அத்தியாயம் 33
நேத்ரன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவனின் அணைப்பில் பூனைக்குட்டியாக அடங்கி இருந்தவளை தன்னோடு அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமர்த்தி இருவருக்கும் காபி வரவழைத்து அவளுக்கு கொடுத்து தானும் பருகினான். இன்னமும் தன்னுடன் ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டவனுக்கு சற்று முன் தோன்றிய மனசுணக்கம் கூட காணாமல் போக, சூர்யாவின் தோளினை சுற்றி தன் கை கொண்டு அணைத்தவன்.
“ டாலி, இப்படியே இருக்க எனக்கும் ஆசையா தான் இருக்கு. பட், இன்னைக்கு 10 மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுல நாம ரெண்டு பேரும் கட்டாயம் கலந்துக்கணும்... ஆல்ரெடி மணி 9 ஆக போகுது..”“ என கூற.
அதுவரையில் அவனின் அணைப்பில் அடங்கி இருந்தவள் அவனை விலக பார்க்க... அந்த கள்வனோ, அவளை விட்டு விலகாமல் மேலும் மேலும் அவனின் நெருக்கத்தினையும் அணைப்பின் இறுக்கத்தையும் அதிகரிக்க...
நேத்ரனின் செய்கையில் வெட்கம் கொண்டவள், அவனின் கரங்களில் இளகி குழைந்துக் கொண்டே,
“த... தனு மீட்டிங் இருக்கு லேட் ஆகுது சொன்னீங்க... கிளம்ப வேண்டாமா..?” என மயக்கம் நிறைந்த குரலில் கேட்க...
“ ம்...ம்...ம்…” என்றவன் அந்த மயக்க நிலையில் இருந்து விடுபட விரும்பாமல் இருக்க…
எப்பொழுதும் அவனை கவரும் அவளின் கழுத்தில் உள்ள மச்சம் இன்றும் அவனை மயக்க… அதில் தன் உதடுகளை பதித்தவன் அங்கேயே சில நொடிகள் நிலைக்க சூர்யாவின் நிலை தான் சொல்ல முடியாமல் போனது.
அவர்களின் மோன நிலையை கலைப்பது போல் நேத்ரனின் தொலைபேசி ஒலிக்க… அதில் மீண்டவர்கள்...
சூர்யா, நேத்ரனின் முகம் பார்க்க முடியாமல் அமர்ந்திருக்க அவளின் நிலையுணர்ந்த நேத்ரன் அவளின் நாடியை பிடித்துயர்த்தி தன் முகம் பார்க்க செய்தவன், அவளின் நெற்றியில் தன் நெற்றியை முட்டி மென்னகை சிந்தி, “நீ போய் குளிச்சிட்டு வா, அதுக்குள்ள நான் உனக்கு டிரஸ் அரேஞ்ச் பண்ணுறேன்” என கூறியவன் சூர்யாவின் கன்னம் தட்டி, “ம்... சீக்கரம் ரெடி ஆகு” என சொல்லி தன் அலைபேசியோடு முன்னறைக்கு செல்ல.
செல்லும் அவனையே விழிகளில் நேசம் வழிய பார்த்து கொண்டிருந்தாள் சூர்யா. பின்பு தன்னவன் சொல்லி சென்றது நினைவில் வர, தன் தலையில் லேசாக தட்டி கொண்டவள், முகம் புன்னகை பூக்க குளியல் அறை நோக்கி சென்றாள்.
அழைப்பது ஹரிஷ் என அறிந்த நேத்ரன், அவனிடம் தனிமையில் பேசவே வெளியில் வந்தான்.
நேத்ரன் அழைப்பை எடுத்ததும் அவனை பேசவிடாமல்... தொடர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான் ஹரிஷ்.
“ டேய் கமல், சூர்யா எப்படி இருக்கா..? ஒண்ணும் பிரச்சனை இல்லையே ஏன் நைட் வீட்டுக்கு போகலை என்ன எதுன்னு ஒரு கால் பண்ணி சொன்னியாடா..? அம்மாவையும், ஜெய்யையும் சமாளிக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி அம்மாவே பரவாயில்லை என்கிற அளவிற்கு இந்த கொத்தவரங்கா என்னை படுத்தி எடுத்திட்டா மிடியலை டா சாமி” என கூறி ஒரு பெரும் மூச்சினை வெளியேற்ற.
நேத்ரனோ, “அடங்குடா, கால் பிக் பண்ணா எதிரில் இருக்குறவனை பேச விடாம பேசுறதே உனக்கு பொழப்பா போச்சி உன் பாசமலருக்கு ஒண்ணும் ஆகலை இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் சூர்யாவும் மீட்டிங் நடக்குற இடத்திற்கு வந்திருவோம்… நீயும் ஜெயஸ்ரீயும் அங்கே வந்திடுங்க...
அப்புறம்… தன் நெற்றியை நீவி கொண்டவன் சூர்யா, நேத்து ஒருத்தனை அடிச்ச இல்லையா அவனை நம்ம ஆளுங்க கூட்டிக்கிட்டு போனாங்க அவன் இப்ப எங்க இருக்கான்” என வினவ.
ஹரிஷோ, “அவன் நம்ம ஹோட்டலில் தான் ஸ்டே பண்ணி இருக்கான். அவனோட பிரெண்ட்ஸ் யாரோ நேத்து நடந்த பார்ட்டியை அட்டெண்ட் பண்ண வந்திருக்காங்க கூடவே அந்த பக்கியும் தொத்திகிட்டு வந்திருக்கு. வந்த இடத்தில் சும்மா இல்லாம, ஏழரைய கூட்டி விட்டுடிச்சி, குடிச்சிட்டு அப்படியே மட்டை ஆகாம சூர்யாகிட்ட போய் இடிச்சி, அவளை அப்செட் ஆக்கி” என புலம்பியவன், வாய்க்குள்ளே அவனை ( குடிக்காரனை) வண்ணம் வண்ணமாய் திட்டினான்.
“ ஏன்டா கமல், அவனை பத்தி இவ்வளவு விசாரிக்கிற எனிதிங் சீரியஸ்” என்றவனிடம், “சூர்யாவோட பயம் விவேக்னா, அவளோட கஷ்டத்திற்கு அவன்தான்டா காரணம், விவேக் ஒருவிதத்தில் அவளோட மனசை காயப்படுத்தினான்னா இந்த வீணாபோனவன், அவளோட மனசை கொன்னவன்” என அந்த குடிக்காரனை பற்றி கூறி, அவனை க்ளோஸா வாட்ச் பண்ண சொல்லிய நேத்ரன் வார்த்தைகளை கடித்து துப்ப...
அதில் நேத்ரனின் கோபத்தினை அறிந்து கொண்ட ஹரிஷ், “ சரி மச்சான் அவனை நான் பார்த்துக்குறேன், நீ சூர்யாவை பார்த்து அழைச்சிக்கிட்டு வா, திரும்பவும் கேக்குறன்னு கோவப்படாதே, கண்டிப்பா இப்படி ஒரு சிச்சுவேசன்ல சூர்யா அந்த விவேக்கை மீட் பண்ணியே ஆகணுமா..? எதுக்கும் இன்னொரு தடவை யோசிடா” என.
நேத்ரனோ, தன் கேசத்தினை கோதிக் கொண்டவன். தன் மனத்திற்குள் ‘இது சூர்யாவுக்கு மட்டும் இல்லடா, எனக்கும் இது விஷபரீட்சை தான். அவளோட பயத்தினை விட்டு என்னோட காதலை முழுசா நம்பணும். அப்படி மட்டும் அந்த விவேக்கை பத்தின பயத்தினை சூர்யா கடந்து வந்துட்டா, என்னை விட யாரும் சந்தோஷபட மாட்டாங்க. என்னோட காதலும், இத்தனை வருட காத்திருப்பும் முழுமை அடைஞ்சிடும். நான் என்னோட காதலையும், என் டாலியையும் முழுசா நம்புறேன். கண்டிப்பா என்னை ஏமாத்த மாட்டாங்க” என தனக்குள் சொல்லிக்கொண்டவன்.
“ ம்ஊ…” என ஆழ்ந்து சுவாசித்தவன். ஹரிஷிடம், “என் காதலை என் டாலி கண்டிப்பா தோக்கவிட மாட்டா, சோ மீட்டிங்கான அரேஞ்சுமெண்ட்ஸ் எல்லாம் பண்ணிடு ஓகே” என கூறி தொடர்பை துண்டித்தான்.
அப்பொழுது தான் நேத்ரனுக்கு நியாபகம் வந்தது. சூர்யாவிற்கு உடை தயார் செய்வதாக சொன்னது அவசர அவசரமாக அங்கு ஹோட்டலின் உள்ளே உள்ள ஆடையகத்திற்கு அழைத்து அழகிய மாந்தளிர் பச்சை நிறத்தில் ஒரு மென்பட்டு புடவையை சூர்யாவிற்காக தருவித்தவன், அதற்கு தேவையான மற்றவற்றையும் சொல்லி இன்னும் 10 நிமிடங்களில் கொண்டு வந்து தர சொன்னவன் சூர்யாவை காண சென்றான்.
சொன்னது போல் பத்து நிமிடங்களுக்குள் எல்லாம் வர அந்த அறையில் வைத்தவன், குளியல் அறையில் இருந்த சூர்யாவிடம், அவளை தயாராக சொல்லிவிட்டு மற்றொரு அறையில் நேத்ரன் தயார் ஆக சென்றான்.
இருவரும் ரெடி ஆகி வர, நேத்ரன் தான் தேர்ந்தெடுத்த உடையில் அழகுற தயாராகி வந்தவளை உச்சி முதல் பாதம் வரை கண்களால் ஸ்பரிசித்தவன், அவளிடம் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்ற அவளை ஆராய்ச்சியாய் நோக்கினான்.
நேத்ரன் சூர்யாவிற்கு புடவை எடுக்கும் பொழுதே அதற்கு பொருத்தமான அக்ஸஸ்சரிசும் தேர்ந்தெடுத்திருந்தான். மற்ற அனைத்து அணிகலனையும்அணிந்திருந்தவளின் கழுத்து மட்டும் வெறுமையாய் இருந்தது… என்னவென்று கேட்டவனிடம் அந்த கழுத்தணியில் உள்ள ஹூக் திறக்க முடியவில்லை என்றும்... அழுத்தினால் எங்கே நசுங்கியோ அல்லது உடைந்து விடுமோ என்பதினால் போடவில்லை என்றவள். அவன் வாங்கி கொடுத்தது உடைவதை அவள் விரும்பவில்லை என்று சேர்த்து கூறனாள்.
“ சரி மாற்றி கொள்ளலாம்” என்ற நேத்ரனை, தன் இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி சூர்யா முறைக்க...
நேத்ரனோ, “ என்ன விஷயம்…?” என தன் புருவத்தினை ஏற்றி கேட்க,
“தனு, இவ்வளவு நேரமும் டைம் ஆகுது ஆகுதுன்னு என்னை எவ்வளவு அவசர படுத்தினீங்க இப்ப என்னென்னா போய் ஜூவெல் மாத்திட்டு வரலாம் சொல்றீங்க… ஒண்ணும் வேணாம் அதை அப்புறம் மாத்திக்கலாம். இப்ப வேணும்னா நேத்து அத்தம்மா கொடுத்த நகையை போட்டுக்குறேன் “ என கூறியவளை தடுத்து நிறுத்தியவன். “அது இந்த ட்ரெஸ்ஸுக்கு சூட் ஆகாது டாலி” என கூறி தன் ஷர்ட் காலரை சரி செய்துக் கொண்டே சிந்தித்திருந்தவன், திடீரென கண்கள் மின்ன தன் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை கழட்டி சூர்யாவில் கழுத்தில் அணிவித்திருந்தான். ( டேய், உன்னோட தாத்தா, விமர்சையா உன்னோட கல்யாணத்தை நடத்த நினைச்சா நீ இப்படி பொசுக்குனு நாலு சுவத்துக்குள்ள சத்தமே இல்லாம ஒரு செயின் போட்டு கல்யாணத்தை முடிச்சிட்டியே ராசா).
அணிவித்தவன் அவளை பார்த்து, “இட் சூட்ஸ் யூ வெரி மச் “ என கூறி புன்னகை புரிய, (செய்றதையும் செஞ்சிட்டு காம்ப்ளிமெண்ட் வேற கொடுக்குற).
நேத்ரன், அந்த நிகழ்வினை சாதாரணமாக எடுத்து கொள்ள சூர்யா தான் உறைந்து நின்று விட்டாள். அவளின் நிலை கண்டு, ( பாவம், புள்ள மிரண்டு போயிடுச்சி).
“ டாலி, என்ன அப்ப அப்ப பிரீஸ் ஆகி போற, ஏன் நான் அவ்வளவு அழகா இருக்கேனா..? “ என கூறி கண்சிமிட்ட, ( பண்றதையும் பண்ணிட்டு, பேச்சு வேற) அவனின் அந்த பாவனையில் சூர்யா தன்னை மறந்து நேத்ரனின் நெஞ்சில் சாய, அவளை தன்னோடு அரவணைத்துக் கொண்டான். அவளின் உயிருக்கு உயிரானவன்...
*******************************
மிக பிராம்மண்டமாக இருந்த அந்த கான்பிரன்ஸ் அறையில் அனைவரும் கூடி இருக்க விவேக்கும், அவர்களில் ஒருவனாக சூர்யாவை எதிர்பார்த்து கொண்டிருந்தான்.
கமலநேத்ரனும், சூர்யாவும் அந்த அறையினுள் செல்ல, அதுவரை அமைதியாக இருந்த இடம் சற்று பரபரப்புக் கொண்டு, மீண்டும் அமைதி நிலவ...
அனைவருக்கும் தன் வணக்கங்களை தெரிவித்துக் கொண்ட நேத்ரன், அங்கிருந்த பலருக்கு சூர்யாவை தெரிந்திருந்தாலும்… மீண்டும் ஒருமுறை அவளை அனைவருக்கும் தன்னுடைய வருங்கால மனைவி என்றும் இந்த நிறுவனத்தின் M.D என அறிமுகப்படுத்த... ( நேத்ரா, பாவம் சூர்யா ஒரு நாளைக்கு ஒரு அதிர்ச்சி கொடு இப்படி தொடர்ந்து குடுத்தா அந்த புள்ளை என்ன பண்ணும்).
அங்கிருந்தவர்கள் எல்லோரும் சூர்யாவிற்கு வணக்கமும், வாழ்த்துக்களும் தெரிவிக்க… இதில் அதிர்ந்து நின்றவர்கள் இருவர் மட்டுமே...
அது வேறு யாரும் இல்லை, சூர்யா மற்றும் விவேக். சூர்யா, நேத்ரனின் இந்த அறிவிப்பை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. சூர்யாவை, வேலைக்கு வர வைக்கவும், அவளை தன்னுடைய வருங்கால மனைவியாக அறிமுகப்படுத்தவும்... நேத்ரன் எவ்வளவு பாடுப்பட்டான் என்பது அவனுக்கு தான் தெரியும். இதில் அவன் அவளை M.D என கூறியவுடன் அதிர்ந்தவள், முயன்று தன் உணர்வுகளை சமன் செய்து சாதாரணம் போல் காட்டிக் கொண்டாள்.
விவேக்கிற்கோ பேரதிர்ச்சி காரணம், சூர்யா தன் கைகளால் தொட முடியாத உயரத்திற்கு செல்வது அவனை மேலும் மேலும் கோபம் கொள்ள செய்தது. ( அது மட்டும் தான் இப்பத்திக்கு உன்னால முடியும்).
மீட்டிங் தொடங்கி அவரவர் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர். ஒரு வழியாக பேச்சு வார்த்தைகளும் முடிவிற்கு வர அங்கிருந்த அனைவரையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறியும் பொருட்டு தங்களை தாங்களே அறிமுகம் செய்து கொள்ள… அனைவருக்கும் இன்முகத்தோடு பதில் சொல்லிக் கொண்டு வந்தாள் சூர்யா. அவளை சிறு யோசனையோடு தன் பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்தான் நேத்ரன்.
விவேக்கின் முறை வந்தவுடன், அனைவரையும் போல் அவனையும் சாதாரணமாக எதிர்கொண்டவள், அவனின் குரலிலும், பார்வையிலும் ஒரு நொடி பயந்து மிரண்டாலும்.
சூர்யா, அடுத்த நொடி தன்னவனின் நினைவில் அவனின் காதல் கொடுத்த துணிவில் விவேக்கை தைரியமாக முகத்தில் எந்தவித எதிர்மறை உணர்வுகளும் காட்டாது, அதே புன்னகையுடன் கடந்து செல்ல.
தன்னை பார்த்தவுடன் பயந்து நடுங்குவாள், அல்லது தன்னிடம் பார்வையால் கெஞ்சுவாள் என விவேக் நினைக்க சூர்யாவோ மற்றவர்களிடம் எப்படி பேசினாலோ அப்படியே அவனிடமும் பேச.
சூர்யாவின் இச்செய்கை விவேக்கிற்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் விட்டது போல் ஆக, சூர்யாவிற்கு தன்னை அடையாளம் தெரியவில்லையா..? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்கின்றாளா..? என புரியாமல் மண்டை காய… சூர்யாவினை, தனியாக சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருந்தான்.
சூர்யாவின் நிலைமையோ விவேக்கை கண்ட நொடி உள்ளுக்குள் பயபந்து உருள நடுங்கி பதறி துவள காத்திருக்கும் உள்ளத்தினையும் உடலினையும் மிகவும் பாடுபட்டு, நேத்ரன் கூறிய வார்த்தைகளை முயன்று நினைவுக்கு வரவழைத்து ஒருவழியாக அவனிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல்… அவனை கடந்து வருவதற்குள் போதும் போதும் என்றானது. இருந்தும் அவளின் மனம் நேத்ரனின் அருகாமையை விரும்பியது.
சூர்யாவின் ஒவ்வொரு அசைவினையும் படம் பிடித்து கொண்டிருந்த நேத்ரனுக்கு முதலில் அவளின் பயம் மற்றும் பதட்டத்தினை கண்டவுடன், ஒரு நொடியே ஆனாலும் அவன் உள்ளத்தில் வலியெடுக்க…
கண் இமைக்காமல் அவளையே நோக்கி கொண்டிருந்தான். அடுத்த நொடி அவளின் பதற்றம் பொய்யோ என எண்ணும் வகையில் சூர்யாவின் நிமிர்வு கண்டு நேத்ரனின் உதடுகளில் ஒரு கர்வ புன்னகை மிளிர… ‘அவ்செம் டாலி, இந்த நிமிர்வு தான் உன்கிட்ட நான் எதிர்பார்த்தேன். இனிமே இருக்கு அவனுக்கு’ என தனக்குள் கூறிக் கொண்டான்.
மீட்டிங் முடிந்து அனைவருக்கும் அங்கேயே உணவிற்கு ஏற்பாடு செய்திருக்க (பப்பே முறையில்) அனைவரும் தங்களின் விருப்பமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டு உண்ண தொடங்கினர்.
அங்கு தனியாக அமர்ந்திருந்த சூர்யாவை கண்ட விவேக், இது தான் சரியான தருணம் என நினைத்து அவளிடம் பேச சென்றான். இதை சற்று தூரத்தில் இருந்தே நேத்ரன் பார்த்து விட, அவனும் அவர்களை நோக்கி சென்றான். சூர்யாவிற்கு உணவினை எடுக்க சென்ற ஜெயஸ்ரீ உணவு அடங்கிய தட்டுடன் சூர்யாவை நோக்கி வர அவளை தடுத்த நேத்ரன். அவளின் கையில் உள்ள உணவு தட்டினை தான் பெற்றுக் கொண்டு அவளை ஹரிஷ் இருந்த பக்கம் அனுப்பி விட்டு, சூர்யா அருகில் செல்லும் முன்பு விவேக் அவளை நெருங்கி இருந்தான்.
அவனை கூட்டத்தில் கண்ட பொழுதே அவன் தனிமையில் தன்னை சந்திக்க முற்படுவான் என அறிந்து வைத்திருந்தாள் சூர்யா. முடிந்தவரை அவனிடம் தனிமையில் சிக்கக் கூடாது என்றும் அப்படி அவனை சந்திக்க நேர்ந்து விட்டால் அவனிடம் பயம் கொள்ளக்கூடாது என பலமுறை தனக்குள்ளேயே சொல்லி சொல்லி உருவேற்றிக் கொண்டவள். இப்பொழுது அவனை தன் அருகில் கண்ட பொழுது அவளின் உடலில் சிறுநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை மறைத்து கொண்டு அவளின் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல், இதழ்களில் உள்ள புன்னகை வாடாமல் பார்த்துக்கொண்டாள்.
இது அனைத்தையும் மீறி சூர்யாவின் கண்கள் தன்னவனை தேட அவளின் தேடலை அறிந்தவன் போல் நேத்ரன் அவளை நோக்கி வருவதை கண்டுக்கொண்டவள் உடலில் புதுதெம்புடன் விவேக்கினை சந்திக்க தயாரானாள் சூர்யா.
விவேக், சூர்யாவை நெருங்கியவுடன் மிகவும் பணிவுடன் வணக்கம் கூறி, நலம் விசாரிக்க... அவனின் குரலில் உள்ள பணிவு, அவனின் பார்வையில் சிறிதும் இல்லை. அதில் வெஞ்சினமும், பழிவெறியும், ஏளனமுமே நிறைந்திருந்தது.
“ என்ன மேடம், இந்தியாவில இருக்கிற வரை தான் நீங்க கற்பு, கலாச்சாரம் இதை எல்லாம் கடை பிடிப்பிங்களா..? நாட்டை விட்டு வந்த உடனே, அதெல்லாம் மறந்து போயிடுமா..?
ஏன் கேட்கிறேன்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரிய பத்தினின்னு சொல்லிக்கிட்டு உன்னை கட்டிபுடிச்சேன்னு என்னை அடிச்சி அவமானப்படுத்தின, ஆனா நேற்று நீயே வேறொருத்தனை கட்டிக்கிட்டு நிக்குறீயே அதான் கேட்டேன். இல்ல அவன் என்னை விட பணக்காரன் அப்டிங்கறதுனால உன்னோட கொள்கையெல்லாம் விட்டுட்டியா..?”.
“சும்மா சொல்லக் கூடாது உங்க அப்பன் உனக்கு பார்த்த மாப்பிள்ளைய விட இவன் ரொம்ப நல்லாவே இருக்கான்.( எங்கேயோ கருகுற வாடை வருது). அவனே நான் சொன்னதை நம்பி, கல்யாண மேடையிலேயே உன்னை அம்போன்னு விட்டுட்டு போனான். இவன் எம்மாத்திரம்” என கூறி ஒரு எள்ளல் நகை புரிய.
சூர்யாவோ, “அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அவனை நீங்க துரத்தி விடலைனா இப்படி ஒருத்தரை நான் என்னோட லைப்ல மிஸ் பண்ணி இருப்பேன். அதுக்கு உங்களுக்கு தான் நான் ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்” என இதழ்களில் புன்னகை பூக்க முகத்தில் மலர்ச்சியுடன் கூற…
சூர்யாவின் நன்றி நவிலலில் விவேக்கின் முகம் தான் இஞ்சி தின்ற குரங்கு போல் ஆகியது. தன்னை கண்டுக்கொள்ளாமல் இருந்தவளிடம் சென்று அவளின் வாழ்வில் நடந்த, கசப்பான விரும்பத்தகாத பழைய நிகழ்வுகளை பற்றி சொன்னால் சூர்யாவின் கண்களில் பயமும், கண்ணீரும் போட்டி போட்டு கொண்டு வெளிப்படும் என விவேக் நினைக்க… சூர்யாவோ, அவனின் நினைப்பில் ஒரு கூடை அல்ல ஒரு லாரி மணலை கொட்டினாள். தன்னுடைய பதிலால்...
விவேக், மேற்கொண்டு பேச ஆரம்பிக்கும் முன்னே நேத்ரன் சூர்யாவினை நெருங்கி, அவளின் இடையில் கைகோர்த்து அவளை தன்னோடு அணைத்து கொண்டவன், “ என்ன டாலி, சாப்பிடுற ஐடியா இல்லையா..? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது அதான் நானே வந்துட்டேன்” என சூர்யாவிடம் கூறியவன்.
விவேக்கினை அப்பொழுது தான் காண்பது போல,
“ எஸ்கியூஸ் மீ, ப்ளீஸ்” என கூறி அவளுக்கு உணவினை ஊட்ட முற்பட அதனை தடுத்தவள், “தனு, இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்… அதுவும் சென்னை, இவங்க ஹோட்டல்ல தான், நான் கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். இவரோட பெயர்” என அவள் சொல்ல ஆரம்பிக்க…
“ Mr.விவேக்” என கூறி அவனின் மொத்த ஜாதகத்தினையும் சொல்லி இருந்தான் நேத்ரன். அவனை ஆச்சர்யமாக சூர்யா பார்க்க.
“ இட்ஸ் நோட் எ பிக் இஸ்யூ… இங்க வந்திருக்குற ஒரு ஒருத்தரை பத்தியும் புல் டீடெயில்ஸ் எனக்கு தெரியும்” என கூறி புன்னகத்தவன், மீண்டும் அவளுக்கு உணவினை ஊட்ட. சூர்யா, நேத்ரனை பார்க்கும் பார்வையில் காதல் கசிந்துருக இம்முறை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் சூர்யா.
நேத்ரன், விவேக்கினை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை…
நேத்ரனும், சூர்யாவும் தங்கள் உலகில் மூழ்கி இருக்க… வேறு வழி இல்லாது விவேக் தான் அங்கிருந்து நகரும் படி ஆனது.
முன்பை விட விவேக்கின் மனத்தில் கோபம் கொளுந்து விட்டு எரிய அவன் அங்கிருந்து கிளம்பும் முன் விடைபெறுவது போல், சூர்யாவிற்கு ஒரு துண்டு சீட்டை கொடுத்து விட்டு சென்றான்.
அதை தூக்கி எறிய சென்றவள், கடைசி நிமிடத்தில் மனத்தினை மாற்றி கொண்டு அந்த பேப்பர் துண்டினை பத்திரப்படுத்தினாள்.
அன்றைய கூட்டம் முடிந்து நால்வரும் வீட்டிற்கு திரும்ப அவர்களை எதிர் கொண்ட பிரேமாவிடம் சூர்யா, நேற்று வீட்டிற்கு வராதாததிற்கு மன்னிப்பு கேட்க.
பிரேமாவோ, “ அதனால என்னடா ம்மா, பார்ட்டி முடிய நேரம் ஆயிடுச்சி அதனால அங்கேயே தங்க வேண்டியதா போச்சு இதுக்கெல்லாம் யாராவது சாரி சொல்லுவாங்களா போடா, போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என கூறி சூர்யாவை மேலே அனுப்பி வைத்தார்.
பிரேமா சொல்ல சொல்ல சூர்யா, நேத்ரனை பார்க்க… அவன் தன் கண்களை மூடி திறந்து தலையினை மறுப்பாக அசைத்து வாயில் தன் சுட்டு விரலை வைத்து எதுவும் சொல்ல வேண்டாம் என சைகை செய்ய சூர்யாவும் அமைதியாக தன்னுடைய அறைக்கு சென்றாள்.
அறைக்குள் நுழைந்ததும் குளியல் அறைக்குள் சென்று, தன் மன வெம்மை அகல குளிர்ந்த நீரின் அடியில் நிற்க… அந்நீரினாலும் அவளின் மன வெம்மையினை போக்க முடியவில்லை.
ஒரு வழியாக குளித்து முடித்து வந்தவளுக்கு, அப்பொழுது தான், விவேக் கொடுத்து சென்ற சீட்டு ஞாபகம் வர… அதை எடுத்து அதில் உள்ளதை படிக்க ஆரம்பித்தாள்.
அதில்,
“ ரொம்ப தைரியம் வந்துடுச்சு போல
இவன் பார்க்க நல்லா இருக்கான் வசதியும் கூட இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம்னு நினைக்காதே அது ஒரு நாளும் நடக்காது நடக்க விட மாட்டேன்
இவன் வெளிநாட்டுக்காரனா இருந்தா கூட நான் சொல்லுறதை பத்தி கவலை பட மட்டான். பட் இவனோ வெளிநாட்டு வாழ் இந்தியன் அதுவும் தமிழன்… சோ, எல்லா ஆம்பிளைகளுக்கும் இருக்கும் மென்டாலிட்டி தான் இவனுக்கும் இருக்கும். தனக்கு வரபோற மனைவி தனக்கு மட்டும் சொந்தமானவளா, தன்னுடைய மனைவி உணருற, ஸ்பரிசிக்குற முதல் ஆண் தானா இருக்கணும்னு தான் எல்லாரும் நினைப்பாங்க.
ஸ்டில், நீ வெர்ஜின் தான்… ஆனா அது உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். நான் சொல்லுறதை கேட்டும், என்கிட்ட இருக்குற உன்னோட போட்டோஸ் பார்த்தா யாரும் அப்படி சொல்ல மட்டாங்க.
இப்படி எல்லாம் செய்றானே, இவனுக்கு நம்ம மேல இன்னும் ஆசையோன்னு தப்பு கணக்கெல்லாம் போட்டுடாதே. ஒரு காலத்தில் உன்னை அடையணும்னு எனக்கு ஆசை இருந்தது. பட் இப்ப எனக்கு வேண்டியது எல்லாம் உன்னோட கண்ணீர் மட்டும் தான். நீ உன்னோட லைப்ல சந்தோஷமா, நிம்மதியா இருக்கவே கூடாது. உன்னோட வாழ்க்கை முழுக்க அவமானம் மட்டும் தான் மிஞ்சி இருக்கணும். இதுனால எனக்கு என்ன கிடைக்க போகுதுனு நினைக்கிறியா..? பெருசா ஒன்னும் இல்லை ஜஸ்ட் ஒரு சின்ன திருப்தி அவ்வளவு தான் .
சீ யூ சூன்…”.
என இருக்க. அதை படித்ததும் அந்த சீட்டினை கசக்கி எறிந்தவளின் உடல் முழுவதும் தீப்பற்றியது போல் எரிய இவ்வளவு நேரம் இருந்த திடம் காணாமல் போக, அவளின் உடல் நடுக்கம் கொண்டு துவள தன் அறையினை ஒட்டியுள்ள பால்கனியில் கால்களை மடித்து அதனை கைகளால் கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து அமர்ந்து விட்டாள் சூர்யா.
அவள் உயிரானவன்…
அத்தியாயம் 34
சூர்யா, விவேக் குடுத்த கடிதத்தினை படித்ததும் அவளின் மனத்தினை பயம் கவ்வியது என்னமோ உண்மை தான்...
சிறு அமைதிக்கு பிறகு, சூர்யாவிற்கு காலையில் நேத்ரன், கூறியது அனைத்தும் அட்சர சுத்தமாக காதில் ஒலித்தது.
“ உன்னோட பாஸ்ட் பத்தி எனக்கு தெரிஞ்சிக்க விருப்பம் இல்லை. இப்ப இந்த நொடி என்னை நேசிக்கிற சூர்யா, நான் நேசிக்கிற என் டாலி தான் எனக்கு முக்கியம்... சோ, உனக்கு நானும், என்னுடைய காதலும் தான் முக்கியமானதா இருக்கணும்... உன்னோட கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை எனக்கு நம்மோட நிகழ்காலமும், எதிர்காலமும் தான் நிஜம் அதனால நீ சூர்யாவா இருந்தப்ப உன்னை பாதிச்ச விஷயமோ, இல்ல அது சம்பந்தப்பட்ட நபர்களையோ சந்திக்க நேர்ந்தா, சூர்யாவா அவங்களை பார்த்து பயப்படாம Mrs.சூர்யா கமலநேத்ரனா, அவங்களை தைரியமா எதிர்கொள்ளணும்... உனக்கு எப்பவுமே நானும், நம்முடைய காதலும் பக்கபலமா இருப்போம்னு நம்பணும்...” அவனின் வார்த்தைகள் நினைவிற்கு வந்ததும் சூர்யாவின் இதழ்களில் ஒரு இளநகை பூக்க.
‘கண்டிப்பா, உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தனு, எனக்கு ஒரு பிரச்சனைன்னா நீங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நான் முழுசா நம்புறேன்…’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். ( ராசாத்தி, இதே வார்த்தையை இப்படியே ஞாபகம் வச்சிக்க மறந்துடாத, பின்னால யூஸ் ஆகும்).
விவேக்கின் கடிதத்தில் உள்ள கடைசி வரிகள், அவளுள் ஒருவித கோபத்தினை கொடுக்க, ‘இன்னும் நீ திருந்தல இல்லடா, உனக்கு நான் அழுறதை பார்க்கணுமா..? நான் “சூர்யா சிவரத்தினமா…” இருக்கும் பொழுதே உன்கிட்ட நான் அடிப்பணியல, இப்ப எனக்கு என்னோட தனு, உறுதுணையா பக்கபலமா இருக்காரு… உன்கிட்ட நான் பயந்து ஒதுங்கி இருந்ததுக்கான காரணம், என் பொருட்டு என்னோட குடும்பம் மத்தவங்க முன்னாடி தலைகுனிய கூடாதுன்னு தான். நீ என்னடா என்னை பத்தி என் தனுகிட்ட சொல்றது, நான் சொல்றேன் டா, நீ என்னயெல்லாம் பண்ணினனு... இதுவரை நீ பார்த்த சூர்யா வேற, இனிமே நீ பார்க்க போற சூர்யாவே வேற… இனிமே நான் உன்னை கண்டு ஒதுங்கி போக மாட்டேன். உன்னை பேஸ் பண்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். உன்னால நான் அடைஞ்ச வேதனை, அவமானம் இதுக்கெல்லாம் உனக்கு நான் பதில் கொடுக்கல... நான் சூர்யா இல்லடா’ என தன் மனத்திற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரமும் சஞ்சலம் கொண்ட சூர்யாவின் மனது, இப்பொழுது அப்படியே அந்த ஏகாந்த சூழலில் தன்னவனின் நினைவுகளில் மூழ்கி விழிகளை மூடி அமர்ந்திருந்தாள்.
நேத்ரன், தன் அன்னையிடம் நேற்று இரவு நடந்தவற்றை சொல்லவில்லை, காரணம் பிரேமாவின் மனநிலை, உடலளவில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சூர்யா விஷயத்தில் அவரின் மனநிலை பாதிக்கபடும் என நேத்ரன் அதனை கூறவில்லை, சூர்யாவினையும் சொல்ல அனுமதிக்க வில்லை.
சிறிது நேரம் கழித்து சூர்யாவின் அறைக்கு வந்த நேத்ரன், அறை கதவினை தட்ட எந்தவித பதிலும் இல்லாது போகவே சற்று பதட்டம் கொண்டவன், கதவின் பிடியில் கை வைக்க அது திறந்துக் கொண்டது.
பதட்டத்துடன் அவளின் அறைக்குள் நுழைய, அங்கே வெறுமையான அறையே அவனை வரவேற்க, அவன் கண்கள் அவ்வறையை ஆராய முன்னேறி சென்றவன் கால்களில் தட்டுப்பட்டது. சற்று முன்பு சூர்யா எறிந்து சென்ற காகித துண்டு… யோசனையோடு அதனை எடுத்து என்னவென பார்க்க… அது ஒரு கடிதம் போல் இருக்க, அதில் உள்ளதை படிக்க ஆரம்பித்த நேத்ரனின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
இப்பொழுது மட்டும், விவேக் நேத்ரனின் கண்ணெதிரில் இருந்தால் அவனின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். ஏன் அவனை கொல்லும் அளவிற்கு வெறி உண்டானது பெரும் முயற்சி செய்து தன் கோபத்தினை கட்டுப்படுத்தியவன் அந்த காகிதத்தை, தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொண்டு மீண்டும் சூர்யாவினை தேட...
அங்கே பால்கனியில், இருளில் தன்னை குறுக்கிகொண்டு அமர்ந்திருக்கும் சூர்யாவினை கண்டு நேத்ரனின் காதல் கொண்ட மனது துடித்தது. ‘எத்தனை தடவை சொல்றதுடி தர்பூஸ், ஏதாவது உனக்கு கஷ்டம்னா, உன்னை தாங்க என்னோட தோள்கள் இருக்கு. இப்படி தனியா நீ தவிக்கிறத பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி (ஐய்யோ, நேத்ரா இப்பதான் அவளே தெளிஞ்சி இருக்கா, மறுபடியும் நீ ஏன்டா, முதல்ல இருந்து ஆரம்பிக்கிற..? மீ பாவம் அதை விட ரீடெர்ஸ் ரொம்ப ரொம்ப பாவம் மிடியல). இன்னமும், உனக்கு என்கிட்ட என்ன தயக்கம்’ என மனதோடு அவளிடம் சண்டை போட… ( டேய், அவ அவளோட கடந்த காலத்தினை பத்தி சொல்ல வரும் பொழுது எல்லாம் எதையாவது சொல்லி அவளோட வாயை அடைச்சிட்டு, இப்ப ஏன் சொல்லலை அப்படின்னு வருத்தப்படுற ஐய்யோ..! ஐய்யோ..! உன்னோட ரொம்ப குஷ்டம் ச்ச… ச்ச… கஷ்டம்பா).
ஒரு மனது அவளின் செய்கையில் வலித்தாலும், அவனின் இன்னொரு மனதோ அவளுக்காக பரிந்து கொண்டுவந்தது. இறுதியில் அவனின் காதல் மனமே ஜெயிக்க...
சூர்யாவின் அருகில் சென்ற நேத்ரன், அவளின் தலையினை மிக மென்மையாக வருட, அந்த ஸ்பரிசத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒரு மென்னகையோடு தன் கரத்தினை நேத்ரனை நோக்கி நீட்ட நீட்டிய கரத்தினை பற்றி அவளின் அருகில் அமர்ந்தான் நேத்ரன். அமர்ந்தவனின் உள்ளத்தில் குழப்பங்கள் எழ காரணம், சூர்யாவின் சிரித்த முகம் அந்த பேப்பரில் உள்ளதை படித்து விட்டு மனம் வருந்துகிறாள் என அவளின் மேல் இவன் கோபம் கொள்ள… அவளின் இந்த மாற்றம் நேத்ரனுக்கு சந்தோஷத்தினை கொடுக்க… அவளை இன்னும் நெருங்கி அமர்ந்துக் கொண்டான்.
தன் அருகில் அமர்ந்தவன், மடியில் படுத்துக் கொண்டாள் சூர்யா… இவ்வளவு நேரம் அவளோடு தன் மனத்தில் இட்ட சண்டைகள், அவனின் வருத்தம் எல்லாம் சூர்யாவின் இந்த ஒரு செயலில் பகலவனை கண்ட பனிப்போல் விலக நேத்ரனின் உதடுகளில் புன்னகை படர, ஒரு தாயின் பரிவோடு, தன்னுயிரானவளின் தலையினை வருடி கொண்டே, “ ஏன் டாலி, இங்க வந்து இப்படி உட்காந்திருக்க..? ஆர் யூ ஆல் ரைட்..?” என கேட்டான் அவளின் மனத்தினை அறியும் பொருட்டு…
அவன் மடி மீது படுத்துக் கொண்டே, “ஒண்ணும் இல்லை தனு, நான் நல்லா தான் இருக்கேன். கொஞ்ச நேரம் என் கூடவே இருக்கீங்களா..? நீங்க என் பக்கத்தில் இருந்தா, ஐ பீல் மச் பெட்டெர்” என கூறி விழி மூடிக் கொண்டாள் சூர்யா.
சிறுது நேரம் அமைதியில் கழிய, ஒரு முடிவுடன் விழி திறந்தவள், “ தனு, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” (உங்களை முன்னாடியே சந்திச்சி இருந்தா எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்காது, அதை சொல்ற சங்கடமும் எனக்கு வராமல் போய் இருக்கும் ) என எண்ணியவளின் விழிகளில் பரிதவிப்பு அப்பட்டமாக தெரிய, சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தவன், தன்னவளின் இந்த பார்வையில் நேத்ரனின் உள்ளத்தில் உதிரம் கசிந்தது.
தன்னவளின் பார்வையில் உள்ள தவிப்பினை சரியாக புரிந்துக் கொண்டவன், அதற்கான காரணத்தினை தவறாக அர்த்தம் செய்து கொண்டான். ‘ஏன்டீ, கொஞ்சம் கூடவா உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு’ ( நேத்ரனுக்கு தெரியவில்லை இதே வார்த்தைகளை எதிர்காலத்தில், தன்னவள் தன்னை பார்த்து கேட்பாள் என்று) என மனம் வருத்தம் கொண்டான்.
என்னதான் அவளின் மீது வருத்தம் ஏற்பட்டாலும்… நேத்ரனின் கைகள் அவளின் தலையினை வருடுவதை நிறுத்த வில்லை. தன்னவனின் அமைதியில் மீண்டும் அவனை அழைக்க இம்முறை, “ ம்…” கொட்டினான் நேத்ரன்.
“உங்களுக்கு இப்ப ஏதாவது முக்கியமான வேலை இருக்கா..? எனக்கு உங்ககிட்ட கொஞ்ச பேசணும்” என கூறி அவன் முகம் பார்க்க நேத்ரனோ, சூர்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
அவனின் பார்வையில் குழப்பம் அடைந்தவள், அவனிடமே, “ஏன் தனு இப்படி கோபமா பார்க்குறீங்க..?” என கேட்க.
“ உனக்கு எத்தனை தடவை சொல்றது ரியா, யூ ஆர் மை பெட்டர் ஹாஃப், என்னில் சரிபாதி நீ, உனக்கு என்கிட்ட பேசணுமா, தனு எனக்கு உங்ககிட்ட பேசணும் வாங்க அப்படின்னு கூப்பிடுறதை விட்டுட்டு, பேசலாமா..?னு பர்மிஷன் கேட்குற” என கோபமாக ஆரம்பித்து ஆற்றாமையில் முடிக்க.
( தம்பி, அவசர பட்டு வாயவிடாத )
அவனின் மடிமீது தலை வைத்து படுத்திருந்தவள், எழுந்து அமர்ந்துக்கொண்டாள். அதற்கும் சூர்யாவினை பார்த்து, “ இப்ப எதுக்கு எழுந்த..?” என முறைத்தான் நேத்ரன்.
“ தனு, இப்ப எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது இப்படியெல்லாம் பேசுனீங்கன்னா… எனக்கு கஷ்டமா இருக்கு…” என கூறியவள், அவனை இன்னும் நெருங்கி அமர்ந்துக் கொண்டு, “உங்க மடியில படுத்துக்கிட்டு, நீங்க தலை கோதிவிட்டா எனக்கு தூக்கம் தான் வரும்… அப்புறம் நான் பேச வந்ததை பேச முடியாது” என கூறினாள்.
நேத்ரனோ, மனத்திற்குள் ‘நீயென்ன நம்ம கல்யாணத்தை பத்தியும், ஹனிமூன் பத்தியுமா பேச போற, அந்த கடங்காரன் விவேக் பத்தி பேச போற அதுக்கு நீ தூங்கறதே எனக்கு நல்லது’ என பெரும் மூச்சினை வெளியேற்றியவன், மௌனமாக இருக்க… அதனையே சம்மதமாக எடுத்துக் கொண்டவள், பேச தொடங்கினாள்.
“ தனு, உங்களுக்கு என்னை பத்தி எந்தளவிற்கு தெரியும்னு எனக்கு தெரியாது… நான் ஏன் வெளிநாட்டிற்கு வந்தேன் அப்படின்னு உங்களுக்கு தெரியுமா..?” என ஆரம்பிக்க.
நேத்ரனோ குரலில் சிறு கண்டிப்புடன், “ டாலி, நான் தான் ஏற்கனவே சொ…” என பேச ஆரம்பித்த நேத்ரனின் வாயின் மேல் தன் கை கொண்டு மூடியவள், அவனை பார்த்து எதுவும் சொல்லாதே என தலையசைத்தவள், “ எந்தவித மறுப்பும், தடையும் சொல்லாதீங்க இந்த ஒரு தடவை நான் சொல்றதை எனக்காக கேளுங்க… இது என்னோட மனத்திருப்திக்காக ப்ளீஸ், தனு” என கெஞ்ச.
நேத்ரனால் மேற்கொண்டு எதுவும் கூறமுடியவில்லை. அவன் அமைதிகாக்க, அதுவே சூர்யாவிற்கு போதுமானதாக இருந்தது.
ஹோட்டல் அறையில் விவேக், சூர்யாவின் மாற்றத்தினை ஜீரணிக்க முடியாமல் அந்த அறையின் நீள அகலத்தினை அளந்துக் கொண்டிருந்தான். அவனின் சிந்தனை முழுவதும் சூர்யாவினை சுற்றியே இருந்தது.
*******************************************
இரண்டு வருடங்களுக்கு முன்…..
சூர்யா தன் இளங்கலை படிப்பினை முடித்து, ஒரு வழியாக சிவாவின் உதவியோடு காயூவை சரி கட்டி முதுகலை பட்ட படிப்பின் முதல் வருடத்தினை வெற்றிகரமாக முடித்து… இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க காத்திருந்தாள்.
சிவரத்தினம், ஒரு புகழ் பெற்ற வங்கியின் மேலாளர், அவரின் நன்நடத்தையும், மற்றவரை மதிக்கும் குணமும், கை மற்றும் வாய் சுத்தமும்… அவருக்கு பெரும் மதிப்பும் மரியாதையையும் பெற்று தந்தது.
சிவரத்தினம் மேலாளராக உள்ள கிளையின் ஒரு முக்கிய வாடிக்கையாளர் தாருகேஷ்... தாருகேஷ், பணக்கார வீட்டின் ஒரே வாரிசு, அழகன். அவனின் தந்தை சிறுவயதிலேயே தவறி விட, தாயின் பாசத்திலும், பணத்தின் அரவணைப்பிலும் வளர்ந்து வந்தான். அவனின் தாய் சாந்தியம்மாவிற்கு தன் மகனிற்கு பாசத்தினை காட்டி வளர்க்க தெரிந்த அளவிற்கு… நல்ல பண்புகளை கற்றுத்தர மறந்துவிட்டார். அதன் பலன் தாருகேஷ், தன் கல்லூரி காலத்திலேயே அவன் மது, மாது என அனைத்து கெட்ட பழக்கங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அதைவிட அது தன் அன்னையினை எட்டாதாவாறு பார்த்துக் கொண்டான். வெளிச்சத்தில் உத்தமனாகவும், இருளில் கயவனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தான்.
இதில் கொடுமை என்னவென்றால், பல பெண்களின் வாழ்க்கையில் காதல் என்ற பெயரில் விளையாடியுள்ளான். அவனின் வெளித்தோற்றம் மற்றும் வசதிக் கண்டு பல பெண்கள் அவனின் காதல் நாடகத்தினை நம்பி, அவனிடத்தில் தன்னை இழந்தவர்கள் அநேகம் திருமணம் செய்ய கேட்பவர்களை பணம் கொண்டு அவர்களின் வாயடைத்தான். பணத்திற்கு மயங்காதவர்களும் இவனின் குணம் கண்டு ஒதுங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவன் கல்லூரி படிப்பு முடிந்து, அவனின் குடும்ப தொழிலை அவன் கையில் எடுத்து, அந்த தொழிலை இவன் மென்மேலும் வளர்க்க வில்லை என்றாலும், அதனை அழிக்கவில்லை, அதனால் அவனின் இருள் வாழ்க்கை எந்த வித இடையூறும் இன்றி போனது.
சிறிது சிறிதாக தாருகேஷின் நடவடிக்கைகள் சாந்தியம்மளை எட்ட துடித்து போனார் தன் மகனின் நடத்தையில், அதனால் கூடிய விரைவில் அவனிற்கு திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்தி விடுவான் என அனைத்து தாய்மார்களை போல அவரும் எண்ணினார். (இவங்க புள்ளைய தறுதலையா வளர்க்க தெரியாம வளர்ப்பாங்களாம் எங்கிருந்தோ ஒருத்தி வந்து திருத்துவாளாம் நல்ல கதையா இருக்கே). தெரியாம சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறினால் திருத்த முடியும். தப்பு செய்ய சூழ்நிலை உருவாக்குறவங்களை எப்படி திருத்த முடியும். அவர்கள் திருந்துவார்களா..? பாவம், அதை இந்த தாயுள்ளம் ஏற்குமா..?
தாருகேஷின் அன்னை அவனிற்கு திருமணத்திற்கு மும்முரமாக பெண் தேட, இதை அறிந்தவன் அன்னையிடம் திருமணம் வேண்டாம் என சண்டையிட, திருமணம் செய்து கொண்டால்தான் இந்த சொத்துகள் எல்லாம் அவனிற்கு கிடைக்கும் என்றும், அப்படி திருமணம் செய்ய மறுத்தால் இந்த சொத்துக்கள் அனைத்தையும் தருமத்திற்கு எழுதிவைத்து விடுவதாக சொல்லவும் சற்று இறங்கி வந்தான். (இந்த சொத்துக்கள் எல்லாம் அவனின் தந்தையின் சுயசம்பாத்தியம், அவர் இறக்கும் பொழுது இவன் சிறுவன் என்றதால் அவர் தன் மனைவி மீது எழுதி வைத்தார் ).
திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவன், அவர் பார்க்கும் பெண்களை திருமணம் செய்ய முடியாது என்றும் தான் விரும்பும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூற, மகன் இந்தளவிற்கு இறங்கி வந்ததே பெரிது என்று எண்ணியவர் அவனின் விருப்பத்திற்கு சரியென்றார். பாவம் அவருக்கு தெரியவில்லை அவனின் எண்ணம்…
தாருகேஷோ, தனக்கு ஒரு மனைவியை தேடாமல்… தன் திட்டத்திற்கு ஒரு துணையை தேடினான். ஏனெனில் அவனிற்கு இந்த கல்யாணம், குடும்பம் போன்றவற்றில் பெரிதாக ஈடுபாடு இல்லை. மனைவி என்று ஒருத்தி வந்தால், தன்னுடைய உல்லாசவாழ்விற்கு தடையாக இருப்பாள். தன்னை போல உள்ளவளை கல்யாணம் செய்வது போல் நாடகமாடி, தன் அன்னையிடம் இருந்து சொத்துக்களை கைபற்ற எண்ணினான்.
******************************************
ஆறு மாதங்கள் கடந்த நிலையில்….
ஒரு நாள் சூர்யா, சிவாவின் வங்கிக்கு சென்றவள். அங்கு வந்த தாருகேஷின் பார்வையில் விழுந்தாள் சூர்யா.
சூர்யாவின் அழகு அவனை பித்தம் கொள்ள வைத்தது. சிறிது நாட்கள் அவளைறியாமல் அவளை பின்தொடர்த்தவன். அவளை பற்றி முழுதாக தெரிந்துக் கொண்டான். அதில் அவனிற்கு புரிந்த விஷயம் மற்ற பெண்களை போல் சூர்யாவை எளிதாக தன் காதல் வலையில் சிக்க வைக்கமுடியாது என்பதும், அவளை அடைய ஒரே வழி திருமணம் தான் என விளங்க.
தான் திருமணம் செய்துக் கொண்டால் தான் சொத்தும் கிடைக்கும், அழகு பதுமையாய் இருக்கும் சூர்யா தனக்கு வேண்டும் என்றால் கல்யாணமே அதற்கு தீர்வு எனவே தாருகேஷ், சூர்யாவுடன் தன் திருமணத்தினை நடத்துவதற்காக திட்டத்தினை அவனின் மனம் வேகமாக கணக்கிட தொடங்கியது.
அதற்கு முதல் படியாக, சிவரத்தினத்திடம் நற்பெயர் எடுக்க முடிவு செய்தான். அதற்காக தன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆகும் செலவின் பெரும் பகுதியை இவர்கள் நிறுவனமே ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்து, அதற்கு தன் தாயாரின் பெயரில் டிரஸ்ட் அமைத்து அதற்கு புது வங்கி கணக்கு தொடங்கி, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையினை தங்கள் நிறுவன கணக்கில் இருந்து ட்ரான்ஸ்பெர் செய்ய வந்திருந்தான். இதனை அவனின் ஒரு தொலைபேசி அழைப்பிலோ அல்லது அவர்களின் ஊழியர்களே செய்திருக்க முடியும். சிவாவிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்து கொள்வதற்காகவே இந்த வருகை... மெது மெதுவாக தான் நல்லவன் என்னும் எண்ணத்தினை சிவாவின் மனத்தில் பதித்தான் தருகேஷ்...