All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதீதம்-19 விருப்பமும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல் காதலும் இல்லாமல் ஓர் கல்யாணம். விநோதமாய்த் தோன்றியது இமயனுக்கு. அவனுக்குக் கவிநயாவைப் பிடிக்காது என்றும் சொல்ல முடியாது, பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. தன் நண்பனின் தங்கை என்ற மனநிலையில் இருந்தவனுக்கு, அவள் திடீரெனத் தன் மனைவியாய் மாறி நிற்பாள் என அவன் கனவிலும் நினைத்ததில்லை தான். இப்போது இந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது எனத் தயக்கமாக இருந்தது. என்னதான் தாலி கட்டிவிட்டாலும் கூட, அவளை மனைவி என்ற நிலையில் நிறுத்திப் பார்க்க அவனால் சத்தியமாய் முடியவில்லை. குழப்பமாய் அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் இமயன்.
திருமணம் முடிந்து, மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்ட பிறகும் கூட, அவனால் உறுதியாய் ஓர் முடிவெடுக்க முடியவில்லை. இதென்ன சினிமா கதையா? பிடிக்காமல் திருமணம் செய்து பின் மனமொத்து வாழ்வதற்கு? சினிமாவில் பார்ப்பதற்கு இரசிக்கும் படி இருந்த அதே விஷயங்கள், நிஜமாய் அனுபவிக்கையில் வேறு மாதிரியாய் இருந்தது. மனதில் தன் ஆராவை சுமந்து கொண்டு, இன்னொரு பெண்ணுடன் வாழ்வதை விட, செத்துவிடுவது மேல் என்றே அவனுக்குத் தோன்றியது.
இதற்கு நடுவே, இமயனின் திடீர் திருமணத்தால், அவனுக்கு அடுத்தபடியாய் அதிர்ந்து போயிருந்தது அவனின் குடும்பத்தினர் தான். தன் மகனுக்கு எப்படியெல்லாமோ திருமணம் செய்ய வேண்டுமென நினைத்திருந்தவர்களுக்கு, நிஜமாகவே இது பேரிடி தான். எல்லாவற்றிற்கும் மேலாக, மயில்ராவணன் ஒரு வார்த்தை கூட, இமயனின் பெற்றோர்களிடம் கேட்கவே இல்லை.
"நம்ம பெத்த புள்ளைக்குக் கல்யாணம் பண்ண, நம்மக்கிட்டேயே கேட்கலையே? இவங்க பணக்காரவுகளா இருந்துட்டு போவட்டும்! அதுக்காகக் கேட்காமல் எல்லாம் பண்ணிருவாகளா?" என்ற செல்லம்மாவின் புலம்பலை யாருமே கண்டுக்கொள்ளவில்லை.
இமயனின் பெற்றோர்களான அண்ணாமலைக்கும், தனலெட்சுமிக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது.
"நாம பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை அத்தே! கல்யாணம் முடிஞ்சு போச்சு! நமக்குப் பிடிக்குதோ இல்லையோ, அவதேன் நம்ம வீட்டு மருமக!" என நிதர்சனம் உணர்ந்து பேசினார் தனலெட்சுமி.
"அப்போ நம்ம வீட்டு மருமகளை நம்ம கூட்டிட்டுப் போறது தானே முறை? இவங்க பணத்துக்குப் பயந்து எம் பேரனை விட்டுக்கொடுக்க முடியாது!" எனச் செல்லம்மா சொல்லிவிட, குடும்பமாய்க் கிளம்பி மயில்ராவணன் வீட்டிற்கு வந்திருந்தனர்.
மயில்ராவணனோ, இமயன் குடும்பத்தினர், வந்திருக்கும் விஷயம் அறிந்தும், தெரியாதவர் போல, வேண்டுமென்றே அவர்களைக் காக்க வைத்துக் கொண்டிருந்தார். சிலமணி நேரக் காத்திருப்பிற்குப் பின், வேறு வழியில்லாமல்,
"இமயன்! ரொம்ப நேரமா இங்கண வந்து உனக்காகக் காத்திருக்கோம் ராசா.! உன்னையும் மருமகளையும் அழைச்சுட்டுப் போகணும்ன்னு தான் வந்தோம்! எம்புட்டு நேரமா இங்கணையே உட்கார்ந்து கிடக்கிறது?" எனத் தன் மகனுக்கு அழைத்துக் கேட்டிருந்தார் அண்ணாமலை.
அதுவரை, அங்கும் இங்கும் நடந்து அறையை அளந்துக் கொண்டிருந்தவன், சட்டெனத் தன் நடையை நிறுத்திவிட்டு, அவசரமாய்க் கீழிறங்கி வந்தான்.
"இப்போ எதுக்கும்மா இங்கே வந்தீங்க? கொஞ்சம் எல்லாம் சரியானதும், நானே வர்ரேன்னு சொன்னேன் தானே?" எனக் கேட்டான் இமயன்.
"முறைன்னு ஒண்ணு இருக்குல்ல டா! நம்ம பக்கத்துச் சொந்தக்காரங்களுக்கெல்லாம், மருமகளை அறிமுகப்படுத்த வேண்டாமா? என்ன தான், திடீர்ன்னு கல்யாணம் நடந்துட்டாலும், அந்தப் பொண்ணுக்கான அங்கீகாரத்தை நாம தானே கொடுக்கணும்? அது மட்டுமில்லை, உன் தம்பி ராகவையும் வரச் சொல்லியிருக்கு. நீ முதலில் மருமகளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வா!" எனச் சொன்னார் செல்லம்மா.
இமயனுக்கோ இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னதான் தாலி கட்டியிருந்தாலும் கூட, கவிநயாவிடம் பேசுவதற்குக் கூட அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
"என்ன இமயன், யோசனை பண்ணிக்கிட்டே நிற்கிற? நான் வேணும்ன்னா உன் மாமனார்கிட்டே பேசட்டுமா?" என இமயனின் தந்தை கேட்ட அதே நேரம்,
"யோவ்! யாரைக் கேட்டு அவங்களை உள்ளே விட்ட?" எனப் பணியாளை அதட்டியபடியே உள்ளே வந்தார் மயில்ராவணவன். அவர் சொன்னது இமயனின் செவிகளில் தெள்ளத்தெளிவாகவே விழுந்தது. இமயனின் குடும்பத்தினர், சங்கடமாய் அவனைப் பார்க்க, அதே நேரம், உள்ளே வந்த மயில்ராவணன், எதுவுமே நடக்காதது போல், புன்னகையுடன் இமயனிடம் வந்தார்.
"வாங்க! வாங்க! எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்கீங்க? உட்காருங்க!" என அவர் இருக்கையைக் காட்டிய போதும், யாருமே அமரவில்லை.
"இருக்கட்டும் சார்! என்னதான் அவசரமாய்க் கல்யாணம் நடந்திருந்தாலும், பொண்ணு எங்க வீட்டில் இருக்கிறது தானே முறை? அதனால் தான், பொண்ணைக் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்திருக்கோம்!" எனத் தயக்கமாய்த் தனலெட்சுமி சொல்ல,
"அது எப்படி முடியும்? என் பொண்ணு எப்படி உங்க வீட்டுக்கு வர முடியும்? அவள் வசதியாகவே வாழ்ந்த பொண்ணு, அங்கேயெல்லாம் அவள் வர மாட்டாள். உங்க வீட்டில் என்ன இருக்குன்னு என் பொண்ணை அங்கே கூப்பிடுறீங்க? உன் வீட்டாளுங்க தான், புரியாமல் பேசுறாங்கன்னா, நீயும் அமைதியாய் நிற்கிற இமயன்? வீட்டோட மாப்பிள்ளையாய் நீ இருப்பேன்னு தான், என் பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன்.!" என அவர் சொல்ல, அதிர்வு தாங்கிய விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தான் இமயவரம்பன்.
"இங்கே பாருங்க! என் பொண்ணு எங்கேயும் வர மாட்டா! நீங்க இங்கிருந்து கிளம்புங்க!" என அவர் சொல்லியும் கிளம்பாமல், அப்படியே நிற்க,
"வேணும்ன்னா கவியை வரச் சொல்றேன். அவளுக்கு விருப்பம் இருந்தால் கூட்டிட்டு போங்க! என் வீட்டில் உள்ளங்கால் தரையில் படாமல் வளர்ந்த பொண்ணு, உங்க வீட்டுக்கு எப்படி வருவா?" என அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே உள்ளே வந்தார் மயில்ராவணன் மனைவி ராதிகா.
"யாரு இந்தப் பட்டிக்காட்டுக் கூட்டத்தை உள்ளே விட்டது? எல்லாத்துக்கும் ஒரு தகுதி தராதரம் வேணாமா? எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். உலகத்தில் மாப்பிள்ளையே இல்லாத மாதிரி, இவனைப் புடிச்சு என் பொண்ணு தலையில் கட்டி வச்சிட்டீங்க? என்கிட்டே ஒரு வார்த்தைக்குக் கூடக் கேட்கலை.. என்ன ஏதுன்னு விவரம் சொல்லியிருந்தால், நல்ல பணக்காரனாய் பார்த்து நான் சொல்லியிருப்பேன்.! இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. இவன் கட்டின தாலியைக் கழற்றி வச்சிட்டு வரச் சொல்லுங்க! நாம வேற கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.!" சர்வ சாதாரணமாய்ப் பேசினார் ராதிகா.
"கொஞ்சம் பேசாமலிரு ராதிகா! இது ஊரறிய நடந்த கல்யாணம். உன் இஷ்டத்திற்கெல்லாம் எதுவும் செய்ய முடியாது. கொஞ்சம் யோசிச்சு பாரு, நம்ம சாதியை விட்டு, வேற சாதிக்காரனை அவள் கல்யாணம் பண்ணியிருந்தால், கட்சிக்குள்ளே என் பேரு என்ன ஆகியிருக்கும்? இமயனுக்கு என்ன குறைச்சல்? அவன் நல்ல பையன் தான்.!" என அவர் மனைவியிடம் இரகசியமாய்ப் பேசியது இமயனின் செவிகளில், பட்டும் படாமல் விழுந்தது.
மனைவியை அமைதிபடுத்தியவர், இமயன் எதுவும் பேசாது யோசனையாய் நிற்பதைப் பார்த்துவிட்டு,
"கவிம்மா!" என மகளை அழைத்து அவனைத் திசை திருப்பியிருந்தார்.
"இமயன் வீட்டிலிருந்து உன்னை அழைச்சுட்டு போக வந்திருக்காங்க! நீ என்னம்மா சொல்ற?" வலிய வரவழைத்த புன்னகையுடன் அவர் கேட்க,
"நான் எங்கேயும் போறதாக இல்லை.!" என முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். கதவை அறைந்து சாற்றும் ஒலி மட்டும் சத்தமாய்க் கேட்டது.
"என் பொண்ணே எங்கேயும் வரலைன்னு சொல்லிட்டா! முதலில் இங்கிருந்து கிளம்புங்க!" ராதிகா மீண்டும் விரட்ட,
"கிளம்பிடுவாங்க மேம்! அதுக்கு முன்னாடி உங்க கிட்டே ஒண்ணு சொல்லணும்ன்னு நினைக்கிறேன். நான் ஒண்ணும் உங்க பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஒற்றைக் காலில் நிற்கலை. உங்க வீட்டு மருமகனாகிற ஆசையும் எனக்கு இல்லை. உங்க அளவிற்கு எங்கக் கிட்டே பணம் இல்லை தான். அதுக்காக அவங்களை மரியாதை இல்லாமல் நடத்தறது சரி இல்லை. என்னைப் பெத்தவங்க என்னைப் பார்க்க வந்தாங்க. அவங்க நிற்கிறதே உங்களுக்குப் பிடிக்கலைன்னா, அவங்க பெத்த என்னை மட்டும் எப்படிப் பிடிக்கும்? என்னோடு மரியாதையையும், சுயத்தையும் தொலைச்சுட்டு வீட்டோட மாப்பிள்ளையாய் என்னால் இருக்க முடியாது. என்னைப் பெத்தவங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் என்னாலும் இருக்க முடியாது!" எனச் சொன்னவன், வாசல் நோக்கி நடக்க,
"இமயன்! நில்லு! நான் சொல்றதைக் கேளு!" எனத் தடுத்து நிறுத்தினார் மயில்ராவணன்.
"வேணாம் சார்! நாம தொழில் ரீதியான உறவோடவே நிறுத்திப்போம்! நான் உங்க கிட்டே கேட்டேனா சார்? உங்க பொண்ணை எனக்குக் கட்டி வைங்கன்னு கேட்டேனா? நீங்களா வந்தீங்க, என்னென்னவோ பேசுனீங்க.. கடைசியில், உங்களுக்காக, உங்களிடம் நான் பட்ட நன்றிக்கடனுக்காக நான் உங்க பொண்ணு கழுத்தில் தாலி கட்டினேன். எல்லாம் தெரிஞ்சும், என்னைச் சார்ந்தவங்களை அவமனப்படுத்தினால், என்னால் சும்மா பார்த்துட்டு இருக்க முடியாது சார்.! எனக்கு உங்க வீடு, இந்த ஆடம்பம் இதெல்லாம் ரொம்பப் புதுசா இருக்கு. இதெல்லாம் எனக்கு ஒத்துவராது சார். நான் என் வீட்டிலேயே இருந்துக்கிறேன்.!" எனத் தெளிவாகச் சொன்னான் அவன்.
"கல்யாணம் பண்ணிட்டு, என் பொண்ணைத் தனியா விட்டுட்டு போறேன்னு சொன்னால் என்ன அர்த்தம் இமயன்?!"
"ஐயோ சார்! உங்க பொண்ணு எங்கே தனியா இருக்காங்க? அதான் நீங்க, மேடம் எல்லாரும் இருக்கீங்களே? நாங்க தான் பட்டிக்காட்டுக் கூட்டம், உங்களுக்குச் செட் ஆகாது!" என நக்கலாய் சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தார் ராதிகா.
"இமயன்!" என மயில்ராவணன் விளிக்க,
"சார்.. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்! கொஞ்ச நாளைக்கு, என்னைத் தனியா இருக்க விடுங்க!" எனச் சொன்னான் இமயன்.
"என்ன இமயன் இன்னும் சார்ன்னு கூப்பிடுற? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?"
"பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க அப்படிங்கிறதுக்காக என்னால் கூப்பிட முடியாது சார். எனக்கா தோணும் போது, நானே கூப்பிடுறேன்.!" எனச் சொல்லிவிட்டு, தன் பெற்றோர் மற்றும் தன் அப்பத்தாவான செல்லம்மாவுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறியிருந்தான் இமயன்.
"நல்லவேளை ராசா.. பொசுக்குன்னு வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்கச் சம்மதம் சொல்லிருவியோன்னு பயந்துட்டேன். நம்ம முறைப்படி பொண்ணுதேன் நம்ம வீட்டுக்கு வரணும். நீ போய் வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கும்?" எனப் பெருச்செறிந்தார் செல்லம்மா.
"அப்பத்தா.. வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்கிறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். அதெல்லாம் அந்தந்த தம்பதிகளின் விருப்பத்தையும், மனநிலையையும் பொருத்தது.!" எனப் பதில் தந்தான் இமயன்.
"அதெல்லாம் இருக்கட்டும்! பொண்ணைப் பெத்தவங்களே இம்புட்டு பேச்சு பேசுறாங்க? அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வரட்டும், நீயெல்லாம் அங்கே போகாதே சொல்லிப்புட்டேன்.!" என உறுதியாய் சொன்னார் செல்லம்மா.
"அப்பத்தா! உன் பேரன் நல்லா இருக்கணும்ன்னு நீ நினைத்தால், இந்த விஷயத்தில் தலையிடாதே.. நானே பார்த்துக்கிறேன். இது எங்கே போய் நிற்கப் போகுதுன்னு எனக்கே தெரியவில்லை.!" எனச் சொன்னவன் மகிழுந்தில் ஏறி அமர்ந்தான். நிஜமாகவே அவனுக்கு, இந்தத் திருமண விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
நண்பனின் தங்கையாய் பார்த்த பெண்ணுடன், திருமணத்தைக் காரணம் காட்டி வாழும் தைரியமும் அவனுக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவன் ஆராவின் மீதான காதல், இந்தத் திருமணத்திற்குச் சாதகமாய் யோசிப்பதற்குக் கூட, தடையாய் இடையில் வந்து நின்றது. இதுவரை இருந்திராத குழப்பமான மனநிலையில், வாகனத்தை வீடு நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.
********
கவிநயாவிற்கும், இமயனுக்கும் திருமணம் முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது. எதையோ ஒன்றைத் தொலைத்துவிட்டார் போல், தாடியுடன் அலைந்து கொண்டிருந்தான் இமயவரம்பன்.
தொலைந்து போனது ஏதோவொன்று அல்ல.. அவன் வாழ்க்கை என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும். என்னதான் ஒருதலைக் காதலாக இருந்தாலும், அதை மீண்டும் பெறவோ, மீட்டெடடுக்கவோ வழியில்லை என்ற நிதர்சனம் உரைத்த பின், அவன் மனம் இயல்புக்குத் திரும்ப மறுத்தது. இது போதாதென்று, இமயன் மட்டுமல்ல, கவிநயாவும் கூட, இந்த உறவை நீட்டிக்க விரும்பவில்லை.
'தன் தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்ற நடந்த கல்யாணம். மற்றபடி இமயனுடன் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயமும் அவசியமும் எனக்கில்லை!' என்பது தான் அவளது எண்ணமாக இருந்தது.
மயில்ராவணன் கூட, மகளிடம் பேசிப் பார்த்தார்.
"கவிம்மா! இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்? இமயனை வரச் சொல்றேன். என்னன்னு பேசி பார்ப்போம்.!" எனக் கேட்டார்.
ஒருவேளை இவர்கள் பிரிந்திருக்கும் செய்தியறிந்து, யாரேனும், ஏதேனும் பேசிவிட்டால், தன் மரியாதை போய்விடுமே என்ற கவலை அவருக்கு.
"உங்களுக்கு உங்க கௌரவம் தானேப்பா முக்கியம்? அதைக் காப்பாத்தியாச்சுல்ல? உங்க வேண்டியது நடந்துடுச்சு தானே? அதோட விட்டுடுங்க! நான் இப்படித்தான் இருக்கணும்ன்னு என்னைக் கட்டாயப் படுத்தாதீங்க! தீபக் என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டான் தான். இமயன் என் கழுத்தில் தாலி கட்டிட்டார் தான். ஆனாலும், நான் தீபக்கை தான் லவ் பண்ணுறேன்.! இதையும் மீறி, என்னை இமயனோட வாழச் சொன்னீங்க.. அன்னைக்குத் தான் நீங்க என்னை உயிரோட பார்க்கிறது கடைசியாய் இருக்கும்!" கோபமாய் எச்சரித்தவள், அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
இமயனும் கூட, மயில்ராவணன் உடனான சந்திப்பை அலுவலக விஷயங்களோடு நிறுத்திக் கொண்டான். அதோடு கூட, தன் உயிர் நண்பனான அர்ஜுனை எதிர்க்கொள்வதற்கும், அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
"கவி தீபக்கை லவ் பண்ணுறாள்ன்னு தெரிஞ்சும், எப்படிடா இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிச்ச?!"
என அர்ஜுன் கேட்டால் இமயனிடம் பதில் இல்லை தான். அந்தத் தயக்கத்திலேயே அர்ஜுனை சந்திப்பதையும், அவனிடம் பேசுவதையும் தொடர்ந்து தவிர்த்துக் கொண்டே இருந்தான். அர்ஜுனிடம், மயில்ராவணன் காலில் விழுந்த கதையெல்லாம் சொல்ல முடியுமா? அது மரியாதையாகவும் இருக்காது. அதே நேரம், வெகு நாட்களுக்கு, அர்ஜுனிடம் அவனால் மறைக்கவும் முடியாது என்பதே நிதர்சனம்.
இமயன் மனதிற்குள் எதையோ யோசித்தபடி நடந்து கொண்டிருந்தான்.
மாலை நேரத் தென்றல் காற்று கூட, அவன் மனதின் வெம்மையைத் தணிக்கவில்லை. தோட்டத்தில் மலந்து சிரித்துக் கொண்டிருந்த மலர்களைக் கூட அவன் மனம் இரசிக்கவில்லை. மாறாக, ஆருத்ராவை நினைவுபடுத்தி அவனை இன்னும் கொஞ்சம் வதைத்தது. தன் வாழ்க்கை செல்லும் திசையைப் பார்த்து, தன் காதலைச் சொல்லாமல் பெரிய தவறு செய்துவிட்டதாகவே கருதினான் இமயவரம்பன்.
சுற்றத்தைக் கவனிக்காமல், கால் போன போக்கில், அவன் நடந்து கொண்டிருக்க, அவன் தோளில் அழுத்தமாய் ஒரு கரம் பதிந்தது. இமயன் நடப்பிற்கு வந்து திரும்பிப் பார்க்க, இமயனின் அன்னை தனலெட்சுமி தான் நின்றிருந்தார்.
"என்னத்துக்கு இம்புட்டு வேதனை? அந்தப் பிள்ளை கழுத்தில் தாலி கட்டின நாள் முதற்கொண்டு, என்னத்தையோ பறிக்கொடுத்தவன் போலத்தான் அலையுற! வேணாம்ன்னு இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே டா? கல்யாணம் பண்ணியும் ஆளுக்கொரு பக்கமா நிற்கிறதைப் பார்க்க வேதனையா இருக்கு! பெத்தவளா என் மனசு அடிச்சுக்கிது. எம்புட்டுப் பணம் இருந்து என்ன செய்ய? நிம்மதி இல்லையே ராசா?" எனக் கேட்டவரின் கண்களில் நீர் தேங்கியிருந்தது. மகனின் வாழ்க்கையை நினைத்து, வேதனையில் அவர் நெஞ்சம் விம்மி தவித்தது.
"உன் மாமனார், எம்புட்டு பேசினாலும் பரவாயில்லை. நான் போய் மருமகள்கிட்டே பேசிப் பார்க்கிறேன்! எம்புட்டு நாளைக்கு, இப்படியே தனியா நிற்கப் போறீங்க? எதிர்பாராமல் நடந்த கல்யாணம்தேன்.அதுக்குன்னு அடுத்தது என்னன்னு யோசிக்காமல், இப்படியே இருக்கப் போறீங்களா? என்ன ஏதுன்னு பேசினால் தானே பிரச்சனை தீரும்! இங்கே பாரு இமயன்.. நீ வீட்டோட மாப்பிள்ளையாய் இருந்தாலும் பரவாயில்லை, உன் பொண்டாட்டி கூடத்தேன் இருக்கணும். உங்க அப்பத்தாதேன், சத்தம் போடுவாங்க! நான் அவங்கக்கிட்டே பேசுறேன்.!" எனத் தனலெட்சுமி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், அந்த இடத்திற்கு அர்ஜுன் வந்து சேர்ந்திருந்தான்.
என்ன தான் அர்ஜுனைப் பார்த்து இமயன் அதிர்ந்தாலும் கூட, இப்படி அர்ஜுன் வந்து நிற்பான் என அவன் ஏற்கனவே யூகித்திருந்தான். ஏனென்றால், அர்ஜுனைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.
"இப்படியே என்னை அவாய்ட் பண்ணிடலாம்ன்னு நினைச்சியா மச்சான்?" என அர்ஜுன் கேட்க, பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றான் இமயன்.
"அப்படி இல்லை டா! அது வந்து..!" என இமயன் தயக்கமாய்ச் சொல்ல வர,
"நீ ஒண்ணும் பேச வேண்டாம்.! நீ கவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு அதிர்ச்சி தான். அதற்காக நான் உன்னைப் புரிஞ்சுக்க மாட்டேன்னு நீ எப்படிடா நினைச்ச? இதை நீ விருப்பப்பட்டுச் செஞ்சுருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.!" என அர்ஜுன் சொல்லிக் கொண்டிருக்க,
"நீயாவது இவன் காதில் விழுற மாதிரி சொல்லு அர்ஜுன். ரெண்டுபேரும் ஆளுக்கு ஒருபக்கமாய் நிற்கிறாங்க! இது எங்கே போய் முடியும்ன்னு ஒண்ணும் தெரியலை!" எனச் சொல்லிவிட்டு, தனிமைக் கொடுத்து நகர்ந்திருந்தார் தனலெட்சுமி.
"உனக்கு எத்தனை தடவை டா கால் பண்ணுறது? இடையில் பிஸ்னஸ் விஷயமா நான் போக வேண்டிய கட்டாயம். இல்லைன்னு மட்டும் வை.. கல்யாணத்திற்கு மறுநாளே இந்தப் பிரச்சனையெல்லாம் முடிச்சு வச்சிருப்பேன்.!" என அர்ஜுன் சொல்ல, புரியாமல் அர்ஜுனைப் பார்த்தான் இமயன்.
"என்ன சொல்ற அர்ஜுன்?" புரியாமல் இமயன் வினவ,
"ஏன்டா இத்தனை வருஷமா அந்த ஆளு கூட இருக்க.. அவரைப் பற்றித் தெரிஞ்சு வச்சிருக்க வேண்டாம்.? அவர் கல்யாணத்திற்குக் கேட்கும் போது, நீ சம்மதிச்சுருக்கக் கூடாது டா!" அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான் அர்ஜுன்.
"வயசில் பெரிய மனுஷன், நான் இந்த நிலையில் இருக்கேன்னா அதுக்கு அவர் தான் காரணம். அப்படிப்பட்ட மனுஷன், எல்லாத்துக்கும் மேலே இந்த மாநிலத்தோட முதலமைச்சர், என் காலில் விழுந்து கேட்கும் போது, என்னால் எப்படி வேணாம்ன்னு சொல்ல முடியும்?" எனப் பதில் கேள்வி கேட்டான் இமயன்.
"அஃபீஷியல் வேற.. பர்ஸ்னல் வேறடா! உனக்கு நான் எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது?" என்றவன்,
"நீ நிஜமாகவே என் தங்கச்சியைப் பிடிச்சுப் போய்த் தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சியா?" எனக் கேட்டான்.
"தீபக் ஓடிப் போய்ட்டான்னா அவர் என்ன செய்வார் பாவம்?!" எனப் புரியாமல் கேட்டான் இமயன்.
"உன்னை நாளுக்கு நாள் முட்டாளாக்கிட்டு இருக்காரு டா!" என்றவன் தன் அலைபேசியை எடுத்து, அதிலிருந்த புகைப்படம் ஒன்றை இமயனிடம் காட்டினான்.
"இதை எதுக்கு என்கிட்ட காட்டுற அர்ஜுன்?"
"இதில் இருக்கிறது யாரு.. நல்லா பார்த்துச் சொல்லு?" என அர்ஜுன் கேட்க,
"மயில்ராவணன் சார் தான்! ஏதோ நிதி ஒதுக்கீடு சம்மந்தமா மத்திய அமைச்சரை மீட் செய்யப் போயிருந்தார். இந்த மீட்டிங் ஏற்கனவே ப்ளான் பண்ணினது தான்.!" என இமயன் சொல்ல,
"அவர் அதுக்காக மட்டும் போகலை டா! மத்திய நிதியமைச்சரோட பையனுக்கும், கவிநயாவிற்கும் கல்யாணம் பேசப் போயிருந்தார். ஆனால் அந்த மினிஸ்டர் சம்மதிக்கலை. அதனால் தான் வேற வழியில்லாமல், உன்னை மாப்பிள்ளையாய் உட்கார வச்சிருக்கார்." என அர்ஜுன் சொன்னதை இமயனால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
"அப்போ தீபக்?" அவசரமாய் இமயன் கேட்க,
"தீபக் இருக்கான்!" என்ற அர்ஜுனின் பதிலைக் கேட்டு அதிர்ந்து தான் போனான் இமயவரம்பன்.
"என்னடா சொல்ற?"
"இங்கே பாரு மச்சான்! நீ எங்க அப்பாக்கிட்டே வேலை செய்ற.. நீ செய்ற வேலைக்கு அவர் சம்பளம் கொடுக்கிறார் அவ்வளவு தான். நீ கஷ்டப்பட்ட நேரத்தில் அவர் உனக்கு வேலைக் கொடுத்துட்டாருங்கிறதுக்காக அவர் ஒண்ணும் கடவுள் இல்லை புரியுதா? அந்தாளு காலில் விழுந்தாருன்னு நீ கல்யாணத்திற்குச் சம்மதிச்சதெல்லாம் சுத்த முட்டாள்தனம். உன்னையும் குறை சொல்ல முடியாது. உன்னை அந்தாளு எமோஷ்னலா லாக் பண்ணிருப்பார். இந்தக் கல்யாணத்தை எடுத்து நடத்தறேன்னு சொல்லும் போதே, நான் சுதாரிச்சுருக்கணும். நான் தான் அவரைப் பற்றித் தெரிஞ்சும், கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்.!" எனத் தன்னையே நொந்து கொண்டான் அர்ஜுன்.
"அர்ஜுன்! விடு டா! இனிமே என்ன பண்ண முடியும்? தீபக் எங்கே இருக்கான்னு உனக்குத் தெரியுமா? எங்கே ஓடிப் போனான் அந்தப் பயந்தாங்கொள்ளி?" என இமயன் கேட்க,
"டேய்.. இன்னுமா உனக்குப் புரியலை! இது எல்லாமே அந்த ஆளோட ப்ளான் டா. தீபக்கை தூக்கிட்டு, மத்திய அமைச்சரோட பையனுக்குக் கவியைக் கட்டி வைக்கிறது தான் அவர் திட்டம். அது தடைபட்டு போகவும், உன்னைப் பலிகடாவா மாத்திட்டாரு. அதுக்குக் காரணம் சாதி! தீபக் எங்கேயும் ஓடிப் போகலை. அவனைக் கடத்தி வச்சிருந்ததே தமிழ்நாட்டோட முதலமைச்சர் தி க்ரேட் மயில்ராவணன் தான். அன்னைக்கு நான் தீபக்கை தேடிப் போனப்போவே அவனை யாரோ கடத்திட்டு போன விஷயம் மட்டும் தெரிஞ்சுச்சு. மத்த விஷயமெல்லாம், அந்தாளு பையன்ங்கிற இன்ஃபுளுயன்ஸை வச்சு நான் கண்டுபிடிச்சது.!" என அவன் சொல்ல, இமயனிடம் ஸ்தம்பித்த நிலை.
அர்ஜுன் சொல்வதைக் கூட, முழுதாய் நம்புவதா? இல்லையா.? எனத் தெரியவில்லை. காரணம் அந்த அளவிற்கு, மயில்ராவணனை அதிகமாய் நம்பியிருந்தான் இமயன். அதே நேரம், அர்ஜுன் தன்னிடம் பொய் சொல்ல மாட்டான் என்பதும், அவனுக்குத் தெரியும்.
கவியின் திருமணப் பேச்சு துவங்கியதிலிருந்தே நடந்தவற்றையெல்லாம் மீண்டும், மீண்டும் தனக்குள் ஓட்டிப் பார்த்தான். முதலில் திருமணத்திற்கு மறுத்து, பின் சம்மதித்து, பின் தீபக் வீட்டினரை அழைத்துப் பேசி, கடைசியாய் அவர் தன் காலில் விழுந்தது வரை நிதானமாய் யோசித்துப் பார்த்தான். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் பிடிபடுவது போல் தோன்றியது.
முக்கியமாய், தீபக் திருமணத்தை வேண்டாமெனச் சொல்லிவிட்டு ஓடிப் போனதாய் தகவல் பரவிய நேரம், தீபக்கின் குடும்பத்தினர் மண்டபத்தில் தான் இருந்தனர். ஆனால், அவர்கள் கண்ணீரோடு நின்றிருந்தார்களே ஒழிய, ஒற்றை வார்த்தை மறுப்பு தெரிவிக்கவில்லை. அதோடு, மயில்ராவணனும் அவர்களிடம் தீபக்கைப் பற்றி விசாரிக்கவே இல்லை. மயில்ராவணன் அப்படிச் சாதாரணமாய் விட்டுவிடுகிற ஆளும் கிடையாது. அதைவிட மிக முக்கியமாய், அந்த மத்திய அமைச்சருடனான சந்திப்பை அவசரப்படுத்தி, முன்பே சந்திப்பதற்காக யார் யாரையோ பிடித்து முன் அனுமதி பெற்றதையும் அவன் யோசித்துப் பார்க்கையில், அவர் பேசியதற்கும், நடந்து கொண்டதற்கும் இடையேயான முரண் அவனுக்குத் தெளிவாய்ப் புலப்பட்டது. தீபக்கை தேடுவதற்காக அர்ஜுனை அனுப்பியதும் கூட, அவர் திட்டத்தின் ஒரு பகுதி தான் என்பதும் இமயனுக்குப் புரிந்தது.
உண்மையெல்லாம் உணர்ந்து ஓரளவு தெளிவாகி நின்றவனின் கண்கள், கோபத்தின் அதீதத்தில் சிவந்தது. தன் மனதிலிருந்த காதலை உயிரோடு புதைத்து, வாழ்க்கையையே தொலைத்து நடைபிணமாகி நிற்கிறானே.. அந்த வலியும் வேதனையும் கோபமாய் உருமாறி அவர் மீதிருந்த நன்மதிப்பையும், நம்பிக்கையையும் கொன்று தின்று அசுர வேகத்தில் வெறுப்பாய் வளர்ந்து நின்றது.
அர்ஜுனுக்குத் தன் நண்பனின் மனநிலை புரிந்தது. அவனின் மனதிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டமும் புரிந்தது. ஆதரவாய் நண்பனின் தோளில் கரம் பதித்தான் அர்ஜுன்.
"அர்ஜுன்! எனக்கு விவாகரத்து வேணும்!" எனச் சொன்னவன்,
"நான் அவர் மேல் வச்சிருந்த நம்பிக்கையையும், விசுவாசத்தையும் பகடையாய் வச்சு விளையாடிட்டார்.. இனிமே என்னோட விளையாட்டைப் பார்ப்பார்!"
எனக் கண்களில் தெரிந்த அதீத பளபளப்போடு சொன்னவன், தன் நண்பனின் கரத்தோடு கரம் கோர்த்துக் கொண்டான்.
அதீதம்-20
அர்ஜுன் சொன்னதெல்லாம் கேட்ட பின்னும், இமயன் அவசரமெல்லாம் படவில்லை. வெகு நிதானமாய் யோசித்தான். இந்தத் திருமணத்தால், கவியின் வாழ்க்கையோடு, இமயனின் வாழ்க்கையும் சேர்ந்தே பாதிக்கப்பட்டிருக்கிறது எனும் போது, இருவரின் வாழ்க்கையையுமே சரி செய்ய வேண்டும் என்பதை மட்டும் தீர்மானமாய் முடிவு செய்து கொண்டான். அவசரப்பட்டு எதையும் செய்துவிடக் கூடாதென்பதிலும் தெளிவாக இருந்தான். இப்போதைக்கு நிதானம் என்பது மிகவும் அவசியம் என்பதும் அவனுக்குப் புரிந்தது.
முதல் வேலையாக, அர்ஜுனிடம் கேட்டு, தீபக் பாதுகாப்பாய் இருக்கிறானா? என்பதை உறுதி செய்து கொண்டான். சாதி என்னும் ஒற்றைக் காரணத்திற்காக, பெற்ற மகளின் மனதைக் கூட யோசிக்காமல், இத்தனை வேலை செய்தவர், உண்மை தெரிந்தால், கவியையும் எளிதில் விட்டுவிட மாட்டார் என்பது புரிந்தது. கவிநயாவின் பாதுகாப்பையுமே உறுதி செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டான்.
இனி எடுத்து வைக்கும், ஒவ்வொரு அடியிலும், திட்டமிடலும் தெளிவும் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான். அதற்கு முதல் வேலையாக அர்ஜுனைத் தான் அழைத்தான் இமயவரம்பன்.
"நான் விசாரிக்கச் சொன்ன விஷயங்கள் என்ன ஆச்சு அர்ஜுன்.?"
"நான் விசாரிச்ச வரை, விவாகரத்து உடனே கிடைக்க வாய்ப்பு இல்லை டா. நாம ஒன் இயர் வெய்ட் பண்ணித்தான் ஆகணும். ஒன் இயர், செப்பரேஷன் பீரியட் முடிந்தால் தான் டிவோர்ஸ் கன்சிடர் பண்ணுவாங்கன்னு லாயர் சொன்னார். இப்போ தானே கல்யாணம் முடிஞ்சுருக்கு, உடனே டிவோர்ஸ் ஃபைல் பண்ணுறது கஷ்டம்ன்னு சொல்றார்.!"
"அப்போ வேற எந்த வழியுமே இல்லையா?"
"ஒரேயொரு வழி இருக்குடா.. இந்தியாவில் கட்டாயத் திருமணங்கள் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இன் பிரிவு 15 மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. இது கட்டாயத் திருமணம்ன்னு கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் பண்ணலாம்.! பட், கேஸ் நிக்காது.!"
"ம்ம்! புரியுது டா! உங்க அப்பா கேஸ் கோர்ட்டுக்கு போக விட மாட்டார். ஊரறிய கல்யாணம் பண்ணிட்டு, கட்டாயக் கல்யாணம்ன்னு ரிப்போர்ட் பண்ண முடியாது டா!" என அர்ஜுன் சொல்ல வரும் கோணத்தைப் புரிந்து கொண்டான் இமயன்.
"இப்போ என்ன தான்டா பண்ணுறது?" எனப் புரியாமல் கேட்டான் அர்ஜுன்.
"ஒரு வருஷம் வெய்ட் பண்ணணும்ன்னா வெய்ட் பண்ணித்தான் ஆகணும். அதுக்குள்ளே நாம செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு அர்ஜுன்!" எனச் சொன்னான் இமயன்.
"என்னடா சொல்ற?"
"இன்னொருத்தர் பின்னால் இருந்து கட்சியோட வளர்ச்சிக்கு உதவினது எல்லாம் போதும்ன்னு நினைக்கிறேன். நானே நேரடியாய் உள்ளே இறங்கலாம்ன்னு முடிவு செஞ்சுருக்கேன்!" எனத் தெளிவாகச் சொன்னான் இமயன்.
"புரியுது டா! ஆனால், அந்த ஆளு உன்னை உள்ளே நுழைய விடுவார்ன்னு தோணலை.!"
"அவர் அனுமதி எனக்குத் தேவையில்லை அர்ஜுன்.! அதுக்கு என்ன செய்யணும்ன்னு எனக்குத் தெரியும்.!" தெளிவும் தீர்க்கமும் அவன் குரலில் இருந்தது.
"எதுவா இருந்தாலும், நிதானமா பண்ணுடா! அவரைப் பத்தி உனக்குத் தெரியாது. !" நல்ல நண்பனாய் அறிவுறுத்தினான் அர்ஜுன்.
"இத்தனை நாள் தெரியாமல் இருந்ததை இனிமே தானே தெரிஞ்சுக்கப் போறேன்.. அவர் நினைச்சதை நடத்துறதுக்காக, என் வாழ்க்கையையும், கவி வாழ்க்கையையும் கேள்விகுறியாய் மாத்திட்டாரு! நான் சும்மா விடப் போறதில்லை அர்ஜுன்.!" எனச் சொன்னான் இமயன்.
"உன் நிலை எனக்குப் புரியுது டா!" என நண்பனின் தோளில் ஆதரவாய்த் தட்டினான் அர்ஜுன்.
"அர்ஜுன் நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.! நான் இதை வச்சு தான் உங்க அப்பாக்கிட்டே கேம் விளையாடப் போறேன். இதைத் தவிர எனக்கு வேற வழியும் தெரியலை.!"
"ஏய்! உதவி அது, இதுன்னு பைத்தியம் மாதிரி பேசாதே டா! செய்ன்னு சொன்னால், செய்யப் போறேன்.!" என அர்ஜுன் சொல்ல,
"இல்லை அர்ஜுன், நீ முன்னவே சொன்ன, நான் தான் கேட்கலை. நான் சொன்னதை நம்பி தான் கவியும், இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிச்சாள். உங்க அப்பா முன்னே நின்னு நடத்தறேன்னு சொல்றதே நாடகம்ன்னு நீ சொன்னதை நாங்க கேட்டுருக்கணும். இப்படியொரு திட்டத்தை அவர் போடுவார்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை." என இமயன் நிஜமான வருத்தத்துடன் சொன்னான்.
"விடுடா! இப்படித்தான் நடக்கணும்ன்னு இருந்திருக்கு. நீ உன் மேல் பழியைப் போட்டுக்காதே! பொண்ணு வாழ்க்கைன்னு கூடப் பார்க்காமல் விளையாடின அவரைத்தான் சொல்லணும்!" என நண்பனைச் சமாதானப்படுத்த முயன்றான் அர்ஜுன். அப்போதும், இமயன் இயல்புக்குத் திரும்பாமல் இருக்க,
"உனக்கு என்ன ஹெல்ப் வேணும்? அதை முதலில் சொல்லு டா!" என அவனைத் திசை திருப்பினான் அர்ஜுன்.
"தீபக் உன்கிட்டே பத்திரமாகத் தானே இருக்கான்?" என உறுதிபடுத்திக் கொள்வதற்காய் கேட்டான்.
"ஆமா டா! தீபக்கோட அப்பா, அம்மாவை கொன்னுடுவேன்னு மிரட்டி, கவி கிட்டே, அவள் வேண்டாம்ன்னு சொல்ல வச்சிருக்காங்க! அதோட, அவனை அடிச்சுக் கொடுமை படுத்திருக்காங்க டா. நமக்குத் தெரிஞ்ச பசங்களை வச்சு தேடிப் பிடிச்சேன். ரொம்பப் பாவம் டா தீபக். இன்னுமே அந்த ஆளுக்குத் தீபக் உயிரோட இருக்கான்னு தெரியாது!" எனச் சொன்னான் அர்ஜூன்.
"இப்போ நாம என்ன பண்ணணும்ன்னா, கவியையும், தீபக்கையும் யூ.எஸ் அனுப்பி வச்சிடணும். ஏன்னா அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.!"
"அவங்களை இங்கே வச்சிருந்தால், அவங்களை வச்சு, நம்மக்கிட்டே கேம் ஆடிருவாரு உங்க அப்பா! என் விளையாட்டையும் நான் அவங்களை வச்சு தான் ஆடப் போறேன். எதுக்காக உங்க அப்பா இத்தனையும் செஞ்சாரோ, அதை வச்சே அவருக்கு எதிரா விளையாடப் போறேன்.!" என இமயன் சொல்வது, மெல்ல மெல்லமாய் அர்ஜுனுக்குப் பிடிபட்டது. அவனது திட்டமிடல் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு யூகித்திருந்தான் அர்ஜுன்.
"புரியுது டா மச்சான்! முதலில் அவங்களை அனுப்பற வேலையைப் பார்க்கிறேன்.!" என அர்ஜுன் சொல்லிவிட்டு விடைபெற., அடுத்தடுத்த திட்டங்களை யோசித்தபடியே நின்றிருந்தான் இமயவரம்பன்.
*****
இமயனின் திட்டத்தின் முதற்கட்டமாக, அன்று காலையே இமயனை அழைத்திருந்தார் மயில்ராவணன்.
"இ.. இமயன்! நீ என் மேலே கோபமாய் இருப்பேன்னு தெரியும்! இப்படியே தொழில் முறை உறவோட ஒதுங்கிடலாம்ன்னு இருக்கியா? நீ தாலிக்கட்டின உன் பொண்டாட்டி இங்கே இருக்காள்ன்னு மறந்துட்டியா?"
"கவியைப் பார்த்துக்க நீங்க இருக்கும் போது, நான் எதுக்காக மாமா கவலைப்படணும்? ஊருக்காக எங்க கல்யாணம் நடந்துடுச்சு. இது இப்படியே இருக்கட்டும் விட்டுருங்க!"
"இது சரியில்லை இமயன்!"
"இதை உங்க பொண்ணுக்கிட்டே சொல்லுங்க மாமா!"
"இங்கே பாரு இமயன், கவி, யு.எஸ் போறேன்னு ஒற்றைக் காலில் நிற்கிறா! நீ தான் என்னன்னு வந்து கேட்கணும்?" என மயில்ராவணன் சொல்ல,
"உங்க பொண்ணோட தகுதி வேற, என்னோட தகுதி வேற.. உங்க பொண்ணைக் கேள்வி கேட்கிறதுக்கும், ஒரு தகுதி வேணுமே, அது என்கிட்டே இல்லை.!" என நக்கலாகவே பதில் சொன்னான் இமயன்.
"இமயன் நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ! டி.ஐ.ஜியில் இருந்து, கட்சி செயலாளர் வரை, உங்களை விருந்துக்குக் கூப்பிட்டுருக்காங்க. அதோட நம்ம சாதி சங்கம் சார்பாகப் பாராட்டு விழாவும் இருக்கு. நீயும், கவியும் கண்டிப்பா வரணும்!"
"இந்த ப்ரோக்ராம் எல்லாம் எனக்குத் தெரியும்! உங்க பொண்ணை வேணும்ன்னா கூட்டிட்டு போங்க! நான் எங்கேயும் வரலை!" எனச் சொல்லிவிட்டு, அவன் அலைபேசியை அணைக்கப் போக,
"இமயன்! எனக்காக இந்த ஒரேயொரு முறை மட்டும் வா!" என அவர் சொல்ல, புன்னகையுடனே இணைப்பைத் துண்டித்தான் இமயன்.
மயில்ராவணன் வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை முன்பே அறிந்தவனாய், வேண்டுமென்றே தாமதமாக அவர் வீட்டிற்குச் சென்றான் இமயவரம்பன்.
"இங்கே பாருங்கப்பா! எனக்கு இந்தக் கல்யாணமும் வேணாம்! ஒண்ணும் வேணாம்! இங்கே வீட்டுக்குள்ளே அடைஞ்சுக் கிடக்க என்னால் முடியாது!"
"இதுக்குத்தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சேனா?"
"நான் தீபக்கை தான் லவ் பண்ணினேன். நான் இமயனை டிவோர்ஸ் பண்ணிடுறேன். நீங்க வேணும்ன்னா ரெண்டாந்தாரமாய் இமயனைக் கட்டிக்கோங்க!" எனச் சொன்னாள் கவிநயா.
"பைத்தியம் மாதிரி பேசாதே கவி!"
"என்னைப் பேச வச்சுட்டீங்க! இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்தேன்னா என்னைப் பைத்தியக்காரியாய் மாத்திடுவீங்க! நான் இங்கிருந்து போறது தான் எனக்கு நல்லது!" உறுதியாய் தெளிவாய் பேசினாள் கவிநயா.
"என் மேலே தான் தப்பு! நான் தான் தப்புப் பண்ணிட்டேன். உங்களோட எமோஷ்னல் ப்ளாக் மெய்ல்க்கு பயந்துட்டு, கொஞ்சமும் யோசிக்காமல், கண்ணை மூடிட்டு கழுத்தை நீட்டிட்டேன். உங்களோட நடிப்பை உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டேன்!" என அவர் கண்களைப் பார்த்து அவள் பேசி, தன் தகப்பனின் கண்களுக்குள் வந்து போன அந்த நொடி நேர தடுமாற்றத்தை உணர்ந்துக் கொண்டாள் கவிநயா.
"நான் நடிச்சேன்னு சொல்றியா? உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைச்சேன் பார்த்தியா? என்னைச் சொல்லணும்!" அவர் போலியாய் கோபப்பட,
"அதான் என் வாழ்க்கை நல்லா இருக்கே.. நீங்க தான் பார்க்கிறீங்களே?" என அவள் கேட்க, மயில்ராவணன் முகம் சட்டெனச் சுங்கியது.
அதே நேரம் இமயனும் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.
"வா! வா! இமயன்! உன்னைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். இவளைப் பாரு.. இப்போவே வெளிநாடு கிளம்பறேன்னு ஒற்றைக்காலில் நிற்கிறா!" என அவர் சொல்ல,
"குடும்ப விஷயங்கள் பேச இங்கே வரவே கூடாதுன்னு நினைச்சுருந்தேன். உங்க வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தான் மாமா இங்கே வந்தேன்!" உணர்வற்ற குரலில் அவன் சொன்ன அதே நேரம்,
"உன்னைப் பார்க்காமல் போயிருவேனோன்னு நினைச்சேன். எங்க அப்பாவோட வார்த்தையைக் கேட்டு உன் வாழ்க்கையையும் வீணாக்கிட்டேன். என்ன தான் தீபக் என்னை வேணாம்ன்னு சொன்னாலும், அவனை நினைக்காமல் என்னால் இருக்க முடியலை. ஸோ, நான் யு.எஸ் கிளம்பறேன்.!" எனச் சொன்னவள், அவன் முன் வந்து நின்றவள், அவன் கட்டிய தாலியைக் கழற்றி அவன் கரத்திலேயே வைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறியிருந்தாள். மயில்ராவணனால் மகளைத் தடுக்கவே முடியவில்லை. அவர் ஆடிய ஆட்டத்தில், மகளின் பிடிவாதம் முதன் முறையாய் ஜெய்த்திருந்தது.
அவள் தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டுப் போன நொடியில், அவனுக்குள் எழுந்த நிம்மதியுணர்வை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் முகத்தை இறுக்கமாய் வைத்தபடி, மயில்ராவணன் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கவனமாய் ஆராய்ந்தபடி நின்றிருந்தான் இமயன்.
"இமயன்! அவள் சின்னப் பொண்ணு! ஏதோ தெரியாமல் பண்ணிட்டா! நான் அவகிட்டே பேசுறேன். இந்த விஷயம் மட்டும் கட்சிக்குள்ளே யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ இமயன்! கட்சிக்குள்ளே தெரிஞ்சுதுன்னா என் மானமே போய்டும்! மீடியா நியூஸ்ன்னு போட்டு நாறடிச்சுடுவானுங்க!" எனச் சொன்னவரின் குரலில் இருந்த பயத்தை இமயனால் தெளிவாக உணர முடிந்தது.
"இப்போ நான் என்ன செய்யணும் மாமா? உங்க பொண்ணு யு.எஸ் போய்ட்டு வர்ர வரையிலும், அவள் நினைப்போடவே, இந்தத் தாலியைக் கையில் வச்சுட்டே அலையணுமா? இதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சீங்களா? ஒருவேளை உங்க பொண்ணு வரவே இல்லைன்னா நான் கடைசி வரை சந்நியாசியா அலையணுமா?"கேள்வி ஒவ்வொன்றும் மயில்ராவணனை ஊசியாய்க் குத்தியது. பதில் சொல்ல முடியாது திணறி, பேச முடியாமல் அமைதியாய் நின்றார் அவர்.
"நான் அவள்கிட்டே பேசறேன் இமயன்!" என மழுப்ப முயன்றார் அவர்.
"நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, என்னைப் பெத்தவங்களைக் கூடக் கேட்காமல் தாலி கட்டினேன். இப்போ நான் என்ன செய்யணும்ன்னு நீங்க தான் சொல்லணும்!" அவன் சொன்னதற்கு, எந்த எதிர்வினையும் அவரிடமிருந்து இல்லை. அவர் குழம்பி தவித்து நிற்பதைப் பார்த்து இதழ்களில் புன்னகை அரும்ப, அமைதியாக அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
'இன்னும் தீபக்கைப் பற்றி தெரிந்தால் இவர் என்ன செய்யப் போகிறார்?' என்றக் கேள்வியும் அவனுக்குள் இருந்தது.
*****
அடுத்தச் சில நாட்களில், தன் ஆட்டத்தை முழுதாகவே ஆடத் துவங்கியிருந்தான் இமயன்.
"இதெல்லாம் என்ன? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?" எனக் கேட்டவன், தன் அலைபேசியிலிருந்த புகைப்படங்களைக் காட்டினான். தீபக்கும், கவிநயாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்தவர்,
"இதெல்லாம் என்னன்னு உனக்குத் தெரியாதா? கவி தீபக்கை விரும்பினாள்ன்னு உனக்குத் தெரியும் தானே?" என நிதானமாய்க் கேட்டார் அவர்.
"அந்த ஈரவெங்காயமெல்லாம் எங்களுக்குத் தெரியும். இது இப்போ எடுத்த ஃபோட்டோஸ்..! திட்டம் போட்டுத் தானே உங்க பொண்ணை அங்கே அனுப்பி வச்சீங்க? அவளோட தீபக்கையும் சேர்த்து அனுப்பிருப்பீங்க போல? அப்போ எதுக்காக என்னை இதுக்குள்ளே இழுத்தீங்க? உங்க காரியத்தைச் சாதிச்சுக்கிறதுக்கு நான் ஊறுகாயா?" எனக் கோபமாய்ப் பேசினான் இமயன்.
மயில்ராவணன் முகத்திலோ, அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது. தீபக் உயிரோடு இருப்பான் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதிலும் தன் மகளோடு இருக்கிறான் என்பது அவருக்கு பேரதிர்ச்சி தான்.
'இவனை மொத்தமா முடிச்சுடத் தானே சொன்னேன். ஒரு வேலையை உருப்படியாய் செய்ய மாட்டானுங்க!' மனதிற்குள் திட்டிக் கொண்டவர், வெளியில், சமாளிப்பாய் சிரித்தபடியே..
"நான் சொல்றதைக் கேளு இமயன்! எனக்கு இதைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது!" எனச் சொன்னார்.
"நீங்க தெரியாதுன்னு சொல்றதை நான் நம்பணும்? உங்க பொண்ணு தாலியைக் கழற்றிக் கொடுத்துட்டு போறதையும் வேடிக்கைப் பார்த்துட்டு தான் இருந்தீங்க! இப்போவும் தெரியாதுன்னு தான் சொல்றீங்க! நான் இதைச் சும்மா விட மாட்டேன்! நம்ம சாதி சங்கத்தில் போய் ரிப்போர்ட் பண்ணப் போறேன்.!" எனச் சொன்னதும் அவர் முகம் சட்டென மாறியது.
"என்ன பேசுற இமயன்? என்னை அவமானப்படுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டியா? போனவாரம் தான், நம்ம சங்கத்தில் பாராட்டு விழாவெல்லாம் நடத்தினாங்க! இப்போ போய் இதைச் சொன்னால், என் மானமே போய்டும்! நம்ம கட்சிக்கு சாதி ஓட்டு எவ்வளவு முக்கியம்ன்னு உனக்குத் தெரியும். நீயே இப்படிப் பேசினால் எப்படி?" அவருக்குக் காரியம் ஆக வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் பொறுமையாய் பேசினார் அவர்.
"அப்போ என் வாழ்க்கைக்கு என்ன வழி? நீங்க சொன்னீங்கன்னு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க தான் எனக்கு என்ன வழின்னு சொல்லணும்!" என அவன் கேட்க மயில்ராவணனால் பதில் பேசவே முடியவில்லை.
"என்ன மாமா, பதிலையே காணோம்? எனக்குன்னு ஆசைகள், கனவுகள் இருக்காதா? என் வாழ்க்கை விஷயத்தில், நானும் கொஞ்சம் சுயநலமாகத் தான் முடிவு எடுக்கணும்.!" என அவன் வேண்டுமென்றே குரலுயர்த்திச் சொல்ல,
"ஷ்ஷ்..! கொஞ்சம் மெதுவா பேசு இமயன்! இப்போ என்ன உன் வாழ்க்கையை நீ வாழணும் அவ்வளவு தானே? இந்தக் கல்யாணம் நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். இந்த ஊரைப் பொருத்தவரை நீ என் மருமகன் தான். உனக்கு எந்தப் பொண்ணைப் பிடிக்குதோ, அந்தப் பொண்ணு கூட, ரகசியமா வாழ்ந்துட்டு போ!" என அவர் சொன்ன கேவலமான யோசனையைக் கேட்டு அருவருப்பில் முகம் சுளித்தான் இமயன்.
"நீங்க செய்ற அதே கேடுகெட்ட வேலையை என்னால் செய்ய முடியாது. நீங்க துரோகம் பண்ணுறது உங்க பொண்டாட்டிக்கு வேணும்ன்னா தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போவோ தெரியும். இத்தனை நாள் இதையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தது உங்க மரியாதையைக் காப்பாத்தறதுக்குத்தான். இனிமே அப்படியெல்லாம் இல்லை. அவசியமிருந்தால், உங்க இரகசியங்கள் அத்தனையையும் அம்பலப்படுத்த நான் தயங்க மாட்டேன்.!" தெள்ளத் தெளிவாய் அவன் சொல்ல, விக்கி விரைத்துப் போனார் மயில்ராவணன்.
"இமயன்! நன்றி மறந்துட்டு பேசுற! நீ இந்த நிலையில் நிற்க நான் தான் காரணம் அதை மறந்துடாதே! என்னையே பகைச்சுக்க நினைக்காதே! நான் நினைச்சால், உன்னை என்ன வேணும்ன்னாலும் பண்ண முடியும்!" என மிரட்டல் தொனியில் அவன் பேச,
"தாராளமாய்ச் செய்ங்க மாமனாரே..! இனிமே எதற்கும் நான் பயப்படப் போறதில்லை. உங்களைப் பார்த்து கூழைக் கும்பிடு போட்ட காலமெல்லாம் மலையேறிப் போச்சு. என்னை அழிக்கணும்ன்னு நீங்க நினைச்சீங்கன்னா, உங்க இரகசியங்கள் அத்தனையும் வெளியே வந்துடும். இது மட்டுமில்லை, நீங்க யார்க்கிட்டே எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கீங்க? யாருக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க? அதோட, எந்த ப்ராஜெக்ட்டில் எவ்வளவு அடிச்சிருக்கீங்க? எல்லாத்துக்கும் ஆதாரம் என்கிட்டே இருக்கு. நீங்க ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க எல்லாத்தையும் வைரல் பண்ணிடுவோம்!" எனப் பதில் சொன்னான் இமயன்.
மயில்ராவணன் கொஞ்சம் பயந்து தான் போனார். இவர் தனிப்பட்ட விஷயங்களோடு, தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களும், அவன் கைவசம் இருக்கையில், தன் பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதை நினைத்ததும், அவருக்குள் பதற்றம் வந்து தொலைத்தது.
"உ.. உன்கிட்டே ஆதாரம் இருக்குன்னு நான் எப்படி நம்பறது?"
"இப்போ நீங்க எதையும் நம்ப வேண்டாம் மாமனாரே.. எல்லா ஆதாரமும் வெளியே வந்ததும் நம்புங்க! நகர்புற மேம்பாட்டு நிதியாக வந்த மொத்த பணத்தையும் அடிச்சுட்டு, நிதிப்பற்றாக்குறைன்னு ஆரம்பிச்ச மேம்பால வேலைகளைப் பாதியில் நிறுத்தி வச்சிருக்கீங்க.. இந்தப் பணத்தை அடிச்சதில் யார் யாருக்கு பங்குன்னு சொல்லட்டுமா? உங்க ஷேர் எவ்வளவுன்னு சொல்லவா? அதை எங்கே வச்சிருக்கீங்கன்னு சொல்லவா?" என அவன் கேட்க, அதிர்ந்து போனார் மயில்ராவணன். பதவி தன்னை விட்டுப் போய்விடுமோ? என்ற பயம் அவருக்குள் வந்திருந்தது.
"இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?" யார் மூலமாக இவன் தகவல்களைத் தெரிந்து கொள்கிறான் என அறிந்துக்கொள்ள முற்பட்டார் அவர்.
"அதெல்லாம் இரகசியம் தான். இருந்தாலும் உங்களுக்காகச் சொல்றேன். எல்லாமே நான் நேரடியாய் ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டது தான். வேறெங்கும் கிளைகள் இல்லை.!" என அவன் சொல்ல,
"இங்கே பாரு இமயன், நமக்குள்ளே டீல் போட்டுக்கலாம். இனிமே நான் செய்ற எல்லா விஷயத்திலும் உன்னைச் சேர்த்துக்கிறேன். எவ்வளவு அடிக்கிறோமோ, அதை ஷேர் பண்ணிக்கலாம்! கிட்டத்தட்ட உன்னை என் பாட்னராகவே சேர்த்துக்கிறேன்.!" என தன் வழிக்குக் கொண்டு வர முயன்றார்.
"அதெல்லாம் எனக்கு வேணாம். நான் சொல்ற டீலுக்கு நீங்க ஓகே சொல்லுங்க! அப்பறம் வேணும்ன்னா யோசிக்கலாம்!" என அவன் சொன்னதும், முதலில் அதிர்ந்தாலும், இமயனை தன்னோடு இறுக்கிப் பிடிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தவர்,
"என்ன டீல்?" எனக் கேட்டார்.
"முதலில் எனக்கு டிவோர்ஸ் வேணும்! அதுவும் ஊரறிய வேணும். ரெண்டாவது, எனக்குப் பிடிச்ச மாதிரி, என் கல்யாணத்தை நீங்க தான் முதலமைச்சராய் முன்னே நின்னு நடத்தி வைக்கணும். அதோட, முணாவதா..!" என அவன் நிறுத்த, ஏதோ விவகாரமாய்க் கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்து, அவனையே பார்த்தபடி நின்றார் அவர்.
"கட்சிக்கு வெளியே இருந்ததெல்லாம் போதும்ன்னு நினைக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சரின் மருமகனாக இருந்துட்டு, நான் கட்சிக்குள்ளே இல்லைன்னா எப்படி? ரொம்பவெல்லாம் ஆசைப்படலை மாமா, ரொம்ப ரொம்பச் சின்னப் பதவி தான், எம்.எல் ஏ பதவி எனக்கு வேணும்!"
"ஏன் எம்.எல்.ஏவோட நிறுத்திட்ட, முதலமைச்சர் ஆகணும்ன்னு ஆசைப்பட வேண்டியது தானே?" நக்கலாய் அவர் கேள்வி கேட்க,
"எடுத்ததும் பெரிசா போக வேண்டாம்ன்னு தான் மாமா! படிப்படியாய் நிதானமாய்ப் போவோம்!" என அவன் சொன்னதில் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், எதையுமே முகத்தில் காட்டிக்கொள்ளாமல், இறுகிப் போய் நின்றிருந்தார் அவர்.
"வேற யாரும் கேட்க மாட்டாங்க மாமா! ஏன்னா அவங்கக் கிட்டே ஆதாரம் இல்லையே?"
"ரொம்ப ஆடாதே இமயன், நீ வச்சிருக்கிற அத்தனை ஆதாரத்தையும், ஒண்ணுமே இல்லாமல், ஒரே நொடியில் என்னால் அழிச்சுட முடியும். நீ வச்சிருக்கிற எல்லா ஆதாரமும் போலின்னு என்னால் நிரூபிக்கவும் முடியும். இது எல்லாமே எதிர்க்கட்சியின் சதின்னு ஒரே வார்த்தையில் முடிச்சுவிட முடியும். இப்போவும் சொல்றேன், இந்த விபரீத ஆசையெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா வேலையைப் பாரு!" என எச்சரித்தார் அவர்.
"ஆல் தி பெஸ்ட் மாமா! முடிஞ்சதைப் பண்ணுங்க! என்னால் முடிஞ்சதை நான் பண்றேன்!" தீர்க்கமான குரலில் அவன் சொல்ல, அவன் குரலில் இருந்த உறுதியில் மயில்ராவணன் மனம் கொஞ்சமாய் ஆட்டம் கண்டது.
என்னதான் இமயன் தன்னிடம் ஆதாரம் இருப்பதாய்ச் சொன்னாலும், அதை முழுதுமாய் மயில்ராவணன் நம்பவே இல்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இமயன் பொய் சொல்கிற ஆள் கிடையாது என்பதும் அவருக்குத் தெரியும். அவனிடம் ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை முதலில் உறுதிப்படுத்த முயன்றார். ஆதாரங்களைத் திருட முடிகிறதா? என ஆட்களை வைத்து முயன்று பார்த்தார். எதற்குமே வழியில்லாமல் போக, இமயன் சொன்னவற்றைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் மயில்ராவணன்.
ஆனால், அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இமயனின் கதையை முடித்துவிடலாம் என முயன்றாலும், அனைத்தையும் யூகித்து எல்லாவற்றிற்கும் தயாராகவே இருந்தான் இமயன்.
தேவையில்லாமல், இந்தத் திருமணத்தைச் செய்து வைத்து, சிக்கலில் மாட்டிக் கொண்டோமா? எனத் தாமதமாகவே தோன்றியது அவருக்கு. கவியிடமும், அர்ஜுனிடமும் பேசி, இமாயனிடம் பேசிப் பார்க்கலாம் என முயன்று பார்த்தார். அர்ஜுனும், கவியும் அவர் சொன்ன எதையும் காதில் வாங்கவே இல்லை. வேறு வழியில்லாமல், இமயன் சொன்னவற்றிற்குச் சம்மதித்தார் மயில்ராவணன்.
இமயனுக்கும், கவிக்கும் அவன் கேட்டபடியே விவாகரத்து வாங்கிக் கொடுத்தார். அவரால், சில்லு சில்லாய் நொறுங்கிப் போன அவன் வாழ்க்கையை அவரை வைத்தே மாற்றியமைக்க முயன்றான் இமயன். ஒருவருடமாய்க் கவிநயா வெளிநாட்டில் இருந்ததைக் காரணம் காட்டி, தன்னுடைய பதவியையும் பயன்படுத்தி, விவாகரத்தை பெற்றுத் தந்தவர், தன் மகள் தீபக்கோடு இருப்பதை மட்டும் இரசியமாய் மறைத்து வைத்துக் கொண்டார்.
அவன் கேட்டபடியே அவன் திருமணத்தை முன் நின்று நடத்தவும் முன் வந்தார். ஒருபக்கம் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும், அதைத் தடுத்து நிறுத்தவும் இன்னொருபக்கம் முயற்சி செய்து கொண்டு தான் இருந்தார். ஆனாலும் அதற்கு ஒருபடி முன்னதாகவே இருந்தான் இமயன்.
இத்தனையும் அவர் செய்தாலும், அவனைக் கட்சிக்குள் அனுமதிப்பதில் அவருக்குத் துளியும் விருப்பமே இல்லை. ஆனால், அதையுமே அவரைச் செய்ய வைத்து, மேலூர் தொகுதியில் தன்னையே உறுப்பினராக நிறுத்தும்படி செய்திருந்தான் இமயவரம்பன். கடந்தகாலத்தை சொல்லிவிட்டு, அதிலிருந்து வெளியே வர முடியாமல், அவன் அமைதியாய் அமர்ந்திருக்க,
"இதெல்லாம் அவரைப் பழி வாங்கறதுக்காகச் செஞ்சீயா?" என்ற ஆருத்ராவின் கேள்வி இடையிட்டு இமயனை நடப்பிற்குக் கொண்டு வந்தது.
"இவர் மேலே நான் வைத்திருந்த நன்றியுணர்வும் நம்பிக்கையும் தான், கவியின் கழுத்தில் தாலி கட்ட காரணம். ஆனால், அதையே வச்சு விளையாடியிருக்கார்ன்னு தெரியும் போது, ரொம்பவே கோபம் வந்தது. நான் ஆசைப்பட்ட, வாழ்க்கையை, உன்னை இழப்பதற்கு அவர் தானே காரணம். அதோட, நான் இழந்ததற்கெல்லாம் அவர்கிட்டே நஷ்ட ஈடு வாங்க வேண்டாமா?" என அவன் கேட்க, ஆருத்ராவிடம் பதில் இல்லை.
"புரிஞ்சுக்கோ ஆரா! எனக்கு நீ ரொம்ப முக்கியம்! கவியோட விவாகரத்திற்குப் பிறகு, உன்னைப் பார்க்க வந்தேன் உனக்குத் தெரியுமா? ஆனால், நீ விவேக்கை லவ் பண்ணிட்டு இருந்த.. ஒருவேளை உனக்குக் கல்யாணம் ஆகியிருந்தால், யோசிச்சு பாரு..? உன்னை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தான், உங்க தாத்தாக்கிட்டே சொல்லி அவசரக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சேன். எனக்கு இது தப்புன்னு தெரியும். ஆனாலும், என்னால், உன்னை விட்டுக் கொடுக்க முடியலை ஆரா..!" என அவன் சொல்ல, அவனை நம்பாமல் பார்த்த ஆருத்ரா,
"நிஜமாகவே நீ கவியோட சேர்ந்து வாழ முயற்சிக்காததற்கு நான் தான் காரணமா?" என அவனிடமிருந்து விலகி அமர்ந்து அவள் கேட்க,
அதீதம்-21
மனம் கலங்கிப் போக, தன் காதலியின் முகத்தைப் பார்த்தான் இமயவரம்பன்.
"நீ இன்னொரு பெண்ணுடன் வாழ முயற்சிக்காததற்கு நிஜமாகவே நான் தான் காரணமா?" என்ற ஆருத்ராவின் கேள்வி, உளி கொண்டு இதயத்தைத் துளைத்ததைப் போன்ற ஒரு வலியை அவனுக்குள் ஏற்படுத்தியது.
அவளையுமே அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. திடீரென அவள் முன்னே வந்து நின்று, கல்யாணம் காதல் என்றால், அவளும் என்னதான் செய்வாள் பாவம்.
'எல்லாம் என்னால் தான்! என் காதலை, என் நேசத்தை, நான் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கும், அன்பின் அதீதங்களை, நானே நிரூபிக்கும் நிலைக்குத் தள்ளப்படிருக்கிறேன் என்றால், அதற்கான முழுமுதற் காரணம் நான் தான்!' எனத் தன்னைத் தானே நொந்து கொண்டான் இமயன்.
"நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா? நான் உன்னை ஹர்ட் பண்ணணும்ன்னு கேட்கலை..!" சங்கடமாய் அவள் வினவ,
"உன் மேல் எந்தத் தப்பும் இல்லை ஆரா! உன் மீதானக் காதலை நான் எனக்குள்ளேயே ஒளிச்சு வச்சிருந்தது தான் தப்பு! உன் கிட்டே சொல்லியிருக்கணும்!" எனச் சொன்னவன்,
"நாம ஒருத்தங்களை, நம்மளை விட அதிகமாக நம்பும் போது, அவங்களைச் சந்தேகப்பட மாட்டோம். அவங்க செய்றது எதுவுமே நமக்குத் தப்பா தெரியாது. கண்மூடித் தனமாக அவங்களை நம்புவோம். அவங்களுக்காக நமக்குச் சம்மந்தமே இல்லாதங்களைக் கூடப் பகைச்சுப்போம். அப்படி நான் கண்மூடித்தனமாக வச்ச நம்பிக்கையும், விசுவாசமும் தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.!" என முடிக்க, புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
அவன் சொன்னதன் பொருள் அவளுக்குத் தெள்ளத்தெளிவாய் விளங்காவிட்டாலும் கூட, அவன் மனநிலையை ஓரளவிற்கு அவளால் யூகிக்க முடிந்தது.
"என்னால் ஓரளவிற்கு உன்னைப் புரிஞ்சுக்க முடியுது மாயன்! எந்த விஷயத்திலும், தனக்கு ஆதாயம் இருக்கான்னு பார்க்கிறது தான் மனிதனோட இயல்பு. சாதாரண விஷயங்களுக்கே அப்படி இருக்கும் போது, அரசியலில் இதெல்லாம் நடக்கிறது தான். ஒவ்வொரு ஏமாற்றமும் அடுத்த முறை நாம ஏமாறாமல் இருக்கிறாதுக்கான முன்னெச்சரிக்கைன்னு நினைச்சுக்கோ!" என அவள் சொன்னதில் அவன் உதடுகள், புன்னகையில் விரிந்தது. அவன் அவ்வப்போது அழைக்கும், மாயன் என்ற விளிப்பு, அவன் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. அவன் விழிகளோ, மெய் மறந்து, அவளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது.
அவனால் நிஜமாகவே அவள் தன் அருகில் இருக்கிறாள், என்பதை நம்ப முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்கும், அவன் ஆரா அவன் அருகில் அமர்ந்திருப்பாள், என யாராவது சொல்லியிருந்தால், நிஜமாகவே நம்பியிருக்க மாட்டான் தான்.
எல்லாம் கண் முன்னே நடப்பதைப் பார்க்க அவனுக்கு அதிசயமாகத் தான் இருந்தது. வழி தவறி கூடு சேர்ந்த பறவையைப் போல், அவனுக்குள் நிம்மதியும், இவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற உறுதியும், அவனுக்குள் இருந்தது. அதே நேரம், தன் காதலின் ஆழத்தை அவளிடம் காட்டுவதற்கான தீவிரமும் அவன் மனதிற்குள் இருந்தது.
யோசனையோடு அமர்ந்திருந்தவன், தனக்குள் முடிவெடுத்தவனாய், அவளை அழைத்தான்.
"ஆரா..!" என்ற அவனின் மென்மையான விளிப்பில், அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
"வா! போகலாம்!" எனக் கை நீட்டி அவளை அழைத்தான்.
"உனக்கு அடிப்பட்டிருக்கு! நீ ஹாஸ்பிட்டலில் இருக்க, இப்போ எங்கே போறது?"
"சொல்றேன் வா!" என்றவனின் குரலில் உற்சாகம் தெரிந்தது. அவள் கரம் பிடித்து, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவனை வினோதமாய்ப் பார்த்தான் அர்ஜுன்.
"இமயன்! எங்கே போற? அதுவும் ஆருத்ராவைக் கூட்டிட்டு நீ எங்கேயும் போக வேணாம்.! அந்த ஆளு, உன்னை மொத்தமா முடிச்சுடணும்ன்னு காத்துட்டு இருக்கார். நீ என்னடான்னா விளையாடிட்டு இருக்க?" கொஞ்சம் கடுமையாகவே கடிந்து கொண்டான் அர்ஜுன்.
"ரொம்ப முக்கியமான விஷயம் அர்ஜுன்.! என்னைத் தடுக்காதே ப்ளீஸ்..!" என இமயன் சொல்ல,
"இங்கே பாரு மச்சான்! இது ரிஸ்க்! இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம் இருக்கு! மேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதி பத்தின அறிவிப்பு எப்போ வேணும்ன்னாலும் வரலாம். இந்த நேரத்தில் நீ வெளியே போய் ஏதாவது ஒண்ணுன்னா என்ன செய்றது?" என அர்ஜுன் கவலையாகக் கேட்க, அர்ஜுனின் காதுக்குள் ஏதோ இரகசியமாய் முணுமுணுத்தான் இமயன்.
அர்ஜுனோ, புன்னகையுடன், " சரி டா! பார்த்து போய்ட்டு வா! நம்ம பசங்களைத் துணைக்குக் கூட்டிட்டு போ!" என எச்சரித்தான்.
"நான் பார்த்துக்கிறேன் டா!" எனச் சொன்ன இமயன் இதனால் நடக்கப் போகும் விபரீதங்களை அறியவில்லை தான்.
ஆருத்ராவோ, அர்ஜுனையும், இமயனையும் மாறி மாறிப் பார்த்தபடி புரியாமல் நின்றாள்.
'இவன் அவன் காதுக்குள் என்ன சொன்னான்? எதற்காக அர்ஜுன் சிரித்தான்?' எனப் புரியாமல், நின்றிருக்க,
"வா! போகலாம்!" என அவள் கரம் பிடித்து இழுத்தான் இமயன்.
"எங்கே?"
"சொல்றேன் ஆரா!"
"நீ சொல்லாமல் நான் வர மாட்டேன்.!" பிடிவாதமாய் வர மறுத்தாள் பெண்.
"ஏன் வர மாட்டே? இன்னும் என்னை நீ நம்பலையா ஆரா?"
"நீ என்னவோ அர்ஜுன் கிட்டே சொன்னே, அவனும் சிரிச்சான். என்ன ப்ளான் பண்ணுறீங்க? எங்கேன்னு சொல்லாமல் நான் வர மாட்டேன்.!" வீம்பாக அவள் நிற்க,
"டேட்டிங் போறேன்னு சொன்னேன்.. அதான் அவன் சிரிச்சான்." என அவன் சொன்னதும், அதிர்ந்து அவள் விழிக்க, அவள் ஸ்தம்பித்து நின்ற அந்த நொடியைப் பயன்படுத்தி, அவளை அழைத்துப் போய் வாகனத்திற்குள் அமர வைத்திருந்தான் அவன்.
"டேட்டிங்.? என் கூடவா? நான் வரலை!"
"நீ தானே எனக்குள் இருக்கிறவ.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவள்.. அப்போ உன் கூடத் தானே டேட்டிங் போகணும்?" புன்னைகையுடன் புருவம் உயர்த்தினான் அவன்.
"அது.. அத்தை எதாவது நினைச்சுப்பாங்க!" தடுக்க வழி கிடைக்கிறதா எனக் காரணம் தேடினாள் அவள்.
"அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன்."
"இல்லை! இதெல்லாம் வேணாம். உனக்கு வேற அடி பட்டிருக்கு.. இப்போ எங்கேயும் போக வேணாம்.!"
"ஐ அம் ஃபெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்! ஓராயிரம் ஆசைகளை எனக்குள்ளே ஒளிச்சு வச்சிருக்கேன் ஆரா.. உன்னோட வாழ்ந்து முடிக்கிற வரை, எனக்கு எதுவும் ஆகாது.!" என அவன் சொல்ல, அளால் எதுவுமே பேச முடியவில்லை.
அவனுடனான இந்தப் பயணம், அவளுக்குக் கொஞ்சம் பயமாகவும், பதற்றமாகவும் தான் இருந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன், இது அவசியமா? என்ற கேள்வியும் அவளுக்குள் இருந்தது. அதுவும் அர்ஜுன் எச்சரித்த பின்னும் அவன் அவளை அழைத்துப் போவது, அவளுக்கு உறுத்தலாகத் தான் இருந்தது. என்ன சொல்லி அவனை நிறுத்துவதென அவளுக்குப் புரியவில்லை. அவனை நிறுத்தி வைப்பதற்கான காரணங்களும் அவளிடம் இல்லை.
விசிலடித்தபடியே உற்சாக மனநிலையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்ததும், அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல், அமைதியாகவே அமர்ந்திருந்தாள் அவள்.
"என்ன ஆரா.. எதுவுமே பேசாமல் வர்ர? என் மேல் கோபமா?!" எனக் கேட்டான் அவன்.
"இல்லை!"
"டேட்டிங்ன்னு உன்னைக் கூட்டிட்டு போய், ஏதாவது பண்ணிடுவேன்னு பயமா இருக்கா?" என அவன் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி கேட்க,
"நீ என்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும். உன் மனசில் இருந்த காதலை என்கிட்டே சொல்லவே, உனக்கு வருஷங்கள் தேவைப்பட்டிருக்கு. இன்னும் மத்ததெல்லாம் பண்ணணும்ன்னா, எத்தனை வருஷம் ஆகுமோ? இப்போவே உனக்கு நரை முடியெல்லாம் வந்துடுச்சு. கிட்டத்தட்ட நம்ம ரெண்டு பேருக்குமே வயசாகிடும்ன்னு நினைக்கிறேன்.!" அவன் கேட்ட அதே தொனியில் பதில் சொன்னாள் அவள்.
"என்னை ட்ரிகர் பண்ணுறியா? இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன். எல்லாத்தையும் என் கூட இருந்து பார்க்கத் தானே போற?"
"பார்ப்போம்! பார்ப்போம்!" எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆருத்ரா.
அதற்குள் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்துவிடவுமே, தன் இருக்கையிலிருந்து அவளுக்காகக் கதவைத் திறந்துவிட்டான் அவன்.
"இங்கே எதுக்கு வந்துருக்கோம்? இது உங்க ஊரு தானே? இங்கே எதுக்குக் கூட்டிட்டு வந்த? உங்க வீட்டுக்குப் போகாமல், இங்கே ஏன் வந்திருக்கோம்?" எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தாள் அவள்.
ஆம்! அவர்கள் வந்திருந்தது, அவனது சொந்த ஊரான கல்யானைக்குத் தான். ஆனால் அவனது பெரிய வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், வேறு எங்கோ அழைத்து வந்திருந்தான்.
"பொறுமையாய் வா! உன்னோட எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைக்கும்!" எனச் சொன்னவன்,
"இதுக்கு மேலே கார் போகாது! நாம நடந்து தான் போகணும்!" எனச் சொன்னவன், அவள் கரம் பிடித்து, ஒற்றையடிப் பாதையில் நடந்தான். அவனது தீண்டலில் உடல் சிலிர்த்து அடங்கிய போதும், பாதுகாப்பாகவும் உணர்ந்தாள் ஆருத்ரா.
கன்னிப் பெண்ணின் நெற்றி வகிடாய் நீண்டிருந்த ஒற்றை வழிப் பாதையின் இருபுறமும், தென்னை மரங்கள் வரிசையாய் ஒற்றைக்காலில் நின்றன. அந்தத் தென்னந்தோப்பிற்குள், ஆங்காங்கே கிளிகளின் கொஞ்சல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. கண்களுக்குள் அடங்க முடியாத அளவிற்கு நீண்ட நெடிய தோப்பைக் கடந்த பின், ஒரு சிறு ஓடை, கெண்டைக்கால் நனையும் அளவிற்கே நீர் ஓடிக் கொண்டிருந்தது.
தன் காலணியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, குளிர் ஓடை நீரில் பாதம் பதிய அவள் நடக்க, அவனுடனான பயணம் அவளுக்குப் பிடிக்கத் துவங்கியது. மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் மறந்து போயிருக்க, நீலக்கடலை ஆட்கொண்டிருக்கும், ஆதிஷேஷனைப் போல, ஆருத்ராவின் மனதை அவள் மாயன் மட்டுமே ஆட்கொண்டிருந்தான்.
அந்த ஓடையைக் கடந்த பின், மீண்டுமொரு ஒற்றைவழிப் பாதையில் பயணம். இந்த ஒற்றைவழிப் பாதையின் இருபுறமும், வயல்வெளிகள் காட்சியளித்தன. வயல்வெளிகள், வரப்புகளின் முடிவில், கண்களுக்கு வீடுகள் தென்பட, சில தெருக்களையும், பல வீடுகளையும் தாண்டிச் சென்ற பின், அவன் அழைத்து வந்திருந்த அந்தப் பழைய வீடு அவள் கண்களுக்குப் புலப்பட்டது. வீட்டின் இருபுறமும், பூச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. வீட்டின் பக்கவாட்டில் காலியான இடமும் இருந்தது.
வெளியே திண்ணை வைத்துக் கட்டப்பட்டிருந்த வீட்டின் தோற்றமே, அது இமயன் குடும்பத்தினர் வாழ்ந்த வீடு என்பதைச் சொல்லாமல் சொன்னது. கதவை தான் கொண்டு வந்திருந்த சாவியின் உதவியால் திறந்து அவளை உள்ளே அழைத்துப் போனான் இமயவரம்பன்.
என்னதான் பழைய வீடாக இருந்தாலும், இன்னுமே நேர்த்தியாகப் பராமரிக்கப்படுவதை அவளால் உணர முடிந்தது. நவீனத்திற்கு ஏற்றாற் போல் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் அவள் புரிந்துக்கொண்டாள்.
******
"இங்கே தான் நீங்க முன்னாடி இருந்தீங்களா?" வீட்டைக் கண்ணால் ஆராய்ந்தபடியே கேட்டாள் அவள்.
"ம்ம்!" வெறும் ஒற்றை எழுத்தில் பதில் சொன்னான் அவன்.
வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்த, திருமணப் புகைப்படங்களைப் பார்த்து,
"இது உன் தாத்தா, பாட்டி, இது உன் அம்மா அப்பாவா?" என ஆர்வமாய் அவள் கேட்க,
"ஆமா! அவங்க தான்!" எனச் சிரித்தபடியே பதில் சொன்னான் அவன்.
"ஹேய்! இமயன் இது நீயா? கொழுக் கொழுன்னு அழகா இருக்கே? ஆமா இது யாரு அழுமூஞ்சியாய் இருக்கிறது?" என அவனைப் பார்த்து அவள் கேட்க,
"இந்த அழுமூஞ்சி உன் ஃப்ரெண்ட் ராகவ் தான். நீ சொன்ன மாதிரியே அந்தக் கொழு கொழு பையன் நான் தான்.!" என அவன் சொல்ல, மிக நெருக்கத்தில் கேட்ட அவன் குரலில், தடுமாறி தயங்கி நின்றாள் பெண்.
ஆனால் அவனோ, சாதாரணமாகத் தான் நின்றிருந்தான். 'தன்னிடம் கிளர்ந்தெழும் குறுகுறுப்புகள் அவனுக்குள் தோன்றவில்லையோ?' என்றெல்லாம் அவளுக்குத் தோன்றியது.
வரிசையாக, அவனது குடும்பப் புகைப்படங்கள், சிறு வயது புகைப்படங்கள் எனக் காட்டி முடித்த பின், அவளைத் தன் தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி, மாடியறையை நோக்கி அழைத்துப் போனான் அவன். அவனின் நெருக்கமும் தொடுதலும், அவளை ஏதோ செய்தது. இனம்புரியாத அந்த உணர்வில், தடுமாறி தத்தளித்து நின்றாள் ஆருத்ரா.
தன் தோளோடு அணைத்துப் பிடித்து, அவளை அந்த அறையின் முன் நிறுத்த, கேள்வியாய் அவனைப் பார்த்தாள் அவள்.
"இங்கே உன்னைக் கல்யாணத்திற்குப் பிறகு தான் கூட்டிட்டு வரணும்ன்னு நினைச்சேன். ஆனால், நீ கேட்ட ஒரேயொரு கேள்வி என்னை இங்கே வர வச்சிடுச்சு.!" என அவன் சொல்ல, இவளுக்குள்ளோ ஆர்வம் கூடியது.
"அப்படி என்ன இருக்கு உள்ளே?" என அவள் கேட்ட அதே நேரம், கதவைத் திறந்து கொண்டு உள்ளே அழைத்துப் போனான் அவன். ஆர்வத்துடன் அவன் தோள் வளைவிற்குள் நின்றபடியே உள்ளே நுழைந்தாள் அவள்.
'பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது?' என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தவள் அதிர்ந்து தான் போனாள். நிஜமாகவே அவள் கண்களை அவளால், நம்பவே முடியவில்லை. தான் கேட்ட ஒற்றைக் கேள்வி அவனை எவ்வளவு பாதித்திருக்கும்? என்பது அவளுக்குப் புரிந்தது.
உள்ளே நுழைந்ததுமே, வாசலில் நேர் எதிரே வரையப்பட்டிருந்த ஓவியத்தில், திருமணக்கோலத்தில் நின்றிருந்தனர் இமயனும் ஆருத்ராவும். இவளோ ஆதிர்ச்சியாய் அவனைப் பார்க்க,
"என் மனசுக்குள்ளேயே நமக்குக் கல்யாணம் முடிஞ்சு நிறைய நாள் ஆகிடுச்சு ஆரா. இந்த அறைக்குள்ளே என்னைத் தவிர இதுவரை யாரும் வந்ததே இல்லை. இது நமக்கான இடம். உனக்கும் எனக்கும் மட்டுமான இடம்.!" என அவன் சொன்னான்.
நேர்த்தியாய் அழகான பச்சை நிறப் புடவையில், அவன் கைவளைவிற்குள் அவள் முகம் சிவந்து நிற்பதைப் போல் வரையப்பட்டிருந்தது அந்த ஓவியம். அது ஓவியம் என உணர முடியாத அளவிற்கு அத்தனை தத்ரூபமாக வரையப்பட்டிருந்து. அதை அவள் இமை கூடச் சிமிட்ட மனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்க,
"இதுக்கே அசந்து போய் நின்னுட்டா எப்படி? இன்னும் இருக்கே..!" என அவன் சொல்ல, சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள் ஆருத்ரா.
அவளின் சிறு வயது புகைப்படம் கூட, புதிதாக்கப்பட்டு அவன் வீட்டில் இருந்தது. முதன் முதலாய் அவன் அவளைப் பார்த்தது. தோட்டத்தில் பட்டாம்பூச்சியைப் பிடித்துத் தந்தது. அவள் விளையாடிக் கொண்டிருப்பது. அவள் தன் தாத்தாவோடு அமர்ந்திருப்பது, அவள் பூப்பறித்துக் கொண்டிருப்பது என அவன் பார்த்த விஷயங்கள் எல்லாம் புகைப்படமாய் அந்த வீட்டின் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்க, அவன் கற்பனை செய்த விஷயங்கள் எல்லாம் ஓவியங்களாய்த் தீட்டப்பட்டிருந்தது.
அவனும் அவளும் ஒன்றாகப் பேருந்தில் பயணிப்பது, இருசக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்தபடி பயணிப்பது, இருவரும் ஒன்றாய் பனிக்கூழ் உண்பது, அவள் மடியில் அவன் உறங்கிக் கொண்டிருப்பது, இருவருமே ஒன்றாகக் கோவிலில் சாமி கும்பிடுவது, எனத் துவங்கி, அவர்களின் குழந்தை பிறந்து நடை பயில்வது வரை ஓவியங்கள் நிறைந்திருந்தன.
அவளுக்கோ, அந்த ஓவியங்களைப் பார்க்க, பார்க்க தலையைச் சுற்றியது.
'கிட்டத்தட்ட அவன் கற்பனையில் தன்னோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்!' என்பதைதத்தான் அந்த ஓவியங்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
'இத்தனை நேசத்தை, காதலை முழுக்க முழுக்கச் சுமந்துக்கொண்டு ஒருவனால் இருக்க முடியுமா? இந்தக் காதலுக்கு நான் தகுதியானவள் தானா?' என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது.
"இ.. இதெல்லாம் நீயே வரைஞ்சதா?" என நம்ப முடியாமல் அவள் கேட்க,
"வேற யாரு வரைஞ்சிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?" என்ற பதில் கேள்வி கேட்டு, அவனே வரைந்ததை உறுதி செய்தான் இமயன்.
அவன் பெயரைப் போலவே அவன் காதலும் மலையளவு உயர்ந்தது என்பதைப் புரிந்துக் கொண்டாள் அவள்.
"இந்த வீட்டோட எனக்குத் தனிப்பட்ட நெருக்கம் உண்டு. என்னோட சின்ன வயசில் நாங்க வாழ்ந்த வீடு. என்னோட சிரிப்பு, சந்தோஷம், அழுகை, கண்ணீர், சோகம், துக்கம், கோபம் எல்லாத்தையும் இந்த வீடு பார்த்திருக்கு. வசதி வாய்ப்புக்காக எல்லாரும் வேற வீட்டுக்குப் போய்ட்டாலும் கூட, என்னால் இந்த வீட்டை விட முடியலை. நான் என்னோட குடும்பத்தை என் வீட்டில் எனக்காக உருவாக்கிக்கிட்டேன். இங்கே நான் வந்துட்டால், நீ, நம்ம குழந்தை, கூடவே நான்.. கற்பனையாய் இருந்தாலும் அழகானது என் உலகம். ஒருவேளை எனக்கு நீ கிடைக்காமல் போயிருந்தாலும், இந்தக் கற்பனையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சிருக்கும். வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு, இது பைத்தியக்காரத் தனமாகத் தெரியலாம். ஆனால் எனக்கு இது மட்டும் தான் வாழ்க்கை!" என அவன் சொல்ல, நெகிழ்ந்து போய்க் கண்களில் நீர் தேங்க, அவனை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.
'இப்படிக் கற்பனையிலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவனால், எப்படிக் கவியுடன் வாழ முயற்சித்திருக்க முடியும்? நீ கவியுடன் வாழ முயற்சிக்காததற்கு நிஜமாகவே நான் தான் காரணமா? என நான் கேட்ட ஒற்றைக் கேள்விக்கான பதில், இதோ, கண் முன்னே விரிந்து கிடக்கிறதே?' என யோசித்தவளின் மனம் அவன் அன்பின் அதீதத்தில் பாரமாய்க் கனத்தது.
"இப்போ சொல்லு ஆரா, என்னால் எப்படிக் கவியுடன் வாழ முயற்சித்திருக்க முடியும்? என்னால் முடிஞ்சிருக்கும்ன்னு நீ நினைக்கிறியா? அப்படியே நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும், உயிரோட இருக்கும் பிணமாக வேணும்ன்னா இருந்திருப்பேன்..!" என அவன் சொல்ல,
"இப்படியெல்லாம் பேசாதே மாயன்!" எனத் தன் பொன் விரல்களால் அவன் இதழ் மூடினாள் பெண்.
"சும்மா பேச்சுக்குச் சொல்றதுக்கெல்லாம் நான் செத்துட மாட்டேன் டி!" என அவன் மீண்டும் சொல்ல, அவன் தோளில் கரம் பதித்து எம்பி, தன் இதழ்களால் அவன் இதழ்களை மூடியிருந்தாள் அவனின் ஆரா.
அவள் இப்படிச் செய்வாள், என எதிர்பார்க்காதவன், முதலில் தடுமாறி, பின் அவள் இடையோடு கையிட்டு தூக்கி, அவள் துவங்கி வைத்ததை அவன் முடித்து வைத்தான். நொடிகள் நிமிடங்களாய் நீண்டு, இடைவெளிக்காய் அவள் தவித்து, மூச்சுவாங்க அவள் நிற்க, அவளை இறுக்கமாய் அணைத்து, அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான் அவன்.
"காதலைச் சொல்ல வேணும்ன்னா நான் தயங்கி நின்னுருக்கலாம்! ஆனால் மத்ததுக்கெல்லாம் தயங்கி நிற்கிற ஆள் இல்லை டி.. இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன்!" என அவன் கண்சிமிட்டி சிரிக்க, நாணத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள் அவள்.
அவன் மார்பில் சாய்ந்தபடியே, மீண்டும் அந்த அறையில் பார்வையை ஓட்டியவள், அங்கே பூட்டியிருந்த இன்னொரு அறையைப் பார்த்து,
"அந்த ரூம் ஏன் பூட்டியிருக்கு..? அங்கே எதாவது வரைஞ்சு வச்சிருக்கியா?" எனக் கேட்டாள்.
"இருக்கு..! ஆனால் நீ இப்போ பார்க்க வேணாம்! அது நம்ம பெட் ரூம்.. அங்கே வரைஞ்சு வச்சிருக்கிறதெல்லாம் நமக்கு மட்டுமேயான டர்ட்டி திங்ஸ்.. அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் காட்டுறேன்.!" எனக் கிசுகிசுப்பாய் அவள் காதிற்குள் சொன்னவனை அவள் முறைக்க,
"முறைக்காதே டி! கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துருக்கேன். அப்போ கற்பனை அப்படியெல்லாம் போகாதா?!" என அவன் கேட்க, அவள் பதிலே சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள்.
"ஏன் என் மேல் உனக்கு லவ் வந்தது? வேற எந்தப் பொண்ணும் உன் கண்ணுக்கு தெரியலையா?"
"இதென்ன கேள்வி? இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?"
"நீ தான் அரசியல்வாதியாச்சே..? உனக்கா பதில் தெரியாது?" என அவள் கேட்க,
"உனக்கு ஏன் ஐஸ்க்ரீம் பிடிக்கும்ன்னு கேட்டால் நீ என்ன சொல்லுவ?" எனப் பதில் கேள்வி கேட்டான் அவன்.
"அதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? பிடிக்கும் அதனால் சாப்பிடுறேன்.!" எனச் சாதாரணமாய் அவள் சொல்ல,
"அதே பதில் தான் நானும் சொல்வேன், வேற எந்தப் பொண்ணையும் எனக்குப் பிடிக்கலை.. உன்னை மட்டும் தான் பிடிச்சுது. இதுக்கு மேலே எனக்குப் பதில் சொல்லத் தெரியாது!" என அவன் சொல்ல இதழ்விரித்துச் சிரித்தாள் அவள்.
"நீ எதிர்பார்த்த பதிலை நான் சொல்லிட்டேனா? போதுமா? என்னையே கேள்வி கேட்டு திணற வைக்கிறியே..!" என்றவன், அவளை மீண்டும் இறுக அணைத்துக் கன்னத்தில் இதழ் பதித்தான்.
"போதும்! இங்கே இருந்தால், இனிமே சரி வராது.! வா! கிளம்பலாம்!" எனச் சொன்னவன், அவள் கரம்பிடித்து அழைத்துக் கொண்டு கீழே வந்தான். அவள் கரத்தோடு கரம் கோர்த்தபடி நடந்து வந்து, கவனமாகக் கதவைப் பூட்டிவிட்டு, சாவியை அவளிடம் தந்துவிட்டு, அவளுடன் நடந்தான்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போதிருந்த சஞ்சலங்கள் எதுவும் இப்போது அவள் மனதில் இல்லை. அவள் மனம் தெளிவாகவே இருந்தது. அவன் காதல் அவளுக்கானது மட்டுமே என்ற நிம்மதியும் இருந்தது.
ஆனால் அந்த நிம்மதிக்கு அற்ப ஆயுள் என்பதை இருவருமே அறிந்திருக்கவில்லை. அது தான் விதியோ என்னவோ? அவனைப் பற்றி அவளுக்குள் தெளிவு வந்த பின், அவனின் நேசத்தை உணர்ந்து கொண்ட பின், இப்படியொன்றை நடத்த தான் காலமும் காத்திருந்ததோ என்னவோ?
வீட்டிலிருந்து வெளியேறி, உரிமையாய் அவன் கரம் பற்றி அவனுடன் நடந்தாள் அவள். குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து வயல்வெளி, ஓடை, ஒற்றையடிப் பாதை என ஒவ்வொன்றாய் கடந்து, வாகனத்தை நோக்கி அவர்கள் நடந்து கொண்டிருந்த நேரம், அவர்களுக்குப் பின்னால் கேட்ட சத்தத்தில் நடையை நிறுத்தி திரும்பி நின்றான் இமயன்.
சில நொடிகள் நிதானித்து, கண்களால் சுற்றிலும் ஆராய்ந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அவன் கண்களுக்கு யாரும் புலப்படவில்லை.
"என்ன ஆச்சு? யாரையாவது தேடுறியா இமயன்?" என ஆருத்ரா கேட்க,
"ஒண்ணுமில்லை!" எனச் சொன்னாலும் சுற்றிலும் பார்வையை அலசியபடியே நடந்தான் அவன். ஆருத்ராவிற்கோ ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பதற்றத்தோடு, அவன் கரம் பிடித்து நடந்தாள் அவள். கிட்டத்தட்ட மகிழுந்தை நெருங்க சில அடிகள் இருக்கும் போதே, பதற்றமாய் அவளைப் பிடித்து இழுத்து வந்த இமயன் அவளை வாகனத்திற்குள் தள்ளுவதற்கும், அவன் மீது துப்பாக்கிக்குண்டு பாய்வதற்கும் சரியாக இருக்க, பதற்றத்தில் வீறிட்டு அலறியிருந்தாள் ஆருத்ரா.
"ஆரா..! ஒண்ணும் இல்லை. பயப்படாதே!" என்றபடியே மார்புப் பகுதி உதிரத்தில் நனைந்திருக்க, அவளை ஆசுவாசப்படுத்த முயன்றபடியே உள்ளே ஏறி அமர்ந்தான் அவன்.
"ஐயோ! இரத்தம்! இமயன்! எனக்குப் பயமா இருக்கு!" என அவள் பயத்துடன் அழுகையில் கரைய,
"இங்கே பாரு..! நாம உடனே இங்கிருந்து கிளம்பணும்! நீ தான் காரை ட்ரைவ் பண்ணணும்! நிதானமாய் மூச்சை இழுத்துவிடு! இது அர்ஜுனோட கார்! இந்தக் கார் புல்லட் ப்ரூஃப்.. அதனால் பயப்படாமல், வண்டியை எடு..! சீக்கிரம் ஆரா..! சொல்றதைக் கேளு!"
நல்லவேளையாக அவளைத் தள்ளியது ஓட்டுநர் இருக்கையாக இருக்க, பதற்றமும் பயமும் ஒருசேர, அவள் வாகனத்தைக் கிளப்பவும், பக்கவாட்டுக் கண்ணாடியை இன்னொரு தோட்டா உரசிச் செல்லவும் சரியாக இருக்க, அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தன் அலைபேசியில்,
"கால் அர்ஜுன்!" எனக் குரலொலி மூலமாக அழைத்தவன்,
"அர்ஜுன்! கார் லொக்கேஷன் ட்ரேஸ் பண்ணிட்டுச் சீக்கிரம் வா! எமெர்ஜென்ஸி டா!" எனச் சொன்னபடியே மயங்கிச் சரிந்திருந்தான்.
"ஐயோ.. இமயன்! இமயன்..! ப்ளீஸ் கண்ணைத் திற! எனக்குப் பயமா இருக்கு இமயன்!" எனப் பதறியபடி அவனை எழுப்ப முயல, அவள் குரல் மட்டுமே அந்த வாகனத்தினுள் எதிரொலித்துக் கொண்டிருக்க, அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனின் குரல் அவள் செவிகளில் விழாமல் போனது.
"உன் குரல் எனக்குள் கேட்கிறது.. உன் கண்ணீரின் கதகதப்பும் உணர முடிகிறது..
அதீதம்-22
"ஆருத்ரா! ஆருத்ரா!" அர்ஜுனின் குரல் அவள் செவிகளில் விழவே இல்லை.
அவள் பார்வை முழுதும் அசைவற்று சரிந்துக் கிடந்த இமயனின் மீது மட்டுமே இருந்தது. கண்களில் கண்ணீர் நிறைந்து பார்வையை மறைக்க, மகிழுந்தை ஓரமாய் நிறுத்தியிருந்தாள் அவள்.
"ஆரு! நான் பேசுறது கேட்குதா? காரை நிறுத்திடாதே! அது அவன் உயிருக்கே ஆபத்தாக முடிஞ்சுடும். இப்போ நீ அழுதுட்டே இருந்தால், இமயனை நிரந்தரமாய்ப் பார்க்க முடியாமல் போகலாம்.!" என அர்ஜுன் சொல்லிக் கொண்டே இருக்க, அவனின் கடைசி வார்த்தைகளில், உயிர் வந்தவளாய் நிமிர்ந்து அமர்ந்தாள் ஆருத்ரா.
"நான்.. என்ன செய்யணும்?" தொண்டையெல்லாம் வறண்டு போக, உயிர்ப்பே இல்லாத குரலில் கேட்டாள் அவள்.
"இங்கே பாரு ஆரு! உன் நிலமை எனக்குப் புரியுது. காரை மட்டும் நிறுத்தாமல் வந்துட்டே இரு! ஐ அம் ஆன் மை வே..! சீக்கிரம் வந்துடுவேன். இமயனோட உயிர் உன் கையில் தான் இருக்கு.!" என அழுத்தமான குரலில் சொன்னான் அர்ஜுன்.
"எனக்குப் பயமா இருக்கு!" என அவளின் குரல் தடுமாறித் தளர்ந்தது.
"ஆரு! ப்ளீஸ்.. இது பயப்படுற நேரம் இல்லை. இமயனை மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாரு. நான் லைனிலேயே தான் இருக்கேன். இப்போ காரை ஸ்டார்ட் பண்ணு. தைரியமாய் இரு.. இமயனுக்கு எதுவும் ஆகாது!" என அவன் தைரியம் சொல்ல, மெதுவாகவே வாகனத்தைக் கிளப்பினாள் ஆருத்ரா.
அவள் இதுவரை ஓட்டிப் பழக்கியதெல்லாம் சிறிய ரக வாகனங்களாக இருக்க SUV ரக வாகனத்தை ஓட்டுவதில் அவளுக்குச் சிரமமாகத் தான் இருந்தது. ஆனாலும் அர்ஜுனின் வழிகாட்டுதலில் வாகனத்தைச் செலுத்தியவள், அவன் சொன்ன இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தாள். அதன் பின் நிகழ வேண்டிய அனைத்தையுமே, தன் கரத்தில் எடுத்துக் கொண்டான் அர்ஜுன்.
இமயனின் அவசர சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவுடன் வந்திருந்தான் அர்ஜுன். முதலுதவி சிகிச்சைகள் துவங்கியது முதல், அவனை மருத்துவமனையில் அனுமதிப்பது வரை அவன் ஓயவே இல்லை.
"நான் தான் சொன்னேனே டா.. நம்ம ஆளுங்களைக் கூடக் கூட்டிட்டு போயிருக்கலாமே..? இப்போ இதெல்லாம் தேவையா?" அவசர சிகிச்சை பிரிவின் கதவைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
ஆருத்ராவோ அறையின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். கரையுடந்து கன்னத்தில் வழியும் கண்ணீரையும் துடைக்கக் கூட மறந்து அமர்ந்திருந்தாள் அவள்.
"நான் தான் உன் அண்ணனைப் புரிஞ்சுக்கல ராகவ்! அவனுக்கு இப்படி நடந்ததற்கு நான் தான் காரணம். எனக்கு ப்ரூவ் பண்ணுறதுக்காகத் தான் அவன் என்னை அங்கே கூட்டிட்டுப் போனான். எனக்கு ரொம்பக் குற்றவுணர்ச்சியாய் இருக்கு ராகவ்.!" எனத் தேம்பியபடி அவள் சொல்ல,
"ம்ப்ச்! உன்னால் தான் எல்லாம் நடந்ததுன்னு நினைக்காதே ஆரு! இமயன் சரியாகி சீக்கிரமே வந்துடுவான்.!" என அமைதிப்படுத்த முயன்றான் ராகவ்.
"உனக்கு என் மேலே கோபம் வரலையா ராகவ்? எப்படி என்கிட்டே இவ்வளவு அமைதியாய் பேச முடியுது? இமயனுக்கு இப்படி ஆனதில் உனக்கும் வருத்தம் இருக்கும் தானே?"
"லூசா நீ? நீ என் ஃப்ரெண்ட் ஆரு! உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். இப்படி நடந்ததுக்கு உன்னைப் பழி சொல்லி என்ன ஆகிடப் போகுது சொல்லு? நடந்து முடிஞ்ச எதையுமே நம்மால் மாத்த முடியாது. ஆனால், இமயன் மீண்டு வருவான்ங்கிற நம்பிக்கையோட காத்திருக்கலாம். அதைத்தான் நானும் செய்றேன்.! நான் வைக்கிற நம்பிக்கை அவனை மீட்டுக் கொண்டு வருதோ இல்லையோ? அது எனக்குத் தெரியாது. ஆனால் உன்னோட நம்பிக்கை அவனை மீட்டுக் கொண்டு வரும்" என ராகவ் சொன்ன வார்த்தைகள் அவளிடம் கொஞ்சம் நம்பிக்கையைக் கொண்டு வந்தது.
அதே நேரம்,
"ரெண்டு நாளில் கல்யாணத்தை வச்சிக்கிட்டு, இப்படி வந்து படுத்துக்கிட்டானே? யார் கண்ணு பட்டுச்சோ? எல்லாம் இவளால் தான். என் பேரனை இப்படிப் படுக்க வச்சிட்டல்ல?" எனப் புலம்பியபடியே செல்லம்மா வர, அவரைத் தொடர்ந்து, இமயனின் தாய், தந்தை இருவரும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஆருத்ராவின் வீட்டினரும் வர,
"ஏங்க, நாங்களும் பார்த்துட்டே இருக்கோம்! என்ன நடந்தாலும் அவளையே குறை சொல்றீங்க? நாங்க ஒண்ணும் உங்க பையனுக்குத் தான் கொடுப்போம்ன்னு விடாப்பிடியாய் நிற்கல. நீங்களா தான் வந்தீங்க! பேசுனீங்க! பாதுகாப்பு இல்லைன்னு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க! இப்போ என்ன நடந்தாலும் அவளையே குறை சொல்றது சரியில்லை. பொண்ணைக் கொடுக்குறோம்ங்கிறதுக்காக எல்லாத்தையும் பொறுமையாய் கேட்டுக்கணும்ங்கிற அவசியமும் எங்களுக்கு இல்லை. இன்னும் கல்யாணம் தான் முடியலையே.. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க! இப்போவே எங்கப் பொண்ணை நாங்க கூட்டிட்டுப் போகத் தயார்.!" என அபிராமி கோபமாய்ப் பேச,
"ஐயோ! தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி! அவங்க ஏதோ ஆற்றாமையில் பேசுறாங்க! எதையும் மனசில் வச்சுக்காதீங்க!" என அபிராமியிடம் சொன்ன தனலெட்சுமி,
"அத்தே! கண்டதையும் உளறி வைக்காமல் பேசாமல்தேன் இருங்களேன். புள்ளை எப்படி இருக்கானோ? என்னமோன்னு பதறிட்டு கிடக்கிற நேரத்தில், அந்தப் புள்ளையைக் குறை சொல்லிட்டு திரியுறீக? நம்ம வீட்டுக்கு வரப் பிள்ளையை நாமளே குறை சொன்னால் நல்லாவா இருக்கும்? அந்தப் பிள்ளை முகத்தைப் பாருங்க, அழுது அழுது வீங்கிப் போய்க் கிடக்கு. எம்புட்டு வேதனை மனசுக்குள்ளே இருந்தால், இப்படி வெம்பிப் போய் உட்கார்ந்திருக்கும்? எல்லாத்துக்கும் மேலே, என் மகன் ஆசைப்பட்டிருக்கான். நல்லதோ, கெட்டதோ, அவதேன் நம்ம வீட்டு மருமக!" எனத் தனலெட்சுமி சொல்லவும், மருமகளை முறைத்தபடி அமைதியாய் நின்றார் செல்லம்மா.
"அம்மா அந்தக் காலத்து ஆளு! என்னத்தையாவது புரியாமல் பேசுவாங்க! எதுவும் நினைச்சுக்காதீங்க!" என இமயனின் தந்தை சொன்ன பின்னே இயல்பானார் அபிராமி.
"ஏன் அபி, நம்ம ஆருவுக்குக் கல்யாணம் முடியறதுக்குள்ளே இன்னும் என்னென்ன பிரச்சனையெல்லாம் வரப் போகுதோ? மாப்பிள்ளை பையனுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிருச்சுன்னா என்ன செய்யறது?" எனப் பொன்னி கேட்க,
"அக்கா! என்னத்தையாவது? ஏடாகூடமாய்ப் பேசி வாங்கிக் கட்டிக்காதீங்க? நானே பதறிப் போய் இருக்கேன். இப்போ என்ன சொல்ல வர்ரீங்க? இமயனுக்கு எதாவது ஆகிடனும்ன்னு நினைக்கிறீங்களா? என் பொண்ணு விஷயத்தில் ஆளாளுக்கு விளையாடாதீங்க! நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.!" என அழுத்தமாய் அபிராமி சொல்ல, அமைதியாகிப் போனார் பொன்னி.
"ஏய்! என்னத்துக்கு டி இப்படி அழுது வடிஞ்சுட்டு இருக்கே? தைரியமாய் இருக்க வேணாமா? இன்னும் கல்யாணமே முடியலை டி! உனக்குத் தான் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கல்யாணம் பிடிக்கலையே.. அப்பறம் ஏன் அழற? என்ன தான்டி ஆச்சு?" எனை மகளைத் தோளோடு அணைத்தபடி வினவினார் அபிராமி.
"ம்மா..!" என்ற கேவலோடு தாயின் தோளில் சாய்ந்துக் கொண்டவள்,
"எனக்கு இமயனைப் பிடிச்சுருக்கும்மா! எனக்கு அவன் வேணும்.! அவனுக்கு எதுவும் ஆகிடாதுல்ல மா? நான் தான் அவனைக் கேட்டேன், நீ கவியோட வாழாததற்கு நான் தான் காரணமான்னு கேட்டேன். அதுக்காகத் தான் என்னை அங்கே கூட்டிட்டுப் போனான். ஆனால் இப்படி நடக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.!"
என அவள் தேம்பித் தேம்பி அழ, அவன் முதல் மனைவியுடன் வாழவே இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும் அபிராமியால் ஓரளவிற்கு அனைத்தையும் அனுமானிக்க முடிந்தது.
'கட்டிய மனைவியுடன் அவன் வாழ்க்கையைத் துவங்காததற்குக் காரணம் தன் மகளா? அத்தனை நேசமா இவள்மேல்?' என்ற கேள்வியும் அவருக்குள் இருந்தது.
ஆருத்ராவின் தலைகோதி அவளை ஆசுவாசப்படுத்தியவர்,
"உன் இமயன், உன்கிட்டே திரும்பி வந்துடுவான்! அழாதே ஆரு! எல்லாம் சரியாகிடும்!" என அவர் ஆருத்ராவை சமாதானப்படுத்தினார்.
அதே நேரம், இமயன்-ஆருத்ரா திருமணம் தள்ளிப்போன செய்தியையும், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும், சமூக ஊடகங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
"மேலூர் தொகுதி வேட்பாளர், இமயவரம்பன் மீது துப்பாக்கிச்சூடு. திடீர் தாக்குதலால் தள்ளிப்போன திருமணம். மீண்டு வருவாரா இமயவரம்பன்? இல்லை மேலூர் தொகுதிக்கு புதிய வேட்பாளரை நிறுத்த போகிறதா ஆளும் கட்சி?" என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க,
"இதுக்குப் பின்னாடி யாரு இருக்காங்கன்னு எனக்குத் தெரியணும்! கண்டிப்பா அந்த ஆளாகத் தான் இருக்கும்!"
"சார்! காட்டுப்பகுதியாய் இருந்ததால், சிசிடிவி எதுவுமே இல்லை சார்!"
"மரத்து மேலே இருந்து ஷுட் பண்ணிருக்காகங்க சார். துப்பாக்கியும் நாட்டு துப்பாக்கியாய் இருக்கு!"
"அப்போ ஏதோ லோக்கல் கேங் தான் பண்ணிருக்காங்க! நல்லா விசாரிங்க!" என அர்ஜுன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், அடுத்த அதிர்ச்சி தகவல் அவனை வந்து சேர்ந்தது.
அடுத்த இரண்டு வாரங்களில், மேலூர் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாய் செய்தி கிடைத்ததும், அர்ஜுன் முடிவே செய்துவிட்டான், இது மயில்ராவணன் வேலையாகத்தான் இருக்கும் என்பதை.
"இந்த ஆளு தான் இதைப் பண்ணிருப்பாருன்னு நினைச்சேன். இவன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறதைக் காரணமாக வச்சு, வேற யாரையாவது நிறுத்த திட்டம் போடுறார். நீங்க நல்லா விசாரிச்சு, எனக்கு ரிப்போர்ட் கொடுங்க!" எனத் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அலைபேசியை அவன் அணைத்த அதே நேரம் அடுத்த அழைப்பு அவனுக்கு வந்தது.
"சார்! நாங்க ஜீ த்ரீ போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுறோம் சார்! இமயன் சார் விஷயமா பேசணும்! கொஞ்சம் வர்ரீங்களா?" என அழைக்க,
"வர்ரேன் வைங்க!" எனச் சொல்லி, அந்தக் குறிப்பிட்ட காவல் நிலையத்திற்குக் கிளம்பினான் அர்ஜுன். கிளம்பும் முன், இமயனுக்கு வேண்டிய பாதுகாப்பை ஏற்பாடு செய்துவிட்டு,
"ராகவ்! நான் அவசர வேலையாய் கிளம்புறேன். இங்கே கவனமாகப் பார்த்துக்கோ! மீடியா, ப்ரஸ், யார் வந்தாலும் உள்ளே விட்டுடாதே!" என முன்னெச்சரிக்கையாய் சொல்லிவிட்டுத் தான் சென்றான்.
ஆனாலும் அவன் மனம் பதைபதைப்பை உணர்ந்தது. இமயனுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.
'இமயன் இப்படி விட்டேத்தியாகப் பாதுகாவலர்கள் துணையில்லாமல் போகிறவன் இல்லை. ஆனாலும் இது எப்படி நடந்தது? அவன் ஆருத்ராவை அழைத்துச் செல்வதாய் எடுத்த முடிவு, திடீரென எடுத்த முடிவு தான். அப்படியிருக்கையில், அவன் செல்லும் இடத்தைச் சரியாகக் கணித்துத் தாக்குதல் நடந்திருக்கிறதென்றால், இதன் பின்னே இருப்பது யார்? எப்படி இவன் அங்கே செல்கிறான் என்பது தெரிந்தது? தன்னிடம் சொல்லும் போது கூட, இமயன் காதுக்குள் தானே சொன்னான்.. அப்படியிருக்கையில் எப்படி..?' என அர்ஜுன் யோசித்துக் கொண்டிருக்க, அவன் யோசனை எங்கேங்கோ சென்றது.
"ஓ.. நோ.. அப்படி மட்டும் இருந்துடக் கூடாது!" எனக் கத்தியவனின் முகம் இயல்பைத் தொலைத்தது.
******
காவல் நிலையத்தின் வாசலில் வந்து இறங்கிய அர்ஜுனுக்கு, கொஞ்சம் பதற்றமாகத் தான் இருந்தது. நாள் முழுதும், நடப்பவை எதுவுமே அவனுக்குச் சரியாகவேப்படவில்லை. அவனுக்குள் சில சந்தேகங்களும் இருந்தது.
"எதுக்காக சார் என்னை நேரில் வரச் சொன்னீங்க? இமயன் மேலே யாராவது கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காங்ளா?" என எரிச்சலுடன் கேட்டான் அவன்.
"இல்லை சார்! இது ஃபோனில் சொல்ற விஷயமில்லை. அதனால் தான், உங்களை நேரில் வரச் சொன்னோம்.!"
"அப்படி என்னய்யா விஷயம்? நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன்னு தெரிஞ்சாலே, கதைக் கட்டி, இந்த மீடியாக்காரனுங்க நியூஸ் ஆக்கிடுவானுங்க! என்ன விஷயம்ன்னு சொல்லித் தொலைங்க!"
"சார்! இமயனை சாரை சுட்டுட்டதாக ரெண்டு பேர் சரண்டர் ஆகியிருக்காங்க சார்!" என அந்தக் காவல் ஆய்வாளர் சொல்ல,
"வாட்!" என அதிர்ந்துவிட்டான் அர்ஜுன்.
"இதை யார் பண்ண சொன்னதுன்னு விசாரிச்சீங்களா?"
"எவ்வளவோ விசாரிச்சுட்டோம் சார்! முயல் வேட்டைக்குப் போனோம்! தெரியாமல் குறி மாறிடுச்சுன்னு சொல்றானுங்க சார்!"
"முயலைப் பிடிக்க நாட்டு துப்பாக்கி வச்சு சுட்டாணுங்களாமா? எஃப்.ஐ.ஆர் போட்டுட்டீங்களா? நான் பார்க்கலாமா அவனுங்களை?" என அர்ஜுன் கேட்க,
"இன்னும் எஃப்.ஐ.ஆர் போடலை சார். இப்போ உங்களைப் பார்க்க விட்டால், எதாவது பிரச்சனை வரும் சார்!" என அந்த அதிகாரி தயங்க,
"நான் வேணும்ன்னா அப்பாவுக்குக் கால் பண்ணி தரவா? பேசுறீங்களா?" என அவன் கேட்ட ஒற்றை வார்த்தை அவர்களைச் சம்மதிக்க வைத்தது.
தன் எதிரில் நின்ற இருவரையும் பார்வையால் ஆராய்ந்தான் அர்ஜுன். படிப்பறிவு இல்லாத, கிராமப்புறத்து ஆட்களாகத் தான் தெரிந்தார்கள். ஐந்து நிமிடங்களாய் அர்ஜுன் அவர்களையே பார்த்திருந்தும் கூட, ஒற்றை வார்த்தைப் பேசவில்லை.
"யாருக்காக இதைப் பண்ணுணீங்க? உங்களை இதைச் செய்யச் சொன்னது யாரு?"
"நாங்கதேன் சொன்னோமே சார், முயல் வேட்டைக்குக் காட்டுக்குள்ளே போனோம். மரத்து மேலே உட்கார்ந்து குறிப் பார்த்தோம். குறி தப்பிப் போயிடுச்சு. செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு சரணடைஞ்சுட்டோம். இன்னும் என்ன செய்யணும்ன்னு சொல்றீக? மேல் கோர்ட்டு.. கீழ் கோர்ட்டுன்னு எங்கே நிறுத்துனாலும் இதைத்தேன் சொல்லுவோம்!" என அவர்கள் சொல்ல,
"பச்சைக் குழந்தைக் கூட, நீங்க சொல்றதை நம்பாது. முயல் வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கியா? லைசென்ஸ் வச்சிருக்கீங்களா?" என அர்ஜுன் கேட்ட போதும் கூட, அவர்கள் பயப்படுவதாய்த் தெரியவில்லை.
"உங்க பின்னாடி யாரோ பெரிய ஆள் இருக்காங்க! அந்தத் தைரியத்தில் தானே பேசுறீங்க?"
"பின்னே என்ன தம்பி, நம்ம முதலமைச்சர் தான் இதைச் செய்யச் சொன்னார். தேர்தலில் வேற ஒருத்தரை நிறுத்த போறாங்கன்னு உண்மையைச் சொல்ல முடியுமா? நம்ம ஐயா பேரு கெட்டுப் போயிராது!" என எதார்த்தமாய்ச் சொல்வது போல் அவர்கள் சொல்ல,
"என்ன சொல்றீங்க?" எனப் பதற்றமாய்க் கேட்டான் அர்ஜுன்.
"ஆமா தம்பி! யாருக்கிட்டேயும் சொல்லிராதீக! நம்ம மயில்ராவணன் ஐயாதேன், அவங்க ஆளு மூலமா துப்பாக்கியும், பணமும் கொடுத்து விட்டாக! நம்ம ஐயாவை எதிர்த்து நின்னால் நாங்கதேன் சும்மா விட்டுருவோமா? அதேன் முயலைச் சுடுற மாதிரி போக்குக் காட்டிப்புட்டு சுட்டுப்புட்டோம்!" என அவர்கள் கிசுகிசுப்பான இரகசியக் குரலில் சொல்ல, நிஜமாகவே அதிர்ந்து தான் போனான் அர்ஜுன்.
'இவர்கள் இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்.? காவலர்களிடம் சொல்லாமல் என்னிடம் சொல்லக் காரணம் என்ன?' என யோசித்தவன்,
"என்னை உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டான்.
"என்ன தம்பி, உங்களைத் தெரியாதா? நம்ம மயில்ராவணன் மயன் உங்களைத் தெரியாமல் இருக்குமா? நாங்க உங்க கிட்டே சொன்னதை வெளியே சொல்லிராதீங்க தம்பி.! இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் தம்பி! ஐயா நாளைக்கே எங்களை வெளியே எடுத்துருவாரு, நீங்க கிளம்புங்க!" என அவர்கள் சொல்ல, குழப்பத்துடன் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து வாகனத்தைக் கிளப்பினான் அர்ஜுன்.
அவன் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு, மீண்டும், மருத்துவமனை வந்து சேர்வதற்குள், அடுத்தடுத்த நிகழ்வுகள் வேகமாக நடந்தேறியிருந்தன.
காவல் நிலையத்தில், அவர்கள் அர்ஜுனிடம் சொன்னவை அனைத்தும், சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. அர்ஜுனின் பின்னாலிருந்து, யாரோ காணொளிக் காட்சியாகப் பதிவு செய்திருந்ததால், அர்ஜுனின் முகம் அந்தக் காணொளியில் தெரியவில்லை.
ஆனால், மயில்ராவணன் தான், தங்களை இமயனைக் கொல்வதற்காய் அனுப்பினார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாய் இருந்தது. இவை எல்லாமே தெளிவான திட்டமிடல் என்பது மட்டும் அர்ஜுனுக்குப் புரிந்தது.
அதே நேரம்,
"அந்த வீடியோவில் இருப்பவை அனைத்தும், எனக்கும் எனது ஆட்சிக்கும் எதிராக அவதூறுகளைப் பரப்புவதற்காக, யாரோ செய்த சதி என்பதை உங்கள் முன் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். என் மீது தனிப்பட்ட விரோதம் கொண்ட விஷமிகளின் வேலையாகத்தான் இது இருக்கும்! அதோடு நான் மேலூரில் நிறுத்திய வேட்பாளரான இமயவரம்பன் தான், தேர்தலில் போட்டியிடுவார் என்பதையும், தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கட்சியின் ஆணிவேரான இமயவரம்பன் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.! வாய்மை என்றும் வெல்லும்."
எனத் தொலைக்காட்சி சேனல்களுக்குப் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
"இமயவரம்பன் அவர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தில் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? இல்லையா?"
"சொந்தக் கட்சியிலிருக்கும் முக்கிய நபரைப் போட்டுத் தள்ள முயன்ற ஆளும் கட்சி!"
"என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? உட்கட்சி பூசலா? ஆளும் கட்சியின் ஆட்சி ஐந்தாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா?"
"இவரா இப்படிச் செய்தது? இமயவரம்பன் மீதான தாக்குதலின் காரணம் என்ன?"
"இமயவரம்பன் மீண்டு வருவாரா? மருத்துவமனையில் அவர் நிலை என்ன? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மேலூர் தொகுதியின் நிலை என்ன?"
என ஆளுக்கொரு பக்கமாய் விவாத நிகழ்ச்சிகளைப் பிரபல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பத் துவங்கியிருந்தன. இதெல்லாம் அர்ஜுனுக்கு ஏதோவொன்று சரியாக இல்லை என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது.
ஆனாலும் பொறுமையாகக் காத்திருந்தான். இந்த நாடகம் முடியும் வரை அவன் அமைதிக் காத்து தான் தீர வேண்டும். ஏனென்றால், நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவன், அவனின் நண்பன் இமயன் அல்லவா? நல்லதோ கெட்டதோ, இப்போது சமூக வலைதளம் முழுக்க, இமயனுக்கான ஆதரவுகள் பெருகிக் கொண்டிருந்தன.
அவனது யூகம் சரியாக இருந்தால், இமயனுக்குப் பெரிதாக ஏதும் நேர்ந்திருக்காது.. என்பதை உணர்ந்தவனாய், அவசர சிகிச்சை பிரிவென்றும் பாராது, அவசரமாய் உள்ளே நுழைந்திருந்தான் அர்ஜுன்.
அங்கே இமயன், நிச்சலனமான முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தான். மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டப்பட்டிருக்க, தோள்ப்பட்டையில் கட்டுப் போடப்பட்டிருந்து. மற்றபடி பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால், இதுவரை மருத்துவர் எதுவும் சொல்லாமல் இருப்பதை வைத்தே, இதுவும் இமயனின் திட்டம் என்பதை அறிந்து கொண்டான் அர்ஜுன்.
"இமயன்! போதும்! நீ நடிச்சதெல்லாம் போதும்!" என அர்ஜுன் சொல்ல, இமயனிடம் எந்த அசைவுமே இல்லை.
'ஒருவேளை நிஜமாக இருக்குமோ? நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டேனோ?' என அர்ஜுன் யோசித்தாலும் கூட, இமயனைப் பற்றி நன்றாகத் தெரிந்தவனாக, இதை நம்பவும் முடியவில்லை.
"மச்சி! விளையாட்டு போதும்! மத்தவங்களை எல்லாம் விடு.. உன் ஆருத்ராவை யோசிச்சு பாரு.. வெளியே உட்கார்ந்து கதறிட்டு இருக்கா! நீ என்னடான்னா விளையாடிட்டு இருக்க?" என அர்ஜுன் சொல்ல, மூக்கிலிருந்த மாஸ்க்கை நீக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான் இமயன்.
"எதுக்காக டா இதெல்லாம் செஞ்ச.? உன் வீட்டிலிருக்கவங்களுக்குத் தெரிஞ்சால் என்ன ஆகும்?"
"அர்ஜுன்! நான் ஒண்ணும் தப்பு பண்ணல! உன் அப்பா போட்ட திட்டத்தை நான் செயல்படுத்தியிருக்கேன். எனக்குச் சாதகமாய்..! அவ்வளவு தான்!"
"அதுக்காக உயிரோட விளையாடுவியா? எதாவது ஆகியிருந்தால் என்ன செய்வ?"
"எந்தப் பாதிப்பும் வராத இடமாய்ப் பார்த்துச் சுடணும்ங்கிறது தான் திட்டம். ஆள் உங்க அப்பா ஏற்பாடு பண்ணினது. திட்டம் அவர் போட்டது.. துப்பாக்கியும் அவர் வாங்கிக் கொடுத்தது தான். ஆனால் திட்டத்தைச் செயல்படுத்திக்கிட்டது மட்டும் தான் நான். என்னைத் தவிர எந்த வேட்பாளரை அவர் நிறுத்துறார்ன்னு நானும் பார்க்கிறேன்.!" என அவன் சொல்ல,
"இமயன்! நீ என்ன சொன்னாலும் நீ செஞ்சது சரின்னு நான் ஒத்துக்க மாட்டேன். நீ சொல்றதெல்லாம் சரியாகவே இருக்கட்டும். ஆனால் ஏன் ஆருத்ராவைக் கூட்டிட்டு போன? அவளுக்கு எதாவது ஒண்ணுன்னா என்ன செஞ்சிருப்ப?" எனப் பதில் கேள்வி கேட்டான் அர்ஜுன்.
"நான் தனியாகப் போறதாகத் தான் ப்ளான். ஆனால் ஆராவிடம் சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது. அதுக்காகத் தான் கூட்டிட்டுப் போனேன். அதோட, நம்ம ப்ளான் என்னைக்குமே பிசிறு தட்டாது. அதோட, இது அரசியல் அர்ஜுன். இங்கே சரி, தப்புன்னு எதுவுமே இல்லை. நாம ஜெய்க்கணும் அது மட்டும் தான் இங்கே முக்கியம்.!"
"இதையெல்லாம் என்கிட்டே சொல்லிட்டுச் செஞ்சிருந்தால், கொஞ்சம் ரிலாக்ஸா இருந்திருக்கலாம். என்னையும் டென்ஷனா சுத்த விட்டுட்ட டா! நீ பழைய வீட்டுக்குப் போறேங்கிற தகவல், அந்த ஆளுக்கு எப்படித் தெரியும்?" என அவன் கேட்க,
"நான் அந்த வீட்டுக்குப் போற விஷயத்தைக் கசிய விட்டதே நான் தான். உயிரைப் பணயம் வச்சு, இதையெல்லாம் செய்யணுமான்னு நீ கேட்கலாம்.. ஆனால், எலிக்கு பொறி வைக்கும் போது, சில நேரங்களில், எலிப்பொறிக்குள்ளே இருக்கிற உணவாக நாம மாற வேண்டி இருக்கலாம். கடைசியில் எலியைப் பிடிச்சோமாங்கிறது தான் விஷயம்.. அப்படித்தான் இதுவும். நீயே நல்லா யோசிச்சு பாரு, நானும், கவியும் இழந்ததை அவரால் திரும்பக் கொடுக்க முடியுமா.? இத்தனையும் செஞ்சுட்டு, துளி குற்றவுணர்வு அவருக்கிட்டே இருக்கா?" எனக் கேட்டான் இமயன்.
"புரியுது டா! ஆனால், இதை எப்படி வீட்டில் சொல்லுவ?"
"ஏன் சொல்லணும்? அடிபட்டது பட்டதாகவே இருக்கட்டும். டாக்டர் கிட்டே நான் பேசிக்கிறேன்.!"
"என்னமோ தெரியலை.. நீ செய்யறெதெல்லாம் சரியாக இருந்தாலும், ஆருத்ராவை ஏமாத்தறது மட்டும் எனக்குப் பிடிக்கலை!" எனச் சொல்லிவிட்டு அர்ஜுன் வாசலை நோக்கித் திரும்பிய அதே நேரம், மார்பின் குறுக்கே கைக்கட்டியபடி நின்றிருந்தாள் ஆருத்ரா.
"நீ உன் அரசியல் விளையாட்டை விளையாட நான் தான் கிடைச்சேனா இமயன்? என் உணர்வுகளோட விளையாடும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது.? இரத்ததோடு நீ சரிஞ்சதை இப்போ நினைச்சாலும் பயத்தில் மனசு நடுங்குது. உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு, காரை ஓட்டிட்டு வந்த ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருந்துச்சு தெரியுமா? நீ என்னடான்னா உன்னோட காரியத்தைச் சாதிக்க என்னை ஏமாத்தியிருக்க?" என அவள் கோபமாய்க் கேட்டதிலேயே அவள் அனைத்தையும் கேட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் இமயன்.
"இங்கே பாரு ஆரா.. நான் இதைச் செய்யலைன்னாலும் இது நடந்திருக்கும். என்னா இந்தத் திட்டத்தைப் போட்டதே, மயில்ராவணன் தான். அதை மாற்றி எனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கிட்டேன் அவ்ளவு தான்!" என இமயன் புரிய வைக்க முயன்றாலும், அவள் புரிந்துக்கொள்ளவே இல்லை.
"நீ ஆயிரம் விளக்கம் சொன்னாலும், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உன்னோட நாடகத்தில் என்னையே வச்சு விளையாடிட்டியே? ரொம்ப வலிக்குது இமயன்! என்னை ஏமாத்தி என் கூடப் பழகின விவேக்கிற்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? எனக்கு உன்னைப் பார்க்கவோ, பேசவோ, பிடிக்கலை! தயவு செய்து என் முகத்தில் முழிச்சுடாதே!" எனக் கண்ணீருடன் சொன்னவள் விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.
அவனுக்காக எப்படிப் பதறித் துடித்தாள்.? அவன் கண்மூடிக் கிடந்த ஒவ்வொரு நொடியும், அவள் மனதால் செத்து செத்து பிழைத்தாளே? அப்படியிருக்கையில், அவனின் அரசியல் ஆதாயத்திற்குத் தன்னையும் பகடையாய் பயன்படுத்தியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கண்களில் நீர் வற்றிப் போய், கடைசித் துளி நீரும் கன்னத்தில் வழிய, இமை சிமிட்டி அழுகையை மறைத்தபடி மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தாள் ஆருத்ரா.
அதீதம்-23
இன்னும் இரு வாரங்கள் என்பது, இமயனுக்கு, மிகக் குறைவான கால அவகாசம் தான். அதோடு இரு வாரங்களுக்கு, அவன் தன் நடிப்பைத் தொடர்ந்தாக வேண்டும்.
அவன் தோளில் துப்பாக்கி தோட்டா துளைக்க முயன்றதெல்லாம் நிஜம் தான். அவன் எலும்பைத் துளைக்காமல், உரசிச் சென்றதால், அவனுக்குப் பெரிதாய் பாதிப்பு இல்லை. ஏதோ முன் கூட்டியே யோசித்துச் செயல்பட்டதால், உயிரோடு இருக்கிறான். இந்தச் சுதாரிப்பும் தெளிவும் இல்லையென்றால், அவனைப் புதைத்த இடத்தில் என்றோ புல் முளைத்திருக்கும். மயில்ராவணன் அதை என்றோ செயல்படுத்தியிருப்பார்.
"அதை விட முக்கியமான வேலை நமக்கு இருக்கு அர்ஜுன். ஆராவைச் சமாதானப்படுத்த நேரம் இருக்கு. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம செய்யப் போற வேலைகளுக்கு நேரம் போதாது.!" என உறுதியாய்ச் சொன்னான் இமயன்.
"அப்போ! நீ உடனே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வா..!"
"இப்போ நான் வீட்டுக்கு வந்துட்டால், தேர்தலில் ஜெய்க்க முடியாது டா. நாம வாங்கப் போற ஒவ்வொரு ஓட்டுக்கும் மக்களோட அனுதாபம் நமக்கு வேணும். அதோட நாம ஜெய்ச்சால், செயல்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றிய தெளிவும் வேணும்.!"
"இப்போ நாம என்ன தான் செய்யப் போறோம்?!"
"உங்க அப்பாவே என்னை நேரடியாக அந்தத் தொகுதியில் நிறுத்தியதால், ஓட்டு வர்ரதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனால், அவர் அதற்கும் எதாவது திட்டம் வச்சிருப்பார். இந்தத் தேர்தலில் நான் உள்ளே வர்ரதை தடுத்து நிறுத்திட்டால், என்னை ஒட்டு மொத்தமா அழிச்சுடலாம்ங்கிறது தான் அவர் நினைப்பு. அதை நாம பொய்யாக்கணும்ன்னா, அவர் வழியிலேயே போய்த் தான் நாம அவரை அடிக்கணும்.!"
"அவர் பெருசா என்ன செஞ்சிடப் போறார்? இந்நேரத்திற்குப் பணப் பட்டுவாடா நடந்து முடிஞ்சு, தேர்தலுக்கு முன்னாடியே ரிஸல்ட் அவருக்குத் தெரிஞ்சுருக்கும்.!"
"இந்த முறை நமக்கு நேரம் குறைவா இருக்கு அர்ஜுன். இதைச் செய்றேன், அதைச் செய்யறேன்னு சொல்லி ஓட்டு வாங்க முடியாது. அதோட, நாம ஜெய்ச்சுடக் கூடாதுன்னு தான், தேதியை முன்னாடியே அறிவிச்சுருக்காங்க. இப்போ நமக்கு வேற ஆப்ஷன் இல்லை. நம்ம ஆப்ஷனும் பணம் மட்டும் தான். மக்கள் மனுஷனை நம்பறதை விட, பணத்தைத் தான் அதிகம் நம்பறாங்க!" என வேதனையோடு சொன்னான் இமயன்.
அவனுக்குத் தனிப்பட்ட முறையில், பணத்திற்குப் பண்ட மாற்றாக ஓட்டு வாங்குவதில் எல்லாம் துளியும் விருப்பமே இல்லை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில், அதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
"புரிஞ்சு தான் பேசுறியா இமயன்? அதுக்கெல்லாம் நிறையப் பணம் வேணும். அந்த ஆளு சுரண்டி, சுரண்டி பதுக்கி வச்சிருக்காரு.. அதனால் கொடுக்கிறார். நாம அவ்வளவு பணத்திற்கு எங்கே போக?"
"ம்ம்ம்.. அதைத் தான் நானும் இவ்வளவு நேரமா யோசிச்சுட்டு இருந்தேன். உங்க அப்பாக்கிட்டேயே கேட்டுடுவோம்!" எனச் சாதாரணமாய் இமயன் சொல்ல, அதிர்ந்து நின்றான் அர்ஜுன்.
"அந்தாளு தருவாருன்னு நினைக்கிறியா? அவர்கிட்டே எல்லாம் வேணாம் டா!" என அர்ஜுன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மயில்ராவணனுக்கு அழைத்திருந்தான் இமயன்.
"என்ன மாமனாரே.. என்னைப் பத்தி எப்போ தகவல் வரும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டலாம்ன்னு காத்துட்டு இருக்கீங்களா?" என நக்கலாய் கேட்டான் அவன்.
அவன் சொன்னதும் அதிர்ச்சியாய் தொலைக்காட்சி திரையைப் பார்த்தார் அவர்.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, ஆளும் கட்சி பிரமுகர் இமயவரம்பனின் உடல் நிலையில் பின்னடைவு!" எனத் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன். ஆனாலும், இது பொய்யாக இருக்குமோ? என்ற சந்தேகமும் அவருக்குள் இருந்தது.
அரசியலில் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்.. இதை யூகிக்க முடியாதா என்ன? இப்படி நடந்தால் என்ன செய்வது? என யோசித்து முன்னேற்பாடாக இன்னொரு திட்டத்தையும் அவர் கைவசம் வைத்திருந்தார்.
"டிவியில் நியூஸ் பார்த்து ஏமாந்துட்டீங்களா மாமா? அச்சோ.. பாவம் மாமா நீங்க.. அந்த நியூஸைக் கிளப்பி விட்டதே நான் தான். இது தெரியாமல் ஏமாந்துட்டீங்களே..!" என அவன் நக்கலாய் சொல்ல,
"ரொம்ப ஆடாதே இமயன்! இது எல்லாம் நிரந்தரம் இல்லை. எலெக்ஷன் மட்டும் முடியட்டும். தேர்தலில் ஜெய்ச்சுடலாம்ன்னு கனவு காணாதே.. இப்போ ஆடுறதுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக மண்ணைக் கவ்வப் போற..!" எனத் தெனாவட்டாகவே பேசினார் மயில்ராவணன்.
"நீங்க இருக்கும் போது, எனக்கென்ன கவலை மாமா? உங்க மருமகன் நான்.. என்னை அப்படியே விட்டுட மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.!"
"உன்னைத் தோற்கடிக்கிறது தான் என்னோட முதலே வேலையே..! ஒரேயொரு தொகுதி தானே? போனால் போகுதுன்னு எதிர்க்கட்சிக்கு விட்டுக் கொடுத்துடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். எல்லா வேலையும் முடிஞ்சுருச்சு. நீ இந்தத் தேர்தலில் தோற்று அசிங்கப்பட்டு நிற்கிறதை நான் பார்க்கணும்! உன்னை ஒரேடியாய் போட்டுத் தள்ளிடலாம்ன்னு நினைச்சேன். ஆனால்.. நீ சாகிறதை விட, நீ அசிங்கப்பட்டு நிற்கிறது தான் எனக்கு வேணும்! ஹாஸ்பிட்டல் நாடகம் போட்டு ஜெய்ச்சுடலாம்ன்னு நினைக்காதே! நான் விடமாட்டேன்.!" என அதீத கோபத்துடனே சொன்னார்.
"நான் தேர்தல் நடந்து முடிஞ்சு, அதோட முடிவுகள் வந்த பிறகு, அசிங்கப்படப் போறேன்னா, நீங்க அதுக்கு முன்னாடியே பட்டுடுவீங்க மாமா! நான் தோற்றுப் போனேன்னா அது வெறும் தோல்வி மட்டும் தான். ஆனால் நீங்க அசிங்கப்பட்டால் பதவிக்கே வர முடியாது!" அவருக்குக் கொஞ்சமும் அழுத்தம் குறையாமல் மிரட்டினான் இமயன்.
"என்னடா மிரட்டுறியா? மிரட்டி காரியம் சாதிக்கலாம்ன்னு பார்க்கிறியா? நீ அப்படி என்ன கிழிச்சுடவன்னு நானும் பார்க்கிறேன்.!" என ஆத்திர மிகுதியில் அவர் உறும,
"ரிலாக்ஸ் மாமா! ரிலாக்ஸ்..! உடம்புக்கு எதாவது வந்துடப் போகுது.. அப்பறம் நான் யாரை வச்சுக் காரியம் சாதிக்கிறது?" எனப் பொறுமையாய் கேட்டான் அவன்.
அவனது பேச்சில் நிதானமும் தெளிவும் இருந்தது. இப்போதிருக்கும் காலச் சூழ்நிலையில், நேர்மையாக நின்று வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. எது தேவையோ அதுவே தர்மம் என்ற மனநிலைக்குக் காலம் அவனைத் தள்ளிவிட்டுவிட்டது. இப்போதைய சூழ்நிலையில் அவனைப் பொருத்தவரையில், அவனுக்கு எது தேவையோ.. அது மட்டுமே தர்மம்.
"என்ன நடிக்கிறியா இமயன்?"
"நீங்க கத்துக் கொடுத்தது தானே மாமா? நீங்க என்கிட்டே நடிச்சு தானே கவி கழுத்தில் தாலிக்கட்ட வச்சீங்க? காலில் கூட விழுந்தீங்களே மாமா மறந்துட்டீங்களா? நான் வேணும்ன்னா இன்னொரு முறை ஞாபகப்படுத்தவா? அப்படியே உங்க பொண்ணு கவிநயா எங்கே இருக்காள்ன்னு கூட ஞாபக்கபடுத்தணும் போல..!"
"அவள் வெளிநாட்டில் இருக்கா.. அவளை வச்சு புதுசா ஏதாவது திட்டம் போடலாம்ன்னு பார்க்கிறியா?"
"முழுக்க முழுக்க என்னையே கண்காணிச்ச நீங்க.. உங்க பொண்ணை மறந்துட்டீங்களே மாமா! உங்க பொண்ணு, இப்போ இந்த நிமிஷம் என் வீட்டில் தான் இருக்கிறாள். அதுவும் புருஷன், குழந்தையோட..!" என அவன் சொல்ல, மயில்ராவணனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
"உங்களைச் சார்ந்த, உங்க சாதி ஆட்களுக்கு, கவிக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆனது மட்டும் தானே தெரியும். அவள் தீபக்கோட இருக்கிறதும், அவங்களுக்குக் குழந்தை இருக்கிறதும் தெரிஞ்சால்..? உங்க சாதி ஓட்டுக்காகத் தான், தீபக்கை தூக்கிட்டு, என்னைக் கவி கழுத்தில் தாலிக்கட்ட வச்சீங்கன்னு எனக்குத் தெரியும். இதில் அந்தச் சங்கத்தோட தலைவர் பொண்ணே இப்படின்னு தெரிஞ்சால், என்ன ஆகும்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நல்லா யோசிங்க மாமா.. அவசரப்பட்டு எந்தப் பதிலும் சொல்லிடாதீங்க! நான் வெய்ட் பண்ணுறேன்.. இன்னும் ரெண்டு வாரம் இருக்கே!"
"விளையாடாதே இமயன்..!"
"உங்கக்கிட்ட விளையாடுற ஐடியா எதுவுமே எனக்கு இல்லை.! இது விளையாடுற நேரமும் இல்லை. அதோட நீங்க சொல்ற பதிலை வச்சு தான், அடுத்து நான் என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணணும். நீ வழிக்கு வரலைன்னா என்னோட கடைசித் திட்டத்தைத் தான் செயல்படுத்தணும்.!" என அவன் மென் குரலில் சொல்ல, அந்தப் பக்கம் குழப்பமாய்ப் புருவம் சுருக்கினார் மயில்ராவணன்.
'அவனுடைய கடைசித் திட்டம் என்னவாக இருக்கும்?' என்ற யோசனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவனுடைய திட்டம் பெரிதாக இருக்கும் என்பது தான் அவருடைய எண்ணமும்.
"மிஞ்சி, மிஞ்சிப் போனால் என்ன செஞ்சுவ? எதிர்க்கட்சியில் சேர்ந்துடுவேன்னு என்ன மிரட்டுவ.. அவ்வளவு தானே?" என அவன் திட்டத்தைத் தெரிந்துக்கொள்ள முயன்றார் அவர்.
"என்கிட்டேயே போட்டு வாங்கப் பார்க்குறீங்க மாமனாரே..? ஆனாலும் நீங்க இவ்வளவெல்லாம் சிரமப்பட வேண்டாம். நானே சொல்றேன்.!" எனச் சொன்னவன்,
"ஒரேயொரு சின்ன க்ளிக்.. உங்களோட பதுக்கல் இரகசியங்கள் அத்தனையும் மத்திய அரசுக்குப் பறந்துடும். கணக்கே காட்ட முடியாத அளவிற்குப் பதுக்கி வச்சிருக்கீங்க.. பார்த்து பத்திரமாய் வச்சுக்கோங்க!" எனச் சொன்னவன், அவர் பதில் சொல்லும் முன்னே அழைப்பைத் துண்டித்திருந்தான்.
"என்னடா கட் பண்ணிட்ட? அவர் என்ன சொல்லப் போறார்ன்னு தெரியலையே?" என அர்ஜுன் கேட்க,
"அவரே கால் பண்ணுவார் டா! அவருக்குப் பயம் இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எவ்வளவு அமௌண்ட் அடிச்சிருக்காருன்னு எனக்குத் தெரியும் அர்ஜுன். நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கேன். எல்லாமே கட்சி வளர்ச்சிக்கு, மண்ணாங்கட்டிக்குன்னு நம்மளையே நம்ப வச்சிடுவார். அவரைப் பத்தின இரகசியமெல்லாம் வெளியே வந்தால், எதிர்க்கட்சி சதி, அது இதுன்னு சொல்லி தப்பிச்சுடலாம்ன்னு நினைச்சுருப்பார். ஆனால், நான் சென்ட்ரல் கிட்டே போவேன்னு அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.! இது மட்டுமில்லை, பண மோசடி, நில மோசடின்னு எதையுமே விட்டு வைக்கலை. நாம பார்க்கிற கோணம் மாறினால் தான் அவங்க செய்ற தப்பு கூட நம்ம கண்ணுக்கு தெரியுது அர்ஜுன். நான் அவர் கூட இருந்தவரை, அவர் செஞ்ச எதுவுமே எனக்குத் தப்பா தெரியலை.! ஆனால் இப்போ யோசிச்சு பார்த்தால், நானும் எல்லாத்துக்கும் துணை போயிருக்கேன்னு நினைக்கும் போது, குற்றவுணர்ச்சியாக இருக்கு!"
நிஜமான வருத்தத்துடன் சொன்னான் இமயன்.
"ம்ப்ச்.. நீ தெரிஞ்சு எதையும் செய்யலை டா! இப்படித்தான் நடக்கணும்ன்னு இருந்திருக்கு. கவிக்கும், உனக்கும் அவர் கல்யாணம் பண்ணி வைக்காமல் இருந்திருந்தால், நீ உண்மையை உணர்ந்து அவருக்கு எதிராக நின்னுருக்க மாட்டே! அவர் சொல்ற எல்லாத்தையும் கண்மூடித் தனமாய் நம்பியிருப்ப. நீ பார்க்கும் கோணமும் மாறியிருக்காது. உன் கண்ணுக்கு தெரியுற காட்சிகளும் மாறியிருக்காது.!" என அர்ஜுன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், இமயன் கரத்திலிருந்த அலைபேசி செல்லமாய்ச் சிணுங்க, அதில் மயில்ராவணன் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
********
"மேலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த திரு.இமயவரம்பன் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் மயில்ராவணன் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்." எனத் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை முகம் நிறைய மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
இந்தப் பதவியேற்பிற்காக அர்ஜுனும், இமயனும் சென்னை வந்திருந்தனர்.
அவனுக்குத் தன் நண்பனை நினைத்து நிரம்பவும் பெருமையாக இருந்தது. என்னவோ தானே வெற்றி பெற்றதைப் போல் உணர்ந்தான் அவன்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். தன் தந்தையின் அரசியல் ஆலோசகராய் இருந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி வரை சென்றிருக்கிறான் என்றால், அது சாதாரண விஷயமில்லை. அதிலும் கடைசியில் மயில்ராவணனையே அவனுக்கு ஆதரவாய் ஓட்டு சேகரிக்க வைத்ததெல்லாம், அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. வெறுமனே அவன் மயில்ராவணணை மிரட்டி மட்டும் காரியம் சாதித்துவிடவில்லை.
கட்சிக்குள் இருந்த நற்பெயரோடு, அவனின் உழைப்பும் தான் இதற்குக் காரணம். தேர்தலுக்கு முன்னிருந்த பதினைந்து நாட்களும் அவன் உறங்கியதே சிலமணி நேரங்கள் தான். தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் முதல், தொகுதி முழுதும் வாக்குச் சேகரித்தது.. பணப் பட்டுவாடா என ஒவ்வொன்றையும் மருத்துவமனையில் இருந்தாலும், நேரடி கண்காணிப்பில் செய்ய வைத்திருந்தான். அதிலும் 1,24,053 வாக்குகள்.. கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஒன்றும் அத்தனை சாதாரண விஷயமில்லை.
அர்ஜுன் தன் நண்பனின் வெற்றியை எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்த வேளையில்,
"நீயெல்லாம் என் புள்ளைன்னு வெட்கமில்லாமல் சொல்லிக்காதே..! அது நீ இருக்க வேண்டிய இடம் அர்ஜூன்! எம்.எல்.ஏ, எம்.பின்னு முன்னேறி முதலமைச்சர் சீட்டில் உட்கார வேண்டியவன் நீ..! நீ என்னடான்னா அவனுக்கு விட்டுக் கொடுத்துட்டு, அவன் ஜெய்க்கிறதைப் பார்த்து சந்தோஷப்படுறே?" எனக் கேட்டபடியே உள்ளே வந்தார் மயில்ராவணன்.
"நான் ஏற்கனவே உங்கக்கிட்டே சொல்லிட்டேன்.. எனக்கு இந்த அரசியல், பதவியெல்லாம் செட் ஆகாது. முதலில் எங்களைப் பெத்த அப்பாவா, எங்களோட விருப்பங்களைத் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க! நீங்க எந்த முயற்சியும் பண்ண மாட்டீங்க! அரசியல், கட்சின்னு போய்டுவீங்க! நாங்க மட்டும் உங்க புள்ளையாக உங்களைப் புரிஞ்சு நடந்துக்கணும்.!" என அவன் கோபமாய்க் கேட்க, மயில்ராவணனிடம் பதில் இல்லை.
"இப்படி அரசியலில் இருக்கும் ஒவ்வொருத்தரும், பணம், பதவி, புகழ்ன்னு ஏதோவொரு காரணத்திற்காகப் பிள்ளைகளை வற்புறுத்துவதால் தான், வாரிசு அரசியல் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கு. உண்மையிலேயே அரசியலுக்கு வர்ரதுக்கு விருப்பம் இருந்தால் பரவாயில்லை. விருப்பம் இல்லாதவங்களை விட்டுடலாம் தானே? ஏற்கனவே நீங்க செஞ்சுட்டுப் போன பாவங்களை நான் தான் சுமக்கணும்.. சுமக்கிறது பத்தாதுன்னு அதே பாவத்தை என்னையும் செய்யச் சொல்றீங்க? ஒருவேளை நீங்க சொல்றதைக் கேட்டு நான் அரசியலுக்குள்ளே வந்துட்டேன்னு வைங்க.. என்னைத் தனிச்சு செயல்பட விடுவீங்களா.? உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு, நீங்க நினைக்கிறதை என்னைச் செய்ய வைக்கத்தான் முயற்சிப்பீங்க. நீங்க ஆட்டி வைக்கிற பொம்மையாய் என்னால் நிச்சயமாய் இருக்க முடியாது.!" தெள்ளத்தெளிவாய் தன் மனதில் இருப்பவற்றைச் சொன்னான் அர்ஜுன்.
"எல்லாத்தையும் அவனுக்கு விட்டுக் கொடுத்துட்டு, நீ என்ன செய்யப் போற அர்ஜுன்? ஒரு முதலமைச்சரோட பையன், அரசியல் வேணாம்ன்னு சொல்றது உனக்கே அசிங்கமா இல்லை?"
"எனக்கு அசிங்கமா இல்லை! நான் உருவாக்கின சாம்ராஜ்ஜியத்திற்குத் தான் நான் ராஜாவா இருக்கணும். உங்க சிம்மாசனத்தில் உட்கார நான் தயாராய் இல்லை. நீங்க இந்த மாநிலத்தோட முதலமைச்சராக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் பையன் அரசியலில் இருக்கணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்லை. அதோட இமயனுக்கு நான் எதையும் விட்டுக் கொடுக்கலை. அவனோட இடத்தை அவனே உருவாக்கிக்கிட்டான். உங்க கட்சியை உங்களுக்குப் பின்னால் வழி நடத்திக் கொண்டு போகும் தகுதி இமயன் கிட்டே இருக்கு. அதைப் புரிஞ்சுக்காமல், என்னை இதுக்குள்ளே இழுக்கணும்ன்னு நினைச்சால், உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.!"
"இப்போ என்னை என்ன தான்டா செய்யச் சொல்ற?"
"என்னை விட்டுடுங்கன்னு சொல்றேன். என்னை என் வழியில்வழியில் விட்டுடுங்க! கேவலம் பதவிக்காக, மிருகம் தன் இரையை வேட்டையாடுறது போல, இமயனை அழிக்க நீங்க போட்ட திட்டத்தையெல்லாம் நானே என் கண்ணால் பார்த்தேனே.. அவன் கட்சிக்குள்ளே வந்துடக் கூடாதுன்னு இவ்வளவு பண்ணுற நீங்க, முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவதற்காக என்னென்ன பண்ணியிருப்பீங்க? அதையெல்லாம் யோசிச்சாலே உங்க மேலே மரியாதையோ பாசமோ வர மாட்டேங்குது. எனக்கு அப்பாவே இல்லைன்னு நினைச்சுக்கிறேன்.. தயவு செய்து என்னை விட்டுடுங்க!" எனக் கொஞ்சம் சத்தமாகவே கத்தியிருந்தான் அர்ஜுன்.
அவன் இத்தனை வருடமாய் மனதிற்குள் சுமந்து கொண்டிருந்த அழுத்தம் முழுவதும், வார்த்தைகளாய் வெளியே வந்திருந்தது. சிறு வயதில் அவன் இழந்த நாட்கள் எல்லாம் கண் முன் வந்து போனது. ஒரு தகப்பனாய் அவர் பிள்ளைகளின் பக்கத்தில் அமர்ந்து பேசிய நாட்கள் அவன் நினைவில் இல்லை.
"வார்த்தையைப் பார்த்து பேசு அர்ஜுன்! நான் மட்டும் இல்லைன்னா பணம், படிப்பு எதுவுமே உன்கிட்டே இருக்காது. எல்லாம் நீ வேண்டாம்ன்னு சொல்ற இந்த அப்பனால் வந்தது. பறக்க இறக்கை முளைச்சதும், மரத்தை மறந்துட்டு போற பறவை மாதிரி தான் நீயும் உன் தங்கச்சியும். நீ என்னை வேண்டாம்ன்னு சொல்றதால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை.!" என அவர் சொல்ல,
"உலகத்திலேயே நீங்க மட்டும் தான், பணம், படிப்பு இதையெல்லாம் பிள்ளைகளுக்குக் கொடுக்குறீங்களா? பிள்ளைகளைப் படிக்க வைக்கிறதும், வளர்க்கிறதும், ஒவ்வொரு பெத்தவங்களோட கடமை. இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு பெத்தவங்களும் அதைத் தான் செய்றாங்க! அதைப் போய்ச் சொல்லிக் காட்டுறீங்க? என் வாழ்க்கையில், அப்பாங்கிற உறவு, என் பெயருக்கு முன்னால் நிற்கிற வெறும் இனிஷியல் மட்டும் தான். இதுக்கு மேலே உங்க கிட்டே பேசுறதுக்கு எதுவும் இல்லை.!" எனச் சொன்னவன் விறுவிறுவென வெளியேறியிருந்தான்.
மாயில்ராவணனோ, அதிர்ந்து போய் நின்றிருந்தார். தன் மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவரிடம் பேரதிர்வை ஏற்படுத்தி இருந்தன. அதிலும் அவர் கடைசியாய்ச் சொன்னது, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் தன் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததில்லை தான். அது அவருக்கே தெரியும் தான். ஆனால் அவர் ஓடியது, உழைத்தது, பிறரைச் சுரண்டியது எல்லாமே அவரின் வாரிசுகளுக்காகத் தான்.
பிள்ளைகளுக்காகத் தானே இவ்வளவும்செய்கிறோம்? என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது தான். ஆனால் மகனின் ஒற்றைக் கேள்வி அவரின் எண்ணத்தைச் சுக்கு நூறாக உடைத்திருந்தது. அவர் ஒரே நாளில், உணர்ச்சிவசப்பட்டுத் திருந்தும் ரகம் இல்லை தான், ஆனாலும் மகனின் கேள்வி அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்னவோ நிஜம்.
'நான் இத்தனையும் செய்தது எதற்காக? யாருக்காக? நாளை என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே? மூட்டைத் தூக்கி பிழைப்பு நடத்திய நான், என் பிள்ளைகளுக்கு அப்படியொரு வாழ்க்கையைக் கொடுத்துவிடக் கூடாதென்பதற்காகத் தானே இத்தனையும் செய்தேன்? ஆனால், நான் வெறும் இனிஷியலாக மட்டும் இருந்திருக்கிறேன் என்றால்..? என் பிள்ளைகளுக்கு நான் யாரோவாக இருந்திருக்கிறேனா?'
என்ற கேள்விகள் அவர் மனதிற்குள், தன்னையறியாமல் ஓடிக் கொண்டே இருந்தது. கண்கள் கலங்கியது. முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பத் துவங்கியிருந்தன. இடப்புற தோள்ப்பட்டை வழியாய் மெல்லிய வலி பரவுவதை உணர்ந்தார் அவர். அடுத்தச் சில நிமிடங்களிலேயே கண்கள் இருட்டிக் கொண்டு வர, மார்பைப் பிடித்தபடி மயங்கி சரிந்து அவர் கீழே விழப் போன அந்தத் தருணத்தில், வலிமையான இரு கரங்கள் அவரைத் தாங்கிப் பிடித்தது. அந்த வலிமையான கரங்கள் இமயனுக்குச் சொந்தமானது என்பதை மயில்ராவணனால் உணர முடிந்தது.
"ஐயய்யோ! சார் என்ன ஆச்சு?" எனப் பதறியபடி அவன் தாங்கிப் பிடிக்க, மயத்தில் சொருகிய தன் இமைகளின் இடைவெளியில், இமயனின் பதற்றமான முகம் அவர் கண்களுக்குள் விழுந்தது. கண்கள் சொருக, அவர் மொத்தமாய் மயங்கவும்,
"யாராவது வாங்க! சார் மயங்கி விழுந்துட்டார்!" எனக் கத்தி அழைத்தபடியே அவரைத் தரையில் கிடத்தி, இரண்டு கரங்களையும் ஒன்றின் மீது ஒன்று வைத்து, சீரான இடைவெளியில் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான்.
இமயனின் குரல் கேட்டு அவசரமாய் ஓடி வந்த ராதிகா,
"ஐயோ.. என்ன ஆச்சு? அவரை என்னடா செஞ்ச? நீ நினைச்ச மாதிரி எம்.எல்.ஏ ஆகிட்டியே அப்பறம் என்ன?" எனக் கோபமாய் அவர் வினவ,
"முட்டாள்தனமா பேசாதீங்க! மயங்கி விழுந்துட்டார்! முதலில் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க!" எனச் சொன்னான். திடீரென அவன் அப்படிச் சொன்னதும், பதறிச் செய்வதறியாமல், அங்குமிங்கும் ஓடியவர், இறுதியாய் அலைபேசியை எடுத்து, மருத்துவ உதவி வாகனத்திற்கு அழைத்திருந்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில், முதல்வர்.மயில்ராவணன் அந்தப் பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனைவருக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்.
அர்ஜுனும், கவிநயாவும் கூட வந்திருந்தனர். கவியின் கண்கள் கலங்கியிருக்க, தன் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அர்ஜுனோ உணர்வற்ற முகத்துடன் சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
"நீ ஏன்டா அங்கே போன?" என இமயனிடம் கேட்டான் அர்ஜுன்.
"ஏன்டா இப்படிக் கேட்கிற? அவர் உன் அப்பா டா!"
"இப்போ நீ அவரைக் காப்பாத்திட்டதால் மட்டும், அவர் மாறிடுவார்ன்னு நினைக்கிறியா? உன்னைக் கொல்ல நினைச்சவர் டா அவரு.. அவரை எப்படி நீ காப்பாத்த நினைச்ச.? உனக்குக் கொஞ்சமும் கோபமே வரலையா?"
"அர்ஜுன்! அவரால் என் வாழ்க்கை போய்டுச்சுன்னு அவர் மேலே எனக்குக் கோபம் இருந்தது நிஜம் தான். அவர் செஞ்சதுக்கான நஷ்ட ஈடாக நான் பதவி கேட்டதும் நிஜம் தான். ஆனால், அவர் உயிரோட இருக்கக் கூடாதுன்னு நான் நினைச்சதில்லை டா. ஏன்னா அவர் என் அர்ஜுனோட அப்பா! என் நண்பன் அர்ஜுனோட அப்பா!" என இமயன் சொல்ல, தன் நண்பனை ஆரத் தழுவி கொண்டான் அர்ஜுன். முதன் முறையாய் அர்ஜுனின் கண்கள் கலங்கியது. வார்த்தைகள் வர மறுத்துத் தொண்டை அடைத்தது அர்ஜுனுக்கு.
ஆனாலும் அவன் வார்த்தைகள் பேசாததை அவனது இறுகிய அணைப்பு பேசியது. இருவரின் நட்பின் ஆழத்தை அவர்களுக்கு இடையே இருந்த புரிதல் சொல்லாமல் சொன்னது.
"மச்சி! இதுக்கெல்லாம் எமோஷ்னல் ஆகாதே.. ஓவர் எமோஷன் உடம்புக்கு ஆகாது டா! கவலைப் படாதே டா மயில்ராவணன் சாருக்கு ஒண்ணும் ஆகாது!" எனத் தன் நண்பனை இயல்பிற்குக் கொண்டு வர முயன்றான் அவன்.
"அவர் இந்தத் தமிழ்நாட்டு மக்களை இன்னும் கொஞ்ச காலத்திற்குத் தொல்லைக் கொடுக்காமல் போக மாட்டார்ன்னு எனக்கும் தெரியும் டா. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாரு.. உன்னை யாருடா என்னைக் காப்பாத்த சொன்னதுன்னு கத்தப் போறார்.. உன் முன்னாள் மாமனார்!" என அர்ஜுன் சொல்ல, இமயனும் அர்ஜுனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அதே நேராம், தன் நண்பன் ராகவுடன் அங்கு வந்து சேர்ந்தாள் ஆருத்ரா.
"ஏய் ராகவ்.. இவளை ஏன்டா இங்கே கூட்டிட்டு வந்தே?" என இமயன் ராகவைப் பார்த்துக் கோபமாய்க் கேட்க,
"ஐயோ.. நான் வேணாம்ன்னு தான் சொன்னேன். அண்ணி தான்..!" என ஆருத்ராவை கை காட்டினான் அவன்.
"நான் தான் இங்கே யாரும் வர வேண்டாம்ன்னு சொன்னேனே? எதுக்காக இங்கே கூட்டிட்டு வந்த? முதலில் ரெண்டு பேரும் மதுரைக்குக் கிளம்பி போங்க!" என இமயன் அழுத்தமாய்ச் சொல்ல,
"பார்த்துட்டே நிற்கிறியே.? உனக்காகத் தானே வந்தேன்.. என்னைக் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிற பார்த்தியா? என் அண்ணன் வேற உன் மூஞ்சியைப் பார்க்காமால் என்னைப் பார்த்தே பேசுறான். ஆளாளுக்கு என்னை வச்சு செய்ங்க!" என ஆருத்ராவின் காதுக்குள் முணுமுணுத்தான் ராகவ்.
"இல்லை.. நான் பேசணும்..!" என ஆருத்ரா சொல்ல, அவள் பக்கம் திரும்பாமல் வேறு எங்கோ பார்த்தபடி நின்றான் இமயன்.
"நானும் பேசணும்ன்னு தான் உனக்குக் கால் பண்ணினேன். நான் என்ன சொல்றேன்னு கேட்கிறதுக்கான பொறுமை கூட உன்கிட்டே இல்லல்ல? இப்போ நீ பேசுறதைக் கேட்கிற மனநிலையில் நான் இல்லை. இப்போதைக்கு இங்கிருந்து கிளம்பு. ராகவ்! அவளைக் கூட்டிட்டு போ!" எனச் சொன்னவன் அவள் சொல்ல வருவதைக் கேட்காமலே அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
என்னதான் தேர்தல் வேலைகள் இருந்தாலும், அதற்கிடையில் நேரம் ஒதுக்கி, அவளைச் சந்திப்பதற்கும், அவளோடு பேசுவதற்கும் முயற்சித்தான். ஆனால், அவள் ஒருமுறை கூட, அவள் அனுமதிக்கவே இல்லை. அவன் செய்தது தவறு தான். அவள் கோபமும் நியாயமானது தான்.. ஆனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கூடக் கேட்க அவளுக்கு மனமில்லை என்பது தான் அவன் கோபத்திற்குக் காரணம். அவளைக் காணாத இத்தனை நேரமும் அவன் இழுத்துப் பிடித்திருந்த கோபம் முழுவதும், அவளைக் கண்டதும், வெயில் உருகும் பனித்துளியைப் போல், கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரையத் துவங்கியிருந்தது.
'நான் தவிர்த்த போதும், அவனுக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்?' என யோசித்தபடியே வாடிய முகத்துடன் அவள் ராகவோடு நடந்து கொண்டிருந்தாள்.
"நான் தான் சொன்னேனே ஆரு.. நீ தான் கேட்கவே இல்லை. இமயன் இத்தனை நாள் மதுரையில் இருந்தப்போ எல்லாம், நீ பேசவே மாட்டேன்னு பிடிவாதமாய் இருந்த.. இமயன் சென்னை வந்த பிறகு அவனைப் பார்க்கணும்ன்னு அடம் பிடிக்கிற? இந்த லவ்வில் சுத்தமா லாஜிக்கே இருக்காது போல..!" என ராகவ் புலம்பிக் கொண்டே நடந்து கொண்டிருந்த அதே நேரம், அதிரடியாய் ஆருத்ராவின் முன் வந்து நின்றிருந்தான் இமயவரம்பன்.
"மாயன்..!" அவள் நெகிழ்ந்து அழைக்க,
"இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்காதே டி! எனக்காக என்னைத் தேடி வந்திருக்க.. உன்னை நேரில் பார்த்த பிறகு கோபம் கூட வர மாட்டேங்குது.. லவ் யூ ஆரா..!" என அவள் விழி பார்த்துச் சொன்னவன்,
"இப்போ கிளம்பு.. சீக்கிரமே உனக்காக வந்துடுவேன்..!" எனச் சொல்லிவிட்டு அவளை இறுக அணைத்து விடுவித்து அதே வேகத்தில் விரைந்து சென்றிருந்தான்.
"ஆமா.. இங்கே இப்போ என்ன நடந்துச்சு? அவன் என்னடான்னா ஆரான்னு உருகுறான்.. நீ மாயன்னு புதுசா கூப்பிடுற? சரி, உங்களுக்குள்ளே என்னமோ பண்ணிக்கோங்க.. இங்கே நான் ஒருத்தன் இருக்கேன்னு கூடவா தெரியலை?" என ராகவ் கேட்க, புன்னகையுடன் பதில் சொல்லாது முன்னோக்கி நடந்தாள் அவள்.
அவளோடு வேகமாக இணைந்து நடந்த ராகவ்,
"இமயன் தான் என் அண்ணன்னு தெரிஞ்சதும், என்னை ஒரு பொண்ணு திட்டிச்சே.. ஃப்ரெண்ட்ஷிப்பே வேணாம்ன்னு சொல்லிச்சு.. அந்தப் பொண்ணை நீ எங்கேயாவதூ பார்த்த?" எனக் கிண்டலாய் கேட்டான்.
"போடா.. எருமை!"
"சந்தோஷமா இருக்கு ஆரு! ரொம்பப் பயந்துட்டு இருந்தேன். உனக்குப் பிடிக்காத வாழௌக்கை. அதுவும் இமயனுக்குச் செக்கெண்ட் மேரேஜ்.. என்னதான் அவன் என் அண்ணனாக இருந்தாலும், உன் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்னால் எதுவுமே பண்ண முடியலையேன்னு கில்ட் இருந்தது. இப்போ உன்னையும் இமயனையும் சேர்த்து பார்த்த பிறகு ரொம்பச் சந்தோஷமா இருக்கு!"
என அவன் கள்ளமில்லா அன்புடன் நெகிழ்ந்து சொல்ல, அவனைப் பார்த்துச் சிரித்தபடியே அவன் கரம் கோர்த்து உடன் நடந்தாள் ஆருத்ரா. இமயனின் நேசத்திலும், ராகவின் ஆழமான நட்பிலும் அவள் மனம் நெகிழ்ந்திருந்தது.
மழை அவள் மனதிற்குள் மகிழ்ச்சியை விதைத்தாலும் கூட, விரைவில் வந்துவிடுவேன் எனச் சொன்ன, தன்னவன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தது.
இப்போதும் கூட, அவள் மனநிலை மாறவில்லை. அவன் விளையாடும் அரசியல் சதுரங்கத்தில், தன்னையும் பயன்படுத்திவிட்டானே என்ற கோபம் அவளுக்குள் இருந்தது. அதோடு அதைப்பற்றி அவன் துளியும் வருத்தப்படாதது தான் அவளின் கோபத்திற்குக் காரணமாகவும் இருந்தது.
ஆனாலும் அந்தக் கோபத்தை அவளால் இழுதுப் பிடிக்கத்தான் முடியவில்லை. தன்னைத் தேடி வரும் போதெல்லாம் நிராகரித்தவளால், அவன் தூரம் சென்றதும் அவனைக் காணாமல் இருக்க முடியவில்லை. சென்னை சென்று அவனைப் பார்த்து வந்து சில நாட்கள் கடந்த பின்பும், அவனைக் காணாமல், அவன் வருகைக்காகக் காத்திருந்தாள் ஆருத்ரா.
அதே நேரம், மயில்ராவணன் உடல்தேறி வீடு திரும்பும் வரை, அவர் உடனிருந்து, கட்சியின் அவசரப் பணிகளை முடித்துவிட்டு, அப்போது தான் மதுரைக்குத் திரும்பியிருந்தான் இமயன்.
அவனுக்கும் அவளைக் காண வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. சத்தமில்லாமல் திறந்திருந்த கதவின் வழியே உள்ளே நுழைந்து அவள் பின்னால் வந்து அசையாமல் நின்றான் இமயன்.
எதேச்சையாய்ப் பின்னால் திரும்பியவள், அசையாமல் நிற்கும் அவனைப் பார்த்து பயந்து தான் போனாள். அவள் பதறிப் போய் அவனை விட்டு விலகி நிற்க,
"நான் தான் ஆரா!" என அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான் அவன்.
"ஏன் இப்படிப் பின்னாடி வந்து நின்னு பயமுறுத்துற? நிஜமாகவே பயந்துட்டேன்.!" எனச் சொன்னாள் அவள்.
"என்ன மேடம்.. கோபம் இப்போ போயிருச்சா?" என அவன் கேட்க,
"இல்லை! நான் இன்னும் உன்மேல் கோபமாகத்தான் இருக்கேன்.!" எனப் பதில் சொன்னாள்.
"ஏன்.?"
"உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சே யாராவது போவாங்களா? எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படிப் பண்ணினே? நீ பாட்டுக்கு மயங்கி விழுந்துட்ட.. உனக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருந்தது.!"
"நான் சொல்றதை நல்லா புரிஞ்சுக்கோ ஆரா.. அப்போதைக்கு எனக்கு வேற வழி இல்லை. அதை நடக்கவிடாமல் தடுத்தால், மறுபடியும் என்னைக் கொல்ல முயற்சிப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்குச் சாதகமாக நடக்கிற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டு, எனக்குச் சாதகமா நடத்திக்கணும்ன்னு தான் நான் யோசிச்சேன்.! உன்னை அங்கே கூட்டிட்டு போய் மாட்டி விடறது என் ப்ளான் இல்லை. ஆனாலும், என் மனசுக்குள் நீ மட்டும் தான் இருக்கேன்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். உன்னைக் கூட்டிட்டு போனப்போவே நான் எல்லாத்துக்கும் தயாராகத் தான் இருந்தேன். எனக்கு என்ன நடந்திருந்தாலும், என் உயிரே போயிருந்தாலும் கூட, நான் உன்னைக் காப்பாத்தியிருப்பேன்." என அவன் சொல்ல, தன் கரத்தினால், அவன் இதழ்களை மூடினாள் ஆருத்ரா.
"நெருப்புன்னு சொன்னால் வாய் சுட்டுடாது ஆரா.. இதற்கு முன்னால், இரண்டு முறை என்னைக் கொல்லவும் முயற்சி நடந்திருக்கு தான். ஒவ்வொருமுறை நான் தப்பிக்கும் போதும், திரும்ப முயற்சி நடக்கும்ன்னு எனக்குத் தெரியும். இதற்கு ஒரு முடிவு கட்டணும்ன்னு தான்.. நான் அதை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டேன். நான் ஒண்ணும் பெரிய ஆளெல்லாம் இல்லை. எனக்கும் துப்பாக்கியில் சுட்டால் வலிக்கும் மயக்கமும் வரும். ஹாஸ்பிட்டலில் நடந்தது வேணும்ன்னா நாடகமாய் இருக்கலாம்.. ஆனால் உன்னை நான் ஏமாத்தணும்ன்னு நினைச்சு இதையெல்லாம் செய்யலை.! என் சூழ்நிலை அப்படி..!" என அவன் சொல்ல ஆருத்ராவால் அவனைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.
"இதை நீ அப்போவே சொல்லியிருக்கலாம் இல்லையா?!"
"சொல்றதுக்கு நீ வாய்ப்பு கொடுக்கவே இல்லையே ஆரா?"
"ஸாரி..! நான் எல்லாமே நாடகம்ன்னு நினைச்சுட்டேன்.!"
"புரியுது ஆரா.. இது அரசியல் இங்கே இப்படித்தான்! யாரை அடிச்சு யார் மேல வர்ரதுன்னு தான் பார்ப்பாங்க! இதில் இந்த மாதிரி நாடக்கிற விஷயங்களைத் தடுக்க முடியாது. முடிஞ்சால் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்க வேண்டியது தான். ஆளும் கட்சிக்குள்ளேயே இப்படியொரு நிலமை.. அப்போ எதிர்க்கட்சியை யோசிச்சு பாரு? எல்லாத்துக்கும் காரணம், பதவி.. அது கொடுக்கிற பணம், புகழ் மேலே இருக்கிற மோகம் தான். என்னதான் உட்கட்சி பூசல் இருந்தாலும், ஒவ்வொரு அரசியல்வாதியும், நமக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு உண்மையாய் இருந்தால் போதும். இங்கே தான் யார் எவ்வளவு அடிக்கிறதுன்னு தானே பிரச்சனையே வருது. ஆதிகாலத்திலிருந்து இப்போ வரை, வலியது பிழைக்கும் அப்படிங்கிறது தான் இயற்கையின் விதி.. விதியை யாராலும் மாத்த முடியாது ஆரா.!" என அவன் சொல்ல, அவனையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
"இப்படியே பார்த்துட்டே இருந்தால் என்ன அர்த்தம்?" என அவன் கேட்க,
"ஏன் பார்க்கக் கூடாதா? வேணும்ன்னா நீயும் பாரு.. நான் வேணாம்ன்னு சொல்லலையே?" எனப் பதில் தந்தாள் அவள்.
"ஓஹோ..!"
"நீ பேசினதெல்லாம் போதும் மாயன்.. உன்னோட அரசியல், உன்னோட இருந்துட்டுப் போகட்டும். எனக்கு என் ஆயுசுக்கும் நீ என் கூட இருக்கணும். எனக்கு அது மட்டும் தான் வேணும்.!"
"அரசியலை நாம் தவிர்த்தால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்ன்னு ப்ளாட்டோ சொல்லியிருக்கார் தெரியுமா?" எனக் கிண்டலாய் சொன்னான் இமயன்.
"வீட்டுக்கு ஒருத்தர் அரசியலைத் தவிர்க்காமல் இருந்தால் போதும். முதலில் நான் சொன்னதுக்குப் பதில் சொல்லு!" என அவள் கேட்க,
"என் ஆயுள் முடிஞ்ச பிறகும் நான் உன் கூடத்தான் இருப்பேன்.. போதுமா?" எனக் கேட்டு அவள் நெற்றியில் அவன் முத்தம் வைக்க,
"கல்யாணம் பண்ணிக்கலாமா மாயன்?" என அவன் கண்பார்த்து அவள் கேட்க,
அவள் கண்களில் முத்தம் வைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தான் இமயவரம்பன்.
*******
இமயன்-ஆருத்ரா திருமணத்திற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. ஏற்கனவே திருமணம் நின்று போனதால் இந்த முறை அனைத்திலும் கூடுதல் கவனம் வைத்திருந்தான் இமயன். கூடவே அர்ஜுனும், ராகவும் தங்கள் பங்கிற்குப் பணிகளைப் பிரித்துக் கொண்டனர்.
திருமணம் இமயனின் சொந்தக் கிராமத்தில் நடப்பதால், உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பதாகவும், கட்சி சம்மந்தப்பட்ட மற்றவர்களை, வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
"டேய் மச்சான்..! நீ சொன்னபடியே நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் கொரியர் பண்ணியாச்சு.! ஆரு சைட் கேட்டியா? வேற யாருக்காவது இன்விடேஷன் கொடுக்கணுமா?" என அர்ஜுன் கேட்க,
"இன்னும் சில பேருக்கு கொடுக்கணும்டா! ஆரா அவள் ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு கொடுக்கணும்ன்னு சொன்னாள். அதனால் தான், நானும் அவளும் சென்னை கிளம்பலாம்ன்னு இருக்கோம்!"
"கல்யாணத்தைப் பக்கத்தில் வச்சிட்டுச் சென்னைக்கெல்லாம் வேணாம் டா! வேணும்ன்னா சென்னையில் ஒரு ரிஷப்ஷன் அரேன்ஞ் பண்ணிக்கலாம் ஆரு கிட்டே சொல்லு டா!"
"மாண்புமிகு. தமிழக முதலமைச்சருக்கு இன்விடேஷன் கொடுக்கணுமே அர்ஜுன்.!"
"இங்கே பாரு இமயன்! இது தேவையில்லாத வேலைன்னு தான் சொல்வேன். அவருடைய வாழ்த்து உன் கல்யாணத்திற்குத் தேவையில்லை. ஏற்கனவே அவர் உன்மேல் கோபத்தில் இருப்பார்.!" என அவனைத் தடுக்க முயன்றான் அர்ஜுன்.
"அவர் வரணும் டா! அவர் பண்ணின தப்பை நான் சரி பண்ணிட்டேன்னு அவருக்குத் தெரியணும். நமக்குப் பிடிச்சவங்களை மனசில் வச்சுக்கிட்டு இன்னொருத்தரை நம்ம வாழ்க்கைக்குள்ளே அனுமதிக்கிறது நரகம் டா. கல்யாணம் ஒண்ணு தான் ஆனால் ரெண்டு பேரோட வாழ்க்கை வீணாகிடுச்சே? அவரோட பதவி, கௌரவம், சாதி, எல்லாத்தையும் விட, அவர் பசங்களோட மனசும் அவங்க விருப்பமும் பெருசுன்னு அவருக்குத் தெரியணும்!"
என இமயன் சொல்ல, அவன் தனக்காகவும் கவிக்காகவும் சேர்த்தே யோசிக்கிறான் என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது. அதன் பிறகு அர்ஜுன் இமயனைத் தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனாலும் அர்ஜுனுக்குத் தன் தந்தையை இமயன் அழைப்பது பிடிக்கவில்லை தான்.
******
மறுநாள் காலையிலேயே ஆருத்ராவோடு சென்னை சென்று சேர்ந்திருந்தான் இமயன். இருவருக்குமான முதல் பயணம். அதுவும் விமானப் பயணம்.
ஆருத்ராவிற்கு அந்தப் பயணம் நிரம்பவே பிடித்திருந்தது. சிலமணி நேரத்தில் முடிந்துவிட்ட பயணமாக இருந்தாலும், கரம் கோர்த்து அருகருகே அமர்ந்து பயணிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.
விமான நிலயத்திலிருந்து, அவன் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த அறையில், கிளம்பி தயாராகி, காலை உணவையும் முடித்துவிட்டு, ஆருத்ராவையும் அழைத்துக் கொண்டு, மயில்ராவணனைப் பார்க்கத்தான் சென்றிருந்தான் இமயன்.
"இவர் நம்ம கல்யாணத்திற்கு வருவாருன்னு நம்பறியா?"
"வரலாம்.. வராமலும் இருக்கலாம்!"
"இல்லை.. அவருக்கு உன்னைப் பிடிக்காதே.. அவசியம் இவரை இன்வைட் செய்யணுமா?" எனத் தயங்கியபடியே கேட்டாள் அவள்.
அவள் கேள்வியிலிருந்த பயம் அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு எதாவது ஆகிவிடுமோ? என்ற பதற்றமும் அவள் முகத்தில் படர்ந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.
"எனக்கு எதுவும் ஆகாது ஆரா.. பயப்படாதே!" எனத் தைரியப்படுத்தி அவளை அழைத்துப் போனான் இமயன்.
வாயில் காவலர் மரியாதையோடு கதவைத் திறந்து விட, ஆருத்ராவுடன் உள்ளே நுழைந்தவன், வரவேற்பறையில் அமர்ந்து மயில்ராவணனுக்காய்க் காத்திருந்தான். முன்பு போல், சட்டென்று உள்ளே நுழைந்து அவர் முன் அமர, அவனை ஏதோவொன்று தடுத்தது. அடுத்தச் சில நிமிடங்களில், மயில்ராவணனின் உதவியாளர் வந்து அழைத்துப் போக, அந்தப் பெரிய அறையில் போடப்பட்டிருந்த மெத்திருக்கையில், மயில்ராவணன் எதிரே சென்று ஆருத்ராவுடன் அமர்ந்தான் இமயவரம்பன்.
"இமயன்! வாங்க! வாங்க! நீங்க தான் வந்திருக்கீங்கன்னு அப்பா சொல்லவே இல்லையே?" என்றபடி கையில் பழச்சாறுடன் வந்தாள் கவிநயா. கவிநயாவை இங்கே பார்த்த இமயனுக்குக் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இமயனின் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கவிநயாவும் புரிந்துக் கொண்டாளோ என்னவோ,
"என்னதான் நடந்திருந்தாலும், அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சு, விலகி இருக்க முடியலை. இப்போவும் அப்பா என்கிட்டே பேச மாட்டார் தான். அவர் கோபம் அப்படியே இருக்கட்டும். அவர் பொண்ணாக இந்தச் சூழ்நிலையில் நான் அவர் கூட இருக்கிறது தான் சரி!" எனக் கேட்காமலே பதில் சொன்னாள் கவிநயா.
"சொல்லு இமயன்! என்ன விஷயமாய் வந்திருக்க? வருங்கால மனைவியுடன் வந்திருக்கிறதைப் பார்த்தால், கட்சி விஷயம் இல்லைன்னு மட்டும் தெரியுது..!" என இடைநிறுத்தி அவனைப் பார்த்தார்.
"உண்மை தான் மாமா.. எனக்கும் என் மனசுக்குப் பிடிச்சப் பொண்ணுக்கும் கல்யாணம். நீங்க இல்லாமல் எப்படிக் கல்யாணம் நடக்கும்? அதான் உங்களுக்குப் பத்திரிக்கை வச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்!"
"இன்னும் என்னையே மாமான்னு கூப்பிட்டு திரியுற? உன் வருங்கால மாமனார் கோவிச்சுக்கப் போறார்..!" என நக்கலாய் கேட்டார் அவர்.
"அவர் உங்களை மாதிரி இல்லைங்க மாமா!" சற்றும் சளைக்காமல் பதில் கொடுத்தான் அவன்.
"ப்பா.. இதுவரை நீங்க செஞ்சதெல்லாம் போதும். இனியாவது அவங்களை வாழ விடுங்க!" கவிநயா இடையிட்டு பேச, மகளின் புறம் அவர் திரும்பவோ, பதில் பேசவோ இல்லை. அதே நேரம், அவளைத் திட்டவும் இல்லை. அவரின் நடவடிக்கைகளில், ஏதோவொன்று வித்தியாசமாகத் தெரிந்தது இமயனுக்கு.
'ஒருவேளை இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றதால், வித்தியாசமாகத் தெரிகிறாரோ?' என நினைத்துக் கொண்டான் இமயன்.
அதன் பிறகு, அவருக்கான உரிய மரியாதையுடன், வெள்ளித் தாம்பூலத்தில், பழங்கள், இனிப்பு வகைகளுடன், திருமண அழைப்பிதழையும் வைத்து, அவருக்குக் கொடுப்பதற்காக எழுந்து நின்றான். அவரும் உடன் எழுந்து நின்று, அதனை வாங்குவதற்காகக் கரம் நீட்ட,
"மேடம் எங்கே சார்? அவங்களையும் கூப்பிடுங்க!" என அவன் சொல்ல, மறுக்க முடியாமல் மனைவியை அழைத்தார் மயில்ராவணன்.
"மேடம்! நீங்களும் வாங்க! ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு வாங்கிக்கோங்க!" என அவன் சொல்ல, இமயனின் செயல் ராதிகாவிற்குச் செருப்பால் அடித்ததைப் போல இருந்தது.
அவனை ஆயிரம் முறை அவமானப் படுத்தியிருந்தாலும் கூட, அவன் தன்னையும் மதித்து அழைப்பது அவருக்கு வியப்பாகத் தான் இருந்தது. திருமண அழைப்பிதழை இருவரும் இணைந்துப் பெற்றுக் கொண்டனர்.
"இந்த முறையாவது கல்யாணம் நிற்காமல் நடக்கட்டும்!" எனச் சொன்னபடியே அவர் அவனைப் பார்க்க,
"கண்டிப்பாக நடக்கும் மாமா!" என்றவன்,
"கண்டிப்பாக ரெண்டு பேரும் சேர்ந்து வந்துடுங்க!" என இடைநிறுத்தினான். அவரோ அவனுக்குப் பதில் சொல்லாமல் சிரித்து வைத்தார். அவர் சிரிப்பின் பின்னே என்ன இருந்தது என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை. அதன் பின், கவியையும் அவள் கணவன் தீபக்கையும் திருமணத்திற்கு அழைத்துவிட்டு, அவள் கொடுத்த பழச்சாறையும் பருகிவிட்டு விடைபெற்றுக் கிளம்பியிருந்தான் இமயன்.
இறுதியாக ஆருத்ராவின் அலுவலக நண்பர்களையும், திருமண வரவேற்பிற்கு அழைத்துவிட்டு, அன்று இரவே மதுரைக்குத் திரும்பியிருந்தனர்.
*****
அடர் அரக்கு நிறத்தில், பச்சை நிறக் கரை வைத்து, புடவை முழுதும் தாமரைப் பூக்களும் கொடிகளுமாய் அழகு சேர்க்க, இரு ஓரங்களிலும், கிளி அமர்ந்திருப்பது போல் தங்க நிறத்தில் நெய்யப்பட்டிருந்த பட்டுப் புடவையில் கொள்ளை அழகாய் இருந்தாள் ஆருத்ரா.
புடவைக்குத் தோதாக ஆன்டிக் வகை நகைகள் அணிந்து, பொன் சிலையென அவள் நடந்துவர, தன் நெடுநாளையக் கனவு நனவாகப் போவதைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் இமயன்.
அழகுப் பதுமையென அவள் பக்கத்தில் வந்து அமர, அவன் ஆசைப்பட்டபடியே அவனது சொந்தக் கிராமத்தில், அவனின் அனைத்து உறவுகளும் சூழ்ந்து நிற்க, வெட்ட வெளியில், பூந்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மண மேடையில், தன் மனதிற்குப் பிடித்த பெண்ணின் கழுத்தில் பொன்தாலி பூட்டும் நேரத்திற்காகக் காத்திருந்தான் இமயன்.
அதே நேரம் தன் பாதுகாவலர்கள் துணையோடு அங்கு வந்து நின்றார் மயில்ராவணன்.
'இவர் நிச்சயம் வரமாட்டார்' என்று தான் இமயன் நினைத்திருந்தான். அவர் இப்படி வந்து நிற்பார் என அவன் எதிர்பார்க்கவே இல்லை!
'ஏதாவது திட்டத்துடன் வந்திருப்பாரோ?' என்ற சந்தேகமும் அவனுக்குள் இருந்தது. ஆனாலும், அதைக் குறித்த பதற்றமோ, பயமோ அவனுக்குள் இல்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் அவனுக்குள் இருந்தது.
"இதுக்குத் தான் சொன்னனேன்.. இந்த ஆளைக் கூப்பிடாதேன்னு.. நீ தான் கேட்கவே மாட்டேன்னுட்ட!" என நண்பனின் காதைக் கடித்தான் அர்ஜுன்.
"அவரே எனக்கும் அவருக்கும் பிரச்சனை எதுவும் இல்லைன்னு ஊருக்குக் காட்டுறதுக்காக வந்திருக்கார். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்!" என அர்ஜுனிடம் மெதுவாக, யார் செவிகளிலும் விழாதவாறு சொன்னான் இமயவரம்பன்.
முதலமைச்சர் என்கிற தோரணையும், திமிரான பார்வையுமாய், திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் முதலமைச்சர் மயில்ராவணன். சொக்கர் மீனாட்சி பொன்ருவம் பதித்து, மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருந்த மாங்கல்யத்தைத் தன் மனைவியோடு சேர்ந்து, மயில்ராவணன் எடுத்துக் கொடுக்க, மறுக்காமல் தன் கரத்தில் வாங்கி ஆருத்ராவின் கழுத்தில் கட்டினான் இமயன்.
மயில்ராவணன் திருமணத்திற்கு வருவார் என்பதையும் இமயன் எதிர்பார்க்கவில்லை. அவர் தாலி எடுத்துக் கொடுப்பார் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதையெல்லாம் எதற்காகச் செய்கிறார் என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. அனைத்திற்கும் காரணம், அவரது பதவியும், அவர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாதென்கிற எண்ணம் மட்டும் தான். எல்லாவற்றிற்கும் மேலாக, சுற்றிலும் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கும், சமூக ஊடக வெளிச்சத்திற்காகவும் தான்.
"மேலூர். எம்.எல்.ஏ இமயவரம்பன் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் முதலமைச்சர் மயில்ராவணன்.!" நாளை செய்தித்தாள்களில் வெளிவரும் தலைப்புச் செய்திகளில், அவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் அல்லவா? அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தின் பின்பும் அவரின் சுயநலம் ஒளிந்திருக்கும் என்பது இமயனுக்குத் தெரியுமே..!
ஆனால், இமயன் எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. இந்தத் தருணம், அவன் வருடக் கணக்காய்க் காத்திருந்த தருணம். தான் இழந்து விட்டதாய் நினைத்த காதலை மீண்டும் பெற்ற தருணம். அப்படியிருக்கையில் அதைவிட்டுவிட்டு மற்றதை நினைத்துக் கவலைப்பட அவன் தயாராக இல்லை.
முகம் நிறையச் சந்தோஷமும், சிரிப்புமாய், ஆருத்ராவின் நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு அவள் நெற்றியில் மீசை அழுந்த முத்தம் பதித்துத் தன்னில் சரிபாதியாய் இணைத்துக் கொண்டான் இமயவரம்பன். அவளோ நாணம் கொண்டு, இமை தாழ்த்திக் கொண்டாள். அவள் கண்களிலோ, அவனோட வாழப் போகும் வாழ்க்கை மீதான கனவுகள் மிளிர்ந்தது.
சுற்றி நின்ற இரு குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. முக்கியமாக, அர்ஜுன், ராகவ், கவிநயா, தீபக் அனைவரின் அகமும் முகமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
"வாழ்த்துக்கள் டா மச்சான்!" உள்ள நிறைவோடு இமயனின் தோளில் தட்டி தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்தான் ஆருயிர் நண்பன் அர்ஜுன்.
"வாழ்த்துக்கள் ஆரு! வாழ்த்துக்கள் இமயன்!" என ராகவைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் வாழ்த்த, முதலமைச்சரும் தன் பங்கிற்கு வாழ்த்திவிட்டு விடை பெற்றிருந்தார்.
******
திருமணம் முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது.. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், மனைவியுடனே கழித்தான் இமயன்.. அவன் வரைந்து வைத்திருந்த இரகசிய ஓவியங்கள், ஒவ்வொரு இரவிலும் நிஜமாகிக் கொண்டிருந்தன. ஆருத்ராவை விட்டு அரைநொடி கூடப் பிரிய முடியாத அளவிற்கு, அவள் மீதான காதல் பித்துக் கூடிப் போயிருந்தது.
இரண்டாம் தாரமாய்த் திருமணம் செய்து வைக்கிறோம், மகள் வாழ்க்கை என்ன ஆகுமோ? எனப் பயந்து கொண்டிருந்த ஆருத்ராவின் பெற்றோருக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. பெரியவர் குமரேசனுக்கும் கூட, தன் பேத்தியின் கணவன் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியே..! அரசியல் நெளிவு சுளிவுகளில், இமயன் கைதேர்ந்தவன் என்பதை இந்தச் சில மாதங்களில் அவர் உணர்ந்திருந்தார். தான் அரசியலில் சாதிக்க முடியாததைத் தன் குடும்பத்தில் ஒருவன் சாதிக்கிறான் என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
அதே நேரம், அந்த விடியல் நேரத்து இதாமானக் குளிரில் மனைவியை அணைத்தபடி படுத்திருந்தான் இமயவரம்பன். இரவு நேர அன்புப் பறிமாறுதல்களின் விளைவாய் உறங்காமல், சற்று முன் தான் இருவரும் உறங்கியிருந்தனர். அந்த அதிகாலைப் பொழுதில், அலைபேசி ஒலியெழுப்பிக் கவன் ஆழ் துயிலைக் கலைத்தது.
"ம்ப்ச்! யாரு இந்நேரத்தில்?"
என எரிச்சலுடன் அலைபேசியை எடுத்தவன், தன் மனைவி விழித்துவிடாதபடி, அவளுக்குப் போர்த்திவிட்டு, அணவாகத் தலையனையையும் வைத்துவிட்டு, அலைபேசியை எடுத்துக் கொண்டு, அறையின் இன்னொரு கதவைத் திறந்து பால்கனியை நோக்கிப் போனான்.
"மீட்டிங்கா?"
"என்ன திடீர்ன்னு?"
"அவசரமா என்ன முடிவு எடுக்கப் போறார்.?"
"ம்ம்.. வர்ரேன்!" எனச் சொன்னபடியே அலைபேசியை அணைத்தவனின் முகம் யோசனையைத் தத்தெடுத்திருந்தது.
'திடீர் ஆலோசனைக் கூட்டம், அதுவும் அவசரமாக மயில்ராவணன் ஏற்பாடு செய்ய என்ன காரணம்?' என்ற யோசனையுடனே குளித்துக் கிளம்பியவன், உறங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பினான்.
"ஆரா..! ஆரா..!" என அவன் அவளை விளிக்க, அவன் கரத்தை இழுத்து மார்போடு அணைத்தபடி, மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தாள் அவனின் அழகு மனையாள்.
"ம்ப்ச்! அவசரமாய் ஒரு மீட்டிங்! நான் உடனே சென்னைக் கிளம்பணும். நாளைக்கு வந்துடுவேன்னு நினைக்கிறேன்.!"
"நீ எங்கேயும் போக வேணாம் மாயன்! ஹனிமூன் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டுத் தனியா போறேன்னு சொல்ற? நான் உன்கிட்டே பேச மாட்டேன் போ..!"
எனப் பாதித் தூக்கத்தில், கோபம் கொண்ட மனைவியின், இதழோடு இதழ் சேர்த்தவன்.. அவளைக் கொஞ்சி, கெஞ்சி அனுமதி வாங்கிக் கிளம்பியிருந்தான்.
*********
வழக்கமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் கட்டிடத்திற்குச் சற்று தாமதமாகவே வந்து சேர்ந்திருந்தான் இமயவரம்பன்.
காலையிலேயே கிளம்பியிருந்தாலும், மதுரையிலிருந்து, சென்னை வந்து சேர தாமதமாகியிருந்தது. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் அனைவரும் அங்குக் கூடியிருந்தனர். நீள் செவ்வக மேஜையின் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களிடம் தீவிர வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழப்பமாய் இமயன் நின்றிருக்க,
"அது எப்படிங்க நம்ம கட்சியில் 22 எம்.பி இருக்கோம், எங்களை விட்டுட்டு அவனை எப்படி நீங்க சொல்லலாம்?"
"சீனியார்ட்டி படி பார்த்தாலும் அவனால் உள்ளே வர முடியாது!"
"இதை நாங்க ஒத்துக்கவே மாட்டோம்.!"
"நீங்க நம்ம கட்சியிலிருக்கும் எங்களுக்குச் செயல்பட்டீங்கன்னா நாங்க, கட்சிப் பணியிலிருந்து விலக வேண்டி இருக்கும்.!" என ஆளுக்கொன்றாய் கத்திக் கொண்டிருக்க, நடுநாயகமாய் அமர்ந்தபடி அமைதியாய் இருந்தார் மயில்ராவணன்.
இமயனோ, என்ன நடக்கிறது எனப் புரியாமல், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர,
"யார் யார் கட்சியை விட்டுப் போகணுமோ.. போங்க! இந்தப் பதவி ஒண்ணும் நீங்களா தேடிக்கிட்டது இல்லை. நான் உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. உங்க இடத்தில் இன்னொருத்தரை என்னால் உட்கார வைக்க முடியும். அது உங்களுக்கே தெரியும். எனக்குத் தேவைப்படுறது கட்சிக்கு உண்மையாய் உழைக்கிற ஒருத்தர் தான். அது எம்.எல்.ஏ, எம்.பி யாராக வேணும்னாலும் இருக்கலாம். ஆனால், எனக்குப் பிறகு கட்சியை விழாமல் தூக்கிப் பிடிக்கிற ஒருத்தராகத்தான் இருக்கணும்.!" என மயில்ராவணன் சொல்ல அந்த இடம் முழுதும் அடர்ந்த நிசப்தம்.
"என்னால் கட்சியை விழாமல் காப்பத்த முடியும், தமிழ் நாட்டிலேயே பெரிய கட்சிங்கிற நிலைக்கு உயர்த்த முடியும்ன்னு நம்பிக்கை கஉள்ளவங்க தாராளமாய்க் கை உயர்த்தலாம்!" என அவர் சொன்ன போதும் நிசப்தம் மட்டுமே அவருக்குப் பதிலாய்க் கிடைத்தது.
"எல்லாரும் அமைதியாய் இருக்கீங்க பேசுங்க!"
"நாம ஓட்டெடுப்பு நடத்தலாம் ஐயா!"
"யாருமே தைரியமாய்க் கை தூக்காத போது, யாருக்கும் யாருக்கும் ஓட்டெடுப்பு நடத்துவீங்க?" என அவர் கேட்க, அந்தப்பக்கம் பதில் இல்லை.
"நான் என் மகனைக் கட்சிக்குள்ளே கொண்டு வர முயற்சி செஞ்சது இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவனுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டான். விருப்பம் இல்லாதவனைக் கட்டாயப்படுத்த முடியாது. எனக்குப் பிறகு கட்சியைச் சரியான பாதையில் கொண்டு போகச் சரியான ஆள், இமயவரம்பன் மட்டும் தான்.!" என அவர் சொல்ல, பாதிப் புரிந்தும் புரியாமலும் அமர்ந்திருந்த இமயவரம்பன் அதிர்ந்து தான் போனான்.
"நான் எனக்குப் பிறகான, என் அரசியல் வாரிசாக இமயவரம்பனை அறிவிக்கிறேன்.!" என அவர் சொல்ல, அவரைப் பகைத்துக் கொள்ளப் பயந்து, அவர் முடிவை ஏற்றுக் கொண்டு, அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
'நிஜமாகவே இவர் என்னைத்தன் .. அரசியல் வாரிசாக அறிவித்திருக்கிறாரா? என்ன காரணமாக இருக்கும்?' என யோசித்தபடியே இமயன் அவர் முகத்தைப் பார்க்க, அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளை ஆராய்ந்தான் இமயன். அவர் முகத்திலோ எதையோ சாதித்துவிட்ட உணர்வு அதீதமாகத் தென்பட்டது.
'இவர் இப்படிச் செய்பவர் இல்லையே? இதன் பின்ணணியில் என்ன இருக்கிறது?' என ஒன்றும் புரியவில்லை இமயனுக்கு. இதன் பின்னால் வேறு ஏதோ இருக்கிறது என்பது மட்டும் இமயனுக்குப் புரிந்தது.
"நான் உன் விருப்பம் என்னன்னு கேட்கலைங்கிற எண்ணம் உனக்கு இருக்கலாம் இமயன்! ஆனால், நான் சொன்னால் நீ மறுக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். உன்னால் மறுக்கவும் முடியாது!" என அவர் மீண்டும் சொல்ல, இமயனால் எதுவுமே பேச முடியவில்லை. இதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற தவிப்பு அவனுக்குள் இருந்தது.
ஆனால் அதே நேரம்,
"ஜஸ்ட் அக்ஸெப்ட் இட் டா..!" என அர்ஜுனிடமிருந்து வந்திருந்த ஒரு குறுஞ்செய்தி அவனை இதை ஏற்றுக்கொள்ள வைத்தது. என்னதான் அவன் இதை ஏற்றுக் கொண்டாலும் அவன் மனதில் ஏதோவொரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. எனவே அவசரமாய் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அர்ஜுனைத் தேடித்தான் போனான் இமயவரம்பன்.
*****
"இங்கே என்ன தான்டா நடக்குது? ஒரு எம்.எல்.ஏ பதவிக்கு நான் வந்துடக் கூடாதுங்கிறதுக்காக என்னைக் கொல்லவே துணிஞ்சவர், இப்போ என்னடான்னா என்னை அரசியல் வாரிசா அறிவிக்கிறார். எனக்கு ஒண்ணுமே புரியலை டா மச்சான்!" என அர்ஜுனிடம் இமயன் புலம்ப,
"உண்மையிலேயே அதற்கான திறமை உன்கிட்டே இருக்கு டா!" எனச் சாதாரணமாய்ச் சொன்னான் அர்ஜுன்.
"விளையாடாதே அர்ஜுன். உங்க அப்பா இப்படிச் செய்யக் கூடிய ஆள் இல்லை! இதுக்குப் பின்னால் வேற ஏதோ இருக்கு!"
"விதி தான் வேற என்னவா இருக்க முடியும்?" என இமயனின் கேள்விக்குப் பூடகமாய்ப் பதில் சொன்னான் அர்ஜுன்.
"என்னடா சொல்ற?"
"ஆமா.. உன்னைக் கட்சிக்குள்ளே வரக் கூடாதுன்னு விரட்டினார். ஆனால், அவர் மயங்கி விழுந்தப்போ நீ காப்பத்தினியே, அப்போவே மனுஷன் பாதிச் செத்துட்டார். அதோட, ஹார்ட் அட்டாக்.. இது மூணாவது முறை வந்திருக்கு. மூணாவது முறைன்னு சொன்னதும், அவருக்குப் பயம் வந்துடுச்சு. தன் காலம் முடியறதுக்குள்ளே கட்சியைத் தகுதியான ஆள்கிட்டே ஒப்படைச்சுடணும்ன்னு தான் இப்படியெல்லாம் செஞ்சுருக்கார்.!" என அர்ஜுன் சொல்ல இமயனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"பாவம் டா சார்..!" என இமயன் சொல்ல,
"ஆமா.. நீ அந்த ஆளுக்கு இரக்கப்பட்டுட்டு இரு.. இதில் கூட முழுக்க முழுக்க அவர் சுயநலம் மட்டும் தான் இருக்கு. முக்கியமாகச் சாதி தான் அவர் உன்னைத் தேர்ந்தெடுக்க முதல் காரணம். ரெண்டாவது, மத்தவங்களை நம்பி, கட்சியைக் கோட்டை விட அவர் விரும்பலை. உன்னை மாதிரி யாரும் நேர்மையாய் இருக்க மாட்டாங்கன்னு அவருக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேலே, நான் வாரிசு அரசியலை ஊக்குவிக்க மாட்டேன்னு பெருமையாய் சொல்லிக்கலாம். இதை விட இன்னும் குறிப்பாகச் சொல்லணும்னா அவர் கட்சியில் இருந்துக்கிட்டு, அவருக்கு எதிரா உன்னால் செயல்பட முடியாது.! முக்கியமாக அவரைப் பற்றின இரகசியங்கள் உன்கிட்டே கடைசிவரை பாதுகாப்பாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு இதில் நிறைய நன்மைகள் இருக்கு. அதுக்காகத் தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்." என அர்ஜுன் சொல்ல, இமயனுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்,
'விமானங்கள் நேர்க்கோட்டில் பயணப்பதில்லை.. அதே போல் தான் சிலர் எந்தச் சூழ்நிலையிலும் மாறுவதில்லை. அப்படித்தான் மயில்ராவணனும்.. சில இப்படித்தான், மற்றவர்களைப் பற்றிய சிந்தனையே அவர்களிடம் இருக்காது. சின்னஞ்சிறிய விஷயங்களிலும் கூட, தன் நன்மையை மட்டுமே பேணுபவர்கள்! இவர்களை ஒருபோதும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.' என யோசித்தபடியே நின்றிருந்தான் இமயன்.
"இப்போ என்னடா செய்யப் போற? இதை வேணாம்ன்னு சொல்லப் போறியா?" என யோசனையோடு நின்றிருந்த நண்பனைப் பார்த்துக் கேட்டான் அர்ஜுன்.
"நான் ஏன்டா வேணாம்ன்னு சொல்லணும்? இது தானாக என்னைத் தேடி வந்த வாய்ப்பு. இதைக் கை நழுவ விட நான் தயாராய் இல்லை. உங்க அப்பா எனக்கு லாக் வச்சுட்டதா நினைக்கிறார். ஆனால் அந்த அரியணைக்கான சாவியே அவர் என் கையில் கொடுத்துட்டார்!" எனப் புன்னகையுடன் சொன்னான் இமயவரம்பன். அவன் சொன்னதன் அர்த்தம் அப்போதைக்கு அர்ஜுனுக்கு விளங்கவில்லை.
**-*****
சில வருடங்களுக்குப் பிறகு..
அந்த வழி முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.. ஆங்காங்கே கட்சிக் கொடிகள் காற்றின் வேகத்திற்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன.
"தலைவர் வாழ்க..! தலைவர் வாழ்க..!" என்ற கோஷங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. சாலையில் வாகனம் கூடச் செல்ல முடியாத அளவிற்குக் கூட்டம் கூடியிருந்தது.
சாலையின் இருபுறமும் பெரிய பெரிய பேனர்கள் அணிவகுத்து நின்றன.
ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தங்களின் புதிய தலைவரை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது. ஆம், மயில்ராவணன் தன் கையில் தந்த சாவியைச் சாரியாகப் பயன்படுத்தி அவன் சொன்னபடியே அரியணையைக் கைப்பற்றியிருந்தான் இமயவரம்பன்.
234 தொகுதிகளில், 125 இடங்களைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்திருந்தது இமயவரம்பன் தலைமையிலான கட்சி.
அடுத்தச் சில வருடங்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக முன்னேறியவன், இதோ இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற நிலைக்குத் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டான். இந்த நிலை தானாக ஒன்றும் அவனுக்குக் கிடைத்துவிடவில்லை.
மயில்ராவணன் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தும் திறமை அவனிடம் இருந்தது. இமயனின் வளர்ச்சியின் வேகத்தைப் பார்த்து, தங்கள் கட்சியின் மூத்த தலைவராய் மாறி வழி விட்டிருந்தார் மயில்ராவணன்.
இமயவரம்பன் பதவியேற்பு விழாவை தன் மனைவியுடன் மெத்திருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அதே போல் ராகவும் அவன் மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்து இதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம், நிறைமாத வயிற்றோடு இருந்த ஆருத்ராவும் தன் ஆறு வயது மகன் மாறனுடன் அமர்ந்து தன் கணவன் பதவியேற்பதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆருத்ராவும் தன் பணியில் உயர் மேலாளராய் பதவி உயர்வைப் பெற்றிருந்தாள்.
"ம்மா... அப்பா! அப்பா!" எனத் தொலைக்காட்சியில் தகப்பனைக் கண்டு குதூகலித்தான் மாறன்.
"ம்மா! நானும் பிக் பாய் ஆனதும், அப்பாவை விடப் பிக் பிக் பொலிட்டீஷியன் ஆவேன்..!" என மகன் சொல்ல,
"ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா மாறா?" எனப் புன்னகையுடன் அவள் கேட்க,
"நோ ம்மா..! ஐ வான்ட் டூ பிகம் அமெரிக்கன் பிரெஸிடென்ட்..!" என அவன் சொல்ல மகனின் நெற்றியில் நேசத்துடன் முத்தம் வைத்தாள் ஆருத்ரா.
அதே நேரம், மதிப்பிற்குரிய ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க,
"இமயவரம்பன் எனும் நான்..!"
என உறுதிமொழியேற்று பதிவியேற்றுக் கொண்டவன், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதற்கான முதல் கையெழுத்தைப் பதித்தான்.. இமயவரம்பனின் அரசியல் பயணம் இனிஎன்றென்றும் தொடரும்..!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.