அதீதம்-5
மறுநாள் காலையிலேயே ஆருத்ராவின் வீட்டு வாசலில் வந்து இறங்கினான் ராகவ். தன் அறையின் பக்கவாட்டில் அமைந்திருந்த பலகனியில் தன் ஈரக் கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க, எதேச்சையாய் வெளியே எட்டிப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.
"ஐயோ.. இவனை யார் இங்கே வரச் சொன்னது? நான் தொலைஞ்சேன். ஏற்கனவே தாத்தா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறார். இவனைப் பார்த்தால் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?" எனப் பதற்றத்துடன் புலம்பியவள், தன் அறையிலிருந்து கீழே இறங்கி ஓட,
"ஆரு! எங்கே ஓடுற? அம்மா சேலை கட்டச் சொன்னாங்க டி!" என்றபடியே பின்னால் ஓடி வந்தாள் மஞ்சரி.
"மஞ்சு! நீ உள்ளே போ! நான் வர்ரேன். அம்மா கேட்டால், ரூமில் இருக்கேன்னு சொல்லு!"
"அப்படி அவசரமா எங்கே போற? அம்மா என்னைய தான் வையும்!"
"நான் ஒண்ணும் ஓடிப்போக மாட்டேன் டி! என் ஃப்ரெண்ட், அந்த எருமை சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கான். இருக்கிற தலைவலியில் இவன் வேற?" என ஆருத்ரா சொல்ல,
"யாரு.. ராகவ் தானே உன் ஃப்ரெண்ட்! எனக்கு இண்ட்ரோ கொடு ஆரு ப்ளீஸ்..!" என மஞ்சரி கேட்க,
"கொன்னுடுவேன் போடி!" என விரல் நீட்டி தங்கையை விரட்டினாள் ஆருத்ரா. திரும்பி திரும்பி பார்த்தபடியே மஞ்சரி நடக்க, அவசரமாய்ப் படிகளில் இறங்கி, தன் நண்பனை நோக்கி ஓடினாள் ஆருத்ரா.
நிதானமாய் வீட்டின் முன்புறத் தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி, நடந்துவந்து கொண்டிருந்தவனின் முன்னால், மூச்சு வாங்க ஓடி வந்து நின்றாள் ஆருத்ரா.
"ஹாய் ஆரு! என்ன ஒரு இன்ஃபர்மேஷனும் காணோம். நான் மேரேஜ் முடிஞ்சுருக்கும்ன்னு நினைச்சேன் தெரியுமா?" எனச் சாதாரணமாய் அவன் வினவ,
"ராகவ்! நீ ஏன் இங்கே வந்த? எதுக்குடா வந்த?" எனக் கேட்டாள் ஆருத்ரா.
"என்ன விளையாடுறியா? நீ தானே வரச் சொன்ன? இப்போ என்னடான்னா எதுக்கு வந்தேன்னு கேட்கிற? இப்படி வந்தவனை வாசலிலேயே விரட்டுறதுக்குப் பேருதான் உங்க ஊரு விருந்தோம்பலா?" என அவன் கேட்க,
"எருமை.. பைத்தியம் மாதிரி உளறாதே டா! நான் எங்கே உன்னை வரச் சொன்னேன்.? என்கிட்டே இருந்து எந்தத் தகவலும், வரலைன்னா தானே வரச் சொன்னேன். நீ ஏன் இப்போ வந்த?" அவள் புரியாமல் கேட்க,
"நீ எதாவது கால் பண்ணி சொன்னியா? நைட் கிளம்பிடுவேன்னு சொன்ன, ஆனால் என்கிட்டே எதுவுமே சொல்லலையே? உன் ஃபோனை எடுத்து பாரு, எத்தனை தடவை கால் பண்ணிருக்கேன்னு..? வேறு வழியில்லாமல், உனக்கு எதாவது பிரச்சனையோன்னு பயந்து பதறி ஓடி வந்திருக்கேன். ஆனால் நீ என்னடான்னா என்னை விரட்டுறதில் தான் குறியா இருக்க?" எனச் சொன்னான் அவன்.
"ம்ப்ச்.. மறந்துட்டேன் ஸாரி டா! இப்போ நீ கிளம்பு.. நான் அப்பறமா கால் பண்ணி எல்லா விவரமும் சொல்றேன். இப்போ நீ இங்கிருந்து கிளம்பு. அவனை அவசரப்படுத்தினாள் அவள்.
"ஆரு.. இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்தவனை, கிளம்புன்னு சொன்னால், எங்கே கிளம்புறது? எனக்கு இந்த மதுரையில் உன்னைத் தவிர யாரையும் தெரியாதும்மா.. என்னால் எங்கேயும் போக முடியாது.!" என அவன் மறுக்க என்ன செய்வதெனப் புரியாமல் திணறினாள் ஆருத்ரா.
"உனக்கு நான் எப்படிச் சொல்றது? இங்கே நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை மிஸ் அண்ஸ்டாண்ட் பண்ணிக்கிறாங்க டா! அப்படி இருக்கும் போது, நீ இங்கே தங்கினால் நல்ல இருக்காது ராகவ்.!"
"ஓகே! எனக்குப் புரியுது. ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் தானே ஆரு.. அதைக் கூடப் புரிஞ்சுக்க மாட்டாங்களா? இது தெரியாமல், நான் தான் அவசரப்பட்டு வந்துட்டேன் போல, இப்போ என்னைப் பார்த்தால் உன்னைத் தப்பா நினைப்பாங்க தானே? ஐ அம் ஸாரி ஆரு.. நான் யோசிக்காமல் கிளம்பி வந்துட்டேன். நீ கால் பண்ணலைன்னதும், கொஞ்சம் பயம் வந்துடுச்சு. கட்டாயக் கல்யாணம் எதுவும் பண்ணி வச்சிடுவாங்கன்னு தான், அவசரமாய் வந்தேன். சரி! நான் கிளம்பறேன். இங்கே நல்ல ஹோட்டல் எங்கே இருக்கும்ன்னு சொல்லு. கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பறேன்.!" எனத் தன் தோழியைப் புரிந்துக்கொண்டு அவன் பேச,
"ஐ அம் ரியலி ஸாரி ராகவ்! என் ஊருக்கு என் வீட்டுக்கு வந்துட்டு, உன்னை உள்ளே கூடக் கூப்பிட முடியலையேன்னு எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. குற்றவுணர்ச்சியா இருக்கு டா ஸாரி..!" என மனம் வருந்தி சொன்னாள் ஆருத்ரா.
"போதும்.. உன் ஃபீலிங்ஸெல்லாம் ஓரம் கட்டி வை! இந்தக் கல்யாணத்தை நிறுத்த போறேன்னு சொன்ன, என்னதான் ஆச்சு? உங்க வீட்டில் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணுறாங்கன்னா சொல்லு, நாம போலீஸ் ஹெல்ப்பை கேட்கலாம். நம்ம பசங்களே டிப்பார்ட்மெண்ட்டில் இருக்காங்க!"
"தெ.. தெரியலை டா! என் வாழ்க்கையில் என்ன நடக்குது? ஏன் இப்படி நடக்குது எதுவுமே எனக்குப் புரியலை டா.! எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் தெளிவா தெரிஞ்சுடுச்சு. என்னால் இந்தக் கல்யாணத்தை நிறுத்தவோ, தடுக்கவோ முடியாது. இங்கிருந்து என்னால் வரவும் முடியாது. இப்போ என்ன பண்ணுறதுன்னு கூட எனக்குத் தெரியலை. நான் ஒண்ணு செய்ய நினைச்சு, அது இங்கே வேற மாதிரி மாறி போச்சு. ஐ அம் டோட்டலி கன்ஃப்யூஸ்டு ராகவ்.!" என அவள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சொல்ல,
"ஆரு! இப்போவும் ஒண்ணும் பிரச்சனை இல்லை! நீ இப்படியே என்னோட வந்துடு!" என அவன் சொல்லி நிறுத்தவும், வீட்டின் நுழைவாயிலில், அந்த மகிழுந்து நிற்கவும் சரியாக இருந்தது. அந்தக் கருப்பு நிற மகிழுந்தின் முன்னிருக்கையின் கதவைத் திறந்தபடி இறங்கினான் இமயவரம்பன்.
கதவைத் திறந்து இறங்கிய அந்த முதல் நொடியிலிருந்தே அவன் பார்வை ஆருத்ராவின் மீதே இருந்தது. இமை கூடச் சிமிட்டாமல், அவளைப் பார்த்தபடியே அழுத்தமான எட்டுகளுடன் அவளை நோக்கி வந்தான் இமயவரம்பன். ஆருத்ராவோ முதன் முறையாய் அவனை நெருக்கத்தில் சரியாகப் பார்த்தாள்.
அவள் நிமிர்ந்து தலையைத் தூக்கி பார்க்குமளவிற்கு உயரமாய் இருந்தான். அழுத்தமான கண்கள், உறுதியான உடல்வாகு, லேசான தாடியும், அடர்த்தியான மீசையுமாய் மாநிறத்தில் இருந்தவனின் நடையில் ஆளுமை தெரிந்தது. வெள்ளை முழுக்கை சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த கரை வைத்த வேட்டி, அவன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டு, அவன் கரத்தில் அணிந்திருந்த தங்கக் காப்பும், கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியும் அவனுக்கு வெகு பொருத்தமாய் இருந்தது.
'ஆள் அழகாக இருந்து என்னத்துக்கு? கேரக்டர் சரியில்லையே..?' எனத் தனக்குள் புலம்பியபடி, அவனைக் கோபமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.
"ம்க்கும்!" எனத் தொண்டையைச் செருமியபடி வந்தவன்,
"வணக்கம்! வாங்க ராகவ்! நீங்க ஆராவோட ஃப்ரெண்ட் தானே?" எனக் கேட்க, இத்தனை நேரமாய், இமயனைப் பார்த்து அசந்து, கொஞ்சம் மிரண்டு போய் நின்றிருந்த ராகவ், கொஞ்சம் தடுமாறி, திணறி..
"ஹா.. ஹாய் சார்..! நைஸ் டூ மீட் யூ..!" என அவனை அறியாமலே கைக்குலுக்கியிருந்தான்.
"வீட்டுக்கு வந்த விருந்தாளை இப்படித்தேன் வெளியே நிக்க வச்சு பேசுவியா? உள்ளே கூட்டிப் போ ஆரா!" என இமயன் சொல்ல, ராகவை எப்படி இமயனுக்குத் தெரியும்? எனக் குழம்பி நின்றாள் ஆருத்ரா.
"உனக்கு.. ம்ப்ச்! உங்களுக்கு இவனைத் தெரியுமா?" என அவள் உளற,
"என்னோட சரிபாதியாய் மாறப் போறவ நீ.. நமக்குள்ளே மரியாதை அவசியமில்லை ஆரா. நீ என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாம்!" என அவன் சொல்ல, எரிச்சலுடன் அவனை முறைத்தபடி நின்றாள் ஆருத்ரா.
"நான் இவனை உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்.?" என இல்லாத பொறுமையுடன் வினவினாள் அவள்.
"நமக்குப் பிடிச்சவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறதில் ஒண்ணும் தப்பு இல்லையே..!" அவ எதார்த்தமாய்ச் சொன்னான்.
"நீ என்னைப் பத்தி தெரிஞ்சுக்கலை.. என்னை வேவு பார்த்திருக்க.. பிடிச்சவங்களை யாரும் வேவு பார்க்க மாட்டாங்க! இந்தக் கல்யாணமே அரசியல் ஆதாயத்திற்காகத் தானே செய்ற? என் தாத்தாவை ஏமாத்தி காசு புடுங்கலாம்ன்னு திட்டம் போட்டுருப்ப.. அதுக்காகத்தானே இத்தனையும்.?!" என்றவளின் குரலில் ஒருவித சலிப்புத் தெரிந்தது.
"பணத்தால் எல்லாத்தையும் மதிப்பிட முடியாது ஆரா.. பணத்தை விட விலைமதிப்பில்லாத நிறைய விஷயங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இழக்கும் வரை.. அதோட மதிப்பு நமக்குத் தெரியாது.!" அவன் ஏதோ சொல்ல, அவன் சொல்ல வருவதன் பொருள் புரியாமல், புருவம் சுருக்கினாள் பெண்.
"இப்போ புரியலைன்னா பரவாயில்லை ஆரா.. சீக்கிரமே புரியும்!" அவள் முகம் பார்த்தே அவன் மன உணர்வுகளை அறிந்துக்கொண்டு அவன் பதில் சொல்ல,
"எந்தக் கருமமும் எனக்குப் புரியவேண்டிய அவசியம் எனக்கில்லை.!" எனச் சொல்லிவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு அவள் முன்னால் நடக்க, ராகவ் மட்டும் எந்தப் பக்கம் போவதெனத் தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றான்.
"அட வாங்க ராகவ்! ஆராவின் நண்பன், எனக்கும் நண்பன் தான்.!" எனச் சொன்னபடியே ராகவ் தோள் மீது கைபோட்டு அழைத்துப் போன இமயனின் பார்வை முழுதும் ஆருத்ராவில் மட்டும் நிலைத்திருந்தது.
ஒயின் நிறத்தில் மஞ்சள் நிற பூக்கள் விரவியிருந்த மேக்ஸி அணிந்திருந்தாள். அவளின் கோதுமை நிறத்திற்கு ஒயின் நிறம் அழகாகப் பொருந்தியிருந்தது. குளித்துவிட்டு விரித்துவிட்டிருந்த கூந்தல், நுனியில் மட்டும் சுருள் சுருளாய்ச் சுருண்டிருக்க, துளியும் ஒப்பனையில்லாத முகத்துடன் இருந்தவளை இன்னும் கொஞ்சம் அதிகமாய்ப் பிடித்திருந்தது அவனுக்கு.
ஏனோ இவளைப் பார்க்கும் தருணங்களில் அவன் அறியாமலே, அவன் உதடுகளில் புன்னகை விரிகிறது. இவள் என்ன மாயம் செய்தாள் என அவனுக்குப் புரியவில்லை. கண்கள் அவளைத் தவிர வேறெதையும் பார்க்க மறுக்கிறது. முப்பத்தைந்து வயது ஆண்மகன் ஏனோ விடலைப் பையனைப் போல் உணர்ந்தான்.
இவன் பார்ப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, முதுகைத் துளைக்கும் பார்வையில் பின்னால் திரும்பிப் பார்த்தாள் ஆருத்ரா. அவன் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்து, அவனை முறைக்க முயன்று தோற்றுப்போனாள் அவள். அவள் முறைப்பதை அவன் ஒரு பொருட்டாக மதிக்காத போது, அவள் தான் பார்வையைத் திருப்பிக்கொண்டு, முன்னால் நடக்க வேண்டியதாயிற்று.
"இவன் பார்க்கிறதைப் பார்த்தாலே எரிச்சலா வருது!" எனப் புலம்பியவள், திடீரென ஏதோ யோசித்தவளாக,
"உன் ஃபர்ஸ்ட் வொய்ஃப் எப்படி இருக்காங்க இமயன்!" எனக் கேட்க, அவன் பர்வை சட்டெனக் கடினமாகி, முகம் இறுகுவதைக் கண்கூடாகக் கண்டாள் பெண். அவன் முகம் இறுகுவதைக் கண்டதும் உற்சாகமாய் இருந்தது அவளுக்கு.
"அவங்களை நீ வேணாம்ன்னு சொன்னியா? இல்லை அவங்க உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டாங்களா? ஒருவேளை சில விஷயங்களுக்கு நீ சரிப்பட்டு வரலையோ என்னவோ?" நக்கலாய் அவள் வேண்டுமென்றே சொல்ல, அவன் முகம் முற்றிலும் உணர்ச்சி துடைத்து இறுகியது.
"அது கடந்த காலம்.. அது முடிஞ்சு போச்சு! நீ இதைப் பற்றி இனிமேல் பேசாமலிருப்பது நல்லது.!" இறுகிய முகத்துடன் கடினமான குரலில் சொன்னான் அவன்.
"அது எப்படிப் பேசாமலிருக்க முடியும்? உன்னைப் பற்றி எனக்கு எல்லாமே தெரியணும் தானே? இத்தனை வயசிலேயும், உன்னை விடப் பத்து வயசு கம்மியான பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கும் போது, அதுவும், ஃப்ரெஷ்ஷான பொண்ணா, கல்யாணம் ஆகாத பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணணும்ன்னு நினைக்கும் போது, நான் உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கக் கூடாதா?!" என அவள் கேட்க, ராகவை தன் கைவளைவிலிருந்து விடுவித்துவிட்டு முன்னோக்கி நடந்தான் இமயவரம்பன்.
"இப்படிப் பதில் சொல்லாமல் போனால், என்ன அர்த்தம்? எனக்குப் பதில் தெரிஞ்சாகணும்! நில்லு இமயன்.. பதில் சொல்லிட்டு போ! நீ ஏதோ தப்புப் பண்ணியிருக்க, அதனால் தான் பயந்து ஓடுற! தைரியமான ஆளாய் இருந்தால், பதில் சொல்லிட்டு போ!" என அவள் சொல்ல, அவளைத் தாண்டி நடந்து கொண்டிருந்தவன், சட்டென நடையை நிறுத்தித் திரும்பி நின்றான்.
"என்னடி! என்ன? உனக்கு இப்போ என்ன தெரியணும் ஹான்? எனக்கும் அவளுக்கும் விவாகரத்து ஆகிடுச்சு. இதைத் தவிரத் தெரிஞ்சுக்கப் பெருசா என் வாழ்க்கையில் எதுவும் இல்லை!"
என அவன் சொன்னாலும் கூட, அவள் அவன் சொன்ன விஷயங்களில் சமாதானமாகவில்லை. திருமணத்தை நிறுத்த வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, எதேச்சையாய் அவன் மனைவியைப் பற்றிப் பேசப் போய், அதுவே அவனை வெறுப்பேற்ற துருப்புச் சீட்டாய் மாறிப் போக, எளிதில் விட்டுவிடுவாளா என்ன?
"நீ சொல்றதையெல்லாம் நம்பறதுக்கு நான் தயாராய் இல்லை! எனக்கு உன் வொய்ஃப் கிட்டே பேசணும். எதுவுமே தெரியாமல், கண்ணை மூடிட்டுக் கடலில் குதிக்க நான் தயாராய் இல்லை.!" என அவள் தீர்க்கமான குரலில் சொல்ல, இந்தமுறை அதிர்ந்து நின்றதென்னவோ இமயவரம்பன் தான்.
"வாங்க தம்பி! என்ன இங்கனையே நின்னுட்டீக? உள்ளார வாங்க!" என ராஜன் அழைக்க, அதிர்ந்து நின்ற நிலையிலிருந்து, தன்னிலை மீண்டான் அவன்.
"உள்ளாரதேன் வந்தேன் மாமா! ஆராவைப் பார்க்கவும் அப்படியே பேசிக்கிட்டே நின்னுட்டேன்.!" எனச் சமாளிப்பாய் சொல்லி வைத்தவன்,
"வெரசா கிளம்பச் சொல்லுங்க! நேரம் ஆகிடுச்சே..!" எனச் சொன்னான். அதே நேரம், ராஜனின் பார்வை எதேச்சையாய் ராகவ் மீது விழ,
"என் நண்பன் தான் மாமா.. சென்னையிலிருந்து கல்யாணத்திற்காக வந்திருக்கான். இப்போ தான் வந்தான்.. அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். பையன் அப்படியே பல்லு கில்லு விளக்காமல் வந்துட்டான். கொஞ்சம், ஏதாவது ரூம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா குளிச்சுட்டு வந்துருவான்.!" என ராகவை உள்ளே அனுப்பிவிட்டு ராஜனுடன் உள்ளே சென்றான் இமயவரம்பன்.
******
சில பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, தரை தளத்தில், நகைக்கடை, முதல் தளத்தில், பிரத்யோகப் பட்டுப் பிரிவு, இரண்டாம் தளத்தில், இதர மற்றும் குழந்தைகள் ஆடைப்பிரிவு என அமைக்கப்பட்டிருந்த அந்தக் கடைக்கு, ஆருத்ராவையும் அவள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தான் இமயவரம்பன்.
"மீனாட்சி சில்க்ஸ்!" எனக் கருப்பு நிறப் பின்னணியில் எழுதியிருந்த தங்கநிற எழுத்துக்கள் பளபளத்தது.
"தம்பி! வாங்க! வாங்க!" என வரவேற்ற கடையின் உரிமையாளர்,
"சொல்லி அனுப்பியிருந்தால், அம்புட்டு சேலையையும் வீட்டுக்கு அனுப்பியிருப்பேனே? நீங்க இம்புட்டுத் தூரம் அலையணும்ன்னு என்ன அவசியம் தம்பி?!" என மிகவும் பணிவாகப் பேசினார் மீனாட்சி சில்க்ஸின் உரிமையாளர்.
"கல்யாணப் பட்டு எடுக்க வந்திருக்கோம்! நேரில் வந்து பார்த்தால் கூட நாலு புடவை சேர்த்து பார்க்கலாமில்லையா.? அதோட கல்யாணப் பொண்ணுக்கு பிடிக்கணுமே..?" பேச்சுக் கடை உரிமையாளரிடம் இருந்தாலும், பார்வை ஆருத்ராவிடம் இருந்தது. ஆனால் ஆருத்ராவோ யாருக்கு வந்த விதியோ? என அமைதியாய் நின்றிருந்தாள்.
"எப்படியும் சிவப்பு கலர் சேலைதேன் எடுப்பாய்ங்க! அதுக்கு இம்புட்டு பில்ட்-அப் வேற..!" என முணுமுணுத்தபடி நின்றிருக்க,
"சார் உள்ளே போங்க! லேட்டஸ்ட் டிஸைன் எல்லாமே நானே வந்து காட்டுறேன்.!" என அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார் கடை உரிமையாளர்.
"சார்! நீங்க சொன்னபடியே உள்ளே உட்கார வச்சுட்டேன்.!"
"எத்தனை பேரு வந்திருக்காங்க?"
"சார்! அந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணு ஃபேமிலி வந்திருக்காங்க! அதுவும், பழநிவேலும், வள்ளியம்மையும் வரலை சார்!"
"அவிங்க துணியெடுத்துட்டு கிளம்பினதும் எனக்குச் சொல்லு! நம்ம பசங்க வந்துருவாய்ங்க! பிறகு எல்லாம் அவிங்க பார்த்துப்பானுங்க!" எனக் கேட்க குரல், சாட்சாத் மயில்ராவணணுடையது.
"ஓகே சார்! நீங்க சொன்னபடியே செய்றேன். என் பேரும், கடை பேரும் வராமல் பார்த்துக்கோங்க சார்!" என அவர் சொல்ல,
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ய்யா! நீ நான் சொன்னதை மட்டும் செய்!' எனச் சொல்லிவிட்டு, அலைபேசியை அணைத்திருந்தார் மயில்ராவணன்.
அவர் சொன்னபடியே, அவர்களை அமர வைத்து, நவீனரகப் பட்டுப் புடவைகளைக் காட்டினார் உரிமையாளர்.
"இது டிஸ்யூ சில்க், இது காஞ்சிபுரம் பட்டு, மைசூர் சில்க், போச்சம்பள்ளி, சுங்கிடி, கூரைப்பட்டு, சாஃப் சில்க் கூட நம்மகிட்ட இருக்கு.. எல்லாச் சேலையும் இருக்கு! என்ன வேணுமோ, சொல்லுங்க எடுத்துட்டு வந்துடலாம்!" என அவர் சொல்ல,
"நீங்க இன்னும் நல்லதா எடுத்துட்டு வாங்க! நாங்க பார்த்துட்டு இருக்கோம்!" எனச் சொல்லி உரிமையாளரை அனுப்பியவன்,
"ஆரா..! உனக்குப் பிடிச்சதை எடு! செலவைப் பற்றியெல்லாம் கவலைப் படாதே! நான் பார்த்துக்கிறேன்.!" என ஆருத்ராவைப் பார்த்துப் பேசினான்.
"ஆமா! இந்தக் கல்யாணம் மட்டும் எனக்குப் பிடிச்சா நடக்குது.? உனக்கு என்ன பிடிக்குதோ, அதையே எடு!" என அவனிடம் சொல்லிவிட்டு அமைதியாய் அமர்ந்துக் கொண்டாள்.
"ஆரு.. உனக்கு என்ன பிடிச்சுருக்குன்னு பாருடா தங்கம்!" என அபிராமி சொல்ல,
"உங்க மாப்பிள்ளைக்குப் பிடிச்சதே எடுங்க! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.!" எனச் சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு, அமைதியாய் அமர்ந்துக்கொண்டாள்.
அவளுக்கு என்னவோ, இதிலெல்லாம் விருப்பமே செல்லவில்லை. திருமணமே வேண்டாம் என நினைக்கையில், சேலை ஒன்று தான் குறைச்சல்?!" எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
"அவதேன் ஆசைப்படுறாளே.. நீங்களே தேர்ந்தெடுங்க மாப்பிள்ளை!" எனப் பரமசிவம் சொல்ல, ராஜனும் அதையே ஆமோதித்தார். வேறு வழியில்லாம, இமயனே புடவையைத் தேர்ந்தெடுக்க, வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.
கிட்டதட்ட, ஒருமணி நேரத்திற்குப் பின், அழகான அடர் அரக்கு நிறத்தில், பச்சை நிறக் கரை வைத்த வெள்ளி இழைகளால் நெய்யப்பட்டிருந்தது. புடவை முழுதும், தாமரைப் பூக்களும், கொடிகளும் நெய்யப்பட்டிருக்க, புடவையின் கரையில், அழகாகக் கிளிகள் வரிசையாக அமர்ந்திருப்பது போல் நெய்யப்பட்டிருந்தது.
"அத்தை! இந்தப் புடவையைப் பாருங்க!" எனப் பொன்னியிடம் கொடுதான் அவன். பொன்னியும் புடவையை ஆருத்ராவின் தோளில் வழிய விட, அவளின் நிறத்திற்கு ஏற்றாற் போல் அழகாக இருந்தது அந்தப் புடவை. ஆருத்ராவிற்கும், புடவை பிடித்திருந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவளின் கண்களை வைத்தே புரிந்துக்கொண்டவன், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு உடை எடுத்துவிட்டு, பின் தாலி செய்வதற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, உடன் வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவன் கடையிலிருந்து வெளியே வந்த நொடி, கடையைச் சுற்றிலும், விவகாரமான முகங்கள் அவன் பார்வைக்குத் தென்பட்டன. ஏதோ பொறி தட்டுவதைப் போல் உணர்ந்தான் இமயவரம்பன்.
அவர்களைத் தாண்டிச் சென்று தான் வாகனத்தைக் கிளப்ப வேண்டும். ஆனால் பக்கத்தில் சென்றால், வம்புக்கு வருவார்கள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
சில விநாடிகள் மட்டும் யோசித்தவன், தன் உடன் வந்தவர்கள் அனைவரையும், ராகவின் பாதுகாப்பில் அனுப்பிவிட்டுவிட்டு, ஆராவுடன் அவன் மட்டும் பின் தங்கினான். கடையிலிருந்து சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருக்கும், இன்னொரு மகிழுந்தை நோக்கி, ஆருத்ராவுடன் நடந்தான் அவன்.
"அவங்களை மட்டும் ஏன் முன்னால் அனுப்பின?!"
"நானும் அவங்களோடவே போயிருப்பேன். எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்லை இமயன்.!"
"எதாவது பேசித் தொலையேன்! நான் மட்டுமே பேசிட்டு வரணுமா?!"
"உங்க அம்மா அப்பாவெல்லாம் ஏன் வரலை? உன் வொய்ஃப்க்கு இந்தக் கலர் புடவை தான் எடுத்துக் கொடுத்தியா?!" என வாய் ஓயாமல் அவள் பேசிக்கொண்டே வர, அவளின் கடைசிக் கேள்வியில், பதிலேதும் பேசாமல் அவளை முறைத்தவன், அவளுக்குப் பின்னாலிருந்து தாக்க வந்தவனை அடித்துக் கீழே தள்ளிவிட்டு, ஆருத்ராவை தன் கை வளைவில் அவன் கொண்டு வந்த அதே நேரம், அவர்கள் இருவரையும், கையில் கத்தியுடன் இன்னும் நான்குபேர் சுற்றி வளைத்திருக்க, தன் பின்னால் எவனோ தாக்க வந்ததிலேயே பயந்திருந்தவள், இன்னும் நால்வர் அவர்களைச் சுற்றி நிற்கவும் நிரம்பவும் பயந்து போனாள்.
கரத்தினில் கத்தியுடன், தன் எதிரில் நிற்பவர்களைப் பார்க்க பயமாக இருக்க, தன்னை அறியாமலே, அவன் கரத்தினை இறுகப் பற்றியிருந்தாள் அவள்.
"ஆரா.. ஒண்ணும் இல்லை! நான் இருக்கேன் பயப்படாதே! உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.!" என அவன் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, சுற்றி நின்றவர்களில் ஒருவன் அவன் தோள்பட்டையில் கத்தியால் கீற, சத்தமாய் அலறியிருந்தாள் ஆருத்ரா.
"ஆரா.. ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல்ல?" என அவளைத் தன் கை வளைவில் தாங்கியபடியே.. தன் மீது கீறல் போட்டவனை ஓங்கி மிதித்தான் இமயன். ஒற்றைத் தாக்குதலில் அவன் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்க,
"இந்தாருங்கடா! ஒழுங்கு மரியாதையாய் ஓடிருங்க! உங்களை எவன் அனுப்பினான்னு எனக்குத் தெரியும். என் மேலே கை வச்சீங்கன்னா என்ன நடக்கும்ன்னு உங்களை அனுப்பினவன் பார்க்க வேணாம்?!" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காவல்துறை வாகனம் அந்த இடத்தில் வந்து நின்றது.
இவன் காவல்துறைக்கு அழைத்துவிட்டுத்தான் இத்தனை நிதானமாய் இருந்திருக்கிறான். என்பதை அவர்களால் உணர முடிந்தது.
வாரமொருமுறை சந்தைக் கூடும் இடமாதலால்,ஆளரவமில்லாது வெறிச்சோடிக் கிடந்தது. எனவே அவர்களுக்கு அது இமயனை அவர்கள் மடக்குவதற்கு வசதியாய்ப் போய்விட்டது. ஆனாலும், இமயன் அவர்ளை தாக்காமல், பொறுமை காத்ததற்கு, கண்காணிப்பு கேமிரா, பொது இடம் என்பதோடு மட்டுமில்லாமல், இன்னொரு காரணமும் இருக்கத்தான் செய்தது. காவல்துறை வாகனம் அந்த மூவரையும் கைது செய்துவிட்டுப் போகும் வரை அவன் கரத்தை அவள் விடவே இல்லை.
அடுத்த அரைமணி நேரத்தில், ஒரு கையில் காயத்தோடும், மறு கையில் ஆருத்ராவோடும் நின்றிருந்த இமயவரம்பன், தலைப்புச் செய்தியாகத் தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தான்.
"மாண்புமிகு முதல்வர். மயில்ராவணனின் முன்னாள் மருமகனும், ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகருமான இமயவரம்பன் மீது தாக்குதல்.. பொது இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்திய நால்வர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.. இது எதிர்க்கட்சியின் சதியா? காவல் துறையினர் விசாரணை..!" என்ற தலைப்புச் செய்தியைப் பார்த்துவிட்டுக் கொதித்துப் போய் அமர்ந்திருந்தார் மயில்ராவணன்.
அன்பாகும்..?