All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இந்த புதிய தளத்தில் என்னுடைய முதல் கதையை மறுபடியும் முதலில் இருந்து பதிவிடப் போகிறேன்... அதற்கு உங்கள் அனைவரினதும் ஆதரவு கிடைக்குமென முழுமனதாக நம்புகிறேன்....
“உங்களுக்கு இந்திய கெத்து எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு உங்களுக்கு கோவா ல பீச் எங்களுக்கு மரீனா தான் மாசு உங்க ஊரு சப்பாத்தி குருமா எங்க ஊரு இட்லி போல வருமா நாங்க சென்னை சிட்டி போய்சு சும்மா கம்முனு கெடமா ......”
என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அதற்கேற்ப ஆடிக் கொண்டிருந்தாள் அவள். அவளெதிரில் இருந்தவர்ளோ எப்போதடா இவள் ஆட்டத்தை முடிப்பாள் நாம் எப்போதடா விட்ட தூக்கத்தை தொடரலாம் என முழி பிதுங்கிய படி அவளது கர்ண கொடூரமான நடனம் எனும் பெயரில் போடும் குத்தாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் யார் சற்று அசைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து விடுவாளே இந்த அழகான ராக்ஷசி....
அதனாலேயே யாரும் சற்றும் அசையாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வு அவர்களது மனத்திரையில் படமாக ஓடியது.
பாரிஸ்.... அழகிய காதல் தேசம்.... காதலர்களின் சுவர்க்கம்... இங்கு பேசப்படும் பிரெஞ்சு மொழிகூட காதலை பிரசுவிக்கும்... அதனாலேயே இம்மொழி இங்குள்ள மக்களால் கவர்ச்சியான மற்றும் காதல் மொழியாக கருதப்படுகின்றது.
இப்படிப்பட்ட அழகிய நகரில் தான் தன் தோழிகளுடன் வசித்துக் கொண்டிருக்கின்றாள் ஜில்மில்.
அழகிய வசீகரமான முக அமைப்பும் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகிய நயனங்களும் குழிவிழும் கன்னங்களும் செர்ரி பழத்தை ஒட்டவைத்தது போன்ற சிவந்த மெல்லிய இதழ்களும் ஒய்லியான உடல்வாகும் மெலிந்த தளிர் கொடி போன்ற தோற்றத்திற்கும் சொந்தக்காரி.
(அவளை பத்தி வர்ணிச்சது போதும் கதைக்குள்ள போகலாம்)
இந்த அழகிய காதலர் நகரத்தில் பனிக்காலம் ஆரம்பித்திருந்தது. அதுவும் அந்த டிசம்பர் மாத குளிர் ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. அதில் எழமுடியாமல் அனைவரும் மீளா துயிலில் ஆழ்ந்திருந்தனர்.
அதிகாலை ஐந்து மணியளவிலும் கூட வானம் விடிந்ததற்கான அறிகுறியே இல்லாமல் கருமை பூசிக்கொண்டிருந்தது.
பாரிஸில் அமைந்திருந்த ‘ஒபேரா பஸ்டிள்’ அபார்ட்மென்ட்டில் மூன்றாவது ப்ளோரில் அமைந்திருந்த ‘Monde des beautes’ (world of beauties) என பெயர்ப் பலகை மாட்டியிருந்த அந்த வீட்டில் மின்விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன.
மூன்று அறைகளுடன் அதிநவீனமாய் அமைந்திருந்த அந்த அபார்ட்மென்டில் தனது பெட் ரூம் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள் அந்த வீட்டின் முடிசூடா இளவரசி ஜில்மில்.
மெதுவாக கிட்சேனிற்குள் நுழைந்து ஜக் நிறைய தண்ணீர் நிரப்பியவள் ஓசைபடாமல் மீண்டும் தன் அறைக்குள் நுழைந்து அங்கு கட்டிலில் படுத்து கால்,கைகளை நீட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவளது அருமை தோழி ஸ்ரேயாவின் முகத்தில் தண்ணீரை ஊற்றியவள் அவள் லேசாக கண்விழித்ததும் ‘பே’ என வீரிட்டு அலறினாள்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஸ்ரேயாவோ யாரோ தன் மேல் தண்ணீர் ஊற்றவும் அதை துடைத்து விட்டு தூங்கலாம் என எண்ணி மெதுவாக கண்களை மலர்த்த அதற்குள் திடீரென்று கேட்ட ‘பே’ என்ற சத்தத்தில் பதறியடித்துக் கொண்டு கண்விழித்தவள் தன் முன் பே மேக்கப்பில் முடியை விரித்து போட்டுக்கொண்டு நின்ற ஜில்மில்லை பார்த்து பயத்தில் கண்களை அகல விரித்துக் கொண்டு ‘பே’ என பெருங்குரலில் அலறினாள்.
இவர்கள் இருவரினதும் காட்டுக் கத்தலில் பக்கத்து அறைகளில் துயில் கொண்டிருந்த இவர்களது சகாக்கள் என்னவோ ஏதோவென்று பதறிப் போய் கண்விழித்து இவர்களது அறையை நோக்கி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல ஓடி வந்தனர்.
முதலில் அவர்களது அறைக்குள் நுழைந்த பின்டோ “quel est le problem” (what’s the matter) என்று பிரெஞ்சு மொழியில் படபடத்தவள் ஸ்ரேயாவின் முகத்தை பார்த்துவிட்டு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவளாக லேசாக சிரித்தவள்......
“இபோ உன்கு என்னா வென்னும்” என்றால் தனக்கு சுத்தமாக வராத தமிழில் ஜில்மில்லை நோக்கி.
அவளது அரைகுறை தமிழை கேட்டு எப்போதும் போல வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்த ஜில்மில் “டான்ஸ்” என்றாள் ஒற்றை சொல்லாக.
அவளது ‘டான்ஸ்’ என்ற ஒரு சொல்லில் வெளியில் நின்றிருந்த மூவரின் முகமும் உண்மையிலேயே பேயறைந்ததை போன்று மாறியதென்றால் உள்ளிருந்த ஸ்ரேயாவும் பின்டோவும் கண்களில் பீதியை நிரப்பிக்கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். (ஏன்னா அவளுக்கு சுத்தமாக டான்ஸ் வராதுங்க)
வெளியில் நின்றிருந்த வெரோனிக்கா ஓரக்கண்ணால் ஜில்மில்லின் அறையை நோட்டம் விட்டாள்.
ஜில்மில் மட்டும் கை,காலை அசைத்துக் கொண்டிருக்க மற்ற இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கி இருந்தனர். தன் அருகில் நின்று கொண்டிருந்த வின்னியையும் ஆஷிராவையும் ஒரு பார்வை பார்த்தவள் மெதுவாக ஒரு எட்டு வைத்தாள்.
ஆனால் அடுத்த நிமிடம் சரியாக அவர்கள் ஐவரும் அவளை ஒருசேர திரும்பி பார்த்தனர். அதில் நால்வர் அவளை கண்டன பார்வை பார்க்க ஒருத்தியோ அவளை கொலைவெறியுடன் பார்த்தாள். (அது வேறு யாரும் இல்லைங்க நம்ம ஜில்மில்லேதான் )
‘அது எப்பிடி நான் ஏதாவது பண்ணினா மட்டும் இதுங்களுக்கு உடனே தெரிஞ்சிடுது’ என தீவிர யோசனையில் மூழ்கிய வெரோனிக்காவின் முகத்தை பார்த்தே மற்ற ஐவரும் அவளின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டவர்கள் “நீ கால்ல கொலிசு போட்டிருக்கிறத மறந்திட்டியா வெரோ” என்று கோரஸ்பாட அதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட வெரோ தன் காலை தூக்கி அதில் மாட்டியிருந்த கொலுசை கொலைவெறியுடன் பார்த்தாள்.
சில நாட்களுக்கு முன்பு தான் இதை பார்த்து ஆசை ஆசையாக வாங்கி காலில் மாட்டிக் கொண்டாள். அன்று தான் ஆசையாய் பார்த்து பார்த்து வாங்கியது இன்று தன்னை காட்டிக் கொடுத்ததில் அதை பார்த்து முறைத்தவள் ‘ப்ச்’ என உச்சுக் கொட்டிவாறு அங்கிருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டாள்.
அதில் அழகிய புன்னகை ஒன்றை சிதற விட்ட ஜில்மில் பின் வாஸ்ரூம் சென்று முகத்தை கழுவி விரித்து விட்டிருந்த முடியை தூக்கி போனிடைல் போட்டவள் தன் தோழிகளைப் பார்க்க அவர்கள் சற்று முன் என்ன நிலையில் இருந்தார்களோ அந்த நிலையில் இருந்து சற்றும் மாறாமல் இருந்தனர் வெரோனிக்காவை தவிர.
அவர்களின் நிலையை எண்ணி உள்ளுக்குள் சிரித்தவள் அதற்கு மேல் பொறுமை காக்கும் எண்ணமில்லாமல் நால்வரையும் ஒரு பார்வை பார்த்தவள் தன் லேப்டாப் சகிதம் ஹாலிற்குல் நுழைந்தாள். அவளை தொடர்ந்து மற்ற நால்வரும் பலி ஆடு போல் அவளை பின் தொடர்ந்தனர்.
அவர்கள் நால்வரும் வெரோனிக்கா அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்து கொள்ள ஜில்மில் தன் லேப்டாப்பில் தமிழ் கலெக்சனில் உள்ள பாடல்களை ஓட விட்டவள் தன் குத்தாட்டத்தையும் அருமையாக துவங்கினாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மாறிமாறி பாடல் ஒலிக்க அவளும் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ப தன் ஆட்டத்தை தொடர்ந்தாள். ஒரு பாடலுக்கு அரைமணி நேரம் ஆட்டம் போட இவளைத் தவிர வேறு யாராலும் முடியாது. அந்தளவிற்கு கர்ணகொடூரமாக ஆடிக் கொண்டிருந்தாள் ஜில்மில்.
மற்ற ஐவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு அவளது ஆட்டத்தை கண்குளிர கண்டு களிக்கிறோம் எனும் விதமான பாவனையில் முகத்தை வைத்திருந்தனர். வெளியில் சிரித்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளுக்குள் அவளை எந்தளவு திட்ட முடியுமோ அந்த அளவு திட்டி தீர்த்துக்கொன்டிருந்தனர்.
அதிலும் என்னவொரு அதிசயம் என்றால் ஐவரும் அவளை மனதுக்குள் கழுவி கழுவி ஊற்றினாலும் அதை மற்றவர்கள் அறியாமலேயே செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.
ஸ்ரேயாவோ அதுக்கும் மேலே போய் அவளை விம் போட்டு தேய்த்து தேய்த்து கழுவிக் கொண்டிருந்தாள்.
ஒரு மாதத்திற்கு முன்பு உலகத்திலே மிக சந்தோஷத்தில் இருப்பது யாரென்று கேட்டால் உண்மையிலேயே அவள் தான் என்றிருப்பாள். ஏனென்றால் அப்போது தான் தன் வீட்டிச் சிறையில் இருந்து தப்பி பாரிஸ் வந்திருந்தாள். ஆனால் இப்போது ?????? கேள்விக்குறியே.... ‘ம்ஹ்’ என நீண்ட பெரும்மூச்சு ஒன்றை வெளியிட்டவள் மறந்து போய் பாத்ரூம் செல்வதற்காக எழுந்துவிட்டிருந்தாள்.
தன் குத்தாட்டத்தை ஆடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் ஐவரின் மீதும் தன் பார்வையை உன்னிப்பாக செலுத்திக் கொண்டிருந்தவள் ஸ்ரே எழுந்து கொள்ளவும் அவளை முறைத்து கொண்டு ‘ஆஆஆஆஆ’ என மூச்சுவாங்க கத்தினாள்.
அவளது காட்டுக்கத்தலில் தன் சுயநினைவை அடைந்த ஸ்ரே அப்போதுதான் தான் நின்று கொண்டிருப்பதை கண்டு தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
அவளது மனமோ ‘அடியே லூசு ஸ்ரே என்ன பண்ணி தொலைச்சிருக்க... இப்பிடியாடி எழுந்து நிற்ப அறிவுகேட்டவளே... சனியன தூக்கி பனியன்ல போட்டுட்டியேடி... முட்டாளே முட்டாளே மூள இல்லா முட்டாளே’ என அவளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தது.
அவளோ ‘அதுக்கு நான் என்ன பண்ண முடியும் உச்சா கூட போக முடியாதுன்ன நான் என்ன பண்ணுவேன் எத வேணா அடக்கலாம் ஆனா இத அடக்க முடியுமா?’ என தன் மனதுடன் சண்டை இட்டுக் கொண்டிருந்தாள்’.
அதற்குள் ஜில்மில் “ஆப் க்ஹடே க்யோன் ஹெயின்” (why are you standing?) என ஹிந்தியில் கேட்டு வைத்தாள்.
ஸ்ரே மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அவளுக்கு சுட்டுப்போட்டாலும் ஹிந்தி வாயில் நுழைவதில்லை.
ஆனால் ஹிந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியும். பதில் சொல்லுவது என்னவோ ஆங்கிலம், தமிழில் மட்டுமே. பிரெஞ்சு கூட ஓரளவிற்கு தெரியும்.
அவளுக்கு ஹிந்தி தெரியாத ஒரே ஒரு காரணத்தினால் ஸ்ரேயை கடுப்படிக்க ஜில்மில் அவளுடன் மட்டும் ஹிந்தியிலே உரையாடுவாள்.
அவளை முறைத்த ஸ்ரே தன் சுண்டு விரலை காட்டி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஜில்மில்லை நோக்கினாள்.
ஜில்மில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் அவளை கடுமையாக முறைத்தவள் “இசகே லி முஜ்ஹி க்யா கரண சாஹி” (what should I do for that?) என மீண்டும் ஹிந்தியில் வினவி வைக்க.
அவளை முறைத்த ஸ்ரே சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்து வாயில் ஒரு கையை வைத்துக் கொண்டு இனி பேச மாட்டேன் என்பது போல் சைகை செய்ய....
அவளைப் பார்த்த ஜில்மில் “ஹா...ஹா...ஹா” என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்.
சிறிது நேரம் சிரித்தவள் மீண்டும் கோப முகத்திற்கு மாறி “இதுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம்” என சத்தமாக கூறிக்கொண்டு யோசிப்பது போல பாவனை செய்ய மற்ற ஐவரும் நெஞ்சை பிடித்துகொண்டனர்.
உங்களுக்கு நெஞ்சு வலியே வந்தாலும் அதையெல்லாம் நான் கண்டு கொள்ளவே மாட்டேன் என்பது போல அவர்களது பாவனைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் தீவிர யோசனையில் இருந்த ஜில்மில் தீர்வு கிடைத்து விட்டது என்பது போல் துள்ளிக் குதித்தாள்.
“I have an idea” என உற்சாக குரலில் கூவியவள் “I’m going to dance again from the beginning” என சந்தோசமாக கூறிக் கொண்டு தன் லேப்டாப்பில் முதலில் இருந்து மீண்டும் பாடலை ஒலிக்கவிட்டாள்.
“மாச்சோ என்னாச்சோ
அவ டச் இட்ட
உயிர் இன்ட் இன் டூ ஆச்சோ.
மேச்சோ மே சா சோ
அவ ஸ்பீக் இட்ட குயில் கீசோ............”
என்ற மெர்சல் பட பாடல் ஒலிக்க மீண்டும் கை,காலை அசைக்க துவங்கினாள்.
அவ்வாறே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொஞ்சம் கூட களைப்படையாமல் (களைப்படைந்தாலும் அதை கொஞ்சமும் வெளிக் காட்டாது) தன் ஆட்டத்தை தொடர்ந்தவள் அதன் பிறகு தன் முன்னால் அமர்ந்திருந்த ஐவரின் திருமுகத்தையும் பார்க்க பரிதாபமாக இருந்த காரணத்தினால் தன் ஆட்டத்தை மனமேயில்லாமல் பாதியில் நிறுத்தினாள்.
லாப்டாப்பை மூடி வைத்து விட்டு அங்கிருந்த ball chairல் அமர்ந்தவள்.......
“ஓகே, இன்னைக்கு இவ்வளவும் போதும்.... போனா போகுதுன்னு இத்தோட நிறுத்துறன் மீதிய நாளைக்கு பார்க்கலாம் ஒகே.... இப்போ போங்க... போய் எல்லாரும் விட்ட தூக்கத்த கண்டினியு பண்ணுங்க” என அவர்கள் ஐவரையும் விரட்டி விட்டாள்.
அதில் முதல் ஆளாக தானும் ஜில்மில்லும் இருக்கும் அறைக்குச் சென்ற ஸ்ரே அதிவேகமாக தன் பெட்ஷீட் மற்றும் தன் செல்ல டெடியையும் எடுத்துக் கொண்டு போன வேகத்தில் திரும்பி வந்து ஜில்மில்லை முறைத்துவிட்டு வின்னியை நோக்கியவள் “ இன்னைக்கு நைட் உனக்கு பிடிச்ச சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி தாரேன் சோ இன்னைக்கு நான் உன் ரூம்ல தான் தூங்க போறேன்” என்றவள் வின்னியும் ஆஷிராவும் ஓடி வரவும் அவர்களது அறைக்குள் ஓடிச் சென்று அவர்களது கட்டிலின் நடுவில் படுத்தவள் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்திக்கொண்டு தன் டெடியை கட்டிப்பிடித்துக் பிடித்துக்கொண்டு உறங்கியே விட்டிருந்தாள்.
அவளது சிறுபிள்ளைதனமான செய்கையை பார்த்து சிரித்த அனைவரும் அவரவர் அறைக்குள் சென்று விட்ட தூக்கத்தை தொடர துவங்கினர்.
மற்றவர்கள் தத்தமது அறைக்குள் செல்லவும் தன் அறைக்குள் நுழைந்த ஜில்மில் தான் தண்ணீர் ஊற்றியதால் ஈரமாகிவிட்டிருந்த பெட்ஷீட்டை மாற்றி விட்டு ஜன்னல் திரையை விலக்கியவள் சிறிது நேரம் வானத்தையே வெறித்துக் கொண்டு நின்றாள்.
குளிர் காற்று அவளது உடலைத் தழுவி நடுநடுங்க வைத்தும் மனதின் உஷ்ணம் அந்த குளிர் காற்றை சுகமாகவே ஏற்றுக்கொள்ள தூண்டியது.
அப்போதுதான் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவரத் துவங்கி இருந்தான். நேரத்தை பார்த்தாள் நேரம் ஒன்பது என காட்டியது வீட்டிற்கு அழைக்கலாம் என தோன்றிய எண்ணத்தை அடுத்த நொடியே தன் மனதில் இருந்து அழித்தாள்.
வீட்டிற்கு அழைக்கலாம் தான் அவளது குரலை கேட்க அங்கு எல்லாருமே ஆவலாகத்தான் இருக்கிறார்கள். அதுவும் அவள்... ஆனால் அவர்களது திடீர் பாசத்தைத்தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் தானே அவள் இங்கு வந்திருப்பது. அவள் எல்லா நாடுகளையும் வருடத்திற்கு இருமுறை சுற்றி வந்திருக்கிறாள் ஆனால் எங்கும் கிடைக்காத அமைதி அவளுக்கு இங்கு கிடைக்கிறதே.
ஏதோ வித்தியாசமான உணர்வு மனதின் மூளை முடுக்கெல்லாம் ஏதோ சில்லென்ற உணர்வு...... இந்த உணர்வு அவளை இதுவரை தீண்டியதே இல்லையே.
ஆனால் அவள் எந்த அளவு சந்தோஷமாக இருக்கிறாளோ அதே அளவு தன்னை பற்றிய பயமும் அவளை அலைக்கழித்தது.
மனிதர்கள் வாழப்போவது சிறிது காலம் தான் ஆனால் அதற்குள் எத்தனை எத்தனை இன்பங்கள், துன்பங்கள் மனிதர்களின் வாழ்வை பந்தாடுகிறது.
ஆனால் ஜில்மில் அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவள் வாழப்போவதும் சிறிது காலம் தான் அதனாலேயே அவளது வாழ்வை எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை அவளே முடிவு செய்து வைத்திருந்தாள். ‘Life is full of surprises’ இது தான் அவளது தாரக மந்திரம்.
அதனாலேயே தன் ஒவ்வொரு நாளையும் வித்தியாசமாக ஆரம்பிக்க நினைத்தாள். அவ்வாறு தான் அவளது ஒவ்வொரு நாட்களும் வித்தியாசமாக கழிந்து கொண்டிருக்கின்றது.
அதனால் தான் அவளது நண்பர்களையும் அவள் இந்த பாடுபடுத்துவது. ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல அவளுக்கான நாட்கள் குறைந்து கொண்டல்லவா செல்கின்றது.
ஆனால் விதியோ அவளைப்பார்த்து மென்னகை ஒன்றை சிந்தியது.
அவளும் ஸ்ரேயும் பாரிஸ் வந்து ஒரு மாதம் ஆகின்றது. இங்கு வந்ததும் அவள் செய்த முதல் வேலை தனக்கென்று ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கியது தான். ஜில்மில்லிற்கு ஒருத்தரை பிடித்து விட்டதென்றால் அவர்களை எப்போதும் தன் அருகிலே வைத்துக்கொள்ள வேண்டும் அவளுக்கு.
அதனாலேயே ஜெனி பின்டோ, வின்னி, வெரோனிக்கா, ஆஷிரா என அனைவரையும் பாரிஸிற்கு அழைத்து வந்து விட்டாள்.
அவர்களது செலவுகளைக்கூட அவளே ஏற்றுக்கொண்டாள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களிற்குதான். அதன் பின்?????........ அதை நினைத்துப் பார்த்து தன் மனதை புண்ணாக்க விரும்பவில்லைஅவள்.... நடப்பது எல்லாமே நன்மைக்கே... என தன் யோசனையில் மூழ்கி இருந்தவளை கலைத்தது பின்டோவின் குரல்.....
தன் அறைக்குள் நுழைந்த பின்டோவிற்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. அவளுக்கு ஜில்மில்லைப் பற்றி நன்கு தெரியும். இன்று அவளது வால்தனம் மிகவும் அதிகப்படியே, அதனாலேயே பின்டோ மிகவும் தவித்துப்போனாள்.
இப்போது அவளிடம் போய் பேசினால் தன் மனதையே துன்புறுத்திக் கொள்வாளோ..... என தனக்குள் யோசித்துக் கொண்டு மண்டையை உடைத்தவள் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் வெரோனிக்காவின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக தான் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே சென்று ஜில்மில்லின் அறைகதவை தட்டினாள் ஆனால் அது தானாகவே திறந்து கொண்டது.
தான் நினைத்தது சரி தான் என்பது போல் அங்கு சோக சித்திரமாய் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தாள் ஜில்மில்.
(ஆங்கில உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்)
பின்டோ கவலையுடன்.... “எதற்கு இப்படி நின்று கொண்டிருக்கிறாய் ஜில்?”
அதற்காகவே காத்திருந்தது போல “தெரியும் நீ வருவாய் என்று அதற்காக தான் காத்திருந்தேன்” என விரக்தியான குரலில் ஜில்மில் கூற அதுவரை தள்ளி நின்று கொண்டிருந்த பின்டோ வேகமாக அவள் அருகில் வந்து ஒரு தாயின் பரிவுடன் அவளது தலையை முடியை கோதிக்கொடுத்தாள்.
நான் வருவேன் என்று உனக்கு எப்படி தெரியும் என்று பின்டோவும் கேட்கவில்லை, நீ வருவாய் என்று எனக்கு எப்படி தெரியும் என்று ஜில்மில்லும் கூறவில்லை. இது தான் ஆர்த்மார்த்தமான நட்போ. காதலில் மாத்திரம் தான் உள்ளுணர்வு இருக்குமென்று யார் சொன்னது இதோ இந்த நட்பிலும் உள்ளுணர்வு வேலை செய்கின்றதே. இது தானே உண்மையான தூய்மையான நட்பிற்கு அத்தாட்சி.
தன் தலை கோதும் தோழியை பார்த்து மென்மையாய் புன்னகைத்த ஜில்மிலை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தி தன் மடியில் உறங்க வைத்தாள் பின்டோ.
அதில் கண்களில் கண்ணீர் துளிகள் பளபளக்க அவளை நிமிர்ந்து ஜில்மில் எட்டி அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளின் கைகளை இறுக பற்றி கொண்டவளின் நினைவுகள் அந்த ‘அவளை’ நோக்கியே ஓடியது.
அவளின் நிலையை புரிந்து கொண்ட பின்டோ அவளது கண்களை மென்மையாய் துடைத்து விட்டு தலைமுடியை கொதிகொடுக்க சிறிது நேரத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டிருந்தாள்.
பலநாட்கள் தூங்காதவள் போல் தூங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை பார்த்து மனம் கனத்தாலும் அவளை சமாதனப்படுத்த அவள் முயலவில்லை.
காயத்திற்கு மருந்து போடுகிறேன் எனும் பெயரில் அந்த காயத்தையே பெரிதாக்கும் இந்த உலகில் தன் ஆறுதல் வார்த்தைகளால் எங்கே தன் தோழியின் மனம் புண்பட்டுவிடுமோ எனப்பயந்து அவளுக்கு ஆறுதல் சொல்வதையே நிறுத்தியிருந்தாள் பின்டோ.
இவளுக்கு இப்போது தேவை ஆறுதலில்லை மனமாற்றம் என்பதை நன்கு உணர்ந்தவள் ‘தான் ஏதாவது செய்ய வேண்டும்’ என எண்ணியவாறு மெதுவாக அவளது தலையை பஞ்சு போன்ற தலையணியில் வைத்தவள் பெட்ஷீட்டை எடுத்து போர்த்திவிட்டு ஹீட்டர்ரை போட்டு அறைக்கதவையும் ஒசைபாடாமல் மூடிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் ஏறி அமர்ந்தாள்.
உடல் மட்டுமே அவளின் அறையில் கட்டிலில் சயனித்திருந்தது மனதின் எண்ண அலைகளோ ஜில்மில்லையே சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது.
அவள் ஜில்மில்லை முதன் முதலில் சந்தித்தது லண்டனில் தான்.
பின்டோ பிரான்சில் இருந்து மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற போது ஜில்மில்லும் அங்கு மேற்படிப்பிற்காக லண்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA படிக்க வந்திருந்தாள்.. இருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாய் MBA படித்தவர்கள்.
அங்கு தான் அவர்களின் நட்பிற்கான செடி விதைக்கபட்டது.
முதலில் அவளைப் பார்த்த போது ‘என்ன இந்த பொண்ணு இப்பிடி இருக்கா’ என்று தான் பின்டோவிற்கு தோன்றியது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பழகிய போது தான் அவளது சுபாவமே அப்படித்தான் என்பது அவளுக்கு தெரிந்தது.
ஆனால் அந்த நகரத்தில் தான் இப்படி இருப்பது சரிப்படாது என்றுணர்ந்து பின்டோவுடன் சேர்ந்து தான் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்கு ஏற்ப மாற்ற தொடங்கினாள் ஜில்மில்.
ஆரம்பத்தில் அது மகா கஷ்டமாக இருந்தும் பின்டோவின் வற்புறுத்தளுக்காக அவளின் வழிகாட்டலின் கீழ் தன்னையே அவள் முழுதாக அந்த இடத்திற்கேற்ப மாற்றியிருந்தாள்.
அதை நினைத்துப் பார்த்தவளுக்கு இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்றியது. அன்றைய ஜில்மில்லுக்கும் இப்போதிருப்பவளுக்கும் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள் என நினைத்து பார்த்தவள் தூக்கம் கண்களை சுழற்றவும் அதன் பின், தான் காலையில் தியாகம் செய்த உறக்கத்தை மீண்டும் செவ்வனே தொடங்கினாள்.
-------------------------------------------------
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜில்மில்லின் வயிறு நானும் இருக்கிறேன் எனும் விதமாக பசியில் ஓலமிட வயிற்றை பிடித்துக் கொண்டு தூங்க முற்பட்டவள் சிறிது நேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமலும் தூங்க முடியாமலும் எழுந்து அமர்ந்தாள்.
எழுந்த்மர்ந்ததும் வயிற்குள் ‘கடக் முடக்’ என சத்தம் கேட்க ‘அவுச்’ என முனங்கியவள் அதற்கு மேல் இருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்து கிட்சென்னிற்குள் சென்று டூ மினிட்ஸ் நூடல்ஸ் செய்து உண்டாள்.
ஆனால் அதற்கும் பசி அடங்காதிருக்க என்ன செய்வதென யோசித்தவள் மூளையில் மணியடிக்கவும் “ஸ்ரே இருக்க கவலையேன்...” என தன் தோழியை எண்ணி பெருமைப்பட்டவள் வின்னியின் அறைக்கதவை உடைப்பது போல் தட்ட ஒரு சில நிமிடங்களின் பின் பத்ரகாளியாய் வெளியே வந்தாள் ஸ்ரே.
“ஏன்டி இப்பிடி இருக்க... நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்.... உன்னத்தான் கேக்கிறேன் வாயத்திறந்து பதில் சொல்லுடி... காலங்கார்த்தால எழுப்பிவிட்டு தூங்கவிடாம பண்ண.... இப்போ மறுபடியும் எழுப்பிவிட்டு தூங்க விடாம பண்ற.... ஏன்டி இப்பிடியெல்லாம் பண்ற...” என கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கத்த அதற்கெல்லாம் அசருபவலா ஜில்மில்.....
“ஏய் என்ன விட்டா ஓவரா பேசிட்டு போற... ஆமா... எதுக்கு இப்போ பாதிக் கனவுல எழுப்பிட்ட மாதிரி இந்த கத்து கத்துற???” என மிகச் சரியாக கேட்க...
அதைக் கேட்ட ஸ்ரே “அடியேய் எதுக்குடி என்ன எழுப்பின என் ஹீரோவோட முகத்த பார்க்கிறதுக்குள்ள எழுப்பிட்டியடி....” என அவளை கடித்துத் துப்பினாள்.
அதையெல்லாம் தூசியை தட்டுவது போல ஊதித் தள்ளியவள் “இன்னைக்கு பார்க்கலன்ன என்ன நாளைக்கு பார்க்கலாம் இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது நான் என்ன பண்றது.. அது மட்டுமில்லாம இன்னைய பசிக்கு நான் நாளைக்கா சாப்பிட முடியும்??” என ஒரு மொக்க ஜோக்கை அவிழ்த்து விட்டவள் தனது பசி தான் இப்போது அதிமுக்கியம் என்பது போல் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டுகூற.....
‘omg... காலக் கொடுமடா கதிரவா...’ என தனக்கு தானே பரிதாபப்பட்டுக் கொண்டு ‘ஏன் என்ன இப்பிடி வச்சி செய்ற’ என்ற பார்வையை ஜில்மில்லை நோக்கி வீசினாள்.
அவளோ ‘நான் என்ன பண்ணேன்’ என அப்பாவி பார்வையொன்றை வீசவும் அதற்கு மேல் தாங்க முடியாமல் கடுகடுவென்ற முகத்துடன் பல்லை நறநறத்துக் கொண்டு எல்லோருக்கும் சேர்த்து பிட்சா ஆர்டர் செய்தாள்.
அதன் பின் ஒவ்வொருவராய் எழும்பி (எழும்பி என்பதை விட ஸ்ரே அனைவரையும் எழுப்பிவிட்டிருந்தாள்) குளித்து முடித்து வரவும் பிட்சா வரவும் சரியாக இருந்தது.
அதை எல்லோரும் சேர்ந்து ஒரு கட்டு கட்ட ஒரு பங்கு அதிகமாகவே உண்டாள் ஜில்மில். அந்தளவு பசி அவளிற்கு.
சாப்பிட்டு முடிந்ததும் கொஞ்ச நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்த ஜில்மில் “ஓகே..... ஓகே யுவர் சட் கன்செர்ட் இஸ் எனாப். வி கேன் நவ் கோ டு பெர்சி வில்லேஜ்” (ok.. ok... your chat concert is enough. We can now go to bercy village) ஓகேவா என அனைவரையும் ஒரு பார்வை பார்த்து வைக்க.....
உடனே வின்னி ஸ்ரேயை நோக்கி “நீ என்னோட பேவரிட் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி தாரேன்னு காலையில் சொன்னது ஞாபகம் இருக்கா??” என ஒரு கூர் பார்வையுடன் வினவ.....
“ஹி ஹி” என அசடு வழிந்தவாறு திருதிருவென முழித்தவள் “நான் அப்பிடி சொன்னேனா என்ன?” என சத்தமாக கூறிக் கொண்டு தலையை தட்டிக் கொண்டும் இல்லாத மூளையை தூசி தட்டி தேடியும் ஞாபகம் வராது போகவே என்ன செய்வது என யோசித்தாள்.
உடனே ஒரு யோசனை தோன்றவே வின்னியை நிமர்ந்து பார்க்க அவளோ ஸ்ரேயின் முகத்தையும் அதிலிருந்த தீவிர யோசனையையும் கண்டு ‘வழக்கம் போல இன்னைக்கும் மறந்து போயிடிச்சு போல’ என எதையும் பளிச்சென்று காட்டும் கண்ணாடி போன்ற அவளது பளிங்கு முகத்தில் இருந்து கண்டு கொண்டவள் ‘மவளே உனக்கு இருக்கிடி’ என தன் மனதுக்குள் கருவிக்கொண்டு வெளியில் முகத்தை வெகு சாதரணமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளது சாந்தமான முகத்தைப் பார்த்த ஸ்ரே ‘பார்க்கவே பாவமா இருக்கா.... ஒரே ஒரு நூடுல்ஸ் தானே கேட்கின்றாள் வாங்கித்தான் கொடுப்போமே’ என மனதினுள் எண்ணிக்கொண்டு வின்னியை பார்த்துச் சிநேக புன்னகை ஒன்றை சிந்தினாள்.
‘ஒரே ஒரு நூடுல்ஸ வாங்கி கொடுக்கலாம்னு பிளான் போறியா மை டியர் ஸ்ரே இன்னைக்கு உன்ன வச்சு பெரிய லிஸ்டே போட போறேன் பொறுத்திருந்து பார் என் விளையாட்டை’ என உள்ளுக்குள் எண்ணியவாறு ஸ்ரேயை பார்த்து அவளைப் போலவே சிநேக புன்னகை ஒன்றை சிந்தினாள்.
அவளது புன்னகை முகத்தை பார்த்த ஸ்ரே ‘ப்ச் பாவம் நான் நூடுல்ஸ் வாங்கி தரப்போறேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கா நாம எடுத்த முடிவு சரிதான்’ என எண்ணிக்கொண்டு ‘நீ தான தயாளினி டி ஸ்ரே’ என தன்னை தானே புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருந்தாள் அவள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வின்னி அவளது அடுத்த யோசனையையும் கண்டு கொண்டவள் போல மற்ற நால்வரையும் பார்த்து ஸ்ரே நோக்கி கண்ஜாடை காட்டியவாறு கேலிப் புன்னகை ஒன்றை சிதற விட்டவள் ‘நீயல்லாம் ஒரு தான தயாளினியா? இருடி இன்னைக்கு உன் பர்ஸுக்கு வெட்டு வைக்கிறேன்’ என ஸ்ரேயின் ஒவ்வொரு மூவ்வையும் அறிந்து கொண்டு அவளுக்கு தன் மனதிற்குள்ளே கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் வின்னி.
இவர்கள் இருவரினதும் எண்ண ஓட்டத்தையும் கணித்த மற்றவர்கள் தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.
சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு பெர்சி வில்லேஜ்ஜை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கினர் அந்த அறுவரும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் பிறந்தவர்கள். இவர்களுக்குள் மொழி, மதம், கலாச்சாரம் என பல வேறுபாடுகள் இருப்பினும் அதையெல்லாம் புறந்தள்ளி நட்பு எனும் ஒரு புள்ளியை மையமாய் வைத்து அதன் அச்சில் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.
இந்த புள்ளி என்றும் அவர்களுடனே பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தளவிற்கு ஒருவர் மேல் ஒருவர் பாசத்தையும் நேசத்தையும் பொழிந்து கொண்டிருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஜில்மில்லை தவிர மற்ற ஐவருக்கும்ஒருவருடன் ஒருவர் பழக்கமில்லை.
ஆனால் இங்கு வந்த பின்பு காலங்காலமாய் பழகியது போல் ஒவ்வொருவரும் பழகியதற்கு நட்பை தவிர வேறு எதுவும் காரணமாய் அமையாது. அத்தைகைய சிறப்பு வாய்ந்தது தான் நட்பு.
பெர்சி வில்லேஜ் நோக்கி பயணித்த அந்த அருவருக்கும் வாழ்க்கையில் ஒரு சிலபல புதிய அனுபவங்கள் கிடைக்கப் போகின்றது என்பதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.
சோகங்களையும் சுகங்களையும் வாரியிறைக்கும் இப்பயணம் சிலருக்கு வாழ்வாக அமையும் ஒரு சிலருக்கு வாழ்க்கையின் முடிவாகவும் அமையும்.
அதே போல் இந்த அருவருக்கும் இந்த பயணம் எந்த விதமான அனுபவத்தை, சந்தோசத்தை, அதிர்ச்சியை, கோபத்தை, பொறாமையை வரவழைக்க போகின்றது என்பதை அறிந்து கொண்ட விதி கர்ணகொடூரமாக இவர்களை நோக்கி தன் பார்வையை வீசிக் கொண்டிருந்தது.
பெர்சி வில்லேஜில் பூட் கோர்ட்டில் அமர்ந்து பர்கரை ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தனர் மூவர்.
அந்த மூவரில் ஒருவன் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த பெண்களை தன் சிரிக்கும் கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
அதை பார்த்த அவனின் நண்பன் யக்ஷித் “ஏன் மச்சான் எல்லா பொண்ணுங்களையும் இந்த லுக்கு விடுறியே ஒரு நாள் இல்ல ஒரு நாள் உனக்கு தர்ம அடி நிச்சயம் டா” என கலாய்க்க....
அவனோ எப்போதும் போல் தன் ட்ரேட் மார்க் புன்னகையை சிதறவிட்டவன் “உனக்கொன்னு தெரியுமா.... இந்த பொண்ணுங்க எல்லாம் கலர் கலரா ட்ரெஸ் பண்ணி மெனிகியூ பெடிகியூ பண்ணிக்கிட்டு முடிய ஸ்டைலாக விரிச்சு விட்டிகிட்டு வாறதெல்லாம் எதுக்கு... நம்மள மாதிரி ஹேண்ட்சமான பசங்க அவங்கள பார்க்கிறதுக்காத் தான்... சோ அவங்களே நாம பார்க்கனும்னு ஆசைப்படும் போது நாம பார்க்காம இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லு...” என பெரிய லெக்சர் அடித்தவன் மீண்டும் தன் பணியை செவ்வனே தொடரந்தான்.
அவனருகில் அமர்ந்து தன் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த படி அவனின் உரையை கேட்ட ரெயான்ஷ் “அதவிடு மச்சான்... நீ இந்த லவ் இருக்கில்ல லவ் அத பத்தி என்ன நினைக்கிற” என்க....
அதைக் கேட்டு கேலிப் புன்னகையுடன் ரெயானை நோக்கி திரும்பிய நமது ஜொள்ளு மன்னன் ஜொகி தன் ஆருயிர் தோழனைப் பார்த்து மீண்டும் தன் ட்ரேட் மார்க் புன்னகையை சிந்தினான்.
அதற்கு ரெயானோ “நான் என்ன கேட்டிட்டேன்னு இப்போ இப்படி கேவலமான சிரிப்பு சிரிக்கிற” என்க....
அதைக் கேட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டது போல் பலமாக சிரித்தான் ஜொகி.
சிரித்து முடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உதட்டை சுளித்தவன் “லவ்... காதல்.. .ப்ரேமம்... பியார்... அமொர்... பலபசா... (ஹிந்தி, ஸ்பானிஷ், பெங்காலில் காதல் என அர்த்தம்) வேஸ்ட் ஒப் டைம்... அன்ட் அப்பிடியொன்னு இதுவரைக்கும் என்ன டிஸ்டர்ப் பண்ணதும் இல்ல சோ எனக்கு இன்னும் அந்த காதல்ன்ற பீலிங் வரலேன்னு அர்த்தம்... அது மட்டுமில்லாம எனக்கு அந்த காதல் மேல எப்பவும் டிரஸ்ட்டும் இல்ல....” என்றவன் “என்ன உன்னோட கேள்விக்கான பதில் கிடைச்சிடிச்சா?” என்றவன் மீண்டும் தன் ஆஸ்தான பணியை செவ்வனே துவங்கியிருந்தான்.
அவ்வாறே சுற்றி சுற்றி தன் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை ஒரு இடத்தில் சடேன் பிரேக் போட்டது போல் அசையாது நின்றது.
தன்னை சுற்றியிருந்த யாரும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. எல்லாமே மங்கலாய் மாற கன்னத்தில் கையை சாய்த்துக் கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து ரசிக்கத் துவங்கினான் அவன்.
அவனின் விழிகளில் போய்க் கொண்டிருந்த திசையில் தன் தோழிகள் புடைசூழ மகாராணியின் தோரணையில் தனக்கு பிடித்த வைட் கலரில் டிசைன் செய்த நீளமான பாவாடையும் பிங்க் நிற டி ஷர்ட்டும் குளிருக்கு இதமாக ஸ்வெட்டரும் தோளில் ஒரு வெள்ளை நிற ஷோலையும் சுற்றிக் கொண்டு கால்களில் ப்ரௌன் நிற பூட்ஸ் அணிந்து கொண்டு இரு கைகளிலும் பல வண்ண நிற பேண்ட் அணிந்து கொண்டு தன் தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தவள் சாட்சாத் ஜில்மில்லேதான்.
ஸ்ரே ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டு வர அவளது பேச்சை சிறிதும் கண்டு கொள்ளாமல் சற்று பின்னால் நகர்ந்து உதட்டை கோணலாக பிதுக்கி அவளுக்கு பளிப்புகாட்டிக் கொண்டு வந்தாள் ஜில்மில்.
ஸ்ரேயை தவிர மற்ற நால்வரும் ஜில்மில்லின் செய்கையை பார்த்து சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டு ஸ்ரேயை பாவமாக நோக்கினர்.
தன் தோழிகள் தன்னை ஒரு மாதிரி பார்க்கவும் சட்டென்று ஜில்மில்லை நோக்கி தன் பார்வையை வீச அதற்குள் சுதாகரித்துக் கொண்டு தன் முகத்தை சீராக்கிய ஜில்மில் சிரித்த முகமாய் ஸ்ரேயை நோக்க ஒரு நிமிடம் குழம்பியே போனாள் ஸ்ரே.
ஆனால் அவளுக்கு தான் தன் தோழியை பற்றி நன்கு தெரியுமே. அதனால் அவளை முறைத்துப் பார்க்க ஜில்மில்லோ அவளை தாஜா செய்து அவளது கன்னத்தில் முத்தமிட்டு மலையிறங்க வைத்தாள்.
அப்போதும் சமாதானமாகாமல் கோபமாக இருப்பவள் போல் நடித்தவள் தன் தோழியின் முகத்தை பார்க்க பாவமாக இருந்ததால் தன் நடிப்பை கை விட்டு விட்டு அவளுடன் சகஜமாக பேசத்துவங்கினாள்.
வின்னியோ ஸ்ரேயின் கையோடு தன் கைகளை கோர்த்துக் கொண்டு அவளை ஒரு பாச பார்வை பார்க்க ‘இவ ஏதோ பெரிசா பிளான் பண்ணியிருக்கா போல எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு ஸ்ரே’ என தன் cid மூளைக்கு வேலை கொடுத்தவள் வின்னியை பார்த்து அதே பாச பார்வை பார்த்து வைத்தாள்.
பின்டோவிற்கு இது பழக்கமான இடம் என்றாலும் ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது புதிதாக இருப்பது போலவே தோன்றும் அந்த இடத்தை கண்களால் துலாவிக் கொண்டு வேடிக்கை பார்த்தவாறு வந்தாள்.
வெரோனிக்காவோ என்னன்ன வாங்கலாம் என தன் மனதுக்குள் பெரிய பட்டியலே இட்டுக் கொண்டிருந்தாள்.
ஆஷிராவோ எப்போதும் போல இவர்களது செல்ல சண்டைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஆஷிரா அமைதியின் மறுஉருவம். எப்போதும் அவளது இதழ்களில் சாந்தமான புன்னகை தவழ்ந்து கொண்ட இருக்கும். ஒரு முஸ்லிம் பெண்.
பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்ததால் அந்த மண்ணுக்கே உரிய நிறத்தில் களையான முகத்துடன் இருப்பவள் தன் தோழிகளை தவிர வேறு யாருக்கும் தன் முகத்தை காட்டமாட்டாள். அதனால் எப்போதுமே அவளின் அழகிய முகம் ஒரு திரைக்குள்ளே ஒளிந்திருக்கும். அந்த திரை வழியால் தன் தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பூட் கோர்ட்டில் இருந்து அவர்கள் அறுவரையும் பார்த்த ஜொகியின் பார்வை என்னவோ ஜில்மில்லையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவையும் தன் கண்களில் நிரப்பி மனதினுள் சேகரித்துக் கொண்டான். ஏனென்றே அறியாமல்.
அதுவும் அங்கு அவள் அவளருகில் இருந்த பெண்ணிற்கு முத்தம் கொடுப்பதை பார்த்ததும் ஏதோ தனக்கே அவள் முத்தம் கொடுத்து விட்டது போல் லேசாக வெட்கப்பட்டான் ஜொகி.
ஆண்களின் வெட்கம் அபூர்வமானது. இன்று அவனின் முகம் வெட்கத்தால் லேசாய் சிவந்து காதுமடல் கூசிச் சிலிர்த்தது.
தன் நண்பனின் முகத்தில் புதிதாக தோன்றிய மாற்றத்தை தன் மனதில் குறித்துக் கொண்டான் ரெயான். அவனுக்கு ஜொகியை பற்றி நன்கு தெரியும் ஒரு சில நிமிடத்திற்கு மேல் எந்த பெண்ணின் மேலும் அவனது பார்வை நிலைத்து நின்றது இல்லை அப்படிப்பட்டவனின் பார்வை ஒரு பெண்ணின் மேல் பல நிமிடங்கள் ரசனையுடன் நிலைகுத்தி நிற்கின்றதென்றால்?? அது கேள்விக்குறியே.
“என்ன மச்சான் அந்த பொண்ண இப்பிடி பார்க்கிற... என்ன அந்த பொண்ண கண்டதும் காதல் வந்திடுச்சா?” என வம்பிழுப்பது போல் தன் மனதில் இருந்த கேள்வியை கேட்க.....
அவனை பார்த்து முறைத்த ஜொகி “தெரியல” என்றான் கண்களால் சிரித்துக் கொண்டு.
தனக்கே புரியாமல் இருப்பதை தன் நண்பனிடம் கூற மனமில்லாது அவனை சமாளித்து விட்டு அவள் வந்த வழியை பார்க்க அது அவள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.
“சே மிஸ் பண்ணிட்டன்” என தாங்கள் அமர்ந்திருந்த மேசையில் ஓங்கி குத்தினான். அதில் அங்கிருந்த ஒரு சிலர் அவனை விசித்திரமாக பார்க்கவும் தன் கைகளை தூக்கி ‘சாரி’ என இதழ்களை அசைத்தவன்....
திரும்பி தன் நண்பர்களை பார்க்க அவர்களும் அவனை விசித்திர பிறவியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
‘என்ன’ எனும் விதமாய் புருவத்தை தூக்கி கேட்க அவர்கள் ஒன்றும் இல்லை எனும் விதமாக தலையை அசைத்தனர். அவர்களை நம்பாத பார்வை பார்த்தவன் அங்கிருந்து ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விட்டிருந்தான்.
ஏனோ அவன் மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. ஒரு நாளும் அவனது மனது இப்படி அலைபாய்ந்தது இல்லை. இன்று தான் முதன் முதலாக அதுவும் ஒரு பெண்ணைப் பார்த்து அவன் மனம் தடுமாறுகின்றது.
எந்த பெண்ணை பார்த்தும் இது நாள் வரை தோன்றாத ஒரு நுண்ணிய உணர்வு அவளைப் பார்த்ததும் ஏன் தோன்றியது எனப் புரியாமல் தவித்தான் அந்த காதல் மன்னன்.
சற்று நேரத்திற்கு முன் கூறியது போல் அவனுக்கு காதலின் மேல் நம்பிக்கையே இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் திடீரென்று ஏன் இந்தமாதிரி எல்லாம் தோன்றுகிறது எனப் புரியாமல் குழம்பியவன் கண்களை மூடி ஆழமூச்செடுத்து தன்னை சமன் படுத்திக் கொண்டான்.
ஆனால் அப்போதும் விடாமல் அவள் உதட்டை சுளித்து பளிப்பு காட்டியது தான் அவன் மனக்கண்ணில் தோன்றி அவனை பாடாய்படுத்தியது.
‘க்ரேஷி கேர்ள்’ என தன் மனதுக்குள் அவளை செல்லமாக வைதவன் தன்னை அறியாமலே அவளது நினைவுகளை அழகாய் மனதில் சுமக்க துவங்கினான்.
கள்வன் வருவான்....
ஹாய் பிரெண்ட்ஸ்...
மறுபடியும் முதலில் இருந்து கதையை ஆரம்பிக்கின்றேன்... சிறு சிறு மாறுதல்களுடன்.... பழையவற்றை விரைவாக முடித்துவிட்டு நாம் விட்டதில் இருந்து கூடிய சீக்கிரம் மீண்டும் தொடர்வோம்....
அதற்காக பார்த்திவிட்டு சும்மா போகாமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே...
தன் தோழிகள் முன்னால் சென்றிருக்க செல்பி ஸ்ட்ரிக் கொண்டு விதவிதமாக செல்பி எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தாள் ஜில்மில்.
தன் மகிழ்ச்சியின் அளவை வெளிப்படுத்த அவளுக்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவு மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள் அவள். ஏதோ வின்னிலிருந்த வானவில்லொன்று மண்ணிலிறங்கி வந்தது போல இருந்தது அவளது மனநிலை.
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு நாடுகளாக சுற்றிக் கொண்டிருப்பவள் தான் அவள். ஆனால் அதையெல்லாம் வேண்டா வெறுப்பாக தன் பெற்றோருக்காகவும் அவர்களது ஸ்டேடசிற்காகவும் தான் சென்று வந்தாள்.
ஆனால் இந்த பயணத்தை அவளே முடிவு செய்து அவள் விரும்பிய நாட்டிற்கு வந்திருக்கின்றாள். அதுவும் அவளது நெருங்கிய தோழிகளுடன். இது தான் முதல் தடவை ..... கடைசி தடவையும் கூட...... இன்னும் எத்தனை நாட்கள் அவள் இருக்கப் போகிறாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லையே...
“உன்னால் உன்னால் உன் நினைவால்
உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே
உன்னை உன்னை கேட்டேனே....
உன்னோடு சேர்ந்து நெடும் தூரங்கள்
காலாற நடந்து மிதந்தேனே…..
உன்னிடம் தந்த இதயத்தை தேடி
உன்னில் என்னை தொலைத்தேனே...”
என்ற பாடலை ஹம் செய்த படி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றி செல்பி எடுத்துக் கொண்டுயிருந்தவளை கவர்ந்தது அவளைப் போலவே அங்குமிங்கும் ஓடியாடி கொண்டிருந்த சிறு பெண்ணொன்று.
அவளது செய்கைகளை பார்த்து சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது அவளுக்கு.
ஏதோ உள்ளுணர்வு உந்த அவள் அருகில் சென்று அந்த வாண்டினை தன் பக்கம் திருப்பி அந்த சின்னப் பெண்ணின் உயரத்திற்கு மண்டி இட்டு அமர்ந்தாள்.
அவளைப் பார்த்த நொடியே அவள் இந்த நாட்டை சேர்ந்தவள் என்பதை கண்டு கொண்டவள் “quel est le nom de ce beau petit ange?” என பிரெஞ்சு மொழியில் அவள் பெயரை கேட்டாள்.
அந்த சுட்டிப் பெண்ணோ “ ce mignon petit nom de princesse est jiya myra” (இந்த இளவரசியோட பெயர் ஜியா மைரா) என அவளும் பிரெஞ்சு மொழியில் மழலைக் குரலில் கூறி கலகலவென சிரிக்க அவளுடன் சேர்ந்து ஜில்மில்லும் கலீர் என தன் வெண் பற்கள் தெரிய சத்தமாக சிரித்தாள்.
தன்னுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த ஜில்மில்லை பார்த்த ஜியா அவளது கன்னத்தில் தன் பிஞ்சு இதழ்களால் மென்மையாய் முத்தமிட்டு அவளது கன்னத்தை எச்சில் படுத்தினாள்.
அவள் முத்தமிட்டதைப் பார்த்து மீண்டும் சத்தமாக சிரித்த ஜில்மில் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
----------------------------------------------
அதே நேரம் அளவுக்கு அதிகமான எரிச்சலிலும் கட்டுக்கடங்காத கோபத்திலும் போனை காதில் வைத்தபடி மறுபக்கத்திலிருந்தவனை திட்டிக் கொண்டிருந்தவனின் காதில் இந்த நகைப்பொலி நாராசமாக கேட்டது.
மிகுந்த எரிச்சலில் பல்லைக் கடித்தவன் எங்கிருந்து இந்த சிரிப்பொலி வருகின்றது என சுற்றும் முற்றும் பார்த்தான்.
சற்று தூரத்தில் ஒரு பெண் கால்களை முழங்காலிட்டு அமர்ந்திருக்க அவளுக்கு முன் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க அவர்கள் இருவரும் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது சிரிப்பை பார்த்தவனுக்கு ஏனென்றே தெரியாமல் எரிச்சல் வர அதைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அத்துடன் சேர்த்து அவளின் காந்தசிரிப்பில் சிறு ஈர்ப்பும் முளைத்தது.
தன் மனயுளைச்சலை கட்டுப்படுத்திக் கொண்டான் அந்த உலகம் சுற்றும் கைதேர்ந்த இளம் பிசினஸ் மேக்னெட். தன் சுண்டு விரலாலே பல கோடிக்கணக்கான வருமானம் வரும் தொழில்களை இருந்த இடத்திலிருந்தே திறம்பட செய்து முடிக்கும் வல்லமை கொண்டவன்.
அவனது தொழில் போட்டியாளர்களால் ‘தி பிசினஸ் டைகூன்’ , ‘தி conqueror ஒப் தி பிசினஸ் வேர்ல்ட்’ என பல பெயர்களால் வர்ணிக்கப்படும் தொழில் ஜாம்பவானான அவனால் தன் முகத்தில் தோன்றிய உணர்ச்சியையா மறைக்க முடியாது?
பாறாங்கல் போன்ற அவனது முகத்திலிருந்து யாராலும் எதையும் எப்போதுமே கணிக்க முடியாது. எப்போது கர்ச்சிக்கும் சிங்கமாக இருப்பான் எப்போது பதுங்கும் புலியாக இருப்பான் என்று யாருக்கும் தெரியாது.
அப்படிப்பட்டவனை தன் காந்தச்சிரிப்பால் சுண்டியிலுத்திருந்தால் அவள் தன்னை அறியாமல்.
இதுவரையிலும் பல பெண்களுடன் பழகியிருக்கிறான். அவர்கள் எல்லாம் அவனின் பணத்தில் மயங்கி அவனுடன் இருக்கும் பொழுதோ அல்லது அவனின் கண்பார்வை படும் தூரத்தில் இருந்தாலோ வெகு நாகரீகமாக நடந்து கொள்வார்கள்.
அவர்கள் சிரிக்கும் போது கூட நாகரீகமாய் கடமைக்கு சிரிப்பது போலவும் இருக்கும் அல்லது அவனை மயக்க புரிவது போலவும் இருக்கும்.
ஆனால் இன்று தான் அவன் முதன்முறையாக ஒரு பெண் சத்தமிட்டு சிரிப்பதை பார்க்கிறான். அதுவும் தரையில் முட்டிபோட்டு அமர்ந்து. அவனின் வட்டார பெண்கள் தரையில் அமர்வதற்கு கூட நாகரீகம் பார்ப்பவர்கள். எங்கே தாங்கள் அப்படி தரையில் அமர்ந்தாள் தங்கள் கௌரவம் குறைந்து விடுமோ என எண்ணக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களின் மத்தியில் இவள் சற்று வித்தியாசமாய் இருக்கவும் அவளையே ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான்.
இத்தனை நேரமாக எரிச்சலில் இருந்தவனை தன் சிரிப்பால் தன் செய்கையால் சிறிது அமைதிப்படுத்தியவளை தன்னை அறியாமலேயே ரசிக்கத் துவங்கியவன் மண்டியிட்டு அமர்ந்திருந்த அவளது முகத்தை பார்க்க முயற்சிக்க அவளோ நான் திரும்புவேனா எனும் விதமாக அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தாள்.
தன் முகத்தில் விழுந்த முடிக் கற்றையை தன் விரல்களால் காதின் பின்னால் அவள் ஒதிக்கிவிட அவனோ அதை ஒரு வித ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தின் பின் தான் அவளருகில் நின்றிருந்த அந்த சிறு பெண்ணை பார்த்தான்.
வெள்ளை வெளேரென்ற சருமமும் இளம் ஊதா நிறக் கண்களும் என பார்க்க குட்டி தேவதை போல் இருந்தாள் அந்த சிறு பெண்.
சிறிது நேரம் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு செல்போனில் அழைப்பு வர அதை ஏற்றவன் “என்ன நடந்தது...” என்க...
மறுபக்கத்தில் என்ன சொன்னார்களோ அவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது ஆனால் உடலிலோ முகத்திலோ ஏன் குரலில் கூட எந்த மாற்றமும் இல்லை...
“சிம்ப்லி கில் தெம்” என்றவன் அத்துடன் பேச்சு முடிந்தது போல் செல்போனை அணைத்தவன் அவர்களை நிமிர்ந்து பார்த்தான்.
அப்போது ஜியா ஜில்மில்லின் கைகளை பிடித்து இழுத்து ஐஸ்கிரீம் ஸ்டாலிற்கு அழைத்துச் சென்றாள்.
“quelle est ta glace preferee” (what’s your favourite ice cream) என கொஞ்சும் குரலில் கேட்க ஜில்மில்லோ தனக்கு பிடித்த pozetto ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்ய ஜியா அவளுக்கு பிடித்த amorino வை ஆர்டர் செய்து இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டு அந்த ஐஸ்கிரீம்களை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தனர்.
இப்போது தான் முதன்முறையாக பார்த்த அந்த குட்டி வாண்டுடன் ஏனோ காலம் காலமாக பழகியது போல் தோன்றியது ஜில்மில்லிற்கு.
இதுவும் விதியின் திருவிளையாடல் என்பது அவளுக்கு அப்போது புரியவில்லை. புரியும் போது அவள் நிலை என்ன ஆகுமோ?
வாய் மட்டுமல்லாது இருவரது முகம்,கை முழுவதும் ஐஸ் கிரீம்வழிந்து கொண்டிருந்தது. அதை கண்டு கொள்ளாமல் இருவரும் ஐஸ் கிரீம் உண்பதிலேயே கவனமாக இருந்தனர்.
அவனோ அவளது முகத்தை பார்க்க விட்டாலும் அவள் உண்ணும் அழகை யூகித்தவன் போல் முகத்தை சுழித்து கொண்டிருந்தான்.
அதி நாகரீகமான நாட்டில் வாழ்ந்தவனுக்கு இவர்களது செயல் ஒரு வித அருவருப்பையும் ரசனையையும் உண்டாக்க தலையை ஸ்டைலாக கோதி கொண்டிருக்கும் போது மீண்டும் செல்போன் இசைத்து ‘நான் இருக்கிறேன்’ என அவனுக்கு நினைவூட்ட அதை எடுத்து காதில் வைத்தவன் மறுபுறம் திரும்பி நின்று உரையாட துவங்கினான்.
அதேநேரம் ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் அருகில் இருந்த வாஷ் ரூம் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர ஜில்மில் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த முடிக்கற்றையை காதருகில் சொருகியவாறு மறுபுறம் திரும்ப சரியாய் அந்நொடி செல்போனில் உரையாடியவாறு அவளை திரும்பிப் பார்த்தவனின் கண்களுக்கு அவளின் முடியை சொருகிவிட்ட கரங்களே தெரிந்தது.
அதில் தனக்குள் சிரித்துக் கொண்டவன் அழைப்பை துண்டித்தவன் அவளின் முதுகுப் புறத்தையே வெறித்துப் பார்த்தான் சிறிது நேரம்...
ஜியாவுடன் செல்பி எடுக்க ஆரம்பித்த ஜில்மில் முதுகை ஏதோ துளைப்பது போலிருக்கவும் சட்டென திரும்பிப் பார்க்க அங்கு அவன் மறுபுறம் திரும்பி நடந்து கொண்டிருந்தான். அவனின் பிம்பம் மட்டும் தெளிவில்லாமல் அங்கிருந்த கண்ணாடியில் பதிந்திருந்தது... அதையே சற்று நேரம் உற்றுப் பார்த்திருந்த ஜில்மில்லின் கரத்தை பிடித்திழுத்து அவளை தன்னிலைக்கு கொண்டு வந்த ஜியா செல்பி எடுக்க ஆரம்பித்தாள்.
ஆனால் மனம் முழுக்க அந்த முகம் தெரியா அவனின் பிம்பத்தை எங்கோ பார்த்து போலிருக்க அதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தவளின் கவனம் தன் மேல் இல்லாததை உணர்ந்த ஜியா அவளின் கரத்தை பிடித்திளுழுத்து கீழே அமர செய்தவள் அவளின் காதுக்குள் “ஹூஊஊஊ” என கத்த அதில் திடுக்கிட்டு நெஞ்சம் அதிர தன் நிலைக்கு வந்த ஜில்மில் ஜியாவை பார்த்து முறைத்தவாறு அவளின் கன்னத்தில் வலிக்காம கிள்ளியவள் அவளுடன் சேர்ந்து செல்பி எடுக்க தொடங்கினாள்.
வாயை நாணிக்கோணி கையை மடக்கி என விதவிதமாக இருவரும் போஸ் கொடுத்துக் கொண்டு செல்பி எடுக்க அவர்களுக்கு முன்னால் நின்று பத்ரகாளி போல் ஜில்மில்லை முறைத்துக் கொண்டிருந்தாள் ஸ்ரே.
ஸ்ரேயை பார்த்தவுடன் தான் இங்கு ஷாப்பிங் வந்ததே நினைவு வர உதட்டை கடித்துக் கொண்டு தன் தலையை தட்டியவள் ‘மன்னித்து விடு’ என்பது போல் கண்களால் கெஞ்சினாள்.
அவளோ மலையிரங்காமல் போகவே தன் ஆஸ்தான ஆயுதத்தை கையில் எடுத்தாள் ஜில்மில்.
அந்த இடத்தில் பல பேர் நின்று கொண்டிருக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தோப்புகரணம் போடத் துவங்கினாள்.
ஜில்மில்லின் செயலைக் கண்டு பொங்கிச் சிரித்தனர் ஜியாவும் ஸ்ரேயும்.
“போதும் போதும்” என கத்திய ஸ்ரே அவளை எழுப்பி நிற்பாட்ட அவளோ சிரித்துக் கொண்டு ஸ்ரேயின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அதைப் பார்த்த ஜியா அவளது கையை பற்றி இழுத்து தன் கன்னத்தை தொட்டுக் காட்ட அவளை தூக்கி சுற்றியவள் ஜியாவின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள்.
அதற்குள் ஜியாவின் தாய் ஜெஸி அங்கு வரவும் அவருடன் சிறிது நேரம் தன்னை பற்றி கூறியவள் அவர்களிடமிருந்து விடைபெறும் போது அவளையும் அறியாமல் அவள் கண்களை கண்ணீர் சூழ்ந்து கொண்டது.
கடைசியாக ஜியாவை தூக்கி முத்தமிட்டவள் கண்களில் ஏக்கத்துடன் அவளை பார்த்துக் கொண்டு நகர ஜெஸி அவளது கை பற்றி தன் பக்கம் இழுத்தாள்.
ஜில்மில் கேள்வியாய் ஜெஸியை நோக்க அவளோ தன் வீட்டு முகவரியை கொடுத்தாள் அவளை கண்களில் வெளிச்சத்துடன் பார்த்துக் கொண்டே.
ஏன் அவர் தன்னை அப்படிப் பார்த்தார் என புரியாமல் குழம்பிப் போனாள் ஜில்மில்.
ஆனால் அது தெரிய வரும் போது தான் என்ன மாதிரி உணர்வோம் என்ன செய்வோம் எனத் தெரியாமல் ஜியாவை பிரிந்த கவலையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே ஜில்மில் உள்ளே நுழைய ஜியவோ அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு தன் தாயுடன் அங்கிருந்து சென்றாள்.
ஜில்மில்லின் மனதில் சற்று நேரத்தின் முன்பு பார்த்தவனின் எண்ணங்கள் மறைந்து ஜெஸி மற்றும் ஜியாவையே சுற்றிக் கொண்டே இருந்தது.
அவர்களை பற்றி எண்ணிக் கொண்டே எதேர்சியாக திரும்பியவள் தன் தோழிகள் தன்னை கவலை தேய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கவும் ஜியாவை பற்றிய கவலையை பின்னுக்கு தள்ளி விட்டு கலகலப்பாக அங்கு சுற்றித் திரிய துவங்கினாள்.
இன்னும் கொஞ்ச நாட்களில் கிறிஸ்துமஸ் வருவதால் தன் தோழிகள் அறியாமல் அவர்களுக்கு அவர்களது புகைப்படத்தை கொண்ட வைரத்தால் ஆன பென்டன் ஆர்டர் செய்தவள் இன்னும் சில பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு மற்றவர்கள் இருந்த பகுதிக்கு சென்றாள்.
அங்கு வின்னியோ ஸ்ரேயை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தாள். அதை வாங்கு இதை எடு என ஸ்ரேயின் பர்ஸை காலி பண்ணும் அளவுக்கு தனக்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்தவள் கடைசியாக தனக்கு பிடித்த சைனீஸ் நூடுல்சையும் வங்கி உண்டு முடித்த பின்னே அவளை நிம்மதியாக மூச்சு விட விட்டாள்.
இத்தனை நேரமாக வின்னியால் செம கான்டாக இருந்த ஸ்ரே, வின்னி அவளுக்கு பிடித்த சைனீஸ் நூடுல்சையும் வாங்கி உண்ட பின் தான் கொஞ்சமே கொஞ்சம் ஆசுவாசப் பட்டாள்.
பின்டோ, வெரோனிக்கா, ஆஷிரா மூவரும் தங்களுக்கு பிடித்த பொருட்களையும் சமையலுக்கு தேவையான காய்கறிகள், பழவகைகள் என முக்கியமான பொருட்களையும் வாங்கிக் கொள்ள அனைவரும் ஒரு நாள் முழுதும் அங்கேயே சுற்றிக் கொண்டு இரவு உணவையும் முடித்து விட்டே தங்களது அபார்ட்மென்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சுற்றித் திரிந்த களைப்பில் அனைவரும் தூக்கத்தை தழுவ ஜில்மில் மட்டும் கண்விழித்துக் கிடந்தாள்.
அவளை ஜியாவின் நினைவுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அதுவும் அவளது பெயர், அதைக் கேட்டதும் அவளுக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது.
அது மட்டுமல்லாது அன்று அவனையும் பார்த்தாலே. அவன் யாரென்று கூட அவளுக்கு தெரியாது தான். எப்படி இருப்பான் என்று கூட. ஆனால் அவன் தன்னை உற்று பார்த்துக் கொண்டிருந்தான் என்பது அவளுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். அதுவும் அவனின் நிழல் உருவம் தன்னுள்ளே பதிந்திருக்கின்றது என்பதும் அவளுக்கு புரிந்தது.
ஜியாவுடன் அவளைப் பற்றிக் கேட்டுக் கொண்டு செல்பி எடுக்கும் போது யாரோ தன்னை உற்று பார்ப்பது போல் மனது குறுகுறுக்க ‘யார் தன்னை பார்ப்பது’ என புருவத்தை சுருக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்க தூரத்தில் அவன் நின்று கொண்டிருந்தான்.
மறுபுறம் திரும்பி நின்று கொண்டு. அங்கிருந்த கண்ணாடி வழியால் தான் அவனையே அவள் பார்த்தாள். அதனால் அவனது முகம் தெளிவாக தெரியவில்லை அவளுக்கு.
சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை ஜியாவின் உலுக்கல் தான் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.
அதன் பின் நடந்தது அனைத்தும் கண் முன்னே படமாக ஓட நித்ராதேவி அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவளை தூக்கத்தில் ஆழ்த்தினாள்.
தன் வீட்டில் அந்த கடும் குளிரிலும் ஸ்விம்மிங் பூலில் நீந்திக் கொண்டிருந்தவனின் நினைவுகளிலும் அந்த முகம் தெரியா பெண்ணைப் பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
ஏனென்றே தெரியாமல் அவன் மனது அந்த முகம் தெரியா பெண்ணை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.