அதீதம்-12
கதவைத் திறந்து கொண்டு, அந்த அரங்கத்திற்குள் நுழைந்த அவனைப் பார்த்து, அனைவரும் ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க, மயில்ராவணனோ அதிர்ச்சியாய்ப் பார்த்திருந்தார். அவர் சத்தியமாய் இதை எதிர்பார்த்திருக்கவே இல்லை.
"அர்ஜுன்!" அதிர்வுடன் அவர் இதழ்கள் உச்சரித்தது.
மெதுவாய் நடந்து தன் தந்தையின் பக்கத்தில் வந்த அர்ஜுன், அவரை அணைத்துக் கொள்ள,
"இங்கே ஏன் வந்த? நான் உன்னை வரச் சொல்லவே இல்லையே? எதுக்காக வந்த?!" அவன் செவிக்குள் உறுமினார் அவர்.
"என்னைப் பற்றித் தானே பேசுறீங்க? அப்போ நான் இருக்கிறது தானே சரி..?!" எனப் பதிலுக்கு அவன் கேட்க மயில்ராவணனின் முகம் நொடியில் இருண்டு போனது.
இனி என்ன நடக்கப் போகிறதென்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. இது யாருடைய திட்டம் என்பதும் புரிந்தது. தன் உதவியாளருக்குக் கூடத் தெரியாமல், இரகசியமாய் வைத்திருந்தது எப்படி இமயனுக்குத் தெரிந்திருக்கும்? குழப்பம் அவர் மனதைச் சூழ்ந்திருந்தது. கூட்டத்தின் மத்தியில் வைத்து, அத்தனை எளிதாய் அவரால், யாரிடமும் பேச முடியவில்லை.
தான் யோசிப்பதை தனக்கு முன்னால், அவனுக்குச் சாதகமாய்ச் செயல்படுத்துவதில், இமயன் வெகு சாமர்த்தியமானவன் என்பதை முதன்முறையாய் நேரடியாய் உணர்ந்தார் அவர். இத்தனை நாட்களாய் அவன் மயில்ராவணனுக்குச் சாதகமாய் எத்தனையோ விஷயங்களைச் செய்து முடித்திருக்கிறான். அப்போதெல்லாம் உளமாறப் பாரட்டியவரால், இப்போது முடியவில்லை. அவன் மீதானக் கோபமும் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றதே ஒழிய, குறையும் வழியைக் காணோம்.
அங்கே அமர்ந்திருந்த மற்றவர்கள், அல்ஜுனைத் தான் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராய் நிறுத்த போகிறார்கள் என ஆவலோடு எதிர்பர்த்துக் காத்திருக்க, நடு நாயகமாய் வந்து நின்ற அர்ஜுன் பேசத் துவங்கினான்.
"எல்லாருக்கும் வணக்கம்.. நான் இங்கே பேசறது சரியா இல்லையா எனக்குத் தெரியாது. ஆனால், இப்போ பேசாமல் இருந்தேன்னா, அது சரியாக இருக்காது.!" என அவன் பேசத் துவங்க,
"தம்பி! நீங்க எங்களுக்காக இங்க வந்ததே போதும் தம்பி! உங்களை மேலூர் தொகுதியில் நிறுத்துறது எங்களுக்குச் சந்தோஷம் தான் தம்பி!"
"அதானே.. ஐயா ஒருவார்த்தை சொன்னால் போதும், உங்களை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள நாங்க தயார்.!"
"சட்டுன்னு சம்மதத்தைச் சொல்லுங்க தம்பி! அறிக்கையை வெளியிட்டுடுவோம்!"
"உங்க அப்பாவிற்குப் பிறகு நீங்க வரணும்ங்கிறது தான் எங்க ஆசை..!"
என அவனைப் பேசவிடாமல், இடையிட்டு ஆளுக்கொன்று பேச, தான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் திணறினான் அர்ஜுன். அதோடு இவர்கள் பேசுவதெல்லாம் உண்மை அல்ல, தன் தகப்பனின் பணமும், பதவியும் தான் இவர்களைப் பேச வைத்திருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது.
"உங்களோட விருப்பம் எனக்குப் புரியுது. ஆனால் எனக்கு விருப்பம் இருக்கணுமே? அரசியலின் அரிச்சுவடி கூட அறியாத நான், எப்படி இதற்குள் வர முடியும்?" என அவன் கேட்க அந்தச் சூழல் முழுவதிலும் அசாத்தியமான நிசப்தம். நிசப்தம் மறு நொடியே கலைந்து போக,
"என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க? அப்போ ஐயா எடுத்த முடிவு உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்களா?"
"உங்க கிட்டே சொல்லாமல், எப்படி இந்த முடிவை இங்கே வரை கொண்டு வந்திருப்பார்?"
"அவசர ஆலோசனைக் கூட்டம் கூடும் வரை உங்களுக்குத் தெரியாதா?!" என மீண்டும், ஆளுக்கொன்றாய் கேட்க,
"கொஞ்சம் அமைதியாய் இருங்க! என் பையன் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கான். என்ன நடந்தாலும், மேலூர் தொகுதியில் அர்ஜுன் நிற்கப் போறது உறுதி!" என எழுந்து நின்று மயில்ராவணன் உறுதியளித்த அதே நேரம்,
"இல்லை!" எனப் பகிரங்கமாய் மறுத்திருந்தான் அர்ஜுன்.
"நான் இந்த அரசியலுக்குள்ளே வர்ரதை விரும்பலை. என்னோட பாதை வேறு.. என்னோட பயணமும் வேறு. இது எனக்கான பாதை இல்லை. அதற்காக அரசியலுக்கும் எனக்கும், சம்மந்தமே இல்லைன்னு நான் சொல்லலை. ஏன்னா, என் அப்பா தமிழ்நாட்டோட முதலமைச்சர். முதலமைச்சரின் மகன்ங்கிற முறையில், நான் நிறையச் சலுகைகளை அனுபவிச்சுட்டேன்.அதுவே போதும்ன்னு நினைக்கிறேன். நான் நினைச்சிருந்தால், நான் என் சொந்த உழைப்பில் தான் முன்னேறி வந்தேன்னு உங்க கிட்டே பொய் சொல்லலாம். ஆனால் பிறந்த நாளிலிருந்து, இப்போ வரை என் அப்பாவோட உழைப்பை ஏதோவொரு விதத்தில் அனுபவிச்சுட்டு தான் இருக்கேன்.!" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"அர்ஜுன்! போதும்..! உனக்கு விருப்பமில்லைன்னு நீ சொல்லிட்ட தானே? முதலில் இங்கிருந்து வெளியே போ!" என இடையிட்டார் மயில்ராவணன்.
"இருங்கப்பா! அவங்களுக்கும் உண்மை தெரியணும் தானே?" என அவன் சொல்ல, பதற்றம் தாங்கிய முகத்துடன், மகனைப் பார்த்தார் மயில்ராவணன்.
அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. தன் உதிரத்தில் உதித்த மகனையே தனக்கு எதிராய் திருப்பிய இமயனைக் கொன்று போட்டுவிடும் அளவிற்கு ஆத்திரமும் வந்தது. ஆனால், அவர் நின்றிருந்த சூழ்நிலையில் அவரால் எதுவும் பேச முடியாதே! அவர் அவசரப்பட்டு எதையாவது பேசி வைத்தால், நீல சாயம் வெளுத்துப் போன நரியின் கதையாய் மாறிவிடுமே.. என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாய் நின்றார் அவர்.
"என் அப்பாவின் விருப்பம், நான் அரசியலுக்கு வர்ரது தான்னு எனக்குத் தெரியும். அதற்காக என்னைத் தேர்தலில் நிறுத்தும் முடிவை அவர் எடுத்திருப்பார்ன்னு எனக்குத் தெரியாது. மகன் எனும் முறையில், அவர் நான் அரசியலுக்கு வரணும்ன்னு ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை.!"
எனத் தெள்ளத் தெளிவாய் அனைவரின் முன்னிலையிலும் சொல்லிவிட்டான் அவன். சற்று முன் தான், என் மகனை அரசியலுக்குள் இழுத்து வாரிசு அரசியலாய் மாற்றுவதில், எனக்கு விருப்பமில்லை என மயில்ராவணன் சொல்லியிருக்க, அவர் மகனே அவருக்கு எதிராய்ப் பேசியது, அங்கே இருந்தவர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
"என்னதான்ய்யா இங்கே நடக்குது? இவர் ஒண்ணு சொல்றாரு.. இவர் பையன் இன்னொன்னு சொல்றான். அப்போ மகனை அரசியலுக்குக் கொண்டு வர்ரது தான் அவர் திட்டமா?"
"அதானே.. நம்மக்கிட்டே சொன்னதெல்லாம் பொய்யா?!"
"அப்பன் ஒண்ணு சொன்னால், மகன் வேற ஒண்ணு சொல்றான். இப்படி ஆளுக்கொன்னு மாத்தி மாத்தி பேசினாய்ங்கன்னா எவனை நம்புறது?"
"எனக்கென்னவோ, இதில் ஏதோ இருக்குன்னு தோணுது!"
"பத்து வருஷமா பதவியில் உட்கார்ந்து சம்பாதிச்சது போதாதுன்னு, மயனையும் உள்ளே இழுக்கப் பார்க்கிறாராக்கும்? அரசியலில் 'ஆ' னா கூடத் தெரியாத பொடிப்பயலை எல்லாம் இதுக்குள்ளே இழுத்து நிறுத்த இது என்ன விளையாட்டா?"
"அவனவன், அவன் குடும்பத்திற்குக் காசு சேர்க்கத்தானே பார்ப்பான். நமக்கு நல்லது செய்வாய்ங்கன்னு நாம நினைக்கிறது முட்டாள்தனந்தேன்.!"
"யோவ்! நீங்க இப்படியெல்லாம் பேசுறது, மட்டும் அந்தாளுக்குத் தெரிஞ்சுது, சோலியை முடிச்சு விட்டுருவாரு. அந்தாளு ஆட்சியில் இருக்கப் போய்த்தான் நாமளும் நாலு காசு சம்பாதிச்சுக்கிறோம். அவர் சொல்றதுக்குத் தலையை ஆட்டினோமா.. இருக்கிறவரை சம்பாதிச்சோமான்னு போய்ட்டே இருக்கணும்!" என அவர்களுக்குள்ளேயே பேசி, பின் அமைதியாய் அனைவரும் அமர்ந்திருக்க,
"எனக்கு இந்த அரசியலுக்குள்ளே வர்ரதுக்கு விருப்பம் இல்லைன்னாலும், என்னோட உற்ற நண்பன் இமயனை அந்தத் தொகுதியில் நிறுத்துறது தான் சரியாக இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன். பத்து வருஷமாய் அப்பா கூடவே உறுதுணையாய் இருந்ததில், இமயனும் ஒருத்தன். அரசியலுக்குள் வர ஆசைப்படுற, அதில் விருப்பம் இருக்கிற இமயன் தான் அந்தத் தொகுதிக்கு சரியான தேர்வுன்னு நான் நினைக்கிறேன்.!"
எனச் சொன்னவன் நேராக இமயனைச் சென்று அணைத்திருந்தான். அதன் பின் அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பியிருக்க, முகத்தில் கடுகடுப்பைச் சுமந்தபடி மகனைப் பார்த்திருந்தார் மயில்ராவணன்.
அவர் தீட்டிய திட்டம் மொத்தமும் கண் முன்னே தவிடுபொடியாவதைப் பார்த்து, கையாலாகத் தனத்துடன் அமர்ந்திருந்தார். அவர் நினைத்ததற்கு எதிராய் அனைத்தும் நடந்துவிட்டதே? என்ற கோபமும் அவருக்குள் இருந்தது. தன் மகன் அர்ஜுனுக்கு அரசியலில் விருப்பமில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதில் விருப்பமில்லாத காரணத்தால் தான், அவன் தனக்கென ஒரு தொழிலை வடிவமைத்துக் கொண்டான் என்பதும் அவருக்குத் தெரியும்.
ஆனால் மயில்ராவணனின் எண்ணம் வேறு விதமாய் இருந்தது. அவர் தன் கட்சியைத் தாங்கி நிறுத்த, தனக்குப் பின் ஒரு வாரிசு வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அந்த வாரிசு, யாரோவாக இருப்பதை விட, தன் சொந்த வாரிசாக இருப்பதைத் தான் அவர் விரும்பினார். ஆனால், அவரின் திட்டத்தில் திருப்பம் எற்படும் என அவரே எதிர்பார்க்கவில்லை.
முதலில், தன் மகனைத் தான் மேலூர் தொகுதியில் நிறுத்துவதாய் அறிவித்துவிட்டு, பின் அவனிடம் பேசிக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தார். அர்ஜுனை நிறுத்துவதாய்க் கூட்டத்தில் முடிவு செய்த பின், அர்ஜுனால் மறுப்பு சொல்ல முடியாது, தன் ஆசைப்படியே அவன் அரசியலுக்கு வந்துவிடுவான், என அவர் கனவு கண்டிருக்க, அதைக் கலைக்கும்படி, தன் மகனிடம், தனக்கு முன்னே பேசி, காரியம் சாதித்துக் கொண்ட இமயனை நினைத்துக் கோபம் கொந்தளித்தது அவருக்குள். பற்றாக்குறைக்கு, இமயனைத் தான் மேலூரில் நிறுத்துவதற்கு யோசித்திருந்தேன் என அவர் அனைவரின் முன்னிலையில் சொல்லித் தொலைத்துவிட்டதால், இனி அவனைத் தேர்தலில் நிறுத்துவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.
"மக்கும்..!" எனத் தொண்டையைச் செருமிக் கொண்டவர்,
"நான் ஏற்கனவே சொன்னது தான். என் பையனை இதுக்குள்ளே இழுக்க விருப்பமில்லைங்கிறது தான் உண்மை. அவன் என்னைப் புரிஞ்சுக்காமல், தன் நண்பனுக்காக ஆயிரம் பேசலாம். உண்மை என்னன்னு எனக்குத் தெரியும். இப்போ நீங்க தான் சொல்லணும். மேலூர் தொகுதியில் யாரை நிறுத்தணும்ன்னு நீங்க தான் சொல்லணும்!" தன் மகன் பேசியதை அப்படியே இல்லையெனச் சாதித்து, மாற்றிப் பேசினார் மயில்ராவணன்.
"நீங்க சொன்னது தான் இமயன் தான் உங்க விருப்பம் என்றால், அது தான் எங்க விருப்பமும்.!"
"ஆமா.. ஆமா.. நீங்க யாரைச் சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம் தான்.!" என்ற குரல்களின் நடுவே,
"இதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லையே?!" பேருக்காகக் கேட்டார் அவர்.
அனைவரும் ஏகமனதாய் இமயனையே தேர்ந்தெடுக்க, அனைவருக்கும், எழுந்து நின்று தன் நன்றியைத் தெரிவித்தான் இமயன். இறுதியாய் இமயனை மேலூர் தொகுதியில் நிறுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. தனக்குப் பிடிக்காமலே, இமயனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அவனைக் கைக்குலுக்கி வாழ்த்தினார் அவர்.
"வாழ்த்துக்கள் இமயன்! உன்னோட புதிய துவக்கத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்!" என அவனுக்குத் தன் வாழ்த்தை வேண்டா வெறுப்பாய் தெரிவித்தவர்,
"கட்சி உறுப்பினர்கள் உன் பேரைச் சொல்லிட்டா மட்டும் போதுமா? தேர்தலில் ஜெய்க்கணும் தம்பி! ஆட்சியே என் கையில் இருக்கு. ஒரு தொகுதி போனால் போகட்டும்ன்னு நினைச்சேன்னா.. உன் நிலமையை யோசிச்சு பாரு. டெப்பாஸிட் இழந்துட்டு நிக்கப் போற பாரு..!" என அவன் செவிக்குள் இரகசியமாய் மிரட்டினார் மயில்ராவணன்.
"அதையும் பார்த்துடுவோம் மாமா! முதலமைச்சர் நீங்களே என் பக்கம் இருக்கும் போது, நான் எதுக்காகப் பயப்படணும் மாமா? உங்க மருமகனைத் தோற்க விட்டுடுவீங்களா என்ன?" என அவன் துளியும் பயமில்லாமல் சொல்ல, மயில்ராவணனின் புருவம் யோசனையாய்ச் சுருங்கியது.
'இவன் என்ன தைரியத்தில் இப்படிப் பேசுகிறான்?" என்ற யோசனை அவருக்குள் ஓடியது.
"நீ என் மகனை ஏமாத்தி காரியத்தைச் சாதிச்சுருக்கலாம் இமயன்! ஆனால் தேர்தலில் ஜெய்க்க உன்னால் முடியாது. பார்த்துடுவோம் நீயா.. நானானன்னு..!" என அவர் சொல்ல,
"பார்த்துடுவோம் மாமா! எப்படியும் நான் தான் ஜெய்ப்பேன்.! அதை நீங்க பார்ப்பீங்க!"
எனச் சொன்னவன், அழுத்தமான நடையுடன் வெளியேறியிருக்க, அவன் சொன்னதன் சாராம்சம் புரியாமல், அவன் புறமுதுகை வெறித்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
*******
இங்கே இமயனின் வரவிற்காய் காத்திருந்தாள் ஆருத்ரா. அவள் மனதிற்குள் நிறையக் குழப்பங்கள், கேள்விகள் இருந்தன. அவளுக்குள் இருந்த கேள்விகளுக்கான விடை, அவனிடம் மட்டுமே கிடைக்குமென்பதால், அவளுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அவனைப் பற்றி முழுதாய்த் தெரியாமல், இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் அவள் மனம் ஒப்பவில்லை. பற்றாக்குறைக்கு இமயவரம்பனின் முன்னாள் மனைவி கணவனோடு வந்து நின்றது வேறு அவளுக்குள் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவளுக்கு எல்லாம் தெரிய வேண்டும். அவன் ஆதி அந்தம் முழுக்க அவளுக்குத் தெரிய வேண்டும். என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள் ஆருத்ரா.
"ஆரு! இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இங்கேயே உட்கார்ந்திருக்கப் போற? அண்ணன் வர லேட் ஆகும். நீ போய்த் தூங்கு.!" என ராகவ் சொல்ல,
"அப்போ உன் அண்ணன் லைஃபில் என்ன நடந்ததுன்னு நீ சொல்லு. நான் போய்த் தூங்கறேன்.!" என அவள் சொல்ல,
"ஆரு.. நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. என்னால் சொல்ல முடியாது. நான் சொன்னால் அது நன்றாகவும் இருக்காது. இது அவனோட பர்ஸ்னல்..!" என அவன் சொல்வதன் நியாயம் அவளுக்குப் புரிந்தது. ஒருவரின் அனுமதி இல்லாமல், அவரின் இரகசியங்களை மற்றவரின் கடைபரப்பக் கூடாதென்ற அவனின் நாகரிகமும் இவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனாலும், அவளால் அவன் சொன்னதைக் கேட்க முடியவில்லை.
"பேசாமல் நான் போய்க் கவிநயா கிட்டே கேட்கவா ராகவ்? நீயும் சொல்ல மாட்டே! உன் அண்ணனும் எப்போ வருவான்னு தெரியலை. இப்போ நான் என்னடா செய்யணும்? உன் அண்ணன் நல்லவனாவே இருக்கட்டும். ஆனால், என்னோட சந்தேகங்களை க்ளியர் பண்ணுற பொறுப்பு யாரோடது? இப்படியொரு குழப்பமான மனநிலையில், நான் இந்தக் கல்யாணத்தை எப்படி ஏத்துக்கிறது? என் நிலையில் நீ இருந்திருந்தால், என்ன செஞ்சுருப்ப ராகவ்?!" என அவனைப் பதில் கேள்வி கேட்டாள் ஆருத்ரா.
தோழியின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாய் நின்றான் ராகவ். ஆருத்ராவின் நிலையிலிருந்து பார்த்தால், அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சரியானது தான். இமயனின் முந்திய வாழ்க்கையைப் பற்றிய தெளிவை அவளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தான் இருக்கிறது என்பதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால், இது குறித்த தெளிவை அவனால் கொடுக்க முடியுமா? தான் சொல்வது சரியாக இருக்குமா என்பது தான் அவனுக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கவிநயாவிற்கும், இமயனுக்கும் ஏதோ ஒத்துப் போகவில்லை பிரிந்துவிட்டார்கள் என்பது வரை மட்டுமே அவனுக்குத் தெரியும். அரைகுறையாய் தெரிந்த ஒன்றைக் குறித்து ஏதாவது பேசப் போய், ஏடாகூடமாய் ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.
"பதில் சொல்லு ராகவ்! இப்போ நான் என்ன செய்றது?!" என அவள் மீண்டும் கேட்க,
"நீ கேட்கிற கேள்வி நியாமானது தான் ஆரு. ஆனால் எனக்குத் தான் பதில் தெரியலை. அதுக்காக இப்படி இமயன் வரும் வரை உட்கார்ந்துட்டே இருக்கப் போறியா?" என அவன் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம், தோட்டத்தில் தன் இரவு நேர, நடை பயிற்சியை முடித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தாள் கவிநயா.
"ஹாய்.. இன்னும் தூங்கப் போகலையா நீங்க?" என இயல்யாகப் பேசினாள்.
"இல்லை! நீங்க.. இன்னும் தூங்கலையா? குழந்தையைத் தனியாகவா விட்டுப் போனீங்க?!" எனக் கேட்டாள் ஆருத்ரா.
"தீபக் இருக்கானே அவன் பார்த்துப்பான்.!" எனச் சொன்னவள், லேசாய் தயங்கியபடியே,
"ஆருத்ரா, இந்தக் கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?" என நேரடியாகவே கேட்டிருந்தாள் கவிநயா.
"உண்மையைச் சொல்லணும்ன்னா யெஸ்.. ரெண்டாந்தாரமாய் ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க, எப்படி ஒரு பொண்ணுக்கு பிடிக்கும்.? எனக்குச் சுத்தமாய் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. !" என நேரடியாய் ஆருத்ரா சொல்ல,
"ஆருத்ரா! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! இமயன் ரொம்ப நல்லவர். என் அப்பா செஞ்ச சதியால் மட்டும் தான் எங்கக் கல்யாணம் நடந்துச்சு. பட், கல்யாணத்தில், எனக்கும் இமயனுக்கும் விருப்பமே இல்லை. கல்யாணம் நடந்த சில மாதங்களிலேயே நாங்க பிரிஞ்சுட்டோம். அந்த முடிவு எங்களுக்குக் கஷ்டமா இருக்கலை. எங்களால் சேர்ந்து வாழ முடியாதுங்கிறதை உணர்ந்து நாங்க பிரிஞ்ச பிறகு தான் எங்களால் மூச்சு விடவே முடிஞ்சது." எனக் கவிநயா சொல்ல,
"உங்களுக்கு மூச்சு முட்டின மாதிரி, நானும் மூச்சு முட்டி சாகணும்ன்னு நினைக்கிறீங்களா?!" பட்டென ஆருத்ரா கேட்டுவிட, சட்டெனக் கவிநயாவின் முகம் சுருங்கியது.
"ஆரு!" என ராகவ் அதட்டியதையும் பொருட்படுத்தாது,
"நான் உங்க கிட்டே நற்சான்றிதழ் ஒண்ணும் கேட்கலை. இமயன் நல்லவனாக இருந்திருந்தால், நீங்களே அப்படிப்பட்ட நல்லவர் கூடச் சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே..? ஆளாளுக்கு, அவனக்கே சப்போர்ட் பண்ணுறீங்க? உங்களைப் பொருத்தவரை அவன் தியாகியாய் இருக்கலாம். வேணும்ன்னா போய்ச் சிலை வைங்க! அதுக்காக என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க! எனக்குக் விருப்பு வெறுப்புகள் இருக்கு. நான் ஒண்ணும் ப்ரோக்ராம் பண்ணின பொம்மை இல்லை!" சற்றும் யோசிக்காமல், கோபமாய்ப் பேசியிருந்தாள் ஆருத்ரா.
அவள் பேசியதன் வீரியம் தாங்க முடியாமல், கவிநயா முகம் வாடி கண்களில் நீர் ததும்பி நிற்க, ராகவிற்கே அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
"ஆரு! ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாய் இரேன்.. என்ன பேசுறோம்ன்னு தெரியாமலே பேசுற!" எனத் தன் தோழியை உரிமையாய் கண்டித்த ராகவ்,
"ஸாரி.. மன்னிச்சுடுங்க! அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்!" எனக் கவிநயாவிடம் சொன்னான்.
"இருக்கட்டும் ராகவ்! நான் இதையெல்லாம் எதிர்பார்த்து தானே வந்தேன்.ஆருத்ராவுடைய மனநிலை எனக்குப் புரியுது. முதலில் இமயன் கேட்டப்போ கல்யாணத்திற்கு வரலைன்னு தான் சொன்னேன். ஆனால், இமயனோட வாழ்க்கையை நான் தான் கெடுத்துட்டேனோங்கிற கில்ட் எனக்குள்ளே இருக்கு. அதுக்காகத் தான் நான் இங்கே வந்தேன். இமயனுக்கு நல்ல வாழ்க்கை அமையறதைப் பார்த்துட்டால், என் மனசு சமாதானமாகிடுமேங்கிற காரணத்திற்காகத்தான் வந்தேன். ஆனால் நான் செஞ்ச தப்புக்கு எனக்கு இது தேவை தான்!" எனச் சொல்லிவிட்டுக் கவிநயா தன் அறையை நோக்கிச் சென்றுவிட,
"ஏன் ஆரு இப்படிப் பண்ணுற.? அவங்களை ரொம்பவே ஹர்ட் பண்ணிட்ட!" எனப் பொறுமையாய்ச் சொன்னான் ராகவ்.
"நான் செஞ்சது தான் உனக்குத் தப்பா தெரியுதா டா? உன் அண்ணன் செய்றதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாது. கல்யாணம் பிடிக்கலைன்னு சொன்ன பிறகும், உன் அண்ணன் கட்டாயப்படுத்துறானே.. அது பேர் ஹர்ட் பண்ணுறது இல்லையா? நான் என் மனசு ஆற்றாமையில் ரெண்டு வார்த்தை பேசிட்டால், அது ஹர்ட் பண்ணுறதா டா?!"
என அவள் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம், தன் கருப்பு நிற வாகனத்தில் வந்து இறங்கினான் இமயவரம்பன். அந்த நவீன ரக மகிழுந்து அமைதியாய் அதற்குரிய இடத்தில் நிற்க, கதவைத் திறந்து அவன் இறங்கி நடந்து வர, ஆருத்ராவின் கவனமும், ராகவின் கவனமும் இமயன் மீது திரும்பியது.
"நீ என்கிட்டே எதுவுமே சொல்ல வேண்டாம் ராகவ்.. நான் உன் அண்ணன்கிட்டேயே கேட்டுக்கிறேன்.!" என அவள் இமயனை நோக்கி நடக்க,
"ஏய் நில்லு!" என்ற குரல் கேட்டுப் பின்னால் திரும்பினாள் அவள்.
"புள்ளையே துக்க வீட்டுக்குப் போய்ட்டு இப்பத்தேன் வாரான். நீ என்னத்துக்கு அவன் குறுக்கே போற? போ.. அறைக்குள்ளே போய்த் தூங்கற வழியைப் பாரு!" எனச் சொன்னபடி செல்லம்மா தான் நின்றிருந்தார்.
"அப்பத்தா! அவங்க அண்ணன்கிட்டே பேசணுமாம்!" என ராகவ் இடையிட,
"பேசட்டும் டா! தாராளமாய் விடிய விடிய பேசட்டும். கல்யாணத்துக்குப் பிறகு என்னத்தை வேணும்ன்னாலும் பேசிக்கச் சொல்லு.!" எனச் சொன்னவர்,
"ராசா.. நீ பின்னாலே இருக்கிற அறையில் குளிச்சுட்டு வா ராசா!" என ஆருத்ராவிடம் துவங்கி இமயனிடம் முடித்தார். அவளோ கோபத்தில் முகத்தைத் தூக்கியபடி நின்றிருக்க,
"மொட்டை மாடியில் வெய்ட் பண்ணு! குளிச்சுட்டு வர்ரேன்!" எனச் சொல்லிவிட்டு அவன் நகர்ந்துவிட, யாரிடம் சொன்னான் எனப் புரியாமல், அவள் குழம்பி நிற்க,
"உன்கிட்டே தான் ஆரா சொன்னேன். மாடியில் வெய்ட் பண்ணு வர்ரேன்!" எனத் திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டுச் சென்றான். அவன் தன்னைப் பார்த்தப் பார்வையில் என்ன இருந்தது எனப் புரியாமல் நின்றிருந்தாள் ஆருத்ரா.
"போதுமா? அண்ணனே உன்கிட்டே பேச வரச் சொல்லிட்டார். உனக்கு இருக்கிற எல்லாச் சந்தேகங்களையும் கேட்டுக்கோ! உன்னை மட்டுமே யோசிச்சு சுத்தி இருக்கிறவங்களை ஹர்ட் பண்ணாதே!" எனக் கொஞ்சம் கோபமாகச் சொல்லிவிட்டு, ராகவ் உள்ளே சென்றுவிட,
யோசனையுடனே மாடியை நோக்கிப் போனாள் அவள்.
மொட்டை மாடியின் சுற்றுத் திண்டு முழுவதும் செடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, கலவையான பூக்களின் நறுமணம் அவள் நாசியை நிரடியது. மொட்டை மாடி கூட,சுத்தமாய் அழகாய் பராமரிக்கப் பட்டிருந்தது. மென்மையான தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்க, உச்சியில் தகித்துக் கொண்டிருந்த நிலவொளி, இதமான மனநிலையைத் தந்தது.
'இத்தனை நாளாய் எப்படி மாடியைக் கவனிக்காமல் விட்டோம்?' யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
மொட்டை மாடியில் இங்கும், அங்குமாய் நடந்தபடி அவள் அவனுக்காகக் காத்திருக்க, மனதிற்குள்ளோ ஒருவித பதற்றமும் படபடப்பும் அவளை முதன்முறையாய் ஆட்கொண்டிருந்தது.
'அவனிடம் என்ன கேட்பது?'
'எப்படிக் கேட்பது?'
'நேரடியாய் கேட்டால் பதில் சொல்வானா?'
எனத் தனக்குள் யோசித்தபடியே அவள் நடந்து கொண்டிருக்க, அவன் படிகளில் ஏறி வந்ததையோ, அவள் பின்னால் வந்து நின்றதையோ கவனிக்க மறந்து போனாள் பெண். அவள் கவனிக்காமல் முன்னோக்கி நடக்க,
"ம்க்கும்" அவள் கவனத்தைத் தன் மீது திருப்புவதற்காக, தொண்டையை அவன் லேசாய் செரும, திடுக்கிட்டு பயந்து, பின் சுதாரித்து,
"லூசு.. பேர் சொல்லி கூப்பிட வேண்டியது தானே? பயந்துட்டேன்.!" எனத் தன்னை மீறி, அவனிடம் கத்தியிருந்தாள். தன்னை அறியாமல், அவனைத் திட்டியதை நினைத்து அவள் திருதிருவென விழித்தபடி, அவள் நின்றிருக்க, அவளைப் பார்த்து இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன். ஆராவின் இமயவரம்பன். அவன் முதன்முறையாய் தன் முன் இதழ் விரித்துச் சிரிப்பதை அதிசயமாய் பார்த்திருந்தாள் ஆருத்ரா.
"விட்டுச் செல்வதற்கு
உன்னிடம் காரணங்கள் அநேகம் உண்டு.
அவை எவற்றையும் கேட்கப் போவதில்லை நான்..
உடனிருப்பதற்கு..
ஒருகாரணம் கூட இல்லாத போது..
இல்லாமல் போவதற்கு எத்தனை காரணம் இருந்தென்ன..?!"
(படித்ததில் பிடித்தது.)
அன்பாகும்..?