All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.​

நிலா ஶ்ரீதரின் "உன்...
 
Notifications
Clear all

நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி

Page 3 / 3
 

(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 4 months ago
Posts: 55
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 4 months ago
Posts: 55
Topic starter  
அத்தியாயம் - 16
 
என்ன தான் மகன் அவளை பார்க்க கூடாது, அவளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று சொல்லியிருந்தாலும் கனியால் எப்படி மருமகளை பார்க்காமல் இருக்கமுடியும். இப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்ற நினைப்பிலேயே இரவை கழித்தவர் அடுத்த நாள் காலை அனைத்து வேலைகளையும் நேரத்திலே முடித்துக் கொண்டு சரண் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக காத்திருந்தார்.
 
சரணும் கிளம்பியதும் தான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, வேலைகளை நேரத்திலே முடித்துவிட்டவர், நேராக மகனின் வீட்டிற்கு தான் சென்றார்.
 
அங்கு அழைப்பு மணியோசை கேட்டதும் கணவனிடம் தான் விசை அட்டை இருக்குமே, அவன் தானே திறந்துக் கொண்டு வந்துவிடுவான் என்பதெல்லாம் மறந்து, அதுவரை அவன் விட்டு சென்ற இடத்திலேயே இரவெல்லாம் வெறும் தரையில் படுத்திருந்தவள் ஓடி வந்து ஆவலாக கதவை திறக்க, வாசலில் கனி தான் நின்றிருந்தார்.
 
அவரை பார்த்ததும் நேற்றிலிருந்து தேக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பொங்கி எழ, “அத்தை… சரண் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்” என்று விசும்பியவள், அவர் தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.
 
மருமகளின் கண்ணீரில் தானும் கலங்கி விட்டவர் அவளை கை தாங்கலாய் அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினார். அவள் அப்போதும் அவர் மீது சாய்ந்து அழுது துடித்தாள்.
 
“அழாத வரு மா” என்று மருமகளை தேற்றி, அவள் அழுகை சற்று ஓய்ந்ததும் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு செல்ல, அங்கே நேற்று சமைத்த உணவெல்லாம் உண்ணாமல் வீணாகி போயிருந்தது.
 
முதலில் வருவிற்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர், “வரு, என்னம்மா ஆச்சு? சரணை கேட்டாலும் வாயையே திறக்க மாட்டறான். உங்களுக்குள்ள என்னமா பிரச்சனை?” என்று தவிப்புடன் கேட்டார்.
 
அவனே இதை வீட்டில் சொல்லாத போது அவள் மட்டும் எப்படி சொல்வாள். அவர்களை காயப்படுத்த வேண்டாமென்று தான் கணவன் இதை மறைத்திருப்பான் என்று சரியாக அனுமானித்தவள் ஒன்றும் பேசாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
 
மருமகளிடம் வெவ்வேறு விதமாக கேட்டு பார்த்து ஓய்ந்த கனி, அவளது சோர்ந்த முகத்தை கருத்தில் கொண்டு முதலில் அவளை சாப்பிட வைக்க எண்ணினார். அங்கே வீணான உணவை எடுத்து கொட்டி விட்டு, புதிதாக உணவு தயார் செய்து எடுத்து வந்தார்.
 
அவள் வேண்டாம் என்று மறுத்தும் கனி அவளுக்கு உணவை ஊட்ட, ஒவ்வொரு கவளத்திற்கு இடையேயும் “சரண் சாப்பிட்டானா அத்தை.. ஆபீஸ் போயிருக்கானா.. நைட் தூங்கினானா.. கைல அடிப்பட்டுச்சே, ஹாஸ்பிடல் போனானா.. அவனுக்கு என்னை பிடிக்கலல.. நான் வேண்டாம்ல அவனுக்கு..” என்று கணவனை பற்றியே பிதற்றிக் கொண்டிருந்தவளை எப்படியோ சமாதானப்படுத்தி உணவை ஊட்டிவிட்டவர், அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வந்து அவள் எதிரே அமர்ந்தார்.
 
மருமகளை தன் மடியில் படுக்க வைத்து, அவள் தலையை வருடி கொடுத்துக் கொண்டே “என்னாச்சும்மா வரு.. எதாவது சொன்னா தான தெரியும். அவன் அங்கயே தங்கிடுற அளவுக்கு அப்படி என்னம்மா நடந்துச்சு?” என்று நடந்ததை அறிய மீண்டும் அவளிடம் கேள்வி எழுப்பினார்.
 
வருவோ எதற்கும் வாய் திறக்காமல் அமைதியாக இருக்க.. “நீ அத்தை கிட்ட சொல்லு. நான் அவனை கேக்கறேன்” என்று அனைத்து விதத்திலும் முயற்சி செய்து தோற்றவர், இனி இவளிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து, மாலை மகனிடம் மீண்டும் பேசி பார்க்கலாம் என்ற தீர்மானத்துடன், வருவிற்கு இரவு உணவும் தயார் செய்து வைத்துவிட்டே தன் வேலையை பார்க்க சென்றார்.
 
இரவு, நேரம் தாழ்ந்தே வீட்டிற்கு வந்த சரணை வந்ததும் வராததுமாக நிறுத்தி, என்ன பிரச்சனை என்று சொல், எதற்கும் பிரிவு தீர்வாகாது, அனைத்தையும் பேசி தீர்த்து கொள், இப்போதே வீட்டிற்கு செல் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் அவன் பிடி கொடுப்பதாக இல்லை.
 
தாயையும் எதிர்பார்க்காது தானே உணவை எடுத்து போட்டு சாப்பிட்டவன் தன் பாய், தலையணையுடன் மாடியில் படுப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிட, இதிலும் தோல்வியே கண்டார்.
 
அனைத்து கதவுகளும் மூடிவிட்டது போல் உணர்ந்த கனி, தன் பர்சில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு மகளிடம் வந்தவர் “சுசி.. இது அண்ணன் நம்பர்.. எதோ வாட்ஸாப்ல ஃபோன் போட்டா காசில்லாம பேசிக்கலாம்னு சொல்லுச்சு. கொஞ்சம் போட்டுக் கொடேன்” அண்ணன் வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஓர் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் அவளிடம் அக்காகிதத்தை நீட்டினார்.
 
அவளும் தாய் சொன்னது போல் மாமனின் எண்ணிற்கு அழைத்து தர, அவர் அழைப்பை ஏற்றதும் “அண்ணா.. இங்க என்னென்னமோ நடந்து போச்சு. சரண் ரெண்டு நாளா இங்க தான் இருக்கான். இவனும் எதுவும் சொல்லமாட்டறான். வருவும் வாய் திறக்க மாட்டேங்கிது” என்று விசும்பிக் கொண்டே ஆரம்பித்தவர், நேற்றிலிருந்து நடந்த அனைத்தையும் அழுகையினூடே சொல்லிவிட்டு “நீ வா ண்ணா.. நீ வந்தா தான் எல்லாம் சரியாகும்” என்று அண்ணனை இங்கு அழைத்தார்.
 
விஷயத்தை கேட்டு நெற்றியை நீவிய ரகு, “நீ கவலைபடாத. சின்ன பசங்க சண்டையா தான் இருக்கும். சரி பண்ணிடலாம். நான் கிளம்பி வரேன். நீ பயப்படாம இரு” மனதிற்கு எதுவோ தவறாக பட்டாலும் தங்கையிடம் அதை காட்டி கொள்ளாமல் பேசி வைத்தார்.
 
உடனே ரகு மகளுக்கு அழைக்க, அவள் அலைபேசி அணைக்கப் பட்டிருப்பதாக தகவல் சொல்லவே, இன்னும் பதறிப் போனவர் கிடைத்த விமானத்தில் இந்தியா புறப்பட்டார்.
 
நேற்று போல் இன்றும் அலுவலகத்திற்கு செல்லாத வரு, எதுவும் பிடிக்காது வாழ்வே மாயமாக சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள். இரண்டு நாட்கள் முன்பு வரை தன்னை பாப்பா, பாப்பா என்று ஆராதித்தவன் இந்த இரு தினங்களாக தான் என்ன செய்கிறோம், என்ன சாப்பிட்டோம் என்று கூட கண்டு கொள்ளாமல் இருக்க தொடங்கிவிட்டானே என்று நினைக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
 
ஒவ்வொரு முறை அழைப்பு மணி அலறும் சத்தம் கேட்கும் போதும் கணவனோ என்ற ஆவலோடு கதவை திறந்து பார்க்க, அங்கே பால் கொண்டு வந்து தருபவரையும், செய்தித்தாள் போடும் இளைஞனையும் பார்க்கும் போதெல்லாம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
 
அவனோடு இருந்த நினைவுகளில் மனம் உழன்றுக் கொண்டிருக்க, அப்போது அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்டதும் இம்முறையும் அதே ஆர்வத்துடன் ஓடி சென்று கதவை திறக்க, வாசலில் ரகு நின்றிருந்தார்.
 
“வரு.. எப்படிடா இருக்க?” அவர் மகளை கேட்டுக் கொண்டிருக்க, அவளோ அவனில்லை என்று உதட்டை பிதுக்கியவள் தந்தையை சிறிதும் கண்டு கொள்ளாது அமைதியாக சோபாவில் சென்று அமர்ந்துவிட்டாள்.
 
தானே உள்ளே வந்தவர் “வருமா.. என்னம்மா ஆச்சு? அப்பா மேல இன்னும் கோபம் போகலையா?” மகளின் கன்னம் தாங்கி கேட்க, நீர் குளம் கட்டியிருந்த கண்களோடு இல்லையென்று தலையாட்டினாள்.
 
“அப்புறம் ஏன்டா அப்பாவை பார்த்ததும் ஒரு வார்த்தை கூட பேசாம உள்ள வந்துட்ட?” என்று அவர் மகளை கேட்டது தான் தாமதம், இரு நாட்களாக அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த வலியில் அழுதுக் கொண்டே ரகுவரனை கட்டிக் கொண்டவள்
 
“டாடி.. சரண் போய்ட்டான் டாடி.. அவனுக்கு என்னை பிடிக்கலையாம்.. என்னை அவன் லவ் பண்ணலையாம் டாடி. என்னை திட்டிட்டு போய்ட்டான்” தந்தையின் மார்பில் முகம் புதைத்து கதறிவிட்டாள்.
 
வரு இதுபோல் அழுது ரகு பார்த்ததே இல்லை. சொல்லபோனால் இதுவரை அவள் எதற்கும் கலங்கியதே இல்லை. ரகுவும் மைதிலியுமே தங்கள் மக்களை ஒரு குறையும் இல்லாமலே வளர்த்திருக்க, அதிலும் எதையும் எந்தவொரு பயமுமின்றி கையாளும் வருவின் குணத்திற்கு, அவளுக்கு அழ தெரியுமா என்று தான் ரகு முதலில் பார்த்தார். 
 
அதுவும் வலியில் துடித்து அழும் மகளின் கண்ணீரை கண்டவரது நெஞ்சில் குருதி வழிய, அவளை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்துவிட்டவர் “சரண் ஏன்ம்மா போனான்? கனி எல்லாம் சொன்னா மா. உனக்கும் சரணுக்கும் என்னமா பிரச்சனை? இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒற்றுமையா தானே இருந்தீங்க” என்று அவளை விசாரித்ததும் வர்ணிகாவிற்கு இப்போது முகமே மாறிபோனது.
 
“அது டேட்.. ம..னு.. மனு..” என்று வார்த்தைகள் வராது அவள் தயங்கி நிறுத்த
 
“மனுவை கல்யாணத்தன்னைக்கு நீதான் அனுப்பி வச்சேனு சரணுக்கு தெரிஞ்சிடுச்சா?” என்றார் மகளை கூர்மையாக பார்த்து.
 
அதில் வரு தந்தையை அதிர்ந்துப் பார்க்க, “என் பையன் என்ன பண்ணுவான். என் பொண்ணால என்ன பண்ண முடியும்னு எனக்கு நல்லாவே தெரியும் வரு. மனு மெசேஜ் பார்த்ததும், அவன் லவ் பண்றது உனக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு, அதான் அவனை அனுப்பி வச்சிருக்கேனு புரிஞ்சது மா” என்று நடந்ததை நேரில் பார்த்தவர் போல் சொல்லும் தன் தந்தையை வியந்துப் பார்த்தாள் வர்ணிகா.
 
“இப்போ அது எப்படிம்மா சரணுக்கு தெரிஞ்சது. நீ தான் சொன்னியா?” என்றும் கேட்க, இல்லையென்று தலையாட்டிய வரு நடந்த அனைத்தையும் கூறினாள்.
 
அதை கேட்ட ரகு “ஹி இஸ் சச் ஆன் இடியட்” என்று மகனை எண்ணி பற்களை நறநறத்தார்.
 
அதோடு தன் கைபேசியை எடுத்து மகனுக்கு அழைத்தவர் “ஹவ் கம் யு பிகேம் சச் எ செல்பிஷ் மனு? உன் தங்கச்சிகிட்ட பணம் கேட்டு அவளை டிரபிள் பண்ணிருக்க. இங்க உன்னால என்னலாம் நடந்திடுச்சுனு தெரியுமா. உன் தங்கச்சி வாழ்க்கையையே அழிச்சிட்டியேடா. இப்போ என்ன, நீ திரும்ப நம்ப பிசினஸ்ல சேரனும். நம்ப வீட்டுலயும் இருக்கணும். அதானே. தாராளமா வா. உன் ப்ராப்ளம் சால்வ்ட். இப்ப நம்ம வரு லைஃப்க்கு என்ன பண்ற போற. இடியட்.. எதையும் யோசிச்சி செய்ய மாட்டியா” என்று மகனிடம் கோபமாக பொரிந்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.
 
ரகு மகளை திரும்பி பார்க்க அவள் கவலையே வடிவாக அமர்ந்திருந்தாள்.
 
“இது மாதிரி ப்ராப்ளம் வர கூடாதுனு தான் அன்னைக்கு சரண் மனு கூட எந்த கான்டாக்ட்டும் வச்சிக்க கூடாதுனு கண்டிஷன் போட்டப்போ நீ எதையும் சொல்றதுக்கு முன்னாடி நான் பதில் சொன்னேன். அப்படியிருந்தும் என்னையும் மதிக்காம, சரணையும் மதிக்காம மனுகிட்ட பேசினியா. நான் என் பசங்கள நல்லா தானே வளர்த்தேன். நான் என் அப்பாவை ஏமாத்தினேன். என் பசங்க என்னை ஏமாத்திட்டாங்க” கோபமாக ஆரம்பித்தவர் விரக்தியாக முடித்தார்.
 
அதற்கு இல்லையென்று தலையாட்டியவள் “சரணோட நேச்சர் தெரிஞ்சி தான் அவன்கிட்ட இத சொல்லனும்னு நிறைய டைம் திங்க் பண்ணி, லேட்டர் ஐ டிராப்ட் தட் ஐடியா. எனக்கு சரணும் வேணும், மனுவும் வேணும். யாராவது ஒருத்தரை என்னால எப்படி டேட் சூஸ் பண்ணமுடியும்” என்று ஆற்றாமையாக தந்தையை பார்த்தாள்.
 
“சூஸ் பண்ணி தான் ஆகணும். நீ செஞ்ச காரியத்தால உன்னால யாராவது ஒருத்தரை தான் சூஸ் பண்ணமுடியும். அது சரணா இருக்கணும்னு தான் நான் விரும்புறேன். யு நோ, வாட் யு டிட் வாஸ் அன் அன்ஃபர்கெட்டபிள் மிஸ்டேக். ஒரு கல்யாணத்தை நிறுத்துறது அவ்ளோ ஈஸினு நினைச்சியா. ஒரு பொண்ணோட வாழ்க்கை. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை யார் கட்டிப்பா. நல்லவேளை பார்த்திபன் தானே வந்து சுசியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். இல்ல, குடும்பத்தோட தற்கொலை தான் பண்ணிக்கணும். பார்த்திபன் சுசியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ சரண் அவர் காலுலயே விழுந்துட்டான்” மகளிடம் ஆவேசமாக சத்தமிட்டார் ரகு.
 
தந்தை இறுதியாக சொன்னதை கேட்ட வரு, அன்று உணராத தன் குடும்பத்தின் வேதனையை இன்று உணர்ந்தாள். அதுவும் தன்னவன் பார்த்திபனிடம் மண்டியிட்டிருக்கிறான் என்று கேட்ட நொடி அவனுக்கு தான் செய்த துரோகம் புரிந்தது.
 
“கிளம்பு வரு.. நாம சரண்கிட்ட பேசலாம்” ரகுவரன் மகளை அழைக்க “இல்ல டேட், நான் வரல. நாம லண்டன் கிளம்பலாம்” கண்களில் உறுதியோடு சொன்னாள்.
 
“வரு, என்ன பேசற”
 
“என் சரண் அன்னைக்கு அழுதான் டேட். அதை பார்த்து எனக்குள்ள என்னென்னமோ பண்ணிடுச்சு. அதான், நாம செஞ்ச தப்புக்கு இந்த கல்யாணம் பிராயசித்தமா இருக்கட்டும்னு நீங்க சொன்னப்போ நான் அதை அக்ஸ்செப்ட் பண்ணிக்கிட்டேன். இப்பவும் என்னால என் சரண் அழுதான். என் மேல கோவப்பட்டான் தான். ஹவ்எவர், ஐ குட் சீ தி பெயின் இன் ஹிஸ் ஐஸ். திரும்ப அவன் முன்னாடி நின்னு அவனை கஷ்டப்படுத்த மாட்டேன்”
 
“வரு மா”
 
“நேத்தே ஜாபை ரிசைன் பண்ணிட்டேன். இப்போ என் சரண், பார்த்தி அண்ணா காலுல விழுந்தான்னு சொன்னதுக்கு அப்புறம் என் டெசிஷன் கரெக்ட்னு புரிஞ்சது. ஆபீஸ்ல காம்பென்சேஷன் கேக்கறாங்க. அத மட்டும் நீங்க கொடுத்துட்டீங்கன்னா நாம கிளம்பிடலாம் டேட்” கண்ணீரை துடைத்துக் கொண்டு திடமாக சொன்னாள்.
 
இதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாத ரகு, மகள் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தவர் விமானநிலையத்திற்கு செல்லும் முன் தங்கையின் வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றார்.
தடம் மாறி சரணின் வீடிருக்கும் வழியில் வண்டி பயணித்துக் கொண்டிருக்க, தந்தையை குழப்பமாக திரும்பி பார்த்தாள் வரு.
 
“நான் பொண்ண பெத்தவன் டா. நீ சொன்னேனு உன்னை அப்படியே கூட்டிட்டு போறது முறை கிடையாது. சரண்கிட்ட பேசி பார்ப்போம்” என்றார்.
 
சரணின் வீடு வந்ததும் இறங்கிய ரகு குனிந்து மகளை பார்க்க, கைகளை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் “இல்ல டேட், நான் வரல. நீங்க போயிட்டு வாங்க” என்றுவிட்டாள்.
 
அப்போதே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்த சரண் தன்னை சுத்தம் செய்துக் கொண்டு உடை மாற்றியிருந்தான். ரகுவரன் உள்ளே வருவதை பார்த்ததும், கனி “அண்ணா..” என்று அழுதுக் கொண்டே ஓட, தாயை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான் சரண்.
 
மாமனை கண்டதும் அவன் முகம் இறுகி நிற்க “சரண், வரு பண்ணது தப்பு இல்லனு சொல்லமாட்டேன். அவ அந்த விஷயத்தோட வீரியம் தெரியாம பண்ணிட்டா..” ரகு சரணிடம் மகளுக்காக பேச துவங்க
 
அவரை கை நீட்டி தடுத்தவன் “எனக்கு வருனு யாரையும் தெரியாது” என்றான்.
 
“என்னப்பா இப்படி பேசற. என் பொண்ணுங்கிறத தாண்டி இப்ப அவ உன் பொண்டாட்டி. என்னை விட உனக்கு தான்ப்பா அவ மேல அதிக உரிமை இருக்கு” ஒரு தந்தையாக மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவனுக்கு நிதானமாக எடுத்து சொன்னார்.
 
“பொண்டாட்டி..” என்று பல்லை கடித்தவன் “உங்க பொண்ணு என்னை ஏமாத்தி இருக்கா. எனக்கு மட்டுமில்ல, என் குடும்பத்துக்கே துரோகம் பண்ணிருக்கா. அவ செஞ்சத, இன்னும் என் வீட்டு ஆளுங்க கிட்ட கூட சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கேன்” என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.
 
மகன் சொன்னதை கேட்டு பதறிவிட்ட கனி ‘மகனுக்கு தெரிந்துவிட்டதா’ என்று அதிர்ந்து அண்ணனை பார்க்க, அவரும் ஆமென்று கண்களை மூடி திறந்தார்.
 
அண்ணனுக்கும் தங்கைக்குமான பேச்சுகளற்ற விழி மொழியாயினும் சரண் அதை கவனித்தேவிட்டான்.
 
“ச்சீ..” என்று தலையில் அடித்துக் கொண்டவன் “அப்பா, பையன், பொண்ணுன்னு குடும்பமே பித்தலாட்டக்காரங்களா இருக்கீங்க. இதுல உங்க பாசத்தை முன்ன நிறுத்தி எங்க அம்மாவையும் துணை போக வச்சிருக்கீங்க. அவங்களும் பெத்த பொண்ணோட வாழ்க்கை பாழா போயிருக்குமேனும் பார்க்காம உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க” என்று ஆதங்கத்தில் கத்தினான்.
 
அதை கேட்ட கனி திருதிருவென விழிக்க, சுசி தாயையும் தம்பியையும் புரியாமல் பார்த்திருந்தாள். இதில் பாலனும் திகைப்பார் என்று பார்த்தால் அவரோ தானே மகனுக்கு முன் வந்து நின்றார்.
 
ஆம், பாலன் என்றைக்கு கனிக்கு பின் இல்லாமல் இருந்திருக்கிறார். மனைவியை சொன்னதும் பொங்கி எழுந்தவர் “சரண், மச்சான் கல்யாணம் முடிஞ்ச மூணாம் நாளே எல்லாத்தையும் சொல்லி, மருமக பண்ண தப்புக்கு மன்னிப்பும் கேட்டார். நான் தான் நீ கோவப்படுவனு உனக்கு தெரிய வேண்டாம்னு சொன்னேன்” என்று குற்றத்தையும் ஒத்து கொண்டார்.
 
தந்தை பேசியதை கேட்ட சரணுக்கு அழகிய குருவி கூடாய் இருந்த தன் குடும்பத்தை இவர்களது குடும்பம் எப்படியெல்லாம் ஆட்டி வைத்திருக்கிறது என்று ரகுவின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் ஆத்திரம் கிளம்பியது. அதேநேரம் “இங்க என்னம்மா நடக்குது? என்ன, என் வாழ்க்கை பாழாகியிருக்கும். அம்மாவும், அப்பாவும் எத சரண் நம்மகிட்ட இருந்து மறைச்சாங்க” என்று சுசி பதைபதைத்து கேட்க..
 
சற்றும் தாமதிக்காது அக்காவை அணைத்துக் கொண்டவன் “என்னை மன்னிச்சிடு சுசி. எனக்கு தெரியாமலே உன் வாழ்கையை அழிக்க பார்த்தவளை கல்யாணம் பண்ணி, அவளோட ஒரு வருஷம் வாழ்ந்தும் இருக்கேனே. எல்லாத்துக்கும் அவ தான் சுசி காரணம்..” என்று கண்ணீரோடு அனைத்தும் சொல்லியிருந்தான்.
 
அதை கேட்ட சுசி அதிர்ச்சியில் வாயடைத்து போக, கனியும் பாலனும் கவலையாக நின்றிருந்தனர். இனி சரணிடம் பேசி பயனில்லை என்பதை புரிந்த ரகு, கலங்கிய மனதோடு தங்கையிடம் வந்து “கனி, வரு கார்ல தான் இருக்கா. லண்டனுக்கே திரும்ப போயிடலாம்னு ஒத்த காலுல நிக்கறா மா” என்று மகளின் வாழ்க்கையை குறித்த வேதனையில் சொல்ல, அதை கேட்ட சரணுக்கும் மனதை சுருக்கென்று தைக்க தான் செய்தது.
 
இருந்தும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுக்கமாக நிற்க, “வரு வெளில தான் இருக்கா?” என்று கேட்ட கனி, மருமகளை அழைத்து வர வாசலை நோக்கி ஓட
 
“அம்மா” கணீரென ஒற்றை குரல் கொடுத்தான் சரண். அதில் வாய் பொத்தி அழுதுக் கொண்டே தான் இருந்த இடத்திலே மீண்டும் வந்து அமைதியாக நின்றுக் கொண்டார் கனி.
 
தங்கையின் செயலை ரகு அதிர்ந்து பார்க்க, கண்களில் கர்வத்தோடு மாமனாரை பார்த்தவன் “இனி எங்க அம்மா இந்த விஷயத்துல உங்களுக்கு துணையா நிற்க மாட்டாங்க. அவங்களுக்கு தெரியும், அப்படி அவங்க தலையிட்டா உங்க பொண்ணுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கும் நான் இருக்கமாட்டேன்னு. உங்க பொண்ணு எங்க போனாலும் எனக்கு அதப்பத்தி கவலை இல்ல. ஏன்னா, எனக்கு அவ வேண்டாம்” என்று ஆணித்தரமாக சரண் சொல்ல, கனி தன் அண்ணனை பார்க்கமுடியாமல் தலை குனிந்துக் கொண்டார்.
 
மகளின் வாழ்க்கை விஷயத்தில் தோற்று போன தந்தையாக கலங்கிய கண்களோடு அவ்வீட்டை விட்டு வெளியேறினார் ரகுவரன்.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 4 months ago
Posts: 55
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 4 months ago
Posts: 55
Topic starter  
அத்தியாயம் - 17
 
தன் துணிமணிகளை எடுக்க அலுவலகத்திலிருந்து அவர்கள் இருந்த வீட்டிற்கு சென்றிருந்தான் சரண்.
 
அங்கே அவர்கள் அறையில் அவள் உடமையென்று எதுவுமில்லை. அனைத்தையும் எடுத்துக் கொண்டே கிளம்பியிருந்தவள், தன் கரடி பொம்மையை மட்டும் விட்டுவிட்டு சென்று இருந்தாள்.
 
அவனில்லாது இனி தனக்கு நிம்மதியும் கிடையாது, நிம்மதியான உறக்கமும் கிடையாது என்பதை உணர்ந்தே விட்டுவிட்டு சென்றிருந்தாள் வரு.
 
அவனுக்கோ, அவளது உடமைகளற்ற அலமாரியை பார்த்த போது, சில தினங்கள் வேடந்தாங்கல் வரும் வெளிநாட்டு பறவையை போல், தன் வாழ்வில் வந்து அனைத்தையும் மாற்றி அமைத்துவிட்டு பறந்துவிட்டாள் என்று மனது பிசைந்தது. அங்கிருந்த பொம்மையை எடுத்து அணைத்துக் கொண்டவன் தன் பூனை குட்டியின் ஸ்பரிசத்தை அதில் உணர்ந்தான்.
 
சேயாய் அவனிடம் உணவு கேட்கும் நேரம், பாவையாய் தன்னை சீண்டி இன்பம் கொடுத்து இன்பத்தை பெறும் நேரம், தோழியாய் தன் முன்னேற்றத்திற்கு யோசித்து அறிவுரை கூறும் நேரம் என்று அவளுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவன் கண்முன் வந்து கண்கள் கலங்கியது.
 
அன்பை காட்டி தன்னை வதைக்கும் சக்தி அவள் ஒருத்திக்கு மட்டுமே என்று வெற்று புன்னைகையை சிந்திக் கொண்டே கண்ணீரை துடைத்தவன், தன் உடமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
 
அன்றிரவு வீட்டிற்கு வந்த சரண் யாருடனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இரவு உணவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு அறைக்குள் வந்தவன், கரத்தை தலையணையாக்கி தரையில் படுத்து, விட்டத்தை வெறித்திருந்தான். அவள் கொடுத்து விட்டு போன வெறுமையில் மனமது உழல, கண்களிலிருந்து கண்ணீர் தாமாக வழிந்துக் கொண்டிருந்தது.
 
இதற்கு மேலும் விட்டால், தன்னை கொன்று திண்ணாமல் விடமாட்டாள் என்று வெளியே எழுந்து வந்தால், அங்கே தாயிடம் பாலை குடித்துவிட்டு, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் உறக்கத்திலும் சிரித்துக் கொண்டே உறங்கியிருந்தான் அவனது சேம்ப்.
 
இது போல் குழந்தையாகவே இருந்து விட்டிருந்தால், கவலைகள் ஏது, வலிகள் ஏது, வேதனைகள் ஏது, ஏமாற்றங்கள் தான் ஏது என்று எண்ணிக் கொண்டவன், பூ பந்து போல் குழந்தையை கையில் ஏந்தி வந்து கட்டிலில் படுக்க வைத்து, தானும் அதற்கு வலிக்காதவாறு அணைத்து படுத்துக் கொண்டான்.
 
சிறிது நேரத்தில் அறையின் உள்ளே வந்தாள் சுசி. அங்கே சரண் நிலவனை அணைத்தாற்போல் படுத்திருக்க, அவனின் கண்ணிலிருந்து கண்ணீர் இறங்கி மூக்கு வழியாக வழிந்திருந்தது. அதை துடைக்கவும் தோன்றாமல் கண் மூடி படுத்திருக்கும் தம்பியை கண்டு தானும் கலங்கிப் போனாள்.
 
அவனருகில் சென்று தம்பியின் தலையை வருடி கொடுக்க, அந்த தொடுதலில் திரும்பி பார்த்த சரண், அக்கா நின்றிருப்பதை கண்டு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தான்.
 
அவளும் அவனருகில் அமர்ந்தவள் “மாமா வருவை கூட்டிட்டு வந்தாரு தான. அது மேல இவ்ளோ அன்பை வச்சிக்கிட்டு எதுக்கு ஊருக்கு போக விட்ட” என்று கேட்க, அமைதியாக மெத்தையை பார்த்திருந்தான்.
 
“உங்களை பொறுத்தவரைக்கும் ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருந்தீங்க. அப்புறம் எதுக்கு எப்பவோ நின்ன கல்யாணத்தை மனசுல போட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி, வருவையும் கஷ்டப்படுத்தற”
 
“அவளுக்கு தெரியும் என் அக்கா எனக்கு அம்மா மாதிரின்னு, அப்படியிருந்தும் ஏமாத்திட்டா. நம்ப குடும்பத்துக்கும் துரோகம் பண்ணிட்டா” குழந்தை அருகில் உறங்குவதால் தாழ்ந்த குரலில் சொன்னாலும் அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.
 
“வரு அத செஞ்சப்போ அதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறோம்னு தெரியாது சரண். தான் அண்ணன் வாழ்க்கையை காப்பாத்த அப்படி செஞ்சிடுச்சு. உன் பொண்டாட்டியா ஆனதுல இருந்து உன் மேலயும் நம்ப குடும்பத்து மேலயும் அன்பா தான இருந்துச்சு” தம்பிக்கு புரியவைக்க முயற்சி செய்தாள் சுசி.
 
அவனோ “ஒரு வருஷத்துக்கு மேல ஒண்ணா தான இருந்தோம், சொல்லனும்னு அவளுக்கு தோணலல. என் அக்கா கல்யாணத்தை நிறுத்தினவ கூட வாழுறது எனக்கு எவ்ளோ பெரிய தண்டனைனு கூட அவ புரிஞ்சிக்கல” என்று விடாக்கண்டனாக மனைவியின் தவறை எடுத்து கூறினான்.
 
“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை நேசிக்க ஆரம்பிச்சிட்டு இருக்கும். அதான், உன்னை இழந்திட கூடாதுனு சொல்லிருக்காது. சரி, இத வரு உங்கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?”
 
“இப்போ செஞ்சத அப்போ செஞ்சிருப்பேன்” என்றான் நிர்தாட்சயண்யமாய்.
 
சுசி தம்பியை ஆற்றாமையாக பார்க்க “வலிக்குது சுசி. இனி அவ தான்னு வாழ்ந்திட்டு இருந்தப்போ, அவ கொடுத்த வலி பச்சை மரத்துல ஆணி அடிச்ச மாதிரி ஆழமா பதிஞ்சிடுச்சு” என்று கண்கள் கலங்கினான்.
 
அவன் கண்ணீரை துடைத்தவள், அவனை மடியில் படுக்க வைத்து “தப்பு பண்ணாத மனுஷங்களே இல்ல சரண். என் வாழ்க்கை கெட்டிருந்தா, நீ கோவப்படுறதுல அர்த்தம் இருக்கு. நான் இப்போ நல்லா தான இருக்கேன். மனோ மாமாவை கட்டியிருந்தாலும் உங்கள எல்லாம் பிரிஞ்சி தான் இருந்திருக்கணும். அந்த வாழ்க்கை எனக்கு சிறப்பா இருந்திருக்குமானும் தெரியாது. இப்போ உங்க மாமா என்னையும் நம்ப நிலவனையும் உள்ளங்கையில வச்சி தாங்கறார்” என்று தம்பியின் தலை கோதிக் கொண்டே சொன்னவள்,
 
“என்னை பத்தி யோசிச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. எனக்கு நீயும் வருவும் சந்தோஷமா இருக்கணும். வருவுக்கு ஃபோன் போட்டு பேசு. அத இங்க வரச்சொல்லு. என் மனசு சொல்லுது, அது உன் வார்த்தைக்காக தான் காத்துட்டு இருக்கும்” என்றும் அறிவுறித்தினாள்.
 
முதலில் தன் கண்ணீரை ஒன்றிரண்டு முறை துடைத்தவன் அக்கா பேசுவதை அமைதியாக கேட்டிருந்தது போல் தான் இருந்தது. பேச்சு முடிந்து வெகுநேரமாகியும் தம்பியிடம் இருந்து எந்த பதிலும் வராதிருக்க, அவனை குனிந்து பார்த்தால் நிலவனின் பிஞ்சு விரல்களை பிடித்துக் கொண்டு உறங்கியிருந்தான் சரண்.
 
அவனது சோர்ந்த முகத்தை பார்த்தவள், இப்படி உறக்கமில்லாமல் தவிக்கிறானே என்று கலங்கி விட்டாள். கண்ணீரை துடைத்துக் கொண்டே நிமிர, வாசலில் கனி புடவை முந்தானையில் வாய் பொத்தி அழுதுக் கொண்டு நின்றிருந்தார்.
 
தம்பியின் உறக்கம் கலையாது அவனை தலையணையில் படுக்க வைத்தவள் வெளியே வந்து கதவை மெதுவாக சாற்றினாள்.
 
அந்த சிறிய வீட்டில், வெளியே பேசினால் உள்ளே கேட்கும். அதனால் தாயை கையோடு இழுத்துக் கொண்டு அவர்கள் சிறு வயது முதல் வளர்ந்த மேகலா அத்தை வீட்டிற்கு வந்தாள் சுசி.
 
“இப்போ உனக்கு சந்தோஷமா? அண்ணன் அண்ணன்னு சொல்லி என் தம்பி வாழ்க்கையை ஒரே அடியா அழிச்சிட்ட” என்று தாயிடம் சீறினாள்.
 
“ஹேய் சுசி, என்ன பேசுற.. அவ உன் அம்மாடி” என்று குறுக்கே வந்தார் மேகலா.
 
“நீங்க எங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க அத்தை. என் தம்பி படற எல்லா கஷ்டத்துக்கும் இந்த பொம்பளை தான் காரணம். சரியான வில்லி அத்தை இவங்க. என் கல்யாணம் நின்னு போச்சு தான். அதான் நிலவன் அப்பா வந்து பேசி எப்படியோ என் கல்யாணம் தான் நடந்திடுச்சே. அதோட விடவேண்டியது தான. சீரியல் வில்லி மாதிரி என்னென்னமோ பண்ணி சரணுக்கும் வருவுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சிட்டாங்க” மகள் சத்தமிட இப்போதும் கனி வாய் பொத்தி அழுதிருந்தார்.
 
“ஏம்மா, நான் தெரியாம தான் கேக்குறேன். உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் மட்டும் தான் கூட பொறந்த பாசமெல்லாம் இருக்கணுமா.. எங்களுக்கெல்லாம் இருக்க கூடாதா.. உன்னால என் தம்பி தான் கஷ்டப்படுறான். வரு கூட வாழவும் முடியுமா, அவளை மன்னிக்கவும் முடியாம தவிக்கிறான். அந்த பொண்ணு வரு மட்டும் என்ன பண்ணிடுச்சு. அவ அண்ணனுக்காக தான இந்த கல்யாணத்தை நிறுத்துச்சு. இன்னைக்கு அது அங்கயும் இவன் இங்கயும் தவிச்சிட்டு இருக்காங்க”
 
“மனோ மாமாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கானு கேக்காம கல்யாணம் முடிவு பண்ணது உன் தப்பு, மாமா தப்பு. அதுக்கு அந்த சின்னஞ்சிறுசுங்க தண்டனையை அனுபவிக்கணுமா?” மகள் கேட்கும் எதற்கும் பதிலில்லாமல் தலை குனிந்தார் கனி.
 
“மாமா வந்து உண்மையை சொன்னப்போ மட்டும் புருஷனும் பொண்டாட்டியும் தியாகிங்க மாதிரி மன்னிச்சி விட்டீங்கல, அத பக்குவமா சரண்கிட்ட சொல்லியிருக்கணும்னு தோணலயா. என்கிட்டயாவது சொல்லியிருக்கலாம். நான் அவனுக்கு புரிய வச்சிருப்பேன். எதையும் செய்யல. இப்போ மட்டும் எதுக்கு நீலி கண்ணீர் விட்டுட்டு இருக்க. கல்யாணம் பண்ணி வைக்க டிராமா பண்ணல, இப்போ டிராமா பண்ணி வருவை இங்க வர வை. என் தம்பியோட சேர்த்து வை. அத விட்டுட்டு அழுது கடுப்பேத்தாத” என்று மனதாராமல் தாயை திட்டி தீர்த்தவள்,
 
“நான் வரேன் அத்தை, என் பையன் முழிச்சிக்குவான்” என்று அந்த வீட்டின் வாசலுக்கு தான் சென்றிருப்பாள், சட்டென எதுவோ தோன்றியவளாக திரும்பி “என் தம்பி தூங்கறான். அவன் முன்னாடி வந்து அழுது பாரு” என்றுவிட்டு விறுவிறுவென தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
 
இங்கே வரு யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. உணவு உண்பதற்கு கூட வெளியே வராமல் எப்போதும் தன் அறையிலேயே முடங்கி கிடந்தாள்.
 
தந்தை அழைத்து பிரச்சனையை சொல்லி அவனை திட்டியதும் தங்கையை காண மித்ராவுடன் லண்டன் கிளம்பி வந்துவிட்டான் மனோஜ். அண்ணனை பார்த்ததும் கதறிவிட்டாள் வரு.
 
படிக்கும் காலத்திலிருந்தே தந்தையுடன் அலுவலகம் சென்று சிங்கம் போல் தொழிலை நடத்தியவள், இன்று எதிலும் நாட்டமில்லாமல் இருப்பதை கண்டு தான் செய்த தவறு தன் தங்கையின் வாழ்க்கையை சூறையாடி விட்டதே என்று மனம் வெம்பினான். மித்ராவிடம், தங்கையிடம் பேச்சு கொடுத்து அவள் கவலை கொள்ளாமல் பார்த்துக் கொள்ள சொல்லியிருந்தான்.
 
மித்ரா தானே வருவிடம் பேச்சு கொடுத்தாலும் தலையசைப்பிலேயே பதிலளித்து விட்டு வாசலை பார்க்கும் போது அவளாலும் அதற்கு மேல் அங்கே இருக்கமுடியுமா?
 
இதற்கு ஒரே தீர்வு சென்னை சென்று சரணை சந்தித்து தன் தங்கையின் வாழ்க்கைக்காக மன்னிப்பு கேட்பதே என்பதை புரிந்த மனோஜ் இந்தியா வந்தான்.
 
மனோஜின் கெட்ட நேரமோ என்னமோ அன்று சனிக்கிழமையாக போய்விட, சரண் வீட்டிலேயே இருந்தான். கனியும் பாலனும் தத்தம் வேலைகளுக்கு சென்று விட, சுசி மட்டுமே அவனுடன் இருந்தாள். வீட்டிற்கு வந்த மனோஜை பார்த்த சரணுக்கு புஜங்கள் விடைக்க, இரத்தம் கொதிக்க, கண்கள் சிவப்பு வரிகளை கொண்டது.
 
“அப்பாவுக்கும் பையனுக்கும் வேற வேலையே இல்லையா, எதுக்கு சும்மா சும்மா எங்க வீட்டு வாசற்படியை மிதிக்கறீங்க?” என்று சரண் அலட்சியமாக கேட்டான்.
 
அதை மனோஜ் அவமானமாக உணர்ந்தாலும் தங்கையின் வாழ்க்கையே முதன்மை என்பதை புரிந்து “வரு பாவம் சரண். என்மேல இருக்குற பாசத்துல தான் நான் மித்துவ லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் அனுப்பி வச்சிட்டா. ஷி லவ்ஸ் யு எ லாட். உன்னை ரொம்ப மிஸ் பண்றா. எதோ மாதிரி எப்பவும் ரூம்லயே இருக்கா” என்று தங்கையின் நிலையை அவனுக்கு புரிய வைக்க முயன்றான்.
 
அதை கேட்ட சரணுக்கும் தன்னவளை எண்ணி வேதனையாக தான் இருந்தது. நடையில் தளர்வு ஏற்பட, மனோஜிடம் சென்றான். வந்தவனை அமர சொல்வான் என்று சுசி எதிர்பார்த்திருக்க, அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் மனோஜ் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சரண்.
 
அதை கண்டு அதிர்ந்துவிட்ட சுசி “சரண்” என்று குரல் கொடுக்க, அடி வாங்கிய மனோஜும் தன்னுள் பொங்கி எழுந்த கோபத்தை தன் தங்கையின் வாழ்க்கையை எண்ணி கட்டுப்படுத்தினான்.
 
எதை பற்றியும் கவலை கொள்ளாத சரண் “இது உன் தங்கச்சி பத்தி பேச வந்ததுக்கு இல்ல. என் அக்காவை மணமேடை வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போனதுக்கு. அவ பேச்சை கேட்டு விட்டுட்டு போனவனுக்கே இந்த அடினா, அவளுக்கு என் வாழ்க்கைல இடம் இருக்கும்னு நினைக்கிற. மரியாதையா வெளிய போயிடு” என்று வாசலை காண்பித்தான்.
 
மனோஜ் குனிந்த தலையாக வீட்டை விட்டு வெளியேற, சரண் சேம்பை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
 
“மாமா.. மனோ மாமா” மனோஜிற்கு பின்னால் ஓடி வந்த சுசி மூச்சிரைக்க நிற்க..
 
குரல் கேட்டு திரும்பியவன் “சுசி..” என்றான். அவனுக்கு அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் போக, தரையை பார்த்துக் கொண்டு “ஐ ஆம் சாரி சுசி.. நான் உனக்கு பண்ணது ரொம்ப பெரிய தப்பு. ஆனா, நம்ம மேரேஜ் டேட் நெருங்க நெருங்க என்னால மித்துவ மறக்க முடியும்னு தோணல. அதான் போய்ட்டேன். உன் லைஃப்ப ஸ்பாயில் பண்ணிட்டு நாங்க ஹேப்பியா இருக்கணும்லாம் நினைக்கல. ஸ்டில், நானும் மித்துவும் ஒண்ணா இருந்தாலும் மேரேஜ் பண்ணிக்கல. எல்லாரோட சம்மததோட தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” அவளிடம் தன் தவறுக்கு வருந்தினான்.
 
அனைத்தையும் அமைதியாக கேட்டவள் “அந்த கல்யாணம் நின்னது எனக்கும் சந்தோஷம் தான். என்னை பிடிக்காதவரை கட்டிக்கிட்டு கஷ்டப்படறத விட, என்னை விருப்பினவரை கட்டிக்கிட்டு நிம்மதியா இருக்கேன். என் ஹஸ்பெண்ட் என்னை தங்க தாம்பாளத்துல வச்சி தாங்குறார்” என்று கர்வமாக சொல்ல, அவன் தலை அவமானத்தில் தானாய் கவிழ்ந்தது.
 
“நான் சரண் அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன். இது தயவு செஞ்சு வருவுக்கு தெரிய வேண்டாம். ஏற்கனவே அவங்களுக்குள்ள பல பிரச்சனை. என் தம்பி செஞ்சதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்” என்றுவிட்டு வேகமாக வீட்டிற்குள் வந்துவிட்டாள்.
 
அன்றொரு நாள் இரவு சரண் வீட்டிற்கு வந்த நேரம், கனி உணவு பரிமாற, வீட்டிலிருந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அயர்ந்த முகமாய் உள்ளே வந்தவன் அங்கே வர்ணிகாவும் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்தான்.
 
ஒரு மனம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ள துடித்தாலும், இன்னொரு மனம் கோபத்தில் கொந்தளித்தது. வேகமாக அவளிடம் வந்தவன் “நீ எதுக்குடி இங்க வந்த?” என்று அவள் கையை பிடித்திழுத்து வெளியே தள்ள எத்தனிக்க, இதை சற்றும் எதிர்பாராதவளோ அவனது அழுத்தமான இழுப்பிற்கு ஈடு தர முடியாமல் அலங்க மலங்க எழுந்து நின்றாள்.
 
இதை சற்றும் எதிர்பாராத சுசியும் பாலனுமே அதிர்ச்சியில் திகைத்தெழுந்து நின்று விட, “என்ன பண்ற சரண்? மாசமா இருக்குற பொண்ணுகிட்ட முரட்டு தனமா நடந்துக்கிற” என்று வருவின் நலனில் பதறிப் போன கனி தான் மகனை சத்தமிட்டார்.
 
தாய் சொன்னதை கேட்ட நொடி பெரிய இடியே தலையில் இறங்கியது போல் அதிர்ந்து போனவன், வர்ணிகாவை தான் கூர்மையாக நோக்கினான். அவளோ அவன் பார்வையை தாளாது விழி தாழ்த்திக் கொள்ள, தலையில் அடித்துக் கொண்டவன் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
 
நான்கு நாட்களுக்கு முன்..
 
அதுவரை உணவிற்கு கூட அறையை விட்டு வெளியே வராத வர்ணி, மனம் எதையோ தேடுவதையும், உடல் அதற்கு ஒத்துழைக்காமல் முரண்டு பிடிப்பதையும் உணர்ந்தாள். அதனால் இரண்டு நாட்களாக கொஞ்சம் தோட்டத்தில் நடப்பதும், ஓவியம் வரைவதும், எல்லோரோடும் ஒன்றாக உணவு உண்பதும் என்றிருந்தாள். இருந்தும் யாருடனும் ஒரு வார்த்தையும் பேசமாட்டாள்.
 
தட்டில் வைப்பதை அமைதியாக உண்டுவிட்டு எழுந்து செல்கின்றவளுக்கு அன்று நாவிற்கு எதுவும் சுவை தரவில்லை.
 
“மாம், இங்க எனக்கு எதுவும் பிடிக்கல” என்று முகத்தை சுளித்தவள் “சரண் குக் பண்ணி சாப்பிட்டு இருக்கீங்க தானே. எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இது என்னது மாம். இதுக்கா நாம குக்ஸுக்கு அவ்ளோ பௌண்ட்ஸ்ல சேலரி கொடுக்குறோம். ப்ளீஸ், என்னனு பாருங்க” என்று சிடுசிடுத்து விட்டு உணவின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டாள்.
 
செல்லும் மகளையே பார்த்திருந்த மைதிலி, இரவு கணவரிடம் “இதுவரைக்கும் சரணை பத்தி பேசாத வரு, இன்னைக்கு பேசினா ரகு. ஷி இஸ் லாங்கிங் ஃபார் ஹிம். ஐ திங்க் வரு இஸ் ப்ரெக்னெட்” என்றார். அதை கேட்ட ரகுவிற்கு குழப்பத்தில் புருவ முடிச்சுகள் விழுந்தது.
 
தாயும் தந்தையும் வழக்கமான உடல் பரிசோதனைக்கு அழைத்து செல்வது போல் வருவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவளை பரிசோதித்த அவர்களின் குடும்ப மருத்துவர் அவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்தார்.
 
விஷயத்தை கேட்ட வருவிற்கு இப்போது மகிழ்ச்சிக்கு பதில் குழப்பம் தலை தூக்கியது. அவள் தான் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தாளே. பின் எப்படி என்று யோசித்தவளுக்கு அப்போதே அவர்கள் பிரிவிற்கு முந்தைய நாள் இரவு அவளது மாத்திரை கைதவறி கீழே விழுந்து விட, அதை அவள் எடுப்பதற்குள் சரண் அவளை நெருங்கிவிட்டது நினைவிற்கு வந்தது.
 
ஒருநாள் தானே என்று அஜாக்கிரதையாக விட்டது இன்று எத்தனை பெரிய பிரச்சனைக்கு வித்திட போகிறதோ என்று தவித்துப் போனாள். அதேநேரத்தில் தன் மணிவயிற்றில் சிறு உயிர் உருவாகி இருக்கிறது என்று எண்ணும் போதே சிலிர்ப்பாகவும் இருந்தது. உடனே சரணுக்கு சொல்லவேண்டும் என்று துடித்தாள்.
 
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக “நான் எங்க வீட்டுக்கு போறேன் டேட். இந்தியா கிளம்பறேன்” என்றாள்.
 
‘இட்ஸ் நாட் குட் ஃபார் யு டு டிராவல் இன் திஸ் கண்டிஷன், வரு" மைதிலி கவலையாக மகளிடம் சொல்ல
 
“எனக்கு என் சரணை பார்க்கனும் மாம்” என்றவள், தன் வயிற்றை வருடி “அவன்கிட்ட சொல்லணும். ப்ளீஸ் டோன்ட் செ நோ. டேட், நான் இந்தியா போக டிக்கெட்ஸ் புக் பண்ணுங்க” என்று சிறுபிள்ளையாய் கலங்கி சொன்னாள்.
 
மகளை சோபாவில் அமர்த்திய ரகு, அவளுக்கு தண்ணீர் கொடுத்து “வருமா, நீ அங்க போனாலும் தனியா தான் இருக்கணும். சரண் உங்க வீட்டுக்கு வரமாட்டான் டா. இந்த கண்டிஷன்ல உன்னால உன்னை தனியா பார்த்துக்க முடியாது” என்று அறிவுறுத்த..
 
“சரண் இருக்க வீடு தான் டேட் எங்க வீடு. நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்றாள் அழுத்தமாக.
 
அதற்கு மேலும் அவள் பிடிவாதத்தை கரைத்து விட முடியாதென்று தோன்ற, மருத்துவரை ஆலோசித்தனர். அவரும் சில சோதனைகளை செய்துவிட்டே அவளை பயணம் செய்ய அனுமதித்தார்.
அவள் கருத்தரித்திருக்கும் விஷயத்தை அறிந்ததில் இருந்து நிலை கொள்ளாமல் மொட்டை மாடியில் நடந்திருந்தான் சரண்.
 
“குழந்தை வேண்டாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு ஏமாத்திட்டா. சேம்ப்க்கு இன்னும் மூணு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள.. ச்சே” என்று தரையில் காலை உதைத்தான்.
 
“இப்போ எதுக்கு சீன் போட்டுட்டு இருக்க. குழந்தை வந்திடுச்சு.. ‘நான் செய்த குறும்பு.. உண்டாச்சு கரும்புனு’ பாட வேண்டியது தான” ஒய்யாரமாக கைபிடி சுவற்றில் சாய்ந்து நின்று அவனை கேலி செய்தது அவனது மனசாட்சி.
 
“கடுப்புல இருக்கேன்.. போயிடு” என்று பற்களை நறநறத்தான் சரண்.
 
“அவ்ளோ அக்கா குழந்தை மேல பாசம் இருக்கிறவன் பொத்திட்டு இருந்திருக்க வேண்டியது தான”
 
“உனக்கு என்ன தெரியும், அவ பக்கத்துல வந்தாலே, உடம்புல இருக்க எல்லாம் செல்லும் அவ வேணும்னு கேட்கும்” என்று எரிந்து விழுந்தான்.
 
“கரெக்ட்டு தான்” என்று ஏக்க பெருமூச்சு விட்ட மனசாட்சி “ஏன்டா, அதான் தெருவுக்கு தெரு மெடிக்கல் ஷாப் இருக்கே. அது எதாவது யூஸ் பண்ணி தொலைச்சிருக்க வேண்டிய தானே” என்று நியாயம் பேச..
 
“நான் அவளை நம்பினேன். ஏமாத்திட்டா. குழந்தை விஷயத்துலயும் என்னை ஏமாத்திட்டா” என்று கையை மடக்கி அங்கிருந்த சுவற்றில் குத்தினான்.
 
“ஆனா சரணு, உன் வயசு பசங்க வேலை கிடைக்கலயேனு பைத்தியமா அலைஞ்சிட்டு இருக்கானுங்க. நீ பாரு, கல்யாணம் ஆச்சு.. உன் பேர்ல வீடு வந்துச்சு.. எப்படியோ வேலையும் வாங்கிட்ட. இப்போ, அப்பாவும் ஆக போற” என்று வாய் பொத்தி சிரித்தது.
 
“ச்சை.. மனசு சரியில்லனு மேல வந்தா நீயும் என்னை சாவடிக்கிற” என்று மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க கீழே ஓடினான்.
 
வீட்டிற்குள் வந்தவன் உடை மாற்ற அறையினுள்ளே செல்ல, அங்கே வரு அசதியாக உறங்கியிருந்தாள். என்ன தான் குளிரூட்டி இயங்கிக் கொண்டிருந்தாலும் அவள் நெற்றியில் வியர்வை பூக்கள் பூத்திருந்தது.
 
அதை பார்த்தவனுக்கு கவலையாகி போக “ஏன்டி நீயும் கஷ்டப்பட்டு என் குழந்தையையும் கஷ்டப்படுத்தற” என்று துண்டு கொண்டு அவள் நெற்றியில் இருந்த வியர்வை துளிகளை ஒற்றி எடுத்தான்.
 
அவளையே பார்த்திருந்தவனுக்கு ஆசை வருவதற்கு பதில் கோபமே எழ, உடை மாற்றி வெளியே வந்தால் அங்கே சுசி தரையில் பாயை விரித்துக் கொண்டிருந்தாள்.
 
“நீ ஏன் சுசி இங்க படுக்கற? சேம்பை தூக்கிட்டு போய் உள்ள படு” என்றான் சரண். அவளை உள்ளே படுக்க சொன்னபோது வருவும் இதையே தான் சொன்னாள். சுசி தான் கேட்காமல் அவளையே உள்ளே படுக்க சொன்னாள். அவளும் பயண களைப்பில் படுத்ததும் உறங்கிவிட்டாள். இருந்தும் குளிரூட்டியை உயிர்ப்பித்து, அதன் குளிர்ச்சி வெளியே வரும்படி கதவை திறந்தே வைத்திருந்தாள்.
 
“நீ வரு கூட படு, நாங்க இங்க படுத்துக்கிறோம். கூலர் இருக்குல. காத்து நல்லா தான் வருது” என்றாள் சுசி.
 
“ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல. உங்களுக்காக தான் ஏசியே வாங்கினது. நீ உள்ள படு”
 
“அது இல்ல சரண், வரு மாசமா இருக்கு. மனசுக்கு நீ கூட இருக்கனும்னு கேட்கும்” என்று தம்பிக்கு புரிய வைக்க முயல..
 
கண்களை மூடி திறந்தவன் “எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்ல சுசி. நீ சேம்போட உள்ள போய் கட்டில்ல படு. நைட்ல சேம்ப் அழுதா உதவியா இருக்க அம்மாவும் உள்ள படுத்துக்கட்டும். நானும் அப்பாவும் வெளிய படுத்துக்கிறோம். கதவை சாத்திக்கோங்க” என்றிருந்தான் சரண்.
 
 
தொடரும்...

   
ReplyQuote
(@nila-sridhar)
Trusted Member Author
Joined: 4 months ago
Posts: 55
Topic starter  

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

https://srikalatamilnovel.com/community/topicid/9/


   
ReplyQuote
Page 3 / 3
Scroll to Top