அத்தியாயம் - 21
அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு அன்று முழுவதும் வருவுடனே இருந்தான் சரண். விஷயத்தை அறிந்ததிலிருந்து அவனால் அவளை விட்டு துளியும் நகர முடியவில்லை. மதிய உணவை ஊட்டிவிட்டவன், மாலை அவளுக்கு பாலும் எடுத்து வந்தான்.
சரண் அவளுக்கு பால் எடுத்து வந்த நேரம், அவளது கைபேசி அலறியது. அதன் சத்தம் கேட்டு கட்டிலில் இருந்து இறங்குகிறேன் என்று வேகமாக கீழிறங்க, கால் இடறி குப்புற விழப் போனாள் வரு.
அதை பார்த்து பதறி போன சரண், கையிலிருந்த பாலை கீழே போட்டுவிட்டு அவளை தாங்கி பிடித்தான்.
வரு பயத்தில் கண்களை மூடி கொள்ள, தன் நெஞ்சமும் நடக்கவிருந்த அசம்பாவிதத்தில் தடதடக்க தான் செய்தது. அதே பதற்றத்தோடு “இப்போ எதுக்குடி இப்படி இறங்கி ஓடுற? டாக்டர் சொன்ன பிரச்சனையே தொண்டை வரை நிக்குது. இதுல புதுசா வேற இழுத்து விட்டுக்க பார்க்கற” என்று சத்தம் போட்டான்.
அவளோ படபடப்பில் இமைகள் தட்ட கண்களை திறந்தவள் “அது சரண்.. ஃபோன் அடிச்சது..” தன் கைப்பையை பார்த்துக் கொண்டே மென்று விழுங்கினாள்.
அவளை மெத்தையில் அமர வைத்தவன், அவளது கைப்பையை நோக்கி சென்று அதிலிருந்த கைபேசியை எடுத்து வந்து கொடுத்து “பேசு” என்று இறுகிய முகத்துடன் சொல்லிவிட்டு சிந்திய பாலை துடைக்கச் சென்றான்.
அவளோ வந்த எண்ணிற்கு அழைத்து பேசாமல், கைபேசியை எடுத்து தூரம் வைத்துவிட்டாள்.
அதை பார்த்தவன் “இதுக்கு தானடி ரிஸ்க் எடுத்து இறங்கி வந்த.. இப்போ பேசாம வச்சிட்ட?” என்று பற்களை கடிக்க..
“அது சரண்.. அது.. மனு தான் கால் பண்ணிருப்பான். நான் செக்கப் போயிட்டு வர டே, டாக்டர் என்ன சொன்னாங்கனு கேட்க மனு தான் எவரிமன்த் கால் பண்ணுவான்” என்றதும் சரணின் முகம் பாறையாய் இறுகி போனது.
அதை கண்டவள் அவசரமாக “அது எப்பவும் போல எடுக்க போய்ட்டேன். இப்ப யோசிச்சா, நீயே இப்ப தான் என்கிட்ட நார்மலா பேச ஆரம்பிச்சிருக்க. உனக்கு தான் மனுக்கிட்ட பேசறது பிடிக்காதே. இனி நான் பேசல சரண்” என்றாள் கலங்கிய கண்களாக.
தனக்காக வேண்டாமென்று சொன்னாலும், அண்ணன் மீது அவள் கொண்டிருக்கும் பாசம் சரணுக்கு இப்போது தெளிவாக புரிந்தது. தனக்கு மட்டும் தான் இரத்தபாசம் இருக்க வேண்டுமா? அவளுக்கு இருந்தால் அது தவறா? அவன் மனம் அவனை சாட, அவளது கைபேசியை கையில் எடுத்தவன், கடவுச்சொல் இட்டு உள்ளே சென்று “உன் அண்ணன் என் அக்காவை மணக் கோலத்துல நிற்க வச்சிட்டு ஓடிப்போயிட்டானேன்னு தான் உனக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இருக்க கூடாதுனு சொன்னேன்” என்று சொல்லிக் கொண்டே மனோஜின் எண்ணிற்கு அழைத்து..
“அதான் முக்கிய குற்றவாளியே நீதான்னு தெரிஞ்சிடுச்சே. அப்புறம் நீ அவன் கூட பேசினாலும், பேசலனாலும் ஒண்ணு தான்” என்றுவிட்டு கைபேசியை மெத்தை மீது வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
உண்மையில் சரண் மென்மையாக புன்னகைத்துக் கொண்டு தான் அங்கிருந்து சென்றான். வருவோ அவன் தன்னை இன்னும் மன்னிக்கவில்லை என்றே எண்ணினாள்.
நாட்கள் பறந்தோடியது. வர்ணிகாவிற்கு இப்போது ஒன்பது மாதங்கள் ஆகியிருந்தது. அதுவரையிலும், சரண் தான் அவளுக்கு உணவு ஊட்டுவது. சனி, ஞாயிறுகளில் சமைத்தும் ஊட்டுவான். அதில் வரு இப்போது ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் எதுவுமின்றியும் தன் கர்ப்ப காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
ஒருவரை மன்னிப்பதற்கு மனம் இருந்தால் போதும், மன்னித்து விடலாம் என்பதை சரணும் புரிந்திருந்தான். இப்போது அவனுக்கு மனைவியிடம் வருத்தம் என்று ஒன்று இருந்தால், அது கர்ப்பக் காலத்திலும் ஓய்வெடுக்காமல், அத்தையின் ஏஜென்சி, நாத்தனாரின் தொழில் என்று அதை முன்னேற்றுவதிலேயே, அதிக வேலை பளுவை இழுத்துப் போட்டு கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பது தான்.
கனியின் ஏஜென்சி, அவர்கள் ஒப்பந்தம் போட்ட அனைத்து இடங்களிலும் நல்ல பெயர்களை வாங்கிக் கொண்டிருக்க, சுசியின் தொழில் சற்று மந்தமாக தான் இயங்கி கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் தொடக்கத்திலேயே ஒரு பொருளை அறிந்து, அதை பயன்படுத்திவிட மாட்டார்களே. சரியான உத்திகளை கையாண்டு, அதை அவர்களிடம் கொண்டு செல்வதிலேயே தன் முழுநேரத்தையும் செலவழித்தாள்.
அன்று அறைக்குள் நுழைந்த சரணுக்கு நாளை வளைகாப்பை வைத்துக் கொண்டு, மடிக்கணினி முன் அமர்ந்து வேலை பார்த்திருந்தவளை கண்டு ஆயாசமாகி போக, “உன் மேக்புக்கை எடுத்து ஒழிச்சு வைக்க போறேன்” என்று கடிந்துக் கொண்டே அவளிடம் வந்தான்.
“ப்ளீஸ் சரண்.. நீ தான பேபிஷவர்க்கு அப்புறம் கம்ப்ளீட் ரெஸ்ட்ன்னு சொல்லிருந்த. அதான் இன்னைக்கே பார்க்க வேண்டிய எல்லாத்தையும் பார்த்துட்டு நாளைக்கு ஹேன்ட்ஓவர் கொடுக்க போறேன்” என்றாள்.
“யாருக்கு?” ரகுவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் சரண் கேட்க,
“வேற யாருக்கு.. வர்ணியோட சரணி கிட்ட தான்” என்று கலகலவென்று சிரித்தாள்.
“என்னது நானா? முடியாது போடி. வேணும்னா உன் அப்பாகிட்ட கொடு. இல்ல உன் மனு அண்ணன் கிட்ட கொடு. நீ சொல்றத எல்லாம் அவன் தான் சரியா செய்வான்” என்றவன் “ஓடி போகறதா இருந்தாலும்” என்றும் வார்த்தையை விட்டான்.
அதில் வருவிற்கு சுருக்கென்று ஆக “உனக்கு தான் உன் வைஃப் மேலயும் பேபி மேலயும் அக்கறை இருக்கணும். நீ தான் பார்க்கற” என்று கோபமாகவே சொன்னாள்.
அதை கேட்ட சரண் முகம் சுளித்தாலும், அவளது முடிவை மாற்றி கொள்ளமாட்டாள் என்பதை நன்கு அறிந்தவன், அந்த பேச்சை ஒதுக்கி வைத்துவிட்டு “சரி இந்தா, பிரிச்சி பாரு” என்று தன் கையில் இருந்த பையை அவளிடம் நீட்டினான்.
அவளும் அதை ஆர்வமாக வாங்கி பார்க்க, உள்ளே பட்டுப்புடவை இருந்தது. இது தான் சரண் அவளுக்கு வாங்கி தரும் முதல் விலையுயர்ந்த பரிசு. அதுவும் இப்போது தான் அவளுக்கு முதல் முறையாக புடவை எடுத்து தருகிறான். கண்கள் மின்ன புடவையை பார்த்த வரு, “எனக்கா சரண்?” அதை ஆசையாக தடவிக் கொண்டே கேட்டாள்.
“ஆமா, உனக்காக தான் வாங்கினேன். உன் அளவு ப்ளௌஸ் வச்சி சுசி தைக்கிற இடத்துல கொடுத்து ப்ளௌஸும் தைச்சி வாங்கிட்டேன். இங்க பாரு, மாமன் உனக்காக ஸ்பெஷலா ஒரு ஆரி டிசைனை கொடுத்து தைக்க சொன்னேன்” என்று சிலாகித்தான்.
ஆம், அதன் இரு கைகளில், குழந்தையை கையில் ஏந்தியிருக்கும் தாயையும், பின்புறம் ஆண் தன் மேட்டிட்ட மனைவியின் வயிற்றை பின்னிருந்து அணைத்து பிடித்திருப்பது போலும் ஆரி வேலைபாடுகள் செய்திருந்தனர். அது போதாதென இரண்டு நாட்டின்(Knot) எல்லையிலும் குழந்தையின் பிஞ்சு பாதம் இருந்தது. இதுபோன்றெல்லாம் வர்ணிகா யோசித்தது கூட இல்லை. அந்த ரவிக்கையை பார்த்தவளுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது. அதே மகிழ்ச்சியுடன் கணவனின் கன்னத்தில் முத்தமும் வைத்தாள்.
தன் சக்திக்கு மீறியே மனைவிக்கு வளைகாப்பு நடத்தினான் சரண். ரகுவும் மைதிலியுமே மகளுக்கு பட்டுப்புடவை, எமரல்ட் ஆன்ட்டிக் நகைகள், சீர் வரிசையென தடபுடலாக அனைத்தும் செய்திருந்தனர்.
வருவும் அண்ணன் வருவதை பற்றி கணவனிடம் கேட்கவில்லை. சரணும் அவளது அண்ணன் வருவானா என்று மனைவியிடம் கேட்கவில்லை. ஆக மொத்தம், மனோஜ் விழாவிற்கு வரவில்லை.
அன்றிரவு மனைவிக்கு கால் பிடித்துவிட்டு கொண்டிருந்தாலும், அவளை முறைத்துக் கொண்டே செய்தான் சரண்.
“இப்படி முகத்தை வச்சிக்காத.. பேசு சரண்” என்று வரு கணவனின் கன்னம் தாங்க..
“அதான் உன் அப்பா, அம்மா கூப்பிட்டாங்க தான. அங்க போகாம எதுக்கு நம்ப வீட்டுக்கே வந்துட்ட?” அவளை கூர்ந்து பார்த்துக் கேட்டான்.
“எனக்கு உன் கூட இன்னும் கொஞ்சம் நாள் இருக்கணும்னு தோணுச்சு. அதான்..” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட, அதை அவனுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொண்டே உறங்கிவிட, நள்ளிரவில் வருவிற்கு திடீரென வலி எடுக்க தொடங்கிவிட்டது. தலையை லேசாக திருப்பி பார்த்தால், சரண் அவளை அணைத்துக் கொண்டு உறங்கியிருந்தான். அவனை எழுப்பி விஷயத்தை சொல்லவா? இல்லை, மீண்டும் என்று கிடைக்கும் என்று தெரியாத அவனது நெருக்கத்தை இன்னும் சிறிது நேரம் அனுபவிக்கவா? என்று புரியாமல் தவித்திருந்தாள் வரு. இதில் வலி வேறு விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் பொறுத்து பார்க்கலாம் என்று காத்திருந்தவள், விடியும் நேரத்திலேயே கணவனை தட்டி எழுப்பி “வலிக்குது சரண்” என்றாள்.
அதை கேட்டவனின் மனமும் படபடத்தாலும் “ஒண்ணுமில்ல டி.. அம்மாவை கூப்பிடறேன்” என்று கதவை திறந்துக் கொண்டு வெளியே ஓடினான்.
கனியும் மருமகளை விசாரிக்க, அவள் சொன்னதை கேட்டவருக்கு அது பிரசவ வலியாகவே தோன்ற, அனைவரும் மருத்துவமனைக்கு கிளம்பினர்.
வருவை பரிசோதித்த மருத்துவரும் அதை பிரசவ வலி என்றே உறுதிப்படுத்த, அவளை பிரசவ அறைக்கு அழைத்து செல்ல தயாராக்கினர். அந்நேரம் ரகுவும் மைதிலியுமே அங்கே வந்துவிட்டனர்.
என்ன தான் வெளியே தன்னை தைரியமானவளாக காட்டி கொண்டாலும், வரு மனதிலும் பயமிருக்க, தாய், தந்தையை பார்த்ததும் மைதிலியை அணைத்துக் கொண்டவள், ரகுவின் கரத்தையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
மகளின் மனதை புரிந்த மைதிலி, அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்க, ரகுவும் மகளின் நெற்றியில் முத்தம் வைத்து, தலையை வருடி கொடுத்து செயலில் ஆறுதல் கொடுத்துக் கொண்டிருந்தார். இவையனைத்தையும் சற்று தள்ளி நின்று கலக்கத்துடன் பார்த்திருந்தான் சரண்.
வரு அவனை கண்களால் அழைக்க, அவனும் அவளருகில் வர, அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவள் “ஐ லவ் யு, சரண். தேங்க் யு சோ மச், அண்ட் சாரி ஃபார் எவரிதிங். ஐ லவ் யு..” கணவனை அணைத்து அவன் தோளில் முகம் புதைத்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
சரணுக்கு இருக்கும் பயத்தில், இவள் பேசுவது வேறு தன்னை பலவீனமாக்க, அவள் முகத்தை நிமிர்த்தி “உள்ள போய் அங்க இருக்கிற டாக்டர், நர்ஸுக்கு தான் பயம் காட்டுவியே தவிர, உனக்கு சுட்டு போட்டாலும் பயம் வராது. எதையும் யோசிக்காம போய்ட்டு வா. நம்ப பாப்பாவோட என் பாப்பாவும் பத்திரமா வந்திடுவா” என்று அவள் புறங்கையில் முத்தம் வைத்தான்.
வருவை பிரசவ அறைக்குள் அழைத்து சென்றுவிட, அவள் சென்ற வழியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் சரண். கனி, ஒருபக்கம் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டுமென தனக்கு தெரிந்த தெய்வத்திற்கெல்லாம் வேண்டுதல் வைத்து கொண்டிருக்க, பாலன் ஒரு ஓரம் நின்று கைகளை பிசைந்திருந்தார். ரகுவும், மைதிலியுமே பதற்றமாக தான் அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரம் அப்படியே கடந்திருக்க, சரண் இருந்த இடத்தைவிட்டும் அகலாது, அவள் பேசிவிட்டு சென்றதில் உழன்ற மனதோடு, திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரகு, அவனருகில் வந்து ஆறுதலாய் அவன் தோளில் கை வைத்தது தான், அவரை இறுக அணைத்துக் கொண்டவன் “வர்ணிக்கு ஒண்ணும் ஆகாதுல மாமா? வெளில எதுவும் காட்டிக்கலனாலும் பயந்து தான் இருக்கா. அவகிட்ட எதுவும் காட்டிக்கலனாலும் எனக்கும் பயமா தான் இருக்கு. அவ, குழந்தை, ரெண்டு பேரும் நல்லபடியா எனக்கு கிடைச்சிடுவாங்கல மாமா?” என்று ஏக்கமாக கலங்கிய கண்களுடன் கேட்கும் மருமகனை பார்க்கும் போது ரகுவிற்கும் கண்கள் கலங்கிவிட்டது.
அவனது கலங்கிய கண்களை துடைத்தவர், “பிரசவம் ஒவ்வொரு பொண்ணுக்கும் மறுபிறவி தான். ஆனா, அவ என் லயனஸ். எல்லாத்தையும் கரேஜியஸ்ஸா ஹேன்டில் பண்ணிடுவா. கவலைப்படாத, என் குழந்தைக்கும், உன் குழந்தைக்கும் ஒண்ணும் ஆகாது” என்று அவனை தேற்றி அழைத்து வந்து தன்னருகில் அமர்த்திக் கொள்ள, சரணும் அரை மனதாக வந்தமர்ந்தான்.
இருந்தும் இருப்பு கொள்ளாமல் கதவருகே சென்று பார்ப்பதும், மீண்டும் வந்து அமருவதாகவே இருந்தான் சரண்.
வரு உள்ளே சென்று வெகுநேரமாகி விட, இப்போது மொத்த குடும்பமும் அறை வாசலில் பதற்றமாக காத்திருக்க, சரியாக மருத்துவரும் அவர்களது சந்தோசத்தை கையில் ஏந்தி வந்தார்.
அவர்களிடம் வந்த மருத்துவர் “கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர்.சரண். இட்ஸ் பாய் பேபி. போத் மதர் அண்ட் பேபி ஆர் பைன்” என்று சரணிடம் கொடுக்க..
அவன் குழந்தையை வாங்க பயந்துக் கொண்டு “அம்மா, இவனை வாங்குங்களேன்” என்று கண்களில் நீர் கோர்த்து கனியிடம் சொன்னான்.
“அட, நிலவனை தூக்குற மாதிரி தான். உன் பையனை நீயே வாங்கு” அவர் அவனிடமே அப்பொறுப்பை ஒப்படைக்க, சரணும் பயந்துக் கொண்டே தன் உயிரை கைகளில் ஏந்தினான்.
மருத்துவர் சந்தேகித்தது போல், சரண், வர்ணிகாவின் குழந்தை, அவன் தந்தையை போலவே ஆர்எச் நேர் காரணியை கொண்டே பிறந்திருந்தான். அதன்படி அவன் பிறந்த எழுபத்தியிரண்டு மணிநேரத்திற்குள் வருவிற்கு இன்னொரு ஊசியும் போட்டனர்.
சுக பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வருவை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் மருத்துவமனையில் இருந்த போதே, சரண் இல்லாத நேரமாக பார்த்து, மனோஜ் குழந்தையை வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தான். எல்லாம் நல்ல படியாக நடந்து, மகள் தங்கள் வீட்டிற்கு வர போகிறாள் என மைதிலி ஆசையாக காத்திருந்தார். ரகு மனதிலும், பல வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில் பிறந்திருக்கும் சிறு குழந்தையை வரவேற்கும் ஆவல் இருந்தது.
வருவோ, இப்போதும் சரண் வீட்டிற்கே செல்வதாக சொல்லி, தாய், தந்தை இருவரையும் ஏமாற்றிவிட்டாள்.
சரண் மற்றும் வர்ணிகா, அவர்களது மகனுக்கு ஆதன் என்ற பெயரை தேர்வு செய்திருந்தனர். சரண், ஒரு மாத பேட்டர்னிட்டி விடுப்பில் இருக்க, தானே உடனிருந்து வருவையும் தன் மகனையும் அழகாக பார்த்துக் கொண்டான்.
குழந்தை பிறந்து பத்து நாட்களுக்கும் மேலாகி இருக்க, ரகுவும் மைதிலியும் தினமும் குழந்தையை வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
அன்று இரண்டு தெரு தள்ளியிருந்த நண்பன் ஒருவன் எதோ வேலை என்று சரணை அழைத்திருந்தான். இவனும் வருவிடம் சொல்லிவிட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகன் கன்னத்திலும் முத்தம் வைத்துவிட்டு அவனை காண சென்றான். சரண் திரும்பி வந்த போது, மகன் அழுதுக் கொண்டிருந்தான்.
அவனை தூக்கி சமாதானம் செய்துக் கொண்டே “வர்ணி, எங்க இருக்க? சீக்கிரம் வா. குழந்தை அழறான். பால் வேணுமான்னு பாரு” என்று மனைவிக்கு குரல் கொடுத்தான்.
அதற்கு எந்த பதிலும் வராமல் போகவே, சமையலறை, குளியலறை என்று ஒவ்வொரு இடமாக மகனை சமாதானப்படுத்தி கொண்டே மனைவியை தேட, அவள் எங்கேயும் இல்லை.
அப்போது ஏஜென்சி சென்றுவிட்டு திரும்பிய கனி, “வரு.. சரண்.. என்னாச்சு.. எதுக்கு குழந்தை இப்படி அழறான்? குழந்தை சத்தம் அங்க வரைக்கும் கேக்குது” என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைய, சரணுக்கு கண்களெல்லாம் கலங்கிவிட்டது.
“அம்மா.. குழந்தை அழறான் ம்மா.. இவ எங்க போனானு தெரியல..” என்று பற்களை கடித்தவன் “எதாவது பண்ணுங்களேன்..” என்று மீண்டும் அழும் குரலுக்கு மாறினான்.
கனிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றினாலும் “அழாத சரண்.. பக்கத்துல எங்கயாவது போயிருக்கும். வருமாக்கு முதல் நாள் தாய் பால் சுரக்காதப்போ டாக்டர் எதோ எழுதி கொடுத்தாங்களே, அத கொடுக்கலாம். நான் குழந்தையை பார்த்துக்கறேன். நீ வருமாக்கு ஃபோன் பண்ணி எங்க இருக்குனு கேளு” என்று மகனை தேற்றினார்.
அவனும் அவர் பேச்சை கேட்டு உள்ளே செல்ல, தனக்கு ஒன்றும் புரியாத போதும் “அழாத செல்லம்.. ஆயா உங்களுக்கு பால் கொடுக்கறேன்” என்று குழந்தையிடம் பேசிக் கொண்டே, ஒருவேளை பாலை பிழிந்து எடுத்து வைத்திருக்கிறாளா என்று பிரிட்ஜை திறந்து பார்க்க, அங்கே வரு தன் பாலை நான்கைந்து பாட்டில்களில் எடுத்து வைத்திருந்தாள்.
அப்போதே போன உயிர் மீண்டு வர, ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் பால் புட்டியையும் வைத்து மிதமான சூட்டில் பாலை சூடு செய்து பேரனுக்கு புகட்டினார்.
அதேநேரம் உள்ளே கைபேசியை எடுக்க சென்ற சரணுக்கு, தான் கண்ட விஷயத்தில் முகம் இறுகி, கண்கள் சிவந்துப் போனது.
விஷயத்தை கிரகிக்க அவனுக்கு சிலநிமிடங்கள் பிடித்தது. அப்படியே அமர்ந்து விட்டவன் தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வர, அங்கே கனி பேரனுக்கு பால் கொடுத்து அவனை தூங்க செய்திருந்தார்.
தாயை பார்க்க முடியாமல் குனிந்த தலையாகவே “அம்மா.. குழந்தையை எடுத்துக்கோங்க. வெளில போறோம்” என்றுவிட்டு வாசலுக்கு விரைந்தான்.
மகனை என்ன, ஏதென்று கேட்டும் பதில் வராமல் போக, பேரனுக்கு போர்த்த துணியை எடுத்து கொண்டவர், அவனுக்கு அதை போர்த்திக் கொண்டே மகன் பின்னால் சென்றார்.
இங்கே மகள் வீட்டினுள்ளே நுழைவதை கண்ட மைதிலி “ஹேய் வரு.. எங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டு நீயே இங்க வந்து சர்ப்ரைஸ் கொடுக்கறீயா.. குழந்தை எங்க?” மகளை கேட்டுக் கொண்டே பேரனை காணும் ஆவலில் வாசலை பார்க்க, அங்கே யாருமில்லை.
அதற்குள் ரகுவும் அங்கு வந்துவிட, “நான் சரணை விட்டுட்டு வந்துட்டேன் டேட். தி டே ஆஃப்டர் டூமரோ, வி ஆர் லீவிங் ஃபார் லண்டன்.. டிக்கெட் புக் பண்ணிடுங்க” என்றுவிட்டு பேச்சு முடிந்தது என்பதாக மேல் தளத்தில் இருக்கும் தன்னறைக்கு செல்ல போனாள்.
“என்ன வரு பேசற? சரண் கூட பிரச்சனைன்னா லண்டன் கிளம்பிடுவியா.. சரி குழந்தை எங்க?” மைதிலி மகளை கேட்க, அவளுக்கும் மகனின் நினைவில் கண்களில் நீர் நிரம்பியது.
அதை துடைத்தவள் “பேபிய சரண் பார்த்துப்பான். ப்ளீஸ், வேற எதுவும் கேக்காதீங்க” என்றுவிட்டு அகல போனவளின் முன் வந்து நின்ற ரகு, எதுவும் கேட்காமல் மகளையே பார்த்திருக்க, அவரது பார்வையை தாளமுடியாதவள் அவரை அணைத்துக் கொண்டு..
“இட்ஸ் நாட் ஈசி ஃபார் மீ டேட். ப்ளீஸ், நாம போய்டலாம். அண்ணி பிசினஸ்ஸ பார்த்தி அண்ணா பார்த்துக்கட்டும். அத்தை பிசினஸ்ஸ சரண் பார்த்துப்பான். எதாவது நீட்(need) இருந்தா நீங்க பார்த்துக்கோங்க. இனி பிசினஸ்க்காக கூட இந்தியா வர நான் விரும்பல. நாம கிளம்பிடலாம்” என்று கண்ணீர் சிந்தினாள்.
அவளை தன்னிடமிருந்து விலக்கி “உன் குழந்தைய யார்டா பார்த்துப்பா?” என்று வேதனையாக கேட்டார் ரகு. மைதிலியோ மகளின் வாழ்க்கையை எண்ணி கலங்கி நின்றிருந்தார்.
“சரண் பார்த்துப்பான். என்னைவிட நல்லாவே அவனை வளர்ப்பான்” என்றாள் அவரை பார்க்க கூட முடியாமல் விழிகளை தாழ்த்தி.
“அப்போ சரணை மா?” ரகு மீண்டும் மகளை கூர்மையாக பார்த்துக் கேட்க, உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று தலையாட்டியவள், யார் குரலுக்கும் நிற்காமல் சென்றுவிட்டாள்.
மைதிலி கல்லாய் சமைந்து நின்றுவிட, ரகுவோ என்ன நடந்ததென்று தெரியாமல் சரணுக்கும் கனிக்கும் மாறி மாறி அழைத்திருந்தார். வண்டியில் வந்து கொண்டிருந்ததால் இருவருமே அழைப்பை ஏற்கவில்லை.
ரகு பதற்றமாக மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்த வேளையில், வீட்டினுள்ளே நுழைந்த சரண் “அவ எங்க?” என்று பற்களை கடித்துக் கொண்டு அவரிடம் கேட்க..
அவன் முகத்தை வைத்தே மகள் இவர்களுக்கே தெரியாமல் தான் வந்திருக்கிறாள் என்பதை யூகித்துவிட்டவர் “சரண், வரு செஞ்சது தப்பு தான். நாம பேசிக்கலாம்” என்று அவனை நிதானத்திற்கு கொண்டுவர முயன்றார்.
தன் மகன் அங்கு தாயில்லாமல் பாலுக்கு அழுததை பார்த்த பிறகுமா அவன் நிதானம் காப்பான்?
“எனக்கும் அவளுக்கும் நடுவுல நீங்க யாரும் வராதீங்க.. இன்னைக்கு ஒரு முடிவு தெரியட்டும்” என்றுவிட்டு மாடியிலிருக்கும் அவள் அறைக்கு வேக எட்டுக்கள் வைத்து ஏற, ரகு, மைதிலி, கனி மூவரும் பதறிப்போனார்கள்.
மேலே வந்த வரு, என்ன தான் தன் மடிக்கணினியை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும், அவள் நினைப்பெல்லாம் அவளது மகனே. மகன் தன்னை தேடியிருப்பானா? பாலை பிழிந்தெடுத்து வைத்து விட்டு வந்திருந்தோமே, அதை மகனுக்கு புகட்டியிருப்பார்களா? என்று எண்ணற்ற சிந்தனையில் மனம் உழன்றிருந்தாள்.
அப்போது உள்ளே வந்த சரண், மடிக்கணினி முன் அமர்ந்திருந்தவளை இழுத்து அவள் கன்னத்தில் பளாரென அறைந்தான்.
அதில் வரு திகைத்து விழிக்க, “பொண்ணா டி நீ..? அங்க என் குழந்தையை விட்டுட்டு வந்து ஹாய்யா உட்கார்ந்துட்டு இருக்க. ச்சே.. இப்படி ஒரு பொண்ண என் வாழ்க்கைல பார்த்ததில்ல.. காசு பணம் இல்லாதவன் கூட குடும்பத்தோட சந்தோஷமா வாழனும்னு தான் நினைப்பான். காசில்லாம கை ஏந்துறவன் கூட தன் குழந்தையை மடியில கட்டிக்கிட்டு தான் சுத்துவான். உன்னை மாதிரி புருஷனும் புள்ளையும் வேண்டாம்னு விவாகரத்து பத்திரத்துல சைன் போட்டு வச்சிட்டு வரமாட்டாங்க..” வீட்டில் விவாகரத்து பத்திரத்தை பார்த்ததிலிருந்து, தன்னையும் வேண்டாம் மகனையும் வேண்டாமென்று சொல்லியவள் மீது கனன்றுக் கொண்டிருந்த கோபத்தை மொத்தமாக கொட்டி தீர்த்தான்.
அப்போதும் எதுவும் பேசாமல் நின்றிருந்தவளின் மீது கோபம் கொப்பளிக்க “உனக்கு வேளாவேளைக்கு பால் கொடுத்து வளர்த்தேன்ல, அதான் என் குழந்தைக்கு பால் கொடுக்க கூட இல்லாம கிளம்பி வந்தியா டி. என் தலையெழுத்து தான் உன்னை கட்டிக்கிட்டு கஷ்டப்படணும்னு இருக்கு. என் குழந்தையை ஏன்டி வாட்டி வதைக்கிற? பால் குடிக்கிற குழந்தையை விட்டுட்டு வர எந்த தாய்க்காவது மனசு வருமா. உனக்கும் இச்சைக்கு புள்ளைய பெத்து குப்பையில போடறவங்களுக்கும் என்னடி வித்தியாசம்” பற்களை கடித்துக் கொண்டு வார்த்தை கணைகளை வீசினான் சரண்.
அதுவரை அமைதியாக கேட்டிருந்த வரு, அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகளில் “வில் யு ஸ்டாப் இட் சரண்?” என்று அவன் முன் தன் ஆள்காட்டி விரலை உயர்த்தியிருந்தாள்.
தொடரும்...