All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் ANAN ரீரன் - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆதி – 19


மித்துவை தூக்கி வைத்தபடி ஆடிக் கொண்டிருந்த மதுவின் கன்னத்தைப் பற்றித் தன்னை நோக்கி திருப்பியவன் “ம்மா...” என என்னைக் கவனி என்பது போல உரிமையாக அழைக்கவும், அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு வகையில் ஸ்தம்பித்து இருந்தனர்.


லலிதா அம்மா தன் மனதில் என்ன எண்ணி கொண்டு மதுவை பார்த்துக் கொண்டிருந்தாரோ அதையே தன் பேரனும் தன் வாய் வார்த்தைகளில் உடனே கூறியதை எண்ணியவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனே வாக்களித்தது போல நினைத்து சந்தோஷத்தில் ஸ்தம்பித்து இருந்தார்.


மற்ற வேலையாட்களும் கூட அப்படித்தான் மது மித்துவை கவனித்துக் கொள்வதிலும் அவனோடு பழகும் பாங்கிலும் இதுவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ள வந்தவர்களிடம் இருந்து இவள் எவ்வகையில் வேறுபட்டு இருக்கிறாள் என்பதைக் கண்ணார கண்டு கொண்டிருந்ததால் ‘இப்படியும் நடந்தால் நன்றாக இருக்குமே..!!!’ என்று அந்த நிமிடம் தோன்ற ஒரு எதிர்பார்ப்போடு பார்த்திருந்தனர்.


ஆனால் அறைக்குள் இருந்தபடி இங்கு நடந்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒருவிதமான அதிர்வில் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தான்.


தன் மனதில் என்ன எண்ணம் தோன்றி வாட்டி வதைக்கிறதோ, எதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைத் தேடி தேடிக் களைத்து இருக்கிறானோ, அப்படி இருக்கையில் மித்துவின் இத்தகு வார்த்தைகளைக் கேட்டவனுக்கு இன்பம் துன்பம் இரண்டும் சேர்ந்த ஒரு கலவையான மனநிலையே இருந்தது.


மித்துவின் வார்த்தைகளைத் தேவ்வின் மனம் ஒரு பக்கம் விரும்பி ரசித்தது என்றால் அதற்கு ஒரு சதவிகிதம் கூடக் குறையாமல் தேவ்வின் மூளை அதை மறுப்பதும் என இப்படியான ஒரு கலவையான மனநிலையில் ஸ்தம்பித்து நின்று இருந்தவனுக்கு மதுவின் வார்த்தைகள் கவனத்தைக் கலைக்க அங்குப் பார்வையைச் செலுத்தினான்.


தன்னை அம்மா என்று அழைத்தவனைக் கொஞ்சி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் “செல்ல குட்டி... என் பட்டு குட்டி...” என்று கூறியவாறே “அம்மா இல்லடா கண்ணா... அக்கா... அக்கா சொல்லு...” எனச் சொல்ல, அந்தக் குட்டி கண்ணனோ, முடியாது என்பது போல அவசரமாகத் தலையை அசைத்து “ம்மா...” என்றான் மீண்டும் அழுத்தம் திருத்தமாக.


“அக்கா சொல்லு...” என மீண்டும் சொல்லிக் கொடுக்க முயல, அவன் நீ சொல்வதை நான் கேட்கவே மாட்டேன் என்பது போலத் தலையை மிக வேகமாக ஆட்டியபடி அவளின் கன்னத்தில் தன் நெற்றியை கொண்டு ஒரு இடி இடித்து விட்டு “ம்மா...” என மீண்டும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தான்.


அவனின் செய்கையில் பொங்கிய சிரிப்போடு மதுவும் “சரி உனக்கு அப்படிச் சொல்ல தான் பிடிச்சிருக்குனா அப்படியே கூப்பிடு...” என்று கூறினாள். மது மறுப்புக் கூற தொடங்கியதுமே சற்று முகம் சுருங்க அமர்ந்திருந்த லலிதா அம்மாவிற்கு, அதைத் தன் பேரன் மறுத்து மீண்டும் மீண்டும் அம்மா என்று அழைத்தது ரொம்பவே பிடித்து இருந்தது.


மதுவும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டது அவர் முகத்தில் சந்தோஷத்தை மீண்டு வர செய்திருந்தது. ஆனால் உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மது மறுத்ததையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவள் ஏதோ தன்னையே வேண்டாம் என்று மறுப்பது போலத் தோன்றியது.


அந்த வார்த்தைக்கான அர்த்தம் அது தானே என்று எண்ணியதோடு மதுவை வெறித்துக் கொண்டு இருக்க, மீண்டும் மீண்டும் மது மறுக்க மறுக்கத் தேவ்வின் கோபத்தின் அளவு கூடிக் கொண்டே சென்றது.


அந்த நிமிடம் அவன் ஒன்றை எளிதாக மறந்து போனான் சற்று முன் மதுவின் வார்த்தைகளைக் கேட்ட போது தன் மூளையே ‘அது வேண்டாம் இது சரி வராது...’ என மறுத்தததை.


மித்துவிடம் தன்னை அம்மா என்று அழைக்கும்படி கூறியவள் அவனை இறுகப் பற்றித் தட்டாமாலை சுற்றுவது போல இரண்டு சுற்று சுற்றவும், கலகலத்து சிரித்தவனின் உற்சாகத்தைக் கண்டு மீண்டும் அதே போலச் சுற்றிக் கொண்டே தேவ் இருந்த அறை வாயிலில் வந்த போதே உள்ளே கண்கள் சிவக்க தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்து போய் அப்படியே நின்று இருந்தாள்.


மது அதிர்ந்து நிற்க இரண்டு காரணங்கள் இருந்தது, ஒன்று எப்போது வீட்டிற்கு தேவ் வந்தான் என்று தெரியாமல் இவ்வளவு நேரம் இயல்பான கொண்டாட்டத்தோடு இருந்ததை எண்ணி ஒரு பயம் மனதை கவ்விய அதே நேரம் தன்னை மித்து அம்மா என்று அழைத்தது அவருக்குப் பிடிக்கவில்லை எனக் கண்கள் சிவக்க நின்றிருந்தவனைக் கண்டு எண்ணி கொண்டவள், அதனாலேயே தேவ் தன்னைக் கோபமாகப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டாள்.


ஆனால் அந்த நிமிடம் தன் மனதில் இருக்கும் எதையும் வெளிக்காட்டாமல் தேவ் சென்றுவிட்டாலும் அதன் பிறகும் மதுவிடம் அளவுக்கதிகமாகவே கடுமையையும், கோபத்தையும், சிடுசிடுப்பையும் காண்பிக்கத் தொடங்கினான். காட்டாற்று வெள்ளம் போல எப்போதும் பொங்கிப் பெருகும் தேவ்வின் கோபம் மதுவின் மீது வேறு வகையில் பாய்ந்து கொண்டு இருந்தது.


அதைத் தாங்க முடியாமல் புயலில் சிக்கிய சிறு செடியை போல ஆனாள் மது.


தேவ்வை பொருத்தவரை மது மித்துவிடம் உதிர்த்த வார்த்தைகளைத் தன்னையும் தன்னுடன் ஆனா உறவையும் வேண்டாமென்று மறுத்ததாக எண்ணிக் கொண்டு செயல்பட...


மித்துத் தன்னை அம்மா என்று அழைப்பது கொஞ்சமும் பிடிக்காமல் தான் இத்தனை கடுமையைக் காண்பிப்பதாக எண்ணிக் கொண்டு அதை மாற்ற எவ்வளவோ முயற்சிகள் எடுத்து பார்த்தும், அத்தனை முயற்சிகளையும் தோல்வி அடைய செய்து கொண்டிருந்தான் அந்த வீட்டின் செல்ல பிள்ளை.


இப்படியே நாட்கள் செல்ல... இதற்கிடையில் கதிர் மதுவுக்கு இடையே அழகான ஒரு சகோதர உறவு மென்மையான இளங்காலை காற்றைப் போல ரசிக்கக் கூடியதாக வேருன்றி வளர்ந்துக் கொண்டு இருந்தது.


நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆஸ்ரமத்தில் வளர்ந்து தன் முயற்சியில் படித்து ஒரு வேலையில் அமர்ந்திருந்தவனுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாமல் இருந்த நிலையை மாற்றி எப்போதும் சிரித்த முகத்தோடு தன்னை வரவேற்று அண்ணா என்று அழைக்கும் மதுவை உடன்பிறந்த தங்கையாகவே எண்ணி பாசம் காட்ட தொடங்கியிருந்தான் கதிர்.


மது தேவ்வின் வீட்டிற்குள் இருப்பதால் இருவரும் அடிக்கடி பார்த்து பேசிக் கொள்ளவெல்லாம் முடிந்ததில்லை, எப்போதாவது ஒரு முறை வரும் போது ஒரு சிறிய பாச பார்வை பரிமாற்றமும் சில வார்த்தைகளும் மட்டுமே இருக்கும் இருவருக்கும்.


ஆனால் மதுவின் மீது அளவுக்கு அதிகமாகவே அக்கறையும், அன்பும் கதிருக்கு வரத் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் தான் மது தேவ்வின் வீட்டில் இருப்பதை எண்ணி கதிருக்கு மனம் முழுவதும் கவலை மேகம் சூழ தொடங்கியது.


அவளோடு பேச கிடைத்த சந்தர்ப்பங்களில் எந்த அளவிற்கு உலகம் அறியாத அப்பாவித்தனமும் அன்பும் கலந்து சிறு பெண் அவள் என்பது புரிந்த போது தான் தேவ் பெண்களுடன் பழகும் விதத்தைப் பல வருடங்களாக அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் மதுவின் வாழ்க்கையை எண்ணி கவலைப்படத் தொடங்கியிருந்தான்.


நிச்சயம் விருப்பமில்லாத பெண்ணைத் தொட மாட்டான் தேவ் என்பது தெரிந்திருந்தாலும் ஏனோ இதுவரை தோன்றாத ஒரு உணர்வு தன் தங்கை என்ற இடத்தில் மதுவை வைத்துப் பார்க்கும் போது அவளின் வாழ்க்கையை எண்ணி தோன்றத்தான் செய்தது.


ஆனால் எப்போதாவது மதுவை சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளின் நலனை கேட்டு அறிவதோடு நிறுத்திக் கொள்பவனுக்கு இதைப்பற்றி அவளிடம் பேசி புரிய வைக்க நான் எழவில்லை.


அதற்குக் காரணம் அவனின் எஜமான விசுவாசம் தான். தேவ்விடம் வேலைக்குச் சேர்ந்த நாள் முதலாக அவனின் ஆளுமையும் திறமையையும் எதிரிகளை அவர்களுக்கே தெரியாமல் அடித்து வீழ்த்தும் பாங்கையும் கண்டு மலைத்து நின்று இருப்பவனுக்கு ஒரே குறையாக இருந்தது தேவ்வின் இத்தகைய நடவடிக்கைகள் தான்.


ஆனால் அதைப் பற்றிப் பேசவோ எடுத்துக் கூறி தடுக்கவோ தைரியம் இல்லை. அதே போலத்தான் இப்போதும் என்னத்தான் மதுவை உடன்பிறந்தவளாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் தன் முதலாளியை பற்றி அவளிடம் குறை கூற மனம் வராமல் தவித்துத் தடுமாறிக் கொண்டிருந்தான்.


இதே நினைவுகள் அவனைத் தினம் தினம் பாடாய்படுத்தவும் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற எண்ணத்தோடு தேவ்வின் முன்சென்று நின்றிருந்தான்.


தன் வேலைகளில் மூழ்கி இருந்தவன் தன் முன் வந்து நிற்கும் கதிரை என்ன என்பது போல மடி கணினியில் இருந்து கண்களை மற்றும் உயர்த்திக் பார்க்க...


“கொஞ்சம் பேசணும் சார்...” என ஒரு தடுமாற்றத்தோடு கதிர் பதிலளித்தான். தன் எதிரில் இருந்த இருக்கையைச் சைகையில் காட்டி அமருமாறு சொன்னவன் தான் செய்துக் கொண்டிருந்த வேலையைத் தள்ளி வைத்துவிட்டு தன் இருக்கையில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டு இரு கைகளையும் கோர்த்தபடி கதிரின் முகத்தைப் பார்க்கவும்...


‘நீ சொல்ல வந்ததைச் சொல்...’ என்று சொல்லாமல் தேவ் சொல்வது புரிய, எச்சிலை கூட்டி விழுங்கியவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவனைச் சில நொடிகள் கூர்ந்துக் கொண்டிருந்தவன் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருக்க, இரண்டு முறை பேசத் துவங்கியவன் தடுமாற்றத்துடன் நிறுத்தவும்,


இதுவரை கதிரை தன் மேலுள்ள மரியாதையோடும் பயத்தோடும் தொழில் பக்தியோடும் ஈடுபாட்டோடும் வேலைகளைச் செய்யக் கூடியவனாகவும் பார்த்தவனுக்கு இந்தத் தவிப்பும் தடுமாற்றமும் சற்று வித்தியாசமாகத் தோன்ற ‘அப்படி என்ன பேசப் போகிறான்’ என்று மனதிற்குள் எண்ணியபடியே, தன் முன் இருந்த தண்ணீர் கிளாஸ் சற்று நகர்த்தி அவன் முன் வைத்தான்.


இந்தச் சைகை கதிரை மேலும் உள்ளுக்குள் நடுங்க வைத்தது. தேவ்வின் அந்த அதீத அமைதியே அவனுக்கு நடுக்கத்தை அதிகரிக்கப் போதுமானதாக இருக்க... இருந்தாலும் இன்று இதைப் பேசிய ஆக வேண்டும் என்று இருந்த உத்வேகத்தோடு தண்ணீரை எடுத்து மடமடவெனக் குடித்தவன் குரலை செருமிக் கொண்டு,


“மது... மது...” என அடுத்து என்ன கூறுவது என ஒரு தயக்கத்தோடு தேவ்வின் முகம் பார்க்க... கதிர் உதிர்த்த மது என்ற பெயரில் புருவங்களைச் சுருக்கியவன் மதுவிற்கு என்ன என்பது போலக் கதிரை பார்க்கவும்,


“மது உலகம் அறியா அப்பாவியா இருக்கா..” எனவும் எந்த ஒரு பதிலும் தடையும் இல்லாமல் நீ சொல்ல வந்ததைச் சொல் என்பது போல அமர்ந்திருந்தான் தேவ்.


மீண்டும் அவன் முகத்தைப் பார்த்தபடியே உள்ளுக்குள் இருக்கும் நடுக்கத்தை முயன்று மறைத்துக் கொண்டு, “நீங்க... நீங்க... உங்க கூட... பழகுற பெண்கள் போல... மதுவை...” என்று தொடர்ச்சியாகப் பேச முடியாமல் தட்டுத் தடுமாறி தான் சொல்ல வந்ததை முடிப்பதற்குள் தான் அமர்ந்திருந்த நாற்காலியை பின்னுக்கு உதைத்து விட்டு எழுந்து நின்றிருந்தான் தேவ்.


அதில் உடலும் மனதும் உதறல் எடுக்க எழுந்து நின்ற கதிரின் நடுக்கம் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு இருந்தது.


“வாட் ஆர் யூ திங்க் அபவுட் மீ...” என்று தொடர்ந்து ஏதோ சொல்ல முயன்றவனைக் கண்களாலேயே எரித்து விட்டு, மேலும் ஏதோ சொல்லத் தொடங்கி விட்டுக் கூறாமல் விறுவிறுவென அறையிலிருந்து வெளியேற முயன்றவன் கதவருகில் சென்று நின்று கதிரை திரும்பிப் பார்க்கவும்,


ஏற்கனவே தான் பேச வந்த விஷயத்திலேயே பயந்து கொண்டிருந்தவன் பின் இந்த ருத்ர தாண்டவத்தைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்க... தேவவின் இந்தப் பார்வை மேலும் அவனை நடுங்கச் செய்தது. அதில் பயத்தோடு தேவ்வை ஏறிட்டுப் பார்க்க...


“தங்கை பாசம் இருக்கலாம்... ஆனா அதற்காக அடுத்தவன் எல்லாரையும் வில்லனா பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லை...” என்று விட்டு சென்று விட,


தொப்பெனத் தன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த கதிருக்கு ‘தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ’ என்றே தோன்றியது. இத்தனை வருடங்களாகத் தனக்குத் தெரிந்திருந்த வரை தேவ்வின் குணாதிசயங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த தான் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று எண்ணுகையிலேயே மதுவின் முகம் மனதில் தோன்றவும்


‘அவ பாவம் யாரும் இல்லாத பொண்ணு... என்னைப் போலவே நான் பேசினது சரிதான்...’ என்று இன்னொரு மனம் எண்ணியது.


தேவ்வின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது ஏற்கனவே தன் மனதோடு போராடி கொண்டிருப்பவன், ஒவ்வொரு முறையும் மித்து மதுவை அம்மா என்று அழைக்கும் போது தன்னுள் இருக்கும் போராட்டம் பலமடங்கு அதிகரிப்பதை கண்டு அவளின் மேலுள்ள தன் விருப்பத்தைத் தானே அறியாமல் எங்கு வெளிகாட்டி விடுவோமோ என்ற பயமும் அவள் அதை மறுத்து கூறிய வார்த்தைகளும் நினைவு வர... கோபம் என்னும் முகமூடியை கொண்டு தன் மனதை அவளிடமிருந்து மறைத்துக் கொண்டு இருப்பவன்,


இப்பொழுது மதுவின் வாழ்க்கையின் மேல் உள்ள அக்கறையில் கதிர் பேசிய வார்த்தைகளும் அதனோடு சேர... தன்னை அனைவரும் ஏதோ வில்லன், ராவணன், ராட்சஸன் எனப் பார்ப்பது போலவே தோன்றியது.


அப்படித் தன்னைப் பார்க்க வேண்டும் என்று ஒரு காலத்தில் முயன்று தன்னை இப்படி மாற்றிக் கொண்டது தான்தான் என வசதியாக மறந்து போனான் தேவ்.


இதன் பிறகு முடிந்தவரை வீட்டில் அதிகம் இருப்பதை மேலும் குறைத்துக் கொண்டான். இந்த நிலையில் தான் வழக்கமாக நள்ளிரவில் வீடு திரும்புபவன், ஒரு நாள் இரவு பிசினஸ் டின்னரை முடித்துக் கொண்டு பத்து மணியளவில் வீடு திரும்பி இருந்தான்.


தன் கையோடு கொண்டு வந்திருந்த சில கோப்புகளை ஸ்டுடி ரூமில் வைத்து விட்டு மேலே செல்ல முயன்றவனுக்கு மது மாடியில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது.


அந்த இரவின் இருளில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே தன்னை யாராவது கவனிக்கிறார்களா...? யாராவது பின் தொடர்கிறார்கள்...? எனப் பார்வையால் அலசிக் கொண்டே சென்று கொண்டிருந்த மதுவை ஸ்டடி ரூம் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.


இந்த இரவு நேரத்தில் தேவ் இங்கு இருக்கக் கூடும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை மது. தன் போக்கில் ஒரு பதட்டத்தோடு யாருமற்ற இருட்டான இடத்தை நோக்கி நடந்தவளை முதலில் சாதாரணமாகப் பார்க்க தொடங்கியவன் பின் அவளின் நடவடிக்கைகளின் காரணமாக நெற்றி சுருங்க பார்த்துக் கொண்டிருந்தான்.


இருளின் தனிமையில் அந்த மரத்துக்குப் பின்னால் சென்று நின்ற மது தன் கையில் இருந்த அலைபேசியில் அவசரமாக ஒரு எண்ணை அழுத்தி அழைப்பு விடுத்துவிட்டு படபடப்போடு காத்திருக்க... அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.


“ஹலோ...” எனும் போதே கண்கள் கலங்க கரகரப்பான குரலில் அதைச் சரி செய்து கொண்டவள் அந்தப் பக்கம் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெல்லிய குரலில் பதில் அளிக்கத் தொடங்கினாள்.


“ம்ம்... நன்னா இருக்கேன்...”


“.......”


“நேக்கு இங்க ஒண்ணும் பிரச்னை இல்லை...”


“.....”


ம்ம்... பாத்துக்கறேன்...”


“.....”


“குழந்தை தூங்கிண்டு இருக்கான்... அதான் உங்களாண்ட பேசிட்டு போய்டலாம்னு வந்தேன்...”


“.......”


“இல்ல... யாருக்கும் என் மேல எந்தச் சந்தேகமும் வரல...”


“........”


“அதெல்லாம் கவனமா தான் இருக்கேன்...’


“........”


“நீங்கோ எனக்கு அழைக்காதீங்கோ... நானே இது போலச் சந்தர்ப்பம் பார்த்து கூப்பிடறேன்...”


“........”


“நீங்கோ கவனமா இருங்கோ....” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதுவின் கைகளிலிருந்த அலைபேசி பறிக்கப்படவும் திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கு ஆத்திரத்தோடு நின்றிருந்த தேவ்வை கண்டாள்.


தேவ் இந்த நேரத்தில் வீட்டில் இருப்பதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத மது அவன் இல்லை என்ற தைரியத்தோடே தனிமையில் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள இங்கு வந்தாள். இங்கு எதிர்பாராமல் அவனைக் கண்டதும் பயத்தில் கை கால்கள் வெடவெடவென நடுங்க அரண்டு போய் நின்றிருந்தாள்.


மதுவை முறைத்தபடியே அலைபேசியைக் காதிற்குத் தேவ் கொடுக்க... அந்தப் பக்கம் இருந்து “ஹலோ... ஹலோ...” எனப் பதட்டத்தோடும் படபடப்போடும் அழைக்கும் ஒரு ஆண் குரல் கேட்டது.


அந்தக் குரல் காதில் விழவும் குத்தீட்டியாகத் துளைக்கும் பார்வையோடு மதுவை பார்க்க... அந்தப் பார்வை மதுவின் கண்கள் வழியே சென்று இதயத்தையும் குத்திக் கிழித்தது.


இந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் வராமல் போக... மீண்டும் மீண்டும் அந்தப் பக்கமிருந்து “ஹலோ... ஹலோ...” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்க...


“ஹலோ...” என்ற தன் கம்பீரக் குரலில் பதிலளித்தான் தேவ். அதில் சில நொடிகள் அந்தப்பக்கம் அமைதி நிலவ... “யார்... யார் பேசறது...?” எனச் சிறு அதட்டலோடு அந்தப் பக்கம் இருந்து கேட்கப்படவும்,


“ம்ம்... உனக்கு வில்லன்...” என்றபடி போனை அணைத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இரு கரங்களையும் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தபடி கால்களை அகற்றி நின்று மதுவை ஒரு அளவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.

இங்கே நிறைய பேருக்கு நான் எப்போ எபி போடறேன்னு தெரியலைன்னு சொல்லி இருக்கீங்க.. அதே போல நான் லீவ் சொல்றதும் அடுத்த கதை எப்போன்னு அறிவிக்கறதும் தெரிய வரலைன்னு சொல்லி இருக்கீங்க..


கீழே என் வாட்ஸ்அப் சேனல் லிங்க் கொடுக்கறேன்.. அதில் ஜாயின் செஞ்சுக்கோங்க.. நான் அங்கே மெசேஜ் போட்டதும் உங்களுக்கு நோடிபிகேஷன் வரும்.. எந்த இடையூறும் இல்லாம என் கதைகளை தொடரலாம்..


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 19


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 20

தன் கைகளில் இருந்து அலைபேசி பறிக்கப்பட்ட நிலையில் அதிர்ந்து திரும்பி மது, அங்குத் தேவ்வை எதிர்பாராமல் கண்டதில் சப்தநாடியும் அடங்க மிரட்சியோடு நின்றுக் கொண்டிருந்தாள்.


அதன்பிறகு தேவ் அலைபேசியைக் காதுக்குக் கொடுப்பதை மனம் உதறலெடுக்கப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அந்தப் பக்கம் இருந்து என்ன பேசினார்கள் எனத் தெரியவில்லை என்றாலும் தேவ் கூறிய “உனக்கு வில்லன்” என்ற வார்த்தைகள் அவளை நடுங்கச் செய்தது .


எப்போதுமே தேவ்வை கண்டு பயம், இதுவே அவளைத் தினம் தேவ்விடம் இருந்து தூர நிறுத்தவும், ஓடி ஒளியவும் செய்து கொண்டிருக்க,


இப்படிக் கொஞ்சமும் எதிர்பாராமல் அவனிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதில் கைகால்கள் வெளிப்படையாக உதற தொடங்கவும், மூச்சு விடக் கூட மறந்த நிலையில் உறைந்து போய் நின்றிருந்தாள்.


அந்தப் பக்கம் தன்னைக் கேள்வி கேட்டவனுக்குப் பதிலளித்தவன் அடுத்து அவன் பேசிய வார்த்தைகளைக் கூடக் கேட்காமல் கனல் கக்கும் விழிகளோடு மதுவை வெறித்தபடி அலைபேசியை அணைத்து அவளின் கைகளைப் பிடித்துத் தரதரவென இழுத்துக் கொண்டு சென்று தன் அறைக்குள் தள்ளி கதவை அடைத்தான்.


தேவ் உதறித் தள்ளியதில் நிலை தடுமாறி விழ இருந்தவள் அருகிலிருந்த மேஜையைப் பற்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் ஒரே எட்டில் மதுவை நெருங்கிய தேவ்


“யார் நீ...?” எனக் கர்ஜிக்கவும், அவனின் அருகாமையிலும் குரலிலும் பயத்தில் தூக்கிவாரிப் போட பின்னாலிருந்த சுவரோடு ஒட்டிக் கொண்ட மது, தேவ்வை மிரண்டு போய்ப் பார்க்க...


அந்தப் பார்வைக்கெல்லாம் கொஞ்சமும் இளகாதவன் “உன்னை யார் அனுப்பியது...?” என மீண்டும் கேட்டபடி அவளை நெருங்கவும், ‘இதற்கு மேல் ஒட்டிக் கொள்ளவும் பின்னால் செல்லவும் முடியாது’ என மூளைக்குத் தெரிந்தாலும், ஆனாலும் மனதில் இருந்த பயம் அவளை மேலும் அதற்கு முயற்சி செய்யத் தூண்டியது.


மேலும் மேலும் சுவரோடு புதைந்து போவது போல நகர முயற்சித்து அதற்கு மேல் முடியாமல் உதடு நடுங்க கண்களில் இருந்து கண்ணீர் வழிய தேவ்வை பார்த்துக் கொண்டிருந்தவளை கழுத்தில் கை வைத்து சுவரோடு சேர்த்து அழுத்தியவன்,


“இப்போ சொல்ல போறியா? இல்லையா...?” எனக் கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை உதிர்த்தபடி அழுத்தத்தைக் கூட்ட... கழுத்து எலும்புகள் நொறுங்கி விழும் அளவிற்குத் தேவ் கொடுத்த அழுத்தத்தில் உயிர் போகும் வேதனையோடு கூடிய வலியை அனுபவித்தபடி மூச்சு விட முடியாமல் திணறிய மது மறந்தும் வாய் திறக்கவில்லை.


அது இன்னும் தேவ்வின் கொந்தளித்துக் கொண்டிருந்த மனதில் நெருப்பைக் கொழுந்துவிட்டு எரிய செய்தது. மதுவிற்கும் தனக்கும் இடையில் நூல் அளவு கூட இடைவெளி இல்லாமல் அவளை நெருங்கி நின்றவன் தன் கைகளில் மேலும் அழுத்தத்தைக் கூட்டி “சொல்லுடி யார் நீ? எதுக்காக இங்கே வந்து இருக்கே...? உன்னை அனுப்பினது யாரு...? என்ன உன்னுடைய திட்டம்...?” என மேலும் மேலும் இடைவிடாது கேள்விகளைத் தொடுக்கவும்,


மதுவின் இந்த அமைதி மதுவை பற்றி அறிந்து கொண்டதில் இருந்து வேதனையில் துடித்துக் கொண்டிருந்த தேவ்வின் மனதை மேலும் கொந்தளிக்கச் செய்து கொண்டிருக்க,


“அப்போ எல்லாமே நடிப்பு தான் இல்லை...?” என்று கனல் விழிகளோடு அவளை எரித்தபடியே கேட்டவன், “குழந்தைகிட்ட கூட நடித்து இருக்கே, பாசமா இருக்கிறது போல... அவன் என்னடி செஞ்சான் உன்னை...?” என்று ஆக்ரோஷத்தோடு தொடங்கியவன் மித்துவை பற்றிப் பேசும் போது குரல் தழைய ‘அவனையும் ஏமாற்றி இருக்கிறாளே’ என்ற வேதனையில் கடைசி வார்த்தையை உச்சரிக்கும் போது அவனையும் அறியாமல் தேவ்விற்கு வார்த்தைகள் தடுமாறியது.


‘தன்னாலேயே இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையே? இத்தனை பெரிய ஏமாற்றத்தை குழந்தை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறான்...?’ இவள் மேல் எத்தனை பாசமாக இருக்கிறான், எவ்வளவு அன்பிருந்தால் அவளை அம்மா என்று அழைத்து இருப்பான்...’ என்பன போன்ற பல நினைவுகள் அவன் மனதில் முட்டி மோத, அந்த வேதனை தாங்க முடியாது தவித்துக் கொண்டிருந்தான்.


இத்தனை வருடங்களில் வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களைத் துரோகங்களை வலி வேதனைகளைக் கண்டிருந்த போதும் , அது மது என்று வரும் போது அந்த வலி தேவ்வை பெரிதாகத் தாக்கத்தான் செய்தது.


இதே இடத்தில் வேறு எவராவது இருந்திருந்தால்..! அடுத்த நொடி என்ன செய்திருப்பானோ..!! என்னவோ..!!! ஆனால் முதலில் மதுவை கண்ட நொடி முதல் சந்தேக வளையத்தில் நிறத்தி ஆராய்ந்து தெளிவடைவதற்குள், தன் மனதில் அடியெடுத்து வைத்திருந்தவளை அருகில் நெருங்கவிடாமல் தன்னைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் போட்டுக் கொண்டு அதற்குள்ளேயே இருந்து கொண்டிருப்பவன், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வளையத்தியில் இருந்து வெளியேறி மதுவை மனதிற்குள் முழுதாக அனுமதித்துக் கொண்டிருந்த வேளையில் அவளிடம் சொல்லவும் அடுத்த


நிலைக்குச் செல்லவும் முயலாமல் அதற்கு விரும்பாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இப்படி ஒரு விஷயம் தெரிய வந்ததில் முற்றிலுமாக உடைந்து போயிருந்தான்.


‘அவ்வளவு எளிதாக யாரையும் நம்பாதவனை, நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறாளே? எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரி...!?’ என்ற எண்ணம் செல்லும் போதே ‘தன்னாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தையின் நிலை’ என்று எண்ணியவனுக்கு இவள் இங்கிருந்து சென்று விட்டால் மித்து அடையும் வேதனை கண் முன் விரிய, மதுவை கொன்று புதைக்கும் அளவுக்கு வேகமும் வெறியும் எழுந்தது.


அதில் மேலும் வெறி ஏற அவளைக் கழுத்தை நெரித்துக் கொள்ளும் வெறியோடு அவள் முகத்தை நோக்கி திருப்பியவன், அப்போதே அவள் வேக வேகமாகத் தலையை ஆட்டி கொண்டிருப்பதைக் கண்டான். வலியில் துடித்து விழி பிதுங்க கண்களிலிருந்து நீர் வழியும் கோலத்தோடு முகம் சிவக்க நின்றிருந்தவளின் உதடுகள் “மித்து... மித்து...” என ஓசை இல்லாமல் முனகிக் கொண்டிருந்தது.


அவள் ஏதோ சொல்ல முயல்கிறாள் எனப் புரியவும், “என்ன உன் திட்டம் மித்துவை கடத்திட்டுப் போறதா...? அவனைக் கொலை செய்றதா...?” என்று மதுவை கொல்லும் வெறியோடு வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி உச்சரிக்கவும், கண்களில் வலியோடு அவனைப் பார்த்தவள் தன் பலம் முழுவதையும் திரட்டி தேவ்விடம் இருந்து விடுபட்டாள்.


இவ்வளவு நேரம் கழுத்து நெறி பட்டுக் கொண்டிருந்ததால் அந்த வலியோடு பேச முடியாமல் திணறி, “மித்... து... நா... ன்... இல்... ல... நடிக்... க... லை” என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தான் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்ல முடியாமல் அவதிப்பட்டவளின் கண்களில் ‘நான் குழந்தையிடம் உண்மையான அன்பு கொண்டு தான் இருந்தேன்... அவனிடம் நடிக்கவில்லை, புரிந்து கொள்ளேன்...’ என்பது போலத் தேவ்வை ஏறிட்டு பார்க்க...


அவளை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன், ‘இனி உன்னை நம்பச் சொல்கிறாயா...?’ என்பது போல நின்றிருந்தான். அதில் வேதனையோடு கண்களை மூடியவளின் கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.


மீண்டும் பெருமூச்சுகளை எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் போராடியபடியே தேவ்வை ஏறிட்டுப் பார்த்து “நிச்சயம் குழந்தைகிட்ட நடிக்கலை... அவன் எனக்குக் கடவுள் போல...” என ஏதோ சொல்ல முயல...


அதற்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல், “நான் கேட்கிற கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்... அதற்குப் பிறகு நீ எவ்வளவு உண்மையா இருந்த குழந்தைகிட்ட என்பது பற்றி நாம பேசலாம்...” என்று கூறியவன்,


“போன்ல யார்...?” என தேவ் வார்த்தைகளில் அதிக அழுத்தத்தை கூட்டிக் கேட்க, “அம்மா” என்று மது பதில் அளித்த அடுத்த நொடி அவன் அறைந்த அறையில் அந்த அறையின் மூலையில் போய் விழுந்திருந்தாள் மது.


சுருண்டு மூளையிலிருந்தவளுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடச் சில நொடிகள் தெரியவில்லை, அதற்குள் அவளை நெருங்கி இருந்த தேவ் ஒற்றைக் கையில் மதுவை தூக்கி சுவரில் சாய்த்து பிடித்தவாறு “என்னைப் பார்த்தா கேனையன் மாதிரி தெரியுதா...?” என்று கர்ஜிக்கவும், சோர்வுடன் கண்களை நிமிர்த்தி மது பார்த்தாள்.


“இப்போ நீ எல்லா உண்மையும் சொல்லலை, உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...?” என்று மிரட்டியவன் மீண்டும் “போனில் யார்...?” என்று கேட்க, “அம்...” எனத் தொடங்கியவள் ‘மீண்டும் அறைந்து விடுவானோ?’ என்ற பயத்தோடு தேவ்வை பார்த்தபடியே, மெல்லிய குரலில் “அம்மா” என உச்சரித்தாள்.


இந்த முறை தேவ்வால் தன் கோபத்தைக் கொஞ்சமும் கட்டுப்படுத்த முடியாமல் போக, மீண்டும் அறைந்ததில் மதுவின் உதடு கிழிந்து ரத்தம் கசியத் தொடங்கியது.


“நானும் போனா போகுது, பொறுமையா பேசி பார்க்கலாம்ன்னு பார்த்தா...! ஏன்டி இப்படி என்னை ராட்சசனா மாத்திட்டு இருக்கே...? என்னுடைய ராட்சஸ உருவத்தைக் காட்டினேன், உன்னால தாங்க முடியாது சுருண்டு விழுந்து செத்துருவே...” என்று ஆத்திரத்தோடு பேசிக் கொண்டே சென்றான்.


அவன் அறைந்த நொடியிலிருந்து காதில் ஒரு ‘ங்கொய்’ என்ற சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த மதுவிற்கு, தேவ் உதிர்த்த கடைசி வார்த்தைகளான ‘சுருண்டு விழுந்து செத்துடுவே’ என்பது மட்டுமே லேசாகக் கேட்டிருந்தது.


அதே நேரம் மீண்டும் மதுவின் அலைபேசியில் இருந்து அழைப்பு வரவும் தேவ் மதுவை துளைக்கும் பார்வை பார்க்க, முதல் முறை அழைப்பு வந்து நின்று, மீண்டும் அலைபேசி அழைக்கத் தொடங்கி இருந்தது. அதில் பயத்தோடு உடல் நடுங்க தேவ்வை மது ஏறிட்டுப் பார்க்த்தாள்.


முயன்று வர வழைத்த பொறுமையோடு மதுவின் அலைபேசியை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டு அவளருகே நீட்டியபடி ‘பேசு’ என்பது போலக் கண்களால் தேவ் கட்டளையிட, பயத்தில் மிடறு விழுங்கிய படி அவனைப் பார்த்திருந்தவள் தேவ்வின் முறைப்பைக் கண்டு, மெல்ல “ஹலோ” எனக் குரல் கொடுக்க முயல, சற்று நேரத்தில் நடந்து முடிந்திருந்த களேபரத்தில் புயலில் சிக்கி பிடுங்கி எறியப்பட்ட சிறு கொடியைப் போலத் துவண்டு கிடந்தவளின் குரலில் இருந்து வார்த்தைகள் வெளிவராமல் போனது.


அதே நேரம் அந்தப் பக்கம் இருந்து ஒரு பெண் மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. “ஹலோ... ஹலோ... ஹலோ... மது... மது... ஹலோ...” எனத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருக்கவும்,


அந்தப் பக்கம் இருந்து கேட்ட குரலிலேயே கண்கள் பயத்தில் நிலை குத்தி நிற்க, தேவ்வை நிமிர்ந்து மது பார்க்கவும், தேவ் கண்களாலேயே அவளை வெறித்தபடி பேசு என்று சைகை செய்ய, முயன்று தன் பலத்தையெல்லாம் திரட்டி “ஹலோ” எனக் குரல் கொடுத்தாள் மது.


மதுவின் குரல் கேட்ட நொடி அந்தப் பக்கமிருந்து அழுகை குரலில் “மது... நாம மோசம் போயிட்டோம்டி... அம்மா... அம்மா உயிருக்குப் போராடிண்டு இருக்கா...” என ஒரு பெண் குரல் அழுது அரற்றவும்,


“அம்மா” என உயிர் உருக்கும் குரலில் தன்னால் முடிந்தவரை முயன்று கத்தி அழுது அப்படியே மயங்கி சரிந்தாள் மது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் இருந்து தொடர்ந்து அந்தப் பெண் கத்திக் கொண்டே அழும் குரல் கேட்கவும் தொடர்பை துண்டித்தவன்,


இப்போது இந்த எண்ணிற்கு அழைப்பு வந்த வீட்டு தொலைபேசி எண்ணை கதிருக்கு அனுப்பி, அதன் முகவரியை உடனடியாகத் தெரிந்துக் கொண்டு தனக்குத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டு மதுவை தூக்கிக் கொண்டு சென்று காரில் கிடத்தி காரை எடுத்தான்.


சிறிது தூரம் செல்லவும் கதிரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது, தஞ்சாவூரில் உள்ள ஒரு வீட்டின் முகவரியை கதிர் தெரிவிக்கவும், காரை ஓரமாக நிறுத்தி மதுவின் முகத்தில் நீரை தெளித்து அவளை எழுப்பினான்.


கண்விழித்தவளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை, பிறகு அனைத்தும் நினைவுக்கு வரவும் “அம்மா” எனத் தன்னால் முடிந்தவரை வலியையும் பொருட்படுத்தாமல் கதறி அழுதவளை எந்த உணர்வும் இன்றிப் பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டு,


“அம்... மா... அம்... மா... நான்... போ... பஸ்...” எனக் கெஞ்சல் பார்வையோடு ஏதோ கூற முயல, எந்தச் சலனமும் இன்றி அவளைப் பார்த்து கொண்டிருந்தவனைக் கண்டவள் ‘தன் மேல் உள்ள கோபத்திலும் சந்தேகத்திலும் எங்கே தன்னைச் செல்ல அனுமதிக்க மாட்டனோ’ எனத் தோன்றவும்,


“நான் எந்தத் தப்பும் செய்யலை... யாரும் என்னை அனுப்பலை... எனக்கு மித்துவை ரொம்பப் பிடிக்கும்... நான் அவனை ஏமாற்றலை...” என்று கூறியவள், ‘என்னை நம்பேன்’ என்பது போலத் தேவ்வை காணவும், அவளை இப்போதும் எந்தச் சலனமுமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தவன் “உன் பெயர் என்ன...?” என்று கேட்கவும்,


“மது... மது வர்ஷா...” என்று தொடர்ந்து பேச முடியாமல் திணறியபடி பதிலளித்தவளுக்குத் தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டி, குடி என்பது போலக் கண்களால் சொல்லவும், மதுவிற்கும் நடந்து முடிந்த களேபரத்தில் அது ரொம்பவே தேவையாய் இருக்க, ஒரே மடக்கில் மொத்த தண்ணீரையும் குடித்து முடித்தாள்.


தன் ஷாலைக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு நீண்ட மூச்சுகளாக எடுத்துத் தன்னை ஆச்வாசப்படுத்திக் கொண்டவள் ஓரளவு தெளிவான உச்சரிப்பில் “நிஜமா நான் உங்களுக்கு எந்தத் துரோகமும் செய்யலை... நான் என்னைக் காப்பாத்திக்கத் தான் இங்கே வந்தேன்...” எனவும், அதுவரை எந்த உணர்வையும் காட்டாதிருந்த தேவ்வின் கண்கள் லேசாக இடுங்க... ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாக வளைத்தவன், ‘மேலே சொல்லு’ என்பது போலப் பார்க்கவும், மது தன்னைப் பற்றிக் கூற தொடங்கினாள்.


தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் மது. வரதராஜ சாஸ்திரிகள் பத்மாவதி தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்தவள் மதுமிதா, இரண்டாவது மதுவர்ஷா, ப்ரோகிதத்தை நம்பியே அவர்களின் வாழ்க்கையின் ஜீவனம் ஓடிக் கொண்டிருந்தது.


கஷ்ட ஜீவனம் தான் என்றாலும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்லும் அன்பான குடும்பம், இதில் ஒட்டாமல் கண்ணில் விழுந்த பானக துரும்பாக உறுத்திக் கொண்டிருந்தது மதுமிதா மட்டுமே.


அவளுக்கு எப்போதும் வசதியான வாழ்க்கையை எண்ணி ஒரு ஏக்கமும் அது கிடைக்காமல் போகக் காரணமான பெற்றோரின் மீது கோபமும் அலட்சியமும் நிறையவே இருந்தது.


வரதராஜர் கொண்டு வரும் குறைவான வருமானத்திலேயே அக்கம் பக்கம் கடன் என்று எதுவும் வாங்காமல் குடும்பத்தை நடத்தும் கலையைக் கற்றிருந்தார் பத்மாவதி. இந்நிலையில் மதுவர்ஷா எட்டாம் வகுப்பு படிக்கும் போது வரதராஜர் ஒரு வாகன விபத்தில் இறந்துவிட, மேலும் நலிந்து போனது அவர்கள் குடும்பம்.


கணவரின் இழப்பில் துவண்டு இருந்த பத்மாவதி, ஒருகட்டத்தில் தன்னை நம்பி இருக்கும் இரு ஜீவன்களின் பசியை எண்ணி, தன்னைத் தேற்றிக் கொண்டு வீட்டிலேயே சிறிய அளவில் விசேஷங்களுக்குப் பலகாரங்கள் செய்து கொடுக்கும் கடையைத் துவங்கினார்.


ஆரம்பத்தில் பெரிதாக வருமானம் என்று எதுவும் இல்லை என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் குடும்பம் மூன்று வேளை பசியாற போதுமான அளவு வருமானம் வரத் தொடங்கியது.


மதுமிதாவிற்கும் மதுவர்ஷாவிற்கும் இடையில் நான்கு வயது வித்தியாசம், வரதராஜர் இறந்த போது மதுமிதா பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். இருவர் பெயருமே மது என்று வருவதனால் பெரியவளை வீட்டில் மதி என்றும் சிறியவளை மது என்றும் அழைப்பர்.


மதுமிதா கல்லூரி மூன்றாம் வருடம் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு நாள் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நின்றாள். எதிர்பாராமல் மகளின் திருமணக் கோலத்தைக் கண்ட பத்மாவதியும் மதுவும் அதிர்ந்து நிற்க,


அவள் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இப்போது கூடத் தன் திருமணச் செய்தியை தெரிவித்துச் செல்லவே வந்ததாகக் கூறினாள். மதுமிதாவின் கணவன் கேசவ் வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜராக இருக்கிறான்.


கல்லூரி செல்லும் வழியில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் கேசவ்வின் குடும்பம் சற்று வசதியான குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் மதுமிதாவை மணக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறிய கேசவ் மதுமிதாவை வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள ஆசை பட, மதுமிதாவும் தங்கள் வீட்டில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணியவள் அதற்கு ஒத்துக் கொண்டாள்.


தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் திருமணம் செய்துக் கொண்டு வந்து நின்ற மகளை அப்போதும் வெறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டார் பத்மாவதி. மது அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்,


திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது மதுவின் வீட்டிற்கு வந்து செல்ல துவங்கிய கேசவ்வின் கண்களில் மதுவின் அழகு விழ தொடங்கியது. மதுவோடு ஒப்பிடும் போது நிறம், உயரம், எடை என அனைத்திலும் மதி குறைவு தான், ‘அவசரப்பட்டு விட்டோமோ, முதலிலேயே இவளை பார்க்காமல் போனோமே...! பார்த்திருந்தால் ஒரு இரண்டு வருடம் காத்திருந்து இவளை மணந்து கொண்டிருக்கலாமே...!!’ என்று எண்ணத் தொடங்கியவனின் கண்கள் மதுவை துகில் உரிக்கும் பார்வை பார்க்க துவங்கியது.


இருவரின் பெயரிலும் மது என்று வருவதனால் வீட்டில் அனைவரும் மதுமிதாவை, மதி என்று அழைத்தாலும் காதலிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து கேசவ் அழைப்பது என்னவோ மது என்று தான். அதனால் இளையவளை “வர்ஷு” என அழைப்பது அவன் வழக்கம்.


முதலில் இதைக் கேள்வி கேட்ட மதுமிதாவுக்கு “நீயும் அவளும் எனக்கு ஒண்ணா...?! நீ எப்பவும் ஸ்பெஷல்... உன் பெயரை சொல்லி அவளை நான் எப்படிக் கூப்பிட முடியும்...” எனக் கேட்டு ஆப் செய்து விட்டவன் மனதில் ஸ்பெஷலாக எண்ணி அழைத்ததென்னவோ ‘வர்ஷு’ என்பதைத்தான்.


மேலும் ஒரு வருடம் சென்ற நிலையில், வளர வளர மதுவின் அழகு கூடிக் கொண்டே போவதை கண்ட கேசவ்வின் குறுக்கு புத்தி ‘ஏன் தவறவிட்டு விட்டதாக நினைக்க வேண்டும், இன்னும் ஒரு வருடம் கழித்து இவளையும் மணந்து கொண்டால் என்ன...?’ என்று எண்ணத் தொடங்கியது.


அதற்கு மதுவின் பிறந்த வீட்டில் தன்னை எதிர்க்கும் அளவிற்கு யாரும் இல்லை என்ற ஒரு எண்ணமும், மதுவின் அழகும், தன்னை முழுமையாக நம்பும் மதுமிதாவின் அவசர புத்தியையும் எண்ணி தன் திட்டத்தை ஒவ்வொரு படியாகச் செயல்படுத்தத் தொடங்கினான்.


கேசவ் முதல் படியாக மதுமிதாவுக்கு அவளுக்கே தெரியாமல் கர்ப்பத்தடை மாத்திரைகளைத் தைராய்டு மாத்திரைகளோடு சேர்த்து கலந்து சாப்பிட வைத்தான்.


இதன் காரணமாக இரண்டு வருடங்கள் கடந்த பிறகும் குழந்தை பிறக்காமல் போகவே, சரியான நேரம் பார்த்து ஏற்கனவே வசதி இல்லாத வீட்டில் இருந்து வந்த மதுமிதாவை பிடிக்காமல் இருக்கும் தன் தாயிடம் கொளுத்திப் போட...


அவர் குழந்தை பிறக்கவில்லை என்பதைக் காரணமாக வைத்து அவ்வப்போது மதுமிதாவை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கத் தொடங்கினார்.


இதற்குள் பன்னிரண்டாவது வகுப்பு முடித்திருந்த மதுவும் அதற்குப் பிறகு மேலே படிக்க வசதி இல்லாமல் போக, தாய்க்கு உதவியாக இருக்கத் தொடங்கினாள். மதி அழும் போதெல்லாம் ஆறுதலாக இருப்பது போலவும், அவரிடமிருந்து காப்பது போலவும் பேசி அரவணைப்பது போல நடித்தவன் உண்மை சுயரூபம் தெரியாமல் தன் மேல் உயிராக இருக்கும் கணவன் என நம்பி இருந்த மதியும் கேசவ்விடம் உயிராக இருக்கத் தொடங்கினாள்.


பிறப்பில் பிராமணனாக இருந்த போதும் கேசவ் நீந்துவன, பறப்பன, ஊர்வன என எதையும் விட்டு வைக்காமல் கலந்து கட்டி சாப்பிடுவான். அவற்றை அவன் வீட்டில் செய்ய முடியாது அதற்கு அவன் தாய் சம்மதிக்க மாட்டார் என்பதனால் மதுமிதாவின் வீட்டிற்கு வரும் போதெல்லாம் தன் அதிகாரத்தைப் பரப்பித் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வான்.


ஆரம்பத்தில் பத்மாவதி இதற்கு மறுப்பு தெரிவிக்க, மதுமிதா பேயாட்டம் ஆட தொடங்கினாள். “ஒரு பொண்ணா என் கல்யாணத்துக்கு என்ன செஞ்சேள்...? சீர் செனத்தி ஏதாவது செஞ்சேளா...? கல்யாண செலவு ஏதாவது செஞ்சேளா...? என்னைக் கண்ணுக்குள்ள வெச்சு உயிரா பாத்துக்கற ஆம்படையான் கிடைச்சது என் புண்ணியம்... அவருக்குப் பிடிச்சதை ஆக்கி போட்டு கூடக் கவனிச்சுக்க மாட்டேளா...?” எனச் சண்டையிட,


‘ஏதாவது செய்து கொள்’ எனப் பத்மாவதி ஒதுங்கிக் கொள்ள, ‘அச்சச்சோ முதலுக்கே மோசம் வந்தது’ என எண்ணிய மதுமிதா அதையெல்லாம் தொட்டு என்னால் சமைக்க முடியாது... உங்க மாப்பிள்ளைக்கு நீங்கதான் செஞ்சு தரணும்...” என்று வாதிட, “எனக்கு அதெல்லாம் சமைக்கத் தெரியாது...” என அவர் கூறி விட்டார்.


அங்குச் சிக்கினால் மதுவர்ஷா, தன் அப்பாவி தங்கையை வைத்து தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டு, தன் கணவனின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளத் தொடங்கினாள் மதி.


மேலும் இப்படியே ஒரு வருடம் செல்ல, கேசவ்வின் தூண்டுதலின் பேரில் இரண்டாவது மணம் செய்து வைக்க அவரின் தாய் தேடுதல் வேட்டையைத் தொடங்கவும், மதுமிதா அழுது கரைய... அவளை ஆறுதல் படுத்துவது போலப் பேசத் துவங்கிய கேசவ் ஒரு கட்டத்தில்,


“நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அம்மாவை சமாதானம் செய்ய முடியலை, என்னதான் என் அக்காக்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலும் ஆண் வாரிசான என் பிள்ளைகள் தானே இந்தக் குடும்பத்தின் வாரிசுன்னு அம்மா சொல்றா... நிச்சயம் எனக்கு மறுமணம் செய்து பேரப் பிள்ளையைப் பார்க்காமல் ஓய மாட்டா போல... என்ன செய்றதுன்னே தெரியலை கண்ணம்மா...” எனக் குண்டை தூக்கி போட, அரண்டு போனாள் மதுமிதா.


சில நாட்கள் கழித்து அவளிடம் “ரொம்பவே யோசித்து உனக்காக ஒரு தீர்வு கண்டு பிடித்திருக்கேன், எனக்கு நீ தான் முக்கியம்...” எனக் கூறவும், கேசவ்வை முழுமையாக நம்பும் மதுமிதாவும் “நீங்க எது செஞ்சாலும், நிச்சயம் என் நல்லதுக்காத்தான் இருக்கும்ன்னா... என்ன சொல்லுங்கோ...” என்று அழகாக ஏமாற தயாரானாள்.


“வெளியே பார்த்து யாரையும் கல்யாணம் செஞ்சா, அவ வந்து இங்கே உன்னை மதிக்காமல் போகவும், உன்னை இந்த ஆம்மைவிட்டே தொறத்தவும் வாய்ப்பு இருக்கு, அதே போல அவளுக்குக் குழந்தை பிறந்ததுனா இந்த வீட்டில் நீ ஒரு செல்லாக்காசாக மாறிப் போவே... இந்தத் திருமணத்தை என்னால தடுக்க முடியல கண்ணம்மா, அம்மா இதுல ரொம்பத் தீவிரமா இருக்கா... அதனால நான் ரொம்பவே யோசித்ததில் எனக்குக் கிடைத்த ஒரே வழி வெளியே யாரையோ பார்த்துக் கல்யாணம் முடிக்கிறதை விட, ஏன் உன் தங்கையையே கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது... அவ வந்தானா, இப்ப போலவே எப்பவும் உனக்குப் பயந்து அடங்கிக் கட்டுப்பட்டு நடப்பா... உன்னை அனுசரிச்சு இருப்பா... அவ குழந்தையும் உன் குழந்தை போலத்தான், நீ எப்போவும் ராணி மாதிரி இங்கே இருக்கலாம்... இது உனக்காக நான் ரொம்பவே யோசித்து எடுத்த முடிவு, நீ என்ன சொல்றே...” என்று கேட்கவும்,


அவன் விரித்த வலையில் அழகாக விழுந்தாள் மதுமிதா. தன் நலனை மட்டுமே முன்னிறுத்தி யோசிக்கும் கணவன் தனக்காக இந்த அளவு யோசித்துச் செயல்ப்பட்டதை எண்ணி மகிழ்ந்தவள், “நிச்சயமா இது நல்ல யோசனை தான், நான் இதுக்கு ஒத்துக்கிறேன்... நீங்க என் தங்கையையே கல்யாணம் பண்ணிக்கோங்கன்னா...” என்று கூறிவிட,


தன் திட்டம் அழகாகப் பளிப்பதில் பூரித்து இருந்தான் கேசவ். மதுமிதா ஏதோ தான் மட்டும் முடிவு எடுத்துவிட்டால் போதும் என்ற நினைப்போடு திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறிவிட, “உங்க அம்மாகிட்ட சம்மதம் கேட்க வேண்டாமா...” என்று வேண்டுமென்றே மதுமிதாவின் ஈகோவை கேசவ் கிளறிவிட்டான்.


“அவா என்ன சொல்ல போறா... பைசா செலவு இல்லாம ரெண்டாவது பொண்ணுக்குக் கல்யாணம் கூடி வந்தா கசக்குமா என்ன...?” என எதிர் கேள்வி கேட்ட மதுமிதாவை கண்டு, ‘எல்லாரையும் இவளை போலவே நினைச்சிக்கறா...’ என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவன்


“என்ன இருந்தாலும் அவங்க செல்ல பொண்ணை இரண்டாவது தாரமாகக் கொடுப்பாங்களா...?” என்று எடுத்து கொடுக்கவும், “ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்... என்னைத் தங்கமா தாங்கறேள், அதே போல என் தங்கையையும் பாத்துப்பேள்ன்னு நேக்கு தெரியும், இதுலே என் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு... அவங்களுக்கு என்ன வந்தது...” என்று அவன் விரும்பிய பதிலை தந்தவள், நேராகத் தன் தாயிடம் சென்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறவும், மதுவும் பத்மாவதி அதிர்ந்து போனார்கள்.


கண்கள் கலங்க தன் தாயை நிமிர்ந்து மது பார்க்கவும், அவள் கைகளை ஆதரவாக பற்றித் தட்டி கொடுத்தபடியே “இந்த முடிவில் எங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை” என்று பத்மாவதி திட்டவட்டமாகக் கூறினார். ‘தன் வார்த்தைக்கு மறு பேச்சு இருக்காது’ என எண்ணிக் கொண்டிருந்தவள், கேசவ் சரியாக அவள் இங்கு கிளம்பும் போது வேறு அவளின் ஈகோவை தூண்டி விட்டு இருந்ததில், பெரிய ஆர்பாட்டமே செய்துவிட்டாள்.


“தன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் சின்னப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதாகவும், தன் கணவருக்கு என்ன குறை நல்லா வசதியும் சம்பாத்தியமும் ஆளும் பார்க்க நன்னா தானே இருக்கார்... இதுக்கு மேல உன் பொண்ணுக்கு எப்படி ஆம்படையான் வேணுமாம்... இது தான் ரெண்டு பேரு வாழ்க்கைக்கும் சரியான முடிவு... என் ஆத்துக்காரருக்கு இவ இரண்டாவதா வாக்கப்படல, நா தூக்குல தொங்கிடுவேன்...” என்று மிரட்டினாள்.

இதில் மது அழுது கொண்டே சம்மதிக்க முயல, அவளைத் தடுத்த பத்மாவதி “நிச்சயம் தான் இதுக்குச் சம்மதிக்க முடியாது...’ என்று கூறி விட, தூக்கிட்டுக் கொள்வது போல நாடகமாடி இருவரையும் பயம் காட்ட எண்ணிய மதுமிதா அதற்கான முயற்சிகளில் இறங்கினாள்.


அவளைத் தடுத்த கேசவ், “நீ செத்தாலும் உன் அம்மா கவலை படப் போறதில்லைனு தான் அவா இப்போ கொடுத்த பதில்லேயே தெரியுதே... அவா ரெண்டு பேரையும் இந்த வீட்டிலேயே அடைச்சு சிறையில இருக்க போல வை, வெள்ளிக்கிழமை காலையில் கல்யாணத்தை முடிச்சிடலாம்...” எனத் திட்டமிட்டு கூற, இதுவும் நல்ல யோசனை தான் எனத் தோன்ற மதுமிதாவும் அதற்குச் சம்மதித்தாள்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 20


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UET - 19


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

"அனலவனின் குளிர்நிலவு..!!"
கதையை இனி அமேசானில் படிக்கலாம்..

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்போதைக்கு ப்ரீ இல்லை..









இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UET - 20


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UET - 21


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top