதான் அத கண்டுக்காமா விட்டுட்டேன் ...” என்றவர், பிரியாவிடம் திரும்பி
“அம்மாடி ... நீ ஆசைப்பட்ட போலவே வசதியான இடம் டா... அவங்க கிட்ட அம்பாசிடர் கார் இருக்கு ... பெரிய மாடி வீடு , சொந்தமா நிறைய நிலம் கூட இருக்கு ... இரண்டே இரண்டு பையன்தான் பிச்சல் புடுங்கல் இருக்காது ... என்ன நம்ம சக்திக்கு மீறி சீர்வரிசை எதிர் பார்ப்பாங்க , அதுக்குதான் இந்த வீடு இருக்கே ...” கண்கள் மின்ன எதையோ சாதிக்கப்போற நினைப்பில் அவர் பேச , அவர் பேச்சை தட்டமுடியாமல் திணறியவளின் மனமோ,
‘நான் ஆடி காருக்கு ஆசைப்பட்டா இந்த அப்பா அம்பாசிடருக்கு வாழ்க்கை பட சொல்லுது ... அய்யோ இவனை கட்டிக்கிட்டா புள்ளகுட்டி பெத்துக்கிட்டு இந்த ஊர்லயேதான் கிடக்கணும் ...’ என்று நினைக்க பதில் சொல்ல முடியாமல் நெளிந்தவளை முறைத்துக் கொண்டிருந்தார் ஜெயந்தி . அவருக்குத்தான் இவளை பற்றியும் இவள் கனவை பற்றியும் நன்கு தெரியுமே.
தன் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்திருந்த தந்தையை பார்க்க பாவமாக இருந்தாலும் , தன்னுடைய ஆசையே பிரதானமாக தெரிய மெல்ல,
“ப்பா... முதல்ல அக்கா கல்யாணத்தை நல்ல படியா முடிங்கப்பா ... அதுக்கே ஏகப்பட்ட செலவு இழுக்கும் ... எனக்கு இப்போ என்னப்பா அவசரம் இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்ப்பா ... அதுவரைக்கும் நான் சென்னைல வேலைக்கு போகட்டா ...” என்று நாசுக்காக தன் திருமணத்தை மறுத்தவள் , தன் விருப்பத்தையும் அவர் முடிவுக்கு விட்டுவிட, சில நொடிகள் அமைதியாய் யோசித்தவர்,
“சரிடாமா ... அவங்ககிட்ட சொல்லிடுறேன் ஒரு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம்ன்னு ... விருப்பம் இருந்தா காத்திருக்கட்டும் இல்லனா வேற நல்ல இடமா பார்த்துக்கிடலாம் ... அதுவந்து எப்படி டா உன்ன தனியா சென்னைக்கு அனுப்புறது ... ஏன் இங்கயே எதாவது ஒரு வேலை பாரு இல்லைனா வீட்டுலயே இருடா ... சென்னைலாம் நமக்கு சரி பட்டு வராது” என்று கறாராய் கூறியவர் தூங்க செல்லவும் , அவர் மறுத்ததால் கண்கள் இரண்டும் கலங்க வந்த அழுகையை உதட்டை கடித்து கட்டுப்படுத்தியவளை கண்டு காயத்ரிக்கு பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது ,பிரியாவை நெருங்கி படுத்துக் கொண்டவள், அவள் கைகளை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டவாறே ,
“இப்போ எதுக்கு கண்ண கசக்குற ... அப்பா கிட்ட நான் பேசுறேன் ... பட் எங்ககிட்ட உளறிக்கிட்டு இருக்கிறத போல அங்க போய் நடந்துக்க கூடாது ... ஒரு மாசம் டைம் வாங்கி கொடுக்கிறேன் அதுக்குள்ள வேலை தேடி சேர்ந்துகிற ... இல்ல ஒரு மாசம் முடிஞ்ச மறுநாளே பெட்டியை தூக்கிட்டு வந்துடனும் ... என்ன சொல்ற ...” என்று கிசுகிசுப்பாய் கூறவும் முகம் சந்தோஷத்தில் விரிய மேலும் காயத்ரியை நெருங்கி படுத்து தன் கால்களையும் அவள் மேல் போட்டு அனைத்துக் கொண்ட பிரியா ,
“ப்ளீஸ் ப்ளீஸ் பெர்மிசன் வாங்கி கொடுக்கா ... நீ சொன்ன படியே நடந்துக்குறேன்...” கிசுகிசுப்பான குரலில் கொஞ்சிய படி அக்காவின் கன்னத்தில் முத்தம் வைக்கம் , “சரி ...” என்ற சிரிப்புடன் தன் தங்கையை அனைத்துக் கொண்டு தூங்கினாள் காயத்ரி.
கூடத்தில் டிவி பார்த்துக் கொண்டே கீரை ஆய்ந்துக் கொண்டிருந்த வளர்மதியை வாயிலில் நின்று தெரிந்தவர் ஒருவர் அழைக்க, எட்டி பார்த்து
“தோ வரேன் ...” என்று குரல் கொடுத்தவர் தன் அத்தையிடம் கீரையை நகர்த்தியபடி ,
“அத்த இந்த கீரையை ஆஞ்சுகிட்டு இருங்க ... விஜயா பையன் குழு பணம் வாங்க வந்திருக்கான் கொடுத்துட்டு வரேன் ...” என்றவர் பணத்தை எடுப்பதற்காக சமையலறைக்குள் நுழைய , போன வேகத்தில் பதட்டத்துடன் திரும்பியவரை பார்த்து தண்டபாணி,
“என்ன பணத்தை வச்ச இடத்துல இல்லையா ...” என்று அசால்டாய் கேட்க , கோபத்துடன் அவரை நெருங்கிய வளர் ,
“உங்களுக்கு எப்படி தெரியும் ... அப்போ நீங்கதான் எடுத்தீங்களா ...” என்று குற்றம்சாட்ட, கேவலமான பார்வையை பார்த்த தண்டபாணி,
“ஏண்டி ...சம்பாதிச்ச காலத்தலையே சம்பள பணத்தை உன்கிட்டத்தான் கொடுத்தேன் ... இப்போ வர பென்ஷன் பணத்தையும் உன் கைல தான் கொடுக்கிறேன் ... நான் ஏண்டி திருட போறேன் ... எல்லாம் உன் அருமை இளைய புதல்வன் பண்ண வேலையாத்தான் இருக்கும் ... முதல்ல அவன் வீட்டுல இருக்கானா பாரு...” என்று நக்கல் அடிக்கவும் அவரை முறைத்துக் கொண்டே மொட்டை மாடிக்கு மூச்சிரைக்க ஏறிய வளருக்கு காலியான மாடியே காட்சியளிக்க, தன் கணவர் சொன்னது போலத்தான் நடந்திருக்கும் என்று எண்ணியவராக கடும்கோபத்துடன் கீழிறங்கி சென்று தன் கணவர் முன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவரை பார்க்க தண்டபாணிக்கு பாவமாகத்தான் இருந்தது,
“அந்த பையனை ஒரு மணி நேரம் கழிச்சு வர சொல்லு நான் போய் பேங்க்ல எடுத்துட்டு வரேன் ... ஆமா எவ்வளவு ...” என்றவருக்கு ,வந்த கோபத்தை உதட்டை கடித்து கட்டுப்படுத்தியபடி
“பதினேழாயிரம் ...” பதில் சொல்வதற்குள் ஆத்திரத்தில் கண்கள் கலங்க தொடங்கின வளர்மதிக்கு.
“சரி சரி விடு விடு ... அவன் கேட்டப்பவே தரேன் சொல்லி இன்னைக்கு தரேன் நாளைக்கு தரேன் சொல்லி ஏமாத்திருக்கலாம் ... செருப்பால அடிப்பேன் துடைப்பத்தாலஅடிப்பேன் சொன்ன ... இப்போ பாரு சொல்லாம கொள்ளாம எடுத்துட்டு போய்ட்டான் என்ன என்ன ஏழுரையை இழுத்துகிட்டு வர போறான்னு தெரில ... ம்ம்ம் வீட்டுக்கு அடங்காததா ஊரும் உலகம்தான் திருத்தனும் விதி இருந்தா யாரால மாத்த முடியும்...”என்றவரை அனல் தெறிக்க பார்த்த வளர் ,
“கொஞ்சம் விட்டா போதுமே... அவனை யாருன்னு நினைசீங்க ... அவனுக்கு இருக்கிற மூளைக்கு எங்கயோ போக போறான் பாருங்க ... சும்மா என் பையனை குறை செல்றத விட்டுட்டு பணத்தை எடுத்துட்டு வர வழிய பாருங்க ...” தண்டபாணியிடம் எகிறிய வளர் கோபத்துடன் செல்ல , தலையில் அடித்துக் கொண்ட தண்டபாணி
“பார்க்கத்தானே போறேன் எங்க போக போறான்னு ... மாமியார் வீட்டுக்கு போகாம இருந்த சரி...” என்று முனகியவர் பணத்தை எடுப்பதற்காக கிளம்பலானார்.
அங்கே தன் பெற்றவர்களின் பிபியை எகிற விட்டவனோ, சென்னையில் உள்ள புகழ் பெற்ற கட்டுமான கம்பெனியின் முன் ஒரு காலை மடக்கியபடி ஸ்டைலாக சாய்ந்த படி நின்றிருந்தான். அவனை தாண்டி சென்ற ஆண்களும் பெண்களும் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்து செல்லவும் , அதில் கர்வம் அடைந்தவனின் இதழ்கள் கேலியாய் புன்னகைக்க, தொலைவில் நின்று வெகு நேரமாய் இவனை ரசித்துக் கொண்டிருந்த அப்பெண்ணிற்கு இவனின் கேலி புன்னகை கூடுதல் அழகை கொடுத்து அவளை வசீகரிக்க மெல்ல அவனை நெருங்கினாள். அருகில் நெருங்கியதும் தன் கரத்தை நீட்டி,
“ஹாய் ... ஐ அம் பிரியா ...” என்று அறிமுகப்படுத்தி கொள்ள , அலட்சியமாய் திரும்பியவனின் எக்ஸ்ரே கண்கள் நொடியில் அவளை அலசி ஆராய்ந்து இவள் தனக்கானவள் இல்லை என்று ரிப்போர்ட் வாசிக்க , மெல்லிய புன்னகையை உதிர்த்தவன்,
“ஹாய் ஐ அம் சங்கர் ...” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் , அவள் கைகளை பற்றிக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி திரும்பி நிற்கவும் , அவனின் அலட்சிய போக்கை ரசித்தவள் சிறு சிரிப்புடன் அங்கிருந்து விலகி செல்ல , மூச்சை இழுத்துவிட்டு சங்கர்,
“ஊப் ...வாடக கார்ல போறதுக்கெல்லாம் நம்மளை புடிச்சிருக்கு போல ... எவ்வளவு தைரியமா தானா வந்து பேசுவா சரியான லம்பாடியா இருக்கும் போல ... லம்போகினி எதிர்பார்த்தா லம்பாடி வந்து நிக்குது ... ம்ம்ம் ... நம்ம ஆளு மட்டும் கண்ணுல மாட்ட மாட்டுது ... எங்கடி இருக்க செல்லக்குட்டி ... உன் பேபி உனக்காக வைட்டிங்...” என்று புலம்பியவனின் புலம்பல் காற்றில் கரைந்து சென்றது.
அதே நேரம் வீட்டில் குளிக்காமல் அழுக்கு நைட்டியுடன் சோபாவில் படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த பிரியா
“இங்கதான் இருக்கேன் ... ஏன் கத்திக்கிட்டு இருக்க ...” என்று தெருவை நோக்கி பெருங்குரலெடுத்து கத்திக் கொண்டிருந்தாள்.