All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு) ளும் காதலா!!!’ - இரண்டாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 29



அதிகாலையில் எழுந்த நாராயணன் குளித்து முடித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தான். நேற்று வரை திருமணத்திற்குப் பின் வரும் நிகழ்வுகள், அது இதுவென்று பிசியாக இருந்தாயிற்று. இன்று முதல் அவன் வேலைக்குச் செல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் அவன் தேனிலவு பற்றி எல்லாம் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. தேனிலவு என்றதும் அவனது மனம் தானாக மனைவியைப் பற்றி யோசிக்கலானது.



அன்று அவன் என்னமோ வில்லன் போன்று அவளிடம் பேசி விட்டான் தான். பேசிய பிறகு தான் அவனுக்குத் தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. 'என்னடா பேசி வச்சிருக்க?' அவன் தன்னைத் தானே கடிந்து நொந்து போனான். மீண்டும் அறை பக்கம் செல்லவே அவனுக்குப் பயமாக இருந்தது. எங்கே மனைவி கோபப்பட்டுக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளோ? அல்லது சர்வேஸ்வரனிடம் தன்னைப் பற்றிக் குறை கூறி அழுது புலம்புவாளோ? அல்லது தன்னுடன் வாழ மாட்டேன் என்று அவளது தந்தையிடம் புகார் கூறி பிறந்த வீட்டிற்குச் சென்று விடுவாளா? இப்படிப் பல யோசனைகள் அவனுள்...



ஆனால் நாராயணன் நினைத்தது போன்று பத்மினி எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை. அவள் அமைதியாக இருந்தாள். அவசியம் ஏற்பட்டால் ஒழிய, அநாவசிய பேச்சுகள் கிடையாது. இதில் முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால்... இருவருக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் இருவீட்டினருக்கும் தெரியாது பத்மினி கவனமாகப் பார்த்து கொண்டாள், நடந்து கொண்டாள். அதுவே அவனுக்குப் பெருத்த நிம்மதியை கொடுத்தது. மனைவி மீது மதிப்பை ஏற்படுத்தியது.



நாராயணன் யோசித்துக் கொண்டே மாடியில் இருந்து கீழிறங்கி வந்தான். இன்னமும் அவனது பெற்றோர் எழுந்து இருக்கவில்லை. வீட்டுப் பெண்கள் மூவரும் தத்தம் கணவரது வீட்டிற்குச் சென்று விட்டனர். நேற்று வரை திருமண வீடு என்பதால் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே இறைந்து கிடந்தது. ஆனால் இன்று எல்லாம் ஒதுக்கப்பட்டு வீடு சுத்தமாக இருந்தது. அவனது அன்னையால் ஒருவராக இத்தனை வேலைகளைச் செய்ய இயலாது. நிச்சயம் பத்மினி தான் இதை எல்லாம் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒரே இரவில் இதனைச் செய்து முடித்திருக்க வேண்டும். பத்மினியின் வீட்டில் அவளுக்கு வேலை செய்ய அத்தனை ஆட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவள் அலட்டல் இல்லாது தனது வீட்டில் பாந்தமாய்ப் பொருந்தி போயிருப்பதைக் கண்டு அவன் பெருமிதம் கொண்டான்.



நாராயணன் சமையலறைக்குள் நுழைந்த போது பத்மினி சமைத்து கொண்டிருந்தாள். அவனது வரவினை உணர்ந்து திரும்பி பார்த்தவள்... ஒன்றும் பேசாது அவனுக்குக் காபி கலந்து கொடுத்துவிட்டு தனது வேலையைத் தொடரலானாள்.



"நீ காபி குடிச்சியா மினி?" அவன் அவளிடம் கேட்டுக் கொண்டே அவள் அருகே வந்தவன்... அங்கிருந்த திண்டில் சாய்ந்து நின்றான்.



கணவனது அருகாமை பத்மினியை மூச்சடைக்க வைத்தது. இருவரது தோள்களும் லேசாக உரசி கொண்டது. காதல் கொண்ட மனதில் சிறு உராய்வு கூடப் பெரும் காதல் தீயை பற்றி எரிய வைத்தது. அவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயல...



"உன் கிட்ட தான் கேட்கிறேன் மினி." அவன் அவளது கரத்தினை அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டு கேட்க...



"ப்ச், விடுங்க நானா." அவள் தனது கரத்தினை விடுவிக்கப் போராட...



"பதில் சொல்லு... விடறேன்." அவன் அவளிடம் வம்பு வளர்க்க...



"குடிச்சிட்டேன்." அவள் பதில் சொன்ன பிறகே அவன் அவளது கரத்தினை விடுவித்தான்.



கணவன் அழுத்தி பிடித்ததால் சிவந்து போன தனது கை மணிக்கட்டை பத்மினி தேய்த்து விட்டுக் கொள்ள...



"இதுக்கே இப்படி என்றால்... இன்னும் இருக்கிறதே." அவன் அவளைப் பார்த்துக் கொண்டே முணுமுணுக்க...



அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது. அதை அவனுக்குக் காட்டாது அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.



"என்ன சமையல்? நான் சமைக்கவா? இல்லை காய் எதுவும் வெட்டி தரவா?" அவன் கேட்டுக் கொண்டே அடுப்பினை பார்த்தான்.



"காலையில் தோசை, தக்காளி சட்னி. சட்னிக்கு வதக்கி வச்சாச்சு. அரைக்க மட்டும் செய்யணும். மதியத்துக்குச் சாதம், சாம்பார், கேரட் பொரியல்." அவள் சொல்லவும்...



"சரி, நான் காய்கறிகளை வெட்டுறேன்." என்றவன் மனைவிக்கு உதவியாய் காய்கறிகளை வெட்ட தொடங்கினான்.



நாராயணனின் இந்தப் பண்பு பத்மினிக்கு எப்போதுமே பிடிக்கும். 'நான் ஆண்' என்று அகங்காரம் கொண்டு அவன் என்றுமே நடந்து கொண்டது இல்லை. தங்கைகள் வீட்டில் இருக்கும் போதே அவன் அவர்களை எதிர்பார்க்காது சமைப்பான். இப்போது மனைவி வந்த பிறகும் அவன் மாறவே இல்லை. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க...



"அதே கண்கள், மூக்கு, வாய் தான் இப்போதும் இருக்கிறது." அவன் கேரட்டை வெட்டி கொண்டே சொல்ல...



அவள் திடுக்கிட்டவளாய் தனது பார்வையைத் திருப்பிக் கொள்ள... அவன் அவள் பக்கமாய் லேசாய் சாய்ந்து,



"நீ ரசித்துப் பார்க்க தான்டி நான். நல்லா பார்த்து ரசி. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." என்று குறும்பு குரலில் கூற... அவன் சொன்னது கேட்டு அவளது முகம் மாறிப் போனது.



"உங்களை நான் மட்டுமா ரசித்தேன்?" இதைக் கேட்கும் போதே அவளது விழிகள் கலங்கி போனது. கணவன் ஏற்கெனவே ஒருத்தியை காதலித்தவன் என்பதை அவளால் இன்னமும் தாங்கி கொள்ள முடியவில்லை.



"மினி..." அவன் என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான்.



பத்மினி பூஜையறையில் வைத்து பூஜிக்க வேண்டிய பெண். அப்படிப்பட்டவளை கண்கலங்க வைத்த தன்னைக் குறித்தே அவனுக்கு அத்தனை கோபம் வந்தது. இந்தக் காதல் தனக்கு வராமலேயே இருந்திருக்கலாம். திருமணத்திற்குப் பின்பு காதலித்துத் தொலைத்திருக்கலாம். இதை நினைத்ததுமே அவன் உள்ளுக்குள் திடுக்கிட்டுப் போனான். அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்? பத்மினி பக்கம் மனம் சாயத் தொடங்கி விட்டதா? அல்லது மஞ்சள் கயிறு மாயமோ? அவன் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்தான்.



"இங்கே என்ன பார்வை? வேலையைப் பாருங்க." பத்மினி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு சாதாரண மனைவி மோடுக்கு சென்றவள், அவனை முறைத்து பார்த்தாள்.



நாராயணன் எதுவும் பேசாது காயை வெட்ட தொடங்கினான். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் இணைந்து சமையலை முடித்து இருந்தனர். அனைத்தையும் உணவு மேசையில் எடுத்து வைத்தனர். நாராயணன் அலுவலகம் செல்வதற்காகத் தங்களது அறைக்குச் சென்று விட்டான். அப்போது பார்த்து கணபதி எழுந்து வந்துவிட்டதால்... பத்மினி அவருக்குக் காபி போட்டு கொடுத்தாள். அடுத்து விஜயாவும் வந்துவிட... அவள் அவருக்கும் சேர்த்து காபி போட்டு கொடுத்தாள்.



பத்மினி அறைக்குள் நுழையும் போது நாராயணன் கிளம்பி தயாராக இருந்தான். பத்மினி தனது உடையை எடுத்து வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க...



"சீக்கிரம் டிரெஸ் மாத்து. சாப்பிட்டுட்டு கிளம்ப நேரம் சரியா இருக்கும்." என்று அவன் கூற...



"முதல்ல வெளியே போங்க. நீங்க இருந்தால் நான் எப்படி டிரெஸ் மாத்துறது?" அவள் சிடுசிடுக்க...



"நான் இங்கே தான் இருப்பேன்." அவன் சட்டமாகக் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.



"ப்ச்..." என்றவள் வேகமாக அவன் அருகே வந்து அவனது கரத்தினைப் பற்றி, "ஒழுங்கா ரூமை விட்டு போங்க நானா. எனக்கு நேரமாகுது." என்று கத்த...



"நான் உன் புருசன்டி. நீ டிரெஸ் மாத்தும் போது நான் வெளியில் போறதை யாராவது பார்த்தால்... தப்பா நினைப்பாங்க."



"நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். முதல்ல கிளம்புங்க." அவள் கறார் ஆசிரியையாக மாறி சொல்ல...



நாராயணன் விரிந்த புன்னகையுடன் அவளது கரத்தினைச் சுண்டியிழுத்தான். அவனது திடீர் செயலில் அவள் அவன் மீதே விழ... அவன் அவளை அணைத்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தான். அவள் திகைப்பாய் அவனைப் பார்க்க... அவனோ குறும்பாய் அவளையே பார்த்தான்.



"விடுங்க நானா..." அவள் எழ முயற்சிக்க...



"உன் மனசில் நான் கணவன் என்கிற எண்ணம் இல்லை. அதான் இப்படி எல்லாம் பேசுற. இது ரொம்பத் தப்பாச்சே." என்றவன் அடுத்த நொடி அவளது இதழ்களைச் சிறை செய்திருந்தான்.



பத்மினி முதலில் திகைத்தவள் பின்பு அவளையும் அறியாது கிறங்கி விழிகளை மூடி கொண்டாள். ஆணவன் சாதாரணமாகத் தான் பெண்ணவளின் இதழ்களைக் கொய்தான். அதன் பிறகே பெண்ணவளின் இதழ்கள் அவனைச் சுழல் போன்று இழுத்து கொண்டதை உணர்ந்தான். மீளவே விரும்பாத சுழல் இது. அவன் விரும்பியே அவளது இதழ்களில் புதைந்தான். அவளும் கணவனது கரங்களில் சமத்தாய் அடங்கி இருந்தாள். அந்நேரம் நாராயணனின் அலைப்பேசி அலறியதில் தான் இருவருமே நிகழ்காலத்திற்கு வந்தனர்.



பத்மினி அவசரமாக அவனிடம் இருந்து விலகி எழ... நாராயணனோ நிதானமாய் எழுந்தான்.



"இப்போதும் நான் வெளியில் போகணுமா?" அவன் கேட்கவும்... அவளது முகம் நாணத்தில் சிவந்து போனது.



"ப்ளீஸ் நானா..." அவளது கோபம் எங்கே போனது என்று தெரியவில்லை.



"நீ ப்ளீஸ் சொன்னதால் போகிறேன். ஆனால் சில சமயங்களில் இந்த ப்ளீஸ் உதவாது." என்றவன் அவளது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட்டான்.



பத்மினி தாழ்ப்பாள் போட்டு விட்டு உடை மாற்ற தொடங்கினாள். அவளது மனம் கணவன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது. 'எந்தச் சமயங்களில் ப்ளீஸ் உதவாது?' என்று தீவிரமாக யோசித்தவளுக்கு மிகவும் தாமதமாகப் பல்ப் எரிந்தது.



"நானா, நீங்க ரொம்ப மோசம்." கோபத்துடன் வரவேண்டிய வார்த்தைகள் என்னவோ சிணுங்கலுடன் வந்தது.



இருவரும் உணவு உண்டுவிட்டு தங்களது வேலைக்குப் புறப்பட்டனர். நாராயணன் வண்டியை உருட்டி கொண்டு வர... பத்மினி நாராயணனுடன் இணைந்து நடந்தாள். அவளது பிறந்த வீட்டின் வாயிலை கடந்து தான் இருவரும் வெளியில் செல்ல வேண்டும். அப்போது நாராயணனையும் அறியாது அவனது விழிகள் அந்த வீட்டின் வாயிலை பார்த்தது. அங்குத் தான் சகுந்தலா நின்று கொண்டு ஏதாவது ஒரு வேலை பார்த்து கொண்டிருப்பாள். அவனைக் கண்டதும் அவள் உற்சாகமாய் 'அண்ணே, டாட்டா' என்று சிறுபிள்ளை போன்று கையாட்டி மகிழ்வாள். தங்கையின் நினைவில் அவனது முகத்தில் சோகம் படர்ந்தது. தீவிற்குத் தனியே சென்ற தங்கை இப்போது எப்படி இருக்கிறாளோ என்று...



"ஹலோ அண்ணா, எப்படி இருக்கிறீங்க? சக்கு எங்கேண்ணா?" மனைவியின் குரலில் நாராயணன் வண்டியை நிறுத்தி விட்டான்.



கணவனது பார்வை சென்ற திசை, அவனது எண்ணம் அனைத்தையும் புரிந்து கொண்ட பத்மினி உடனே தனது அண்ணனுக்கு அழைத்து இருந்தாள். அலைப்பேசி ஒலி கூடக் காதில் விழாதபடி நாராயணன் யோசனையில் மூழ்கி இருந்தான் போலும்.



அந்த நேரம் தான் சகுந்தலா சக்தீஸ்வரனிடம் 'சகி யாரு?' என்று கேட்டு கொண்டிருந்தாள். அவன் பதில் கூறும் முன் பத்மினியின் அழைப்பு வந்து விட்டது. சகுந்தலா தனது கேள்வியை மறந்து விட்டு கணவனது கையிலிருந்து அலைப்பேசியைப் பிடுங்கி,



"மினி, எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன்." என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்க... சக்தீஸ்வரன் மனைவியைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.



"உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது சக்கு. நீ ரொம்பச் சந்தோசமா இருக்கேன்னு..." தோழியின் மகிழ்ச்சியைக் கண்டு பத்மினிக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.



"அப்படியா தெரியுது?" சகுந்தலா அலைப்பேசியில் தனது முகத்தை அப்படி, இப்படித் திருப்பிப் பார்த்தாள்.



"நான் தான் சொன்னேன்ல. அண்ணா உன்னைச் சந்தோசமா வைத்து கொள்வார்ன்னு... இப்போ பார்த்தியா, நான் சொன்னது நடந்திருச்சு." பத்மினி சந்தோசமாய்ச் சொல்ல...



"ஆமா மினி... கேப்டன் காலையிலேயே என்னைய பீச்சுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. இவ்வளவு நேரம் கிளிஞ்சல்கள் பொறுக்கி விளையாண்டுட்டு இருந்தேன். நீயே பாரு... எவ்வளவு கிளிஞ்சல்கள்ன்னு..." சகுந்தலா தன் முன்னே பரத்தி வைத்திருந்த கிளிஞ்சல்களைப் பத்மினியிடம் காட்டினாள். அண்ணனின் மாற்றம், சகுந்தலாவின் மகிழ்ச்சி அனைத்தும் கண்டு பத்மினிக்கு நிம்மதியாக இருந்தது.



"என் கிட்ட மட்டும் பேசினால் போதுமா சக்கு? உனக்காக ஒரு ஜீவன் ஏங்கி துடிக்குது பாரு." பத்மினி அலைப்பேசியை நாராயணன் முன் கொண்டு வந்து காட்டினாள்.



"அண்ணே..." சகுந்தலா உற்சாகக் குரல் எழுப்ப...



"எப்படி இருக்கச் சக்கு?" நாராயணன் விழிகள் கலங்கி போனது. அவனது குரல் தழுதழுத்து ஒலித்தது.



அன்று மனைவி பேசியதில் இருந்து அவனது மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. தேவையில்லாது தங்கையின் வாழ்க்கையைத் தான் பணயம் வைத்து விட்டோமோ என்று... இப்போது சகுந்தலாவின் சந்தோச குரலை கேட்டதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் தங்கை வாய்மொழியாகக் கேட்க அவன் விரும்பினான்.



"நல்லா இருக்கேன் அண்ணே. நீங்க எப்படி இருக்கீங்க? மினிய நல்லா பார்த்துக்கோங்க."



"அதெல்லாம் நல்லா பார்த்துக்கிறேன். நீ எப்போ இங்கே வர்ற? அண்ணனுக்கு உன்னைப் பார்க்கணும் போலிருக்கு. இதோ இப்போ கூட நீ வாசலில் இருந்து டாட்டா சொல்லுவியே... அதைத் தான் நினைச்சிட்டு இருந்தேன். உன் அண்ணி உடனே உனக்கு ஃபோன் போட்டு விட்டாள். மினிக்கு தான் என் மனசில் இருப்பது புரியுது." அவன் சொன்னது கேட்டு சகுந்தலா மகிழ்ந்தாளோ இல்லையோ... பத்மினி மகிழ்ந்து தான் போனாள்.



"டேய் போதும்டா... உன் தங்கச்சி புராணம்..." சக்தீஸ்வரன் அலைப்பேசியை மனைவியிடம் இருந்து வாங்கிக் கொண்டு நாராயணனை கலாய்த்தான்.



"உனக்கு என்னடா தெரியும் எங்க அண்ணன், தங்கை பாசத்தைப் பத்தி..." நாராயணன் எகிறிக் கொண்டு வர...



"எனக்கும் தங்கச்சி இருக்கிறாள்." சக்தீஸ்வரன் வேண்டுமென்றே சொல்ல...



"அப்போ நீ உன் தங்கச்சி கிட்ட பேசு. நான் என் தங்கச்சி கிட்ட பேசுறேன்." நாராயணன் வம்பு வளர்க்க...



"அடேய், நீ வச்சிருக்கிறது மினியோட ஃபோன்டா. முதல்ல ஃபோனை அவள் கிட்ட கொடு." சக்தீஸ்வரன் சொன்னதும்... நாராயணன் அவனை முறைத்துக் கொண்டே மனைவியிடம் அலைப்பேசியைக் கொடுத்தான்.



"மினி, சந்தோசமா இருக்கியா?" சக்தீஸ்வரன் தங்கையைக் கண்டு கேட்க...



"எனக்கு என்ன குறை? நான் நல்லா இருக்கேன் அண்ணா. சக்கு ஹெல்த் எப்படி இருக்கு?"



"இன்னைக்கு வாமிட் பண்ணிட்டாள்."



"இப்போ அப்படித்தான் இருக்கும். ரொம்ப முடியலைன்னா மாத்திரை போட சொல்லுங்க. இல்லைன்னா வேண்டாம். அதிகம் மாத்திரை எடுப்பது குழந்தைக்கு நல்லது இல்லை." அவள் ஒரு மருத்துவராக அறிவுரை கூற...



சக்தீஸ்வரன் சரியென்றவன் மேலே சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.



நாராயணன் மனைவியைக் கண்டு, "தேங்க்ஸ்..." என்க...



"தேவையில்லை..." என்ற பத்மினி முகத்தைத் திருப்பிக் கொண்டு தனது வீட்டினை நோக்கி நடந்தாள்.



மனைவியின் செய்கையில் நாராயணன் சிரித்துக் கொண்டே அவளின் பின்னே நடந்தான். அங்குச் சென்று சர்வேஸ்வரன், உதயரேகாவிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு இருவரும் வேலைக்குக் கிளம்பினர்.




*************************
 

Sasimukesh

Administrator
"ஹேய் சக்தி..." பழக்கப்பட்ட குரலில் திரும்பி பார்த்தான் சக்தீஸ்வரன்.



அங்கு அவனது நண்பர்கள் வருண், கமல் இருவரும் வந்து கொண்டிருந்தனர். உடன் வருணின் மனைவி பிருந்தாவும் வந்து கொண்டிருந்தாள். கமலுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சக்தீஸ்வரனின் இந்தத் தீவு ப்ராஜெக்ட்டில் கட்டுமானம் தவிரப் பிற வேலைகளை வருண், கமல் இருவரின் நிறுவனங்களுக்குத் தான் கொடுத்து இருக்கின்றான். அதனால் மூவரும் இங்கே இருந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.



பிருந்தா மருத்துவராக மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். சக்தீஸ்வரன் அவளுக்கு இங்கே உள்ள மருத்துவமனையில் வேலை போட்டு கொடுத்து, அதன் நிர்வாகப் பொறுப்பினையும் அவளிடம் ஒப்படைத்து இருந்தான். பிருந்தாவும் தனது பொறுப்பினை உணர்ந்து தனது சீனியர் மருத்துவர்களை இங்கே அழைத்து வந்து இந்த மருத்துவமனையை வெற்றிகரமாக இயக்கி வருகின்றாள். இங்கே உள்ளவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் இங்கேயே அனைத்தும் பார்த்துக் கொள்ளலாம். அந்தளவிற்கு இங்கு வசதிகள் இருந்தது. அதனால் தான் சக்தீஸ்வரன் மனைவியைத் தைரியமாக இங்கு அழைத்து வந்தது.



"இவங்க எல்லாம் யாரு? குடுகுடுப்பைக்காரன் மாதிரி டிரெஸ் போட்டு இருக்காங்க." சகுந்தலா வருண், கமலை பார்த்துக் கொண்டே கணவனின் காதினை கடிக்க...



"குடுகுடுப்பைக்காரன் மாதிரியா? அதை நீ சொல்ற பாரு. சரி தான்." சக்தீஸ்வரன் ஒரு மாதிரி குரலில் சொன்னவன் நாலாப்பக்கமும் தலையாட்டினான்.



"யாருன்னு கேட்டா... பதில் சொல்லணும்." சகுந்தலா சிணுங்க...



'அடியேய், சிணுங்காதேடி.' மனைவி சிணுங்கும் போது கூடவே சேர்ந்து சிணுங்கிய அவளின் இதழ்களைக் கண்டு சக்தீஸ்வரன் மனதிற்குள் செல்லமாய்ச் சிணுங்கி கொண்டிருந்தான்.



அதற்குள் நண்பர்கள் அவனைத் தேடி வந்து விட்டனர்.



"வணக்கம் சிஸ்டர். நான் வருண். இது என் மனைவி பிருந்தா. இது எங்க பிரெண்ட் கமல்." என்று வருண் தானாகச் சகுந்தலாவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான்.



"அதைத் தான் கேப்டன் கிட்ட கேட்டுட்டே இருந்தேன். கேப்டன் பதில் சொல்லவே இல்லை." சகுந்தலா கணவனைப் பற்றி அவர்களிடம் புகார் வாசிக்க...



"பதில் சொல்லும் அளவுக்கு அவன் சுயநினைவில் இல்லையேமா. அவன் சொர்க்க லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றான்." கமல் நண்பனை கண்டு நாடக பாணியில் வசனம் பேசி கலாய்த்தான்.



சக்தீஸ்வரன் சகுந்தலாவையே பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டு தான் கமல் கலாய்த்தது.



"ச்சு, விட்டால் பேசிட்டே இருப்பீங்க. போங்கடா." சக்தீஸ்வரன் கமல் தோளில் விளையாட்டாய் தட்ட...



"நீ எல்லாம் கல்யாணம் பண்ணுவ... அதுவும் காத..." கமல் மேலே பேசும் முன் சக்தீஸ்வரன் அவனைப் பேச விடாது அமுக்கி பிடித்தவன்,



"அதுக்குன்னு சாமியாராவா போக முடியும்?" என்று கேட்டபடி அடி மொத்தினான்.



"டேய், நீ சாமியாரா போனாலும்... சிஷ்யைங்க புடை சூழ கிருஷ்ணன் மாதிரி ஜெகஜோதியா, குதூகலமா வாழுவடா. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது." என்ற கமலை கண்டு,



"கொஞ்ச நேரம் வாயை மூடுடா." என்ற சக்தீஸ்வரன் மனைவியைப் பார்க்க... அவளோ சற்று தள்ளி அமர்ந்து கொண்டு பிருந்தாவிடம் பேசி கொண்டிருந்தாள்.



"என்னடா, சிஸ்டருக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாதா?" வருண் கேட்டபடி சக்தீஸ்வரன் அருகில் வந்தமர்ந்தான்.



"இல்லைடா... அவளே குழந்தை பிள்ளை. அவள் கிட்ட போய் நான் என்னத்த சொல்றது?" சக்தீஸ்வரன் முகம் வேதனையில் கசங்கியது.



"என்னையவே எடுத்துக்கோ. பிந்துவை பார்த்து கூட நான் முதலில் ஜொள்ளு தான் வடிச்சேன். அதுக்குப் பிறகு தான் கெமிஸ்ட்ரி, ஹிஸ்ட்ரி எல்லாம் வொர்க் அவுட்டாகி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரியும். கல்யாண வாழ்க்கையில் நம்ம பார்ட்னர் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது சக்தி. நாளைக்கு வேற யாராவது எதையாவது சொல்லி... பிறகு பிரச்சினை வந்திரும். அதான் நான் முன்கூட்டியே எல்லாத்தையும் சொல்லி சரண்டராகி முன் ஜாமீன் வாங்கிட்டேன்." வருண் எளிதாகக் கூறிவிட்டான்.



"சிஸ்டர் வேற... இவள் வேறடா. சொன்னால் புரிந்து கொள்வாளா? இல்லை சண்டை போட்டுட்டு என்னை விட்டு போயிருவாளான்னு எனக்குப் பயமா இருக்கு." சக்தீஸ்வரன் இன்னமும் குழப்பம் தெளியாது அமர்ந்து இருந்தான்.



"இதுக்குத் தான்டா என்னை மாதிரி கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும். ஐயம் ப்ரீ பேர்ட்." என்று கூறி கமல் சிரித்தான்.



"நண்பா, உன்னையும் காதல் நோய் தாக்கும். அப்பவும் நீ இதே பதிலை சொல்லணும்." வருண் கமலை கேலி செய்தான்.



"யாரை பார்த்தாலும் அந்த ஃபீல் வர மாட்டேங்குதே." கமல் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான்.



"காலையிலேயே அரட்டையடிக்க ஆரம்பித்தால்... டைம் போறதே தெரியாது. நாங்க கிளம்பறோம். ஆபிசில் பார்க்கலாம்." என்றபடி வருண் எழுந்து கொள்ள... உடன் கமலும் எழுந்து கொண்டான்.



"பிந்து..." வருண் அழைக்கவும்...



"கூப்பிடுறாங்க. நான் கிளம்பறேன். அண்ணா கூட நீ கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்." பிருந்தா தோழமையுடன் சகுந்தலாவை அழைத்தாள். பத்மினி மாதிரி பிருந்தாவும் சகுந்தலாவுக்கு ஒரு நல்ல தோழியாகி போனாள்.



"கட்டாயம் வர்றேன் பிருந்தா." சகுந்தலா வெகுளியாய் சிரித்தபடி சொல்ல...



"உன்னோட சிரிப்பு அவ்வளவு அழகு." என்று சகுந்தலாவை பார்த்து சொன்ன பிருந்தா, பிறகு சக்தீஸ்வரனை பார்த்து, "சக்தி அண்ணா, நீங்க லக்கி." என்று கூற...



"உண்மை தான்ம்மா..." சக்தீஸ்வரன் மனதார கூறினான்.



நண்பர்கள் சென்றதும் இருவரும் வீட்டிற்குத் திரும்பினர். சக்தீஸ்வரன் அவளைக் குளிக்க அனுப்பி விட்டு... அங்கிருந்த இன்னொரு குளியலறைக்குள் தானும் புகுந்து கொண்டான். இருவரும் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்தனர். ஆலிவ் பச்சையில், எலுமிச்சை நிற பூக்கள் நிறைந்திருந்த கவுனை சகுந்தலா அணிந்து இருந்தாள். சக்தீஸ்வரன் ஆலிவ் பச்சை பருத்தி சட்டையும், வெண்ணெய் நிறத்தில் பேண்ட்டும் அணிந்து இருந்தான். சக்தீஸ்வரன் அவள் அருகே வேகமாக வர...



"என்னாச்சு கேப்டன்?" அவள் விழிகளைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.



அவனோ அவளது கையில் கிள்ளி, "சேம் பின்ச். சாக்லேட் கொடு." அன்று அவள் கூறியது போன்று கூறி... அவன் சிறுபிள்ளை போன்று ஆர்ப்பரித்தான்.



"இல்லை, இல்லை... இது போங்காட்டம். நான் தான் கேட்பேன். நீங்க தான் எனக்குச் சாக்லேட் கொடுக்கணும்." அவள் அடம்பிடிக்க...



"நீ தான்டி போங்காட்டம் ஆடுற... எனக்குச் சாக்லேட் கொடுடி..." அவன் அவளை நோக்கி நெருங்கி வர...



"இப்போ என் கிட்ட சாக்லேட் இல்லையே. என்ன செய்ய?" அவள் இரு விழிகளையும் உருட்டி கொண்டு அவனைப் பாவம் போல் பார்த்தாள்.



"ஏன் இல்லை? இதோ இருக்கிறதே." என்றவன் அவளை அப்படியே தூக்கி கொள்ள...



"ஆங்..." அவள் விழிகளை விரித்து அவனைத் திகைப்பாய் பார்த்தாள்.



"பிஃப்டி கேஜி சாக்லேட். எனக்கு மட்டும் தான். சாப்பிடவா?" அவன் கிறக்க குரலில் கேட்க...



"கேப்டன்..." அவளுக்குமே கணவனது அருகாமையில் உள்ளுக்குள் ஒருவித மயக்கம் தோன்றியது.



"ஆமாவா? இல்லையா?" அவன் அவளது சம்மதத்திற்காகக் காத்திருக்க...



"நீங்க என்னைய கடிச்சு சாப்பிட்டா... எனக்கு வலிக்குமே." அவள் பாவம் போல் சீரியசாகச் சொல்லவும்... அவன் பக்கென்று சிரித்து விட்டான்.



"இப்படி எல்லாம் பேச உன்னால் மட்டுமே முடியும்." என்றவன் அவளைக் கீழே இறக்கி விட்டான்.



"நீங்க தானே சாப்பிடவான்னு கேட்டீங்க?" அவள் புரியாது விழிக்க...



"முத்தத்தைத் தவிர வேறு ஒண்ணுமே தெரியாது போல. சக்தி, உன் பாடு படு திண்டாட்டம்டா. நீ இதில் பிஹெச்டி முடித்தவன். இவளோ பால்வாடி. உன் நிலைமை ரொம்பக் கஷ்டம்." அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.



"என்ன கேப்டன்?" அவள் அவனைக் கண்டு கேட்க...



"ஒண்ணுமில்லை... உன்னை எங்கே இருந்து சாப்பிடன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்." என்றவனின் பார்வையே ஒரு மாதிரியாக இருந்தது.



"அச்சோ, வலிக்குமே..." என்று அங்கிருந்து ஓட போனவளை அவன் பிடித்து இழுத்து தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டான்.



"முதலில் கன்னத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா?" என்றவன் அவளது முகம் நோக்கி குனிந்தான். அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.



சக்தீஸ்வரன் மனைவியின் கன்னத்தை வலிக்காது கடித்தவன், "சாக்லேட் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு." என்றுவிட்டு அவளை விட்டுவிட...



"கேப்டன், எனக்கு வொயிட் சாக்லேட் வேணும். நானும் டேஸ்ட் பார்க்கிறேன்." என்றவள் அவன் உயரத்திற்கு எக்கி நின்று கொண்டு அவனது கன்னத்தைக் கடித்து விட்டு ஓடி விட...



"அடியேய், தத்தி... ஒரு ரொமான்ஸை கூட ஒழுங்கா ஃபீல் பண்ண தெரியலை. உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு... இந்த லட்சணத்தில் விடிய விடிய காதல் படம் பார்க்கிறது, காதல் கதைகள் படிக்கிறது." அவன் அவளைச் சத்தம் போட்டுக் கொண்டே அவளைத் தேடி அவளின் பின்னேயே ஓடினான்.



"கேப்டன், பசிக்குது." சகுந்தலா உணவு மேசையில் அமர்ந்து கொண்டு பாவம் போல் வயிற்றைக் காட்ட...



தாயுமானவனாய் அந்த அன்பு கணவன் உருகி போனான். சக்தீஸ்வரன் முதலில் அவளுக்குச் சாப்பாடு எடுத்து வைத்து உண்ண சொல்ல...



"நீங்களும் சாப்பிட வாங்க." என்றவள் அவனது தட்டில் பரிமாற... அவளது செய்கையில் மகிழ்ந்தவன் தானும் அவளுடன் உண்ணலானான்.



இருவரும் உண்டு முடித்து விட்டு வெளியில் கிளம்பினர். சிறிய தீவு தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் மட்டுமே காட்சி அளித்தது. நகரத்து நெரிசலில் வாழ்ந்து வந்தவளுக்கு இந்த அற்புதமான இயற்கை காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது.



"இந்த ஊரு பெயரு என்ன கேப்டன்?" அவள் வெளிப்புறம் பார்வையைப் பதித்தபடி கேட்க...



"ஊர் இல்லை, தீவு... பெயர் தீஷாலா..." என்று அவன் சொல்ல...



"அது என்ன ஷாலு, துப்பட்டான்னு பெயரு. நல்லாவே இல்லை." அவள் உதட்டை சுழிக்க...



"தீ நான்... ஷா, லா இரண்டும் நீ..." என்றவனைக் கண்டு,



"ஒண்ணுமே புரியலை கேப்டன்." அவள் அர்த்தம் புரியாது விழித்தாள்.



"உனக்குப் புரிந்து விட்டால் உலகம் அழிந்து விடுமே." என்று அவன் கேலியாய் முணுமுணுத்தான்.



"சொல்றதை கொஞ்சம் தெளிவா புரியற மாதிரி சொல்றது. இல்லைன்னா எனக்கு எப்படிப் புரியும்?" அவள் நொடித்துக் கொள்ள... அவளது பாவனையில் அவனது உதடுகள் சிரிப்பில் விரிந்தது.



அங்கிருந்த பள்ளிக்கூடம் முன்பு தனது ஜீப்பை நிறுத்தினான் சக்தீஸ்வரன். சகுந்தலா பள்ளிக்கூடத்தைக் கண்டு பீதியாகி நின்றாள்.



"கேப்டன், என்னைய திரும்பப் படிக்க வைக்கப் போறீங்களா? எனக்குப் படிக்கப் பிடிக்காதே." அவள் சிணுங்கி கொண்டே தரையில் கால்களை உதைக்க...



"ஆமா, திரும்பப் பத்தாவது எழுதி பாஸ் பண்ற..." அவன் கண்டிப்புடன் சொல்ல...



"ஆ..." அவன் சொன்னது கேட்டு அவள் அதிர்ச்சியில் வாயை பிளக்க...



"எனக்காக இது கூடப் பண்ண மாட்டியா?"



"இது மட்டும் என்னால் பண்ண முடியாது." அவள் நிர்தாட்சண்யமாய் மறுத்தாள்.



"வாயடிக்காம வா..." அவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.



பள்ளி முதல்வரிடம் மனைவியை அறிமுகப்படுத்திய சக்தீஸ்வரன், "நான் சொன்னது இவங்களைத் தான்." என்று சொல்ல...



"ரொம்ப நல்லது. உங்க முயற்சி பாராட்டுதலுக்கு உரியது." என்று புகழ்ந்த முதல்வர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.



"வேண்டாம் கேப்டன்... இப்படியே திரும்பப் போயிரலாம்." சகுந்தலா பலியாடு போன்று வழியெங்கும் கதறிக் கொண்டே வந்தாள். அவன் தனக்குள் சிரித்தபடி உடன் நடந்தான்.



பள்ளி முதல்வர் அங்கிருந்த ஒரு வகுப்பறைக்குள் நுழைய... அங்குச் சின்னஞ்சிறு பூஞ்சிட்டுகள் கூட்டமாய்க் குழுமியிருந்தனர். குழந்தைகளைக் கண்டதும் சகுந்தலா உற்சாகமாகி விட்டாள்.



"கேப்டன், குழந்தைகளைப் பார்த்தீங்களா? எவ்வளவு அழகு? குண்டு, குண்டு கன்னங்களோடு பிஞ்சு, பூ போன்ற குழந்தைகள்." அவள் குழந்தைகளைக் கண்டு குதூகலித்தாள்.



"நம்ம குழந்தையும் இப்படித்தான் இருக்கும் இல்லையா?" அவன் கனவோடு அவளிடம் கேட்க...



"ஆமாம்..." அவளுக்குமே கனவு விரிந்தது.



பள்ளி முதல்வர் அங்கிருந்த ஆசிரியர்களை அழைத்து, "இவங்க தான் மிஸஸ் சகுந்தலா. குழந்தைகளுக்குக் கதை சொல்லி, பாட்டு பாடி அவங்களை உற்சாகப்படுத்தி, மோட்டிவேட் பண்ண வந்திருக்காங்க. படிப்பு மட்டும் முக்கியம் இல்லை. நல்ல பழக்கவழக்கங்கள், நல்லொழுக்கம் இதெல்லாம் தான் முக்கியம்." என்று கூற...



"என்னுடைய மிஸஸ் படிப்பை கூடப் போர் அடிக்காம விளையாட்டு போலச் சொல்லி கொடுப்பாங்க." சக்தீஸ்வரன் இடைப்புகுந்து சொல்ல...



"அப்போ நல்லதா போச்சு... இன்னைக்கே ஆரம்பிக்கச் சொல்லுங்க சார்." பள்ளி முதல்வர் பச்சை கொடி காட்டி விட்டார்.



"கேப்டன், இங்கே வாங்க..." சகுந்தலா அவனைத் தனியே அழைத்துச் சென்றாள்.



"என்ன சக்கு?"



"எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதே. நான் எப்படி?" அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளே படிப்பை கண்டால் காத தூரம் ஓடி போகிறவள்...



"மதி சின்ன வயசா இருக்கும் போது... நீ அவளுக்குப் பாட்டு பாடி, கதை சொல்லுவியே... என்ன மறந்துட்டியா? அதையே இங்கேயும் செய். உனக்கு வேலைக்கு வேலையாச்சு. சம்பளமும் கிடைக்கும்." அவள் என்றோ அக்கா மகளுக்குச் செய்ததை அவன் ஞாபகம் வைத்து இன்று கூறினான்.



"ஓ, அதைச் சொல்றீங்களா?" அவளுக்கு அப்போது தான் எல்லாம் புரிந்தது.



"அதே தான்..."



"இது எல்லாம் எனக்குக் கை வந்த கலையாச்சே." என்றவள் மீண்டும் வகுப்பிற்குள் சென்றாள். சக்தீஸ்வரனும் அவளின் பின்னேயே சென்றான்.



சகுந்தலா குழந்தைகளை வட்டமாக அமர வைத்துக் கொண்டு அவள் நடுவே அமர்ந்து கொண்டாள். முதலில் அவர்களது பெயர்களைக் கேட்டு அவர்களோடு நட்பு பாராட்டி விட்டு... பின்பு அவள் தனக்குத் தெரிந்ததைச் சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.



"மஞ்ச கலரு சிங்குச்சா, சிவப்பு கலர் சிங்குச்சா..." என்று அவள் ஒவ்வொரு நிறத்தையும் காட்டியபடி நாட்டுப்புற பாடல் போன்று பாட... இன்னொரு ஆசிரியர் அவள் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லி கொண்டிருந்தார்.



குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு மொழிகள் கற்பிக்கப்பட்டது. அவர்கள் தாய்மொழியான தமிழை நன்கு உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற ஆங்கிலச் சொற்களின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டனர். அவர்கள் மிகவும் எளிதாக ஆங்கில மொழியைக் கற்று கொண்டிருந்தனர்.



"இப்போ வடிவங்களைப் பார்க்கலாமா? இது என்ன? வட்டம்..." சகுந்தலா வட்ட வடிவ காகிதத்தை எடுத்து காட்டினாள்.



"இதை இப்படி மடக்கினால் வருவது சதுரம். சதுரத்தை இரண்டாக மடக்கினால் வருவது முக்கோணம்." அவள் எளிதாக வடிவங்களைச் சொல்லி கொடுத்தாள்.



"அடுத்து நம்பர்ஸ் படிக்கலாமா?" என்றவள், "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம். ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்." என்று அவள் ராகம் போட்டு பாட... சின்னஞ்சிட்டுகளும் ராகம் போட்டு பாடினர்.



"இது எல்லாம் நான் சின்ன வயசா இருக்கும் போது விளையாண்டது. நமது முன்னோர்கள் விளையாட்டோட கல்வியையும் சேர்த்து சொல்லி கொடுத்தாங்க. நாம தான் அயல்நாட்டு மோகத்தில் எல்லாத்தையும் மறந்துட்டோம். மீண்டும் அது எல்லாம் உங்க மிஸஸ் மூலமா பார்க்கும் போது மனசுக்கு ரொம்பச் சந்தோசமா, நிறைவா இருக்கு." பள்ளி முதல்வர் சக்தீஸ்வரனிடம் பாராட்ட...



சக்தீஸ்வரன் பெருமை பொங்க மனைவியைப் பார்த்திருந்தவன்... அவளது செயலை தனது அலைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்து கொண்டிருந்தான்.



"சின்னச் சின்னக் கண் அசைவில்

உன் அடிமை ஆகவா

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா"



தொடரும்...!!!
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top