அத்தியாயம் 3
ஹாஸ்டல் ரூமில் கீர்த்தனா எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.அப்போது அனன்யா எதையோ பார்த்து பயந்தது போல் முகம் வெளுத்து உள்ளே வந்தாள்.
எழுதிக் கொண்டிருந்ததை விட்டு விட்டு அனன்யாவிடம் சென்றாள் கீர்த்தனா.
"என்ன அனு? என்னாச்சு? ஏன் இப்படி பயந்து வர்ற?" என்று கேட்டாள் கீர்த்தனா. "கீர்த்தி... கீர்த்தி... அது..." என்று சொல்ல முடியாமல் அழுதாள் அனன்யா.
"ஏய் அனு.. என்னாச்சு? எதுக்கு இப்படி அழுவுற? முதல்ல அழுகையை நிறுத்து.. நிறுத்துனு சொல்றேன்ல" என்று அதட்டியதும் கொஞ்சம் அழுகை மட்டுப்பட விஷயத்தை சொன்னாள்.
"அது வந்து... அந்த சுரேஷ் இருக்கான்ல அவன் இன்னைக்கு என் கிட்ட வந்து..." என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள் அனன்யா.
"சொல்லு..,உன்கிட்ட வந்து" என்று உலுக்கினாள் கீர்த்தனா.
"என்கிட்ட வந்து நான் உன்ன லவ் பண்றேன்.. நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படினு சொல்றான்... பார்க்க ரவுடி மாதிரி இருக்கிறான்.. குடி பழக்கம் வேற இருக்கு.. இவன எல்லாம் நினைக்கவே பிடிக்கல.. அப்புறம் எப்படி காதலிக்கிறது? கல்யாணம் பண்றது? அவனுக்கு நாளைக்கு பதில் சொல்லணுமாம்... பயமா இருக்கு கீர்த்தி" என்று அழுதாள் அனன்யா.
"உன் அண்ணாகிட்ட சொல்லு அவங்க பாத்துப்பாங்க" என்று ஆலோசனை கூறினாள் கீர்த்தனா.
"அருண் அவனை அடிச்சே கொன்னுடுவாங்க.. அப்புறம் என் பேரு ஊரேல்லாம் நாறிடும்... வேண்டாம்.. ஆனா என்ன பண்றதுண்ணே தெரியல" என்று மீண்டும் அழத் தொடங்கினாள் அனன்யா.
"சீ...அழக்கூடாது அனு.. இவனுங்க எல்லாம் பொண்ணுங்களை அடிமைன்னு நினைச்சிடானுங்க.. நீ நாளைக்கு ஒன்னும் அவனுக்கு பதில் சொல்ல வேணாம்.. என்னதான் பண்ணிருவான்னு பார்க்கலாம்... நான் இருக்கேன் உன் கூட.. பயப்படாம படிக்கிற வேலையை பாரு" என்று அவளுக்கு தைரியம் கூறி விட்டு தன் எழுத்து வேலையைத் தொடர்ந்தாள் கீர்த்தனா.
அனன்யாவும் சிறு நம்பிக்கையில் தன் படிப்பைத் தொடர்ந்தாள்.
ஆனால் இது பெரிய பிரச்சனையில் முடியப் போவதையும், அது கீர்த்தனாவை தாக்க போவதையும் எவரும் அறியவில்லை.
-------------------------
"டேய் மச்சான் அங்க பாருடா அனன்யா வர்றா" என்று எதையோ தேடிக்கொண்டிருந்த சுரேஷை தட்டினான் வினய்.
"எங்கடா?" என்று நிமிர்ந்து பார்த்தான் சுரேஷ்.
அங்கே அன்னம் போல் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் அனன்யா. சுரேஷை பார்த்து கொஞ்சம் பதறிய போதும் நிமிர்வுடனே நடக்க முயன்றாள்.
அவளை பார்த்த சுரேஷ் சந்தோஷத்தில் குதித்தான். "டேய் வினய் அவ எப்டிடா லவ்வ சொல்லுவா? ஐ லவ் யூ சுரேஷ்-னு இல்ல ஐ லவ் யூ மாமா-னு சொல்வாளாடா?" என்று குதித்துக் கொண்டிருந்தான்.
"எப்படியோ அவ உனக்கு லவ்வ சொல்லணும்.. அவ்வளோ தானே மச்சான்.. சூப்பரா ரொமேன்டிக்கா சொல்லுவா பாரு.. இதோ அவ பக்கத்துல வந்துட்டா இனி நாங்க எதுக்கு? பூஜைல கரடி மாதிரி நாங்க கிளம்புறோம்டா" என்று வினய் எழும்பினான்.
"அவ பக்கத்துல வரட்டும்டா.. அது வரை தனியா விடாதிங்கடா" என்று வினயின் கையை பிடித்தான் சுரேஷ்.
"ஏன்டா உனக்குலாம் கூட கையெல்லாம் நடுங்குதே.... காமெடியா இருக்கு மச்சான்" என்று சொல்லிக் கொண்டே "டேய் அனன்யா வர்றா" என்று எழும்பினான் வினய்.
ஆனால் எதையும் காணதவள் போல அனன்யா சுரேஷை தாண்டி வகுப்பறைக்குச் சென்றாள்.
சுரேஷ்க்கு சங்கடமாக இருந்தது. "எவ்வளோ ஆசையா இருந்தேன்.. மச்சான் இவ என்னடானா கண்டுக்கவே மாட்டேங்குறாளே" என்று வினயிடம் முறையிட்டான்.
"ஒரு வேளை நாங்க இருக்கிறதால வெட்கப்பட்டு பேசாம போறாளோ? அதனால தான் அப்பவே நாங்க போறோம்னு சொன்னேன்.. சரி மச்சான் கவலை படாதே.. இப்போ கிளாஸ்-கு தானே போயிருக்கா.. லன்ஞ்ச் டைம்ல பாத்துக்கலாம்" என்று ஆறுதலாக கூறினான் வினய்.
"சரி மச்சான் லன்ஞ்ச் டைம் பாத்துக்கிறேன்.. எப்படி என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிருவானு நான் பாத்துக்கிறேன்" என்று ஆவேசமாக கூறி பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒன்றை பற்ற வைத்தான்.
அதுவரை பேசாமல் இருந்த தருண் வாயை திறந்தான் "ஏன் சுரேஷ் உனக்கு இந்த பொண்ணு தான் கிடைச்சாளா? அவ ரொம்ப நல்ல பொண்ணுடா.. அவ வாழ்க்கையில விளையாடாதேடா"
"ஏன் தருண்?" என்று கேட்டான் சுரேஷ்.
"இல்லடா... நீ ரொம்ப நல்லவன்லாம் இல்லை குடி, சிகரெட், போதை பழக்கம் அப்படி நிறைய கெட்டப்பழக்கம் இருக்கு.. அனன்யா உனக்கு ஒத்து வரமாட்டா.. அது மட்டும் இல்ல.. அவ நம்ம அருணோட தங்கச்சிடா.. அதுக்காகவாது அவளை விட்டுறுடா.. அவ படிப்பை பாத்துக்கிட்டு நல்லா வாழட்டும்" என்றான் தருண்.
"ஓ..,ஆமாம்ல.. எனக்கு தான் நிறைய கெட்டப்பழக்கம் இருக்கே... நீ தான் ரொம்ப நல்லவனாச்சே.. ஒரு வேளை நீ அவளை கரக்ட் பண்ண பாக்குறியோ?" என்று இழுத்தான் சுரேஷ்.
"டேய்.." என்று எழும்பி விட்டான் தருண், "அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா”
"இந்த தங்கச்சி தங்கச்சின்னு சொல்றவனுங்களேயே நம்பவே கூடாது.. கடைசியில கட்டிக்கிட்டு போயிருவானுங்க" என்று ஏளனமாய் சொன்னான் சுரேஷ்.
"சீ... உன் கிட்ட சொல்ல வந்தேன் பாரு.. என்னைய சொல்லனும்,நீ எல்லாம் திருந்தவே மாட்ட.. எங்கயாவது போய் நல்லா வாங்கிக் கட்டும் போது தான் தெரியும்"என்று கோபத்தோடு நடந்தான் தருண்.
"டேய் மச்சான் அவன் அருண்கிட்ட போய் சொல்ல போறான்டா” என்றான் வினய்.
"டேய் தருண்... நீ மட்டும் அருண் கிட்ட சொன்ன இன்னையோட நம்ம பிரெண்ட்ஷிப் கட்" என்று சொன்ன சுரேஷை பார்த்து "உன்னைப் போல ஒரு கேடுகெட்டவனோட பிரண்ட்ஷிப் வைச்சிக்கிறத விட அருணுக்கு நல்ல நண்பனாக இருக்கலாம்.. அனன்யாவுக்கு நல்ல அண்ணனா இருக்கலாம்" என்று கூறிவிட்டு அருணிடம் சொல்ல விரைந்தான்.
ஆனால் அதற்குள் விஷயம் பெரிதாகியது.
மதிய உணவு முடித்து விட்டு வகுப்பறைக்கு திரும்பிய அனன்யாவின் முன் வந்து நின்றான் சுரேஷ்.
"என்ன அனு? நேத்து நான் கேட்டத்துக்கு இன்னும் நீ பதில் சொல்லலையே?" என்று கேட்டான் சுரேஷ்.
"பதில் சொல்லலைன்னா பிடிக்கலைனு அர்த்தம்" என்றாள் அனன்யா.
"அப்படின்னா?"
"உன்ன மாதிரி ஒரு கெட்டவனுக்கு காதல் ஒரு கேடா? நீ அதை தூர இருந்து ரசிக்கலாம் அனுபவிக்க முடியாது.. ஆனாலும் உனக்கு எங்கே ரசிக்க தெரியும்? அதை எப்படிடா கசக்கி எறியலாம்னு தான் நினைப்ப.. உன் கிட்ட பேசுறதே அசிங்கம்" என்று சொல்லி விட்டு நடந்தாள்.
கண்கள் சிவக்க நடந்தான் சுரேஷ்.. என்னவெல்லாம் சொல்லி விட்டாள்.., வந்த கோபத்தில் விடுவிடுவென அவள் வகுப்பறைக்குள் சென்றான்.
அனன்யாவை பார்த்ததும் "யேய்.. அனு... என்னடி பெருசாதான் அலட்டிக்கிற.. நீ இப்போ என்னை லவ் பண்ண முடியுமா? முடியாதா?" என்று கத்தினான்.
"டேய் எதுக்கு இப்போ சத்தம் போடுற? பைத்தியம் பிடிச்சிடுச்சா?" என்று கோபத்துடன் கேட்டாள் அனன்யா.
"பைத்தியமா...? எனக்கா..? ஏய் உன்னை..." என்று கையை ஓங்கி கொண்டு வந்தான் சுரேஷ். அனன்யாவை பின்னுக்கு தள்ளி முன்னே வந்து நின்றாள் கீர்த்தனா.. அதுவரை பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் கையை ஓங்கியதும் முன்னே வந்தாள்.
"யாருடி நீ" என்று கோபத்துடன் கேட்டான் சுரேஷ்.
"யாருடா நீ" என்று திருப்பிக் கேட்டாள் கீர்த்தி.
"ஏய் இப்ப நீ எதுக்கு இடையில வர்ற? இது எனக்கும் அனுவுக்கும் உள்ள பிரச்சினை" என்றான் சுரேஷ்.
"அவ தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்றாளே.. அப்புறம் எதுக்கு டா டார்ச்சர் பண்ற? ஓ காதல் பிச்சை கேக்குறியா?"
"பிச்சையா..? என்னடி ஓவரா பேசுற..?"
"ஆமாம் பிச்சைதான் கிடைக்காத ஒரு விஷயத்தை மேலும் மேலும் கேட்டுக்கிட்டே இருந்தா அது பிச்சை கேட்குற மாதிரி தான் இருக்கும்.. அவளுக்கு தான் உன்ன பிடிக்கலையே.. அப்புறம் ஏன்டா இப்படி பண்ற? ஆம்பளைங்க என்ன சொன்னாலும் பொண்ணுங்க ஏத்துக்கனும்னு நினைப்பீங்களா? அந்த காலம் எப்பவோ மலையேறிப் போச்சு.` இப்போ பொண்ணுங்களுக்கு சுயமரியாதை இருக்கு.., அவங்களும் சொந்த முடிவு எடுக்கலாம். இப்போ அனுவுக்கு உன்னைப் பிடிக்கல ரோஷம் உள்ளவனா இருந்தா 'நீ இல்லைன்னா தான் செத்து போயிட மாட்டேன் வாழ்ந்து காட்டுவேன்'னு போகனும்.. இப்படி டார்ச்சர் பண்ண கூடாது. நீ ஆம்பள தானே? உனக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை, ரோஷம் எல்லாம் இருக்கு தானே? மரியாதையா வெளியே போ.. இல்லைன்னா பிரின்ஸிபால்ட கம்பளையிண்ட் கொடுத்துருவேன்டா... போடா.. போ.. என்று கத்தினாள் கீர்த்தனா.
அவள் கத்தியதில் ஆத்திரமடைந்த சுரேஷ் "என்னடி ரொம்பதான் கத்துற? சரி அனு தான் இல்லைன்னு ஆயிடுச்சே.. நீ லவ் பண்ணு நீயும் அழகா தான் இருக்க" என்று முன்னே வரும் போதே "ராஸ்கல்" என்று கூறி அவள் கன்னத்தில் அறைந்தாள் கீர்த்தனா.
"வெளியே போடா.. இனிமேல் நீ எந்த பொண்ணுங்க கிட்டயும் இப்படி பேச கூடாது" என்று அவனை பிடித்து வெளியே தள்ளினாள் கீர்த்தனா.
அப்போது அங்கே வந்த அருணும்,தருணும் அவனை பிடித்து அடித்து உதைத்தனர்.
அருண் நேரடியாக அனன்யாவிடம் வந்தான், "லூசாடி நீ ரொம்ப தைரியசாலினு நினைப்போ? என்கிட்ட சொல்லிருக்கலாமே? வா வந்து பிரின்ஸிபால் கிட்ட கம்பிளையிண்ட் கொடு.. உன் பேரு கெட்டுப் போகாம நான் பாத்துக்கிறேன் இனி இவன் எந்த பொண்ணுங்க கிட்டயும் இப்படி நடந்துக்க கூடாது" என்று கையோடு கூட்டி சென்றான்.. பின்னாடியே கீர்த்தனாவும் சென்றாள். கம்பிளையிண்ட் கொடுத்ததும் அவனை ஒரு மாதம் சஸ்பேண்ட் செய்தார் கல்லூரி முதல்வர்.
கீர்த்தனாவை முறைத்துக் கொண்டே வெளியேறினான் சுரேஷ். அவன் மனதில் பழி வாங்கும் எண்ணம் மேலோங்கியது.
---------------------------
மாலையில் வீடு திரும்பிய ராம் தன் தம்பியை தேடினான். எங்கும் இல்லாததால் சோர்வுடன் அமர்ந்தான் ராம். சிறிது நேரத்தில் அர்ஜூன் வந்தான். அவன் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது.
"ஹேய் அர்ஜூன் எங்கடா போன? உன் பிரண்ட்ஸ் எல்லாம் வந்து கத்திட்டுப் போனாங்க" என்றான் ராம்.
"பிரண்ட்ஸா? எதுக்கு கத்துனாங்க?"
"உன் பிரண்ட்ஸ் உன்னைத் தேடி வராம எங்கடா போவானுங்க? வந்து கத்திட்டு போகுதுங்க" என்றான் ராம்.
"அண்ணா குழப்பாதீங்கண்ணா.. யாரு வந்தது?" என்று சிறு சலிப்புடன் கேட்டான் அர்ஜூன்.
"அதுவா...? அது வந்து" என்று சிரித்து விட்டு "கழுதைங்க இரண்டு இந்த பக்கமாக போச்சுங்க நம்ம வீட்டை பார்த்து கத்துச்சுங்க நான் நீ இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டேன்" என்று சிரித்தான்.
ஆனால் அவன் சிரிப்பின் எதிரொலி கொஞ்சமும் அர்ஜூனிடம் இல்லை.
"ஆமா நான் கழுதைன்னா கழுதை அண்ணா நீங்களும் அதே இனம் தானே?" என்று மாறி கொடுக்கவாவது செய்வான். ஆனால் இன்று அதுவும் இல்லை ராமிற்கு ஏதோ தவறு பட்டது.
"என்னடா ஆச்சு? எதாவது பிரச்சனையா? காலைல நல்லா தானே இருந்த?" என்று கேட்டான் ராம்.
"ஆமாண்ணா இன்னைக்கு காலேஜ்ல சரியான இன்சல்ட்" என்றான் அர்ஜூன்.
"என்ன இன்சல்ட்? நானும் காலைல உன் கூட தானே வந்தேன். அப்படிண்ணா என் கதையா இருக்காது வேற என்ன?" என்று கேட்டான் ராம்.
சில சமயம் ராம் அர்ஜூனை காலேஜூக்கு கொண்டு போய் விட முடியாது அந்த நேரம் சிலர் அவனை கலாய்ப்பதுண்டு. "என்னடா உன் அண்ணன் இன்னைக்கு எங்களுக்கு தரிசனம் தரலயே? உன் கூட வந்தா நீ டேமேஜ்-ஆ தெரிவேனு கூட்டிக்கிட்டு வரலயா?" இப்படி பல காமெண்டுகள். ஆனால் இதை அண்ணணோடு பகிர்வதோடு சரி வேதனை பட மாட்டான் இப்போது என்ன?
"என்னடா ஆச்சு?" என்று அவனை உலுக்கி கேட்டான் ராம்.
ஒரு பெருமூச்சடன் விஷயத்தை சொல்ல தொடங்கினான் அர்ஜூன்.
அன்று காலையில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
"டேய் கார்த்தி நேத்து காயத்ரி கிட்ட பேசினியா டா? ஓகே சொல்லிட்டாளா?" என்றான் அர்ஜூன்.
"அவன் எங்க மச்சி பேசிருப்பான்.. அவள கண்டதும் கை, கால் உதறி கீழே விழுந்துருப்பான்.. அவ சிரிச்சிக்கிட்டே போயிருப்பா" என்றான் அகிலன்.
"ஹேய் அகில் ரொம்ப ஓவரா ஓட்டாதடா.. உன் மீனாவைப் பார்த்ததும் நீ மயங்கி விழுந்ததை நான் சொல்லக் கூடாதுன்னு இருக்கேன். நீ ஓவரா ஓட்டுனா சொல்லிருவேன்" என்றான் கார்த்திக்.
"ஏய்..,இது எப்படா நடந்துச்சு? எனக்கு தெரியாதே!" என்று ஆச்சரியமா கேட்டான் அர்ஜூன்.
"அட ஹெச்.ஓ.டி தம்பிக்கு இது எல்லாம் பார்க்குறதா வேலை.. படிப்பு.. படிப்பு.. அது மட்டும் தானே தெரியும், ஆனா நாங்க இதை பார்க்குறதையே பிஸினஸா வச்சிருக்கோம்டா" என்று கார்த்திக் கூற அவன் முதுகில் ஓர் அடி வைத்தான் அர்ஜூன்.
"டேய் என்னடா அடிக்கிற? உன் வீட்டுல இது உனக்கு கிடைக்கும்னு நீ காட்டாமலயே எங்களுக்கு தெரியும்டா.. ஹெச்.ஓ.டி இப்படி தானே அடிப்பாரு.." என்று கார்த்திக் கூற, அவனுக்கு ஓர் அடியை கொடுத்து விட்டு "இப்போ சொல்ல போறியா? இல்லயா?" என்று கடுப்புடன் கேட்டான் அர்ஜூன்.
"அய்யோ நீங்க கடுப்பாகாதீங்க சார் அப்புறம் ஹெச்.ஓ.டி எங்க தலையை எடுத்து புலி பசிக்கு போட்டுருவாரு.. இதோ சொல்லிடுறேன்.." என்றான் கார்த்திக்.
"அத முதல்ல சொல்லுடா" என்றான் அர்ஜூன்.
"அது..,அது வந்து.." என்று கார்த்திக் இழுக்க, "டேய்" என்று அடிக்க கையை ஓங்கினான் அர்ஜூன்.
"எப்பா சாமி இனிமேலும் என்னால அடி தாங்க முடியாது.. திஸ் இஸ் வீக் பாடி" என்று மீண்டும் சொல்லாமல் இழுக்க, "டேய் இப்ப சொல்ல போறியா இல்ல இதுனாலயே உன்ன கொல்லவா?" என்று அர்ஜூன் செங்கலை கையில் எடுத்தான்.
"ஏய் ஏய் கொல்லாதடா நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை.. இதோ இந்த அகிலன் அன்னைக்கு மீனாவை பார்த்ததும் ஏதோ சினிமா நடிகை மீனாவே வந்தது மாதிரி பெரிய பில்டப் காட்டிக்கிட்டு அவகிட்ட பேச போனான்" என்று கார்த்திக் நிறுத்த, அகிலன் அவன் வாயை கைகளால் பொத்தினான்.
அர்ஜூன் "அப்புறம் என்னடா ஆச்சு?" என்று கேட்டான்.
அகிலனின் கைகளை தட்டிவிட்டு "அவகிட்ட போய் டைம் கேட்டுருக்கான். இத்தனைக்கும் இவன் கையிலேயே வாட்ச் கட்டிருக்கான். கையில மொபைல் வேற.. அவ இவன் வாட்ச்ச பாத்திருக்கா.. நம்மாளுக்கு புரிஞ்சி போச்சி.., வாட்ச் ரிப்பேர்னு சொல்லிருக்கான்.. அந்த ரிப்பேர் சொல்ல இவன் பட்ட பாடு இருக்கே அய்யோ தொண்டை தண்ணி வத்தி போயிருக்கும்டா.. அவ இவனை ஒரு பார்வை பார்த்துட்டு ஏழரைன்னு சொல்லிட்டு போயிட்டா" என்று கார்த்திக் நிறுத்தினான்.
"அப்புறம்" என்றான் அர்ஜூன்.
"அப்புறம் என்ன இவனும் 'தேங்ஸ்ங்க'னு சொல்லிட்டு வந்தான்.. இங்க வந்து மணியை பார்க்குறான்.. மணி பதினொன்று.. சார்க்கு மயக்கமே வந்துருச்சு.. செமயான நோஸ்கட் அவ ஏழரை கூட 'சனியன்' சொன்னது இவன் காதுக்கு கேட்கல. அவ்வளவு லூசு தனமா நின்னுருக்கான்" என்று சிரிப்புடன் கூற அர்ஜூனும் சிரித்தான்.
அகிலன், கார்த்திக் தலையில் குட்டு விட்டு "நீ காயத்ரி கிட்ட ஒரு நாள் பேசும் போது தெரியும்டா என் ஃபீலிங்ஸ்" என்று கூறினான்.
அப்போது அங்கு கிருஷ்ணா ஓடி வந்தான்.
"டேய் ஏன்டா இவன் ஓடி வரான்? வீணா கிட்ட ஏதாவது சொல்லி மாட்டிக்கிட்டானா?” என்று அகிலன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணா அருகில் வந்தான்.
வந்தவன் நேரடியாக அர்ஜூனிடம் வந்தான்.
"அர்ஜூன் ஒரு பிராபளத்துல மாட்டிக்கிட்டேன் ஹெல்ப் பண்ணுடா" என்று கெஞ்சினான்.
"என்னடா பிராபளம்?" என்று கேட்டான் அர்ஜூன்.
"அது...,அது" என்று தயங்கியவன், "நான் வீணாவுக்கு எழுதிய லவ் லெட்டரை நோட் மாறி நிஷா நோட்டுக்குள்ள வச்சிடேன்டா.. அத எடுக்கனும்டா" என்று கூறினான் கிருஷ்ணா.
"டேய் கிருஷ் உனக்கு வைக்க வேற நோட்டே கிடைக்கலையா? அந்த ராட்சசி நோட் தான் கிடைச்சதா? அவகிட்ட போய் எப்படிடா கேக்குறது? அவ சும்மாவே பேயாட்டம் ஆடுவா இப்போ மொத்த காலேஜ்-ம் அதிருற மாறி கத்துவாளே என்னால முடியாதுடா" என்று அர்ஜூன் கூற "டேய் பிளீஸ்டா நானே போய் எடுத்திருப்பேன், இப்போ நோட்ஸ் எல்லாம் கலைச்செல்வி மேம்கிட்ட போய்டுச்சு அதான் உன்கிட்ட ஹெல்ப் கேக்குறேன்... நீ ராம் சாரோட தம்பி தானே அதனால அவங்க எப்படியாவது குடுப்பாங்க.. நீ அந்த நோட்டை மட்டும் எடுத்தா போதும் பிளீஸ்டா" என்று கிருஷ் கெஞ்சவும்,
"ஏண்டா ஹெச் ஒ டி தம்பின்னா பெரிய ஆளா? நானும் இங்க உங்கள மாதிரி படிக்க தான்வந்திருக்கேன். சரிடா.. டிரை பன்றேன் என் அண்ணா பெயர் இங்க எதுக்குடா வருது? நானே எப்படியாவது கேக்குறேன் கிடைச்சா உன் லக்.. ஆமா உன் பேர் அல்லது வீணா பேர் ஏதாவது லெட்டர்ல எழுதிருக்கியா?" என்று கேட்டான் அர்ஜூன்.
"இல்லடா ஸ்வீட்டினு அவ பேருக்கு பதிலா போட்டுருக்கேன்.. என் பேருக்கு பதிலா 'உன் அன்பன்'னு போட்டுருக்கேன்.. சோ யார் எழுதினதுன்னு கண்டு பிடிக்கிறது கஷ்டம் தான்" என்று கிருஷ்ணா கூற "இதுல மட்டும் தெளிவா இருங்க எப்படியோ நான் டிரை பன்றேன்" என்று சொல்லிவிட்டு கலைச்செல்வி மேமின் இடத்திற்கு விரைந்தான்.
அங்கு கண்களில் கனல் கக்க நின்று கொண்டிருந்தாள் நிஷா.
என் உயிர் காதலியே
உன் கால் கொலுசாக மாற துடிக்கிறேனடி
அதற்கு நீ அனுமதிக்கா விட்டாலும்
உன் கைவளையில் ஒரு மணியாய் மாறி
காலம் முழுவதும் அதன் ஓசையாக
உன் காதருகில் கிண்கிணிக்க ஆசை
ஒற்றை காவலனாக உன் வாழ்நாள் முழுவதும்
யார் தீங்கும் உன்னை அண்டாமல்
கயவனின் கை உன்மேல் தீண்டாமல்
உன்னை பாதுகாக்கும் உரிமையை எப்போது
தர போகிறாய் என் உயிரே..!