All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு) ளும் காதலா!!!’ - இரண்டாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
***********************



"எங்க எல்லோரையும் பதற வச்சிட்டு... இவ்வளவு நேரம் நீ எங்கேடி போய்த் தொலைஞ்ச?" விஜயா மகளைப் பிடித்து உலுக்கினார். சகுந்தலாவோ இடித்த புளி போன்று அசையாது அமர்ந்து இருந்தாள். அவளது கருவிழிகள் மட்டும் நிலையில்லாது அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தது.



"விஜயா..." எப்போதும் அமைதியை கடைப்பிடிக்கும் சர்வேஸ்வரனுக்கே இன்று விஜயா மீது கோபம் வந்து விட்டது.



விஜயா மகளை விட்டு விலகி நின்றவர், "எல்லோரும் நான் திட்டுறதை தான் பார்க்கிறீங்க? ஆனா என்னோட கோபத்துக்குப் பின்னாடி இருக்கும் என்னோட வேதனையை யாரும் பார்க்க மாட்டேங்கிறீங்க. சக்குவுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்ன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை. அதே மாதிரி அவளோட கல்யாணமும் நல்லபடியா நடந்து முடிஞ்சது. ஆனா அந்த வாழ்க்கையைத் தக்க வைக்க அவளுக்குத் தெரியலையே. எல்லாம் நல்லா தானே போயிக்கிட்டு இருந்துச்சு. இப்போ ஏன் இவள் இப்படிப் பைத்தியக்காரி மாதிரி நடந்துக்கிறா?" என்று அவர் ஆதங்கத்துடன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.



அவர்கள் தவம் செய்தாலும் கூடச் சகுந்தலாவுக்குச் சக்தீஸ்வரன் போன்று ஒருவனை மாப்பிள்ளையாகக் கொண்டு வர முடியாது. கடவுள் புண்ணியத்தில் அவளுக்கு அவன் கணவனாக வந்திருக்கின்றான். அதைத் தக்க வைத்து கொள்ளாது அவள் இப்படி இருப்பது கண்டு அவருக்கு ஆற்றாமையாக இருந்தது.



சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் என்ன பேசுவது என்று தெரியாது நின்றிருந்தனர்.



"ம்மா, நீங்க பேசாம இருங்க. சக்தி எல்லாத்தையும் பார்த்து கொள்வான்." நாராயணன் அன்னையைச் சமாதானப்படுத்தினான்.



பத்மினி இதை எல்லாம் கண்டு கொள்ளாது சகுந்தலாவின் உடல்நிலையைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தாள். குழந்தை உண்டாகி இருக்கும் இந்த நேரத்தில் சகுந்தலாவின் ஓய்ந்த தோற்றம் கண்டு பத்மினிக்குப் பயமாக இருந்தது. அதனால் அவள் ஒரு மருத்துவராய் சகுந்தலாவை பரிசோதித்தாள்.



"எல்லாம் ஓகேவா?" அப்போது அங்கு வந்த சக்தீஸ்வரன் தங்கையிடம் கேட்டான்.



"பிபி எல்லாம் நார்மல் தான் அண்ணா." பத்மினி கூறியதும்...



சக்தீஸ்வரன் எல்லோரையும் பார்த்தவன், "யாரும் சக்குவை தொந்தரவு பண்ணாதீங்க." என்று கூறினான். அவன் சொன்ன பிறகு யாரும் மறுக்கக் கூடுமோ!



"மினி, சக்குவை ரூமுக்கு அழைச்சிட்டு வா." என்று தங்கையிடம் கூறியவன், "சாந்திக்கா, சாப்பாடை ரூமுக்கு எடுத்துட்டு வாங்க." என்று சாந்தியிடம் பணித்து விட்டு அவன் சென்றான்.



பத்மினி சகுந்தலாவை அவர்களது அறைக்கு அழைத்து வந்தவள் படுக்கையில் அமர வைத்தாள். சாந்தி உணவினை வைத்து விட்டுச் செல்லும் வரை அமைதியாக இருந்தவள் பின்பு அண்ணன் புறம் திரும்பி,



"சக்கு ஏதோ ஷாக்ல இருக்கிற மாதிரி இருக்கு. எதுவும் கேட்டுச் சண்டை போட்டுறாதீங்க அண்ணா. ப்ளீஸ்..." என்று மன்றாடி கேட்டு கொண்டாள்.



"உன் அண்ணி என் கிட்ட சண்டை போடாமல் இருந்தால் போதும்." அவன் சிரித்துக் கொண்டே சொல்ல... அண்ணனது சிரிப்பினை கண்டு பத்மினி நிம்மதி கொண்டவளாய் விடைபெற்று சென்றாள்.



தங்கை சென்றதும் சக்தீஸ்வரன் மனைவி முன்னே வந்தமர்ந்தான். அவளோ அவனைக் காணாது விழிகள் அலைப்புற அமர்ந்து இருந்தாள். அவளது செயல் அவனுக்கு வித்தியாசமாகப் பட்டது. ஆனால் இந்த நிலையில் அவளிடம் கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அவன் அவளுக்கு உணவினை ஸ்பூனால் ஊட்டி விட ஆரம்பித்தான். முன்பு என்றால் கையினால் ஊட்டி விடுவான். ஆனால் இப்போது அவள் அவனைக் கண்டு 'தொடாதே' என்று சொன்ன பின்னர்... அவளது வார்த்தையை மீறி அவனால் அவளைத் தொட முடியவில்லை.



சகுந்தலா கணவன் கொடுத்த உணவினை தன்னிச்சை செயல் போன்று வாங்கிக் கொண்டாள். அதுவும் அவள் உணவினை வேகமாக உண்டதை கண்டு அவனது விழிகள் கலங்கி போனது. அவள் காலையில் சாப்பிட்டு விட்டுச் சென்றது. அதன் பிறகு அவள் எதையும் உண்டிருக்கவில்லை போலும்.



'உனக்கு என்னடி ஆச்சு?' அவன் மனதிற்குள் அவளிடம் கேட்டான். அவளது நிலை கண்டு அவனுக்குப் பாவமாக இருந்த அதேசமயம் பயமாகவும் இருந்தது.



சகுந்தலாவுக்கு உணவினை ஊட்டி விட்டு உறங்க செய்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். சில நிமிடங்களில் சகுந்தலா களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று இருந்தாள்.



இரவு உணவுக்கு வந்து அழைக்கும் வரை சக்தீஸ்வரன் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. தனது பார்வையையும் மனைவியை விட்டு வேறு எங்கும் திருப்பவில்லை. அன்னை நேரில் வந்து அழைக்கவும் தான் அவன் உணவு உண்ண சென்றான். இல்லை என்றால் அதைக் கூட அவன் செய்திருக்க மாட்டான்.



சக்தீஸ்வரன் சாப்பிட்டு விட்டு மனைவிக்கும் உணவினை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். அப்போது சகுந்தலா எழுந்து அமர்ந்து இருந்தாள். இப்போது அவள் சற்று தெளிவாக இருந்தது போலிருந்தது.



"இப்போ பரவாயில்லையா சகி?" அவன் கேட்டதும்... அவனை ஏறிட்டு பார்த்தவள் ஆம் என்பது போல் தலையாட்டினாள்.



"சாப்பிடுறியா?"



"ம்..." என்று முனங்கியவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.



சகுந்தலா குளித்து முடித்து வரும் வரை சக்தீஸ்வரன் காத்திருந்தான். அவள் வந்ததும் அவன் உணவினை எடுத்து நீட்ட... அவளும் மறுக்காது வாங்கி உண்டாள். அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அலைப்பேசியைப் பார்ப்பது போல் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.



இலகுவான இரவு உடை தான் அவள் அணிந்து இருந்தாள். இப்போது தான் குளித்ததால் அவளது முகத்தில் ஆங்காங்கே நீர் திவலைகள் நின்று வைரங்களாய் ஜொலித்து அவளைப் பேரழகியாய்க் காட்டியது. காதல் கொண்ட கண்ணால் பார்க்கும் போது அனைத்தும் அழகாகத் தானே தெரியும். அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. அவனது காதல் கொண்ட மனது அந்த நிலையிலும் மனைவியிடம் மயங்கி கிறங்கி தவித்தது.



"உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்

உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்

உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!

நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்”



சகுந்தலா உணவினை உண்டு முடித்து விட்டு அவன் முன்னே வந்து நின்றாள். அப்போதும் கூட அவன் அவளிடம் எங்கே சென்றாய்? என்று கேட்கவில்லை. அவளுக்கு விருப்பம் இருந்தால் அவளே சொல்லட்டும் என்று அமைதி காத்தவனாய் அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.



காலையில் இருந்து வெயிலில் சுற்றி இருப்பாள் போலும். அவளது முகம், கழுத்து, கை என்று அனைத்தும் நிறம் மாறி இருந்தது. ஒரே நாளில் சகுந்தலா ஓய்ந்து போனார் போன்று இருந்தாள். ஒரே நாளில் பெண்ணவள் அடியோடு மாறி போயிருந்தாள். என்னவானது இவளுக்கு? அந்த யோசனை தான் அவனுக்கு...



"எனக்கு விவாகரத்து கொடுத்துருங்க." அவளது வார்த்தைகளில் அவன் கோபமாய் ஏதோ சொல்ல போனவன்... அவளது விழிகளில் அரும்பி இருந்த கண்ணீரை கண்டு தன்னை அடக்கி கொண்டான்.



"சகி..." அவன் பேச வரும் முன்... அவள் அந்த இடத்தைக் காலி செய்திருந்தாள்.



சகுந்தலா கணவனது பதிலை கூட எதிர்பாராது பால்கனிக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவளது விழிகள் இருண்ட வானை வெறித்துக் கொண்டிருந்தது. அவளது விழிகளில் இருந்து கண்ணீர் விடாது வடிந்து கொண்டிருந்தது. அவனுக்கே அவளைக் கண்டு ஒரு மாதிரியாய்ப் போய்விட்டது. ஆனால் அதற்காக அவளைப் பிரிந்திருக்க அவனால் இயலுமோ?



எந்த நிலையிலும் விவாகரத்துக் கொடுக்கக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.



நாளையே அவனது உறுதி குலைய போவதை பற்றி அவன் அந்நேரம் அறிந்திருக்கவில்லை.



“நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா!

உயிர் சுமக்கின்ற காதலும் உனது அல்லவா!”



வெகுநேரம் கழித்துச் சகுந்தலா தலையைத் திருப்பி உள்ளே பார்த்தாள். அவளது கணவன் அமர்ந்த வாக்கில் உறங்கி போயிருந்தான். அவள் அவனை இமைக்க மறந்து பார்த்தாள், பார்த்தாள், பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளையும் அறியாது அவளது கரங்கள் அவளது வயிற்றினை இறுக பற்றிக் கொண்டது. எதையோ நினைத்து வேதனையுற்றவளின் விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது.



அந்த நொடி கணவனது பிம்பம் அவளது பார்வை வட்டத்தில் இருந்து மெல்ல மறையலானது. கண்ணீர் கணவனது பிம்பத்தை மறைத்தது. இது போன்று தான் அவனும் அவளது வாழ்க்கையை விட்டு மறைய போகின்றான். அதை நினைத்து அவளது அழுகை இன்னமும் அதிகரித்தது.



சிலநேரம் காதல் கொள்ளும்... சிலநேரம் காதல் கொல்லும்... இப்போது காதல் அவளைக் கொன்று கொண்டிருந்தது.



“உன் பிழை தாண்டி நான் உன்னை நேசிக்கவா!

இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா!”



தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top