All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் ANAN ரீரன் - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 14

லலிதாவிற்கு மதுவை பார்த்த கணத்திலேயே அவ்வளவு பிடித்து இருந்தது. அதை விட அதிகமாகப் பேசும் போது குழந்தையைப் போன்ற குணமும் உலகம் அறியா அப்பாவியாக இருந்தவளை ரொம்பவே பிடித்துப் போனது.


ஆனால் அதற்கு அப்படியே நேர் மாறாக அவரின் சீமந்த புத்திரனுக்கு “தான் இல்லாத நேரத்தில் தன்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் நியமிக்கப்பட்டிருந்த மதுவை லலிதாவின் வாய்மொழியாக அவர் இவளை வானளவு புகழ்வதைக் கேட்டுச் சுத்தமாகப் பிடிக்காமல் போனது.


‘நிச்சயமாக அவள் ஏதோ பெரிய திட்டத்தோடு தான் நான் அங்கு இல்லாத நேரமாகப் பார்த்து உள்ளே நுழைந்து நன்றாக நடித்துத் தன் தாயை ஏமாற்றி இருக்கிறாள் என்றே முழுமையாக நம்பியவன், இன்னும் மூன்று நாட்களில் வந்து உன்னை வீட்டை விட்டு துரத்துவது தான் முதல் வேலை...’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.


முதலில் லலிதாவின் மேல் ‘எத்தனை முறை அனுபவப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தன் இளகிய மனதால் இப்படி ஏமாறுகிறார்களே...’ என்று எழுந்த கோபம் கூட அவர் மதுவைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து, இது நிச்சயம் இவளுடைய ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்... அந்த அளவிற்கு நடித்து அவரை நம்ப வைத்திருக்கிறாள்...’ என்று முழுமையாக நம்பி லலிதாவின் மேல் இருந்த கோபத்தையும் கூடச் சேர்த்து மதுவின் மேல் டன் டன்னாக மூட்டை கட்டி வைத்திருந்தான், அவளைக் கண்ட நொடியில் அவள் மேல் இறக்குவதற்காக...


ஆனால் இதில் தேவ் அறியாதது ஒன்று உண்டு, அது என்னவென்றால் மதுவை தேர்ந்தெடுத்தது லலிதா அம்மா மட்டும் அல்ல இன்னொரு அந்த வீட்டின் பெரிய மனுஷனும் தான். அவன் தான் அந்த நிமிடம் வரை யார் கையிலும் அடங்காதவன் யாரிடமும் உறங்காதவன் பாந்தமாக மதுவின் கைகளில் அடங்கி உறங்கி தன் சம்மதத்தை லலிதா அம்மாவிற்குப் புரியும்படி செய்ததாலேயே அவரும் மதுவை மனதார ஏற்றுக் கொண்டிருந்தார்.


இரவெல்லாம் அழுகையோடு மித்து உறங்காமல் கதறிக் கொண்டு இருந்ததைக் காண சகிக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு மட்டுமே தெரியும் இந்த நிலையில் அவர் மனம்பட்ட அவதியின் அளவு என்னவென்று, அவனைத் தூக்கி ஆறுதல்படுத்த கூடத் தன் உடல்நிலை ஒத்துழைக்காது, தன் வீட்டின் வாரிசு தன் கண்முன்னாலேயே கதறி துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி அவரும் துடித்துக் கொண்டு தான் இருந்தார்.


கடந்த நான்கு மாதங்களாகவே வெளிநாட்டுப் பயணத்தை எல்லாம் ரத்துச் செய்து அவனை நெஞ்சுக்குள் வைத்து பார்த்துக் கொண்டிருந்த தேவ் கிளம்பி சென்ற அன்றிலிருந்தே பிள்ளையின் அழுகை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


எவ்வளவோ இந்தப் பயணத்தைத் தள்ளிப் போடவும் ரத்து செய்யவும் முயன்றும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போனதினாலேயே வேறுவழியின்றிக் கிளம்பி சென்றிருந்தான்.


அன்றிலிருந்து இந்த மூன்று நாட்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்த அழுகையும் அடமும் நேற்று மதியத்தில் தொடங்கி நேரம் செல்லச் செல்ல எல்லை கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.


தாயின் அரவணைப்பும் கிடைக்காமல் இந்த நான்கு மாதங்களாக அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் தேவ்வின் அரவணைப்பு மட்டுமே, பிறந்ததிலிருந்து தேவ்வின் கை சூட்டை உணர்ந்தவனாதலால் அவனுக்குள் இயல்பாகப் பொருந்திப் போக குழந்தையால் முடிந்தது.


அதேபோல இப்போது இருப்பவர்களில் தேவ்வுக்கு அடுத்து அதிகம் உணர்ந்தது லலிதாவின் அரவணைப்பை தான். ஆனால் இந்த நிமிடம் அதை அவனுக்கு வழங்க முடியாத நிலையில் லலிதா இருக்கவே தான் இப்படி எதுவும் செய்ய முடியாத நிலைக்கு அவரைத் தள்ளியது.


மூன்று நாட்களாக இப்படித்தான் இருக்கிறான் என்பதை அவர்கள் தேவ்வுக்குத் தெரியப்படுத்தவில்லை, எந்த மாதிரி சூழ்நிலையில் என்ன மாதிரியான ஒரு மனநிலையில் இங்கிருந்து தேவ் சென்று இருக்கிறான் என்பதை அறிந்து ஒரு தாயாக அவனைப் பற்றியும் யோசித்துப் பணி செய்பவர்களிடம் தெரியப்படுத்தக் கூடாது எனக் கட்டளையிட்டிருந்தார்.


ஏனென்றால் அவருக்கு நிச்சயம் தெரியும் இந்த விஷயம் தெரிய வந்தது என்றால் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு மகனைக் காண ஓடி வந்து விடுவான் என்பது, எனவே லலிதா மகனின் நலனையும் பேரனின் நலனையும் கருத்தில் கொண்டே... அவர் முடிந்தவரை சமாளித்துக் கொள்ளலாம் என நினைக்க...


ஆனால் நேரம் செல்லச் செல்ல மித்து உச்சபட்சமாக வீறிட்டு அலறி அழுது தன்னைத் தூக்குபவர்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கான அரவணைப்பும் பந்தமும் சொந்தமும் தேடித் தேடி கலைத்து தனக்கானவர்கள் இவர்கள் இல்லை என மீண்டும் மீண்டும் தன்னைச் சார்ந்தவர்களைத் தேடி அழுது கரைந்து கொண்டிருந்த வேளையில் தான் மனதார எந்த ஒரு தயக்கமும் மறுப்போ வெறுப்போ யோசனையும் இல்லாமல் அவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் கூட அவனை அன்னையாய் தாங்க வந்தாள் மது.


மித்துவின் அழுகையைக் கண்டு மது பதறிய அந்த உணர்வுகள் மித்துவிற்கும் வாய்மொழி வார்த்தைகளில் இல்லாது மது தூக்கித் தன் மார்போடு சேர்த்து அணைத்த விதத்திலேயே உணர முடிந்தது. என்னவோ தனக்கான சொந்தம் இவள் தான் எனப் புரிய அவளிடம் கொஞ்சமும் யோசிக்காமல் சரணடைந்திருந்தான் அந்த யசோதையின் கண்ணன்.


கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் மித்துவை கைகளில் இருந்து இறக்காமல் தன் மார்போடு அணைத்து பிடித்தபடியே உறங்க வைத்து கொண்டிருந்தவளை வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா.


ஆனால் அதே சமயம் அவள் கண்களில் தெரிந்த சோர்வும் களைப்பும் ஒரு தாயாய் அவருக்குப் புரிய விடியற்காலையிலேயே வந்திருந்தபடியால் நிச்சயம் காலையில் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்பது தெளிவாக இதற்கு முன்பு எப்போது சாப்பிட்டாளோ...?! என்ன சாப்பிட்டாளோ...?! எனத் தோன்றவும்,


பணிப்பெண்ணிடம் சொல்லி முதலில் சூடாகப் பாலைக் கொண்டு வரச் சொன்னவர் மது எவ்வளவோ மறுத்தும் அவளை அருந்த வைத்த பின்பே விட்டார். அதேபோல ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவையும் வரவழைத்து அவளை உண்ணச் சொல்ல... மது அமர்ந்து இருந்த இருக்கையில் ஒரு கையை மித்துவை பிடித்திருந்தவாறே அவளால் உணவை உண்ணுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் போக...


ஆனால் அதையும் சொல்ல விரும்பாமல் மது “இப்போது பசி இல்லை...” எனக் கூறி சமாளிக்க நினைக்கவும், மதுவின் மனதை நொடியில் அறிந்து கொண்ட லலிதா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடியே உண்ணுவதற்கு ஏற்றால் போல் இருக்கும் சைட் ஸ்டாண்ட் லலிதாவின் கண்ணசைவில் கொண்டு வரப்பட்டு அழகாக மதுவிற்கு வலதுபக்கம் நெருக்கமாக வைக்கப்பட...


மது கை கழுவக் கூட எழுந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இட்லி ஸ்பூனோடு பரிமாறப்பட்டு இருந்தாலும் ஃபிங்கர் பவுல் முதற்கொண்டு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.


இப்படி ஒரு கவனிப்பு தன் தகுதிக்கு ரொம்பவே மீறிய செயல் என மதுவிற்கு நன்கு புரிந்தாலும் அதைத் தடுக்கவோ வறுக்கவோ மதுவால் முடியவில்லை. காரணம் இவை அனைத்தும் தனக்காகச் செய்யப்படுவது இல்லை தன் கையில் இருக்கும் அவர்களின் வீட்டு பிள்ளைக்காகச் செய்யப்படுவது என்ற தெளிவு மதுவிற்கு இருந்ததனால்.


குழந்தையின் உறக்கம் கலையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே இப்போது முதல் கடமை என்பது போலப் பெரிதாக மறுத்துப் பேசி நேரத்தை வீணாக்காமல் விரைவாகவே உண்டு முடித்திருந்தாள் மதுவும்.


ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் மது. தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துப் பூஜை செய்த பின்பே அன்றைய நாளை துவங்குவது அவளின் இத்தனை வருட வழக்கம்.


அவ்வளவு ஏன் தேநீர் கூட அதன் பிறகே அருந்துவர் அவள் வீட்டினர், ஆனால் அவற்றை எல்லாம் இங்குப் பார்க்க முடியுமா...? அதற்கும் மேல் தான் வந்திருப்பதன் நோக்கம் என்னவோ அதற்கேற்றார் போல் சடுதியில் தன்னை மாற்றிக் கொண்டு வளைந்து கொடுத்து சென்றாள் மது.


லலிதாவிற்குத் தான் எடுத்த முடிவு எந்த அளவிற்குச் சரி என்பதை அந்த அடுத்து வந்த மூன்று நாட்களில் பலமுறை நிரூபித்துக் காட்டி விட்டாள் மது. மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதற்காகவோ இல்லை அடுத்தவருடைய கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவோ எதையும் பார்த்து பார்த்து அவள் செய்யவில்லை என்றாலும் மித்துவின் விஷயத்தில் மது இயல்பாகச் செய்யும் ஒவ்வொரு செயலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது என்பது தான் உண்மை.


மித்து உறக்கம் கலைந்து எழுந்த பிறகு அவனைக் கொஞ்சி அவனோடு விளையாடியபடியே குளிக்க வைத்து உணவை ஊட்டி முடித்த மது. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்து மித்துவை கவனித்துக் கொள்வதும் அவளின் செல்ல கண்ணனோ கொஞ்சம் கூட முகம் சுணங்காமலும் அழாமலும் அவளோடு ஒட்டிக் கொண்டு இருந்ததும் அவ்வளவு அழகாக இருந்தது.


அதே போல மதிய உணவிற்குச் சத்தான காய்கறிகளை வேக வைத்து குழைத்து சாதத்தோடு கலந்து ஊட்டியவள் செயற்கை உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்பதில் சற்று அதிகக் கறாராகவே இருந்தாள்.


இடையிடையே பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கின்னத்தில் வைத்தபடி ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே மித்துவிற்குத் தெரியாமலேயே அவனை உண்ண வைத்துக் கொண்டிருந்தாள்.


தோட்டத்தில் அப்படிச் செய்தபடியே மது உலவிக் கொண்டிருப்பதைக் கண்கள் கலங்க தன் அறையின் படுக்கையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு ‘மித்துப் பிறந்த போது இந்த வீட்டில் இருந்த சந்தோஷமும் ஆரவாரமும் கொண்டாட்டமும் குதூகலமும் நினைவுக்கு வந்தது..’ இந்தப் பிஞ்சு வயதில் அவனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அவர் வருந்தாத நாளே இல்லை.


தேவ் மகனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே அவருக்கு உண்டு. ஆனால் தாயின் அரவணைப்பு என்று கேள்வி வரும் போது மட்டும் அதற்கு விடை அளிக்கவும் விடை காணவும் முடியாமல் ஒரு வெற்றிடமாக இருந்த விஷயம் இன்று முழுமையாக ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் பூர்த்தியானதோ இல்லையோ...? மது தாய்க்கு நிகராகக் கவனம் எடுத்து பார்த்துக் கொள்வதைக் காணும் போது அவரின் மனதின் தவிப்பு சற்று அடங்கியது போல் உணர்ந்தார்.


இந்த நான்கு மாதங்களில் மட்டும் மித்துவை பார்த்துக் கொள்ள எட்டு பேருக்கும் மேல் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் பத்து நாட்களுக்குள்ளாகவே வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.


முதலில் பெண்களை வேலைக்கு நியமிக்கக் கொஞ்சமும் தேவ் ஒத்துக் கொள்ளாததால் ஆண் கேர் டேக்கர்களையே நியமித்திருந்தான். ஆனால் அவர்கள் குழந்தையைக் கையாளும் விதமும் உணவு கொடுப்பது குளிக்க வைப்பது என ஒரு பொறுமை இன்றிச் செயல்படும் விதமும் எரிச்சலை கொடுக்க, மூன்று பேர்களை மாற்றி மாற்றி நியமித்தும் திருப்தி ஏற்படாமல் இருந்த வேளையில் தான்


“குழந்தைகளைக் கையாள்வது ஒரு கலை அவற்றைப் பெண்கள்தான் சரியாகச் செய்வர்... ஆண்களுக்கு அது அத்தனை சரியாக வராது...” என லலிதா புரிய வைக்க முயன்றார்.


“அப்போ நான் குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையா...?” எனத் தேவ் திரும்பக் கேட்கவும், “அவரவர் பிள்ளைகளை அவங்கவங்க நல்லாதான் பாத்துக்குவாங்க... அடுத்தவர் பிள்ளை என்று வரும் போதுதான் எப்படிப் பார்த்துக்கிறாங்க என்பது கேள்வி...? பெண்களுக்குள் இயல்பாக இருக்கும் ஒரு தாய்மை உணர்வு எல்லாக் குழந்தைகளையுமே தன் குழந்தையாய் தாங்கும்...” என்ற லலிதா “ஒரு பெண்ணே இந்த வேலைக்குச் சரி...” என வாதிட,


அவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தவன் முதலில் நியமித்தது 45 வயதிற்கு மேல் உள்ள ஒருவரையே, இளம் பெண்கள் இந்த வீட்டிற்குள் வருவதைத் தேவ் சுத்தமாக விரும்பவில்லை, அதற்காகவே இந்த ஏற்பாடு.


ஆனால் அவரின் வயதின் காரணமாகவோ என்னவோ இல்லை இருபத்தைந்து வருட உழைப்பினால் வந்த சலிப்போ எப்போதுமே சிடுசிடுவென அவர் மித்துவிடம் நடந்து கொள்வதைக் கண்டவன் ஒரு வாரத்திலேயே அவரையும் வேலையை விட்டு நீக்கி இருந்தான்.


அடுத்தும் அதே போலச் சற்று வயதானவரையே நியமிக்க... அவரோ சிடுசிடுக்கவெல்லாம் இல்லை குழந்தையை நன்றாகவே பார்த்துக் கொண்டார். ஆனாலும் அவர் உடல் உபாதைகளின் காரணமாக இரவில் மாத்திரை உண்டுவிட்டு உறங்குபவர் நடுநிசியில் குழந்தை எழுந்து அழும் போது எழுந்து கவனிக்க முடியாமல் போக...


அவற்றால் மித்து வீறிட்டு அழும் குரல் கேட்டு தன் அறையில் இருந்து எழுந்து வந்து பார்த்தவன் அவரையும் அன்றோடு வேலையிலிருந்து நீக்கி இருந்தான்.


“இதே போல் வயதானவர்களையே நியமித்தால் இப்படித்தான் ஏதாவது ஒரு பிரச்சினை வரும்...” என லலிதா மீண்டும் வாதிட, அவருக்காக இளம் பெண்களை நியமித்திருந்தான்.


முதலில் வந்தவளோ வீட்டின் முதலாளி படுக்கையில் இருப்பதும் தேவ் வேலை வேலை என அலைந்து கொண்டிருப்பதையும் பயன்படுத்தி முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாகத் திருட தொடங்கியிருந்தாள். அந்தப் பெண் வந்த பத்து நாட்களிலேயே அவளின் பழக்கத்தைக் கண்டு கொண்ட லலிதா மித்துவை நன்றாகப் பார்த்துக் கொள்வதால் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட...


இதுதான் இவர்களின் பலஹீனம் எனத் தெரிந்துக் கொண்டவளோ சற்று அதிகமாகவே கை நீட்ட தொடங்கியிருந்தாள். ஆனால் ‘இவை தேவ் காதிற்குச் செல்லும் வரை தான் தனக்கு இந்த வாழ்வு...’ என்பது அவளுக்கு அந்த நிமிடம் புரியாமல் போனது.


தன் அதீத கை வரிசையின் காரணமாகத் தேவ்விடமே கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளை கையோடு காவல்துறையில் பிடித்துக் கொடுத்துவிட்டே அடுத்த வேலை பார்த்தான்.


அடுத்து வந்த இரு பெண்களும் வீட்டின் நிலையையும் குழந்தையின் நிலையையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இந்த வளமான வாழ்க்கையைத் தங்கள் வசப்படுத்த தங்களால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.


ஒருத்தி எப்படியாவது தேவ்வை மயக்கி திருமணம் செய்து கொண்டால் அத்தனை சொத்தும் தனக்குத் தான் என்ற எண்ணத்தில் மித்துவை பகடைக்காயாக வைத்து இதைச் செயல்படுத்த தேவ்விடம் முயற்சி செய்ய...


முதல்முறை அதைக் கண்டுக் கொள்ளாமல் விட்ட தேவ்வை கண்டவள் அதையே தனக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் எண்ணி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவளை தேவ் விட்ட ஒரே அறையில் அந்தப் பெண்ணிற்கு இரண்டு காதுமே கேட்காமல் போனது.


அடுத்து வந்தவளோ இன்னும் ஒருபடி அதிகமாகப் போய் ‘உனக்கு எந்த விதத்தில் வேண்டுமானாலும் வளைந்து கொடுக்க நான் தயார் அதற்கு ஏற்றார் போல என்னை நீ இங்குக் கவனித்துக்கொள்...’ என்பது போலத் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாள்.


இது போலப் பல பேரை பார்த்திருப்பவன் என்பதாலும் அவர்களை எல்லாம் மிக சாதாரணமாகக் கையாள்பவன் என்பதாலும் சற்று விட்டு பிடிக்க... ஆனால் அவளோ இந்த விஷயத்தை வைத்து தேவ்வை வளைப்பது வெகு சுலபம் என முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டு,


எப்போதும் இரவில் தேவ் தன் படுக்கை அறையின் கதவை தாழ் போடுவதில்லை, தன் தாயின் உடல்நிலை மற்றும் குழந்தையின் அவசர உதவிக்குத் தேவைப்படும் என்பதனால், இப்படிச் செய்வதை அறிந்து கொண்டிருந்திருந்தவள்,


ஒரு இரவு வேளையில் அபாயகரமாக உள்ளே இருப்பதை அப்படியே வெளியே வெளிச்சம் போட்டு காட்டும் வகையான சேலையில் அதீத ஒப்பனையோடு சென்று தேவ்வின் படுக்கையில் அமர்ந்தபடி அவனைத் தன்வசப்படுத்த முயன்றவளை எழுந்து சலனம் இல்லாமல் பார்த்தவன்,


“உன் அறையில் போய் இரு வரேன்...” எனச் சொல்ல, அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணி குதித்தபடி அறைக்குச் சென்றாள். அடுத்த அரைமணி நேரத்தில் தன் அலைபேசிக்கு வந்த மெசேஜ்ஜை ஓப்பன் செய்து பார்த்தவள் உட்ச பட்சமாக அதிர்ந்தாள்.


அதில் அவள் தேவ் அறைக்குள் நுழைந்ததில் இருந்து தேவ்வை மயக்க முயன்றது, அவனிடம் பேசியது என அத்தனையும் பதிவாகியிருக்க, கேமரா வைத்திருந்த ஆங்கிளின் மூலம் தேவ்வின் முகம் பதிவாகாமல் ஒருவன் படுக்கையில் படுத்திருப்பது அவன் அருகில் படுக்கையில் அமர்ந்து இவள் பேசிக் கொண்டிருப்பது என அனைத்தும் தெளிவாக வார்த்தை பிசகாமல் பதிவாகியிருந்ததோடு, அவை அந்த நிமிடமே சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டுப் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.


இங்குப் பலர் தவறு செய்வதே தாங்கள் செய்யும் தவறு மற்றவர்களுக்குத் தெரியாது என்ற தைரியத்தினாலேயே, ஆனால் இங்கு அவளின் முயற்சிகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக்க பட்டுவிட, அவமானத்தில் கூனி குறுகி போனவளை இன்னும் குத்திக் கிழிக்கும் வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியவனைக் கண்டு,


“உங்களுக்குப் பிடிக்கலைனா விட்டு விட வேண்டியது தானே... ஏன் இப்படிச் செஞ்சீங்க...” என அழுகையோடு கேட்டவளை கண்டு ஏளனமாக நகைத்தவன் “இதே ஒரு பெண்கிட்ட ஒரு ஆள் வந்து கேட்டு உங்களுக்குப் பிடிக்கலைனா விட்டுட வேண்டியதுதானே அப்படின்னு சொன்னா சும்மா இருப்பீங்களா...? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா...? உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...? செய்யுறது அத்தனையும் **** வேலை ஆனா போடுவது மட்டும் பத்தினி வேஷம்... இனி யாரும் உன்னை நம்பி வீட்டுக்குள்ள சேர்க்கவே கூடாது... எந்த வீட்டுக்குள்ளேயும் நுழையும் தகுதி உனக்கு இல்லை... அதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இப்படிச் செஞ்சேன்...” என நாக்கை வாளாக மாற்றி அவளைக் குத்திக் கிழித்தவன், அந்த நடு இரவு என்றும் பாராமல் அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தினான்.


இதுபோன்ற தொடர் அனுபவங்களிலேயே இனி வீட்டிற்கு மித்துவை பார்த்துக் கொள்ள யாரையும் நியமிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தான். ஆனால் இப்போது மது கொண்டு வந்திருந்தது பத்து நாட்களுக்கு முன்னால் வந்த பழைய செய்தித்தாள், அதிலிருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தான் அவள் வந்திருந்தாள்.


இவை அனைத்துமே பார்க்காமலேயே மதுவின் மேல் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. ‘இந்த முறையும் நிச்சயம் யாரோ ஒரு ஏமாற்றுக்காரி தான் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறாள்... என்ன இவளின் ஏமாற்றுத் தந்திரம் சற்று மாறுபட்டு இருக்கிறது...’ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அவசரமாக இந்தியா வந்து இறங்கினான்.


அதற்காகவே காத்திருந்தது போல் அழைத்த அவனின் அலைபேசியில் ஒளிர்ந்த லலிதாவின் கேர் டேக்கர் ராஜி அழைப்பது தெரியவும் பதட்டத்தோடு எடுத்துக் காத்திற்குக் கொடுத்தவன் ஒரு சில உடல் உபாதைகளின் காரணமாக லலிதா அவதிப்படுவதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சொல்லவும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நேராக மருத்துவமனைக்குச் சென்று லலிதாவின் வருகைக்காகக் காத்திருந்தான்.


தேவ் மருத்துவமனையை அடைந்த ஐந்து நிமிடங்களில் லலிதாவும் வந்து விட, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் “பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை... இது போலச் சில நேரங்களில் ஏற்படுவதுதான்...” எனக் கூறி “ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சொல்ல...” அதன்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அளிக்கப்பட்ட சிகிச்சையாலும் மருந்தின் உதவியாலும் உறங்கிக் கொண்டிருக்கும் லலிதாவின் அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்ட மருத்துவர் “இனி அவர் காலையில் தான் கண் விழிப்பார்… நல்லா நன்றாக உறங்குவதற்கு மருந்து கொடுக்கப்பட்டு இருக்கு... நீங்கள் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை... வீட்டிற்குச் சென்று விட்டுக் காலையில் வாருங்கள்...” எனக் கூறவும் அந்தப் பதினொரு மணி இரவில் வீட்டை வந்தடைந்தான் தேவ்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 14


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 15

இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லும் பயணம் எப்போது எப்போது என நான்கு நாட்களாகக் காத்துக் கொண்டு இருந்து இந்தியா வந்து இறங்கியவனுக்கு, அடுத்தடுத்து அதைப்பற்றி யோசிக்க முடியாத அளவிற்கான நிகழ்வுகள்.


சிறுவயதிலிருந்தே தன் தாய்க்கு தகப்பன் சுவாமியாக மாறி அரணாக நின்று காத்தவன். அவரை இந்த நிலையில் காணமுடியாமல் அவர் படும் வேதனைகளை அவருக்குப் பதில் வாங்கிக் கொள்ள முடிந்தாலும், அதற்குத் தயாராக இருப்பவன்.


மனவேதனைகளுக்குக் கூட ஆறுதல் அளித்து விட முடியும், ஆனால் உடல் உபாதைகளுக்கு எத்தனை தான் நெருங்கிய ரத்த சொந்தமாகவே இருந்தாலும் அவற்றை வாங்கிக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ முடியாது... பாதிக்கப்பட்டவர் மட்டுமே அனுபவிக்க வேண்டிய வேதனை அது.


அவரின் மேல் உயிரையே வைத்திருப்பவர்களாக இருந்தாலும் அவர் தான் தனக்கு உயிர் என வாழ்பவர்களாக இருந்தாலும் அதைக் கண்டு தூர நின்று வேதனைப்பட மட்டுமே மற்றவர்களால் முடியும், அப்படி ஒரு நிலையில் தான் இன்று இருந்தான் தேவ்.


போனில் லலிதாவிற்கு மூச்சு திணறல் என்ற செய்தி வந்தவுடன் வேறு எந்த நினைப்பும் இல்லாமல் உயிர் துடிதுடிக்க அவரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மீண்டும் ஒரு இழப்பை தாங்கிக் கொள்ளத் தன் மனதிலும் உடலிலும் சக்தி இருக்கிறதா என்ற ஆராய்ச்சி செய்யக் கூட அவன் அப்போது தயாராக இல்லை, விரைந்து செயல்பட்டு அவரின் உடல் உபாதைகள் தீர என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனையையும் மேற்கொண்டு மருத்துவரின் வாயால் லலிதாவிற்கு ஒன்றும் இல்லை என்ற வார்த்தையைக் கேட்கும் வரை வெளியில் கல் போல இறுகி இருந்தாலும் உள்ளுக்குள் அவன் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்.


அதன்பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பதினொரு மணியளவில் வீட்டிற்குக் கிளம்பி சென்றான்.


தேவ் தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் தேடிச் சென்றது மித்துவை தான். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று இந்த நான்கு நாள் பிரிவில் மனம் அதிகம் மித்துவை தேடியது ஒரு காரணம் என்றால், மற்றொன்று வீட்டில் யாருமற்ற இந்த நேரத்தில் யார் என்றே தெரியாத புதிதாக வந்த பெண்ணிடம் வெறும் நாலு நாள் பழக்கத்தில் மித்துவை விட்டுவிட்டு அவர்கள் மருத்துவமனைக்கு வந்து இருப்பது.


இது தேவ்விற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில் அவர்களுக்கு வேறு எந்த நினைவும் இருந்திருக்காது என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இப்போது மித்து எங்கு எப்படி இருக்கிறான் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி அவனைத் தேடிச் சென்றான்.


அந்தப் பெரிய மாளிகையில் முதல் தளம் பத்து பெரிய பெரிய அறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது. எந்த அறையில் இருந்து வெளியில் வந்து நின்று பார்த்தாலும் கீழ் தளத்தைப் பார்க்க கூடிய அளவில் மிகப் பெரிய அழகிய சதுர வடிவிலான அந்தக் காலத்து வீடுகளில் முற்றம் என அழைக்கப்படும் மாடலை இப்போதைக்கு ஏற்றால் போல் நவீனமாக வடிவமைத்திருந்தனர்.


தேவ் தனக்குப் பக்கத்து அறையை மித்துவிற்காக அவனின் அத்தனை தேவைகளையும் பூர்த்திச் செய்யும் வகையில் வடிவமைத்துக் கொடுத்திருந்தான்.


எனவே அந்த அறையின் கதவை தட்டிவிட்டு எல்லாம் திறக்காமல் அதிரடியாகத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் அப்படிச் சென்றதற்கான காரணம் உள்ளே அந்த நிமிடம் என்ன நிலையில் குழந்தை இருக்கிறான் என்பதைக் கண்ணால் கண்டு தெளிவு படுத்திக் கொள்வதற்காகவே...!


ஆனால் அந்த அறையினுள் தேவ்விற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏமாற்றம் என்றவுடன் மது மித்துவை கண்களில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான் என்பது போன்று இல்லை, அந்த அறையில் அவன் யாரையுமே காணாமல் தான் ஏமாற்றமடைந்தான்.


முதலில் யாருமற்ற வெற்று அறையைக் கண்டு திகைத்தவன், இந்த இரவு நேரத்தில் எங்குச் சென்றிருக்கக் கூடும் என்ற யோசனையோடு வெளியில் செல்ல காலடி எடுத்து வைத்த நிமிடம், ‘ஒருவேளை குளியலறையில் இருக்கக் கூடுமோ...?’ என்ற சந்தேகத்தின் பேரில் அங்கும் கூடச் சென்று பார்க்க...


அதுவும் யாருமற்று வெறிச்சோடியிருந்தது, கீழ்த்தளம் முழுவதும் இரவின் தனிமையில் இருளில் மூழ்கி இருக்க... வேலை செய்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் உறங்கச் சென்று இருப்பது வீட்டிற்குள் நுழையும் போதே தேவ்வின் கண்களுக்குத் தெளிவாகவே தெரிந்தது.


இப்போது மித்து அவன் அறையில் இல்லாது போகக் கண்களால் அறை முழுவதும் நோட்டம் விட்டவனின் கண்களுக்கு அந்த அறையில் அனைத்தும் எடுத்து வைக்கப்பட்டிருந்த நேர்த்தியும், பராமரிக்கப்பட்டு இருந்த விதமும் கண்ணில் படத் தவறவில்லை, இந்த அறையைத் தூய்மை செய்து மித்துவின் பொருட்களைக் கவனித்துக் கொள்ள என மட்டும் ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் இத்தனை நாட்களில் இல்லாத ஒரு நேர்த்தி அந்த அறையில் பளிச்சிடுவதை அந்தச் சில நொடிகளுக்குள்ளேயே கண்டுகொண்டான் தேவ்.


குழந்தையோடு வெளியில் எங்கும் சென்று இருக்கக் கூடுமோ என என்ற எண்ணம் கூடத் தேவிற்கு வர வில்லை. ஏனென்றால் அவனுக்கு நன்றாகத் தெரியும் நிச்சயம் இந்த வீட்டை கடந்து குழந்தையை வெளியில் கொண்டு சென்றிருக்க முடியாது என்று.


எப்போது தன் அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டில் இருப்பவர்கள் நியமித்தார்களோ..! அப்போதே அந்தப் பெண்ணின் மேல் ஒரு சதவிகிதம் கூட நம்பிக்கை அற்று இருந்தவன் உடனடியாக இரண்டு பாதுகாவலர்களை வீட்டை கண்காணிக்க நியமித்திருந்தான்.


இதற்கு முன் இந்த வேலைக்கு வந்த அத்தனை பேரையும் அவ்வளவு கேள்விகள் கேட்டு தீர விசாரித்த பின்பே வேளையில் நியமித்திருக்க, ஆனால் அவர்கள் நடந்துக் கொண்ட விதத்தினாலும் சில ஒத்துவராத செய்கைகளினாலும் விரட்டி அடிக்கப்பட்டு இருந்தனர்.


அப்படி இருக்கையில் எந்த வகையிலும் யார் என்ன என்றே தெரியாத ஒருத்தியை நியமித்திருப்பதாக லலிதா கூறியதை கேட்டவன் மதுவை நூறு சதவிகிதம் சந்தேகக் கண்கொண்டு மட்டுமே பார்த்தான்.


‘இவள் யாரால் எந்தக் காரணத்திற்காக இந்த வீட்டிற்குள் அனுப்பப்பட்டு இருப்பாள்...? இல்லை என்ன தேவைக்காக எதைச் செய்து முடிப்பதற்காக இந்த வீட்டிற்குள் நுழைந்து இருப்பாள்...?’ இதுதான் தேவ்வுடைய இப்போதைய சந்தேகமே தவிர,


மது நல்லவளா? கெட்டவளா? என்பதில் அவனுக்கு ஒரு சதவிகிதம் கூடச் சந்தேகம் எழவில்லை நூறு சதவிகிதம் மதுவை கெட்டவள் தான் என்ற முத்திரை குத்தி அந்த விதத்திலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.


இப்படி இருவர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றித் தன் தாயிடம் கூட இந்த நிமிடம் வரை தேவ் தெரிவிக்கவில்லை. அவர்கள் எப்போதும் இருப்பது போல இயல்பாக இருக்கட்டும், இப்படி ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தால் தான் வேறு மாதிரியான நடவடிக்கைகளில் அதைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள்.


இன்னும் மனிதர்களையும் அவர்களின் கேடுகெட்ட புத்தியையும் எத்தனை முறை அடிபட்டாலும் புரிந்துக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் இரக்க குணம் கொண்டு செயல்படுபவர்களிடம் தெரிவிக்க விரும்பவில்லை.


ஆனால் தேவ் அங்கு இருந்தபடியே அவன் நியமித்திருந்த பாதுகாவலர்களின் மூலம் உடனுக்குடன் அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தான். அந்தத் தைரியத்தில் தான் ‘நிச்சயம் வீட்டிற்குள் தான் இருப்பார்கள்’ என்ற எண்ணத்தோடு அறையில் இருந்து வெளியில் வந்தவன்...


கீழ் தளத்தில் இருந்து படி ஏறி மேலே வரும் போது இரண்டு பக்கமாகப் படிகள் பிரிக்கப்பட்டு, இரு பக்கம் இருக்கும் அறைகளுக்குச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்க...


வலது பக்கம் நான்கு அறைகளையும் இடது பக்கம் நான்கு அறைகளையும் இரண்டிற்கும் நடுவில் இரண்டு பெரிய அறைகளையும் கொண்ட அந்த முதல் தளத்தில் படிகள் முடிவடையும் இடத்தில் மிகப் பெரிய ஹால் ஒன்று இருக்கும்...


அந்த அறையிலிருந்து வெளிப்பட்டு வலதுபக்க அறைகளின் கதவுகளைத் திறந்து பார்த்தபடியே அந்த முதல் தளத்தில் உள்ள ஹாலை தேவ் நெருங்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


அதில் தன் நடையைத் தொடராது ஒரு நொடி நின்றவன், அடுத்தக் கணம் உடனடியாக ஆன் ஆக வேண்டிய ஜெனரேட்டர்கள் ஆன் ஆகாமல் போகவே... சற்று சந்தேகத்தோடு அந்த இருளில் தன் பார்வையைச் சுற்றும் முற்றும் பார்த்து படி, இருந்த நிலையில் இருந்து கொஞ்சமும் மாறாமல் கண்களை மற்றும் சுழற்றினான்.


அவன் நுன்அறிவுக்கு எட்டிய வரையில் வித்தியாசமாக எதுவும் புலப்படாமல் போகவும், ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கும் உடனடியாகச் செக்யூரிட்டி அதைப் பார்ப்பார் என எண்ணிக் கொண்டு அங்கு இருந்த பெரிய சோபாவில் அமர்ந்த நொடி “கிளிச்” என்ற சத்தம் தேவ்வின் காதுகளை வந்தடைந்தது.


அதில் உடம்பில் உள்ள அத்தனை செல்களும் கூர்மை பெற... சட்டென்று எழுந்து நின்றான். அந்த மை இருளில் பார்வையைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மேல்தளத்திலிருந்து கீழ்த்தளத்தைப் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த மர சுற்றுச் சுவரில் கை வைத்த நொடி, தேவ் நின்றிருந்த இடத்திற்கு நேர் எதிர் திசையில் இருந்த அறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி தெரிந்தது.


யோசனையோடு கண்கள் இடுங்க அந்த ஒலி வந்த அறையைக் கூர்ந்து கவனித்தவாறே அங்குச் செல்ல அடுத்த அடியை எடுத்து வைத்தவன் அப்படியே நின்றான்.


காரணம் அந்த அறையிலிருந்து மெழுகுவர்த்தியோடு மது வெளியில் வந்து கொண்டிருந்தாள். ஒரு கணம் தன் கண்களையே நம்ப முடியாது இமைகளை அசைத்து மீண்டும் அந்த அறையின் வாயிலை நோக்க... இப்போதும் மது இதே போல் அந்தப் பக்கம் இருந்த கைப்பிடி சுவரில் அருகில் வந்து நின்று இருந்தாள்.


அந்த இருள் சூழ்ந்த இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேவதை எனத் தன் கண்முன் வந்து நின்றவளை முதலில் நம்ப முடியாமல் யார் இவள் என்பது போலப் பார்க்கத் தொடங்கியவனின் மனமோ ‘இவள் பெண்ணா...? இல்லை மோகினியா...?’ எனக் கேள்வி கேட்கும் அளவிற்கு அத்தனை அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள் அந்த இருளில் மது


அவளைக் கண்ட நொடி முதல் இமைக்க மறந்து நின்றிருந்தவன் அந்த இருளில் அவள் கையில் இருந்த மெழுகுவர்த்தி ஒளி மதுவின் முகத்தில் பட்டு ஒளிர... குழந்தைத்தனம் இன்னமும் மாறாமல் மாசுமருவற்ற முகத்தோடு குமரியாய் நின்றிருந்தவள் அந்த ஒளியில் தேவதை எனத் தன் கண்களுக்குத் தெரிவதை கண்டு தேவ் அசையாமல் நின்றிருக்க மனமோ...


ஒளியிலே தெரிவது தேவதையா...


உயிரிலே கலந்தது நீ இல்லையா...

இது நெசமா நெசம் இல்லையா...


அந்த நிலவுக்குத் தெரியலையா...

என இசைக்க... தேவ் அப்படி அசையாமல் நின்றிருப்பதைக் கண்டு குழம்பியவள் “சார்... சார்...” என அழைக்கவும், அந்தச் சத்தத்தில் நினைவுக்கு திரும்பியவனுக்கு அவள் அழைத்த “சார்...” என்ற வார்த்தை நாராசமாகக் காதில் கேட்க, ‘என்னது சாரா...’ எனச் சினம் எழ, “என்ன...?” என அவள் மீது எரிந்து விழுந்தான்.


ஆனால் அவன் மனமோ ‘உன்கிட்ட வேலை செய்ற எல்லாருமே மரியாதையா அப்படித்தானே ராசா கூப்பிடறாங்க...’ எனக் கேள்வி கேட்க, ‘அவங்களும் இவளும் ஒண்ணா...’ என அதற்குக் கொஞ்சமும் யோசிக்காமல் பதிலளித்தவனை மனசாட்சியே வியப்பாகப் பார்த்தது.


அவளிடம் சிடுசிடுப்பவனைக் கண்டு பயந்த அவனின் தேவதைக்கு, ‘தன் முதலாளி தன்னை எதற்குத் திட்டுகிறார்...’ எனத் தெரியாது முகம் சுருங்கி போனது.


மதுவின் முகம் சுருங்கியது அந்த இருளிலும் தேவ்வின் கண்களுக்குத் தப்பாமல் பட... அந்தச் சில நொடி துயரை கூட மதுவை படவிடாமல் உடனே சென்று துடைக்க எண்ணி பரபரத்த கைகளை அடக்க முடியாமல் அவளைத் துயரப்பட வைத்த தன்னையே திட்டிக் கொண்டு ஒரு அடி தேவ் எடுத்து வைக்கவும், மின்சாரம் மீண்டும் வந்தது.


மதுவும் நிமிர்ந்து மேலே ஒளிரும் விளக்குகளைப் பார்த்து புன்னகைத்தபடியே “கரண்ட்...” என இயல்பாக மற்றவர்களிடம் பேசுவது போல எண்ணி ஏதோ சொல்ல திரும்பவும் அதற்குள் விளக்கொளியில் மதுவையும் அவள் கையில் இருந்த மெழுகுவர்த்தியையும் பார்த்தபடி நின்றிருந்தவனுக்கு இத்தனை நேரம் தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த மாயவலை அறிந்திருந்தது. அதோடு இவள் யார் என்பதும் நினைவுக்கு வர...


அதில் கண்களில் கனலோடு மதுவை பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு மிரண்டு அவள் இரண்டடி பின்னால் வைக்க... நின்ற இடத்திலிருந்தே “வேர் இஸ் மித்து...” எனச் சிங்கத்தின் கர்ஜனையோடு கேட்டவனின் குரல் அந்த இரவில் பயங்கரமாக எதிரொலிக்க...


மதுவிற்கு உடல் ஒரு நொடி தூக்கிப் போட்டு வெடவெடவென நடுங்க தொடங்கியது. நடுங்கிக் கொண்டிருந்த தன் வலது கையைத் தூக்கி அவள் வெளிவந்த அறையை மட்டும் சுட்டிக்காட்டியவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள வார்த்தைகள் வெளிவராமல் போனது.


அவளையும் அவள் காண்பித்த அறையையும் மாறி மாறி ஒரு பார்வை பார்த்தவன் விறுவிறுவெனத் தன் வேக நடையில் அந்தப் பகுதியை அடைந்து அறைக்குள் நுழையும் முன் கதவோரம் நின்றிருந்த மதுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல, அங்கு இருந்த ஒற்றைக் கட்டிலில் இரு பக்கம் தலையணைகள் கொடுக்கப்பட்டுக் கழுத்து வரை மிருதுவான போர்வை போர்த்தப்பட்டு இருக்க... சுகமான நித்திரையில் இருந்தான் மித்து.


எத்தனை கோபத்தோடும் ஆத்திரத்தோடும் அந்த அறைக்குள் நுழைந்தானோ அத்தனையும் உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையைப் பார்த்த நொடியில் காணாமல் போக... கடந்த நான்கு மாதங்களில் இப்படி ஒரு அமைதியான தூக்கத்தை அவன் உறங்கி பார்த்திராத தேவ் சில நொடிகள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தான்.


பின்பு அறைக்கு வெளியே நின்று கொண்டு மது இங்குப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் குனிந்து மித்துவை தூக்க போக, ஒரு நொடி கைகள் தயங்கி நின்றது. ‘எங்கே மித்துவின் உறக்கம் கலைந்துவிடுமோ? மீண்டும் அவன் இப்படி உறங்குவானா?’ எனத் தயங்கியவன், பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் மித்துவை தூக்கி தன் தோளில் போட்டபடி அதிவேக நடையோடு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.


சரியாக மதுவை கடக்கும் சமயம் தேவ்வின் தோளில் இருந்த மித்துச் சினுங்கி அழுதபடியே எழவும், மது பதட்டத்தோடு தேவ்வை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க... அவளைப் பார்வையாலேயே தூர நிறுத்தியவன் குழந்தையின் முதுகை தடவியபடியே “மித்துப் பாய்... ஸ்லீப்... ஸ்லீப்...” எனச் சொல்லவும்,


அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்ட குழந்தையும் தேவ்வின் தோளில் மீண்டும் தலை சாய்த்து தன் முகத்தை அவன் மார்பில் தேய்த்தபடியே தூக்கத்தைத் தொடர, தலை முதல் முதுகு வரை மித்துவை மெல்ல தடவிக் கொடுத்தபடியே, தன் அறைக்குள் நுழைந்தவன் காலால் திரும்பிக் கூடப் பார்க்காமல் கதவை அடித்துச் சாத்தினான்.


தன் முகத்திலேயே அறைந்தது போலக் கதவை அடித்துச் சாத்தியதை பார்த்தபடி நின்றிருந்த மதுவிற்குப் பயத்தில் கண்கள் கலங்கியது. ‘எதற்காகத் தன் முதலாளி தன் மீது இத்தனை கோபமாக இருக்கிறார்’ என்று கூட அவளுக்குப் புரியவில்லை.


என்ன தவறு செய்தோம் என்று யோசிக்கக் கூட அந்த நிமிடம் அவளால் முடியவில்லை. ஒரு மாதிரி சிங்கத்தின் குகையில் தனியாக மாட்டிக் கொண்ட சிறு பெண்ணைப் போல உடல் முழுவதும் நடுக்கத்தோடும் பயத்தோடும் இருந்த இடத்திலிருந்து அசையாமல் நின்று கொண்டிருந்தவளின் கண்கள் மட்டும் அதன் வேலையைச் சரியாகச் செய்து கண்ணீரை பொழிந்து கொண்டிருந்தது.


தேவ் இன்றே வந்திருந்தாலும் இங்கு வந்த நாளில் இருந்து வேலை செய்பவர்கள் முதற்கொண்டு லலிதா வரை தேவ்வை பற்றிச் சொல்லி இருந்த விஷயங்கள் அனைத்தும் அவள் மனதில் நன்கு பதிந்து இருந்தது.


அதாவது வேலையைச் சரியாகச் செய்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை...!

அனைத்து வேலைகளும் அந்தந்த நேரத்திற்குச் சரியாக நடக்க வேண்டும்...!

எந்த வேலையிலும் குறை இருக்கக் கூடாது...!


தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது அடுத்தவர் விஷயங்களில் இல்லை பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது என எதுவும் இருக்கக் கூடாது...!


அவரவர் வேலைகளைச் செய்து விட்டு அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விட வேண்டும்...!


என எழுதப்படாத ஒரு சட்டம் இங்குக் கடுமையாக அமலில் இருப்பதை அறிந்து கொண்டவள், சிறுவயது முதலே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து பழக்கப்பட்டவள் என்பதால் முன்பே முடிவு எடுத்திருந்தால் தேவ்விடம் எப்போதும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று.


ஆனால் பாவம் அதையும் அவள் மட்டும் முடிவு எடுத்தால் போதாது இன்னொருவனும் முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த நிமிடம் அவளுக்குத் தெரியவில்லை. அதே போலத் தன் மேல் கொலைவெறியோடு ஒருவன் வந்து கொண்டிருக்கிறான் என்பதும் அவளுக்கு அந்த நிமிடம் தெரியவில்லை.


அதன்படி இந்த நான்கு நாட்களாக மித்துவோடு மட்டுமே தன் உலகத்தை அமைத்துக் கொண்டவள், மித்துப் பகலில் உறங்கும் நேரங்களில் லலிதாவோடு அவர் அறையில் அமர்ந்து அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கத் தொடங்கினாள்.


அப்படியே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கத் தொடங்கினர். இதில் அடுத்தக் கட்டமாக ஒவ்வொரு முறையும் மது லலிதாவை அவர்களின் பேச்சுப் பழக்கத்தில் “மாம்...” எனத் தொடங்கிப் பின்பு “மேம்” என மாற்றுவதைக் கண்ட லலிதா, தன்னை “மாமி...” என்றே அழைக்கும்படி சொல்லியும் அது மரியாதை இல்லை என மறுத்து வந்த மது பின்பு “இது இப்படி மாற்றி மாற்றி அழைப்பது தான் என்னவோ போல இருக்கிறது...” என எடுத்துக் கூறி சம்மதிக்க வைத்த லலிதாவை “மாமி...” என அழைக்கத் தொடங்கியிருந்தாள்.


அதுபோல இன்று மாலையும் அவரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள் மித்துவை அங்கேயே விளையாட வைத்துக் கொண்டிருக்க... திடீரென லலிதாவின் உடல்நிலை சீர்கெட தொடங்கிய உடனே, தேவ் இன்று இந்தியா வருவது யாருக்குமே தெரியாது என்பதால் அவனிடம் ஒரு வார்த்தை தெரியப்படுத்திவிட்டு லலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ராஜி முயல,


அப்போதே தேவ் வந்திருப்பதை அறிந்து அடுத்தடுத்து நடக்க வேண்டிய வேலைகளை இனி அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையோடு ராஜி மருத்துவமனைக்கு லலிதாவோடு விரைந்தார்.


இத்தனை நேரம் தன்னோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் திடீரென இப்படி அவதிப்படுவதைக் கண்டு கண் கலங்க பார்த்துத் துடித்துக் கொண்டு இருந்த மது அவர் மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்ற பிறகும் இப்போது எப்படி இருக்கிறாரோ...? என்ற பதட்டத்தோடு நேரத்தை கழித்துக் கொண்டிருக்க...


அந்தக் கிளம்பும் அவசரத்திலும் மதுவை கவனித்து இருந்த ராஜி பத்து மணியளவில் மதுவிற்கு வீட்டு தொலைபேசி மூலம் அழைத்து லலிதாவின் உடல்நிலை இப்போது பரவாயில்லை எனத் தெரிவித்தவர், மதுவை கவலைப்படாமல் இருக்கச் சொல்லி தைரியமூட்டினர்.


“எப்படி அக்கா தனியா சமாளிச்சேள்...” என்ற மதுவின் கவலையும் அக்கறையுமான கேள்விக்கு, அப்போதே தேவ் இந்தியா வந்து இறங்கிய தகவலை கூறியதோடு இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கும் வந்து விடுவான் எனக் கூறியிருந்தார்.


எனவே மித்துவை தன் அறையில் உறங்க வைத்த மது உறக்கம் வராமல் ஜன்னல் ஓரம் அமர்ந்துக் கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்த போதுதான் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த மாளிகைக்குள் நுழைந்தது தேவ்வின் புகாட்டி லா வைய்ட்ரே நோய்ர்.


இப்படிப்பட்ட கார்களை எல்லாம் இதுவரை பார்த்தே இல்லாத மது அவற்றை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதில் இருந்து புயல் போல இறங்கி கதவை அடித்துச் சாத்தியபடி வீட்டிற்குள் நுழைந்திருந்தான் தேவ்.


இமைக்கும் நொடிகளுக்குள் தேவ் உள்ளே இறங்கி சென்றிருக்க, காரின் மேலேயே கவனமாக இருந்தவள் தேவ்வை சரிவரப் பார்க்க கூட இல்லை. ஆனால் அடுத்தச் சில நொடிகளிலேயே தேவ் படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்கவும் ‘தன் அறைக்குச் செல்கிறார்...’ என நினைத்துக் கொண்டிருந்த மது சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படவும் மெழுகுவர்த்தியோடு வெளியில் வந்தாள்.


அதுவும் கூட நேற்றுதான் பணிப்பெண்ணிடம் சொல்லி மெழுகுவர்த்தி வாங்கி வர செய்து இருந்தாள். அப்போது கூட லலிதா “அதற்கு எந்த அவசியமும் இல்லை, இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் ஜெனரேட்டர்கள் உடனே வேலை செய்யும்...” எனச் சொல்லி பார்க்க...


“அப்படியெல்லாம் அசட்டையா இருக்கக் கூடாது மாமி... சின்னக் குழந்தை இருக்கிற இடம்... நடு ராத்திரியில் எப்பவாவது மின்சாரம் வராமலே போயிட்டா என்ன பண்ணுவேள்.... அவசரத்துக்கு நம்ம கையில ஏதாவது இருக்கணும்...” என விளக்கம் அளிக்க,


‘இன்னும் நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றைப் பற்றி இவளுக்குச் சரிவரத் தெரியவில்லை...’ எனப் புரிந்திருந்தாலும் லலிதா அவற்றை எடுத்துச் சொல்லவோ கிண்டல் செய்யவோ இல்லாமல் அவளுக்கு மெழுகுவர்த்தி வாங்கிக் கொடுக்குமாறு பணித்திருந்தார்.


‘அப்படியே ஜெனரேட்டர்கள் வேலை செய்யாமல் போனாலும் அனைத்து அறைகளிலும் எமர்ஜென்சி விளக்குகள் உண்டு...’ என்பதைப் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருந்தார் லலிதா.


இவற்றையெல்லாம் மனதிற்குள் அசை போட்டபடியே தன் அறையில் சென்று அமர்ந்த மதுவிற்கு ‘எதற்காகத் தன் மீது கோபப்பட்டார்...’ என இந்த நிமிடம் வரை ஒன்றுமே புரியவில்லை.


தவறு செய்தால் கோபப்படுவார், திட்டுவார், வேலையிலிருந்து நீக்குவார் எனக் கேள்விப்பட்டு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்து இருந்தவள், ‘இப்போது என்ன செய்தோம்...?’ என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.


‘நாம் எதுவுமே செய்யவில்லை என்றாலும் இவனிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போவது உறுதி...!’ என்று அந்த நிமிடம் அவளுக்குத் தெரியவில்லை பாவம்.


இங்கு மித்துவை தன் மேல் படுக்க வைத்தபடியே விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தவன் மனது நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் ஒன்றும் பெண்களை அறியாதவன் அல்ல..! ஆனால் இது என்ன மாதிரி ஒரு உணர்வு என்பதை அவனால் பிரித்தறிய முடியவில்லை, ஒன்று மட்டும் உறுதி இது போன்ற ஒரு உணர்வு இதற்கு முன்பு வேறு யாரிடமும் அவனுக்குத் தோன்றியது இல்லை...!!


அதனாலேயே சில நொடிகள் அடுத்து என்ன? எனத் தெரியாமல் நின்றவன் அதன் பிறகு சுதாரித்து இருந்தான். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அத்தனை கோபமும் மதுவின் மேல் தான் திரும்பியது.


எத்தனை கோபத்தை அவளின் மீது வளர்த்துக் கொண்டு நான்கு நாட்களாகக் காத்திருந்து இங்கு வந்து சேர்ந்தவனுக்கு அதை உடனடியாகச் செயல்படுத்த முடியாமல் மனம் ஸ்தம்பித்துப் போய் இருக்க...


‘இதுதான் அவளின் திட்டமும் தன்னை மயக்குவதற்காக வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறாளோ...?’ என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போதே மதுவின் கைகளில் இருந்த மெழுகுவர்த்தி நினைவு வர,


சட்டென்று எழுந்து அமர்ந்து ‘இன்று இந்த நிமிடம் மின்சாரம் போகும் என்பதும் ஜெனரேட்டர் வேலை செய்யாது என்பதும் முன்பே தெரிந்தது போல இவள் கையில் எப்படி மெழுகுவர்த்தி வந்தது...?’ எனக் குதர்க்கமாக யோசித்தவனின் மனம் ‘இது அத்தனையும் மதுவின் திட்டம், அவளின் திட்டப்படியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர்கள் பழுதடைய வைக்கப்பட்டு இந்த இரவில் தன்னை மயக்க முயன்றிருக்கிறாள்...!’ என்ற முடிவிற்கு வந்தான் தேவ்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 16

இரவு முழுவதும் உறக்கம் இன்றிப் புரண்டு கொண்டிருந்த தேவ் வெகு நேரம் கழித்தே உறங்கி இருந்தாலும் தன் பல வருட பழக்கத்தின் படி விடியற் காலையிலேயே கண் விழித்துக் கொண்டான்.


தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மித்துவை சில நொடிகள் வாஞ்சையுடன் பார்த்தவன் அவன் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு மருத்துவமனையில் இருக்கும் லலிதாவை காண விரைந்து தயாராகிக் கீழே இறங்கினான்.


படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்த போது கீழே சமையல் அறையின் வாசல் அருகில் இருந்த உணவு மேஜையின் பக்கத்தில் அந்த அதிகாலை வேளையிலும் குளித்துத் தயாராகி நின்று கொண்டிருந்த மது பாலை சரியான சூட்டிற்கு ஆற்றி சிறு பிளாஸிக்கில் ஊற்றி வைப்பது தெரிந்தது.


அவளையே கூர்மையான பார்வையால் அளந்துக் கொண்டே இறங்கியவனின் காலடிச் சத்தம் கேட்டு மது திரும்பிப் பார்க்கும் போது வாயிலை கடந்து இருந்தான்.


தேவ் சென்றதை கண்ட மது அங்கு அறையில் மித்துத் தனியாக உறங்கிக் கொண்டிருப்பது நினைவு வர ‘உறக்கம் கலைந்து எழுந்தால் அழுவானே...’ என்ற எண்ணம் தோன்றியவுடன், பால் ஊற்றி வைத்து இருந்த பிளாஸ்க், சிறிய கிளாஸ், மற்றும் குழந்தைக்கு முகம் துடைத்து விட வெட் டிஷ்யு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு மேலே விரைந்தாள்.


தேவ்வுக்குத் தன் அறைக்குள் யாரும் நுழைவது அறவே பிடிக்காது, எப்போதும் யாரையும் அந்த அறைக்குள் அனுமதிகாதவன், தன் அறையைக் கூடத் தானே சுத்தம் செய்து கொள்வான். ஆனால் இதைப் பற்றி அறியாத மது மித்துவின் மீது மட்டுமே கவனமாக இருந்ததினால் விரைந்து மேல் ஏறிச் சென்றவள் மாடி ஹாலில் தான் கொண்டு சென்ற பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மித்து எழுவதற்காகக் காத்திருந்தாள்.


சிறிது தூரம் சென்ற பிறகே தேவ்வுக்கு மித்துவை தன் அறையிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவு வர, வழக்கமாகத் தன்னோடு இரவில் உறங்க வைத்துக் கொண்டாலும் காலையில் கிளம்புகையில் லலிதாவின் அறைக்குத் தூக்கி சென்று அங்கு விட்டுவிட்டு செல்பவன், இன்று லலிதா இல்லை என்பதனால் ஏதோ யோசனையில் கிளம்பிவிட...


நேற்று மது மித்துவை வைத்துக் கொண்டு இருந்த அறையில் கொண்டு சென்று கிடத்தி இருக்கலாமோ எனத் தோன்றவும் கொஞ்சமும் யோசிக்காமல் காரை யூ டர்ன் அடித்துக் கொண்டு வீட்டிற்குத் திருப்பினான்.


சரியாக அதே நேரம், இங்குச் சிணுங்கும் குரல் கேட்கவும் சற்றும் யோசிக்காமல் கதவை திறந்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து இருந்தாள் மது.


அந்தப் பரந்து விரிந்திருந்த பெரிய படுக்கையின் நடுவில் சுற்றிலும் புதைந்து போகும் அளவிற்கான தலையணைகளின் நடுவில் படுத்தபடி உறங்கிக் கொண்டிருந்த மித்து உறக்கம் கலைந்து புரண்டு கொண்டே சிணுங்கவும், மது படுக்கையில் தாவி ஏறி மித்து வைத்து தூக்கி சமாதானப்படுத்த துவங்கினாள்.


அவசர அவசரமாக வீட்டை வந்தடைந்த தேவ் தன் அறையின் கதவு திறந்திருப்பதைக் கண்டு நெற்றி சுருங்கியபடியே உள்ளே நுழையவும் படுக்கையில் இருந்து மித்துவை தூக்கி கொண்டு மது இறங்குவது தெரிந்தது, மதுவை தன் அறையில் தன் படுக்கையில் கண்ட நொடி கட்டுக்கடங்காமல் பொங்கிய கோபத்துடன் “ஹவ் டேர் யூ...” என்ற கர்ஜனையோடு இரண்டு எட்டில் மதுவை தேவ் நெருங்கவும்,


திடீரெனத் தேவ்வை கண்டதும் எதற்காக இத்தனை ஆவேசத்தோடு கத்துகிறார் எனப் புரியாமல் மிரண்டு இரண்டடி பின்னுக்கு வைக்க... அதேநேரம் தேவ்வின் குரல் கேட்டு தலையைத் தூக்கிப் பார்த்த மித்துவை கண்ட அடுத்த நொடி தன் முகபாவனைகளைச் சட்டென்று மாற்றிக் கொண்டவன் குழந்தையைக் கண்டு புன்னகைத்தான்.


கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தன் டாடாவை கண்ட மகிழ்ச்சியில் மித்துவும் “தா... தா...” என விளித்தபடி தேவ்வை தூக்க சொல்லி தன் கைகளைத் தூக்கியது.


அடுத்த நொடி மதுவின் கைகளில் இருந்தவனை வெடுக்கெனத் தேவ் பறித்துக் கொள்ள இதைச் சற்றும் எதிர்பார்க்காத மதுவும் தேவ்வின் முக மாற்றங்களையே புரியாமல் பார்த்தவாறே நின்று கொண்டு இருக்க, திடீரென இழுக்கப்பட்டதில் நிலை தடுமாறி தேவ்வின் மேலேயே மோதி பின் சுதாரித்து நின்றாள்.


அதில் மதுவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், ஏதோ சத்தம் வராமல் வாய்க்குள்ளேயே முணுமுணுக்க... தன்னைத்தான் திட்டுகிறார் எனப் புரிந்த மதுவும் சற்று முன்பு அத்தனை கோபத்தோடு கத்திய போதும் குழந்தைக்காகத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு முகபாவனை மாற்றிக் கொண்ட தேவ்வின் செயலை எண்ணியவள் இப்போதும் அப்படித்தான் குழந்தைக்குக் கேட்காமல் திட்டுகிறார் எனப் புரிந்து,


என்ன சொல்வது எனப் புரியாமல் பயத்தோடு குரல் தந்தியடிக்க “மன்னி... ச்சுக்கோ... ங்கோ... தெரி...யாம... நேக்கு... நா... வேணு... .ம்னே... பண்ணல....” என ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் உளறியவளை, மித்துவிடம் கொஞ்சிக் கொண்டிருந்த தேவ் ஒற்றைக் புருவத்தை மட்டும் ஏற்றியபடி மதுவை ஒரு பார்வை மட்டும் பார்க்க... அவனின் வாய் “மாமி...” என மெல்ல அவனை அறியாமலேயே முணுமுணுத்தது.


மதுவிற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் ஏன் அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் மித்துவோடு அறையில் இருந்து வெளியே சென்றவனைப் பதட்டமாகப் பார்த்தபடி மது பின் தொடர்ந்து செல்ல...


அவனோ மித்துவிடம் மட்டுமே கவனமாக இருந்து, இத்தனை அவசரமாகக் கிளம்பி செல்ல வேண்டிய வேலை இருந்த போதிலும் தன்னைத் தேடிய குழந்தைக்கு நேரம் ஒதுக்கி அவனோடு கொஞ்சிக் கொண்டிருந்தான். மித்துவிற்கும் தன் டாடாவின் அருகாமையில் பசி மறந்து போனதோ என்னவோ அவனுமே எனக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பது போலத் தேவ்வோடு ஒட்டிக் கொண்டே இருக்க...


அந்த மாடி ஹாலின் சோபாவில் இவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்குச் சற்றுத்தள்ளி தூர நின்றபடியே அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் மது. அதற்கும் கூட இரண்டு முறை தலையை நிமிர்த்தி மதுவை ஒரு புரியாத பார்வை பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் இருந்து கொள்ள...


‘தன்னைத் தேவ்விற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை...’ என மதுவிற்குப் புரிந்த போதும், ‘ஆனால் தான் என்ன தவறு செய்தோம்...?’ என்பது மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை!!


இப்போது கூடத் தன்னை எதற்காக முறைக்கிறான் எனத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவர்களின் தனிமையைத் தான் கெடுக்கிறோம் என்ற எண்ணம் எல்லாம் கொஞ்சமும் தோன்றவில்லை...! தான் இங்கு வந்தது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, அவனுக்கு ஏதாவது தேவை ஏற்படும் போது ஓடிச்சென்று செய்வதற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அங்கு அவனுடைய தேவைக்கான பொருட்களை அருகிலேயே வைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.


ஆனால் தன் டாடாவின் அருகாமையில் மித்துவிற்குப் பசி கூட மறந்து போகும் என அப்போது மதுவிற்குப் புரியவில்லை பாவம்..!! அரைமணி நேரத்திற்குப் பிறகு மித்துவிடம் “மித்துப் பாய்... டாடாக்கு டைம் ஆச்சு... நான் போய்ப் பாட்டியை கூட்டிட்டு வரேன்... அது வரைக்கும் குட் பாயா விளையாடிட்டு இருப்பீங்களாம் ஓகேவா...?” என அவனுக்குப் புரியும் வகையில் கொஞ்சிப் பேசிக் கொண்டே எழுந்தான்.


மித்துவை பார்த்து கையசைத்து விட்டு இறங்கி சென்று விட... அதன்பிறகு மித்துவை ஓடிச் சென்று தூக்கிக் கொண்ட மது, அவனுக்குப் பாலை கொடுத்து உடம்பை துடைத்து விட்டு வேறு உடை அணிவித்து அவனோடு விளையாடத் தொடங்கினாள்.


மருத்துவமனையில் லலிதா, தேவ் உள்ளே நுழையும் போது எழுந்து அமர்ந்து இருந்தார். அவரிடம் பேசிக் கொண்டே அவரின் உடல்நிலையைப் பற்றி விசாரித்துவிட்டு, மருத்துவரிடம் சென்று லலிதாவை பற்றிக் கேட்க...


“மதியம் வரை இங்கு இருக்கட்டும்... மற்றபடி கவலைப்பட எதுவும் இல்லை...” என மருத்துவர் கூறிவிட, லலிதாவை விட்டு கொஞ்சமும் நகராமல் கூடவே இருந்து கவனித்துக் கொண்டு அவரை அழைத்துக் கொண்டு முன் மாலைப் பொழுதில் வீடு திரும்பினான் தேவ்.


லலிதாவை கண்டதும் அவரிடம் செல்ல கைகால்களை உதைத்துக் கொண்டு புன்னகையோடு மித்து அவரிடம் தாவ முயல... அவனை வாரி அணைத்துக் கொள்ளவும் தூக்கி கொஞ்சவும் முடியாத நிலையில் இருந்த லலிதாவிற்குக் கண்கள் கலங்கியது, இருந்தும் படுக்கையில் இருந்தபடியே “வா” என்பது போல மித்துவை பார்த்து தலை அசைத்து மேலும் ஏதோ சொல்ல முயன்றவரை தடுத்த மது,


“இருங்கோ மாமி... அவசரப்படாதேள் முதல்ல சரியா உட்காருங்கோ... அவன் தான் சின்னப் பிள்ளை புரிஞ்சிக்காம நடந்துக்கறான்னா....! நீங்களுமா...?” எனச் செல்லமாகக் கடிந்து கொள்ளும் குரலில் கூறியபடியே “நான் கொடுக்கிறேன் உங்களாண்ட...” என மித்துவோடு லலிதாவை நெருங்கவும்,


வீல் சேரில் இருந்து லலிதாவை தூக்கி படுக்கையில் அமர வைத்துவிட்டு அவரின் படுக்கையைச் சரி செய்தபடி போர்வையைப் போர்த்திக் கொண்டு இருந்த தேவ், ‘தன்னிடம் பேசும் போது குரலில் அத்தனை தந்தி அடித்தவளா? இவ்வளவு தெளிவாகப் பேசுவது..!!’ என்பது போல ஆச்சரியமாக ஒருமுறை நிமிர்ந்து மதுவை பார்த்துவிட்டு மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தான்.


அதற்குள் மது, தேவ் அனைத்தையும் செய்து முடிக்கும் வரை காத்திருந்து மித்துவை லலிதா அம்மாவின் தோளில் படுத்திருக்கும் படி சாய வைத்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ள... லலிதா அம்மாவால் தன் முகத்தை மட்டும் திருப்பிக் குழந்தையை வாகாக முத்தமிட முடிந்தது, மித்துவும் அவருக்கு அதே போல முத்தமிட கண்கள் கலங்கியது லலிதா அம்மாவிற்கு... இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தேவ்


மெதுவாய் மதுவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சொடுகிட்டு மதுவை தன்னைக் காண செய்து விரலசைவில் ‘இங்கிருந்து வெளியேறு...’ என்பது போலச் சைகை செய்ய, “சரி” என்பது போலச் சிறு தலையசைப்போடு அங்கிருந்து வெளியேறி விட்டாள் மது.



அவள் செல்வதற்காகவே காத்திருந்த தேவ், மித்துவோடு சேர்ந்து லலிதாவின் பக்கத்தில் அமர்ந்தபடி, “என்னம்மா புதுசா உறவெல்லாம் கிடைச்சிருக்கு போல...?” எனக் கேலியாகக் கேட்க,


தேவ் கேட்க வருவது புரிந்து “ஆமா விக்ரம்... நல்ல பொண்ணு...” என வாஞ்சையாகப் பதிலளித்தவரை ஏளனமாகப் பார்த்தபடி “நீங்க எப்போமா திருந்த போறீங்க...?” எனக் கேள்வி கேட்டவனைக் கண்டு வெறும் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தார் லலிதா.


“மா” என மீண்டும் ஏதோ சொல்லத் தொடங்கிய தேவ்வை தடுத்த லலிதா, “நிஜமாவே நல்ல பொண்ணு விக்ரம்...” என உணர்ந்து கூறவும், “ஏமாத்துறவங்க எல்லாருமே இப்படித்தான் ஆரம்பத்தில் நடிப்பாங்க... என்ன தெரியும் உங்களுக்கு இவளை பற்றி..? எந்த நம்பிக்கையில் வேலைக்கு வெச்சீங்க...? எந்த நம்பிக்கையில் சர்டிபிகேட் கொடுக்கறீங்க... அவ யாரு என்னன்னு ஏதாவது உங்களுக்குத் தெரியுமா...?” என அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க...


“நிஜம் தான் விக்ரம்... எனக்கு அவளை பற்றி எதுவும் தெரியாது...! ஒரு முறை கேட்ட போது அம்மா மட்டும் இருக்காங்க வேற எதுவும் என்ன இப்போ கேட்காதீங்கன்னு சொல்லி கண்கலங்கினா... அதற்கு மேலும் அந்தச் சின்னப் பொண்ண அழ விட எனக்கும் மனசு இல்லை... ஆனா என் மனசுக்கு தெரியுது அவ நல்லவன்னு...” எனப் பதில் அளித்துக் கொண்டிருந்தவரை கண்டவனுக்கு அப்படியே தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.


‘அவள் கண் கலங்கினால் என்பதற்காக அவளைப் பற்றி எந்த விவரங்களையும் விசாரிக்காமல் எந்தத் தைரியத்தில் வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டார்...’ எனப் புரியாமல் கோபமே வந்தது. ஆனால் அந்தக் கோபத்தையும் அவரின் மேல் காட்ட முடியாமல் தலையைத் திருப்பிக் கொண்டான்.


அவன் அமர்ந்திருந்த விதத்தைக் கண்டவருக்குத் தேவ்வின் கோபம் புரிய, “விக்ரமா யாரா இருந்தா என்னப்பா...? இங்க வந்தது நம்ம வீட்டு குழந்தையைப் பார்த்துக்க, அதைச் சரியா செய்யறா... அதில் இதுவரை எந்தக் குறையும் வைக்கலை... அது போதாதா நமக்கு...!! அதுக்குச் சரியான ஆள் கிடைக்காமல் தானே இத்தனை நாள் எல்லாருமே அவதிப்பட்டோம்...” என எப்படியாவது தேவ்விற்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டே சென்றார்.


“இதுவும் நடிப்பா இருக்காது என என்ன நிச்சயம் உங்களுக்கு...?” எனக் குதர்க்கமாகக் கேட்க, “நிச்சயமா அவ குழந்தை விஷயத்தில் நடிக்கலை... அது எனக்கு நல்லா தெரியும்...! எனக்கு வேறு எதைப் பற்றியும் கவலை கிடையாது... மிதுன் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருந்தால் அதுவே எனக்குப் போதும்...” எனத் தொடங்கியவர், தேவ் ஊருக்குச் சென்றதில் இருந்து அவன் செய்த கலாட்டாகளை எடுத்துக் கூறி, யாராலும் சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில் மதுவின் கைகளில் எப்படி அமைதியாக அடங்கிப் போனான் என விளக்கியவர் “எனக்கு இது தான் வேணும் விக்ரம்...” என முடித்துக் கொள்ள,


“ஆமா ரொம்பத் தான் நம்பிக்கை... அவ என்ன செஞ்சா தெரியுமா உங்களுக்கு...? நைட் நான் வரும் போது பிள்ளையை அவனோட அறையில் படுக்க வைக்காமல் எதிர்ல இருக்குற கெஸ்ட் ரூம்ல படுக்க வெச்சு இருக்கா... அங்கு அவனுக்கு என்ன வசதி இருக்கும்...?” என மதுவை பற்றிக் குறை மட்டுமே கூற வேண்டும் என்ற குறிக்கோளோடு இல்லாத காரணத்தை எல்லாம் கண்டு பிடிக்க மனம் தேடினாலும் வேறு எதுவும் கிடைக்காமல் போக, கிடைத்த ஒரு காரணத்தைக் கொண்டு பேசியவனைக் கண்டு மீண்டும் புன்னகைத்த லலிதா


“அவ முதல் நாளிலிருந்தே குழந்தையை அங்கு அவ கூடத் தான் படுக்க வெச்சுகறா விக்ரம்...” எனப் பதில் அளிக்க, அவரைக் கேள்வியாகப் பார்த்தபடி “ஏன் மித்துப் பாய்க்கு அவன் ரூம் இருக்கும் போது இவ எதுக்கு எங்கேயோ கொண்டு போய்ப் படுக்க வைக்கணும்...” என்று கோபப்பட,


“அப்படி இல்ல விக்ரமா... குழந்தையை அவன் அறையில் படுக்க வெச்சா இவ கோச்லையோ இல்ல சோபாலேயோ தான் படுக்க வேண்டியிருக்கும்... குழந்தை நைட்டில் பயந்து அழுவான்... அப்படித் தனியாகச் சின்னப் பிள்ளையைத் தூங்க வைக்கக் கூடாது... தொட்டிலில் தூங்க வைத்தாலும் பக்கத்தில் எதுக்கு அணைப்பா தலையணை வைக்கிறோம்...? ஆனால் அத்தனை பெரிய கட்டிலில் என்னதான் தலையணை வைத்து படுக்க வைத்தாலும் குழந்தை புரண்டு படுக்கும் போது இல்லை உருளும் போது எல்லாம் நகர்ந்து விட்டால் தனியா உணர்வான்... மனதளவில் ஒரு பயம், ஒரு தேடல் இருந்துட்டே இருக்கும் குழந்தைக்கு, அதனால் குழந்தையைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி படுக்க வைத்துக் கொண்டால் இரவில் பயந்து எழுந்து அழுவதும் அடிக்கடி விழித்துக் கொள்வதும் இல்லாமல் நிம்மதியாக உறங்குவான்... எனக் கூறி என்னிடம் அனுமதி கேட்டுட்டே அவ அப்படிச் செய்தாள்...” என விளக்கம் அளித்தார்.


இது என்ன புதுக் காரணம் என்பது போலத் தேவ் பார்த்துக் கொண்டிருக்க “அவள் சொன்னது எல்லாமே உண்மைதான் விக்ரமா... ஒரு தாயாக அவள் சொல்வது எனக்கு நல்லாவே புரிந்தது... நீ கொஞ்சம் யோசித்துப் பார், ஷாலுவோடு குழந்தை உறங்கியவரை இப்படி அடிக்கடி இரவில் எழுந்து அழுதோ உறக்கம் கலைந்து கலாட்டா செய்தோ நான் பார்த்து இல்லை...! பசிக்கு எழுந்து அழுதால் கூடப் பசியாற்றி விட்டால் மீண்டும் உறங்கிவிடுவான் தானே...” எனக் கேட்க,


லலிதா சொன்னவற்றை யோசித்துப் பார்த்தவனுக்கு அது உண்மை என்று தான் தோன்றியது!! எத்தனையோ முறை இரவில் சிணுங்கி எழுந்த போதும் ஷாலு பசியாற்றி விட்டால் உடனே குழந்தை உறங்கி விடுவதைப் பலமுறை பார்த்து இருக்கிறான். சில நேரங்களில் இரவு வெகு தாமதமாக வந்தாலும் குழந்தை அழுவதைக் கண்டு தூக்கி வைத்துக் கொள்ள முயல, ஷாலுவோ “நீங்க தூக்கி கொஞ்சனீங்கன்னா உங்க குரலைக் கேட்டு அவன் முழிச்சிட்டு விளையாட ஆரம்பிசிடுவான்... அப்பறம் நீங்க தான் பார்த்துக்கணும்... என்னால முடியாது எனக்குத் தூக்கம் வருது... உங்க விளையாட்டு கொஞ்சல் எல்லாம் காலையில் வெச்சுக்கோங்க...” எனப் போலி கோபத்தோடு சொல்ல,


“அதனால் என்ன...? என் பிரிண்ஸ் சாமை நான் பாத்துக்கிறேன் நீ தூங்கு...” என எத்தனையோ முறை தேவ் பதில் அளித்து இருக்கிறான், இவையெல்லாம் நினைவு வர, ஷாலுவின் ஞாபகத்தில் முகம் கசங்கியது தேவ்விற்கு...


அதேநேரம் லலிதாவிற்கும் பேச்சுவாக்கில் சொல்லிவிட்டார் என்றாலும் ஷாலுவின் நினைவில் கண்கள் கலங்கத்தான் செய்தது. ஆனால் தன்னை விட தேவ் தான் அதிகம் துன்பப்படுவான் எனப் புரிந்து கொண்டவர் “விக்ரமா” என ஆறுதலாக அழைக்க... கண்கள் சிவக்க அவரை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.


அவனே நினைத்தாலும் மறக்கமுடியாத விஷயத்தைத் தேவையே இல்லாமல் நினைவு படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் லலிதா மீண்டும் “விக்ரம்” என அழைக்க, “ஐ ம் ஒகேமா...” எனக் கரகரப்பான குரலில் பதிலளித்த தேவ்


“உங்க புது மருமககிட்ட குழந்தையை ஒழுங்கா பாத்துக்கச் சொல்லுங்க... எனக்கு வேலை இருக்கு...” எனக் கிளம்பி சென்று விட, போகிறபோக்கில் தேவ் உதிர்த்து விட்டுப் போன வார்த்தைகள் கேட்டு ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தார் லலிதா.


தேவ் மது இங்கு வேலை செய்ய மறைமுகமாகச் சம்மதம் தெரிவிக்கச் சொன்ன வார்த்தைகள் தான் அது, சொன்னது என்னவோ மாமி என அழைப்பதனால் லலிதாவிற்கு அண்ணன் தம்பி யாராவது இருந்திருந்தால் அவர்களின் பிள்ளைகள் அப்படித்தானே அழைப்பார்கள் அந்த முறையில் புதிதாகக் கிடைத்திருக்கும் உறவை குறிப்பிட்டு சொல்லி விட்டுச் செல்ல... லலிதா அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டார், ஆனால் நிச்சயம் தேவ் தான் புரிந்துக் கொண்ட எண்ணத்தில் பேசவில்லை என்பது அவருக்குமே தெரிந்து தான் இருந்தது... ஆனாலும் அந்த வார்த்தையில் இருந்த பொருள் அவரின் மனதை தித்திக்கச் செய்து கொண்டிருந்தது.


ஒரு வாரத்திற்குப் பிறகு அலுவலகத்திற்குச் சென்ற தேவ்வுக்கு வேலைகள் சூழ்ந்துக் கொள்ள, வேறு எதைப் பற்றிய நினைவும் அதன் பின் அவனுக்கு வராமலே போனது.


இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பியவன் அனைவரும் உறங்க சென்று விட்டிருக்க, மெல்ல சோர்வுடன் படி ஏறி தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு இருக்கும் அசதியில் எவ்வளவுதான் பசி இருந்தாலும் மீண்டும் கீழே சென்று சாப்பிடும் எண்ணம் இல்லாமல் போக... அப்படியே உடை கூட மாற்றாமல் படுக்கையில் சாய்ந்து கண்மூடி கிடந்தான்.


அப்படியே உறக்கம் தேவ்வை தழுவிக் கொள்ள அந்த அரைத் தூக்கத்திலும் மித்து நினைவு வரவும், சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அவனைப் பார்க்க எண்ணி மித்துவின் அறையின் பக்கம் நகர இரண்டு அடி எடுத்து வைத்தவனின் கால்கள் அப்படியே நின்றது.


காலையில் லலிதா பேசியது நினைவுக்கு வரவே நிச்சயமாக மது அவள் அறையில் தான் உறங்க வைத்து இருப்பாள் என்ற எண்ணத்தோடு அங்குச் சென்றவன் நள்ளிரவு என்ற யோசனை எல்லாம் இல்லாமல் கதவை தட்டுவதற்குக் கதவில் கை வைக்க... தாள் இடப்படாத கதவு தானாகவே திறந்துக் கொண்டது.


இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத தேவ் முதலில் தயங்கினாலும் பிறகு திறந்திருந்த கதவின் வழியே பார்வையைச் செலுத்த அங்கு விடி விளக்கின் வெளிச்சத்தில் மது திரும்பி படுத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.


உள்ளே செல்லலாமா..? வேண்டாமா..? என்பது போலத் தயக்கத்தோடு காலை உள்ளே வைப்பதும் எடுப்பதும் ஆக இரண்டு நிமிடம் நின்றவன், பிறகு மித்துவை பார்த்து விட்டு செல்ல தானே வந்தோம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைய,


அங்குப் படுக்கையில் தலையணைக்குப் பதிலாகத் தன் இடது கையில் மித்துவின் தலையை வைத்தபடி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு வலது கையால் அவன் முதுகை அணைத்துப் பிடித்துக் கொண்டு மது படுத்திருக்க.... மித்துவோ தன் இடது கையை மதுவின் இடையின் மேல் போட்டபடி அவளோடு ஒன்றிக் கொண்டு மதுவின் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, பாதுகாப்பான ஒரு இடத்திற்குச் சென்று சேர்ந்து விட்டேன் என்பது போன்ற ஒரு நிலையில் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.


இருவரும் இப்படி ஒரு இணக்கமும் அணைப்புமான நிலையில் உறங்கி கொண்டிருப்பார்கள் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காத தேவ் சில நொடிகள் நம்ப முடியாமல் அப்படியே வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.


இருவரும் அப்படிப் படுத்துக் கொண்டிருந்தது ஒரு தாய் தன் கை குழந்தையுடன் உறங்குவது போல அத்தனை பாந்தமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அம்மாக்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு உள்ளுணர்வு என்று சொல்வார்களே அதுபோல ஆழ்ந்த உறக்கத்திலும் கூடத் தன் குழந்தைக்கு எதுவும் ஆபத்து நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு விழிப்போடு மனம் இருக்குமே அது போன்ற நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள் மது.


இப்படி மித்துவை ஷாலு அணைத்து உறங்குவதைக் கண்டு இருந்த தேவ்விற்கு அதே போல் மது பார்த்துக் கொள்வதை நம்பவே முடியவில்லை. நிச்சயமாக மித்துவை தொட்டால் கூட மது விழித்துக் கொள்வாள் என்பது போன்றே இருந்தது மது படுத்துக் கொண்டிருந்த நிலை, இருவரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் திரும்பி செல்ல எண்ணியவனின் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது.


மீண்டும் இருவரையும் சில நிமிடங்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் ஏதோ நினைவு வர, கண்களில் அந்த காட்சியை நிரப்பிக் கொண்டு வந்த வழியே சத்தம் எழுப்பாமல் திரும்பச் சென்று விட்டான்.


அடுத்த நாள் காலை பதினொரு மணிக்கு மேல் தன் உதவியாளன் கதிரை முக்கியமான பேச்சுவார்த்தைகாக வீட்டிற்கு வரவழைத்து இருந்தபடியால், அவசரமாகக் கிளம்பி செல்லும் வேலை எதுவும் இல்லாமல் பொறுமையாக உறங்கி எழுந்து தன் உடற்பயிற்சிகளை முடித்து விட்டுக் கையில் கிரீன் டீயுடன் அலுவலக அறையின் ஜன்னலை திறக்க...


அங்குத் தெரிந்த பரந்து விரிந்திருந்த தோட்டத்தைப் பார்த்து ரசித்தபடியே தன் கையிலிருந்த பானத்தைப் பருகி கொண்டிருந்தவனின் பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி அப்படியே நின்றது.


அங்குத் தோட்டத்திற்கு நடுவில் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய எட்டு தூண்களைக் கொண்டு மேல் கூரையோடு ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருந்த அமர்ந்து பேசுவதற்கும் ஓய்வு எடுப்பதற்குமான இடத்தில் இருந்த இருக்கையில் மித்துவை அமர வைத்துவிட்டு,


தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்


தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.



தின்னப் பழங்கொண்டு தருவான் பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னையன் என்றால் அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.



தேனொத்த பண்டங்கள் கொண்டு என்ன

செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்

மானொத்த பெண்ணடி என்பான் சற்று

மனமகிழும் நேரத்திலேகிள்ளி விடுவான்.


என அபிநயம் பிடித்துப் பரதம் ஆடியபடியே மது பாடிக் கொண்டே மித்துவை கொஞ்சி கொண்டிருக்க... அவளின் அந்தக் குட்டி கண்ணனோ மதுவோட சேர்ந்து கைதட்டி ஆரவாரித்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.


முதலில் ‘இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்...’ என்பது போலப் புரியாமல் பார்க்க தொடங்கிய தேவ்வுக்கு மித்துவின் மீதான மது உடைய அன்பும் பாசமும் அவள் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் விதமும் புரிய தொடங்கவும்,


சமீபமாக இத்தனை புன்னகையோடும், சந்தோஷத்தோடும் மித்துவை தேவ் பார்த்தது இல்லை என்பதனால் இருவரையும் இமைக்க மறந்து பார்த்தபடி நின்றிருந்தான்.


தேவ் கீழ்தளத்தில் இருந்த தன் அலுவலக அறையில் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருப்பது மதுவிற்குத் தெரிய வாய்ப்பில்லை மற்றவர்கள் பார்ப்பதற்காக மித்துவோடு அன்பாக இருப்பது போல் நடிப்பதாக எடுத்துக் கொள்ள...


ஏனென்றால் இன்று கதிர் வரப் போவதை இதுவரை யாரிடமும் தேவ் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் வரவேற்பறையில் அமர்ந்திருந்தவன் இப்போதே இங்கு அமர்ந்து பேசலாம் என்ற எண்ணத்துடன் எழுந்து வந்து இருந்தான்.


அதனால் தேவ்வின் கருத்தை கவர்வதற்காக நடந்து கொள்கிறாள் என்ற ரீதியிலும் எண்ணுவதற்கு வாய்ப்பில்லாமல் போகத் தன்னை அறியாமல் மதுவின் மேல் சாயத் தொடங்கி இருந்த மனதின் மேலும் ஒரு படி முன்னேறி இருந்தாள் மது அவனை அறியாமலேயே... அதை ஆமோதிப்பது போல் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 15 & 16


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 17

தங்கள் உலகிலேயே மூழ்கி இருந்த மதுவையும் மித்துவையும் பார்த்தபடி சற்றுநேரம் நின்றிருந்த தேவ் உடனடியாகத் தன் முடிவை மாற்றிக் கொண்டு அலுவலக அறையில் கதிரை சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்தவன் சமையலறையையும், லலிதாவின் அறையையும் எளிதாகப் பார்க்கும்படி அமைந்திருந்த பிரதான ஹாலில் அமர்ந்து கதிரோடான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முடிவுக்கு வந்தான்.


அதன்படி தேவ் சென்று அங்கு அமரவும் கதிர் வரவும் சரியாக இருக்க, தங்கள் பணியில் கவனத்தைச் செலுத்தினார் இருவரும். அரை மணி நேரத்திற்கு மேலாகியும் தோட்டத்தில் இருந்த மது வராமலே போகக் கண்கள் அவ்வப்போது அலைபாய்ந்துக் கொண்டே தான் இருந்தது தேவ்வுக்கு, ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் வேலையில் மட்டுமே கவனமாக இருப்பது போன்ற பாவனையில் அமர்ந்திருந்தான்.


இன்னும் சிறிது நேரம் செல்ல தன் அலுவலக அறையில் இருந்த ஒரு கோப்பை எடுப்பதற்காகச் சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த மது ஹாலில் புதியவன் எவனோ அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தபடியே இருப்பதைக் கண்டு ‘யார்’ எனத் தெரியாமல் புருவத்தைச் சுருக்கியபடியே லலிதாவின் அறைக்குள் நுழைந்தாள்.


திரும்ப வந்து தன் இடத்தில் அமர்ந்த தேவ்வுக்கு லலிதாவின் அறையிலிருந்து மித்துவின் சத்தம் கேட்கத் துவங்கவும் மதுவும், மித்துவும் வீட்டிற்குள் வந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொண்டான்.


முன் மதிய நேரமாகவே லலிதா அம்மாவிற்குப் பழச்சாறும் மித்துவிற்குச் சத்துமாவு கரைச்சலும் கலந்து எடுத்து வர சமையல் அறையை நோக்கி மது வர இருந்த வேளையில், சரியாகத் தேவ்விற்கு அலைபேசியில் அழைப்பு வரவும், அதை எடுத்துக் கொண்டு எழுந்தவன் அருகில் இருந்த படியேறும் பாதைக்குச் சற்று தள்ளி நின்றுக் கொண்டு உரையாட துவங்கினான்.


தேவ் நின்றிருந்த இடத்தில் இருந்து கதிரையும் சமையலறையும் பார்க்க முடியும், ஆனால் இந்தப் பக்கம் இருந்து வரும் மதுவினால் தேவ் நின்றிருப்பதைப் பார்க்க இயலாது. வெளியே வந்ததும் மீண்டும் புதியவன் தனியாக அமர்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவாறு சமையல் அறைக்குள் நுழைந்தவள் இருவருக்கும் தேவையானவற்றைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.


சமையல் வேலை செய்பவர் மூன்று நாட்கள் விடுமுறையில் சென்று இருந்தார். அவரின் பேத்தி பெரிய மனுஷி ஆகி விட்டதால் அவளைச் சென்று பார்த்து வருவதற்காக ஊருக்கு கிளம்பி இருந்தார்.


எனவே மதுதான் காலையிலிருந்து சமையல் வேலையையும் சேர்த்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். மற்ற வேலை செய்பவர்கள் அதற்கு உதவியாக இருக்கிறார்கள்.


டிப்டாப்பாக உடையணிந்து மரியாதைக்குரிய தோற்றத்தில் நடு ஹாலில் அமர்ந்திருந்தவனைக் கண்டவளுக்கு நிச்சயம் தேவ்வை காண்பதற்காக வந்திருப்பவன் என்பது நன்றாகவே புரிந்தது.


ஆனால் தேவ்வை இன்னும் சந்திக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவள் தனியாக அமர்ந்திருக்கிறார், வீட்டிற்கு வந்தவர்களை யாரும் இன்னும் உபசரிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றவும் கதிரை கவனிக்க எண்ணி மித்துவை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தவள் சிரித்த முகமாக


“வாங்கோ அண்ணா... சாரை பார்க்க வந்திருகேளா...? என்ன சாப்பிடறேள்...” எனக் கேட்கவும், முதல் முறை மது தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழையும் போதே அவளைப் கண்டிருந்த கதிர் ‘இவள் யார்?’ எனத் தெரியாததால் யோசனையோடு பார்த்திருந்தான்.


இப்போது தன்னிடம் வந்து பேசி உபசரிக்கவும் குழம்பி, எப்படிப் பதிலளிப்பது...? பதிலளிப்பதா,,?!! வேண்டாமா..!?’ எனத் தெரியாமல் தடுமாறினான். அதற்குக் காரணம் தேவ்விற்கு அவரவர் எல்லையிலே நிற்கவேண்டும், வீட்டிற்கு வேலை விஷயமாக அழைத்து விட்டான் என்பதற்காகத் தேவையில்லாமல் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதோ பழகுவதோ எல்லாம் பிடிக்காது...!!!


ஆகையால் ‘என்ன செய்வது’ என்பது போல் தவிப்போடு தேவ்வை திரும்பிப் பார்க்க தேவ்வும் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் போனில் பேசியபடியே...


இங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் தேவை பற்றி நன்கு தெரியும் என்பதால் அவனாக அழைத்தாலே ஒழிய யாரும் அவன் அருகில் கூடச் செல்ல மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எதைப் பற்றியும் அறியாத மது வீட்டு மனுஷியாக நின்று கதிரை உபசரிக்கத் துவங்கவும்...


தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த கதிரிடம் கண்களாலேயே பதிலளி என்பது போல அனுமதி வழங்கினான். “இல்லை எதுவும் வேண்டாம்...” எனத் தயக்கத்தோடு பதில் அளித்திருந்தான் கதிர்.


“வீட்டுக்கு வந்தவா எதுவும் சாப்பிடாம போ படாது... ஏதாவது கொஞ்சம் எடுத்துக்கோங்கோ...” என மீண்டும் மது கேட்கவும், நேரத்தை பார்த்தவன் அது பதினொரு மணியைத் தொட்டிருக்க, ‘காபி டீ என்று எதையாவது தருவாளோ’ என்று எண்ணி “இல்ல இது பிரஞ்ச் டைம் ஆயிடுச்சு... இப்ப எனக்கு எதுவும் வேண்டாம்...” எனக் காலை உணவை நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் தவிர்த்துவிட்டு வந்திருந்தவன் அதை மனதில் கொண்டு பசி எடுத்த போதும் இன்னும் பத்து நிமிடத்தில் தான் வந்த வேலை முடிந்து விடும் என்பதனால் சென்று சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கூற...


அவனைக் குழப்பமாகப் பார்த்தபடி நின்றிருந்த மது “சில்லுன்னு ஏதாவது கொண்டு வரட்டா...?” என்றாள். ஏற்கனவே பசியில் அமர்ந்து கொண்டிருப்பவன் மீண்டும் மது சாப்பிடுவதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, ‘ஐயோ இப்போ என்ன செய்வது’ என்பது போல் பார்வையைத் திருப்பவும், சாப்பிடு எனக் கண்களாலேயே அங்கிருந்து உத்தரவிட்டிருந்தான் தேவ்.


தேவ் இந்த முடிவை எடுக்க, கதிர் காலை உணவைத் தவிர்த்து இருந்தததோ இல்லை அவன் முகத்தில் தெரிந்த பசியோ காரணம் அல்ல...!! அவன் வேண்டாம் என்று கூறிய போது மதுவின் முகம் சோர்ந்து போனதே காரணம்.


அதிலும் வீட்டு மனுஷியாக நின்று அவள் உபசரிக்கும் விதம் தேவ்விற்குப் பிடித்து இருந்ததால் தான், அங்கு இப்போது தான் சென்றால் மது அங்கிருந்து விலகி ஓடி அறைக்குள் ஒளிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது எனப் புரியவும், அவளே அறியாமல் அவளின் நடவடிக்கைகளை ரசித்துக் கொண்டு நின்றிருந்தான்.


தேவ் உத்தரவிட ஏற்கனவே கொலை பசியில் இருந்த கதிர் மெல்ல மதுவை நோக்கி “பிரான்ச் லைட்டா குடுங்க...” என்று கேட்கவும் அவனையே குழப்பமாகப் பார்த்தபடி “சரி” எனத் தலை அசைத்து விட்டு மித்துவை அலமாரியை சுத்தம் செய்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்து லலிதாம்மாவிடம் விட்டுவிடுமாறு கூறியவள் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


பசியின் தாக்கத்தில் அமர்ந்திருந்தவன் மது எப்போது கொண்டு வருவாள் என ஆவலாகச் சமையலறையைப் பார்த்தபடி இருக்க, பத்து நிமிடம் கழித்து வெறுங்கையோடு திரும்பி வந்தவள் தயக்கத்தோடு கதிரின் முகம் பார்க்கவும் ‘என்ன எல்லாம் தீர்ந்து போச்சுன்னு சொல்ல போறாங்களோ’ என மனதிற்குள் அரண்டவன் பசிக் கொடுமையோடு என்ன என்று கேட்க...


“மன்னிச்சிக்கோங்கண்ணா தப்பா எடுத்துக்காதேள்... நீங்க சொன்னது எப்படிச் செய்யணும்...” எனத் தயங்கி தயங்கி மது கேட்கவும், தான் என்ன சொன்னோம் என்று புரியாமல் குழம்பிய கதிர் “நான் என்ன சொன்னேன்...?” என அவளையே திருப்பிக் கேட்டான்.


“அதான் அண்ணா ப்ரா... ப்ரா...” என அந்த வார்த்தையைச் சரியாக நினைவு வைத்துக் கூற முடியாமல் தடுமாறவும் அவள் கூற வருவதைப் புரிந்து கொண்ட கதிர் “பிரஞ்ச்” என எடுத்துக் கொடுக்க,


“அதே தான்... அது எப்படிச் செய்றதுண்ணா... ஒரே ஒரு முறை சொல்லுங்கோ நான் சட்டுன்னு போய்ப் பட்டுன்னு செஞ்சு எடுத்துட்டு வந்துருவேன்...” எனவும் மது பேசியதை குழப்பத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அப்போதே அவள் கூற வந்தது புரிய முகத்தில் புன்னகை அரும்பியது.


கதிர் சிரிப்பதை கண்டு “நேக்கு இங்கிலீஷ் அவ்ளோ வராதுண்ணா... நான் பிளஸ் டூ வரை தான் படிச்சிருக்கேன்... அதும் தமிழ் மீடியம் தான், ஆனா எதுவும் ஒரு முறை சொல்லி கொடுத்தா போதும் அப்படியே செஞ்சிருவேன்...” எனச் சிறு குழந்தையின் ஆர்வத்தோடு, தவறு செய்துவிட்ட சிறு பிள்ளையைப் போல முகத்தை வைத்துக் கொண்டு கூறியவளை கண்டு அவளின் அப்பாவித்தனமும் அன்பான மனமும் நன்கு புரிய வார்த்தைக்கு வார்த்தை யாருமற்ற தன்னை வாயார அண்ணா என்று அழைப்பவளை அன்போடு பார்த்தவன்


“அது ஒரு சமையல் ஐட்டம் இல்லமா... பிரஞ்ச் அப்படின்னா காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடற உணவை குறிக்கிற சொல்...” என விளக்கவும், “ஆமாவா” என்றபடி தன் வலது கையைக் கொண்டு நெற்றியில் குட்டிக் கொண்டு வாயை பிளந்துக் கொண்டு விழி விரிய கேட்டுக் கொண்டிருந்தவள்


“இப்படிக் கூடச் சொல்லுவாளா...?” என உண்மையான ஆச்சரியத்தோடு கேட்க ‘ஆம்’ என்று தலையசைத்தான். ஏனோ மதுவின் இந்த அன்பிற்கும் அப்பாவி தனத்திற்கும் முன்பு தேவ்விடம் இருந்த பயம் கூடச் சற்று பின்னுக்குப் போயிருந்தது கதிருக்கு.


அதனால் இயல்பாக அவளோடு உரையாட தொடங்கியவன் “நான் இப்போ என்ன சாப்பிட இருக்கோ அதை கொஞ்சமா தர சொன்னேன்...” என்று தெளிவாகக் கூறவும்,


“பூரி உருளைக்கிழங்கு, புட்டு கடலை குழம்பு, இட்லி சட்னி எல்லாம் இருக்கு உங்களுக்கு எது வேணுமோ சாப்பிடலாம் வாங்கண்ணா..” என ஒரு துள்ளலோடு கதிரை உணவு மேஜை நோக்கி அழைத்தபடி சென்றவளை சிறு புன்னகையோடு பின்தொடர்ந்து சென்றவன் அங்கிருந்த நாற்காலியில் அமரவும்,


தட்டை வைத்து அனைத்தையும் பரிமாற எண்ணி பூரியை கையில் எடுத்தவளிடம் கதிர் “புட்டு வை...” என்று கூற, மதுவும் சரி எனத் தலையசைத்த படி கையிலிருந்த பூரியை நான்கு துண்டாகப் பிட்டு அவன் தட்டில் வைத்தாள். அதில் “ங்கே” என விழித்து மதுவின் முகத்தைக் கதிர் பார்க்க...


இவர்கள் எழுந்து சென்றதைக் கண்டு அங்கு இருந்த சோபாவில் அமர்வதற்காக இவர்களையே பார்த்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்த தேவ் இந்தக் காட்சியைக் கண்டு மதுவின் செய்கையும் அதற்குக் கதிரின் முகப் பாவனையும் பார்த்து அதுவரை கஷ்டப்பட்டுத் தனக்குள்ளேயே அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடித்துக் கிளம்பச் சத்தம் போட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.


தேவ்வின் சிரிப்புச் சத்தம் கேட்டு அனைவரும் அதிர்வோடு அவனைத் திரும்பிப் பார்த்திருந்தனர். ஐந்து வருடங்களாகத் தேவ்விடம் பணி புரிபவன் கதிர், இதுவரை தேவ் சிறியதாகப் புன்னகை செய்து கூடப் பார்த்ததில்லை.


எள்ளல் புன்னகையையோ இல்லை இதழ் ஓரத்தை வளைத்து நக்கலாக உதிர்க்கும் புன்னகையையோ மட்டுமே அவன் முகத்தில் எதிரிகளிடம் பேசும் போது வருமே தவிர இயல்பான புன்னகை என்பதை இதுவரை தேவ்வின் முகத்தில் கண்டதே இல்லை.


அப்படி இருக்கையில் இப்படிச் சத்தம் போட்டு வெடித்துச் சிரிப்பவனை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அதே போல்தான் மதுவிற்கும் எப்போதும் இறுக்கமான முகத்துடன் கூர்மையான விழிகளோடு எதிரில் இருப்பவரை துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டு விறைப்பாகவே திரியும் தேவ்வையே இத்தனை நாட்களில் கண்டிருந்தவளுக்குச் சிரிப்புச் சத்தம் கேட்டவுடன் தோன்றியது ‘இவருக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா...?!’ என்று தான்.


அதிலும் நிறுத்தாமல் இப்போது வரை சிரித்துக் கொண்டே இருப்பவனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மற்ற வேலை ஆட்களும் கூட அவரவர் செய்துக் கொண்டிருந்த வேலைகளை நிறுத்தி விட்டுத் தேவ்வைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அறைக்குள் இருந்த லலிதா அம்மாவிற்கு தேவ்வின் சிரிப்புச் சத்தம் காதில் விழவும் ஒரு கணம் நம்ப முடியாமல் திகைத்தவருக்குச் சந்தோசத்தில் கண்கள் கலங்க துவங்கியது.


தன் அருகில் இருந்த ராஜியிடம் “அது... விக்ரம்... தானே...?” என நிஜமான சந்தோஷத்தில் வார்த்தை தடுமாறி கேட்கவும் “அப்படித்தான்ன்னு நினைக்கிறேன்...” என்றபடியே எழுந்து அறை வாயிலில் வந்து நின்று பார்த்தவர் மதுவை பார்த்துக் கொண்டு சிரித்தபடி தேவ் நின்று இருப்பதையும் சுற்றி அனைவரும் நின்று தேவ்வை பார்த்துக் கொண்டிருப்பதையும் அப்படியே லலிதா அம்மாவிடம் கூற...


மது செய்த ஏதோ ஒன்றால் தான் தேவ்வுக்கு இப்படிச் சிரிப்பு வந்திருக்கிறது எனப் புரிந்தது அவருக்கு, இத்தனை வருடங்களாக இறுகிப் போய் இருந்தவனை யாராலும் சிரிக்க வைக்க முடியாதவனை, ஷாலுவும் எத்தனையோ முயன்றும் அவளுக்காக இதழ்களை லேசாக வளைத்துச் சிரித்துச் செல்பவனை இப்படி வாய் விட்டு சிரிக்க வைத்த ஒரே ஒரு செயலுக்காக மது என்ன கேட்டாலும் கொடுக்கலாம் என்ற எண்ணம் லலிதாவிற்குத் தோன்றியது.


இடைவிடாமல் சிரித்துக் கொண்டே இருந்தவன் சிரித்தபடியே திரும்பவும் வேலை ஆட்கள் முதற்கொண்டு அனைவரும் தன்னைப் பார்த்துக் கொண்டே நின்றிருப்பது தெரிய தன் சிரிப்பை நிறுத்தி விட்டு மதுவை ஒரு பார்வை பார்த்தபடி மாடி ஏறி தன் அறைக்குச் சென்று விட்டான்.


அதுவரை சிலை போல நின்றிருந்தவள் “சாருக்குச் சிரிக்கத் தெரியுமா?” எனச் சற்று குனிந்து கதிரிடம் கிசுகிசுப்பான குரலில் கேட்க, அவனுமே இப்போது தானே முதல் முறையாகப் பார்க்கிறான் எனவே “தெரியலையே மா...” என்றான் அதே போன்ற குரலில்...


அதன் பிறகு தினம் தினம் வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் தன்னையே அறியாமல் மதுவை கண்கள் தேடுவதும் அவள் இருக்கும் இடத்தைச் சுற்றியே இருக்க மனம் ஏங்குவதும் என மேலும் இரண்டு மூன்று நாட்களைக் கடத்தியவன் மதுவின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செய்கையும் தன் மனதை வெகுவாகக் கவர்வதை உணர்ந்து, சில நினைவுகளின் தாக்கம் மனதை அழுத்தவும் தனக்குள்ளேயே போராடி ‘இது சரிப்பட்டு வராது’ என்ற முடிவிற்கு வந்து முடிந்தவரை மதுவிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான்.


மனதிற்குள் பல்வேறு யோசனையோடு தான் பார்த்துக் கொண்டிருந்த செய்தி சேனலிலிருந்து ஷேர் மார்க்கெட் சம்பந்தமான தகவல்களைப் பார்ப்பதற்கான சேனலை மாற்றுவதற்காக ரிமோட்டை எடுத்து இருந்தவனின் விரல்கள் அதன் போக்கில் ரிமோட்டை அழுத்திக் கொண்டே இருக்க...


ஒவ்வொரு சேனலாக மாறிக் கொண்டே இருந்தது. மனதிற்குள் முடிவை எடுத்து முடித்த வேளையில் விரல்கள் தன் அழுத்தத்தை நிறுத்தவும், அப்போது பாடல்கள் மட்டும் ஒளிபரப்பாகும் சேனலில் தன்னை அறியாமல் தேவ் அதை நிறுத்தி இருக்க....


கோகுலத்துக் கண்ணா கண்ணா


சீதை இவள் தானா

மானுமில்லை ராமனுமில்லை

கோகுலத்தில் நானா

சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

ராவணின் நெஞ்சில் காமமில்லை

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆசைக்கொரு ஆளானவன்

ஆனந்தத்தில் கூத்தானவன்

கோபியர்கள் நீராடிட

கோலங்களைக் கண்டானவன்

ஆசை அள்ளி கொண்டானவன்

அழகை அள்ளி தின்றானவன்


எனத் தொடர்ந்து ஒலிக்கவும்....


ஏதோ நினைவுகளில் அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தவன் அந்த வார்த்தைகள் காதில் விழுந்ததில் எதிரிலிருந்த திரையை வெறித்துப் பார்க்கத் தொடங்கியவனுக்கு அதில் இருந்த வார்த்தையின் பொருளும் சென்று மனதை பலமாகத் தாக்கியது.


மதுவை திரும்பி பார்க்க, அவளோ இவை எதைப் பற்றிய எண்ணமோ கவலையோ கொஞ்சம் கூட இல்லாமல் மித்தவுடனான தனியொரு உலகத்தில் அவனோடு விளையாடி சிரித்துக் கொண்டிருந்தாள்.


அழகிய வளர்ந்த குழந்தை போல மென்மையான மதுவை கண்ட நொடி கண்கள் சிவக்க, தன் மனதில் எழுந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.


அதன் பிறகு தேவ் வீட்டில் இருக்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டான். ‘வீட்டில் இருந்தால் தானே மதுவை காண கண்களும் மனமும் ஏங்கித் தவிக்கிறது’ என்ற எண்ணத்தோடு நடு இரவில் அனைவரும் உறங்கிய பிறகு வீட்டிற்கு வருபவன், விடிவதற்கு முன்பே அனைவரும் விழித்துக் கொள்ளும் முன்பு கிளம்பி சென்று விடுவான்.


இதில் இரண்டு வகையில் தேவ் பாதிக்கப்பட்டான். ஒன்று என்னதான் மதுவிடம் இருந்து தூர ஓடி ஒளிந்தாலும் மனம் என்னவோ அவளைத் தேடுவதை நிறுத்தவில்லை, மற்றொன்று இதன் காரணமாக மித்துவின் அருகாமையும் அவனைப் பார்ப்பதும் வெகுவாகக் குறையத் தொடங்கியது.


எங்கு இருந்தாலும் என்ன வேலையில் ஈடுபட்டிருந்தாலும் இவர்கள் இருவரை மட்டும் தான் மனம் அதிகம் எண்ணுகிறது என்று புரிந்தவனுக்கு ஆனால் தான் எடுத்த முடிவில் இருந்து மாறக் கொஞ்சமும் விருப்பம் இல்லை


இப்படியே ஒரு வாரம் செல்ல மதுவின் நினைவுகளில் இருந்து முழுதாக வெளிவர போராடிக் கொண்டிருந்தவனுக்குத் தனக்குப் போட்டியாக டெண்டர் சமர்ப்பித்து இருக்கும் ஆகாஷ் சோப்ரா என்பவன் மூலம் தொந்தரவு வர தொடங்கியது.


தேவ்வை இந்த டெண்டரில் இருந்து விலக வைக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காமல் போக, இதில் கலந்துக் கொள்ளாமல் தடுப்பதற்காக வெளிநாட்டு அழகி ஒருத்தியை தேவ்வியிடம் அனுப்பியவன் அவன் விருப்பப்படி நடந்துக் கொண்டு அவன் தன்னை மறந்து இருக்கும் வேளையில் இந்த டெண்டரில் கலந்துக் கொள்ள விருப்பம் இல்லை என்ற பத்திரத்தில் கையொப்பம் வாங்கி விடப் பணித்திருந்தான்.


திடீரென முன்பின் தெரியாத ஒருத்தி தன்னிடம் வலிய வந்து பழகி கொஞ்சும் குரலில் தன்னோடு வர சொல்லி அழைக்கும் போதே ஏதோ ஒரு தவறு அவளிடம் இருக்கிறது என்ற அறிந்து கொண்டான் தேவ்.


ஆனாலும் இப்போது தன்மன தவிப்பில் இருந்து வெளியேறி மதுவின் நினைவுகளை மறக்க இவளையே மருந்தாகப் பயன்படுத்த எண்ணி அவளோடு கிளம்பிச் சென்றான்.


அறைக்குள் நுழைந்த நொடியிலேயே கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்க விரும்பாதவள் போல தன்னிடம் நடந்துக் கொண்டு படுக்கையில் தன்னோடு சேர்ந்து சரிந்தவளை, ஒரு ஏளன இதழ் வளைவோடு அவளின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் செல்கிறது என பார்த்துக் கொண்டு இருந்தவன், போன் அடிக்கும் சத்தத்தில் தன் மேல் கவிழ்ந்திருந்தவளை விலக்கி படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளிலின் மேல் இருந்த போனை எடுத்துக் கண்ணைத் திறக்காமலே காதுக்குக் கொடுத்தான்.


"ஹலோ.." என்ற இவனின் கம்பீரமான குரலுக்கு அந்தப் பக்கம் இருந்து எந்தச் சத்தமும் வராமல் போக, மீண்டும் சற்று எரிச்சலோடு "ஹலோ..." எனவும் அந்தப் பக்கம் இருந்து மெல்லிய வளையலோசை கேட்கவும் காதிலிருந்த போனை எடுத்து அழைத்தது யார் எனப் பார்த்தவன், அதில் ஒளிர்ந்த பெயரை கண்டு எரிச்சல் எழ, "போன் வேலை செய்யுதான்னு எனக்குப் போன் பண்ணி டெஸ்ட் பண்றீயா..." என எரிந்து விழுந்தான்.


அதில் பதறி, "இ.. ல்.. லை..." என்ற மெல்லிய நடுக்கமான குரலில் பதில் வந்தது. "இப்போ எதுக்குக் கால் பண்ண...? " எனச் சிடுசிடுக்கவும், "அ.. து.. நீ ங்... க... ராஜா... கிட்ட... ராத்திரி வந்து... வெளியே... அழைச்சிண்டு... போறேன்னு... சொல்லியிருந்தேளா...." எனத் தயங்கி தயங்கி மது கேட்கவும், அப்போதே காலையில் குழந்தையிடம் சொல்லியது நினைவு வந்ததில் நெற்றியை மெல்ல தேய்த்துக் கொண்டான் தேவ்.


"ஆமா... என்ன இப்போ..." என அதற்கும் சேர்த்து அவள் மேல் பாய, "இல்லை... நீங்க.... வராம சாப்பிட மாட்டேன்னு... ஒரே அழுகை..." என அவள் முடிப்பதற்குள், "என்ன இன்னும் பிள்ளை சாப்பிடலையா... அது கூடச் சரியா செய்யலைன்னா நீ எதுக்குத் தண்டமா வீட்ல...." என எதையோ நினைத்து தேவ் எகிறவும், "நான்... எத்தனையோ சமாதான படுத்திட்டேன்.... அவன் உங்களோட வெளியே.... போய்தான்..." என்று பேசிக் கொண்டு சென்றவளை தடுத்து, "பத்து நிமிஷத்தில் நான் வரேன்... அவனை ரெடி பண்ணு..." என்றவாறே படுக்கையில் இருந்து எழுந்து அருகில் இருந்த சட்டையை தேவ் எடுக்கவும் அவனைச் செல்லவிடாமல் தடுக்க எக்கி அவன் கைகளைப் பிடித்தவளை திரும்பி ஒரு தீ பார்வை பார்த்தான் அவன்.


அந்த ஒற்றைப் பார்வைக்கே அரண்டு பிடித்திருந்த அவன் கைகளை விட்டுவிட்டு படுக்கையிலேயே இரண்டடி பின்னுக்கு நகர்ந்தாள் அந்த வெள்ளைகார அழகி .

இங்கே நிறைய பேருக்கு நான் எப்போ எபி போடறேன்னு தெரியலைன்னு சொல்லி இருக்கீங்க.. அதே போல நான் லீவ் சொல்றதும் அடுத்த கதை எப்போன்னு அறிவிக்கறதும் தெரிய வரலைன்னு சொல்லி இருக்கீங்க..


கீழே என் வாட்ஸ்அப் சேனல் லிங்க் கொடுக்கறேன்.. அதில் ஜாயின் செஞ்சுக்கோங்க.. நான் அங்கே மெசேஜ் போட்டதும் உங்களுக்கு நோடிபிகேஷன் வரும்.. எந்த இடையூறும் இல்லாம என் கதைகளை தொடரலாம்..


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN -17


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..
1000191536.jpg
மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..

"சதிராடுதே மனமே..!!"

நேரடியாக அமேசான் கிண்டிலில் வந்த கதை இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது..

இந்தர் - யமுனா ஜோடியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. நிறைய பேருக்கு இவங்களை பிடித்து இருந்ததாக சொன்னீங்க.. இவர்களைப் பிடித்த அளவுக்கு சீதாலட்சுமியையும் இங்கே பலருக்கு பிடித்திருந்தது..

இவர்கள் இப்போது புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள்.. 10% தள்ளுபடி விலையில் புத்தகம் கிடைக்கும்.. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..

விலை - ₹330
தள்ளுபடி விலை - ₹300


நிவிதா டிஸ்ட்ரிபியூசனில் ஐந்து புத்தகங்களை சேர்த்து வாங்கினால் கொரியர் சார்ஜ் இலவசம்..

மேலும் தகவலுக்கு கீழே உள்ள whatsapp சேனலை பாருங்கள்..


புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

99940 47771 / 99623 18439

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 18

தேவ் கிளம்பத் தயாரானதும் எங்குத் தனக்கு இடப்பட்ட கட்டளையைச் செய்து முடிக்காமல் போய்விடுவோமோ என்று எண்ணியவள் அவனைச் எப்படியாவது தடுக்க வேண்டும் என எண்ணி அதற்கு முயற்சி செய்ய...


ஆனால் வார்த்தைகளிலோ செயலிலோ அல்லாது தேவ்வின் ஒரு பார்வையே அந்த அழகியை அதன் பிறகு தேவ்வை நெருங்க துளியும் தைரியமில்லாமல் செய்திருந்தது.


உள்ளுக்குள் ஆகாஷ் சோப்ராவை எண்ணி பயந்தாலும் அதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கும் தைரியம் அவளிடம் இப்போது சுத்தமாக இல்லை. வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருக்க முடியாமல் போனதை எண்ணி பணத்தைத் திரும்ப ஆகாஷ் கேட்டு விடுவானோ என்ற குழப்பத்துடனே அவள் இருக்க... வெகு நேரத்திற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் தேவ்.


வீட்டிற்குச் செல்லும் வழியெங்கும் தேவ்வின் காதுகளில் மதுவின் அந்த இனிமையான குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. இதுவே மதுவோடு தேவ் முதல் முறை போனில் பேசுவது, அவளிடம் அலைபேசி கூடக் கிடையாது. சென்ற வாரமே தேவ் வாங்கிக் கொடுத்திருந்தான்.


அன்று மித்துவிற்குத் தடுப்பு ஊசி போடும் நாள் அதை மதுவிடம் கூறியவன் தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதால் அதை முடித்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு வந்து விடுவதாகவும் பதினொரு மணிக்கு அப்பாயின்மென்ட் என்பதால் மதுவை மித்துவை அழைத்துக் கொண்டு டிரைவரின் துணையோடு அந்த நேரத்திற்கு மருத்துவமனை வந்தால் போதுமானது என்றும் கூறியவன்


“உன் செல் நம்பர் கொடு... நான் வந்துட்டு கால் பண்றேன்...” எனக் கேட்க, திருத்திருவென விழித்தபடி “நேக்கு தான் போனே இல்லையே...” எனப் பதிலளித்திருந்தாள் மது.


அவளையே பார்த்தவன் “உன்கிட்ட போன் இல்லையா...?” என நம்ப முடியாமல் கேட்கவும் “இல்லை” என மண்டையை மண்டையை ஆட்ட... “சரி சரியான நேரத்திற்கு வந்து சேரு...” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான் தேவ்.


அடுத்த ஒரு மணி நேரத்தில் கதிரின் மூலம் மதுவின் கைக்குப் புத்தம் புதிய அலைப்பேசி வந்து சேர்ந்திருந்தது. அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதையும் கதிரே பொறுமையாக எடுத்துக் கூறி விளக்கினான்.


மதுவைப் பற்றிய நினைவுகளோடு வீடு வந்து சேர்ந்தவன், மித்துவை அழைத்துக் கொண்டு சென்று அவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தபடி அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து இரவு உணவையும் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர, நள்ளிரவை தாண்டியிருந்தது, அதற்குள் மித்துவும் உறங்கி இருந்தான்.


எவ்வளவுதான் விலகி இருக்க முயன்றாலும் மதுவின் நினைவுகளைத் தன் மனதில் இருந்து விலக்கி வைக்கத் தேவ்வால் முடியவே இல்லை. இது அவனுக்குப் பெரிய போராட்டமாக இருந்தது.


அதனாலேயே தன்னைப் பற்றியும் தன் பழக்க வழக்கங்களைப் பற்றியும் மதுவின் முன்பு வெளிப் படுத்திக் கொண்டால் அவள் தன்னிடமிருந்து அருவருப்போடு ஒதுங்கிக் கொள்வாள் என்று தோன்றவும் பல நேரங்களில் அவள் பார்க்கும் வகையில் பல பெண்களோடு அலைபேசியில் பேசுபவன் “உன்னைப் பார்க்கத்தான் கிளம்பி வருகிறேன்...” என மதுவின் காதுகளில் விழும் படி கூறிவிட்டு எத்தனையோ நாட்கள் கிளம்பி சென்று இரவில் வீடு திரும்பாமல் கூட இருந்திருக்கிறான்.


ஆனால் அப்போதும் கூடத் தேவ்வை காணும் போது மது அருவருப்பு படுவதோ முகத்தை வெறுப்போடு சுழிப்பதோ எல்லாம் கிடையாது. மது எப்போதும் போல இயல்பாக எப்படி இருப்பாளோ அப்படித்தான் இருந்து கொண்டு இருக்கிறாள்.


அவளைப் பொறுத்தவரை அவன் முதலாளி அவ்வளவே... தேவ் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தால் அவளுக்கு அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை என்பதனால் எதைப் பற்றியும் மது யோசித்துப் பார்த்தது கூடக் கிடையாது.


ஆனால் தேவ், தன்னை மது அருவருப்போடு பார்ப்பது தெரிந்தால் அதுவே தன்னை அவளிடம் இருந்து தூர நிறுத்திக் கொள்ளத் தனக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியைத் தழுவின.


அதன் பிறகு தேவ் மதுவிடம் அளவுக்கு அதிகமாகவே கடுமையாக நடக்கத் தொடங்கியிருந்தான். அவளை கண்டாலே எரிந்து விழுவது தேவை இல்லாமல் சிடுசிடுப்பது ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டுவது என நாளுக்கு நாள் தேவ்வின் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்ல...


எப்போதுமே யாரிடமும் பொறுமையாக மென்மையாகப் பேசி பழக்கமில்லாத தேவ் தவறு செய்தவர்களைத் திட்டி அதற்கான தண்டனையை வழங்குவான் எனத் தெரிந்து இருந்தவள் காரணமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் தன்னை அழைத்துத் திட்டுவதும் கோபப்படுவதும் கண்டு தன்னைக் கண்டாலே அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என எண்ணிக் கொண்டவள் முடிந்தவரை தேவ்வின் முன் வராமல் இருக்க என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுக்க முடியுமோ அத்தனையையும் எடுக்கத் துவங்கினாள்.


இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க... தொழில் விஷயமாக வெளிநாட்டிற்குச் சென்று இருந்தான் தேவ். அன்று கிருஷ்ணஜெயந்தி தங்கள் வீட்டில் முக்கிய விழாவாகக் கொண்டாடி பழக்கப்பட்ட மதுவிற்கு இங்கு எந்த ஏற்பாடுகளும் அதற்காகச் செய்யப்படாமல் இருப்பது கண்டு லலிதாவிடம் விசாரிக்க...


“பல வருடங்களுக்கு முன்பு நானும் பலகாரங்கள் எல்லாம் செய்து கொண்டாடிட்டு தான் இருந்தேன்... எப்போதுமே தேவ்வுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது... அதிலும்...” எனத் தொடங்கியவர் சற்று இடைவெளி விட்டு, நீண்ட ஒரு பெருமூச்சு வெளியிட்ட பிறகு “சில சம்பவங்கள் அவனை ரொம்பவே இறுகிபோகச் செய்துட்டது... அதன் பிறகு விக்ரம் பெரிய அளவில் எந்தத் தெய்வ வழிபாட்டையும் வீட்டில் அனுமதிக்கவே இல்லை... ஆனால் என் மன திருப்திக்காகப் பால் வெண்ணைத் தயிர்ன்னு வைத்து நான் மட்டும் வணங்குவேன்... அதையெல்லாம் அவன் தடுக்கவும் மாட்டான் இந்த வருடம் அதற்கும் வழியில்லாமல் போச்சு...” எனக் கசந்த புன்னகையோடு பதில் அளித்தார்.


“குட்டிக்கண்ணனை வீட்டுல வெச்சிண்டு பேசுற பேச்சா மாமி இது...” என்றவள் “சார் தான் ஆத்துல இல்லையே மாமி... நாம கொண்டாடுவோமா...” எனச் சிறு குழந்தையின் ஆர்வத்தோடு கேட்டவளை கண்டு மறுக்க மனம் இல்லாமல் மெல்ல புன்னகைத்தவாறே சம்மதம் கொடுத்தார்.


அதன்படி மது அவசர அவசரமாகப் பூஜைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினாள். மாலை அழகாகப் பூஜை அறையை அலங்காரம் செய்து சிறுவயதிலிருந்தே அவளுக்குத் தெரிந்த பட்சணங்களை எல்லாம் செய்து படைத்தவள், மித்துவை குட்டி கண்ணனாகவே அலங்காரம் செய்து வைத்திருந்தாள்.


அனைவரையும் பூஜைக்கு அழைத்தவள் லலிதா அம்மாவையும் வீல் சேரில் அமர வைத்து பூஜை அறைக்குக் கொண்டு வந்திருந்தாள். எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவு அழகான அலங்காரங்களோடு நிறைவான பூஜையை மது செய்ததைக் கண்குளிர பார்த்தபடி அமர்ந்திருந்தவருக்குப் பூஜை அறையே ஒளி பெற்றது போன்று தோன்றியது.


தன் அருகில் கண்மூடி அமர்ந்து இருந்தவளை கண்டு “ஒரு பாட்டு பாடேன் மது...” என லலிதா கூறவும், தங்கள் வீட்டில் பூஜை முடிந்த பிறகு கடவுளை எண்ணி பாடுவது வழக்கம் தான் என்பதனால் பாடத் துவங்கி இருந்தாள்.


ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்


மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டிய பின்

ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ

ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்


மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

என மித்துவை மடியில் அமர்த்தியபடி அழகாக அது பாடவும், பசுவின் மடியில் முட்டி விளையாடும் கன்றைப் போல அவளிடம் தன் சேட்டைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தான் அந்தக் குட்டிக்கண்ணன்.


இவற்றை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்கு அவள் அந்தக் கண்ணனின் யசோதையாகவே தெரிந்தாள்.


இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சரியாக அதே நேரம் வீடு திரும்பி இருந்தான் தேவ். காரைவிட்டு இறங்குகையில் சாம்பிராணி மனம் கமழ நெய் வாசம் மூக்கைத் துளைத்தது. என்ன இது வித்தியாசமான மனம் என்ற எண்ணத்தோடு கேள்வியாகப் புருவத்தை உயர்த்தியவன் வீட்டிற்குள் காலை வைத்த நொடி மதுவின் இனிமையான குரல் ஒலிக்கத் தொடங்கியது.


அனைவரும் பூஜை அறையைப் பார்த்தபடி அமர்ந்து இருப்பதைக் கண்டவன் சத்தம் எழுப்பாமல் ஸ்டடி ரூமிற்குள் சென்று நின்று கொண்டான். அங்கிருந்து திரைச்சீலையை விலக்கிப் பார்த்தால் பூஜை அறையும் மதுவும் தெளிவாகத் தெரிந்தது.


அப்படியே கைகளைக் கட்டிக் கொண்டு பாடலையும் மதுவையும் மித்துவின் அலங்காரத்தையும் சேட்டைகளையும் ரசித்தபடி நின்றிருந்தான் தேவ். பூஜை முடிந்து பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கிய மது லலிதா அம்மாவை அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தாள்.


“உனக்கு ஆடத் தெரியுமா மது..?” எனக் கேட்ட வரை கண்டு நகைத்தவள் “கொஞ்சம்...” என்று பதில் அளிக்க, “எனக்காக ஒரு டான்ஸ் ஆடுறியா...?” என ஆர்வமாக லலிதா கேட்கவும் “சரி” எனத் தலை அசைத்தவள் மித்துவை இறக்கிவிட முயல...


அவனோ அவளிடம் இருந்து இறங்க மாட்டேன் என அடம் பிடித்த படி மதுவின் கழுத்தை கட்டிக் கொண்டான். “ராஜா சமத்தா இங்கே உட்காந்துப்பியாம்...” எனச் சமாதானம் செய்ய, “போ முடியாது” என்பது போலத் தலையை ஆட்டியவன் மேலும் இறுக்கமாக மதுவின் கழுத்தை கட்டிக் கொண்டு அவள் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.


“சரி விடு மா...” என லலிதா கூறவும், “இருங்கோ மாமி...” என்றவள் தான் போட்டிருந்த ஷாலை எடுத்துச் சோபாவில் போட்டுவிட்டுப் பரதம் ஆட நினைத்திருந்த முடிவை மாற்றி மித்துவை தூக்கி வைத்தபடியே பாடிக் கொண்டே ஆடத் துவங்கினாள்.


முகுந்தா முகுந்தா


கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா


பெண்ணை உண்டான பாச நோய்க்கு மருந்தாக வா...

என்று அங்குக் காதல் நோய்க்கு என வரும் வார்த்தையை மாற்றி மித்துவை மனதில் கொண்டு அவன் மேல் பாச நோய் அதிகமாகிக் கொண்டே செல்வதாக அவள் வார்த்தைகளில் மாற்றிப் போட்டதெல்லாம் கவனிக்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை ஒருவனைத் தவிர.


அழகாகப் பாடிக் கொண்டு கையில் மித்துவை வைத்தபடி கொஞ்சி கொண்டே ஆடிக் கொண்டிருந்தவளையே விழிவிரிய பார்த்து கொண்டிருந்தனர். அறைக்குள் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த தேவ்விற்கு அவள் வார்த்தைகளை மாற்றிப் போட்டுப் பாடியது தெளிவாகத் தெரிந்தது


முகுந்தா முகுந்தா


கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

என்ன செய்ய நானோ தோல் பாவைதான்


உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்...

என்று தன் ஆடலையும் பாடலையும் மது தொடர்ந்து கொண்டே இருக்க.. அவளின் கைகளில் இருந்த குட்டிக்கண்ணன் மதுவின் முகவாயை பற்றித் தன்னை நோக்கி திருப்பியவன் “ம்மா...” என்று அழைத்து இருந்தான்.

இங்கே நிறைய பேருக்கு நான் எப்போ எபி போடறேன்னு தெரியலைன்னு சொல்லி இருக்கீங்க.. அதே போல நான் லீவ் சொல்றதும் அடுத்த கதை எப்போன்னு அறிவிக்கறதும் தெரிய வரலைன்னு சொல்லி இருக்கீங்க..

கீழே என் வாட்ஸ்அப் சேனல் லிங்க் கொடுக்கறேன்.. அதில் ஜாயின் செஞ்சுக்கோங்க.. நான் அங்கே மெசேஜ் போட்டதும் உங்களுக்கு நோடிபிகேஷன் வரும்.. எந்த இடையூறும் இல்லாம என் கதைகளை தொடரலாம்..


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN -18


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:
Status
Not open for further replies.
Top