All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Viji.k

New member
இனி உங்களது கருத்துகள் மற்றும் மீம்ஸ்களை இங்கே பதிவிடுங்கள் பிரெண்ட்ஸ்... நாம தினமும் இங்கேயே சந்திப்போம் 😍😍😍😘😘😘

ஆத்மா : 5

மறுநாள் காலையில் ராம் ராகவேந்தர் ஆத்மிகா வீட்டிற்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. அமரேந்தர் மற்றும் அஞ்சலி எங்கே? என்று அவன் யோசித்துக் கொண்டே வைத்தியை தேடி சென்றான். வழக்கம் போல் அவருக்குக் காலை வணக்கம் சொன்னவன்,

"வீடே அமைதியா இருக்கு? சார், மேடம் எங்கே?" என்று கேட்க...

"சார் பிரெண்டோட மகள் கல்யாணத்துக்குப் போயிருக்காங்க... உன் கிட்ட சொல்லலையா?" என்று வைத்தி கேட்க...

"ஆமாம், மறந்துட்டேன்..." என்றவனை வைத்தி வித்தியாசமாகப் பார்த்தார்.

"என்னாச்சு ராம்? எப்பவும் இப்படியிருக்க மாட்டியே?"

"கொஞ்சம் வேலை அதிகம்... அதான்..." என்று சமாளித்தவன்,

"ஆத்மி மேடம் எங்கே? கும்பகர்ணி இன்னமும் தூக்கமா?" என்று கேலி போல் கேட்டான்.

"அப்படித்தான் நினைக்கிறேன்..." என்றவரிடம்,

"அவளுக்கு மூலிகை டீ போட்டு கொடுங்கப்பா..." அவன் சொன்னதும் ஆத்மிகாவின் பிரச்சினை வைத்திக்குச் சொல்லாமல் புரிந்து போனது.

'இந்தக் காலத்தில் இப்படியொரு பையன்... யார் இது மாதிரி பெண்கள் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறாங்க? ராம் அன்னையில் இருந்து இப்போ வரை அம்முவுக்குப் பக்கபலமாக இருக்கிறான்.' அவர் ராம் ராகவேந்தரை பற்றி அறியாது மனதில் சிலாகித்துக் கொண்டார்.

இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதற்கான வழி என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆத்மிகா எனும் சின்ன மீனை வைத்து தான் அமரேந்தரின் தொழில் எனும் பெரிய மீனை அவன் கைப்பற்ற முடியும். அதற்குத் தான் இது எல்லாமும்... அவனுக்கு வேண்டியது பணம், பணம், பணம் மட்டுமே...

வைத்தி கொடுத்த தேநீரை எடுத்துக் கொண்டு ராம் ராகவேந்தர் வரவேற்பறையை ஒட்டியிருந்த 'டிவி ஹால்'க்குச் சென்றான். அதிகாலையில் எழும் ஆத்மிகா தூக்க கலக்கத்தில் இங்கு வந்து திரும்பப் படுத்து விட்ட தூக்கத்தை மேலும் தொடர்வாள். ராம் ராகவேந்தர் காபி கோப்பையுடன் அவளை வந்து எழுப்பிக் காலை வணக்கம் சொல்லும் வரை அவளது உறக்கம் தொடரும்... கேட்டால், ராம் ராகவேந்தர் முகத்தில் விழிப்பது தான் பிடித்திருக்கிறது என்று சொல்வாள். இது எல்லாம் முன்பிருந்த ஆத்மிகா... இப்போது அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவன் இன்று தான் அவளை எழுப்ப செல்கிறான்.

'டிவி ஹால்'இல் ஆத்மிகா இல்லாததைக் கண்டு ராம் ராகவேந்தர் விழிகளைச் சுருக்கினான். ஒருவேளை அவளது அறையில் இருப்பாளோ! இன்னமும் தூங்கி கொண்டு இருக்கிறாளோ! என்று தனக்குள் யோசித்தவன் மாடியினை அண்ணாந்து பார்த்தான். அவளது அறைக்குப் போவதா? வேண்டாமா? என்று யோசித்தபடி அவன் நின்றிருந்தான். நேற்று அவள் அவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்றது அவனுக்கு ஞாபகம் வர... அவன் தனது தயக்கத்தினைத் துடைத்து எறிந்து விட்டு அவளது அறையை நோக்கி சென்றான்.

அறையின் முன் நின்று கதவை தட்டியவன் உள்ளே இருந்து பதில் இல்லாது போனதும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவன் உள்ளே செல்லவும், அவள் குளியலறையில் இருந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு அறையினுள் வரவும் சரியாக இருந்தது.

"குட்மார்னிங் அம்மு..." என்றவனை எரிச்சலுடன் பார்த்தவள்,

"காலையில் உன் முகத்தில் விழிக்க வேண்டுமா? இன்றைய பொழுது விளங்கிய மாதிரி தான்..." என்று அவள் சிடுசிடுக்க...

"ஒரு காலத்தில்... இல்லை இல்லை... சில நாட்களுக்கு முன் வரை இந்த முகத்தைப் பார்க்க தானே நீ தவம் இருந்த... இடைப்பட்ட நாட்களில் அப்படி என்ன நடந்து விட்டது?" அவன் நக்கலாய் கேட்க...

"உன்னைப் பொறுத்தவரையில் எதுவுமே நடக்கவில்லையே தானே... அப்போ நீ இப்படித்தான் பேசுவ?" அவள் வெடுக்கென்று சொல்ல...

"கணவன், மனைவி இடையில் இது சகஜம் அம்மு..." அவன் சாதாரணமாகச் சொல்ல...

"நமக்கு எப்போ கல்யாணமாச்சு...? நீ எனக்கு நல்ல பிரெண்ட் மட்டும் தான் ராம்... இப்படி எல்லாம் பேசாதே... மனசுக்கு கஷ்டமா இருக்கு."

"நேத்து யாரோ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்னாங்களே... அவங்களை நீ பார்த்தியா ஆத்மி?" அவன் அப்போதும் கேலியை விடாது அவளை வம்பிழுக்க...

"அது... நம்மால் ஒரு குழந்தை பாதிக்கப்படக் கூடாதுன்னு சொன்னேன்... ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரோட அரவணைப்பு தேவை..." என்றவளுக்குப் பெற்றோரின் வாழ்க்கை கண்முன் வந்து போனது. அவள் சொன்னதைக் கேட்டு அவனது முகம் ஒரு மாதிரியாய் மாறிப் போனது.

"ஓ... இப்போ என்ன வந்தது?"

"இப்போ ஒண்ணுமே இல்லையே... அதனால் இனி இது மாதிரி பேசாதே..." என்றவளை கண்டு விழிகள் சுருங்க பார்த்தவன்,

"பிறகு பேசிக்கலாம்... முதலில் இதைக் குடி..." என்றவனைப் பார்த்தவள்,

"இது பிரெண்ட்டா கொண்டு வந்திருக்கிறியா? இல்லை வேலைக்காரனா கொண்டு வந்திருக்கிறியா?" என்று கேட்க...

"எப்படி வேணுமோ அப்படி வச்சுக்கோ..."

"நீ... நீ... நீ வேலைக்காரனாவே இரு ராம்... என்னை விட்டு தள்ளியே இரு..." என்று தீர்க்கமாய் உரைத்தவளை கண்டு அவன் வாய் விட்டு நகைத்தான்.

"வேலைக்காரன் வீட்டுக்காரனாகி ரொம்ப நாளாகிவிட்டது அம்மு... உனக்கு வேற அப்சன் இல்லை... என்னைச் சகித்துத் தானாக வேண்டும்."

"முடியாது..." நிர்தாட்சண்யமாய் மறுத்தவளை நிதானமாகப் பார்த்தபடி அவளை நோக்கி வந்தவன் அவளது விழிகளுக்குள் உற்று பார்த்தபடி,

"உனக்கு ஒரு ஆபத்து வந்ததும் என்னை ஏன் நீ தேடின? சந்தீப் பத்தின பயத்தில் பீச்சில் என் கையைப் பிடிச்சிட்டு நெருங்கி உட்கார்ந்து இருந்தியே... இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம் ஆத்மி?" என்று அவன் ஒவ்வொரு வார்த்தையாய் நிதானமாய் உச்சரித்துக் கேட்க... அவள் பயத்தில் விழி விரித்து அவனையே பார்த்திருந்தாள்.

"சொல்லு ஆத்மிகா... இப்பவே எனக்குப் பதில் தெரிஞ்சாகணும்..." என்று அவன் அவளது தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

"ஏன்னா, நீ எனக்கு நல்ல பிரெண்ட்... கௌரவச் சபையில் திரௌபதி கிருஷ்ணா, கிருஷ்ணான்னு அவளோட தோழனை தான் அழைத்தாள். அப்படி நினைத்து தான் நான் உன்னை அழைத்தது. ஆனால் தோழனாக, பாதுகாவலனாக இருக்க வேண்டியே நீயே..." மேலே சொல்ல முடியாது நிறுத்தியவள்,

"வேலியே பயிரை மேய்ந்த கதையாக எல்லாவற்றையும் மாற்றி விட்டாய்... உனக்கு எல்லாமே சாதாரணமாகத் தான் தோன்றுகிறது. ஆனால் எனக்கு அப்படி நினைக்கத் தோன்றவில்லை. உன்னை அப்படிப் பார்க்கவும் தோன்றவில்லை. எப்பவுமே என்னால் உன்னை அப்படிப் பார்க்க முடியாது." என்று உறுதியான குரலில் சொன்னவளை கண்டு அவனுள் எரிமலை வெடித்தது.

"சோ... நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க மாட்ட..." என்று அவன் நிதானமாகக் கேட்டான்.

"முடியாது..."

"ரைட், விடு... இதை எப்படி டீல் பண்ணணனும்ன்னு எனக்குத் தெரியும்?" என்றவன் தேநீர் கோப்பையை அவளது கரத்தில் வைத்து விட்டு விலகி செல்ல முற்பட...

"இந்தத் தத்தியை கல்யாணம் பண்ணிட்டு என்ன செய்யப் போற? உனக்கு ஏத்த மாதிரி புத்திசாலியாய் ஒரு பொண்ணைப் பார்த்து கட்டிக்கோ..." என்றவளை திரும்பி பார்த்து மெச்சுதலாய் பார்த்தவன்,

"அப்படியாவது நீ தப்பிக்கலாம்ன்னு நினைக்கிறியா?" என்று கேட்க... அவன் தன்னைக் கண்டு கொண்டதை கண்டு அவள் திருதிருவென விழித்தாள்.

"சோ, அப்படித்தான் போல..." என்று யோசனையுடன் தாடையை வருடியபடி சொன்னவன், "இதுக்காவாடி திட்டம் போட்டு உன்னை என் கைப்பாவையாக மாற்றினேன். இதுக்காகவாடி ஒத்த பைசா கையில் எடுக்காம, ஏமாத்தமா தொழிலை நேர்மையா நடத்தினேன்... எல்லாம் எதுக்குன்னு நினைக்கிற...? காசு, பணம், துட்டு, மணி, மணி..." என்றவன் வாய்விட்டுச் சிரித்தான்.

"ராம்..." அவள் திகைப்புடன் பார்த்தாள்.

"எனக்கு வேண்டியது பணம்... அது உன் கிட்ட கொட்டி கிடக்குது... அதான் திட்டம் போட்டு எல்லாம் செய்தேன். இல்லைன்னா உன்னை மாதிரி ஒரு தத்தியை கல்யாணம் பண்ண நினைப்பேனா? தெரிந்தே யாராவது பாழும் கிணத்தில் விழுவாங்களா?" அவன் கிண்டலாய் சொன்னதைக் கேட்டு அவளுக்கு உள்ளுக்குள் அப்படியொரு வலி எழுந்தது. அவள் வலியை காட்டி கொள்ளாது அவனையே வெறித்துப் பார்த்திருந்தாள்.

"உனக்கு வேறு ஆப்சன் இல்லை ஆத்மி... உனக்கு இருக்கும் ஒரே ஆப்சன் நான் மட்டுமே... வேறு ஏதாவது பண்ணணும்ன்னு நினைச்ச... என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்ப..." என்றுவிட்டு அவன் அறையை விட்டு சென்றுவிட... அவள் ஓய்ந்து போய் அமர்ந்தாள்.

எப்படி யோசித்தும் அவளால் ராம் ராகவேந்தரை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் சம்மதம் இல்லாது தொட்டவன் இனி தாலி கட்டி விட்டு அவளது சம்மதமின்றித் தினமும் தொட போகின்றான். மனதிற்கு ஒவ்வாத, சந்தோசம் இல்லாத வாழ்க்கையைத் தான் தான் வாழ வேண்டுமா?

"நோஓஓஓ..." என்று அவள் வாய்விட்டு கத்தி விட்டாள்.

அந்தக் கணம் அவளது மனக்கண்ணில் காதலோடு வாழும் தனது பெற்றோரின் முகம் நினைவில் வந்து போனது. அப்படியொரு காதல் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே அவளது ஆசை... அவளது ஆசை நிராசையாகி போனதை நினைத்து அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. பேசாமல் தந்தையிடம் விசயத்தைச் சொல்லி விடுவோமா? என்று கூட ஒரு நொடி யோசித்தாள். மறுநொடி ராம் ராகவேந்தர் உயிரற்ற உடலாய் கிடக்கும் காட்சி அவள் கண்முன் விரிந்து அவளைப் பதற செய்தது.

"வேண்டாம், வேண்டாம்... ராம் பாவம்..." அவளது இளகிய மனது அவனுக்காக இரங்கியது.

ராம் ராகவேந்தர் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் அவளது காதுகளில் ஒலித்து அவளை நிலை கொள்ளாது செய்தது.

தொழில் முறை நண்பரின் மகளின் திருமணத்திற்குச் சென்று விட்டு வந்ததில் இருந்து அமரேந்தர் பெருத்த யோசனையுடன் இருந்தான். அவனது யோசனை அஞ்சலிக்கு வித்தியாசமாகப் பட்டது.

"என்ன விசயம் இந்தர்? என் கிட்ட சொல்லும் விசயமாக இருந்தால் சொல்லுங்க..." மனைவி கேட்டதும் திரும்பி பார்த்த அமரேந்தர்,

"உன் கிட்ட சொல்லத்தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்." என்று சொல்ல...

"என் கிட்ட என்ன தயக்கம்? எதுவாக இருந்தாலும் சொல்லுங்க இந்தர்..."

"இன்னைக்குப் போன கல்யாணத்தைப் பத்தி நீ என்ன நினைக்கிற பேபி?"

"நினைக்க என்ன இருக்கு? மாப்பிள்ளை, பொண்ணு ரெண்டு பேர் ஜோடி பொருத்தம் வெகு அருமை..."

"மாப்பிள்ளை பையன் அவங்க கம்பெனியில் வொர்க் பண்ணிய பையன்... வசதி அதிகம் இல்லை."

"மனசு ஒத்துப் போனால் வசதி முக்கியம் இல்லை இந்தர்... ஏன் நாம இல்லையா?" என்றவளை வாஞ்சையுடன் பார்த்தவன்,

"அப்போ நான் சொல்றது உனக்கு ஓகேவாகத் தான் இருக்கும்..." என்று அவன் பீடிகை போட...

"நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகே தான்..."

"ராம் பத்தி நீ என்ன நினைக்கிற?" அவன் மெல்ல ஆரம்பித்தான்.

"நம்ம பேபியை ராம்க்கு..." அவனது புத்திசாலி மனைவி டக்கென்று அவன் சொல்ல நினைத்ததைச் சரியாக ஊகித்துச் சொன்னாள்.

"ஆம்... ரொம்ப நாட்களா இந்த ஆசை என்னோட மனசில் தோன்றிக் கொண்டே இருக்கு."

"ராம் வயசு என்ன? பேபி வயசென்ன? இது சரியா வருமா?" என்றவளை கண்டு அவன் அமைதியாக இருந்தான். பின்பு,

"பத்து வருசம் வித்தியாசம்... அதனால் என்ன?" என்றான் நிதானமாக...

"அதான்... நானும் கேட்கிறேன்... எதுக்கு இப்படியொரு எண்ணம் உங்களுக்குன்னு? ராம் நல்லவன் தான்... அவனுக்கு வேறு ஒரு நல்ல பெண்ணை அவன் வயசுக்கு ஏற்ற மாதிரி பார்த்து பேசி முடிப்போம். பேபிக்கு அவளுக்கு ஏற்ற மாதிரி பார்ப்போம்." அஞ்சலி உறுதியாய் கூற... அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவன்,

"வயசு மட்டும் தான் தடையா பேபி? அல்லது அவன் ஏழ்மையான பையன் என்பதால் வேண்டாம்ன்னு சொல்லுறியா?"

"வயசு மட்டும் தான் எனக்குக் கொஞ்சம் உறுத்துது... மத்தபடி ராம் மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. பாவம் நம்ம பேபி, சின்னப் பொண்ணு..." என்ற மனைவியைக் கண்டு அவனால் மறுவார்த்தை மறுத்து பேச முடியவில்லை. ஆனாலும் ராம் ராகவேந்தருக்கு ஏதாவது நியாயம் செய்திட வேண்டும் என்று அவனது மனம் உள்ளுக்குள் துடித்தது.

"ஓகே பேபி... உனக்கு விருப்பம் இல்லாததைப் பற்றி நான் பேசலை..." அவன் முடித்துக் கொள்ள...

"ராம் நமக்கும் மகன் மாதிரி தான்... அவன் மேல் எனக்கு அக்கறை இருக்கு... ஆனால்... என்னைப் புரிந்து கொள்ளுங்க இந்தர்..." என்று அவள் சொல்ல...

"ஹேய், உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா பேபி? என் மனசில் நினைச்சதை சொன்னேன். அவ்வளவு தான்... இது கட்டாயம் கிடையாது. ராம்க்கு நாமளே நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் முடிப்போம்." அவன் சொன்னதைக் கேட்டு அவள் சம்மதமாய்ப் புன்னகைத்தாள்.

**************************

"ராம், லீனா திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டியா?" அமரேந்தர் ராம் ராகவேந்தரிடம் கேட்க...

"எஸ் சார்..." என்று அவன் பவ்யமாகச் சொன்னான்.

பதினைந்து வயதில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உடலும், உள்ளமும் புண்ணாகி இவர்களது இல்லத்திற்கு வந்த சிறு பெண் தான் லீனா... இப்போது அவள் சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றுகிறாள். அவளைப் பற்றி எல்லாம் தெரிந்து தான் அவளுடன் படித்த ஜோசப் அவளை விரும்பி திருமணம் செய்ய முன்வந்து இருக்கிறான். அவன் தனக்கு லீனாவின் மனம் மட்டுமே போதுமானது என்று கூறிவிட்டான். அமரேந்தர் தான் ஜோசப்பின் வீட்டில் பேசி திருமணத்தை முடிவு செய்தது. நாளை அவர்களது திருமணம் இல்லத்தில் மிகவும் எளிமையாக நடக்கவிருக்கிறது. அது பற்றித் தான் அமரேந்தர் ராம் ராகவேந்தரிடம் கேட்டுக் கொண்டு இருந்தான்.

"லீனாவுக்கு யாரும் இல்லைங்கிற நினைப்பு எப்பவுமே வர கூடாது... நாம தான் முன்னிருந்து எல்லாம் நடத்தி கொடுக்கணும்." என்றவனைக் கண்டு,

"எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டேன்." என்று ராம் ராகவேந்தர் கூற... அமரேந்தர் நிம்மதியுடன் புன்னகைத்தான்.

அன்றிரவு அமரேந்தர் தனது மகளிடம் எப்போதும் போல் பேசி கொண்டு இருந்தான். அப்போது அவன் லீனா திருமணம் பற்றி அவளிடம் சொன்னான்.

"நீயும் வருகிறாயா அம்மு? லீனாவுக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கும்." என்று அவன் சொல்ல...

"இதைப் பற்றிக் கேட்கவும் வேணுமா? லீனா அக்காவோட மணப்பெண் தோழியே நான் தான்..." என்று அவள் புன்னகைக்க... அவன் மகளை ஆதுரத்துடன் பார்த்தான்.

"அம்மு, நான் உன் கிட்ட ஒண்ணு கேட்பேன்... நீ மறைக்காம உண்மையைச் சொல்லணும்..." என்ற தகப்பனை அவள் பயத்துடன் பார்த்தாள். தந்தைக்குத் தன்னுடைய விசயம் ஏதும் தெரிந்து இருக்குமோ? என்று...

"நீ யாரையாவது காதலிக்கிறியா?" அமரேந்தர் கேட்டதும் அவளது மனக்கண்ணில் ரன்வீரின் சாந்தமான முகம் மின்னி மறைந்தது. அத்தோடு அவன் காதலை சொன்ன தருணமும்...

"இல்லை... இல்லைப்பா..." மகளின் தடுமாற்றத்தை அவன் கூர்மையுடன் கவனித்தான். ஆனால் அது பற்றி அவன் எதுவும் கேட்கவில்லை.

"அப்போ உனக்கு நாங்க மாப்பிள்ளை பார்க்கலாமா?"

"இப்போ அதுக்கு என்ன அவசரம்ப்பா? கொஞ்ச நாள் போகட்டுமே..." அவள் அவசரமாக மறுத்து சொல்ல...

"உனக்கு ஓகே... ஆனால் ராம் பாவம் இல்லையா? அவனுக்கு வயசாகிட்டே போகுதே..." என்ற தந்தையை அவள் அதிர்வுடன் பார்த்தாள்.

"இப்போ எதுக்கு ராமை பற்றிச் சொல்றீங்க?" அவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பித்தது.

"ராம் நம்ம வீட்டில் வளர்ந்தவன்... அவனுக்கும் வயசாகிட்டு போகுதே... அவனுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்க வேண்டாமா? அதான் உன் கல்யாணத்தோட, அவனோட கல்யாணத்தையும் சேர்த்து பண்ணிரலாம்ன்னு நினைத்தேன்."

"ஓ..." 'அவ்வளவு தானா?' என்று தனக்குள் முனங்கி கொண்டே பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் ஆத்மிகா. சிறிது நேரத்தில் அவள் பயந்தே போய் விட்டாள்.

"ப்பா, நான் ஒண்ணு கேட்கலாமா?" ஆத்மிகா தனக்குள் யோசித்தபடி கேட்க...

"லீனாக்கா எப்படி இதில் இருந்து மீண்டாங்க? எப்படி ஜோசப் அண்ணாவை கல்யாணம் பண்ண சம்மதிச்சாங்க?" ஆத்மிகா தீவிரமான குரலில் கேட்டாள். தந்தையின் வார்த்தைகள் அவளது வாழ்க்கைக்குத் தேவைப்படலாம் என்று நினைத்தாள்.

"இல்லத்துக்கு வந்த புதுசுல லீனாவை மாற்ற ரொம்ப மெனக்கெட்டோம். மாற்றம் உடனே நிகழ்ந்து விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமா தான் நிகழ்ந்தது. நாட்கள் போகப் போக அவளாகத் தன் மனதை தேற்றி எல்லோரையும் போல் வாழ முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றாள். அது அவளோட தன்னம்பிக்கையால் தான் நிகழ்ந்தது. அதன் பிறகு அவள் படிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினாள். ஜோசப் வந்து காதலிக்கிறேன்னு சொன்னப்போ கூட முடியாதுன்னு தான் மறுத்தாள். ஆனால் ஜோசப் அவள் மனசை மாற்றி இதோ இப்போது கல்யாணம் வரை கொண்டு வந்து விட்டான். என்னைக் கேட்டால் ஜோசப் ஒரு ஆண் தேவதை அம்மு..." என்ற தகப்பனை கண்டு அவளுக்குக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

"உங்களை மாதிரி இல்லையாப்பா...?" என்று சொன்னவள் தந்தையின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

"உனக்கும் இதே மாதிரி ஒரு ஆண் தேவதையைப் பார்த்துக் கொடுப்பது என் பொறுப்பு அம்மு..." அவன் வாஞ்சையுடன் மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

"ப்பா, இன்னொரு கேள்வி..."

"கேளுடா..."

"இப்படிப் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க அதையே நினைச்சிட்டு இருக்கணுமா? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கலாமா? இல்லை தன்னோட இந்த நிலைக்குக் காரணமானவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?" அவள் குழப்பத்துடன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள்.

"இது என்ன கேள்வி அம்மு? எல்லா உயிர்களுக்கும் இந்த உலகில் வாழ உரிமை இருக்கு. உனக்குப் புரியும்படி சொல்றேன், கேளு... ஒருவனால் நமக்குத் துன்பம் ஏற்பட்ட பிறகு எப்படி அவனை நம்பி நம்ம வாழ்க்கையை ஒப்படைக்க முடியும்? எதிரியை கூடவே வச்சுக்க முடியுமா? அதுவும் அவனுடன் ஒரே அறையில்...? கேட்கவே கேவலமா இருக்கு. யாருக்கும் தெரியாமல் செஞ்ச தப்பை இப்போ தாலி கட்டிட்டு எல்லோருக்கும் தெரிய செய்யப் போகிறான். ஒரு பெண்ணால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படி நினைப்பது கூடத் தவறு... ஆணான என்னால் கூட இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உனக்கு ஏன் இப்படி ஒரு கேள்வி, சந்தேகம் வந்தது அம்மு?"

"சினிமா, டிவியில் இப்படிக் காட்டுறாங்களே... அதான் கேட்டேன்..."

"எதார்த்த வாழ்க்கையில் இது சாத்தியம் இல்லை அம்மு..."

"தேங்க்ஸ்ப்பா..." என்ற மகளை அவன் வித்தியாசமாய்ப் பார்த்தான்.

"அப்பாவுக்கு எதுக்குடா தேங்க்ஸ்?"

"சும்மா சொல்லணும்ன்னு தோணுச்சு..."

"சரி, லேட்டாகிருச்சு... நீ தூங்கு... குட் நைட்..." என்று மகளுக்கு முத்தமிட்டு அவன் கிளம்ப...

"குட் நைட்ப்பா..." என்றவள் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு,

"போங்க, போய் உங்க பேபியை தூங்க வைங்க..." என்று குறும்பாய் சொல்ல...

"போக்கிரி..." என்று கூறியபடி அவன் செல்லமாய் மகளின் தலையைக் கலைத்து விட்டுச் சென்றான்.

தந்தையின் வார்த்தைகளில் ஆத்மிகாவிற்கு யானை பலம் பெற்றது போல் தெம்பு வந்தது. தெளிவும் வந்தது. நடந்த அசம்பாவிதத்துக்காக அவள் ராம் ராகவேந்தரை திருமணம் செய்யத் தேவையில்லை. அதுவே அவளுக்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. அவள் தனக்கான உதாரணமாக லீனாவை எடுத்து கொண்டாள். லீனாவை போல் வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று... அதற்கு அவளுக்குத் தந்தையின் உதவி நிச்சயம் தேவை... தந்தை இருக்கும் போது அவளுக்கு என்ன பயம்... இப்போது அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.

மறுநாள் அதிகாலையில் ஓட்டுநரை தவிர்த்து விட்டு ராம் ராகவேந்தர் தான் காரை ஓட்டினான். அவனுக்கு அருகில் அமரேந்தர் அமர்ந்திருக்க... பின்னிருக்கையில் அம்மாவும், மகளும் அமர்ந்து இருந்தனர். ஆத்மிகா அவனுக்கு நேர் பின்னே அமர்ந்து இருந்தாள். காரை எடுக்கும் போது ஏதேச்சையாக முன்னால் இருந்த கண்ணாடி வழியே அவன் ஆத்மிகாவை பார்க்க... அவளோ அவனை அலட்சியமாகப் பார்த்து வைத்தாள். அவளது பார்வையில் இருந்த அலட்சியம் கண்டு அவனது விழிகள் யோசனையாய்ச் சுருங்கியது. தன்னைக் கண்டதும் அவளது விழிகளில் எப்போதும் சந்தோசம் மட்டுமே தோன்றும். இப்போது சில நாட்களாக அதில் பயம், கோபம் எல்லாம் கலந்து காணப்படுகிறது. ஆனால் இந்த அலட்சியத்தை அவன் ஒரு போதும் கண்டது இல்லையே... அவனுக்குப் பெருத்த யோசனையாக இருந்தது.

விரைவில் இல்லம் வந்து சேர்ந்துவிட... அமரேந்தர், அஞ்சலி இறங்கியதும் ராம் ராகவேந்தர் ஆத்மிகாவை கண்ணாடியில் பார்த்தபடி,

"என்ன பயம் விட்டு போச்சா?" என்று மெல்ல முணுமுணுக்க...

"ஆமா, என்னோட அப்பா எனக்காக இருக்கும் போது நான் எதுக்கு உன்னைக் கண்டு பயப்படணும்?" என்று அவள் அவனைக் கண்டு மிதப்பாய் கூறியபடி காரிலிருந்து இறங்கினாள்.

அவளைப் பார்த்தபடி தானும் இறங்கிய ராம் ராகவேந்தர் காரை பூட்டி விட்டு அவர்கள் மூவரின் பின்னே யோசனையுடன் சென்றான். அந்தக் கணம் ஆத்மிகா தனது கையை விட்டு போவது போல் ஒரு தோற்றம் அவனுள் எழுந்தது.

'விட்டு விடுவேன் என்று நினைத்தாயோ? ஒரு போதும் அது முடியாது!' அவன் தனக்குள் கூறியபடி தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

ஆணவனின் எண்ண வேறு! பெண்ணவளின் எண்ணம் வேறு! என்றுமே இது நேர்கோட்டில் பயணிக்கப் போவதில்லை. அப்படிப் பயணிப்பதற்கு யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும், மற்றவரை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். இங்கு இரண்டுமே இருவரிடத்திலும் இல்லை.

லீனா, ஜோசப் இருவரின் திருமணமும் இல்லத்தில் வைத்து எளிமையாக நடைபெற்றது. இருவரின் காதல் பார்வை பரிமாற்றத்தையும் கண்ட ஆத்மிகா மனதில் ஏக்கம் முளைத்தது. அவள் எதைக் கேட்டாலும் காலடியில் கொண்டு வந்து வைக்கும் பாசமிகு தந்தை இருந்தும் அவளது மனதில் ஏக்கம் எழுந்தது. அவளது தந்தையால் கூட அவளது ஏக்கத்தினைத் தீர்க்க முடியுமோ என்னவோ! தனக்கும் இது போல் காதல் வாழ்க்கை கிட்டுமா? என்கிற ஏக்கமே அவளது...

திருமணம் முடிந்ததும் சின்னவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாட்டு, ஆடல், பாடல் என்று அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆத்மிகா ஒரு கட்டத்தில் தாங்க இயலாது எழுந்து தனியே வந்து விட்டாள். இல்லத்தின் பின்புறம் இருந்த தோட்டத்தில் நடந்தவள் அப்படியே வெகுதூரம் வந்து விட்டாள்.

"எதற்கு இந்த அலட்சியம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" ராம் ராகவேந்தரின் குரல் திடுமென ஒலிக்க... அவள் திடுக்கிட்டுப் போய்த் திரும்பி பார்த்தாள்.

அவள் அருகே அவளை உறுத்து விழித்தபடி நின்றிருந்த ராம் ராகவேந்தரை கண்டு அவளுக்குச் சற்றுப் பயம் வரத்தான் செய்தது. ஆனாலும் கூப்பிடும் தூரத்தில் தந்தை இருப்பதை உணர்ந்து அவள் நிமிர்வாக அவனைப் பார்த்தாள். அவளது நிமிர்வையும் அவன் மனதிற்குள் குறித்துக் கொண்டான். அவள் அவனுக்குப் பதில் சொல்லாது கிளம்பி செல்ல எத்தனிக்க... அவளது முழங்கையை அழுந்த பற்றி நிறுத்தியவன்,

"கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்..." என்று கோபமாய்ச் சொல்ல...

"அமைதியா இருந்தால்... எனக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம்..." என்றவளை கண்டு விழிகள் இடுங்க பார்த்தவன்,

"புழுவுக்கு எல்லாம் முதுகெலும்பு முளைத்து விட்டதோ?" என்று நக்கல் குரலில் கேட்க...

"புழுவுக்கு முதுகெலும்பு முளைக்காவிட்டாலும் என்றாவது ஒருநாள் அது வண்ணத்துப்பூச்சியாய் மாறி சிறகை விரித்துச் சுதந்திரமாகப் பறக்கும். அதற்குப் பறக்க உரிமை இருக்கு." அவள் சற்று நிமிர்வோடு சொல்ல...

"ஆனால் நீ மண்புழுவாயிற்றே... சிறகு முளைக்கச் சான்ஸ் இல்லை..." அவனது கேலி இன்னமும் குறையவில்லை.

"ராம், என் கிட்ட விளையாடதே... என் அப்பா கிட்ட உன்னைப் பத்தி சொன்னால் என்ன நடக்கும்ன்னு தெரியும் தானே..." அவள் தாங்க மாட்டாது பதிலுக்குக் கோபம் கொண்டு கத்த...

"ஓ... இது தான் விசயமா? அப்படி என்றால் முன்பே உன் அப்பா கிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே... எதுக்கு இத்தனை நாளாய் மறைத்தாய்?"

"அது தான் நான் செய்த தப்பு... இனி இன்னொரு முறை நீ என்னை மிரட்டினால் நான் என் அப்பாவிடம் உன்னைப் பற்றி, உன் நடத்தையைப் பற்றிச் சொல்ல வேண்டி வரும்." என்றவளை கண்டு அவன் ஒன்றும் அதிர்ந்து விடவில்லை.

"சோ, உனக்கு உன் அம்மாவோட உடல்நிலையைப் பற்றிக் கவலை இல்லை..." என்று நிதானமாகக் கேட்டவனைக் கண்டு அவளுக்குத் தான் உள்ளுக்குள் பதறியது.

"இப்போ எதுக்கு என் அம்மாவை இழுக்கிறாய்?"

"நீ உன் அப்பாவை இழுத்தால்... நான் உன் அம்மாவை இழுப்பேன். உன் விசயம் கேள்விப்பட்டால் உன் அம்மாவோட உடல்நிலை என்னவாகும்ன்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை. நிச்சயம் அவங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி, வலிப்பு வந்து... அடுத்து..."

"வேண்டாம், வேண்டாம்... சொல்லாதே..." அவள் காதுகளை மூடி கொண்டு கத்தினாள். அவளது கைகளை விலக்கி விட்டவன்,

"அப்படித்தான் சொல்வேன், நல்லா கேட்டுக்கோ... உன் தலையில் ஏத்திக்கோ... உன் அம்மா போன பிறகு உன் அப்பாவும் இந்த உலகத்தில் இருக்க மாட்டார். அதுக்குப் பிறகு நீ தனியாள்... உன்னை என் வசப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் எனக்கு இருக்கப் போவதில்லை. நீ என் வேலையைச் சுலபமாகத் தான் மாற்ற போகிறாய். போ போய் உன் அப்பா கிட்ட சொல்லு..." என்றவன் அவளைப் பிடித்துத் தள்ளி,

"போடி போ..." என்று கர்ஜிக்க... அவள் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

"என்ன என் கிட்டேயே உன் தில்லாங்கடி வேலையைக் காட்டுறியா? என்னை மீறி எதுவும் நடந்தது... என்னோட ஆக்சன் வேற மாதிரியா இருக்கும்." என்று சினத்துடன் சீறியவனைக் கண்டு அவள் பயத்துடன்,

"என்ன பண்ணுவ?" என்று கேட்க...

"உன்னைக் கடத்திட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிக்குவேன். இந்த விசயம் கேட்டாலும் உன் அம்மா..." என்று மேலே சொல்ல போனவனின் வாயை பொத்தியவள் கண்ணீர் மல்க 'சொல்லாதே' என்று அவனிடம் இறைஞ்சினாள்.

பெண்ணவளின் கண்ணீரை கண்டு அவன் என்ன நினைத்தானோ! அவளது கையை விலக்கி விட்டு அவன் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

"என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை
எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும்
கரைந்து போகவில்லை
இது என்ன கொடுமை
சிரித்திட என்னுடன் நடந்திட
ஏன் இங்கே யாரும் இல்லை
துயரத்தில் என்னோடு இருந்திட
யாரும் எனக்கில்லை"
(என் நிழலுக்கும் - பாடலில் இருந்து சில வரிகள்)

ராகமிசைக்கும்...!!!
❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top