அத்தியாயம் - 23
ஐந்து வருடங்களுக்கு பிறகு..
அன்று காலை ஆதனை, அந்த இன்டர்நேஷனல் பள்ளியில் இறக்கிவிட்டு, அங்கிருந்து அலுவலகத்திற்கு கிளம்பினான் சரண். வர்ணிகா இல்லாமல் மகனை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், காலையில் அவனை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதற்குள் அவனுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும்.
‘சரணி சொலுஷன்ஸ்’ என்று பெயர் பொதித்திருந்த அந்த ஐந்து மாடி கட்டிடத்திற்குள், தன் காரில் நுழைந்தான் சரண். இன்று அவனுக்கு ஒரு முக்கியமான போர்டு மீட்டிங் இருக்கிறது. அதில் கம்பெனியின் முக்கிய பங்குதாரரான ரகு லண்டனில் இருந்து கலந்து கொள்ள, சிஇஓவாக சரணும் அதில் இருக்க வேண்டும்.
ஆம், ரகு சொன்ன நிறுவனத்தை தான் சரண் இப்போது ஆளுகிறான்.
இதை பற்றி அவன், “மாமா அவங்க தொடங்க போற கம்பெனிய பார்த்துக்க சொன்னாரு. முதல்ல தயக்கமா தான் இருந்துச்சு. அப்புறம் அவர் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சி கஷ்டப்படணும்னு சொன்னதும் யோசிச்சு பார்த்தேன். பேப்பர் போட்டுட்டேன்டி” என்று முதன்முதலில் வருவிடம் சொன்னபோது, அவள் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்கார் என் டேட்? அத்தைக்கும் அண்ணிக்கும் செய்யறது அவர் டியூட்டி.. நமக்கெல்லாம் ஒண்ணும் செய்யவேண்டாம். கொஞ்ச இயர்ஸ் போகட்டும். நாமளே பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்று தீர்மானமாக சொல்லிவிட,
சரண் தான் “அப்படி இல்லடி. நானும் முதல்ல அவரை தப்பா தான் புரிஞ்சிட்டு இருந்தேன். லவ் மேரேஜ் பண்றதுல என்ன தப்பு. தாத்தா மட்டும் அவரை சேர்த்துகிட்டு இருந்தாருன்னா அவரும் தாத்தாவையும் ஆயாவையும் கைவிட்டிருக்க மாட்டாரே. நம்மளால லைஃப்ல முன்னேற முடியாதுனு இல்ல, நீ இருக்க எனக்கென்னடி.. என்னை ஏத்தி விட்டுட மாட்ட. அவர் நிறைய குற்றவுணர்ச்சில இருக்கார், அதான் அவர் பிசினஸ்ஸ பார்த்துக்கலாம்னு..” என்று எடுத்துரைத்தான்.
இருந்தும் வர்ணிகா விடவில்லை. தந்தையிடம் தங்கள் தொழிலுக்கு தேவையான பணத்தை ஒரு பங்குதாரராக மட்டும் கொடுக்க சொன்னாள். ரகுவிற்கு மட்டும் தொழில் தொடங்குவதா லட்சியம், தன் தங்கை மகனை தொழிலில் தூக்கிவிடுவது தானே பிரதானம். அதனால் கம்பெனி தொடங்க பணம் கொடுத்தார். இந்த ஐந்து வருடங்களில், சரணின் அயராத உழைப்பில் நிறுவனமும் நல்ல நிலைக்கு வந்திருக்க, இப்போது அந்நிறுவனத்தில் ரகுவின் பங்கு வெறும் இருபத்தைந்து சதவீதமே. அறுபது சதவீதம் சரண் வர்ணிகாவினுடையது. மீதம் இருக்கும் பதினைந்து சதவீதத்தை பங்குகளாக வெளியில் விற்றிருக்கின்றனர்.
இன்று அதன் நிர்வாகசபை கூட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டனர். தன் தந்தையின் நிறுவனங்களுக்கு வைஸ் சேர்மெனாக இருக்கும் மனோஜும் லண்டனிலிருந்து கலந்து கொள்ள, சரணி சொலுஷன்ஸின் சேர்பர்சன் வர்ணிகா மட்டும் அங்கில்லை.
நிர்வாகசபை கூட்டம் முடிந்து அவர்களுடனே ஒன்றாக உணவும் உண்டு, முன் மாலைபொழுதில் மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வந்தான் சரண். பிறகு மகனை தயார் செய்து, தானும் தயாராகி வரவேற்பறையில் தாய், தந்தைக்காக காத்திருந்தான். இப்போது இரண்டு கிரௌன்டில் அவன் வாங்கி கட்டிய வீட்டில் தான் அனைவரும் உள்ளனர்.
ஏஜென்சியிலிருந்து வந்த கனியும் பாலனும் “சாரிப்பா. கொஞ்சம் லேட்டாகிடுச்சு.. இப்ப தயாராகி வந்திடறோம்” என்றுவிட்டு அறைக்குள் சென்ற அடுத்த பதினைந்து நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தனர்.
அதற்குள் ஓரிடத்தில் அமராது, தந்தையை போல் கோட் சூட் அணிந்து, இங்கும் அங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் மகனை கண்காணித்த படியே லண்டனிலிருந்து வரும் விமானத்தின் ஓடும் நிலையை தன் ஐபேடில் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.
பாலனும் கனியும் வரவும், மகனை அவர்களிடத்தில் ஒப்படைத்து, மூவரையும் ஒரு காரில் ஏற்றி அனுப்பியவன், தன் காரை எடுத்துக் கொண்டு விமான நிலையம் புறப்பட்டான்.
சரண் அங்கே செல்லவும், லண்டனிலிருந்து வரும் விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது. அவன் அங்கேயே காத்திருக்க, காட்டன் சேலையில், அதற்கு நேர்த்தியாக மிதமான ஆபரணங்கள் அணிந்து, தன் சுருண்ட கேசத்தின் மேல் முடியை மட்டும் எடுத்து கிளட்ச் கிளிப்பில் அடக்கி, தூரத்திலேயே சரண் மனதை கொள்ளையடித்து கொண்டு நடந்து வந்தாள் வரு. அவளது மடிக்கணினி பையை தோளில் மாட்டிக் கொண்டு அவளது செயலாளரும் உடன் வந்தாள்.
இவனை பார்த்ததும் புன்னகைத்துக் கொண்டே வரு அவனிடம் வர, அவளது செயலாளர் கையிலிருந்த மடிக்கணினி பையை வாங்கிக் கொண்ட சரண், அவளை அனுப்பிவிட்டு மனைவியை அணைத்து விடுத்தவன் “எப்படி இருக்க? வீடியோ கால்ல பார்க்கறத விட ஒரு சுத்து வெயிட் போடுட்ட மாதிரி இருக்கு. என் சாப்பாட்ட மிஸ் பண்றேன்னு சொல்லிட்டு, தொப்பை வேற பெருசாகிட்டே போகுது” என்று இரண்டாவது முறை மாதமாக இருப்பவளை கேலி செய்ய..
அவள் சிணுங்கிக் கொண்டே “எல்லாம் உன் பொண்ண கேளு” என்றாள்.
முதல் பிரசவத்திற்கே உடன் இல்லாததால், முதல் குழந்தைக்கு இருந்த அதே சிக்கல் இக்குழந்தைக்கும் இருக்க, இம்முறையாவது மகளை தன்னோடு வைத்து பார்த்துக் கொள்ள வேண்டுமென்று மைதிலி விடாப்பிடியாக சொல்லிவிட, ஐந்தாம் மாதம் பிறந்ததிலிருந்து இரண்டு மாதமாக வரு லண்டனில் தான் இருக்கிறாள். அங்கே ஸ்கேன் செய்து பார்த்ததில், பெண் குழந்தை என்றும் உறுதி செய்திருந்தனர்.
“என் பொண்ணுக்கு என்னடி, தனியா கிளம்பி வர அளவுக்கு சமத்தா இருக்கா. இங்க ஆது வீட்டையே ரெண்டாக்கிட்டு இருக்கான். ஃபன்க்ஷனுக்குனு கோட் போட்டுவிட்டா, அத போட்டுக்கிட்டு இங்க ஓடுறதும் அங்க ஓடுறதும், என்னால முடியலடி” என்று மகனை சமாளிக்க முடியாமல் சலித்துக் கொண்டான் சரண்.
இருவரும் காரில் சென்றுக் கொண்டிருக்க, “மாமாவும், மனோ மாமாவும் இன்னைக்கு போர்டு மீட்டிங் ஜாயின் பண்ணியிருந்தாங்க. அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?” வண்டியை இயக்கிக் கொண்டே சரண் கேட்க..
“அம்மா, மித்து எல்லாம் நல்லா இருக்காங்க. வர்ஷு தான் கூட வருவேன் அத்தைனு ஒரே அழுகை” என்று அண்ணன் மகள் அழுததை எண்ணி வருத்தப்பட்டு சொன்னாள்.
மனோஜிற்கு மித்ராவுடன் திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆகிறது. சரணும் வர்ணிகாவும் தான் ரகுவரனிடம் பேசி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். பின் வருவின் மாமாவிடம், ரகுவும் மைதிலியும் பேசி சமாதானம் செய்ய, மும்பையில் அவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு கனி குடும்பத்தில் இருக்கும் நபர்களோடு, சுசியும் தன் மாமியார் குடும்பத்துடன் கலந்துக் கொண்டாள்.
எல்லோர் மனதிலிருந்த கசப்பான நினைவுகளும் அகல, அத்திருமணம் உதவியாக இருந்தது. அதன் பின்னே சரண் மனோஜை, தாய்மாமன் மகன் என்ற ரீதியில் மாமாவென்று அழைக்க தொடங்கினான். மனோஜ், மித்ராவின் செல்ல புதல்வி தான் வர்ஷா. மூன்று வயதாகிறது. சுசிக்கும், நிலவனுக்கு ஆறு வயதாகி இருக்க, இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளது பெயர் யாதவி.
சரணும் வர்ணிகாவுமே, தங்கள் மகளுக்கு ‘சரணிகா’ என்ற பெயரை தேர்வு செய்து வைத்துள்ளனர்.
பேசிக் கொண்டே இருவரும் விழா நடக்கும் இடத்தை வந்தடைந்திருந்தனர். சரணும் வர்ணிகாவும் ஜோடியாக உள்ளே நுழைய, பல கேமராக்கள் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டது.
உள்ளே ‘மிஸஸ். வர்ணிகா சரண்’ என்ற போர்டு வைத்திருந்த இரு மேசையை அவர்களுக்கு ஒதுக்கியிருந்தனர். அதில் சரண் மற்றும் அவனது குடும்பம் ஒரு மேசையிலும், சுசி மற்றும் அவளது கணவன், பிள்ளைகள் மற்றொரு மேசையிலும் அமர்ந்தனர்.
‘விதையாய் இருப்போம்’ நிறுவனம், பல சாதனையாளர்களை கண்டெடுத்து அவர்களுக்கு வருடா வருடம் விருது வழங்கி, அவர்களது பணி மேலும் தொடர ஊக்குவிக்கும் ஒரு தொண்டு நிறுவனம்.
அதில் வர்ணிகாவிற்கு இன்று விருது வழங்குகிறார்கள். ஒவ்வொரு சாதனையாளரின் சாதனைகளை திரையில் ஒளிரவிட்டு, அதன் பின்னே அவர்களை மேடைக்கு அழைத்து விருது வழங்கினர். வர்ணிகாவின் முறையும் வந்தது.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண் “அடுத்து நாம விருது வழங்க போறது, பல ஆதரவற்ற பெண்மணிகளுக்கு துணை நின்ற ஒரு சாதனை பெண்ணுக்கு தான். வழக்கமா நம்மகிட்ட யாராவது கை ஏந்தினா, ஒண்ணு பாவம் பார்த்து காசு போட்டுட்டு போவோம், இல்ல அவங்கள கண்டுக்காம விட்டிடுவோம்.. இவங்க ரொம்ப டிஃபரண்ட். அந்த மாதிரி எத்தனையோ பெண்களுக்கும், படிக்கிற வயசுல இருக்கற பிள்ளைகளுக்கும் உதவி செஞ்சி, இன்னைக்கு சென்னையில இருக்கிற நூற்றியம்பதுக்கும் மேற்பட்ட சிக்னல்ல, அப்படி யாருமே இல்லாத அளவுக்கு செஞ்சிருக்காங்க. அதோட அவங்களுக்கு தங்கள் நிறுவனத்திலேயே வேலையும் கொடுத்து, வாழ்வாதாரத்தையும் கொடுத்திருக்காங்க. சின்ன பசங்களை சொந்த செலவுல படிக்கவும் வைக்கறாங்க” என்றுவிட்டு வர்ணிகா செய்யும் தொண்டை விவரித்து ஒரு காணொளியையும் ஒளிர விட்டனர்.
சரணும் அவனது குடும்பத்தினரும் வருவின் செயலை சொல்லும் அக்காணொளியை பெருமிதமாக பார்த்திருக்க, ஆதனோ “அம்மா.. அம்மா..” என்று கைதட்ட, யாதவியும் “மாமி.. மாமி..” என்று உடன் சேர்ந்துக் கொண்டாள். சற்று பெரியவனான நிலவனுக்கு “நீயும் பெருசானா, மாமி மாதிரி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும்” என்று வருவை காட்டி பார்த்தி மகனுக்கு எடுத்து சொல்ல, அவனும் சரியென்று தலையாட்டினான்.
கரகோஷத்துடன் மேடையேறிய வருவிற்கு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விருது வழங்க, அவளும் அதை பெற்றுக் கொள்ள, சரண் எழுந்து நின்று கை தட்டினான். இதையனைத்தையும் லைவ்வாக வீடியோ அழைப்பில் தன் மாமா குடும்பத்திற்கு காண்பித்திருந்தாள் சுசி.
அதன் பின் வருவிடம் பேச சொல்லி மைக்கை கொடுக்க, அதை வாங்கியவள் “எல்லோருக்கும் வணக்கம். இந்த விருதை எனக்கு வழங்கிய விதையாய் இருப்போம் நிறுவனத்திற்கு என் முதல் நன்றி” என்றவள் “ப்ளீஸ் பார்டன் மீ ஃபார் மை தமிழ்” என்று சிரிக்க, சரணும் தன் துரையம்மாவை எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.
“இந்த அவார்ட்” என்று விருதை உயர்த்தி காட்டியவள் “இது என் ஹஸ்பெண்ட் சரண் இல்லாம நடந்திருக்காது. எனக்கு புரியாத பல விஷயங்களை அவர் தான் எனக்கு புரிய வச்சார். இல்ல, லண்டன் மாதிரி வளர்ந்த நகரத்துல பிறந்த நான், இந்த மக்களுடைய கஷ்டத்தை புரிஞ்சிட்டிருக்க மாட்டேன். அவர் தான், எல்லாரையும் மாதிரி முகம் சுளிச்ச எனக்கு, யாரும் இதை விருப்பப்பட்டு செய்யறதில்ல, சூழ்நிலை தான் ஒருத்தனோட வாழ்க்கையை இப்படி ஆக்கிடுதுனு சொன்னார். அந்த வார்த்தைகள் தான் இன்னைக்கு எத்தனையோ பேருக்கு லைஃப்லைனா இருந்திருக்கு. இனியும் இருக்கும். மை ஹஸ்பெண்ட் இஸ் தி ஒன் வு இஸ் பிஹைனட் மை சக்ஸஸ். தேங்க யு சரண், என்னை நம்பினத்துக்கு. திஸ் இஸ் ஃபார் யு” என்று விருதை அவனை நோக்கி காட்ட, அவனோ பெருமிதத்தோடு தலையசைத்து மறுத்து, இந்த விருதிற்கு உரியவள் நீ மட்டுமே என்று அவளை நோக்கி விரலை சுட்டி காட்டினான்.
“இன்னைக்கு 150+ சிக்னல்ஸை க்ளியர் பண்ணிருக்கோம். நிறைய ஆதரவற்ற பெண்களுக்கு எங்க ஏஜென்சிலயும், எங்க அண்ணியோட கம்பெனிலயும் வேலை கொடுத்திருக்கோம்.. எங்கள் பணி ஆல் ஓவர் தமிழ்நாடு தொடரும், அண்ட் ஈவென் வைடர் தென் தட். ஸ்பெஷல் தேங்க்ஸ் டு மை பேமிலி. ஒரு பொண்ணு இந்த சொசைட்டில ஜெய்கிறதுக்கு முதல்ல வீட்டுல இருந்து சப்போர்ட் கிடைக்கணும். அந்த விஷயத்துல, ஐ ஆம் லக்கி எனாஃப் டு ஹேவ் மை பேமிலி. ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ மை சன் ஆதன். இந்த வயசுலயே அம்மா வேணும்னு அடம் பண்ணாம, அவன் அப்பா கூட இருந்து எனக்கு எதோ ஒரு வகையில உதவி பண்றான். அம்மா லவ்ஸ் யு ஆது. வயித்துல இருந்துட்டு, நான் அலையுற எல்லாத்துக்கும் உதவியா இருக்க இந்த பேபிக்கும் தேங்க்ஸ்” மொத்த குடும்பத்திற்கும் நன்றி சொன்னதோடு, தன் மகனுக்கும், வயிற்றில் இருக்கும் மகளுக்கும் நன்றி சொல்லிவிட்டு கீழிறங்கினாள் வரு.
இரவு உணவு முடிந்ததும் பால் எடுத்துக் கொண்டு சரண் அறைக்குள் வர, குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது. பால் குவளையை மேசை மீது வைத்துவிட்டு, மனைவிக்காக அவன் மெத்தையில் அமர்ந்து காத்திருக்க, இலகுவான இரவு உடையில் வெளியே வந்தாள் வர்ணிகா.
அதை பார்த்தவன் “சாயந்திரம் எவ்ளோ அம்சமா, புடவை கட்டி மகாலஷ்மி மாதிரி இருந்த. இப்போ என்னடி இப்படி வந்திருக்க..” திருமணத்திற்கு முதல் நாள் இரவு மண்டபத்தில் பார்த்தது போல், தொடையளவு டிரௌசரும் ஒரு டாப்ஸும் அணித்திருந்ததை பார்த்து ஆயாசமாக கேட்டான் சரண்.
“எனக்கு இது தான்டா கம்ஃபர்டபிளா இருக்கு” என்றவள் “ஆமா, ஆது எங்க?” என்று அறையை சுற்றி கண்களை சுழல விட,
“அவன் ஆயா, தாத்தா கூட தூங்கறானாம்” என்று சொல்ல, அவளும் வந்து அவன் மடியில் வாகாக அமர்ந்துக் கொண்டாள்.
சரண் அவளுக்கு பின்னிருந்தே பாலை புகட்ட, அதை குடித்து முடித்தவள் “பேக் டு ஹோம் சரண்.. இப்போ எனக்கு லண்டன் பிடிக்க மாட்டேங்கிது. என்ன இருந்தாலும் நீ கூட இருக்க மாதிரி இல்ல” என்று கவலையாக சொன்னாள்.
அன்று இந்த நாட்டையே பிடிக்காமல், கிளம்புவதிலேயே குறியாக இருந்தவள், இன்று அவனையும் இந்நாட்டையும் எத்தனை நேசிக்க தொடங்கிவிட்டாள். அவளை அவன் ஆச்சர்யமாக பார்த்திருந்தான்.
அப்படியே இருவரும் பேசிக் கொண்டிருக்க.. “வர்ணி, ஏன் இன்னைக்கு அப்படி சொன்ன? நான் உனக்கு ஒண்ணுமே பண்ணதில்லயே டி. சொல்லப்போனா, இந்த பிசினஸ் தொடங்கலாம், அதுல இவங்களையெல்லாம் இன்வால்வ் பண்ணலாம்னு நீ சொன்னப்போ கூட, நான் நம்பிக்கையில்லாம உன்மேல கோபம் தானே பட்டேன். ஏன் நான் உன்னை நம்பினதா சொன்ன?” சரண் கேள்வி எழுப்ப..
அவன் தோளில் பின்புறமிருந்தே சாய்ந்துக் கொண்டவள் “அது கோவத்துல செஞ்சது. ஆனா எப்பவும் நீ என்னை நம்பின சரண். எனக்கு புரியாததெல்லாம் புரியுற மாதிரி எடுத்து சொன்ன. அதனால தான் இதெல்லாம் நடந்துச்சு” என்று தான் செய்ததற்கு சர்வ சாதாரணமாக பெயரை அவனுக்கு தூக்கி கொடுத்தாள்.
அதை கேட்டவன் அவள் புறங்கையை எடுத்து முத்தம் வைத்து, “நம்ப பொண்ணும் உன்னை மாதிரியே சுருட்டை முடியோட, எதுக்கும் அசராம, எதையும் சாதிக்க கூடியவளா இருக்கணும் வர்ணி. ஏன் நம்ப பையனும் தான்” என்று அவளை உச்சி முகர்ந்தான்.
“எனக்கு என் சரணி தான் பெஸ்ட். அதனால நம்ம ரெண்டு கிட்ஸும் உன்னை மாதிரி தான் இருக்கணும்” என்றாள் பதிலுக்கு அவள்.
“அப்படி இல்லடி.. எப்படியோ இருந்த நம்ப வீட்டை நீ தான் இவ்ளோ அழகா மாத்தின. நீ மட்டும் எங்க வாழ்க்கைல வரலனா, மாச சம்பளத்துக்கு எதோ ஒரு வாடகை வீட்டுல, எதோ ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்திட்டு இருந்திருப்போம். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாற்பத்தஞ்சு, ஐம்பது வயசுல, சிட்டிக்கு தள்ளி கால் கிரௌன்ட்ல ஒரு இடத்தை வாங்கி போட்டு, கடைசி காலத்துல ஒரு வீடு கட்டியிருப்பேன். அதுல சந்தோசம் இல்லைன்னு சொல்லல. ஆனா இப்படியும் வாழ்க்கை தரத்தை மாத்திக்க முடியும்னு காட்டினது நீதான். மாமா பணம் கொடுத்தார் தான். அவர் கொடுக்கலனாலும் உனக்கு இருக்க திறமைக்கு ஜெயிச்சி தான் இருப்ப. என்ன, கொஞ்சம் தள்ளி போயிருக்கலாம். எல்லாத்தையும் விட எங்க அக்கா வாழ்க்கையும் உன்னால மேம்பட்டு போச்சு..” தன்னை புகழ்ந்திருந்தவனின் வாயை பொத்தி,
“போதும் போதும், மை டேட் இஸ் பெஸ்ட்னு வயித்துல உன் பொண்ணு உதைக்கிறா” என்று கிளுக்கி சிரித்தாள்.
“நீ என்னை நல்லா பார்த்துக்கிற. என்னை மட்டும் இல்ல, நம்ப குடும்பத்தோட பில்லரா இருக்க. நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேனா வர்ணி?” நிறைந்திருந்த அவனது மனது தன்னை மீறி கேட்டுவிட, அவனை ஏற இறங்க பார்த்தவள்..
“நல்லா தான் பார்த்துக்கிற.. ஆனா இன்னும் ஒரு விஷயத்துல தான் உன்மேல நம்பிக்கை வரமாட்டேங்கிது” என்று பட்டென்று சொல்லிவிட, அவன் முகம் வாடி போவதற்கு பதில், பயம் கண்டது. அவனுக்கு தெரியாதா, அடுத்து அவள் என்ன கேட்பாளென்று.
தெரியாமல் கேட்டு மாட்டிக் கொண்டோமே என்று சரண் இப்போது விழிக்க, அவன் கன்னம் தாங்கி கண்களுக்குள் ஊடுருவி பார்த்தாள்.
பின் எதுவோ கிடைக்கவில்லை என்பது போல் மிச்சு கொட்டி அவனை விடுத்து, அமைதியாக படுத்துக் கொள்ள, “ஹே.. நீயா எந்தவொரு அசம்ஷனுக்கும் வர கூடாது. மனசுல இருக்கறத கேளு. பேசிட்டு தான் தூங்கறோம். மனசுல எதையும் போட்டு குழப்பிட்டு தூங்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல” என்றான் என்ன கேட்க போகிறாள் என்பதை அறிந்தே.
“நீ நல்ல ஹஸ்பெண்ட் தான். என்னை நல்லா தான் பார்த்துக்கிற. ஆனா, நீ என்னை லவ் பண்றியா சரண்?” என்றாள்.
இதை தானே ஐந்து வருடமாக கேட்டு கொண்டிருக்கிறாள். சரண் ஆயாசமாக “அடியேய்.. எத்தனை டைம் சொல்றது, நான் உன்னை லவ் பண்ணலனு என் மனசை கல்லாக்கிட்டு பொய் தான் சொன்னேன், உன்னை பார்த்ததுமே எனக்கு பிடிச்சு போச்சுனு” என்று பதில் சொல்ல, அது அவளை சமாதானப்படுத்தியதாக தெரியவில்லை.
“போ, என்னை லவ் பண்ணிட்டு இல்லனு பொய் சொன்னல, இப்ப மட்டும் உண்மையை சொல்றேனு வாட் அஷ்யூரன்ஸ்? விடு, நான் தூங்க போறேன்” என்று அவனை விட்டு விலகி படுத்துக் கொள்ள..
அன்று இல்லையென்று வார்த்தையை விட்டு, தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவன், “பாப்பா, நம்பு டி. நீ தான் என் முதல் பாப்பா. ஹில் டாப்புக்கு கூட்டிட்டு போய் ஐ லவ் யு வர்ணினு கத்தி காமிச்சிட்டேன். போட் ஹவுஸ் கூட்டிட்டு போய் ஜாக் அண்ட் ரோஸ் மாதிரி நின்னு ஐ லவ் யு, லவ் யூனு கிஸ் பண்ணி காட்டிட்டேன். நெஞ்சுல உன் பேரை டாட்டூ குத்தி உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு காட்டிட்டேன். ஐ லவ் யூனு இம்போசிஷன் மாதிரி லட்சத்தியெட்டு தடவை பேப்பர்ல எழுதி கூட கொடுத்துட்டேன்” என்று இன்றே எழுதியது போல் தன் கை நீட்டி நெட்டு உடைத்தவன் “இப்போ கூட என் மேல நம்பிக்கை வரலயா டி?” என்று ஆற்றாமையாக கேட்க, எழுந்தமர்த்தவள் இல்லையென்று தலையை இடதும் வலதுமாக நன்றாக ஆட்டினாள்.
அவளுக்கா அவனது காதல் புரியாது. பட்டென்று காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டானே என்ற வருத்தம் அவளுக்கு. அத்துடன் புதிது புதிதாக எதையாவது யோசித்து காதலை சொல்லி அசத்தினால், எந்த பெண் தான் விரும்பமாட்டாள். இலட்சத்தி எட்டு முறை ‘ஐ லவ் யு’ என்று சொல்லிக் கொண்டே அவன் எழுதிய போது, அவள் எத்தனை ரசித்தாள்.
இன்றும் என்ன செய்ய போகிறான் என்று ஆவலாக அவள் காத்திருப்பது தெரியாது, மனைவி மனம் உடைந்திருக்கிறாளே, அதுவும் மகப்பேறு காலத்தில் என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சரண்.
பின் யோசனை தோன்றியவனாக அவளிடம் திரும்ப, அதுவரை சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளும் சட்டென முகத்தை மாற்றி கொள்ள, அவளது கன்னம் தாங்கியவன், “வர்ணி, சரண் என்கிறவன் தனி மனுஷன் இல்ல. அவன் உன்னுடைய சரண். அவன் வாழ்க்கை ஒரு கண்ணாடி மாதிரி. நீ சிரிச்சா அவனும் சிரிப்பான். நீ அழுதா அவனும் கண்ணீர் வடிப்பான். நீ துடிச்சா அவனும் துடிப்பான். நீ இல்லைனா அவனும் இல்லடி. நீ அவனை நம்பலனா, அந்த பிம்பம் தன்னையே அழிச்சிக்கிட்டு காணாம போயிடும். ஏன்னா, நீ தான் நான். உன்னை என்னைக்கு முதன்முதலா பார்த்தேனோ, அன்னைக்கே என்னை முழுசா உங்கிட்ட கொடுத்து, சரணடைஞ்சிட்டேன். அதுக்கப்புறம் வந்த கோபம், வெறுப்பு எல்லாம் சூழ்நிலையால ஏற்படுற மனிதனோட தற்காலிக குணமாற்றம். அது பாதியில வந்து, பாதியிலேயே போய்டுச்சு. இப்ப இருக்கறதெல்லாம், வர்ணிக்கிட்ட முழுசா சரணடைஞ்ச இந்த சரண் மட்டும் தான்” என்று தன் ஆழமான காதலை அவளுக்கு உணர்த்தினான்.
காதலிப்பது, காதலிக்கப் படுவது, இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு, இனி நானும், என் வாழ்வும் உனக்கானது என்று அவர்களிடம் சரணாகதி அடைவதே, காதலின் உச்சம். இங்கு வர்ணிகா சரணை அடைந்து உலகத்தின் அத்தனை இன்பத்தையும் பெற்றவளானாள். சரணோ அவளிடமே சரணடைந்து அவளில் தன் இன்பம் கண்டான்.
தன் செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்..
இனிதே நிறைவடைந்தது!!!