ஶ்ரீகலா
Administrator
உயிர் : 36
சிம்மஹாத்ரி சத்யநாராயணா வருகையை உணர்ந்து உள்ளே இருந்து ஓடி வந்தாள் ஆதிசக்தீஸ்வரி. எப்போதுமே அவனது வருகை அவளை அத்தனை சந்தோசப்படுத்தும். விட்டால் இருபத்திநான்கு மணி நேரமும் அவன் உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்குக் காதல் அவளை வாட்டி வதைத்தது.
"சத்யா, இன்னைக்குப் புதுசா ஓரு டிபன் செஞ்சேன். சாப்பிட்டு பார்த்து சொல்லு." அவளது சமையல் பரிசோதனைக்கு வசமாக மாட்டும் எலி அவன் தான்.
சிம்மஹாத்ரி சத்யநாராயணாவோ பதில் சொல்லாது விழிகளை மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் இருந்த களைப்பு அவனது வேலைப்பளுவை சொல்லாது சொல்லியது. அவள் ஒன்றும் பேசாது அவன் மடியில் அமர்ந்து அவனது கழுத்தினைக் கட்டி கொள்ள... அவளது ஸ்பரிசத்தில் விழி திறந்தவன் அவள் கீழே விழாதவாறு தனது கரங்களைக் கொண்டு அவளது இடையை வளைத்துப் பிடித்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"ரொம்ப வேலையா சத்யா?" அவள் அவனது மீசையை முறுக்கிவிட்டபடி கேட்டாள். இது அவளது அன்றாடப் பழக்கம். அவளுக்கு முறுக்கு மீசையுடன் இருக்கும் சத்யாவை தான் நிரம்பப் பிடித்திருந்தது.
"ம்..." என்றவன் அவளது விருப்பத்திற்கு ஏற்ப அவளது கரங்களில் தன்னை ஒப்பு கொடுத்தபடி அமர்ந்திருந்தான். அவள் நெற்றியில் முத்தமிட்டு அவனை ஆறுதல் படுத்த... அவள் கொடுத்த முத்த சுகத்தில் அவன் விழி மூடி அமர்ந்திருந்தான். அவள் மேலும் மேலும் அவனை முத்தமிட்டு அவனை ஆசுவாசப்படுத்தினாள். அவனும் சுகமாய் அவள் கொடுக்கும் முத்தங்களை வாங்கியபடி அமர்ந்து இருந்தான். ஆனாலும் அவனது மௌனம் கலையவில்லை.
"என்ன யோசனை சத்யா? இன்னைக்கு உனக்கு என்னவானது?" அவளுக்குத் தான் அமைதியாக இருந்தால் ஆகாதே. அதுவும் அவனது அமைதி அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.
"ஜெய், ரச்சிதா கல்யாணம் வருதுல்ல..." என்று அவன் ஆரம்பிக்க...
"ஆமா, அதுக்கு என்ன?"
"கல்யாண வேலைகள் நிறைய இருக்கு. ஜெய் நல்ல நாளிலேயே ஒரு வேலையும் செய்ய மாட்டான். இப்போ மாப்பிள்ளை வேறு... சொல்லவும் வேணுமா? உதய் சின்னப் பையன். அவனுக்கு அத்தனை பொறுப்பா எதையும் செய்யத் தெரியாது. இங்கே எடுத்துச் செய்ய ஆள் இல்லை. அங்கே மாமா மட்டும் தான். அவர் தான் தனியே கிடந்து கஷ்டப்படுறாரு." அவன் உண்மை நிலையை அவளுக்கு விளக்கி சொன்னான்.
"அதுக்கு என்ன சத்யா? நீ போய் உதவி பண்ணு." என்று இயல்பாகச் சொன்னவளை கண்ணிமைக்காது பார்த்தவன்,
"உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே." என்று கேட்க...
"எனக்கு என்ன பிரச்சினை வந்துற போகுது? நீ உன் மாமாவுக்கு உதவி பண்ற. இதுக்கு நான் என்ன சொல்ல போறேன்?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.
"நான் ரச்சிதாவை காதலிச்சவன்..." அவன் தயக்கத்துடன் சொல்லியபடி அவளது முகத்தைப் பார்த்தான்.
"மக்கு சத்யா..." புன்னகையோடு அவனது நெற்றியில் முட்டியவள், "அது இறந்த காலம்டா." என்று சொல்ல... முகத்தில் எந்தவொரு சுணக்கம் இல்லாது, வாட்டம் இல்லாது மலர்ச்சியுடன் சொன்னவளை கண்டு அவனது முகமும் மலர்ந்தது.
"நான் உன் அக்காவை வருங்கால மனைவியா நினைச்சு நேசிச்சவன்டி." அவள் மனதை முழுவதுமாய்த் தெரிந்து கொள்ள வேண்டி அவன் அவளிடம் வம்பிழுத்தான்.
"அது முடிந்து போன கதை சத்யா." அவள் முகம் மாறாது சொல்ல...
"அப்போ தொடர்கதை யாருடி?" அவன் கேலியாய் கேட்க...
"வேறு யார்? நான் தான்... நான் மட்டும் தான்." அவள் பெருமையாகத் தன்னைத் தானே சொல்லி கொள்ள... தன் மீதான அவளது நம்பிக்கை கண்டு அவனது மனம் நெகிழ்ந்தது. அவன் இமைக்க மறந்து தன்னவளை பார்த்திருந்தான்.
"அது என்னடா எப்போ பார்த்தாலும் குறுகுறுன்னு பார்க்கிறது?" அவள் வெட்கத்துடன் அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள... அவன் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான்.
"என் மீது நம்பிக்கை வந்திருச்சா?"
"ம்... அவங்க எல்லாம் உன்னை விட்டு போனப்போ... நீ அப்படியே அவங்க விருப்பத்துக்கு அவங்களை விட்டுட்ட தானே. பின்னாடியே போய் அவங்களைத் தூக்கலையே. ஆனா நீ என்னை மட்டும் தான் தொடர்ந்து வந்த. நீ எனக்காக மட்டும் தான் என்னைத் தேடி வந்த. நீ என்னை மட்டும் தான் கட்டம் கட்டி தூக்கின. அப்போ நான் உனக்கு ஸ்பெசல் தானே." அவளது புரிதல் கண்டு அவனது விழிகள் கலங்கி தான் போனது.
அவள் கூறுவது அத்தனையும் சத்தியம். காதலித்ததாய், நேசித்ததாய் சொன்ன எந்தப் பெண்ணின் பின்னாடியும் சென்று அவன் காதலை யாசிக்கவில்லை. அன்பிற்காக அவன் அவர்களிடம் கெஞ்சி நிற்கவில்லை. அவர்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்றதும் அவனுக்கு வலி இருந்த போதும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து விலகி தான் போனான். தன்னை நேசிக்காத பெண்களுக்கும் அவன் மதிப்பு தான் கொடுத்தான். ஏனெனில் அவன் மேன்மையான குணம் கொண்ட அன்னைக்குப் பிறந்தவன், அன்னையின் துயரத்தை அறிந்தவன்... அப்படிப்பட்ட அவன் எந்தப் பெண்ணையும் துன்புறுத்த மாட்டான். அதனால் தான் அவன் தனது வாழ்வில் வந்த இரு பெண்களையும் அவர்களது விருப்பத்திற்கு விட்டு விட்டான். அன்பை, காதலை யாசிக்கவோ, வலுக்கட்டாயமாக வரவழைக்கவோ முடியாது. ஏனெனில் அந்தப் பெண்கள் மனதில் அவன் இல்லையே.
அவனை உள்ளத்திலும், உடலிலும் சுமந்த ஒரே பெண் ஆதிசக்தீஸ்வரி. அவளது அன்பை, காதலை அவனால் எப்படி விட்டு கொடுக்க முடியும்? அதனால் தான் அவன் அவளைக் கட்டம் கட்டி தூக்கியது. இதோ இப்போதும் அவன் அவளைக் கங்காரு போன்று கூடவே வைத்துக் கொண்டு சுற்றுகின்றான். தன்னைப் புரிந்து வைத்திருந்தவளை கண்டு அவனுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.
"சத்யா, நான் சொன்னது சரி தானே." என்று கேள்வி கேட்டவளுக்குப் பதில் சொல்லாது அவன் அவளது கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவள் வாஞ்சையுடன் அவனது தலையைக் கோதி கொடுத்தாள்.
அப்போது இன்டர்காம் அழைத்து அவர்களது மோனநிலையைக் கலைத்தது. எடுத்து பேசியவன் உடனே பரபரப்பானான்.
"மாமாவும், அத்தையும் வந்திருக்காங்க." என்றதும் அவள் அவனது மடியில் இருந்து எழுந்து கொண்டாள்.
சிம்மஹாத்ரி சத்யநாராயணா வாயிலுக்குச் செல்ல... ஆதிசக்தீஸ்வரியும் அவனைப் பின்தொடர்ந்தாள். அங்கு வாயிலில் நின்றிருந்த வேங்கடபதி தேவா, கங்காதேவி இருவரையும் கண்டு அவன்,
"வாங்க மாமா, வாங்க அத்தை." என்று முகம் மலர வரவேற்க...
"வாங்க..." ஆதிசக்தீஸ்வரி சிறு தயக்கத்துடன் அவர்களை வரவேற்றாள்.
"நல்லாயிருக்கியாம்மா?" கங்காதேவி எந்தவித தயக்கமும் இல்லாது அவளிடம் நலன் விசாரித்தார். அதைக் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு இதமாக இருந்தது.
"நல்லா இருக்கேன்ம்மா." என்றவளின் கரத்தினை அன்போடு பிடித்து அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டார் கங்காதேவி. ரச்சிதா போன்று அவரில்லை என்பதை ஆதிசக்தீஸ்வரியும் புரிந்து கொண்டாள்.
பெரியவர்களை உள்ளே அமர வைத்து விட்டு ஆதிசக்தீஸ்வரி வீட்டாளாய் அவர்களுக்குக் காபி, டிபன் எடுத்து வர சென்று விட்டாள்.
"மாமா, கல்யாண வேலைகள் எல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு? நான் ஏதேனும் உதவி செய்யணுமா?" என்று அவன் மாமாவிடம் கேட்க...
"நான் சொன்னேன்ல." வேங்கடபதி தேவா மனைவியிடம் பெருமையாகச் சொன்னார். கங்காதேவியும் அதைப் புரிந்தார் போன்று புன்னகை புரிந்தார்.
அதற்குள் ஆதிசக்தீஸ்வரி காபி எடுத்துக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள். காபி பருகி முடிக்கும் வரை பொது விசயங்களைப் பேசி கொண்டிருந்தனர். அதன் பிறகு வேங்கடபதி தேவா, கங்காதேவி இருவரும் பெரிய வெள்ளி தட்டில் வெள்ளி குங்குமச்சிமிழ், பூ, பழங்கள் வைத்து அதோடு திருமண அழைப்பிதழையும் வைத்து இருவரிடமும் நீட்டினர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா வாங்குவதற்காகத் தனது கரங்களை நீட்ட... ஆதிசக்தீஸ்வரி கைகளை நீட்டாது அமைதியாக நின்றாள். அவனுக்குத் தானே அவர்கள் உறவினன். அதனால் அவள் அப்படியே நின்றாள்.
"நீயும் சத்யா கூடச் சேர்ந்து நின்னு தம்பதி சமேதரா வாங்கிக்கோம்மா." கங்காதேவி அவளை அழைக்க... 'தம்பதி' என்ற வார்த்தையில் இளையவர்களின் மனமும், முகமும் சேர்ந்தே மலர்ந்தது. இருவரும் மலர்ச்சியுடன் திருமண அழைப்பிதழை வாங்கிக் கொண்டனர்.
கங்காதேவி தட்டில் இருந்த பூவை எடுத்து ஆதிசக்தீஸ்வரிக்கு வைத்து விட எண்ணி அவளை அருகில் அழைத்தார். அவளோ தனது குட்டை முடியை பரிதாபமாகப் பார்த்தாள்.
"கொஞ்சமா வச்சுக்கோ..." என்றவர் அவளது தலையில் பூவை வைத்து விட்டார். பிறகு குங்கும சிமிழை திறந்து அவளது வகிட்டிலும், நெற்றியும் குங்குமத்தை வைத்து விட்டார். அதைக் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் மனம் நிறைந்து தான் போனது. இருவரும் இணைந்து பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
"சத்யா, அன்று நான் பேசியதற்காக உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்." வேங்கடபதி தேவா அன்று பேசியதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்டார்.
"ஐயோ, என்ன மாமா... பெரியவங்க நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு..." அவன் பதறித்தான் போனான்.
"தவறின் முன் சின்னவங்க என்ன? பெரியவங்க என்ன? தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தான் முறை." என்றவரை கண்டு அவன் அமைதியாக நின்றிருந்தான்.
"நீ என்னிடம் ஃபோனில் பேசிய போதே நான் உணர்ந்து கொண்டேன்... இந்தச் சின்னப் பெண் உனக்கு எவ்வளவு முக்கியம் என்று... நிச்சயம் நீ தவறான வழியில் போக மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சத்யா." அவர் மனம் நெகிழ சொன்னார்.
"சத்யா, நீ தான் கல்யாண வேலைகள் எல்லாம் பார்க்கணும். மாமாவுக்கு உதவியா இருக்கணும்." கங்காதேவி சிரித்தபடி சொல்ல...
"இதை நீங்க சொல்லவும் வேண்டுமா அத்தை. நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க. எல்லா வேலைகளையும் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தால் போதுமானது." அவன் உற்சாகத்துடன் சொன்னான்.
பெரியவர்கள் இருவரும் விடைபெற்று சென்றனர். இளையவர்கள் இருவரும் மனம் நெகிழ நின்றிருந்தனர். பெரியவர்கள் இருவரும் அவர்களை மனதால் கணவன், மனைவியாக உணர செய்திருந்தனர். அந்த நெகிழ்ச்சியில் இருவரும் மற்றவர் மீது அன்பில் உருகி கொண்டு இருந்தனர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா மனம் நெகிழ தன்னவளை திரும்பி பார்த்தான். ஆதிசக்தீஸ்வரி நெற்றியில் குங்குமம், பூவோடு இருந்த காட்சியைத் திடுமெனக் கண்டதும் அவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. அவன் இதற்கு முன்னர் அவளை இப்படிக் கண்டது இல்லையே. அவன் வாய்விட்டு சிரிக்க... அவளோ புரியாது விழித்தாள்.