All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உயிர் துடிப்பாய் நீ! "-கதை திரி

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 15
இரவும், பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நீதியைப் போல் ,வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறித் தான் வரும்.

அது போல் திகழொளிக்கு இப்போது இன்பமான காலம். கடந்த காலத்தில் அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து காணாமல் போனது.

இரு வீட்டு பெரியவர்களும் மணமக்களின் சம்மதம் கிடைத்தவுடன் , திருமண வேலைகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

உலகமாறனோ, மகனின் மனம் மாறுவதற்குள் திருமணத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ? அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமென்று அடுத்து வந்த முதல் நல்ல முகூர்த்ததில் திருமண தேதியை குறித்தார்.

மணமக்கள் இருவருமே திருமணத்தை எளிமையாக நடத்தவேண்டுமென்று வற்புறுத்தியதால் ,வேறு வழி இன்றி பெற்றவர்கள் தம் மக்ககளின் விருப்பத்திற்கு இசைந்தனர்.

அது மட்டுமின்றி திருமணத்தை விமர்ச்சியாக நடத்தினால் மகிழினியைப் பற்றி எல்லாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற நிதர்சனம் அவர்களை தங்கள் மக்களின் முடிவுக்கு தலை ஆட்ட வைத்தது.

நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் போது வாழ்க்கையே வண்ணமயமாக தோன்றும்.அது போல் திகழொளிக்கும் அவளுள் வசந்த காலம் பூத்து குலுங்கியது.வாழ்க்கையின் மீது பிடிப்பும், ஆசையும் தோன்றியது.

மிகன் மீது அவள் வைத்திருந்த அன்பே அவளை அவனுடன் சேர்த்து வைக்கப்போகிறது.

இத்தனை நாள்கள் அவளிருந்த தவத்தின் வரமாக ! அவளின் மனம் கவர்ந்தனை வாழ்க்கை துணையாக அடையப் போகிறோம் என்ற எண்ணமே அவளுள் மகிழ்ச்சியை மழைச்சாரலாக தூவியது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப.. அவளின் உள்ளத்து மகிழ்ச்சி அவளின் வதனத்தில் மின்னியது.

பெற்றவர்களுக்கும் ,உடன்பிறந்தவனுக்கும் மிகனை அவள் எந்தளவு நேசித்திருக்கிறாள் என்று அவளின் முகமே உணர்த்தியது.


அவளின் மகிழ்ச்சி அவர்களுள் பெரும் நிம்மதியை கொடுத்தது. அதே நிம்மதியுடனும் ,மகிழ்ச்சியுடனும் திருமண வேலைகளை துரிதப்படுத்தினார்கள்.


திருமண வேலைகள் மிகனுக்குள்ளும் இரு வேறு மனநிலையை உண்டாக்கியது.

அவனின் உயிர் அவன் கை சேரப்போகிறது என்ற ஆனந்தம் ஒரு புறம் என்றாலும், அவளால் ஏற்பட்ட இழப்புகளின் குற்றவுணர்வு ஒரு புறம் அவனை வதைத்தது.

இரு வேறுபட்ட மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தான். திருமண நாள் நெருங்க நெருங்க அவனுள் சிறு பயம் அவனை குடைந்தது.

மணமக்கள் இருவரும் பணி இடத்தில் சந்தித்தாலும், வேலையைத் தவிர வேறு எதுவும் பேசிக் கொள்வது இல்லை.

திகழொளியின் முகத்தில் மின்னும் மகிழ்ச்சியை கண்டு மிகன்னுக்குள்ளும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது .

அவள் அறியாமல் அவளை அணு, அணுவாக ரசித்தான் .

திகழொளிக்கும் மிகன் வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாமல் இருப்பது மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது.

இருவரும் இப்போதாவது மனம் விட்டு பேசி இருந்தால்? திருமணத்திற்கு பின் வரும் கசப்புக்களை தவிர்த்து இருக்கலாம்.

ஆனால் ,இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவு கடந்த நேசமும், அன்புமே அவர்களை பேச விடாமல் செய்தது.

அந்த வார இறுதியில் திருமணத்திற்கு பட்டுபுடவை எடுக்க இரு குடும்பமும் பிரபலமான துணிக் கடைக்குச் சென்றனர்.

திகழொளி எளிமையாக பச்சை வண்ண கைத்தறி சேலையில் வந்து இருந்தாள்.அவளின் நிறத்திற்கு அது எடுப்பாக இருந்தது.

மிகனும் சொல்லி வைத்ததைப் போல் ஆலிவ் பச்சையில் சட்டையும் ,ஆஃப் வெண்மை நிறத்தில் கால்சட்டையும் டக் இன் செய்து வந்திருந்தான். அது அவனுக்கு மேலும் கம்பீரத்தையும், வசீகரத்தையும் கூட்டியது.

இருவர் முகத்தில் தெரிந்த கல்யாணக் கலை அவர்கள் தான் மணமக்கள் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியது.

கடைக்கு வந்ததிலிருந்து மகிழினி திகழொளியிடம் "அம்மா ,அம்மா.." என்று அட்டையாக ஓட்டிக் கொண்டாள்.

திகழொளியைக் கண்டவுடன் மணியரசி ஆசையாக அவளின் கைகளைப் பற்றி "எனக்கு ரொம்ப சந்தோஷம் திகழிம்மா.. நான் கும்பிட்ட தெய்வம் என்னை கைவிடலே..இடையில் என்ன என்னவோ நடந்து விட்டது. இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்.." என்று மனதார வாழ்த்தினார்.

மிகனின் மாமா காஞ்சித்துரையும் திகழொளியிடம் "நல்லா இருக்கீயாம்மா.." என்று வாஞ்சையுடன் கேட்டார்.

மணியரசியும், காஞ்சித்துரையும் திகழொளியின் பெற்றவர்களிடம் சட்டென்று பேச முடியாமல் முதலில் தயங்கினார்கள்.

நடந்த நிகழ்வுகள் அவர்களிடம் பெரும் தயக்கத்தை உருவாக்கி இருந்தது. ஆனாலும், அவர்கள் கடந்து வந்த கஷ்டமான நிகழ்வுகளின் பக்குவமும் , முதிர்ச்சியும் திகழொளியின் பெற்றவர்களிடம் தயக்கத்தை மீறி பேச வைத்தது.

பொன்னியும் ,அறவாணனும் முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும் பின்பு அவர்களும் இயல்பாக பேசினார்கள்.

உலகமாறனோ, மனதிற்குள் அளவிட முடியாத நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்.

கடையில் பட்டுப்புடவையை தேர்வு செய்ய
எல்லாரும் பட்டு சேலைப் பிரிவிற்கு சென்றனர்.
அங்கிருந்த இருக்கையில் திகழொளியின் ஒரு புறம் அமுதனும் ,மறுபுறம் மணியரசியும் அமர்ந்து கொண்டனர் . திகழொளியோ, மகிழினியை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

மிகனோ, திகழொளியின் கண்களில் படும்படி ஓர் ஓரமாக சென்று நின்று கொண்டான்.

கடை சிப்பந்தி பட்டுப்புடவையை எடுத்துக் காட்டும் பொழுது அமுதனும், மணியரசியும் தங்கள் பங்குக்கு, அவர்களுக்கு பிடித்த புடவையை திகழொளியிடம் காட்டி.. காட்டி, எடுக்கச் சொன்னார்கள்.

திகழொளியோ இருவரையும் சமாளிக்க முடியாமல், பேந்த.. பேந்த, விழித்த படி அமர்ந்திருந்தாள்.

மகளின் மனதை உணர்ந்து பெற்றவள் தான் "அம்மு நீ எழுந்து இங்கே வா ! மாமாவும், அக்காவும் செலக்ட் பண்ணட்டும்.." என்று மணமக்கள் இருவரின் மனதிலும் பாலை வார்த்தார்.


மிகனோ, 'ஹப்பா இப்பவாவது என்னைக் கூப்பிடனும்னு தோணுச்சே..' என்று நினைத்தபடி, அமுதன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் எழுந்ததும் மிகன் அமர்ந்து கொண்டான்.

மணியரசியும், திகழொளியிடம் இருந்த மகிழினியை தூக்கிக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தார்.

திகழொளியிடமிருந்து வர மறுத்த மகிழியை கட்டாயப் படுத்தி தூக்கிச் சென்றார்.

"மகிழி எங்கிட்டேயே இருக்கட்டும் அத்தை.." என்ற திகழொளியிடம் "இல்லை மா நீ ப்ரீயா பாரு ! அப்புறம் நான் உனக்கு அத்தை இல்லை. இனிமேல் அம்மான்னு கூப்பிடு.." என்று கூறிவிட்டு மகிழியை தூக்கிச் சென்றார்.

திகழொளிக்கோ, மிக அருகில் மிகனுடன் அமர்ந்து இருப்பது மனதிற்குள் இனம் புரியாத படபடப்பைக் கொடுத்தது.

மிகனோ, தனிமை கிடைத்தவுடன் "ஏண்டி கல்யாணம் நமக்குத் தானே ! கல்யாணப் புடவை நமக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனும்ன்னு இல்லாம உன் அருமை தம்பி கூட உட்கார்ந்து செலக்ட் பண்றே.. என்னே கூப்பிடனும்ன்னு உனக்கு தோணவே இல்லே..நல்ல வேளை என் மாமியார் தான் என் மனம் அறிந்து நடந்து கொண்டாங்க .."என்றான்‌ அடக்கிய கோவத்துடன்.

"ஏன் நான் தான் கூப்பிடனுமா? உங்க கல்யாணம் தானே ! நீங்களே வர வேண்டியது தானே..?"

"இந்த வக்கனையான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.."

"பின்ன வேறு எதுக்கு குறைச்சலாமா? என்றாள் அவளும் கோபத்துடன்..

"ம்! அதை கல்யாணத்திற்கு அப்புறம் சொல்றேன்..இப்ப எங்கூட பதிலுக்கு பதில் வாயாடாம புடவையைப் பாரு .."என்றவன் கடை அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சில புடவைகளை எடுக்கச் சொல்லி கடை சிப்பந்தியிடம் சொன்னான்.

திகழொளியோ, அவனே தேர்வு செய்யட்டும் என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அவனே, ஒவ்வொரு புடவையை அலசி ஆராய்ந்து தக்காளி சிவப்பில் புடவை முழுதும் தங்க நிறச் ஜரிகையில் மின்னிய காஞ்சிப் பட்டை தேர்வு செய்தான்.

கடைப் பெண் அந்த புடவையை அவள் மேல் வைத்துக் காட்டவும் அது அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தியது.


மிகனோ, தனது அலைபேசியில் அதை பொக்கிஷமாக சேமித்துக் கொண்டான்.

அமுதனோ, தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிறந்ததிலிருந்து அவன் அக்காவை அவன் பிரிந்ததே இல்லை.

இப்போது, முதல் முறையாக பிரியப் போகிறோம் என்று நினைக்கையில் அவனால் ,அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் முகத்தில் அப்பட்டமாக சோகம் பொங்கி வழிந்தது.

திகழொளியோ, தன் மீது வைத்துக் காட்டிய பட்டுப் புடவையை பிடித்த படியே தம்பியை தேடினாள்.அவனும் பார்த்துட்டு சொல்லட்டும் மென்று.

ஓர் ஓரமாக நின்று தன்னையே பாவமாக பார்த்ததுக் கொண்டிருந்தவனின் முகத்தில் தெரிந்த சோகம் அவளை புரட்டிப் போட்டது.


தம்பி சொல்லாமலே அவனின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவள், தன் மீது கிடந்த புடவையை எடுத்து கடைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு தம்பியை நோக்கி ஓடினாள்.

"அம்மு, இங்கே ஏன் தனியா வந்து நிற்கிறே? உனக்கு அந்த புடவை பிடிச்சு இருக்கா ..?" என்ற கன்னம் தொட்டு கேட்ட தமக்கையிடம்.

"அக்கா உனக்கு பிடிச்சு இருந்தா போதும்.." என்று சுரத்தே இல்லாமல் சொன்னவனிடம்.

"அம்மு என் மீது ஏதாவது கோவமா டா.."

"ச்சே அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைக்கா.." என்றான்.

மிகனுக்கோ, திகழொளி தன்னிடம் புடவை பற்றி எதுவும் சொல்லாமல் , தம்பியிடம் சென்று குலாவிக் கொண்டு இருப்பதைக் கண்டு எரிச்சல் வந்தது.

அதே எரிச்சலுடன் அவர்களின் அருகில் சென்று "புடவை பிடிச்சு இருக்கா? இல்லையான்னு சொல்லாமல் இங்கே என்ன செய்யறே ?" என்று கோவமாக கேட்டான்.

திகழொளியோ, பதில் சொல்லாமல் மெளனம் காத்தாள்.

மிகனோ, "வா..!" என்று அவளின் கைகளை உரிமையாக பிடித்து இழுத்துச் சென்றான்.

அமுதனோ, ஒன்றும் செய்ய முடியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

மிகனோ, "ஏண்டி இருபத்தி நாலு மணி நேரமும் அவன் கூடத்தானே பேசிட்டு இருக்கே ? இன்னைக்கு கூட எங்கூட இருக்காமல் அவன் பின்னாடி போறே.. ?"என்று கடிந்து கொண்டான்.அவனையும் மீறி அமுதன் மீது அவனுக்கு பொறாமை பொங்கியது.

திகழொளியோ, பதில் சொல்லாவும் முடியாமல் தம்பியையும் தவிர்க்க முடியாமலும் தவித்தாள்.

அவளோ, 'இது என்ன புது பிரச்சினை ..?'என்று மனம் கலங்கினாள். இதுவரை அமுதனை பிரிவோம் என்ற நிலையில் அவள் யோசிக்கவே இல்லே..

முதன் முதலாக இப்பொழுது தான் அதை உணர்ந்தாள்.

அவளை அதிகம் யோசிக்க விடாமல் அதன் பிறகு அவளின் நேரத்தை மிகனே எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு திருமணத்திற்கு உடை எடுக்க ..அவனுக்கும் அவளுக்கும் திருமணத்திற்கு தேவையானது வாங்க என அவளை தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

திகழொளியோ, எதிலும் முழுமனதுடன் ஈடுபட முடியாமல் மிகன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.

பெரியவர்களோ, சிறியவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு, தங்களுக்கு தேவையானதையும் சீர்வரிசைகள் வாங்குவதிலும் நேரத்தை செலவிட்டனர்.

அமுதனோ, மகிழினியை தூக்கி வைத்துக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டான்.

திகழொளிக்கு தம்பியின் அமைதியை பார்க்க பார்க்க மனம் தாளவில்லை.. ஓடிப்போய் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு, அழ வேண்டும் போல் மனம் துடித்தது.

ஒரு வழியாக தேவையானதை வாங்கி முடித்த பின் உணவு உண்ண கடைக்குச் சென்றனர்.

திகழொளியோ, மிகன் அருகில் அமராமல் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவர்களின் எதிரில் அமர்ந்த மிகனோ, அவளை கண்களாலேயே முறைத்துக் கொண்டிருந்தான்.

அங்கே ஒரு உரிமை போராட்டம் தொடங்கியது. திகழொளிக்கு திருமணத்திற்கு பிறகு எப்படி மிகனை இந்த விசயத்தில் சமாளிப்போம் என்ற புதுப் பயம் துளிர் விட்டது.


தொடரும்..



உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Status
Not open for further replies.
Top