All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உயிர் துடிப்பாய் நீ! "-கதை திரி

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 6

நாம் நினைப்பது போல் எல்லாம் நடந்து விட்டால் ,வாழ்க்கை மிக அழகாக தான் இருக்கும்.ஆனால் அப்படி யாருக்கும் இங்கே நடப்பதில்லை.

இன்பமோ, துன்பமோ யாருக்கும் தொடர்ந்து வருவதில்லை.. இரண்டும் கலந்து வருவது தான் வாழ்க்கை.

நடக்கும் நிகழ்வுகள் மிகனுக்கு இன்பமாகவும், .திகழொளிக்கு துன்பமாகவும் இருந்தது.மிகனுக்கு திகழொளியை அனுதினமும் காண்பதும், தான் நினைத்தபடி அவளை ஆட்டி வைப்பதும் அவனுக்கு இன்பத்தை கொடுத்தது.

திகழொளிக்கோ, தான் உயிராக நேசித்தவனை இன்னொருத்தியின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அதுமட்டுமன்றி தன்னைக் கண்டாலே தீயாக காயும் அவனின் இந்த பரிணாமத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.

ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள்.யாரிடமும் தன் மனக்கவலையை பகிரவும் முடியாமல் தனக்குள்ளேயே மருகினாள்.

உலகமாறனோ, மகனின் நடவடிக்கைகளில் குழம்பிப் போனார்.அவனின் இயல்பு வெகுவாக மாறி இருந்தது.

தன் தோற்றத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டான்.எப்போதும் ஏதோ யோசனையுடனேயே வலம் வந்தான்.குழந்தையிடம் நேரம் செலவழிப்பதும் குறைந்தது.யாரிடமும் சரியாக பேசுவதும் இல்லை.

மிகனின் மாற்றம் பெற்றவரை மிகுந்த கலக்கமடையச் செய்தது. அந்த கலக்கமே விரைவில் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை வலுக்கச் செய்தது . அவர் அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினார்.

அறவாணனும்,பொன்னியும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதிலிருந்தே, தங்கள் கோவத்தை எல்லாம் மறந்து மகளிடம் கொஞ்சம் ,கொஞ்சமாக பேச ஆரம்பித்து இருந்தார்கள்.

இனியும் மகளை அவள் போக்கில் விடக் கூடாதென்று நினைத்தவர்கள், விரைவில் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று எண்ணினார்கள்.

மகளுக்கு திருமணம் முடிந்தால் , தங்கள் குடும்பம் தொலைத்த மகிழ்ச்சி எல்லாம் திரும்ப கிடைக்கும் என்று நம்பினார்கள்.

மகளிடம் நேரடியாக திருமணத்தை பற்றி பேசாமல், அமுதனிடம் விஷயத்தை சொல்லி மகளிடம் பேச சொன்னார்கள்.

அமுதனோ, அக்காவிடம் எப்படி சொல்வது என்று இரண்டு நாட்களாக அதே யோசனையுடனேயே சுற்றிக் கொண்டு இருந்தான்.

திகழொளிக்கோ, தம்பியின் யோசனையான முகம் பயத்தை கொடுத்தது.அவனுக்கு ஏதாவது பிரச்சினையா என்று மனம் கலங்கினாள்.

அன்று இரவு உணவு உண்டு முடித்ததும் , தம்பியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள், "அம்மு இரண்டு நாளாக நீ சரியே இல்லை. ஏதாவது பிரச்சனையா..? என்று கேட்டவளிடம்.

" பிரச்சினை எல்லாம் ஒண்ணும் இல்லை கா.."

"அப்புறம் ஏண்டா உன் முகமே சரியில்லை.."

"அக்கா நான் ஒண்ணு சொல்லுவேன் நீ கோவப்படாமே கேட்கனும்.."

"என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு. என்ன விஷயம்.."

"ம்ம்..எப்படி கேட்கறதுன்னு தெரியலை.."

"என் அம்முக்கா கேட்கத் தெரியலை..இது நம்பற மாதிரி இல்லையே.."

"அக்கா.. நான் கேட்ட பின் நீ என் மீது கோவப்படக்கூடாது.."

"ஓகே. கோவப்படலே முதல்லே என்னன்னு சொல்லு.."

"அக்கா.. அம்மாவும் ,அப்பாவும் உனக்கு கல்யாணம் பண்ணும்ன்னு நினைக்கிறாங்க. உன்கிட்ட சம்மதம் கேட்கச் சொன்னாங்க.."என்று தயங்கிய படியே கூறிவிட்டான்.

திகழொளியோ, தம்பி சொன்னதைக் கேட்டவள்,ஒரு நிமிடம் உயிரற்ற சிலையாக நின்றாள்.

அமுதனோ , உறைந்து நின்ற தமக்கையை மெல்ல கன்னம் தட்டி, ..அக்கா ..அக்கா.." என்று பதட்டமாக அழைத்தான்.

தம்பியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தாள். ஆனால், மொழி தெரியாத குழந்தை போல் தம்பியை விழி விரிய பார்த்தாள்.

அமுதனோ, அக்காவின் அதிர்ச்சியை புரிந்து கொண்டு "ப்ளீஸ் கா ஏதாவது பேசு .."என்றவுடன்.

ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு? "எனக்கு சம்மதம் அம்மு.." என்று தம்பியின் முகம் பார்க்காமல் பரந்து கிடந்த ஆகாயத்தை வெறித்து பார்த்தபடி சொன்னாள்.

அமுதனுக்கோ, அக்காவின் பதிலை நம்ப முடியலை. அதிர்ச்சியோ! மகிழ்ச்சியோ! அது அவனுக்கே புரியாமல், திரும்ப, திரும்ப தன் தமக்கையிடம் "நிஜமா உனக்கு சம்மதமா?" என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.

தம்பியின் நிலை புரிந்து, "அம்மு எனக்கு முழு சம்மதம்.போதும், இத்தனை நாள் நான் அவர்களை கஷ்டபடுத்தியது.இனியாவது அவர்கள் ஆசைப்படி நடக்கட்டும் .என்னால் முடிந்த இந்த சந்தோஷத்தையாவது அவர்களுக்கு தரேன்.."

" அக்கா, நீ இதை முழுமனதுடன் தானே சொல்றே.."என்று நம்பாமல் கேட்டவனிடம்..

" ஆமா , முழு மனதுடன் உணர்ந்து தான் சொல்றேன். அவர்கள் பழசை மறந்து இப்போது தான் என்னுடன் பேச ஆரம்பிச்சு இருகாங்க.. அதே கெடுக்க விரும்பலே.."

"அக்கா, உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.கல்யாணமங்கிறது விளையாட்டு காரியம் இல்லை. எல்லாவற்றையும் மறந்து நீ புது வாழ்க்கையை தொடங்கனும்.."

" அம்மு எனக்கு எல்லாம் புரியுது. கஷ்டம் தான். ஆனால், எனக்கு வேறு வழி இல்லை..நான் கொஞ்சம், கொஞ்சமாக என்னை மாற்றிக்கிறேன்.."என்றாள்.

"தேங்க்ஸ் கா.. இந்த வார்த்தைக்காகத் தான் நான் காத்திருந்தேன். இனி என் அக்கா வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும்.." என்று தமக்கையின் முகத்தை கையில் ஏந்தி சொன்னான்.

திகழொளியோ, தன் மனக்குமுறலை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தன் உயிர் தம்பியிடம் சிரித்தபடியே தலையை ஆட்டினாள்.

தமக்கையின் மகிழ்ச்சியை தன்னுள் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டவன். "அக்கா நான்‌ அப்பா அம்மாவிடம் உன் சம்மதத்தை சொல்லிடவா..?"

"ம்ம் ..! "என்று தலையை ஆட்டினாள்.

அமுதனோ, எல்லையில்லாத ஆனந்தத்துடன் தன் தமக்கையை அணைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவன், பெற்றவர்களிடம் தன் தமக்கையின் சம்மதத்தை கூற ஓடினான்.


திகழொளியோ, மனதிற்குள் சொல்ல முடியாத துக்கத்துடன் நின்றிருந்தாள். அத்தனை நேரம் தம்பிக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் அவன் சென்ற பின் அருவியாக கொட்டியது.

தன் பெற்றவர்களுக்கு இதற்கு மேல் எந்த துன்பத்தையும் கொடுக்க வேண்டாம், என்று எண்ணித்தான் தம்பியிடம் சம்மதம் சொனனாள். ஏற்கனவே நடந்த திருமண பேச்சால் பெற்றவர்களுக்கு கொடுத்த துன்பத்தை இந்த திருமணத்தால் இன்பமாக்க நினைத்தாள்.

போதும் அவர்கள் தன்னால் பெற்ற வேதனை.இனியாவது அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்.

அவள் ஆசைப்பட்டது தான் கிடைக்கவில்லை.அவர்கள் ஆசையாவது நிறைவேறட்டும் . என்று எண்ணினாள்.

அது மட்டுமின்றி தனக்கு திருமணமாகாத காரணத்தால் தான்‌, மிகன்‌ இன்னும் தன்னை பார்க்கும் போது எல்லாம் குத்தி குதறுகிறான். நாம் இன்னொருவருடைய மனைவி என்றனால் தன்னிடம் இப்படி நடந்து கொள்ள மாட்டான் என்று நினைத்தாள்.

தன்னால் எல்லாவற்றையும் மறந்து புது வாழ்க்கையை தொடங்க முடியுமா? என்று அவளுக்கே தெரியாது. ஆனால், இதுவரை நமக்காக வாழ்ந்து விட்டோம் .இனியாவது பெற்றவர்களுக்காக வாழலாம் என்ற எண்ணமே அவளின் மன மாற்றத்திற்கு காரணமானது.

தன் அழுகை, கவலை, குழப்பம் எல்லாவற்றையும் தனக்குள் புதைத்துக் கொண்டு, வீட்டிற்குள் வந்து மகளை பொன்னி ஆரத்தழுவிக் கொண்டு, "என் தங்கமே அம்மாவுக்கு இப்ப தான் நிம்மதியாக இருக்கு.." என்றார்.

மகளோ, தாயின் அரவணைப்பில் ஆசையாக ஒன்றிக் கொண்டாள்.

அறவாணனோ, " திகழி இங்கே வாடா ..!"என்று பல வருடம் கழித்து மகளை அன்போடு அழைத்தார்.

தந்தையின் அழைப்பை கேட்டவுடன், அளவுகடந்த மகிழ்ச்சியுடன் தந்தையிடம் ஒடிச் சென்று அவர் காலடியில் அமர்ந்து, மடியில் தலை சாய்த்தாள்.

அவரோ, தன் மடியின் மீதிருந்த மகளின் தலையை மென்மையாக தடவியபடி, " பாப்பா அமுதன் சொன்னது உண்மையா? உனக்கு சம்மதமா டா.." என்றார்.

அவளோ, பல வருடங்கள் கழித்து தன் தந்தையின் 'பாப்பா 'என்ற விழிப்பில் உருகி கரைந்தவள் , நிமிர்ந்து தந்தையை விழி எடுக்காது பார்த்தபடி ,பேச்சற்று விழிகளில் நீர் அருவியாக கொட்ட தலை ஆட்டினாள்.

மகளின் கண்ணீரை மென்மையாக துடைத்த படியே, "என் பாப்பா இனி எதுக்கும் கலங்க கூடாது. போதும் நீ பட்டது எல்லாம்.இனியாவது உனக்கு சந்தோஷம் கிடைக்கட்டும் .."என்றார்.

அவளோ, தன் கண்ணீரை துடைத்த தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டு, "அப்பா சாரிப்பா..சாரிப்பா உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் .என்னே மன்னிச்சுடுங்கப்பா.." என்று அவர் கைகளில் முகம் புதைத்து கதறினாள்.

அவரோ, " நீ தான் டா எங்களை மன்னிக்கனும். என்ன தான் உன் மீது கோவமாக இருந்தாலும், உங்கிட்ட பேசாம இருந்திருக்க கூடாது.உன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்..சாரிடா .."என்றார் வருத்தத்துடன்.

அமுதனோ, தந்தை மகளின் பாசப்போரட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவர்களிடம் வந்து "போதும்..போதும் சாரி கேட்டது. போனது போகட்டும், இனி நடப்பதை பார்ப்போம் . நம்ம கஷ்டகாலம் இன்னையோட முடிஞ்சுச்சு.." என்றவன், தம்கையையும் தந்தையையும் தோள் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பொன்னியோ விழிகள் ஆனந்த கண்ணீர் மின்ன அந்த காட்சியை நிம்மதியுடன் கண்டார்.

அடுத்து வந்த நாட்களில் அறவாணன் தரகரிடம் மகளின் ஜாதகத்தையும், நிழற்படத்தையும் கொடுத்து நல்ல வரனாக பார்க்கச் சொன்னார்.

திகழொளியோ, பெற்றவர்களின் அன்பு திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள்.

மிகனின் கடுமையை கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

திகழொளி திருமணத்திற்கு சம்மதித்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பிய கமலியும், அமுதனும் ,அவளை அழைத்துக் கொண்டு மாலுக்கு சென்றார்கள்.


மூவரும் பழைய படி மகிழ்ச்சியாகவே சுற்றி திரிந்தனர். கமலி ஐஸ்கிரீம் கேட்டாள் என்று மூவரும் அவரருக்கு பிடித்த (ஃப்ளேவர்)சுவைக்கு, கோன் ஐஸ் வாங்கிக் கொண்டு, சுற்றுப்புறம் மறந்து பேசியபடியே ருசித்து உண்டு கொண்டு இருந்தார்கள்.

அப்போது திகழொளியின் சுடிதார் துப்பட்டாவை, யாரோ இழுப்பது போல் இருக்கவும் சட்டென்று திரும்பி பார்த்தாள்.

அங்கே நின்ற குழந்தையை பார்தவள் குழப்பத்துடன் "என்னடா குட்டி.." என்று கன்னம் தொட்டு கேட்டாள்.

அதுவோ, இவள் கையிலிருந்த ஜஸ்கிரீமை காட்டியது
.
"ஐஸ்கிரீம் வேணுமா..?" என்று கேட்டவளிடம் குழந்தை தலையை ஆட்டியது. குழந்தையுடன் யாராவது வந்து இருக்காங்களா? என்று சுற்றும், முற்றும் பார்த்தபடியே நின்றாள்.

கமலியும்,அமுதனும் "யார் குழந்தை இது..?" என்று கேட்டபடி குழந்தையின் அருகில் வந்தவர்களிடம். "அம்மு யாருன்னு தெரியலே, ஐஸ்கிரீம் கேட்கிறா.. இதே ஃப்ளேவர் ஐஸ்கிரீம் ஒண்ணு வாங்கி கொடுடா .."என்றாள்.

அமுதனோ, தமக்கையின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல், அருகில் இருந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி வந்து தமக்கையிடம் கொடுத்தான்.

திகழொளியோ, அதை வாங்கி கொண்டு குழந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

அதுவோ, அவளிடம் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்க தன் பிஞ்சு கைகளை நீட்டியது.

திகழொளியோ, ஐஸ்கிரீமை கொடுக்காமல், தன் கன்னத்தைக் காட்டி , "முத்தம் கொடுத்தால் தான் ஐஸ்க்ரீம்.."என்று குழந்தையிடம் பேரம் பேசினாள்.

குழந்தையும் தன் பட்டு இதழ்களால் அவளின் கன்னத்தில் மென் முத்தத்தை பதித்தது. உடனே குழந்தையிடம் ஐஸ்கிரீமை கொடுத்து விட்டு, குழந்தையை தூக்கி அதன் பட்டு கன்னங்களில் மென்மையாக முத்தமிட்டாள்.

அப்போது, " வெரிகுட்.. சூப்பர்!" என்ற குரலில் தூக்கி வாரிப் போட திரும்பினாள்.அங்கே மிகனோ, கைகளை கட்டிக் கொண்டு இவளையே பார்த்தவாறு அருகில் வந்தான்.

மூவரும் அவனை பார்த்து திகைத்து நின்றனர்.

மிகனோ, அவளிடமிருந்த குழந்தையை வேகமாக பிடிங்கியவன்,அதே வேகத்துடன் குழந்தையின் கையிலிருந்த ஐஸ்கிரீமை பிடிங்கி அருகில் இருந்த குப்பை தொட்டியில் வீசி எறிந்தான்.

குழந்தையோ ஐஸ்க்ரீம் பிடிங்கியதில் உதடு பிதுக்கி அழுக தொடங்கியது.

அவனோ, குழந்தையின் அழுகையை சட்டை செய்யாமல் , "மகிழி யார் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாயா? அப்பா அடிக்க போறேன் பாரு.." என்று தன் கோவத்தை குழந்தையிடம் காட்டினான்.

மகிழியோ, "அப்பா, அம்மா.. அம்மா ஐஸ்கிரீம்.." என்று திகழொளியை காட்டிய படியே, அம்மா தான் வாங்கி கொடுத்தாங்க என்று சொல்லத் தெரியாமல் சொன்னது.

மிகன், மகிழியை அழைத்துக் கொண்டு அன்று விடுமுறை என்பதால் மாலுக்கு வந்திருந்தான்.

அங்கிருந்த துணிக்கடையில் அவன் மகிழியை இறக்கி விட்டுவிட்டு துணிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

மகிழியோ, கடையிலிருந்த கண்ணாடி வழியாக வெளியில் ஐஸ்கிரீம் உண்டு கொண்டிருந்த திகழொளியை பார்த்ததும் ,அவளிடம் மிகனுக்கு தெரியாமல் ஓடி வந்து விட்டாள்.

மிகன் சிறிது நேரம் கழித்து, மகிழியை காணோம் என்று தேடும் பொழுது தான், அவள் திகழொளியிடம் சென்று நிற்பது தெரிந்தது.

திகழொளி, அமுதன் , கமலியுடன் அங்கு வந்திருப்பதை கண்டவனுக்கும், சிறு அதிர்ச்சி தான்.அவளை இங்கு அவன் எதிர்பார்க்கவில்லை.

மகிழி வேறு அவளைக் கண்டால், அவள் பின்னாடியே போகிறாள் என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.அதனால் எல்லா கோவத்தையும் குழந்தையிடம் காட்டினான்.

திகழொளியோ அவனின் செயலில் உறைந்து போய் சிலையாக நின்றாள். அவளுக்கு மகிழியை ஓரே ஒரு முறை பார்த்திருந்தால், இன்று சரியாக அடையாளம் தெரியவில்லை.அதுவும் அன்று பல வருடங்கள் கழித்து மிகனை பார்த்த அதிர்ச்சியில் அவள் நினைவில் எதுவுமே நிற்கவிலலை.
.
கமலிக்கோ, அன்று மிகனின் தோளிலிருந்த குழந்தையை அரைகுறையாக பார்த்தால், இன்று பார்க்கும் போது சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.

அமுதனோ, கை மூஷ்டி இறுக, பற்களை கடித்த படி அடங்கா சினத்துடன் மிகனை நோக்கி நகர்ந்தவனை கமலி தடுத்து நிறுத்தினாள்.

கமலிக்கோ, மனதிற்குள் பெரும் குழப்பம் ஆட்கொண்டது.தன் தோழியின் வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது.

பார்த்த இரண்டு முறையும் அந்த குழந்தை திகழியிடமே வருகிறது. இப்போது வேறு திகழியைப் பார்த்து 'அம்மா..அம்மா 'என்று அழுகிறதே என்று குழம்பினாள்.

திகழொளியோ, தன்நிலை மறந்து தொய்ந்து போய் அமர்ந்தாள்.

அமுதனுக்கும்,கமலிக்கும் திகழொளி இப்போது தான் அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருந்தாள் .பாவி அவள் நிம்மதியை கொடுப்பதற்கே வருகிறான் என்று அவனை திட்டி தீர்த்தனர்.

விதியின் விளையாட்டை யார் அறிவார்..?

தொடரும்..


(அடுத்த யூடி செவ்வாய் கிழமை மாலை)

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்





 
Last edited:

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 7

அழகாக தொடங்கிய நாட்கள் எல்லாம் அழகாக முடிவதில்லை ! திகழொளிக்கும் அன்று அப்படித் தான் முடிந்தது.



எல்லாவற்றையும் மறந்து, புது வாழ்க்கைக்கு தயாரானாள்.ஆனால், அது விதிக்கு பிடிக்கவில்லை போல், மீண்டும் மிகனின் செயல்களால் காயப்பட்டாள்.



அமுதனும்,கமலியும் தொய்ந்து போய் அமர்ந்திருந்தவளை, ஆறுதலாக அரவணைத்து அவளை தேற்ற முயற்சித்தார்கள்.



திகழொளியிடம் அவர்களின் முயற்சி செல்லுபடியாகவில்லை. சில சமயம் ஆறுதலையும், அரவணைப்பையும் விட அதட்டலும், மிரட்டலும் தான் சரியாக வேலை செய்யும்.



அமுதனும், கமலியும் அதை தான் செய்து அவளை வழிக்கு கொண்டு வந்தார்கள். ஒருவழியாக அவளை உருட்டி, மிரட்டி வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.



திகழொளியும் வேறு வழி இல்லாமல் சூழ்நிலை புரிந்து, பெற்றவர்களுக்காக தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாள்.தன் காயத்திற்கு தானே கொஞ்சம் கொஞ்சமாக மருந்திட்டுக் கொண்டாள்.





இனிமேல் மிகனின் எந்த வித செயல்களும் தன்னை பாதிக்க கூடாதென்றும் ,அவன் யாரோ ! நான் யாரோ ! என்று தன் மனதிற்குள் உருவேத்திக் கொண்டாள்.





மிகனோ, வீட்டிற்கு வந்ததில் இருந்தே நிலை இல்லாமல் தவித்தான்.அதுவும் மகிழியை அவள் தூக்கி வைத்திருந்ததை பார்த்ததும், அவனால் அவனை கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.





ஏதேதோ பழைய ஞாபகங்கள் வந்து அவனை கொல்லாமல் கொன்றது.



ஒரு மனம் அவள் வேண்டுமென்று தவித்தது.ஒரு மனமோ குற்றவுணர்வில் துடித்தது.இரண்டுக்கும் நடுவில் அவன் வெந்து கருகினான்.

அவனின் இந்த மனப்போராட்டமே ! அதற்கு காரணமானவளின் மேல், மேலும் வன்மத்தை தூண்டியது.



அதுக்கு தூபம் போடுவது போல், அவளை தினமும் சந்திப்பது அவனுக்கு வசதியாக போனது.



நெருப்பாக அவளை விழுங்க அவன் காத்திருக்க..அவளோ, சுனாமியாக அவனை சுழற்றிக் கொள்ள காத்திருந்தாள்.



நீருக்குள் நெருப்பு அடங்கிப் போவது தான் இயற்கையின் நீதி ! அது போல் அவனும் அவளுள் அடங்குவானா? யாவும் காலத்தின் கையில் தான் இருக்கிறது.



திகழொளி, தன் மனதிற்குள் முடிவு எடுத்ததைப் போல் மிகனை எதிர்கொள்ள திடமான மனதுடனேயே அன்று வேலைக்கு வந்தாள்.



மிகனோ, அவளை கடித்துக் குதறும் வெறியில் வந்தான். அவளை பார்த்த நொடியிலிருந்து தீயாக காய்ந்தான்.



அவள் என்ன தான் தன் வேலையை நேர்த்தியாக செய்தாலும் ,அதில் குறை கண்டுபிடித்தான்.மதியம் உணவு இடைவெளிக்கு கூட செல்ல விடாமல் வேலையை திணித்தான்.



திகழொளியோ, அவனிடம் எவ்வளவு அமைதியாக போக முடியுமோ? அவ்வளவு அமைதியாகவே போனாள்.



அவனுக்கு அவள் அமைதியும், மேலும் சினத்தை கொடுத்தது .உணவு இடைவெளியில் யாரும் இல்லாத தனிமை கிடைத்தவுடன், அவளை வார்த்தையால் வருத்தெடுத்தான்.



திகழொளியோ, காலையிலிருந்து அவள் வரைந்த சிறார்களுக்கான ஆடை வடிமைப்பின் படங்களை எல்லாமே, சரியில்லை என்று நிராகரித்தவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே, வேறு வரைந்து கொண்டிருந்தாள்.





அவனோ, அவளின் பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்று ,அவள் வரைவதை சில நொடிகள் பார்த்துக் கொண்டே, "ம்ம்..இது கொஞ்சம் பெட்டர் .. "என்றான்.



அவளோ, மிக அருகில் அவனின் குரலைக் கேட்டு, தூக்கி வாரிப்போடத் திரும்பி அவனை திகைப்புடன் பார்த்தாள்.



அவனோ , அவளின் திகைத்த பார்வையை கண்டுகொள்ளாமல், "பரவாயில்லை கொஞ்சம் வேலையிலும் பொறுப்பும்,கவனமும் இருக்கு. நான் கூட ஆளை மயக்குவதில் தான் கவனம் இருக்கும் என்று நினைத்தேன்.." என்றவனின் வார்த்தை அவளை வலிக்கச் செய்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல்..



"சார் பார்த்து பேசுங்க ! தேவையில்லாமல் வார்த்தையை விட்டீங்க அப்புறம் நல்லா இருக்காது.."என்றாள்.





அவனோ , ஏய் என்ன என்னையே மிரட்டுறீயா? உண்மையை சொன்னால் உடம்பு எரியத் தான் செய்யும்.."என்றவனிடம் அடங்கா வோவத்துடன்.



"மைண்ட் இட் யுவர் வேர்ட் மிஸ்டர் மிகன் ! நீங்க இங்க மேனேஜர். நான் டிசைனர். அவ்வளவு தான் நமக்குள்ளே இருக்கும் உறவு.வேலையை தவிர வேறே பேச நமக்குள்ள ஒண்ணும் இல்லை.."



"ஓ! அப்படியா..நீ சொல்றதை கேட்க நல்லாத் தான் இருக்கு .ஆனால், நடத்தை அப்படி இல்லையே.."



"என் நடத்தையில் அப்படி என்ன குறை கண்டுபிடித்தீங்க.."என்றவளிடம்..



"என்கிட்ட உன் திட்டம் செல்லுபடியாகிவில்லைன்னு, இப்ப என் பிள்ளையை பிடித்து விட்டாயே அதை சொன்னேன்.."



"மிகன் தேவை இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசாதீங்க..பின்னாடி வருதப்படுவீங்க.."



"என்ன தேவை இல்லாததை பேசறேன்.உண்மையை தான் சொல்றேன்.பார்த்த இரண்டே சந்திப்பில் , 'மகிழி' உன் பின்னே வந்து உன்னை அம்மாங்கிறா அதுக்கு என்ன அர்த்தம்.."



"என்ன உளறீங்க.."



"செய்வதெல்லாம் செய்துட்டு என் பேச்சு உளறல்லா..?"



"சத்தியமா நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியலே ! நான் பாப்பாவே நேத்து தான் சரியாக பார்த்தேன். அப்படி இருக்க, அது எப்படி என்னை தெரிந்த மாதிரி அம்மான்னு சொல்லும்.."



"அதை தான் நான் உன்னை கேட்டால், நீ திருப்பி என்னையே கேளு.."



" இங்க பாருங்க ! எத்தனை தடவை தான் திருப்பி, திருப்பி சொல்றது.எனக்கு உங்களையோ, உங்க குழந்தையையோ மயக்க வேண்டிய அவசியமில்லை.."



"நம்பிட்டேன்.."



"நீங்க நம்பினாலும், நம்பாட்டியும் அது தான் உண்மை. இன்னொருத்தியின் கணவனையும் ,குழந்தையையும் நான் எதற்கு மயக்கனும்.."



"அது எனக்கு எப்படி தெரியும் . நாம் விரும்பினது நமக்கு மட்டும் வேணும்ங்கிற பேராசையா கூட இருக்கலாம்.."



" ச்சீ ! வாயை மூடுங்க.. வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவீங்களா? ஒரு காலத்தில் உங்களை விரும்பினது உண்மை தான்.அதுக்ககாக நான் இந்த நாலு வருசமா பட்ட கஷ்டம் கொஞ்சம், நஞ்சம் இல்லே.. ஆனால், இப்போது எனக்கு உங்க மேலே எந்த எண்ணமும் இல்லை.."



" பொய் சொன்னாலும், பொறுந்த சொல்லனும் .இப்பவும் உன் கண்ணில் என் மீது காதல் இருக்கு.."



"போதும் நிறுத்துங்க !உங்களே மட்டும் எப்போதும் காதலிக்க.. நீங்க மட்டுமே உலகத்தில் ஆண் இல்லை.."



"ஓ! அப்படியா? அப்புறம் ஏண்டி நாலு வருசமா கல்யாணம் பண்ணிக்காம இருக்கே.."



"இந்த டீ போட்டு பேசற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க.."



"அப்படி தான் பேசுவேன் என்னடீ செய்வே..?"



"அப்புறம் நானும் பேசுவேன்.."



"ஓஹோ பேசு பார்கலாம்.."

"உங்க கூட மனுசன் பேச முடியுமா..?"

"ஓ! அப்ப நான் மனுஷன் இல்லாமல் யாரு டீ..?"



"அதை என் வாயால் சொல்ல வேண்டாம்ன்னு பார்க்கிறேன்.."



"திகழொளி என் கோவத்தை அளவுக்கு மீறி சோதிக்கிறே.."



"நீங்களும் என் பொறுமையை அளவுக்கு மீறித் தான் சோதிக்கிறீங்க .."



" என்ன சோதிக்க வைக்கிறதே நீ தான் டீ.. இந்த நாலு வருசமா எங்கேயோ தொலைஞ்சு போனீயே ! அப்படியே போய் தொலைஞ்சு இருக்க வேண்டியது தானே..ஏண்டி திரும்ப வந்து, என் உயிரை வாங்குறே.." என்றவனின் வார்த்தை அவளை வாள் கொண்டு அறுத்தது.



அவளிடம் இத்தனை நேரமிருந்த திடம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது.



கண்களிலிருந்து வெளியே வரத் துடித்த நீரை, கஷ்டப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டு " நான் என்ன தான் செய்யனும்ன்னு சொல்றீங்க.. "என்றவளிடம்..



" என் கண்ணில் படாமல் எங்காவது ஒளிந்து போ ! நான் நிம்மதியாக இருப்பேன்.." என்றவன் அடுத்த நொடி அவளிடமிருந்து விலகி வேகமாக தன் அறைக்குச் சென்றான்.



திகழொளியோ, அவனின் வார்த்தைகளை கேட்டு துடித்துப் போனாள். உயிரற்ற சிலையாக நின்றாள்.



உணவு இடைவெளி முடித்து மற்றவர்கள் வரும் வரை அப்படியே அசையாது கற்சிலையாக நின்றாள்.



மனமோ, அவன் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டு, அசைபோட்டு ஓய்ந்தது. 'என்ன வார்த்தை சொல்லிவிட்டான். இத்தனை நாள் இந்த வார்த்தையை கேட்கத் தான் நான் உயிரோடு இருந்தேனா?'



'நான் என்ன தவறு செய்தேன். உங்களை மனதார விரும்பியதை தவிர நான் வேறு எந்த தவறும் செய்யலையே.. அப்புறம் ஏன் என்மேல் உங்களுக்கு இத்தனை வெறுப்பு..'என்று கலங்கி தவித்தவள்,

ஒரு முடிவுடன் தன்‌ இருக்கைக்கு சென்று, தன் ராஜீனாமா கடிதத்தை டைப் செய்து அவனுக்கு மெயில் செய்தாள்.



உடன் பணிபுரிவோரிடம் கொஞ்சம் உடம்பு சரியில்லை. வீட்டுக்கு அரை நாள் விடுப்பில் போறேன் என்று சொல்லிவிட்டு, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.



பொன்னியோ, வாடி வதங்கி வந்த மகளை பார்த்து "திகழி, என்ன டா உடம்பு முடியலையா? முகம் இப்படி வாடி இருக்கே.." என்று கேட்டார்.



"ம்ம்! தலைவலி தாங்க முடியலேம்மா.. அது தான் வந்துட்டேன்.."



"ஓ! என்ன ஆச்சு திடீர்னு.. சாப்ட்டீயா..?" என்றவரிடம்.



"பசிக்கலேம்மா நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.."



"கொஞ்சமாவது சாப்பிட்டுட்டு தூங்கு!"



"இல்லம்மா, வேண்டாம் ! கொஞ்ச நேரம் நல்லா தூங்குனா சரியாய்டும். அமுதன் கிட்ட நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லிடுங்கம்மா.." என்றவள் ,தன் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.



மிகனோ, தன் அறைக்குள் வந்து அமர்ந்தவனுக்கு, வேலையே ஓடவில்லை.. அவனும் அறை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு சென்றான்.



மணியரசியோ ,சோர்ந்து வந்த மிகனைப் பார்த்து "மிகா , உடம்பு சரியில்லையா? முகம் களையிழந்து இருக்கே .."என்றவரிடம்.



"ஆமா அத்தை ,பயங்கர தலைவலி அது தான் வந்துட்டேன். நீங்க அப்பாகிட்ட ஒண்ணும் சொல்லாதீங்க! அவர் பயந்துக்குவார்.கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரி ஆகிடும்..மகிழி எங்கே..?"



"அவ தூங்கறாப்பா.. நீ சாப்ட்டீயா? சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?"



"வேணாம் அத்தே , அங்கேயே சாப்பிட்டுட்டேன்.." என்று பொய் உரைத்தான்.



"சரி நீ போய் ரெஸ்ட் எடுப்பா.." என்றவரிடம், தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தான்.



இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த எல்லையில்லாத அன்பே அவர்களை காயப்படுத்தியது. அளவுக்கு மீறிய அன்பு கூட சில சமயம் வலியைத் தான் கொடுக்கிறது.



திகழொளியோ, தனது படுக்கையில் படுத்து அழுது கரைந்தாள். அவள் மனம் வெட்கமே இல்லாமல் , அவனையே சுற்றி சுற்றி வந்தது.



'தன்னிடம் அவன் கேட்ட எதையுமே இதுவரை தான் செய்ததில்லை..இப்போது கேட்ட இதையாவது செய்யலாம் .இனி வேலைக்கு போக வேண்டாம் .அவன் கண்ணில் படவே வேண்டாம்' என்று எண்ணினாள்.



எங்கேயோ அவன் குடும்பத்துடன் நல்லா இருந்தால், அவளுக்கு அதுவே போதும்.என்று நினைத்தாள்.



அவனோ, தன்னை உயிராக நேசித்தவளை, உயிரோடு கொன்று வந்ததை நினையாமல் உறங்கி கொண்டு இருந்தான்.



மாலை இருட்டத் தொடங்கிய பின் தான் மிகனுக்கு விழிப்பு வந்தது.



மெல்ல எழுந்து சென்று கை கால் முகம் கழுவி வந்தவன், மகிழியை தூக்கி வைத்து சிறிது நேரம் விளையாடிவிட்டு, மதியம் விட்டுப் போன வேலைகளை செய்ய, தன் மடிக்கணினியை எடுத்து கடவுச் சொல்லிட்டு திறந்தான்.



அவன் திறந்தவுடன் முதல் மெயிலாக திகழொளியின் மெயில் தான் வந்தது.உடனே அதை திறந்து பார்த்தவனுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது.



கோவத்தின் எல்லைக்கே சென்றவன் தன் அலைபேசியை தேடி எடுத்து திகழொளிக்கு அழைத்தான்.



திகழொளியோ, அழுது, அழுது ஓய்ந்து போய் உறங்கிக் கொண்டு இருந்தாள். விடாது அழைத்த கைபேசி சத்தத்தில் விழித்தவள், கைபேசியைத் தேடி எடுத்து, அழைத்து யார்? என்று பார்த்தாள்.



அழைப்பில் மிகன் பெயரைப் பார்த்தும், எடுக்கலாமா? வேண்டாமா? என்று சில வினாடி மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தினாள்.



அவனோ, தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கவும்.. வழி இல்லாமல்' கைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்து "ஹலோ.." என்றவளிடம்..



" ஏய் போனை எடுக்க இத்தனை நேரமா? "என்றவனிடம்,



"தூங்கிட்டேன் என்ன வேணும் சொல்லுங்க.."



"கம்பெனி என்ன உன் மாமனார் கம்பெனியா ? உன் இஷ்டத்திற்கு ராஜினாமா செய்ய ! மரியாதையா நாளைக்கு வேலைக்கு வந்து சேர் இல்லே நடப்பதே வேறு.."



"நீங்க தானே என் முகத்தில் முழிக்காதேன்னு சொன்னீங்க.."



"ஆமாம் அப்படியே நான் சொன்னது எல்லாம் கேட்டுட்டே பாரு.."



"அது தான் இதையாவது கேட்கலாம்ன்னு.."



"ஓஹோ.. போதும் உன் டிராமா! ஒழுங்கா நாளைக்கு வேலைக்கு வந்து சேரு.. "என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.



அவளுக்கோ, புயலடித்து ஓய்ந்தது போல் இருந்துச்சு.கைபேசியையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.



மனமோ, 'இவன் என்னை உயிரோடு கொல்லாமல் விடமாட்டான் போல..'என்று கூப்பாடு போட்டது.



மிகனுக்கோ, அவளிடம் பேசிய பின்பு தான் கோபம் கொஞ்சம் கட்டுப்பட்டது.என்ன தான் அவளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தாலும், அவளை அனுதினமும் பார்க்க இது ஒன்று தான் வழி ! அதுவும் தானாக அமைந்த வழி ! அதை எப்படி அவனால் விட முடியும்.



அன்று உலகமாறனோ வேலை முடிந்ததும், தரகரை பார்த்துவிட்டு ,அவர் கொடுத்த பெண் ஜாதகங்களையும் , நிழற்படங்களையும் வாங்கிக் கொண்டு வீடு வந்தார்.



மகிழியோ, உலகமாறனைப் பார்த்ததும் "தாத்தா.." என்று அழைத்த படி ஓடி வந்தாள்.



உலகமாறனோ, ஓடிவந்த பேத்தியை ஆசையாக தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தவர், மணியரசி கொடுத்த காஃபியை வாங்கி குடித்த படியே, தரகர் கொடுத்த ஜாதகத்தை பிரித்து ஒவ்வொன்றாக பார்த்தார்.

மகிழியோ, தாத்தா கையிலிருந்த போட்டோவை தானும் பார்ப்பேன் என்று அடம்பிடித்து வாங்கி பார்த்தவள் ,ஒரு போட்டாவை உலகமாறனிடம் காட்டி "தாத்தா அம்மா..அம்மா.." என்றாள்.



உலகமாறனோ, மகிழி சொன்னதை கேட்டு திகைத்தவர், அவள் கையிலிருந்த போட்டாவை சட்டென்று வாங்கிப் பார்த்தார்.



அதில் திகழொளியின் படத்தை பார்த்தவருக்கு, தூக்கி வாரிப் போட்டது. அப்போதுதான் அவருக்கு மகன் செய்து வைத்து இருக்கும் செயலும் ,மகனின் நடவடிக்கைகான காரணமும் புரிந்தது.





தொடரும்..









அடுத்த யூடி சனிக்கிழமை








உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள் https://www.srikalatamilnovel.com/c...ோகனின்-உயிர்-துடிப்பாய்-நீ-கருத்து-திரி.3145/
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 8

ஆதவனை மேகம் எத்தனை நாள் தான் மறைத்து வைத்து விட முடியும். காற்று வேகமாக வீசினால் மேகங்கள் கலைந்து,கரைந்து மறைந்து தானே போகும்.

அதுபோல் மிகன் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம், 'மகிழி' மூலம் இன்று உலகமாறனுக்கு தெரிய வந்தது.

திகழொளியின் நிழற்படத்தை பார்த்து, ' மகிழி' "அம்மா" என்று கூறியதிலேயே, உலகமாறனுக்கு இதில் ஏதோ விஷயம் இருப்பதாக தோன்றியது. அதை என்னவென்று அறிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினார்.

மிகன் அறியாமல் அவன் இல்லாத பொழுது, அவன் அறையையும் , அவன் பொருட்களையும் சோதித்தவருக்கு எல்லா விஷயமும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

கொஞ்ச நாட்களாக மகனிடம் தெரிந்த மாற்றத்திற்கான காரணமும் , என்னவென்றும் தெரிந்தது.

வாழ்ககை ஒரு வட்டம் என்பது எவ்வளவு உண்மை.எங்கே தொடங்குகிறதோ அங்கேயே முடியும்.

அதுபோல் மகன் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்பதை அறிந்து கொண்டவர் அதை முடித்து வைக்க , தான் என்ன செய்ய வேண்டுமென்றும், மனதிற்குள் முடிவு செய்து கொண்டு தரகரை அழைத்து பேசினார்.

மிகனோ , தந்தையின் முடிவை பற்றி அறியாமல் , தன் நினைவுகளிலேயே சூழன்று கொண்டிருந்தான்.

திகழொளியோ, நிமிடத்திற்கு, நிமிடம் மாறும் மிகனின் புதிய அவதாரத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

ஆயிரம் குழப்பத்துடனேயே திகழொளி அன்று வேலைக்கு சென்றாள்.

மிகனோ, முந்தைய நாள் எதுவும் நடக்காது போல், இயல்பாக அவளிடம் வேலையை பற்றி மட்டும் பேசினான்.

அவளோ, அவனின் செயல்களில் குழம்பி தவித்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல் தானும் இயல்பாக இருப்பது போலவே நடந்து கொண்டாள்.

சிறியவர்கள் தங்கள் சிந்தனையிலேயே மூழ்கி கிடந்தனர். பெரியவர்களோ, சிறியவர்களுக்கு தெரியாமல் அடுத்து தாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையில் தீவிரமாக இருந்தார்கள்.

ஒரு வாரம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாட்கள் நன்றாகத் தான் நகர்ந்தது.

அன்று காலையில் திகழொளி வேலைக்கு கிளம்பி வரும் போதே , அறவாணன் மகளை அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டு பேசினார்.

"பாப்பா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்து விடு ! சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து உன்னே பொண்ணு பார்க்க வராங்க .."என்று தந்தை சொன்னதை கேட்டவுடன், அவளுக்கு தலை கிறுகிறுவென சுத்த ஆரம்பித்தது.

தந்தையிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினாள்.

தந்தையோ, தான் விசயத்தை சொன்னதும், மகளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை மனதிற்குள் குறித்துக் கொண்டவர் , மகளின் தலையை மென்மையாக வருடியபடியே, " பாப்பா அப்பா உனக்கு நல்லது தான் டா செய்வேன்.நீ எதையும் போட்டு குழப்பிக்காம சாயங்காலம் சீக்கிரம் வாடா.." என்றவரிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.

மனதிற்குள் மிகுந்த கலக்கத்துடனேயே அன்று அவள் வேலைக்கு கிளம்பினாள்.

அப்பாவிடம் மறுத்து அவளால் எதுவும் சொல்ல முடியாது.இப்போது தான் அவளிடம் அவர் பழைய படி பேச ஆரம்பித்து இருக்கார். கல்யாணம் வேண்டாம் என்றால், அவரால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது.


அது மட்டுமின்றி, அவள் தான் அவரிடம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள். இப்போது பின் வாங்கினால், அது எல்லாருக்குமே கஷ்டம். தன் தலையில் என்ன எழுதி இருக்கோ? அது நடக்கட்டும் என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அமுதனோ, அன்று வண்டியில் அமைதியாக அமர்ந்து வரும் அக்காவை பார்த்து, "அக்கா என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே..? அப்பா சொன்னதையே நினைச்சுட்டு இருக்கீயா..?"

"அப்படி எல்லாம் இல்லே அம்மு.. கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு .அப்பா, அம்மாக்கு சந்தோஷம் தர கூடிய எந்த விஷயத்திற்கும், இனி நான் எப்போதும் தடையா இருக்க மாட்டேன்.."

"அப்ப உனக்கு இந்த கல்யாண விஷயம் சந்தோஷம் இல்லையா..?

"அம்மு எல்லாம் தெரிஞ்சே நீ இப்படி கேட்கிறே.?. என்னால் சட்டுன்னு மாற முடியலே..மனசு வலிக்குது டா.."

"அக்கா, எனக்கு புரியுது. ஆனால், எதார்த்தத்தை ஏத்துகிட்டு தானே ஆகனும்.."

"ம்ம்..!"

"உன் அருமை தெரியாதவங்களே நினைச்சு, நினைச்சு நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்கப் போறீயா..?"

" இல்லே அம்மு..அப்படி இல்லே..அந்த இடத்தில் என்னால் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியலே .."

"அக்கா , எனக்கு இதுக்கு பதில் சொல்லத் தெரிலே..இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் எனக்கு ஒண்ணு தோணுது.."

"என்ன அம்மு..?"

" சில நேரங்களில் கசப்பு மருந்து தான் நோய் தீர்க்கும். அது போல், இந்த கல்யாணம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்னு என் உள் மனசு சொல்லுது.."

"என்னமோ போடா, என்னால் எதையும் யோசிக்கவும் முடியலே..நடப்பது நடக்கட்டும்.."என்று சலித்துக் கொண்டு, பேசிய தமக்கையை நினைத்து அமுதனுக்கும் வருத்தமாகவே இருந்தது.

திகழொளியோ, கம்பெனி வந்தவுடன் வண்டியிலிருந்து இறங்கியவள், தம்பியிடம் "அம்மு நீ எதையும் போட்டு குழப்பிக்காதே..எல்லாம் சரியாகிடும் . நீ போ ! நான் சாயங்காலம் பர்மிஷன் போட்டுக்கிறேன்.."

"நீ கால் பண்ணு நானே வந்து கூட்டிட்டு போறேன்.."

"வேண்டாம் அம்மு.. நான் ஆட்டோ பிடித்து போய்க்கிறேன். நீ கிளாஸ்சை கட் பண்ணாதே.."

"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை..என் அக்காவுக்கு வர மாமாவே நான் பார்க்க வேண்டாமா?"

"என்னமோ செய் ! நான் சொன்னால் நீ கேட்கவா போறே..? சரி டைம் ஆகுது நான் உள்ளே போறேன். நீ பார்த்து பத்திரமா போ!வேகமா போகாதே.."

"சரி, சரி நீ ஆட்டோவிலெல்லாம் போக வேண்டாம். கிளம்பிட்டு கால் பண்ணு ! நான் வந்துடறேன்.. "

"ம்! பாய் அம்மு.. "என்றபடி யோசனையுடனேயே உள்ளே வந்தவளுக்கு தெரியவில்லை. அக்கா, தம்பியின் சம்பாஷனைகளை ஒருவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.

கம்பெனிக்குள் உள்ளே வந்தவள், தன் மனக்குழப்பத்தை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, வழக்கமான தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

மிகனுக்கு அன்று வேலைப்பளு அதிகமாக இருந்ததால், அவன் வேலையில் மூழ்கி விட்டதால் மதியம் வரை திகழொளிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது.


மதியம் உணவு இடைவெளியில் விரைவாக உணவை உண்டு முடித்துவிட்டு மிகனிடம் வீட்டிற்கு செல்ல பர்மிஷன் கேட்க அவன் அறைக்குச் சென்றாள்.

கதவை தட்டி அவனிடம் அனுமதி வாங்கிவிட்டு அறைக்குள் சென்றவள், கண்டது என்னமோ ! மிகுந்த கோவத்துடன் , யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மிகனைத் தான்.

அவன் கோபத்தைக் கண்டவளுக்கு , மனதிற்குள் லேசாக திகில் படர்ந்தது. 'நல்ல மனநிலையில் இருந்தாலே தன்னை காய்ச்சி எடுப்பான்.இப்ப வேறு கோபமாக இருப்பான் போல என்ன சொல்லுவானோ?' என்று கலங்கினாள்.

அவனோ, அவளை பார்த்தபடியே அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தான்.வேறு வழியில்லாமல் திகழொளியோ, நெருப்பின் மீது நிற்பது போல் காத்திருந்தாள்.

ஒரு வழியாக பேசி முடித்து அழைப்பை துண்டித்தவன், அவளை யோசனையாக பார்தபடி, " என்ன விஷயம் ?மேடம் என்னை பார்க்க வந்து இருக்கீங்க .." என்று நக்கலாக கேட்டான்.

திகழொளியோ, அவனின் நக்கலை புறந்தள்ளிவிட்டு "எனக்கு ஓன் ஹவர் பர்மிஷன் வேண்டும்.."

"எதுக்கு பர்மிஷன்..?"

"அது என் பர்சனல்.."

"ஓ! காரணம் சொல்லாமல் பர்மிஷன் தரமுடியாது.." என்று வேண்டுமென்றே சொன்னான்.

அவளோ, பற்களை கடித்து தன் கோவத்தை விழுங்கினாள்.

அவளின் அமைதி அவனுக்கு மேலும் கோபத்தை கூட்டியது. அவளை விழி எடுக்காது பார்த்தபடியே, "பதில் சொல்லாமல் பர்மிஷன் தரமுடியாது.." என்றான்.

அவளோ , அவனை தீயாக முறைத்து பதில் சொல்லாமலேயே நின்றாள்.

அவனோ, அவளின் முறைப்பை சட்டை செய்யாமல், "சரியான காரணம் தெரியாமல், என்னால் பர்மிஷன் தரமுடியாது . அப்புறம் உன் இஷ்டம்.." என்று விடக் கொண்டானாக, அவள் எதற்காக முன்னாடியே செல்ல வேண்டுமென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று அவளை வதைத்தான்.

அவளோ, "அவரவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதை எல்லாரிடமும் சொல்ல முடியுமா..?"என்றாள்.

அவனோ , "இங்க பாரு நீ வேலை நேரத்தில் தேவை இல்லாமல் பர்மிஷன் போட்டுட்டு, எங்காவது வெளியில் ஊர் சுத்தினா ? அது தான் கேட்கிறேன்.." என்று சலிக்காமல் சொன்னவனிடம்..

"அப்படியே ஊர் சுத்தினாலும், அது என் இஷ்டம் தானே.. அதை கேட்க உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு..?"

" ஓஹோ.. அப்படியா ? நீ வேலை செய்யாமல் ஊர் சுத்தறதுக்கு, இங்கே உனக்கு சம்பளம் கொடுக்கலைன்னு நினைக்கிறேன்..?"

" சார் தேவை இல்லாத பேச்சு வேண்டாம் .உங்களால் பர்மிஷன் கொடுக்க முடியுமா ?முடியாது..?"

"நீ காரணம் ஒழுங்கா சொன்னா ? பர்மிஷன் கொடுப்பதை பற்றி யோசிக்கலாம்..?

" பர்மிஷன் கேட்டா கொடுக்க வேண்டியது தானே .. அதை தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க..?"

" அது உனக்கு எதுக்கு ..? நியாயமான காரணமாக இருந்தா? உண்மையை சொல்ல என்ன தயக்கம்.."

"ஓகே, சொல்றேன் கேட்டுக்கோங்க.. சாய்ங்காலம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்க.. அதுக்குத் தான் முன்னாடியே போகனும் ..போதுமா.."என்று திகழொளி சொன்னதை கேட்டவுடன் மிக ஆடிப் போய்விட்டான்.

அவனால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. கட்டுக்கடங்காத பதற்றம் அவனை ஆட்கொண்டது. ஆனாலும், அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டான்.

தன் கோபம், பதட்டம் அத்தனையும் வார்த்தையால் வடித்து அவளை சித்ரவதை செய்தான்.


"ஓ! அப்படியா..நீ ஏமாத்தியவர்களில் இவன் எத்தனாவது..?"


"சார் தேவை இல்லாமல் பேசறீங்க..இது நல்லா இல்லே.."

"என்ன டீ தேவை இல்லாமல் பேசறேன்.உண்மையை சொன்னால் உனக்கு கோவம் வேறு வருதோ..?"

"எது உண்மை என்பது உங்களுக்கே நல்லாத் தெரியும்.."

"நல்லா தெரிஞ்சதாலே தான் சொல்றேன்.ஏமாத்துக்காரி..?"

"மிகன் இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனீங்க ! அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.."

"என்ன டீ செய்வே..அப்படித் தான் டீ சொல்வேன்.உன் மனசாட்சியை தொட்டு சொல்லு ! நீ எத்தனை பேரை ஏமாத்தி இருக்கேன்னு அது சொல்லும்.."

"வாய் இருக்குன்னு இப்படி அநியாயமாக பேசாதீங்க. நீங்க முதல்லே உங்க மனசாட்சியை கேளுங்க அது சொல்லும் உண்மையை..?"

"ஓ! நான் அநியாகமா பேசறேனா..? சரி, அப்படியே இருக்கட்டும். உனக்கு பர்மிஷன் கொடுக்க முடியாது போய் வேலையை பாரு.."

"நீங்க என்ன பர்மிஷன் கொடுப்பது? நானே எடுத்துக்குறேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்யுங்க.." என்று அடங்கா கோவத்துடன் சொன்னவளின், குரல்வளையைப் பிடித்து இழுத்தான்.

திகழொளியின் பேச்சு அவனுக்கு கட்டுக்கடங்காத கோபத்தைக் கொடுத்தது.அளவுக்கு மீறிய கோபம் அவனை மிருகமாகவே மாற்றியது.

பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டு, அவளின் கண்களைப் பார்த்து "ஏண்டி எல்லார் வாழ்க்கையும் சீரழிச்சுட்டு, நீ மட்டும் யாரையோ கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழத் தாயராகிட்டே அப்படித்தானே..?"என்றவனிடம்..

தன் குரல்வளையை பிடித்திருந்தவனின் கைகளை தட்டிவிட்டுவிட்டு , "மிருகம் மாதிரி நடந்துக்குறீங்க..நான் யார் வாழ்க்கையும் கொடுக்கலே.. அதை நான் எத்தனை தடவை சொன்னாலும், உங்க மண்டைக்கு ஏறாது. என்னமோ நினைச்சுக்கோங்க.. இப்ப வழி விடறீங்களா.. "என்றாள்.

"ஆமாண்டி நான் மிருகம் தான். நீ கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழ்ந்துடலாமான்னு மட்டும் கனவு காணாதே.. உன்னை வாழ விடமாட்டேன்..?"

"உங்களால் முடிஞ்சதே செய்துக்கோங்க.." என்றவள், அவனிடம் இருந்து சற்று நகர்ந்தவளை, ஒரே எட்டில் தடுத்து அவள் கைகளை பற்றி "நான் இன்னும் பேசி முடிக்கலே.." என்றான்.

"உங்க உளறலை கேட்க நான் தயாராக இல்லை.." என்றபடி அவனிடமிருந்து தன் கையை உதற முயன்றாள்.

அவனோ, இன்னும் இறுக்கமாக அவள் மணிக்கட்டை பிடித்தவன், "நான் மனசு வைக்காமல் நீ இந்த இடத்தை விட்டு போக முடியாது.." என்றான்.

அவளோ , "ப்ளீஸ் விடுங்க ! நீங்க இப்படி எல்லாம் நடந்து கொள்வது உங்க மனைவிக்கு தெரிந்தால்? எத்தனை வேதனை பாடுவாங்க .."என்றவளிடம்..

"அதை பற்றி உனக்கு என்ன டீ கவலை..அது என் பாடு.." என்றான்.

திகழொளியோ, 'அய்யோ ! இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது. உணவு இடைவெளி முடிந்து எல்லாரும் வந்து விடுவார்கள். யாராவது தங்களை இந்த நிலையில் பார்த்தால்? என்ன சொல்லுவார்கள்..' என்று மனதிற்குள் பயந்தாள்.

அவனுக்கோ, அந்த மாதிரி எந்த பயமும் இல்லை.. அவளை வார்த்தையாலும்,செயலாலும் குத்தி கிழிப்பதிலேயே குறியாக இருந்தான்.

வேறு வழி இல்லாமல் கடைசியாக அவளே இறங்கி வந்து, "இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்.."

"நான் வேண்டுவதை கேட்டால் உன்னால் செய்யமுடியுமா?"

"என்னால் முடிந்ததை தான் செய்ய முடியும்.."

"நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது. அதுக்கு ஓகேன்னா ? இப்ப உன்னை விடறேன்..?"

"அது என் கையில் இல்லை..இது அப்பா ,அம்மாவின் முடிவு. அப்புறம் நான் கல்யாணம் பண்ணுனா உங்களுக்கு என்ன..?"

"எனக்கு பிடிக்கலே..?"

"ஏன்..?"

"அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது.." என்றவனை என்ன தான் செய்யறதுன்னு பார்த்தவள் ,"சரியான காரணத்தை நீங்க சொன்னால் தானே என்னால் முடிவெடுக்க முடியும்.."

"ஓ உனக்கு காரணம் தெரியனுமா..? என் வாழ்க்கையை கெடுத்துட்டு நீ மட்டும் சந்தோஷமா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வாழ்வே !அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமா?

"எதுவும் புரியாமல் கண்டபடி உளறாதீங்க..?"

"கல்யாண மயக்கத்தில் இருப்பவளுக்கு என் பேச்சு உளறலத் தான் தெரியும்.."

"நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கிற மனநிலையில் நீங்க இல்லே.."

"நல்லா புரிஞ்சதால் தான் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்றேன்.."என்றான் நக்கலாக..

அவளுக்கோ , அவனுடன் போராட முடியவில்லை..குட்டிச் சுவரில் திரும்பத் திரும்ப முட்டிக் கொள்வதை போல் இருந்தது.

அவனின் செயல்களும் ,வார்த்தையும் அவளை வாள் கொண்டு அறுத்தது. அவளால் தாங்க முடியாமல் , "ஏற்கனவே நான் நொந்து கிடக்கிறேன்.மீண்டும் , மீண்டும் என்னை சித்ரவதை செய்யாதீங்க.. இந்த திருமணத்திற்கு நான் ஒத்துக்கிட்டதே என்னைப் பெறுவர்த் தான்.. இப்போதைய என் மனநிலைக்கு இன்னொருவரை கல்யாணம் செய்துட்டு என்னால வாழ முடியுமான்னு தெரியலே.. சாகவும் முடியாமல் ! வாழ்வும் முடியாமல்! துடிச்சிட்டு இருக்கேன்.." என்று கண்களில் நீர் மல்க அவள் கூறியவுடன் .. அவனின் கை பிடி தானாக மெல்ல விலகியது..

அவன் கைபிடி விலகியதும் கண்ணீரை அடக்கிய படி அறையை விட்டு வெளியில் ஓடினாள்.

அவனோ, உயிரற்ற சிலையாக உறைந்து நின்றான்.

தொடரும்..




உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 9

மகிழ்ச்சியும், துக்கமும் ஒரே நேரத்தில் நம்மை ஆட்கொள்ளும் போது அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றே நமக்கு தெரியாது.

இரு வேறு கலவையான உணர்வு நம்மை சூழ்ந்து கொள்ளும். அதுபோல் திகழொளியின் வார்த்தைகளைக் கேட்டு மிகன் கற்சிலையாக சில நொடிகள் நின்றான்.

அவளை வேறொருவர் பெண் பார்க்க வருகிறார்கள், என்பது மிகனுக்கு ஒரு புறம் ஆத்திரதைத் கொடுத்தாலும், அவளுக்குள் தான் இன்னும் நிறைந்து இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.

இருண்டு கிடந்த அவன் மனதிற்குள் அவளின் வார்த்தைகள் நம்பிக்கை ஒளி ஏற்றிச் சென்றது.

அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று தன் இருக்கைக்கு வந்த திகழொளிக்கு அதன் பின் தான் மூச்சே வந்தது.

மிகனின் நடவடிக்கைகள் அவளுள் மேலும், மேலும் குழப்பத்தையே விதைத்தது.

'ஏன் இவன் இப்படி என்னிடம் நடந்து கொள்கிறான்..? இவனுக்கு தான் திருமணம் ஆகிவிட்டதே ! அப்புறம் நான் யாரை கல்யாணம் செய்தால் இவனுக்கு என்ன..?' என்று விடை தெரியாத கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

தன் தந்தை கூறியது போல் அன்று முன் அனுமதி வாங்கிக் கொண்டு , அமுதனுடன் நேரமாகவே மாலை வீடு சென்றாள்.

மகளின் வரவை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து காத்திருந்த பொன்னிக்கு, அமுதனுடன் திகழொளியை கண்ட பின்தான் முகத்தில் மலர்ச்சியே வந்தது.

"வா வா திகழி ..எங்க டா இன்னும் காணோமேன்னு நினைச்சுட்டே இருந்தேன். சரியா வந்துட்டே! நான் போய் உனக்கு காபி கலந்து எடுத்துட்டு வரேன். நீ சீக்கிரம் குளிச்சுட்டு கட்டில் மேல் பட்டுபுடவை எடுத்து வச்சு இருக்கேன், அதை கட்டிட்டு ரெடியாகு மா.. "என்றவர்.. "அம்மு கொஞ்சம் சாமான் வாங்கனும் நீ கடைக்கு போய்ட்டு வா .."என்று மகனையும் வேலைக்கு ஏவினார்.

திகழொளியோ, தாய் கூற்றுக்கு மறுப்பேதும் சொல்லாமல் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அறவாணனுக்கு மகளை கண்ட பின் தான் உயிரே வந்தது. மகள் எங்கே மறுபடியும் திருமணம் வேண்டாமென்று பின்வாங்கி விடுவாளோ? என்று மனதிற்குள் பயந்து கொண்டே இருந்தவருக்கு, அவளை பார்த்த பின் தான் நிம்மதியே வந்தது.

அமுதனோ, தமக்கையை வீட்டில் விட்டு விட்டு, தாய் சொன்ன பொருட்களை வாங்க கடைக்குச் சென்றான்.

தாய் சொல்லைத் தட்டாமல் திகழொளி எளிமையாகவும் தயாரானாலும், மனதிற்குள் பெரும் போராட்டமே நடந்தது. இந்த மாதிரி ஒரு நிகழ்வை யாருடன் எதிர்பார்த்தாளோ ? அது இனி நடக்கவே போவதில்லை என்று நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

முன்பின் தெரியாத யாரோ ஒருவன் முன்னே சந்தையில் மாட்டைப் பார்ப்பது போல் தான் சென்று நிற்கவேண்டுமே என்று நினைக்கையில், ஏன் தான் பெண்ணாக பிறந்தோம்? என்று மனம் துடித்தது.

இந்த கலாச்சாரம் என்று தான் மாறுமோ ?ஒவ்வொரு தனி மனிதனும் மாறாமல் இந்த சமூக கலாச்சாரம் மாறவே மாறது என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்தியவள், மனதார இந்த நிகழ்வை வெறுத்தாள்.

குறித்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் தரகருடன் வந்தார்கள்.

மாப்பிள்ளை கதிரவன் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான்.அறவாணணுக்கும் ,பொன்னிக்கும் மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது. கதிரவனின் அம்மா , அப்பாவும் தன்மையாகவே பேசினார்கள். மிக இயல்பாக பழகினார்கள்.

அமுதனோ, யோசனையுடன் கதிரவனை ஆராய்ந்தான். தன் தமக்கைக்கு ஏற்றவராக இருப்பாரா? என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்தது.

பொன்னி காஃபி கலந்து திகழொளி கையில் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னார். அவள் கைகளோ, காஃபித் தட்டை வாங்க முடியாமல் நடுங்கியது.

மகளின் நிலை புரிந்த பொன்னி ,ஆதரவாக அவளின் தோள்களை அழுத்தினார். தாயின் அழுத்தத்தில் இருந்த ஆறுதலை உணர்ந்து கொண்டவள், நகரவே மறுத்த தன் கால்களை வலுகட்டயமாக நகர்த்திச் சென்றாள்.


அவள் மனதிற்குள் சூறாவளி வீச எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் , அடி மேல் அடி வைத்து நடந்து வந்து, மனதிற்குள் சிறு நடுக்கத்துடன் காஃபியை அனைவருக்கும் கொடுத்தாள்.


பட்டுச்சேலை சர சரக்க.. தலை நிறைய மல்லிகை பூவுடன் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், காஃபி கொடுத்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் கதிரவன்.

அவள் மனமோ, அவன் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட வேண்டுமென்று தவித்தது.

கதிரவனின் அம்மா திகழொளியை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு பேச்சுக் கொடுத்தார். அவர் கேட்ட கேள்விக்கு அமைதியாக அவள் பதில் அளித்தாள்.

அவளை பார்த்தவாறு அவள் கொடுத்த காஃபியை குடித்து முடித்த கதிரவன் , அறவணானிடம்" நான் திகழொளி கூட கொஞ்சம் தனியா பேசணும்.." என்றான்.

அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் மகளிடம் "திகழி அவரை உன் அறைக்கு அழைத்து செல்லும்மா.." என்றார்.

அமுதனுக்கோ, கதிரவன் பின் செல்ல துடித்த தன் கால்களை கட்டுபடுத்தி வைக்க முடியாமல் திணறினான். அவன் தன் தமக்கையை சங்கடப்படுத்தாமல் பேச வேண்டுமே என்று கலங்கினான்.

தன் தந்தை தனியாக பேச சம்மதம் சொன்னவுடன் திகழொளி சற்றே திகைத்து தான் போனாள்.ஆனால், வேறு வழி இல்லையே சில விஷயங்களை எதிர் கொண்டு தானே ஆக வேண்டும்.

கதிரவனை தன் அறைக்கு அழைத்து சென்றவள், அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரச் சொன்னாள்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவளையும் அமரச் சொன்னான். அவளோ, அமராமல் தன் சேலை தலைப்பை விரல்களில் சுற்றி, சுற்றி விடுவித்துக் கொண்டிருந்தாள்.

அதை கண்டவனுக்கு அவளின் பதட்டம் புரிந்தது.

பதட்டத்தைப் போக்கும் பொருட்டு தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமைதியாக கதவருகில் நின்றிருந்தவளை "திகழொளி.." என்று அழைத்தான்.

தன்னைப் பெயரிட்டு அழைத்தவுடன் சிறு திடுக்கலுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனோ, "எதற்கு இவ்வளவு பதட்டம்.. பீ கூல்.." என்று மென்மையாக கூறியவன், அவளின் விழிகளை பார்த்தபடி "உன் பேர் ரொம்ப அழகா இருக்கு திகிழொளி.." என்றான்.

அதற்கும் பதில் பேசாமல் அவள் மெளனத்தையே கடைபிடிக்க , அவளின் மெளனத்தை கலைக்கும் பொருட்டு "என்னை பிடிச்சு இருக்கா..?" என்றான்.


திகழொளிக்கோ, அவன் நேரடியாக தன்னை கேட்டவுடன், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.

சில நொடி மெளனத்திற்கு பின் " எனக்கு பிடிப்பதை விட அப்பா, அம்மாவுக்கு பிடித்தால் போதும்.." என்றாள்.

அவனோ, "என் கூட வாழப் போறது அவர்கள் இல்லையே நீ தானே.. ?"என்று எதிர் கேள்வி கேட்டான்.

அவளோ, "அவங்க எனக்கு நல்லது தான் செய்வாங்க . அதனால், அவர்கள் முடிவு தான் என் முடிவு." என்று சுற்றிவளைத்து பதில் கூறினாள்.

"ஓ..!அப்போ அவங்களுக்கு பிடிக்கலைன்னா உனக்கும் பிடிக்காது அப்படித் தானே.."

"அப்படி இல்லே.."

"அப்புறம்..?" என்றவனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினாள்.

அவனோ, " இங்க பாரு திகழி என்னைப் பொறுத்தவரை வாழப் போறது நாம் தான் . அதனால், நமக்கு தான் ஒருவரை ஒருவர் முதலில் பிடிக்க வேண்டும். எனக்கு உன்னைப் பார்ததுமே ரொம்ப பிடிச்சு போச்சு.இனி நீ தான் பதில் சொல்ல வேண்டும்.." என்றான்.

அவளோ, அவனின் பதிலில் விக்கித்துப் போனாள். 'எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ? அது நடந்து விட்டதே !' என்று மனதிற்குள் கலங்கினாள்.

'ஏன் எனக்கு மட்டும் எல்லாம் தப்பு தப்பாக நடக்குது? மிகனை மனதிற்குள் வைத்துக் கொண்டு, இவனுடன் என்னால் எப்படி வாழ முடியும்..? என்ற கேள்வி அவளை வண்டாக குடைந்தது.

கதிரவனை, அவளின் பதிலுக்காக விழி எடுக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

திகழொளி அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள்.

அவனோ, அவளை மேலும் தவிக்க வைக்கமால் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவன், "நீ பதில் சொல்ல மாட்டேன்னு தெரியுது.பரவாயில்லை பட் எனக்கு உன்னை ஏனோ ரொம்ப பிடிச்சு இருக்கு .ஸோ அடுத்த கட்டத்திற்கு நம் உறவை நகர்த்தும் வேலையை பெரியவர்களிடம் விட்டு விடலாம் .."என்றான்.

அவளோ, அவன் கூறியைத் கேட்டு திகைத்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனோ, அவளின் அதிர்ந்த முக்ததைப் பார்த்துக் கொண்டே "எல்லாத்துக்கும் ஓரே ரியேக்ஷன் கொடுத்தா எப்படி மா..கொஞ்சம் சிரிச்சா.. இன்னும் அழகா இருக்கும்.." என்றவன் வசீகரப் புன்னகையை உதிர்த்தான்.

எதற்குமே பதில் கூறாமல் பேசா மடந்தையாக நின்றாள் அவள்.

அவளிடம் பதில் வாங்க முடியாது என்று புரிந்து கொண்ட கதிரவன். அவளிடம் ஒரு சிறு தலை அசைப்புடன் வெளியில் சென்றான்.

திகழொளியின் மனதிற்குள் பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல், சோர்ந்து போய் அமர்ந்தாள்.மனமோ, அவன் பெரியவர்களிடம் என்ன சொல்லுவானோ? என்று பதை பதைத்தது.

கதிரவனோ, ஒரு முடிவுடன் அறையில் இருந்து வெளியில் வந்தான்.வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன் பெற்றோர்களிடமும், அறவாணிடமும் "எனக்கு திகழொளியை ரொம்ப பிடிச்சு இருக்கு.. மேற்கொண்டு நீங்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்க.." என்று பட்டென்று போட்டு உடைத்தான்.

பெரியவர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அமுதன் மட்டும் யோசனையுடனேயே நின்றான்.

அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு கதிரவன் வீட்டார் கிளம்பினார்கள்.

அறவாணன் அவர்கள் சென்ற பின் மகளை அழைத்து பேசினார். "பாப்பா உனக்கு மாப்பிள்ளையை பிடித்து இருக்கா.? உனக்கு கல்யாணத்திற்கு சம்மதம் தானே..?" என்று கேட்டார்.

தந்தை தன் பதிலை கேட்டவுடன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் துடித்தாள். அவள் என்ன சொல்லுவாளோ? என்று தந்தையின் கண்களில் தெரிந்த பரிதவிப்பு அவளை ஊமையாக்கியது.அந்த கண்களில் மலர்ச்சியை மட்டுமே காணவேண்டும் என்று எண்ணினாள்.

" அப்பா உங்களுக்கு பிடிச்சு இருந்தா எனக்கு அது போதும் . உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா.. " என்று தன் மனதை படாத பாடு பட்டு மறைத்து, அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சம்மதம் சொன்னாள்.


அவரோ, மகளின் பதிலில் நிம்மதி அடைந்தார். இந்த வார்த்தைக்காகத் தானே இத்தனை வருடம் அவர் தவம் இருந்தார். பொன்னியும் மகள் சொன்னதை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அமுதனுக்கு மட்டும் தன் தமக்கையை நினைத்து மனதிற்குள் சந்தேகம் வலுத்தது. 'நிச்சயமாக அக்கா முழு மனதுடன் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வாய்ப்பே இல்லை.. 'என்று உறுதியாக நினைத்தான்.

தமக்கையுடன் தனிமை கிடைத்தவுடன் தன் சந்தேகத்தை கேட்டே விட்டான். "அக்கா உண்மையைச் சொல் ! உனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதமா..?" என்று தன் மனதை எப்போதும் போல் புரிந்து கொண்டு கேட்ட தம்பியிடம் மென் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தாள்.

அவனோ, "இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் அக்கா..?

" எனக்கு பிடிச்ச வாழ்க்கை அமையலே..அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏத்துக்கலாம்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்.."என்று உணர்வே இல்லாமல் சொன்ன தமக்கையிடம்..

" ம்ம்.. நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது எனக்கு சந்தோஷம்.. ஆனால் , அதை அம்மா, அப்பாக்காக இல்லாமல், உனக்காக ஏத்து நீ சந்தோஷமா வாழனும். எனக்கு அப்ப தான் நிம்மதி கா.."என்றவனிடம்..

"என்னால் இப்போது எதுவும் உறுதி சொல்ல முடியலே அம்மு. நடப்பதை அதன் போக்கிலே ஏத்துக்கிறேன்.."

"அக்கா எனக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலே..?" என்றவன் தன் தமக்கையை மனம் கலங்க தோளோடு அணைத்துக் கொண்டான்.

திகழொளியோ? எதிர்வினை ஆற்றாமல் சிலையாக நின்றாள்.அவள் மனமோ, தன்னை நினைத்தே கூப்பாடு போட்டது.

அன்றைய இரவு திகழொளியின் பெற்றவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுத்தது. ஆனால் ,திகழொளிக்கும் ,அமுதனுக்கும் உறங்காத இரவாக கழிந்தது.

மிகனோ , திகழொளி திருமணத்திற்கு சம்மதித்து இருப்பாளா ? என்ற சிந்தனையிலேயே தன் உறக்கத்தை தொலைத்தான்.


அடுத்த நாள் எப்போதும் போல் பணிக்கு வந்தவளை, மிகன் மாப்பிள்ளை வீட்டார் பற்றி கேள்வியாய் கேட்டு வதைத்தான்.

அவனிடம் மறைக்க நினைத்தவளை, விடாது குடைந்து ,குடைந்து கேள்வியாய் கேட்டு தனக்கு வேண்டிய பதிலைப் பெற்றுக் கொண்டான். அதை வைத்தே குதற்கமாக பேசி அவளை வதைத்தான்.

மாப்பிள்ளையின் பெயரைக் கேட்டவன். "உன்னை நினைத்தாலே அமரர் ஆகவேண்டியது தான். இதில் அவன் பெயர் என்னவோ கதிரவன் நல்லாத் தான் இருக்கிறது . ஆனால் உன்னைக் கல்யாணம் செய்தால் ? நிச்சயமா அமரர் ஆகிவிட வேண்டியது தான்.."என்று குதர்க்காமாக பேசியவனை சொல்லில் அடங்கா வலியுடன் பார்த்தாள்.

அவனோ, அவளின் வலி நிறைந்த பார்வையை கண்டு கொள்ளாது, "கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி டீ கல்யாணத்திற்கு உன்னால் சம்மதம் சொல்ல முடிந்தது.." என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்.

அவளோ , "நான் என்ன தப்பு செய்தேன் குற்றயவுணர்வு இருக்க.. உங்களுக்கு தான் குற்றவுணர்வு இருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து குழந்தையும் பெற்று விட்டு என்னிடம் இப்படி நடந்து கொள்வதற்கு.." என்றாள்.

பொறுத்துப் பொறுத்து போன ரொம்பவும் எல்லை மீறுகிறான் என்ற ஆத்திரத்தில் அவளும் வார்த்தையை விட்டாள்.


அவனோ, அவளின் பதிலில் மேலும் சினம் கொண்டவன். " நான் எதுக்கு குற்றவுணர்வில் இருக்கனும். நீ தான் டீ என் வாழ்க்கையை கெடுத்தவள் . நீ தான் குற்றவுணர்வில் தவிக்கனும் . ஆனால், இங்கே எல்லாம் தலைகீழா இருக்கு.." என்றான்.

அவளோ, "நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது. என்னால் பேசி புரிய வைக்கவும் முடியாது. உங்க இஷ்டத்திற்கு என்னமோ நினைச்சுக்கோங்க.." என்று பேச்சை முடித்தவளிடம்..

"அப்படி எல்லாம் உன்னை சாதரணமா விட்டு விட முடியாது. எனக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்.."

"என்ன சொல்லனும்.. பைத்தியம் மாதிரி உளருகிற உங்க கிட்ட நான் என்ன தான் சொல்ல முடியும்.."


"ஆமாம் டீ என்ன பார்த்தா உனக்கு பைத்தியம் மாதிரி தான் இருக்கும். அதுவும் இப்போ கதிரவன் நினைவில் மிதக்கிறவளுக்கு அப்படித் தான் இருக்கும்.."

" மிகன் ஏன் இப்படி என்னை சாவடிக்கிறீங்க.. சத்தியமா என்னால் முடியலே.. உங்களுக்கு என்ன தான் வேணும்..?

"நீ தான் டி வேணும்.."

"நீங்க சொல்றதே புரியலே..?"

"உனக்கு எப்படி டீ என் ஃபீலிங் புரியும்.."

"ப்ளீஸ் மிகன் புரியும் படி சொல்லுங்க.."

"உனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா ? அது எங்கூட மட்டும் தான் நடக்கனும்.." என்றவனை தாளமுடியாத அதிர்ச்சியுடன் பார்த்தாள்.



தொடரும்..



உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்


















 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 10

நாம் அறியாத விஷயத்தை நமக்குள் முதல் முதலாக உணரவைத்தவர்களை நம்மால் என்றுமே மறக்க முடியாது.

அந்த உணர்வு விதையாய் நம்முள் முளைத்து, ஆலமரமாய் வேரூன்றி படர்ந்து நம் மனதை ஆட்கொள்ளும்.

அப்பேர்ப்பட்ட காதல் என்னும் உணர்வை ! தன்னுள் விதைத்து, வேரூன்றி வளரச் செய்தவன், இத்தனை வருடங்கள் கழித்து இன்று திருமணம் பற்றி பேசியது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அதுவும் அவன் இதழ்களில் இப்படி ஒரு வார்த்தைக் கேட்க தவமாய் தவம் கிடந்தவளுக்கு, காலம் கடந்த பின் அவன் இன்று கேட்டது, அவளுள் பிரளயத்தையே கொடுத்தது.


ஒரு நிமிடம் பூமி சுற்றுவதையும், பறவைகள் பறப்பதையும்,மரம் அசைவதையும் நிறுத்தியது போல மிகன் கூறியதை கேட்டு , திகழொளி அதிர்ச்சியில் பனிக்கட்டியாக உறைந்து நின்றாள்.

மிகனோ, அவளின் அதிர்ச்சியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவள் முன் விரல்களால் சொடக்கிட்டு அவளை நிகழ்வுக்கு திருப்பியவன் , "நான் சொன்னது புரிஞ்சுச்சா.." என்றான்.

அவளோ, பதில் உரைக்காமல் பேந்த, பேந்த விழித்தாள். அவளின் அசையாத விழிகளைக் கண்டவனுக்கு அவளை அப்படியே இழுத்து தன்னுள் புதைத்துக் கொள்ள வேண்டுமென்ற பேராவல் எழுந்தது.

இன்னும் சில நிமிடங்கள் அவள் இப்படியே நின்றால், தான் நினைத்ததை செய்தாலும் ,செய்துவிடுவோம். என்று பயந்து "திகழி.." என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்தான்.

அந்த குரலில் திகைத்து நிகழ்வுக்கு வந்தவள், பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவனோ ,சட்டென்று அவளின் கை பற்றி நிறுத்தினான்.தன் கை பற்றியவனை கேள்வியாக பார்த்தவளிடம்..

"எனக்கு பதில் சொல்லிட்டுப் போ !" என்று கட்டளை இட்டான்.

"என்ன பதில் சொல்லனும்.."

"என்னை மட்டும் தான் நீ கல்யாணம் செய்துக்கனும்.."

"உங்களுக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்லை.."

"நான் எதுக்கு டீ வெட்கப் படனும்.."

"கல்யாணமாகி குழந்தையையும் பெற்றுக் கொண்டு, அவளுடன் வாழ்ந்துட்டே, இன்னொரு பெண்ணிடம் கல்யாணத்தை பற்றி பேசுவதற்கு தான்.."

"ஓ..அப்படியா ?மனசுலே என்ன வச்சுட்டு இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்க போறீயே அதுக்கு முதல்லே நீ தான் டீ வெட்கப் படணும்.."

"இதை பற்றி நாம நிறைய பேசியாச்சு..இனி பேச ஒண்ணும் இல்லை..நான் போகனும் முதலில் என் கையை விடுங்க.."

"முடியாது இன்னைக்கு எனக்கு பதில் தெரிந்து ஆகனும்.."என்றான் வெறி பிடித்தவன் போல..

"ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்.."

"திகழி என் பொறுமையை சோதிக்காதே..என்னால் உன்னை வேறு யாருடனும் பார்க்க முடியாது.."

"ஏன்..?"

"ஏன்னா , நீ எனக்கு உரியவள்.எனக்கு மட்டுமே சொந்தமானவள்.."

"ஓ ! அது இப்ப தான் தெரிஞ்சுச்சா ! ஏன் நீங்க கல்யாணம் செய்துக்கும் போது தெரியலையா..?"

"திகழி.."என்று பேச முடியாமல் பற்களை கடித்தவனிடம்..

" நீங்க மட்டும் கல்யாணம் செய்து குழந்தை, குட்டியுடன் சந்தோஷமா வாழனும். ஆனால், நான் மட்டும் உங்களையே நினைத்து, நினைத்து காலம் பூரா கண்ணீரிலேயே கரையனும் அப்படித் தானே.."

"திகழி நீ ரொம்ப பேசறே.."

"பேச வைப்பதே நீங்க தான்.."

"உண்மை என்னனுன்னு தெரியாமா உளராதே.."

"சொன்னால் தானே தெரியும்.." என்றவளிடம்..

"ஓ! அப்போ சொல்லித் தான் ஆகனும் இல்லே.. அப்ப தான் மேடம் நம்புவீங்க.." என்றவன் வெறி பிடித்தைப் போல் அவளை உலுக்கி எடுத்தான்.

அவளோ, அவனின் செயலில் பயந்து நடுங்கினாள்.

அவளின் பயந்த பாவத்தைக் கண்டும், காணாமலும் அவளை விட்டவன், அறைக்குள் குறுக்கும் ,நெடுக்கும் நடந்து தன் ஆத்திரத்தை சமன்படுத்த முயன்றான்.

அவளுக்கோ ,அவனின் நடவடிக்கைகள் மனதிற்குள் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியது. என்ன செய்தும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை.. நடந்ததை அவளிடம் சொல்ல நினைத்தவனுக்கு ,அவனுள் பச்சை புண்ணை கிளறி விட்டதை போல் உயிர் வலி கொடுத்தது.

தாங்க முடியாத கோபத்திலும்,ஆத்திரத்திலும் சுவற்றை கைகால் ஓங்கி குத்தினான்.

அவளோ அதைக் கண்டு "அச்சோ மிகன் என்ன இது !" என்று அலறிய படி அருகில் வந்தவளை " பக்கத்தில் வராதே திகழி ! உன்னை கொன்று விடுவேன்.." என்றவனின் வார்த்தையைக் கேட்டு அசையாமல் அப்படியே நின்றாள்.

சில நொடிகளில் பெரும் பாடு பட்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அசையாமல், கண்களில் ஈரப்பசையே இல்லாமல், தன்னையே வெறித்து பார்த்தபடி நின்றவளிடம், அத்தனையையும் ஒன்று விடாமல் கட்டுக்கடங்காத கோபத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டவள் மனமும், உடலும் நடுங்க, அப்படியே சரிந்து மயங்கி கீழே விழுந்தாள்.

மிகனோ , அவள் மயங்கியது கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும், அடுத்த விநாடி அவளை தன் மடியில் கிடத்தி "ஒளி..ஒளி.." என்று கன்னம் தட்டி பதறி அழைத்தான்.

அவளோ, விழி திறக்காது அவனை மேலும், மேலும் பதறச் செய்தாள். அவளை கீழே படுக்க வைத்து விட்டு தன் மேஜை மீது இருந்த தண்ணீர் குடுவையில் இருந்து, கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.

முகத்தில் நீர்த் திவலைகள் விழுந்ததும், மெல்ல கண்களை சுருக்கி, விழித்தவளின் விழித் திரையில் மிகனின் பயந்த முகம் தான் விழுந்தது.

மெல்ல எழுந்து அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள்..தன்னை சமன்படுத்திக் கொள்ள சில நொடிகள் எடுத்துக் கொண்டாள்.

அவனோ, "திகழி இப்ப ஓகே வா .." என்றவனிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.

அவளால், அவன் சொன்ன செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை..

விதி எப்படி எல்லாம் ஒருவரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. தான் கனவிலும் நினைக்காத ஒன்று இன்று மிகனின் வாழ்க்கையில் நிகழ்ந்து உள்ளது.

இங்கு யாரை குறை கூறுவது.. காலம் செய்த கோலத்தால் அழகாக வாழ்ந்து இருக்க வேண்டிய இருவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாய் அந்தரத்தில் தொங்குகிறது.

அவனின் கோவத்திற்கு காரணம் இப்போது தான் அவளுக்கு புரிந்தது. ஆனால், அவன் நடந்த நிகழ்வுக்கு தன் மீது அர்த்தமே இல்லாமல் கோவப்படுவது தான் அவளை கவலைக்குள்ளாக்கியது.

அன்றிலிருந்து இன்று வரை இவன் மாறவே இல்லை..என்று மனதிற்குள் வருந்தினாள்.

அவள் முகத்தில் தெரிந்த பல்வேறு கலவையான உணர்வை கண்டு "இப்போது புரியுதா?" என்றவனிடம்.. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.

அவனோ, "திகழி நீ செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்ய இதை தவிர உனக்கு வேறு வழி இல்லை .."என்றவனை உயிர்ப்பே இல்லாமல் பார்த்தாள்.

மனமோ, 'நான் என்னடா பாவம் செய்தேன். எனக்கும் இதுக்கும் ஒரு சதவீதம் கூட சம்பந்தம் இல்லையே.. அது உனக்கு புரியவே புரியாதா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறாயா? என்று தனக்குள் கேள்வி கேட்டு கலங்கி தவித்தாள்.

" பதிலே சொல்லாமல் என்னையே பார்த்தால் என்ன அர்த்தம் .." என்று கேட்டவனிடம்..

"என்னால் எப்படி முடியும்..அப்பா அம்மா வேறு ஒருவருடன் திருமணம் பேசிட்டாங்களே.."

"ஏய் ரொம்ப பண்ணாதே ! பொண்ணு தானே பார்த்துட்டு போய் இருக்காங்க..என்ன உறுதியா செய்து இருக்காங்க.."

"எல்லாம் உறுதியான மாதிரி தான்.."

"ஓ! அப்ப அவனை கல்யாணம் செய்துக்க போறே அப்படி தானே..?"

"மிகன் எதுவும் என் கையில் இல்லை.."

"இங்கே பாரு நீ சொல்ற காரணம் எனக்கு தேவை இல்லை. ஒரே பதில் தான். உன்னால் மகிழிக்கு அம்மாவா இருக்க முடியுமா? முடியாதா?"

"மிகன் நான் சொல்வதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. எங்க வீட்டில் இதற்கு எப்படி ஒத்துக்குவாங்க.."

"அதை பற்றி எனக்கு கவலை இல்லை..எனக்கு தேவை உன் பதில்.."

"உங்களுக்கு எது தான் தேவை.. எதையுமே புரிந்து கொள்ளாமல் பேசினால் நான் என்ன செய்ய..?"

"எனக்கு தேவை நீ மட்டும் தான்.. நான் எல்லா புரிஞ்சு தான் பேசறேன்.."

"ப்ரக்டிக்கலா யோசிங்க மிகன் . நான் எப்படி அப்பா அம்மாவிடம் சொல்வேன்.அவர்கள் உங்க மேலே இன்னும் கோவத்துடன் தான் இருக்காங்க.."

"இருந்தா இருக்கட்டும். அதை பற்றி எனக்கு கவலை இல்லை.அவர்கள் சம்மதித்தால் அவர்கள் சம்மதத்துடன் நம் கல்யாணம் நடக்கும். இல்லையென்றால் அவர்கள் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தான்.."

"என்னால் அவர்கள் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முடியாது.. "

"ஓ.. அப்போ உங்க அப்பா பார்த்த கதிரவனை கல்யாணம் செய்துக்க போறே அப்படித் தானே ? பார்த்துக்கலாம் நீ எப்படி அவனே கல்யாணம் செய்யறனேன்னு.." என்று சவால் விட்டவனை என்ன செய்வது என்று அறியாமல் பார்த்தாள்.

"சரியாக அந்த நேரம் மிகனின் அலைபேசி சினுங்கியது.."

மிகனோ, அப்பா காலிங் என்று ஒளித்திரையில் மின்னிய பெயரை யோசனையுடன் பார்த்தபடியே அழைப்பை ஏற்றான்.

அந்த பக்கம் உலகமாறனோ, "மிகா சாயங்காலம் நேர கம்பெனியிலிருந்து நம் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வந்து விடு..!"என்றார்.

"எதுக்குப்பா..?"

"ம்..பெண் பார்க்கத் தான்.."

"அப்பா.."என்று அதிர்ச்சியாக கத்தியவனிடம்..

"எதுக்குப்பா இத்தனை அதிர்ச்சி.." என்று மகனின் குரலை வைத்தே அவனின் மனநிலையை கண்டு கொண்டார்.

அவனோ "என்னால் வர முடியாதுப்பா.. எனக்கு வேலை இருக்கு.."என்றவனிடம்..

"என்ன வேலையாக இருந்தாலும் ,அதை அப்புறம் பார்த்துக்கலாம்..சரியான நேரத்துக்கு கோவிலுக்கு வந்தது சேர்.."என்றவரிடம்..

"அப்பா எனனால் முடியவே முடியாதுப்பா.."

"இங்க பாரு தம்பி. நான் உன்னிடம் வரமுடியுமா?முடியாதான்னு கேட்கலை..வரச் சொன்னேன்.."

"அப்பா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.."

"நல்லா புரிஞ்சதால் தான் சொல்றேன். கரெக்டா வந்துரு.." என்றவர் மகனின் பதிலை கேட்காமலேயே அழைப்பை துண்டித்தார்.

அவனோ "ச்சே.." என்ற படி கால்களை காற்றில் உதைத்து தன் இயலாமையை போக்கி கொண்டான்.

திகழொளியோ, அதுவரை மிகன் பேசியதை மட்டுமே கேட்டு கொண்டு இருந்தாள்.அந்தபக்கம் அவனின் தந்தை என்று புரிந்தது.

ஆனால், எதற்கு வரச்சொன்னார்? இவன் எதற்கு? அதற்கு இத்தனை கோவப்படுகிறான்?என்று குழம்பியபடியே அவனைப் பார்த்தாள்.

அவனோ, அப்போது தான் அவள் இருந்ததை உணர்ந்தவன், தன் கோவத்தை எல்லாம் சம்மந்தமே இல்லாமல் அவள் புறம் திருப்பினான்.

"என்ன பார்க்கிறே.. எல்லாம் உன்னால் தான். என்னைக்கு நீ என் வாழ்க்கையில் நுழைந்தாயோ? அன்னையில் இருந்து தான் டீ எனக்கு பிரச்சினை.." என்று சீறினான்.

அவளோ, "இதையே நானும் சொல்வேன்.." என்று அப்பாவியாக கூறினாள்.

"சொல்லு டீ சொல்லித் தான் பாரே.." என்றவனிடம்..

"அது தான் சொல்லிட்டேனே.. இனி என்னத்தை சொல்ல.." என்றவள் எழுந்து ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்று ஓடினாள்.

அவள் ஓடுவதை பார்த்தவனுக்கு கோவம் தான் மென் மேலும் அதிகரித்தது. மனதிற்குள் இவளை அப்பறம் பார்த்துக்கலாம். முதலில் அப்பா செய்து வைத்திருக்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரனும் என்று நினைத்தவன் , அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.


வீட்டிற்குள் புயல் வேகத்தில் நுழைந்தவன், தன் தந்தையை தேடிக் கொண்டு அவரின் அறைக்குச் சென்றான்.

காலையில் அவர் அலுவலகம் செல்லாமல் இருந்தது இதற்கு தானா ! என்று நினைத்தவனுக்கு கையாலாகாத கோவம் வேறு வந்தது.

உலகமாறனோ, ஓய்வாக படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

அவரின் அருகில் சென்று அமர்ந்தவன் , "அப்பா.." என்று அழைத்தான்.

அவரோ, அருகில் மகனின் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து பார்த்தார்.

அவனின் வரவை அவர் எதிர்பார்க்கவில்லை என்று அவர் முகம் அப்பட்டமாக பிரதிபலித்தது.

அவனோ, தந்தையின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், அவரின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி அவர் படித்துக் கொண்டிருந்த பக்கத்தை மடித்து மூடி அருகில் வைத்தான்.

பதிலே பேசாமல் அவர் மகனின் செய்கைகளைக் கவனித்தார்.

அவரின் பார்வையை உள்வாங்கிய படி "அப்பா உங்க கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும் பா.."

"என்ன விஷயம் பா ..இப்படி அரக்க, பறக்க வந்து இருக்கே.."

"எல்லாம் உங்களால் தான்.என்னைக் கேட்காமல் நீங்க எதுக்கு பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்தீங்க.."

"நான் தான் நீ கேட்ட மூணு மாசம் டைம் கொடுத்தேன். மூணு மாசம் முடிஞ்சுச்சு ..எனக்கு வாக்கு கொடுத்த படி நான் சொல்ற பெண்ணே நீ கல்யாணம் செய்யனும்..அது தானே சரி.."

"அப்பா விளையாடதீங்க.. இது சாதாரண விஷயம் இல்லே.."

"ஆமாம். அதனால் தான் பெண் வீட்டாரைப் பற்றி தீர விசாரித்த பின்தான் இந்த ஏற்பாடு செய்தேன்.."

"அப்பா நான் அதை சொல்லலே.. வந்து எனக்கு சொல்லத் தெரியலே.."

"உனக்கா சொல்லத் தெரியாது..?"

"அச்சோ அப்பா ! எனக்கு இந்த பெண்ணே பிடிக்கலே.."

"அது எப்படிப்பா பார்க்காமலே பிடிக்கலேன்னு சொல்லுவே .."

"இந்த பெண்ணை மட்டும் இல்லே, எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்காது.."

"ஏம்ப்பா.." என்று மகனின் வாயிலிருந்தே உண்மை வர வேண்டுமென்று அப்பாவியாக கேட்டார்.

அவனோ "அப்பா என்னால் திகழொளியை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.." என்று உண்மையை போட்டு உடைத்தான்.

தொடரும்..

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 11


நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை கேட்கும் பொழுது, பெரும்பாலும் பெரிதாக அதிர்ச்சி ஏற்படாது. அதுபோல் மகன் சொன்னதைக் கேட்ட உலகமாறனுக்கு திகைப்பை ஏற்படுத்தவில்லை..


மகன் மனதில் இருப்பதை இன்றாவது சொல்லட்டும் என்று அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.


தந்தை எதிர்வினை ஆற்றாதைக் கண்டு மிகன் கொஞ்சம் குழம்பித் தான் போனான். தான் சொன்னது சரியாக அவருக்கு கேட்கவில்லையோ? என்று நினைத்து "ப்பா நான் ..நான்..சொன்னதுக்கு நீங்க பதிலே சொல்லலே.." என்ற மகனிடம்..


"என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிறேப்பா.."


"இப்படி கேட்டா நான் என்னப்பா சொல்ல.."


"வேறு எப்படி கேட்கச் சொல்றே..நீ செய்து வச்சிருக்க காரியத்திற்கு நான் எந்த முகத்தை வைச்சுட்டு போய் பொண்ணு கேட்க முடியும்.."


"அப்பா அது முடிஞ்சு போன விஷயம். பழைய கதையை இப்ப பேசி என்னாகப் போகுது.."



"எதுவும் ஆகாது ப்பா..ஆனால், அதோட தாக்கம் இருக்கும் அல்லவா.. ? உன்னால் தான் அவங்க வீட்டை வித்துட்டு ஊரை விட்டே போனாங்க.. அதை மறப்பாங்களா? அப்புறம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கலாம்.."


"கல்யாணமெல்லாம் ஒண்ணும் ஆகலே.."


"அது எப்படிப்பா உனக்கு தெரியும்.."


"தெரியும்ப்பா.."


"அது தான் எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே.."


"அவ என் கம்பெனியில் தான் வேலை செய்யறா.."


"ஓ.. அது எப்ப இருந்து .."


"நான் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி இருந்தே.. அவ அங்க தான் வேலை செய்யறா.." என்ற மகனின் கூற்றைக் கேட்டவர்க்கு, மகனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் புரிபட்டது.


தந்தை தான் சொன்னதைக் கேட்டு அமைதியாக சில நிமிடங்கள் இருப்பதைக் கண்டு "அப்பா என்னால் அவளைத் தவிர வேறு யாரையும் உறுதியாக திருமணம் செய்து கொள்ள முடியாது.."என்றான்.


அவரோ, மகனை கூர்ந்து பார்த்துக் கொண்டே "அது தான் மகிழி இடம் அந்த பெண்ணை அம்மான்னு சொல்லி வச்சு இருக்கீயா ..?"


" நான் சொல்லலே.. பர்ஸ்லே வச்சு இருந்த போட்டோ பார்த்து , அவளே அம்மான்னு சொன்னா.. நானும் அப்படியே விட்டுட்டேன். அது எப்படி உங்களுக்கு தெரியும்.."


"ஓ ! ப்ரோவில் வச்சு இருப்பது பத்தாதுன்னு பர்ஸ்லேயும் வச்சு இருக்கே.."


"அப்பா ! அது எப்படி உங்களுக்கு தெரியும்.."


" தரகர் பொண்ணுக போட்டோ கொடுத்திருந்தார். அதில் திகழொளி போட்டோ இருந்துச்சு. மகிழி அதை பார்த்துட்டு , தாத்தா அம்மா ..அம்மான்னு போட்டோவை காட்டி சொன்னா.. அதன் பிறகு எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு, உடனே உன் ரூம்லே தேடுனேன் . உன் ப்ரோவில் அவள் போட்டோ இருந்துச்சு.." என்ற தந்தையை வியப்பாக பார்த்தான்.


அவரோ ,மகனின் வியந்த பார்வையை அலட்சியம் செய்துவிட்டு , " அந்த பெண் இன்னும் உன்னை விரும்புதா? இந்த கல்யாணத்திற்கு சம்மதிப்பாளா..?"என்றார்.



"அவளை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.."


"மிகா இது விளையாட்டு காரியம் இல்லை. உங்க இரண்டு பேரோட வாழ்க்கை ! நல்லா யோசித்து சொல்லு!"


"ப்பா நான் நல்லா யோசித்து தான் சொல்றேன். எனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா ! அது அவ கூட மட்டும் தான் நடக்கும். இது என் தீர்மானமான முடிவு.."



மகனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை கண்ட மாறன் ஒரு நெடிய பெருமூச்சை இழுத்து விட்டவர் , "நீ இவ்வளவு பிடிவாதமாக இருப்பதால் நான் மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கிறேன். ஆனால், ஒண்ணு.." என்றவர் மகனை நேர் பார்வை பார்த்தார்.


தந்தையின் கூர் பார்வையைக் கண்டு "என்னப்பா.." என்றவனிடம்.


"இரு கை தட்டினால் தான் ஓசை ! அது போல் கல்யாணம் என்பது இரு மனங்களின் இணைவு. அது முழு மனதுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தியோ, இல்லை பழி வாங்கவோ..உன் கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காகவோ இந்த கல்யாணம் இருக்க கூடாது.."


" அப்பா இன்னும் நீங்க என்னை நம்பலே அப்படித்தானே.."


நான் நம்பறேன் ! நம்பலே ? அது இரண்டாவது பிரச்சினை..ஆனால், என் பையன் வாழ்க்கை மட்டுமில்லே, அந்த பொண்ணோட வாழ்க்கையும் இதில் அடங்கியிருக்கு.அதனால் தான் கேட்டேன்.."


"நீங்க நினைப்பது போல் எதுவுமில்லை. அவங்க வீட்டில் அவளுக்கு இப்ப மாப்பிள்ளை பார்க்கிறாங்க.. என்னால் அவளை வேறு யாருடனும் சேர்த்து பார்க்க முடியாது.."என்ற மகனை யோசனையாக பார்த்தவருக்கு, மகனின் இந்த நாலு வருட கால வாழ்க்கை அவன் சொன்னதில் இருந்த உண்மையை உணர்த்தியது.



எப்படியோ இனியாவது மகன் மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் சரி என்று நினைத்தார்.கடைசியாக அவருக்கு எழுந்த சந்தேகத்தையும் மகனிடம் கேட்டே விட்டார்.


"மிகா மகிழிக்காக இந்த கல்யாணம் இல்லை தானே.." என்றவரிடம்.. "எனக்காகவும் தான், மகிழிக்காவும் தான்.." என்றான் புதிராக .


"மிகா நீ பழசை மனதில் வைத்து எதையும் செய்து விடாதே ப்பா.."


"அச்சோ அப்பா நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை. கண்டதையும் போட்டு நீங்க குழப்பிக்காம எனக்கு திகழொளியை கல்யாணம் செய்து வைங்கப்பா ! ப்ளீஸ்.." என்று தந்தையின் கரத்தை பற்றி கேட்கவும் மகனின் செய்கையில் அவரும் உச்சி குளிர்ந்து போனார்.


உலகமாறன் மனதிற்குள் அடுத்த தான் செய்ய வேண்டிய காரியத்தை பற்றி தீவரமாக சிந்திக்க தொடங்கினார்.


மேலும் இரண்டு தினங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே சென்றது.


மிகனுக்கு அலுவலக வேலை சுழல் போல் இழுத்துக் கொண்டது. அவனால் திகழொளி இடம் வேலையை தவிர வேறு எதுவும் பேச நேரம் கிடைக்காமல், வேலையில் மூழ்கினான்.


திகழொளியோ, மிகனின் பிரச்சினை இல்லையே என்று நிம்மதி அடைய முடியாமல், கதிரவன் அவளை படுத்தி எடுத்தான்.


அமுதனிடம் திகழொளியின் கைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு, கதிரவன் அடிக்கடி அவளை அழைத்து பேச முயற்சி செய்தான்.


திகழொளியோ, முடிந்தவரை ஏதாவது காரணம் சொல்லி அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.


அவள் மனமோ செய்வதறியாது தவித்தது.கதிரவனை தன்னால் திருமணம் செய்து வாழ முடியுமா? என்ற கவலை நாளுக்கு நாள் வேரூன்றி அவளை பயமுறுத்தியது.



இதற்கிடையில் மிகனிடமும் அன்று வசமாக சிக்கினாள். ஏதோ சந்தேகம் கேட்க அவன் அறைக்கு வந்தவளை அவன் கடித்து குதறினான்.


தந்தையிடம் நல்லவனாக கல்யாண ஏற்பாட்டைச் செய்ய சொல்லி விட்டு.. அவளிடம் தன் கோபத்தை விடாமல் பிடித்து வைத்து தொங்கிக் கொண்டு இருந்தான்.


"மிஸ்டர் கதிரவன் எப்படி இருக்கார் .போன் பேசுவாரா?"என்று இயல்பாக கேட்பது போல் கேட்டான்.


அவளும் அவனின் சூது அறியாமல் "ம்ம் ! நல்லா இருக்கார் .." என்று எதார்த்தமாக கூறினாள்.


அவனோ , "ஓ..! அப்ப மேடம் தினமும் போன்ல பேசி கொஞ்சி குழாவிறீங்க.. நடக்கட்டும், நடக்கட்டும் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்கிறேன்.."என்றவனிடம்.


"ஏன் இப்படி குதர்க்கமாக பேசறீங்க..? நீங்க ரொம்ப மாறீட்டீங்க மிகன்.."


"ஆமாம் மாறிட்டேன் தான்.. நீ தான் டீ அதற்கு காரணம்.."


"மிகன் நான் பல தடவை சொல்லிட்டேன். டீ போட்டு பேசாதீங்க..நான் இன்னொருவருக்கு மனைவி ஆகப் போறவ..?"


" ஓ!அப்படி வேறு உனக்கு கனவு இருக்கா..?"என்றவன், அவளின் அருகில் வந்து அவள் எதிர்பாராத பொழுது, அவளின் முகவாயைப் பற்றி "அவன் கூட எப்படி கல்யாணம் நடக்கும்ன்னு நானும் பார்க்கிறேன். இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணம்ன்னு நடந்தா ?அது என் கூட மட்டும் தான்.." என்றவனின் கண்களில் சொல்லிடங்கா கோபம் மின்னியது.


அவனின் கோபத்தைக் கண்டவளுக்கு மனதிற்குள் அச்சம் பிறந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,தன்னை பற்றியிருந்த அவனின் கைகளை தட்டி விட்டபடி.. "உங்களால் என்ன முடியுமோ பார்த்துக்கோங்க.."என்றாள்.


அவனோ, "பார்க்கத் தான் போறேன்.." என்றவனை அலட்சியம் செய்த படி அறைவாயில் வரை சென்றவள், ஒரு நொடி அவனை திரும்பி பார்த்தாள். அவனும் அவளையே பார்த்தான்.


அவளோ அவன் அருகில் வந்து" எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.." என்றாள்.


அவனோ, ""என்ன..?" என்றான்.


"மிகன் உங்க மனசுலே நான் இருக்கேனா?வந்து நீங்க என்னை விரும்புகிறீர்களா..?"


"இல்லை.." என்று சட்டென பொய்யுரைத்தான்.


"அப்புறம் எதுக்கு இப்போ என்னை கல்யாணம் செய்ய நினைக்கிறீங்க.."


"கண்டிப்பா சொல்லனுமா.."

"ஆமாம்.."


"மகிழிக்காக, நீ செய்த பாவத்திற்காக..அப்புறம் வேறு யாரையோ கல்யாணம் செய்துட்டு, நீ நிம்மதியா வாழக் கூடாது ! அதுக்குத் தான்.."


"நான் எந்த பாவமும் செய்யலே.இதை நான்‌ பல தடவை சொல்லிட்டேன்.என் நிம்மதியே கெடுத்து உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது.."


"ம்!உன்னால் நான் அனுபவிச்ச நரக வேதனைக்கு பரிகாரம் வேண்டாமா? அதுக்குத் தான்.."


"நான் என்ன சொன்னாலும் நம்பவே மாட்டீங்களா?"


"நீ சொல்றதையெல்லாம் நம்ப முடியாது . உண்மைன்னு ஒண்ணு இருக்கு.."


"அதே தான் நானும் சொல்றேன். நல்லா பொறுமையா சிந்தித்து பார்த்தால் உண்மை உங்களுக்கே புரியும்.."


"புரிந்தவரை போதும்.."


"என் மேலே இத்தனை வெறுப்பை வைச்சுட்டு , என்னை கல்யாணம் செய்து எப்படி எங்கூட கடைசி வரை வாழ முடியும்..?"


"அதை பற்றி உனக்கு என்ன கவலை.."


"இதிலே என் வாழ்க்கையும் இருக்கே..அது தா கேட்கிறேன்.."


"ம்ம்! அது கல்யாணத்துக்கு அப்புறம் நீயே தெரிஞ்சுப்பே.."


"ப்ளீஸ் மிகன் உங்க எண்ணத்தை மாத்துங்க! என்னால் உங்க கூட தினம்..தினம் போராட முடியலே. நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ன செய்யறீங்க? எனக்கு எதுவுமே புரியலே.."


"புரியாத வரைக்கும் நல்லது தான்.."


"நான் எந்த தப்பும் எப்பவுமே செய்யலே மிகன். நான் செய்த ஒரே தப்பு உங்களே மனசார நேசித்து தான்.."


"அது தான் சொல்றேன் என்ன மட்டும் நேசித்து இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே.."


"நீங்க நம்புனாலும்? நம்பாட்டியும்? நான் உங்கள மட்டும் தான் எப்பவும் நேசித்தேன்.." என்றவள் அதன் பிறகு நிற்காமல் அறையை விட்டு வெளியே வேகமாக வந்தவள், சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.


தன் பதட்டத்தையும், இயலாமையும், அழுகையும் கட்டுபடுத்தவே அவளால் முடியவில்லை.. உடன் பணிபுரிவோரின் கவனத்தை ஈர்க்காமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரும் பாடு பட்டாள்.


அவளின் நினைவுகளில் பழைய ஞாபகங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, அவளை சூறாவளியாக சூழ்ந்து கொண்டது.


நினைவுகளின் தாக்கங்களை தாங்க முடியாமல் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அமுதனை வரவழைத்து வீட்டிற்குச் சென்றாள்.


தமக்கையின் முகத்தை பார்த்தே, அமுதன் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டான்.


ஆனால், இப்போதைக்கு எதையும் கேட்டு அவளை மேலும் தொல்லை செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்.


தன் தாய் , தந்தை இடம் தலைவலி என்று திகழொளி பொய்யுரைத்து விட்டு படுக்கையில் தலை சாய்த்தாள்.


ஆனால் , திகழொளிக்கும் நிம்மதிக்கும் வெகு தூரம் போல்..அந்த நேரத்தில் கதிரவன் அவள் கைபேசிக்கு அழைத்தான்.


இவளோ வழியே இல்லாமல் அழைப்பை ஏற்றாள்.


அந்த பக்கம் கதிரவனோ "திகழி இவீனிங் நீ ப்ரீயா இருந்தா? வெளியில் எங்காவது போலாமா..? கொஞ்சம் உன்னிடம் பேச வேண்டும் .."என்றவனிடம்.


"இல்லை. எனக்கு உடம்பு முடியவில்லை.என்னால் வரமுடியாது .."என்று சொன்னவள், அவனின் பதிலைக் கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.


அந்த பக்கம் கதிரவனோ, இவளின் செய்கையில் குழம்பினான்.. அவன் மனதிற்குள் தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையோ? என்ற சந்தேகம் வலுப்பெற்றது.


மிகனோ, திகழொளியின் நிழற்படத்தை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டே, மனதிற்குள் 'ஒளி நீ சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் , அதற்கு வாய்ப்பே இல்லாமல் நடந்த நிகழ்வுகள் எல்லாம் சாட்சியாக இருக்கே.." என்று மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தான்.


தொடரும்..

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்துகொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 12

காலம் தான் தனக்குள் எத்தனை விந்தையை மறைத்து வைத்திருக்கிறது. அதை நாம் அந்த.. அந்த சூழ்நிலையில் தான் உணர்ந்து கொள்ள முடியும்.

அது போல் மிகனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கேள்விபட்டதிலிருந்து, திகழொளிக்கு மனதிற்குள் கொஞ்சம் நிம்மதியும், கொஞ்சம் துக்கமும் இருவேறு உணர்வுகள் அவளை அலைக்கழித்தது.

என்ன தான் அவன் தன்னை நேசிக்கவில்லை என்று பொய்யுரைத்தாலும், அன்றிலிருந்து இன்று வரை அவன் அவளை நேசிக்கிறான் என்பது அவள் மனம் அறிந்த உண்மை.

அவன் மறைத்தாலும், அவள் உள் உணர்வுக்கு அது நன்றாகவே தெரிந்தது. ஆனால், இந்த உண்மையை என்று தான் அவன் உணர்ந்து கொள்வனோ? என்று எண்ணினாள்.

திகழொளி விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததிலிருந்து, தனக்குள்ளேயே போராடி.. போராடி ஓய்ந்து போனாள்.இரவு உணவையும் வேண்டாமென்று கூறிவிட்டு அறையிலேயே அடைந்து கிடந்தாள்.


அவளால் மிகனுடன் போராட முடியவில்லை.. தினம், தினம் அவனின் குத்தல் பேச்சை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..தப்பே செய்யாமல் எத்தனை நாள் தான் தண்டனை அனுபவிப்பது. வேலையை விட்டு விடலாம் என்று நினைத்தால் அதற்கும் வழி இல்லை.


வீட்டில் உள்ளவர்களிடம் அவள் என்னவென்று சொல்லுவாள்.மிகனைப் பற்றி சொன்னால், ஒத்துக் கொள்வார்கள் தான். ஆனால், மிகனை யாரும் தவறாக எண்ணுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.


அவன் எதற்காக திருமணத்திற்கு வற்புறுத்துகிறான் என்றே அவளுக்கு புரியவில்லை.அவனைப் பற்றி எப்படி யோசித்தாலும் குட்டிச் சுவரில் மோதிக் கொள்வதைப் போலவே அவள் நிலைமை இருந்தது.

தன் பெற்றவர்களை எதிர்த்துக் கொண்டு அவனை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள அவளால் முடியவே முடியாது.


அவள் மீது வெறுப்பை மட்டுமே வாரி வழங்கும் அவனை எந்த நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்ள முடியும்? இருவரின் வாழ்க்கையும் இன்னும் மோசம் தான் ஆகும்.அது ஏன் அவனுக்கு புரியவில்லை? என்று பலதையும் யோசித்து.. யோசித்து அவள் சோர்ந்து போனாள்.


விடை தெரியாத கேள்விக்கு என்ன யோசித்தாலும் பதில் கிடைக்கப் போவதில்லை என்று இறுதியாக உணர்ந்தவள் , நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் காலத்தின் கையில் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு உறங்க முற்பட்டாள்.


மிகனோ, மகிழியை தன் நெஞ்சில் படுக்க வைத்துக் கொண்டு, அவளின் தலையை வருடியபடி திகழொளியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான்.


அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்ற உண்மை அவனுக்கு ஆணித்தரமாக உரைத்தது. சமீபகாலமாக அது நன்றாகவே புரிந்து.


அவளை வேறு ஒருவருக்கு ஒரு போதும் தன்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் அவனுக்கு சிறிதும் ஐயமில்லை.


அவள் தானே தன்னுள் நேசம் என்ற உணர்வை முதல் முதலாக விதைத்தவள் .அது இன்று ஆணிவேராக படர்ந்து விட்டது. அவள் மீது இருக்கும் இந்த நேசம் சிறிதளவு கூட குறையாமல் அதிகரித்து மரமாக வளர்ந்து நிற்கிறது.


விதியின் விளையாட்டால் இன்று வரை அவள் மீது அவன் கொண்டுள்ள நேசத்தை அவன் வெளிப்படுத்தியது இல்லை.ஏன் அவன் தந்தையை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சம்பந்தபட்டவளுக்கே தெரியாத பொழுது வேறு யாருக்கு தெரிந்து தான் என்ன ஆகப்போகிறது என்று சலிப்புடன் நினைத்துக் கொண்டான்.

ஆனால், இப்போது காலம் எப்படியும் அவளை தன் கையில் சேர்க்கும் என்று உறுதியாக நம்பினான்.அவனின் நேசத்தின் மேல் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

அவனின் நம்பிக்கை பொய்க்காமல் மகன் கொடுத்த முகவரியில் உலகமாறன் திகழொளி வீட்டிற்கு சென்று அவளின் பெற்றவர்களை சந்தித்தார்.

மிகன் திகழொளியின் முகவரியை தெரிந்து வைத்திருப்பது உலகமாறனுக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை..மகன் திகழொளியை எந்தளவு விரும்புகிறான் என்பது அவர் நன்றாகவே அறிந்து இருந்தார்.

உலகமாறனை நாலு வருடங்களுக்கு பின்பு கண்ட பொன்னியும், அறவாணனும் மனதில் ஆயிரம் வருத்தம் இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அன்புடனேயே வரவேற்றனர்.

அவரோ அறவாணனின் தற்போதைய நிலையை கண்டு மனம் கலங்கினார். எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்தார். ஏதோ ஒரு வகையில் அவரின் இந்த நிலமைக்கு தன் மகனும் காரணம் என்று மனம் வருந்தினார்.


பொன்னி கொடுத்த காஃபியை மறுக்காமல் வாங்கி குடித்தவரின் மனதிற்குள், பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்ற சிந்தனையே ஓடியது.


நடந்த நிகழ்வுகளை நினைத்து ஒரு புறம் திகழொளியை பெண் கேட்க தயக்கமாக இருந்தாலும்,மறுபுறம் மகனின் ஆசையை நினைத்து தன் தயக்கத்தை தூக்கி போட்டு விட்டு பேச தயாரானார்.


" சார் நான் உங்களை பார்க்க வந்தது ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசத்தான்.என்றோ நடந்து இருக்க வேண்டிய விஷயம் பல குழப்பங்களால் நடக்காமல் போய்விட்டது. இப்போது தான் அதற்கான நல்ல நேரம் வந்து இருக்கு .."என்று புதிர் போட்டபடி பேச்சை ஆரம்பித்தார் உலகமாறன்.

திகழொளியின் பெற்றவர்களுக்கு அவர் பேசியது ஒன்றுமே புரியவில்லை.எதுவாக இருந்தாலும் அவரே சொல்லட்டும் என்று அமைதியாகவே இருந்தனர்.


உலகமாறனோ, அவர்களின் மனநிலையை உணர்ந்து கொண்டு சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் போட்டு உடைத்தார்.


"நான் திகழொளியை மிகனுக்கு பெண் கேட்க வந்து இருக்கேன்.." என்று அவர் கூறியவுடன் பொன்னியும் அறவாணனும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள்.

பதிலே பேசாமல் உறைந்து இருந்தவர்களிடம் "உங்களுக்கு இது திகைப்பாகத் தான் இருக்கும். ஆனால், நான் உண்மையாகத் தான் கேட்கிறேன்.நடந்து முடிந்தவற்றை பற்றி பேசி மேலும், மேலும் ஆறி வரும் காயத்தை அதிகப் படுத்திக்க வேண்டாம்.."என்றவர் பேச்சை நிறுத்தி அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்.


ஆனால் அவர்களிடம் எந்த மாறுதலும் இல்லை. மீண்டும் அவரே தொடர்ந்தார்.

"மிகன் செய்த தவறுக்காக நான் மீண்டும் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன். உண்மையை சொன்னால் அன்று அந்த சூழலில் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று அப்போது எனக்குமே தெரியவில்லை.." என்றவர் ஒரு நெடிய பெருமூச்சுடன் பேச்சை தொடர்ந்தார்.


"தயவுசெய்து பழசை மறந்து விடலாம்.மிகனுக்கு திகழொளியை கல்யாணம் செய்து கொடுங்க. நாங்க நல்லா அவளைப் பார்த்துப்போம்.இத்தனை வருஷம் இரண்டு பேருக்கு கல்யாணம் நடக்காமல் இருப்பது கூட இவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று தான் போல்.." என்றவரை உயிர்ப்பே இல்லாமல் பொன்னியும் அறவாணனும் பார்த்தார்கள்.


உலகமாறனுக்கோ, அவர்களின் அமைதி மனதிற்குள் கலக்கத்தைக் கொடுத்தது. இருந்தாலும் மகனுக்காக பேசினார்.

"உண்மையை சொல்லனும்ன்னா என்‌ மகனின் வாழ்க்கை இப்ப உங்க கையில் தான் இருக்கு. இந்த நாலு வருடமாக அவன் அவனாக இல்லை. நடைபிணமாக வாழ்கிறான்.."என்றவர் கண்கலங்க தன் மகன் செய்த காரியத்திற்கான விளக்கத்தையும் அதன் பின் தன் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளையும் அவர்களிடம் கொட்டித் தீர்த்தார்.

உலகமாறன் சொன்னதைக் கேட்டு திகழொளியின் பெற்றவர்கள் பேச்சற்று சிலையாக அமர்ந்திருந்தனர்.

இப்படி கூட நடக்குமா ? இது எந்த மாதிரி அன்பு என்று சரியாக மிகனின் பக்கம் நின்று யோசித்தார்கள். அவனால் தாங்கள் பட்ட கஷ்டம் அதிகம் என்றாலும், உண்மையை கேட்ட பின் அவன் மீது வருத்தமே மேலோங்கியது .

விதியின் விளையாட்டை என்ன வென்று சொல்வது என்று தங்களுக்குள் நொந்து கொண்டார்கள்.

உலகமாறனோ, அறவாணனின் கைகளை பிடித்துக் கொண்டு "சார் ப்ளீஸ் என் மகன் வாழ்க்கை இப்போது நீங்க சொல்ற பதிலே தான் இருக்கு.".என்றவரிடம்.

அறவாணனும் அவரின் கைகளை பற்றிக் கொண்டு, "நீங்க சொல்வது எல்லாம் புரியுது . ஆனால், திகழிக்கு இப்போது தான் ஒரு சம்பந்தம் கூடி வந்திருக்கு.." என்று கதிரவனை பற்றி சொன்னவரிடம்.

"அது இன்னும் உறுதியாக வில்லை தானே. எத்தனையோ உறுதியான கல்யாணம் கூட கடைசி நொடியில் நின்று இருக்கிறது. பெண் பார்த்துட்டு தானே போய் இருக்காங்க. அதனால் என்ன.?நீங்க சம்மதித்தால் வரும் முகூர்த்தத்திலேயே சிம்பிளா கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் .."என்று அவர் பிடியிலேயே நின்றார்.

" நீங்க சொல்வது எல்லாம் சரி தான். ஆனால் ,இன்னும் கூட எங்களால் சில விஷயங்களை நம்ப முடியவில்லை.. "என்றார் அறவாணன்.

"இருங்க நான் மிகனை வரச் சொல்லுகிறேன். அவனே பேசட்டும். அவன் செய்த தப்புக்கு அவன் தான் பதில் சொல்லனும்.." என்றவர் .. அறவாணன் மறுக்க, மறுக்க மிகனை அழைத்து திகழொளி வீட்டிற்கு வரச் சொன்னார்.

தந்தை சொல்லை தட்டாமல் மிகனும் திகழொளி வீட்டிற்கு அடுத்த அரை மணிநேரத்தில் வந்து சேர்ந்தான்.

நான்கு வருடங்கள் கழித்து அவனை பார்த்தவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தயக்கத்துடனேயே வரவேற்றனர்.

ஆனால், அவனுக்கு அது போல் எந்த தயக்கமும் இல்லை.. அறவாணனின் நிலையை கண்டு அதிர்ந்தவன் தனக்குள்ளேயே நொந்து கொண்டான்.

அவரின் அருகில் அமர்ந்து அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு " சாரி அங்கிள் நடந்த எல்லா தப்புக்கும் நான் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன்.எனக்கு அன்று வேறு வழி தெரியலை.."என்றவன் அன்றைய தன் மனநிலையை மறைக்காமல் சொன்னான்.

ஏற்கனவே உலகமாறன் எல்லாவற்றையும் சொல்லி இருந்ததால் அதிர்ச்சி ஆகாமல், மிகன் சொன்னதை அமைதியாகவே கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால், மனதிற்குள் மகள் பட்ட கஷ்டங்களையே நினைத்து இருந்தனர். அவர்கள் என்ன தான் மன்னிப்பு கேட்டாளும் அவர் மகள் அடைந்த துன்பத்திற்கு ஈடாகாது.அது மட்டும் இன்றி அவள் மீது தாங்களுமே கோவப்பட்டு பேசாமல் இருந்தோமே ! என்று தங்களை நினைத்தே குற்ற உணர்வில் தவித்தார்கள்.


"அங்கிள் பழசை மறந்துட்டு எனக்கு திகழொளியை கல்யாணம் செய்து கொடுங்க. நான் நிச்சயமாக நல்லா பார்த்துப்பேன்.என்னால் அவளை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அதுமட்டுமில்லை அவளாலும் என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ முடியாது .."என்று உறுதியாக சொன்னான்.

மிகன் சொன்னதைக் கேட்டவர்கர்களுக்கு தங்களை விட தங்கள் மகளை இவன் நன்றாக புரிந்து வைத்திருக்கிறானோ ? என்ற எண்ணம் வலுத்தது.மனதிற்குள் அதே சிந்தனையுடன் அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்கள்.

அவர்களின் அமைதி அவனுள் கலக்கத்தை கொடுத்தது. எப்படியாவது அவர்களை சம்மதிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் "அங்கிள் உங்களுக்கு இன்னும் என் மேல் நம்பிக்கை வரவில்லையா ? நான் என்ன செய்தால் நம்புவீர்கள்.."என்றவனிடம்.

"அப்படி எல்லாம் இல்லை தம்பி .இதில் எங்கள் முடிவை விட திகழியின் முடிவு தான் முக்கியம். என் பொண்ணு முகத்தில் சிரிப்பை பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது .அவளோட சந்தோஷம் தான் இப்போது எங்களுக்கு மிக அவசியம். நாங்கள் அவளிடம் கலந்து பேசிட்டு சொல்றோம்.. "என்று பட்டும் படாமலும் சொன்னார்.

ஆனால், அவனோ விடாக் கண்டனாக "திகழி இடம் நான் பேசிக் கொள்கிறேன். தினமும் நான் அவளை பார்க்கிறேன். அதனால் எனக்கு அவளிடம் பேசி சம்மதிக்க வைப்பது எளிது.. "என்றவனை புரியாமல் பார்த்தார்கள் அவளின் பெற்றவர்கள்.

அவர்களின் புரியாத பார்வையை கண்டு குழம்பியபடியே, " திகழி உங்ககிட்ட சொல்லலையா ? நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் தான் வேலை செய்கிறோம்.." என்று உண்மையை போட்டு உடைத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டவர்கர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.இவ்வளுவு பெரிய விஷயத்தை ஏன் மகள் தங்களிடம் சொல்லவில்லை என்ற எண்ணம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், அவள் எப்படி சொல்லுவாள். அவள் தங்களுடன் இயல்பாக பேசியே பல வருடங்கள் ஆகிவிட்டதே ! தாங்களும் அவளுக்கு அந்த வாய்ப்பை தரவில்லையே என்று வருந்தினார்கள்.

இன்னும் மகள் மனதளவில் தங்களிடமிருந்து விலகியே இருக்காளோ? இவனை தினமும் பார்த்து பழகிய பின் கூட கதிரவன் உடன் எப்படி திருமணத்திற்கு சம்மதித்தாள் என்ற கேள்வி அவர்களை புழுவாக குடைந்தது.

மகன் இத்தனை சொல்லியும் அவர்கள் பிடி கொடுக்காமல் இருப்பது உலகமாறனுக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது.

மகனின் வாழ்க்கை என்னாகுமோ? என்ற கவலை அவரின் மனதை அரித்தது.

ஆனால் மிகனுக்கு அந்த மாதிரி எந்த கவலையும் இல்லை போல் திடமாகவே இருந்தான் .அவர்களை எப்படியும் சம்மதிக்க வைத்து விடலாம் என்று ஆணித்தரமாக நம்பினான்.

இங்கே மிகன் செய்து வைத்திருக்கும் குளறுபடி தெரியாமல் திகழொளியோ தன் வேலையில் மூழ்கி இருந்தாள்.


தொடரும்..
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 13

எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது போல் உலகமாறனும், மிகனும் என்ன பேசியும் திகழொளியின் பெற்றவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை..

தங்கள் மகளின் முடிவைக் கேட்காமல் தங்களால் சம்மதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

மகள் இந்த நான்கு வருடம் பட்ட கஷ்டமே வாழ்வு முழுமைக்கும் போதும். இனி ஒரு முறை அவள் கலங்குவதை தங்களால் காணமுடியாது என்று நினைத்தார்கள்.

உலகமாறனும், மிகனும் தாங்கள் நினைத்து வந்தது நடக்காத வேதனையில் முகம் சோர்ந்து விடைபெற்றுச் சென்றனர்.

மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? என்ற பெரும் பயம் உலகமாறன் மனதைக் கவ்வியது.
மிகனுக்கோ, எப்படியும் திகழொளியை சம்மதிக்க வைத்து விடலாம் என்ற பெரும் நம்பிக்கை அவனுக்கு பக்க பலமாக இருந்தது.

அவர்கள் சென்ற பின் மனைவிடம் அறவாணன் "பொன்னி நீ என்ன நினைக்கிறே..உன் மனதுக்கு என்ன தோணுது.." என்று மனைவியிடம் கருத்துக் கேட்டார்.

அவரோ, "எனக்கு என்னவோ திகழி சம்மதிப்பாள் என்று தான் தோணுதுங்கோ.." என்றவரிடம்..

"எப்படி சொல்கிறாய்.."

"இந்த கொஞ்ச நாட்களாக அவள் முகத்தில் சிறு மலர்ச்சி தெரிகிறது. அது மட்டுமில்லை மிகன் கூட வேலை செய்வதை ஏன் நம்மிடம் மறைக்கனும். அவள் மனதில் இன்னும் அந்த பையன் மீது விருப்பம் இருப்பதால் தானே .."என்ற மனைவியிடம்.

"அப்படி எப்படி சொல்றே.. ஒரு வேளை அந்த பையன் செய்த காரியத்தால் சுத்தமாக அவளை வெறுத்து விட்டாளோ !என்னவோ ? அதனால், பத்தோடு ஒன்றாக தன்னுடன் மிகன் வேலை செய்வதை ஒரு பொருட்டாக எண்ணாமல் , சொல்லாமல் கூட இருந்து இருக்கலாம் இல்லையா..?"

"எனக்கு அப்படி தோணலைங்க.ஒரு வேளை சொன்னால் நாம் ஏதாவது தப்பாக நினைத்து, வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிவிடுவோமோன்னு பயம் கூட இருக்கலாம்.."என்று மகளின் செயலை சரியாக கணித்தார்.

"அப்படி அந்த பையன் மீது இன்னும் விருப்பம் இருந்தால் ,எப்படி கதிரவனை கல்யாணம் செய்துக்க சம்மதித்து இருப்பாள்.."என்றார் அறவாணர்.

"அவள் நமக்காக மனதை மறைச்சுட்டு, சம்மதம் சொல்லி இருக்கலாம்.நம்மை கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைச்சு இருக்கலாம்.."என்ற மனைவியை யோசனையாக பார்த்தார்.

ஒரு வேளை அப்படிக் கூட இருக்குமோ..? மகள் தங்களுக்காக சம்மதித்து இருப்பாளா? என்று நினைக்கத் தொடங்கினார்.

மனைவி சொன்னது உண்மையாக இருந்தால், தங்களுக்காக ,தன் சந்தோஷத்தை விட்டு கொடுக்கும் மகளுக்காக ! தாங்கள் என்ன வேணாலும் செய்யலாம் என்று நினைத்தார்.

மிகன் கூறியது போல் அவள் மனதிற்குள் அந்த பையன் இருந்தால் ! அவளால், வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழவே முடியாது.என்று அவரும் உறுதியாக நம்பினார்.

பெற்றவர்களோ, மகளின் மனதை அறிய காத்திருந்தனர்.மகளோ கதிரவனை ஏற்றுக் கொள்ள முடியாமலும் ,மிகன் கேட்டதற்கு சம்மதம் சொல்லவும் முடியாமல் ,தன் மனதுடனும் போராட முடியாமல், திக்கு தெரியாத கானகத்தில் சிக்கியது போல் தவித்துக் கொண்டிருந்தாள்.

கதிரவன் அவளை தேடிக் கொண்டு அன்று கம்பெனிக்கே வந்து விட்டான். முன்தினம் அவள் வெளியில் அழைத்ததற்கு, 'எனக்கு உடம்பு சரியில்லை என்னால் வரமுடியாது' என்று சொன்னதால், அவளைப் பார்க்க வேண்டும் என்று அவளைத் தேடி அவள் வேலை செய்யும் இடத்திற்கே வந்து விட்டான்.

ஆனால் திகழொளியோ, சற்றும் அவன் வரவை எதிர்பார்க்காததால் அவனைக் கண்டு திகைத்துப் போனாள்.

மிகனுக்கு மட்டும் இது தெரிந்தால் என்ன ஆகுமோ? என்று மனதிற்குள் பயந்தாள். சும்மாவே எகிறி குதிப்பான்.இது வேறு தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவான் என்ற பயம் அவளை சூறாவளியாக சூழ்ந்து கொண்டது.

மிகன் அறியாமல் எப்படியாவது பேசி, கதிரவனை அனுப்பி வைத்து விட வேண்டும். என்று எண்ணியவள், அவனை கேண்டீன் அழைத்துச் சென்றாள்.

இருவரும் காலியான இருக்கை தேடி அமர்ந்தனர்.திகழொளியோ எதுவுமே பேசாமல் படபடப்புடனேயே அமர்ந்திருந்தாள்.

"இப்ப உடம்பு எப்படி இருக்கு திகழி .." என்று கேட்ட கதிரவனிடம்..

"ம் ! நல்லா இருக்கு.." என்று சுரத்தே இல்லாமல் பதில் அளித்தாள்.

"ஏதாவது சாப்பிட்டுகிட்டே பேசலாமா? "

"இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம். உங்களுக்கு ஏதாவது எங்கிட்ட சொல்லனுமா ? எனக்கு போகனும். வேலை இருக்கு.." என்று கேண்டீன் வாசலையே பார்த்துக் கொண்டு பேசினாள்.

அவள் மனமோ, மிகன் வந்து விடக்கூடாது என்று உலகில் இருக்கும் எல்லா தெய்வங்களையும் வேண்டியது.

அவளின் அவசரமான பேச்சும், பரிதவிப்பும், அலைபாயும் விழிகளும் கதிரவனுக்கு குழப்பத்தையே கொடுத்தது.

'இவள் ஏன் இப்படி பதறுகிறாள்? நமக்கு இவளுடன் நேரம் செலவழிக்க வேண்டுமென்று எத்தனை ஆசையாக இருக்கிறது. ஆனால் ,இவளுக்கு அது போல் எந்த ஆசையும் இல்லையா?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவள் காஃபி வேண்டாமென்று சொல்வதை கேட்காமல், இருவருக்கும் காஃபி வாங்கி வந்தான்.

அவளுக்கோ எப்போது இந்த இடத்தை விட்டு போவோம் என்று தவிப்பாக இருந்தது.

அவன் வாங்கி வந்த காபியை வாங்காமல், "நான் தான் எதுவும் வேண்டாம்ன்னு சொன்னேனே.. அப்புறம் எதுக்கு எனக்கு வாங்குனீங்க..?" என்று தன் கோவத்தை மறைக்காமல் அவனிடம் காட்டி விட்டாள்.

"ஏன் திகழி இதற்கு இவ்வளவு டென்ஷன் ஆகறே..? கொஞ்ச நேரம் பேசிட்டே குடிக்கலாமே.. ! மனம் விட்டு பேசினால் தானே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.." என்றான் கதிரவன்.

மனதிற்குள் அவளோ, 'ஆமாம் இப்போ நான் மனம் விட்டு பேசும் நிலமையிலா இருக்கேன்.? இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் நம்ம இடத்துக்கே வந்து நம்மளையே உபசரிக்கிறான்..' என்று நொந்து கொண்டாள்.

இவளின் அவசரம் புரியாமல் கதிரவன் காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டே, இவளிடம் "காஃபி நல்லா இருக்கு. சூடு ஆறும் முன்னே குடி ! எங்க கம்பெனி கேண்டீனில் கூட காபி இவ்வளவு நல்லா இருக்காது.." என்றான்.

திகழொளி பயந்தது போலவே, அவள் வேண்டிய சாமி அவளை கைவிட்டு விட ,மிகன் கேண்டீன் நுழைவாயிலில் தன் வேக நடையுடன் வந்து கொணடிருந்தான்.

அவனைப் பார்த்தவளின் முகம் பேய் அறைந்தது போல் வெளிறிப் போனது.

கதிரவனோ , அவளின் முகமாறுதலைக் கவனித்து, அவள் பார்வை சென்ற திக்கைக் கவனித்தான்.

அங்கே நெடியவன் ஒருவன் திகழொளியை விழி எடுக்காது பார்த்தபடியே வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து ஏன் திகழொளி இப்படி பதறுகிறாள்? என்று கதிரவன் குழம்பினான்.

மிகனுக்கோ , திகழொளி வீட்டிற்கு சென்று வந்த பின் பலதையும் நினைத்து குழம்பியதால், அவனுக்கு தாங்க முடியாத அளவு தலை வலித்தது.

ஒரு காஃபியாவது குடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கேண்டீன் வந்தான்.

அங்கே திகழொளியை ஒரு ஆடவனுடன் கண்டதும் அவனுக்கு அவள் மீது அளவு கடந்த கோவம் வந்தது. இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காஃபியை வாங்கிக் கொண்டு ஆள் இல்லாத இடம் தேடி அமர்ந்து, இவர்களை பார்த்தபடியே குடித்தான்.

அவனின் விழிகள் திகழொளியை விட்டு அங்கும், இங்கும் அசையவே இல்லை.

திகழொளிக்கோ, அவன் தங்களையே பார்ப்பதைக் கண்டு பயப்பந்து தொண்டையில் அடைத்தது. அவளால், காஃபியை நிம்மதியாக குடிக்க முடியவில்லை.கை ,கால்கள் உதறல் எடுக்க தொடங்கியது.என்ன சொல்லப் போகிறானோ? என்று நினைத்து கலங்கி தவித்தாள்.

திகழொளியின் அருகில் இருந்தவனைக் 'கதிரவன்' என்று மிகன் சரியாக யூகித்தான்.

நெருப்பின் மீது அமர்ந்து இருப்பதைப் போல் திகழொளி அமர்ந்திருந்தாள். சரியாய் பேசவும் இல்லை.அவளின் விழிகள் நிலையற்று அலைபாய்ந்தது.

அவள் பார்வை போன திசையை கண்ட கதிரவனுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

மிகனோ, காஃபியை குடித்து முடித்துவிட்டு ஒரு வார்த்தை கூட திகழொளியிடம் பேசாமல் அவளைக் கடந்து சென்றான்.

திகழொளிக்கோ, அவனின் அமைதியே மனதிற்குள் பெரும் புயலை உருவாக்கியது. கதிரவனுக்கோ, திகழொளியின் உடல்மொழியே அவனின் சந்தேகத்திற்கு விடை அளித்தது.
.
கதிரவனிடம் அவள் வார்த்தையால் சொல்லாதை அவள் உடல் மொழி உணர்த்தி விட்டது. அவள் தன்னை தனிமையில் சந்திக்கவும், அலைபேசியில் தன்னிடம் பேச அவள் தவிர்த்தற்கான காரணமும் ,அவள் மனதில் தான் இல்லை என்ற உண்மையும் அவனுக்கு அப்போது நன்றாகவே புரிந்தது.


கதிரவன் மேலும் இருந்து அவளைச் சோதிக்காமல் ,மனம் முழுவதும் வேதனையுடனும் ,வெறுமையுடனும் அவளிடம் விடை பெற்றுச் சென்றான்.

திகழொளியோ , கதிரவன் சென்றவுடன் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தவளுக்கு, வேலையே ஓடவில்லை.மனம் முழுவதும் மிகனின் நினைவே ஆட்கொண்டது.

என்ன சொல்லுவானோ? என்று பயந்தாள்.அவளின் பயத்தை பொய்யாக்காமல் சிறிது நேரத்தில் அவளை அவன் அறைக்கு அழைத்தான்.

தன் தலை எழுத்தை நொந்தபடியே திகழொளி அவன் அறைக்குச் சென்றாள். கதவை தட்டி அனுமதி பெற்று விட்டு உள்ளே சென்றவளிடம், சில நிமிடங்கள் வேலையைப் பற்றி சந்தேகங்களை கேட்டான்.

திகழொளியும் நிம்மதி பெருமூச்சுடன் அவன் கேட்டதற்கு பதில் அளித்தாள். ஆனால், அவள் நிம்மதிக்கு அற்ப ஆயுசு போல் "யார் அவன்..? என்று கேட்டே விட்டான்.

அவளோ, தயங்கியபடியே "கதிரவன்.." என்று சொன்னாள்.

அந்த பேரைக் கேட்டவுடன், "அப்பவே நினைத்தேன். கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ஆஃபிஸ்க்கே அவனை வரவழைத்து கொஞ்சிட்டு இருக்கே.." என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்..

"மிகன் நீங்க தேவை இல்லாமல் பேசறீங்க..நீங்க நினைப்பது போல் எதுவும் இல்லை.."

"என்ன டீ எதுவுமில்லை..நான் தான் பார்த்தேனே.."

"என்னத்தை பார்த்தீங்க.."

"ம்! அவன் கூட நீ ஜோடி போட்டுட்டு வந்ததே. .என்னை அங்கே நீ எதிர்பார்க்கலைங்கிறது நல்லாவே தெரிந்தது. என்னைப் பார்த்ததும் உன் முகம் போனப் போக்கை நான் தான் கண் கூட பார்த்தேனே.."

"மிகன் தப்பு தப்பாவே யோசிக்காதீங்க..நேத்து எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருந்தேன் அதனால் பார்க்க வந்தார்.."

"ஓ! மேடம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலைன்னா கூட கதிரவன் சாருக்கு தாங்க முடியலையோ ? உடனே பார்க்க ஓடி வந்துட்டார் .."என்றவனிடம் என்ன தான் சொல்லுவது என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

அவனோ, " இங்கே நாலு வருசமா உன்னால் மரண வலியை அனுபவிக்கிறேனே, எனக்கு என்னடீ பதில் சொல்லப் போறே.." என்று தன் நெஞ்சை தொட்டு காண்பித்தான்.

அவளோ, பேச்சற்று கற்சிலையாக நின்றாள்.என்ன சொல்லுவாள் அவள் ! வலி அவனுக்கு மட்டுமா? இந்த நொடி வரை அவளும் தான் சொல்லிடங்கா வலியை அனுபவித்துக் கொண்டு தானே இருக்காள் . அதை இவன் உணரவே மாட்டானா? என்று அவள் மனம் அழுதது.

அவள் மெளனமாய் நிற்பதைக் கண்டவனுக்கு மேலும் மேலும் கோவமே அதிகரித்தது.

"செய்வது எல்லாம் செய்துட்டு எப்படித் தான் இப்படி ஒண்ணும் தெரியாத பாப்பாவைப் போல் முகத்தை வைத்துக் கொள்கிறாயோ..?" என்று வெந்த புண்ணில் வேளைப் பாய்ச்சினான்.


அவளோ, என்ன சொல்லி தன் நிலமையை அவனுக்கு புரிய வைப்பாள். எது சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை. அதிலிருந்தும் ஒரு குறை கண்டு பிடிப்பான்! என்று நினைத்தவள் பேசாமலேயே இருந்தாள்.

அவளின் அமைதியை தவறாக புரிந்து கொண்டு "ஓ ! மேடமுக்கு கதிரவன் கூட பேச மட்டும் தான் பிடிக்குமோ ? என் கூட பேசனும்ன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கா..?" என்று கேட்டான்.

அவளோ , அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், "ஏன் மிகன் என்னை வார்த்தையால் வதைக்கிறீங்க.. நான் என்ன தான் செய்யனும் ! என்ன செய்தால் உங்களுக்கு என் மீது இருக்கும் கோவமும், வெறுப்பும் தீரும். நான் செத்தால் தான் தீருமா..?" என்று கண்கலங்க தவிப்புடன் கூறியவளை "ஏய் ! "என்று கத்தியபடி அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

அவளோ, எத்தனையோ நாள்கள் கழித்து கிடைத்த அவனின் அணைப்பில் சுற்றம் மறந்து அழுது கரைந்தாள்.

அவள் சொன்ன சொல் அவனை வாள்கொண்டு அறுத்தது. அவள் அழுது கரைவதை தாங்க முடியாமல், "திகழி ப்ளீஸ் அழுவதை நிறுத்து..!" என்றான்.

அவன் சொல்லியதை அவள் காதில் வாங்கவே இல்லை. தன் நான்கு வருட துக்கத்தையும் அவன் மார்பில் கதறி தீர்த்தாள்.காயத்தை கொடுத்தவனிடமே மருந்து தேடினாள்.

அவனையும் அறியாமல் அவனின் விரல்கள் அவளின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்து. அவளின் அழுகை மட்டுப் பட்டு விசும்பலுக்கு வந்த பின்பும் அந்த அரவணைப்பு எவ்வளவு நேரம் நீடித்ததோ ! அவர்களே அறியாதது.

சில மணித் துளிகள் கரைந்த பின்னரே அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி "திகழி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ டீ எல்லா பிரச்சினைகளையும் தீர்ந்துடும்.காலம் பூரா நீ இப்படி என் நெஞ்சில் சாய்ந்து அழலாம் டீ .."என்றவனை தன் விசும்பலைக் கட்டுப்படுத்திக் கொண்டு முறைத்தாள்.

"ஏண்டி இப்படி முறைக்கிறே..? நான் நல்ல வழி தானே சொன்னேன்.."

"அப்ப கூட நான் காலம் பூரா அழனும். அது தான் உங்க ஆசை அப்படித் தானே.."

"ஏய் ! லூசு அதுக்கு அர்த்தம் அது இல்லை. இப்படி என் அணைப்பில் காலம் முழுவதும் இருப்பியே அதை சொன்னேன்.." என்றவனை "பேச்சை மாத்தாதீங்க.." என்றாள் கோவமாக .

அவனோ, "நான் எதுக்கு பேச்சை மாத்தணும் .உன் தப்புக்கு நான் சரியான பிராயச்சித்தம் சொல்றேன். நீ தான் கேட்க மாட்டீறே.."

"ஓ ! இன்னும் கூட நீங்க என்ன நம்பலே .. என் தப்பே சரி செய்யத் தான் கல்யாணம் செய்துக்க கேட்கறீங்க.."

"ஆமாம். அது தானே உண்மை.."

"அப்போ இந்த ஜென்மத்தில் நம் கல்யாணம் நடக்காது.."

"ஓ ! அப்படியா? என்றான் நக்கலாக.. சற்று இளகி இருந்த அவன் மனம் பழைய படி மறுபடியும் மாறியது.

அவளோ, இவனிடம் என்ன பேசினாலும், நமக்கு தான் வேதனை என்று நினைத்து, அமைதியாக வெளியே செல்ல திரும்பியவளை "திகழி உனக்கு ஓரே ஆப்ஷன் தான் . என்னைக் கல்யாணம் செய்துக்கோ ! எல்லா பிரச்சினைகளும் தீரும்.." என்று அசால்ட்டாக சொன்னான்.

அவளோ , அவனிடம் பதில் பேசாமல் தன் அத்தனை வலிகளையும் கண்களில் தேக்கிக் கொண்டு "எனக்காக என்னை கல்யாணம் செய்துக்கறீஙகன்னா நான் இப்போதே ரெடி. ஆனால், நீங்க நான் செய்யாத தப்புக்கு தண்டனையாக கல்யாணத்தை சொல்வது தான் என்னால் தாங்க முடியலை.."என்றாள்.

அவனோ பதிலே சொல்லாமல் நின்றான்.

திகழொளியோ, " மிகன் கல்யாணம் விளையாட்டு காரியம் இல்லை. அது காலம் முழுவதும் வாழக்கூடிய நம் வாழ்வு . அந்த கல்யாணத்தில் காதல் கூட இல்லாமல் இருக்கலாம் . ஆனால், வெறுப்பு இருக்கவே கூடாது .இது என்னைக்கு உங்களுக்கு புரியுமோ? எனக்கு தெரியலை.." என்றவள் அவனை தாண்டி வெளியில் சென்றாள்.

அவனோ, அவள் போவதையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்றான்.

அவனின் மனமோ, 'நீ சொல்வது எனக்கு புரியாமல் இல்லையே டீ.. என்ன தான் நீ தப்பு செய்யலேன்னு சொன்னாலும் உண்மை மாறாதே !' என்று எண்ணினான்.

தொடரும்..


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 14


மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல திகழொளிக்கு மிகன் ஒருபுறமுமாகவும் கதிரவன் ஒரு புறமுமாகவும் அவளை வதைத்தனர்.

மிகனின் செயல்களையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..அவனை ஒதுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமின்றி கதிரவனின் உரிமையான அணுகுமுறையையும் சுத்தமாக பிடிக்கவில்லை..

ஓவ்வொரு நொடியும் இருவரின் நடவடிக்கையால் நெருப்பின் மீது நிற்பது போல் துவண்டு போனாள்.

அதுவும் கதிரவன் அவளை பார்க்க வந்து போனதிலிருந்து திகழொளிக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.நிச்சயமாக கதிரவனை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பது.

அவனுடன் சாதாரணமாகக் கூட தன்னால் பேச முடியவில்லையே, எப்படி வாழ்வு முழுவதும் அவனுடன் மனம் ஒத்து வாழ முடியும் என்று தவித்தாள்.

அவள் மனதிற்குள் உறுதியாக அவளுடைய மிகனைத் தவிர வேறு யாரையும் அவளால் திருமணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தன்னை அவன் அணைத்திருந்த அந்த விநாடியே நன்றாக அவளுக்கு புரிந்து விட்டது.

என்னதான் மிகன் அவள் மீது கோவப்பட்டாலும், வெறுத்தாலும் ! அவளால் அவனைத் தவிர வேறு ஒருவரை தன் கணவனாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

'மிகனிடம் வீராப்பாக எனக்காக என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு வந்தாலும் அவனை திருமண செய்து கொள்ள அவள் மனம் ஏங்கியது.

அவன் முகத்தை பார்த்துக் கொண்டே காலம் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்று நினைத்தாள்.

மிகன் மீது சாய்ந்து தன் துக்கத்தை எல்லாம் கண்ணீராக அவன் நெஞ்சில் இறக்கி வைத்துவிட்டு வந்ததிலிருந்து, அவள் மனம் லேசாக இருப்பது போல் இருந்தது.

மனது கொஞ்சம் தெளிவாக இருந்தது.அந்த தெளிவு அவள் முகத்திலும் சிறு மலர்ச்சியைக் கொடுத்து. மாலை அவளை அழைத்து செல்ல வந்த அமுதன் பார்வையிலும் அது தப்பாமல் பட்டது.


தன் தமக்கையின் மலர்ந்த வதனம் அவனையும் உற்ச்சாகப்படுத்தியது. வீடு வரும் வரை எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கினார்கள்.

வேலை முடிந்து வந்த மகளிடம் பெற்றவர்கள் உடனே எதுவும் கேட்கவில்லை.தங்களுக்குள் ஆயிரம் குழப்பங்களும் ,கேள்விகளும் இருந்தாலும், அமைதியாகவே இருந்தார்கள்..அவர்களுக்கும் கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

மகள் என்ன சொல்லப் போகிறாளோ? என்ற தவிப்பே அவர்களை கேட்பதற்கு யோசிக்க வைத்தது.

மகள் இரவு உணவு உண்டு வரும் வரை பொறுமையாக இருந்தார்கள் . அதற்கு மேல் காத்திருக்காமல் மகளிடம் கேட்டார்கள்.

"பாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் .."என்று கூறிய அறவாணன் மகளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

"சொல்லுங்கப்பா.." என்று கூறியபடியே திகழொளி தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

அமுதனும் சிறு யோசனையுடனே வந்து அமர்ந்தான்.பொன்னியோ உண்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, மகள் சொல்வதைக் கேட்க எதிர்பார்ப்புடன் வந்து அவர்கள் அருகில் அமர்ந்தார்.

சில நிமிடங்கள் அமைதியாகவே அமர்ந்திருந்த தந்தையிடம் "என்னப்பா பேசணும் .."என்றாள்.

"பாப்பா உனக்கு நிஜமாகவே கதிரவனை கல்யாணம் செய்ய சம்மதமா ? என்று கேட்டார்.

அவளோ, பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தாள். 'அவள் என்ன சொல்லுவாள்? தான் நினைப்பதை பெற்றவர்களிடம் சொல்ல முடியுமா.. ?தன் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது கடவுளே 'என்று மனதிற்குள் மருகினாள்.

மகளின் அமைதியை பொறுக்க முடியாமல் "பதில் சொல்லு பாப்பா.."என்றார்.

என்ன சொல்லுவாள் அவள்? அவள் வாழ்க்கை மீது மட்டும் இந்த காலத்திற்கு ஏன் இத்தனை வெறுப்பு..பெற்றவர்களுக்காக திருமணத்திற்கு சம்மதித்தாலும், காலம் முழுவதும் வேறு ஒருவருடன் தன்னால் வாழவே முடியாது என்று பெற்றவர்களிடம் சொல்ல முடியாதே..? தன் மனதை எப்படி புரிய வைப்பது என்று மனதிற்குள் மருகியவள் பதிலேதும் சொல்லாமல் கண்களில் சொல்லிடங்கா வலியுடன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.

மகளின் மெளனம் அவருக்கு பல கேள்விகளுக்கு மறைமுகமாக பதிலளித்து. இருந்தாலும் மகளின் மனதை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் மென்று நினைத்தார்.

திகழொளியோ, தனக்குள்ளேயே போராடி போராடி களைத்துப் போனாள்.குற்றம் புரிந்தது போல் தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

மகளின் அமைதி அவருக்கு ஒன்று மட்டும் உணர்த்தியது. மகள் ஒரு போதும் தன் மனதை சொல்ல மாட்டாள் என்று எண்ணியவர், உண்மையை அறியும்பொருட்டு பேச்சை மாற்றினார்..

"பாப்பா மிகன் உன் கூடத் தான் வேலை செய்கிறாரா..?" என்று அதிரடியாக கேட்டார்.

தந்தையின் கேள்வி தந்த அதிர்ச்சியில் திகழொளி மூச்சு விடவே மறந்தாள்.

அமுதனும் தமக்கை அளவுக்கு அதிர்ந்து தந்தையைப் பார்த்தான்.

ஒரு நொடி உலகமே இருண்டது போல் ஆனது திகழொளிக்கு.. தந்தையின் கோபத்திற்கு மீண்டும் ஆளாகப் போகிறோம் என்று பயந்தாள்.

இந்த விஷயம் தந்தைக்கு எப்படி தெரிந்தது என்று கலங்கியவள், மொழி மறந்த குழந்தை போல் தவித்தாள்.

உண்மையை சொன்னால்.. ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? என்று கேட்பாரே என்று அஞ்சினாள்.குற்றயுணர்வில் தந்தையை ஏறெடுத்துப் பார்க்க கூசினாள்.

சிலையாக அமர்ந்திருந்த மகளிடம் "பதில் சொல்லுமா.." என்று மீண்டும் கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல் "ஆமாம் பா ..மூன்று மாதங்களுக்கு முன்பு டிரென்ஸ்பர்ரில் இங்கே வந்தார்.."என்ற மகளிடம்..

"ஏன் மா எங்கிட்ட சொல்லே..?"

"சொல்லக் கூடாதுன்னு இல்லேப்பா.. உங்க கிட்ட சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நினைச்சேன். அது மட்டுமில்லை வேலை செய்யும் இடத்தில் பல பேரை சந்திப்போம் .. அவர்களை எல்லாம் முக்கியமானவராக கருத வேண்டிய அவசியம் இல்லையே..! நாம் நம் வேலையை பார்த்தாலே எந்த பிரச்சினையும் வராதுன்னு நினைச்சேன்.." என்று தன் மனதை மறைத்துக் கொண்டு சொன்னாள்.


அமுதனோ, என்ன நடக்கிறது இங்கே என்று புரியாமல் விழித்தான். தன் உயிர் தமக்கை தன்னிடம் கூட இந்த உண்மையை சொல்லவில்லையே என்று வருந்தினான்.

மகளின் பதிலில் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் ,மிகன் கூறியது போல் மகள் தங்களுக்காகத் தான் கதிரவனை திருமணம் செய்யசம்மதித்து இருப்பாளா? என்ற சந்தேகம் பெற்றவர்களுக்கு வலுத்தது.

அதுமட்டுமின்றி எப்போதும் தன் முகம் பார்த்து ,விழி பார்த்து பேசும் மகள்! இன்று தன்னைப் பார்க்காமல் பதில் சொல்லும் போதே, அவருக்கு மகளின் மனம் புரிந்தது.

மனைவியை அர்த்தத்துடன் பார்த்தவர் , மகளிடம் "திகழி இன்று மிகனும், உலகமாறனும் இங்கே வந்தார்கள்.." என்று தந்தை சொன்னவுடன் சட்டென்று தலை நிமிர்ந்து தந்தையை பயத்துடன் பார்த்தாள்.

மனதிற்குள் இவன் என்னை நிம்மதியாகவே இருக்க விடமாட்டானா ? கடவுளே என்ன சொல்லி வச்சு இருக்கானோ ? என்று திகழொளிக்கு மனம் பதை பதைத்தது .

தந்தை சொன்னதைக் கேட்ட அமுதனுக்கோ, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

தன் மக்கட் செல்வங்களை திகைப்பின் எல்லையில் நிறுத்தி விட்டு, பொறுமையாக அவர்கள் வந்து பெண் கேட்ட விஷயத்தை சொன்னார்.

தந்தை சொன்னதைக் கேட்ட திகழொளி உயிரற்ற சிலையாக சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.அவள் உலகம் சில நொடிகள் ஸ்தம்பித்து போய் விட்டது.

அதிர்ச்சி, திகைப்பு, வியப்பு என்ற கலவையான உணர்வுகளையும் மீறி.. அவள் உள்ளத்தில் மெல்லிய மழை சாரல் தூவியதைப் போல் ஆனந்தம் குடி கொண்டது.

இந்த மாதிரி தன் தந்தையிடம் அவன் வந்து பெண் கேட்க மாட்டானோ ? என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பாள். அவளின் தவத்துக்கு வரம் கிடைத்து விட்டது போல் மனம் ஆர்ப்பரித்தது.


ஆனாலும், சில நொடியில் மிகன் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்து அவளின் ஆனந்தத்தை பறித்தது.

தன்னை விரும்பி அவன் தன்னை மணம் செய்ய கேட்கவில்லை .. பிராயச்சித்தமாக தன்னை திருமணம் செய்ய கேட்டு இருப்பான் என்று தோன்றிய நிமிடம் அவள் மகிழ்ச்சி வெள்ளமாக வடிந்தது.

மகளின் முகமாறுதலைக் கூர்ந்து கவனித்த அறவாணன், "பாப்பா நீ என்ன சொல்றே ? உனக்கு இன்னும் அந்த தம்பியை பிடிச்சு இருக்கா? மிகனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா..? "என்று கேட்டவரிடம் பதில் சொல்லாமல் மனதிற்குள் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்தாள்.

"இப்படி பார்த்தாள் என்ன அர்த்தம் ? பதில் சொல்லு பாப்பா .."என்றவரிடம்.

"அப்பா எனக்கு கல்யாணமே வேண்டாம்ப்பா.. நான் இப்படியே உங்க கூடவே இருந்துக்கிறேன்.." என்று தன் மனதை மறைத்து பதில் சொன்னாள்.

தந்தையே மிகனை திருமணம் செய்ய சம்மதமா? என்று கேட்ட பின் கூட அவளால் உண்மையை சொல்ல முடியவில்லை.பல குழப்பங்கள் அவள் மனதை ஆட்கொண்டது.

மகிழ்ச்சி, பயம், தயக்கம், சந்தேகம் என்ற கலவையான உணர்ச்சிகள் அவளைச் சூழ்ந்து கொண்டு கலங்கடித்தது.

காலம் முழுவதும் திருமணமே செய்து கொள்ளாமல் அவளுடைய மிகனை நினைத்துக் கொண்டே பெற்றவர்களுடனேயே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுள் வலுத்தது.

மகளின் பதில்லைக் கேட்டு "ஏம்மா.." என்று தவிப்பாக மகளைப் பார்த்தார்.

" நான் இப்படியே உங்க கூடவே இருந்துக்கிறேனேப்பா.." என்று சொல்லியபடியே தந்தையின் தோளில் ஆதரவாக சாய்ந்தாள்.

அவரும் மகளின் தலைமீது தன் தலையை லேசாக சாய்ந்தவாரு.." இப்படியே நீ காலம் முழுவதும் இருக்க முடியாதே பாப்பா ! எங்க காலத்துக்கு பிறகு உனக்கு ஒரு துணை வேண்டுமே.." என்றார் மனக் குமறலுடன்.

தன் தமக்கையையே விழி எடுக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான் அமுதன். அவன் மனதிற்குள் பெரும் புயல் அடித்தது. தன்னிடம் கூட அக்கா மிகனைப் பற்றி சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவனை வாட்டியது.

திகழொளி அமைதியாகவே இருப்பதைக் கண்டு "பாப்பா இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படிம்மா? உன் முடிவைச் சொல்லு..?"என்று வருத்தத்துடன் கேட்டவரிடம்..

"ப்ளீஸ்ப்பா நான் இப்படியே இருந்துக்கிறேன் ப்பா."

" திரும்ப ..திரும்ப, அதே சொல்லாதே ! காலம் பூரா அப்படி இருக்க முடியாதேம்மா.. உனக்குன்னு வாழ்க்கை வேண்டும்.. நாளைக்கு எங்களுக்கே ஏதாவது ஆகிவிட்டா? நீ தனி மரமாக நிற்பாயேம்மா.." என்று தவிப்புடன் கூறினார்.

தந்தையின் வார்த்தைகளை தாங்க முடியாமல் "ஏம்ப்பா இப்படி எல்லாம் பேசறீங்க .. எனக்கு கஷ்டமா இருக்கு.." என்று இன்னும் அழுத்தமாக தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

"திகழி இப்போது எல்லாம் உன் வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்குடா.. "என்றவரிடம்..

" அப்பா நான் நல்லாத் தான் இருக்கேன் .நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்கப்பா.."

"பாப்பா உன்னை மணக்கோலத்தில் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்குடா.. எங்க ஆசையை நிறைவேத்துவீயா ..? "

"அப்பா உங்களுக்கு என்ன தோணுதோ ?அதை செய்யுங்கப்பா..இத்தனை நாள் உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனியாவது உங்களுக்கு சந்தோஷம் தர விஷயம் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்யறேன்.." என்ற மகளை உச்சி முகர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

பொன்னிக்கும் மகளின் வார்த்தைகள் நிம்மதியைக் கொடுத்தது.

"திகழி எங்களுக்காக பார்க்காமல் உனக்கு மிகனைப் பிடித்து இருந்தால் சரின்னு சொல்லு! நீ ஆசைப்பட்டவனையே கல்யாணம் செய்து கொண்டு நீ நிம்மதியா சந்தோஷமா வாழனும்.அதை நாங்க கண்குளிர பார்க்கனும் .."என்றார்.

தன்னால் தன் பெற்றவர்கள் பட்ட கஷ்டத்திற்கு தன் கல்யாணம் தான் தீர்வு என்று நினைத்தவள் , " உங்களுக்கு எது விருப்பமோ? அதை செய்யுங்கப்பா ! எனக்கு நீங்க என்ன முடிவு எடுத்தாலும், முழு சம்மதம்.." என்றவள் எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

மகளின் மறைமுக சம்மதம் பெற்றவர்களுக்கு மனநிம்மதியைக் கொடுத்தது.

மிகன் நடந்து கொண்டதற்கு அவனை மன்னிக்க முடியாது தான். ஆனால் ,அவன் சொன்ன காரணமும்..மகளின் ஆசையையும் கருத்தில் கொண்டு மகளுக்காக மிகனை மன்னிக் தயாரானார்கள்.

அவனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிது தான்.தாங்கள் ஆசையாக வாங்கி குடி இருந்த வீட்டை இழந்து.. படக்கூடாத மனக் கஷ்டங்கள் பட்டு, ஆசை மகளிடம் பேசாமல் இருந்து.. அவர்கள் பட்ட கஷ்டம் அளவிட முடியாதது தான்.

ஆனாலும், நடந்ததையே நினைத்து எத்தனை நாள் வருந்திக் கொண்டே இருப்பது.. தப்பு செய்தவர்கள் தன் தவறை உணர்ந்தால் மன்னிப்பது தானே பெருந்தன்மை.

இன்னும் கோவத்தை பிடித்து இழுத்து வைத்து, யாருக்கு என்ன இலாபம். இனியாவது நடப்பது நல்லதாக நடக்கட்டும். என்று மனதார கடவுளை வேண்டிக் கொண்டார்கள்.

மனம் தாங்காமல் அமுதன் தன் தமக்கையின் அறைக்குச் சென்று தன் ஆதங்கத்தைக் கேட்டு விட்டான்.

தம்பியின் கோவத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து திகழொளி தன் மனநிலையை மறைக்காமல் சொன்னாள்.

" அம்மு உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை டா.. ஆனால், அதை சொல்லி தேவை இல்லாமல் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு நினைத்தேன்.ப்ளீஸ் அம்மு! அக்காவே மன்னிச்சுடு.." என்று தவிப்புடன் சொன்னாள்.

"மன்னிப்பெல்லாம் எதற்கு கா.. "என்றவனின் வேதனை மாறாத முகத்தைக் கண்டு, அவனைத் தன் அருகில் இழுத்து அமரவைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

"அம்மு உண்மையை சொல்லனும்ன்னா ..எங்கே உங்கிட்ட சொன்னா? நீ வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவீயோன்னு பயமா இருந்துச்சு.." என்ற தமக்கையை வியப்பாக பார்த்தான்.

தம்பியின் வியந்த பார்வையை கண்டு மென் சிரிப்புடன், "அம்மு நான் சொல்வதைக் கேட்டு நீ என்னை என்ன நினைப்பேன்னு தெரியலே.." என்றவள் சற்று பேச்சை நிறுத்தி ஒரு பெருமூச்சுடன் தொடந்தாள்.

"எனக்கு மிகன் மீது ஏனோ கோவமே வர மாட்டேங்குது.."என்றவளை ஆச்சரியமாக பார்த்தான்.

" ஏன்னா நான் இப்ப வரை மிகனை உயிராக நேசிக்கிறேன்.அது ஏன்னு எனக்கே புரியலே.."

"ஏக்கா.. அவன் செய்ததற்கு அவன் மீது உனக்கு கொஞ்சம் கூட வெறுப்பு வரலையா..?"

"நிஜமா வரலை.. எதையோ தப்பா புரிஞ்சுட்டுத் தான் மிகன் எங்கிட்ட அப்படி நடந்து இருபபார்ன்னு, என் உள் உணர்வு சொல்லிட்டே இருக்கே அம்மு.."

"என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியலே.."

"காதலித்து பார்த்தால் தான் அது புரியும்.."

"இவ்வளவு அன்பே மிகன் மீது வச்சுட்டு ! நீ எப்படி கதிரவனை கல்யாணம் செய்ய சம்மதித்தே..?"

"அப்பா, அம்மாவுக்காகத் தான் சம்மதித்தேன் டா.. ஆனால், நேத்து தான் எனக்கு மிகனைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு நல்லாவே உணர்ந்தேன்.." என்றவள் கதிரவன் தன்னை தேடி வந்ததையும்..தன்னால் அவனுடன் இயல்பாக பேச முடியாததையும் சுருக்கமாக தம்பியிடம் கூறினாள்.

அமுதனோ, தன் தமக்கையையே ஆச்சரியமாக பார்த்தான்.

தம்பியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, அவன் தோள்களில் சாய்ந்தபடி "அம்மு நம்ம ஒருத்தரை மனதார விரும்பினால், அவர்கள் என்ன செய்தாலும் நமக்கு வெறுப்பு வராது டா .."

"கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டுமே கா.." என்றவனிடம்..

"காதலில் சுயமரியாதை பார்த்தால், அது காதலே இல்லை டா.. காதலில் ஈகோவும் பார்க்க கூடாது. சுயமரியாதையும் பார்க்க கூடாது.. நேசத்தில் அன்பு மட்டுமே நிறைந்து இருக்கனும். என் காதலில் அன்பு மட்டும் தான் இருக்கு .அந்த அன்பு தான் இத்தனை வருடம் கழித்தும் மிகனை என்னுடன் சேர்த்து வைக்கப் போகுது.."

"அன்பு உனக்கு மட்டும் இருந்தால் போதுமா ..? மிகனுக்கு இருக்க வேண்டாமா? நீ தப்பே செய்து இருக்கட்டும். அதை என்னவென்று கேட்கனும். இல்லை தன் சந்தேகத்தை யாவது உங்கிட்ட சொல்லி இருக்கனும்.காதலில் அன்பு மட்டும் இல்லைக்கா.. நம்பிக்கையும் முக்கியம்.." என்றவனை யோசனையாக பார்த்தாள்.

தம்பி சொல்வதும் உண்மை தானே! ஏன் மிகனுக்கு அந்த நம்பிக்கையை என்‌மீது வரலை? என்று யோசித்தாள்.

ஒரு வேளை தான் அந்த நம்பிக்கையை அவனுக்கு கொடுக்கவில்லையா? என்று அப்போது கூட அந்த பாலாய் போன மனம் அவன் புறம் நின்றே யோசித்து.

ஒரு காதல் என்ன செய்யும் என்றால், இப்படி தான் பைத்தியம் ஆக்கும் போல். எல்லா கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை கிடைத்து தானே ஆகனும்.அந்த நாளுக்காக காத்திருக்க வேண்டியது தான் என்று சலிப்புடன் நினைத்துக் கொண்டாள்.

தொடரும்..


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்


 
Status
Not open for further replies.
Top