உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 3
அனுதினமும் வாழ்க்கை நமக்கு புதிர் வைத்து காத்திருக்கிறது. அந்த புதிருக்கான விடை நமக்குள் தான் இருக்கும்.ஆனால் அதை நாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.
வாழ்க்கை பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் ஏராளம். இன்பம், துன்பம் இரண்டுமே மாறி,மாறி வருவது தானே இயற்கை.
அதை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலே நம் வாழ்க்கை பயணம் வெற்றியில முடியும். ஆனால், அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். எந்த ஒரு காத்திருப்பிற்கும் நிச்சயமான பலன் உண்டு.
அப்படி தான் நான்கு வருடமாக தனக்கானவளை காணமுடியுமா? என்று ஒரு புறம் மிகன் காத்திருந்தாலும், அவளை நினைக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் நாள் தோறும் அலை தேடிய கரையாய் துடித்துக் கொண்டிருந்தான்.
என்ன தான் அவள் மேல் கட்டுக்கடங்காத கோவம் இருந்தாலும் , அவளை ஒரு முறையாவது காண வேண்டும் என்று வானம் பார்த்த பூமியாய் ஏங்கி தவித்தவனுக்கு ,காலம் அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
வாய்ப்பை மட்டும் தான் காலம் வழங்கும்.அதை இறுகப் பற்றிக் கொண்டு நாம் தான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். இனி நிகழும் சந்திப்பு இருவருக்கும் வரமா? சாபமா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.
தன்நினைவுகளிலே மிகன் சூழன்றுகொண்டிருந்தாலும், தந்தை சொன்ன டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ருக்கு மகிழுந்தை சரியாக ஓட்டி வந்து விட்டான்.
வண்டியை உரிய பகுதியில் நிறுத்தி விட்டு மூவரும் கடையினுள் சென்றனர்.
மிகனோ, மகிழியை தோள்களில் சுமந்து கொண்டு மளிகை சாமான்கள் இருக்கும் பிரிவுக்கு சென்றான். உலகமாறன் தனக்கு தேவையான சில பொருட்கள் வாங்க அவர் வேறு பிரிவுக்குச் சென்றார்.
கடையில் பொருட்களை பார்த்ததும் மகிழி மிகனிடமிருந்து கீழே இறங்க துடித்தாள்.மிகனும் அவளை கட்டுப்படுத்த முடியாமல் கீழே இறக்கி விட்டான்.
மகிழியோ, வேடிக்கை பார்த்தபடி மிகன் பின்னே தளிர் நடை நடந்து வந்தாள். அவனோ, தன் அத்தை மணியரசி சொன்ன சாமான்களை தேடி எடுத்து கொண்டிருந்தான்.
சாக்லேட் ஃபாக்ஸ் வைக்கப்பட்டிருந்த மேல் அடுக்கை மகிழி பார்த்தவுடன் ,மிகன் பின் செல்லாமல் அப்படியே நின்று விட்டாள்.
சாமான் எடுக்கும் மும்மரத்தில் மிகனோ, மகிழி கூட வராததை கவனிக்கவில்லை.
திகழொளிக்கு புத்தாண்டுக்கு விடுமுறை என்பதால் கமலி அவளை அன்று எங்காவது போகலாம் என்று கட்டாயப்படுத்தி வெளியில் அழைத்து வந்தாள்.
அமுதனுக்கு ப்ராஜெக்ட் வேலை இருப்பதால், தான் வரவில்லை என்று கூறி விட்டான். அதனால், தோழிகள் இருவரும் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தால் , அதை வாங்கிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு போகலாம் என்று நினைத்து நகரத்தின் பிரபளமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ருக்கு வந்தனர்.
உள்ளே வந்தவர்கள் அவரவர்களுக்கு தேவையான பொருட்கள் இருக்கும் பிரிவை தேடிச் சென்றனர்.
கருமமே கண்ணாக தனக்கான பொருட்களை டிராலியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த திகழொளியின் புடவையை பிடித்து இழுத்தது மூன்று வயது மதிக்க தக்க பெண் குழந்தை.
அவளோ, யார் தன் புடவையை பிடித்து இழுப்பது என்று நினைத்து திரும்பினாள்.
அங்கே நின்றிருந்த பெண் குழந்தையை கண்டு அதன் அழகில் மயங்கியவள், அதன் முன் மண்டியிட்டு அமர்ந்து "அதன் கன்னத்தை மென்மையாக பற்றி என்னடா தங்கம் வேண்டும்..."என்று கேட்டாள்.
அதுவோ, அங்கு மேல் அடுக்கில் வைக்க பட்டு இருந்த சாக்லேட் ஃபாக்ஸ்ஸை கை காட்டியது.
சட்டென்று எழுந்து அதை எடுத்து குழந்தையின் கையில் கொடுத்தவள் "உன் அம்மா, அப்பா வரலையா?அவர்கள் எங்கே.." என்று கேட்ட பொழுது.
"மகிழி .."என்று அழைத்துக் கொண்டு வந்தவனை பார்த்தவள் சிலையாக உறைந்து நின்றாள்.
யாரை இனி தன் வாழ்வில் பார்க்கவே கூடாது என்று எண்ணி இருந்தாளோ! அவனை மீண்டும் பார்க்க வைத்தது விதியின் விளையாட்டா..?
அவனோ ,இவளை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்தாளும், அதை காட்டிக் கொள்ளாமல் அவளை கல்லையும், மண்ணையும் பார்ப்பதை போல் பார்த்துவிட்டு தன்னிடம் "அப்பா .."என்று அழைத்துக்கொண்டு ஒடி வந்த குழந்தையை ஆசையாக தூக்கிக் கொண்டவன் அவளை சிறிதும் சட்டை செய்யாமல் திரும்பி நடந்தான்.
தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தோழியை தேடிக்கொண்டு வந்த கமலி தான் அழைத்ததை கூட கவனிக்காமல்,யாரையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் திகழொளியைப் பார்த்தவள், தானும் தோழியின் பார்வை சென்ற திசையை திரும்பி பார்க்க .. அங்கே சென்றவனைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் தன் தோழியிடம் "திகழி இது ..இது.. மிகன்னா..?அந்த குழந்தை அவருடையதா..? என்று கேட்டாள்.
திகழொளியோ , எதுவும் பேசாமல் நின்றாள் . அவள் மனதில் சூரவாளியே வீசிக் கொண்டு இருந்தது.
ஏன்!ஏன்! தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்தவளுக்கு, கண்களில் நீர் வெளியே வர இப்பவா,அப்பவா என்று துடித்துக் கொண்டு இருந்தது.
கமலியோ, தோழியின் நிலமையை நினைத்து கவலை அடைந்தாள்.
இப்பொழுது தான் கொஞ்சம் தேறி வந்தாள். அது அந்த விதிக்கு பிடிக்கவில்லையா? மறுபடியும் அந்த திமிர்பிடித்தவனை எதற்கு இவள் கண்களில் காட்டி இவளை உயிரோடு கொல்லுகிறது என்று நினைத்தாள்.
சிலையாக நின்ற திகழொளியை அழைத்துக் கொண்டு, அவள் வாங்கியதையும் எடுத்துக் கொண்டு பில் போடும் இடம் நோக்கிச் சென்றாள்.
மிகனோ உள்ளமும்,உடலும் நடுங்க தன் கையிலிருந்த மகிழியை இறுக பற்றிக் கொண்டு தன் தந்தை இருந்த இடம் தேடிச் சென்றான்.
அவன் மனம் கண்ணாடித் துண்டுகள் போல் சுக்கு நூறாக உடைந்து விட்டது. யாரை இத்தனை நாள் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தானோ ? அவளை பார்த்தும் வலி தான் அதிகரித்தது.எப்படித் தான் அவள் முன் எதையும் முகத்தில் காட்டாமல் வந்தானோ? அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
உலகமாறனோ, மிகனின் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி திகைத்து போய்விட்டார். அவன் முகத்தில் சொல்ல முடியாத வலி தெரிந்தது.
மகனிடமிருந்த மகிழியை வாங்கிக் கொண்டு " என்னப்பா ஆச்சு.. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்றவரிடம்.
"ஏனோ பயங்கர தலைவலி.." என்று பேசவே முடியாமல் சொன்னான்.
"அச்சோ திடீர்னு என்னாச்சுப்பா.. "
"தெரியல .. நீங்க வாங்க வேண்டியது வாங்கியாச்சுன்னா பில் போட்டுட்டு போகலாம் .. "என்றவனிடம்
"எனக்கு எல்லாம் வாங்கியாச்சு போலாம், நீ வாங்கியது எங்கேப்பா.."
" பில் கவுண்டரில் இருக்குப்பா.." என்றபடி நடந்தவனிடம்.
" பாப்பாவுக்கு எதுக்குப்பா இவ்வளவு பெரிய சாக்லேட் ஃபாக்ஸ்.." என்று தந்தை கேட்ட பின்பு தான் மகிழியின் கையில் இருந்த மிட்டாய் டப்பாவை பார்த்தான்.
'தான் மகிழியை தேடி போன போது, இதை தான் அவள் பாப்பாவுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாளா?' என்று நினைத்தவன் தந்தையிடம் பதில் பேசாமல் அதற்கும் சேர்த்தே பில் போட்டான்.
ஏனோ அதை வேண்டாமென்று அவனால் சொல்ல முடியவில்லை.
திகழொளியோ, தன் நிலை மறந்து கமலி இழுத்த இழுப்புக்கு சென்றாள்.அவள் அவளாக இல்லை. அவள் மனதிற்குள் ஆயிரம் சம்மட்டிகள் ஒரு சேர அடிக்கும் வலியை அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.
கமலியோ பில் போடும் இடத்தில் மிகன் இருப்பதை தொலைவில் இருந்தே கண்டவள், அங்கே செல்லாமல் திகழொளியை வேறு புறம் இழுத்துச் சென்றாள்.
தன் தோழி மீண்டும் அவனைப் பாரத்தாள் தாங்க மாட்டாள். இப்போதே, அவள் உடைந்து அழுகும் நிலையில் இருக்கிறாள். என்று நினைத்தவள் வேறு புறம் அழைத்து சென்றாள்.
மிகனோ, எப்போது கடையை விட்டு வெளியில் போவோம் என்ற நிலையில் இருந்தான்.
திகழொளியை தன் தந்தை பார்த்துவிடக் கூடாதே என்று கலங்கியவன், பில் பணத்தை கொடுத்து விட்டு, வாங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு,மகிழியையும் தூக்கிக் கொண்டு ,மெதுவாக வந்த தந்தையை அவசரப் படுத்தி அழைத்துக் கொண்டு, கடையை விட்டு வெளியில் சென்றான்.
மிகன் கடையை விட்டு சென்றவுடன் கமலியோ, தாங்கள் இருவரும் வாங்கி பொருட்களுக்கு பில் போட்டு வாங்கிக் கொண்டு திகழொளியையும் அழைத்து கொண்டு வெளியில் வந்தாள்.
திகழொளியே அவள் இழுத்த இழுப்புக்கு வந்தாளே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.கமலிக்கு அதுவே மனதிற்குள் பயத்தை உண்டு பண்ணியது.
திகழொளி இருக்கும் நிலைக்கு வேறு எங்கும் இனி செல்ல முடியாது. என்று நினைத்த கமலி, அவளை தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள்.
கமலியின் பெற்றோர் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருப்பதால், திகழொளிக்கு தனிமை கிடைக்கும் என்று நினைத்து அழைத்து வந்தாள்.
அவளோ ,தன்நிலையிலேயே இல்லை.. ஒரு வார்த்தை பேசாமல் தொய்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
கமலிக்கோ, அவளின் மெளனம் பீதியை கொடுக்க அவளை தொட்டு" திகழி ஏதாவது பேசு டீ .."என்று அவளை உலுக்கினாள்.
திகழொளியோ ,மொழியே மறந்தது போல் அவளை பார்த்து வைத்தாள்.
கமலியோ, தன் தோழிக்கு மிகனைப் பார்த்தது பேரதிர்ச்சி. இவள் இப்படியே இருந்தால், இவள் உடம்புக்கு எதையாவது இழுத்துக் கொள்வாள் என்று நினைத்து, அவளின் கன்னத்தில் பளார் என்று ஒரு அடி வைதாள்.
திகழொளிக்கு அப்போது தான் உணர்வே வந்தது.அவள் தோழியை அதிர்ந்து பார்க்கவும்..கமலியோ, " திகழி பேசு டீ எனக்கு உன்னை இப்படி பார்க்க பயமா இருக்கு.." என்றவுடன்.
"கமலி.." என்றவளுக்கு வேறு வார்த்தை வரவில்லை..நான்கு வருடமாக அடக்கி வைத்திருந்த துக்கத்தை எல்லாம் கதறி தீர்த்தாள்.
கமலியால் அவளை தேற்றுவே முடியவில்லை.. அவளை கடந்த நான்கு வருடம் கூடவே இருந்து பார்த்தவள். அவளின் மனக்கவலை எல்லாம் இப்படி அழுதாவது கரையட்டும் என்று அவளை மடியில் போட்டுக் கொண்டு, முதுகை தடவி கொடுத்து படி இருந்தாள்.
தன் தோழி ஒரு சதவீதம் கூட மிகனை மறக்கவே இல்லையே , இத்தனை நாள் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு மறைத்து கொண்டு இருந்திருக்கிறாள். என்று கமலிக்கு அப்பொழுது தான் நன்றாக புரிந்தது.
'இவளோ, அவனை நினைத்துக் கொண்டு நடைபிணமாக வாழ்கிறாள்.அவனோ, இவள் நினைவு சிறிதும் கூட இல்லாமல் கல்யாணமும் பண்ணி ஒரு குழந்தையையும் பெற்று வைத்திருக்கிறான். ' என்று மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டு இருந்தாள்.
.
திகழொளியோ, அழுது, அழுது ஓய்ந்து போய்விட்டாள்.நெருப்பில் சுட்ட கொடியாய் வாடி வதங்கி கிடந்தவளை காணச் சகிக்காமல், அமுதனுக்கு அழைத்து நடத்தை சுருக்கமாக சொல்லி வீட்டுக்கு உடனே வரச் சொன்னாள்.
மிகனோ எப்படி வீடு வரை வாகனத்தை ஓடினான் என்று அவனுக்கே தெரியாது.வீடு வந்ததும் தன் அறையில் சென்று அடைந்தவன் இரவு வரை வெளியே வரவே இல்லை.
வீட்டில் இருப்பவர்களும் , அவனுக்கு தலைவலி என்பதால் ஓய்வு எடுக்கட்டும் என்று தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள்.
மிகனோ, பைத்தியம் பிடித்தவன் போல் தன் அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்தான்.
அவன் மனம் முழுவதும் திகழொளியின் நினைவே ஆக்கிரமித்திருந்தது.அவள் மீதிருந்த கோவத்தையும் தாண்டி, ' எப்படி இளைத்துவிட்டாள். இதுவரை திருமணமும் ஆகவில்லை போல் . கண்களிலும் ஒளியே இல்லை' என்று அவளைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
அவளை பார்த்த சில நொடிதுளிகளிலியே அவளை கூர்ந்து கவனித்திருந்தான்.
எல்லாம் தன்னால் தான் என்று ஒரு புறம் வருந்தினாலும்,இன்னொரு புறம் சொல்வதை கேட்காமல் இந்தளவிற்கு இழுத்து கொண்டாளே சண்டாளி என்றும் நினைத்துக் கோவப்பட்டான்.
அவள் வாழ்க்கையும் கெடுத்துக் கொண்டு, தன் வாழ்க்கையையும் கெடுத்து யாருக்கு என்ன பிரயோஜனம்.
"ஏண்டி என்னை இப்படி உயிரோடு கொல்கிறாய்.." என்று வாய்விட்டு புலம்பி தவித்தான்.
அமுதன் அடித்து பிடித்து கமலி வீட்டுக்கு வந்தவன் தன் தமக்கையின் நிலை கண்டு உடைந்து போய் விட்டான்.
தாங்கள் இத்தனை நாள் கஷ்டப்பட்டு தேற்றி இருந்தவளை, வந்து ஒரே நொடியில் அத்தனையும் கெடுத்து விட்டானே என்று மிகனை மனதிற்குள் வறுத்து எடுத்தான்.
பித்து பிடித்தவள் போல் இருந்த தமக்கையை அழைத்துக் கொண்டு வீடு வந்தான்.எத்தனை சமாதானம் சொல்லியும் அவனால் திகழொளியை தேற்ற முடியவில்லை.
வீடு வந்த மகளின் தோற்றத்தைக் கண்டு பயந்து போய் கேள்வி கேட்ட பெற்றவர்களிடம் அமுதனோ ,நடந்ததை சொல்லாமல் அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்தான்.
திகழொளியோ இரவு சாப்பிடவும் இல்லை..தன்னையே சுற்றி சுற்றி வந்த தம்பியிடம் "தலைவலிக்குது அம்மு கொஞ்ச நேரம் தூங்கிறேன் .." என்று கூறி கதவை அடைத்து விட்டு சாளரத்தின் வழி ஆகாயத்தில் தெரிந்த நிலவை பார்த்தபடி நின்றாள்.
மனதிற்குள் ' ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு சாபம்..நான் என்ன தவறு செயதேன்..அவனை உயிராக நேசித்தது குற்றமா?என் மனம் அவனுக்கு என்றுமே புரியாதா? அந்த குழந்தை அவன் குழந்தையா ? அவனுக்கு கல்யாணமாகிவிட்டதா ? அச்சோ என்னால் தாங்க முடியவில்லையே ? இத்தனை நாள் கழித்து இப்படி ஒரு நிலையிலா அவனை சந்திக்கனும்..' என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு மருகினாள் .
மனதின் வலியை பொறுக்க முடியாமல் சுவற்றில் சாய்ந்து தொய்ந்து போய் அமர்ந்தவள் மெளனமாக கண்ணீர் வடித்தாள்.
மிகனோ, நடந்ததை எல்லாம் எண்ணி..எண்ணி தன் காயத்தை, அதிகப்படுத்திக் கொண்டான்.
அறையில் மூச்சு முட்டுவது போல் இருக்க சாளரத்தை நன்றாக திறந்து வைத்துக் கொண்டு, வான் நிலவை வெறித்த படி உயிரற்ற சிலையாக நின்றான்.
வெண்ணிலவு மட்டுமே இருவரின் நிலை அறியும். இருவருக்கும் அழகாக தொடங்கிய நாள் தாள முடியாத துக்கத்துடன் முடிந்தது.
தொடரும்
..
(அடுத்த எபி செவ்வாய் கிழமை)