வரம் 1
"முடியாது.., முடியவே முடியாது....., என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா எல்லாரும். அவதான் புரிஞ்சுக்காம உளறிட்டு இருக்கானா அவளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல் எல்லாரும் என்ன கன்வின்ஸ் பண்ண நினைக்கிறீங்க" என்று ஆத்திரமாய் தன் குடும்பத்தினரிடம் கத்திக்கொண்டு இருந்தான் ராணா பிரதாப்.
மதுரையில் ஜமீன் வம்சாவழியில் பிறந்தவர் ராஜேந்திர பிரதாப். அதிகாரம் பணபலம் என அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று சுத்துப்பட்டு அனைத்து கிராமத்தையும் தங்கள் அதிகாரத்தால் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.
ராஜேந்திர பிரதாப் அந்தக் காலத்து பழக்கவழக்கத்தில் இருந்து சற்றும் தன்னை மாற்றிக் கொள்ளாத பழமைவாதி, வெளியிடங்களில் இவர் வைத்ததுதான் சட்டம் என்றாலும் வீட்டில் இவரது தாய் ராணியம்மா வைத்ததுதான் சட்டம், ஆனால் இதில் சிலபல சலுகைகள் பெற்றவர் ராணி அம்மாளின் ஒரே மகள் பவானி.
புகுந்த வீட்டில் பாசத்தை காட்டாது அதிகாரத்தை மட்டும் காட்டியதால் அவர் கணவர் இறந்தவுடன் அவர்களின் பங்கை பிரித்துக்கொண்டு, தன் ஒரே மகள் நந்தினியுடன் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இந்திரா செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் ராணி அம்மாள், ராஜேந்திரபிரதாப் பேச்சிற்கு இன்றுவரை மறுபேச்சு பேசியிராத அக்மார்க் மருமகள்.
ராஜேந்திர பிரதாப் இந்திரா தம்பதியினருக்கு இரு மகன்கள். மூத்தவன் ராணா பிரதாப் இளையவன் விமல் பிரதாப் கல்லூரியில் கடைசி வருடத்தில் இருப்பவன், பண செருக்கில் குறும்பும் அடாவடியும் செய்து கொண்டிருப்பவன்.
ராணா பிரதாப் பெயருக்கு ஏற்றவாறு கம்பீரமும், ஆண்களே அண்ணாந்து பேசும் உயரம், அதற்குத் தகுந்தாற்போல் சிக்ஸ்பேக் உடற்கட்டும் தீட்சன்மையானை பார்வை, கோபத்தில் விடைக்கும் கூர் நாசி அளவுக்கு அதிகமாக ஓர் வார்த்தையும் உதிர்க்க மாட்டேன் என்று அழுந்த மூடியிருக்கும் அதரங்கள் என்று அனைவரையும் வசீகரிக்கும் தோற்றம் உடையவன்.
சிறுவயதிலிருந்தே தான் நினைத்ததை செய்தே தீரும் வல்லமையுடன், அதன் பொருட்டே சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் முடித்த MBA பட்டதாரி .
படித்த வந்த கையுடன் தன் தந்தையின் தொழிலில் இறங்கினாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவன் .
கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் பிசினஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் என்று நிறுவி அதில் வெற்றிக் கொண்டு வளர்ந்து வந்த நேரத்தில் தன் தந்தையின் வற்புறுத்தலால் 27ஆவது வயதில் அத்தை மகள் நந்தினியை மணமுடித்து நிறைவான வாழ்க்கையில் பிள்ளை செல்வம் மட்டும் கிட்டவில்லை.
தன் மனைவியிடம் தான் குறை என்று தெரிந்த பிறகும் அதை ஒரு குறையாக கருதாமல் தன் மனைவியின் மேல் கொண்ட பாசம் குறையாமல் நிறைவாய் வாழ்பவன் .
நந்தினி ராணாவை விட நான்கு வயது இளையவள்,சிறுவயதிலிருந்து ராணாவின் மேல் காதல் கொண்டு கரம் பிடித்தவள், அவளுக்கு ஒன்று நடக்க வேண்டும் என்றால் அதற்காக எப்பேர்பட்டதையும் செய்யத் துணிபவல். பேச்சில் நிதானம் அவளைக் கடந்து செல்பவர்கள் ஒருமுறையேனும் திரும்பி பார்க்க வைக்கும் அழகுடையவள்.
நந்தினி தன் கணவன் ராணாவை போலல்லாது தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கவலையில் இருந்தவளுக்கு குறை தன்னிடம் தான் என்று தெரிந்ததில் இருந்து கணவனை மறுமணம் செய்ய சொல்லி வற்புறுத்திக்கொண்டு தன் கணவன் கூறும் எதையும் காதுகொடுத்துக் கேளாமல் அவனை மறுமணம் செய்ய சம்மதிக்க வைத்தே தீருவேன் என்று அவனை மறுமணத்திற்கு சம்மதிக்க வற்புறுத்தி கொண்டிருந்தவள், என்றும் போல் அன்றும் காலையில் அவசரமாக கிளம்பி கொண்டிருந்தவனிடம் அதே புராணத்தை பாடிய மனைவியை கடுப்புடன் பார்த்தவன்
"இங்க பாரு நந்தினி உனக்கு நான் அன்னைக்கே சொல்லிட்டேன் ,நீ சொல்றதை நான் என்னிக்கும் செய்யமாட்டேன். இருக்கிறது ரெண்டே வழி தான் அதை நீ தான் தேர்ந்தேடுக்கணும்" என்று பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அலைபேசியில் அழைப்பு வரவும் "இதுக்கு மேல நீ தான் யோசிக்கணும்" என்று கூறிவிட்டு அலைபேசியை ஆன் செய்து பேசிக்கொண்டே சென்று விட்டான்.
நந்தினிக்கு எப்போதும் போல் அவன் திருமணத்திற்கு சம்மதிக்காமல் சென்றதை நினைத்து ஒரு பக்கம் ஆனந்தமாகவே இருந்தாலும் இன்று திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தே தீருவேன் என்று தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்த சென்றாள்.
அப்போதுதான் அலுவலகத்தினுள் நுழைந்தவன் , அவனின் தந்தையிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்றவனுக்கு அதில் அவர் கூறிய செய்தியைக்கேட்டு, அடித்துப் பிடித்து வீட்டிற்கு வந்தவன் அவள் செய்த காரியத்தின் வீரியம் தாங்காமல் தன் தலையை இரு கைகளாலும் தாங்கி அமர்ந்திருந்தவனிடம், மற்றவர்களும் நந்தினியின் முடிவுக்கு ஆதரவாக பேச அவர்களை ஆத்திரத்துடன் ஏறிட்டவன் "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்..., கல்யாணம் என்பது உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சா ,சரி எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுட்டு அவளை என்ன பண்ணலாம்னு இருக்கீங்க" என்று ஆத்திரத்துடன் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தவன்
பவானி இடம் சென்று "என்ன அத்த அவ உங்க பொண்ணு தானே, அவ வாழ்க்கை நாசமா போகணும்னு நீங்களும் நினைக்கிறீங்களா..., இவங்க எல்லாம் சுயநலமா யோசிக்கலாம், ஆனால் நீங்க எப்படி இப்படி யோசிக்கிறீங்க. நாளைக்கு நந்தினியுடைய நிலைமை என்ன ஆகும்? கொஞ்சமாவது யோசித்து தான் பேசுறீங்களா, அவ எனக்கு பொண்டாட்டி அதற்கு முன்னாடி இந்த வீட்டு பொண்ணு என்று கூடவா உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சு.., உங்ககிட்ட சத்தியமா இதை எதிர்பார்க்கல" என்று வருத்தப்பட்டவனிடம்
ராஜேந்திர பிரதாப் "வேற என்னப்பா செய்ய சொல்ற? அவ பிடிவாதம் தான் நம்ம எல்லாருக்கும் தெரியுமே , எடுத்துச் சொல்லி புரிய வைத்துவிடலாம்னு இருக்கும்போது இப்படி ஒரு முடிவு எடுத்துட்டா..., எங்களுக்கும் வேற வழி இல்லபா
மேல பெட்ரோல ஊத்திக்கிட்டு அவருக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா? இல்லனா கொளுத்திக்கவானு கேட்கிறபோது எங்களை வேற என்ன பண்ண சொல்ற....? அதனாலதான் மனசு கல்லாக்கிட்டு எல்லாரும் ஒத்துக் கொண்டோம். இந்த வீட்டு மகாலட்சுமியை நாங்க எப்படிப்பா விட்டுக் கொடுப்போம்னு நினைச்ச" என்று வேதனைப்பட்டு பேசிக்கொண்டிருந்தவரிடம்
"அண்ணா வேதனைப்படாதீங்க.., ராணா என்ன பண்ணுவான் தம்பி நிலைமையை நினைச்சுப் பாருங்க" என்று கூறியவர் ராணாவிடம் "காலைல நீ போனதுக்கப்புறம் அவ பின்னாடி போறத பார்த்து, அவகிட்ட பேசி புரிய வைப்பதற்காக நானும் அண்ணாவும் போனோம். அங்க அவ பண்ண காரியத்தை பார்த்து எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்தது, கரெக்டா அந்த நேரம் நானும் அண்ணாவும் போகலைன்னா இந்நேரம் அவ இருந்திருக்கமாட்டா.
அவளை விவாகரத்து பண்ணிட்டா அவ வாழ்க்கை என்னாகும் என்று பயந்தோம், ஆனா இப்போ அவ பண்ணத பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு என் பொண்ணு உயிரோட இருந்தா போதும் என்ற முடிவுக்கு வந்துட்டேன். இந்த முடிவை எடுக்கும் போது உன் மனசு எப்படி கஷ்டப்படுதோ அதேமாதிரிதான் எங்க மனசும் வேதனையா இருக்கு.., ஆனா அவ தான் நமக்கு வேற வழியே கொடுக்கலையே " என்று அழுதவரை அனைவரும் கண்ணில் நீர் வழிய பார்த்து இருந்தனர்.
தன் அத்தையின் கண்ணீரை பொறுக்காதவன் "மன்னிச்சிடுங்க அத்தை அவ பண்றது தப்புன்னு தெரிஞ்சும் எல்லாரும் அதற்கு ஆதரவா பேசுறீங்களே என்று கோபப்பட்டுட்டேன் " என்று வேதனையுடன் கூறியவனிடம்
ஆறுதலாக அணைத்த பவானி "ராணா நான் பேசுவது உன் மனசுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், ஆனா எனக்கு வேற வழி தெரியல தயவு செஞ்சு நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோ, என் பொண்ணு உயிரை காப்பாற்றி கொடுத்திடு..., எனக்கு அவள விட்டா இந்த உலகத்துல வேற யாரும் இல்ல " என்று கைகூப்பி அழுதவரை
"அய்யோ அத்தை என்ன காரியம் செய்றீங்க அவளை விவாகரத்து பண்ணிட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு எப்படி அத்தை என்னால நிம்மதியா வாழ முடியும்" என்று புலம்பிவன், தலையை அழுந்த கோதி தன்னை சமன்படுத்தி கொண்டு நிமிர்ந்து
கடைசியில் தன் மனைவியிடமே பேசுவது என்ற முடிவுடன் அவர்களின் அறைக்கு சென்றான் ராணா.
தங்களின் அறைக்குள் நுழைந்த ராணாவிற்கு தூசி படிந்த ஓவியமாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து மனதிற்கு முதலில் வலித்தாலும் இறுதியில் கோபமே வந்தது. எவ்வளவு எடுத்துக்கூறியும் ஏற்க மறுக்கும் நந்தினியின் முட்டாள் தனத்தால் இருவரின் வாழ்க்கையும் அல்லவா பாழ் ஆகப்போகிறது என்று கோபம் கொண்டாலும், இது பொறுமையாக கையாளும் சமயமென்று அவளின் அருகில் அமர்ந்து நந்து என்றழைத்து அவளின் தலைக் கோதிவிட்டவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள்.
அவனின் கண்ணில் தெரிந்த வலியை கண்டு அவனை அணைத்து ஆறுதல்படுத்தியவள் "புரிஞ்சுக்கோங்க, நான் ரொம்ப யோசிச்சி நிதானமா தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன். இதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது" என்று கூறியவளிடமிருந்து வெடுக்கென்று எழுந்தவன்
அவளின் முகம் காணப்பிடிக்காமல் "என்னை விட்டுப் போவதில் அப்படி என்னடி உனக்கு பிடிவாதம்" என்று மன வலியுடன் கேட்டவனை பின்னிருந்து இறுக அணைத்து
"நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணுங்க, அதுவும் உங்க மூலமா தான் இருக்கணும். உங்க குழந்தையை நான் எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கேன்..., அது ஒரு குழந்தையை தத்தெடுத்து என்னால ஒத்துக்க முடியாதுங்க. அதுபோல யார் யாருக்கோ இதுக்கு முன்னாடி காசுக்காக குழந்தை பெத்து குடுக்கரவங்ககிட்ட எல்லாம் நம்ம வாரிசு வரக்கூடாது" என்றவளை என்ன சொல்லி புரியவைப்பது என்பதுபோல் பார்த்திருந்தவன்
தன் முதுகின் பின்புறம் கட்டி அணைத்து இருந்தவளை முன்புறமாக இழுத்து அவளின் முகத்தில் தன் இரு கைகளாலும் தாங்கி "என்னை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்க உன்னால முடியுமா? நீ சொன்ன மாதிரி நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அந்த குழந்தை உன் குழந்தையா இருக்காது வேறு ஒருத்தி குழந்தையாய் தான் இருக்கும். உன்னால சொந்தம் கொண்டாட முடியாது அந்த குழந்தையை, கொஞ்ச முடியாது இது எல்லாத்துக்கும் மேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது பரவாயில்லையா" என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டவனுக்கு சற்றும் யோசிக்காமல்.
"எனக்கு சம்மதம்ங்க. எப்போ உங்க வாழ்க்கையில இன்னொரு பொண்ண கூட்டிட்டு வரணும் நினைச்சேனோ, அப்பவே இதபத்தி எல்லாம் நான் தெளிவா யோசிச்சிட்டேன், இனிமே யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல. நீங்க தான் உங்க முடிவு சொல்லணும், இந்த வாழ்க்கையிலிருந்து நான் நிரந்தரமாக பிரிஞ்சிடறேன்" என்று கூறியவளை அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை அறைந்து இருந்தான் ராணா பிரதாப்.
"சே இது என்ன மாதிரிப் பிடிவாதம் டி. கடைசியில நீ பண்ணது தப்புன்னு புரியும்போது உன் வாழ்க்கை உன் கையில் இருக்காது. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, எப்ப நீ குழந்தை தான் முக்கியம் நான் வேணான்னு சொன்னியோ அப்பவே மனசு வெறுத்துப் போச்சு, ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கோ சொல்ற ரைட்ஸ் உனக்கு கிடையாது" என்று ஆக்ரோஷமாக கத்திய ராணாவை பார்த்த நந்தினி
" நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலனா கண்டிப்பா நான் உயிரோட இருக்க மாட்டேன், இது உங்க மேல சத்தியம்" என்று கூறிய அவளை கொலைவெறியுடன் பார்த்த ராணா
"அப்போ முதல்ல உனக்கும் எனக்கும் விவாகரத்து ஆகணும், விவாகரத்துக்கு ரெடியா" என்று கேட்டவனை அதிர்ந்து நோக்கினாள் நந்தினி.
அவளின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்டு கொண்டாலும் சற்று இலக்கம் காட்டினாலும் இவளிடம் வேலைக்காகாது என்று
"இங்க பாரு நந்தினி, நான் சொல்றத குறுக்கிடாமல் கேட்டுட்டு அப்புறம் உன் முடிவ சொல்லு சரியா" என்று கேள்வியாக பார்த்தவனை
சம்மதம் என்றதற்கு அறிகுறியாய் தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டியவலை அழைத்து சென்று கட்டிலில் அமரவைத்து அவனும் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.
"நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட நிலைமை என்னவா இருக்கும்னு புரியுதா" என்று நிறுத்தி அவளை பார்க்க
“என் நிலைமைக்கு என்ன நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் இருந்துட்டு போறேன்" என்று பேசியவளை
பார்த்து வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
"நீ இருக்கும்போது ரெண்டாம் தாரமா வருவதற்கு வேற ஒருத்தி கல்யாணத்துக்கு ஒத்துபாளா? இல்ல உன்னை ஒரு மூலையில் துரத்திட்டு வந்தவ கூட நான் உன் முன்னாடி சந்தோசமா இருப்பேன்னு நீ நினைக்கிறியா" என்று கேட்டவனிடம்
சற்றும் தாமதிக்காமல் "நான் உங்களை விட்டு அம்மா கூட போய் தோப்பு வீட்டில் இருக்கிறேன்.அப்போ பிரச்சனை வராது இல்ல" என்று தன் பிடியிலே நின்றவளை வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்தவன்இதற்கு மேல் வலிக்காமல் வைத்தியம் பார்க்க முடியாது என்று ஒரு பெருமூச்சு எடுத்து விட்டவன்
நிதானமாக அவளை நெருங்கி "உன் முடிவை சொல்லிட்ட இப்போ என் முடிவை கேட்டுக்கோ " என்றவனின் பார்வையில் இருந்த கூர்மையில் நந்தினிக்கு மனதில் பயத்தால் சில்லிடாலும் அவன் என்ன கூறினாலும் மாறக்கூடாது என்று பிடிவாதத்துடன் பார்த்து இந்தவளிடம்
"ஒன்று நான் சொன்னமாதிரி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல தாய் தந்தையா இருப்போம்"
சில வினாடி மௌனமாக இருந்துவிட்டு "இல்லை என்றால் நமக்குள் விவாகரத்து ஆவது உறுதி" என்று கூறி நிறுத்தியவன் "நீ பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு " என்று எழுந்து வெளியே செல்ல போனவனிடம்
" எனக்கு விவாகரத்தில் சம்மதம்" என்று கூறியிருந்தால் நந்தினி.
தொடரும்...........