All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "உன்மேல் காதல் தானா என்னுயிரே" - கதை திரி

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 யாருக்கெல்லாம் என்னை நியாபகம் இருக்கு...😉😉😉 இதோ புது கதையோட வந்துட்டேன்... இதுவரைக்கும் என் கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீங்கன்னு நம்புறேன்...😍😍😍 வாங்க கதைக்கு போவோம்...

கதையின் பெயர் : உன்மேல் காதல் தானா என்னுயிரே
ஹீரோஸ் : சஞ்சய், சஞ்சீவ்
ஹீரோயின் : ரஞ்சனா
இவங்களோட சேர்ந்து சஞ்சிதா, தர்ஷினி, கோகுல், இன்னும் பலர் உங்களை சந்திக்க வராங்க...😊😊😊


சஞ்சு - ரஞ்சு - சஞ்சு - யாருக்கு யார் மேல காதல்... வாங்க கதைல தெரிஞ்சுக்கலாம்...😉😉😉

கதையைப் பற்றிய உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "உன்மேல் காதல் தானா என்னுயிரே" முதல் அத்தியாயம் இதோ...😁😁😁 படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...😊😊😊

23126


காதல் 1


அதிகாலை ஐந்தரை மணிக்கு அவள் வைத்த அலாரம் அதன் கடமையை சரியாக செய்ய, குளிருக்கு முகம் துவங்கி உடல் முழுவதையும் போர்வைக்குள் அடக்கி படுத்திருந்தவள், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறே துயில் கலைந்தாள்.



23127



அவள் ரஞ்சனா… ஐந்தரை அடிக்கும் சற்று குறைவான உயரமும் சராசரி பெண்ணின் எடையும் கொண்டவள். தூக்கம் கலைந்து எழுந்திருந்தாலும், சோபையான அழகுடன் இருந்தவள், எழுந்ததும் தன் முதல் வேலையாக இரு கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். இது அவளின் அன்னை சொல்லித் தந்த பழக்கம். இன்று வரை பின்பற்றி வருகிறாள்.



அதன் பின்பு, வேகவேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள், ட்ராக் பாண்ட் – டி-ஷிர்ட்டுடன் குளிருக்கு இதமாக ஜெர்கின்னையும் அணிந்து கொண்டு, காலை நேர ஜாக்கிங்கிற்கு தயாரானாள்.



அதே அறையில் இருந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தவள், இருவரில் ஒருவர் கூட இவளின் சத்தத்திற்கு விழிக்காததால், அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கினாள்.



முதலில் சற்று மெதுவாக நடந்தவள், போகப் போக வேகமெடுத்து ஓடினாள். எதிரில் தென்பட்டவர்களிடம் ஒரு சினேக புன்னகை சிந்தியவாறே சென்று கொண்டிருந்தாள்.



அந்த அதிகாலை நேரம், எந்தவித இரைச்சலும் இல்லாமல், அமைதியாக இருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றாள். அப்போது, பக்கத்து தெரு அண்ணாச்சியின் மளிகைக் கடையை, அந்த கடையில் வேலை செய்பவன் திறக்க, அவனைத் திட்டிக் கொண்டே வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அந்த அண்ணாச்சி. அவனும் அவரைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே அவரிட்ட வேலையை செய்தான். அதைக் கண்டவளிற்கு எப்போதும் போல் புன்னகை விரிந்தது. சற்று தள்ளி, வீதியை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் எப்போதும் போல், வேலையில் ஒரு கண்ணை வைத்திருந்தாலும், அங்கு நடந்து செல்வோரிடமும் ஒரு கண்ணை வைத்திருந்தார். ரஞ்சனா அவரைக் கடக்கும் போது மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளிக்க, அவரும் அதை புன்னகையோடு ஏற்றார்.



இப்படி நாள்தோறும் அவள் காணும் காட்சிகளையே கண்டாலும், எப்போதும் இல்லாத வகையில் இன்று சிலர் புதிதாக அவளின் பார்வை வட்டத்தில் விழுந்தனர். அவர்கள் அனைவரும் கல்லூரியில் கால் வைத்திருக்கும் ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ என்பது அவர்களின் நடவடிக்கைகளிலேயே தெரிந்தது.



ரஞ்சனா மட்டுமில்லை, அங்கு வழக்கமாக வந்து செல்லும் பலரும் அவர்களை பார்த்துக் கொண்டே கடந்து செல்ல, அவர்களோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் யாருக்காகவோ காத்திருக்கின்றனர் என்பது புரிந்தது ரஞ்சனாவிற்கு.



அவர்களைக் கடக்கும் போது, அவளின் செவியைத் தீண்டிய, “ஹே நல்லா தெரியுமா டி… அவன் இந்த வழியா தான் ஜாக்கிங் போவானா…” என்ற செய்தியில், அவர்களின் காத்திருப்பு எதற்கென்று புரிந்ததால், இருபக்கமும் தலையையாட்டி மீண்டும் ஒரு புன்னகையுடன் கடந்து சென்றாள்.



அவளும் அவர்களைப் போலவே, நான்கு வருடங்களுக்கு முன்பு நின்றிருந்தவள் தானே… ஒரே ஒரு வித்தியாசம், அவளின் தோழிக்கு துணையாக வந்திருந்தாள்… இல்லை இல்லை இழுத்து வரப்பட்டிருந்தாள்.



அவற்றையெல்லாம் நினைத்தவாறே அவள் எப்போதும் செல்லும் பூங்காவிற்கு வந்திருந்தாள். அவ்வளவு நேர ஓட்டத்தின் காரணமாக அவளிற்கு மூச்சு வாங்க, அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.



அப்போது அவளருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவள், அங்கு அமர்ந்திருந்த ராதா ஆன்டியைக் கண்டு, “ஹாய் ராதா ஆன்ட்டி…” என்றாள்.



“ஹே ரஞ்சு… என்ன நீ மட்டும் வந்திருக்க..? எங்க உன்கூட வர அந்த தர்ஷுவைக் காணோம்…” என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார்.



“அவளுக்கு உடம்புக்கு முடியல ஆன்ட்டி. அதான் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கா…” என்றாள் ரஞ்சனா.



“ஓ… நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லு மா… இப்போலாம் கண்டதை சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்குறீங்க… நாங்களாம் அந்த காலத்துல…” என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சனாவைக் காப்பதற்கென்றே அங்கு வந்தார் அந்த ராதையின் கிருஷ்ணன்.



“ஹே ரஞ்சும்மா… ரொம்ப நாளாச்சு பார்த்து…” என்று ராதாவின் அருகே அவரை இடித்துக் கொண்டு அமர்ந்தார்.



அவரை முறைத்த ராதாவின் பார்வையிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கை உணர்ந்தவள், இது எப்போதும் நடக்கும் நிகழ்வென்பதால் சிரித்துக் கொண்டே, “ஹாய் அங்கிள்… நீங்க தான் ரெண்டு நாள் வேலைன்னு ஊருக்கு போய்டீங்க…” என்றாள்.



“ஆமா ஆமா… ஊருக்கு போய் உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன்…” என்று ரஞ்சனாவிடம் கண்ணடித்துக் கூறினார்.



இது ராதாவின் உடமையுணர்வை தூண்டி விட்டு சமரசம் செய்வதற்காக கிருஷ்ணா நடத்தும் நாடகம் என்று ரஞ்சனாவிற்கு நன்றாக தெரியும். அவளும் சிரிப்புடன் அவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.



“அப்பறம் என் ஸ்வீட்டி எப்படி இருக்கா..?” என்று அவர் கேட்க, அவ்வளவு நேரம் பொறுமையைப் பிடித்துக் கொண்டிருந்த ராதாவை விட்டு அவரின் பொறுமை பறந்து போனது.



“லேட்டாச்சு நான் வீட்டுக்கு போறேன், ரஞ்சு.” என்றவர் கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே நடந்தார்.



அவர் சென்றதும், “அங்கிள், இன்னைக்கு வீட்டுல உங்களுக்கு பெரிய்ய்ய சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு போல…” என்று ரஞ்சனா கிண்டலாகக் கேட்டாள்.



“ஹாஹா அந்த சர்ப்ரைஸ்ஸை வாலாண்டியரா வாங்கிகுற ஆள் நானா தான் இருக்கும்… ஹ்ம்ம் அவ திட்டிட்டே இருந்தா கூட பரவாயில்லை. ஆனா என்கூட பேசாமயிருந்தா, அன்னைக்கு நாளே நல்லா இருக்காது.” என்று உணர்ந்து கூற, அவர்களின் அன்யோனிய வாழ்வை என்றும் போல் இன்றும் ரசித்தாள் ரஞ்சனா.



“சரி ரஞ்சும்மா… நானும் கிளம்புறேன்… இல்லைன்னா உங்க ஆன்ட்டி கிட்ட இதுக்கும் எக்ஸ்ட்ராவா திட்டு வாங்க வேண்டியதிருக்கும்…” என்றவாறே அவரின் வீட்டை நோக்கி சென்றார்.



ராதா – கிருஷ்ணா தம்பதியரை ரஞ்சனாவிற்கு கடந்த நான்கு வருடங்களாக பழக்கம். இதோ இதே பூங்காவில் தான் முதல் முறை அவர்களை சந்தித்தாள். கள்ளம் கபடமில்லாத அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இன்று வரை அவர்களுடன் நட்புடன் இருக்கிறாள்.



அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் அவளை ஈர்த்தது, அவர்களின் காதல் தான். திருமணமாகி இருபது வருடங்கள் கழிந்தும், ஒருவரின் மேல் மற்றவருக்கு கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருப்பதைக் கண்டு பல சமயங்களில் வியந்திருக்கிறாள். அவர்களுக்கு குழந்தை இல்லையென்றாலும், இன்று வரை ஒருவருக்கு மற்றவர் துணை என்று வாழ்ந்து வருபவர்களைக் கண்டு அவர்களின் மேல் ரஞ்சனாவிற்கு தனி ‘கிரேஸ்’ என்று கூட சொல்லலாம்.



இப்படியெல்லாம் தன் வாழ்விலும், காதலைக் கொட்டிக் கொடுக்க ஒருவன் வருவானா என்று அடிக்கடி அவளின் மனதில் தோன்றும். படிப்பை காரணமாக்கி, அலைபாயும் மனதை ஒரு தட்டு தட்டி, அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாள். ஆனால், அதற்கெல்லாம் அடங்காத அவளின் மனதோ, கற்பனையில் ஒருவனை உருவாக்கி அவனுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தது.



இன்றும் ராதா – கிருஷ்ணாவின் காதலைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் எதேச்சையாக வாசலை நோக்க, அங்கு வந்து கொண்டிருந்தான் அவன்.


23128


ஆறடி உயரம், ஆப்பிள் சருமம், அதைக் கரடுமுரடாகக் காட்டும் அடர்ந்த தாடி, சிரிக்கும் கண்கள், கூர் மூக்கு, தாடிக்குள் மறைந்திருக்கும் உதடு… என்று அவனை அவளறியாமலேயே அளவெடுத்துக் கொண்டிருந்தன அவளின் கண்கள்.



‘ஹ்ம்ம்… அந்த தாடி மட்டுமில்லைன்னா, நல்லா அமுல் பேபி மாதிரி இருந்துருப்பான்.’ என்று அவளின் மனம் கூவ, அப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள், ‘ச்சே… என்னது இது… யாரோ ஒருத்தனை இப்படி பார்த்துட்டு இருக்கேன்… இதுல ‘அமுல் பேபி’ன்னு கமெண்ட் வேற…’ என்று அவளையே திட்டிக் கொண்டவள், மீண்டும் அவன் வரும் திசையை நோக்க, அங்கு அவனின் பின்னே அந்த ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ குழு வந்து கொண்டிருந்தது.



‘ஓ… இவனுக்கு தான் வெயிட் பண்ணாங்களா…’ என்று நினைத்தவளைக் கலைத்தது அலைப்பேசியின் அலார சத்தம்.



மணியைப் பார்த்தவள், நேரமாகி விட்டதை உணர்ந்து, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு ஓடினாள்.



*****



சிட்னி, ஆஸ்திரேலியா…



வானுயர கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்டு நகரின் மையப்பகுதியிலுள்ள இந்த மத்திய வர்த்தக மாவட்டம் என்னும் இடம் தான் சிட்னி நகரின் வர்த்தக நாடியாகும்.



அதில் ஒரு கட்டிடத்தில் நுழைந்தது அந்த அதிநவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார். அதிலிருந்து இறங்கினான் அவன். பிசினஸ் உலகில் எஸ்.ஜே என்று அழைக்கப்படும் சஞ்சய்… சஞ்சய் பிரசாத், ‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸின்’ தற்போதைய உரிமையாளன்.


23129



‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் தன் தடத்தை பதித்துள்ளது. கே.பி என்னும் பெயரில் கீழ் பல தொழில்கள் உள்ளன. அவையனைத்தையும் ஒற்றை ஆளாக நிர்வகிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் அந்த சாதனையைத் தன் இருபத்தியேழாவது வயதிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறான் எஸ்.ஜே.



தொழில் உலகில் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே ஆணழகன் தான். அவனின் உருவம் பார்த்தவுடன் அனைவரையும் ஈர்த்து விடும் தான். ஆனால் அவனின் கடினமான முகமோ, ஒருவரையும் அருகில் வரக்கூட அனுமதிக்காது. அந்த அளவிற்கு கற்பாறை போன்று இறுகியிருக்கும் அவனின் முகம். இறுகிப்போன அவன் இலகுவது யாரிடத்திலோ…



அதுவரை சற்று இலகுவாக இருந்த அவ்விடம், அவனின் வரவில், கண்ணசைக்கும் நேரத்தில் மந்திரம் போட்டது போல் சுறுசுறுப்பாக இயங்க, அதைக் கவனித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், கம்பீரமாக நடந்து சென்றான் எஸ்.ஜே.


23130



அவன் வந்ததை அறிந்ததும், அவ்விடத்திற்கு ஓடி வந்தான் அவனின் பி.ஏ கோகுல். கோகுலைப் பார்த்தவனின் விழிகளில் இருந்த கோபத்தைக் கண்டுகொண்டவன் போல, அவனே வாக்குமூலத்தைக் கொடுக்க தயாராக, அவனை கையசைவில் தடுத்த எஸ்.ஜே, “டோன்ட் வேஸ்ட் மை டைம் இன் யுவர் லேம் எஸ்க்யூசஸ்… இன்னொரு தடவை இப்படி லேட்டா வந்தா, யூ வில் பி ஃபயர்ட்…” என்று பற்களைக் கடித்தவாறே கூறியவன், அதிர்ச்சியாக நின்றிருந்த கோகுலை கடந்து சென்றான்.



“அரை செகண்ட் லேட்டா வந்ததுக்கே ஃபயர்ட்டா! இனி வாட்ச்சை நானோ செகண்ட்டுக்கு தான் செட் பண்ணனும் போல…” என்று எப்போதும் போல தன் தலையெழுத்தை சபித்துக் கொண்டு புலம்பியவனை, தோளில் தட்டிய ஒருத்தி, “சார் கான்ஃபெரன்ஸ் ரூம் போய் ஒரு நிமிஷம் ஆச்சு…” என்று ஆங்கிலத்தில் கூற, கோகுல் பதறிக் கொண்டு ஓடினான்.



‘டிக் டிக்’ என்ற கடிகார சத்தம் மட்டுமே அங்கு கேட்க, அந்த அறையில் குழுமியிருந்த அனைவரும், ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற பீதியிலேயே அமர்ந்திருந்தனர்.



அவர்களை மேலும் சற்று நேரம் பீதியில் ஆழ்த்திய பின்பே, அறையின் கதவைத் திறந்து அவர்கள் வந்தனர். ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக கட்டுமானத் துறையில் பெயர்பெற்ற ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ நிர்வாக இயக்குநர் ஹென்றி ஜோன்ஸுடன் அவரின் மகன் நிக்கோலஸ் ஜோன்ஸ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவர் வந்திருந்தனர்.



சிட்னியில் பிரம்மாண்டமாக கட்டவிருக்கும் ‘ஸ்கைஸ்க்ரேப்பர்’ எனப்படும் வானுயர்ந்த கட்டிடத்தை, கே.பி கன்ஸ்ட்ரக்ஷன்ஸுடன் இணைந்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்காகத் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. என்ன தான் பாரம்பரியமான நிறுவனமாக இருந்தாலும், ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ தற்போதைய நிலை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவர்களின் நிலையை உயர்த்திக் கொள்ள இதுவொரு அரிய வாய்ப்பு என்பதால் ஜோன்ஸ் நிறுவனத்தினர் மிகவும் மகிழ்ச்சியாகவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



உள்ளே நுழைந்ததும், ஹென்றி ஜோன்ஸ் ஆர்ப்பாட்டமாக எஸ்.ஜேயுடன் கைகுலுக்கியவர், “உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு எஸ்.ஜே.” என்று ஆங்கிலத்தில் கூறினார்.



“வெல்… ஆனா எனக்கு உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க விருப்பமில்ல மிஸ்டர். ஜோன்ஸ்…” என்று முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாக கூறினான் எஸ்.ஜே.



“வாட்… ஆர் யூ கிட்டிங்..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஜோன்ஸ்.



உதட்டை கேலியாக வளைத்தவன், “பிசினஸ்ல நான் எப்பவும் காமெடியோ காம்ப்ரோமைஸோ பண்றதில்ல மிஸ்டர். ஜோன்ஸ். அதான் நான் இந்த இடத்துல இருக்கேன்…” என்று எஸ்.ஜே கூறியதும், நிக்கோலஸ் கோபமாக, “மைண்ட் யுவர் வர்ட்ஸ் எஸ்.ஜே…” என்றான்.



இப்போது எஸ்.ஜேயின் கண்கள் நிக்கோலஸை நோக்க, அவன் ஏதோ சொல்ல வந்த நேரம், மகனைத் தடுத்த ஜோன்ஸ், “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…” என்றவாறே அவ்வறையை விட்டு வெளியே சென்றார்.



அதையும் இதழ் வளைந்த கேலிச் சிரிப்புடன் பார்த்தவனின் உள்ளமோ உலைக்கலானாக கொதித்தது. வேகவேகமாக அந்த கட்டிடத்தின் மேல்மாடியை அடைந்தவன், தனக்கென பிரேத்யேகமாக உருவாக்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.



அங்கு சுவரில் மாட்டியிருந்த சட்டமிட்ட புகைப்படத்தை நோக்கியவன், “வொய் டிட் யூ லீவ் மீ அல்லோன்..?” என்று கத்தினான்.


*****



23131


தன் ஜாக்கிங்கை முடித்துவிட்டு வந்தவள், சாவியைக் கொண்டு கதவைத் திறக்க, அந்த சத்தத்தில் தான் சஞ்சிதா உருண்டு பிரண்டு படுத்தாள். இதில், “ரஞ்சு, மெதுவா…” என்று கண்டனம் வேறு.

23132


குளியலறையில் சத்தம் கேட்க, தர்ஷினி குளித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து தன் கட்டிலில் காலை நீட்டிப் படுத்தாள்.



தன் கையிலிருந்த அலைபேசியில், முதல் நாள் சேமித்து வைத்த ஆடியோ பதிவை செவிப்பேசி வாயிலாகக் கேட்கத் துவங்கினாள் ரஞ்சனா.



இதுவும் அவளின் பழக்கங்களில் ஒன்று தான். பள்ளியில் படிக்கும்போதெல்லாம் டைரியில் எழுதி வைத்தவள், இப்போது எழுதுவதற்கு நேரமில்லாததால் இப்படி ஆடியோவாக பதிவு செய்து கொள்வாள். ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், அந்த வாரத்தின் பதிவுகளை கேட்டு, சிலவற்றை மட்டும் சேமித்துவிட்டு மீதியை அழித்து விடுவாள்.



“ஹே ஸ்வீட்டி.. எப்பவும் போல 9 மணிக்கு நான் ஆஜராகிட்டேன்… ஹ்ம்ம் இன்னைக்கு என்ன நடந்துச்சு… வழக்கம் போல சஞ்சு சைட்டடிக்க, தர்ஷு அவளை அடிக்கன்னு ஜாலியா போச்சு. அப்பறம் இன்னைக்கு லைட்டா மழை தூறுச்சு… சோ சூடா ஏதாவது சாப்பிடலாம்னு வழக்கமா போற டீக்கடைக்கு போகலாம்னு பிளான் பண்ணோம். ஆனா இந்த சஞ்சு தான், எப்பவும் இங்க தான சாப்பிடுறோம், வேற எங்கயாவது போலாம்னு எங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு ரோடு ரோடா சுத்தி கடைசில ஒரு பன்னு கூட வாங்கித் தரல… சோ சேட்… அப்பறம்… ஹ்ம்ம் இன்னைக்கும் அம்மா அப்பாக்கு ட்ரை பண்ணேன். நாட் ரீச்சபில்னு வருது. அவங்க பிஸி செட்யூல் எனக்கு புரியுது… ஆனாலும் இப்போயெல்லாம் அவங்க என்னை விட்டு ரொம்ப தள்ளியிருக்க மாதிரி ஒரு ஃபீலிங்… முன்னாடியெல்லாம் சுபி தான் என்னை அவாய்ட் பண்ணுவா… இப்போ என் குடும்பமே என்னை ஒதுக்குறாங்களோன்னு தோணுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது… சரி விடு இந்த டைம் லீவுக்கு போறப்போ பார்த்துக்கலாம்.. சரி ஸ்வீட்டி ரொம்ப நேரம் உன்கூட பேசிட்டு இருந்தா சஞ்சு திட்டுவா… சோ பை நாளைக்கு பார்க்கலாம்…” என்று அந்த பதிவு முடிந்திருந்தது.


23133

அப்பதிவைக் கேட்டவளிற்கு நினைவு முழுவதும் அவளின் குடும்பத்தை சுற்றியே இருந்தது. ரஞ்சனாவின் பெற்றோர், விஸ்வநாதன் – கமலா. இருவருமே மருத்துவத்துறையில் வேலை செய்கின்றனர். அவளிற்கு ஒரு தங்கை, பெயர் சுபத்ரா. அவளின் சொந்த ஊரிலேயே முதலாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள்.



தாய் தந்தை இருவரும் உயிர் காக்கும் துறையில் வேலை செய்வதால், அவர்களால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாது. அந்த சிறு வயதிலும் பெற்றோரின் சூழல் புரிந்து நடந்து கொள்வாள் ரஞ்சனா. ஆனால் அவளை விட இளையவளான சுபத்ராவோ பெற்றோரைத் தொல்லை செய்ய, அவர்களும் வேலையினால் ஏற்பட்ட அழுத்தத்தில், ரஞ்சனாவைப் போல் இருக்க சொல்லி திட்டி விடுவர்.



அதுவே சிறு வயதிலிருந்தே ரஞ்சனாவின் மீது சுபத்ராவிற்கு பொறாமையுணர்வைத் தூண்டியது. அவள் ரஞ்சனாவுடன் விளையாடவோ பேசவோ மாட்டாள்.



அப்போதிலிருந்தே ரஞ்சுவிற்கு துணையாகிப் போயினர் தர்ஷு என்கிற தர்ஷினி மற்றும் சஞ்சு என்கிற சஞ்சிதா. மூவருமே பிளே ஸ்கூலிலிருந்து இப்போது வரை ஒன்றாகவே சுற்றித் திரியும் ‘த்ரீ ரோசஸ்’. மூவரின் வீடும் அருகருகே இருந்ததால், விடுமுறையும் மூவருக்கும் ஒன்றாகவே கழியும்.


23134


சஞ்சிதாவின் தாய் வசுந்தரா, அவர்களின் ஏரியா இன்ஸ்பெக்டராக இருக்கிறார். வசுந்தராவின் கணவர் அவரை விட்டு பிரிந்து விட, வேறு திருமணம் செய்து கொள்ள சொல்லி அவரின் குடும்பத்தினர் வற்புறுத்தினாலும், சஞ்சுவிற்காகவே அதை மறுத்து இன்று வரை தனியாகவே அவளை வளர்த்து வரும் இரும்பு பெண்மணி. வசுந்தராவின் மேல் ரஞ்சு மற்றும் தர்ஷுவிற்கு தனி மரியாதை உண்டு. ஆனால் சஞ்சுவோ, வசுந்தரா பணியைக் காரணம் காட்டி தன்னுடன் நேரம் செலவளிப்பதில்லை என்று அவ்வப்போது புகார் வாசிப்பாள்.

23135

தர்ஷினியின் பெற்றோர், அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட, அவளின் அத்தை மலர்விழி அவளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். ஏதோ காரணங்களால், அவரின் திருமணம் தடைப்பட, அண்ணன் மகளுக்காக அதன்பின் திருமணத்தை மறுத்து விட்டார். வீட்டில் அவரின் தாயின் துணையுடன் நர்சரி பள்ளியை ஆரம்பிக்க, அங்கு தான் நம் ‘த்ரீ ரோசஸ்’ஸின் நட்பு மலர்ந்தது.



இவர்களின் விடுமுறை நாட்கள் எல்லாம் தர்ஷுவின் வீட்டில் தான் கழியும். தர்ஷுவின் பாட்டிக்கு இவர்கள் அங்கு செல்வது பிடிக்காது. அவர்களை ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார். ஆனால் மலர்விழியோ அதற்கு நேர்மாறாக அன்பை பொழிவார். அவருக்கு மூன்று பிள்ளைகளும் சமம் தான்.



இப்படி அழகாக ஆரம்பித்த அவர்களின் சிறுவயது நட்பு இப்போது கல்லூரியில் முதுநிலை கல்வி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.



ரஞ்சனா அவர்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துக் கொண்டிருக்க, அவளின் நினைவுகளை கலைத்த தர்ஷு, “ஹே ரஞ்சு, எவ்ளோ நேரம் கூப்பிடுறது..? டைம்மாச்சு சீக்கிரம் குளி… நான் மேடமை எழுப்புறேன்…” என்று சுகமாக தூங்கிக் கொண்டிருந்த சஞ்சுவின் போர்வையை உருவினாள்.



“தர்ஷு, உனக்கு தான் ஃபீவரா இருந்துச்சுல… இப்போ எதுக்கு குளிச்ச..?” என்று ரஞ்சு வினவவும், “இந்த சின்சியர் சிகாமணி அதுக்கு ஏதாவது காரணம் சொல்லுவா… ஹாவ்வ்வ்” என்று தூங்கி எழுந்த போதும் தர்ஷுவைக் கிண்டல் செய்து கொண்டே எழுந்தாள் சஞ்சு.



அதன்பின் இருவரும் சண்டைபோட, ரஞ்சு குளித்து முடித்து வெளியே வந்துவிட்டாள். “அடச்சே நிப்பாட்டுங்க ரெண்டு பேரும்… சஞ்சு போய் சீக்கிரம் குளிச்சுட்டு வா… அப்போ தான் மெஸ்ல சாப்பாடு இருக்கும்…” என்று சஞ்சுவை விரட்டினாள் ரஞ்சு.



“அந்த காஞ்சு போன தோசைக்காகவா சீக்கிரம் குளிக்க சொல்ற… உனக்கெல்லாம் மனச்சாட்சியே இல்லையா…” என்று சஞ்சு ஆரம்பிக்க, “நீ எதுக்கு அடிபோடுறன்னு தெரியுது… ஏற்கனவே லேட்டாச்சு… இதுல வெளிய போய் சாப்பிடனும்னா இன்னும் லேட்டாகிடும்… சோ இன்னைக்கு மார்னிங் மெஸ்ல தான் சாப்பிட போறோம்.” என்று தர்ஷு அவளை அறிந்தவளாகக் கூறினாள்.



அதைக் கேட்ட சஞ்சு உதட்டைப் பிதுக்க, “சரி சரி நைட் நம்ம வெளிய சாப்பிடலாம்…” என்று அவளை அப்போதைக்கு சமாதானப் படுத்தினாள் ரஞ்சு.



“ஹே சூப்பர். இங்க மெய்ன் ரோட்டுல புதுசா ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுருக்காங்களாம். அங்க போலாம்…” என்று திட்டம் திட்டியவாறே குளியலறைக்குள் புகுந்தாள் சஞ்சு.



அதைக் கேட்ட மற்ற இருவரும் சிரிக்க, விதியும் இவர்களுடனே சிரித்தது. இதுவரை எவ்வித தடங்கலுமின்றி நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கைப் பாதையில் இனி வரும் தடங்கல்களை இவர்கள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றனர் என்பதை இவர்களுடனே பயணித்து தெரிந்து கொள்வோம்…


தொடரும்...


இந்த கதை வாரம் ஒரு நாள் தான் போட முடியும் பிரெண்ட்ஸ்... கொஞ்சம் அட்ஜஸ்ட கரோ... அடுத்த வெள்ளியன்று மீண்டும் சந்திக்கலாம்...😍😍😍

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இந்த கதை எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கு... நியாபகம் இல்லன்னு சொல்லி என் ஹார்ட்ட டேமேஜ் பண்ணக்கூடாது...😁😁😁 ரொம்ப நாள் உங்களையெல்லாம் வெய்ட் பண்ண வச்சதால, நாளைக்கு எபிலயிருந்து சின்ன டீசர்..😉😉😉 வெறும் டைலாக் மட்டும் இருக்கு, இதெல்லாம் டீசரான்னு கேக்க கூடாது...😜😜😜 இதெல்லாம் யாரோட டைலாக்னு கரெக்ட்டா சொல்லுங்க பாப்போம்...😁😁😁

டீசர்

“சாப்பிட மட்டும் போறோம்னு யாரு சொன்னா… அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் செம ஹேன்ட்ஸமாம்… சோ டூ-இன்-ஒன் பர்பஸுக்காக போறோம்…”

“உன்ன நம்பி வந்ததுக்கு, ஸ்விகில ஆர்டர் போட்டு சாப்பிட்டுருக்கலாம்…”


*****

அப்போது அவர்களிடம் வந்த பேரர், “யுவர் ஆர்டர் ப்ளீஸ், மேம்” என்று மெனு கார்டை கொடுத்தார்.

“அவ்வ்… இங்க ஸ்டார்டிங் ப்ரைஸே டூ ஃபிஃபிட்டியாம்…”

“ஸ்ஸ்ஸ் அந்த பேரர் நம்மளயே பாக்குறான்… சீக்கிரம் ஏதாவது ஆர்டர் பண்ணு…” மெனு கார்டை அப்படியும் இப்படியும் திருப்பி, ஓரளவிற்கு நியாய விலையிலிருந்த ஷவர்மாவை ஆர்டர் செய்தாள்.

“ஜஸ்ட் அ ஷவர்மா, மேம்..?” என்று அந்த பேரர் கேட்க, ‘ஐயோ… மானத்த வாங்குறானே…’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

*****

“ம்ம்ம் ஒரே நேம்… உங்கள பார்த்தா கூட, உங்கள மாதிரி சிஸ்டர் இல்லயேன்னு ஃபீலிங் வருது…”

அவ்வளவு நேரம் ‘தௌவ்சண்ட் வாட்ஸ் பல்ப்’ போல பிரகாசமாக இருந்தவளின் முகம் ‘சிஸ்டர்’ என்று அவன் அழைத்ததும் சுருங்கிப் போயிற்று.

‘ஒரே நாள்ல எத்தன பேருக்கு தான் டா நான் தான் சிஸ்டர் ஆகுறது… பொசுக்கு பொசுக்குன்னு ‘சிஸ்டர்’ன்னு கூப்பிட்டு என் மனசை டேமேஜ் பண்ணிடுறீங்களே…’

*****

‘ஆ… பார்வையே சரியில்லையே… இந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் வேற வேலையே இல்ல… ஆனாவுனா இந்த அப்பாவிய போட்டு பாடாப்படுத்துறது…’


*****

"நாம இந்தியா போகணும்… அடுத்த ஃ பிளைட்ல டிக்கெட் போடு…” என்றவாறே நடந்தவன், ஒரு நிமிடம் நின்று, “என்கூட நீயும் வரணும்…” என்று கூறிவிட்டு, தன் வேக நடையில் சென்று விட்டான்.

“போன ஜென்மத்துல இவருக்கு பொண்டாட்டியா இருந்துருப்பேன் போல… இப்படி எங்க போனாலும், என்னையும் இழுத்துட்டே போறாரே…”

*****

என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா... அப்படியே கமெண்ட்ல சொல்லவும்😁😉
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இதோ அடுத்த பதிவோட வந்துட்டேன்...😁😁😁 படிச்சுட்டு அப்படியே போகாம உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க பிரெண்ட்ஸ்...😉😁😍



காதல் 2

ஒருவழியாக சஞ்சுவை சமாதானப்படுத்தியவர்கள், விடுதியில் கொடுத்த காய்ந்த தோசையை சாப்பிட்டுவிட்டு, கல்லூரிக்கு சென்றனர். மூவரும் அதே கல்லூரியில் தான் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு இதோ முதுகலையில் முதல் ஆண்டை வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.

எங்கு செல்வதாயினும், மூவரும் இணைப்பிரியாமல் ஒன்றாகவே செல்வதால், ‘த்ரீ ரோஸஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர்கள், அக்காரணத்தினாலேயே அக்கல்லூரியில் பிரபலமடைந்தனர்.

இன்றும் அதே போல், மூவரும் ஒன்றாக சென்று கொண்டிருக்க, சஞ்சு தான் அவளின் வேலையைத் துவங்கினாள்.

“இன்னைக்கு ஃப்ரசர்ஸ் வந்துருக்காங்க போல… அட அட என்னவொரு கலர்ஃபுல்லான வியூ…” என்று வழக்கம் போல சஞ்சு சைட்டடிக்க, “அட எரும… உன்ன விட சின்ன பசங்கள போய் சைட்டடிக்கிற…” என்று சஞ்சுவின் தலையில் தட்டினாள் தர்ஷு.

“ப்ச்… சைட்டடிக்கிறதுல சின்ன பசங்க என்ன, பெரிய பசங்க என்ன… அழக ரசிக்கணும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது…” என்று அவளின் தத்துவத்தை எடுத்துவிட்டாள் சஞ்சு.

“உன் ஃபிலாசஃபில தீய வைக்க…” என்று கடுப்புடன் தர்ஷு கூற, “இதுக்கு தான் உன்ன மாதிரி ஆன்ட்டிஸ் கூட வரக்கூடாதுன்னு சொல்றது. நீயும் பாக்க மாட்ட, பாக்குற என்னையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்ப.” என்று அலுத்துக் கொண்டாள் சஞ்சு.

அவர்களின் உரையாடல்களை எவ்வித இடையூறும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சு. அப்போது அவர்களை நோக்கி வந்தான் ஒருவன். சற்று முன்னர், சஞ்சு சைட்டடித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்தவன்.

அவன் வருவதைக் கண்ட சஞ்சு, “ஹே அங்க பாருங்க… ஒரு ஜுனியர் பையன் வரான். அநேகமா நான் ஜூனியருன்னு நெனச்சு பேச வருவான்னு நெனைக்கிறேன்… ஆனா நான் அவனுக்கு சீனியர்னு தெரிஞ்சா, டிசப்பாயின்ட் ஆகிடுவான்ல… ச்சு பாவம்…” என்று சஞ்சு அந்த பையனிற்காக வருத்தப்பட, “ரொம்ப ஃபீலிங்கா இருந்துச்சுனா, திரும்ப யூ.ஜி பண்ணி அவனுக்கு கம்பெனி குடேன்…” என்று தர்ஷு அவளிற்கு மறுமொழி தர, மீண்டும் சண்டை உருவாகும் சூழலில், ரஞ்சு தான், “ஸ்ஸ்ஸ் இப்போ ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா…” என்றாள்.

அவள் அவ்வாறு கூறுவதற்கும், அவன் அவர்களை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது. அவன் நேராக சஞ்சுவிடம் வந்து, “அக்கா, ஃபர்ஸ்ட் இயர் கிளாஸுக்கு எப்படி போகணும்…?” என்று கேட்டான்.

“எதே அக்காவா..!” என்ற சஞ்சுவின் முகமோ விளக்கெண்ணையை குடித்தது போல இருக்க, தர்ஷுவும் ரஞ்சுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அவர்களைக் கண்டு மிரண்டவன், மீண்டும் “அக்கா..” என்றழைக்க, இப்போது வெகுண்டு எழுந்தவள், “யாருக்கு டா அக்கா… ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு… இன்னொரு தடவ அக்கான்னு வந்த…” என்று அவனைத் திட்ட அவனோ பயந்து இரண்டடி பின்னே சென்றான்.

ரஞ்சுவும் தர்ஷுவும் தான் சஞ்சுவைப் பிடித்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போதும் அவர்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை தான். இருப்பினும் சஞ்சுவிற்காக இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

அப்போது சஞ்சுவின் பார்வையில் மீண்டும் அவன் பட, “இன்னும் போலயா நீ..?” என்று சஞ்சு வினவ, “அக்கா… அந்த கிளாஸ்…” என்று அவன் இழுக்க, “அடிங்…” என்றவாறே அவனைத் துரத்தினாள் சஞ்சு.

மற்ற இருவருக்கும் சிரிப்பதா இல்லை சஞ்சுவைப் பிடிப்பதா என்று தெரியாமல், இரண்டையும் ஒருங்கே செய்து அதில் வெற்றியும் கண்டனர். இவ்வாறு அவர்களின் அன்றைய நாள் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் கழிந்தது.

மாலை நேரம் கல்லூரி விட்டு வரும்போதே, நூறாவது முறையாக அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு செல்வதை உறுதிபடுத்திக் கொண்டாள் சஞ்சு.

தர்ஷுவிற்கு காய்ச்சல் இன்னும் சரியாகாத காரணத்தினால், அவளை அறையிலேயே ஓய்வெடுக்க சொல்லிவிட்டு மற்ற இருவரும் கிளம்பினர். செல்லும் வழியெல்லாம், “இந்த ட்ரெஸ் ஓகே தான… இன்னும் கொஞ்சம் மேக்-அப் போட்டுருக்கலாமோ…” என்று ரஞ்சுவைக் கேள்விகளால் குடைந்து விட்டாள் சஞ்சு.

“ப்ச் சஞ்சு, சாப்பிட தான போறோம்… அதுக்கு இவ்ளோ மேக்-அப்பே ஓவர்…” என்றாள் ரஞ்சு.

“சாப்பிட மட்டும் போறோம்னு யாரு சொன்னா… அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் செம ஹேன்ட்ஸமாம்… சோ டூ-இன்-ஒன் பர்பஸுக்காக போறோம்…” என்று கண்ணடித்துக் கூறினாள் சஞ்சு.

அதைக் கேட்ட ரஞ்சு, வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டு, “உன்ன நம்பி வந்ததுக்கு, ஸ்விகில ஆர்டர் போட்டு சாப்பிட்டுருக்கலாம்…” என்றாள்.

“யூ ஆர் மை பெஸ்ட் பிரென்ட் ரஞ்சு…” என்று முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டியவாறு சஞ்சு ரஞ்சுவை கைப்பிடித்து அழைத்து செல்ல, ரஞ்சுவும் சிரித்துக் கொண்டே அவளுடன் சென்றாள், விதி அங்கு தான் அதன் ஆட்டத்தை துவங்கப் போவதை அறியாமல்…

*****

அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழையும்போதே வேறெங்கோ நுழைந்த உணர்வு தோன்றியது இருவருக்குமே… வண்ண வண்ண விளக்குகள் முதல் மனதை மயக்கும் நறுமணம் வரை அனைத்திலுமே கவனமெடுத்து செய்திருந்தனர்.

உள்ளே நுழைந்ததும், மூன்று வரிசையாக நாற்காலிகளும் மேஜைகளும் அடுக்கப்பட்டிருக்க, ஒவ்வொரு வரிசைக்கும் உட்கூரையில் வெவ்வேறு நிற விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, அவை அந்த தங்க வண்ண பின்னணிக்கு அழகாக பொருந்தியிருந்தன. சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கூட சூழலுக்கு பொருத்தமாக, அழகாக இருந்தன. அதனுடன், காற்றில் கசிந்து வந்த மெல்லிசையும் மனதை லேசாக்கியது.

இருவரும் சுற்றிலும் ரசித்தவாறே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர். “செமையா இருக்குல்ல இந்த இடம்..” என்று சஞ்சு கூற, அதை ஆமோதிக்குமாறு தலையசைத்தாள் ரஞ்சு.

“இடமே இவ்ளோ அழகா இருந்தா, இந்த இடத்தோட ஓனர் எவ்ளோ அழகா இருப்பாரு…” என்று கனவில் மிதந்தவாறு சஞ்சு கூற, “ஆரம்பிச்சுட்டியா…” என்றாள் ரஞ்சு.

அப்போது அவர்களிடம் வந்த பேரர், “யுவர் ஆர்டர் ப்ளீஸ், மேம்” என்று மெனு கார்டை கொடுத்தார்.

அதை வாங்கி பிரித்து பார்த்த சஞ்சு, ரஞ்சுவின் காதில், “அவ்வ்… இங்க ஸ்டார்டிங் ப்ரைஸே டூ ஃபிஃபிட்டியாம்…” என்றாள்.

“ஸ்ஸ்ஸ் அந்த பேரர் நம்மளயே பாக்குறான்… சீக்கிரம் ஏதாவது ஆர்டர் பண்ணு…” என்று ரஞ்சு அவளிடம் முணுமுணுக்க, சஞ்சுவும் மெனு கார்டை அப்படியும் இப்படியும் திருப்பி, ஓரளவிற்கு நியாய விலையிலிருந்த ஷவர்மாவை ஆர்டர் செய்தாள்.

“ஜஸ்ட் அ ஷவர்மா, மேம்..?” என்று அந்த பேரர் கேட்க, ‘ஐயோ… மானத்த வாங்குறானே…’ என்று மனதிற்குள் புலம்பிய சஞ்சு, “எஸ்…” என்று கூறினாள்.

அந்த பேரரும் சென்று விட, “இதெல்லாம் தேவையா…” என்று ரஞ்சு வினவினாள்.

“ஈஈ… ஒரு ஆசைக்கு ரஞ்சு டார்லிங்…” என்று இளித்து வைத்தாள் சஞ்சு.

“சரி நம்ம வேலைய பாப்போம்… வந்ததுக்கு நாலு சாங்ஸாவது டவுன்லோடு பண்ணிட்டு போவோம்…” என்று அவளின் அலைபேசியை எடுத்தவள், “ஹே ரஞ்சு, எங்கயாவது வைஃபை பாஸ்வர்ட் இருக்கான்னு பாரு…” என்று அவளும் தேட ஆரம்பிக்க, அவளின் தோளைத் தொட்டு திருப்பிய ரஞ்சு, “அங்க பாரு…” என்றாள்.

அங்கு, ‘
இது 1990 என்று நினைத்துக் கொண்டு, எதிரில் இருப்பவர்களுடன் பேசுங்கள்… ஏனெனில் எங்களிடம் வைஃபை கிடையாது’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது.

“அடப்பாவிங்களா வைஃபையும் இல்லையா…” என்று சோக மயமானாள் சஞ்சு.

ரஞ்சுவிற்கு, அந்த யோசனை பிடித்துப்போக, இதற்காகவாவது அந்த ரெஸ்டாரன்டின் உரிமையாளரை பார்த்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த பத்து நிமிடங்களில், அவர்கள் கேட்ட ஷவர்மா வந்துவிட, அதை ‘ஒன் பை டூ’வாக்கி சாப்பிட்டு முடித்தனர் இருவரும்.

அதற்கு பணம் செலுத்தும்போது கூட, “ரோட்டுக் கடைல சாப்பிட்டா, இந்த காசுக்கு மூணு நேரமும் சாப்பிட்டுருப்பேன்…” என்று முணுமுணுத்தாள் சஞ்சு.

கிளம்பும் நேரம், “ஹே ரஞ்சு டூ மினிட்ஸ்…” என்று கூறிவிட்டு ஓடினாள்.

ரஞ்சு, மீண்டும் அந்த ரெஸ்டாரண்டை பார்த்துக் கொண்டிருந்தாள். சஞ்சு கூறிய ‘டூ மினிட்ஸ்’, பல ‘டூ மினிட்ஸ்’களான பின்னரும் அவள் வராததால், அவளைத் தேடி அவள் சென்ற திசையில் சென்றாள்.

நடந்து கொண்டே வந்தவள், அந்த ரெஸ்டாரண்டின் பின்புறம் வந்து விட்டாள். அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாததால், ‘சஞ்சு எங்கு சென்றிருப்பாள்’ என்ற கலக்கம் மனதில் எழ, “சஞ்சு...” என்று அழைத்தாள்.

முதல் இரண்டு அழைப்பிற்கு எந்த எதிர்வினையும் இல்லாததால், இம்முறை சற்று சத்தமாக அழைக்க, “எஸ்…” என்றவாறு அவளின் முன் வந்தான் அவன், காலையில் அவளால் ‘அமுல் பேபி’ என்று அழைக்கப்பட்டவன்.

திடீரென்று அவன் தோன்றவும், பயத்தில் பின் வாங்கினாள் ரஞ்சு. அவளின் பயத்தை கண்டுகொண்டவன், “சாரி சாரி…” என்றான் அவசரமாக.

அவனின் ‘சாரி’ கொடுத்த அரை நொடியில் சமாளித்துக் கொண்டவள், அவனை நோக்கினாள். காலையில் தூரத்தில் பார்ப்பதற்கும், இப்போது அருகில் பார்ப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை அவளின் மனது கணக்கெடுத்தது.

‘ம்ம்ம் நிஜமாவே ‘அமுல் பேபி’ தான் போல… அதுவும் அந்த ‘ஸ்மைல்’…’ என்று அவளின் மனம் வேறெங்கோ செல்ல பார்க்க, அதைத் தடுப்பதை போல அவன் ஏதோ வினவினான்.

அவன் தன்னிடம் ஏதோ கேட்கிறான் என்ற அளவிற்கு தெரிந்தவளிற்கு, அவன் என்ன கேட்டான் என்று தான் புரியவில்லை!

அவளின் முழிப்பில் என்ன உணர்ந்தானோ, “ஆர் யூ ஓகே..?” என்றான்.

இம்முறை அவனின் கூற்றில் கவனமாக இருந்ததால், உடனே ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“சாரி அகேயின்… உங்கள பயமுறுத்தணும்னு நெனைக்கல… யாரோ என்ன கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு… அதான் வேகமா வந்தேன்… நீங்க இங்க நின்னுட்டு இருப்பீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல…” என்றான் மன்னிப்பு கோரும் பாவனையில்.

“இட்ஸ் ஓகே…” என்று அவனிடம் இவ்வளவு நிமிடங்களில் முதல் முறையாக வாயைத் திறந்து பதில் கூறினாள்.

அவனும் சன்ன சிரிப்புடன் அவளை நோக்கியவன், “யாருக்காகவாவது வெயிட் பண்றீங்களா..?” என்று கேட்க, “ம்ம்ம் ஆமா… என் பிரென்ட் சஞ்சு… எங்க போனான்னு தெரியல.. அவள தேடி தான் இங்க வந்தேன்…” என்று சுற்றிலும் தேடியபடியே அவனிடம் கூறினாள்.

“ஓ அப்போ நீங்க தான் ‘சஞ்சு’ன்னு கூப்பிட்டீங்களா..?” என்று அவன் வினவ, அவளும் “ஆமா…” என்றாள்.

இப்போது அவனின் புன்னகை விரிய, “சாரி… என்ன நான் இன்ட்ரோ குடுக்கல… ஐ’ம் சஞ்சீவ்…” என்று அவளின் முன் கை நீட்டினான்.

அவனின் பெயரைக் கேட்டவளிற்கு, அவன் விரைந்து வந்ததன் நோக்கம் புரிய, அவளின் இதழ்களும் விரிந்தன.

நீட்டிய அவன் கையுடன் தன் கையைக் கோர்த்து குலுக்கியவள், “ஐ’ம் ரஞ்சனா…” என்றாள்.

அவளும் அவனும், கைகோர்த்து சிரிப்பது போன்ற இந்த காட்சி அழகாக புகைப்படமாக எடுக்கப்பட்டது, அவர்கள் அறியாமலேயே… விதி இவர்களின் வாழ்க்கையில் விளையாட, இதையே துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்போகிறது என்பதை அறியாமல், ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவன் தான் அந்த ரெட்ஸ்ராண்டின் உரிமையாளன் என்பதை அறிந்த பின், அவள் கண்டு ரசித்த விஷயங்களைப் பற்றி கூறி பாராட்டினாள்.

அவனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த ரஞ்சு, எதேச்சையாக அவனுக்கு பின்னால் பார்க்க, அங்கு தன் முட்டைக் கண்களை உருட்டியவாறே இந்த காட்சியைக் பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சு.

ரஞ்சுவின் பார்வை திசை மாறி எங்கோ நோக்குவதைக் கண்டா சஞ்சீவும் அவள் பார்வை சென்ற திசையை நோக்க, அங்கிருந்த சஞ்சுவைக் கண்டான். அவளை சுட்டிக்காட்டி, “அவங்க தான் உங்க பிரெண்டா…” என்றான்.

ரஞ்சு பதில் சொல்வதற்கு முன்பே அங்கு ஆஜரான சஞ்சு, “ஆமா ஆமா… நான் தான் அவளோட பெஸ்ட் பிரென்ட் சஞ்சிதா…” என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ஓ நைஸ்… என் பேரு சஞ்சீவ்.” என்று அவன் கூறியதும், “வாவ்… நம்ம ரெண்டு பேரு பேரும் சஞ்சு…” என்று அவள் புன்னகையுடன் கூறினாள்.

ரஞ்சுவைப் பார்த்து மென்சிரிப்புடன், “அதுனால தான் இங்க ஒரே கன்ஃப்யூஷன்…” என்றவன் சஞ்சு புறம் திரும்பி, “ம்ம்ம் ஒரே நேம்… உங்கள பார்த்தா கூட, உங்கள மாதிரி சிஸ்டர் இல்லயேன்னு ஃபீலிங் வருது…” என்றான்.

அவ்வளவு நேரம் ‘தௌவ்சண்ட் வாட்ஸ் பல்ப்’ போல பிரகாசமாக இருந்தவளின் முகம் ‘சிஸ்டர்’ என்று அவன் அழைத்ததும் சுருங்கிப் போயிற்று.

‘ஒரே நாள்ல எத்தன பேருக்கு தான் டா நான் தான் சிஸ்டர் ஆகுறது… பொசுக்கு பொசுக்குன்னு ‘சிஸ்டர்’ன்னு கூப்பிட்டு என் மனசை டேமேஜ் பண்ணிடுறீங்களே…’ என்று மனதிற்குள் புலம்பினாள் சஞ்சு.

ரஞ்சுவிற்கோ சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது சிரித்தால், சஞ்சீவிற்கும் விளக்கம் கொடுக்க வேண்டுமென்பதால், மறுபுறம் திரும்பி சிரிப்பை அடக்கினாள்.

அவர்களின் எதிர்வினையைக் கண்டவன், “என்னாச்சு… எனி ப்ராப்ளம்…” என்று கேட்க, “ச்சேச்சே ஒரு ப்ராப்ளமும் இல்ல பிரதர்.. “ என்று இளித்துக் கொண்டே கூறினாள் சஞ்சு.

“ஓகே ப்ரோ நாங்க கிளம்புறோம்…” என்ற சஞ்சு ரஞ்சுவை இழுத்துக் கொண்டு செல்ல, ரஞ்சு சஞ்சீவை நோக்கி ஒரு தலையசைப்புடன் விடைப்பெற்றாள்.

*****

சஞ்சீவின் வீடு… இல்லை பங்களா… அந்த பங்களா ஆங்கிலேயர் காலத்து கட்டிடக்கலையை பறைசாற்றும் வண்ணம், இருபுறமும் பரந்து விரிந்திருந்தது. அந்த பங்களாவை சுற்றிலும் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளும், உயர்ந்து வளர்ந்த மரங்களும் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தன.

பெரிய ஆர்ச் வடிவ முகப்புடன் கூடிய போர்டிகோவில், ஆல்ஃபா ரோமியோ வகை வின்டேஜ் கார் நிறுத்தப்பட்டிருந்தது. தனது ஹார்ட்லி டேவிட்ஸன் பைக்கிலிருந்து இறங்கியவன், அந்த காரைப் பார்த்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

அவனின் மனம் சமீப காலமாக காணாமல் போயிருந்த சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தது. அதே மகிழ்ச்சியிடன் தன்னறைக்கு சென்றவன், அங்கு பெரிதாக மாட்டப்பட்டிருந்த தனது குடும்ப புகைப்படத்தைக் கண்டு, “மிஸ் யூ பேட்லி…” என்று முணுமுணுத்தான்.

பின்னர் அவனின் கோட் சூட்டை கழட்டிவிட்டு, இலகுவான உடைக்கு மாறியவன், எப்போதும் போல் அன்றைய நாள் நிகழ்வுகளை அவனின் குறிப்பேட்டில் எழுத ஆரம்பித்தான்.

அப்போது அவனின் குறிப்பேட்டிலிருந்து எதேச்சையாக கீழே விழுந்த புகைப்படத்தை எடுத்தவன் மெல்லிய சிரிப்புடன், “உனக்காக தான் இங்க வந்துருக்கேன்…” என்றான். அவன் இதழ்கள் சிரிப்பில் விரிந்திருந்தாலும், கண்களோ வெகு தீவிரமாக அந்த புகைப்படத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. பின் என்ன நினைத்தானோ, அதை குறிப்பேட்டில் வைத்து மூடிவிட்டு, எப்போதும் போல் பால்கனிக்கு சென்று, பரந்து விரிந்த வானத்திலிருந்த நட்சத்திரங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.

*****

சிட்னி, ஆஸ்திரேலியா…

‘ப்ச்… மிட்நைட்டாக இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு… இந்த பாஸ், அவரும் கிளம்ப மாட்டிங்குறாரு… என்னையும் கிளம்ப விட மாட்டிங்குறாரு…’ என்று மனதிற்குள் புலம்பிய கோகுல், தன் விதியை நொந்து கொண்டு, அந்த ஏசி அறையில் அவனின் பாஸான எஸ்.ஜேவுடன் இருந்தான்.

கோகுலின் புலம்பல்கள் அவனின் செவியை எட்டியது போல நிமிர்ந்து அவனைப் பார்த்த எஸ்.ஜே, “இன்னும் டென் மினிட்ஸ்ல கிளம்பலாம்.” என்று கூறிவிட்டு மீண்டும் கோப்பில் ஆழ்ந்து விட்டான்.

‘என்னாது கிளம்பலாமா.. அப்போ அவரும் என்கூட வராரா… அய்யயோ இன்னைக்கு அந்த லிண்டா வேற ஏதோ பார்ட்டி இருக்குன்னு சொன்னாளே… இவரு வந்தா அங்க போக முடியாதே…’ என்று அவனின் அடுத்த புலம்பலை ஆரம்பித்தான்.

“இப்போலாம் உன்ன பத்தி நிறைய கம்ப்லைன்ட்ஸ் வருதே…” கோப்பை பார்த்துக் கொண்டே கோகுலிடம் வினவினான் எஸ்.ஜே.

அவன் கூறுவது புரியாமல் விழித்த கோகுல், “பாஸ்ஸ்ஸ்…” என்று இழுக்க, “அடிக்கடி பார்ட்டின்னு வெளிய சுத்துறியாம்… அங்கிள் சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருந்தாரு…” என்று கூர்மையாக கோகுலை நோக்கினான் எஸ்.ஜே.

‘அச்சோ இந்த டாடிக்கு வேற ஆளே கிடைக்கலையா… இந்த மனுஷன்கிட்ட போய் சொல்லிருக்காரு…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.

“ரொம்ப ஃப்ரீயா இருக்கிறதால தான, இப்படி சுத்திட்டு இருக்க… இனி உன்னோட ஃப்ரீ ஹவர்ஸ் குறைச்சுடுறேன்…” என்று அலுங்காமல் குலுங்காமல் குண்டை தூக்கி கோகுலின் தலையில் இறக்கினான் எஸ்.ஜே.

அதைக் கேட்டு அதிர்ச்சியிலிருந்த கோகுல், “பாஸ்…” என்று கத்திவிட்டான். பின்னரே இருக்குமிடம் உணர்ந்து, “இனிமே அப்படி சுத்த மாட்டேன் பாஸ்…” என்றான் இறங்கிய குரலில். அவன் மனதோ, இதற்கு முன்னர் சென்ற பார்ட்டியில் அவன் அடித்த கும்மாளத்தை ‘ரீவைண்ட்’ செய்து காண்பித்தது.

சற்று நேரம் அமைதி நிலவ, மீண்டும் அந்த அமைதியைக் கலைத்த எஸ்.ஜே, “அப்பறம் உன் பிரெண்டு எங்க இருக்கான்..?” என்றான்.

ஏற்கனவே பார்ட்டிக்கு போக முடியாத கவலையில் இருந்தவனை, இந்த கேள்வி மீண்டும் பதறச் செய்தது.

“பாஸ்ஸ்…” என்று மீண்டும் இழுக்க, “உன் பாஸா இல்ல, உன் பிரெண்டோட அண்ணனா கேக்குறேன்…” என்றான் எஸ்.ஜேவான சஞ்சய்.

“சத்தியமா எனக்கு தெரியாது அண்ணா…” என்றான் கோகுல்.

அவனை ஒருமுறை பார்த்த சஞ்சய், ஒரு பெருமூச்சுடன் கிளம்புவதற்கு ஆயத்தமானான்.

‘ஆ… பார்வையே சரியில்லையே… இந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் வேற வேலையே இல்ல… ஆனாவுனா இந்த அப்பாவிய போட்டு பாடாப்படுத்துறது…’ – வழக்கம் போல மனதிற்குள் தன கூறிக் கொண்டான் கோகுல்.

அப்போது சஞ்சயின் அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஒலி எழும்ப, அதில் வந்திருந்த புகைப்படத்தைக் கண்ட சஞ்சயின் முகத்திலிருந்த அதிர்ச்சியைக் கண்டுகொண்டான் கோகுல்.

இப்போது மீண்டும் எஸ்.ஜேவாக மாறிய சஞ்சய், “கோகுல், இந்தியா போகணும்… அடுத்த ஃ பிளைட்ல டிக்கெட் போடு…” என்றவாறே நடந்தவன், ஒரு நிமிடம் நின்று, “என்கூட நீயும் வரணும்…” என்று கூறிவிட்டு, தன் வேக நடையில் சென்று விட்டான்.

கோகுலோ தலையில் கைவைத்தவாறே, “போன ஜென்மத்துல இவருக்கு பொண்டாட்டியா இருந்துருப்பேன் போல… இப்படி எங்க போனாலும், என்னையும் இழுத்துட்டே போறாரே…” என்று வாய்விட்டே புலம்பியவன், எஸ்.ஜே தூரத்தில் போவதைக் கண்டு, வேகவேகமாக அவனைப் பின்தொடர்ந்தான்.

சஞ்சய்க்கு அலைபேசியில் வந்த புகைப்படம் என்ன… அதைக் கண்டவன் கொண்ட அதிர்ச்சி எதற்காக… தெரிந்து கொள்ள அவனுடனே நாமும் இந்தியா செல்வோம்…


தொடரும்...
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...😊😊😊 இதோ அடுத்த பதிவோட வந்துட்டேன்...😉😉😉 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁 இந்த ஆண்டு முடிஞ்சு அடுத்த ஆண்டில் அடுத்த பதிவோட உங்களை சந்திக்கிறேன் பிரெண்ட்ஸ்...😉😉😉

23444

காதல் 3



ரஞ்சு ரெஸ்டாரன்டில் நடந்த நிகழ்ச்சிகளை தர்ஷுவிடம் கூறிக் கொண்டிருக்க, அதற்கும் அவளிற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சஞ்சுவை வெறுப்பேற்றவே, “அப்பறம் என்னாச்சு…” என்று சிரிப்புடன் தர்ஷு வினவ, “ஹான்… சைட்டடிக்கலாம்னு போன எனக்கு ஃபிரீயா ஒரு பிரதர் கெடைச்சான்… ஆளப்பாரு… என்ன கலாய்க்குறதுன்னா மட்டும் ஃபுல் எனர்ஜியோட கலாய்க்க வந்துடுறது…” என்று சிணுங்கினாள் சஞ்சு.



“ஊரே அடுத்த மாசம் ரக்ஷாபந்தன் கொண்டாடுனா, உனக்கு இன்னைக்கு தான் ரக்ஷாபந்தன் போல…” என்று ரஞ்சுவிடம் ‘ஹை-ஃபை’ கொடுத்துக் கொண்டாள் தர்ஷு.



“யூ டூ ரஞ்சு…” என்று சிணுங்கினாள் சஞ்சு. அதன்பின், தர்ஷுவின் அலைபேசி ஒலிக்கும் வரை அங்கு தலையணை யுத்தம் நடைபெற்றது.



தர்ஷுவின் அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்று, ஸ்பீக்கரை ஆன் செய்தாள் ரஞ்சு. தர்ஷுவின் அத்தை மலர்விழி தான் அழைத்திருந்தார். இது வழக்கமாக அவர்கள் உரையாடும் நேரம் தான். வரிசையாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழைப்பு வரும். மலர்விழி மற்றும் வசுந்தராவிடம் மூவரும் அரட்டையடிப்பர்.



விஸ்வநாதன் மற்றும் கமலா தம்பதியரிடத்தில் ஏனோ மற்ற இருவருக்கும் ஒரு ஒதுக்கம் இருக்கும். அவ்வளவாக பேச மாட்டார்கள். அதனாலேயே சமீபத்தில் ரஞ்சுவிடம் அவர்கள் காட்டும் ஒதுக்கம், மற்ற இருவருக்கு தெரியாமல் போனது.



“ஹலோ… ரஞ்சு, சஞ்சு, தர்ஷு மூணு பேரும் எப்படி இருக்கீங்க..? நைட் சாப்பிட்டீங்களா..? தர்ஷும்மா, இப்போ காய்ச்சல் இருக்கா..?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தவரை நிறுத்திய சஞ்சு, “ஆன்ட்டி, இப்படி கேப்பே விடாம கேள்வி கேட்டீங்கன்னா நாங்க எப்போ பதில் சொல்றது…?” என்று சிரிப்புடன் கேட்டாள்.



“சரி, அப்போ நான் என்னென்ன கேள்வி கேட்பேனோ, அதுக்கெல்லாம் நீங்களே பதில சொல்லுங்க பாப்போம்…” என்று அவர் சொல்லவும், “மலர் ஆன்ட்டி, நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்… நைட் நல்லா சாப்பிட்டோம்… தர்ஷுக்கு லேசா ஃபீவர் இருக்கு… இன்னைக்கு டேப்லெட் போட்டுட்டா… நாளைக்கும் ஃபீவர் இருந்துச்சுனா ஹாஸ்பிடல் போறோம்…” என்று வரிசையாக ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறினாள் ரஞ்சு.



“எங்கள இன்னும் நர்சரி ஸ்கூல் ஸ்டுடெண்ட்ஸ்னு நெனப்பு உங்களுக்கு ஆன்ட்டி…” என்று இடையில் சஞ்சு கிண்டலடிக்க, அவர்களின் உரையாடல் இப்படியே அழகாக சென்றது.



மலர்விழியின் நர்சரி பள்ளியில் தற்போது படிக்கும் மழலைகளிலிருந்து, அவர்களின் தெருவில் குட்டி போட்ட நாய் வரை விசாரித்த பின்னரே தர்ஷுவின் அலைபேசிக்கு ஓய்வளித்தனர் மூவரும்.



ஆனால் அவர்களுக்கு ஓய்வென்பதே இல்லை என்பதைப் போல அடுத்து வசுந்தரா அழைத்திருந்தார். மலர்விழியிடம் பேசியது போல் ‘ஃப்ரீ’யாக இல்லையென்றாலும், அவரிடமும் நன்றாகவே பேசினர்.



இரவுணவை வெளியே சாப்பிட்டனர் என்பதை அறிந்ததும், “சஞ்சு, நீ தான இதுக்கு காரணம்…” என்று சரியாகவே கண்டுபிடித்தார் வசுந்தரா. பின் அதற்கு அறிவுரை என்று கால் மணி நேரம் சென்றிருக்க, சஞ்சுவின் நிலை தான் பரிதாபமானது.



சஞ்சுவைக் கண்ட ரஞ்சு, “ஆன்ட்டி, இனிமே வெளிய சாப்பிட மாட்டோம்…” என்று உறுதிகொடுத்த பின்பே அவர்களை விட்டார்.



மேலும், தர்ஷுவை அடுத்த நாள் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கண்டிப்புடன் அலைபேசியை அணைத்தார் அவர்.



“ஹ்ம்ம் சரியான போலீஸ் மம்மியா இருக்காங்களே…” என்று சலித்துக் கொண்ட சஞ்சுவை சிரிப்புடன் பார்த்திருந்த ரஞ்சுவிடம், “உங்க வீட்டுலயிருந்து கால் பண்ணி எவ்ளோ நாளாகுது, ரஞ்சு…” என்றாள் தர்ஷு.



அவளின் திடீர் கேள்வியில் முழித்த ரஞ்சு, “அது… ஒரு வாரம் இருக்கும்…” என்றவள், சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக, “அப்பா அம்மாக்கு ஹெவி ஒர்க் இருந்துருக்கும்…” என்றாள்.



தர்ஷுவோ நம்பாத பார்வை பார்த்தவள், “எத்தனையாவது ஒரு வாரம் ரஞ்சு…” என்றாள்.



அதற்கு பதில் கூறாமல், அவஸ்தையாக நின்றிருந்தவளைக் கண்ட சஞ்சு, “எனக்கு தெரியும்… இதுக்கெல்லாம் அந்த குட்டி பிசாசு தான் காரணம்… எனக்கு மட்டும் அப்படி ஒரு தங்கச்சி இருந்துருந்தா, சின்ன வயசுலேயே மண்டைல கொட்டி, நான் சொல்ற பேச்ச கேக்க வச்சுருப்பேன்…” என்று லேசான கோபத்துடன் கூறினாள்.



தர்ஷு ரஞ்சுவின் தோளில் கைவைத்து ஆறுதலாக அழுத்த, அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாத ரஞ்சுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.



“என்னாச்சுன்னு தெரியல தர்ஷு. ஒரு மாசமாக போகுது அவங்க பேசி… நான் கால் பண்ணாலும், ஒன்னு ‘ஸ்விட்ச்ட் ஆஃப்’ன்னு வருது, இல்லனா அட்டெண்ட் பண்ணவொடனே, ‘பிஸியா இருக்கோம்’னு சொல்லி வச்சுடுறாங்க… என்ன பிரச்சனைன்னு ஒன்னும் புரியல…” என்றவளை தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தாள் தர்ஷு.



“சுபி கிட்ட பேசுனியா..?” என்று தர்ஷு வினவ, விரக்தி சிரிப்புடன், “அவ எப்போ என் கால் அட்டெண்ட் பண்ணிருக்கா…” என்றாள் ரஞ்சு.



“ப்ச்… ஏன் தான் இப்படி இருக்காங்களோ…” என்று சலித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது சஞ்சுவினால்.



“நீ முன்னாடியே சொல்லிருந்தா மலர் அத்தையை பார்க்க சொல்லிருப்பேன்ல.” என்ற தர்ஷுவின் கேள்விக்கு, “ஏற்கனவே ஒரு தடவ ஆன்ட்டிய அம்மா ஹார்ஷா பேசிட்டாங்கல… திரும்பவும் அவங்கள இதுல இன்வால்வ் பண்ண விரும்பல…” என்றாள் ரஞ்சு.



“சரி விடு ரஞ்சு… நம்ம தான் இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு போறோம்ல… அங்க போய் பாத்துக்கலாம்… இந்த தடவ இருக்கு அந்த குட்டி பிசாசுக்கு…” என்று ஏதேதோ பேசி ரஞ்சுவை சமாதானப்படுத்தினர் மற்ற இருவரும்.



*****



இந்தியாவில் கால் வைத்ததிலிருந்து இப்போது வரை பத்து மணி நேரமாக ‘பிஸி’யாக சுற்றிக் கொண்டு தான் இருந்தான் எஸ்.ஜே. அவனுடன் சேர்ந்து அவனின் பி.ஏ கோகுலும் புலம்பிக் கொண்டே அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றான்.



மும்பையிலிருந்த அவர்களின் ஜவுளி ஆலையில், சில நாட்களாகவே தரமில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதாக அவனிற்கு புகார் வந்து கொண்டிருந்தது. அதனால் அவனிற்கு நம்பகமான ஒருவனை அங்கு வேலையில் சேருமாறு அனுப்பியிருந்தான் எஸ்.ஜே.



அவனும் கடந்த இரண்டு மாதங்களாக ஏதாவது கண்ணில் சிக்குமா என்று காத்திருக்க, வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஆதாரம் அவனிற்கு கிடைத்தது. அதை தான் புகைப்படமாக எஸ்.ஜேவுக்கு அனுப்பியிருந்தான்.



அதைக் கண்ட எஸ்.ஜே அதிர்ந்தது உண்மை தான். ஏனெனில், அவன் தந்தை காலத்திலிருந்தே அவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவரின் துரோகம் அல்லவா அதில் அவன் கண்டது.



ராஜசேகர், சஞ்சயின் தந்தை கிருஷ்ண பிரசாத் காலத்திலிருந்தே அவர்களின் தொழிலில் உறுதுணையாக இருந்தவர். கே.பி என்றழைக்கப்படும் கிருஷ்ண பிரசாத் உயிருடன் இருந்த காலத்தில், அவருடன் சேர்ந்து இந்தியாவில் இருக்கும் அவர்களின் தொழிலைக் கவனித்தவர், கே.பியின் மறைவிற்குப் பின்னர், சஞ்சயின் வேலைப்பளுவினால், அவர் மட்டுமே இந்தியா முழுவதும் இருக்கும் பல தொழில்களையும் நிர்வகித்தார்.



சஞ்சயும் அவரின் மேலிருந்த நம்பிக்கையினால், அவரின் வேலைகளில் எவ்வித குறுக்கீடும் செய்யவில்லை. ஆனால், அதுவே அவரின் துரோகத்திற்கு வழிவகுக்கும் என்பதை அவன் அறியவில்லை.



“ஹ்ம்ம்… பொண்ணுங்க ஏமாத்துவாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா எல்லாருமே அவங்க சுயநலத்துக்காக ஏமாத்துவாங்கன்னு புரிய வச்சுட்டீங்க…” என்று விரக்தியுடன் கூறியவன், அடுத்த நொடியே வேட்டைக்கு தயாராகும் சிங்கம் போல எழுந்து நின்றான்.



“கோகுல், இவரு எங்க இருக்காரு… என்ன பண்ணிட்டு இருக்காரு… இவரோட ஃபேமிலி எங்க இருக்காங்க… மொத்த டீடையில்ஸும் இன்னும் அரை மணி நேரத்துல எனக்கு வேணும்…” என்று உத்தரவிட்டான்.



*****



காலை வேளை, எப்போதும் போல் ஜாக்கிங்குடன் துவங்கியது ரஞ்சுவிற்கு. தர்ஷுவிற்கும் காய்ச்சல் சரியாகிவிட, அவளும் ரஞ்சுவுடன் வந்திருந்தாள். முதல் நாள் ஜாக்கிங்கில் நிகழ்ந்தவைகளை தர்ஷுவுடன் பகிர்ந்து கொண்டே நடந்தாள் ரஞ்சு.



“அப்போ சஞ்சீவ நீ மார்னிங்கே பாத்துட்டீயா… இது மட்டும் சஞ்சுக்கு தெரிஞ்சுது, அதுக்கும் அழ ஆரம்பிச்சுடுவா…” என்று சஞ்சுவையும் இடையில் கலாய்த்துக் கொண்டே சென்றனர்.



அந்த பூங்காவை ஒரு சுற்று ஓடிவிட்டு அங்கிருந்த கல் மேடையில் ரஞ்சு அமர, “ரஞ்சு, ரெண்டு நாள் ஓடாதது ஒரு மாதிரி லேசியா இருக்கு… நான் இன்னொரு ரவுண்ட் போயிட்டு வரேன்…” என்று கூறிவிட்டு ஓடத் துவங்கினாள் தர்ஷு.



‘சரியான ஃபிட்னெஸ் ஃபிரீக்…’ என்று தர்ஷுவை மனதிற்குள் செல்லமாக அலுத்துக் கொண்டவள், சிறிது நேரம் மூச்சை நன்றாக இழுத்துவிட்டு இலகுவாகிக் கொண்டாள்.



அப்போது அவளருகே இருந்த புதரிலிருந்து சத்தம் கேட்க, முகத்தை சுருக்கியவள், ‘காலைலேயேவா…’ என்று மனதிற்குள் புலம்பினாள். யாரோ அதிலிருந்து வெளிவரும் சத்தம் கேட்க, ‘இருக்கவா, செல்லவா…’ என்ற யோசனையில் உழன்றவளைக் கலைத்தான் புதருக்குள் இருந்து வந்த சஞ்சீவ்.



அவள் அமர்ந்திருந்த கல் மேடை புதரினால் சூழப்பட்டதால், மற்றவர் கண்களிலிருந்து சற்று மறைந்தேயிருந்தது. அதனால் அங்கு ஒரு கல் மேடை இருப்பதோ, அதில் ரஞ்சு அமர்ந்திருப்பதையோ சஞ்சீவ் எதிர்பார்க்கவில்லை.



முதலில் சிறிது அதிர்ந்தவன், பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ஹே… ஹாய்… ஹ்ம்ம்… சாரி…. எப்பவும் இப்படி அன்எக்ஸ்பெக்ட்டடா மீட் பண்றோம்…” என்று மூச்சு வாங்கியவாறே கூறினான்.



ரஞ்சுவும் சஞ்சீவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவன் கூறியதைக் கேட்டவள், “ம்ம்ம் ஆமால…” என்றாள் புன்னகையுடன்.



சஞ்சீவின் பேச்சு ரஞ்சுவிடம் இருந்தாலும், அவனின் கண்கள் அடிக்கடி பின்னாடி திரும்பி பார்த்துக் கொண்டேயிருந்தேன.



அவன் யாரைத் தேடுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட ரஞ்சு, “என்னாச்சு… உங்க ஃபேன்ஸ் கிளப்ப தேடுறீங்களா…?” என்றாள் குறும்பாக.



“உஃப் அவங்க தொல்ல தாங்க முடியல… ஜாக்கிங்கோ எக்ஸ்சர்சைஸோ பண்ணிட்டு இருக்கும்போது யாராவது பார்த்துட்டே இருந்தா ஒரு மாதிரி இருக்காதா…” என்று அவன் புலம்ப, “ரிலாக்ஸ்… இன்னும் கொஞ்ச நாள் தான். அப்பறம் புதுசா யாராவது வந்தா அவங்கள பாக்க ஆரம்பிச்சுடுவாங்க…” என்று அவள் சமாதானப்படுத்தும்போதே அங்கு வந்தாள் தர்ஷு.



அவள் அருகில் வந்ததும், “தர்ஷு இவரு சஞ்சீவ்.” என்றவள், “சஞ்சீவ், மீட் மை பிரென்ட் தர்ஷு.” என்றாள்.



தர்ஷுவிடம் புன்னகையுடன் கூடிய ஒரு தலையசைப்பை கொடுத்தவன், “அப்போ நேத்து வந்த பிரென்ட்…” என்று கேள்வியாக இழுத்தான்.



“யாரு… நீங்க இன்ஸ்டன்ட் தங்கச்சி ஆக்குனீங்களே, அவளா…?” என்று தர்ஷு சிரிப்புடன் வினவ, அவனும் சிரித்தான்.



“நீங்க படிச்சுட்டு இருக்கீங்களா…?” என்று அவன் கேட்க, அதிலிருந்து ஆரம்பித்து அவரவர்களின் இருப்பிடம் வரை சென்றது அவர்களின் பேச்சு.



அவன் வீடிருக்கும் இடத்தைக் கூற, “அங்க ஒரு பெரிய பங்களா இருக்குமே… ஒரு வின்டேஜ் கார் கூட அங்க நிறுத்திருப்பாங்களே… அதுக்கு பக்கத்துல தான் உங்க வீடா…” என்று ரஞ்சு ஆச்சரியத்துடன் வினவ, லேசாக புன்னகைத்து தலையசைத்தவன், “அதுக்கு பக்கத்துல இல்ல… அது தான் என் வீடு…” என்றான்.



அவன் கூறியதைக் கேட்ட இருவரும் திகைத்து தான் போயினர். தோழிகள் மூவரும், வேலை எதுவும் இல்லாத சில சமயங்களில், வெளியே காற்றாட நடக்கும் போது அவ்வீட்டை கடந்திருக்கின்றனர். முதன்முதலில் அவ்வழியில் சென்றபோது அந்த பங்களாவைப் பார்த்து, “ம்ம்ம் எவ்ளோ பெரிய பங்களா…” என்று வாய் பிளந்து சஞ்சு கூற, “இதெல்லாம் வெளிய இருந்து பாக்குறதுக்கு தான் நல்லா இருக்கும்… இதுக்கு உள்ள போய் வாழ்ந்தா, கொஞ்ச நாள்லேயே போர் அடிக்க ஆரம்பிச்சுடும்…” என்று தர்ஷு கூறினாள்.



இவர்களின் பேச்சுக்களை கவனிக்காமல், அந்த பங்களாவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘ஆல்ஃபா ரோமியோ’ காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சு. ரஞ்சுவிற்கு ‘வின்டேஜ்’ பொருட்களின் மேல் ஆர்வம் அதிகம்.



சஞ்சு கூட, “உன்ன யாராவது கரெக்ட் பண்ணனும்னு நெனச்சா, ஏதாவது பழைய பொருள குடுத்தா போதும்… அவன் பின்னாடி போயிடுவ…” என்று ரஞ்சுவை கிண்டலடிப்பாள். அப்படிப்பட்டவள், அந்த காரைப் பார்த்து தன்னை மறந்து நிற்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.



மற்ற இருவரும் அவளிடமிருந்து எந்த சத்தமும் இல்லையே என்று நினைத்து அவளைப் பார்க்க, அவளோ அவளின் பார்வையில் மூழ்கியிருந்தாள்.



“அதான, என்ன டா மேடம் எதையோ வெறிச்சு பாத்துட்டு இருக்காங்கன்னு பாத்தா, வழக்கம் போல பழைய பொருளு…” என்ற சஞ்சு, ரஞ்சுவை உலுக்க, அவளின் நினைவுகளிலிருந்து வெளிவந்த ரஞ்சு, “அந்த காரு செமையா இருக்குல…” என்றாள்.



“அடிப்பாவி… இவ்ளோ பெரிய வீடு உன் கண்ணுக்கு அழகா தெரியல… அந்த காரு செமையா இருக்கா…” என்று தர்ஷு வினவ, “இவளுக்கு பழைய பொருள் பைத்தியம் பிடிச்சுருக்கு…” என்ற சஞ்சுவை துரத்தினாள் ரஞ்சு.



அதன்பின்பு பல முறை அவர்கள் அவ்வழியில் சென்றிருக்கின்றனர். ‘என்ன இந்த பங்களா பூட்டியே இருக்கு… யாரு இதோட ஓனரா இருப்பாங்க…’ என்று ரஞ்சு நினைத்திருக்கிறாள்.



இப்போது கூட சஞ்சீவ் அந்த இடத்தைக் கூறும்போது, அந்த பங்களாவிற்கு அருகில் உள்ள ஏதோவொரு வீடாக இருக்கும் என்று நினைத்தாள். அந்த இடத்திலுள்ள அனைத்து வீடுகளும் சற்று பெரிதாகவே இருக்கும். ஆனால் அந்த பங்களா அளவிற்கு பெரியதில்லை.



ஆனால் அந்த பங்களாவை தான் அவனின் வீடு என்று கூறும்போது, அதிர்ச்சி தான் ரஞ்சுவிற்கு… அவனின் உடை மற்றும் பழக்கவழக்கங்களிலேயே அவன் மேல்தட்டு வர்க்கத்தவன் என்பது புரிந்தது. ஆனால் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருப்பான் என்று ரஞ்சு நினைக்கவில்லை. அவனின் இலகுவான பேச்சு அவ்வாறு கற்பனை செய்ய விடவில்லை.



அவர்களின் அதிர்ச்சியைக் கண்டவன், “ஹே என்ன ஷாக்காகிட்டீங்க…” என்று சஞ்சீவ் கேட்க, இருவரும் ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்தனர்.



“உங்களுக்கு அந்த கார் அவ்ளோ பிடிச்சதுன்னா ஏன் வீட்டுக்கு வந்து பார்க்க கூடாது..?” என்று ரஞ்சுவை பார்த்து வினவியவன், “ஒரு நாள் வீட்டுக்கு கண்டிப்பா வரணும்…” என்று இருவரையுமே அழைத்தான்.



அவனின் செல்வநிலை அறிந்தததிலிருந்தே தர்ஷுவிற்கு ஏதோ உறுத்த, “எல்லாரையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணுவீங்களா..?” என்று கேட்டே விட்டாள்.அவனோ அதே புன்னகையுடன், “என்ன அந்த ஸ்டாகர்ஸ் கிட்டயிருந்து காப்பாத்திருக்கீங்க… எனக்கு உதவி செஞ்சவங்கள கண்டிப்பா இன்வைட் பண்ணுவேன்…” என்றான்.



பின்னர் கடிகாரத்தில் நேரம் பார்த்தவன், நேரமாகிவிட்டது என்று அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினான். அவன் அவர்களின் கண்களை விட்டு அகலும் வரை, அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.



“நெனச்சத விட பெரிய பணக்காரனா இருக்கான். எதுக்கும் இவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்…” என்று தர்ஷு கூற, அவளின் முதல் வரியை ஏற்றுக் கொண்ட ரஞ்சுவிற்கு, ஏனோ இரண்டாம் வரியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போதும் அவன் அவளைப் பொறுத்தவரையில் ‘அமுல் பேபி’ தான். ஆனால் அதை தர்ஷுவிடம் சொல்லவில்லை.



அப்போது, “யாரு அந்த பையன்…?” என்ற குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.



அங்கு இடுப்பில் கைவைத்து இருவரையும் கூர்ப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தார் ராதா.



“ம்ம்ம் சொல்லுங்க… யாரோட பாய்-ஃபிரெண்டு அவன்… என்கிட்ட சொல்லாமலேயே பாய்-ஃ பிரென்ட் வச்சுருக்கீங்களா…” என்று கோபமாக கேட்க, “அச்சோ ராதா ஆன்ட்டி எதுக்கு இவ்ளோ கோபம்… எங்க கிருஷ்ணா மாமா இருக்கும் போது வேற பாய்-ஃபிரென்ட் எதுக்கு எங்களுக்கு…” என்று வேண்டுமென்றே அவரை வம்பிழுத்தாள் தர்ஷு.



அது சரியாக வேலை செய்ய, “க்கும்… உனக்கும் அந்த சஞ்சு பொண்ணுக்கு என் வீட்டுக்காரர் மேல ஒரு கண்ணு…” என்று நொடித்துக் கொண்டார்.



அதன்பின்னர் சிறிது நேரம் ராதா ஆன்ட்டியுடன் பேசியவர்கள் இருவரும் விடுதிக்கு திரும்பினர்.



*****



அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றவனின் முகமோ இத்தனை நேரமிருந்த மென்புன்னகை மாறி, எதையோ சாதித்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தாண்டவமாடியது.



“என் பிளான் எல்லாம் சரியா ஒர்க்-ஆகுது… இன்னும் கொஞ்ச நாள் தான். அப்பறம் நான் நெனச்ச மாதிரி என்னோட லைஃப் மாறிடும்…” என்று மனதிற்குள் பேசியபடியே உற்சாகமாக அவனின் வேலைகளை பார்க்கச் சென்றான்.



*****



சஞ்சய் கூறியது போல, அடுத்த அரை மணி நேரத்தில் ராஜசேகரின் முழு விபரமும் அவன் முன் இருந்தது. அதில் அவருக்கு குடும்பம் எதுவும் இல்லையென்றும், மும்பை புறநகர் பகுதியில் அவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார் என்றும் இருந்தது.



மேலும் அவர் முதல் நாளே மும்பையை விட்டு சென்றுவிட்டார் என்றும் அதில் இருந்தது.



“ஷிட்… அவரு எங்க போயிருக்காருங்கிற இன்ஃபர்மேஷன் இன்னும் எனக்கு ஏன் வரல…” என்று கோகுலிடம் கேட்க, ‘அந்த படுபாவி அத குடுக்கலேனா நான் என்ன செய்வேன்…’ என்று மனதிற்குள் புலம்பியவன், பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.



அவனின் பாவனையில் கண்களை இறுக்க மூடி கோபத்தை கட்டுப்படுத்திய சஞ்சய், “டென் மினிட்ஸ் தான் உனக்கு டைம்… அதுக்குள்ள எனக்கு அவரு எங்க போயிருக்காரு, அவரோட ரீசன்ட் கான்டெக்ட்ஸ் எல்லாமே எனக்கு வேணும்…” என்று உறுமினான்.



இவனின் கோபத்திற்கு காரணமான ராஜசேகரோ, மலர்விழியின் வீட்டின் முன் நின்றிருந்தார்.


தொடரும்...



உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 
Top