All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி
ஹாய் ப்ரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? முதலில் அனைவருக்கும் என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இதோ அடுத்த கதையோடு வந்துவிட்டேன். யதார்த்தமான இன்னொரு கதை. கதையோட நாயகன் நாயகி ரொம்ப ஜாலியான ஜோடி. டாம் ஜெர்ரி லவ். மை ஃபேவேரேட். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.
கதையை படித்து உங்கள் பிடித்தங்களையும் கமென்ட்களையும் பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் ப்ரண்ட்ஸ்.
நன்றி,
நிலா ஶ்ரீதர்✒️
அந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். உடனிருந்த பெண்ணிற்கு சிறு புன்னகையை கொடுத்தவன், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்தவொரு சேதமும் இல்லாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
தொடரும்..
முதல் அத்தியாயம் எப்படி இருந்தது நண்பர்களே..?
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
விமானத்தில், வணிக வகுப்பில் அமர்ந்திருந்த ரகுவரனை எண்ணற்ற சிந்தனைகள் ஆட்கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகளாக அணிந்திருந்த கோபம் என்ற முக மூடியை தூக்கி தூர வீசிவிட்டு இந்தியா கிளம்பியிருக்கிறார்.
அவர் லண்டனில் குடியமர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னும் மும்பையில் தான் வாசம். சென்னைக்கு வந்தே இருபத்தேழு ஆண்டுகள் இருக்கும்.
சோலையப்பனுக்கும் முனியம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் ரகுவரன். அவருக்கு பின் கனிமொழி. ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் சோலையப்பனுக்கு மகனும் மகளும் தான் உயிர்.
சோலைக்கு பின் பிறந்த அனைத்தும் பெண் பிள்ளைகள். ஆம், அவருக்கு ஐந்து தங்கைகள். ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்பார்கள். சோலையின் தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன. அவரால் முடிந்ததெல்லாம் அவர்கள் வயிற்றுக்கு உணவு மட்டுமே. அதனால் தங்கள் வசதிக்கு சோலைக்கும், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் அவரது தந்தை.
மற்ற தங்கைகளின் திருமண பொறுப்பிற்கும், தங்கை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சீருக்கே சோலையின் வருமானம் பெரும்பாலும் சென்றுவிடும். முனியாம்மாளும் நான்கைந்து தெருக்களுக்கு முறைவாசல் செய்ய அவர்கள் குடும்பம் மற்றவரிடம் கையேந்தாமல் ஓடி கொண்டிருந்தது.
இரண்டு பிள்ளைகளையும் ஆங்கில வழி பள்ளியில் சேர்க்க போதுமான பண வசதி இல்லாததால், ரகுவரனை தனியார் பள்ளியிலும், கனிமொழியை அரசு பள்ளியிலும் சேர்த்திருந்தனர்.
ரகுவரன் நன்றாக படிப்பார். பள்ளி படிப்பில் நன்மதிப்பெண்கள் பெற்று அக்காலத்திலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இருந்தும் அவர் வீட்டுக்கும் கல்லூரிக்கும் வெகுதூரம். வந்து போக என்று தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் ஆகும். அதனால் கல்லூரி விடுதியில் தங்கி படித்தார்.
கனிமொழியும் நன்றாக படித்தாலும் ஒருகட்டத்தில் ரகுவரனின் விடுதி கட்டணத்திற்கும் இதர செலவிற்கும் பணம் தேவைப்பட்டதால் எட்டாவதோடு படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவும் மற்றும் துணி துவைக்கும் வேலைக்கு சென்றுவிட்டார்.
ஒருவழியாக படிப்பை முடித்த ரகுவரன் ஒரு நல்ல வேலையில் சென்றமர்ந்தார். அதன் மூலம் குடும்ப நிதிநிலை உயர்ந்ததை எண்ணி சோலை நிம்மதியடைந்திருந்த நேரத்தில் தான் கனிக்கு ஒரு வரன் தானாக வந்தது.
அன்றிரவு நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க.. “நம்ப கனியை கேட்டு வந்த இடத்துல பிடிச்சிருக்குனு சொல்லிருக்காங்க ரகு” என்றார் சோலை.
“நல்லது ப்பா. மாப்பிள்ளை வீடு நம்மள விட ரொம்ப வசதி. அவங்க கேக்கறதுக்கு முன்ன நம்ம கனிக்கு எல்லாமே சிறப்பா பண்ணிடனும் ப்பா” தங்கையின் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்து சொன்ன மகனை பெருமிதமாக பார்த்தார்கள் சோலையும் முனியம்மாளும்.
மேலும் தங்கையின் திருமண ஏற்பாடுகளை பற்றி ரகு ஆர்வமாக விவரித்து கொண்டிருக்க.. “மாப்ள வீட்டுல பெருசா எதுவும் எதிர்பார்க்கல ரகு. மாப்பிள்ளைக்கு அக்கா ஒருத்தங்க கல்யாணமாகாம இருக்காங்க. அவங்கள உனக்கு முடிச்சி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு மட்டும் பார்க்கறாங்க” என்ற சோலை,
“நம்ப கனிய பொண்ணு பார்த்தன்னைக்கே உன்னையும் பார்த்துட்டாங்களாம். அவங்களுக்கு திருப்தியாம். உனக்கும் சரின்னா அவங்க வீட்டுக்கு வந்து பொண்ணு பார்க்க சொன்னாங்க” என்றும் சொன்னதும் அதுவரை தங்கையின் திருமணத்தை பற்றி ஆரவாரமாக பேசிக் கொண்டிருந்த ரகுவின் முகம் வாடி போனது.
அமைதியாக உண்டு முடித்து வந்தமர்ந்த மகனிடம், “ரொம்ப வருஷமா எந்த வரனும் பொருந்தலையாம். என்னமோ உன்னை பார்த்ததும் மனசுக்கு புடிச்சி சோசியரை கேட்க, உங்க பேர் பொருத்தமும் நல்லா இருக்காம். நீ என்ன ரகு சொல்ற?” என்று தந்தை கேட்க..
“அப்பா, இத நான் முன்னாடியே சொல்லிருக்கனும்” என்று நெற்றியை தேய்த்தவர், “நான் என் கூட படிச்ச பொண்ண விரும்பறேன் ப்பா. அவங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். நம்ம வீட்டுல வந்து பேச தயாரா இருக்காங்க. நானும் அவளும் நம்ப கனி கல்யாணத்துக்காக தான் காத்திருக்கோம்” என்றதும் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அதிர்ச்சி.
“என்ன ரகு சொல்ற? இதெல்லாம் நம்மள மாதிரி ஏழை பாலைக்கு தேவையா? நம்ம வீட்டை பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” என்று சோலை கொதித்தெழ
“யோசிச்சதுனால தான்ப்பா கல்யாண வயசாகியும் அவ எனக்காக பொறுமையா காத்திட்டிருக்கா” என்று ரகுவும் சொன்னதும் சட்டென்று எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் சோலை.
இரண்டு மூன்று நாட்கள் தந்தைக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தரகர் மூலமாக தகவல் கேட்டு அனுப்பியிருக்க, இதற்கு மேல் தள்ள முடியாதென்று தந்தை, மகன் இருவரும் ஒரே போல் முடிவு செய்தனர்.
அதன் விளைவு சோலை அடுத்து மகனிடம் பேச வருவதற்கு முன்னே தந்தையின் பிடிவாத குணத்தை நன்கு அறிந்த ரகு, தான் நேசித்த மைதிலியை திருமணம் செய்தே அழைத்து வந்துவிட்டிருந்தார்.
மாலையும் கழுத்துமாக வீட்டினுள்ளே வரவிருந்த ரகுவையும் மைதிலியையும் “அங்கேயே நில்லுங்க” என்றவர், “நான் அவ்ளோ சொல்லியும் உன் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறீயேடா” என்று சோலை ஆவேசப்பட
“உங்க பிடிவாதத்தை பத்தி தெரியும் ப்பா” என்றார் ரகு.
“ஓ.. இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நான் என்னடா பதில் சொல்லுவேன். உனக்காக தன் படிப்பை விட்டுட்டு வேலைக்கு போன அவளுக்கு நீ செஞ்சது இதுதானா? இனி யாருடா என் பொண்ண கட்டுவாங்க?” என்று மகனின் சட்டையை பிடித்து உலுக்க
“அங்கிள் ப்ளீஸ்.. ரகு மேல எந்த தப்பும் இல்ல” என்று குறுக்கே வந்த மைதிலியை கண்கள் தெறிக்க பார்த்தவர்..
“நான் என் புள்ளைய தான் கேட்க முடியும்” என்றார்.
அதோடு மைதிலியின் வாய் பூட்டு போட, ரகுவோ “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது தப்பு தான். அதுக்காக கனி வாழ்க்கையை அழிய விட்டுட மாட்டேன். மாப்பிள்ளை வீட்டுல பேசிப் பார்க்கலாம். அப்பவும் அவங்களுக்கு சம்மதம் இல்லைனா, நானே நம்ப கனிக்கு வேற நல்ல மாப்பிள்ளைய பார்க்கிறேன்” என்றார்.
“எப்படிடா பார்ப்ப.. எப்படி பார்ப்ப? நமக்கு வசதியும் இல்ல. உன்னால என் பொண்ணு படிக்கவும் இல்ல. இந்த சம்மந்தமே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற நோக்கத்துல தான், வசதி, படிப்புனு எதையும் பார்க்காம வந்தது. அதையும் கெடுத்துட்டியே டா” ஓர் தந்தையாக மகளின் வாழ்க்கையை எண்ணி தொண்டையை அடைந்த துக்கத்தை அடக்கி கொண்டு..
“இதுக்கு மேல என் பொண்ணு வாழ்க்கைய எனக்கு பார்க்க தெரியும். இனி எனக்கு பொண்ணு மட்டும் தான், பையன் செத்து போயிட்டான். வெளிய போ” என்று வாசலை காண்பித்தார். முனியம்மாளும் கனியும் அவரின் பேச்சை மீறி பேச முடியாமல் நடப்பதை கலங்கி பார்த்திருந்தனர்.
ரகுவும் மைதிலியும் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், ஒருவாரம் மைதிலியின் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கிருந்து தான் மைதிலி கல்லூரி படிப்பை படித்தார். மற்றபடி அவர் குடும்பமெல்லாம் மும்பையில் வசிக்கின்றனர். அதற்குள் கனிக்கு வந்த வரனும் முறிந்து விட, தந்தையின் மனம் கரைய வாய்ப்பில்லை என்பதை புரிந்த ரகு, மனைவியுடன் மும்பை சென்றுவிட்டார்.
இரண்டு வருடம் ஓடிவிட்டிருக்க, ரகுவரனுக்கும் மைதிலிக்கும் ஒரு வயதில் மகன் இருக்கிறான். ரகுவும் இப்போது மாமனாரின் குடும்ப தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் மகனை காட்டிலும் மருமகனை அதிகம் நம்பினார் அவரது மாமனார்.
அப்போது கனிக்கு ஒரு நல்ல வரன் வர, அதை குறித்து பேச அவர் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்திருந்தார்.
வழக்கம் போல் மகனை வீட்டிற்குள் விடாமல் சோலை முறைத்திருக்க, “உங்க கோவம் என்னோட போகட்டும் ப்பா. நம்ம கனிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. உங்க எல்லாருக்கும் விருப்பம்ன்னா பேசி முடிச்சிடலாம்” என்றார் ரகு.
“பேசி முடிக்க தான் போறேன். ஆனா, நான் பார்த்த வரனை. பையன் பேரு பாலமுருகன். நான் வாட்ச்மேனா இருக்க ஃபேக்டரில டெம்பரரி ஸ்டாஃப்பா இருக்காரு. சீக்கிரம் பெர்மனெண்ட் பண்ணிடுவாங்க. பிக்கல், பிடுங்கல் இல்லாத எங்களுக்கு ஏத்த இடம்” என்று அழுத்தமாக கூறினார்.
“என்னது ஃபேக்டரில வேலை செய்யறவனா? அதுவும் பெர்மனெண்ட் கூட இல்ல”
“எங்க வசதிக்கு என்னமோ அத தானப்பா நாங்க பார்த்துக்க முடியும். ஒரு தடவை புள்ளைனு நம்பி அகலக்கால் வச்சி அவமானப்பட்டது போதாதா?”
“ஐயோ.. அப்போ என்னால எதுவும் பண்ணமுடியாத நிலை. இப்போ நான் என் மாமனார் கம்பெனிக்கு எம்.டி. என்னால என் தங்கச்சிக்கு பெரிய சம்மந்தத்தை கூட முடிக்க முடியும்”
“அது உன் காசு இல்லயே பா, உன் மாமனார் காசு. அடுத்தவங்க காசுல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற அளவுக்கு சோலை தாழ்ந்து போய்டல. நாங்க பார்த்துகிறோம், நீ கிளம்பு”
“இது எப்படிப்பா நம்ம கனிக்கு நல்ல இடமா இருக்கும்?” ரகு மீண்டும் அதிலே நிற்க..
“என்ன பண்றது, பிள்ளை படிச்சி தலை தூக்கினா, அவன் இந்த குடும்ப பாரத்தை சுமப்பான்னு பார்த்தோம். அது இல்லங்கிற போது எங்க வசதிக்கு என்னமோ அத தான பார்த்துக்கணும். அதுக்குன்னு என் பொண்ணுக்கு ஏதோ ஒரு வரனை பார்த்திடல. பையன் தங்கம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என் பொண்ணுக்கு மட்டுமில்ல, இந்த வீட்டுக்கும் மகனுக்கு மகனா இருப்பாரு. இவ்ளோ ஏன், நாளைக்கு நாங்க செத்தா கூட நீ வர கூடாது. எங்களுக்கு எங்க மாப்பிள்ளை தான் கொள்ளி போடுவாரு” தந்தை பேசியதை கேட்டு ரகுவரன் அதிர்ந்து தாயையும் தங்கையையும் திரும்பி பார்த்தார்.
இருவரும் கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்களே தவிர மறுத்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
“கனி.. அண்ணன் உனக்கு நல்ல வாழ்க்கைய தான் அமைச்சு தர பார்க்கறேன். அப்பா சொல்ற வரன் உனக்கு வேண்டாம் டா” தங்கையிடம் பரிவாக சொல்ல, அவர் பதிலேதும் சொல்லாது தலைகுனிந்து நின்றிருந்தார்.
“என் பொண்ணு யார் பேச்சையும் கேட்க மாட்டா. திரும்பி இந்த வீட்டு பக்கம் வந்துடாத” என்று கதவை அறைந்து சாற்றிவிட்டார்.
பெருத்த மனவேதனையுடனும் அவமானத்துடனும் ரகுவரன் அங்கிருந்து கிளம்ப, பின்வாசல் வழியாக ஓடி வந்த கனி அண்ணனின் காரின் குறுக்கே கையை போட்டார்.
தங்கையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த ரகு “கனி.. அண்ணன் உன் மேல வச்சிருக்க பாசம் பொய் இல்லடா. அப்பா பார்த்திருக்க மாப்ள உனக்கு வேண்டாம்” தன் கோட்டின் உட்புறமிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தவர், “இங்க பாரு. நான் உனக்காக பார்த்த மாப்பிள்ளை. உன்னை நல்லா பார்த்துப்பார் கனி. சரின்னு சொல்லு, அப்பாவை எதிர்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்” என்றார்.
“எனக்கு நீ வேணும் ண்ணா. ஆனா இந்த கல்யாண விஷயத்தை அப்பா போக்குல விட்டுடேன்” என்று கலங்கி கேட்க, ஏனோ ரகுவிற்கு கோபம் தான் வந்தது.
“அப்போ நீ, அம்மா எல்லாரும் அவரோட சேர்ந்து என்னை ஒதுக்கிட்டீங்கல?”
“அப்படி இல்லண்ணா.. என் கல்யாணம் நம்ம அப்பா இஷ்ட..”
“இஷ்டபடியே நடக்கட்டும், நீ தலையிடாதடானு சொல்ற. அப்படி தான? சரி, இனி உனக்கு அண்ணன் இல்லைனு நினைச்சிக்கோ” கோபமாக பொரிந்துவிட்டு, கனி கண்ணீரோடு நிற்பதையும் பொறுப்படுத்தாது வேகமாக காரில் ஏறி கிளம்பிவிட்டார்.
அதன்பின் தொழில் சம்மந்தமாக கூட சென்னை வரவில்லை. இருபத்தியேழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தான் சென்னையில் காலெடுத்து வைக்கிறார்.
ஏனோ சிலவருடங்களாக தங்கை மற்றும் குடும்பத்தின் நினைவு அதிகமாக வர, அவர்கள் இருந்த பழைய வீட்டிற்கு ஆள் அனுப்பி பார்க்க சொல்ல, அங்கே யாருமில்லை, மாறி சென்றுவிட்டார்கள் என்று தகவல் வந்தது. தந்தையும் தங்கை கணவரும் வேலை செய்யும் தொழிற்சாலையை பற்றி விசாரித்த போது, அது இருபது ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக தெரியவர, தன் குடும்பத்தையும் தங்கை குடும்பத்தையும் வலை வீசி தேடிய பலன், இரண்டு நாட்களுக்கு முன் தாய், தந்தை இறந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தங்கையின் குடும்பம் மட்டும் சென்னையில் தான் வசிப்பதாகவும் செய்தி வர, உடனே சென்னை கிளம்பிவிட்டார்.
தங்கையின் வீட்டு வாசலில் வந்து நின்றவரை பிரமித்து பார்த்த கனி, அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவந்து “அண்ணா.. இப்போ தான் இந்த தங்கச்சிய ஞாபகம் வந்துசா ண்ணா?” என்று அவர் தோளில் சாய்ந்து அழ, ரகுவும் உணர்ச்சி பெருக்கில் ஒன்றும் பேசாமல் தங்கையின் தலையை வருடி கொடுத்து கொண்டிருந்தார்.
சில நிமிட பாச பிணைப்பிற்கு பிறகே அண்ணனை இன்னும் வாசலிலேயே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் “நான் பாரு. உள்ள வா ண்ணா” என்று அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர சொன்னவர், “என்னங்க.. யார் வந்திருக்காங்கனு பாருங்களேன்” என்று அறையிலிருந்த கணவரை அழைத்தார்.
பாலமுருகனும் எழுந்து வெளியே வர, அதற்குள் அண்ணனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர் “என் வீட்டுக்காரர் ண்ணா. நீ தான் கல்யாணத்துல இல்லாம போய்ட்டியே. இந்த நேரத்துல கடையில தான் இருப்பார். இன்னைக்கு உடம்பு முடியலன்னு வீட்டுல இருக்கார்” என்று கணவரை பற்றி கனி சொல்ல..
‘கடையா?’ என்று ரகு புருவம் சுருக்க.. “அது ஃபேக்டரிய மூடிட்டாங்க ண்ணா. அதுல அப்பாவுக்கும் இவருக்கும் வேலை போய்டுச்சு. வேற இடத்துலயெல்லாம் அப்பாவுக்கு வயசாகிடுச்சுனு வேலை தரல. இவரும் டெம்பரரி தான. குடும்ப பொருளாதாரம் ரொம்ப இறங்கி போச்சு. அந்த கவலையிலேயே அப்பா முன்னயும், அவருக்கு பின்ன அம்மாவும் போய்ட்டாங்க” என்றவர் நெஞ்சை அடைத்த துக்கத்தை இழுத்து பிடித்து,
“உனக்கு சொல்லலாம்னா, நீ எங்க இருக்கனு எதுவும் விவரம் தெரியல. இவர் தான் எல்லாம் பண்ணார். நாங்க பசியோட இருக்கலாம், பசங்களால இருக்க முடியாதுல. அதான் இவரே ரோட்டுல கடை போட்டுட்டார். நானும் ஒரு வீட்டுல சமையல் பண்ணி, பாத்திரம் கழுவி, கூட்டி பெருக்குறதுனு மொத்த வேலையும் பார்த்துக்கிறேன். அது தவிர இன்னும் மூணு வீடுங்கள்ல பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தொடைச்சி சுத்தம் செஞ்சி தருவேன். பொண்ணும் வேலைக்கு போறா. பையன் காலேஜ் முடிஞ்சதும் சாயந்திரத்துல அவன் அப்பாவுக்கு உதவி பண்ணுவான்” தன் குடும்பத்தை பற்றிய அனைத்தையும் எந்தவொரு சஞ்சலமும் இன்றி சொல்லியிருந்த தங்கையை தான் இமைக்காது பார்த்திருந்தார் ரகு.
“கடைன்னா?” அமைதியை உடைத்து அவர் கேட்க..
“அது சீசனுக்கு ஏத்த மாதிரி. வெயில் காலத்துல லெமன் ஜூஸ், ரோஸ் மில்க், சர்பத்.. குளிர் காலத்துல சூப் அப்படினு போடுவோம் ண்ணா. நான் தான் எல்லாம் போட்டு கேன்ல ஊத்தி கொடுத்து விடுவேன். அவர் கொண்டு போய் வித்துட்டு வந்திடுவார்” என்றார்.
அந்நேரம் மாடியிலிருந்து காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மகளை காட்டி “இதோ. என் பொண்ணு சுசி.. சுசித்ரா” என்று மகளை அண்ணனுக்கு அறிமுகப்படுத்தியவர் “சுசி, மாமா. சின்ன வயசுல கோச்சிக்கிட்டு போய்டுச்சுன்னு சொன்னேன்ல என் அண்ணன். இப்ப தான் திரும்ப வந்திருக்கு” என்று மகளிடம் பெருமிதமாக சொன்னார்.
அவரும் மருமகளை பார்த்து புன்னகைக்க, சுசிக்கு தான் என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் திகைத்து விழித்திருந்தாள்.
“ஏங்க, அண்ணனுக்கு கசகசன்னு இருக்கும். நீங்க மெத்தை வீட்டு அக்காகிட்ட கூலர் வாங்கிட்டு வர்றீங்களா. கொஞ்ச நேரத்துல தந்திடுறோம்னு சொல்லுங்க” என்று சொல்ல, மனைவி பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் பாலமுருகனும் சென்றார்.
“சுசி, மாமாக்கு குளிர்ச்சியா ஏதாவது கலந்து கொண்டு வா” என்று மகளையும் விரட்ட, தங்கையின் தோற்றத்தையும், அவரின் குடும்பத்தின் நிலையையும் தான் ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்திருந்தார் ரகு.
தன் வசதியென்ன.. கடல் போல் அங்கிருக்கும் வீடு என்ன.. இங்கு தங்கை இருக்கும் நிலை தான் என்ன.. இந்த வயதிலும் ஆரோக்கியமான உணவாலும், செல்வ செழிப்பாலும் அவருக்கு ஐம்பத்திநான்கு வயது என்று சொல்ல முடியாத இளம் தோற்றத்தில் இருந்தார். ஆனால், தன்னை விட ஐந்து வயதிற்கும் சிறியவரான தன் தங்கையின் தோற்றமோ பின் ஐம்பதுகளில் இருப்பவர் போல் முகமெல்லாம் களையிழந்து பொலிவில்லாமல் இருந்தார்.
சுசியையும் பார்த்தார். அந்த வயதிற்குரிய அழகியே அவள். இருந்தும் மிகவும் ஒடிசலாக சோர்ந்த முகத்துடன் தெரிந்தாள். அங்கே தன் பிள்ளைகள் செல்வந்தர் வீட்டு வாரிசாக செழுமையோடு மிளிர்ந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.
ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான தனக்கும் தன் தங்கை வீட்டுக்கும் இடையே எத்தனை பெரிய எட்டமுடியாத இடைவெளி. எங்கோ தான் சரியென்று நினைத்தது, இங்கு தவறாக முடிந்துவிட்டதோ என்று யோசித்திருந்தவரால் எதுவும் பேச முடியாமல் போக, அந்த வீட்டையும் அங்கிருந்தவர்களையும் அமைதியாக பார்த்திருந்தார்.
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
Currently viewing this topic 1 guest.
Our newest member: Punithakarthik Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed