All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na உயிரே Nuvve!!!’ - இரண்டாம் பாகம் கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
"அங்கிள்..." இருவரும் பேசி கொண்டிருக்கும் போது விஷ்ணு அங்கு ஓடி வந்தான்.

"வா விஷ்ணு..." என்ற பவன்ராம் புன்னகை முகம் மாறாது அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

பிறகு அவன் காயத்ரியிடம் இயல்பாகப் பேசி கொண்டிருக்க... காயத்ரியும் பதில் அளித்துக் கொண்டு இருந்தாள். விஷ்ணுவுக்குப் போர் அடிக்க... அவன் பவன்ராமின் அலைப்பேசியை எடுத்து விளையாட ஆரம்பித்தான். பிறகு என்ன நினைத்தானோ! அவன் பவன்ராமிடம், "அங்கிள், செல்ஃபி எடுக்கலாமா?" என்று கேட்க...

"ஓகே..." என்றவன் சின்னவனுக்குப் போஸ் கொடுக்க... விஷ்ணு இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான். பிறகு அன்னையை அழைக்க... காயத்ரி தயங்கினாள்.

"சும்மா ஃபோட்டோ தானே காயத்ரி... வா." என்ற பவன்ராமை கண்டு மறுக்க முடியாது காயத்ரி இருவரின் அருகில் வந்து நின்றாள். விஷ்ணு மூவரையும் சேர்த்து அலைப்பேசியில் கிளிக்கி கொண்டான்.

இந்தக் காட்சியைக் கண்டபடி வந்த அருந்ததி திகைத்து தான் போனார். மூவரையும் காணும் போது ஒரே குடும்பம் போலிருந்தது. மகன் காயத்ரியிடம் காட்டும் அதிகப்படியான அன்பிற்கான காரணம் லேசாகப் புரிய ஆரம்பித்து அந்த அன்னைக்கு... மற்ற அன்னையர்களைப் போன்று அவர் மகனது செயலை வெறுக்கவில்லை. மாறாக அவர் மனதிற்குள் பாராட்டத்தான் செய்தார். பரந்த மனப்பான்மையைக் கொண்ட மகனை பாராட்டத்தான் தோன்றியது அந்தச் சேவையுள்ளம் கொண்ட அன்னைக்கு...! அவர் மகனை மனதார வாழ்த்தியபடி அங்கிருந்து அகன்றார்.

********************************

சிம்மஹாத்ரி சத்யநாராயணா ராஜ்குமார் வீட்டிற்கு வருகை தந்திருந்தான். அவன் சென்ற நேரமோ என்னவோ! லெக்ஷ்மி மகனிடம் அவனது திருமணத்தைப் பற்றிப் பேசி கொண்டு இருந்தார். அவனோ திருமணம் செய்வதற்குப் பிடி கொடுக்காது நழுவி கொண்டு இருந்தான். அந்த நேரம் அங்கு வந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் லெக்ஷ்மி புலம்ப ஆரம்பித்து விட்டார்.

"நீயாவது ராஜ் கிட்ட சொல்லு சிம்மா." என்று லெக்ஷ்மி புலம்ப...

"அம்மா சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கு என்னடா பிரச்சினை?" என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா கேட்க...

"இப்போ என்ன அவசரம்? பிறகு பார்த்துக்கலாம்." ராஜ்குமார் சலிப்பாகச் சொல்ல...

"ஆன்ட்டி, ராஜோட விருப்பத்துக்கு விடுங்க." என்று லெக்ஷ்மியிடம் சொன்ன சிம்மஹாத்ரி சத்யநாராயணா நண்பன் புறம் திரும்பி, "ராஜ், நம்ம பேட்ச்மேட் கிஷோர் உனக்குப் பிரெண்ட் தானே?" என்று கேட்க...

"ஆமா, எனக்கு அப்பா வழியில் அவன் ரிலேசனும் கூட... அவனுக்கு என்ன?" ராஜ்குமார் புரியாது கேட்டான்.

"அவனோட தம்பி ராகேஷுக்கு நம்ம பூஜாவை கேட்டு இருக்காங்க. அதான் பையன் எப்படின்னு விசாரிச்சிட்டு போக வந்தேன்."

"சிம்மா யாரை சொல்கிறான்?" சாரதா இடையிட்டு கேட்கவும்...

"தாத்தா வழியில் நமக்குச் சொந்தம் தான் பாட்டி." என்ற ராஜ்குமார் உறவுமுறை பற்றிப் பாட்டியிடம் விளக்கி சொல்ல...

"அட, நம்ம கோபிநாத் குடும்பமா? நல்ல குடும்பம் தான் சிம்மா. நீ தாராளமா உன் தங்கையை அங்கே கொடுக்கலாம். என்ன ஒண்ணு... அவங்க உங்களை மாதிரி ராஜ குடும்பம் இல்லை. மத்தபடி உங்க அந்தஸ்துக்கு ஏத்த குடும்பம் தான்." சாரதா திருப்தியுடன் சொல்ல...

"அப்போ டபுள் ஓகே பாட்டி." என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா பின்பு ராஜ்குமாரிடம், "வர்ற வெள்ளிக்கிழமை அவங்க பெண் பார்க்க வர்றாங்க. நீயும் அங்கே இருந்தால் நன்றாக இருக்கும். அம்மா, பாட்டி நீங்களும் கட்டாயம் வரணும்." என்று சொல்ல...

"நானா?" ராஜ்குமார் தயங்கினான். அவனின் மனக்கண்ணில் அழுத விழிகளுடன் பூஜிதா தோன்றி மறைந்தாள்.

"நாங்க வர்றோப்பா..." அதற்குள் பெரியவர்கள் இருவரும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்தனர். ராஜ்குமார் பாட்டி, அம்மாவை முறைத்துப் பார்த்தான். அவர்களோ சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் சுவாரசியமாகப் பேசி கொண்டு இருந்தனர். ராஜ்குமார் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டான்.

வெள்ளிக்கிழமை நாள் எல்லோருக்கும் நல்லதாக விடிய... ராஜ்குமார், பூஜிதாவுக்கு மட்டும் படபடப்புடன் விடிந்தது. பெண் பார்க்க வருகிறார்கள் என்று அண்ணன் சொன்னதுமே பூஜிதா உள்ளுக்குள் அரண்டு தான் போனாள். இதோ இன்னும் சற்று நேரத்தில் அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துவிடுவர். அதை நினைத்து அவளுக்கு அச்சமாக இருந்தது. அவளையும் அறியாது அவள் சில நாட்களுக்கு முன்னர் ராஜ்குமாரை சந்தித்துப் பேசியதை நினைத்து பார்த்தாள்.

ராணியம்மா மகளுக்கு அவர்களுக்கு இணையான அந்தஸ்தான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து இருந்தார். ஜெய்பிரகாஷ் திருமணத்தில் பூஜிதாவை கண்ட மாப்பிள்ளை வீட்டார் அவளைப் பெண் கேட்க... மாப்பிள்ளை வீட்டாரின் பின்புலம் கண்டு ராணியம்மா மகிழ்ச்சியோடு சம்மதித்து விட்டார். பூஜிதாவால் அன்னையின் பேச்சை மீற முடியவில்லை. அதேசமயம் வேறு ஒருத்தன் முன் போய் அலங்கார பொம்மையாக நிற்கவும் மனதில்லை. பெண் பார்க்க வரும் நாளன்று பூஜிதா வேண்டுமென்றே குளியலறையில் கீழே விழுந்து காலில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியாது செய்து விட்டாள். இதனால் பெண் பார்க்கும் படலம் நின்று போனது.

கால் சுளுக்குக் குணமாகியதும் பூஜிதா முதலில் சந்தித்தது ராஜ்குமாரை தான். அவள் அவனிடம் சென்று இந்த நிகழ்வை கூறி... "ஸ்டில் ஐ லவ் யூ ராஜ். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்." என்று சொல்ல...

"முட்டாள்த்தனமா பேசாதே. உன் அண்ணன் சொன்னது போல் என் மீது உனக்கு வந்திருக்கும் பிடித்தம் இந்த வயதிற்கே உண்டான ஈர்ப்பு. இதுக்குப் பெயர் காதல் இல்லை. சொன்னால் புரிந்து கொள். நீ உன் வீட்டில் பார்ப்பவனைத் திருமணம் செய்து கொள்." என்று கூறிவிட்டு அவன் அவளைத் திரும்பியும் பார்க்காது சென்று விட்டான். அவள் தான் அழுகையுடன் வீடு திரும்பினாள்.

அவள் ராஜை சந்தித்தது பற்றி அண்ணனிடம் மறைக்காது கூறிவிட்டாள். ஏனெனில் அவள் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் எதையும் மறைத்தது இல்லை. தனது காதலை உட்பட... ஆனால் அவள் செய்த தகிடுத்தனத்தைச் சொல்லாது மறைத்து விட்டாள். அவளைத் தேற்றிய சிம்மஹாத்ரி சத்யநாராயணா, "ராஜ் சொல்றதும் சரி தானே. வீட்டில் பார்ப்பவனைக் கல்யாணம் பண்ணிக்கோ செல்லி. அம்மா பார்க்கிற மாப்பிள்ளை உனக்குப் பிடிக்கலைன்னா... நான் மாப்பிள்ளை பார்க்கிறேன்." என்று கூறியவன் இதோ மூன்றே நாளில் மாப்பிள்ளை பார்த்து விட்டு வந்துவிட்டான்.

பூஜிதா இப்போது என்ன செய்வது என்று தெரியாது விழித்தாள். அப்போது சிம்மஹாத்ரி சத்யநாராயணா தங்கையைத் தேடி வந்தான்.

"செல்லி, எல்லாம் ஓகே தானே? மாப்பிள்ளை பார்க்க போகலாமா?" என்று கேட்க...

"அண்ணய்யா..." அவள் தயங்கியபடி அண்ணனை பார்த்தாள்.

"சொல்லு செல்லி..." அவன் தங்கையைப் பார்த்தான். அவள் தவிப்புடன் கைகளைப் பிசைந்தபடி அண்ணனை பார்த்தாள்.

"அன்னைக்கு மாதிரி எப்படி இந்த நிகழ்வை தடுப்பதுன்னு யோசிக்கிட்டு இருக்கியா செல்லி?"

"அண்ணய்யா?" அவள் திகைப்புடன் அவனை ஏறிட்டாள்.

"இப்பவாவது உண்மையைச் சொல் செல்லி." அவன் இருகரங்களையும் கட்டியபடி நின்றிருந்தான்.

"அண்ணய்யா, முதலில் என்னை மன்னிச்சிருங்க. முதலில் அம்மா பார்த்த மாப்பிள்ளையைப் பார்க்க பிடிக்காது கீழே விழுந்து காலை சுளுக்கி கிட்டது வேணும்ன்னு தான். நான் ராஜை காதலிக்கிறேன்னு உங்களுக்கே தெரியும். அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்போ அந்த வயசில் வந்த உணர்வு ஈர்ப்பாக இருக்கலாம். ஆனால் இப்போ இந்த வயசு வரை அந்த உணர்வு என்னைத் துரத்துகிறது என்றால்... இதுக்குப் பெயர் என்ன அண்ணய்யா? காதல் தானே." என்று கண்ணீருடன் கேட்டவளை கண்டு அணைத்து கொண்டவன்,

"இதைச் சொல்ல இவ்வளவு தயக்கமா? இங்கே வா..." என்று தங்கையை அழைத்து வந்து மறைந்திருந்து மணமகனை காட்ட... அங்கு அன்னை, பாட்டியுடன் அமர்ந்திருந்த ராஜ்குமாரை கண்டு அவள் இனிமையாக அதிர்ந்தாள்.

"ஆனால் ராஜ் என்னைக் காதலிக்கலைன்னு சொல்லிட்டாரே." என்று அவள் வருத்தத்துடன் அண்ணனை நோக்க...

"காதலிக்கலைன்னு சொன்னவன் தான்... உனக்கு வேறு ஒருத்தனோடு நிச்சயம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சு டென்சனா உட்கார்ந்து இருக்கானா?"

"அண்ணய்யா..." அவள் வியப்புடன் அண்ணனை பார்க்க...

"ராஜ்க்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் செல்லி." அண்ணன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தவள் முகம் உடனே வாடலானாது.

"ஆனா அவர் ஏன்...?" அவள் அவன் பேசியதை பற்றி யோசிக்க...

"அதை அவன் கிட்டேயே கேளு. இப்போ சிரித்த முகமா இரு." என்றவன் தங்கையின் சிரிப்பை கண்டு மகிழ்ந்தவனாய் நண்பனை நோக்கி சென்றான்.

"என்ன ராஜ், ஏசி ரூமிலும் உனக்கு இப்படி வேர்க்குது?" என்று கேட்க...

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சத்யா." என்ற ராஜ்குமார் பதற்றத்துடன் தான் அமர்ந்து இருந்தான்.

"பொண்ணை வர சொல்லுங்க..." சாரதா சொன்னதும்...

"இன்னும் கிஷோர் குடும்பம் வரலையே." ராஜ்குமார் புரியாது கேட்டான்.

"அதான் நாம வந்திருக்கோமே." என்ற பாட்டியை புரியாது பார்த்தவன் பின்பு புரிந்தவனாய் திரும்பி நண்பனை காண... சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனைக் கண்டு புன்னகை புரிந்தான்.

"சத்யா, உண்மையாகவா?" என்று திகைத்த ராஜ்குமாரை அணைத்துக் கொண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா,

"உன்னை விட நல்லவன் என் தங்கைக்குக் கிடைக்க மாட்டான்." என்று சொல்ல...

"இந்தத் திடீர் மாற்றம் எப்படி?" ராஜ்குமாருக்கு இன்னமும் புரியவில்லை.

"முதலில் நீ பண்ணிய வேலை எனக்குப் பிடிக்கவில்லை தான். ஆனா ரெண்டு பேரும் காதலில் உறுதியா இருந்தீங்களே. அதுவே சொல்லாது சொல்லியது உங்க இருவரின் காதலின் ஆழத்தை... உனக்காக அவள் காலை உடைத்துக் கொள்வதும்... அவளுக்காக, இல்லை எனக்காக, என் நட்புக்காக நீ காதலை விட்டுக் கொடுப்பதும்... இதெல்லாம் போதாதாடா? உன் மனதை அறிவதற்கு..." என்ற நண்பனை கண்டு ராஜ்குமார் அவனை ஆரத்தழுவி கொண்டான்.

அதன் பிறகு பூஜிதா அங்கு வந்தாள். மருமகளைக் கண்ட லெக்ஷ்மிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவர் பார்த்து வளர்ந்த பெண் தானே அவள்... அவளே தனது வீட்டின் மருமகளாக வருவது கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். ராணியம்மாவுக்குச் சற்று வருத்தம் தான். இருந்தாலும் மகளின் மனமறிந்த பிறகு அவர் தனது மனதினை தேற்றிக் கொண்டார். அந்தஸ்து என்று பார்க்கையில் ராஜ்குமார் குடும்பம் சரிக்கு சமமானது தான். என்ன ஒன்று ராஜ குடும்பம் இல்லை. அந்த வருத்தம் அவருக்கு இருக்கத்தான் செய்தது.

"நான் பூஜாவிடம் தனியே பேசணும்." என்று திடுமென ராஜ்குமார் சொல்ல...

"தாராளமா..." என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா அனுமதி கொடுத்தான். தந்தை இல்லாத வீட்டில் அவன் முன்னே நின்று அனைத்தையும் செய்வதைக் கண்டு வேறுவழியில்லாது ராணியம்மா ஏற்றுக் கொண்டார். மற்ற இரு மகன்களும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தனர். எடுத்து செய்யும் திறமை, ஆளுமை அவர்களிடம் இல்லையே.

பூஜிதாவும், ராஜ்குமாரும் தனியே சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்தனர். தனியறையில் சந்தித்த இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். பூஜிதா விழிகளில் வழிந்த காதலில் ராஜ்குமார் குற்றவுணர்வில் தவித்தான். அவன் செய்த தவறு அவன் கண்முன்னே எழுந்து அவனை வருத்தியது.
 

ஶ்ரீகலா

Administrator
"நான் உன் கிட்ட சில உண்மைகள் சொல்லணும் பூஜா. அதுக்குப் பிறகும் நீ என்னைக் காதலிக்கிறியான்னு யோசித்துச் சொல்லு..." என்றவன் தந்தையின் மரணத்திற்காகச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பழிவாங்க தான் துடித்ததை அவளிடம் சொன்னான். நண்பனை பழிவாங்க தான் அவனது தங்கையைக் காதலிப்பது போல் நடித்ததை அவளிடமே சொன்னவன்,

"நீ நினைப்பது போல் நான் உன்னை உண்மையாகக் காதலிக்கவில்லை. என் நடிப்பை உண்மை என்று நீ நம்பி விட்டாய். உன்னை ஏமாற்றியதுக்கு ஐயம் ரியலி சாரி. மன்னிப்பை தவிர வேறு வார்த்தைகள் இல்லை." என்று சொல்ல... அவள் அமைதியாக அவனைப் பார்த்திருந்தாள். அவன் பவதாரிணியைப் பற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

"இன்னும் நீ என்னைக் காதலிக்கிறியா பூஜா? என்னை மாதிரி ஒருவன் உனக்குத் தேவையா?" என்று வேதனையுடன் கேட்டவனைக் கண்டு,

"தேவை இல்லை தான்... நீங்களே எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து கொடுங்களேன். செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக..." என்று அவள் கூற...

"உனக்கு அது தான் விருப்பம் என்றால்... நான் அதையும் செய்வேன்."

"ஏன்?" அவள் அழுத்தமாக அவனைப் பார்த்தபடி கேட்டாள்.

"ஏன்னா?" அவன் பதில் கூற இயலாது தடுமாறினான்.

"நான் எப்படிப் போனால் உங்களுக்கு என்ன? என் நலனில் உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?" அவள் சூடாகக் கேட்க...

"அது எப்படி முடியும்? நீ எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும். மகிழ்ச்சியா இருக்கணும். நீ சந்தோசமா இருக்கிறதுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன்." என்று அவன் கத்தினான்.

அவள் அவன் அருகே வந்து அவனது சட்டையைப் பிடித்தவள், "இதுக்குப் பெயர் என்ன? சொல்லுங்க..." என்று ஆவேசமாகப் பதிலுக்குக் கத்த... அவனோ பதில் கூறாது தலைகுனிந்தான்.

"பதில் சொல்லுங்க ராஜ். உங்களுக்கு என்னைப் பிடிக்கும் தானே." என்றவளின் விழிகளைக் கண்டவனுக்குப் பொய் கூற மனமில்லை. அவன் ஆமென்று தலையாட்டினான்.

"பிறகு என்ன?"

"சின்னப் பொண்ணு மனசை கலைச்சிட்டேனோன்னு குற்றவுணர்வா இருக்கு. அதேசமயம் உன்னை யார் கிட்டயும் விட்டு கொடுக்க மனசும் இல்லை. இப்போ நான் என்ன பண்றது?" ஆறடி ஆண்மகன் குழந்தையாய் மாறி அவளிடம் பாவம் போன்று கேட்டான்.

"அப்போ எனக்குப் புரியாத வயசு. ஆனா இப்போ எனக்கு எல்லாம் புரியும் வயசு. காதல்ன்னா என்னன்னு எனக்குப் புரியும். அது உங்க மேல் மட்டும் தான் வரும். உங்களை மட்டும் தான் நான் காதலிக்கிறேன். இதுக்கு முன்னாடி பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பார்க்க பிடிக்காம பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலை சுளுக்கிக்கிட்டேன். இது உங்களுக்கே தெரியும். இனிமேலும் வேறு யாராவது பெண் பார்க்க வந்தால்... நான் உயிரை கூட விடுவேன் ராஜ். எல்லாம் உங்களுக்காக... உங்க மீதான காதலுக்காக..." என்றவளை அவன் கண்ணிமைக்காது பார்த்தான்.

"இன்னும் என்ன ராஜ்?" என்றவளின் முகத்தை அவன் தனது இரு கரங்களால் தாங்கியபடி அவளை இமைக்காது பார்த்தான். அவனது பார்வையைக் கண்டு அவள் இமைகள் படபடக்க அவனைப் பார்த்தாள்.

"உனக்கு எல்லாம் புரியும் வயசு தானே." என்றவனைக் கண்டு அவள் ஆமெனத் தலையசைக்க... அடுத்த நொடி அவன் வேகமாக அவளது இதழ்களைச் சிறை செய்தான். அவன் சொல்லாத காதலை தனது இதழ் முத்தத்தில் காட்டிட... பெண்ணவள் சுகமாய் விழி மூடி அவனது முத்தத்தை ரசித்தாள்.

சிறிது நேரம் கழித்தே ராஜ்குமார் பூஜிதாவை விட்டு விலகினான். அவள் அவனது முகம் காண நாணி நிற்க... அவன் அவளது கையைப் பிடிக்க வரும் போது...

"உள்ளே வரலாமா?" என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா குரல் கொடுக்க...

"வாடா கரடி..." என்று ராஜ்குமார் நண்பனை கேலி செய்தபடி உள்ளே அழைத்தான்.

"நான் கரடியா? அங்கே உங்க கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு போயிக்கிட்டு இருக்கு. வாங்க ரெண்டு பேரும்..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா மிரட்டலாய் இருவரையும் அழைத்துச் சென்றான்.

இருவீட்டாரும் இணைந்து திருமண நாளை குறித்தனர். ராஜ்குமார், பூஜிதா இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரி நினைவில் அமைதியாக இருந்தான். என்று அவள் திருமணத்தைப் பற்றி அவனிடம் கேட்க போகின்றாளோ! ஊரறிய, உற்றார், உறவினர் கூடியிருக்கத் திருமணம் செய்ய யாருக்கு தான் ஆசை இருக்காது!

ராஜ்குமார் திருமண விசயம் கேள்விப்பட்டுப் பவன்ராம் நண்பர்களைச் சந்திக்க வந்துவிட்டான். மூவரும் இணைந்து அரட்டை கச்சேரி நடத்தி கொண்டிருந்தனர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஞாபகம் வந்தவனாய் பவன்ராமிடம்,

"உன்னோட கல்யாணம் எப்போ பவன்? நான் வேணும்ன்னா காயூ கிட்ட பேசவா?" என்று கேட்க...

"அது யாருடா காயூ?" ராஜ்குமார் புரியாது இருவரையும் கண்டு கேட்டான். காயத்ரி பற்றி அவனுக்குத் தெரியாது இல்லையா! இருவரும் காயத்ரி பற்றி அவனிடம் விளக்கி சொல்ல...

"பவன், யூ ஆர் கிரேட்டா." ராஜ்குமார் மனம் நெகிழ நண்பனை அணைத்துக் கொண்டான்.

"அவளுக்கு நான் வாழ்க்கை கொடுப்பதால் கிரேட் இல்லைடா. அவள் தான் எனக்கு வாழ்க்கை கொடுக்கப் போகின்றாள். அப்போ அவள் தான் கிரேட்." என்ற பவன்ராமை கண்டு நண்பர்கள் இருவரும் பெருமிதமாகப் பார்த்தனர்.

"கல்யாணம் எப்போ பவன்? என்னோட கல்யாணத்தோடு சேர்த்து வைத்து கொள்ளலாமா?" ராஜ்குமார் ஆசையுடன் கேட்டான்.

"அப்படியே செய்யலாம்." சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும் மகிழ்ச்சியோடு கூற...

"உங்க கதை வேற... என் கதை வேறடா. இன்னும் காயத்ரி மனதளவில் வேறு வாழ்க்கைக்குத் தயாராகலை. அவள் மனம் மாறும் வரை நான் காத்திருக்கணும்."

"அதுக்குள்ள உனக்கு வயசாகிற போது..." நண்பர்கள் இருவரும் அவனைக் கேலி செய்ய...

"வயசானாலும் நான் காத்திருப்பேன்." என்றவனைக் கண்டு நண்பர்கள் இருவரும் மனம் நெகிழ அவனை அணைத்து கொண்டனர். சிலரின் காதல் கிடைப்பதற்கரிய ஒன்று... அப்படிப்பட்ட காதல் தான் பவன்ராமினுடையது...!

******************************

அன்று காலையில் வழக்கம் போல் எழுந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா எப்போதும் தன்னை எழுப்பும் ஆதிசக்தீஸ்வரியை காணாது திகைத்தான். எங்கே போனாள்? என்றபடி கட்டிலில் இருந்து எழ போனவன் அப்போது தான் கவனித்தான், ஆதிசக்தீஸ்வரி இன்னமும் எழாது படுக்கையில் படுத்திருப்பதை... எப்போதும் தேனீ போன்று சுறுசுறுப்புடன், மான் குட்டி போன்று ஒரு இடத்தில் நில்லாது துள்ளி குதிப்பவளுக்கு இன்று என்னவானது? என்று அவனுக்கு மனம் பதைபதைத்துப் போனது. வேகமாக அவள் அருகே வந்தவன்,

"பொம்மாயி, எழுந்திரு... இன்னமும் எழாம இருக்க... என்னவானது உனக்கு?" என்று அவளை எழுப்ப...

"மாமா..." என்று அவளது அழுகுரல் மட்டும் மெல்ல கேட்டது. அவள் விழித்துத் தான் இருந்தாள். அவளது அழுகை கண்டு அவன் இன்னமும் பதற்றமானான்.

"என்னடி ஆச்சு?" என்றபடி அவளைத் தன் புறம் திருப்பியவன் அவளது கண்ணீரை கண்டு உயிரோடு மரித்துத் தான் போனான். என்றுமே அவளது கண்ணீருக்கு அவன் மட்டும் தானே காரணம்.

"பொம்மாயி, நான் எதுவும் தப்பா..." அவன் மேலே பேசும் முன் அவள் கண்ணீரோடு அவனைக் கண்டு இல்லையென்று தலையசைத்தவள்,

"என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சுக்கோ மாமா." என்று நலிவுற்ற குரலில் சொல்ல...

அடுத்த நொடி சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஏன்? எதுக்கு? என்று கேள்விகள் கேட்காது அவளை இறுக்கி அணைத்து தனது நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான். தாய் பறவை சேய் பறவையைக் காப்பது போல் அவன் அவளைத் தனக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

"நான் இருக்கும் போது நீ எதுக்குக் கலங்குகிற? எதுவாக இருந்தாலும் சொல்லு... நான் பார்த்துக்கிறேன்." அவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

"இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரியுமா மாமா? நம்ம குழந்தை நம்மளை விட்டு..." என்றவளுக்கு மேலே பேச முடியாது துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை மகவு வந்தாலும் மூத்த மகவு என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் ஸ்பெசல் தானே!

"தெரியும் பொம்மாயி..." என்றவனது குரலிலும் வேதனை இருக்கத்தான் செய்தது. அவனாலும் இந்த நாளை எப்படி மறக்க முடியும்?

"இதுக்கா இந்த அழுகை..." இருந்தாலும் தன்னைத் தேற்றிக் கொண்டு அவன் அவளது தலையைக் கோதி அவளைத் தேற்றினான்.

"நான் நம்ம குழந்தையைப் பாதுகாக்க தவறிட்டேன். நீ எனக்குக் கொடுத்த பரிசை பொக்கிசமா பாதுகாக்க முடியாது போயிற்று மாமா" என்று அரற்றியவளை கண்டு அவனது மனமும் வேதனையுற்றது.

"எனக்கு நம்ம குழந்தை வேணும் மாமா." என்று சிறு குழந்தை போன்று அழுதவளை விட்டு அவன் விலகினான். அவள் அழுகையினூடே அவனைக் கேள்வியாகப் பார்க்க...

"அவ்வளவு தானே... கொஞ்சம் இரு..." என்றவன் எழுந்து சென்று அங்கே இருந்த அலமாரியை திறந்து ஒரு பரிசு பொருளை கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

"இந்தா... உனக்கு இன்னொரு பரிசு கொடுக்கிறேன். வாங்கிக்கோ..." என்று முகம் மலர கூறியவனைக் கண்டு கோபமாய் முறைத்து பார்த்தவள்,

"குழந்தையும், இதுவும் ஒண்ணா மாமா? நானே குழந்தை கலைஞ்சு போச்சேன்னு அழுதுட்டு இருக்கேன். நீ என்னடான்னா?" என்றவள் பரிசினை தூக்கியெறிய போக... அதைத் தடுத்தவன்,

"என் மேல் நம்பிக்கை இருந்தால் பிரித்துப் பார்." என்று அவன் சொல்ல...

"நம்பிக்கை இருக்கு. மாமா மேல் நம்பிக்கை இருக்கு." வேதனை மனதினை முழுதாய் வியாப்பித்து இருந்த போதும் அவனுக்காக அவள் கண்ணீரை துடைத்தபடி அந்தப் பரிசினை பிரித்தாள். ஏனோ அவளது கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. அந்த நொடி ஆணவன் பெண்ணவளின் கண்ணீரை துடைத்து அவளது துக்கத்தினை அவன் தாங்கி கொண்டான்.

பரிசினை பிரித்துப் பார்த்தவள் வியப்பில் விழிகளை விரித்தாள். "மாமா..." என்று அவனை விளித்தவள் சந்தோசத்தில் திக்குமுக்காடி போனாள்.

"இப்போ சந்தோசமா?" அவளது கரத்தில் இருந்த பொருளை தானும் தனது கரங்களில் தாங்கி கொண்டே அவன் கேட்டான்.

ஏனெனில் அவன் கொடுத்த பரிசு புத்தம் புதிய கர்ப்பம் பரிசோதிக்கும் கருவி... அதைக் கண்டு தான் அவளுக்கு அத்தனை ஆனந்தம்!

"உனக்கு எப்படித் தெரியும் மாமா?" அவள் ஆச்சிரியமாகக் கேட்க...

"எனக்குத் தெரியாது உன்னில் எந்த ரகசியமும் உண்டோ?" அவன் கேட்டதும் அவள் வியப்பில் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.

நல்ல ஆண்மகன் இணையின் புறம் மட்டும் அல்லாது, அகத்தினைப் பற்றியும் நன்கு உணர்ந்திருப்பான்!

"ஊனும் ஊனும் சேர்வது மட்டும் காதலில்லை,
உயிரும் உயிரும் இணைவது மட்டும் காதலில்லை,
உணர்வும் உணர்வும் பிணைவது மட்டும் காதலில்லை,
நீ வேறு, நான் வேறில்லை என்று உணர்ந்து
தெளிவது தான் காதல்..."

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 40

"இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்கப் போற பொம்மாயி?" சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் குரலில் திரும்பி பார்த்த ஆதிசக்தீஸ்வரியின் விழிகளில் விழிநீர் கோர்த்திருந்தது.

"இப்போ எதுக்கு இந்தக் கண்ணீர்?" அவன் அவளது கண்ணீரை துடைத்து விட...

"நா... நான் இதை எப்படி உணராமல் போனேன்." தனக்கு நாட்கள் தள்ளி போனதை பற்றி அவள் யோசித்துக் கூடப் பார்க்க இல்லை. அது தான் உண்மை. அவளது மனம் இனிய அதிர்ச்சியில் தள்ளாடியது.

"போய்ச் செக் பண்ணி பாரு." அவன் அவளது காதருகே குனிந்து மென்மையான குரலில் சொல்ல...

"இதோ..." என்றவள் அவனது பிடியில் இருந்து விலகி எழுந்து நின்றாள். அப்போது அவன் அவளது கரத்தினைப் பற்றிட... அவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

"குழந்தையாக இருந்தால் இரட்டிப்புச் சந்தோசம். இல்லை என்றாலும் நீ வருத்தப்படக் கூடாது. நமக்கான காலம் நீண்டிருக்கு. என்ன நான் சொல்ல வர்றது புரிஞ்சதா?" தனக்காகத் தான் அவன் அப்படிச் சொல்கிறான் என்பதை உணர்ந்தவளாய் அவள்,

"நிச்சயமா மாமா. எனக்காக நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?" என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

அவ்வளவு நேரம் அவளிடம் சாதாரணமாகக் காட்டி கொண்டவன் அவள் மறைந்ததும் படபடப்புடன் காணப்பட்டான். அவனுக்குமே சிறிது பதற்றம் இருந்தது. குழந்தை பற்றிய எதிர்பார்ப்பு பெண்ணுக்கும் மட்டுமல்ல ஆணுக்கும் உண்டு அல்லவா! எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று அவன் மனதிற்குள் தனது குல தெய்வமான லெக்ஷ்மி நரசிம்மரை வேண்டி கொண்டவன் டென்சனுடன் காத்திருந்தான். அப்போது குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவன் நிமிர்ந்து பார்க்க... அவனது தேவதை கையில் கர்ப்பம் பரிசோதிக்கும் கருவியை வைத்தபடி அவனைப் பார்த்திருந்தாள்.

"என்னாச்சு பொம்மாயி?" அவளது அமைதி கண்டு அவனுள் கலவரம் மூண்டது.

அடுத்த நொடி ஆதிசக்தீஸ்வரி, "மாமா..." என்று ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்ள... அவளது திடீர் தாக்குதலில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவளுடன் இணைந்து படுக்கையில் சரிந்தான்.

"மாமா, இங்கே பாரு... நம்ம... நம்ம..." என்றவளுக்கு அதற்கு மேல் மகிழ்ச்சியில் பேச்சு வரவில்லை. அவள் தனது கையை விரித்துக் கருவியை அவனிடம் காட்டினாள். அவள் காட்டிய கருவியில் அழகாய் இரட்டை சிவப்பு நிற கோடுகள் தோன்றி அவர்களது குழந்தையின் வரவினை அவர்களுக்கு அறிவித்தது. அதைக் கண்டதும் அவனும் சந்தோசத்தில் திக்குமுக்காடி போனான்.

"வாழ்த்துகள் மாமா..." அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டுச் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ள...

"உனக்கும் வாழ்த்துகள் பொம்மாயி." என்றவன் விளையாட்டாய் அவளது நெற்றியை முட்டி கொண்டு மகிழ்ச்சியில் சிரித்தான். இருவரது விழிகளிலும் விழிநீர் கோர்த்திருந்தது. இருவருமே ஒருவரது அணைப்பில் மற்றவர் கட்டுண்டு அமைதியாக இருந்தனர். சில உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முடியாது. அப்படிப்பட்டதொரு உணர்வில் இருவரும் சிக்கி தவித்தனர்.

"தேங்க்ஸ் பொம்மாயி." என்றவனது கரம் அவளது வயிற்றினை மென்மையாக வருடி விட... அவள் அவனது தொடுகையை விழி மூடி ரசித்துக் கொண்டு இருந்தாள்.

"இந்த நொடி இந்த உலகத்திலேயே சந்தோசமானவன் யாருன்னு கேட்டால்... நான் என்னைத் தான் சொல்லுவேன். அவ்வளவு சந்தோசமா இருக்கேன்."

"ம், நானும்... நம்ம குழந்தை நம்ம கிட்டேயே வந்திருச்சு மாமா." என்றவளுக்கும் சந்தோசமாக இருந்தது.

இந்தச் சந்தோசமான தருணத்தில் கலைந்து போன குழந்தையைப் பற்றி இருவருமே பேசி கொள்ளவில்லை. அதைப் பற்றிப் பேசி இருக்கும் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றெண்ணி இருவரும் அந்தப் பேச்சை கவனமாகத் தவிர்த்தனர்.

"மாமா, ஆனாலும் என்னோட ஆசையை எல்லாம் இப்படி நிராசை ஆக்கிட்டியே..." என்று அவள் சலித்துக் கொள்ள...

"என்ன ஆசைடி? சொல்லு நிறைவேத்துறேன். நீ கேட்டு நான் மறுப்பேனா?"

"நான் கர்ப்பமான விசயத்தை இந்தச் சினிமாவில் எல்லாம் வர்ற மாதிரி... உன் கிட்ட சர்ப்பரைசா சொல்லணும்ன்னு இருந்தேன். ஆனா எனக்கு நாள் தள்ளி போனதை நான் உணரவே இல்லை. உணரலைங்கிறதை விட... இது பத்தி யோசிக்க மறந்து போயிட்டேன்." என்றவளின் கழுத்தில் முகம் புதைந்தவன்,

"அது என்னடி புருசனுக்குத் தெரியாத சர்ப்ரைஸ்?" என்று கேட்க... அவளுக்கு இருந்த சந்தோசத்தில் அவள் அவனது வார்த்தையைக் கவனிக்கத் தவறினாள்.

"எல்லோரும் அப்படித்தானே சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. ஆனா நம்ம விசயத்தில் தான் எல்லாம் உல்டாவாகி போச்சு." என்று அவள் கவலையோடு சொன்னாள்.

"உடலை மட்டும் ஆள்கின்ற ஆணுக்கு தான் நீ சொல்ற சர்ப்ரைஸ் எல்லாம்." என்றவனைக் கண்டு அவள் வியப்புடன் பார்க்க...

"நான் என்ன உன்னோட உடலை மட்டும் ஆள்கிறவன்னு நினைச்சியா? உன்னோட உள்ளும், புறமும் எனக்கு அத்துப்படி. அப்படி இருக்கும் போது உன் உடம்புக்குள் ஏற்படும் மாற்றம் எனக்குத் தெரியாது இருக்குமா? நல்ல ஆணாக இருந்தால் இது எல்லாம் ஈசியா கண்டுபிடிக்கலாம். உடம்பு மட்டும் போதும் என்று இரவு மட்டும் விளக்கை அணைத்து விட்டுப் பெண்ணைத் தொடுறவனுக்கு இது எல்லாம் தெரியாது, சொன்னாலும் புரியாது." என்றவனைக் கண்டு அவளது விழிகள் வியப்பில் விரிந்தது. அவன் எவ்வளவு நுணுக்கமாக அவளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றான் என்று...

"அப்போ உனக்கு ஏற்கெனவே தெரியுமா மாமா?" அவள் ஆச்சிரியத்துடன் கேட்க...

"ம், தெரியும்... ஆனா நான் இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன். நம் பொக்கிசம் நம்மை விட்டு போன நாள் இன்று... பொக்கிசத்தைத் தொலைத்த இந்த நாளில் தான் மீண்டும் பொக்கிசத்தைத் தேட வேண்டும். அதனால் தான் பொறுமையாக இருந்தேன்." என்றவனைக் கண்டு பெண்ணவள் காதல் பெருகாது இருக்குமா? இதைவிட ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேண்டும்? காதலை வார்த்தையில் சொல்லாது செயலில் காட்டும் அவனை விடவா சிறந்த காதலன் இருக்க முடியும்!

அடுத்த நொடி அவள் அவனை இறுக அணைத்து, "ஐ லவ் யூ மாமா." என்று காதலில் முத்தாட... அவளது காதலை அமைதியாக ஏற்றுக் கொண்டவன்... தனது காதலை வார்த்தையில் சொல்லாது செயலில் வெளிப்படுத்தினான். காதலை வெறுத்திருந்த அந்த ஆண்மகனுக்குக் காதலை வார்த்தையில் சொல்ல பிடிக்கவில்லை போலும்!

"ஹாஸ்பிட்டல் போய்ச் செக்கப் பண்ணிட்டு வருவோமா?" அவன் மெல்ல அவளிடம் கேட்க... அவளும் சரியென்று சம்மதித்தவள் பிறகு யோசித்தவளாய்,

"இதுக்கு மட்டும் வெளியில் கூட்டிட்டு போற? என்னை விட உனக்கு உன் குழந்தை பெருசா போச்சா?" அவள் போலி கோபம் கொண்டு முறுக்கி கொள்ள...

"நம்ம குழந்தை..." என்று அவளைத் திருத்தியவன், "உன்னை விட நம்ம குழந்தை புத்திசாலி." என்றவன் வெளியில் கிளம்பத் தயாரானான்.

அவள் தான் இன்னமும் திருமணத்தைப் பற்றி அவனிடம் பேசவில்லையே! ஆனால் குழந்தை வந்ததும் அவன் திருமணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டான். அதில் உறுதியாக இருந்தான். அவள் கேட்காவிட்டாலும் இந்த முறை அவன் விடப் போவதில்லை. அதைத் தான் அவன் இப்படிச் சொன்னான்.

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே?" அவள் ஒன்றும் புரியாது தலையைச் சொறிந்தாள்.

குளித்து முடித்துத் தயாராகி வந்த சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியிடம், "நான் கோவிலுக்குப் போயிட்டு வந்திர்றேன். நீ கிளம்பி ரெடியா இரு." என்க...

"கோவிலுக்கு நானும் வர்றேனே." என்று அவள் பாவம் போன்று கெஞ்ச...

"இப்போ முடியாது. குழந்தை பிறந்த பிறகு கட்டாயம் கூட்டிட்டு போறேன்."

"கோவிலுக்குப் போறதுக்குக் கூட நேரம் காலம் பார்க்கணுமா?" அவளுக்குக் கோபம் வந்தது.

"ஆமா, இந்தக் கோவிலுக்குப் போறதுக்கு நேரம் காலம் பார்க்கணும். ஏன்னா இந்தக் கோவில் மலைக்கு மேல் இருக்கு. இந்த மாதிரி நேரத்தில் நீ மலையேற கூடாது." என்றவனைக் கண்டு அவள் அசடு வழிந்தாள்.

"சாரி மாமா." என்று அவள் ஈயென்று பல்லை காட்ட...

"எப்பவுமே நான் உன் நல்லதுக்குத் தான் சொல்வேன், செய்வேன்." என்றவனைக் கண்டு,

"அது என்னமோ உண்மை தான்." என்றவள் எம்பி நின்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். பதிலுக்கு முத்தமிட்டவன் வெளியில் கிளம்பி சென்றான்.

ஆதிசக்தீஸ்வரி காயத்ரிக்கு அழைத்து இந்த விசயத்தைச் சொல்ல... காயத்ரி மிகவும் மகிழ்ந்து போனவளாய், "வாழ்த்துகள்..." என்று கூறி வாழ்த்த... அருகிலிருந்த இராஜராஜேஸ்வரிக்கு இந்த விசயம் காதில் விழுந்து விட்டது. மருமகளிடம் இருந்து அலைப்பேசியைப் பறித்தவர் மகளிடம்,

"நீ வாழும் வாழ்க்கைக்குக் குழந்தை ஒன்று தான் அவசியம். நீ கேவலப்பட்டு நிற்கிற மாதிரி உன் குழந்தையையும் கேவலப்படுத்த போகிற பார். என் குடும்ப மானத்தை வாங்குவதற்குன்னே நீ வந்து பொறந்திருக்க... உனக்கு எல்லாம் குழந்தை ஒரு கேடு." என்று தீட்டி தீர்த்து விட்டார். அவர் இப்படி எல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சிரியப்பட வேண்டும். அவரது கடுஞ்சொற்கள் பழகிய ஒன்று தான் என்ற போதும்... அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

"அத்தை, என்ன பேசறோம்ன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? ஆதி உங்க பொண்ணு. இப்படிப் பேச உங்களுக்கு நா கூசலை." காயத்ரி மாமியாரை கண்டு பொங்கி விட்டாள்.

"என்னடி வாய் நீளுது?" அதற்கும் இராஜராஜேஸ்வரி சத்தம் போட...

"நீங்க என்ன பேசினாலும் சரின்னு தலையாட்டிட்டு போக என்னால் முடியாது."

"நான் பேசியது தான் சரி. ஆதி என்ன அவனோடு முறையாவா வாழ்கிறாள்? நான் சொல்றது உண்மை தானே?"

"அண்ணா என்ன செஞ்சாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்." காயத்ரி கோபத்தோடு சொல்ல...

"அதுக்கு அர்த்தம் நான் சொல்றது தான். என்னைப் பழிவாங்க எண்ணி அவன் என் பொண்ணைப் பழிவாங்கிட்டு இருக்கான்." அவர் தன் நிலையில் உறுதியாய் இருந்தார். அவரைத் திருத்த முடியாது என்றெண்ணிய காயத்ரி அலைப்பேசியை வாங்கி,

"ஆதி, லைனில் இருக்கியா?" என்று கேட்க...

"இருக்கேன் அண்ணி..." அவளது குரல் சோர்வுடன் ஒலித்தது.

"அத்தை சொன்னதை நினைத்து கவலைப்படாதே. அவங்க எப்பவும் இப்படித்தான்." என்றவள் மேலே நாத்தானாருக்கு சில அறிவுரைகள் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

ஆதிசக்தீஸ்வரி அலைப்பேசியை வெறித்தபடி அமர்ந்து இருந்தாள். அவளது சந்தோசம் எல்லாம் வடிந்து போனார் போன்று இருந்தது. தாயின் அன்பு ஒரு பெண்ணிற்கு முக்கியம் அல்லவா! அதுவும் இந்த மாதிரியான நேரத்தில்... அவளுக்கு மட்டும் அது ஏன் கிடைக்காது போனது?
 

ஶ்ரீகலா

Administrator
அவளுக்கு நேர்மாறாய் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மகிழ்ச்சியில் இருந்தான். தன்னிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு எல்லாம் பணத்தை வாரி இறைத்து, இனிப்பை அள்ளி கொடுத்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினான். அதன் பிறகே அவன் கோவிலுக்குக் கிளம்பி சென்றான். சிம்மஹாத்ரி மலை மீதேறி நேரே மூலஸ்தானத்திற்குச் சென்றவன் மனமுருக கடவுளை வேண்டினான். தங்களுக்கு வாரிசு கொடுத்ததற்காக அந்தக் கடவுளுக்கு நன்றி சொன்னவன் பிறகு கப்பஸ்தலம் நோக்கி சென்றான். அன்று போல் இன்றும் அந்தத் தூணை இறுக கட்டி கொண்டவனுக்கு அன்று போல் இன்றும் கண்ணீர் ஆறாகப் பெருகியது. அன்று கண்ணீர் வடித்ததற்குக் காரணம் அவனது மகவு கலைந்து போனதற்கு... இன்று அவனது கண்ணீருக்குக் காரணம் அவனது மகவு அவனுக்குத் திரும்பக் கிடைத்ததற்கு...

"லெக்ஷ்மி நரசிம்மா, நீ என்னை ஏமாற்றவில்லை. ஏமாற்றவில்லை." அவனது உதடுகள் சந்தோசத்துடன் முணுமுணுத்துக் கொண்டது. அவனது மனதில் மகிழ்ச்சி கடல் ஆர்ப்பரித்தது.

பிறகு சற்று தள்ளி வந்து நின்றவன் மலை மீதிருந்து சுற்றுப்புறத்தை பார்த்தவன் அருகில் இருப்பவர்களைக் கண்டு கொள்ளாது, "ஆதிசக்தீஸ்வரி... நா ப்ரியசகி." என்று உரக்க கத்தினான்.

"என் ப்ரியசகி வயிற்றில் எங்களது குழந்தை... ரொம்பச் சந்தோசமா இருக்கு." அவன் மீண்டும் உரக்க கத்தினான். அவனது மகிழ்ச்சியான வார்த்தைகள் எதிரொலித்து மீண்டும் அவனிடமே இரட்டிப்பு சந்தோசத்துடன் திரும்பி வந்து சேர்ந்தது.

ஆதிசக்தீஸ்வரி குழந்தை உண்டாகி இருக்கும் விசயம் ராணியம்மா, ரச்சிதா, ஜெகதீஸ்வரி மூவரையும் எட்டியது. ராணியம்மா, ஜெகதீஸ்வரி இந்த விசயத்தைக் கேட்டுப் பெரிதாக ஆர்ப்பரிக்கவில்லை என்றாலும் கோபம் கொள்ளவில்லை. ஆனால் ரச்சிதாவுக்குத் தான் இந்த விசயம் கடுப்பை கிளப்பியது. அவர்கள் இருவரது சந்தோசத்தையும் கலைக்க அவள் திட்டம் தீட்டினாள். பிறகு தனது திட்டத்தைச் செயல்படுத்தியவள்,

"என்னை அவமானப்படுத்திய நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கக் கூடாது." என்று வன்மமாய்ச் சிரித்தாள்.

********************************

ஆதிசக்தீஸ்வரியை பரிசோதித்த மருத்துவர் மகிழ்ச்சியோடு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் கரத்தை பற்றிக் குலுக்கி தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். அவரது வாழ்த்தினை ஏற்றுக் கொண்டவன் மருத்துவரிடம் அவளது உடல்நிலையைப் பற்றி அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருந்தான். ஆதிசக்தீஸ்வரி முகம் மலர அவனைப் பார்த்திருந்தாள்.

"எல்லாமே நார்மலாகத் தானே இருக்குது டாக்டர்? எந்தப் பிரச்சினையும் இல்லையே?" அவனது குரல் சற்று படபடப்புடன் ஒலித்தது. அதில் அவள் மீதான அக்கறை இருந்ததைக் கண்டு அவளது மனம் கனிந்தது.

"எல்லாம் ஓகே. நான் எழுதி கொடுக்கிற டேப்லெட்டை தினமும் கொடுங்க. அடுத்த மாசம் ஸ்கேன் பண்ணி பார்த்திரலாம்." என்ற மருத்துவரிடம் நன்றியை தெரிவித்து விட்டு இருவரும் வெளியில் வந்தனர்.

"இனிமே நீ முன்ன மாதிரி ஓடிட்டே இருக்கக் கூடாது பொம்மாயி. ஒவ்வொரு அடியும் பார்த்து வைக்கணும்." என்றவனைக் கண்டு தலைசரித்துப் பார்த்தவள்,

"அப்போ ஒண்ணு பண்ணு மாமா. நீயே என்னைத் தூக்கி சுமந்துக்கோயேன். எனக்கும் நடக்கிற வேலை இருக்காது." என்று நமட்டு சிரிப்புடன் சொல்ல...

"ஏன் செய்ய மாட்டேன்னு நினைச்சியா?" என்றவன் அவளைத் தூக்குவதற்காக அவள் அருகே வர...

"தூக்க வேண்டாம்ன்னு சொல்வேன்னு நினைச்சியா?" என்றவள் விரிந்த சிரிப்புடன் இருகரங்களையும் நீட்டியபடி நிற்க...

"நானும் தூக்குவேனே..." என்றவன் அவளைத் தனது கரங்களில் ஏந்தி கொண்டான். அவனது செயலில் அவள் நாணாது அவனது கரங்களில் அவள் ஓய்யாரமாகத் தவழ்ந்தாள்.

அப்போது திடுமென ஆணும், பெண்ணுமாய்ச் சிலர் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர். அவர்களைக் கண்டதுமே இருவருக்கும் புரிந்து போனது... அவர்கள் எல்லோரும் ஊடகவியலாளர்கள் என்று... ஆதிசக்தீஸ்வரி பதட்டத்துடன் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் கரங்களில் இருந்து வேகமாக இறங்க முற்பட... அவனோ பதட்டமில்லாது நிதானமாய் அவளைக் கீழே இறக்கி விட்டான். அவனது முகம் இறுகி போயிருந்தது.

"உங்களை மாதிரியான பெரிய மனிதர், அதுவும் இளம் தொழிலதிபர் மற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியா, நல்ல உதாரணமா இருக்கணும். ஆனா நீங்க இப்படி ஒரு மோசமான உதாரணமா இருக்கீங்களே." ஒரு பெண்மணி அவனிடம் சண்டைக்கு வந்தது.

"இதைக் கேட்க நீங்க யார்?" அவன் பதிலுக்குக் கேள்வி கேட்டான்.

"நான் மாதர் சங்க தலைவி... இப்படித் தாலி கட்டாது ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது ஒரு பெரிய மனுசன் செய்யும் வேலையா இது? உங்களுக்கே அசிங்கமா இல்லை?" அந்தப் பெண்மணி அவனிடம் எகிற ஆரம்பித்தது.

"அவங்க சொல்றது எல்லாம் உண்மையா சார்? நீங்க முறையற்று வாழ்வது இந்தப் பெண்ணுடன் தானா?" ஊடகவியலாளர்கள் சராமாரியாக அவனைக் கேள்வி கேட்டனர்.

"இது என்னோட பெர்சனல்... நீங்க எல்லாம் உங்க வேலையைப் போய்ப் பாருங்க." என்றவனுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது. அவனது வாழ்க்கை முறை பற்றிக் கேள்வி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

"ஊருக்குள் பெரிய மனிதர் நீங்க... அப்படி இருக்கும் போது உங்க வாழ்க்கையும் பொதுவில் தான் வைக்கப்படுகிறது. அதனால் நாங்க கேள்வி கேட்க தான் செய்வோம்." ஊடகவியலாளர்கள் கேள்விகள் கேட்க...

"இப்போது உங்களுக்குக் குழந்தை வேறு வந்திருக்கிறது. உங்கள் இருவரால் அந்தக் குழந்தை வேறு அவமானப்படணுமா? இப்படி முறையில்லாம வாழ உங்களுக்கு அசிங்கமா இல்லையா? இது பெண்களை இழிவுப்படுத்துற மாதிரி இருக்கு. இந்தப் பெண்ணைப் பார்த்து நாளைக்குப் பல பெண்கள் இது போன்று பணத்துக்காக இது மாதிரி தாலியில்லாம வாழ ஆரம்பிப்பாங்க. முதலில் இந்த மாதிரி பெண்களைச் சொல்லணும். பணத்தைக் கண்டதும் மயங்கி எப்படி வேண்டுமானாலும் வாழலாம்ன்னு நினைக்கிறாங்களே." மாதர் சங்க தலைவி அது பாட்டிற்குப் பேசி கொண்டே போக...

"ஸட்டப்... இவளை கண்டு மேலே ஒரு வார்த்தை பேசினாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன்." என்று சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆத்திரத்துடன் கர்ஜிக்க... அந்தப் பெண்மணி பயத்தில் வாயை மூடி கொண்டது.

"மாமா, நீ அமைதியா இரு." ஆதிசக்தீஸ்வரி அவனை அமைதியாக இருக்கச் சொன்னாள்.

"அதில்லை பொம்மாயி." அவன் ஏதோ சொல்ல போக...

"நீ பேசாம இரு மாமா. இது நான் பேச வேண்டிய விசயம்." என்று அவனிடம் கூறியவள் அந்தப் பெண்மணியிடம் திரும்பி, "இது என் வாழ்க்கை. என்னோட தனிப்பட்ட விசயம். இதில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இதுக்கே நான் உங்க மேல் வழக்கு பதிஞ்சு கோர்ட்டுக்கு இழுக்க முடியும்." என்று சொன்னதும் அந்தப் பெண்மணி திகைப்புடன் வாயை மூடி கொண்டார்.

"இங்கே பாருங்க... உங்க எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்றேன். நான் இவர் மேல் எந்தப் புகாரும் கொடுக்கலை. இது எங்கள் வாழ்க்கை. எங்கள் முடிவு. நீங்க எல்லாம் போகலாம்." என்று அவள் கையெடுத்து கும்பிட்டு சொல்ல... இப்போதும் அவள் தன்னை விட்டு கொடுக்காது பேசியதை கேட்டு அவன் வியப்பில் வாயடைத்துப் போனான்.

"பொம்மாயி..." அவன் கண்கள் கலங்க, மனம் நெகிழ அவளை அழைக்க...

"என்ன மாமா?" அவள் அவனைக் கண்டு திரும்பி பார்த்து கேட்க...

"இப்போ கூட நீ என்னிடம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்கலையே பொம்மாயி." அவன் ஆதங்கத்துடன் கேட்டான்.

"யாரேனும் என்னைக் கேவலப்படுத்த, அசிங்கப்படுத்த நீ விட்டுருவியா மாமா?" அவள் கேட்டதும் அவன் இல்லையென்று மறுப்பாய் தலையசைத்தான்.

"அப்போ எதுக்கு நான் கேட்கணும்? என் மாமா நீ எது செய்தாலும் அது என் நல்லதுக்காகத் தான் இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு." என்றவள் அவனது கரத்தை இறுக பற்றிக் கொண்டாள்.

அவளது நம்பிக்கை கண்டு அவனுக்கு உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் சுரந்தது. அவன் மெல்ல அவளது கரத்தினை விலக்கி விட்டு அவள் முன்னால் வந்து நின்றான் அவள் புரியாது அவனைப் பார்த்தாள். அவன் தனது பவுன்சர் ஒருவனிடம் கண்களைக் காட்ட... அவன் சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தை கொண்டு வந்து சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். அதைக் கையில் வாங்கிக் கொண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரியின் முன்னே மண்டியிட்டு,

"உலகறிய, ஊரறிய மாலை மாற்றி நாம திருமணம் செய்து கொள்ளலாமா?" என்று கேட்க... அவள் திகைத்து கண்ணீரோடு அவனைக் காண...

"நீ கேட்ட காதலை என்னால் சொல்ல முடியாது. ஏன்னு உனக்கே தெரியும். ஆனா ஒண்ணு மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும். என் உயிரே நீ தான்டி. உன்னை என் உயிர் போன்று, என் உயிர் உள்ள வரை பொத்தி பாதுகாப்பேன்." என்று அவன் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான்.

அவனது உயிரே அவள் தான் என்று அவன் சொன்ன பிறகு மறுத்து கூற அவளால் தான் முடியுமோ! அவள் கண்ணீரோடு சம்மதம் எனத் தலையசைத்தவள் அவனது கரத்தில் இருந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள். அவனது காதல் தான் அவளுக்குத் தெரியுமே! இனி அவள் அவனைத் திருமணம் செய்யத் தடையேது!

சிம்மஹாத்ரி சத்யநாராயணா எழுந்து நின்று அவளைத் தனது தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன், "என் மீது இத்தனை நம்பிக்கை வைத்திருக்கும் இவளின் நம்பிக்கையை நான் எப்போதுமே உடைக்க மாட்டேன். ஆம், இவள் என்னுடைய மனைவி, சட்டப்படியான மனைவி. ஊரறிய தாலி கட்டினால் தான் திருமணமா? காகிதத்தில் கையெழுத்துப் போட்டாலும்... அதுவும் திருமணம் தான். இந்தத் தகவல் உங்களுக்குப் போதுமா? இன்னும் வேறு எதுவும் வேண்டுமா? முறைப்படி எனது திருமண அழைப்பிதழோடு என்னுடைய திருமணச் சான்றிதழும் உங்கள் எல்லோருக்கும் வந்து சேரும். இப்போது நீங்க போகலாம்." என்று அங்குக் கூடியிருந்தவர்களைக் கண்டு அவன் இருகரங்களையும் கூப்பி விடைபெற்றான். உலகறிய, ஊரறிய என்று அவன் சொன்னதற்கான முழுமையான அர்த்தம் இப்போது அவளுக்குப் புரிந்தது. அவள் ஆனந்த கண்ணீரோடு அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

எல்லோரும் அவர்களை வாழ்த்திவிட்டு தங்களது பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு கலைந்து செல்ல... சிம்மஹாத்ரி சத்யநாராயணா அந்த மாதர் சங்க தலைவியைச் சொடக்கிட்டு அழைத்தான்.

"இப்படிப் பேச சொல்லி உங்களை யார் அனுப்பியது?" என்று அவன் கடுமையான குரலில் கேட்க...

"தவறு எங்கே நடந்தாலும் நாங்க தட்டி கேட்போம்." என்றவரை கண்டு,

"உண்மையைச் சொன்னால் சேதாரம் கம்மியா இருக்கும்." என்றவன் தனது பவுன்சரை பார்த்தான். அவனது விழி கூறிய செய்தியை கண்டு பயந்து போன அந்தப் பெண்மணி ரச்சிதாவை அவனிடம் போட்டு கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார்.
 

ஶ்ரீகலா

Administrator
அரண்மனை வரும் வரை சிம்மஹாத்ரி சத்யநாராயணா இறுகிய முகத்துடன் வந்தான். ஆதிசக்தீஸ்வரியை தனது வீட்டில் இருக்கச் சொன்னவன் ரச்சிதாவை தேடி செல்ல போக... அவளோ அவனைத் தடுத்தாள்.

"அவளை அப்படியே விடச் சொல்றியா? இனியும் சும்மா இருந்தால் அவள் நம்ம நிம்மதியை குழி தோண்டி புதைத்து விடுவாள்." அவன் கோபத்தோடு சொல்ல...

"அவள் வார்த்தைக்கு நீ மதிப்பு கொடுக்கிறியா மாமா?" அவள் கேட்டதற்கு அவன் இல்லை என்று தலையசைக்க...

"நானும் அப்படித்தான்... அவள் எல்லாம் பெரியாளுன்னு கண்டுக்காதே மாமா. நாம கண்டுக்கிட்டால் தான் அவள் வேணும்ன்னே ஏதாவது செஞ்சிக்கிட்டே இருப்பாள். சூரியனை பார்த்து நாய் குரைக்குதுன்னு கண்டுக்காம விட்டு பார். அவளே நம்மை விட்டு ஒதுங்கி போயிருவாள்." அவள் சொல்வது சரியென்றே தோன்றியது அவனுக்கு... அதனால் அவன் அமைதியாகச் சோபாவில் அமர்ந்தான். அவனது வேகம் சிறிது மட்டுப்பட்டு இருந்தது.

"அவளால் நமக்குள் இன்னும் இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டு இருக்கு மாமா. அதை நாம கொண்டாடலாமா?" அவள் அவனது மடியில் அமர்ந்து தனது நாசியைக் கொண்டு அவனது நாசியை உரசியபடி கூறினாள்.

"கொண்டாடலாமே..." என்றவனது கரங்கள் தன்னவளை கொண்டாட எண்ணி அவளை அள்ளி கொண்டது. பெண்ணவளை கொண்டாட அவன் தான் மறுப்பானோ!

இன்று இருவருமே மனதில் நிம்மதியுடன், சந்தோசத்துடன் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ள... என்றும் இல்லாத வண்ணமாய் இன்று கூடல் அதீதமாய்த் தித்தித்தது. அவனது நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவள்,

"மீடியாவுக்குப் பயந்துட்டு தான் என்னை வெளியில் கூட்டிட்டு போகாம இருந்தியா மாமா?" என்று கேட்க...

"பயந்துட்டுன்னு இல்லை... மீடியா என்னைப் பத்தி என்ன எழுதினாலும் பரவாயில்லை. ஆனா உன்னைப் பத்தி தப்பா எழுதி விட்டால்... உன்னைக் கேள்விகள் கேட்டுத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டால்? அதை எல்லாம் யோசிச்சு தான் நான் உன்னை வெளியில் கூட்டிட்டு போகலை. நமக்கு ஊரறிய கல்யாணமான பிறகு கூட்டிட்டு போகலாம்ன்னு இருந்தேன். ஆனா நீ இப்போ வரை கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்லையே."

"கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு பார்க்க முடியாத அளவுக்கு நீ என்னைச் சந்தோசமா தான் வச்சிருக்க மாமா. அதான் நான் கல்யாணம் என்கிற விசயம் இருக்கிறதையே மறந்து போயிட்டேன்." என்றவள் பிறகு ஞாபகம் வந்தவளாய்,

"எப்போ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்ட மாமா? அன்னைக்குத் திருமண மண்டபத்தில் கையெழுத்து வாங்கினியே அப்போதா? ஆனா அது எல்லாம் சொத்துப் பத்திரங்கள் போன்று இருந்ததே?" என்று யோசித்தபடி கேட்க...

"அப்போ இல்லை... அதுக்கு முன்னே..." என்றவனை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தவள்,

"எப்போ?" என்று கேட்க...

"ஜெய் ஹோட்டலில் நீ வேலைக்கு வந்த போது..."

"அங்கே நீ எப்படி வந்த?"

"அந்த ஹோட்டல் நிர்வாகம் எப்போதோ என்னுடைய கைக்கு வந்துவிட்டது. அவன் சும்மா உங்க கிட்ட பந்தா பண்ண மெயில் பண்ணியிருக்கான். நீ அங்கே வந்ததும் சில பேப்பரில் கையெழுத்து வாங்கினாங்களே. அதில் நம்ம மேரேஜ் ரெஜிஸ்ட்ரேசனும் ஒண்ணு..."

"அடப்பாவி பிராடு மாமா... உண்மையை மட்டும் பேசும் மாமா, என்னென்ன பிராடு வேலை எல்லாம் பார்த்து இருக்கு." அவள் செல்லமாய் அவனது நெஞ்சில் குத்தினாள்.

"பின்னே என்னை என்ன பண்ண சொல்ற? நீ திடீர்ன்னு வேலையை விட்டுட்டு போற... உன் முகம் வேற சரியில்லை. திரும்ப நீ என்னை விட்டு போயிருவியோன்னு எனக்குப் பயம். அதான் வேறவழியில்லாம இதைச் செய்தேன்." என்றவன் அவளைக் குனிந்து பார்த்து,

"இப்போ சொல்லுடி... என் பொண்டாட்டிக்கு வேற ஒருத்தன் தாலி கட்டுறதை என்னால் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? அதான் அதிரடியா உன்னை வந்து தூக்கினேன்." என்று கூறி சிரித்தவனை அவள் காதலோடு அணைத்து கொண்டாள். இதைவிட வேறு என்ன வேண்டும் அவளுக்கு?

"கல்யாணமானதை ஏன் மறைச்ச மாமா? சொல்லியிருக்கலாமே..."

"சொன்னால் மட்டும்... நீ உடனே ஓடி வந்துரவா போற? அடுத்து விவாகரத்து கொடுன்னு பிடிவாதம் பிடிப்ப... அதான் ஊரறிய கல்யாணம் பண்ண கெஞ்சிட்டு இருந்தேன். நீ மிஞ்சிட்டு இருந்த... பார்த்தேன், சரி வராதுன்னு உன்னைக் கட்டம் கட்டி தூக்கிட்டேன்." என்றவனுக்குச் சிரிப்பு வந்தது.

"அப்போ எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?" அவள் முகத்தைச் சுருக்க...

"அப்போ கூட நீ கல்யாணம் கட்டிக்கோன்னு கேட்கலையேடி." ஆதங்கத்துடன் சொன்னவனைக் கண்டு அவள் விழிகள் விரிய பார்த்தாள்.

"நீ அப்படிக் கேட்டு இருந்தால்... என்ன தான் உன் மேல் எனக்குக் கோபம் இருந்தாலும் நம்ம கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தி காட்டிருப்பேன். ஆனா நீ கேட்கலை. சரி நமக்கு வாய்ச்சது முதலிரவு தான்னு... சாரி சாரி, நேரே இரண்டாவது இரவுக்குப் போயிட்டேன்."

"அதானே பார்த்தேன்... மாமா வில்லனா மாறிட்டியோன்னு... நீ ஹீரோ தான் மாமா." அவள் அவனது மீசையை முறுக்கி விட்டு சிரிக்க...

"ஒரு முறை அங்கீகாரம் இல்லாது உன்னைத் தொட்டதுக்கே ஒவ்வொரு நொடியும் வருந்தியவன் நான். அப்படிப்பட்ட நான் உன்னை முறையில்லாது தொடுவேனா பொம்மாயி?" அவன் மீதான கண்மூடித்தனமான தனது நம்பிக்கை எதனால் என்று இப்போது அவளுக்குப் புரிந்தது. அவளுக்காகவே வாழும் அவன் அவளது நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டான். இதைவிடப் பெண்ணவளுக்கு வேறென்ன வேண்டும்!

"நீ எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் மாமா." மனம் கனிய சொன்னவளை அவன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"குழந்தையைச் செக்கப் பண்ணி முடிச்சதும் நானே உன் கிட்ட கல்யாணத்தைப் பத்தி கேட்கணும்ன்னு நினைச்சு தான் பூங்கொத்தை வாங்கிட்டு வர சொன்னது. அதற்குள் இடையில் என்னென்னமோ நடந்து ஹாஸ்பிட்டலில் வைத்து கேட்க வேண்டியதாய் போயிற்று. உனக்குச் சம்மதம் தானே?"

"எனக்குக் கல்யாணம் பண்ணினாலும் ஒண்ணு தான். பண்ணலைன்னாலும் ஒண்ணு தான். உன் கிட்ட இருக்கும் போது நான் பாதுகாப்பா, நிம்மதியா உணர்றேன். இதுவே எனக்குப் போதும்." அவன் மீதான அவளது நம்பிக்கை கண்டு அவனுள் நேசம் பெருகியது. இதைவிட ஒரு ஆணுக்கு வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்!

"நான் தேடியது எனக்குக் கிடைத்து விட்டது." என்றவன் அவளது உச்சந்தலையில் அழுத்தி முத்தமிட்டான். அவன் தேடிய காதல் இது தானே... தன்னைக் கண்மூடித்தனமாக நம்பும் அவளது காதல் கண்டு அவனுக்குக் காதல் மீது சிறு நம்பிக்கை வந்தது. அவள் விழி மூடி அவனது முத்தத்தை ஏற்றுக் கொண்டாள். இருவரது மனதிலும் சொல்லொண்ணா நிம்மதி நிலவியது.

இருவரிடையே பேச படாத கதைகளும், விளக்கி சொல்லா விளக்கங்களும் நிறைய இருந்தது. இருவரும் பேசி தீர்க்க வேண்டிய விசயங்கள் இன்னமும் அப்படியே இருந்த போதும்... அவர்களது அன்பில் சிறு சுணக்கம் கூட ஏற்படவில்லை. சொல்ல போனால் இப்போது அவர்களது அன்பு இன்னமும் அதிகரித்துத் தான் காணப்பட்டது

******************************

விசயம் கேள்விப்பட்டுப் பவன்ராம், ராஜ்குமார், பூஜிதா, உதய்பிரகாஷ், காயத்ரி, விஷ்ணு என்று அனைவரும் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மற்றும் ஆதிசக்தீஸ்வரியை கண்டு வாழ்த்து சொல்ல நேரில் வந்துவிட்டனர். வேங்கடபதி தேவா, கங்காதேவி இருவரும் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு இருவரையும் வாழ்த்தினர். அதே போன்று ரங்காராவ், அருந்ததி இருவரும் அலைப்பேசியில் வாழ்த்தினர்.

மகளது திருமணத்திற்காகச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா எடுத்த முயற்சிகள், தங்கை திருமணத்திற்காக அவன் பணத்தை வாரியிறைப்பதை கண்டு ராணியம்மா கூட அவர்களை வாழ்த்த அங்கு வந்து விட்டார். அதிலும் முறைப்படி திருமணம் செய்த விசயம் கேட்டு அவர் சற்று அடங்கித்தான் போனார். எல்லாவற்றையும் விடச் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை பகைத்துக் கொண்டால் தான் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்கிற உண்மையை அவர் தாமதமாக உணர்ந்து கொண்டார். அதை மகளது திருமண விசயங்களில் கண்டும் கொண்டார். அதனால் அவர் தனது வாய்க்கு பெரிய பூட்டை போட்டு பூட்டி கொண்டார். மாமியார் சென்ற பிறகு மருமகள் அங்குப் போகாது இருக்க முடியுமோ? ஜெகதீஸ்வரியும் வேறுவழியில்லாது அங்கு வந்து தங்கையை வாழ்த்தினாள்.

அவர்களை வாழ்த்த விரும்பாத ஜென்மங்கள் என்று பார்த்தால் இராஜராஜேஸ்வரியும், ரச்சிதாவும் தான். இராஜராஜேஸ்வரி தனது உயரத்தில் இருந்து இறங்கி வர விரும்பவில்லை. தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காத மகளை அவருக்குப் பிடிக்கவில்லை. ரச்சிதா சிம்மஹாத்ரி சத்யநாராயணா மீது கொண்ட வன்மத்தில் இருந்து மாறவே இல்லை.

ஜெய்பிரகாஷ் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்... அவன் பயத்தில் சுற்றிக் கொண்டு இருந்தான். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும், ராஜ்குமாரும் ஒன்று சேர்ந்த பிறகு ஜெய்பிரகாஷ் அண்ணனை சந்திப்பதை அறவே தவிர்த்து வந்தான். விசயம் மட்டும் அவன் கேள்விப்பட்டான் என்றால்... இவனது முதுகு தோல் உரிவது நிச்சயம்... அந்தப் பயத்தில் ஜெய்பிரகாஷ் இருந்தான்.

பவன்ராமை கண்டதும் விஷ்ணு ஓடி வந்துவிட்டான். பவன்ராமும் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டான்.

"நீங்க எப்படி எங்க மாமா வீட்டில்?" அவன் புரியாது கேட்க...

"உன் மாமா எனக்குப் பிரெண்ட்." என்று பவன்ராம் சொல்ல...

"அப்போ நாம கிளோஸ் பிரெண்ட்..." என்று குதூகலத்துடன் சொன்ன சின்னவன் அவனைக் கட்டி கொள்ள...

"இன்னமும் கிளோசாகத் தான் முயற்சிக்கிறேன்." என்று பவன்ராம் முணுமுணுத்தபடி தொலைவில் அமர்ந்திருந்த காயத்ரியை பார்த்தான். அவளோ அவனைக் கண்டு கொள்ளாது ஆதிசக்தீஸ்வரியிடம் பேசி கொண்டு இருந்தாள்.

பிறகு நண்பர்கள் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். ராஜ்குமார் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவிடம், "டேய் சத்யா, சிஸ்டர் உனக்குக் கிடைச்சதுக்கு நீ எனக்குத் தான்டா நன்றி சொல்லணும்." என்று திடுமெனக் கூற...

"இவன் காதல் கதையில் நீ எங்கேடா வர்ற?" பவன்ராம் புரியாது விழித்தான்.

"அதானே... உனக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?" சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.

"ஜெய் எதற்காகச் சிஸ்டரை கல்யாணம் பண்ண சம்மதிச்சான்னு தெரியுமா?" ராஜ்குமார் கேலி குரலில் கேட்க...

"எல்லாம் அம்மா சொல்லித்தான்..." சிம்மஹாத்ரி சத்யநாராயணாவின் குரல் இறுகி ஒலித்தது.

"அதான் இல்லை. நான் சொல்லித்தான்." என்ற ராஜ்குமாரை இருவரும் திகைப்புடன் பார்த்தனர்.

"ஆமா, எனக்குச் சத்யா பழைய சிம்மாவா வரணும்ன்னு ஆசை. பழிவாங்கத்தான் ஒத்துக்கிறேன். அமைதியா இருக்கிற சத்யாவை எனக்குப் பிடிக்கலை. அதான் சிம்மாவை வெளிவர செய்ய ஜெய் கிட்ட பேரம் பேசினேன். ஜெயும் பணத்துக்காக ஒத்துக்கிட்டான்." ராஜ்குமார் சொன்னதைக் கேட்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குத் தம்பி மீது கோபம் வந்தது.

"இவனை..." என்று அவன் பல்லை கடித்தான்.

"பணத்துக்காக நடக்கும் கல்யாணம்... நிச்சயம் சத்யா அந்தப் பணத்தைத் தூக்கி எறிஞ்சிட்டு சிஸ்டரை கூட்டிட்டு போவான்னு நம்பினேன். அதே மாதிரி தான் நடந்துச்சு." என்று ராஜ்குமார் கலகலவெனச் சிரித்தான்.

"அடப்பாவி..." பவன்ராம் ராஜ்குமாரை பிடித்து மொத்தினான்.

"எனக்கு அப்பவே தெரிஞ்சிருக்குடா... சத்யா சிஸ்டரை விட்டு கொடுக்க மாட்டான்னு... நான் தான் அவன் மனசை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்." என்ற ராஜ்குமார் பவன்ராமின் அடிகளைச் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.

"நல்லது தானே நடந்திருக்கு விடுடா..." என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா ராஜ்குமாரை அணைத்துக் கொண்டு நன்றி சொன்னான்.

"ஆனா ஜெய் நல்லா ஏமாந்துட்டான்டா. கடைசிவரை நான் பேசிய பணத்தைக் கொடுக்கவே இல்லை." ராஜ்குமார் கண்ணைச் சிமிட்டியபடி கூற...

"அடேய் ஏமாத்துக்காரா..." இப்போது நண்பர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை மொத்தினர். அங்கே மகிழ்ச்சி அலை பரவியது.

"உன்னைப் போல் ஒருத்தி,
என் குணம் கொண்டு,
என் மகளாய் பிறக்க,
காத்திருக்கிறேன், வழி
பார்த்திருக்கிறேன். விழி
பூத்திருக்கிறேன்..."

நீயாகும்...!!!
 
Status
Not open for further replies.
Top