அத்தியாயம் - 16
என்ன தான் மகன் அவளை பார்க்க கூடாது, அவளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று சொல்லியிருந்தாலும் கனியால் எப்படி மருமகளை பார்க்காமல் இருக்கமுடியும். இப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்ற நினைப்பிலேயே இரவை கழித்தவர் அடுத்த நாள் காலை அனைத்து வேலைகளையும் நேரத்திலே முடித்துக் கொண்டு சரண் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக காத்திருந்தார்.
சரணும் கிளம்பியதும் தான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, வேலைகளை நேரத்திலே முடித்துவிட்டவர், நேராக மகனின் வீட்டிற்கு தான் சென்றார்.
அங்கு அழைப்பு மணியோசை கேட்டதும் கணவனிடம் தான் விசை அட்டை இருக்குமே, அவன் தானே திறந்துக் கொண்டு வந்துவிடுவான் என்பதெல்லாம் மறந்து, அதுவரை அவன் விட்டு சென்ற இடத்திலேயே இரவெல்லாம் வெறும் தரையில் படுத்திருந்தவள் ஓடி வந்து ஆவலாக கதவை திறக்க, வாசலில் கனி தான் நின்றிருந்தார்.
அவரை பார்த்ததும் நேற்றிலிருந்து தேக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பொங்கி எழ, “அத்தை… சரண் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்” என்று விசும்பியவள், அவர் தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.
மருமகளின் கண்ணீரில் தானும் கலங்கி விட்டவர் அவளை கை தாங்கலாய் அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினார். அவள் அப்போதும் அவர் மீது சாய்ந்து அழுது துடித்தாள்.
“அழாத வரு மா” என்று மருமகளை தேற்றி, அவள் அழுகை சற்று ஓய்ந்ததும் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு செல்ல, அங்கே நேற்று சமைத்த உணவெல்லாம் உண்ணாமல் வீணாகி போயிருந்தது.
முதலில் வருவிற்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர், “வரு, என்னம்மா ஆச்சு? சரணை கேட்டாலும் வாயையே திறக்க மாட்டறான். உங்களுக்குள்ள என்னமா பிரச்சனை?” என்று தவிப்புடன் கேட்டார்.
அவனே இதை வீட்டில் சொல்லாத போது அவள் மட்டும் எப்படி சொல்வாள். அவர்களை காயப்படுத்த வேண்டாமென்று தான் கணவன் இதை மறைத்திருப்பான் என்று சரியாக அனுமானித்தவள் ஒன்றும் பேசாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.
மருமகளிடம் வெவ்வேறு விதமாக கேட்டு பார்த்து ஓய்ந்த கனி, அவளது சோர்ந்த முகத்தை கருத்தில் கொண்டு முதலில் அவளை சாப்பிட வைக்க எண்ணினார். அங்கே வீணான உணவை எடுத்து கொட்டி விட்டு, புதிதாக உணவு தயார் செய்து எடுத்து வந்தார்.
அவள் வேண்டாம் என்று மறுத்தும் கனி அவளுக்கு உணவை ஊட்ட, ஒவ்வொரு கவளத்திற்கு இடையேயும் “சரண் சாப்பிட்டானா அத்தை.. ஆபீஸ் போயிருக்கானா.. நைட் தூங்கினானா.. கைல அடிப்பட்டுச்சே, ஹாஸ்பிடல் போனானா.. அவனுக்கு என்னை பிடிக்கலல.. நான் வேண்டாம்ல அவனுக்கு..” என்று கணவனை பற்றியே பிதற்றிக் கொண்டிருந்தவளை எப்படியோ சமாதானப்படுத்தி உணவை ஊட்டிவிட்டவர், அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வந்து அவள் எதிரே அமர்ந்தார்.
மருமகளை தன் மடியில் படுக்க வைத்து, அவள் தலையை வருடி கொடுத்துக் கொண்டே “என்னாச்சும்மா வரு.. எதாவது சொன்னா தான தெரியும். அவன் அங்கயே தங்கிடுற அளவுக்கு அப்படி என்னம்மா நடந்துச்சு?” என்று நடந்ததை அறிய மீண்டும் அவளிடம் கேள்வி எழுப்பினார்.
வருவோ எதற்கும் வாய் திறக்காமல் அமைதியாக இருக்க.. “நீ அத்தை கிட்ட சொல்லு. நான் அவனை கேக்கறேன்” என்று அனைத்து விதத்திலும் முயற்சி செய்து தோற்றவர், இனி இவளிடம் கேட்டு பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து, மாலை மகனிடம் மீண்டும் பேசி பார்க்கலாம் என்ற தீர்மானத்துடன், வருவிற்கு இரவு உணவும் தயார் செய்து வைத்துவிட்டே தன் வேலையை பார்க்க சென்றார்.
இரவு, நேரம் தாழ்ந்தே வீட்டிற்கு வந்த சரணை வந்ததும் வராததுமாக நிறுத்தி, என்ன பிரச்சனை என்று சொல், எதற்கும் பிரிவு தீர்வாகாது, அனைத்தையும் பேசி தீர்த்து கொள், இப்போதே வீட்டிற்கு செல் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் அவன் பிடி கொடுப்பதாக இல்லை.
தாயையும் எதிர்பார்க்காது தானே உணவை எடுத்து போட்டு சாப்பிட்டவன் தன் பாய், தலையணையுடன் மாடியில் படுப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிட, இதிலும் தோல்வியே கண்டார்.
அனைத்து கதவுகளும் மூடிவிட்டது போல் உணர்ந்த கனி, தன் பர்சில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு மகளிடம் வந்தவர் “சுசி.. இது அண்ணன் நம்பர்.. எதோ வாட்ஸாப்ல ஃபோன் போட்டா காசில்லாம பேசிக்கலாம்னு சொல்லுச்சு. கொஞ்சம் போட்டுக் கொடேன்” அண்ணன் வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஓர் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் அவளிடம் அக்காகிதத்தை நீட்டினார்.
அவளும் தாய் சொன்னது போல் மாமனின் எண்ணிற்கு அழைத்து தர, அவர் அழைப்பை ஏற்றதும் “அண்ணா.. இங்க என்னென்னமோ நடந்து போச்சு. சரண் ரெண்டு நாளா இங்க தான் இருக்கான். இவனும் எதுவும் சொல்லமாட்டறான். வருவும் வாய் திறக்க மாட்டேங்கிது” என்று விசும்பிக் கொண்டே ஆரம்பித்தவர், நேற்றிலிருந்து நடந்த அனைத்தையும் அழுகையினூடே சொல்லிவிட்டு “நீ வா ண்ணா.. நீ வந்தா தான் எல்லாம் சரியாகும்” என்று அண்ணனை இங்கு அழைத்தார்.
விஷயத்தை கேட்டு நெற்றியை நீவிய ரகு, “நீ கவலைபடாத. சின்ன பசங்க சண்டையா தான் இருக்கும். சரி பண்ணிடலாம். நான் கிளம்பி வரேன். நீ பயப்படாம இரு” மனதிற்கு எதுவோ தவறாக பட்டாலும் தங்கையிடம் அதை காட்டி கொள்ளாமல் பேசி வைத்தார்.
உடனே ரகு மகளுக்கு அழைக்க, அவள் அலைபேசி அணைக்கப் பட்டிருப்பதாக தகவல் சொல்லவே, இன்னும் பதறிப் போனவர் கிடைத்த விமானத்தில் இந்தியா புறப்பட்டார்.
நேற்று போல் இன்றும் அலுவலகத்திற்கு செல்லாத வரு, எதுவும் பிடிக்காது வாழ்வே மாயமாக சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள். இரண்டு நாட்கள் முன்பு வரை தன்னை பாப்பா, பாப்பா என்று ஆராதித்தவன் இந்த இரு தினங்களாக தான் என்ன செய்கிறோம், என்ன சாப்பிட்டோம் என்று கூட கண்டு கொள்ளாமல் இருக்க தொடங்கிவிட்டானே என்று நினைக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
ஒவ்வொரு முறை அழைப்பு மணி அலறும் சத்தம் கேட்கும் போதும் கணவனோ என்ற ஆவலோடு கதவை திறந்து பார்க்க, அங்கே பால் கொண்டு வந்து தருபவரையும், செய்தித்தாள் போடும் இளைஞனையும் பார்க்கும் போதெல்லாம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
அவனோடு இருந்த நினைவுகளில் மனம் உழன்றுக் கொண்டிருக்க, அப்போது அழைப்பு மணி ஒலிக்கும் ஓசை கேட்டதும் இம்முறையும் அதே ஆர்வத்துடன் ஓடி சென்று கதவை திறக்க, வாசலில் ரகு நின்றிருந்தார்.
“வரு.. எப்படிடா இருக்க?” அவர் மகளை கேட்டுக் கொண்டிருக்க, அவளோ அவனில்லை என்று உதட்டை பிதுக்கியவள் தந்தையை சிறிதும் கண்டு கொள்ளாது அமைதியாக சோபாவில் சென்று அமர்ந்துவிட்டாள்.
தானே உள்ளே வந்தவர் “வருமா.. என்னம்மா ஆச்சு? அப்பா மேல இன்னும் கோபம் போகலையா?” மகளின் கன்னம் தாங்கி கேட்க, நீர் குளம் கட்டியிருந்த கண்களோடு இல்லையென்று தலையாட்டினாள்.
“அப்புறம் ஏன்டா அப்பாவை பார்த்ததும் ஒரு வார்த்தை கூட பேசாம உள்ள வந்துட்ட?” என்று அவர் மகளை கேட்டது தான் தாமதம், இரு நாட்களாக அவன் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த வலியில் அழுதுக் கொண்டே ரகுவரனை கட்டிக் கொண்டவள்
“டாடி.. சரண் போய்ட்டான் டாடி.. அவனுக்கு என்னை பிடிக்கலையாம்.. என்னை அவன் லவ் பண்ணலையாம் டாடி. என்னை திட்டிட்டு போய்ட்டான்” தந்தையின் மார்பில் முகம் புதைத்து கதறிவிட்டாள்.
வரு இதுபோல் அழுது ரகு பார்த்ததே இல்லை. சொல்லபோனால் இதுவரை அவள் எதற்கும் கலங்கியதே இல்லை. ரகுவும் மைதிலியுமே தங்கள் மக்களை ஒரு குறையும் இல்லாமலே வளர்த்திருக்க, அதிலும் எதையும் எந்தவொரு பயமுமின்றி கையாளும் வருவின் குணத்திற்கு, அவளுக்கு அழ தெரியுமா என்று தான் ரகு முதலில் பார்த்தார்.
அதுவும் வலியில் துடித்து அழும் மகளின் கண்ணீரை கண்டவரது நெஞ்சில் குருதி வழிய, அவளை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்துவிட்டவர் “சரண் ஏன்ம்மா போனான்? கனி எல்லாம் சொன்னா மா. உனக்கும் சரணுக்கும் என்னமா பிரச்சனை? இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒற்றுமையா தானே இருந்தீங்க” என்று அவளை விசாரித்ததும் வர்ணிகாவிற்கு இப்போது முகமே மாறிபோனது.
“அது டேட்.. ம..னு.. மனு..” என்று வார்த்தைகள் வராது அவள் தயங்கி நிறுத்த
“மனுவை கல்யாணத்தன்னைக்கு நீதான் அனுப்பி வச்சேனு சரணுக்கு தெரிஞ்சிடுச்சா?” என்றார் மகளை கூர்மையாக பார்த்து.
அதில் வரு தந்தையை அதிர்ந்துப் பார்க்க, “என் பையன் என்ன பண்ணுவான். என் பொண்ணால என்ன பண்ண முடியும்னு எனக்கு நல்லாவே தெரியும் வரு. மனு மெசேஜ் பார்த்ததும், அவன் லவ் பண்றது உனக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு, அதான் அவனை அனுப்பி வச்சிருக்கேனு புரிஞ்சது மா” என்று நடந்ததை நேரில் பார்த்தவர் போல் சொல்லும் தன் தந்தையை வியந்துப் பார்த்தாள் வர்ணிகா.
“இப்போ அது எப்படிம்மா சரணுக்கு தெரிஞ்சது. நீ தான் சொன்னியா?” என்றும் கேட்க, இல்லையென்று தலையாட்டிய வரு நடந்த அனைத்தையும் கூறினாள்.
அதை கேட்ட ரகு “ஹி இஸ் சச் ஆன் இடியட்” என்று மகனை எண்ணி பற்களை நறநறத்தார்.
அதோடு தன் கைபேசியை எடுத்து மகனுக்கு அழைத்தவர் “ஹவ் கம் யு பிகேம் சச் எ செல்பிஷ் மனு? உன் தங்கச்சிகிட்ட பணம் கேட்டு அவளை டிரபிள் பண்ணிருக்க. இங்க உன்னால என்னலாம் நடந்திடுச்சுனு தெரியுமா. உன் தங்கச்சி வாழ்க்கையையே அழிச்சிட்டியேடா. இப்போ என்ன, நீ திரும்ப நம்ப பிசினஸ்ல சேரனும். நம்ப வீட்டுலயும் இருக்கணும். அதானே. தாராளமா வா. உன் ப்ராப்ளம் சால்வ்ட். இப்ப நம்ம வரு லைஃப்க்கு என்ன பண்ற போற. இடியட்.. எதையும் யோசிச்சி செய்ய மாட்டியா” என்று மகனிடம் கோபமாக பொரிந்துவிட்டு அழைப்பை துண்டித்தார்.
ரகு மகளை திரும்பி பார்க்க அவள் கவலையே வடிவாக அமர்ந்திருந்தாள்.
“இது மாதிரி ப்ராப்ளம் வர கூடாதுனு தான் அன்னைக்கு சரண் மனு கூட எந்த கான்டாக்ட்டும் வச்சிக்க கூடாதுனு கண்டிஷன் போட்டப்போ நீ எதையும் சொல்றதுக்கு முன்னாடி நான் பதில் சொன்னேன். அப்படியிருந்தும் என்னையும் மதிக்காம, சரணையும் மதிக்காம மனுகிட்ட பேசினியா. நான் என் பசங்கள நல்லா தானே வளர்த்தேன். நான் என் அப்பாவை ஏமாத்தினேன். என் பசங்க என்னை ஏமாத்திட்டாங்க” கோபமாக ஆரம்பித்தவர் விரக்தியாக முடித்தார்.
அதற்கு இல்லையென்று தலையாட்டியவள் “சரணோட நேச்சர் தெரிஞ்சி தான் அவன்கிட்ட இத சொல்லனும்னு நிறைய டைம் திங்க் பண்ணி, லேட்டர் ஐ டிராப்ட் தட் ஐடியா. எனக்கு சரணும் வேணும், மனுவும் வேணும். யாராவது ஒருத்தரை என்னால எப்படி டேட் சூஸ் பண்ணமுடியும்” என்று ஆற்றாமையாக தந்தையை பார்த்தாள்.
“சூஸ் பண்ணி தான் ஆகணும். நீ செஞ்ச காரியத்தால உன்னால யாராவது ஒருத்தரை தான் சூஸ் பண்ணமுடியும். அது சரணா இருக்கணும்னு தான் நான் விரும்புறேன். யு நோ, வாட் யு டிட் வாஸ் அன் அன்ஃபர்கெட்டபிள் மிஸ்டேக். ஒரு கல்யாணத்தை நிறுத்துறது அவ்ளோ ஈஸினு நினைச்சியா. ஒரு பொண்ணோட வாழ்க்கை. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணை யார் கட்டிப்பா. நல்லவேளை பார்த்திபன் தானே வந்து சுசியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். இல்ல, குடும்பத்தோட தற்கொலை தான் பண்ணிக்கணும். பார்த்திபன் சுசியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ சரண் அவர் காலுலயே விழுந்துட்டான்” மகளிடம் ஆவேசமாக சத்தமிட்டார் ரகு.
தந்தை இறுதியாக சொன்னதை கேட்ட வரு, அன்று உணராத தன் குடும்பத்தின் வேதனையை இன்று உணர்ந்தாள். அதுவும் தன்னவன் பார்த்திபனிடம் மண்டியிட்டிருக்கிறான் என்று கேட்ட நொடி அவனுக்கு தான் செய்த துரோகம் புரிந்தது.
“கிளம்பு வரு.. நாம சரண்கிட்ட பேசலாம்” ரகுவரன் மகளை அழைக்க “இல்ல டேட், நான் வரல. நாம லண்டன் கிளம்பலாம்” கண்களில் உறுதியோடு சொன்னாள்.
“வரு, என்ன பேசற”
“என் சரண் அன்னைக்கு அழுதான் டேட். அதை பார்த்து எனக்குள்ள என்னென்னமோ பண்ணிடுச்சு. அதான், நாம செஞ்ச தப்புக்கு இந்த கல்யாணம் பிராயசித்தமா இருக்கட்டும்னு நீங்க சொன்னப்போ நான் அதை அக்ஸ்செப்ட் பண்ணிக்கிட்டேன். இப்பவும் என்னால என் சரண் அழுதான். என் மேல கோவப்பட்டான் தான். ஹவ்எவர், ஐ குட் சீ தி பெயின் இன் ஹிஸ் ஐஸ். திரும்ப அவன் முன்னாடி நின்னு அவனை கஷ்டப்படுத்த மாட்டேன்”
“வரு மா”
“நேத்தே ஜாபை ரிசைன் பண்ணிட்டேன். இப்போ என் சரண், பார்த்தி அண்ணா காலுல விழுந்தான்னு சொன்னதுக்கு அப்புறம் என் டெசிஷன் கரெக்ட்னு புரிஞ்சது. ஆபீஸ்ல காம்பென்சேஷன் கேக்கறாங்க. அத மட்டும் நீங்க கொடுத்துட்டீங்கன்னா நாம கிளம்பிடலாம் டேட்” கண்ணீரை துடைத்துக் கொண்டு திடமாக சொன்னாள்.
இதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாத ரகு, மகள் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தவர் விமானநிலையத்திற்கு செல்லும் முன் தங்கையின் வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றார்.
தடம் மாறி சரணின் வீடிருக்கும் வழியில் வண்டி பயணித்துக் கொண்டிருக்க, தந்தையை குழப்பமாக திரும்பி பார்த்தாள் வரு.
“நான் பொண்ண பெத்தவன் டா. நீ சொன்னேனு உன்னை அப்படியே கூட்டிட்டு போறது முறை கிடையாது. சரண்கிட்ட பேசி பார்ப்போம்” என்றார்.
சரணின் வீடு வந்ததும் இறங்கிய ரகு குனிந்து மகளை பார்க்க, கைகளை பிசைந்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் “இல்ல டேட், நான் வரல. நீங்க போயிட்டு வாங்க” என்றுவிட்டாள்.
அப்போதே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்த சரண் தன்னை சுத்தம் செய்துக் கொண்டு உடை மாற்றியிருந்தான். ரகுவரன் உள்ளே வருவதை பார்த்ததும், கனி “அண்ணா..” என்று அழுதுக் கொண்டே ஓட, தாயை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான் சரண்.
மாமனை கண்டதும் அவன் முகம் இறுகி நிற்க “சரண், வரு பண்ணது தப்பு இல்லனு சொல்லமாட்டேன். அவ அந்த விஷயத்தோட வீரியம் தெரியாம பண்ணிட்டா..” ரகு சரணிடம் மகளுக்காக பேச துவங்க
அவரை கை நீட்டி தடுத்தவன் “எனக்கு வருனு யாரையும் தெரியாது” என்றான்.
“என்னப்பா இப்படி பேசற. என் பொண்ணுங்கிறத தாண்டி இப்ப அவ உன் பொண்டாட்டி. என்னை விட உனக்கு தான்ப்பா அவ மேல அதிக உரிமை இருக்கு” ஒரு தந்தையாக மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவனுக்கு நிதானமாக எடுத்து சொன்னார்.
“பொண்டாட்டி..” என்று பல்லை கடித்தவன் “உங்க பொண்ணு என்னை ஏமாத்தி இருக்கா. எனக்கு மட்டுமில்ல, என் குடும்பத்துக்கே துரோகம் பண்ணிருக்கா. அவ செஞ்சத, இன்னும் என் வீட்டு ஆளுங்க கிட்ட கூட சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கேன்” என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.
மகன் சொன்னதை கேட்டு பதறிவிட்ட கனி ‘மகனுக்கு தெரிந்துவிட்டதா’ என்று அதிர்ந்து அண்ணனை பார்க்க, அவரும் ஆமென்று கண்களை மூடி திறந்தார்.
அண்ணனுக்கும் தங்கைக்குமான பேச்சுகளற்ற விழி மொழியாயினும் சரண் அதை கவனித்தேவிட்டான்.
“ச்சீ..” என்று தலையில் அடித்துக் கொண்டவன் “அப்பா, பையன், பொண்ணுன்னு குடும்பமே பித்தலாட்டக்காரங்களா இருக்கீங்க. இதுல உங்க பாசத்தை முன்ன நிறுத்தி எங்க அம்மாவையும் துணை போக வச்சிருக்கீங்க. அவங்களும் பெத்த பொண்ணோட வாழ்க்கை பாழா போயிருக்குமேனும் பார்க்காம உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க” என்று ஆதங்கத்தில் கத்தினான்.
அதை கேட்ட கனி திருதிருவென விழிக்க, சுசி தாயையும் தம்பியையும் புரியாமல் பார்த்திருந்தாள். இதில் பாலனும் திகைப்பார் என்று பார்த்தால் அவரோ தானே மகனுக்கு முன் வந்து நின்றார்.
ஆம், பாலன் என்றைக்கு கனிக்கு பின் இல்லாமல் இருந்திருக்கிறார். மனைவியை சொன்னதும் பொங்கி எழுந்தவர் “சரண், மச்சான் கல்யாணம் முடிஞ்ச மூணாம் நாளே எல்லாத்தையும் சொல்லி, மருமக பண்ண தப்புக்கு மன்னிப்பும் கேட்டார். நான் தான் நீ கோவப்படுவனு உனக்கு தெரிய வேண்டாம்னு சொன்னேன்” என்று குற்றத்தையும் ஒத்து கொண்டார்.
தந்தை பேசியதை கேட்ட சரணுக்கு அழகிய குருவி கூடாய் இருந்த தன் குடும்பத்தை இவர்களது குடும்பம் எப்படியெல்லாம் ஆட்டி வைத்திருக்கிறது என்று ரகுவின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் ஆத்திரம் கிளம்பியது. அதேநேரம் “இங்க என்னம்மா நடக்குது? என்ன, என் வாழ்க்கை பாழாகியிருக்கும். அம்மாவும், அப்பாவும் எத சரண் நம்மகிட்ட இருந்து மறைச்சாங்க” என்று சுசி பதைபதைத்து கேட்க..
சற்றும் தாமதிக்காது அக்காவை அணைத்துக் கொண்டவன் “என்னை மன்னிச்சிடு சுசி. எனக்கு தெரியாமலே உன் வாழ்கையை அழிக்க பார்த்தவளை கல்யாணம் பண்ணி, அவளோட ஒரு வருஷம் வாழ்ந்தும் இருக்கேனே. எல்லாத்துக்கும் அவ தான் சுசி காரணம்..” என்று கண்ணீரோடு அனைத்தும் சொல்லியிருந்தான்.
அதை கேட்ட சுசி அதிர்ச்சியில் வாயடைத்து போக, கனியும் பாலனும் கவலையாக நின்றிருந்தனர். இனி சரணிடம் பேசி பயனில்லை என்பதை புரிந்த ரகு, கலங்கிய மனதோடு தங்கையிடம் வந்து “கனி, வரு கார்ல தான் இருக்கா. லண்டனுக்கே திரும்ப போயிடலாம்னு ஒத்த காலுல நிக்கறா மா” என்று மகளின் வாழ்க்கையை குறித்த வேதனையில் சொல்ல, அதை கேட்ட சரணுக்கும் மனதை சுருக்கென்று தைக்க தான் செய்தது.
இருந்தும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுக்கமாக நிற்க, “வரு வெளில தான் இருக்கா?” என்று கேட்ட கனி, மருமகளை அழைத்து வர வாசலை நோக்கி ஓட
“அம்மா” கணீரென ஒற்றை குரல் கொடுத்தான் சரண். அதில் வாய் பொத்தி அழுதுக் கொண்டே தான் இருந்த இடத்திலே மீண்டும் வந்து அமைதியாக நின்றுக் கொண்டார் கனி.
தங்கையின் செயலை ரகு அதிர்ந்து பார்க்க, கண்களில் கர்வத்தோடு மாமனாரை பார்த்தவன் “இனி எங்க அம்மா இந்த விஷயத்துல உங்களுக்கு துணையா நிற்க மாட்டாங்க. அவங்களுக்கு தெரியும், அப்படி அவங்க தலையிட்டா உங்க பொண்ணுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கும் நான் இருக்கமாட்டேன்னு. உங்க பொண்ணு எங்க போனாலும் எனக்கு அதப்பத்தி கவலை இல்ல. ஏன்னா, எனக்கு அவ வேண்டாம்” என்று ஆணித்தரமாக சரண் சொல்ல, கனி தன் அண்ணனை பார்க்கமுடியாமல் தலை குனிந்துக் கொண்டார்.
மகளின் வாழ்க்கை விஷயத்தில் தோற்று போன தந்தையாக கலங்கிய கண்களோடு அவ்வீட்டை விட்டு வெளியேறினார் ரகுவரன்.
தொடரும்...