அத்தியாயம் - 15
கனி தான் வேலை செய்யும் வீட்டில் “அம்மா, இன்னைக்கு மருமக வெளில கூப்பிட்டிருக்கு. நைட்டுக்கு சப்பாத்தியும் ராஜ்மாவும் செஞ்சி ஹாட்பேக்ல வச்சிட்டேன். நான் கிளம்பவா?” என்று தயங்கி கேட்க, அவரது கண்களில் தெரிந்த ஆவலை கண்ட அவர் வேலை செய்யும் வீட்டின் முதலாளி அம்மா அவரை சென்றுவர அனுமதித்தார்.
மாமியாரும் மருமகளும் வெளியே சென்றுவிட்டு திரும்ப, வரு கனியை வீட்டில் விட்டு விட்டே கிளம்பினாள்.
வீட்டிற்குள் நுழைந்த கனி அங்கு மகன் இருப்பதை பார்த்து “சரண், நீ இங்க தான் இருக்கியா.. இப்போ தான் வரு என்னை நம்ம வீட்டுல விட்டுட்டு கிளம்பிச்சு” என்றார்.
சரணோ அதை பெரிதாக கண்டு கொண்டது போல் தெரியவில்லை. சுசிக்கு சீமந்தம் முடிந்து அவள் இப்போது தாய் வீட்டில் இருக்கின்றாள். அதனால் அக்காவை பார்க்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் சரண் இங்கு வருவதுண்டு. அவன் தன் வண்டியை இரண்டு வீடு தள்ளி நிறுத்தியிருக்க, வருவிற்கு கணவன் வீட்டிலிருப்பது தெரியாமல் மாமியாரை மட்டும் வாசலில் இறக்கிவிட்டு சென்றிருந்தாள்.
மகனிடம் வந்த கனி அவன் கையில் ஒரு நகைபெட்டியை கொடுத்து “வரு வாங்கி கொடுத்துச்சு சரண். எதுக்கு இதெல்லாம்னு கேட்டா, நீங்க என் அத்தை, அதுவும் நான் பொறந்துல இருந்தே என் அத்தைனு சொல்லுது” என்றவர் மருமகளின் பேச்சில் மொத்தமாக மயங்கி தான் போயிருந்தார்.
‘நான் போட்ட பிட்டை இவ ஒவ்வொரு இடத்துலயும் போட்டுட்டு இருக்காளே’ என்று நெற்றியை தேய்த்தவன் “அம்மா, உங்க மருமக மேல இருக்க பாசத்துல எங்கயாவது சைன் கேட்டா போட்டு கீட்டு கொடுத்திட போறீங்க” என்றான் தாயை எச்சரிக்கும் விதமாய்.
“அட போ சரண். என் பேர்ல சொத்து இருக்கு பாரு, அதை என் மருமக கையெழுத்து போட்டு வாங்கிக்கிறதுக்கு” என்று நொடித்துக் கொண்டவர் “வரு ரொம்ப நல்ல பொண்ணு. வழியெல்லாம் நம்ப சுசி பிரசவத்தை பத்தி தான் கேட்டுட்டு இருந்துச்சு. செலவுக்கு காசு தயாரா வச்சிருக்கணும்னு இதோ எவ்ளோ வேண்டாம்னு சொல்லியும் இந்த காசை கையில கொடுத்துட்டு போயிருக்கு” என்று பணத்தையும் காட்டினார்.
சரண் குழப்பமாக அன்னையை பார்த்திருக்க, அவர் மகனின் தலையை வருடியவாறு “வரு இந்த வீட்டுக்கு கிடைச்ச வரம். எனக்கு நம்பிக்கை இருக்கு. அது நிச்சயம் நம்ப குடும்பத்தை மேன்மைக்கு கொண்டு வந்திடும்” என்று மருமகளை பற்றி நிறைவாக கூறினார்.
அதில் எரிச்சலுற்றவன் “நமக்கு யாரும் செய்ய வேண்டாம் ம்மா” என்று சட்டென்று எழுந்துக் கொண்டான்.
“அது உன்மேல நிறைய அன்பு வச்சிருக்கு சரண். இன்னைக்கு அவ்ளோ வலியையும் தாங்கிட்டு உனக்கு பிடிக்குமேனு மூக்கு குத்திக்கிச்சு. அது கண்ணுல அத்தனை வலி தெரிஞ்சும் ஒண்ணுமில்ல அத்தை, வலிக்கலனு சொல்லுச்சு. ஒரு பொண்ணா என்னால அது மனசை நல்லா புரிஞ்சிக்க முடியுது. உனக்காக தான் தன்னை மாத்திக்கிட்டு ஒவ்வொன்னையும் செய்யுது. அப்படி இருக்கிறப்போ நீயும் தேவையில்லாத வம்பை இழுக்காம அது கூட சந்தோசமா இருக்கணும்” என்று அவர்கள் வெளியே சென்றதற்கான உண்மை காரணத்தை கனி சொல்ல, அப்போதே அன்னையை மயக்க தான் கடைக்கு அழைத்து சென்று கம்மல் வாங்கி கொடுத்திருக்கிறாள் என்று எண்ணியது தவறென்று புரிந்தது.
அதோடு அவள் தனக்காக மூக்கு குத்தி இருக்கிறாள் என்று கேட்டதுமே அவளை மூக்குத்தியுடன் காணும் ஆசை பிறக்க, நொடி பொழுதும் தாமதிக்காமல் அன்னையிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
வருவும் கணவனிடம் காட்டும் ஆவலில் தான் வீட்டிற்குள்ளும் வராது சென்றிருந்தாள்.
வரு வீட்டு கதவை திறந்து உள்ளே நுழையவும் சரியாக தானும் உள்ளே வந்தவன் அவளை பின்னிருந்தே அணைத்துக் கொண்டு கதவை தன் காலால் அடைத்தான்.
“எனக்காக என் துரையம்மா என்னென்னமோ பண்றா போலயே” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன், அவளை தன்பக்கம் திருப்பி பார்த்தான். சிறு வெள்ளை வைரகல்லில் மூக்குத்தி அணிந்திருந்தாள்.
அதை ரசித்தாலும் “வலிக்குதா..” என்று அவள் கன்னம் தாங்கி கேட்டான்.
அவள் அதற்கு இல்லையென்று தலையாட்டி “என் சரணிக்கு பிடிக்கும்ல” என்றாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “வலிக்கும்னு எனக்கு தெரியும்டி. மருந்து போட்ருவோமா” என்றுவிட்டு அவள் மூக்குத்தியில் முத்தமிட்டான். அதில் அவள் வலியில் சிணுங்க.. “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்று அவளை அணைத்துக் கொண்டான்.
அவளை அணைப்பில் வைத்துக் கொண்டே “சாரி, இத்தனை நாளா உன்னை புரிஞ்சிக்காம இருந்துட்டேன். நம்பறேன்.. நீ எனக்கு மட்டுமில்ல, என் குடும்பத்துக்கும் நல்லது தான் செய்வேன்னு நம்பறேன்” என்றான்.
சட்டென அவனை தள்ளி நிறுத்தியவள் “அவர்(Our) பேமிலி சரண்” வலி நிறைந்த குரலில் சொன்னாள்.
அப்போதே தன் தவறு புரிய, “சாரி” என்று மனதிலிருந்து கேட்டான்.
“என்னை நம்பற தானே சரண்?” கண்களில் எதிர்பார்ப்புடன் வரு கேட்க..
சரணும் “என் அம்மா, அக்காவுக்கு அடுத்து நான் உன் பேச்சை தான் கேக்கறேன். உன்னை தான் அதிகம் நம்பறேன்” என்று ஆணிதரமாக பதிலளித்தான்.
“நமக்கு இது போதும் சரண். ஆனா, அத்தை, மாமா, சுசி அண்ணின்னு எல்லாரும் பாதிக்கப்படறாங்க. மணி பிலேஸ் எ மேஜர் ரோல் இன் தெயர் லைவ்ஸ். அதான் பிசினஸ்க்காக டேட் கிட்ட பேசினேன்” என்றதும் அவர்களது குடும்பத்தை பற்றி யோசிக்கும் தன்னவளை மெச்சுதலாக பார்த்தவன்,
“புரியுது டி” என்று அவள் புறங்கையில் முத்தம் வைத்தான்.
“கோபம் வந்தா நம்ப அனிவர்சரிய கூட மறந்திடுவல.. நான் உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்னு தான் நோஸ்பின் போட்டேன். ஆனா நீ எனக்கு ஒண்ணுமே வாங்கி தரல. உனக்கு என்மேல இருக்குற கோவம் தான் பெருசுல சரண்?” இப்போது அவனிடம் அவள் ஊடல் கொள்ள..
“அப்படி இல்லடி. நாளைக்கு தானே கல்யாண நாள். அதுக்குள்ள கண்டிப்பா எதாவது கொடுத்திருப்பேன்” என்று மழுப்பியவனை அவள் இடுப்பில் கைவைத்து முறைக்க, “நான் ஒண்ணும் வாங்கிட்டு வரலன்னு யார் சொன்னா” என்று தன் பையிலிருந்த பூவை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதற்கு மேலும் அங்கே சண்டை நீடிக்குமா என்ன. பூவை சூட்டிக் கொள்ள மலர்ந்த முகமாக திரும்பி நின்றாள்.
அன்று சுசியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. சுசித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அம்மா வீட்டில் தான் பெயர் சூட்டு விழா நடக்க, சரணும் வர்ணியும் விடியற்காலையிலேயே இங்கு வந்துவிட்டனர்.
கனியும் பாலனும் அரைஞாண் கொடி வாங்கியிருக்க, சரண் குழந்தைக்கு தங்க சங்கிலி வாங்கியிருந்தான். வரு தன் பங்கிற்கு கை காப்பும், மோதிரமும், கால் கொலுசும் வாங்கி, அதை குழந்தைக்கு சரணை வைத்தே போட வைத்தாள். சுசியும் பார்த்தியும் தங்கள் குழந்தைக்கு நிலவன் என்று பெயர் சூட்டினர். ஆனால் சரணை பொறுத்தவரை அவனுக்கு அவன் மருமகன், சேம்ப் என்ற சாம்பியன்.
அன்றைய நாள் அனைவருக்கும் சிறப்பாகவே அமைந்தது. பின் மாலையில் இருவரும் வீட்டிற்கு திரும்ப, வழக்கம் போல் சரண் தான் வருவின் காரை இயக்கினான்.
ஓர் ஆள் அரவமற்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவள் எதிர்பாரா வண்ணம் வருவின் கன்னத்தில் இதழ் பதித்த சரண் “தேங்க் யு டி” என்றான்.
அவள் அவனை புரியாமல் பார்க்க, “சுசி குழந்தைக்கு என்னால வெறும் செயின் தான் போட முடிஞ்சது. எனக்கே தெரியாம அம்மாவை கூட்டிட்டு போய் எல்லாம் வாங்கி வச்சிட்ட” என்று அவள் மூக்கை செல்லமாக ஆட்டி கொஞ்சினான்.
அவன் கரத்திற்கு இடையே தன் கரம் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் “உனக்கு என்னை பிடிக்கும் தானே சரண்?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்”
“நம்ப லைஃப் உனக்கு பிடிச்சிருக்கு தானே?”
“ஹ்ம்ம்”
“நீ ஹேப்பிய தானே இருக்க?”
ஏனோ அதற்கு அவன் “இல்லடி” என்று உதட்டை பிதுக்கினான்.
சட்டென்று தன் கரத்தை அவனிடமிருந்து உருவிக் கொண்டவள், அவனை கேள்வியாய் பார்க்க, “நாம சந்தோஷமா இருக்கோம். இல்லைன்னு சொல்லல. ஆனா நான் சந்தோஷமா இல்லடி. வீட்டுல சேம்ப்ப பார்த்தல. அவனை இப்படி என்னைக்கோ ஒருநாள் பார்த்துட்டு வர்றதா இருக்கு. இன்னும் சுசி எத்தனை மாசம் வீட்ல இருக்குமோ. நான் ஒண்ணு கேக்கட்டுமா வர்ணி?” என்று புதிர் போட, அவள் என்ன என்பதாய் அவனை பார்த்தாள்.
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவன், “நாம நம்ம வீட்டுக்கே போய்டலாமா? எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்” என்று அவள் கைகளை பிடித்துக் கேட்டான்.
சரணின் வீட்டை ஒருமுறை யோசித்து பார்த்த வருவிற்கு “அது.. சரண்.. என்னைக்கோ ஒரு நாள் மார்னிங் போயிட்டு ஈவ்னிங் வர்றதுனா ப்ராப்ளம் இல்ல. ஏன், நைட் வரைக்கும் கூட இருக்கலாம். ஆனா அங்கேயே எப்பவும் இருக்குறது என்னால முடியும்னு தோணல” என்று மென்று முழுங்கினாள்.
அதில் சரணுக்கு கோபம் கொப்பளிக்க, அவள் கையை உதறியவன் வேகமாக கியரை போட்டு காரை உயர்பிக்க, அவனை தடுத்த வர்ணி “லெட் மீ பினிஷ், சரண். இப்போ நாம இருக்குறது என் டேட் கொடுத்த வீட்டுல. அங்க அத்தை, மாமாவை கூட்டிட்டு வந்து வச்சிக்கலாம்னா ஒரு எக்ஸ்ட்ரா ரூம் கூட இல்ல. லெட்ஸ் ரிடர்ன் திஸ் ஹோம் டு மை டேட். நாம ரெண்டெட் ஹவுஸ் போய்டலாம். அங்க மாமா, அத்தை, சுசி அண்ணி, சேம்ப் எல்லார் கூடவும் நீ இருக்கலாம்” என்று தன்னவனின் ஏக்கம் புரிந்துச் சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்டவன் நொடியும் தாமதிக்காது “தேங்க்ஸ் டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.
அவளோ “இந்த இடத்துல நீ ஐ லவ் யு சொல்லணும் சரண்” என்று குறும்பு பேசினாள்.
அதற்கு பதிலேதும் சொல்லாமல் வண்டியை எடுத்தவன் ‘இன்னும் ஒன் மந்த் பொறுத்துக்கோ, உன் பர்த்டே அன்னைக்கு சொல்றேன். என்னால உன்னை போல ஐபோன் கொடுத்தெல்லாம் விஷ் பண்ண முடியாது. என்கிட்ட இருக்கிறதெல்லாம் என் காதல் மட்டும் தான். அதை திரும்ப திரும்ப முத்தம் வச்சி வச்சி உங்கிட்ட பாராயணம் பண்ணனும் டி’ கண்கள் சாலையில் இருந்தாலும் மனம் தன் போக்கில் அவளிடம் பேசிக் கொண்டே சென்றது.
அடுத்த நாள் விடுமுறையாக இருக்க, சூரியன் நடு உச்சிற்கே வந்துவிட்டார், வருவோ இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
சரண் தான் “மகாராணி.. எழுந்துக்கோங்க.. லண்டன்ல மணி எத்தனையோ.. ஆனா கண்டிப்பா விடிஞ்சி இருக்கும்” என்று அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்.
அவளோ எழுந்தப்பாடில்லை. கடைசியாக அவள் கால்களை சுரண்டி அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட, “சரண்.. என்ன பண்ற.. நைட்லயும் தூங்க விட மாட்டற, காலைலயும் தூங்க விடமாட்டற” என்று சிணுங்கிக் கொண்டே எழுந்தமர்ந்தாள்.
அவள் பேசியதில் தன் வாயை மூடி கொண்டவன், தலையில் அடித்துக் கொண்டு “மானத்தை வாங்காம எழுந்திருங்க துரையம்மா” என்று குழைந்தான்.
அவளும் எழுந்தவள், அவன் மீது ஏறி அட்டை போல் ஒட்டிக் கொண்டாள்.
“அம்மாடி.. இன்னைக்கு என்ன மேடம் ஓவர் மூட்ல இருக்கீங்க. கீழே இறங்குங்க துரையம்மா. வேலை இருக்கு”
“இல்ல.. இப்படியே தூக்கிட்டே செய்” என்று அடம் பிடித்தாள்.
“நான் போய் சமைக்கணும் டி. இப்பவே மணி பன்னிரெண்டே கால். என் பாப்பாவுக்கு பசிக்கும். லஞ்சாவது சாப்பிட வேண்டாமா..” என்று அவளிடம் செல்லம் கொஞ்ச, அவளும் ஒரு வழியாக இறங்கியவள்
“சரண், நான் இன்னைக்கு சமைக்கவா?” என்று அவன் அதிரும் படி கேட்டாள்.
அதில் அவளை திகைத்துப் பார்த்தவன் “கிச்சன்ல என்னென்ன இருக்கும்னு தெரியுமா?” என்று கேள்வியாக கேட்டான்.
“நீ சொல்லி கொடு, தெரிஞ்சிக்கிறேன்” என்று அவனிடம் வம்பு செய்ய, “சரி போய் குளிச்சிட்டு வா. செய்யலாம்” என்றான்.
இருவரும் சமையலறையில் இருக்க, சரண் மனைவி கையால் சாப்பிட போகிறோம் என்று ஆர்வமாக ஒவ்வொன்றையும் அவளுக்கு சொல்ல, கணவனுக்கு தன் கையால் செய்யும் முதல் சமையல் என்பதால் வருவும் ஆசையாக அனைத்தையும் கேட்டு செய்துக் கொண்டிருந்தாள்.
அந்தோ பரிதாபம், அந்த உணவை அவர்கள் சாப்பிடவே போவதில்லை என்பது இருவரும் அறிந்திராதது.
தான் செய்ததை வரு கரண்டியில் எடுத்து சரணுக்கு ருசி பார்க்க கொடுக்க “தங்கமே, சூப்பரா இருக்குடி. அவ்ளோ தான் வர்ணி. இது நல்லா கொதிக்கணும்.. கொஞ்சம் நேரம் மூடி வை. அப்புறம்..” என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில் விதி அவர்களுக்கு அலைபேசி அழைப்பு ரூபத்தில் வந்து விளையாடியது.
தனக்கு வந்த அழைப்பை ஏற்ற வர்ணி “ஹலோ.. ஹலோ..” என்று குரல் கொடுக்க, அம்முனையில் என்ன பேசினார்கள் என்றே அவளுக்கு கேட்கவில்லை.
அழைப்பை அணைத்துவிட்டு கைபேசியை எடுத்து தூர வைத்தவள் சமையலில் கவனத்தை செலுத்த மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
“சரண், யாருன்னு பாரேன். என்ன பேசறாங்கனே கேட்க மாட்டேங்கிது” என்று வர்ணி சரணிடம் கைபேசியை கொடுக்க, அவளிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தான்.
சரண் அழைப்பை ஏற்றதுமே யாரென்றும் பாராமல் “ஹலோ வரு.. நான் மனு பேசறேன். இது என் நியூ நம்பர். நீ தான் என்னோட நம்பரை பிளாக் பண்ணிட்டியே. நல்லா தான பேசிட்டு இருந்த. திடீர்னு என்னாச்சு வரு. எனக்கு இப்போ மணி தேவைப்படுது” என்றிருந்தான் மனோஜ்.
அதை கேட்ட சரணுக்கு கை முஷ்டிகள் இறுக, நரம்புகள் புடைக்க, கண்களில் சிகப்பு வரிகள் ஓடியது. அடுத்து மனோஜ் சொன்னதை கேட்டவன் அங்கிருந்த சோபாவிலேயே அதிர்ந்து அமர்ந்துவிட்டான்.
வெகுநேரமாகியும் சரண் வராமல் போக வருவே அவன் சொன்னது போல் உணவு தயாரானதும் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்தாள்.
அங்கே சோபாவில் அமர்ந்திருந்த கணவனை பார்த்தவள் “ஹேய் சரண்.. ஒரு ஃபோன் பேசிட்டு வர இவ்ளோ நேரமா.. நானே எல்லாம் ஆஃப் பண்ணிட்டேன். யாரு ஃபோன்ல?” என்று கேட்டுக் கொண்டே கேசம் கோத அவன் தலையருகில் கையை கொண்டு போக, அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.
அதில் அவன் சிவந்த கண்களை பார்த்தவள் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்து கைகளை காற்றிலேயே நிறுத்தியிருந்தாள்.
இருந்தும் வாய் மட்டும் “என்னாச்சு சரண்.. யாரு ஃபோன்ல?” என்று மீண்டும் கேட்க
அவன் சட்டென்று தன் இடத்திலிருந்து எழுந்த வேகத்தில் அவள் இரண்டடி பின்னுக்கு நகர “ஹான் உன் அண்ணன். இப்போ மும்பையில இருக்கானாம். அவனுக்கு செலவுக்கு காசு பத்தலயாம். நீ மாசா மாசம் போடுற பணத்தையே கொஞ்சம் சேர்த்து போட சொல்றான்” என்றுவிட்டு சரண் வருவை பார்த்த அனல் பார்வையில் தன் வாயில் கைவைத்துக் கொண்டாள்.
அவனோ அவளையே உக்கிரமாக முறைத்திருக்க “அது சரண்.. அது.. நான்.. முன்ன.. நா..ன்.. அது நான்.. மனுகிட்ட..” என்று தடுமாறி “மனுவ டேட் எதுலயும் சேர்.. சேர்த்துக்கல.. அதா..ன் அவன் என்கிட்ட ம.. மணி கேட்டா..ன்.. பர்ஸ்ட்ல அவன் கூ..ட பேசிட்டு தா..ன் இருந்தேன்.. எப்போ உன்னை லவ் பண்..ண ஆரம்பிச்ச..னோ அப்போதுல இருந்து பேசல சரண். ப்ராமிஸ்.. நா..ன் பேசல.. உ.. உனக்..கு பிடிக்காதுல.. அதா..ன் பேசல” என்று அவன் கோபத்திற்கு உதடுகள் தந்தியடிக்க பதிலளித்தாள்.
அதில் உணர்வுகள் அனைத்தும் வடிந்தவனாக “எங்க அக்கா கல்யாணம் எப்படி நின்னுச்சு வர்ணிகா?” என்று அவளை கூர்மையாக பார்த்துக் கேட்டான்.
தன் அக்காவை மணக்கோலத்தில் நிறுத்திவிட்டு ஓடிவிட்டவனோடு பேசுகிறாயே என்ற ரீதியில் கேட்கிறான் என்று எண்ணியவள் தன் அண்ணன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து சொல்வதாக “மனு எங்க மாமா பொண்ணு மித்துவ லவ் பண்ணான். இது டாடிக்கு தெரியாம சுசி அண்ணி கூட மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டார். டேட் கிட்ட சொல்ல பயந்துக்கிட்டு மேரேஜ் வரைக்கும் வந்துட்டு லாஸ்ட்டா..” என்று நிறுத்தியவள் “ஐ அக்ரி, வாட் ஹி டிட் வாஸ் ராங். சாரி சரண்.. நான் மனுக்கிட்ட பேசிருக்க கூடாது..” என்று அவனிடம் மன்னிப்பும் கேட்டாள்.
அதை கேட்டவன் ஆத்திரத்தில் அருகிலிருந்த டீபாயில் தன் கையால் அழுத்தமாக தட்ட அதில் டீப்பாயின் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து, அது சரணின் கையையும் பதம் பார்த்தது.
கணவனின் இச்செயலில் அதிர்ந்துவிட்ட வரு “என்ன சரண் பண்ற.. தப்பு தான். இனி நான் மனுக்கிட்ட பேசல. இட்ஸ் எ ப்ராமிஸ். யு ஆர் பிலீடிங்.. கம், லெட்ஸ் கோ டு தி ஹாஸ்பிடல்” என்று அவன் கையை பிடிக்க போனாள்.
அவனோ தன் கையை பின்னுக்கு இழுத்தவன் “எங்க அக்கா கல்யாணம் எப்படிடி நின்னுச்சு? எனக்கு இப்போ உண்மை வேணும்” அந்த வீடு முழுவதும் எதிரொலிக்க கர்ஜித்தான்.
அதில் விசயத்தை கணித்தவளின் ஒவ்வொரு அணுவும் பயத்தில் நடுங்கியது. எப்படி சொல்வாள் அன்று மனோஜை தான் தான் அனுப்பி வைத்தேன் என்று.
அதை தானே மனோஜ் “இப்போ நீயும் ஃபோன் எடுக்கமாட்ற. இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கு உன் பேச்சை கேட்டுட்டு மேரேஜ் ஹால் விட்டு போயிருக்கவே மாட்டேன். அப்பாவுக்காக சுசியையே மேரேஜ் பண்ணிட்டு இருந்திருப்பேன்” வருவென்று நினைத்து சரணிடம் அனைத்தையும் சொல்லியிருந்தான்.
தான் கேட்டது உண்மை என்ற போதிலும், அவளை நேசித்த மனதால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தானே நிகழ்ந்ததை அவளிடமே திரும்ப திரும்ப கேட்கிறான்.
சரண் தன் நெற்றிகண்ணை திறக்காத குறையாக வருவை உக்கிரமாக முறைத்திருக்க, தன் கண்ணீரை துடைத்தவள் “நான் தான் சரண் அன்னைக்கு மனுவை அனுப்பி வச்சது” என்று உண்மையை சொல்லி அவனை விஷம் கொடுக்காமல் கொன்றாள்.
தன்னவள் சொன்னதில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அவன் அவளையே பார்த்திருக்க “அன்னைக்கு நைட் ரிசெப்ஷன் முடிச்சிட்டு நான் மனுவ பார்க்க போனப்போ தான் எனக்கே அவன் லவ் பண்றான்னு தெரியும். இப்போ என்ன பண்றதுனு எர்லி மார்னிங் நான் யோசிச்சிட்டு இருந்தப்போ தான் நீ பால் கொண்டு வந்து கொடுத்த. அதோட தான் ஒரு தெளிவு வந்து மனுவ அனுப்பி வச்சேன்” என்று கண்ணீரோடு தான் செய்ததை ஒத்து கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்டவன் தன் தலையில் மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டு “பாவி.. பொண்ணா டி நீ.. பொண்ணா நீ.. ஒரு குடும்பத்தை குழி தோண்டி புதைக்க கூட தயங்காத ராட்சசினு தெரியாம உன் கூடவா நான் இவ்ளோ நாள்..” என்று தன்னை தானே நிந்தித்துக் கொண்டவன், ஆத்திரத்தில் காயம்பட்ட கையை சோபாவில் குத்த போக, வேகமாக அவன் கை பிடித்து தடுத்தவள் “என்ன சரண் பண்ற. நான் தப்பு தான் பண்ணிட்டேன். அதுக்காக, வை ஆர் யு ஹர்டிங் யுவர்செல்ப்?” என்று அவள் பதற, அவனோ அவளை அதே வேகத்தில் தள்ளி விட்டிருந்தான்.
கீழே விழுந்த வருவிற்கு ஒரு நிமிடம் கண் முன் பூச்சி பறப்பது போல் சுழன்றது. இருந்தும் அவளது நாவு “சரண்.. சரண்” என்று கதறிக் கொண்டே இருந்தது.
இது எதையும் உணராத சரண், ஏதேதோ நினைவுகளின் பிடியில் உழல “நினைக்க நினைக்க.. உன்னை நான் கொன்னுடுவேன் டி. அது எப்படிடி எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவும் நடக்காத மாதிரி தயாராகி வந்து முதல் வரிசையில உட்கார்ந்த.. இதுல அன்னைக்கே உன் பேச்சை கேட்டு நிச்சயத்தை நிறுத்தாத தப்புக்கு தான் பே பண்றேன்னு வேற சொன்ன” அவள் அப்போதும் அழுதுக் கொண்டிருக்க “இந்த நிமிஷம் உன்னோட வாழ்ந்த என்னையே எதாவது பண்ணிக்கணும்னு தோணுது டி. அவ்ளோ அருவருப்பா இருக்கு” தன் தலையை பிடித்துக் கொண்டு கத்தினான்.
அதற்குள் தடுமாறி அவனிடம் எழுந்து ஓடி வந்த வரு “ப்ளீஸ் சரண், நான் சொல்றத கேளு” என்று கதறவும், அவள் வார்த்தைக்கு செவிமடுக்காதவன் அவள் முகத்திற்கு நேராக கையை காட்டி “முடிஞ்சி போச்சு.. எல்லாம் முடிஞ்சிடுச்சு.. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது” என்றதும் அவள் சிலையாய் ஸ்தம்பித்துப் போனாள்.
அவனோ தன் பேண்ட் பையை துலாவி கைபேசியை எடுத்தவன் அதிலிருந்த சிம் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு பேசியை ஓங்கி தரையில் வீசியவன், தன் வண்டி சாவியை எடுக்க..
“சரண்.. ப்ளீஸ்.. நான் சொல்றத கேளு. நான் தப்பு செஞ்சா அறைவல.. என்னை அறைஞ்சிக்கோ.. ஆனா போயிடாத சரண்.. ஐ லவ் யு சரண். ப்ளீஸ் சரண்” என்று கை கூப்பி கேட்டாள்.
அவனோ அலட்சிய புன்னகையை உதிர்த்தவன் “உன்னால காதலிக்க படறதையே அசிங்கமா உணருறேன்” என்றபோது தன்னையும் மீறி அவன் கண்களில் கண்ணீர் உகுத்தது.
அதை துடைத்துக் கொண்டவன் வேகமாக கதவை திறக்க “சரண்.. ப்ளீஸ் சரண்.. உன் பாப்பா பாவம் தானே.. உன் பாப்பாவுக்கு பசிக்கும்ல.. நீ இல்லாம நான் என்ன சரண் பண்ணுவேன்” என்று அவன் கையை பிடித்து தடுத்தாள்.
அதை உதறிவிட்டவன் “பாப்பா..? எங்க அம்மா சொன்னாங்கனு தான் உன்னை கல்யாணமே பண்ணேன்.. எப்போ என் குடும்பத்துக்கே எமனா வந்தியோ, இனி நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன” என்று இகழ்ச்சியாக புன்னகைத்து விட்டு கதவை திறந்தான்.
“ப்ளீஸ் சரண் போகாத.. நீயும் என்னை லவ் பண்ற தான. நான் இல்லாம உன்னால இருக்க முடியுமா சரண். ப்ளீஸ், வி வில் சிட் அண்ட் டாக்” அவனிடம் மன்றாடி கொண்டிருக்க..
அவனும் தானே அவளை காதலிக்கிறான். தன் நெஞ்சத்தை சுருக்கென்று எதுவோ தைக்க, ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்தவன் “நான் உன்னை லவ் பண்ணதில்ல.. இப்பவும் பண்ணல. இனியும் எக்காலத்துலயும் பண்ணவும் மாட்டேன். உன் பேரை கேட்டா கூட எனக்கு வெறுப்பு தான் வரும்” என்றுவிட்டு கதவை அறைந்து சாற்றிவிட்டு சென்று விட, அவனது வார்த்தைகளை கேட்ட வரு தரையில் மடிந்தமர்ந்து கதறினாள்.
அங்கிருந்து கோபமாக கிளம்பிய சரண், மருத்துவமனைக்கு சென்று தன் கை காயத்திற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டு நேராக தாய் வீட்டிற்கு வந்துவிட்டான். மகன் கை கட்டோடு வருவதை பார்த்து பதறி விட்ட கனி “என்னப்பா ஆச்சு.. கையில இவ்ளோ பெரிய கட்டு போட்டு வச்சிருக்காங்க” என்று துடித்துப் போனார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ம்மா. அதோட குணம் தெரியாம கைய வச்சிட்டேன். கண்ணாடி கையை கிழிச்சிடுச்சு” என்று தாயிடம் பதில் சொன்னாலும் அவன் பார்வை முழுவதும் தம்பியின் கையை கவலையுடன் பார்த்திருந்த சுசியின் மீது தான் இருந்தது.
சுசியிடம் சென்றவன் அவளை இறுக அணைத்து “சாரி சுசி.. ரொம்ப சாரி..” என்று அவள் தோளில் முகம் புதைத்து கலங்கினான்.
தம்பியின் பேச்சு புரியாத சுசி, தான் அடிபட்டு வந்ததுக்கு தான் மன்னிப்பு கேட்கிறான் என்று நினைத்து “விடு சரண். அதெல்லாம் நான் எதுவும் திட்டல. இனி கவனமா இரு. நீ போய் ரெஸ்ட் எடு. வீட்டுக்கு போறப்போ வண்டி எடுக்காத. கேப்ல போயிடு. இல்ல வரு வருமா” என்று கேட்க, கலங்கிய கண்களை தன் தோளை உயர்த்தி துடைத்தவன் அவளின் கேள்விக்கு இல்லையென்று தலையாட்டி விட்டு அறைக்குள் சென்றான்.
மாலை வந்த மகன் இரவாகியும் வீட்டிற்கு கிளம்பவில்லை. இதில் வந்ததிலிருந்தே அவன் முகம் வேறு வாட்டமாக இருப்பது போல் தெரிய, தன் சந்தேகத்தை மகளிடம் கேட்டால் அவளும் ஒன்றும் இருக்காது என்று மறுத்துவிட்டாள்.
இப்படியே இரவு வரை உழன்றிருந்த கனி, இரவாகியும் மகன் கிளம்பாததும் “வந்து சாப்பிட்டுட்டு வீட்டுக்கு நேரத்துல கிளம்பு சரண்” என்று சொல்ல
“எங்கம்மா” என்றான் துச்சமாய்.
மகனின் பதிலில் பிரச்சனை தான் என்று கணித்துவிட்ட கனி “ப்ச்.. என்ன, வரு கூட சண்டையா. அது என்ன பழக்கம் சண்டைனா இங்க கிளம்பி வர்றது. எதுவா இருந்தாலும் அங்கேயே தான் பேசி தீர்த்துக்கணும். முதல்ல கிளம்பு” மனதை பயம் ஆக்கிரமித்திருந்தாலும் வெளியே அதட்டியே சொன்னார்.
மகனோ “எனக்கும் அவளுக்கும் இடையில எல்லாம் முடிஞ்சி போச்சு. இனி அந்த வீட்டுக்கு போகமாட்டேன். வர அவசரத்துல என் துணியை விட்டுட்டு வந்துட்டேன். அத ஒருநாள் போய் எடுத்துட்டு வந்திடுவேன்” என்று திட்டவட்டமாக சொல்ல, அதை கேட்டவரின் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.
“ஏங்க இங்க வாங்களேன்.. உங்க பையன் என்ன சொல்றான்னு பாருங்க” என்று கனி பாலனை அழைக்க, சுசியும் அவரோடு உள்ளே வந்தாள்.
பாலனும் மனைவியின் மூலம் அனைத்தையும் கேட்டறிந்து “என்ன சரண் இது, கிளம்பு” என்று சற்று கடினம் காட்டியே சொல்ல, சுசியும் அதே கேள்வியை தான் தாங்கி தம்பியை பார்த்திருந்தாள்.
தன் வீட்டு ஆட்களிடம் அவள் செய்த காரியத்தை என்னவென்று கூறுவான். “ப்ளீஸ்ப்பா யாரும் என்னை எதுவும் கேக்காதீங்க. என்னால அங்க போக முடியாது. இனி அவ யாரோ நான் யாரோ” என்று தீர்க்கமாக உரைத்தான்.
“போகமாட்டியா.. என் அண்ணன்கிட்ட நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி தான் பொண்ணு கேட்டேன். நீ இப்படி தொட்டதுக்கெல்லாம் பிரச்சனை பண்ணிட்டு கிளம்பி வந்தா என்னை தான் காரி துப்புவாங்க. ஒழுங்கா கிளம்பு சரண்” கனியின் இரத்தம் கொதிக்க அவர் சத்தமிட, அவனோ அவர் பேச்சை சட்டை செய்யாமல் எங்கோ பார்த்திருந்தான்.
அதில் கோபமுற்றவர் “வரு அங்க தனியா இருக்கும். நான் போறேன்” என்று அறை வாசலை தான் அடைந்திருப்பார்.
“நில்லுங்கம்மா. என் பொண்டாட்டியா மட்டுமில்ல உங்க அண்ணன் பொண்ணா கூட அவ நமக்கு தேவையில்ல. நீங்க அவளை பார்க்க போக கூடாது. அப்படி என்னை மீறி போனீங்க, திரும்ப வரப்போ நான் இங்க இருக்கமாட்டேன். இங்க மட்டும் இல்ல, யாரும் கண்டே பிடிக்காத அளவுக்கு எங்கயாவது போயிடுவேன்” ஆவேசமாக பற்களை கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்த்தான் சரண்.
அதை கேட்டு அங்கிருந்த மூவரும் உறைந்துப் போனார்கள்.
தொடரும்...