All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
கவி தில்லையின் "ரன் பிரின்சஸ் ரன் ..." - கதை திரி
ஹாய் என்ன கதையோட பேர மாத்திட்டேன் பாக்குறீங்களா, எஸ் "ரன் பிரின்சஸ் ரன் ..." இது வேற கதை, லாஜிக் பாக்காம கருத்து சொல்லாம படிக்க வேண்டிய கதை. ஒவ்வொரு எபி போடும் போதும் உங்களோட ஊக்கத்தை காட்டினா எனக்கு எழுதா தெம்பா இருக்கும். வாங்க கதைக்குள்ள போகலாம்.
ரன்- 1
அடர்ந்த காடு, எங்கும் கும்மிருட்டு. சற்று முன்பு பெய்த மழை, குளிர்ச்சியை தர தவளைகளும் பூச்சிகளும் மகிழ்ச்சியில் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. ஆந்தைகளின் அலறல், சற்று தொலைவில் ஊளையிட்டுக் கொண்டிருந்த ஓநாய், திரும்பிய பக்கமெல்லாம் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் உயிரை குடிக்க காத்திருக்கும் பேய் பிசாசாய் காட்சியளிக்க, அந்த இடமே கர்ண கொடூரமாய் காட்சியளித்தன.
இலைகளில் இருந்து சொட்டு சொட்டாய் சொட்டிய மழை நீரின் விடா முயற்சியால் மெல்ல விழிகளை திறந்து பார்த்தவள் எதிரே தெரிந்த உருவத்தை கண்டு "வீல்" என்று அலறினாள். அடுத்த நொடி சத்தம் வந்த திசையை நோக்கி சர்ர் சர்ர் என்று சீறி பாய்ந்து வந்து விழுந்தன அம்புகள்.
ஏற்கனவே இருட்டில் அருகில் தெரிந்த மரத்தை கண்டு பேய் என்று நினைத்து பயத்தில் அலறியவள், இந்த திடீர் தாக்குதலை கண்டு அதிர்ந்து போனாள். பயத்தில் நிலை தடுமாறி கீழே விழ போனவள் அப்பொழுதுதான் தான் ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் கிளை ஒன்றில் படுத்திருப்பது தெரிந்தது.
"இங்க எப்படி ...' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
"சத்தம் அந்த பக்கம் தான் கேட்டது ... நன்றாக தேடுங்கள் ..." என்ற குரல் சற்று தொலைவில் கேட்க, அதை தொடர்ந்து சரக் சரக் என்ற காலடி சத்தத்தை கேட்டதும் பயத்தில் மரக்கிளையை தன் இருக்கைகளை கொண்டு கீழே விழாதவாரு அணைத்துக் கொண்டாள்.
"யாரு இவனுங்க ... இது எந்த இடம், இங்க எப்படி வந்தேன் ..." என்று தனக்குள்ளே கேள்விகளை கேட்டபடி சுற்றியும் பார்வையை சுழலவிட்டவளின் முதுகு தண்டு அந்த இடத்தை கண்டு பயத்தில் சில்லிட்டது.
"தீப்பந்தத்தை நன்றாக உயர்த்தி பிடித்து தேடுங்கள் ..." என்ற குரலில் மெல்ல தலையை உயர்த்தி பார்த்தாள். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தீப்பந்தங்கள் தெரியவும்,
'கஞ்ச பிசினாரிங்களா ... டார்ச் லைட் வச்சுக்க கூட துப்பு இல்ல ... இதுல என்ன போட வேற அம்பு வில்ல தூக்கிட்டு வந்துட்டானுங்க ... யாரு இவன்க கிட்ட அசைன்மெண்ட் கொடுத்தது ...' என்று நினைத்தவள்,
'வாட் ... உன்ன தான் போட வந்தாங்கனு முடிவு பண்ணிட்டியா ... ஆமா நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ...' என்று மனசாட்சி கேள்வி கேட்கவும், கையில் தீப்பந்தத்துடன் பத்திற்கும் மேற்பட்ட ஆட்கள் அவள் இருக்கும் மரத்தின் அருகில் குவிந்தனர்.
"என்ன மாறா ... அப்பெண் மாயவித்தைகள் தெரிந்தவளோ ... நம் கண் முன்னே மறைந்துவிட்டாளே ..." என்று ஒருவன் அலுத்துக் கொள்ள,
"ஆமாம் எங்கு தேடியும் அப்பெண்ணை காணவில்லை ...' என்று மற்றொருவன் குரல் கொடுக்க,
"அஹ்ஹா ... சிறு பெண் ... இருட்டில் எங்கே சென்றிருக்க போகிறாள் ... பேசுவதை விட்டுவிட்டு சத்தம் வந்த இந்த இடத்தை நன்றாக தேடி பாருங்கள் ..." என்று அந்த கூட்டத்திற்கு தலைவன் போல காட்சியளித்த மாறன் அவர்களுக்கு உத்தரவிட்டான்.
மரக்கிளையில் படித்திருந்தபடி, கீழே நடப்பதை தான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இருக்கும் இடத்தை மரத்தின் மேல் ஏறி வந்து பார்த்தால் மட்டுமே மற்றவர்களின் கண்களுக்கு அவள் புலப்படுவாள், அந்தளவிற்கு படர்ந்து விரிந்திருந்த உயந்த கிளையில் ஒழிந்துக் கொண்டிருந்தாள்.
'யாரு இவனுங்க ... உண்மையிலயே பஞ்சத்துல அடிபட்ட கொலக்கார கும்பல் தான் போல ... பேண்ட் சட்ட கூட போட முடியாம, வெறும் வேட்டிய கால சுத்தி கட்டிட்டு வந்துருக்கானுங்க ... குளிர் நடுங்குது மே சட்ட கூட போடல ...' என்று அவர்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அருகில் உள்ள புதரில் இருந்து சலசலப்பு கேட்க தன் பார்வையை அங்கே நகர்த்தியவளின் விழிகளில், நிதான நடையுடன், தன் பாதையின் குறுக்கே வளர்ந்திருந்த சிறு செடிகளை கையில் உள்ள வாளைக் கொண்டு வெட்டியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவனை கண்டதும் அதுவரை சலசலத்துக் கொண்டிருந்தவர்கள் அமைதியாகி உடலை குறுக்கி தலை வணங்கி நின்றனர்.
"மன்னியுங்கள் இளவரசே ... எமக்கு கொடுத்த பணியை முடிக்க முடியாமல் தோல்வியை தழுவி நிற்கும் இந்த பாவியை தண்டியுங்கள் இளவரசே ..." என்று தன் இடையில் சொருகியிருந்த வாளை இருக்கைகளில் ஏந்தியபடி இளவரசன் என்று அழைக்கப்பட்டவன் முன் மண்டியிட்டான் மாறன்.
அவர்களை நெருங்கியவன் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த பெரிய மரத்தில் சாய்ந்து நின்று கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி நிதானமாக தன் முன்னே மண்டியிட்டு வணங்கிய மாறனை தன் கூர் விழிகளால் அளந்துக் கொண்டிருந்தான்.
அந்த இடமே சற்று நேரத்தில் அமைதியாகி போக, காட்டு பூச்சிகளின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
"யாருடா அந்த அப்பாடக்கர் இளவரசன் ..." என்றவாறே
தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தாள். அதே நொடி அவனும் தலை நிமிர்த்தி பார்க்க, அவளின் இதயம் பயத்தில் துடிப்பதை நிறுத்தியிருந்தது. பதட்டத்துடன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டவள், அவசரமாக தன் மார்பை நீவிவிட்டவாறே,
"வெரி டேன்ஜரஸ் பெல்லோவ் ... கொஞ்ச நேரத்துல மரண பயத்த காட்டிட்டான் ..." என்று முணுமுணுத்தவள் அவனை ஆராய தொடங்கினாள்.
மற்றவர்கள் அனைவரும் சாதாரண வெள்ளை வேஷ்டியை காலில் சுற்றி கட்டியிருக்க, இளவரசன் என்று அழைக்கப்பட்டவன் மட்டும் பளபளக்கும் சிகப்பு நிற வேஷ்டியில் தோலை தழுவிய பட்டு வஸ்திரத்துடன் கம்பீரமாய் நின்றிருந்தான்.
அனைவரின் தலைமுடியும் விரித்து விட்டிருக்க, இவன் மட்டும் சிறு தங்கநிற கிளிப் போன்ற ஒன்றில் முடி கலையாதவாறு சிண்டு போட்டிருந்தான்.
"ஓஹ் ... இந்த சிண்டுக்காரன்தான் இளவரசனா ... சரியா தெரியாத போதே செம்ம கிக்கு கொடுக்குறானே ... நேர்ல பார்த்தா எப்படியிருக்கும் ..." என்று சூழ்நிலையை மறந்து நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
'ம்ம்ம் ... உன் தல போயிருக்கும் ...' என்று மனசாட்சி உள்ளிருந்து காரி துப்ப, அது சொன்னது உண்மைதான் என்பது போல பேசிக் கொண்டிருந்தான் அந்த இளவரசன்.
"உம் தலையை வெட்டி எடுத்துவிட்டால் நான் நினைத்த காரியம் நிறைவேறிவிடுமா ... ஹ்ம்க் ... சிறு பெண் ... உங்கள் அனைவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு மறைந்திருக்கின்றாள் அவளை வெறிக் கொண்டு தேடுவதை விட்டுவிட்டு மன்னிப்பா கேட்கின்றாய். மன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டு கொடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கின்ற வழியை பார் ..." என்று அதிகாரமாய் உத்தரவிட்டான்.
'படுபாவி பய அவன்களே தேட முடியாம சோர்ந்து போய் இருக்கானுங்க, இவன் வெறி ஏத்திவிடுறான் பாரு சிண்டுக்கார வில்லன் … ' என்று மனதில் அந்த இளவரசனை கருவிக் கொண்டிருக்க,
"என்ன ஆனாலும் பொழுது விடிவதற்குள் அவள் உயிர் பூவுலகத்தை விட்டு மேலோகம் செல்ல வேண்டும் ... இது என் உத்தரவு ..." என்று மீண்டும் அவன் குரல் அவள் காதுகளில் கருண கொடூரமாய் ஒலித்தது.
"உத்தரவு இளவரசே ..." என்று அனைவரும் ஒன்று போல கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து கலைய முற்பட,
"உயிரை எடுத்தால் மட்டும் போதாது ... உடலை சிறு சிறு துண்டுகளாய் வெட்டி காட்டு விலங்குகளுக்கு உணவிடுங்கள் ..." என்று கண்கள் வெறியில் சிவக்க மீண்டும் அதிகாரமாய் உத்தரவிட்டான்.
"ஆகட்டும் இளவரசே ..." என்று அவன் கட்டளையை ஏற்றுக் கொண்ட அனைவரும் வணங்கி விடைபெற்று சென்றனர்.
"அட சண்டாள கொலைகார பாவி ... கொலகாரங்கல்லையே ரொம்ப கொடூரமான கொலைகாரனா இருக்கியேடா ... இளவரசானம் இளவரசன் ... பெரிய சோழ நாட்டு இளவரசன் நினைப்பு ... இருடா கீழ இறங்கி வந்து உன் மண்டையை ஒடைச்சு கபாலத்தை வெளியே எடுக்கல, என் பேரு என் பேரு ..." என்று வாய்விட்டு சபதம் எடுத்தவள் திகைத்து போய் அசைவற்று அமைதியாகிவிட்டாள்.
'அய்யோ என் பேரு என்ன ... ஞாபகத்துல வரலையே ... நா யாரு ... இங்க எப்படி வந்தேன் ... அந்த சிண்டுக்காரன் யாரு ... என்ன எதுக்கு தொறத்துறாங்க ...' என்று தனக்குள் கேள்விகளை கேட்டபடி குழம்பிப் போனவள் தலையை வேகமா தட்டிக் கொண்டாள்.
"நா யாரு ... நா யாரு ... என் பேரு என்ன ..." என்று கண்ணை மூடி தன்னை பற்றி ஞாபகத்திற்குள் கொண்டுவர முயன்றவளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
'ஓஹ் காட் ... இது என்ன கொடுமையான விளையாட்டு ... ஒன்னும் இங்க என்ன நடக்குதுன்னு புரிய வச்சிருக்கணும் இல்ல நா யாருனு ஞாபகத்த கொடுத்துருக்கணும் எதுவும் இல்லாம இது என்ன அந்த சிண்டுக்கார இளவரசனோட ரொம்ப கொடுமைக்காரனா இருக்க ...' என்றவளுக்கு உண்மையில் கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைதான். இல்லை இல்லை மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலைதான்.
சற்று நேரம் கண்ணை மூடி என்ன செய்வது என்று நிதானமாக யோசித்தவளின் மனம் சற்று சமநிலைக்கு வந்திருக்க, மெல்ல கண்ணைத் திறந்து பார்த்து மூச்சை இழுத்து விட்டாள்.
"ஓகே ... இங்க நடக்குறத வச்சு பாத்தா ... கண்டிப்பா இது கனவாதான் இருக்கும் ..." என்று சொல்லிக் கொண்டவள், தன் கையை அழுத்தமாக கிள்ளி பார்க்க, உயிர் வலியில் ஆஆ என்று சத்தம் போட போனவள் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க பெரிதும் போராடினாள்.
"அப்போ இது கனவில்லையா ..." என்று என்னும் போதே பயத்தில் வேர்வைகள் முத்து முத்தாய் அவள் முகத்தில் பூத்தன.
"அப்போ கனவு இல்லனா, வேற என்னவா இருக்கும் ... நா தூங்கிட்டு இருக்கும் போது எனிமிஸ் என்ன கடத்திட்டு போய் காட்டுவாசிங்க இருக்க இடத்துல விட்டுட்டாங்களா ..."
"இல்ல இல்ல கண்டிப்பா இது ஒரு ரியாலிட்டி ஷோவா தான் இருக்கனும், கேம்ல என்டர் ஆனதுல இருந்து நம்மள மறந்து எப்படி சூழ்நிலையை சமாளிக்கிறோம் இதான் டாஸ்கா இருக்கனும் ... எதுவா இருந்தா என்ன ப்ரைஸ் மணிகுத்தானே இவ்வளவும், கண்டிப்பா இவன்க கைல மாட்டமா வெளியே வந்து ஜெயிச்சு காட்டுறேன் ... அடேய் போலி பிரின்ஸ் இருடா என்னையா துண்டு துண்டா வெட்டி அணிமல்ஸ்க்கு கொடுக்க சொன்ன ... ஜெயிச்சுட்டு வந்து உன் சிண்ட புடிச்சு ஆட்டி நாக்க புடுங்குற போல நாலு கேள்வி கேட்கல ... நா நா ..." என்று கோபத்தில் மூக்கு விடைக்க சபதம் எடுத்தவளுக்கு தன் நிலை கண்டு அழுகை வந்தது.
கன்னத்தில் வழிந்த கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டே,
"எதுக்கு அழுகணும், அழுதா மட்டும் எல்லாம் சரியாகிடுமா ... கேம்ஸ் ரூல்ஸ் தெரிஞ்சுதானே உள்ள வந்துருக்கேன் ... தைரியமா எல்லாத்தையும் பேஸ் பண்ணனும் ..." என்று உறுதியெடுத்தவள்,
"ம்ப்ச் இவ்வளவு ஹய்ட்ல இருக்க மரத்துல இருந்து எப்படி கீழ இறங்குறது ... ஏத்தி விட்டவங்களே இறக்கி விடுவாங்களா ... ஏதாவது லைப் லைன் இருக்கா ..." என்று தான் இருக்கும் இடத்தை நன்றாக சுற்றி பார்த்தாள். கண்ணுக்கு எதுவும் புலப்படாததால் பெருமூச்சை விட்டவள்,
"நாமளே தான் இறங்கணும் போல ..." என்று தனக்குள் பதிலளித்துக் கொண்டவள் மீண்டும் மரக்கிளையில் பத்திரமாக படுத்தவாறே,
"இப்போ கீழ இறங்கினாலும் ஒரு ப்ரோஜனும் இல்ல ... ஒரே இருட்டா இருக்கு அந்த சிண்டு கேங் போயிருந்தாலும், கொடூரமான அணிமல்ஸ் இருக்க வாய்ப்பிருக்கு ... கொஞ்சம் வானம் தெரிஞ்சதும் அவங்க கண்ணுல படமா தப்பி ஓடிடனும் ... அதுவரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் ..." என்று தீர்மானித்து கண்ணை மூடி தூங்க முயன்றாள்.
கண்ணை மூடியும் தூங்க முடியாமல் பயங்கரமான கனவு வந்து பயம் காட்ட, திடுக்கிட்டு போய் கண் விழித்தவளின் முன் படம் எடுத்தவாறே தன்னை கொத்த காத்திருந்த கருநாகத்தை கண்டு உயிர் பயத்தில் "அய்யோ பாம்பு ..." என்று அலறிக் கொண்டே மரத்தில் இருந்து கீழே விழுந்தாள்.
"போச்சு போ இன்னும் பியூ செகண்ட்ஸ்ல மண்ட சிதறி ரத்த வெள்ளத்துல கிடக்க போறேன் ... " என்று நினைத்துக் கொண்டே கீழே விழுந்தவளை இரு வலிய கரம் தாங்கிக் கொண்டன. மண்டை சிதறாமல் காப்பாற்றப்பட்டதை உணர்ந்ததும் சந்தோஷத்தில் தன்னை தாங்கியவரின் கழுத்தை இறுக்கமா கட்டிக் கொண்டவள் கண்ணை திறந்து யார் அது என்று பார்க்க முயல, முகத்தை பார்க்க முடியாதளவிற்கு அந்த இடமே இருட்டாக இருந்தது.
கருமேகம் சூழ்ந்த அடர்ந்த காடு கடுகளவிற்கு கூட வெளிச்சம் இல்லாமல் கும்மிருட்டாக இருந்த போதும், அவன் தலையில் தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்ததை கண்டு அது யாரு என்று புரிந்ததும், உடல் சில்லிட்டு போய் இதயம் பந்தய குதிரை வேகத்திற்கு துடித்ததை அவனும் அறிந்துக் கொண்டான்.
அந்த இருட்டிலும் அவன் கண்களில் தெரிந்த பளபளப்பை கண்டு நடுங்கிக் போனவள் பயத்தை காட்டிக் கொள்ளாமல் மெல்ல அவன் கைகளிலிருந்து இறங்கினாள். திடீரென்று
"வேடுவனின் வலையிலிருந்து தப்பியோடிய புள்ளி மான், சிங்கத்திடம் சிக்கிக் கொண்டதே ... அந்தோ பரிதாபம் ..." என்று போலியாக உச்சு கொட்டி வருந்தினான் அந்த இளவரசன். அது வரை பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவள், அவன் நக்கலில் சிலிர்த்து நிமிர்ந்தவள்,
"சும்மா லூசு போல சிங்கம் பூனைனு உளறிட்டு இருக்காதீங்க ப்ரோ ... இவ்வளவு பயங்கரமான காட்டுல விட்டுருக்காங்கன்னா ப்ரைஸ் அமௌண்ட் ஜாஸ்தியாதான் இருக்கும் ... உனக்கு எவ்வளவு கிடைக்க போகுது சொல்லு ... பேசமா நமக்குள்ள ஒரு டீலிங் போட்டுக்கலாமா ..." என்று தன்னிடம் டீலிங் பேசியவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
"இப்போ என்ன சொல்லிட்டேன்னு என்ன லுக்கு விட்டுட்டு இருக்க ... ம்ப்ச் கொஞ்சம் கிட்டக்க வா ப்ரோ ... எங்க கேமரா வச்சுருக்கான் தெரில ..." என்றவளுக்கு பதில் கூறாமல் பார்த்திருந்தவனை கண்டு சலிப்பாக தலையாட்டிக் கொண்டவள்,
"ச்ச ... கேம்கு வரும் போது யாரு முகத்துல முழிச்சுட்டு வந்தேன் தெரில, எல்லாம் சொதப்பல் இருக்கு ..." என்று அலுத்துக் கொண்டே அவன் மேனி உரச நெருங்கி நின்றவள்,
"கொஞ்சம் காத மவுத் கிட்ட கொண்டு வா ப்ரோ, ஓவர் ஹெயிட்டா இருக்க ..." என்றவளுக்கு பதில் கூறாமல் புருவங்கள் இடுங்க பார்த்துக் கொண்டிருந்தவனின் சிண்டை திடீரென்று பிடித்து இழுத்து தன் உயரத்திற்கு கொண்டு வந்து,
"இங்கபாரு ப்ரோ ... ப்ரைஸ் மணிய நாம ஷேர் பண்ணிக்கலாம் ... வர்றதுல உனக்கு டுவென்டி எனக்கு எயிட்டி ... என்ன சொல்ற ..." அவன் காதருகில் கிசுகிசுத்தவளின் நாசியை தாக்கியது அவன் மேனியிலிருந்து வந்த நல்ல நறுமணம்.
'அய்யோ வாசனையே ஆள கொல்லுதே ...' என்று சற்று தடுமாறிப் போனவள், தொண்டையை கனைத்து தன்னை நிதானித்துக் கொண்டவள்,
"ம்ப்ச் என்ன ப்ரோ மரமண்ட போல நின்னுகிட்டு இருக்க ... டைம் இல்ல சொல்லிட்டேன் ... உன்கிட்ட இருந்து என்னால ஈஸியா தப்பிச்சு போக முடியும், சரி போனா போகுதேன்னு பாவம் பாத்தா என்னையே ஆழம் பாக்குற ...' என்று அலுத்துக் கொண்டவள், அவன் வாய் திறக்க போவதில்லை என்று தெரிந்ததும்,
"ஓகே எனக்கு செவென்ட்டி உனக்கு தேர்ட்டி இந்த டீலிங் ஓகேவா ... ம்ப்ச் சரி உனக்கும் வேணா எனக்கும் வேணா ஆளுக்கு பிப்டி பிப்டி ஓகே ..." என்று உதட்டில் நிறைந்த புன்னகையுடன் கட்டை விரலை தூக்கி காட்டியவளை கண்கள் சிவக்க பார்த்திருந்தவனை கண்டு அரண்டு போனவள், எச்சில் கூடி விழுங்கியபடி,
"சரி இதான் லாஸ்ட் டீல் உனக்கு எயிட்டி எனக்கு டுவெண்ட்டி எப்படி ..." என்றவளுக்கு கோப பார்வையே பதிலாக கிடைக்க,
"ஊப்ஸ் சரி மனச திடப்படுத்துகிட்டு சொல்றேன், எனக்கு அந்த அமௌண்ட் வேணா எல்லாத்தையும் நீயே வச்சுக்க ப்ரோ ... என்ன மட்டும் போக விடேன் ... ப்ளீஸ் ..." என்று கெஞ்சியவளை உக்கிரத்துடன் பார்த்தபடி தன் இடுப்பில் சொருகியிருந்த வாளை கையில் எடுத்தவனின் முகத்தில் திடீரென்று ஓங்கி குத்தி, அவனை பிடித்து கீழே தள்ளிவிட, எதிர்பாரத தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த இளவரசனின் காலில் ஓங்கி ஒரு உதைவிட்டாள்.
"பிராடு பிரின்ஸ் ... போனா போகுதுனு டீலிங் பேசினா ஓவரா போற ... இப்பவும் நீ என்ன கண்டு புடிக்கலடா நானா உன் கைல வந்து விழுந்தேன் இல்லனா இந்த ஜென்மத்துல என்ன உன்னால புடிக்க முடியாது ... முடிஞ்சா புடிச்சு பாருடா டுபுக்ஸ் ..." என்றவள் சிட்டாய் பறந்து ஓடினாள்.
வேகமாக ஓடியவளின் காதுகளில் வினோதமான விசில் சத்தம் கேட்கவும், "அந்த சிண்டுக்கார இளவரசன் ஆளுங்கள கூப்பிட்டுட்டான் போல ... அவன் கைல மாட்டாம ஓடிடுடி ..." என்று தன் பெயர் தெரியாமல் முழித்தவள், பின்
"பேரா முக்கியம் உசுருதான் முக்கியம் ஓடு கைப்புள்ள ஓடு ..." என்றவளை முந்திக் கொண்டு சறுக் சறுக் என்று அம்புகள் சீறி பாய உயிர் பயத்தில் கண்மண் தெரியாமல் ஓடினாள்.
காட்டு பாதையில் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக உருண்டு பிரண்டு மென்மையான பாதத்தை ரத்தம் வருமளவிற்கு கிழித்து கொண்டு உயிர் வலி வலித்தாலும் பொறுத்துக் கொண்டு ஓடியவள் இறுதியாக வந்து சேர்ந்த இடம் காட்டை பிளந்துக் கொண்டு பாய்ந்து சென்ற அருவியின் அருகில்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவளுக்கு அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலை. நீண்ட நேரமாய் ஓடியதால் உடம்பில் உள்ள சத்துக்கள் எல்லாம் வடிந்துவிட்ட உணர்வு. உடலில் ஏற்பட்ட காயங்கள் வேறு வலியை கொடுக்க அந்த நொடி நரகமாய் தோன்றியது.
தன்னை விரட்டிக் கொண்டு வந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்துவிட, இவ்வளவு நேரமும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாக போகின்றதே என்ற நினைப்பில் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றன.
இன்னும் இருட்டு விலகாததால் இளவரசன் என்று அழைக்கப்பட்டவனின் முகம் தெரியவில்லை என்றாலும் அவன் இறுகி போய் நின்றிருப்பது மட்டும் அவன் உடல் மொழியை கொண்டு அறிந்துக் கொண்டாள்.
தன் கண் முன்னிருக்கும் இரையை வெறியோடு வேட்டையாட காத்திருக்கும் ஓநாய்களை போல் தனக்காக காத்திருந்தவர்களை கண்டவளுக்கு அவர்களின் கைகளில் தன் தோல்வியை சமர்ப்பிக்க விரும்பாதவள், சில அடிகள் தள்ளி நின்றிருந்த இளவரசனை நிதானமாக பார்த்தபடி அடி மேல் அடி வைத்து பின்னல் நடந்தபடி விளிம்பிற்கு சென்றவள், கண்ணிமைக்கும் நொடியில்
"முடிஞ்சா புடிச்சு பாருடா சிண்டு ..." என்று கத்தியவாறே அருவியில் குதித்திருந்தாள். தன்னை எப்படியாவது ரியாலிட்டி ஷோ டீம் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில் புன்னகையுடன் விழுந்தவளின் உடலை துளைத்தது, மேலிருந்து இளவரசன் ஏவிவிட்ட அம்பு.
அதுவரை ரியாலிட்டி ஷோ என்று நம்பிக் கொண்டிருந்தவளுக்கு, அம்பு துளைத்தது உயிர் வலியை கொடுக்க, இவ்வளவு வலியை தன் வாழ் நாளில் உணராதவளின் உடல் துடி துடித்து தண்ணீருக்குள் விழு, தன்னையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தவனை சிவப்பேறிய விழிகளால் பருகியபடி மெல்ல மெல்ல மயக்கத்திற்கு சென்றவளின் நினைவுகளில்,
"மலர் மலர் ..." என்று குரல் எதிரொலிக்கவும்,
"விஷ்வா ..." என்று முணுமுணுத்தவள் முழுதாக நீரில் மூழ்கிப் போனாள்.
Currently viewing this topic 2 guests.
Our newest member: KASTHURI Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed